Wednesday, December 25, 2013

மணல்மேல் கட்டிய பாலம்

சிறுவயது முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
சு.கி. ஜெயகரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பான மணல் மேல் கட்டிய பாலம் நாம் வாழ்வில் இன்னம் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிற ஒரு நூலாகும். அல்லது நம்பிக்கை இழந்தவை பற்றி தகவல்கள் சிலவற்றை தெளிவாக்குகின்ற ஒரு தொகுப்பாகும். நிலவியல், தொல்லியல் போன்ற துறைசார் சான்றுகளுடன் ஜெயகரன்  தன் கருத்துக்களை கட்டுரைகளில் முன்வைக்கிறார். இதுவரை எம் மனதில் இடம்பெற்றிருந்த ஒரு பிம்பம் மீதான பார்வை இவர் கட்டுரைகளின் பின்பாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அப்பிம்பங்கள் இல்லாமலும் போய்விடுகிறது.
கட்டுரை தொகுப்பில் இடம்பெறும் முதல் கட்டுரையான மணல்மேல் கட்டிய பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் குறித்தது. சில வருடங்களின் முன் நாசா செய்மதி நிழற்படங்கள் துணையுடன் ராமர் கட்டிய பாலம் நிஜமே என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு முடிவுகளாலும், சான்றுகளாலும் இக்கட்டுரையில் எதிர் கொள்கிறார் ஜெயகரன். ராமர் பாலத்தை கட்டவில்லை என்றால் பாக் நீரிணையில் இருக்கும் அந்த கடலடி மணல் தட்டு என்ன? இதற்கான விளக்கத்தை தெளிவாக இக்கட்டுரை தருகிறது.
வேதங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு ஒரு காலத்தில் ஜீவ நதியாக ஓடி இன்று மறைந்து போய்விட்டது என்பது ஒரு தகவல். ஹரிஜானா, ராஜாஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளை செய்மதி எடுத்த படங்கள் தரையில் இருந்து பார்க்கும்போது கண்ணிற்கு தென்படாத ஆற்றுப்படுகைகளை காட்டின. சரஸ்வதி ஆறு ஆர்வலர்கள் இதை தமக்கு கிடைத்த ஆதாரமாக கொண்டு வேதகாலம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானது எனும் கருத்தை பலப்படுத்த ஆரம்பித்தனர். ஜெயகரனின் சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரீகமும் எனும் கட்டுரை வேதகாலம் உண்மையிலேயே சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானதா என்பதை தெளிவாக்க முயல்கிறதுஆர்வலர்களின் ஆர்வக் குளறுபடிகள் குறித்தும் சொல்ல தயங்கவில்லை ஜெயகரன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த நில நீட்சி என்ன என்பது பற்றி குமரிக்கண்டம்- லெமூரியாக் குழப்பம் கட்டுரையில் விரிவாக எழுதுகிறார் கட்டுரையாசிரியர். தமிழகத்தின் தெற்கே கண்டம் என அழைக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருந்ததா? குமரிக்கண்டம், மு எனும் நிலப்பரப்பு, லெமூரியாக் கண்டம் இவை எல்லாம் ஒன்றா? லெமூரியா எனும் கருத்தாக்கம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஆராய விழையும் ஜெயகரனின் கட்டுரை மரபு மரபாக பழந் தமிழ் இலக்கியம் கட்டி வைத்த கற்பனை அடுக்குகளை நொருக்கி விடுகிறது. கட்டுரை தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இது அமைகிறது.
காம்பே கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான சிதைவுகள் வரலாற்றிற்கு முன்பான காலத்தவையா என்பதை தேட விழைகிறது காம்பே கடலுக்கடியில் ஒரு கட்டுக் கதையா? எனும் கட்டுரை. கடலடிக்கு எவ்வாறு படிவங்கள் வந்து சேர்ந்திருக்கும், கடலடி அகழாய்வு, நிலத்தடி அகழாய்வு இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் என சுவையான தகவல்களுடன் காம்பே கடலடி சிதைவுகள் குறித்த கேள்விகளையும் ஜெயகரன் தன் வரிகளில் உருவாக்குகிறார்.
போளுவாம்பட்டி புலவர் . இராமசாமி, பேரூர் கருப்புசாமி இவர்கள் இருவரும் சேகரித்து வைத்திருந்த சுடுமண் ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள், சித்திரங்கள், கிறுக்கெழுத்துக்கள், சங்கேதங்கள் போன்றவை பழந்தமிழ் எழுத்துக்களா? சங்க காலத்தவையா? என்பதை ஆராய்ந்து விடை காண்கிறது பேரூர் சுடு மண் ஓடுகள். ஆச்சர்யங்கள் நிறைந்த கட்டுரை இது. இராமசாமி, கருப்புசாமி இருவரினதும் திறமைகள் வியக்க வைப்பவையாக இருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் சிலப்பதிகாரம் குறித்த வரலாற்று உண்மைகள் என்ன? சிலப்பதிகாரத்தின் சாயல் கொண்ட இரு பழந்தமிழ்க் கதைகள் எவை? இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இருக்க வாய்ப்புக்கள் உண்டா? சிலப்பதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால் எனும் கட்டுரை.
Chariots of Gods எனும் பிரபல நூலை எழுதிய எரிக் வோன் டேனிகன், வேற்றுலகிலிருந்து பூமிக்கு வருகை தந்த கடவுளர்களின் உதவியாலேயே சில நாகரீங்கள் பரிணாமம் பெற்றது எனும் கருத்தை கொண்டவர். கடவுளர்களின் உதவி இல்லாவிடில் பிரமிடுகள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனும் கருத்தை முன் வைப்பவர் இவர். எரிக் வொன் டெனிகனின் புரட்டுக்கள், அவர் முன் வைக்கும் வேற்றுலக கடவுளர்களின் பூமி விஜயத்திற்கு முரணனா சில சான்றுகளையும், கருத்துக்களையும் ஜெயகரன் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் கட்டுரையில் பகிர்கிறார். சுவையான கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பேன். எரிக் வோன் டேனிகனின் கருத்துக்களில் இருக்கும் இனவுயர்வுவாதம் குறித்தும் ஜெயகரன் சிறிதாக விளக்கம் தருகிறார்.

தொடரும் கட்டுரைகள், பப்புவா நியுகினியில் எரிமலை விஜயம், தமிழகத்தில் திடீரென தோன்றிய கற்பாறைகளின் மர்மம், கொங்கு நாட்டில் நிலத்தடி நீர் போன்றவை பற்றி கூறுகின்றன. ஆனால் இவை மேற்சொன்ன கட்டுரைகளின் அளவிற்கு விறுவிறுப்பானவை அல்ல. எளிய தமிழில், ஒரு புலன் விசாரணை போல விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிலவியல், தொல்லியல், வரலாற்றியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வாசகர்களை திருப்திப்படுத்தும். டாவின்சி கோட் போல தமிழிலும் கதைகள் எழுதலாம் எனும் எண்ணத்தை இக்கட்டுரை தொகுதி பலப்படுத்தவே செய்கிறது. ராமர் பாலம் கட்டினாரா எனும் கேள்விக்கு இனி உங்கள் சிலரின் பதில்களிலும் மாற்றம் வரக்கூடும். சிற்றிதழ்களில் கட்டுரைகளாக வந்தவற்றை தொகுத்து காலச்சுவடு நூலாக வெளியிட்டு இருக்கிறது.

Monday, December 16, 2013

Imperium & The Hobbit: The Desolation of Smaug


Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

The Hobbit: The Desolation of Smaug

மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.

ஹாபிட்டில் எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.

நாவலில் மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.

திரைக்கதை படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.

ஸ்மொக், அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.

மொத்தத்தில் ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!

Sunday, December 15, 2013

Farseer 2 &3

Royal Assassin

உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் மலை ராஜ்ஜியத்தில் தன் தோல்விகளை எண்ணிப்பார்க்கும் ராஜகொலைஞன் ஃபிட்ஸுடனேயே தொலைதிருஷ்டியர் முப்பாக நாவல் வரிசையின் இரண்டாம் பாகத்தை திறக்கிறார் கதாசிரியை ராபின் ஹாப்.

ஆனால் அந்த உடல் நிலையுடனேயே ஃபிட்ஸ் மீண்டும் பக்கீப்பிற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. மர்மமான ஒரு அயர்ச்சியால் வாடும் அரசன் , கரையோர நிலங்களை சூறையாடி மகிழும் செங்கல கொள்ளையர்களை எதிர்த்து நிற்க துடிக்கும்  வெரிட்டி, தன்னிடம் அதிகாரம் வர வேண்டும் என காரியமாற்றும் ரீகல் இவர்களின் மத்தியில் ராஜகொலைஞன் ஃபிட்ஸ் தன் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் தர தயாராக உள்ள விலை என்ன? அது அவனை என்ன நிலைக்கு தள்ளப் போகிறது?

இவற்றிற்கான விடையை தன் ஆடம்பரமற்ற வரிகளில் நாவலில் கொணர்கிறார் ஹாப். காதல், வீரம், தியாகம், விசுவாசம், சதிகள் என்பவற்றின் மத்தியில் தன் முடிவை நோக்கி விரைகிறான் ஃபிட்ஸ். பக்கீப் எனும் இடத்தை விட்டு நகராது அதனுள்ளேயே கதையையும் உணர்வுகளையும் வாசகனுடன் மோத விடுகிறார் ஹாப். அவர் எழுத்துக்களை எல்லாராலும் ரசிக்க முடியாது என்பது தெளிவு. ரசிக்க முடிந்தால் அதன் சுவை இனிது என்பது ஒருவர் பெறும் அறிவு.

காதல் காட்சிகளில் மீள்கூறல் சற்று அயர்ச்சியை தருகிறது. ஹாப்பின் எழுத்துக்களில் மீள்கூறல் அலல்து எழுதல் ஒரு பண்பாகவே இருக்கிறது என்பேன். விலங்குகள் மீதான பார்வையை தன் எழுத்துக்களில் உயர செய்யவும் ஹாப் முயல்கிறார். விலங்கிற்கும் மனிதனிற்குமான உணர்வு சார்ந்த உறவின் வலிமையை அவர் தன் நாவலில் முக்கியமான ஒரு அங்கமாக்கியிருக்கிறார்.

கரையோர நிலங்களை தாக்கியழிக்கும் செங்கல கொள்ளையர்கள், அவர்களால் உணர்விலிகளாக ஆக்கப்படும் அந்நிலவாழ் மனிதர்கள், மேலும் இந்நிகழ்வுகளின் பின்னிருக்கும் மர்மம் இப்பாகத்திலும் ஒரு நீளும் இழையாகவே இருக்கிறது. பட்டத்திற்குரிய இளவரசன் வெரிட்டி செங்கல தாக்குதல்களிற்கு எதிராக எடுக்க விழையும் நடவடிக்கைகள், அவற்றில் ஃபிட்ஸின் பங்கு, இவை வழியாக ஆழமாகும் அவர்களிற்கிடையிலான பிணைப்பு என நகரும் கதையில் ஃபிட்ஸின் விசுவாசம் யாரிற்கானது என்பது கேள்வியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. வெரிட்டியின் மனைவி கெட்ரிக்கன் பக்கீப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு ராணியாக ஆகுவதற்குரிய ஆரம்ப அறிகுறிகளும் நாவலில் சொல்லப்படுகிறது. தொலைதிருஷ்டியர்களின் பரம்பரை சொத்தான மனோமந்திரம் குறித்த புரிதல்களும், அபாயங்களும் விரிவாக ஆரம்பிக்கின்றன. எல்டர்லிங்கை மூன்றாம் பாகத்திலும் ஹாப் காட்டமாட்டார் போலிருக்கிறது.

சிறு வயதில் ஃபிட்ஸை வளர்த்த வுரிச்சிற்கும் ஃபிட்ஸிற்குமிற்கிடையிலான உறவின் உணர்ச்சிகரமான தருணங்கள், ஃபிட்ஸின் தந்தையின் மனைவியான லேடி பேஸன்ஸ், ஃபிட்ஸ் மீது கொண்டிருக்கும் உணர்வுகளுடன் சென்று நெகிழ்வலைகளாக மோதுகின்றன. முதிய ராஜகொலைஞன் சேட் வழமை போலவே மறைவாக இயங்க ராஜாவின் முட்டாளை சுற்றியுள்ள புதிர்கள் விடுபடுமாற்போல இறுகுகிறது. ராஜமுட்டாளின் விசுவாசம் கதையில் மிக சிறப்பாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் வழி செயற்பட ஃபிட்ஸ் விழைந்தாலும் நிகழ்வுகளின் ஆட்டங்களின் விளைவால் அவன் தனித்து எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் எப்படியாக பக்கீப்பையும் அவன் வாழ்க்கையும் மாற்றி அடிக்கிறது என்பதை சலிப்பே இல்லாமல் ஹாப் எழுதுகிறார்.
மெதுவாக நகரும் நாவல் விரைவாக படிக்க தூண்டும் எழுத்தைக் கொண்டிருக்கிறது. உச்சக் கட்டத்தில் வழமை போலவே ராபின் ஹாப்பின் முத்திரை உண்டு. இரண்டாம் பாகத்தின் முடிவில் நான் உடனே தேடியது மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தை.

Assassin's Quest

ஒரு கதை நல்ல கதையாக இருந்தாலும், உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக இருந்தாலும், சர்வதேசரீதியாக விற்பனையில் உச்சங்களை தொட்டு இருந்தாலும் வாசகனின் மனதை நெருங்கி வராத வகையில் அவை வாசகனிற்கு பிடித்தமானவையாக ஆவது இல்லை.

ராபின் ஹாப்பின் எழுத்துக்கள் மிகைபுனைவின் உச்சநிலை என நான் எழுதப் போவது இல்லை. என் வாசிப்பு அனுபவத்தின் படி அப்படியான ஒரு உச்சநிலை என்பது தற்காலிகமானதே. இன்று எமக்கு உச்சநிலையை தரும் ஒரு படைப்பானது காலத்தின் நகர்வில் அதன் உச்சநிலையிலிருந்து கீழிறங்குவது இயல்பான ஒன்றே.

மிகவும் பிரம்மாண்டமான மிகைபுனை கதை வரிசைகளான WOT, ASOIAF போன்றவற்றின் மிகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட படைப்புக்களாகவே ராபின் ஹாப்பின் படைப்புக்கள் இருக்கிறது. ஜோர்டானின் எழுத்துக்களின் கம்பீரமோ, பலமோ அல்லது மார்டினின் எழுத்துக்களின் உக்கிரமோ வன்மமோ ராபின் ஹாப்பின் எழுத்துக்களில் இருப்பது இல்லை. அதேபோல அவர்கள் உருவாக்கிய உலகுகளின் பிரம்மாண்டங்களும், சிக்கலான கதைநகர் களமும் ஹாப்பின் எழுத்துக்களில் காணக்கிடைப்பது இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகைபுனை ரசிகர்களிற்கு அவரின் கதை சொல்லல் பிடிக்குமா என்பதே சந்தேகம்தான். இருப்பினும் அவர் எழுத்துக்கள் என்னை மிகவும் நெருங்கியிருக்கின்றன.

Farseer முப்பாக நாவல் வரிசையின் மூன்றாவது நாவலான Assassins Quest என் வாசிப்பில் ஒரு அருமையான படைப்பு. பிரதான பாத்திரமான ஃபிட்ஸ் சிவாலெரி மிகைபுனை வரலாற்றில் தன்னை ஒரு சிறப்பான பாத்திரமாக நிரூபிக்கும் படைப்பு. இதற்காக ஃபிட்ஸை ஒரு வீர தீர சாகசனாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பின் எப்படி அவன் சிறப்பான பாத்திரமாகிறான் என்பதை நீங்கள் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கதையின் பிரதான எதிர்பாத்திரமான ரீகலின் மரணம் சம்பவிக்கும் விதம் அபாரமான ஒன்று. நீண்ட கதை சொல்லலில் முன்நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் நினைவு மட்டுமே அதன் மர்மத்தை உடனடியாக அவிழ்க்க முடியும்.

ஜோர்டானும், மார்ட்டினும் என்னை ரசிக்க பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஹாப் தன் மிகைபுனைவால் என் உள்ளத்தை உணர்ச்சிக் குவியலாக்கி விட்டார். அசாத்திய பொறுமையும், சிறப்பான எழுத்துக்கள் மீதான நேசமும் மட்டுமே அவர் எழுத்தை படிப்பதற்கு உங்களுக்கு துணை வரக்கூடும்.

Saturday, September 7, 2013

அடிமைகளின் ஆண்டவன்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 13

குருவானவர் மத்தியோவின் கடிதம் கண்டு சான் ஹுவான் மடத்திற்கு விரையும் டெக்ஸ், அங்கு வாழ்ந்திருந்த மூன்று சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொள்கிறார். குருவானவர் மத்தியோ மற்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் கண்ட வண்டி ஓட்டியான சேவியர் ஆகியோர் வழங்கும் தகவல்களை அடுத்து டெக்ஸ் தன் சகா கார்சன் சகிதம் நோகலெஸ் நகரில் தன் விசாரணையை ஆரம்பிப்பதற்காக புறப்படுகிறார்....

டெக்ஸ் பரட்டை அல்ல. எந்த வேலையும் ஆற்றாது கள்ளியின் நிழலில் கவிழ்ந்து கிடந்து மதுப்புளிப்பின் கனாக் காண! டெக்ஸிற்கு நின்றால் நிமிர்ந்தால் நடந்தால் இடறினால் 1008 வேலை இருக்கிறது. தமிழில் வேறு உயிரை எடுப்பது போல பேசியாக வேண்டிய தார்மீக கடமை வேறு!! உதிரியாக. ஒரு கதை முடிவதற்குள் டெக்ஸ் அடுத்த விசாரணைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேரமே நேரத்தை பார்த்து தலையை பிறாண்ட வைக்கும் டெக்ஸின் டைம்டேபிளில் குருவானவர் மத்தியோவிற்கும் இடம் இருக்கிறது என்றால் அவர் டெக்ஸிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதை உலகெங்குமிருக்கும் டெக்ஸின் ரஸிக சமுத்திரம் இக்கதையை படிக்காமலே சொல்லி விடும். குருவானவர் மத்தியோ எவ்வாறு டெக்ஸின் விஐபி பட்டியலில் இடம்பிடித்தார் என்பதை டெக்ஸே கார்சனிடம் சான் ஹூவான் மடத்திற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கூறுவார். அமெரிக்க மண்ணின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சென்று மடங்களை அமைத்த துறவிகள் மதத்தை பரப்புவதோடு மட்டும் நின்று விடாது வழியற்ற மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதிலும் பங்குபற்றியதை டெக்ஸ் கார்சனிற்கு கூறும் கதை அதனுள் கொண்டிருக்கும்.

கதையில் இரு குருவானவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒருவர் மத்தியோ, அடுத்தவர் எலிசியோ. ஒருவர் கதையை ஆரம்பித்து வைப்பதிலும் அடுத்தவர் கதையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த செய்வதிலும் உதவுவார்கள். ஆக TEX Special n° 17 ஆக க்ளோடியோ நிஸ்ஸியின் எழுத்தில் உருவாகியிருக்கும் Marchands D'Esclaves கதை, மதம் பரப்ப சென்ற குருவானவர்களிற்கான ஒரு சிறு சமர்ப்பணம் என்றே எண்ண வைக்கிறது. மதம் பரப்பும் செயல் நீடிக்க வேண்டும், தம் அரவணைப்பின் கீழ் வந்த வழியற்றவர்களை நடுத்தெருவில் வீசி விட்டு செல்லக்கூடாது என்பதற்காக இந்த துறவிகள் சென்றிருக்ககூடிய சில எல்லைகளை தன் கற்பனையில் வடிக்கிறார் நிஸ்ஸி. இதில் எலிசியோ செல்லும் எல்லை சற்று மிகையான ஒன்றாக தோன்றினாலும் கதைக்கு அது சுவை தருவதாகவே இருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

டெக்ஸின் விசாரணைகள் நோகலெஸில் ஆரம்பிக்கும்போது அவரின் கேள்விகளிற்கான விடைகள் இலகுவில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விடைகள் உண்மையாக அமைவது இல்லை. இது குறித்து மத்தியோ ஏற்கனவே தந்த தகவல்கள் டெக்ஸின் மனதில் காதல் ஹைக்கூவாக நகர்ந்து அவர் கோபத்தின் டிகிரியை எரிமலையொன்றின் ஆழ்மனதின் ஆணிவேரின் கொதிப்பிற்கு இட்டுச் செல்லும் வேளைகளில் கதையில் அதிரடி வெடிக்கிறது. உண்மை வேண்டும் எனில் டெக்ஸ் தன் விசாரணை முறைகளின் எல்லைக் கற்களை இடம் மாற்றுவார். அவர் கற்களை நகர்த்தும் முறைகளிற்கேற்ப உண்மைகளும் இடம் மாறிக் கொள்கிறது. இருப்பினும் மிகவும் தந்திரமான மனிதர்களின் திட்டங்களையும் டெக்ஸ் நோகலெஸில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தந்திரமான மனிதர்களையும் அவர் தன் தந்திரத்தால் மயக்கிடும் அவசியமிருக்கிறது. ஆனால் டெக்ஸின் தந்திரம் பலிக்காது போகும்போதுதானே கதையில் விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள முடியும். டெக்ஸின் கணிப்புகளிற்கு மாறாக கதையில் திருப்பங்கள் வரும்போது கதை டெக்ஸின் குதிரையின் பின்புறத்தில் பதமாக ஒரு தட்டு தட்டி வேகத்தை அதிகரிக்க வைக்கிறது.

நோகலெஸிலிருந்து மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகரான ஹெர்மொசிலோவை டெக்ஸும் கார்சனும் சென்று சேர்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் திறமைக்கு சமனான பலம் கொண்டவையாக இருக்கின்றன. சில தந்திரங்களில் புராண நெடி அடித்தாலும் டெக்ஸிற்காக அவற்றை நாம் மன்னிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். தான் செய்யும் காரியம் குறித்து எந்த ஆதாரமும் இருக்ககூடாது என இயங்கும் ஒரு மனிதனிற்கு எதிராக டெக்ஸும் கார்சனும் உயிரைப் பணயம் வைத்து போராட வேண்டியிருக்கிறது. ஹெர்மசிலோவில் ஒரு பத்திரிகையாளர் சொல்வார் ... டெக்ஸ் நீங்க எப்ப மெக்ஸிக்கோ வந்தாலும் பத்திரிகைகளில தலைப்பு செய்தி ஆகிடுறீங்க .... உண்மைதான் ஹெர்மசிலோவின் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெறும் துப்பாக்கி மோதலில் தோட்டாக்கள் உயிர்வாங்கும் கவிதை எழுதுகின்றன. முதல் பரிசு வெல்பவர் டெக்ஸ். தோற்பதும் அவர்தான். அவர் தேடி வந்த தகவலும் குறைப்பிரசவமாக தன் உயிரை விட்டு விடுகிறது. இந்தவேளையில்தான் எலிசியோ கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை உருவாக்குபவராக உருப்பெறுகிறார். கதையின் நீட்சியில் எலிசியோ பாத்திரத்தின் உறுதி தெளிவாக்கப்பட்டாலும் இறுதியில் டெக்ஸின் உறுதி வெல்வதாக காட்டப்படுகையில் எலிசியோ பாத்திரம் மீது உருவான எதிர்பார்ப்பு சற்று குறையவே செய்யும். இறைவனின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் உறுதி ஒரு உயிரை எடுத்தல் எனும் எல்லைக் கோட்டில் தயங்கும் எனில் அங்கு இறைவன் அனுப்பி வைத்த ஆண்டவனாக இருப்பவர் எங்கள் நாயகன் டெக்ஸ்தான்.

உலகில் சமூகங்கள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே அடிமைகளும் இருந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள். கதையில் ஒரு தருணத்தில் பிரதான எதிர்பாத்திரமான டான் மானுவல் ஒப்ரகொன்..... லாபம் அதிகரிக்கிறது எனில் எந்த முதலாளியும் அது எப்படி வருகிறது என்பதை பொருட்படுத்தமாட்டான்.... எனும் அற்புதமான உண்மையை சொல்வான். இதில் எந்த ஊரிலும் பேதம் இருக்காது. இன்றைய நாட்களிலும் அதன் சுயரூபத்திலும் அல்லது மாற்றுரூபங்களிலும் மனிதர்களின் லாபங்களிற்காக அடிமைத்தனம் என்பது வாழ்ந்தே வருகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அது அலங்கார சாயங்களை பூசியவாறே வழியற்றவர்களை உறிஞ்சுகிறது. அதன் உதவியால் கொழுக்கும் மனிதர்களின் அதிகார பலங்கள் அவற்றை ஆண்டாண்டு காலமெல்லாம் வாழ வைப்பதாகவே இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் நான்கூட ஒரு அடிமைதான்!!

பைபிளில் எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து மோயீசன் மனிதர்களை மீட்டதாக ஒரு கதை இருக்கிறது. மீட்கப்பட்டு சென்ற மனிதர்கள் இன்று மற்றவர்களிற்கு சுதந்திரத்தையா வழங்கி விட்டார்கள் என இன்றைய நிலையில் கேட்டுப்பார்த்தால் வேடிக்கையான ஒரு பதிலை நாம் உருவாக்கலாம். ஆள்பவன் என்பவன் இருக்கையில் ஆளப்படுபவன் என்பவனும் இருந்தேயாக வேண்டும் அல்லவா. ஆனால் பைபிளில் மோயீசனைப் போல இந்த உலகிலும் அவ்வப்போது சில மனிதர்கள் உருவாகுவார்கள். இக்கதையில் மோயீசனாக டெக்ஸ். அவர் எவ்வாறு செவ்வனான திட்டங்களுடன் இயங்கும் டான் மானுவல் ஒப்ரகொனை முறியடிக்கிறார் என்பதை டெக்ஸ் கதைகளின் சகல அம்சங்களுடனும் இக்கதை வாசகர்களிடம் எடுத்து வருகிறது.

கதையின் சித்திரப் பொறுப்பு மிகப்பிரபலமான ஸ்பெயின் கலைஞர் Manfred Sommer இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கதைகளிற்கு வரைவதை குறைத்துக் கொண்டு ஓவியக் கலையில் தன் திறமையை கலந்து கொண்டிருந்த மான்ஃப்ரெட் சமர் இக்கதைக்கு பொனெலியின் வேண்டுகோளின் பேரில் வரைந்ததன் பின் மீண்டும் சித்திரக் கதைகளிற்காக வரையும் ஆர்வம் தூண்டப்பெற்றார். பக்கங்களில் தன் பெயரை அழகான ஒப்பமாக பதிப்பதோடு மட்டும் நின்று விடாது தன் திறமையால் டெக்ஸ் கதையின் சித்திரங்களை அழுத்தமாக பதித்திருக்கிறார் சமர். அவர் படைத்திருக்கும் டெக்ஸினதும், கார்சனினதும் கம்பீரங்களை கண்ணயர பார்த்து மகிழலாம். அதுவும் சில காட்சிகளில் இரு ரேஞ்சர்களிலும் அவர்களின் வயதிற்கு ஒத்துவராத வாலிபம் துள்ளி விளையாடுகிறது. எதிர்பாத்திரமான டான் மானுவலை சமர் உருவாக்கி வடித்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் க்ளாஸான ஒரு எதிர்பாத்திரம் அவன். மெக்ஸிக்கர்கள், கதை பயணிக்கும் பகுதிகளின் நிலவியல், அடிமைக் களம், சண்டைக்காட்சிகள் என பிளந்து கட்டியிருக்கிறார் சமர். நிஸ்ஸியின் வேகமான கதையும் சமரின் கம்பீரமான சித்திரங்களும் கலந்து கட்டி அடிக்கும் இக்கதை டெக்ஸ் ரஸிக ரஞ்சன சபா டாப் லிஸ்டில் தன் இடத்தை சிரமமின்றி தேடிக்கொள்ளும்.


Sunday, September 1, 2013

செமினொல்வதனமோ சந்த்ரபிம்பமோ - 12 

லூசியானாவில் அமைந்திருக்கும் ஃபோர்ட் பிளிஸில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மரணதண்டனைக் கைதியான ஓச்சாலாவை டெக்ஸாஸிற்கு மீள்விசாரணைக்கு இட்டு செல்வதற்காக கார்சன் சகிதம் அங்கு வருகை தருகிறார் டெக்ஸ். தன் பாதுகாப்பின் கீழ் அழைத்து செல்ல வேண்டிய நபரான ஓச்சாலா குறித்த தகவல்களை ஃபோர்ட் பிளிஸின் மேலதிகாரியிடம் இருந்து டெக்ஸ் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் லோங் நைஃப் எனும் தன் சகாவின் உதவியுடன் ஃபோர்ட் பிளிஸிலிருந்து தப்பி செல்கிறான் ஓச்சாலா……

பெருமேற்கின் நம்பர் 1 நாயகனான டெக்ஸ், தன் பொறுப்பான பாதுகாவலின் கீழ் ஒரு கைதியை எங்காவது இட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது எனும் தகவலிலேயே டெக்ஸின் பாசமிகு வாசக சமுத்திரமானது டெக்ஸ் செல்லப்போகும் வழியில் காத்திருக்கும் அதிரடிகளை எண்ணி ஆவல் கொள்ளும், நுரையலை கிளப்பி ஆர்ப்பரிக்கும். அப்பாசச் சமுத்திரத்தின் கனவானது ஓச்சாலா, கோட்டைக் காவலிலிருந்து தப்பியோடியிராவிடில் நிறைவேறியிருக்கவேகூடும். ஆனால் இத்தாலிய Fumetti வரலாற்றில் Storia del West எனும் பெருந்தொடர் உருவாக காரணமாக இருந்த கதாசிரியரான Gino D’Antonio இக்கதையின் சுவாரஸ்யத்திற்கு சுவையேற்றும் விதமாக ஓச்சாலாவை தேடி வேட்டையாடும் கதையாக TEX Special n°22 ன் Seminoles ஐ உருவாக்கி அதை டெக்ஸின் வாசக சமுத்திரத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.
இரு கொலைகளிற்காக மரணதண்டனை வழங்கப்பட்ட கைதியொருவனை அமெரிக்க ஜனாதிபதி வழங்கும் அழுத்தத்தின் பேரிலேயே டெக்ஸாஸ் நோக்கி அழைத்து செல்ல வருகிறார் டெக்ஸ். ஒரு சாதாரண செவ்விந்தியனிற்கு வழங்கப்பட்ட தண்டனையை டெக்ஸாஸில் மீள்விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன, இதில் அமெரிக்க சனாதிபதியின் தலையீட்டிற்கு காரணம் என்ன எனும் கேள்விகள் டெக்ஸ் மனதில் எழாமல் இல்லை. ஆனால் தனது மேலதிகாரிகளினதும், ஜனாதிபதியனதும் உத்தரவுகளை அவரால் உடனடியாக மறுத்துவிட முடிவது இல்லை. தன் பாதுகாப்பின் கீழ் டெக்ஸாஸ் செல்ல வேண்டிய ஓச்சாலா தன் கழுகுக் கண்கள் முன்பாகவே பெருநிலப்புல்வெளி முயல்போல் தப்பியோடும்போது டெக்ஸிற்கு இருப்பதும், தெரிந்ததும் ஒரே வழிதான். மனித வேட்டை. டெக்ஸ் தப்பி ஓடிய கைதியை உயிருடன் பிடித்து நீதியின் முன்பாக நிறுத்த விரும்புகிறார். ஆனால் ஓச்சாலாவின் உயிர் தன் கைகளினாலேயே போகவேண்டும் எனும் முனைப்புடன் ஓச்சாலாவை வேட்டையாடக் கிளம்புகிறான் இன்னொருவன். நாய்மனிதன் என பட்டப்பெயர் பெற்ற அம்மனிதனின் பெயர் லாபார்ஜ்.
பூர்வகுடிகளின் இனவழிப்பானது உக்கிரம் பெற்றபோது அவர்கள் தம் வாழ்நிலங்களிலிருந்து விலகி தாம் பாதுகாப்பாக வாழக்கூடிய பகுதிகளில் புகலிடம் தேடிக் கொண்டார்கள். இவ்வாறாக ஃப்ளோரிடாவின் சதுப்புநிலக்காட்டுப் பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வந்து குடியேறிய க்ரீக் பூர்வகுடிகளின் வழிவந்தவர்களே செமினோல்கள். செமினோல்கள் என்பதற்கு ஓடிச் சென்றவர்கள், கட்டுக்கடங்காதவர்கள், சுதந்திரிகள் எனும் அர்த்தங்கள் உண்டு. Everglades எனப்படும் இந்த சதுப்புவனப் பகுதியானது அடர் தாவரச் செழுமையும், நிலப்பரப்பைவிட அதிகமான நீர்ப்பரப்பையும், அபாயகரமான இரைகொல்லிகளையும், புதைமணல் கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த, மனிதர்களால் இலகுவாக உள்நுழைந்துவிட முடியாத ஒரு வனமாக இருந்தது. இயற்கை தன் நுட்பத்தால் உருவாக்கிய இந்த பாதுகாப்பு வலயத்தினுள்ளே சென்று புகலிடம் தேடிக் கொண்டவர்கள் செமினோல்கள் மட்டுமல்ல அமெரிக்க தெற்கின் நிலக்கிழார்களின் கீழ் அடிமைகளாக இருந்து விடுதலை வேண்டி தப்பி சென்ற கறுப்பினத்தவர்களும் எவெர்கிலேட்ஸ் சதுப்பு வனத்தினுள் ஆழமாக சென்று மறைந்து வாழ்ந்தார்கள். இவ்வாறாக தப்பி ஓடி எவெர்கிலேட்ஸினுள் தஞ்சம் புகுந்த கறுப்பினத்தவர்களை செமினோல்கள் தம்மிடையே வரவேற்று அவர்களையும் தங்களில் ஒருவராக அங்கீகரித்தார்கள்.
semi1இவ்வாறாக ஒதுங்கி இயற்கையின் பாதுகாப்பினுள் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளையும் தேடியழிக்க ராணுவம் நடவடிக்கைகளில் இறங்கியபோது அவர்களின் பிரதான எதிரியாக உருப்பெற்றது எவெர்கிலேட்ஸ் எனும் இந்த சதுப்புவனமே. இவ்வனப்பகுதியில் வழியைக் கண்டுபிடிப்பது ராணுவத்திற்கு மிகச்சிரமமான ஒன்றாக இருந்தது. வனத்தின் அடர்வுக்குள் மறைந்திருந்து தாக்கி மறையும் பூர்வகுடிகள் கூடவே இரைகொல்லிகள், புதைமணல்கள், எதிர்பாராமல் வந்து தாக்கும் நோய்கள் என அச்சூழலே அவர்களை எதிர்த்து தாக்கியது. அவர்கள் எதிர்கொண்ட இவ்வகையான தடங்கல்களை தவிர்க்கும் பொருட்டு இச்சதுப்புவனத்தினூடாக தம்மை சிரமங்கள் இன்றி வழிநடாத்தி செல்லக்கூடிய வழிகாட்டிகளின் சேவைகளை நாடிச் சென்றார்கள். அவ்வகையான வழிகாட்டிகளில் திறமையும், குரூரமும் ஒருங்கே படைத்த ஒருவனே லாபார்ஜ்.
வழிகாட்டிகளில் பெரும்பாலானவர்கள் ராணுவம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி அவர்களை ஆபத்துகளை விலக்கி அழைத்து செல்பவர்களாகவே இருப்பார்கள். மோதல்கள் உருவாகும் சமயங்களிலே அவர்கள் ராணுவத்தின் பக்கமாக நின்று மோதுவார்கள். ஆனால் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கும் முன்பாகவே பூர்வகுடிகளின் தலைத்தொலிகளை வேட்டையாடி அதில் இன்பம் காண்பவனாக இருந்தவன் லாபார்ஜ். பூர்வகுடிகளை கொன்றொழிப்பதிலேயே அவன் மகிழ்ச்சி உதயமாகிறது. தன் இளமையில் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கி அவன் அழித்தொழித்த பூர்வகுடிகளின் வாழ்க்கைகள் அதிகமே. இந்த செயலிற்கு துணையாக எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தில் பூர்வகுடிகளை மோப்பம் பிடித்து கண்டறிய அவன் சில நாய்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகத்திறமையாக மோப்பம் பிடிக்கும் இந்நாய்கள் லாபார்ஜின் கட்டளைப்படி மனிதர்களை உயிருடன் குதறிக் கிழித்துப்போடும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. இந்நாய்களுடனான நெருக்கமும், உறவும் லாபார்ஜையும் அந்நாய்களைப் போலவே மோப்பம் பிடிக்க கூடியவனாகவும், நுட்பமாக தடயங்களை தேடிச் செல்லக்கூடியவனாகவும் படிப்படியாக உருவாக்கியது. அந்நாட்களில் குரூரத்தில் சிறந்தது நாய்களா அல்லது லாபார்ஜா எனும் கேள்விக்கு விடையறிவது இலகுவான ஒன்றாக இருந்ததில்லை. கதையின் ஒரு தருணத்தில் செமினோல்களின் கிராமத்தில் நாய்களே இல்லை எனும் படிமம் முன்வைக்கப்படும்.
sem1டெக்ஸின் கதைகளின் எதிர்பாத்திரங்கள் எமகாதகர்களாக இருக்கின்ற வேளையில் கதைகளின் வேகமும், விறுவிறுப்பும் கணிசமான அளவில் அதிகரித்துவிடும். லாபார்ஜ் தன் குரூரம் வழியே டெக்ஸ் வாசகர்களின் மனதில் தன்னை நிறுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம். ஓச்சாலா மீது அவன் கொள்ளும் கொலைவெறி மிகவும் வேடிக்கையான ஒன்றாகவே கதையின் ஆரம்பத்தில் வாசகர்களிற்கு தோற்றம் தரும். ஓச்சாலா கைது செய்யப்படக் காரணமானவன் லாபார்ஜ்தான். அந்த சம்பவத்தின்போது லாபார்ஜை நோக்கி ஓச்சாலா துப்பாக்கி பிரயோகம் செய்கிறான். லாபார்ஜுடன் கூடவே சென்றிருந்த ராணுவவீரர்கள் ஓச்சாலாவின் துப்பாக்கி பிரயோகத்தை தற்பாதுகாப்பு என்பதாக கருதுகிறார்கள். ஆனால் லாபார்ஜோ அது தன்மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் என்பதாக தீர்மானித்துக் கொள்கிறான். அக்கணம்முதலே ஓச்சாலா மீதான கொலைவெறி லாபார்ஜினுள் ஒரு மூர்க்கமான விலங்குபோல நடைபயில ஆரம்பிக்கிறது. கோட்டை காவலிலிருந்து ஓச்சாலா தப்பிச் சென்று விடும்போது அவனைத் தேடி டெக்ஸிற்கு முன்பாக செல்பவர்களில் லாபார்ஜும் இருக்கிறான். ஒரு தருணத்தில் ராணுவத்தினரை உதறிவிட்டு ஓச்சாலாவை தன் தனிப்பட்ட பிரச்சனையாக கொண்டு தனியாகவே ஓச்சாலாவை வேட்டையாடும் முயற்சிகளை ஆரம்பிக்கிறான்.
வயதில் முதுமை சற்றே வந்தேறி அமர்ந்துவிட்டாலும் கதையில் டெக்ஸிற்கு பெரும் தலைவலியாக அமைவது லாபார்ஜ்தான். ஆனால் கதையின் வில்லன் லாபார்ஜ் இல்லை. டெக்ஸ்தான். லாபார்ஜிற்கு அவர் செய்யும் செயல்களையும் அவற்றில் ஒலிக்கும் தொனிகளையும் அவதானிக்கும்போது அவரை ஒரு நாயகன் எனச் சொல்ல முடியாது. வயதான நிலையில், தனக்கு துணையாக நாய்களும் இல்லாத நிலையில், ஓச்சாலாவைவிட டெக்ஸை கொல்லும் வெறி தன்னுள் நீர்மட்டம்போல உயர உயர பெருமேற்கின் பெருநாயகனான டெக்ஸின் மிரட்டல்கள் முன் மடிந்துவிடாது மனவுறுதியுடன் தன் இலக்கு நோக்கி குரூரமிழக்காது பயணிக்கும் லாபார்ஜ் இக்கதையின் உச்ச நட்சத்திரம் என்றால் அது மிகையல்ல.
காவலில் இருந்து தப்பியோடிய ஓச்சாலா ஒரு செமினொல். எனவே அவன் லூசியானாவிலிருந்து எவெர்கிலேட்ஸ் நோக்கி விரைகிறான். லாபார்ஜ் அவனை பின் தொடர்வதை தடுப்பதோடு அவனை தான் பின் தொடர்வதையும் டெக்ஸ் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தின் ஆழமான பகுதியில் வாழ்ந்திருந்த ஓச்சாலா லூசியானா நோக்கி வந்ததிற்கும் அவன் அங்கு ஆற்றிய கொலைகளிற்கும் காரணம் என்ன எனும் கேள்வி டெக்ஸ் மனதில் எழுகிறது. அதற்கான காரணங்களை தன் கதையோட்டத்துடன் சலிப்பின்றி விபரிக்கிறார் கதாசிரியர் ஜினோ ட அண்டோனியோ. அது என்ன என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளும் தருணம் யார் யாரால் வேட்டையாடப்படுகிறார்கள் எனும் கேள்வியின் விடையானது மெல்ல மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும்.
டெக்ஸ் வாழ்ந்திருக்கும் மேற்கானது தான் உருவாக்கிய மேற்கிலிருந்து வேறுபட்ட ஒன்று எனச் சொன்னவர் இக்கதையின் கதாசிரியரான ட அண்டோனியோ. அவரின் Storia del West பெருமேற்கு குறித்த சித்திரக்கதை படைப்புக்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 1967 களில் அவர் ஆரம்பித்த மேற்கின் கதை எனும் அத்தொடர் பல சித்திரக் கலைஞர்களின் திறமையான ஒத்துழைப்புடன் 1980 வரை தொடர்ந்து நிறைவுற்றது. ஏறக்குறைய 7500 பக்கங்கள் கொண்ட தொடரிது. எனினும் பொனெலியின் வேண்டுகோளிற்கிணங்கி ட அண்டோனியொ உருவாக்கியிருக்கும் இந்தக் கதை டெக்ஸ் கதைகளின் வழமையாகிய மிகையான தர்க்க மீறல்களை தன்னில் இயன்றளவு விலக்கி கொள்ள முயன்றிருக்கிறது ஆனால் முழுமையாக அல்ல. ஓச்சாலா, லாபார்ஜ் போன்ற பாத்திரங்களை அவர் டெக்ஸை விட மிக சிறப்பானவைகளாக உருவாக்கி இருக்கிறார். டெக்ஸை ஒரு முரட்டு மனிதனாக காட்டுவதில் ட அண்டோனியா வெற்றி பெற்றிருக்கிறார். கார்சனிற்கு இக்கதையில் அதிக பங்கு கிடையாது. கதையின் ஆரம்ப பகுதியிலேயே காலில் அடிபட்டவராக ஃபோர்ட் பிளிஸில் சிகிச்சை பெற சென்று அங்கு தங்கி விடுகிறார் அவர். கார்சனின் இடத்தை இட்டு நிரப்ப யேசு எனும் வழிகாட்டியை தன் உதவிக்கு சேர்த்துக் கொள்கிறார் டெக்ஸ். அடர் சதுப்புவனமான எவெர்கிலேட்ஸில் டெக்ஸிற்கு வழிகாட்டியாக செயற்படுபவன் யேசு எனும் கறுப்பு இனத்தவனே. ப்ளோரிடாவின் சதுப்புக்காடுகளினுள் டெக்ஸ் ஏற்கனவே டிஸ்கோ டான்ஸ் ஆடியிருந்தாலும் லாபார்ஜிற்கு எதிராக தனக்கு ஒரு துணை தேவை என்பதை அவர் கதையில் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.
sem2எவெர்கிலேட்ஸின் சிட்டிசனான ஒரு ராட்சத முதலையுடன் டெக்ஸ் கட்டிப்பிடித்து போடும் சண்டை பசுபிக் ரிம் கைஜு மோதல் காட்சிகளை மிக்கி மவுஸ் கார்ட்டூன் நிலைக்கு படியிறக்கி விடுகிறது. இச்சண்டைக்காட்சியை பார்த்த ஒரு கைஜு இந்த மவராசான் கிட்ட நான் அடிபடனும், அவர் கைல நான் சாவனும் என தன் உளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆற்றில் மிதந்தபடியே ராட்சத முதலை டெக்ஸ் நீ ஆம்பளயா இருந்தா உள்ள ஒத்தைக்கு ஒத்தை வாடா என சவால்விட பதிலுக்கு டெக்ஸ் விடும் பஞ்ச் டயலாக்கில் சுனாமிகளை உருவாக்ககூடிய ஐந்து பூமியதிர்ச்சிகளின் சக்தி அடங்கி அதிர்ந்து எவெர்கிலேட்ஸையே ஆடச்செய்கிறது. அப்புறம் அந்த முதலைக்கு என்ன ஆச்சு என நீங்கள் உங்கள் மனதில் கேள்வி எழுப்பினால் இதுவரையில் தலைவர் டெக்ஸின் கதைகளை படித்திராத அபாக்கியசாலிகள் நீங்கள் என்பது இங்கு உறுதியாகிறது.
ட அண்டோனியோ எழுதியிருக்கும் கதையின் முக்கிய திருப்பங்கள் நிகழும் எவெர்கிலேட்ஸ் பகுதிகளை அப்படியே வாசகரிடம் சித்திரங்களில் வழங்கியிருப்பவர் Lucio Filippucci. மர்ம மனிதன் மார்டின் கதைகளிற்கு சித்திரங்களை வரைபவர்களில் ஒருவர் இவர். மிகத் தெளிவான கோடுகள் வழியாகவும் கறுப்பு, வெள்ளை வண்ணங்களின் செறிவு வேறுபாடு, ஒளிசேர்முறை வழியாகவும் சிறப்பான சித்திரங்களை அவர் இக்கதைக்கு வழங்கியிருக்கிறார். அதுவும் எவெர்கிலேட்ஸ் பகுதிக்குள் கதை நுழைந்துவிட்ட பின்பாக பின்னி எடுத்து இருக்கிறார் மனிதர். அடர்காட்டின் தாவரச்செழுமையை ஊடறுத்துக் கொண்டு ஒளிப்பட்டையாக நீளும் சூரியன் வாசகர் மனதில் இலகுவாக இடம் பிடிக்கிறான். சதுப்புவனச்சூழலை அவர் வரைந்து வழங்கியிருக்கும் திறமையில் ஒரு சில கணங்கள் நிலைத்து அதில் அவர் சேர்த்துக் கொண்டிருக்கும் தகவல்களையும் அதற்கு பின்பாகவுள்ள அவர் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தெளிவாக ஒருவரால் அவதானித்திட முடியும். லாபார்ஜ் எனும் பாத்திரத்திற்கு ஃபிலிபூஸ்ஸி உயிர் தந்திருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக அவனது முகம். கொலைவெறி நடனமிட, அவன் முகத்தில் ஏளனமாக நளினக்கோலமிடும் குரூரமும் அவன் முகபாவனைகளும் வாசகர்கள் நினைவில் சிறிது காலம் நிலைக்கவே செய்யும். செமினோல் பூர்வகுடிகள், அவர்கள் வாழிடங்கள் போன்றவற்றையும் நுட்பமான தகவல்களுடன் அவர் சித்திரங்களாக உருவாக்கியிருக்கிறார். சித்திரங்களும், கதையும் இணைந்து டெக்ஸின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அரிதான கதைகளில் செமினோலிற்கும் இடமுண்டு.

Monday, August 26, 2013

எண்ணும் மனிதன்

கோடிவீட்டு கொழந்தசாமியின் அழகிய இளம் மனைவி குஞ்சாயியை மடக்குவதில் நீங்கள் வெற்றி காண வேண்டும் எனில் உங்கள் மனதில் உள்ள அந்த ஆசையை நீங்கள் முதலில் குஞ்சாயிடம் தெரிவிக்க வேண்டும். நேரடியாக இத்தகவலை நீங்கள் சொல்லப்போக குஞ்சாயிக்கு அது பிடிக்காமல் போக அதை அவள் தன் பாய் பிரண்ட் ஜூடோ ஜோஸின் காதில் கண்ணீருடன் போட்டு வைக்கப்போக... உங்கள் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆகவே உங்கள் மன இச்சையை குஞ்சாயியிடம் க்ளியர் ஆக்கும் முன்பாக குஞ்சாயிக்கு இனியவனாக நீங்கள் மாறுவதே நல்லது.

சில விடயங்களை இலகுவாக உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அதன் வடிவத்தை மாற்றல் நலம் பயிற்கும். மாட்டிறைச்சியை பர்கர் ஆக்குவது போல. மாங்காயை ஊறுகாய் ஆக்குவது போல போதனைகள், அறிவுரைகள், நீதிக்கருத்துக்கள் போன்றவற்றை மக்கள் மனதில் பதியச் செய்ய சிறப்பான வழியாக அவற்றை கதைகளில் கலந்து சொல்லி மக்களிடம் கடத்துவது தொண்டு தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. யேசு முதல் திருமுருக கிருபானந்த வாரியார்வரை இதை ட்ரை பண்ணி வெற்றி கண்டிருக்கிறார்கள். ஈசாப் நீதிக் கதை முதல் பஞ்ச தந்திரம் வரை இதே டெக்னிக் பயனளித்து இருக்கிறது. கசப்பு மருந்தை வெல்லக்கட்டிக்குள் வைத்து தருவதே நலம் என்கிறார் நர்ஸ் சரசு. அதை அவர் கையால் ஊட்டி விட்டால் இன்னும் நலம் என்கிறேன் நான். ஆக எமக்கு பிடிக்காத ஒன்றைக்கூட வேறு ஒன்றின் உதவியுடன் எமக்கு பிடித்ததாகவோ அல்லது ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகவோ ஆக்கிட முடியும்.

இவ்வாறான வழியைத் தழுவியே பிரேசிலிய கணிதப் பேராசிரியர் மற்றும் ஆசிரியரான Júlio César de Mello e Souza கணிதப் புதிர்கள் சில குறித்த தன் சுவாரஸ்யமான படைப்பான எண்ணும் மனிதனை உருவாக்கி இருக்கிறார்.  Malba tahan எனும் புனைபெயரில் அவர் இப்படைப்பை எழுதியிருக்கிறார்.
சமராவிலிருந்து பாக்தாத் நோக்கி செல்லி திரும்பிக் கொண்டிருக்கும் ஹனாக் தடே மையா வழியில் ஒரு விசித்திரமான மனிதனை சந்திக்கிறான். அம்மனிதனின் பெயர் பெரமிஸ் சமீர். வானில் பறக்கும் பறவைகள், ஆட்டு மந்தையில் இருக்கும் ஆடுகள், மரத்தில் இருக்கும் இலைகள் என எல்லாவற்றையும் சரியாக எண்ணிச் சொல்பவனாக இருக்கிறான் இந்தப் பெரமிஸ் சமீர். பெரமிஸ் சமீரின் திறமையைப் பாராட்டும் ஹனாக் தடே மையா அவனை தன்னுடன் பாக்தாத் நகரிற்கு அழைத்து செல்கிறான்.
இப்படியாக ஆரம்பிக்கும் இக்கதை படிப்படியாக பெரமிஸ் சமீரின் கணித அறிவாற்றலை சவாலிற்கு அழைத்து செல்கிறது அதன் வழி வாசகனையும் ஒரு வகையில் அது சவாலிற்கு அழைக்கிறது. பெரமிஸ் சமீர் முன் வைக்கப்படும் புதிர்களையோ, சிக்கல்களையோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வாசகனும் விடுவிக்க முயலலாம். வெற்றி கிட்டினால் அட நானும் பெரமிஸ் தான் என வாசிப்பை பெருமையுடன் தொடரலாம் இல்லையேல் என்னைப்போல இதுக்கு இப்ப எனக்கு நேரமில்ல மாயாவி கத படிக்கனும் என்று சொல்லி சமாளித்து பெரமிஸ் புதிர்களிற்கு விடை கண்டுபிடிப்பதை படித்து களிக்கலாம்.

தந்தை விட்டு சென்ற ஒட்டகங்களை சரியாக பிரித்து அரேபிய சகோதரர்களிடம் வழங்குவதில் இருந்து உலகப் பேரறிஞர்கள் முன் வைக்கும் வினோதமான புதிர்கள் வரை பெரமிஸ் தயக்கமின்றி செல்கிறான். சுவையாக அவற்றை விடுவிக்கிறான். இங்கு சிக்கல்களோ, புதிர்களோ யாவுமே சுவாரஸ்யமான கதை வடிவில் சொல்லப்படுவது வாசிப்பை இலகுவானதாகவும், சுவை கொண்டதாகவும் ஆக்குகிறது. முலாம் பழம் முதல் சிங்கம் நரி பங்கு பிரித்தல் வரை பெரமிஸ் பொளந்து கட்டுகிறான். குரான் பத்தி ஒரு பரா இருக்கிறது. அட்டகாசமான பரா அது.

அறிவும், அடக்கமும் ஒருங்கே கூடிய பெரமிஸ் வரலாற்றின் மிக முக்கிய கணித அறிஞர்களின் திறமைகளை நினைவுகூறுகிறான். கவிஞர்களின் கவிதைகளை மீட்டுப் பார்க்கிறான். பாக்தாத்தில் எதிரிகளை சம்பாதிக்கிறான். நீதிக்கு தன் தர்க்கம் வழி வழி காட்டுகிறான். கலீபாவின் உச்ச பந்தயத்தை ஏற்று அரேபிய அழகியின் காதலிற்காக ஏழு புதிர்களை வெற்றி கண்டு அழகியை வெல்கிறான்.

சலிப்பே தராத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை அனைவராலும் படிக்கப்படக்கூடியது. இறுதிப் புதிர்களில் ஒன்றில்- ஆறாவது புதிரில்- சந்தேகம் ஒன்று எனக்குண்டு. அதை தமிழ் தவிர்ந்த பிற மொழி ஒன்றில் படித்து தெளிந்து கொள்வதே ஒரே வழி என எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் ஏதேனும் குளறுபடியா என தெரியவில்லை. கதையின் உச்சக்கட்டப் புதிரான  கண்களை மறைத்து கட்டியிருக்கும் அழகான அடிமைப் பெண்களின் விழிகளின் வண்ணங்களை பெரமிஸ் சமீர் தர்க்க ரீதியாக கண்டு பிடிப்பது என்னை மிக மிக கவர்ந்தது.

1938 ல் போர்த்துகேய மொழியில் வெளியாகிய இந்நூலை கயல்விழி மிக சரளமாக மொழிபெயர்த்து இருக்கிறார். அறிவூட்டும் சுவையான வாசிப்புகளை விரும்புவர்கள் இதை படிக்கலாம்.

Wednesday, August 21, 2013

அம்மாவின் ரகசியம்

மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை அதிகாரங்கள் இனபேதங்கள் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் தம் லட்சிய பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவது இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டு இருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்.

அம்மாவின் ரகசியம் எனும் இக்குறுநாவல் உடவளவ எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு எதிராக பொலிஸ் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பபகுதி கூறப்படுகிறது.

வறிய குடும்பமொன்றில் பிறந்த முத்துலதா, அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் உதயசிறியை திருமணம் செய்து கொள்கிறாள். உதயசிறி முத்துலதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வருவதற்கு முத்துலதாவின் தாய் பேபினோனா அவளை ஒரு விளக்குமாறு கட்டை உடையும்வரை அடிக்க வேண்டியிருந்தது. தன் மகளின் வாழ்க்கையும் தன் வாழ்க்கைபோல ஆகிவிடக்கூடாது எனும் அக்கறை பேபினோனோவிற்கு. பாலம் கட்ட வந்தாலும், படம் வரைய வந்தாலும் ஊர்க்குமரிகளின் வாழ்க்கைகள் பல அவற்றிற்கு பலியாக தவறுவது இல்லை என்பதை பேபினோனா அனுபவம் வழி அறிந்திருக்கிறாள். சிங்கள கிராமங்களில் தம் காமத்தை தணிக்க தவறாத நகர்ப்புற அரச உத்தியோகர்களின் இந்தப் பண்பாட்டை அந்த ஒருவரியிலேயே ஆழமாக பதிக்கிறார் கதாசிரியை சுநேத்ரா ராஜகருணாநாயக.

உடவளவ அமைதியான ஒரு கிராமம். சேனைப்பயிர் செய்கை, ரத்தின சுரங்கங்களில் கூலி வேலை போன்றவற்றில் வறிய குடும்ப ஆண்கள் சிறுவயது முதலே இறங்கிவிடுகிறார்கள். பெண்கள் வசதி படைத்த குடும்பங்களில் பணிப்பெண்களாகவோ அல்லது ரோட்டோரா உணவுக் கடைகளை நடத்துபவர்களாகவோ தம் வாழ்க்கைகளை கொண்டு செல்கிறார்கள். ஆறு கதிரைகளும், ஒரு மேசையும், ஒரு கண்ணாடி அலுமாரியும் எல்லாப் பெண்களினதும் கனவுகளிலும் இருக்கிறது என்பதன் வழி அந்த அடித்தட்டு வர்க்கப் பெண்களின் கனவுகளின் உச்சம் என்ன என்பதை சுநேத்ரா தெளிவாக உணர்த்தி விடுகிறார். முத்துலதாவிற்கும் இக்கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குகிறாள்.

அவள் செய்த தையல் வேலையில் சேகரித்த பணத்தில் அவள் மேலும் தையல் இயந்திரங்கள் வாங்க ஆசைப்படுகிறாள். தன் குடும்பத்தின் நிலை மாறவேண்டும் என எல்லாப் பெண்களும் அந்நிலையில் கொள்ளும் ஆசை அவளிற்கும் உண்டு. அதிக பணம் கிடைக்கும் என தொப்பிகள்கூட செய்து விற்கிறாள் ஆனால் அவள் வாழ்க்கை நிலை பெரிதான மாற்றங்கள் எதையும் கண்டு விடுவது இல்லை. முத்துலதாவின் கணவன் உதயசிறி கடினமான வேலைகளை செய்து பழக்கம் இல்லாதவன் ஆனால் நல்ல கணவன். நாட்டின் அரசியல் சூழல் குறித்த செய்திகளை வாசிக்கும் ஆர்வம் அவனிற்கு இருக்கிறது. தலையில்லா உடல்கள் வீதிகளில் வீசப்படுவதும், டயர் அடுக்குகளினுள் மனிதர்கள் எரிக்கப்படுவதும், ஆற்றில் உயிரற்ற சடலங்கள் பயணிப்பதும் என நாட்டின் நிலை சற்று பதட்டமாக இருக்கும் ஒரு காலத்திலேயே கதை நிகழ்கிறது. உதயசிறியின் அரசியல் ஆர்வம் செய்திகளை வாசிப்பதுடன் திருப்தியுற்று விடும். அவன் எல்லை அவ்வளவே. பொலிஸைக் கண்டால்கூட விலகியே செல்பவன் அவன். ஆனால் உதயசிறி வீட்டில் இல்லாத ஒரு நாளில் அவன் தம்பியை தேடி அவன் வீட்டிற்கு ராணுவத்தினர் வருகிறார்கள். அந்தப் பொழுதில் இருந்து முத்துலதாவின் வாழ்க்கையானது அதன் வழமைநிலையை இழந்து போனது. தன் கணவனிற்கு பதிலாக ராணுவ முகாம் செல்லும் முத்துலதா அங்கிருந்து திரும்புகையில் தன்னுடன் கூடவே ஒரு ரகசியத்தையும் எடுத்து வருபவள் ஆகிறாள்.

முத்துலதா, உதயசிறி, பேபினோனா போன்ற பாத்திரங்கள் வழியாக உடவளவயின் அன்றைய நிலையை வாசகனிடம் ஆர்ப்பாட்டங்கள் இன்றி எடுத்து சொல்கிறார் சுநேத்ரா. அடித்தட்டு மக்கள், அரசாங்க ஊழியர்கள், வசதி படைத்தவர்கள் ஊடாக நகரும் கதையானது அடித்தட்டு மக்களின் குரலிலேயே பேசுகிறது. இதன் பின்னணியில் அம்மக்களை திகில் அடையச் செய்து கொண்டிருக்கும் நாட்டின் நிலையும் கூடவே வருகிறது. தன் கணவனை இழந்தபின்பாகவும்கூட தன் மனதில் வாழும் அந்த ரகசியத்துடன் முத்துலதா தன் வாழ்க்கையை மாற்ற போராடுபவளாகவே இருக்கிறாள். முத்துலதா தன் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்பதை வாழ்வின் துடிப்பாக கொண்ட பெண். மனிதர்களை வெட்டிப்போட வேண்டும் எனும் கோபம் குடிவந்து அமர்ந்த பெண்.இலங்கையின் வாழும் ஒரு அப்பாவிப் பெண்ணை இனபேதமின்றி அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. எல்லைகளையும் தாண்டி உலகில் வாழ்ந்திருக்கும் வறிய அப்பாவி பெண்களையும் அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் எனும் முனைப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் வாழும் நிலை மாறும்வரையில் நாம் அவதானிப்பதே இல்லை.

அவள் வீதீயோர உணவகத்தினை நடாத்துகிறாள், அயல்நாடுகள் சென்று பணிப் பெண்ணாக பணிபுரிகிறாள். துபாய், சைப்பிரஸ், பிரான்ஸ், சீனா என அவள் வாழ் அனுபவங்கள் நீள்கின்றன. ஆனால் அவள் மனதில் உள்ள ரகசியம் ரகசியமாகவே இருக்கிறது. அதை அவள் யாரிடமும் பேசியது இல்லை. அயல்நாட்டில் பணிபுரிந்து அவள் தனது வீட்டை அழகானதாகவும், உடவளவயிலேயே அற்புதமான பொருட்கள் நிறைந்ததாகவும் நிரப்பி தன் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துவிட்ட பொழுதிலும் கூட அவள் ரகசியம் அவளிடமே இருக்கிறது. தனது வீடு எப்போதும் சுத்தமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் முத்துலதா முனைப்பாக இருக்கிறாள். சேற்றுக்காலுடன் தன் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்கிறாள். வெத்திலைச்சாற்றை உமிழ்ந்து தன் முற்றத்தை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்கிறாள். அவள் அகத்தில் வாழ்ந்திருக்கும் ரகசியத்திற்கு எதிரான தூய்மை கொண்டதாக முத்துலதா தன் புறத்தை பேணுவதில் அக்கறையாக இருக்கிறாள். தனித்து வாழும் பெண்கள் உள்ள ஒரு வீட்டில் அவள் ரகசியம் அவர்களை உயிருடன் புசிக்க விரும்பும் ஒரு அரக்கனாக  இருக்க முயல்கிறது. அவள் பிறர்க்கு விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவளின் வசதியான வாழ்க்கை நிலையும் ஊர் மக்களை டுபாய்காரனிற்கும், சீனாக்காரனிற்கும் தூக்கிக் கொடுத்து கொண்டு வந்து கொட்டிய சொத்துதானே இது என பேச வைக்கிறது. ஆனால் முத்துலதா அசைந்தாள் இல்லை. தன் மனதில் சுமையேறிக் கொண்டிருந்த ரகசியம் வெளியில் உரைத்தாள் இல்லை. ஆனால் முத்துலதா அழுத்திப் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவளாகவே வெளியே சொல்லும் சந்தர்ப்பம் அவளைத் தேடி தானாகவே வந்து சேர்கிறது.

அலங்காரங்கள் ஏதுமற்ற, எதார்த்தம் நிறைந்த, எளிமையான எழுத்துக்கள்தான் சுநேத்ராவின் பலம். அவர் வாசகனை புதிர் நிறைந்த வரிகளால் வியக்க வைக்க முயல்வது இல்லை. மாறாக எளிமையின் ஆச்சர்யத்தில் பங்குகொள்ள செய்கிறார். இந்த எளிமையானே கதையாடலே வாசகனை தயக்கமின்றி அவர் எழுத்துக்களுடன் இணக்கமாக்குகிறது. கதையை மொழிபெயர்த்து இருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பும் கதையை சரளமான தமிழ் நடையில் செவ்வனே மொழிபெயர்த்து இருக்கிறார். ஒரு துன்பத்தை சுற்றி நெய்யப்படும் அழுவாச்சி காவியமாகவோ, அல்லது ஒப்பாரி சங்கீதமாகவோ கதையை உருவாக்காது, மிகையுணர்ச்சிகளின் உதவிகளை நாடாது, பரபரப்புக்களை விலக்கி, மனித மனங்களின் இயக்கங்களுடனும், வாழ்வின் நிகழ்வுகளுடனும், சம்பவங்களுடனும் இயல்பான ஓட்டத்தில் பயணிக்கிறது சுநேத்ராவின் குறுநாவல்.

அயல்வாழ் மக்களின் வாழ்வின் ஒரு சித்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை சுநேத்ராவின் கதை எமக்கு வழங்குகிறது. சுநேத்ரா சிங்கள மொழியில் பிரபலமான படைப்பாளி. பல தளங்களில் இயங்குபவர். அவரது குறுநாவலான அம்மாவின் ரகசியத்தின் மிக முக்கியமான தருணம் அதன் முடிவில் முத்துலதா கூறுவதாக அமையும் வரிகளில் இருக்கிறது. "இப்ப அழ வேணாம். அந்த நாட்கள்ல எனக்கு அழத் தேவையிருந்தது ஆனாலும் அழ முடியாமப் போச்சு. எனக்கு செத்துபோக வேண்டியிருந்தது ஆனாலும் நான் வாழ்ந்தேன்" இவ்வரிகளை சொன்னபின்பாககூட வாழ்க்கையிடமிருந்து அற்புதங்கள் எதையும் எதிர்பார்த்துக் காத்திராத ஒரு பெண்ணாகவே முத்துலதா புன்னகைக்கிறாள். கதையை படித்து வரும் வாசகனை அதில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தம் சற்று உலுக்கிப் பார்க்கவே முயல்கிறது. இந்த உலகில் எத்தனை பெண்கள் இதே போன்ற வரிகளை தம் வாழ்வில் சொல்லியிருப்பார்கள், எத்தனை பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் சொல்லப் போகிறார்கள். இந்தப் புள்ளியில் உலகின் பெண்கள் எல்லாரையும் சுநேத்ரா தொட்டு விடுகிறார். இப்பெண்கள்கூட வாழ்வு தரும் அற்புதங்களிற்காக காத்திருப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தம் மனதின் ரகசியங்களோடு அரூப யுத்தங்களை ஓயாது நிகழ்த்தியவாறே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகசியம் தன்னை அடையாளம் காட்டும்போது பலவீனமாகி விடுகிறது ஆனால் அதை சுமந்து வந்தவர்கள் கனமற்றவர்களாகி விடுகிறார்கள். வாழ்க்கையின் சொற்கள் அவர்களிடம் தயக்கமின்றி பேச ஆரம்பிக்கின்றன. வசந்தத்தின் பூக்களைப்போல.Saturday, August 10, 2013

கொம்பு குதிரை - இறுதிப்பாகம்


"அறிவியலின் ஒளி ஒரு யுகத்தினை வெளிச்சமாக்ககூடும் ஆனால் மனித அறிவிற்கு எட்டாத சில இருளான பகுதிகள் எப்போதும் இருக்கவே செய்யும்... நம்பிக்கைகள் அங்குதான் தஞ்சம் அடைகின்றன. அவற்றை அழிக்க முடியாது"


இத்தொடர் ஆரம்பமானதில் இருந்து இது முழுமையாக தமிழில் வெளிவந்தேயாக வேண்டும் எனும் முனைப்பில் என்னைவிட பிடிவாதமாக நின்று அதை சாதித்துக் காட்டிய அந்த இரு நண்பர்களிற்கும் என் மனதார்ந்த நன்றிகள். இப்பாகம் அவர்களிற்காகவே.

முதல் மூன்று பாகங்களையும் மீண்டுமொரு தடவை படித்துவிட்டு இறுதிப்பாகத்திற்குள் நுழைவது வாசிப்பை இலகுவாக்கும் என்பது என் கருத்து. அதுவே இப்படைப்பின் அனுபவத்தை முழுமையான ஒன்றாக்கவும் உதவிடலாம்.

நான்காம் பாகத்தை தரவிறக்க
https://app.box.com/s/8nlc1zhwcndscucq00xk

முன்னைய பாகங்களிற்கு
http://issuu.com/georgecustor

Saturday, August 3, 2013

அக்னி நிலம்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 11

அரிசோனாவில் அமைந்திருக்கும் Tucson எனும் நகரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் கொலைத்தாக்குதலிற்கு முகம் தந்து கொண்டிருக்கும் செவ்விந்தியக் குடியிருப்பொன்றின் பூர்வகுடிகளை காப்பாற்றும் வண்ணம் மோதலில் இறங்குகிறார்கள் டெக்ஸும், கார்சனும். அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடிகள் மீதான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலிற்கு பொறுப்பானவர்களை கதை முடிவதற்குள் டப்பா டான்ஸ் ஆட வைக்க போவதாகவும் அவர்கள் பூர்வகுடிகளின் தலைவனிற்கு வாக்கு தருகிறார்கள்…..

அமெரிக்க பூர்வகுடிகள் வாழ்ந்திருந்த வளமான நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அவற்றின் தீவீரமான உச்சங்களை எட்டிய நிலையில் பூர்வகுடிகளின் எதிர் நடவடிக்கைகள் உருவாக்கிய விளைவுகள் ஆதிக்கவாதிகளை சமாதான ஒப்பந்தங்கள் எனும் தந்திரோபாயத்தின் பக்கம் இட்டு வந்தன. இரு பக்க நலன்களையும் கருத்தில் கொண்டதாக இவ்வாறான சமாதான ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இரு பக்க நலன் என்பது ஆதிக்கவாதிகளின் இருபக்க நலனாகவே மதிக்கப்பட்டதேயொழிய பூர்வகுடிகளின் நலன் என்பதாக மதிக்கப்படவில்லை. பல சமயங்களில் இந்த ஓப்பந்தங்களை எவ்வகையிலாவது பூர்வகுடிகளை மீறவைப்பதன் வழி அவர்களை ஆயூதம் கொண்டு அழித்தொழிக்கும் தந்திரங்களும் முனைப்பாக இயற்றப்பட்டன.

வாழ்வாதாரம் மிக்க பகுதிகளில் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளை இச்சமாதான ஒப்பந்தங்கள் அவர்கள் வாழியல்பிற்கு முரணான நிலங்களில் குடியிருப்புகளை உருவாக்கி கொள்ள பணித்தன. பெருமேற்கின் காற்றாய் குதிரைகளின் பாதங்களுடன் நடமாடிக் கொண்டிருந்த பூர்வகுடிகள் அவர்களிற்கென ஒதுக்கப்பட்ட வலயங்களை தாண்டுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டார்கள். தம் சராசாரி தேவைகளையும், வாழ்சுகங்களையும் பறிகொடுத்தவர்களாக இவ்வலயங்களில் பூர்வகுடிகள் தமக்கென நியமிக்கப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கின் எல்லைகளற்ற பரவெளியில் கட்டற்று இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடி இனமானது கிளைகள் வெட்டப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்ட மரம்போல வாழத் தம்மை பழக்கி கொண்டது.
கடலில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு உயிரை ஒரு சிறு நீர் தொட்டியில் இட்டால் அது உணரக்கூடிய ஒடுக்கம் போல இந்த குடியிருப்பு வலயங்கள் பூர்வகுடிகள் மனதில் உருவாக்கிய ஒடுக்கம் பெருமேற்கின் விசாலமான ஆன்மாவிற்கு முரணாக அவர்கள் முன் நின்று அவர்களை கேலி செய்தவாறே வதைத்துக் கொண்டிருந்தது. தம் அடைபடலின் ஆற்றாமை அவர்களில் பற்றி எரிய தொடங்க விழிசிமிட்டும் அக்னி துளியாக துடித்துக் கொண்டேயிருந்தது. இந்த துளிமீது ஆதிக்கவாதிகள் தம் நயவஞ்சகங்கள், துரோகங்கள், சதிகள் மூலமாக எரிதிரவத்தை ஓயாமல் ஊற்றியவாறேயிருந்தார்கள். ஏதோ ஒரு எல்லை தாண்டிய கணத்தில் இத்துளி பற்றி தன் எல்லை தாண்டி தகனநடை நடந்திடும் பொழுதில் எல்லாம் பூர்வகுடிநாய்கள் எம்முடன் செய்த ஒப்பந்தந்தை மதிக்காது எம்மை தாக்கிவிட்டார்கள் எனும் காரணம் உடனடியாக முன்வைக்கப்பட்டு அந்த ஆதிகுடிகளின் இனவொழிப்பு உற்சாகத்துடனும் வெளிக்காட்டா வரவேற்புடனும் கையெடுக்கப்பட்டது.
தாம் வாழ்ந்திருந்த மண்ணிலேயே அடையாளம் இழந்த நிலையில், கதியற்று போனவர்களாக வாழ்ந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைக்கு பதில் தந்த போராளிகளும் வாழ்ந்திருந்தார்கள். பெருமேற்கின் ஆக்கிரமிப்பாளர்களிற்கு மிகுந்த அச்சத்தையும், அழிவையும் தந்தவர்களாகவே வரலாற்றில் அப்பாச்சே போராளிகள் கருதப்படுகிறார்கள். உணவோ, நீரோ இன்றி நீண்ட மணிநேரம் தாக்குப் பிடிக்கவும், மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்களாகவும் திகழ்ந்த அப்பாச்சேக்கள் வெள்ளையர்களிற்கு துர்க்கனவின் நேர்ச்சொல்லானார்கள். அவர்களின் தாக்குதல்கள் காலனித்துவத்தின் பிஞ்சு வேர்களில் அச்சம் எனும் சுடுநீரை மழையாக பொழிந்தது. அமைதியான வாழ்க்கை என்பது இப்போராளிகளின் இருப்பால் ஆதிக்க நகரங்களின் கேள்விக்குறிகளாகின. இவ்வகையான போராளிகளின் தாக்குதல்களை அடுத்து பூர்வகுடிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடையாளமற்ற வன்முறையும், காலனித்துவ நகர்களில் குடியேறிவிட்ட பதட்டநிலையும், இப்பதட்ட நிலையை தம் லாபங்களிற்காக நீடிக்க விரும்பிய மனிதர்களின் சதிகளும் வாஷிங்டன் வாழ் அரசியல்வாதிகளை அமைதி அரசியலை நாட வைத்தன. யாரிற்கும் அடங்கிடாது ஆதிக்கவாதிகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த இந்த பூர்வகுடிப் போராளிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களை அமைதியின் பாதையில் திரும்பிடச் செய்யும் அமைதி அரசியலிற்கான பிரதிநிதிகளை வாஷிங்டன் பதட்டம் நிறைந்த பகுதிகளிற்கு அனுப்பி வைத்தது. இவ்வாறான ஒரு பிரதிநிதியான ஜான் ஆடம்ஸை சந்திப்பதற்காகவே டெக்ஸும், கார்சனும் டுசான் நகரை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் வழியிலேயே அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பூர்வகுடி குடியிருப்பின் மீது நடாத்தப்படும் கொலைத்தாக்குதலை கண்ட சாட்சியுமாகிறார்கள்.
fa1ஆற்றங்கரையோராமாக யார் வம்பிற்கும் செல்லாது வாழ்ந்து கொண்டிருந்த ஜிகரில்லா அப்பாச்சேகள் மீது கதையின் ஆரம்பத்தில் நிகழ்த்தப்படும் கொலைத்தாக்குதல் Camp Grant ல் பூர்வகுடிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடிப்படையாக கொண்டது. பூர்வகுடிகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் எதிர்பாராவிதமாக துரிதமாக தாக்கி ஒருவர் பாக்கியில்லாமல் கொன்றுபோடும் வகையிலான தாக்குதல் அது. க்ராண்ட் முகாமில் தாக்குதலிற்கு தப்பிய சிறுவர்களும், பெண்களும் மெக்ஸிக்கோவில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இக்கதையிலும் அச்செயலை நினைவுகூர வைப்பதுபோல வரிகள் அமைந்திருக்கும். கதாசிரியர் நிச்சியும் க்ராண்ட் முகாம் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களே சாண்ட் கார்லோஸ் குடியிருப்பின் மீதான தாக்குதலை நிகழ்த்துவதாக தன் கற்பனையை விரிக்கிறார். இந்த தாக்குதல் குழுவிற்கு தலைமை வகிப்பவனாக டான் லாட்டிமர் இருக்கிறான். அவன் திட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கும் டெக்ஸ் மட்டும் அவ்வழியே தன் குதிரையின் மீதேறி வந்திருக்காவிடில். [ க்ராண்ட் முகாம் தாக்குதல் குறித்து படித்தபோது அத்தாக்குதலில் 92 பபகோ பூர்வகுடிகள் அப்பாச்சேக்களை அழிப்பதில் பங்கு கொண்டார்கள் எனும் தகவல் திகைக்க வைத்தது. பூர்வகுடிகள் மத்தியில் நிலவியிருந்த வேறுபாடுகள் மற்றும் துவேஷத்திற்கு சான்றாகவே இதை என்னால் கருதமுடிகிறது.]
சாண்ட் கார்லோஸ் குடியிருப்பில் வாழ்ந்திருந்த ஜிகரில்லா அப்பாச்சேக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர்த்துப் போராடினாலும் டான் லாட்டிமரின் ஆயுத மற்றும் ஆட்பலம் முன்பாக அவர்களால் எதிர்நிற்க முடிவது இல்லை. குண்டடிபட்டு உயிர்கள் மண்ணில் விழ, பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் குடியிருப்பின் அருகோடிய ஆற்றைக் கடந்து அதன் மறுகரைக்கு தப்பிச் செல்வதற்காக தம் உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஓட, அந்த அப்பாவிகளை மறுகரையை அவர்கள் எட்டும் முன்னமே கொன்று போட்டு விடுவது என டான் லாட்டிமரின் ஆட்கள் தம் குதிரைகளில் விரைய, அந்த அப்பாவிகளை காப்பாற்ற யாருமே இல்லையா பகவானே என நாம் எம் மனதில் அந்த ஆழ்கூச்சலை மெளனமாக சிந்துகையில், கூப்பிட்ட குரலிற்கு கும்பிட மறந்த தெய்வமே தந்த பதிலாய், பரட்டையின் ஆல்ஹஹால் நிரம்பிய போதை வழியும் பகற்கனவுகளில் கூட அவரை கொல்லை வீட்டை நோக்கி ஓட வைக்கும் ஒரு காட்சியாய், ஒரு தேவனாய், செமையான ஒரு எண்ட்ரியாய் வருவார் பாருங்கள் நம் ரேஞ்சர்….. அட அட அடடா. அக்காட்சியைக் கண்டால் மட்டமான சரக்கு அடித்து ஏற்கனவே முக்கால் முழுதாய் கெட்டுப் போய், கதை மாறி கதை டப்பு டப்பு என இலக்கில்லாமல் சுடும் பரட்டையின் கண்கள் டோட்டலாய் இட்லியாகும் என்பதை டெக்ஸின் அன்பு ரசிகர்களிற்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! வந்தவர், டான் லாட்டிமர் ஆட்களுடன் துப்பாக்கி சங்கீதக் கச்சேரியை ஆரம்பித்து அவர்களை அட பரட்டையை இந்தக் கதைக்கு ஹீரோவாகப் போட்டிருக்கலாமே, எதார்த்தமான முடிவு என பரட்டையை தவிர எல்லாரையும் கொன்று போட்டிருப்போமே என அழ வைக்கும் அழகுடன் விரட்டியடிக்கும் அந்த பாணி இருக்கிறதே ஆகா, ஆகா, ஆகா! பெருமேற்கில் எதார்த்தம் இருக்கலாம் ஆனால் எதார்த்தம் எனும் பெயரில் பம்மாத்து பதார்த்தம் இருப்பதை அங்கு வாழும் பேராத்மாவே மன்னிக்காது.
தம் குடியிருப்பின் மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதலிற்கு உடனடியாக பதிலடி தரவேண்டும் எனத் துடிக்கும் ஜிகரில்லா அப்பாச்சேக்களின் தலைவரை தன் கண்ணியமான மொழியாலும் ஸ்டைலாலும் சாந்தமாக்கும் டெக்ஸ் இக்கதையில் ஸ்டண்டிற்கு தானே முழுப்பொறுப்பு என்பதை சொல்லாமல் சொல்லி தாக்குதல் நடாத்தியவர்களை போட்டுத்தள்ளும் பொறுப்பை தனதாக்கி கொள்கிறார். குடியிருப்பின் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியே தெரிந்தால் அப்பாச்சே போராளிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிகழாது என்பதை பருவப் பெண் மீதான ஒரு முத்தம்போல உணரும் டெக்ஸ், வறள்நில நரி போல ரகசியமாக தன் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனும் தீர்மானத்திற்கும் வருகிறார். டுசான் நகரில் தனக்காக காத்திருக்கும் வாஷிங்டன் பிரதிநிதியான ஜான் ஆடம்ஸுடன் இத்தாக்குதல் குறித்து தனித்து பேசிட வேண்டும் எனவும் முடிவெடுத்தவாறே அவர் டுசான் நகர் நோக்கி கார்சனுடன் விரைகிறார்.
fa2டுசான் நகரை அவர் அடைந்து ஜான் ஆடம்ஸை சந்தித்து உரையாடி பூர்வகுடிகள் மீதான தாக்குதல் குறித்தும் தெரியப்படுத்துகிறார். வாஷிங்டன் நிலைநாட்ட விரும்பும் அமைதி அரசியலை குலைக்கும் முயற்சி ஒன்றின் பின்பாக செயல்படும் டான் லாட்டிமரை டெக்ஸிற்கு அடையாளம் தெரிந்திருந்தாலும் அவனை கண்டுபிடித்து தன் பாணியில் விசாரிக்காது  மேலதிக தகவல்களை அவரால் அறிந்து கொள்ள முடியாது எனும் பட்சத்தில், அப்பாச்சே போராளியான டெல்ஹாடோவை அமைதிப் பேச்சிற்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஜான் ஆடம்ஸ் சகிதம் அதற்கான பயணத்தை அவர் ஆரம்பிக்கிறார். ஆனால் டுசான் நகரின் அரசியல்வாதிகளும், பெருவணிகர்களும், ஊடகங்களும் ஜான் ஆடம்ஸ் முன்வைக்கும் அமைதி அரசியலை விரும்புவர்கள் அல்ல. உண்மையில் பூர்வகுடிகளுடனான அமைதி முயற்சிகள் எதுவுமே அவர்களிற்கு உவப்பான ஒன்றாக இருப்பது இல்லை. அரிசோனா எப்போதும் பதட்டம் நிறைந்த ஒரு அக்னி நிலமாக  இருப்பதன் வழியாகவே அவர்களால் தம் சுயலாபங்களை நிரப்பிக் கொள்ளமுடியும். அதுவே அவர்களின் குறிக்கோள். ராணுவ நடவடிக்கைகள் மூலமான இனவழிப்பே அவர்களிற்கு பிடித்தமான தீர்வு. இவர்களின் கைப்பாவையே டான் லாட்டிமர். ஆனால் டெல்ஹாடோவை தேடி பயணமாகும் டெக்ஸ் இவற்றை அறிந்தார் இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்துதரவென பயணிக்கும் எம் நாயகன் தன் வழியில் சந்திக்கப்போகும் ஆச்சர்யங்களின் எண்ணிக்கைகளையும்கூட அப்போது அறிந்தார் இல்லை.
TEX Special கதை வரிசையில் அதிக கதைகளை எழுதியவர் எனும் பெருமை க்ளோடியோ நிச்சியையே சேரும். நிச்சி என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் அல்ல. விறுவிறுப்பான கதைகளைவிடவும் சுமாரான அல்லது அதற்கும் குறைவான கதைகளை உருவாக்கியவர் அவர் என்பது என் கருத்து. ஆனால் கதாசிரியர் நிச்சி TEX Special n°5 ன் கதையான Flammes sur l’Arizona வழியாக டெக்ஸின் கதைகளில் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் எனலாம். சாண்ட் கார்லோஸ் குடியிருப்பு மீதான தாக்குதலின் பின்பான பகுதி அதிக அதிரடிகள் இல்லாது உரையாடல்கள் நிரம்பியதாக இருந்தாலும், வாஷிங்டன் அரசியல், அரிசோனாவில் நிலவும் பூர்வகுடிகளுடனான அமைதிப் பேச்சுக்கள் குறித்த மனநிலை, அமைதிப்பேச்சுக்கள் மீது பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என கதையின் முக்கிய இழையையும் அது குறித்த தகவல்களையும் சிறப்பாக அம்மிகையான உரையாடல்கள் வழி நிச்சி வாசகர்களிடம் எடுத்து வருகிறார்.கதையில் இடம்பிடிக்கும் அமைதி முயற்சிகளை முறியடிக்க செயற்படும் குழு, அவர்களின் நகர்வுகள், இதையறியாமலே டெல்ஹாடோவை தேடிச்செல்லும் டெக்ஸ் எனும் தருணங்களை வாசகர்களிடம் கச்சிதமாக கொண்டு சேர்த்த பின்பாக எதிர்பாரா திருப்பங்களிற்கும், அதிரடிகளிற்கும் தன் கதைசொல்லலில் அவர் குறை வைக்கவில்லை. அதுவும் டெக்ஸின் எதிரிகள் டெக்ஸ் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை முன்னமே கணித்து அதற்கு/அவரிற்கு ஒருபடி மேலாக காய்நகர்த்தி செல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பது கதையின் திருப்பங்களை சுவாரஸ்யமாக்குகிறது.
Fuenteடெக்ஸிற்கு கதையில் வரும் பல செவ்விந்தியர்களை தெரிந்திருக்கிறது. கதையில் வரும் எல்லா செவ்விந்தியர்களிற்கும் டெக்ஸ் பற்றி தெரிந்திருக்கிறது. அப்பாச்சேக்கள் குறித்துப் பேசும் இக்கதையில் கொச்சிஸ், டெல்ஹாடோ, ஒஜோ ப்ளாங்கோ [ வெள்ளை விழி], மந்திரவாதி செங்கொம்பன் போன்ற பாத்திரங்கள் பக்குவமாக பொருந்திக் கொள்கின்றன. அதுவும் கொச்சிஸுடன் குவாட்டரும் பிரியாணியும் அடித்துவிட்டு குப்புறப் படுத்து குறட்டை விடும் அளவிற்கு டெக்ஸிற்கு கொச்சிஸுடன் நட்பு இருந்திருக்கிறது என்பதை நாம் அறியும் போது எம் அருகில் நிற்கும் கள்ளிச்செடிகளின் ரோமங்களும் ரோமாஞ்சனம் அடைவது ஆச்சர்யமான நிகழ்வல்ல. அப்பாச்சேக்களை அப்பாவிகளாக, பெரும் போராளிகளாக, சுயலாபத்திற்காக செயற்படும் துரோகிகளாக, தக்க சமயத்தில் துணைக்கு வரும் தோழர்களாக பல பரிமாணங்களிலும் கதையில் சித்தரித்து சிறப்பித்து இருக்கிறார் கதாசிரியர்.
மிகவும் விவேகமான எதிரிகளின் திட்டங்களின் முன்பாக சுவர் ஒன்றுடன் முட்டி மோதி என்ன செய்வது என்பது தெரியாமல டெக்ஸ் அமைதியாகும் ஒரு தருணத்தில் அவரை நாடி வரும் ஒரு எதிர்பாரா உதவி, உண்மைகளை கண்டறிய அவரை அனைத்து வழிமுறைகளையும் துணைதேடச் செய்கிறது. கட்டில் அறைக்குள்ளும் கனல் கக்கும் கண்களுடன் செல்ல டெக்ஸால் மட்டுமே முடியும்! விவேகமான எதிரிகளிற்கு விவேகமாகவும், மூர்க்கமான அவர்களின் செயற்திட்டங்களிற்கு அதிமூர்க்கமாகவும் பதில் தருகிறார் டெக்ஸ். அப்பாச்சேக்களின் வீரம் குறித்து சிறு இழையாகவேனும் செயற்பட விரும்பும் இக்கதை டெக்ஸ், கார்சன் உயிர் போகப்போகிறது எனும் நிலையில் அவர்களை காப்பாற்றுவது அப்பாச்சேக்களே என்பதன் வழியாக அதை கதையில் நிலைநாட்டுகிறது.
இக்கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல சித்திரக் கலைஞரான Victor de la Fuente. கதையின் பல இடங்களில் டெக்ஸும், கார்சனும் சோமாலியா பிரஜைகள் போல நோஞ்சான் பாடியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். டெக்ஸ் சில கட்டங்களில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஜார்ச் டபிள்யூ புஷ்சை நினைவூட்டுகிறார். ஆனால் விக்டர் டு லா ஃப்யோண்ட் திறமைசாலி. பூர்வகுடிகள் விடயத்தில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். பெருமேற்கின் நிலவியலை அசாத்தியமாக அவர் விரல்கள் வரைந்து தள்ளியிருக்கிறது. மோதல் காட்சிகளும் சிறப்பாக கட்டங்களிற்குள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. டெக்ஸ் கதைக்கு வரைய அவர் பிரியம் காட்டாமல் இருந்தார் எனவும் பின் மனம் மாறினார் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பொனெலிக்குதான் எம் நன்றிகள் உரித்தாகும். மெதுவாக ஆரம்பித்து வேகமாக நகர்ந்து அதிரடியாக நிறைவடையும் இந்த டெக்ஸ் கதை அவர் ரசிகர்களை எளிதாக திருப்தி செய்யும் அம்சங்களை தன்னுள் தாராளமாக கொண்டிருக்கிறது.