Saturday, June 21, 2014

சட்டம் ஸ்டார்க்கர் கையில்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 15

நிக் லூயிஸ் எனும் கேடியை தேடி தெற்கு கொலராடோவிற்கு வரும் டெக்ஸ் வில்லர் வழியில் தறிகெட்டு ஓடிச்செல்லும் ஒரு கோச்சு வண்டியை தற்செயலாக காண நேரிடுகிறது. குதிரைகள் ஓடும் ஓட்டத்திலிருந்தே கோச்சு வண்டியில் ஏடாகூடமாக ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கும் பெருமேற்கின் இளஞ்சிங்கம் கோச்சு வண்டியை விரட்டி செல்கிறது. சிங்கத்தின் ஊகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோலவே கோச்சு வண்டியின் ஓட்டுநர் தன் இருக்கையிலேயே பரமபதம் சென்று இருக்கிறார். பலத்த போராட்டத்தின் பின்பாக வண்டியை நிறுத்தி ஆராயும் டெக்ஸ் வில்லர் வண்டியினுள் பயணிகள் எவரும் இல்லை என்பதை காண்கிறார். ஆனால் பெருமேற்கின் துடிதுடிப்பான ஷெர்லாக்கான டெக்ஸின் மனம் பரபரக்கிறது. கோச்சு வண்டியின் கூரையில் இருக்கும் பயண லக்கேஜ்களுக்கு சொந்தமானவர்கள் எங்கோ இருந்தே ஆக வேண்டும் என டெக்ஸிடம் அது முன்வேனில் செங்குருவிபோல டிவிட் சொல்கிறது. வண்டி வந்த பாதையின் தடத்தில் செல்லும் தல டெக்ஸ் அவ்வண்டியில் பயணித்த பயணிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கொள்கிறார். படுகொலை நடாத்தப்பட்டிருக்கும் பாணி அவர் தேடிவந்த கேடியான நிக் லூயிஸின் கைவண்ணத்தை ஒத்திருப்பதையும் அவதானித்து கொள்கிறார். அந்த தருணத்தில் சட்டம் மூன்று குதிரைகளில் டெக்ஸை நோக்கி விரைந்து வருகிறது.... வந்து கொண்டிருக்கும் சட்டத்திற்கு பெருமேற்கின் நீதிதேவனான டெக்ஸ் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை வாசக யூவர் ஆனர்கள் குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அழகான முன்வேனிலின் இதமான காற்றில் சுருளிச் சூறாவளியாக பறக்கும் கோச்சு வண்டியில் சடலமாக அதன் ஒட்டுனர். TEX MAXI N° 16  ன் கதையான Le Loi de Starker  ன் திகிலான, சூடான, பரபரப்பான, இளமையான அறிமுகத்திற்கு மேலும் சூடேற்றவது போல அமைகிறது டெக்ஸ் வில்லர் அந்த கோச்சு வண்டியை துரத்தி செல்லும் காட்சி. ஆறு குதிரைகள். காற்றிற்கு வேகத்தை கற்பிக்கும் பேராசிரியர்கள் போல விரைந்து கொண்டிருக்கின்றன. அவ்வண்டியை எப்படியாவது நிறுத்த அதன் பின் விரையும் டெக்ஸ். வாசக அன்பர்கள் தம் மனத்திரையில் இந்த ஆக்சேன் சேஸிங்கை ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். தன் குதிரையிலிருந்து கோச்சு வண்டிக்கு பாய்வார் பாருங்கள் [ இதை அதே மனத்திரையில் ஸ்லோமோசனில் ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன்]. பார்க்க இரு கண்கள் போதாது என்றால் அது பொய். அங்கு ஆரம்பிக்கும் அதகளம் இக்கதை நடக்கும் ப்ளாக் ஃபால்ஸ் பகுதியைவிட்டு டெக்ஸ் புறப்பட்டு செல்லும்வரை நீடிக்கும் என்றால் அது .... மெய்.

குதிரைகளில் ஏறி வந்த சட்டங்களில் ஒருவன் ப்ளாக் ஃபால்ஸ் நகர ஷெரீஃபான கிரிகரி ஸ்டார்க்கர். தன் பாணியில் ப்ளாக் ஃபால்ஸில் சட்ட பரிபாலனம் செய்து நீதி மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுபவன். டெக்ஸின் பெயரைக் கேட்டதுமே குதிரையை விட்டு கீழே இறங்கி விடுகிறான். டெக்ஸ் ஒரு பகுதிக்கு செல்வதற்கு இரு நாட்களின் முன்பே அவர் புகழ் அங்கு சென்று விடும் என்பது வாசக சமுத்திரம் அறியாத ஒன்றல்ல. சுமூகமான அறிமுகத்தின் பின்பாக டெக்ஸ் பயணிகளை கொலை செய்த கேடிகளின் தடத்தில் பயணிக்க ஸ்டார்க்கர் பயணிகளின் சடலங்களோடு ப்ளாக் ஃபால்ஸ் நகரம் நோக்கி விரைகிறான். ஆனால் விதி இவர்கள் இருவர்களின் பாதைகளையும் ஒன்றாக்கி அதில் அவர்களை ஒருவரை ஒருவர் நோக்கி பயணிக்க வைத்து விடுகிறது.

கேடிகளின் தடமானது ஒரு தருணத்தில் மறைந்துவிட ப்ளாக் ஃபால்ஸ் நகர் நோக்கி வருகிறார் டெக்ஸ். நகர மக்கள் முன்னிலையில் உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கரின் உரையை கேட்கவும் அவதானிக்கவும் செய்கிறார். அந்தக் கணத்திலேயே ஸ்டார்க்கர் ஒரு மகா நடிகன் என்பதை அவர் கணித்தும் விடுகிறார்.

நகரின் சலூனில் இலவச பீர் தந்து டெக்ஸை வரவேற்கும் காட்சியில் டெக்ஸின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை. சான்ஸே இல்லை. சாட்சாத் ஜெமினி கணேசன் புன்னகைதான். அந்தப் புன்னகை ஆவியாகாமலேயே ஸ்டார்க்கரின் உரையை கேட்கப் போய் அங்கு ப்ளாக் ஃபால்ஸ் நகர மக்கள் தம் ஷெரீஃப் மீது கொண்டிருக்கும் அபிமானத்தையும் அறிந்து கொள்கிறார். ப்ளாக் ஃபால்ஸ் நகரை அண்மித்த பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் அதை தடுக்க, ஒழிக்க, அழிக்க தீபோல செயற்படும் ஸ்டார்க்கர், இவை டெக்ஸ் மனதின் ஓரத்தில் ஐயங்களை விதைக்கின்றன. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாது அந்நியன் ஒருவன் ஒரு நகரின் சூப்பர் ஷெரீஃப்பை குற்றம் சாட்ட முடியுமா? அது அந்த அந்நியனிற்கு எதிரான ஒரு அலையாக மாறி அந்த அந்நியனிற்கு சேதங்களை விளைவிக்காதா? ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு டெக்ஸ் வந்து சேரும் இரவன்றே அவரை அந்நகரிலிருந்து வெளியேற வைக்கும் நிகழ்வுகளும் ஆரம்பமாகி விடுகின்றன. டெக்ஸை நகரிலிருந்து வெளியேற வைப்பதில் ஸ்டார்க்கர் வெற்றியும் காண்கிறான். ஆனால் டெக்ஸ் நகரிலிருந்து மட்டும்தான் வெளியேறுகிறார். கோச்சு வண்டிப் பயணிகள் படுகொலையான விவகாரத்தில் இருந்து அல்ல. இந்த சமயத்தில்தான் ஒரு கோழிக்கூட்டில் இரு சேவல்கள் இருக்ககூடாது எனும் அட்டகாசமான பஞ்சை வாசகர்கள் டெக்ஸ் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டார்க்கர் எப்படியான ஒரு தருணத்தில் ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு ஷெரீஃபாக உருவாகினான் என்பதும் கதையில் நான் லினியார் பாணியில் விளக்கப்படுகிறது. ரவுடிகள் கையில் சுடுபட்டு சாகும் முன்னைய ப்ளாக் ஃபால்ஸ் ஷெரீஃப். பயத்திலும், திகிலிலும் அடங்கி ஒடுங்கும் மக்கள். அட்டகாச ஆட்சி நடத்தும் ரவுடிக் கும்பல். இந்த ரவுடிக் கும்பலை போட்டு தள்ளும் ஸ்டார்க்கர். அவனை பெரிய வீரனாக கருதி, ஏற்று தம் நகரின் மேயர், நீதிபதி, ஷெரீஃப் என அனைத்து பதவிகளையும் ஒப்படைத்து விடும் நகர மக்கள் அவன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு கேள்வி கூட எழுப்புவது இல்லை. ரவுடிக்கு நீதி ரவுடியால்தான் எனும் பெருமேற்கின் உன்னதமான தத்துவமானது உறுதிபடும் ஸ்தலம் ப்ளாக் ஃபால்ஸ். ஆனால் ரவுடிக்கெல்லாம் ரவுடி எங்கள் தலை என்பதும் உறுதிபடும் இடமும் ப்ளாக் ஃபால்ஸ் தான் டெக்ஸின் அன்பு ரசிகர்களே.

ப்ளாக் ஃபால்ஸ் நகரை விட்டு வெளியேறும் டெக்ஸ் தன் தேடல்களை தொடர்கிறார். அவரின் தேடல்கள் ஸ்டார்க்கரை மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க செய்கிறது. அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு, கார்த்திக் தோள்கள் உரசிக் கொள்வதுபோல ஸ்டார்க்கரும், டெக்ஸும் உரசிக் கொள்கிறார்கள். டெக்ஸின் தேடல்கள் எல்லாம் ஸ்டார்க்கரை நோக்கியே விரலைக் காட்டுகின்றன. ஸ்டார்க்கரின் நகர்வுகள் எல்லாம் டெக்ஸை குழிக்குள் இறக்குவதற்கான முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த காய் நகர்வுகள் எல்லாம் வாசகனை டெக்ஸின் ஆக்சன் அதிரடிக்குள் உயிருடன் புதைப்பதாகவே அமைகின்றன. ஆனால் டெக்ஸ்  அடங்குவது இல்லை. வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் வின்செஸ்டரின் ஓசைகள் அவன் காதில் தொடரிசையாக ஒலிக்கும் வண்ணம் அவர் தன் கடமையை சிறப்பாகவே ஆற்றுகிறார்.

ஸ்டார்க்கரின் டெப்யூட்டிகளை துவம்சம் செய்வது, துவம்சம் செய்த டெப்யூட்டி ஒருவனின் உயிரை காப்பாற்றுவது, இறந்த உடல்போல் ஆற்றில் மிதப்பது, ரகசிய தகவல்களை சொல்ல முன்வருபவர்கள் போட்டுத்தள்ளப்பட்ட பின்பாக அவர்களை காண செல்வது,  தாமதமாக வந்து விட்டோமே என வருத்தப்படுவது, நிக் லூயிஸை படிய வைப்பது, நிற வெறியர்கள் மீது கரி பூசுவது, பின் அவர்களிற்காக இருளில் காத்திருந்து அதிர்ச்சி தருவது, மர ஆலையின் முரட்டு நபருடனான சூடான மோதல், ஸ்டார்க்கரை ஓயாது தன் நடவடிக்கைகளால் சீண்டல் இப்படி இன்னம் பல வகையான இயக்கவோட்டங்களால் அடி பின்னி எடுக்கிறார் டெக்ஸ். ஒரு வகையில் டெக்ஸ் இங்கு ஸ்டார்க்கரை உளவியல் ரீதியாக தாக்குகிறார் என்பது மிகையல்ல. கதையில் சில பகுதிகளில் தனது நகரம், தனது சட்டம், நீதி என ஸ்டார்க்கர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டார்க்கரை குறித்து டெக்ஸ் கூறும் சில வரிகளை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். புற்றில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியேற வைக்க வேண்டுமெனில் அதை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் டெக்ஸ் சீண்டும் சீண்டலில் பாம்பு சுரங்கம் தோண்டி மெக்ஸிக்கோவிற்கு சென்றுவிடும் என்பதும் டெக்ஸின் வாசக வெள்ளம் அறியாத ஒன்றல்ல.

கதையின் சிறுகூறாக நிறவெறி கையாளப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து போராடி கறுப்பின மக்களின் நீதிக்கரமாக டெக்ஸ் செயற்படுவதாக கதை சுட்டி நிற்கிறது. கறுப்பினத்தவரின் உதவியாலேயே டெக்ஸ் கதையின் மர்மத்தின் முக்கிய தகவலை அறிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. கறுப்பின குடும்பம் ஒன்றின் நலனிற்காக டெக்ஸ் செய்யும் சில செயல்கள் பில் கேட்ஸையே வெட்கம் கொள்ள வைப்பதாக உள்ளன.

கதையில் பெரும்பகுதியில் டெக்ஸ் தனி ஆவர்த்தனம் செய்கிறார். இறுதிப்பகுதியில் கவுரவ வேடம் மேஜர் சுந்தர்ராஜன் என்பது போல கார்சன் வந்து சேர்கிறார். டெக்ஸை ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்குள் இழுத்து போட்டுத் தள்ள ஸ்டார்க்கர் கார்சனை உபயோகித்து கொள்கிறான். கார்சனைக் காப்பாற்ற டெக்ஸ் எவ்விதமாக நகரில் நுழைகிறார் என்பதே இக்கதையின் கதாசிரியர் Tito Faraci அவர்களின் கற்பனை வளத்தை காட்டி விடும். சமகால உத்திகளுடன் டெக்ஸ் கதைகள் புதுப்பிக்கப்படுகையிலேயே அது சுவையான புதிதான அனுபவத்தை வாசகர்களிற்கு வழங்கும் என்பதில் டிட்டோ பராசிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர் வழங்கியிருக்கும் கதை தெளிவாக்கி விடுகிறது. டெக்ஸ் கதை எனும் சூத்திரவடிவிற்கு பழகிப் போய்விட்ட வாசகபரப்பு இதில் அதிக ஏமாற்றம் காண்பது இல்லை எனினும் புதுமையான ஒரு அனுபவம் மறுக்கப்படும் எந்த தருணமும் டெக்ஸ் தன் குதிரையில் பின்னோக்கியே பயணிக்கிறார் மன்மதலீலை கமல்போல என்பதை சொல்லவும் வேண்டுமா. கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் ஆர்ஜெண்டின சித்திரக் கலைஞர் மிகுவெல் ஏஞ்சல் ரெப்பெட்டோ. அவரின் சித்திரங்கள் சிவாஜியின் ஓவர் ஆக்டிங் எப்படி திரைப்படங்களில் பொருந்திப் போகுமோ அப்படி கதைக்கு பொருந்தி வந்திருக்கிறது. குறிப்பாக ஸ்டார்க்கரின் முகபாவனைகள், அவன் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் வாசகர்களின் உணர்வுகளை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து விடுகிறது. நிலவியல் அழகை தருகிறேன் எனும் போர்வையில் ஆங்காங்கே சில பறவைகள், பிராணிகளை காட்சிப்படுத்துவதை தவிர ரெப்பெட்டோ சிறப்பாக எதனையும் செய்து விடுவது இல்லை.

இப்படியாக ஆழமற்ற கதைகளும், ஓவர் ஆக்டிங் சித்திரங்களுடனும் வரும் டெக்ஸ் மேக்ஸி கதைகள் அக்கதை வரிசைகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமையப் போவது இல்லை. பொனெலி நிறுவனம் வருடம் ஒரு மேக்ஸி என்பதை ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்து விட்டதோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிரெஞ்சு மொழியில் டெக்ஸ் கதைகளை வெளியிடும் பதிப்பகம் இவ்வருட இறுதியுடன் பெரும்பாலும் டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவ்வகையான கதைகள் அதை விரைவில் நிறைவேற்றி வைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இத்தாலியர்களுக்கும் பஸ்டாவும், பிஸ்ஸாவும், நமக்கு சாதமும் அலுப்பது இல்லை. அவரவர் சுவை அவரவர்க்கு. என்னைப் போன்ற டெக்ஸின் டைஹார்ட் விசிறிகள் மட்டுமே இக்கதையை கண்ணீர் விட்டு ரசிக்க முடியும்.

சமர்ப்பணம்.
நான் ஒரு போலி டெக்ஸ் விசிறி என வதந்தி பரப்புவர்களுக்கு.

Sunday, June 1, 2014

Gone Girl

திருமண நினைவுநாளன்று மனைவி வீட்டிலிருந்து காணாமல் போனால் ஒரு கணவனின் நிலை எவ்வாறாக இருக்கும்? எல்லா கணவர்களின் உணர்வுகளும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது உண்மையாயினும் திருமணாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் வீடு திரும்பும் நிக் டன் தன் மனைவி காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போது அக்கறையான கணவன் ஒருவன் கொள்ளக்கூடிய நிலையை விட சற்று குறைந்த அதிர்ச்சி நிலை கொண்டவனாகவே Gone Girl நாவலில் கதாசிரியை  Gillian Flynn ஆல் சித்தரிக்கப்படுகிறான். அவனை சூழ்ந்திருப்பவர்களும் தொடரும் நாட்களில் அதையே உணர்கிறார்கள். மனைவி காணாமல் போகும் நிகழ்வுகளில் முதல் சந்தேக நபராக கணவர்களே காவல்துறையால் கருதப்படுகிறார்கள். கணவனை சந்தேகத்திற்கு இடமற்ற ஒருவன் என தெளிவு செய்த பின்பாகவே விசாரணைகள் ஏனைய திசைகளில் முனைப்பு பெறுகிறது. ஆனால் நிக் டன்னை பொறுத்த வரையில் அவனை சுற்றி சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.

நிக் டன் ஒரு இதழியலாளன். விருந்து ஒன்றில் அமியுடன் அறிமுகமாகி பின் அது திருமணத்தில் முடிகிறது. அமி இதழ்களில் உளவியல் கணிப்புக்களை கேள்வி பதில் வடிவ புதிர்களாக எழுதுபவள். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். இணைய ஊடகத்தின் வளர்ச்சி இருவரையுமே அவர்களின் வேலையை இழக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க்கை அதன் அர்த்தமிழக்கும் ஆரம்பத்தை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் நிக்கின் தாய் புற்றுநோய்க்குள்ளாக அவளை தன் தங்கையுடன் சேர்ந்து பராமரிக்கும் முகமாக தன் பிறந்த ஊரான காத்ஹேஜிற்கு தன் மனைவியுடன் நீயூயார்க் நகரை விட்டு வந்து சேர்கிறான் நிக்.

நிக்கும், அமியும் கதையின் ஆரம்பத்தில் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியாகவே காட்டப்படுகிறார்கள். வாழ்க்கையும் மகிழ்வான ஓன்றாகவே இருக்கிறது. இணைய ஊடகத்தின் ஆதிக்கம் எப்படி அச்சு ஊடகத்தை பலவீனமாக்கியதோ, அப்பலவீனம் எப்படி பல இதழியலாளர்களை வேலையை விட்டு நீக்கியதோ, அவ்வூடகவியலாளர்கள் தம் நாட்களை பின் எப்படி கழித்தார்களோ என்பது இங்கு நிக், அமி ஜோடி வழியாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமியின் நாட்குறிப்புக்கள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்து கொள்ள  முடிகிறது. ஒரு புறம் அமி காணாமல் போனதன் பின்னான நிகழ்வுகள் பயணிக்க மறுபுறம் அமியின் நாட்குறிப்புக்கள் நிக்கிற்காக அவள் என்ன சமரசங்கள் செய்தாள் என்பதை கூறுகிறது. தம் திருமணம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக அவள் எடுத்த முடிவுகளை விபரிக்கிறது. நிக் எப்படியான ஒரு சுயநலக்காரன் எனும் பிம்பத்தை தன் சொற்களால் செதுக்குகிறது. படிப்படியாக அமியின் நாட்குறிப்பு நிக் எனும் பாத்திரத்தின் மீதான எதிர்மறை உணர்வுகளை நாவலில் உருவாக்க ஆரம்பிக்கிறது.

மறுபுறம் நிக் தன் மனைவி காணாமல் போனது முதல் சில விடயங்களை ஏனையவர்களிடமிருந்து மறைப்பவனாகவே இருக்கிறான். பொய்களையும் சொல்கிறான். இருப்பினும் அவன் மனைவி காணாமல் போன நிகழ்வு அவனிடம் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அவளுக்கு என்ன ஆயிற்று எனும் கேள்வி அவனிடம் எழவே செய்கிறது. ஆனால் தொடரும் விசாரணைகளும் சாட்சிகளும் அவனுக்கு சாதகமாக இருப்பது இல்லை. அவன் கூறக்கூடிய பொய்களையும், மறைக்க விரும்பும் தகவல்களையும் மறுபுறம் அமியின் நாட்குறிப்பு தெளிவாக்கி கொண்டே இருக்கிறது. காவல்துறையின் சந்தேகம், ஊடகங்களில் நிக் மீதான வெறுப்பு அலை, கார்த்ஹேஜ் எனுமிடத்தில் வாழ்ந்திருப்பவர்களின் எண்ணங்கள் எல்லாம் நிக்கையே அவன் மனைவியின் மறைவுடன் தொடர்பு படுத்தி நிற்கின்றன... நிக்கிற்கும் அவன் மனைவி அமியின் மறைவிற்கும் தொடர்பு உண்டா?! நிக் என்ன ஆனான்? அவன் மனைவி அமி என்ன ஆனாள்?! இக்கேள்விகளிற்கான விடைகளாக நீளும் கதை வழமையான வெகுஜன திரில்லர்கள் வழங்கும் முடிவிலிருந்து விலகியே நிற்கிறது.

அச்சு  ஊடகத்தின் மடிவு, வாசகர்களை இழந்த வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் நிலை, வீட்டுக் கடன் திட்டத்தால் முடங்கிப்போன ஒரு நகர், வேலையிலா திண்டாட்டத்தின் விளைவுகள், ந்யூயார்க் மற்றும் காத்ஹேஜ் எனும் இரு நகரில் வாழ்ந்திருக்க கூடிய மனிதர்களின் வாழ்வியல் முறைகள் இவற்றினூடு தன் கதையை சிறப்பாக சொல்கிறார் கதாசிரியை ஜில்லியன் ஃப்ளைன். ஆரம்ப பக்கங்களில் கதை சற்று வேகமின்றி நகர்ந்தாலும் படிப்படியாக அது புதிர்களையும், சுழல்களையும், அவற்றால் சூழப்பட்ட திருமண உறவுகளையும் கச்சிதமாக விபரிக்கிறது. கதையின் பாதியில் வரும் ஒரு திருப்பத்தின் பின் கதை எடுக்கும் வேகம் அபரிமிதமானது. வாசிப்பதை நிறுத்த இயலாத ஒரு நிலை ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது. இக்கதையில் வரும் ஒரு பாத்திரம் என்னை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. எம் சமூகம் எவ்வகையான மனிதர்களை உருவாக்கி செல்கிறது எனும் அச்சமே அது.

புத்திசாலித்தனமும், அவதானிப்பும், திட்டமிடலும் எவ்வகையான விளைவுகளை ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படுத்தகூடும் என்பது நாவலின் முடிவுவரை திகிலை தரக்கூடியதாகவே இருக்கிறது. தகவல் கிட்டங்கிகளாக மட்டும் மாறிவிட்ட இன்றைய ஊடகங்கள் எவ்விதமான திறமைசாலிகளை உருவாக்க முடியும் என்பதும் இங்கு ஒரு பார்வையாக விரிகிறது. காவற்துறையின் இயலாமை, காட்சி ஊடகங்கள் ஒரு மனிதன் மீது உருவாக்ககூடிய வெறுப்பு அலை, அதன்மீது சுகமாக பயணிக்கும் பாமர சமூகம், சமூகத்தின் அபிமானத்தின் வழி இன்று மனம் தடுமாறக்கூடிய ஜூரிகள் என ஒரு குற்றத்தின் பின்பான சிறப்பான ஒரு அலசலாகவும் இந்நாவலை பார்க்கலாம். Gone Girl நம்ப முடியாத எதார்த்தம் ஒன்றின் சமரசங்கள் நம் சமூகத்தின் விழுமியங்கள், அறங்கள் மீது எள்ளலான புன்னகையுடன் வேரூன்றுவதைக் காட்டி நிற்கிறது.