Thursday, January 17, 2013

முகம் தந்தவன் காதல்

முதல் காதலியின் முகத்தை மறப்பது மிக இலகுவானது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை, அந்தப் பொறுப்பை அயர்வற்ற கால்களுடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் தன் கைகளில் எடுத்துக் கொண்டுவிடும். ஆனால் ஜேசன் மக்லேனோ அல்லது XIII கதைவரிசையின் வாசகர்களோ ஸ்டீவ் ரோலண்டின் முகத்தை மறப்பது அந்தளவிற்கு இலகுவானதாக இருக்காது. ஏனெனில் மக்லேனின் முகத்தை நாம் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அதில் நாம் காண்பது ஸ்டீவ் ரோலண்டையே. இந்த விடயத்தை மிக இலகுடன் வரித்துக்கொண்ட அசட்டையுடன் நாம் மறந்து செல்ல பழகியிருக்கிறோம். அதேபோல் இன்று காமிக்ஸ் வாசகர் மத்தியில் பிரபலமாகிய XIII பச்சையை தன்னுடலில் முதலில் பதித்து சுமந்து வீழ்ந்தவனும் ஸ்டீவ் ரோலண்ட்தான். அதனாலேயே இன்று XIII எனும் பச்சை காமிக்ஸ் அட்டைகளில் தோன்றும் இடங்களில் எல்லாம் அவனுடைய அரூபப்புன்னகை  பின்னணியில் தன்னை விழியறியா மச்சமாக பதித்து நிற்கிறது. XIII க்கு முகம் தந்தவன் கதையையே XIII மிஸ்டரி கதைவரிசையின் ஐந்தாம் ஆல்பமும் விபரிக்கிறது.
ஜனாதிபதி வில்லியம் ஷெரீடானின் வரவை எதிர்பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அருகில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் ஏதோவொன்றின் ஏதோவொரு அறையின் காற்றுவாசலை திறந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொலையிலக்கு துப்பாக்கியை தீவிரமான முகத்துடன் வெளியே எடுக்கும் ஸ்டீவ் ரோலண்ட். அவன் மனதின் முனுமுனுப்பாக ஸ்டீவ், என்றாவது ஒரு நாள் நீ சரித்திரத்தில் இடம்பிடிப்பாய் என அவன் தாய் அவனிற்கு உரைத்த சொற்களின் உச்சாடனம். அங்கிருந்து காலத்தில் பின்னோக்கி பாயும் கதை என்பதாக ஸ்டீவ் ரோலண்ட் கதையை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இழையாக சலிப்பின்றி சொல்கிறார் கதாசிரியர் Fabien Nury. இக்கதைக்கான சித்திரங்களை வழங்கியிருக்கிறார் Richard Guérineu.
காலத்தின் பின்னோக்கிய பார்வையில் சவுத்பர்க் எனும் புறநகரொன்றில் வாழும் வசதியான குடும்பம் ஒன்றின் வாரிசாக அறிமுகமாகிறான் பதினான்கு வயதின் முடிவை எட்டிக் கொண்டிருக்கும் ரோலண்ட். அவன் தாய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவளாக இருக்கிறாள். அவன் தந்தை தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் பிடிக்குள் தன்னை அடிமையாக்கி கொண்டவராக இருக்கிறார். தன் தாயை அதிகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மகனாக சித்தரிக்கப்படும் ரோலண்ட், தன் தந்தை மீது கொண்ட ஆதர்சத்தாலும், அவன்மீது அவர் ஓயாது திணிக்கும் தீவிர இனவெறி மற்றும் வலதுசாரிக் கருத்துக்களாலும் இனவெறி ஊட்டப்பட்டு வளர்ந்த ஒருவனாக இருக்கிறான்.
கறுப்பினத்தவர் மீது ஸ்டீவ் ரோலண்ட் கொண்ட வெறுப்பானது அவனுடன் அவனுள் கூடவே வளர்ந்து வரும் ஒன்றாக கதையில் கூறப்படுகிறது. கறுப்பினத்தவர்களிற்கு வழங்கப்படக்கூடிய ஒரே நீதி வன்முறை மாத்திரமே எனும் மந்திரத்தின் ஓயா உச்சாடனன் அவன். கல்லூரி நாட்களில்கூட விளையாட்டுப் போட்டிகளில் கறுப்பினத்தவர்களிடம் தோற்றுப் போவதை அவன் விரும்புவது இல்லை. அனைத்திலும் அவன் முதல்வனாக இருக்க வேண்டும் இரண்டாமிடம் என ஒன்று இல்லை,  அது ஒன்றுமேயில்லை என்பது அவன் வாழ்க்கையின் உயிர்வரி. தன் வீழ்ச்சியின் உறுதியின் புலர்தலில்கூட அவனிற்கு துணைவருவது இந்த உயிர்வரிகள்தான் ஆனால் அவ்வரிகள் அவன் முதல்வன் இல்லை என்பதையே அவனிற்கு உணர்த்தி நகர்கின்றன. கதையின் இறுதிவரை தான் இளமையில் கொண்ட கருத்துக்களில் இருந்து மாற்றம் கொள்ளாத ஒருவனாகவே ஸ்டீவ் ரோலண்ட் இருக்கிறான். தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனும் தீவிர முனைப்பில் அவன் கதை நெடுக நிகழ்த்துவது இனவாதத்தின் வன்கவிதைகளையே. தன் கல்லூரி நாட்களில் சகோதரத்துவம் எனும் குழுவுடன் இணைந்து இனவாதப் போராட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ் ரோலண்ட். இந்த சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வருங்கால மனைவியான கிம் காரிங்டனையும் சந்திந்துக் கொள்கிறான்.
srஸ்டீவ் ரோலண்டின் தந்தை தன் சிந்தாந்தங்களின் நீட்சிக்காக எவ்வாறு அவனை பயன்படுத்திக் கொண்டாரோ அவ்வாறே தன் ரகசிய திட்டங்களிற்காக அவனை கிம் பயன்படுத்திக் கொள்கிறாள். ஸ்டீவின் பலவீனங்களை அவள் தவளையொன்றின் குறிதவறா நாக்குப்போல பற்றியிழுத்து தன் வலையினுள் அவனை அவனறியாவண்ணம் திசைப்படுத்திச் செல்கிறாள். ஏறக்குறைய அவன் முடிவினையும் அவளே முன்னெழுதி வைத்தாள் என்றுகூட கூறிடலாம். ஏனெனில் கிம், மங்கூஸை பரிந்துரைத்து சதியினுள் நுழைக்க அவள் தன் கணவனான ஸ்டீவ் மனநிலைமீது கொண்ட ஐயமும் ஒரு காரணமாகும். ஸ்டீவ்மீது கிம் கொண்ட காதல் இலகுவாக துடைத்துவிடக்கூடிய ஒரு அரிதாரப்படலம். ஸ்டீவுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவள் அதை பூசிக்கொள்ள வேண்டியது ஒரு கட்டாயம். தனது மகன் குறித்த அக்கறை அவள் பூசும் அந்தப் பூச்சை நியாயப்படுத்துவதாக காட்ட விழைகிறது. இருப்பினும் ஸ்டிவ் குறித்த தன் எண்ணங்களை அவனுடன் தீவிரமான தருணமொன்றில் நேர்மையுடன் அவள் பகிரவே செய்கிறாள். இந்த தருணமே கதையில் வாசகனை நெகிழ வைக்கும் பகுதியாகவும், சாதாரணமாக கடந்து செல்லககூடிய ஒரு அதிரடிக் கதையை அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதாக மாற்றிவிடுவதாகவும் இருக்கிறது. அது போலவே தன் வாழ்க்கையில் எங்கும் எப்போதும் பிறரால் பயன்படுத்திக் கொள்ளப்படும் மனிதனாகவும், தீவிர இனவெறியனாகவும் இருக்கும் ஸ்டீவ் ரோலண்ட் குறித்த ஒரு பண்பையும் அது அறிந்து கொள்ளச் செய்கிறது.
ஸ்டீவ் ரோலண்ட் என்னதான் ஒரு பாதகனாக இருந்தாலும், தன் மனைவியான கிம் அவன் வாழ்வில் இழைத்தது எல்லாம் துரோகம் என்பதை அவள் கூறி அவன் அறிந்தாலும், அவள்மீது அவன் கொண்ட அந்த முதல் காதலை அவன் இழப்பதேயில்லை. கிம்மின் சொற்கள் அவன் உயிரைப் பறித்த பின்பாகவும் கூட அவள்மீது அவன் கொண்ட காதலின் ஒளியில் மலர்ந்திட விழையும் மலரிதழ்மனம் அவனது. கிம் தன்னை பயன்படுத்தியிருந்தாலும்கூட, தன்னை நேசிக்கவேயில்லை முற்றாக வெறுக்கிறாள் என்பதை தெரிந்தபின்பாகவும்கூட அவள் என்றும் நலமாக இருக்க வேண்டும் என மனதார விரும்புபவன் அவன். கிம் மீது அவன் கொண்ட காதலிற்கு அவனுடைய இறுதி மூச்சுவரை உண்மையாக இருந்த ஸ்டீவ் ரோலண்ட், அந்த அரிதாரக் காதலின் கரங்களின் அணைப்பினிலேயே இறந்தும் போகிறான். அவன் இறந்து புதைக்கப்பட்டாலும், அன்பினில் சாந்திபெறா ஆவியென அவன் முகம் நடமாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகத்தில் அவன் கொண்டிருந்த உண்மையான காதலும் அரூபமான மச்சமாகவே புன்னைகத்து மறைகிறது. ஸ்டீவ் ரோலண்ட் சரித்திரத்தில் இடம்பிடிக்கவே செய்கிறான்……. காதலின்.

Sunday, January 6, 2013

என்பு வேட்டையர்

வதனமோ சந்த்ரபிம்பமோ-7

நவஹோக்களின் T REX டெக்ஸ் அதகளம் 

வையோமிங் பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் Buffalo எனும் சிறுகிராமத்திற்கு குதிரை திருட்டு சம்பந்தமான விசாரணை ஒன்றிற்காக டெக்ஸும், கார்சனும் வருகை தருகிறார்கள். வஃபலோ கிராமத்தின் ஷெரீப்பான டாம் பாக்ஸ்டருன் உரையாடும் டெக்ஸ், விசாரணையை தொடர்வதற்காக Four Bears எனும் செவ்விந்திய இளைஞனை சந்திக்க விரும்புகிறார்…..
Tex Maxi  n°2ன் கதையாகிய Le Chasseur de Fossiles ஐ கதையின் கதாசிரியராகிய அண்டோனியோ செகுரா, லண்டனில் அமைந்திருக்கும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்லுயிர் படிமப் பிரிவிலேயே ஆரம்பிக்கிறார். கதையில் டெக்ஸ் வாசகர்களிடம் அறிமுகமாகும் முன்பாக டைனோசார் போன்ற தொல்விலங்குகளின் என்புருக்கள் வாசகர்களிடம் தம்மை அறிமுகமாக்கி கொள்கின்றன. அமெரிக்க மண்ணிலிருந்து லண்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பை வளமாக்க வந்து சேர்ந்திருக்கும் முற்சரித்திர விலங்குகளின் படிமவுருக்கள் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருக்கும் மாசசூசெட்ஸின் செனெட்டரான தாமஸ் கரேயின் மனதிற்கு மகிழ்சி தருவதாக அமைந்திடவில்லை, மாறாக தன் தேசத்தின் படிமப் பொக்கிஷங்கள் அன்னியர் பெருமைக்கு துணைபோவதைத் தடுக்க அவர் எண்ணம் இழைகொள்கிறது. அமெரிக்காவிலும் சிறப்பானதொரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை உருவாக்கிட வேண்டுமெனவும் அவர் மனதில் ஒரு திட்டம் பிறக்கிறது.
தொடரும் கதையின் பக்கங்களில் செனெட்டர் தாமஸ் கரே அவர்களின் பணிப்பின் கீழ் தொல்லுயிர் எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்காக பயணிக்கும் தொல்லுயிரியலாளரான ED Cope கதையில் அறிமுகமாகிறார். அமெரிக்க தொல்லுயிர் எச்ச அகழ்வு வரலாற்றில் Edward Drinker Cope முக்கியம் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். எட் கோப்பிற்கும் அவரது போட்டியாளரான Othniel Charles Marsh க்கும் இடையிலான என்பு வேட்டை வரலாறு, டெக்ஸ் கதையைப் போன்றே சுவாரஸ்யமானது. ஆரம்ப நாட்களில் நண்பர்களாக இருந்து பின்பு பெயரிற்காகவும், புகழிற்காகவும் எதிரிகளாக மாறிய இந்த இருவரின் வரலாற்றில் ஒரு சிறு பகுதியை அண்டோனியா செகுரா தனது கதைக்கு கற்பனைமிகை சேர்த்து சாதகமாக்கி கொண்டிருக்கிறார். எட் கோப்பிற்கு போட்டியாளராக அவர் ஒரு கற்பனை பாத்திரத்தை கதையில் உருவாக்கி நடமாடச் செய்திருக்கிறார். எட் கோப்பின் பாத்திரப் படைப்பும் செகுராவின் கற்பனையை சார்ந்ததாக இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கிறது.
எட் கோப் குழுவின் அறிமுகம் தாண்டிய பின்பாக கதை Raton எனும் சிறுகிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மதுவிடுதிக்கு நகர்கிறது. இங்கு அமெரிக்க மேற்கின் பல பகுதிகளிலும் அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட மனிதனான Red Barnum, தன்னை வேட்டையாட வரும் இரு வெகுமதி வேட்டையர்களின் கதைகளை முடிப்பதுடன் தன் கதையை ஆரம்பித்து வைக்கிறான். மேற்கூறிய அறிமுகங்கள் கதையின் பிரதான இழையுடன் இப்பாத்திரங்கள் நெய்யக்கூடிய சித்திரம் என்னவாகவிருக்கும் எனும் ஆர்வத்தை கதையை படிப்பவர்கள் மனதில் எளிதாக விதைத்து விடுகிறது. அந்த ஆர்வத்தின் துணையுடன் எஞ்சியிருக்கும் பக்கங்களை நகர்த்துவது சுகமான ஒன்று அல்லவா.
கதையில் வரும் எட் கோப், செவ்விந்தியர்களை ஆதிவாசிகளாக அல்லது கூர்ப்பில் பின்தங்கிய இனமாக அடையாளம் காணும் மனப்பான்மை கொண்ட ஒரு ஆய்வாளராகவே சித்தரிக்கப்படுகிறார். தன்கீழ் பணிபுரியும் கறுப்பனான Iron Cody, இரு பூர்வகுடிகளிற்கிடையிலான அங்கீகார ஏற்பை அவர்களிற்குரிய மரபு முறையில் செவ்விந்தியக் குழு ஒன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது அந்த மரபை எட் கோப்பால் காட்டுமிராண்டித்தனம் எனும் பண்பாகவே வரையறை செய்ய முடிகிறது. அறிவியலின் முன்னகர்விற்காக ஒரு இனம் போற்றும் பாரம்பரியங்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் குறித்து எந்த அக்கறையுமற்ற நிலையில் தன் ஆய்வுகளையும், தேடல்களையும் அவர் மும்முரமாக நிகழ்த்துகிறார். முற்சரித்திர விலங்குகளின் எச்சங்களை தேடி அவர் அமெரிக்க பூர்வகுடிகளின் நிலங்களினூடாக பயணிக்கிறார், அந்த நிலம் குறித்தும், முற்சரித்திர விலங்குகளினது எச்சம் குறித்தும் பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என்ன என்பது குறித்த கரிசனங்கள் அற்ற ஒரு அறிவியலாளராகவே அவர் காணப்படுகிறார்.
cf1செவ்விந்திய இளைஞனான ஃபோர் பியர்ஸின் தாய் வெள்ளை இனத்தவன் ஒருவனுடன் வாழ்பவள். தனது மகன் வெள்ளை இனத்தவர்கள்போல கல்வியறிவு பெற்று தன் கரும்பாத செவ்விந்தியக் குடிகளின் நலனிற்காக சேவை செய்ய வேண்டும் என்பது அவளது கனவு. ஆனால் வெள்ளையினத்தவர்களின் குடியிருப்புக்களிலும், கல்விக்கூடங்களிலும் ஃபோர் பியர்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் அவனைப் பித்துக் கொள்ள வைக்கின்றன. எட் கோப் அமெரிக்க பூர்வகுடிகள் மீது கொண்டிருந்த மதிப்பீட்டிற்கும், ஃபோர் பியர்ஸ் வாழ்ந்திருந்த வெள்ளையின சமூகத்தின் நடவடிக்கைகளிற்கும் இடையே அதிக வேறுபாடுகளை ஒருவர் நிறுவிட முடியாது. நன்கு கல்வியறிவு பெற்ற ஒரு வெள்ளையனைப்போல தான் உருவாக வேண்டும் எனும் அவன் தாயின் அடையாளத்திணிப்பை ஃபோர் பியர்ஸால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இந்த இயலாமையும் தான் ஒரு பூர்வகுடி இந்தியன் எனும் உணர்வும் அவனை வெள்ளை இனத்தவர்கள் மீதான எதிர்மறை எண்ணங்கள் கொண்ட ஒரு இளைஞனாக மாற்றியடிக்கிறது. வன்முறைகளால் மட்டுமே செவ்விந்திய இனம் தன் உரிமைகளையும், இழந்தவற்றையும் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் எனும் சித்தாந்தம் அவன் மனதில் ஆழ்நில வேர்களாக படர்ந்து உறுதி பெறுகிறது. அவன் வாழ்க்கை, அவன் தாய் அவனிற்காக உருவாக்க நினைத்த வாழ்வின் எதிர்முகம் கொள்கிறது. தந்திரமும், குரூரமும் நிறைந்த ஒரு செவ்விந்திய இளைஞனாக அவன் வடிவெடுக்கிறான்.

வஃபலோ கிராமத்தில் ஃபோர் பியர்ஸை தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கு டெக்ஸ் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சடார் என துப்பாக்கியை உருவி படார் என வெடிக்க வைத்து மடேர் என அவனை வீழ்த்த டெக்ஸால் இயலவில்லை என்பதாகவே கதையின் முன்பாதி நகர்கிறது. பள்ளத்தாக்குகள், மலைகள், கணவாய்கள் என டெக்ஸையும், கார்சனையும் அலைய வைக்கிறான் ஃபோர் பியர்ஸ். இருப்பினும் டெக்ஸ் அவனை மடக்குகிறார். ஆனால் அவன் கூண்டில் முடங்கி அடைபட்டுக் கிடக்கும் ஒரு இலகுவான பறவையல்ல. கதாசிரியர் செகுரா கதையின் பிரதான எதிர்நாயகனகாக ஃபோர் பியர்ஸை படிப்படியாக உருவாக்கும் விதம் சிறப்பானது. கதையின் முதற்பாதியில் ஃபோர் பியர்ஸ் மீது வாசகர்களை எதிரான எண்ணங்கள் கொள்ள வைக்கும் கதைப்போக்கை கையாளும் செகுரா, முக்கியமான ஒரு தருணத்தில் தரும் இருபக்கங்கள் மூலம் அந்த எதிர்மறை எண்ணங்களை எல்லாம் வாசகர்களை நீக்கி கொள்ள செய்துவிடுகிறார். பெருவெளி எருமைகளை அவற்றின் தோலிற்காக கொன்றுபோடும் மனிதர்களை ஃபோர் பியர்ஸ் தன் வன்குரூரத்தால் பலிகொள்ளும்போது அவன் பேசிடும் வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவன் செயலின் குரூரத்திற்கு சார்பான வாதங்களை பெருவெளிப்புற்களின் நுண்வேர்நாக்குகள் குருதிச்சுவையுடன் அருந்தத் தருகிறது. இரு உயிரிகளின் தோல்கள் உரிக்கப்படுகின்றன. இந்த சொற்கள் சாதராணமானவையாக தோன்றும். இரு உயிரிகளில் ஒன்று எருமை மற்றயது மனிதன் என்பது தெரியும்போதுதான் அச்செயலில் இருக்ககூடிய பாதகத்தன்மையை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும் அல்லவா! ஆனால் ஃபோர் பியர்ஸிற்கு எருமை, அதன் தோலை உரிப்பவர்களை விட ஆதாரமானது. தோலை உரிப்பவர்களிற்கோ எல்லாவற்றையும் விட தோலை உரிப்பது முக்கியமானதாக இருந்தது. இரு இனங்களின் அழிவுக்கு தோலும் ஒரு காரணமாக அமைந்தது என்பது ஆச்சர்யம்தான். தொடரும் கதையில் வெள்ளை இனத்திற்கு எதிரான தனது வெறியை அடக்கமாட்டாது, அர்த்தமிழந்த பெருங்கோபத்துடன் மனிதர்களை கொன்றுபோடும் ஒரு தந்திரனாக அவன் சித்தரிக்கப்பட்டாலும் வழமையான கதைகளில் செவ்விந்திய எதிர்நாயகர்கள் சித்தரிக்கப்படும் இழிவான பாணியிலிருந்து ஃபோர் பியர்ஸிற்கு விலக்கு அளித்த வகையில் செகுவராவின் கதைகூறல் சிறப்பான ஒன்றாக அமைகிறது எனலாம்.

ஃபோர் பியர்ஸை, வஃபலோவிலிருந்து மொண்டானாவில் அமைந்திருக்கும் கரும்பாத செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்புவரை டெக்ஸ் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பாதையில் நிகழ்ந்த இரு கொலைகள் குறித்த விசாரணைகளை நிகழ்த்தி அக்கொலைகளை ஆற்றிய குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பையும் டெக்ஸ் இறகுத்தொப்பிபோல அணிந்து பயணிக்கிறார். தனது கால்களில் ஒன்று மரத்தாலான ஒரு மனிதனை ஃபோர் பியர்ஸின் தடத்தோடு அவர் தேடிச் செல்கிறார். வியப்பளிக்கும் விதமாக ஃபோர் பியர்ஸ், எட் கோப், மரத்தாலான கால் ஒன்றைக் கொண்ட சார்ல்ஸ் சட்டர் ஆகியோர் பயணிக்கும் தடங்கள் ஒன்றாகவே அமைகிறது. இந்த தடங்கள் யாவும் Crow Agency எனப்படும் காவல் கோட்டையை கடந்தே செல்கின்றன.

வஃபலோவில் ஃபோர் பியர்ஸ் நிகழ்த்தும் வன்செயல்களால் அவன் தலைக்கு 3000 டாலர்கள் வெகுமதி விதிக்கப்படுகிறது. இந்த தொகை ரெட் பார்னமை ஈர்க்கிறது. ரட்டோனின் மதுவிடுதியில் நிகழ்ந்த துப்பாக்கி மோதலில் ரெட் பார்னமின் இதயத்திற்கு அருகே புதைந்த தோட்டா காலத்துடன் காலனை அவன் உயிரிற்கு அருகே சிறிதுசிறிதாக அடிகொள்ள வைக்கிறது. வறள் நிலத்தின் காற்று ஊட்டும் புழுதிச்சோற்றையுண்ணும் வாழ்விலிருந்து தன் உயிர்போகும் முன்பாக ஒரு சிறு கணமேனும் விலகிட விரும்புகிறான் ரெட் பார்னம். எனவே அவனும் ஃபோர் பியர்ஸை வெகுமதிக்காகத் தேடிச் செல்கிறான். அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட ஒருவன் வெகுமதிக்காக பிறிதொருவன் தலையைத் தேடிச் செல்லும் வாழ்வின் விசித்திரமான ஆட்டம் அது. ரெட் பார்னம் எதார்த்தம் தெரிந்தவன். டெக்ஸை துப்பாக்கியால் எதிர்கொள்வதை அவன் தவிர்த்தே செல்கிறான். தன் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மரணத்தின் நெருக்கத்துடன் அவனிடம் அதிகரித்து விடுகிறது. ரெட் பார்னம் தன்னைப் பின் தொடர்வதை தடுக்க டெக்ஸ் முயற்சிகள் எடுத்தாலும் டெக்ஸை தொடர்வதை பார்னம் நிறுத்துவது இல்லை. தன் உயிர்போகும் முன்பாக ஒரு மனிதனாவது தன்னைப்பற்றிய நல்லபிப்பிராயம் கொண்டவராகிட வேண்டும் என ரெட் பார்னம் தன் இயல்புகளை மாற்றிக் கொள்வது போல நடிக்கவாவது முயல்கிறான். ஆனால் டெக்ஸ் இறுதிவரை பார்னம் ஒரு கேடி என அவர் கொண்ட எண்ணத்திலிருந்து விடுபடுவது இல்லை. ரெட் பார்னமும் டெக்ஸிடம் போலியாக நடந்து கொள்வது இல்லை. ஒரு மனிதனை அயோக்கியனாக பார்த்தாலும் மனிதநேயம் என்பதிலிருந்து அவனிற்கு தான் விலக்களிப்பது இல்லை என்பதாக டெக்ஸ் கதையின் இறுதிக் காட்சி ஒன்றில் நடந்து கொள்வார். ரெட் பார்னம் இக்கதையின் மிக முக்கியமான துணைப்பாத்திரம் என்பதை கதையை ஒருவர் படிக்கையில் உணரமுடியும்.

cf2க்ரோ ஏஜென்சியில் இருந்து எட் கோப் குழு, ரெட் பார்னம் அணி, டெக்ஸ், கார்சன் ஆகியோர் ஒரே குழுவாக கரும்பாத செவ்விந்தியர்கள் குடியிருப்பை நோக்கி பயணிப்பார்கள். அக்குழுவில் பயணிப்பவர்களின் நோக்கங்கள் ஒன்றல்ல. அந்நோக்கங்கள் யாவும் நிறைவேறி விடுவதுமில்லை, பயணித்தவர்கள் யாவரும் மீள வருவதுமில்லை. பல வாழ்க்கைகளின் தடங்களை கதாசிரியர் தன் கதை சொல்லலால் எதார்த்தமான நெகிழவைக்கும் முடிவுகள் நோக்கி நடாத்தி செல்கிறார். இதனாலேயே டெக்ஸ் கதைகளின் கதாசிரியர்களில் தன்னை தனித்த ஒருவராக அண்டோனியா செகுராவால் காட்டிக் கொள்ள முடிகிறது. இதுவரை நான் படித்த செகுராவின் கதைகளில் விறுவிறுப்பு குறைந்த கதை இது. டெக்ஸின் கதைகளில் சுமாரிற்கும் சிறிது மேல் என வகைப்படுத்தக்கூடிய கதை இது. ஆனால் கதையின் எதார்த்தமான போக்கு கதையைக் காப்பாற்றி விடுகிறது. அதற்காக டெக்ஸ்ஸின் வழமையான மசாலா இல்லை என அர்த்தம் செய்து கொள்ளத் தேவையே இல்லை. அடி தடி ரசிகர்களிற்கு விருந்து கதையில் விதம் விதமாக உண்டு.

கதையின் பிறிதொரு எதிர் நாயகனான சார்லஸ் சட்டர் ஒரு சாடிஸ்ட்டாகவே கதையில் காட்டப்படுகிறார். ஃபோர் பியர்ஸையும், சார்ல்ஸ் சட்டரையும் ஒரு தராசில் நிறுத்தினால் அவர்கள் தம்முள் கொண்டிருக்கும் குரூரத்தின் எடை சமமாக இருக்கும். சார்லஸ் சட்டரிற்கு கதையில் சவால்விடும் பாத்திரமாக அமைவது டெக்ஸ் அல்ல மாறாக ஒரு சிறுகுப்பி மதுவிற்காக இல்லாத பொல்லாத பொய்களையும் வித்தைகளையும் இயற்றக்கூடிய சாலமோன் எனும் முதிய தங்க வேட்டையனே. எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும்கூட தன் மனவுறுதியால் சார்ல்ஸ் சட்டரை எள்ளி நகையாடும் சாலமோனும், மதுவகைகளை ஆவலுடன் சுவைக்கும் சாலமோனின் கழுதை மதுசெலமும் செகுரா வழங்கும் நிறைவுப்பகுதி ஆச்சர்யங்கள். சாலமோன், கார்சன், மதுசெலம் ஆகியோர்க்கு இடையில் கதையில் உருப்பெறும் காட்சிகள் மனதை இலகுவாக்கிவிடும் சுவை கொண்டவை. டெக்ஸைவிட சாலமோனின் செல்லக் கழுதையாகிய மதுசெலம் இங்கிதம் தெரிந்த ஒன்று என கார்சன் புலம்பும் தருணம் அலாதியானது.

இறுதியில் டெக்ஸ், தொல்லுயிரியலாளர் எட் கோப்பிற்கு நடைமுறை எதார்த்தங்களை புரிய வைக்கும் இடத்தில் செவ்விந்திய சார்பு குணம் கொண்டவராக காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு இனத்திற்கும் இருக்ககூடிய நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து டெக்ஸ் ஆற்றும் விரிவுரை அது எனலாம். கதையின் சித்திரக் கலைஞர் ஹோசே ஒர்டிஸ் குறித்து முன்னைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஒட்டிஸ் பார்க்க சலிக்காத சித்திரங்களின் தந்தை என்பேன். முற்சரித்திர விலங்குளின் படிம எச்சங்களை தேடிச் சென்ற முன்னோடிகளின் ஆய்வில் டெக்ஸும் கலந்து கொண்ட பெருமையை செகுரா இக்கதையின் வழி டெக்ஸிற்கு அளித்திருக்கிறார். கதையின் ஒரு தருணத்தில் டெக்ஸ் கூறும் வரிகளுடன் இப்பதிவை முடித்தல் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் “எதிர்வரும் காலங்களில் டைனோசார்களும் சரி செவ்விந்தியர்களும் சரி ஒரே விதமாக வரையறை செய்யப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்………………………. அழிந்துபோன இனம். ”