Tuesday, July 27, 2010

குத்துநகரில் இன்ஷெப்ஷன்


கடந்த 33 வருடங்களாக குத்து நகரில் இடம்பெற்று வரும் கலை, இலக்கிய மோதல்கள், சர்ச்சைகள் மற்றும் குத்துச் சண்டைகளிற்கு எல்லாம் ஒரு முடிவு அண்மித்து விடும் காலம் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. குத்து நகரின் இலக்கிய வம்பளப்பவர்களின் மனதை வேதனைப்படுத்தும் இம்முடிவு இவ்வளவு சீக்கிரமாக நெருங்கியதற்கு காரணமாக குத்து நகரில் அண்மையில் வெளியாகியிருக்கும் Inception திரைப்படத்தை சுட்டிக் காட்டுகிறார்கள் அனுபவஸ்தர்கள்.

இன்ஷெப்ஷன் திரைப்படமானது பிரபல இயக்குனர் Christopher Nolan அவர்களின் அட்டகாசமான திறமையில், ரசிகர்களை அசர வைக்கும் விதமாக அல்லது அவர்கள் மனங்களில் கேள்விகளை ஊற்றாக கசிய வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்கள் குத்து நகரின் நம்பர் 1 இயக்குனர் டைமண்ட் ஸ்டோன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்ஷெப்ஷன் திரைப்படத்தின் கதை மிகவும் எளிமையானது. மனிதர்களின் கனவுகளில் கன்னம்வைத்துப் புகுந்து, அவர்கள் மனங்களில் புதைந்திருக்கும் ரகசியங்களைத் திருடி விற்று காசு பார்க்கும் கோஷ்டி ஒன்று, இம்முறை ஒரு மனிதனின் மனதில் ஒரு எண்ணக்கருவை விதைக்க புறப்படுகிறது.

மிகவும் அமர்க்களமாக, குத்து நகர பெரும்புள்ளிகளும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும் நிரம்பி வழிய, இன்ஷெப்ஷன் திரைப்படத்தின் பிரிமியர் காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திரைப்படம் முடிவடைந்ததின் பின்பாக படத்தைக் கண்டு களித்த பிரபலங்களிடம் இருந்து நாம் திரட்டிய கருத்துப் புஷ்பங்களை எம் வாசகர்களின் களங்கமற்ற பாதக் கமலங்களில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம்.

காருமேகப் புலவர்:

inception-2010-2507-193710427 இன்றுவரையில் என் எண்ணத்தில் தோன்றிய அற்புதமான சிந்தனைகள் எல்லாம் என்னால் எழுதப்படுவதற்கு முன்பாகவே பிறரால் எழுதப்பட்டு உலக மகா இலக்கியங்களாக விருதுகளும், புகழும் பெற்றதை எண்ணி நான் ஆவேசமும், ஆச்சர்யமும், கிலேசமும் அடைந்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் இப்பிரபஞ்சத்தில் பல புலவர்கள் என்னைப் போலவே எழுதுகிறார்கள் என்பதை நான் எடுத்தியம்பியிருக்கிறேன். அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னை எள்ளி நகையாடிய சாம்பிராணிகளிற்கெல்லாம் ஒரு வன்கனவடுக்காக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.

என் மனதில் புகுந்து, என் சிந்தனைகளையும், கருத்துக்களையும், ரகசியங்களையும் இந்த Cobb கோஷ்டிதான் திருடி பிரபஞ்சம் எங்கும் விற்று காசு பார்த்திருக்கிறது என்பது இத்திரைப்படம்வழி உறுதியாகிறது. மேலும் தன்னை ஒப்பற்ற இலக்கியவாதி என்று கூறி பிரபஞ்சத்தை ஏமாற்றிவரும் ஜில்ஜில் மோகினிக்கும் இந்த திருட்டில் பங்கிருக்கிறது என்பதும் நிச்சயம். இவ்வாறாக தன் கருத்துக்களை சீற்றமாக முன்வைத்த காருமேகப் புலவரிடம் இதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா என நாம் வினவியபோது, நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள் என்று பாய்ந்த அவர், எண்ணத் திருடன் காப் கோஷ்டி தனது அரிய எண்ணங்களை திருடியபோது அங்கு தவறுதலாக விட்டுச் சென்ற ஒரு பனங்கிழங்கு தன் அறிவுஜீவித[ன]த்தை தினமும் தூண்டிப் பார்க்கிறது என்று பதிலளித்தார்.

என் புதிய நூலான மலபார் தேங்காய்களை நீங்கள் படித்தீர்களா? என எம்மிடம் வினவிய காருமேகப் புலவர், நாம் எம் தலையை இல்லை என்பதற்கு அடையாளமாக மேலும் கீழும் ஆட்டியபோது, என் புத்தகத்தைப் படிக்காது என்னிடம் கேள்வி கேட்க வருவதை நிறுத்தித் தொலையுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.

நாவற் குள்ளன்:

பிரபல ரவுடி நாசக்குத்து நாவலன் அவர்களின் பிஏவான நாவற் குள்ளனை நாம் அணுகியபோது, படத்தின் ஆரம்பக் காட்சிகள், கனவில் நுழைதல் மற்றும் வெளியேறல், கனவுகளின் செட் அமைப்புகள், கனவுகளில் காலவேக வேறுபாடுகள் என பல தகவல்களை செறிவாக உள்ளடக்கி இருப்பதாக குறிப்பிட்டார். கனவுகளே வராத மனிதர்கள், விலைகொடுத்து வாங்கும் கனவுகளில் தம் விழிப்பை காண்பது காலத்தின் பரிதாபம் என்பதை சுட்டிக் காட்டிய நாவற்குள்ளன், காப் கோஷ்டியானது பிஷ்ஷரின் மனதில் எண்ணக்கருவை விதைப்பதற்காக கனவில் நுழையும் காட்சியிலிருந்து படத்தின் முடிவுவரை திரைப்படமானது 1000 குதிரைகள் கட்டிய ரதத்தின் வேகத்தில் பாய்வதாக கூறினார்.

inception-2010-2507-1623576840 படத்தின் திரைக்கதையும் அதனை இயக்குனர் நோலன் திரையில் எடுத்துச் சொல்லியிருக்கும் விதமும் பார்வையாளர்களை நாவல் மரமொன்றில் காட்டுக் கயிறுகளால் கட்டிப்போடுவதைப்போல கட்டிப் போடுகிறது. மேலும் திரைப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களிற்குமுரிய சிறப்பான நடிகர் தேர்வு, கதைக்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் சித்துக்கள் போன்றவையெல்லாம் இயக்குனர் நோலனின் அற்புதமான கதை சொல்லும் முறையால் திரைப்படத்தில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன என்பதையும் நாவற் குள்ளன் அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்.

ஒரு கனவிலிருந்து பிறிதொரு கனவிற்கு பார்வையாளனை நாவற்பழம்போல் அலேக்காக தூக்கி வீசுகிறார் நோலன் என்பதாகக் கூறிய நாவற் குள்ளன், நோலன் வீசும் வேகத்திற்கு ஈடு கொடுக்காது போனால் ரசிகர்கள், கனவுகளின் மரண உலகில் தொலைந்து போகும் வாய்ப்பிருப்பதையும் சுட்டிக் காட்டினார். படத்தின் இறுதிப்பகுதியில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களை கனிந்த நாவற்பழங்களைப் போல இளக வைப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

திரைப்படத்தின் முடிவில் பார்வையாளர்கள், எண்ணத்திருடன் காப் போலவே அவன் வாழும் வாழ்க்கை கனவா அல்லது நனவா என்ற ஒரு கேள்வியை எழுப்பியே ஆக வேண்டிய ஓர் நிலைக்கு இயக்குனர் நோலனால் எடுத்து வரப்படுவதையும், இன்றைய இயக்குனர்களில் மிகச் சிறந்த ஒரு படைப்பாளியாக கிறிஸ்டோபர் நோலன் பின்னியெடுத்திருப்பதாகவும் நாவற் குள்ளன் கூறி முடித்தார்.

நாசக்குத்து நாவலன்:

inception-2010-2507-1613136931 திரைப்படத்தில் பார்வையாளன் நுழையும் இரண்டாவது கனவானது மிகவும் சிறப்பான, நளினமான ஆக்‌ஷன்களால் நிரம்பியிருக்கிறது என்று ஆரம்பித்த நாவல் ரவுடி, அக்கனவின் நாயகனான நடிகர் Joseph Gordon- Levitt க்கும் காலம் சென்ற நடிகர் Heath Ledger க்குமிடையில் முகச்சாயலில் நிலவும் ஒற்றுமை குறித்தும் வியந்தார்.

நோலனின் கனவுகளில் நடிகர் லெஜ்ஜர் தோன்றுகிறார் என்பதாக நான் ஊகிக்கிறேன் என்ற ஹேஸ்யத்தையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் புவியீர்ப்பு அற்ற அக்கனவின் ஆக்‌ஷன் காட்சிகள் தன்னை பெரிதும் கவர்ந்ததாகவும், தன்னை வீழ்த்திய பச்சைக்கண் எதிரிக்கு எதிராக வெகுவிரைவில் இந்த நுட்பங்களை தான் உபயோகிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். திரைப்படத்தின் பரபரப்பிற்கும், வேகத்திற்கும் பரவசத்தை ஊட்டுவதுபோல் Hans Zimmer ன் இசை செயற்படுவதாக குறிப்பிட்ட நாசக்குத்து நாவலன், தன் மத்தள வாசிப்பில் நாவற் குள்ளன் இவ்வகையான பரவசங்களை தர முயன்றால் தன் நாசக்குத்து மெருகேற வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிவித்து நகர்ந்தார்.

குத்து நகர மன்னன் குத்தலகேசி:

வெண்திரையில் Mal பாத்திரமாக வேடமேற்றிருக்கும் அன்னப்பறவை போன்ற நடிகையான Marion Cotillard தோன்றும் ஒவ்வொரு கணமும் என் லேட் மகாராணியை எண்ணி என் விழிகள் கண்ணீர் மேகங்களாக மாறியதை என்னால் தடுக்க இயலவில்லை. நடிகை மரியோன் கோட்டிஆர் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் என் மனதை பிழிந்திடும் வகையில் நடித்திருக்கிறார். மேலும் காப்பிற்கும் அவரிற்குமிடையில் நிகழும் அந்த வலி நிறைந்த தருணங்களும், உச்சக்கட்ட உண்மையும் என் கண்களை தீராத நீர் கொண்ட அருவியாக மாற்றியடித்துவிட்டன. இதனைக்கூறிய குத்தலகேசியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென உதிர்ந்தது. இதனை அவதானித்துவிட்ட மந்திரி குத்துப்பிடி ஒரு மதுக்கிண்ணத்துடன் மன்னரை நெருங்கினார்.

inception-2010-2507-897568623 தன் கண்களை துடைத்துக் கொண்டு மதுக்கிண்ணத்திலிருந்து ஒரு சிப் இழுத்த மன்னர் குத்தலகேசி, நடிகை மரியோன் கோட்டிஆரை விரைவில் அரச விருந்தாளியாக குத்து நகரிற்கு தான் வரவழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தன் லேட் மனைவி மட்டும் இன்று உயிரோடு இருந்தால், இளவரசன் இலுமினாட்டி ஒரு காமக்கொடூரனாக மாறியிருக்க வாய்ப்பேயில்லை என்பதை தெரிவித்த மன்னர் குத்தலகேசி, நடிகை மரியோன் கோட்டிஆர் தன்னை மணக்க சம்மதித்தால் இளவரசன் இலுமினாட்டிக்கு ஒரு நல்ல தாயும், மறுவாழ்வும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த செய்தி இளவரசன் இலுமினாட்டியை உவகை கொள்ள வைக்கும் என்பதில் தனக்கு எள்ளளவும் ஐயமில்லை என்றும் கூறினார். இதனைக் கூறியபோது உணர்ச்சிகளின் மிகுதியால் அவர் குரல் தழுதழுத்திருந்தது.

inception-2010-2507-1438311088 மொத்தத்தில் மிக அற்புதமான ஒரு படைப்பாக குத்து நகர சிட்டிஷன்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இன்ஷெப்சன். ஒரு முறையல்ல, பல முறை பார்த்து தெளிவுற்று இன்புற வேண்டிய படைப்பு இன்ஷெப்சன் என்பதில் ஐயமில்லை. ஆனால் சர்ச்சைகள் ஓயும் என்று நம்பியிருந்த குத்து நகர மக்களின் வாயில் மண் விழுந்த கதையாக புதிய சர்ச்சை ஒன்று எரிமலையாக இங்கு வெடித்திருக்கிறது. குத்து நகரின் நம்பர் 1 இயக்குனரான டைமண்ட் ஸ்டோன், இன்ஷெப்சன் திரைப்படத்தின் கதையானது 10 வருடங்களிற்கு மேலாக தன்னால் உருவாக்கப்பட்டது என்றும், நோலன் அதனை எண்ணத் திருடர்கள் உதவியுடன் திருடி விட்டார் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என வழமைபோலவே நாம் எம் கேள்வியை வீசியபோது, முதல் கனவில் இடம்பெறும் மழைக்காட்சிகளே அது யாரிடம் இருந்து திருடப்பட்டதற்கு ஆதாரம் என்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே பாய்ந்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என் கனவுப் படைப்பான அதிநரனைக் கூட தன் கதையென நோலன் படமாக்குவார் என்றவாறே தடுமாறினார். அவரை மேலும் வேதனைப் படுத்திடாது நாம் அங்கிருந்து அகன்றோம். [****]

குத்து டைம்ஸிற்காக கபால் வைரவ்

Monday, July 26, 2010

பொம்மைகளின் இதயம்


பதினேழு வயதை எட்டிவிடும் இளைஞன் Andy, அவன் சிறுவயதில் வாஞ்சையுடன் அரவணைத்து விளையாடி மகிழ்ந்த பொம்மைகளை முகட்டறையில் போட்டுவிட்டு தன் கல்லூரி வாழ்வை ஆரம்பிப்பதற்கு தயாராகிறான்.

முகட்டறையில் பொம்மைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அவற்றை ஆன்டி ஒரு பையினுள் இட்டு வைக்கிறான். ஆனால் எதிர்பாராது குறுக்கிடும் சில திருப்பங்களால், பொம்மைகள் இருக்கும் அந்தப் பையை குப்பை எனக்கருதி அதனை தெருவில் வீசிவிடுகிறாள் ஆன்டியின் தாய்.

தாம் தெருவில் குப்பையாக வீசப்பட்டதை தாங்கிக் கொள்ளமுடியாத ஆன்டியின் பொம்மைகள், சிறுவர்கள் பராமரிப்பகம் ஒன்றில் தம் வாழ்வை தொடரலாம் என்ற தீர்மானத்திற்கு வருகின்றன….

சிறுவர்களின் கனவு மற்றும் கற்பனை உலகானது என்றும் புதிதானதும், வியப்பானதுமான கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறான ஒரு கற்பனைக் கதையுடனேயே Toy Story 3 திரைப்படம் ஆரம்பமாகிறது.

தன் பிரியத்திற்குரிய பொம்மைகளை நாயகர்களாகக் கொண்டு சிறுவன் ஆன்டி உருவாக்கி மகிழும் அந்தக் கதையே சிறுவர்களினது கற்பனை உலகில் பொம்மைகள் வகிக்கும் பங்கை அழகாக எடுத்துக் கூறுகிறது. அந்தக் கதையில் இருந்த கற்பனையின் வீச்சு, திருப்பம், நகைச்சுவை, விறுவிறுப்பு ஆகியவை சற்றும் குறைந்துவிடாது மனதை நெகிழ வைத்து நகர்கிறது இயக்குனர் Lee Unkrich இயக்கியிருக்கும் டாய் ஸ்டோரியின் மூன்றாம் பாகம்.

தம் நேசத்திற்குரிய ஆன்டியின் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டதாலும், தொடரும் சில நிகழ்வுகள் ஆன்டியின் பொம்மைகளிற்கு சாதகமாக அமையாததாலும், அப்பொம்மைகள் எடுக்கும் அவசரமான ஒரு முடிவு அவற்றை சிறுவர் பராமரிப்பகத்தில் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க வைக்கிறது. இந்நிலையில் மனிதர்களை மிகவும் நெருங்கிவிடுகின்றன இப்பொம்மைகள்.

toy-story-3-2010-6621-1217094912 உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவசர முடிவெடுத்து மீளமுடியாத சுழலில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள் போலவே, தமது புதிய வாழ்வு ஒரு சித்திரவதை என்பதை பொம்மைகள் மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கின்றன. அந்த வாழ்விலிருந்து தம்மை திசைமாற்றிக் கொள்ள அவை விரும்பும்போது தாம் சூழ்நிலையின் கைதிகளாக மாற்றிவிடப்பட்டிருப்பது அப்பொம்மைகளிற்கு புரிய ஆரம்பிக்கிறது. அன்பிற்கு மட்டுமே கைதிகளாக இருக்க விரும்பும் அப்பொம்மைகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றன.

சிறுவர் பராமரிப்பகத்திலிருந்து ஆன்டியின் பொம்மைகள் தப்பிச் செல்லும் சிறையுடைப்பைப் போல ஜாலியான, சஸ்பென்ஸ் நிறைந்த ஒன்றை நான் சமீப காலத்தில் அனுபவித்ததேயில்லை. பராமரிப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மையான Lotso, ஒரு ஜெண்டில்மேன் தாதா. அந்தக் கரடி தாதாவின் அடியாள் பொம்மைகளின் கட்டுக் காவலிலிருந்து தப்பிச் செல்வதற்காக ஆன்டியின் பொம்மைகள் இயற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் அபாரம். இச்சிறையுடைப்பின் ஒவ்வொரு நிலையும் களிப்பின் எல்லைக்கு ரசிகனை இட்டுச் செல்ல முயற்சிக்கிறது.

பரபரப்பாக சிறை உடைப்பு நடந்து கொண்டிருக்கையில், ஸ்பானிய மொழி பேசுபவராக மாறிவிடும் Buzz Lightyear பின்னி எடுக்கிறார். அவர் பேசும் ஸ்டைலே சிரிப்பை வரவழைத்து விடுகிறது. இது போதாதென்று அவர் ஆடும் நடனங்கள் எல்லாம் அட்டகாசம் . அந்த நடன அசைவுகளில் இருக்கும் அழகே பிக்ஸாரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சான்றாக அமைந்து விடுகிறது. கவ் கேர்ல் ஜெசியுடனான காதல் காட்சிகளில் காதல் மன்னனாக பிய்த்து உதறுகிறார் பஸ் லைட்இயர்.

toy-story-3-2010-6621-471123531 கதையில் வில்லனாக உருவெடுக்கிறார் கரடி பொம்மை லொட்சொ. திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மென்மையாக, அழகாக வில்லத்தனம் செய்ய முடியுமா என்பதனை லொட்சோவிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். திரைப்படத்தில் இப்பாத்திரத்திற்கு வழங்கப்படும் முடிவானது அவர் ரசிகர் என்றவகையில் என் மனதினை வேதனைப்படுத்துகிறது. கதை இலாகாவாவது இந்தக் கரடியிடம் கொஞ்சம் இரக்கமாக நடந்து கொண்டிருக்கலாம். லொட்சொவிற்கு குரல் வழங்கி உயிர்ப்பூட்டியிருக்கும் கலைஞர் Ned Beatty ன் திறமை சிறப்பானது. திரைப்படத்தில் எனக்குப் பிடித்த பாத்திரமாக இருப்பவர் கரடி லொட்சொதான்.

Barbie மற்றும் Ken பொம்மைகள் திரைப்படத்தின் அருமையான புது வரவுகள். கென் பாத்திரத்தை எப்படியான ஒன்றாக சித்தரிக்க விரும்பியிருக்கிறார்கள் என்பது தெளிவு. அப்படி அது தெளிவுறாவிடிலும் கென் எழுதும் கடிதத்தை பார்ப்பதன் மூலம் அது தெள்ளத் தெளிவாகிவிடும். பார்பியின் கடைக்கண் பார்வையை பெற அவர் அடிக்கும் டயலாக்குகள் கிச்சு கிச்சு. பார்பியை அசத்துவதற்காக அவர் நிகழ்த்தும் Catwalk கலக்கல். அதேபோல் கென்னின் விருப்பத்திற்குரிய ஆடைகளை கிழித்து அவனிடமிருந்து ரகசியங்களை கறக்கும் பார்பி, தற்கால மனைவியர் சமூகத்தின் அச்சு அசல் பிரதிநிதி என்றால் அது மிகையாகாது.

கரடி லொட்சொவின் பிளாஷ்பேக் [அதனை சிரிப்பை தொலைத்த ஒரு கோமாளி பொம்மையை கொண்டு சொல்ல வைத்தது], நடு இரவில் தன்னந்தனியாக ஊஞ்சலில் அமர்ந்திருந்து வானில் காயும் நிலவை ஏக்கத்துடன் பார்க்கும் Big Baby, ஆன்டிக்கும் பொம்மைகளிற்குமிடையிலான இறுதிக் காட்சிகள் போன்றவை மனதை மென் தென்றலாக தொட்டு நெகிழவைப்பவை.

பிரிதல் குறித்து இவ்வளவு உணர்வுபூர்வமாக ஒரு திரைப்படத்தை அனிமேஷனில் வழங்க முடியுமா என்பதற்கான விடையாக அமைந்திருக்கிறது டாய் ஸ்டோரி 3 திரைப்படம். அற்புதமான கற்பனையில், அனிமேஷன்,நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், புதிய பாத்திரங்களின் அறிமுகம் என பிக்ஸார் அணியினரின் ஈடுஇணையற்ற உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படைப்பானது பிக்ஸாரிற்கு மேலும் புகழை ஈட்டித்தருகிறது.

தம் அன்பிற்குரியவர்களை தவிர்க்க முடியாத தருணமொன்றில் பிரிந்து செல்வதென்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் பிரிதலின் பின்பாக புதியதோர் வாழ்வு காத்திருக்ககூடிய சாத்தியமும் இருக்கவே செய்கிறது. ஆன்டியின் பொம்மைகள் சிலவற்றின் காலணிகளில் ஆன்டியின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அந்தக் காலணிகள் வெறும் காலணிகளாகவல்ல மாறாக அவை அந்தப் பொம்மைகளின் இதயங்களாகவே எனக்குத் தோற்றம் தருகின்றன. [****]


ட்ரெயிலர்

Thursday, July 22, 2010

நாய்ப் பட்டி


டேவிஸ், புட்ச், ஏஞ்சல் எனும் மூன்று இளைஞர்களும் அவர்கள் இழைத்த வெவ்வேறு குற்றச் செயல்களிற்காக தண்டனை பெற்று, எனொலா வேல் இளைஞர் சீர்திருத்தச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

எனொலா வேல் சீர்திருத்த சிறையின் கண்டிப்பான சட்டதிட்டங்களிற்கு மட்டுமன்றி, சிறையினுள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வரும் முரட்டுக் கோஷ்டி ஒன்றின் தொல்லைகளையும் புதியவர்களான அம்மூன்று இளைஞர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இவ்வாறான ஒரு நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் கழித்து சிறையிலிருந்து விரைவில் வெளியேறுவதற்கு தொல்லைகளை தாங்கிக் கொண்டு அடங்கிப் போவது ஒரு வழி. திருப்பி மரண அடி அடித்து யார் தலைவன் என்று காட்டுவது இன்னொரு வழி. புட்ச், திருப்பி அடிக்க ஆரம்பிக்கிறான்….

இளைஞர் சீர்திருத்தச் சிறை ஒன்றில் அனுமதிக்கப்படும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை சில வார இடைவெளிகளில் எவ்வாறு முற்றிலுமாக மாறிப்போகிறது என்பதை அந்தச் சிறையின் சூழலுடன் கூற விழைகிறது Dog Pound திரைப்படம். பிரெஞ்சு இயக்குனர் Kim Chapiron ஆங்கில மொழியில் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் சிறை அதிகாரிகள் ஊழல் எலிகளாகவும், மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள். அவ்வகையான சித்தரிப்பு இப்படத்தில் கிடையாது. சிறை அதிகாரிகள் தமது கடமையை சிறப்பாக செய்ய முயல்பவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள். சிறையில் தம் வாழ்வைக் கழிக்கும் இளம் கைதிகளின் வாழுலகை பிரதானமான ஒன்றாக முன்வைக்கிறது திரைப்படம்.

dog-pound-2010-19387-564362219 படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை அதிரவைப்பது அதில் இடம்பெறும் வன்முறை. தமக்கு அன்னியமான சிறைச் சூழல் ஒன்றிற்குள் நுழையும் இளம் கைதிகள் முகம் கொடுக்கும் வன்சூழலை அப்படியே உணர்த்த விழைந்திருக்கிறார் இயக்குனர் கிம் சாபிரோன்.

தம் மீது வலிந்து திணிக்கப்படும் வன்முறைகளை மறுபேச்சு பேசாது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை. சிறை அதிகாரிகளிடம் அது குறித்து முறையிடுவது என்பது ஆண்மையற்றதனமாக கருதப்படும் மனோபாவம். ஆரம்பத்தில் சிறையின் தாதாவான பேங்ஸிடம் அடி வாங்கும் புட்ச், பொறுமையுடன் காத்திருந்து பதிலடி கொடுக்கும் தருணங்களில் வன்முறை திரையைக் கிழிக்கிறது.

பதிலடி தந்து பேங்ஸை வீழ்த்தியபின் புட்ச்சின் பாதுகாப்பின்கீழ் டேவிஸும், ஏஞ்சலும் வந்து விடுகிறார்கள். போதைப்பொருள் விற்றதற்காக தண்டனை பெற்ற டேவிஸ் கலகலப்பான இளைஞன். பெண்கள் பற்றி சிருங்காரக் கதைகள் கூறி இளம் கைதிகளை மகிழ்விப்பவன். கார் திருட்டிற்காக தண்டனை பெற்ற ஏஞ்சல் அதிகம் பேசாதவன். இவர்கள் போல் வேறுபட்ட குற்றங்களிற்காக தண்டனை பெற்ற இளைஞர்களின் வேறுபட்ட குணங்களையும், உணர்வுகளையும் இயல்பாக திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களின் ரகசிய பாவனைகள், வேறுபட்ட இனங்களிற்கிடையில் படிந்திருக்கும் துவேஷங்கள், எந்தப் பயனும் அளிக்காது விரயமாகும் உளவியல் ஆலோசனைகள், கத்திமேல் நடப்பது போன்ற பணியை ஆற்றும் சிறை அதிகாரிகள், அந்த அதிகாரிகள் தம் வாழ்வில் எதிர் கொள்ளும் அழுத்தங்கள் என நகர்கிறது படம்.

தாம் இழைத்த குற்றங்கள் குறித்து எந்த மனக்கிலேசமும் இல்லாது, சிறைவாழ்க்கையை நல்லபடியாக முடித்து வெளியேற துடிக்கும் அந்த இளைஞர்களின் உலகம் வேறுபட்டது. வன்முறையாலும், வலியாலும் சூழப்பட்டது. அவற்றை மீறியும் தாம் அடைபட்டிருக்கும் வெளியில் சிரித்து வாழ முயல்கிறார்கள் அவர்கள். ஒரு இளம் கைதியின் நியாயப்படுத்த முடியாத மரணத்தின்பின் தமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, அவர்கள் புரட்சியில் இறங்கும் தருணம் இத்திரைப்படத்தின் எரிமலைத் தருணம்.

dog-pound-2010-19387-1181706025 பேங்ஸை வீழ்த்தியபின் சிறையின் ரகசிய உலகை தன் விருப்பத்திற்கேற்ப புட்ச் மாற்ற முனையும்போது நிகழ்வுகள் தறிகெட்டு போக ஆரம்பிக்கின்றன. ஒரு நல்ல சிறை அதிகாரிகூட குறித்த ஒரு தருணத்தின் அழுத்தத்தில் தன் அதிகாரத்தில் சற்று எல்லை மீறும்போது அதன் தாக்கங்கள் பல வாழ்க்கைகளை கொத்திப் போட்டு விடுவதாக படத்தின் இறுதிப் பகுதி அமைகிறது. அந்த தருணங்கள் அதிர்ச்சி அலைகளாக பார்வையாளனை தாக்குகின்றன.

இளம் கைதிகளாக நடித்திருக்கும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக புட்ச் வேடத்தில் நடித்திருக்கும் இளம் நடிகர் Adam Butcher உக்கிரமான தருணங்களில் அசத்தியிருக்கிறார். டேவிஸாக வரும் Shane Kippel, ஏஞ்சலாக வரும் Mateo Morales ஆகிய நடிகர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அவர்களின் முடிவுகள் மனதை நெகிழ வைக்கும். சிறை அதிகாரி குட் இயராக நடித்திருக்கும் நடிகர் Lawrence Bayne பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இருப்பினும் மூன்று இளம் கைதிகளினதும் பாத்திரங்களின் ஆழமற்றதன்மை அவர்களின் உணர்வுகளுடன் பார்வையாளனை முழுமையாக நெருங்க விடாது செய்து விடுகிறது. படத்தின் வன்முறைக் காட்சிகளின் ஆக்கிரமிப்பு படத்தை உணர்வுபூர்வமாக அணுகத் தடையாகவிருக்கிறது. வன்முறைக்காட்சிகள் தரும் அதிர்ச்சியே மனதில் காலூன்ற விரைகிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் Un Prophet படத்தை நினைவிற்கு எடுத்து வருகின்றன.

கூட்டிலிருந்து வெளியேறிய வெறி கொண்ட நாயை, எவ்வாறு மூர்க்கமாக கைப்பற்றி, கூட்டின் உள்ளே தூக்கி எறிந்து கதவை மூடுவார்களோ, அவ்வளவு மூர்க்கமாக புட்சை அடித்து, சிறையினுள் தூக்கி எறிந்து, பார்வையாளன் முகத்தில் கதவை அறைந்து சாத்தி நிறைவடைகிறது திரைப்படம். அந்தக்காட்சியில் புட்ச் எழுப்பும் அழுகுரல், பார்வையாளன் மனதில் அடைபட்ட குரலாக சிறு கணம் பயணித்து செல்கிறது. [**]

ட்ரெயிலர்

Saturday, July 17, 2010

கொற்கை


ஒரு குறித்த பிரதேசத்தின் ஒரு மாத கால வரலாற்றை எழுதச் சொல்லி என்னிடம் கேட்டால், அது என்னால் முடியாது என்ற பதிலை உடனே கூறிவிடுவேன். எனவே ஒரு பிரதேசத்தின் 86 ஆண்டு கால வரலாற்றை கதை வழி சொல்லிச் செல்வதென்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு அரிய சாதனையாகும். அச்சாதனையை தனது கடின உழைப்பால் மிகவும் அனாயாசமாக தனது புதிய நாவலான கொற்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள்.

பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய கொற்கை துறைமுக பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது. இந்த கால இடைவெளியினுள் கொற்கையை சேர்ந்த பரதவர் சமூகத்தில் உருவாகிய மாற்றங்கள், நாடார் சமூகம் கொற்கையின் ஒரு அடையாளமாக மாறியதன் பின்னனியிலிருக்கும் அச்சமூகத்தின் அசுர வளர்ச்சி, கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் கொழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் உண்மை முகம் என கொற்கையின் உருமாற்றத்தை பிரம்மிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறிச் செல்கிறார் நாவலாசிரியர் குருஸ்.

கொற்கை பரதவர் சமூகத்தின் மதிப்பு பெற்ற தலைவராகிய தொன்மிக்கேல் பரதவர்ம பாண்டியனின் மரணத்துடன் ஆரம்பமாகிறது கதை. பரதவ சமூகத்தின் மன்னர்களாக விளங்கிய பாண்டியபதிகள் குறித்த வரலாறும், வாய் வழிக்கதைகளும் அவர்களிடம் இருந்திருக்ககூடிய சித்து சக்திகளும் ஆச்சர்யத்தை மனதில் விதைக்கின்றன. பரதவ சமூகத்தில் பிளவை உண்டாக்கி அதன் மூலம் தம் அதிகாரத்தை அவர்கள் மேல் நிலைநாட்ட விரும்பிய வெள்ளையர்கள், கத்தோலிக்க மத பிரதிநிதிகள், அவர்களின் சதிக்கு துணைபோன பரதவ சமூகத்தின் அந்தஸ்து நிறைந்த குடும்பங்கள் என்பவற்றின் அறிமுகங்களோடு நகர ஆரம்பிக்கிறது இப்பெருங்கதை.

தொழில் நுட்ப, இயந்திர வசதிகள் ஏதுமற்ற காலப்பகுதியில், மனித சக்தியையும், தேர்ந்த கடல் அறிவையும், அனுபவத்தையும் கொண்டு நடுக்கடலில் நிலை கொண்ட கப்பல்களிலிருந்து பாரிய யந்திரங்களை தோணிகளில் பொருத்தப்பட்ட விசேட அமைப்புக்களின் துணையுடன் கரைக்கு எடுத்து வரும் கொற்கை பரதவர்களின் அசர வைக்கும் திறமை வெள்ளையர்களை மட்டுமல்ல வாசகரையும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டும் சக்தியுடையது. நாவலின் இப்பகுதியை ஆசிரியர் மிகவும் விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார்.

நாவலின் ஆரம்பத்தில் வரும் கடலோடிகளின் கப்பல் பயண வாழ்க்கை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல், வர்ணனை என படிப்பவர்களை கப்பலினுள் இருக்கும் ஒரு பார்வையாளனாக ஆக்கி விடுகிறார் குருஸ். அவர்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், பலவீனங்கள், சிக்கல்கள், வன்முறை, குடும்பம், சாகசம் என அனைத்துக் குறித்தும் நேர்மையான பார்வையை நாவலின் அப்பகுதி வழங்குகிறது.

பரதவ சமூகத்தை சேர்ந்த தல்மெய்தா, ரிபேரா, சிங்கராயம், பல்டேனா ஆகிய அந்தஸ்து நிறைந்த குடும்பங்களின் பொற்காலத்தையும், கால ஓட்டத்தில் அக்குடும்பங்களினதும், குடும்ப வாரிசுகளினதும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இயல்பாக எடுத்துச் சொல்கிறது கதை. கதையின் நெடுகிலும் இக்குடும்பங்களை மட்டும் முன்னிறுத்தி அவர்கள் கதையைக்கூறாது, நாவலில் இடம்பெறும் வெவ்வேறு பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக இக்குடும்பங்களின் கதை சொல்லி முடிக்கப்படுகிறது. நாவலில் அறிமுகமாகும் சில பாத்திரங்கள் கதையோட்டத்தில் மாயமாக மறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நாவலில் பின்பு எங்கோ வரும் ஒரு வரியானது மறக்காது சொல்லிவிடுகிறது.

பரதவர்களின் கப்பல் ஓட்டத்தை தமது வணிகத்திற்கு ஆதாரமாக கொண்டிருந்த நாடார் சமூகம், எவ்வாறு கப்பல் வணிகத்தில் கால் நனைத்தது என்பதனையும், கொற்கைப் பிரதேசத்தில் நாடார் சமூகத்தினரின் பிரம்மிக்கத்தக்க வளர்சியையும் அதற்கான காரணங்களையும் மிகவும் நேர்மையாக தன் நாவலில் வழங்கியிருக்கிறார் குருஸ். நாடார் சமூகத்தில் தளைத்தோங்கிய ஒற்றுமையையும், பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையின்மையையும் கதை தெளிவாக காட்டுகிறது. நாவலின் இறுதிப்பகுதியில் நாடார் சமூகத்தில் கூட போட்டி, பொறாமை அதிகரித்து அவர்களிற்கிடையில் முன்னொரு காலத்தில் நிலவிய ஒற்றுமையானது விரிசல் கண்டு விட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையற்ற சூழலினால் உருவாகிய பல்வேறு சங்கங்கள், அச்சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்குப் பதிலாக தம் சுயநலப்போக்கால் அச்சமூகத்தின் நலனைக் எவ்வாறு குழி தோண்டிப் புதைத்தன என்பதும் நாவலில் கூறப்படுகிறது. கத்தோலிக்க மத பிரதிநிதிகள் எவ்வாறு படிப்பறிவு இல்லாத பரதவர்களை சுரண்டினார்கள் என்பதனையும், குருக்கள், ஆயர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மக்களிற்கு சேவை செய்வதற்கு பதிலாக சொகுசான சுகவாழ்வு வாழ்ந்ததையும் எந்த தயக்கமுமின்றி நாவலில் விபரிக்கிறார் குருஸ்.

நாவலின் மையமான கொற்கைத் துறைமுகமானது, காலநகர்வில் மனிதர்களைப் போலவே தன் முகத்தை மாற்றி மாற்றி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதையும், துறைமுகத்தின் அபிவிருத்தியால் கொற்கை பிரதேசத்தில் உருவாகிய அபரிமிதமான மாற்றங்களையும் சுவைபட நாவலில் எடுத்துரைக்கிறார் கதாசிரியர்.

joe-d-cruz நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் யாவரையும் மனதில் இருத்திக் கொள்ளல் என்பது சிரமமான ஒன்றாகும். லிடியா, ரஞ்சிதா, சலோமி, மதலேன், பாக்கியம் போன்ற பெண்பாத்திரங்கள் அதிர்வையும், மனநெகிழ்வையும் தருபவையாக உருவாகி நிற்கின்றன. பரதவர் சமூகத்தின் பெண்களின் கண்ணீர் வரலாறு அவர்களின் வளர்ச்சியுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது. ஆனால் கதையில் வாசகர்களின் மனதில் இலகுவாக வந்து ஏறி விடும் பாத்திரம் பிலிப் தண்டல் பாத்திரமாகும்.

கப்பலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்து பின் பெரும் முதலாளியாக உருவாகும் பிலிப் தண்டல் பாத்திரம் நாவலின் நடுப்பகுதியில் மெதுவாக மறைந்து போய்விடுகிறது. நாவலினை தொடர்ந்து இழுத்துச் செல்லும் பிற பாத்திரங்கள் வழியாக, பிலிப் தண்டல் மீது நாம் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் தகவல்கள் வந்து விழுகின்றன. இருப்பினும் இப்பிரம்மாண்டமான நாவலை வாசகனின் மனதைக் கனக்க வைத்து நிறைவு செய்து வைப்பவர் பிலிப் தண்டல்தான்.

கதைமாந்தர்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்வமாக மயங்காத வகையில் கதையை கூறிச்செல்கிறார் குருஸ். ஆனால் நாவலின் சில தருணங்கள் அந்த இடத்திலேயே வாசகனின் மனதை கலங்கடிக்க வைக்கின்றன. மிகையலங்கார சோடனை சொற்கள் அற்ற குருஸின் எளிமையான வரிகளில் பொதிந்திருக்கும் கவர்ச்சி, அவரிற்கேயுரிய தனிச்சிறப்பாகும். நகைச்சுவையும், எள்ளலும் நிறைந்த வட்டார மொழி உரையாடல்களை படிப்பதே தனிசுகம். நாவல் முழுவதையும் வட்டார மொழிகள் அலங்காரம் செய்கின்றன. குறிப்பாக மன்னர் ஒருவர் வளர்த்த நாய் மன்னரிற்கு மாமா முறையாகும் கதை நாள் முழுக்க சிரிக்க வைக்கிறது. ஓவியர் ஆலிவர் வரைந்திருக்கும் நாவலின் அட்டைப்படம் மிகவும் எளிமையான ஒன்று. பாதி தோணியும் பாதி சரக்கு பெட்டக கப்பலுமாக சிலுவையுடன் தோற்றமளிக்கும் அச்சித்திரமே நாவலின் கதையை சுருக்கமாக கூறிவிடுகிறது.

நீண்ட பெருங்கதையின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய அயர்ச்சியானது நாவலின் பிற்பகுதியால் இல்லாது ஆக்கப்படுகிறது. ஐந்து வருட கடின உழைப்பில் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் ஜோ டி குருஸ். நான் இன்றுவரை கண்டிராத, கால் பதித்திராத கொற்கை, நாவலின் முடிவில் என் மனதில் பிரம்மாண்டமாக விரிகிறது. இதனை நிகழ்திக்காட்டக்கூடிய ஒரு எழுத்தாளன் சாதாரணமான ஒருவன் அல்ல. தன் வரிகளால் வாசகன் மனதில் அவன் தன் படைப்பை செதுக்கி, வாசகனையே அதனை அழகு பார்த்து ரசிக்க வைக்கும் கலைஞன் அவன். கொற்கையைப் போலவே ஜோ டி குருஸ் என் மனதில் பிரம்மாண்டமானவராக உருப்பெறுகிறார். ஆழி சூழ் உலகின் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல என்பதனை கொற்கை நிரூபிக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் ஜோ டி குருஸின் பெயர் மறக்கப்படாத ஒன்றாக இருக்கும். [***]

Friday, July 16, 2010

வேட்டைக்காரன்ஸ்


உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்படும் மனிதர்கள் சிலர், அடர்ந்த காடு ஒன்றினுள் வான்குடை மூலம் வீசப்படுகின்றனர். காட்டினுள் வீசப்படும் அந்நபர்கள் கொலைஞன், கூலிப்படை, ராணுவவீரன், ஜப்பானிய யகூஸா என்பவர்களாக தாம் வாழும் உலகில் சக மனிதர்களை வேட்டையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

அடர்ந்த காட்டினுள் தமக்குள் அறிமுகமாகிக் கொள்ளும் இந்த மனிதர்கள், தாம் வீசி எறியப்பட்டிருக்கும் காடானது பூமியில் இல்லாது வேறு ஒரு கிரகத்தில் அமைந்திருக்கிறது என்பதனையும், அக்காடு ஒரு வேட்டைச் சரணாலயம் என்பதனையும் தெரிந்து கொள்கிறார்கள்.

மேலும் எல்லாவிதத்திலும் தம்மைவிட பராக்கிரமசாலிகளான வேட்டைக்காரர்களால் தாம் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். பராக்கிரமசாலிகளான வேட்டையர்களை அழித்து, பூமிக்கு திரும்பி செல்வதற்கு தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக செயற்படுவது எனும் முடிவிற்கு வருகிறார்கள் காட்டினில் வீசப்பட்ட அம்மனிதர்கள்….

Predators திரைப்படத்தில் அவர்களின் அயல்கிரக நண்பர்களான ஏலியன்கள் இல்லை என்பது பெரும் நிம்மதி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது மட்டுமே திரைப்படத்தின் நிம்மதியாக இருந்து தொலைத்து விடுகிறது. படத்தில் ஒரே ஒரு பெண் பாத்திரமாக வரும் நடிகை Alice Braga கூட ஒரு நிம்மதிதான் என்பவர்களை பிரிடேட்டர்கள் கடத்திச் சென்று அந்தக் காட்டில் வீசக் கடவதாக!!

மனிதர்கள் குழுவொன்றை காட்டிற்குள் அனுப்பி, அவர்களை கில்லாடி பிரிடேட்டர்கள் தம் இஷ்டப்படி வேட்டையாட வைக்கும் கதை வழியாக, 1987ல் வெளியாகிய Predator திரைப்படத்துடனான தன் உறவுகளை புதுப்பித்துக் கொள்கிறது இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் பின்னனி இசைகூட 1987ல் வெளியாகிய பிரிடேட்டரின் முதல் பாகத்தையே நினைவிற்கு எடுத்து வருகிறது.

predators-2010-18699-301633450 ஆகாயத்திலிருந்து வான்குடை விரியாத நிலையில் அடர்ந்த காட்டை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் Adrien Brody, மயக்கத்திலிருந்து கண்விழிக்கும் வேகமான காட்சி ஒன்றுடன் ஆரம்பமாகிறது திரைப்படம். பின் படிப்படியாக காட்டின் வெவ்வேறு பகுதிகளில் வீழ்ந்த மனிதர்கள் ஒன்று சேர்வதும், வேற்றுக் கிரகமொன்றில் அவர்கள் உள்ளார்கள் என்பது தெரியவருவதும், பயங்கரமான பிரிடேட்டர்கள் அவர்களில் ஒருவரைக் கூட உயிருடன் விடாது வேட்டையாடிக் கொல்லப்போகிறார்கள் என்பதும் சற்று திகிலுடன் கூறப்படுகிறது.

ஆனால் தத்தமது துறைகளில் மிகவும் வல்லவர்களாக, ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கி அறிமுகமாகும் பாத்திரங்கள், பிரிடேட்டரின் பொறிகளிலும், கொடிய தாக்குதலிலும் பரிதாபமாக இறந்து போகிறார்கள். அப்பாத்திரங்கள் தம் அறிமுகங்கள் மூலம் பார்வையாளர்களிடம் விதைத்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்குகிறது தொடரும் ஆக்‌ஷன் காட்சிகள். தம் திறமைக்கேற்ற வகையில் அவர்கள் பிரிடேட்டர்களுடன் பொருதுவதாக காட்சிகள் ஏதும் இல்லை என்பது பெருங்குறை. கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்களை விட உஷாராக இருக்கும் என்றே தோன்றுகிறது.

படத்தில் புதிதாக, பிரிடேட்டர்களிற்கு வேட்டையில் உதவும் சில செல்லப்பிராணிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏலியன்கள் படத்தில் இல்லை என்ற மகிழ்ச்சிக்கு இவை திருஷ்டிப் பொட்டு வைக்கின்றன. இவற்றை பார்த்து திகில் வருவதற்குப் பதில், இப்பிராணிகள் முகத்தில் மீசை வரைந்தால் நன்றாக இருக்குமே என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றித் தொலைக்கிறது.

பிரிடேட்டர் என்ற இனத்திற்குள் இருக்கக்கூடிய பகைமை மற்றும் வேறுபாடுகள் படத்தின் திருப்ப புள்ளியாக அமைகின்றன. ஆனால் இத்திருப்பபுள்ளி வலுவிழந்த ஒரு புள்ளியாக மாறிவிடுகிறது. ஏலியன்களை அடிப்பதிற்கு பதில் தமக்குள் அடித்து மகிழ்கிறார்கள் பிரிடேட்டர்கள்.

predators-2010-18699-222700799 வேட்டையாடுபவர்கள் வேட்டையாடப்படுபவர்களாக மாறிவிட்ட ஒரு சூழலில், ஆபத்திலிருக்கும் சகமனிதனை காப்பாற்றுவதா இல்லை தன் உயிரைக் காக்க ஓடுவதா எனும் அறம் சார்ந்த கேள்வி ஒன்று படத்தில் பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இது மனதை தொடும் வகையில் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அப்படிக் காட்சிப்படுத்தியிருந்தாலும்கூட அழுகை வராது என்பது உறுதி.

பத்து வேட்டை பருவங்களாக பிரிடேட்டர்களிற்கு தண்ணி காட்டி அவர்களிடமிருந்து தப்பித்து காட்டில் மறைந்து வாழும் மனிதனாக அறிமுகமாகும் நடிகர் Laurence Fishburne ன் பாத்திரம் எதிர்பார்ப்பை ஜிவ்வென ஏற்றி பின் ஏமாற்றத்தை உடனடிக் காப்பியாக பரிமாறுகிறது. சற்று மனநிலை குழம்பிய நிலையில் உள்ளவராக லாரன்ஸ் பிஷ்பர்னின் நடிப்பு கொட்டாவிக்கு இ மெயில் அனுப்ப வைக்கிறது.

யப்பானிய யகூஷாவும், பிரிடேட்டரும் மழை வருமாற்போலிருக்கும் இரவொன்றில், காற்றில் அசையும் புற்பரப்பினுள் வாள்களுடன் மோதிக் கொள்ளும் காட்சியை கவிதைபோல் உருமாற்ற விழைந்திருக்கிறார் இயக்குனர். அதன் விளைவு மட்டமான கவிதை ஒன்றை சுவைத்த உணர்வைத் தருகிறது.

predators-2010-18699-1549391553 ஆர்னால்ட் ஸ்வார்ஷ்னேகரினை ஈடுகட்ட வேண்டிய பாத்திரத்தில் நடிகர் ஏட்ரியன் ப்ரொடி, தன் உடலை கட்டாக மெருகேற்றியிருக்கிறார். சிட்டுக்களை அவரது கவர்ச்சியான உடல் நிச்சயம் கவரும். ஆனால் கனமான ஆக்‌ஷன் பாத்திரம் அவரிற்கு பொருந்திப் போகவில்லை. இது போதாது என்று இறுதிக் காட்சியில் முதல் பாகத்தில் உள்ளதுபோலவே தன் உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு நெருப்பைச் சுற்றி, ஓடி ஓடி ஆக்‌ஷன் செய்கிறார் ப்ரொடி. முதல் பாகத்தின் மயக்கமான தழுவல் இத்திரைப்படம் என்று கூறினால் அது மிகையல்ல.

ராபர்ட் ராட்ரிகேஸின் திரைக்கதை அதற்கேயுரிய பத்தணா திருப்பங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பத்தணா திருப்பங்களைக் கூட முன்கூட்டியே ஓரளவு ஊகித்துவிட முடிகிறது. இயக்குனர் Nirod Antal ன் இயக்கத்தில் இந்த திருப்பங்களும் விறுவிறுப்பை இழந்து தவிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விடயம் இல்லை.

மலிவான கிராபிக்ஸ், மட்டமான ஆக்‌ஷன், சாரமிழந்த அதிரினலின், ஊகித்து விடக்கூடிய திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, இயக்குனர் நிரோட் அண்டெலின் கால் விட்டமின் இயக்கம் என இந்த Predators திரைப்படமானது, 1987ல் வெளியாகிய முதல் பாகத்தின் அருகில் யாரும் நெருங்க முடியாது என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பிரிடேட்டர் எனும் பெயரை வைத்துக்கொண்டு மலிவான பட்ஜெட்டில் கொள்ளை லாபம் பார்க்க விழையும் ஸ்டுடியோக்களின் நரித்தனமான மனோபாவத்தையும் அது தோலுரித்துக் காட்டுகிறது. [*]

ட்ரெயிலர்

Thursday, July 15, 2010

ரேப் ட்ராகன் - 11


ஸ்னானத் தொட்டி இந்திரன்

லத்பானிய இலக்கியங்களிற்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கும் இத்தொடர் வழியாக, வாசக அன்பர்களிற்கெல்லாம் நன்கு அறிமுகமாகிவிட்ட குத்து நகரின் இளவரசியை, அவள் பள்ளியறைக்குள் புகுந்து, அலுங்காமல், நலுங்காமல் கவர்ந்து சென்ற புரட்சிக்காரன் ரஃபிக் என்ன ஆனான்? அவன் முரட்டுக் கரங்களில் மாட்டிக் கொண்ட அழகுப் பைங்கிளி குந்தவிக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை இந்தப் பண்பாடு வழுவாத தொடரின் தீவிர வாசக அன்பர்கள் தங்கள் பரிசுத்தமான மனங்களில் எழுப்பியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பகல் இருந்தால் இரவும் இருக்கும் என்பதைப்போல் சில துஷ்ட ஆன்மாக்கள், குந்தவியிடம் மாட்டிக்கொண்ட ரஃபிக்கின் நிலை என்னவாகிற்றோ என்பதை அறிய ஆவலாக இருந்ததையும், இதையே சாக்காக வைத்து, இந்த துர் ஆன்மாக்களின் தலைமை அலுவலகம், ரஃபிக்கின் நிலை குறித்த உண்மைகளை உலகின் கண்களிற்கு இட்டு வருவதற்காக பல ஊழல்கள் நிறைந்த தேர்தலை நடாத்தியதையும் பார்க்கும்போது, என்ன மாதிரியான ஒரு லோகத்தில் நாம் ஜீவிக்கிறோம் எனும் கேள்வி எம் முன் பூதாகரமாக எழவே செய்கிறது.

எனவே மேலும் சொற்களை வீணாக்காது, அழகுச்சிலை குந்தவியும், புரட்சிக்காரன் ரஃபிக்கும் தற்காலிகமாக தங்கியிருக்கும் அந்த சொகுசு விடுதியை நோக்கி எம் மன ஓடங்களில் பயணிப்போம் நண்பர்களே.

செந்நிற நாரைகளின் சிறகுகளும், பீனிக்ஸ் பறவையின் வயிற்றுப்பகுதியின் மென்சிறகுகளாலும் கலந்து உருவாக்கப்பட்டிருந்த சொகுசுவிடுதியின் பஞ்சணையில், அழகு மலராக மயங்கிக் கிடந்த குத்து நகர இளவரசி, மெல்லத் தன் கயல் விழிகளைத் திறந்தாள். தன் உடல் மிகவும் அயர்ச்சியுற்றிருப்பதை உணர்ந்த அவள், இரவு விசேட பூசைகள் எதுவும் நடக்கவில்லையே என தன் மன எண்ணங்களை ஓட விட்டவாறே பஞ்சணையில் சிறிது நேரம் கிடந்து தன்னை நிதானித்துக் கொண்டாள். இது தன் பள்ளியறை அல்ல என்பதை அவள் ஊகித்துக் கொண்டபோது அந்த உண்மை அவளிற்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.

பஞ்சணையில் கிடந்தவாறே இளமை நுரைக்கும் தன் உடலை, நளினமாக அப்படியும், இப்படியுமாக வளைத்து சோம்பல் முறித்தாள் இளவரசி குந்தவி. பஞ்சணை, தான் செய்யப் பெற்ற பாக்கியத்தை அந்தக்கணம் பெற்றதால் மெதுவாக முனகியது. தான் இருக்கும் அறையை தன் அழகிய விழிகளால் சற்று நோட்டம் விட்டாள் குந்தவி. தரமான சொகுசு விடுதியொன்றின் அறையில் அவள் இருப்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. இருப்பினும் குத்து நகர அந்தப்புர பள்ளியறையிலிருந்து அவள் எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தாள் என்பது அவளிற்கு புதிராகவே இருந்தது. மேலும் இவ்வாறான சொகுசு விடுதியை தேர்ந்தெடுப்பதில் தேர்ந்த திறமை பெற்றிருக்கும் கதாசிரியரின் அனுபவத்தையும் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

மென்மையான பஞ்சணையில் வளர்த்திவிட்ட தங்க வாழை எனக் கிடந்த தன் மலர் உடலை, அழகாக வழுக்கி, தரையில் கால் பதித்து நின்றாள் அழகுக் குந்தவி. அறையின் ஒரு பக்கமாக அமைந்திருந்த ஸ்னான அறையிலிருந்து வெளிவந்த வாசப் பொடிகளின் நறுமணம் அவள் நாசியில் தயக்கமின்றி நுழைந்தது. அந்த நறுமணத்தோடு கலந்திருந்த ஆண்வாசம் அவள் உடலில் ஒரு பசியை மெதுவாக தட்டி எழுப்ப தொடங்கியது. தன் பாதங்களால் மெதுவான அடிகள் எடுத்து வைத்து மெல்ல ஸ்னான அறையை நெருங்கினாள் இளவரசி குந்தவி. ஸ்னான அறையையும், பள்ளி அறையையும் பிரித்த மெல்லிய நூலிழை திரைச்சீலையை, தன் பட்டு விரல்களால் மெல்ல விலக்கிய அந்த அழகுச்சிலை, ஸ்னான அறையினுள் தன் மதன விழிகளை மெல்ல சுழலவும் விட்டாள்.

ரோஜா, செங்கமலம், அல்லி, தாழை, நீர் மல்லிகை போன்ற மலர்களின் இதழ்கள் வெதுவெதுப்பான நீரின்மேல் மிதக்க, பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நானாவித வாசனைப்பொடிகள் நீரில் கலக்கப்பட்டதால் அவை உருவாக்கிய சுகந்த வாசம் அந்த ஸ்னான அறையை நிரப்ப, வானுலக அதிபதி இந்திரனை ஒத்த அழகுடன் ஸ்னான தொட்டிக்குள் அமர்ந்திருந்தான் புரட்சிக்காரன் ரஃபிக். சிலை போன்ற அவன் மேனியில் நீர்த்திவலைகளும், மலரிதழ்களும் கோலம் போட்டிருந்தன. ரஃபிக் தன் கண்களை மூடி, புரட்சிமாதாவை ஸ்னான தொட்டியில் தியானித்தவாறு இருந்தான். அவன் தியானம் விஸ்வாமித்ரரின் தவம்போல் ஒளிர்ந்தது.

ஸ்னான தொட்டிக்குள் கண்களை மூடி தேவலோக மன்மதன்போல் அமர்ந்திருந்த ரஃபிக்கை கண்டு கொண்ட குந்தவியின் மார்புகள் சற்று விம்மித் தணிந்தன. அவள் மூச்சு சூடாக வெளியேறியது. அவள் உடலில் ஒரு வேகம் படர ஆரம்பித்தது. திரைச்சீலையை ஒருபுறம் தள்ளி விலக்கியவாறே ஸ்னான அறைக்குள் தன் பாதங்களை எடுத்து வைத்தாள் குத்து நகரின் இளவரசி குந்தவி.

[ ஸ்னானத் தொட்டி இந்திரன் தவம் கலையுமா? ]


ரேப் ட்ராகன் ஹிட்ஸ் லிஸ்ட்: இலுமினாட்டி கிளப் சாங்

கவனிக்க வேண்டியவை: .26ல் வரும் ஹிப் மூவ்/ 1.29ல் கொரிய அழகி கிம்மின் பேக் மூவ்/ 1.40ல் இலுமினாட்டியின் செஸ்ட் மூவ்/ 3.22-3.36 வரை இலுமினாட்டியின் நான்ஸ்டாப் டான்ஸ்/ 4.25ல் இருந்து பாடலின் இறுதிவரை இலுமினாட்டியின் செக்ஸி டான்ஸ் மூவ் :)))) அம்மூசு மாமே அம்மூசு

Sunday, July 11, 2010

வெண் சிறகு

துர்திஸ்தான் சோசலிச ஜனநாயகக் குடியரசு, அல் டெஸிர் நகரம்:

gip2


பழுப்பு வண்ணத்தில் சூரியன் அஸெர் மலைக்குன்றுப் பகுதியை நிறமாக்கி இருக்க, சிதைந்த மலைக் கோட்டை ஒன்றை நோக்கி செல்லும் பாதையில் முன்னேறுகின்றன சில ட்ரக்குகளும், ஒரு காரும். சிதைந்த கோட்டையின் வாயிலில் நிறுத்தப்படும் ட்ரக்குகளிலிருந்து ஆயுததாரிகள் குதித்து இறங்குகிறார்கள்.

வண்டிகளிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் நிறைந்த பெட்டிகள் இறக்கப் படுகின்றன. நிறுதப்பட்டிருக்கும் காரின் கதவை துப்பாக்கி தாங்கிய வீரனொருவன் திறக்க, கரு நீல ஆடையில் கம்பீரமாக இறங்குகிறது அழகு.அவள் நடையில் ஒர் மிடுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவள் உயரம் ஆண்களை நாணம் கொள்ளச் செய்யும். கண்களில் வசியம். இதழ்கள், சுவைத்திடு என்று அழைப்பவை. சுவைத்திடாது போனால் சொர்க்கம் இருந்தென்ன, இல்லாது போனாலென்ன. ஒடுங்கிய இடுப்பில் தொங்கும் வாள், ஒர் துப்பாக்கி என்பன இந்த அழகை மேலும் அழகாக்க, திறந்த அவள் மேலாடையினூடு இரு இமயங்கள் எட்டிப் பார்க்கின்றன.

அவள் கண்களில் கடந்த கால நினைவுகள் விழிக்க, காதுகளில் முன்னோரின் குரல்கள் gip3 ஒலிக்கின்றன. அஸெர்களின் சிரிப்பு அவளை வரவேற்கிறது. வெண்சிறகு பிறந்த தொட்டில் அல்லவா இந்தப் பிரதேசம். சிசியாவின் பார்வையில் அழிந்து போய்விட்ட வெண்சிறகு குழுவை மீண்டும் பிறப்பிக்கும் வைராக்யம் துடிப்புடன் இருந்தது. அதற்கு அவள் என்ன விலை தரவும் தயாராக இருந்தாள்.

இரு வாரங்களின் பின்…

இரவின் நிறத்தை அவன் லாரியின் விளக்குகள் அழிக்க, தன் தங்கை ஒவ்லிவியாவைக் காண்பதற்காக, அல் டெஸிர் நகரத்தை நோக்கி குறுகலான மலைப்பாதை வழியே வந்து கொண்டிருக்கிறான் ஜிப்சி [ட்சாகோய்]. வெளிநாட்டு முதலீட்டாளர்களை களிப்பூட்டுவதற்காக அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கும் வேடிக்கையான ராணுவ மோதல் ஒன்றின் பாதையில் வந்து விடும் ஜிப்சி, பாதையில் தொடர்ந்து செல்ல முடியாததால், குறுக்குப் பாதை ஒன்றை தேர்ந்தெடுக்கின்றான்.

gip4 அப்பாதை அவனை ஒர் மலைக்குன்றின் உச்சியிலிருக்கும் ஒர் சிறிய தகர கொட்டகைக்கு அழைத்து வருகிறது. தகர கொட்டகையின் முன்பாக நெருப்பு வளர்த்து, தேனீர் குவளை சகிதம், கீழே நடக்கும் ராணுவ மோதலை தொலை நோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒர் முதியவர். ஜிப்சியை வரவேற்கும் அம்முதியவர் அவனிற்கு தேனீர் தந்து உபசரிக்கிறார். இந்நகரைக் காப்பாற்ற தான் கலந்து கொண்ட ஒர் போர் பற்றியும் அவனிடம் கூறுகிறார். ஆனால் தற்போது தான் வறுமையில் வாடுவதையும் ஜிப்சிக்கு விளக்குகிறார். அன்றிரவு அம்முதியவரின் நிலத்தில் தங்கிக் கொள்கிறான் ஜிப்சி.

அல் டெஸிர் நகரத்தில் தங்கியிருக்கும் ஜிப்சியின் அழகிய தங்கை ஓவ்லிவியா, நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் பின் முற்றாக இல்லாது அழிக்கப்பட்ட வெண்சிறகு குழுவின் மர்மங்கள் பற்றி ஆராய்ந்து ஒர் புத்தகம் எழுத விரும்புகிறாள். தன் புத்தகங்களின் எடிட்டரான, பொன்னிறத் தேவதை எவா டார்கோல்ட்டுடன் ஒர் ஹோட்டலில் தங்கியிருக்கும் அவள், நகரில் வாழும் மக்களிடம் தகவல்களை சேகரிக்க முயல்கிறாள். நகர மக்கள் வெண்சிறகு குறித்து பேச மறுக்கிறார்கள்.

நகரில் வாழும் ஒரு பெண் வெண்சிறகு குறித்து ஒவ்லிவியாவுடன் பேச முன்வருகிறாள். நகரின் ஒடுங்கிய தெருக்கள் கூடும் சந்தி ஒன்றில் அமைந்திருக்கும் நீர்த்தொட்டி ஒன்றினருகில் அப்பெண்ணைச் சென்று சந்திக்கிறாள் ஒவ்லிவியா. சூன்யக்காரி என்று மக்களால் கருதப்படும் சிசியா எனும் பெண்பற்றி அவளிற்கு ஏதேனும் தகவல் தெரியுமா என வினவுகிறாள் ஒவ்லிவியா.

சிசியா பற்றி அப்பெண் சில தகவல்களை ஒவ்லிவியாவிற்கு தெரிவிக்கிறாள். சிசியா பத்து வயது சிறுமியாக இருந்த போதே வெண்சிறகு குழுவால் தத்தெடுக்கப்பட்டவள். உருமாறுவதில் தேர்ந்தவள். தன் கண்களின் நிறங்களை இமைத்துடிப்பிற்குள் மாற்றிக் கொள்பவள் என அப்பெண் சிசியா பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதே அப்பெண்ணின் கண்களின் நிறம் மாற்றம் கொள்கிறது. முக்காடு அணிந்த அப்பெண்ணின் காதில் செருகப்பட்டிருந்த ஒலிவாங்கியில், சிசியா, ஒவ்லிவியாவின் கதையை அப்புறம் முடிக்கலாம். நண்பன் சிர்லெப் மூன்று லாரிகளுடன் வந்து சேர்ந்து விட்டான் என தகவல் சொல்கிறான் அஹ்மட். பெண் கூறிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒவ்லிவியாவின் தலை நிமிர்ந்த போது தகவல் தந்த பெண் மறைந்து விட்டதைக் கண்டு அவள் ஆச்சர்யம் கொள்கிறாள்.

gip5 அஸெர் கோட்டையில் வந்து நிற்கும் மூன்று பிரம்மாண்டமான லாரிகளை நெருங்கும் சிசியா, திறந்திருக்கும் பின் கதவு வழியாக, மலையாக லாரியுள் அடுக்கப்பட்டிருக்கும் பணத்தை நோக்குகிறாள். இவ்வளவு பணத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கும் சிர்லெப்பிடம், வெண்சிறகின் தொட்டிலை சீர்படுத்தப் போகிறேன், கொலைஞர்களின் சொர்க்கம் அதன் பூரண அழகில் மிளிரப்போகிறது என்கிறாள் சிசியா.

நகரில் தன் தங்கை தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு, நவ நாகரீக உடை அணிந்து வருகிறான் ஜிப்சி. அங்கு தன் தங்கையின் எடிட்டரான எவா டார்கோல்டுடன் அறிமுகம் செய்து கொள்ளும் அவனை எவாவிற்கு பிடித்துப் போய்விடுகிறது. ஜிப்சியை நோக்கி தன் மன்மத பானங்களை சளைக்காமல் வீசுகிறாள் எவா. ஜிப்சிக்கு மன்மத பானங்கள் என்றால் அல்வா. ஆனால் குறுக்கே வந்து விடுகிறாள் அவன் அன்புத் தங்கை ஒவ்லிவியா. சில அன்பான குசல விசாரிப்புக்களின் பின் மூவரும் உணவருந்த செல்கிறார்கள்.

உணவருந்திக் கொண்டே தான் அல் டெஸிர் நகரிற்கு வந்த காரணத்தை ஜிப்சிக்கு விளக்குகிறாள் ஒவ்லிவியா. கடந்த வருடத்தின் வசந்த காலத்தின் போது ஜெர்மனியில் ரஷ்ய மாஃபியாவிற்கு சொந்தமான மூன்று லாரிகள் அதனுள் இருந்த பணத்துடன் சிசியாவினால் கடத்தப்பட்டன என்பதையும் தெரிவிக்கும் ஒவ்லிவியா, தான் எழுதப் போகும் நூல் வெண்சிறகு அமைப்பு குறித்து இது வரை வெளிவராத பல ரகசியங்களை வெளிக்கொணரும் என்று உற்சாகமாக பேசுகிறாள். சுவாரஸ்யமான இவ்வுரையாடலின் மத்தியிலும் ஏவாவின் கால் விரல்கள் மேஜைக்கு கீழாக ஜிப்சியின் தொடையில் கவிதை எழுதிக்கொண்டிருந்தன.

அன்றிரவு ஏவாவுடன் இரவை களிப்புடன் கழிக்கிறான் ஜிப்சி. அவன் மனதில் முன்னைய இரவை தன்னுடன் தேநீருடன் பகிர்ந்து கொண்ட முதியவர் லாமி நினைவிற்கு வருகிறார். ஏவாவோ மறுநாள் காலை ஒவ்லிவியாவின் ஆத்திரத்தை எப்ப்படி சாமாளிப்பது என்று எண்ணுகிறாள். பக்கத்து அறையில் ஒவ்லிவியாவை வைத்துக் கொண்டு இவர்கள் ஆடிய லீலைகளின் சங்கீதம் ஒவ்லிவியாவின் காதை எட்டவே செய்தது.

அடுத்த நாள் காலையில் கோபமாக இருக்கும் ஒவ்லிவியா, அஸெர்க் கோட்டைக்கு அண்மையில் உள்ள கடைகளில் புரட்சிக்கு முந்தைய அஞ்சல் அட்டைகள் கிடைக்குமா என்பதை தேடிப்பார்க்க செல்கிறாள். ஜிப்சி சவரம் செய்து முடித்ததும் அவனுடன் வந்து ஒவ்லிவியாவுடன் இணைந்து கொள்வதாகக் கூறுகிறாள் ஏவா.

gip6 நகரில் அமைந்துள்ள ராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் லஞ்சமாக ஏராளமான பணம் தந்து, தன் திட்டத்தை வேகமாக முன்னேறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறாள் சிசியா. பணத்தை பெற்றுக் கொள்ளும் அதிகாரி இனிக் காரியம் வேகமாக நடைபெறும் என சிசியாவிற்கு உறுதி அளிக்கிறார்.

ராணுவ அலுவலகத்திலிருந்து தன் காரில் அஹ்மட்டுடன் திரும்பும் சிசியா, வழியில் கடைத்தெருவில் ஒவ்லிவியாவைக் கண்டுவிடுகிறாள். அவள் முகத்தில் ஒர் மென் புன்னகை விரிய, அஹ்மட்டிடம் ஒவ்லிவியாவை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். காரை நிறுத்தி விட்டு கையில் பளபளக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த குறுவாளுடன் ஒவ்லிவியா நிற்கும் கடை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான் ராட்சதன் அஹ்மட்.

ஒவ்லிவியாவின் கோபத்தை பேசி தீர்க்க நினைக்கும் ஏவா அவளைத் தேடி கடைத்தெருவிற்கு வருகிறாள். ஒவ்லிவியா நின்ற கடைக்குள் நுழையும் அஹ்மட், கடைக்காரனின் நெஞ்சில் குறுவாளால் குத்துகிறான். அவன் ஒர் கையின் பிடிக்குள் அடங்கிப் போகிறது ஒவ்லிவியாவின் கழுத்து. ஒவ்லிவியாவின் கழுத்தில் பிடித்த பிடியை தளர்த்தாது அவளை கடைக்கு வெளியே தள்ளிச் செல்கிறான் அஹ்மட்.

கடையிலிருந்து வெளியே வரும் ஒவ்லிவியாவையும், அஹ்மட்டையும் கண்டுவிடும் ஏவா அவர்களை நோக்கி செல்ல, காற்றைக் கிழித்து கொண்டு வேகமாக வெட்டுகிறது அஹ்மட்டின் குறுவாள், அவன் வைத்த குறி தப்பி ஏவாவின் கைப்பை துண்டாகி விழுகிறது. அதிர்ச்சியில் கீழே விழுகிறாள் ஏவா. காத்திருக்கும் காரில் ஒவ்லிவியாவை தூக்கிப் போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு சிட்டாய் பறக்கிறது சிசியா, அஹ்மட் கூட்டணி.

சுதாரித்துக் கொண்டு எழுந்து விடும் ஏவா, ஜிப்சி சவரம் செய்து கொண்டிருக்கும் கடையை நோக்கி ஓடுகிறாள், சவரம் செய்து கொண்டே ஊர்க்கதை பேசிக்கொண்டிருக்கும் ஜிப்சியிடம் ஒவ்லிவியா கடத்தப்பட்ட செய்தியை கூறுகிறாள் ஏவா. துடித்து எழும் ஜிப்சி, சவரம் செய்ததிற்கு பணத்தை தராமலேயே தன் தங்கையை கடத்தியவர்களை தேடி ஓடுகிறான். ஆரம்பமாகிறது அதிரடி சாகசம்….

gip7 சிசியா,அல்டெஸிர் ராணுவ அதிகாரிகளுடன் கூட்டாக செய்யும் சதி என்ன? ஒவ்லிவியாவை ஏன் சிசியா கடத்தினாள்? தன் தங்கையை பலம் பொருந்திய வெண்சிறகு அமைப்பிடமிருந்து ஜிப்சி மீட்டானா? சிசியாவின் சதி முறியடிக்கப்பட்டதா? இக்கேள்விகளிற்கு விறுவிறுப்பாக விடை தருகிறது GIPSY எனும் காமிக்ஸ் தொடரின் ஐந்தாவது ஆல்பமாகிய L’AILE BLANCHE.

ஒர் பக்கா மசாலாக் கதைக்குரிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது கதை. வாசகர்களை எதிர்பார்க்க வைக்கும் ஆரம்பம், கட்டு மஸ்தான உடல் கொண்ட அழகிய [ அரை வேக்காட்டு ] ஹீரோ, இரண்டு சித்திரக் கட்டங்களிலேயே ஹீரோவினால் வசீகரிக்கப்படும் ஒர் இளம் சிட்டு. கிளு கிளு கட்டங்கள், சஸ்பென்ஸ், மலிவான காமெடி, அசத்த வைக்கும் ஆக்‌ஷன், அண்ணன் தங்கை செண்டிமெண்ட் என்று நல்ல காக்டெயில்.

இந்தக் காக்டெயிலை அற்புதமாக பரிமாறியிருக்கும் கதாசிரியர் THIERRY SMOLDEREN ஆவார். புருசெல்லில் 1954ல் பிறந்தவர். அனிமேஷன் துறையில் கல்வி. நாடகத்துறை அனுபவங்கள். ஜாஸ் இசை கித்தார் கலைஞர். ஒவியம், இசை சம்பந்தமாக கட்டுரைகள் என்று பலதுறை மன்னன். 1981 களில் காமிக்ஸ் துறைக்குள் நுழைந்தவர். இன்று காமிக்ஸ் உலகில் மதிப்பு பெற்ற ஒர் கலைஞர். வாசகரின் நாடித்துடிப்பு அறிந்து பக்கத்திற்கு பக்கம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார் அவர். அதிலும் உரையாடல்களில் ஜிப்சி பேசும் ஆண்மை தெறிக்கும் [ கெட்ட ] வசனங்கள், பன்ச் டயலாக் தோற்றது போங்கள்.

ஆசிரியரின் கதைக்கு பிரம்மிக்க வைக்கும் வகையில் சித்திரங்களை வரைந்திருப்பவர் எங்களிற்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள ஓவியர் ஒருவர். சித்திரங்களை வைத்தே நண்பர்கள் அவரை யாரெனக் கூறிவிட முடியும். ஸ்கார்பியோன் புகழ் ஓவியரான ENRICO MARINI தான் அவர். அழகிய பெண்களின் கண்களாகட்டும், அவர்களின் அபிநய உடல்களாகட்டும், கூரை விட்டு கூரை பாயும் ஆக்‌ஷன் காட்சிகளாகட்டும், துப்பாக்கிகள் பேசும் மோதல் காட்சிகளாகட்டும், பக்கத்திற்கு பக்கம் பின்னியிருக்கிறார் மாரினி. ஆக்‌ஷன் கதைகளிற்கு மாரினியின் ஓவியங்கள் ஒர் தனித்தன்மையை வழங்குகின்றன என்றால் அது மிகையல்ல.

1993ல் முதல் 2002 வரை மொத்தம் ஆறு ஆல்பங்கள் வெளியாகியுள்ள ஜிப்சி, மசாலா கதைப்பிரியர்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும். [***]

ஆர்வலர்களிற்கு

ஜிப்சி

Thursday, July 8, 2010

காணாமல்போன ஆலிஸ்


சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்தபோது தமக்குள் பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட டேனியும், விக்டரும், ஆட்கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்க ஆவலாக உள்ளனர். ஆட்கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணத்தில் தமது அடிமட்ட வாழ்க்கையை மாற்றிக் கொள்வது என்பது இரு முன்னாள் சிறைக்கைதிகளின் விருப்பமாகவுமிருக்கிறது.

இதற்காக டேனியும், விக்டரும், நகரின் பணக்காரர்களில் ஒருவனின் மகளான ஆலிஸை திட்டமிட்டு கடத்தி வருகிறார்கள். கடத்தி வந்த ஆலிஸை கட்டிலில் கட்டி, விலங்கிட்டு, நிர்வாணமான நிலையில் அவளை போட்டோக்கள் பிடித்து, அப்போட்டோக்களை ஆலிஸின் தந்தையிடம் அனுப்பி வைத்து, ஆலிஸினை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தை அவள் தந்தையிடம் கேட்கிறார்கள்.

இரு கடத்தல்காரர்களின் திட்டமும் அவர்கள் எதிர்பார்த்த திசையில் நகர ஆரம்பிக்கிறது. ஆனால் கடத்தப்பட்ட பெண்ணான ஆலிஸ் குறித்த ஒர் உண்மையை விக்டரிற்கு தெரியாது தன் மனதில் புதைத்து வைத்திருக்கிறான் டேனி. மேலும் தன்மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் விக்டர் அறியாது பிறிதொரு திட்டத்தையும் செயற்படுத்த விரும்புகிறான் அவன்….

வெற்றிகரமான முறையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கடத்தல் திட்டம், அதில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் எதிர்பார்த்திராத வகையில் வேறு திருப்பங்களை நோக்கி நகர்வதை விறுவிறுப்பாக சொல்கிறது The Disappearance of Alice Creed எனும் பிரிட்டிஷ் திரைப்படம். சிறப்பாக கதையை எழுதி, திரையில் கதையை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் J Blakeson .

திரைப்படத்தின் ஆரம்பத்தில், முதல் பத்து நிமிடங்களிற்கு ஒரு வார்த்தைகூட இல்லாது காட்சிகள் நகர்ந்து செல்கின்றன. அக்காட்சிகளே திரைப்படம் எவ்வகையானது என்பதற்கு கட்டியமாக அமைந்து விடுகின்றன. திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியானது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூடிய கதவுகளின் பின்னே நிகழ்வதாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டேனி, விக்டர், ஆலிஸ் ஆகிய மூவரைத் தவிர திரைப்படத்தில் வேறு பாத்திரங்கள் கிடையாது.

la-disparition-d-alice-creed-2010-17002-1269238574 எனவே இம்மூன்று பாத்திரங்களின் உறவுகள் மற்றும் உணர்வுகள் மீது திரைக்கதை வலிமையாக காலை ஊன்றிப் பயணிக்கிறது. நம்பிக்கையும், துரோகமும் இம்மூன்று பாத்திரங்களிற்கு இடையிலும் ஒரு நாணயத்தின் பூவாகவும், தலையாகவும் மாறி மாறி விழுந்து கொண்டேயிருக்க அதன் வழியே பரபரப்புடன் கதையை நகர்த்துகிறார் இயக்குனர். நம்பிக்கைக்கும், துரோகத்திற்குமிடையில் பாத்திரங்களின் முகங்களும் தொடர்ந்து மாறிக் கொண்டே செல்கின்றன.

கடத்தியவர்கள், கடத்தப்பட்டவள்; இவர்களிற்கிடையில் உள்ள ரகசியங்கள் பார்வையாளர்களை எட்டும்போது படத்தின் மிக முக்கிய பாத்திரமான துரோகம் தன் முகத்தை காட்ட ஆரம்பிக்கிறது. படுக்கை அறையில் அடைபட்டுக் கிடக்கும் ஆலிஸைப் போலவே துரோகமும் தன் வெற்றியைத் தேடி தந்திரமாக நகர்கிறது.

டேனியின் திட்டங்கள் தெரிய வரும்போது, டேனியின் திட்டங்கள் வெற்றி பெறுமா இல்லை திறமைசாலியான விக்டரிடம் அவன் மாட்டிக் கொள்வானா எனும் பதட்டம் உருவாகிறது. பின் டேனியின் உண்மை முகம் தெரியும்போது, டேனியின் திட்டத்தை விக்டர் கண்டு பிடிக்க வேண்டுமே என்ற ஆவல் எழுகிறது.

இந்த இரு கடத்தல்காரர்களிற்கிடையில் மாட்டிக் கொண்ட ஆலிஸ், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எவ்வழியிலாவது தான் தப்பிக்க வேண்டுமென்று துடிப்பவள். இரு கடத்தல்காரர்களின் பலவீனங்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் ஆலிஸ் தயங்குவதில்லை. இரு ஆண்களையும் வீழ்த்தி ஆலிஸ் வெற்றி காண்பாளா என்ற கேள்வியும் ஒரு தருணத்தில் எழுகிறது. இவ்வாறாக தருணத்திற்கு தருணம் ஒவ்வொரு பாத்திரத்தின் பக்கமாக பார்வையாளனை தற்காலிகமாக சாய்த்து விடுவதில், கதையை திரையில் கூறியவிதமானது வெற்றி காண்கிறது.

திரைப்படத்தில் ஆலிஸாக வேடமேற்றிருக்கும் நடிகை Gemma Arterton சிறப்பாக தன் வேடத்தை செய்திருக்கிறார். கடத்தல்காரர்களின் கண்களிற்கு முன்பாக தன் உடல் உபாதைகளை தீர்க்கும் வேளையில் அவர் வேதனையாலும், அவமானத்தாலும் குறுகுவது மனதை உருக்கிவிடுகிறது. கடத்தப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை தன்னால் இயன்றளவு திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெமா. இந்த இளம் நடிகையை இவ்வாறன ஒரு வேடத்தில் காண்பது ஆச்சர்யமே. அதேபோன்று அவர் பாத்திரமும் இறுதிவரை பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

la-disparition-d-alice-creed-2010-17002-1967197939 நம்பிக்கைத் துரோகி டேனியாக வேடமேற்றிருக்கும் நடிகர் Martin Compston தன் திட்டங்களை பச்சோந்திபோல் நகர்த்திச் செல்லும் நடிப்பில் கவர்கிறார். விக்டரிடம் தன் ரகசியங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் செய்யும் தகிடுதித்தங்கள் பல சமயங்களில் விறுவிறுப்பு, சில சமயங்களில் சிரிப்பு. இருப்பினும் அவர் நடிப்பில் முழுமையற்ற தன்மையொன்றை உணர முடிகிறது என்பதே உண்மை.

படத்தின் பார்வையாளனை, தான் தோன்றும் முதல் வினாடியே கவர்ந்து, அந்தக் கவர்ச்சியை படத்தின் இறுதித் தருணம் வரை வெற்றிகரமாக கடத்திச் செல்கிறது விக்டர் பாத்திரம். மிக இயல்பாக, ஒரு அவதானம் நிறைந்த, திறமையான கடத்தல்காரனை திரையில் நடித்துக் காட்டியிருக்கிறார் நடிகர் Eddie Marson. அவர் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளே பார்வையாளனை கதையின் பிடியை உணர வைத்து விடுகின்றன. அட்டகாசமாக செய்திருக்கிறார் எடி என்றால் அது மிகையில்லை.

படத்தில் குளோஸ் அப் காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. பாத்திரங்களின் உணர்வுகளையும், கதையின் பதட்டத்தையும், அழுத்தத்தையும் பார்வையாளன் பக்கம் சிறப்பாக எடுத்துவர அக்காட்சி அமைப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன. படத்தின் இறுதிக்காட்சியில் வரும் பின்னனி இசையில் பியானோவும், வயலினும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டேனியும், விக்டரும் சம்பந்தப்பட்ட அக்காட்சியின் பின்னனி இசையானது மனதை தொட்டு, திரையில் ஓடும் காட்சிக்கு மேலும் உயிர்ப்பை வழங்குகிறது. உச்சக்கட்டக் காட்சிகளில் திருப்பத்திற்கு மேல் திருப்பம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, பார்வையாளனை இருக்கைகளில் கைகளைக் கசக்கிய நிலையில் கட்டிப் போடுகிறது. இருப்பினும் இறுதி முடிவை ஏற்கனவே பார்த்தது போல் மனதில் தோன்றும் எண்ணத்தை விலக்கி விட முடியவில்லை.

குறைந்த செலவில், சாமார்த்தியமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தேவையற்ற மிகைப்படுத்தல்களை புறந்தள்ளி ஒரு சிறப்பான த்ரில்லரை ரசிகர்களிற்கு வழங்குகிறது. இதன் வழி தரமான த்ரில்லர்களின் வரிசையில் தன் இடத்தை தேடிக் கொள்ளவும் அது முயல்கிறது. [***]

ட்ரெயிலர்

Monday, July 5, 2010

ரேப் ட்ராகன் - 10


ஸ்லோமோஷன் க்ரீன் ஐஸ் நாவல்பழம்!

சீன அழகி ஸிங்ஸிங்கின் இன்ப விடுதியில், நாசக்குத்து நாவலனின் கேள்வி நாராசமாக ஒலித்து அடங்கியபோது அங்கு குடிபுகுந்த அமைதி அந்த இன்ப விடுதிக்கு பொருத்தமற்ற ஒன்றாக இருந்தது.

மேலும் நாவலனின் புரவி கேசரி, இறுதிவரை அவனிற்கு பிடிகொடாது டிமிக்கி நல்கியதும், இளவரசன் இலுமி தன் ரதத்தின் பக்கவாட்டு தட்டில்கூட நாவலன் தொங்கியவாறு பயணித்து வருவதற்கு அனுமதிக்காததும், இலுமியின் ரதம் கிளப்பிய தூசியைப் பருகியவாறே ரதத்தின் பின்னால் வேகமாக இன்ப விடுதி வரை ஓடி வந்ததும், இன்ப விடுதியின் முன்னால் இருந்த இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு அட்டையில் இருந்த அழகிய சிட்டின் யெளவனத்தில் மயங்கிய இலுமினாட்டி, தன்னிடம் பொறுப்புக்களை தட்டி விட்டு முழுமுங்கு முங்கச் சென்றதும் நாவலனின் குரலில் வழமைக்கு மீறிய அனலைக் கலந்திருந்தன.

நாவலனின் அனல் குரல் கேள்விக்கு விடையளிக்க முயன்ற சீனன் ஷங்லிங்கை, பச்சைக் கண்ணன் தன் விழிகளால் தடுத்தான். மேலும் தன் குரலில் ஒரு பவ்யத்தை வரவழைத்துக்கொண்ட பச்சைக் கண்ணன்,

- கேள்வி கேட்கும் வீரர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாமா? என்று பதிலுக்கு ஒரு கேள்வியை நாவலனிடம் வீசினான்.

- ஹாஹாஹா…. என்ற ஒரு முரட்டுச் சிரிப்பை உதிர்த்த நாவலன்…. நாவலன், நாசக்குத்து நாவலன் என்று தன் பெயரை ஸ்டைலாக உச்சரித்துவிட்டு கடகடவென நகைத்தான்.

- வினோதமான பெயர்தான் உங்களிற்கு வீரரே என்றான் பச்சைக் கண்ணன்.

- என் குத்தும் வினோதமாகவே இருக்கும் எனப் பதில் அளித்த நாவலன் தன் கரங்களை வேகமாக காற்றில் செலுத்தினான், அடிவாங்கிய காற்று பச்சைக் கண்ணனின் கேசத்தினுள் தஞ்சம் புக முயன்றது.

- அப்படியா! வீரரே எங்கே, என்னைக் குத்துங்கள் பார்க்கலாம் என்று கூறியவாறே நாவலனை நெருங்கி சில எட்டுக்கள் எடுத்து வைத்தான் பச்சைக் கண்ணன்.

பச்சைக் கண்ணன் இலகுவாக ஆறு அடி உயரத்தை தாண்டியிருந்தான், திடமான அகன்ற தோள்கள், திமிறிய புஜங்கள், இறுகிய தசைகள் தெறித்த கால்கள், தீர்க்கமான அசைவு; இந்தக் கலவையுடன் நாவலனை அண்மித்த பச்சைக் கண் அசுரன், தன் கையிலிருந்த மதுக் கிண்ணத்திலிருந்து அழகாக ஒரு மிடறு இழுத்தான். பிரெஞ்சு ஒயின் அவன் வாய்க்குள் அமிர்தமாக அசைந்தது. ஒயினின் சுவையில் ஒரு கணம் தன்னையிழந்த பச்சைக் கண்ணன்…வீரனே, உன்னை என்னைக் குத்தச் சொன்னேன் என்றான்.

இதைக்கேட்ட நாவலன், வலிய வந்து தன்னிடம் நாவல் குத்தை கேட்கும் பச்சைக் கண்ணனை பரிதாபமாகப் பார்த்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நாவலனின் கரங்கள் இயங்கின. அவன் இரு கரங்களும் வெறி கொண்ட இடிகளாக பச்சைக் கண்ணனின் முகத்தை நோக்கிப் பாய்ந்தன. பின்பு அங்கு நடந்தவற்றை கொஞ்சம் ஸ்லோமோஷனில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்லோமோஷன்…

நாவலனின் கரங்கள் இயங்க ஆரம்பித்ததை படுவேகமாக அவதானித்து விட்ட பச்சைக் கண்ணன் வேகமாக செயல்பட்டான். தன் கையிலிருந்த மதுக் கிண்ணத்தை மேலே எறிந்தான். யாரோ கயிறால் கட்டி மேலே இழுத்தாற்போல் அக்கிண்ணமும் ஒரு துளி ஒயினைக்கூட சிந்திவிடாது நேர்கோட்டில் மேலே உயர்ந்தது. தன் முகத்தை நோக்கி வந்த நாவலனின் கரங்களிலிருந்து சாமர்த்தியமாக விலகிய பச்சைக் கண்ணன், அதே வேகத்தில் தன் கால்கள் இரண்டையும் அகலவிரித்து நிலத்தில் வீழ்ந்தான். அதே நேரத்தில் உறுதியான அவன் இரு முஷ்டிகளும் நாவலனின் கச்சையிலிருந்த நாவல் பழச்சின்னத்தின் மேல் மின்னலாக வெடித்தன..

- யம்மாஅம்மாஆஆஆஅஹோஓஓஓ… என்றலறியவாறே தன் நாவல்பழத்தை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தான் நாவலன். அவன் வாழ்நாளில் அவனை யாரும் திருப்பி அடித்ததில்லை. அதுவும் அங்கு!! அகல விரித்த கால்களை மீண்டும் வேகமாக பழைய நிலைக்கு இழுத்து நிமிர்ந்தெழுந்த பச்சைக் கண்ணன், மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த மதுக் கிண்ணத்தை தன் கைகளில் பிடித்துக் கொண்டான்…. ஸ்டாப் ஸ்லோமோஷன்… உன் குத்து வினோதக் குத்து ஆனால் என் குத்து வீழ்த்தும் குத்து என்று முழங்கிய க்ரீன் ஐஸ், கிண்ணத்திலிருந்து ஒயினை ஒரு மிடறு உறிஞ்சினான். ம்ம்ம்ம்ம்… இந்த ஒயின் அற்புதத்தின் வரைவிலக்கணம் என்று சீன அழகியைப் பார்த்து பாராட்டவும் செய்தான் அவன்.

நாவல் பழத்தில் அடிவாங்கிய நாவலன், வேதனை வலியில் முனகியவாறே… பச்சைக் கண் வீரரே என்னை இதுவரையில் யாரும் அடித்ததேயில்லை என்றான்.

- எதற்கும் முதல்முறை என்று ஒன்று உண்டு நாவலனே.. என்று புன்னகைத்தவாறே பதில் தந்தான் பச்சைக் கண்ணன்.

- நீங்.. நீங்கள் யார்? நாவலனின் கேள்வியில் மரியாதை கலந்திருந்தது.

நாவலனின் இந்தக் கேள்வியைக் கேட்ட பச்சைக் கண்ணன் கடகடவென சிரித்தான். தன் மொட்டைத் தலையை தடவி, தொங்கு மீசையை நீவி விட்ட சீனனும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டான். தன் சிரிப்பை ஒரு கணம் நிறுத்திய பச்சைக் கண்ணன்….

- நாவலனே, நாங்கள்தான் நீ இங்கு தேடி வந்த மனிதர்கள். இதோ மதிப்பிற்குரிய சீனக் கடற் கொள்ளையன் ஷங்லிங்.. என்று சீனனை அறிமுகப்படுத்தினான் பச்சைக் கண்ணன்.

- சமுத்திரங்களின் தரைகள்கூட இவர் காலடித் தடம் பதித்திட தவமிருக்கும், கொடும் புயலும் இவர் முன் அடங்கும், கன்னிகள் இவர் கண்டபின் கைபட்ட கனிகள், எதிரிகளின் எமன், எமனின் ஹிட் கவுண்டர், வரலாற்றின் வரிகளில் தேடினாலும் கண்டடையமுடியாத உண்மையின் குரல், ஜெமினி கணேசனின் குருநாதர், இதோ பெருமைமிகு கடற்கொள்ளையன் க்ரீன் ஐஸ் காமா ஜோஸ்….. பச்சைக் கண்ணனை இவ்வாறு அறிமுகப்படுத்திய சீனன், காமா ஜோஸைப் பார்த்து தன் உடலை முன் வளைத்து நாடகபாணியில் சலாம் அடித்தான்.

இதைக் கண்ட காமா ஜோஸும், சீன அழகி ஸிங்ஸிங்கும் பலமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். சீனனும் சிரித்தான். வலியுடன் கீழே கிடந்த நாவலன், அந்த வேதனையின் மத்தியிலும், உடலில் பொட்டுத் துணி இல்லாமலிருந்த ஸிங்ஸிங்கின் அழகிய உடலைப் பார்த்து செம நாவல் கட்டையப்பா இவள் என மனதுக்குள் எண்ணிக் கொண்டான். நாவல் பழத்திற்கு மட்டும் வாயிருந்தால் தன் வேதனையில் அது அன்று ஒரு ஒப்பாரியே வைத்திருக்கும்.

[ ரேப் ட்ராகன் தீம் சாங் கீழே நைனா... நன்றி மைக் சேகர் ]