Thursday, November 11, 2010

ஆந்தைகள் ராஜ்யம்


ஹாகூல் எனப்படும் ஆந்தைகளின் உலகில், பலவேறுபட்ட ஆந்தை இனங்களும் சுபீட்சமாக தம் வாழ்கையை நடாத்தி வாழ்ந்திருக்கின்றன. தூய ரத்தம் உடலில் ஓடும் டைடோஸ் எனும் ஆந்தைக்கூட்டமே ஆந்தைகள் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட, சர்வாதிகார போக்குடைய ஆந்தையான எஃகு அலகு, ஆந்தைகள் உலகின் அதிகாரத்தை தான் கைப்பற்றிக் கொண்டு ஆந்தைகள் உலகின் ஒரே ஒரு மன்னனாக தான் இருக்க விரும்புகிறது.

இதற்காக ஹாகூலில் வாழ்ந்திருக்கும் இளம் ஆந்தைகளை தன் ஆந்தை அடியாள்கள் மூலம் கடத்தி, அவற்றின் சிந்தனைகளை மழுங்கடித்து, தனக்காக போரிடக்கூடிய ஒரு சேனையை உருவாக்குகிறது எஃகு அலகு. இப்படியான ஒரு ஆந்தை கடத்தல்[ பிடித்தல்] படலத்தில், எஃகு அலகின் அடியாட்களின் பிடிக்குள் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக் கொள்ளுகிறார்கள் இளம் ஆந்தைகளான சொரெனும் அவனது சகோதரனுமான க்ளட்டும்.

க்ளட், டைடோஸ்கள் மத்தியில் தனக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரத்திற்காக எஃகு அலகின் பக்கம் சேர்ந்து கொள்ள, டைடோஸ்களின் கோட்டையிலிருந்து தப்பிச் செல்கிறான் சொரென். தன் தந்தை கூறிய ஆந்தை உலகின் காவலர்களின் சாகசக் கதைகளை தன் மனதில் கனவாக இருத்தி வாழும் சொரென், எஃகு அலகின் கொடிய திட்டத்திலிருந்து ஆந்தை உலகை காப்பாற்ற வேண்டி, ஹாகூல் ராஜ்யத்தின் காவலர்களை தேடி ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறான்….

Kathryn Lasky அவர்கள் சிறுவர்களிற்காக எழுதிய Guardians of Ga’Hoole எனும் மிகுபுனைவு கதை வரிசையினைத் தழுவியே Legend of The Guardians: The Owels of Ga’Hoole அசைவூட்டத் திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. 300ல் ஸ்பார்டானின் அதிரடி வீரர்களையும், வாட்ச்மேனில் தம் சூப்பர்ஹீரோ வாழ்வில் சலிப்புற்றுபோன மனிதர்களையும் திரையில் உலவவிட்ட இயக்குனர் Zack Snyder, ஆந்தைகளின் விசித்திர உலகை வெள்ளித்திரைக்கு எடுத்து வரப்போகிறார் என்பதை அறிந்தபோது, அதனை நம்பமுடியாது விழிகளை அகல விரித்தவர்களின் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

le-royaume-de-ga-hoole-la-legende-des-gardiens-2010-16888-2065043724 மிகுபுனைவு கதைகளில் கதாசிரியர்கள் சிருஷ்டித்த உலகங்களை திரையில் தீட்டுவது என்பது இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர், திறமையான ஒரு அணியின் கூட்டுடன் உருவாக்கியிருக்கும் ஆந்தைகளின் பூமி அசர வைக்கிறது. பொதுப்புத்தியில் ஆந்தைகள் இருளோடு தொடர்பு கொண்ட உயிரினங்களாக அறியப்பட்டு இருக்கையில், இயக்குனரின் ஆந்தைகள் உலகம் ஒளியால் சூழப்பட்ட, சந்துஷ்டி மிக்க, எழில் நிறைந்த ஒரு பூமியாக காட்டப்பட்டிருக்கிறது. திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்த ஆந்தைகளின் பூமிக்குள் ரசிகர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள்.

காடுகள், மலைகள், குகைகள், கடல், ஆகாயம் என ரகசியமான ஒரு கனவின் நனவு வடிவாக வியக்கவைக்கிறது செயற்கையான உத்திகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்னெய்டெரின் ஆந்தைகள் பூமி. இலைகள் மென்மையான காற்றில் நடனமிடுவதாகட்டும், அந்திச் சூரியனின் கதிர்கள் மேகங்களை ஊடுருவி சூழலை ரம்யமாக மாற்றி அடிப்பதாகட்டும், மழைத்துளிகளும், பனித்துளிகளும் அவற்றிற்கேயுரிய குளிர்ந்த அழகுடன் வீழ்ந்து சிதறுவதாகட்டும் அண்மைக்காலத்தில் இவ்வளவு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட அசைவூட்டக் காட்சிகளை நான் பார்த்ததில்லை எனலாம். சொரெனின் தங்கை, அவனது இறகுகளிற்குள் பொதிந்து தூங்கும்போது, அக்கணத்தின் மென்மையை, அந்த இறகு மெத்தையின் மென்மையை ரசிகனும் உணர்ந்து கொள்ளக்கூடிய தத்ரூபம் அது.

இயக்குனர் ஸாக் ஸ்னெய்டரிற்கு மென்னகர்வில் காட்சிகளை உருவாக்குவதில் உள்ள பிரியம் அலாதியானது. இத்திரைப்படத்திலும் அவ்வகையான காட்சிகள் உண்டு. குறிப்பாக ஆந்தைகளின் பறத்தல் காட்சிகள். மிகவும் ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பறத்தல் காட்சிகள் திரைப்படத்தில் ரசிகர்களை மயங்க செய்யும் அம்சங்களில் ஒன்று. அதிலும் புயல் மழைத்துளிகளினூடு சொரென் தன்னை இழந்து பறந்து செல்லும் காட்சியின் அழகு விவரிக்க முடியாத ஆனால் உணர மட்டுமே படக்கூடிய ஒன்றாகும். இவ்வகையான காட்சிகளின் அழகை மெருகேற்றுவதில் 3D நுட்பம் சிறப்பான பங்காற்றியிருக்கிறது.

le-royaume-de-ga-hoole-la-legende-des-gardiens-2010-16888-260125424 சண்டைக் காட்சிகளிலும் ஸாக் ஸ்னெய்டர் தயங்கவில்லை. அதே மென்னகர்வுடன் சிறுவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் வகையில் ஆந்தைகளிற்கிடையான மோதல் காட்சிகளை அவர் திரைப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியான மோதல்கள் சலிப்படைய வைக்கின்றன.

ஆந்தைகள் உலகை உருவாக்குவதிலும், அதனை அற்புதமாக ரசிகர்களிற்கு பரிமாறுவதிலும் அபார வெற்றி கண்ட ஸ்னெய்டர், திரைப்படத்தின் பாத்திரங்களை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் வலுவானவையாக உருவாக்குவதில் தவறியிருக்கிறார். சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்ட பல கதாபாத்திரங்கள் படத்தில் இருப்பினும் அதில் ஒருவர்கூட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வேதனையானது.

சண்டைக்காட்சிகளில் இருந்த ஆக்ரோஷம், பாத்திரங்களின் உணர்வுகளில் சுரமிழந்திருக்கிறது. சாகசம், போராட்டம், சகோதர பாசம், லட்சியம், வீரம், மந்திரம் எனும் அம்சங்கள் கொண்ட கதை இருந்தும், மனதை கதை முழுமையாக ஆக்கிரமிக்காத வகையில் அமைந்திருக்கிறது கதை நகர்வு. மேலும் அசைவூட்ட படைப்புக்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய நகைச்சுவையை சிறப்பாக பயன்படுத்தியிருக்ககூடிய பாத்திரங்கள் இருந்தும் திரைப்படத்தில் நகைச்சுவை மிகவும் குறைந்த அளவிலேயே காணக்கிடைக்கிறது. ஸாக் ஸ்னெய்டரிற்கும் நகைச்சுவைக்கும் இடையில் தூரம் அதிகமாக இருக்கிறது.

செரொனின் பறத்தல் முதல், காவலர்களை தேடிய அவன் பயணம், எஃகு அலகுடானான இறுதி மோதல் என படத்தின் நிகழ்வுகள் யாவும் மிகவும் அவசரகதியில் பொட்டலமாக்கப்பட்டு பார்வையாளன் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக எழும் உணர்வை தவிர்க்க முடியாது. ஒன்றரை மணி நேரத்தினுள் அசர வைக்கும் ஆந்தை உலகையும், ஆக்‌ஷனையும் வழங்கிய ஸ்னெய்டர், உணர்வுகளால் ரசிகர் மனதை கொத்தும் வாய்ப்பை இழந்திருக்கிறார். ஆந்தைகள் ராஜ்யமான ஹாகூலின் அனுபவம், மெலிதான ஏமாற்றத்தையும் கூடவே ஒரு சிறகாக உதிர்த்து செல்கிறது. [**]

ட்ரெய்லர்

15 comments:

 1. உங்கள் படைப்பு மிக அருமையா இருக்கு

  உங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பூக்க விடலாமே http://tamilthottam.nsguru.com

  ReplyDelete
 2. மொத கமெண்டு மொக்கை SPAM கமெண்டுங்கறதால அதையெல்லாம் ஆட்டத்துல சேத்துக்க முடியாது!

  ஆகையால நான்தான் மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவ படிச்சுட்டு மீண்டும் வர்றேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 3. //300ல் ஸ்பார்டானின் அதிரடி வீரர்களையும், வாட்ச்மேனில் தம் சூப்பர்ஹீரோ வாழ்வில் சலிப்புற்றுபோன மனிதர்களையும் திரையில் உலவவிட்ட இயக்குனர் Zack Snyder, ஆந்தைகளின் விசித்திர உலகை வெள்ளித்திரைக்கு எடுத்து வரப்போகிறார் என்பதை அறிந்தபோது, அதனை நம்பமுடியாது விழிகளை அகல விரித்தவர்களின் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.//

  இதுக்கே இப்படீன்னா எப்புடி?!! ஸாக் ஸ்நைடர் அடுத்து சூப்பர்மேனை ஸ்லோ மோஷனில் பறக்க வைக்கப் போகிறாராம்?!! அதுக்கு என்ன சொல்றீங்க?!!

  இப்பவே ரசிகர்கள் "YOU'LL BELIEVE A MAN CAN FLY (பழைய சூப்பர்மேன் படத்தின் TAG-LINE)...IN SLOW MOTION" என்று பயமுறுத்தி வருகிறார்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 4. வித்தியாசமான படமா இருக்கு! பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 5. இந்தப் படத்தைக் கொஞ்ச காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. எனக்கு அனிமேஷன் படங்கள் என்றால் உயிர்.. அதனால் தான்..

  ஆனால் ஸாக் ஸ்னைடரின் வாட்ச்மேனைத் தியேட்டரில் சென்று பார்த்து, நொந்து நூலாகிப் போனவர்களின் பட்டியலில், எனது பெயரும் இடம்பெற்றிருந்ததை நீங்கள் அறியமாட்டீர்கள் :-) .. அன்றிரவு, மக் மக்காகப் பீரை உள்ளே தள்ளியபின் தான் அந்த மொக்கை ஃபீலிங் அகன்றது :-)

  ReplyDelete
 6. நல்ல நேர்தியான பதிவு,நண்பரே,படம் பார்க்க முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 7. தலைவர் அவர்களே, சூப்பர்மேனிற்கு கதையை உருவாக்குவது கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஜானதன் என்று கூறுகிறார்கள். எனவே படம் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸாக் சினெய்டர் அதில் சூப்பர்மேனை மென்னகர்வில் எப்படி பயன்படுத்துவார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் எஸ்.கே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், வாட்ச்மேன் கிராபிக் நாவலைப் படியுங்கள் சிறப்பாக இருக்கும். திரைப்படம் சுமார்தான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் விமலன், தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 8. இங்கே காடுகிறார்கள். போய் பார்க்க இன்னுமே நேரம் கிடைக்கவில்லை. =(

  ReplyDelete
 9. // மிகுபுனைவு கதைகளில் கதாசிரியர்கள் சிருஷ்டித்த உலகங்களை திரையில் தீட்டுவது என்பது இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர், திறமையான ஒரு அணியின் கூட்டுடன் உருவாக்கியிருக்கும் ஆந்தைகளின் பூமி அசர வைக்கிறது. //

  இதற்காகவே அந்த படத்தை பார்க்கலாமே :))
  .

  ReplyDelete
 10. ரொம்ப எளிமையா அழகா எழுதறீங்க......

  ReplyDelete
 11. அனாமிகா துவாரகன், இந்த வார இறுதியில் சென்று பார்த்துவிடுங்கள் :) கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, ஆம் அந்த உலகிற்காக படத்தை பார்க்கலாம் என்பது உண்மையே. கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கவிதைக் காதலன், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 12. //
  புயல் மழைத்துளிகளினூடு சொரென் தன்னை இழந்து பறந்து செல்லும் காட்சியின் அழகு விவரிக்க முடியாத ஆனால் உணர மட்டுமே படக்கூடிய ஒன்றாகும்
  //

  படத்தில் என்னை கவர்ந்த இடமும் அதுதான். அப்போது ஒலிக்கும் மெல்லிய பாடலும் அற்புதம். எரியும் காட்டினுடே பறந்து செல்லும் காட்சியமைப்பும் இயக்குநர் தன் முத்திரையை பதிக்கும் கட்டங்கள்.

  அற்புதமான திரைப்படம். அடுத்த பாகம் வர வாய்ப்புள்ளதாக முடித்திருக்கிறார்கள். அதற்கு தகுதி உடையதுதான்.

  ReplyDelete
 13. ஜோஸ், இப்படத்தில் அந்த மழைக்காட்சி உங்களை கவராவிட்டிருந்தால்தான் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன். அடுத்த பாகத்திற்கு நான் ரெடி. கருத்துக்களிற்கு நன்றி. ஊரில் மழை நின்று விட்டதா :) மழையில் ஆந்தைகள் நனைகின்றனவா!!

  ReplyDelete
 14. இப்போது தான் படம் பார்த்தேன் தலைவரே. படத்தின் விஷீவல்கள் அருமை. ஆனாலும் என்னமோ ஸ்னைடர் கதாப்பாத்திர ஆக்கத்தில் கொஞ்சம் கோட்டை விட்டிருந்தார். அதில்லாமல் இந்த படத்திற்கு அதிக மார்க்கெட்டிங் இல்லாததால், டொமெஸ்டிக் பாக்ஸ் ஆபிஸில் போட்ட காசு கிடைக்கவில்லை என்று வார்னர் ப்ரதர்ஸ் புலம்பி கொண்டு இருக்கின்றனர்.

  அதனால் அடுத்த பாகம் வருவது ரொம்பவே கஷ்டம் தான். இதே போல் வார்னர் ப்ரதர்ஸ், பெர்ஸி ஜாக்ஸன் சீரியஸையும், அவ்வளவாக மார்க்கெட்டிங் செய்யாமல் கோட்டை விட்டு விட்டனர்.

  ReplyDelete
 15. நண்பர் பிரசன்னா ராஜன், தங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். வார்னர்ஸ், ஹாரிபொட்டர் மற்றும் இன்ஷெப்சன் இரு படங்களிலும் நல்ல லாபம் பார்த்திருப்பார்கள். இவ்வகையான படங்களில் சுமாரான வசூல் இவ்வருடம் அவர்களை அதிகம் பாதித்திராது என்று கருதுகிறேன்... தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete