Saturday, November 17, 2012

ஹுஆல்பை தீர்க்கதரிசி

வதனமோ சந்த்ர பிம்பமோ – 6

ஷெலர் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைதியாக வாழ்ந்திருந்த Hualpai இந்தியர்கள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். காலனல் க்ளிஃப்டனால் இத்தகவல் கிடைக்கப்பெறும் டெக்ஸ் தன் குழுவினருடன் ஷெலர் கோட்டையை நோக்கி பயணிக்கிறார்…..

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான பூர்வகுடிகளின் எழுச்சிகள், போராட்டங்கள் அவர்களிற்கு வெற்றிகளையும் தந்தன ஆனால் அந்த வெற்றிகளின் வாழ்நாளானது அவர்கள் தம் வாழ்நாள் நெடுகிலும் சந்தித்த தோல்விகளிற்கு ஈடாகவேயில்லை. தம் உரித்து நிலத்தில் வாழும் விலங்குகளிற்கு இருந்த வாழ்க்கையின் சுதந்திரம்கூட அவர்களிற்கு மறுக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் இழந்து வாழ்ந்திருந்த அம்மக்களின் மனச்செவிகளில் நம்பிக்கை ஒளியை விருட்சமாக உயிர்க்க செய்யும் வார்த்தைகள் விதைகளாக விழுந்தால் அவ்வார்தைகளையும், அவ்வார்த்தைகளை கூறுபவர்களையும் அவர்கள் தம் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன. கையறு நிலையிலிருக்கும் மனிதர்கள் தாம் கரம்பற்றக்கூடிய ஒரு நம்பிக்கையை உதறிவிடுவார்களா என்ன.

தனக்கு வந்த தகவலையடுத்து ஷெலர் கோட்டையை நோக்கி விரையும் டெக்ஸ்கூட சாதாரண ஒரு ஆக்கிரமிப்பாளர் போலவே இங்கு சிந்திக்கிறார். தமக்கு நிகழக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து சிறிதும் அஞ்சாது ஹுஆல்பை இந்தியர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கான காரணம் என்ன எனும் கேள்வியை அவர் எழுப்புகிறார். இங்கு “நிகழக்கூடிய விளைவுகள்” என்பது ஒடுக்குமுறையின் பாசக்கார தோழனான வன்முறையிலான பதிலடி என்பது தெளிவான ஒன்று. எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் கிளர்ச்சிக்காரர்கள் குறித்து எழுப்பிடும் ஒரு கேள்வியாகக்கூட இது இருக்கலாம். டெக்ஸ் தான் எழுப்பிய கேள்விக்கான பதிலை ஷெலர் கோட்டையில் அறிந்து கொள்கிறார் ஆனால் அதற்கு முன்பாக ஹூஆல்பைகளின் வன்முறைக்கு சான்றான ஒரு நிகழ்வின் முடிவையும், அவர்களின் வன்முறையையும் அவர் நேராகவே காணவும் அனுபவிக்கவும் செய்கிறார். அந்தக் கணம் முதல் கொண்டே ஹூஆல்பை நாய்களிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் மனதிலும் அவர் குழுவினர் மனதிலும் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆன்மா கூத்தாட ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கூத்திற்கு உடந்தையாக டைகர் ஜாக், கூத்தை உலகின் அல்லது வாசகன் கண்களின் முன் நியாயப்படுத்த பயன்படும் பாத்திரமாக.

அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்திருந்தவர்கள். இயற்கை தமக்கு வழங்கிய ஆதார வளங்களையும் அவர்கள் மிகவும் மதிக்கவே செய்தார்கள். இயற்கையின் சொற்களிற்கு காது கொடுப்பது அவர்களிற்கு வழக்கமாக இருந்தது. செவ்விந்தியக்குடிகளில் மனிதர்க்குரிய உலகிற்கு அப்பால் உள்ள உலகுகளுடன் தரிசனங்கள் வழியாக தொடர்பை ஏற்படுத்தும் ஆற்றல் கிடைக்கப் பெற்றவர்கள் அக்குடிகளின் மருத்துவர்களாக இருந்தார்கள். வெகுஜன இலக்கியங்களில் இவர்கள் சூன்யக்காரர்கள் எனும் நாமகரணம் சூட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த மருத்துவர்கள் கனவுகள் வழியாகவும், தியானங்கள் வழியாகவும் உருவாகக்கூடிய ஒரு மோனநிலையில் அவர்கள் கொள்ளும் தரிசனங்களை நிஜவுலகிற்கான சம்பவங்களாக மொழிபெயர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் மோனங்களில் இழையெடுக்கும் காட்சிகளை மருத்துவர்கள் பேராத்மாக்கள் தமக்கு வழங்கிய கட்டளையாகவோ அல்லது செய்தியாகவோ உணர்ந்தார்கள். இந்தப் பேராத்மாக்கள் விலங்குகளின் உருக்களை பெற்றிருப்பதையும் அவர்கள் தரிசித்தார்கள். பேராத்மாக்கள் தமக்கு உணர்த்தியவற்றைக் கொண்டு தம் இனமக்களிற்கு ஆலோசனைகளையும், குணமாக்கல்களையும், வழிநடத்தல்களிற்கான உதவிகளையும் மருத்துவர்கள் நல்கினார்கள். வரவிருக்கும் காலத்தின் நிகழ்வுகள் குறித்து எதிர்கூறினார்கள். மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொண்ட பூர்வகுடிகளும் அவர்கள் எதிர்கூறல்களை நம்பினார்கள். அவர் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயற்படவும் செய்தார்கள். மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த ஹூஆல்பைகளின் காதுகளில் அவர்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை ஒரு எதிர்கூறி உரைத்தால், அவன் எதிர்கூறியவைகளில் ஒன்று அவர்கள் கண்களிற்கு முன்பாக நிஜமானால், தம் இனத்தை ஆக்கிரமிப்பவர்களிற்கு எதிராக அந்த எதிர்கூறியை தம் தலைமையாக கொண்டு அவர்கள் போராடா மாட்டார்களா என்ன!

ph1ஆனால் பூர்வகுடிகள் மத்தியில் தரிசன வாக்குகள் தந்த அனுபவத்திற்கும் மேலாக எதார்த்தம் வழங்கிய அனுபவம் கண்டவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறைகளின் கோரவுருக்களை தம் கண்முன் கண்டுணர்ந்து அகம் நனைந்து வந்தவர்கள் அவர்கள். தம் அனுபவங்கள் வாயிலாக தாம் கண்ட உண்மைகளை அவர்கள் ஒரு எதிர்கூறியின் தரிசனத்திற்கு எதிராக தம் மக்களிடம் எடுத்துக்கூறும்போது, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும், எம் நிலமும், வாழ்வும் முன்போல் வளம் கொள்ள வேண்டும் எனும் வெறியில் இருக்கும் மக்கள் மத்தியில் அவர்கள் வார்த்தைகளே அவர்களிற்கு எதிரிகளாகி விடுகின்றன, அம்மக்கள் பார்வையில் அவர்களை துரோகிகளாக்கி விடுகின்றன. அவ்வகையான ஒரு முதியவரைத்தான் ஷெலர் கோட்டையில் சந்திக்கிறார் டெக்ஸ்.

கதையில் டெக்ஸ் அவரை முதிய சூன்யக்காரன் எனச் செல்லமாக விழிக்கிறார். பூர்வகுடி மருத்துவர்களின் செயல்முறைகள் சடங்குகளால் கட்டப்பட்டது. மந்திர உச்சாடனங்கள், பாடல்கள், நடனம், பலியிடல், மோனம், பேராத்மாக்களுடன் தொடர்பு எனக் கலவையாக அவை அமைந்திருந்தன. இயற்கை தந்த மருந்துகளால் மட்டுமன்றி பேராத்மாக்களின் உதவியாலும் அவர்கள் தம் குடிகளின் பிணிகளை நீக்க முயன்றார்கள். இயற்கையை தெய்வமாக ஏற்க மறுத்த கிறித்தவ மரபில் ஊறிவந்த ஆக்கிரமிப்பாளர்கள் மனதில் இந்த மருத்துவர்களின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்று விடாது அவர்களிற்கு சூன்யக்காரர்கள் எனும் நாமத்தையும் எளிதாக பெற்றுத் தந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும். தமக்கு எதிராக துர் ஆத்மாக்களை ஏவிவிடக் கூடியவர்களாக கருதப்பட்ட மருத்துவர்களிற்கு அவர்களால் வேறு பெயரை வழங்க முடியாதது அவர்கள் தப்பாக இருக்க முடியாதுதான்.

ஷெலர் கோட்டையில் டெக்ஸுடன் தனியே உரையாடும் முதிய சூன்யக்காரன், ஹூஆல்பைகளின் கலகத்திற்கான காரணம் என்ன என்பதையும் இன்னம் பத்து நாட்களிற்குள் நிகழப்போகும் ஒரு முக்கியமான சந்திப்பு குறித்தும் அவரிடம் கூறுகிறான். ஹூஆல்பைகளின் எழுச்சிக்கும், ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான அவர்களின் படைதிரட்டலிற்கும் காரணம் யார் என்பதை TEX Special 21 கதையான Le Prophète Hualpai ன் முதல் பக்கமே வாசகர்களிற்கு தரிசனமாக்கிவிடும். Hualapai சிகரங்கள் புடைசூழ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த பூர்வகுடி இளைஞன் பேராத்மா ஒன்றுடன் கொள்ளும் மோனத்தரிசனமே கதையின் ஆரம்ப பக்கங்களை அலங்கரிப்பவையாக இருக்கின்றன. அந்த தரிசனத்தில்  பேராத்மா அவனிற்கு வழங்கிய கட்டளையை நிறைவேற்றும் ஒருவனாகவே Manitary ஐ என்னால் இக்கதையில் காணமுடிகிறது.

மானிட்டாரி ஒரு அனாதை. அவன் என்றுமே வீரனாகவோ, பராக்கிரமியாகவோ இருந்தவனல்ல. அவன் ஒரு தனியன். தியானங்களில் ஆழ்ந்து துறவிபோல வாழ்ந்தவன். கதையின் ஒரு சந்தர்பத்தில் Wovaka என்பவருடன் மானிட்டாரியை டெக்ஸ் ஒப்பிட்டு பேசுவார். டெக்ஸ் இங்கு பேசுவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனம் என்பது கண்டதையும் கனாக்கண்டு உளறி வைப்பது என்பதாக இருக்கும். இது டெக்ஸின் பாத்திரப் படைப்பில் ஒரு முரணாக எனக்கு தோன்றியது. டெக்ஸின் ஏதாவது ஒரு கதையிலாவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனத்தை கேட்டு அவர் சிந்தித்ததே இல்லையா என்ன. இதே கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி எழுதிய இருளில் வரும் நிழலியே இவ்வகையான கனவு தரிசனம் ஒன்றிற்கு டெக்ஸ் காது கொடுப்பதை நான் படித்திருக்கிறேன். மானிட்டாரி பாத்திரத்தை உருவாக்க கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி, வோவாகாவினை ஆதர்சமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். வோவாகா கிரகணம் ஒன்றின் போது கூறிய எதிர்கூறல்கள், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை இக்கதையில் மானிட்டாரிக்கு அணிவித்து இருக்கிறார் கதாசிரியர். ஆனால் வோவாகா அமைதியைப் போதித்தவர், பூர்வகுடிகளின் பழம்பெருமையும், வளமும், நிலமும் அவர்களை மீண்டும் வந்து சேரும்,ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மரணித்த பூர்வகுடி வீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என அவர் எதிர்கூறினார். இவற்றை விரைவாக அடைவதற்கான வழியாக அவர் Ghost Dance ஐ உருவாக்கினார். கதையில் மானிட்டாரி அமைதியை போதிப்பதிலிருந்து வோவாகாவிடமிருந்து விலகிவிடுகிறான். அவன்கூறிய எதிர்கூறல் ஒன்று இயற்கை நிகழ்வாக விடிந்தபின் அவன்பின்பாக பூர்வகுடி போராளிகளும், மக்களும் அணிவகுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான ஒரு பெரும்படையை தன் வன்முறை வழிகளால் திரட்ட ஆரம்பிக்கிறான் மானிட்டாரி.

ஹூஆல்பை கலகத் தலைவனான மானிட்டாரி குறித்தும் அவன் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் டெக்ஸ், பத்து நாட்களிற்குள் மானிட்டாரியை ஆட்டத்திலிருந்து தூக்கி விடுவது எனும் முடிவிற்கு வருகிறார். தலைமையிழந்த போராட்டம் தள்ளாடி தளர்ந்து தடங்கலுற்று தடமிழக்கும் என்பது டெக்ஸின் கணிப்பு. ஆகவே டைகர் ஜாக்கும், டெக்ஸும் ஹூஆலாபை மலைக்கிராமம் ஒன்றில் வாழ்ந்திருக்கும் மானிட்டாரியை தேடி அப்பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள். கிட்டும், கார்சனும் ஹூஆல்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கிய சந்திப்பை தடுப்பதற்காக  கிங்மேன் எனும் இடத்தை நோக்கி விரைகிறார்கள். அவர்கள் கதி என்னவாகிறது என்பதை தொடரும் சித்திரப்பக்கங்கள் வாசகர்களிடம் எடுத்தியம்புகின்றன.

அமெரிக்க பூர்வகுடிகள் மீது டெக்ஸ் வன்சொற்களை அதிகம் பயன்படுத்தும் ஒரு கதையை நான் படிப்பது இது முதல் தடவை. ஹூஆல்பைகள் குறித்து அவர் கொண்டுள்ள எண்ணம் அவர்கள் நாய்கள் என்பதாகவே இருக்கிறது. அப்படியாகத்தான் என்னால் உணர முடிந்தது. செவ்விந்தியர்களை எதிர்நாயகர்களாக கொண்ட ஒரு சாகசக் கதையில் அவர்களை நாய்களாக அழைப்பதிலும், நடத்துவதிலும் என்ன தப்பை நான் கண்டுவிட்டேன் என்பதுதான் நானே என்னிடம் கேட்கும் கேள்வி. இருப்பினும் டெக்ஸ் மீது இக்கதை நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் ஒன்றானதாக இல்லை என்பதை நான் தயங்காமல் கூறுவேன். டெக்ஸ் நவஹோக்களின் தலைவராகவும், நவஹோக்கள் ஹூஆல்பைகளின் ஜென்ம விரோதிகளாக இருந்தாலும்கூட ஹூஆல்பைகள் குறித்த டெக்ஸின் இந்த ஆவேசமான மதிப்பீடு எனக்கு சங்கடத்தையே தந்தது.

ph2டெக்ஸின் கதைகளில் தோன்றும் எதிர் நாயகர்கள் வீர்யமற்றவர்களாக இருப்பின் அக்கதையானது எம் மனதில் பெரிதாக உருவாகும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து விடாமலேயே நகர்ந்து முடியும் தருணங்கள் உண்டு. இக்கதையின் எதிர்நாயகனான மானிட்டாரி பலவீனமான ஒருவனாகவே இறுதிவரை முன்னிறுத்தப்படுகிறான். டெக்ஸ் தன் வார்த்தைகளால் அடித்து வீழ்த்திய எதிர்நாயகனாகத்தான் மானிட்டாரியை என்னால் காண முடிகிறது. கதையில் அவன் பலம் என்பது அவன் பின்னால் திரண்ட பூர்வகுடிப் போராளிகள்தான். அப்போராளிகளிற்கும் டெக்ஸ் குழுவினர்க்குமிடையில் நிகழும் சந்திப்புக்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பை தந்தாலும் கதையின் போக்கில் அவையே சலிப்பை தருபவையாக இருக்கின்றன. இவ்வகையான ஊடுருவல் வகை கதைகளிற்குரிய எதிர்பாரா திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் இக்கதையில் அதிகம் இல்லை என்பதும் சலிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக அமைகிறது. வேதாளர் அல்லது டார்ஜான் போடும் சண்டைபோல வரும் காட்சியும் டெக்ஸின் பெருமையை உயர்த்துவதாக இங்கு அமையவில்லை. ஒட்டு மொத்த ஹூஆல்பைகளையும் இரண்டாம்தர அறிவிற்கு தள்ளிவிடாது சமமான வல்லவர்களாக கதாசிரியர் படைத்திருப்பாரேயெனில் கதை பற்றி எரிந்து வாசகனை உவகைத்தகனம் செய்திருக்ககூடும். ஆனால் டெக்ஸின் சுமாரான கதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்தக்கூடிய வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. கார்சனின் அலம்பல்கள் ஒரு ஆறுதல் இருப்பினும் ஹூஆல்பைகளின் ரத்தம் நிலத்தில் தெறிக்க வேண்டும் எனக்கூறுவதில் கார்சன் டெக்ஸிற்கு போட்டியானவராகவே தோன்றுகிறார்.

ஆனால் சுமாரான கதைகளையும் விழிகள் அகன்று விரிய, கட்டங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து உள்ளெடுக்கும் வண்ணம் மாற்றியடிக்கும் மந்திரம் அறிந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். இக்கதையின் சித்திரக் கலைஞரான Corrado Mastantuono அரிதான அவ்வகைக் கலைஞர்களில் ஒருவர் என்பது இக்கதைக்கு கிடைத்த அதிர்ஷ்டநிகழ்வு. அவரை இக்கதையில் பணியாற்ற அமர்த்திய செர்ஜ் பொனெலிக்கு ஒரு பெருநன்றியை பேராத்மாக்களின் உலகை நோக்கி இத்தருணம் நான் அனுப்பி வைக்கிறேன். ஹூஆலாபை சிகரங்களுடன் ஆரம்பிக்கும் முதல் பக்கம் முதல் கொலராடா ஆற்றுடன் நிறைவுறும் இறுதிப்பக்கம் வரையில் வாசகன் சிலாகித்துக் கொண்டிருக்கும் வகையிலான சித்திரங்களை செதுக்கி பொருத்தி இருக்கிறார் இத்தாலிய சித்திரக் கலைஞர் கொராடோ மஸ்டாண்ட்யுவோனோ. அவரின் சித்திரங்கள் தீர்க்கமான, தெளிவான கோடுகளால் உருவானவை. மிடுக்கான உணர்வை வாசகனிடம் அவை இலகுவாக உணரச் செய்பவை. ஒரு காட்சியை வித்தியாசமான கோணங்களில் வரைவதில் மஸ்டாண்ட்யுவோனோ பக்கா கில்லாடி, அவர் சித்திரங்களின் சிறப்பம்சமும் அதுதான். கதையில் ஷெலர் கோட்டையில் முதிய சூன்யக்காரனுடன் டெக்ஸ் உரையாடும் தருணத்தில் அவர் வரைந்திருக்கும் சித்திரங்கள் இதற்கு அருமையான ஒரு உதாரணமாக அமைகின்றன.ஹூஆலாபை மலைப்பிரதேச நிலவியலை அவர் வரைந்து தந்திருக்குமழகு சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதேபோல அவர் நிழல்களை சித்திரங்களில் உலவவிடுவதன் வழி கதைநிகழும் சூழலின் ஒளிப்பிரசன்னத்தையும் அது தரக்கூடிய உணர்வுகளையும் வாசகர்களிடம் சிறப்பாக எடுத்து வருவதையும், கறுப்பு, வெள்ளை சித்திரங்களின் அழகை அந்த உத்தி வழி அவர் பூரணமாக்க விழைவதையும் ஒருவர் எளிதாக அவதானிக்க முடியும். கதையில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளிற்கு மஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்களும், கோணங்களும் வேகத்தையும், விறுவிறுப்பையும், உயிர்த்துடிப்பையும் வழங்கி அவற்றை வெகுவாக ரசிக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இக்கதை சுமாரான ஒன்றாக இருந்தாலும் அது சுமாரான ஒன்று எனும் முடிவை ஒருவர் எடுப்பதற்கு தயங்கிட காரணமாக அமைவது மாஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்கள் மட்டுமே. அவரின் சித்திரங்களை பார்த்து ரசிப்பதற்காகவேனும் படிக்க வேண்டிய டெக்ஸ் கதை இது என்பது நான் காணும் மோனத்தரிசனமாக இருக்கட்டும்.

Sunday, November 11, 2012

நாயகர் இல்லா நாடகம்

1977 ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 34 பயணிகளுடன் பயணித்த கோர் ஏர் விமானம் அமேசான் அடர் வனப்பகுதியில் விழுந்து சிதைகிறது. இவ்விபத்தில் உயிர் தப்பிய மனிதர்கள் அவ்வனத்திலிருந்து விரைவாக வெளியேறி விட வேண்டும் எனும் எண்ணத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறார்கள்.....

விபத்து ஒன்றில் அகப்பட்டு உயிர்பிழைத்த மனிதர்கள், எந்த உதவிகளும் தம்மைக் காப்பாற்ற வராத நிலையில் தம் ரட்சணியத்தை தம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளும் கதைகள் உங்களிற்கு புதிதான ஒன்றாக இருக்காது. பல சிரமங்கள் மத்தியில் போராடி தம் வாழ்விடங்களிற்கு செல்லத் துடிக்கும் குழுவினர் கண்டு கொள்ளும் அனுபவங்கள் அவர்கள் கதையை சுவாரஸ்யமான ஒன்றாக்க மாற்றியமைக்க பெரிதும் உதவிடும். இன்றைய நாட்களில் இவ்வகையான கதைக்களம் புதிதான ஒன்றாக இல்லை என்றபோதிலும் இக்கதை வெளியான 1977 களில் இது சிறப்பான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. விக்கியில் இது குறித்து தேடியபோது அக்காலகட்டத்தில் இன்னம் பிரபலமாகியிராத கலைஞனாக இருந்த வான் ஹாமிற்கு இக்கதையை எழுத ஆதர்சமாக 1965களில் வெளியாகிய The Flight of the Phoenix எனும் திரைப்படம் அமைந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. ஃபீனிக்ஸின் பறப்பு, சகாரா பாலையில் அவசரநிலை தரையிறங்குதலை நிகழ்த்திய விமானமொன்றின் பயணிகளின் நிலை குறித்து பேசும் படமாகும்.

Histoire sans Heros எனும் வான் ஹாமின் கதையானது மனிதர்கள் அதிகம் காலடி எடுத்து வைத்திராத ஒரு வனத்தில் விழுந்த விமானத்திலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் கதையை விபரிக்க விழைகிறது. இவ்வகையான கதைகளில் மனிதர்கள் ஒரு குழுவாக இணைந்து செயற்படுகையில் அதற்கென ஒரு தலைமை இருப்பதாக சித்தரிக்கப்படுவதுண்டு. இக்கதையில் வான் ஹாம் அதனை தவிர்க்க முயன்றிருக்கிறார் இருப்பினும் அவரைத் தாண்டியும் கதையானது தருணத்திற்கு தருணம் நாயக பிம்பங்களை முன்வைக்கவே செய்கிறது எனலாம்.

வெளியுலகுடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களிற்கு மட்டுமே போதுமான உணவு கையிருப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அம்மனிதர்கள் காட்டைவிட்டு நாகரீக சமூகத்தை தேடி விரைந்தோட முயல்வதை தனக்குரிய மேற்பரப்பு ஆழத்துடன் வான் ஹாம் எழுதுகிறார். சமூகத்தில் பலவிதமான ஸ்தானங்களை வகிக்கும் மனிதர்கள் அவற்றை தற்காலிகமாக இழந்தநிலையில் தம் உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் வகிக்கும் ஸ்தானங்கள் அவர்களின் மறுபக்கங்களை இயல்பாக வெளிக்கொணர்வதை அவர் விறுவிறுப்புடன் சொல்ல முயல்கிறார். இவ்வகையான மனிதர்கள் மத்தியில் எழக்கூடிய கருத்து மோதல்கள், அகங்கார ஆளுமையால் உருவாகும் பிரிவுகள், அச்சம், கோழைத்தனம், வீரம், தியாகம், காதல் எனக் கதையானது மனிதர்களின் சூழ்நிலை உணர்வுகளோடு நகர்கிறது.

ஒரு பிரிவினரின் முடிவுகளோடு ஒன்றுபடா மனிதன் ஒருவனின் போராட்டத்தின் தோல்வியும், அப்பிரிவினரின் முயற்சியின் வெற்றியும் கோழைத்தனத்திலும், தியாகத்திலும், உண்மை அறிதலிலும், நன்றிக் கடனுறுதலிலும் கலந்து பரிமாறப்படும் கதையின் இறுதிக்கட்ட திருப்பம் வான் ஹாமின் ரசிகர்களை நெகிழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதையில் மனிதர்களின் மாறுபட்ட முகங்களை காட்டும் வகையில் அவர் பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார், கதையில் மிகவும் கொடியவன் கையிலேயே துப்பாக்கியும் இருக்கும் வண்ணம் செய்தும் இருக்கிறார். பயணங்களினூடு பயணிக்ககூடிய மர்மங்களையும், புதிய பாதைகளையும் அவர் கதை அடர்காட்டில் கோலமிடுகிறது.

இயலுமானவரை எதார்த்தத்துடன் கதை சொல்லப்படவேண்டும் என ஹாம் விரும்பினாலும் நாடகத்தனம் பல சந்தர்ப்பங்களில் எட்டிப் பார்க்கவே செய்கிறது, இக்கதை இற்றைக்கு 35 வருடங்களிற்கு முன்பாக உருவான ஒன்று எனும் தகவலே இக்கதையின் நாடகத்தனமான யதார்த்தத்தை விழுங்க உதவிடுகிறது. இக்கதைக்கு சித்திரங்களை உருவாக்கி தந்திருப்பவர் டேனி. டேனியின் சித்திரங்கள் நண்பர்களிற்கு இரு பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் பரிச்சயமாகி இருக்கலாம். ஹெர்மானின் பாணியிலிருந்து வேறுபட்ட அவரின் சித்திரங்களை நினைவில் கொண்டுவர வாசகர்களிற்கு சிரமம் இருக்காது. இக்கதையில் அவர் தன் வழமையான பாணியை விடுத்து புதிய ஒரு பாணியைக் கையாண்டு இருப்பதாக இணையத்தில் படித்தேன். கதை மாந்தர்களையும், அமேசான் வனத்தையும் மிகவும் எதார்த்தமாக கொணர அவர் முயன்றதாகவும் சொல்கிறது ஒரு கட்டுரை. ஆனால் டேனியின் பாணிக்கு நான் ரசிகன் அல்ல என்பதால் இக்கதையில் அவர் சித்திரங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை எனலாம். இக்கதையானது இன்று சுமாரான ஒன்றாக தோற்றம் தந்தாலும் அன்று இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் சித்திரக் கதைகளில் One Shot எனும் வகையை அறிமுகமாக்கிய ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகவும், அக்கால ரசிகர்களின் மதிப்பில் போற்றப்பட்ட கதையாகும் இது இடம்பெற்றிருக்கிறது என்பதும் கூடுதலான தகவல்கள் ஆகும். ...... ஆகவே

ஆகவே ஏன் இக்கதைக்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்கக்கூடாது. அதே கலைஞர் கூட்டணியில் இருபது வருடங்களிற்கு பின்பாக 1997ல் இக்கதையின் தொடர்ச்சியான Vingt Ans après வெளியாகியது. அதன் வழி இது ஒரு One Shot எனும் வகையிலிருந்தும் வெளியேறியது. அமோசான் காட்டிலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் இன்றைய நிலையைக் கதை காட்டி சென்றாலும் கதையின் மைய இழை அதுவல்ல. தம் அடையாளங்களை மாற்றிக் கொண்டு உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நாஸி போர்க்குற்றவாளிகளிற்கு எதிரான ரகசிய நடவடிக்கையே  இப்பாகத்தின் பிரதான இழை எனலாம்.

முதல் பாகம் ஆரம்பித்த அடர் காட்டினுள் கதை மாந்தர்கள் சிலரை மீண்டும் இட்டுச் செல்லும் முன்பாக கதையானாது, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்சு, தாய்லாந்து, சுரினாம் எனப் பயணிக்கிறது. இருபது வருடங்களின் பின்பாக மாற்றம் பெற்றிருப்பது கதைமாந்தர்கள் மட்டுமல்ல; ஹாமின் கதை சொல்லும் விதமும், டேனியின் சித்திரப் பாணியும் எவ்வகையான மாற்றங்களிற்குள்ளாகி இருக்கின்றன என்பதை இக்கதைகளை ஒருசேரப்படிக்கும் ஒரு வாசகன் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஹாம் முதலாம் பாகத்தில் வழங்க எத்தனித்த நாடகத்தனமான எதார்த்தத்தை முற்றிலுமாக உதறிவிட்டு தனக்கு கைவந்த ரகசிய நடவடிக்கை நாடகத்தை விறுவிறுப்பாக சொல்லுகிறார். பரபரவென நகர்கிறது கதை. இது ஏன் இப்படி என்று கேள்வி கேட்காமல் படித்து சென்றுவிட வேண்டும். நாஸிக் குழுக்களின் ரகசியமான வளர்ச்சி, அவற்றை தேடி வேட்டையாடும் மொசாட், தாய்லாந்தின் போதைப் பொருள் சந்தை, தாய்லாந்து வனத்தின் ஆழமான காடுகளில் வாழும் குடிகள், சுரினாம் தொழுநோயாளி பராமரிப்பகம் என வான் ஹாமின் கதை சிறப்பான ஸ்தலங்களில் தொய்வின்றி நகர்ந்து எல்லாம் ஆரம்பமான அமோசன் அடர்வனம் நோக்கிப் பயணிக்கிறது. இப்பயணத்தினூடு வாசகர்களை நெகிழ வைக்க ஹாம் தவறவில்லை. தியாகம், காதல், நட்பு, நன்றிக்கடன்  இவையாவும் மாறுபட்ட கலாச்சார முகங்களுடன் கதையில் பரிமாறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தைவிட இப்பாகம் என்னைக் கவர்ந்தது எனினும் முடிவு சிறிது ஏமாற்றமே. வெறுப்பும், வஞ்சமும் இன்னம் தொடரவா வேண்டும் அதை முடித்து விடலாம் எனும் வரியுடன் கதையின் ஒரு பெரும் மர்மம் வாசகனிற்கு விடுவிக்கப்படாத ஒன்றாக இக்கதை நிறைவுறுகிறது.


சித்திரக் கலைஞர் டேனி இப்பாகத்தில் அசர வைத்திருக்கிறார். அவர் சித்திரப்பாணியின் மாற்றம் கதை நிகழும் இடங்களின் அழகையெல்லாம் அழகாக பக்கங்களில் அழகுபடுத்தி இருக்கிறது. தாய்லாந்தின் அழகுகள்!! ஒட்டக கழுத்துப் பெண்களின் நளினம், சுரினாமின் அந்தி, அமோசான் அடர் வனத்தின் நிறைபச்சை என ஆச்சர்யம் செய்திருக்கிறார் டேனி. அமேசான் வனத்தில் விமானம் வீழ்ந்த இடத்தை அவர் வரைந்திருக்கும் விதம் உணர்வுகளை சற்று மேலெழச் செய்வதாக இருக்கிறது. டேனியின் படைப்புகள் மீது எனக்கு அதிகம் ஈர்ப்பு இல்லாவிடிலும் இப்பாகத்தில் டேனியை ரசிக்காமல் இருப்பது என்பது சிரமமான ஒன்று.  பரபரப்பான கதைகளை விரும்பும் வாசகர்களை இக்கதை அதிகம் ஏமாற்றி விடாது என்பது என் எண்ணம். கதையின் முதலாம் பாகத்தில் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதை எழுதும் பாத்திரம் யார் என்பது ஆச்சர்யம். அது யார் என்பதை நான் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்கள் படிக்கும்போது உங்களிற்கும் அந்த ஆச்சர்யம் முழுமையாக கிடைக்கட்டுமே !!Sunday, November 4, 2012

தாவிப் பாய் என் தங்கமே

வதனமோ சந்த்ரபிம்பமோ – 5

நவஹோ போக்கர் மாஸ்டர் டெக்ஸ் வில்லர் ஸ்ட்ரெய்ட் ப்ளஷ்

டெஃபியான்ஸ் கோட்டையில் பணிபுரியும் வீரர்களின் பட்டுவாடாப் பணத்தை தங்க நாணயங்களாக ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் ஏந்தியவாறு நீயு மெக்ஸிக்க, அரிசோனா எல்லைகளை இணைக்கும் ரயில்பாதையில் பெருவறள் நிலத்தினூடாக விரைகிறது ஒரு புகையிரதம். அப்பணத்தை அபகரிக்க தயாராகிறது ஒரு குழு. இதை எல்லாம் அறியாமலேயே ரயிலில் பயணிக்கும் வீரர்களுடன் சாதாரண பயணிகளாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இரு ரேஞ்சர்கள். டெக்ஸ் வில்லர்! கிட் கார்சன்…..

டெக்ஸை மீண்டும் ஒரு ரயில் வண்டியில் சந்திக்கிறோம். கடந்த வதனமோ சந்த்ரபிம்பமோ கொண்ட்ராஸ் தங்கத்தில் ரயிலில் வரும் தங்கத்தை தன் எதிரிகள் எல்லாரிற்கும் சதுரங்க வெட்டு வைத்து கைப்பற்றி வருவது நவஹோ தங்கம் டெக்ஸ். இம்முறை அவர் தான் பயணித்த ரயிலில் பறிபோகும் தங்கத்தையும் அதற்கான காரணகர்த்தாக்களையும் சட்டத்தின் பிடிக்குள் எடுத்துவர முயல்கிறார். அவர் ஒரு ரேஞ்சர் எனும் வகையில் மேலதிகாரிகளின் உத்தரவு ஏதுமின்றியே சுயமான ஒரு முடிவுடன் களத்தில் இறங்குகிறார். நரகத்திற்கு சென்றாலும் குற்றம் செய்தவர்களை விடப்போவதில்லை என சூளுரைக்கும் வழமை கொண்ட டெக்ஸ் இக்கதையிலும் தன் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை. இக்கதை TEX Special வரிசையில் வெளியாகிய 6 வது கதையாகும். பிரெஞ்சு மொழியில் இக்கதையை L’attaque du train de Fort Defiance எனும் பெயரில் Semic பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இப்பதிப்பகம் தற்போது டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வறள்நில இரவில் பெருநிலம் கிழித்தோடும் ரயிலில் உறங்க முடியாமல் தவிக்கும் கார்சனின் புலம்பல்களோடு ஆரம்பமாகும் கதையில் ரயிலில் முக்கியமான ஒரு பொருள் இருக்கும் சாத்தியத்தை கார்சனிற்கு விபரிக்கிறார் டெக்ஸ். இந்தக் காட்சிகளை இடைவெட்டிக்  கொண்டு வருகிறது கதையின் எதிர் நாயகர்களில் ஒருவனான லிஞ்ச் வெய்ஸ் அறிமுகமாகும் காட்சி. கதாசிரியர் Claudio Nizzi எதிர் நாயகனான லிஞ்ச் வெய்ஸை வாசகர்கள் முன் கொணரும் காட்சியானது இலகுவில் மறக்கக்கூடிய ஒன்றல்ல. பெருமேற்கின் சாகசங்களை ஏதோ அந்த ஊரின் நாட்டாமைகள் போல படித்து கண்ணீர் விட்டு மனைவிமாரிடம் வாங்கிக் கட்டும் அந்த வாசக உள்ளங்களை பெருமேற்கின் தூய ஆவியான மதுசெலெம் ரட்சிக்கட்டும். அவ்வகையான வாசகர்களின் சாகஸ ஆர்வத்தின் வாயில் டைனமைட்டை சொருகி பற்றவைத்தால் அந்த ஆர்வம் இறகு முளைத்து அரிசோனாவின் பாலை மேகங்களினூடு வெடித்துப் பறந்திடாதா என்ன. பொனெலி பதிப்பகத்தின் ஆஸ்தான கதாசிரியரான க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையில் எதிர் நாயகர்களிற்கு வழங்கி இருக்கும் முக்கியத்தும் வியப்படைய வைக்கும் ஒன்று. [அதே சமயம் இருளில் வரும் நிழல் போன்ற சுமாரிற்கும் கீழான கதைகளையும் நிஸ்ஸி படைக்க சளைத்தவரில்லை என்பதையும் நாமறிந்து கொள்ளல் சிறப்பானது].

fd1மிக இலகுவாக தன் திட்டத்தை செயல்படுத்தி பணத்தை அபகரித்து செல்கிறான் லிஞ்ச். ரயிலில் பணத்தின் பாதுகாப்பிற்காக பயணித்த ராணுவ வீரர்கள் ஒரு கட்டத்தின் பின்பாக லிஞ்ச் குழுவினரை துரத்திச் செல்வது முடிவிற்கு வர, அவர்களை விடாது துரத்த ஆரம்பிக்கிறார்கள் நமது ரேஞ்சர்கள். ராணுவத்தின் இளம் உயரதிகாரியை தாண்டி டெக்ஸ் வழங்கும் உத்தரவுகள் அந்த அதிகாரியின் கவுரவத்தை பாதிக்க அதையும் சேர்த்து ஒரு பஞ்சில் உடைப்பார் பாருங்கள் டெக்ஸ்..அருமையான பஞ்ச் அது. வழமைபோலவே டெக்ஸ் மற்றும் கார்சனிற்கிடையிலான உரையாடல்களில் கிண்டல் கலந்து வாசகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை ஆனால் இக்கதையின் நகர்வானது பெரிதும் தங்கியிருப்பது அதன் எதிர் நாயகர்களின் செயற்பாடுகளிலேதான்.

கொள்ளையடித்து சென்ற பணத்தை பாகம் பிரிக்கும்போது கிடைக்கும் அதிர்ச்சி கதையின் எதிர்நாயகர்களை மட்டுமல்ல வாசக உள்ளங்களையும் திகைக்க வைக்கும். ஆனால் கதையின் மர்மநாடியே அதுதான். எதிர்நாயகர்கள் ஏமாற்றப்பட்டார்களா, இல்லை இது ஒரு பொறியா என அவர்கள் அறியாமல் விழிப்பதைப் போலவே சாகச ரசிகர்களையும் விழிக்க வைக்கிறது கதை. அத்தருணத்திலிருந்து கதை எடுக்கும் வேகம் இரட்டிப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

இந்த சாகஸத்தின் எதிர்நாயகர்களாக லிஞ்ச் வெய்ஸை தவிர்த்து லூக் தோர்ட்டன், டூட் ஜான்ஸன், க்ளைட்டோன் சகோதர்கள் என ஒரு பத்துப்பேர் கொண்ட கூட்டம் இருக்கிறது. இரைதேடிகளான இவர்கள் தாம் கூட்டுச் சேர்ந்து ஆற்றிய ஒரு திட்டத்தின் தோல்வியின் பின்பாக அதற்கான காரணம் என்ன என்பதை அறிய விழைந்தால் நிகழும் நிகழ்வுகள் எப்படியாக இருக்கும். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி பரபர என கதையை நகர்த்தி செல்கிறார். திருப்பத்திற்கு திருப்பமாக எதிர் நாயகர்களின் வீழ்தல்களோடும், வெற்றிகளோடும் பெருமேற்கின் சாகசமொன்றை அதன் நாயகனான டெக்ஸை தாண்டியும் அவர் விறுவிறுப்பு குறையாது எழுதிச் செல்கிறார். தொய்வே அற்ற இந்தக் கதை சொல்லல் கதையை ஒரே வீச்ச்சில் வாசிக்க வைக்கும் மந்திரத்தின் பெரும் சொல்லை தனதாக்கி  கொண்டிருக்கிறது.

fd2டெக்ஸும், கார்சனும் எதிர்நாயகர்களில் ஒருவனான லூக் தோர்ட்டன் கூட்டத்தினை போட்டுத்தள்ளும் காட்சி இருக்கிறதே…. கதாசிரியர் வெஸ்டெர்ன் திரைப்படங்களிற்கு தந்திருக்கும் ஒரு கவுரவம் அது எனலாம். கைவிடப்பட்ட ஒரு நகரம். அதனூடு வீசிக் கொண்டிருக்கும் அனல் காற்று. அக்காற்றின் நர்த்தனத்தில் கலந்து தன்னை இழந்து வெளியில் மிதந்தாடும் சுருள் பற்றைகள். எதிராளிகளின் திறமைகளை தகுந்த வகையில் எடைபோட்டு உருவாக்கப்படும் பொறிகள். அப்பொறிகளை புத்திசாலித்தனமாக நாயகன் மீறி வருகையில் ஏற்படும் ஒரு சிறு உவகை என அக்காட்சித் தொடர் ஒரு குறுங்கதையாக பரிமளிக்கிறது. இறந்தவர்கள் குற்றவாளிகளாக கொலையாளிகளாக இருந்தாலும்கூட அவர்கள் உடல்களை பெருநிலத்தின் இரைதேடிகளின் கைகளில் விட்டுச் செல்லாது அவர்களை புதைத்துவிட்டுச் செல்லும் மனிதாபிமானத்தின் அடையாளமாக இங்கு டெக்ஸும், கார்சனும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இதே பாக்கியம் சமூகத்தில் நேர்மையான பேர்வழி எனப் பேர் பெற்று அந்தத் திரையின் மறைவில் காய் நகர்த்தும் நபர்களிற்கு கிடைப்பதில்லை. அப்படியான நபரை நேரம் எனும் காரணத்தை முதன்மையாக்கி புதைக்காமல் செல்கிறார்கள் நமது ரேஞ்சர்கள். ஒரு வாசகன் எனும் முறையில் இது டெக்ஸின் ஒரு வகையான தீர்ப்பு எனவே என்னால் ஊகிக்க முடிந்தது. கொலைகாரர்களை புதைத்துவிட்டு செல்லும் டெக்ஸ் நேரத்தைக் காரணம் காட்டி ஒருவரின் சடலத்தை அப்படியே விட்டுச் செல்வதின் பின்னாக உள்ள காரணத்தை என் மனம் ஏன் தேடித் தொலைத்தது என்பதற்கு விடையில்லை.

fd3சாகஸத்தின் பிரதான எதிர்நாயகனான லிஞ்ச், ஒரு சூதாட்டக்காரன். பெருமேற்கின் சூதாடிகளிற்கென ஒரு ஆடையணி அழகு இருக்கிறது. கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு சூதாட்டக்காரனிற்குரிய ஆடையுடனேயே நடமாடும் லிஞ்ச் தன் நகர்வுகள் யாவையும் சூதாட்டமாகவே எண்ணிக் கொள்கிறான். ஒரு சூதாடிக்கு தன் எதிரியிடம் இருப்பது என்ன என்று தெரியாதபோதும் தன் இழப்புக் குறித்த எந்தக் கிலேசமுமின்றி தன் ஆட்டத்தை தொடர்பவனாகவே இருப்பான். லிஞ்ச் தன் மேலாடையின் நீண்ட கை மடிப்புக்களிற்குள்ளும் உதிரிச் சீட்டுக்களை ஏந்தியிருக்கும் சூதாடி வர்க்கத்தை சேர்ந்தவன். அவனிற்கு எதிரான ஆட்டங்களை எல்லாம் அவன் அவ்வகையிலேயே முறியடிக்கிறான். தான் தோற்றுவிடக்கூடாது எனும் வெறி அவனைக் கொண்டு செல்லும் எல்லைகளின் வர்ணம் வன்மையானது. தன் எதிரிகளை ஒவ்வொன்றாக ஆட்டத்தில் தோற்கடிக்கும் லிஞ்ச் தன் இறுதி எதிரியை ஒரு துருப்பால் வீழ்த்தி அடிக்கும் இடம், அவன் எவ்வகையான ஒரு சூதாடி என்பதையும் அவன் மனநிலையையும் பெருமேற்கின் எதிர் நாயகர்களின் வாழ்வில் அறம் என்பதன் மதிப்பையும் தெளிவாக்கும். இங்கு நான் இக்கதையின் சித்திரக் கலைஞரான ஹோசே ஒர்டிஸைப் பற்றி எழுதிவிடல் நலம். இவர் பற்றி கொண்ட்ராஸ் தங்கத்தில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் இக்கதையில் வரைந்திருக்கும் சித்திரங்கள் அவர் குறித்த என் கணிப்பை இன்னம் பலமாக்கியிருக்கின்றன. குறிப்பாக தன் இறுதி எதிரியை லிஞ்ச் வீழ்த்தும் அந்த தருணம். அரைப்பக்கத்தில் வரும் அந்த சித்திரம் உங்களை அப்படியே அள்ளிக் கொள்ளும். உயிர்தப்பலுடன் ஊசாலாடும் வாழ்வை மரணம் எனும் பெருவீழ்ச்சி தழுவுகையில் அதனை நேரில் காண்பவர்கள் மனதில் கிளர்ந்தெழும் எழுச்சிகளின் சித்திரங்களின் வரைகோடுகளின் சிறுதெறிப்பின் ஒரு மென்நுண்மையையாவது ஒருவர் அதில் உணரக்கூடும். ஓர்டிஸின் தீர்க்கமற்ற கோடுகளின் பின்பாக அபார உயிர்ப்புடன் மேலெழும் பெருமேற்கின் கருவெள்ளை வரட்டழகு எந்த ஜிரோவினாலோ அல்லது மொபியாஸினாலோ குழைக்கப்பட்ட குழைவண்ணங்ககளினால் தரப்பட இயலாதவை. ஹோசே ஓர்ட்டிஸ் பெருமேற்கின் காய்நில அழகை தன் சித்திரங்களால் தனித்துக் காட்டி நிற்பவர். டெக்ஸ் கதைகள் சர்வதேசப் புகழ் பெற்றவை அல்ல எனும் ஒரே காரணம் இவ்வகையான கலைஞர்களின் உழைப்பு சிறப்பான பார்வை பெறாமைக்கு உதவிடும் காரணங்களில் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இக்கதையை முதலில் நான் படித்தது இற்றைக்கு பதினைந்து வருடங்களின் முன்பாக. பாரிஸ் நூலக வலையமைப்பில் அன்று இருந்த ஒரே ஒரு டெக்ஸ் கதை இது மட்டுமே. இன்று அதுவும் இல்லை ஏன் எதுவுமில்லை. [ஏன் பாரிஸ் நூலக சேவை டெக்ஸ் கதைகளை வாங்குவதிலை எனும் விடயம் வியப்பான ஒன்று]. இக்கதையை அன்று படித்தபோதே இக்கதையின் சித்திரங்களும், லிஞ்சும் என் மனதை ஆட்கொண்டுவிட்டார்கள். ஆனால் சித்திரக் கலைஞரின் பெயர் எனக்கு அன்று முக்கியமான ஒன்றாக படவில்லை. அதேபோலவே லிஞ்சின் பெயரும் என் மனதை விட்டு காலத்தோடு கடந்து சென்றது. ஆனால் சமீபத்தில் இக்கதை பற்றி உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியபோது என் நினைவில் இருந்து திரும்பியவை சில சொற்கள் மட்டுமே. செம ஸ்பீட், அட்டகாசமான வில்லன், அசர வைக்கும் ஓவியங்கள். என்னுடன் உரையாடிய நண்பர்கள் இக்கதையைப் படித்தால் நான் வார்த்தை தவறவில்லை என்பதும் இக்கதை அதன் பண்புகளிலிருந்து இன்னம் விடுபடாது இன்றும் அதேயளவு சுவையுடன் வாசிப்பனுபவத்தை நல்குகிறது என்பதும் உறுதியாகும்.

லிஞ்சை ஏன் நான் மறக்கவில்லை எனும் காரணம் இன்று இக்கதையை நான் படித்தபோது எனக்கு தெளிவாகியது. மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவுடன் தன் கடைசிச் சீட்டை உங்கள் முன் வீசி வீழும் ஒரு சூதாடியினை உங்களால் இலகுவில் நினைவில் இருந்து அழித்திட முடியாது. அவன் தன் சூதாடிக்கான அழகான எடுப்பான ஆடைகளுடன் உங்கள் மனதில் தாவிப் பாயும் தங்கமாக என்றும் உங்கள் நினைவின் ஒரு நுண்மடிப்பில் நின்றிருப்பான். ஏனெனில் ஒரு தோல்வியின் பின்பாக சில சூதாடிகள் மீண்டும் ஆடுவதேயில்லை.