Sunday, March 13, 2011

நினைவைத் தொலைத்த நெருப்பு


பெர்லினில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ், அவனது மனைவியுடன் பெர்லினிற்கு பயணமாகிறான். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கவிருக்கும் ஹோட்டலிற்கு வந்திறங்கும் தருணத்தில் தனது சூட்கேஸ் ஒன்றை விமான நிலையத்தில் தவற விட்டு வந்திருப்பதை மார்ட்டின் ஹாரிஸ் அறிந்து கொள்கிறான்.

தன் மனைவியை ஹோட்டலில் விட்டு விட்டு விமான நிலையத்தில் தான் தவற விட்ட சூட்கேஸை தேடிச் செல்லும் மார்டின் ஹாரிஸ் , ஒரு விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். நான்கு நாட்களின் பின்பாக கோமா நிலையிலிருந்து கண் விழிக்கும் மார்டின் ஹாரிஸ் தன் மனைவியை அவள் தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு தேடிச் செல்கிறான், ஆனால் அவளோ அவனை யார் என்று தெரியாது என மறுப்பதுடன், மார்ட்டின் ஹாரிஸ் எனும் பெயரில் வேறு ஒரு நபரையும் அவள் கணவனாக அவனிற்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள்…..

கடந்த கால நினைவுகளை விபத்தில் தொலைத்து தன் அடையாளத்தை தேடி ஓடும் இன்னொரு மனிதனின் கதை இதோ. ஜேசன் பொர்னிற்கு பின்பாக XIII காமிக்ஸ் தொடரின் மக்லேன், அவ்வழியில் இன்று டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ். Taken திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி நடிகர் Liam Neeson அவர்களிற்கு சமீப காலமாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை அவர் விரும்பியோ விரும்பாதோ பெற்றுத் தந்திருக்கிறது. அவரும் தன் பிரத்தியேக பாணியில் நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் சிறப்பிக்க தவறுவதில்லை. இயக்குனர் Jaume Collet Serra இயக்கியிருக்கும் Unknown திரைப்படத்தில் லியம் நீசனிற்கு ஆக்‌ஷனை விட அவர் நடிப்பை காட்டவே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனலாம்.

படத்தின் ஆரம்பக்காட்சிகள் மார்ட்டின் ஹாரிஸ் தம்பதியினரின் நெருக்கத்தையும், காதலையும் பார்வையாளர்களிடம் சிறப்பாக எடுத்து வருகின்றன. இக்காட்சிகளில் வழியாக மனதில் உறுதிப்படுத்தப்படும் கணவன் மனைவி எனும் உறவு, தொடரவிருக்கும் திரைப்படத்தின் மர்மத்தை இறுதிவரை ரசிகனிடம் கசிய விடாது காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. கோமா நிலையிலிருந்து மீண்டெழுந்து வரும் மார்ட்டின் ஹாரிஸ், தன் மனைவி தன்னை யாரெனத் தெரியாது எனக்கூறி பிறிதொருவனை தனக்கு பதிலாக கணவன் எனக் காட்டும்போது உடைய ஆரம்பிக்கும் அவனில் உருவாகும் குழப்பத்திலும், வேதனையிலும் அந்த சூழ்நிலை விதைக்கும் புதிரிலும் மாட்டிக் கொள்கிறோம் நாம். உண்மையான மார்டின் ஹாரிஸ் யார் என்பதை நிரூபிப்பதற்காக நிகழும் சம்பவங்களினூடாக பார்வையாளன் மர்ம முடிச்சின் இறுக்கத்தில் மெதுவாக பிணைக்கப்படுகிறான்.

தான் யாரென்பது மிகப் பிரம்மாண்டமான ஒரு கேள்வியாக மார்ட்டின் ஹாரிஸ் முன் எழுகையில் அவனுடன் சேர்ந்து நாமும் கலங்கிப் போகிறோம். தன் மனைவியிடமும், அதிகாரிகளிடமும் தன் அடையாளத்தை உண்மையெனக் காட்ட எடுக்கும் முயற்சிகளில் மார்ட்டின் தோற்கும் போதெல்லாம் அவன் மீது நாம் பரிதாபம் கொள்ள ஆரம்பிக்கிறோம், அவன் தன் அடையாளத்தை நிரூபித்திட வேண்டுமென நாம் ரகசியமாக விரும்புகிறோம். இங்கு இயக்கமும் சரி, நடிகர் லியம் நீசனும் சரி தம் பங்கை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். மார்ட்டின் ஹாரிஸ் மீது நாம் கொள்ளும் அந்த பரிதாபம்தான் உச்சக் கட்டத் திருப்பத்தின்போது எம்மை விழிகளை உயர்த்த வைக்கிறது. இப்படி எம்மை ஏமாற்றி விட்டார்களே என அந்த திருப்பத்தை வெகுவாக ரசிக்க உதவுகிறது. இருப்பினும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் உணர்ச்சிகரமான ஒரு படமாகவே Unknown உணரப்படக்கூடியதாகவிருக்கிறது. மார்ட்டின் ஹாரிஸை நிழலாக சிலர் பின் தொடர்கிறார்கள் என்பதும், அவன் மீதான கொலை முயற்சியும் திரைப்படத்திற்கு ஆறுதலாக விறுவிறுப்பை எடுத்து வருகின்றன.

sans-identite-2011-19089-449337095ஆனால் Unknown ஒரு வேகமான த்ரில்லர் அல்ல. அசர வைக்கும் அதிரடியான ஆக்‌ஷன்களையும் அது தன்னிடத்தில் கொண்டிருக்கவில்லை. மெதுவான வேகத்தை கொண்ட இத்திரைப்படம் அதன் கச்சிதமான மர்ம முடிச்சாலும், அதில் இடம் பிடிக்கும் துணைப்பாத்திரங்களாலும், அப்பாத்திரங்களில் உறைந்திருக்கும் மனித நேயத்தாலுமே பார்வையாளனிற்கு நெருக்கமாகி வருகிறது. டேக்கனும், ஜேசன் பொர்னும் டீக்கடையில் சந்திப்பு, இறுதி மூச்சை வெட்டும் த்ரில்லர் என்ற விளம்பர வாசகங்கள் எல்லாம் இத்திரைப்படத்தை வரையறுப்பதற்கு சற்று மிகையானவையாகவே எனக்கு தோன்றுகிறது. மார்ட்டினின் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் துப்பறிவாளன் ஜுர்கன், மார்ட்டின் நண்பனான பேராசிரியர் ராட்னி கோல் ஆகிய பாத்திரங்கள் சிறிதளவு நேரம் தோன்றினாலும் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜூர்கன் பாத்திரத்தில் தோன்றும் நடிகர் Bruno Ganz ன் நடிப்பு கதாநாயகனின் நடிப்பைவிட என்னை மிகவும் கவர்ந்தது. ஜூர்கனும், ராட்னி கோலும் சந்திக்கும் அக்காட்சி ஜான் லுகாரின் உளவு நாவல் ஒன்றை படிப்பதுபோல் ஒரு உணர்வை எனக்கு வழங்கியது. திரைப்படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த காட்சி அதுதான் என்பேன்.

வழமை போலவே நாயகனுடன் துணைக்கு ஓடும் நாயகியாக பாத்திரமேற்றிருக்கிறார் நடிகை Diane Kruger. ஆனால் தன் பரிதாபமான வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்வதற்கு 4000 யூரோக்களிற்காக பாடுபட்டு உழைக்கும் அவரின் பாத்திரப் படைப்பு மென்மையாக மனதை தொட்டு விடுகிறது. லியம் நீசனின், கம்பீரத்தையும் அட்டகாசமான நடிப்பையும் எதிர்பார்த்து சென்ற எனக்கு, குழப்பமுற்று, களைத்து, கலங்கிய நிலையில் ஓடும் லியம் நீசனையே படத்தின் பெரும் பகுதியிலும் காண முடிந்தது. நான் எதிர்பார்த்த லியம் நீசன் எழுந்து வந்து டாய்ய்ய்ய்! எல்லாத்தையும் நான் மறக்கலைடா… என்று டயலாக் சொல்லி மரண அடி அடித்த ஐந்து நிமிடத்திற்குள் திரைப்படம் நிறைவு பெற்று விடுகிறது. அவ்வகையில் இது ஒரு ஏமாற்றமே. போஸ்டரில் அசத்திக் கொண்டிருக்கும் லியம் நீசன் படத்தில் இல்லை!!! ஒளிப்பதிவாளர் கலாச்சாரக் காவலர் கழகத் தலைவரா என்று ஐயம் எழ வைக்கும் வகையில் முக்கிய காட்சிகளில் முக்கிய பகுதிகளை படம் பிடிக்காது தொண்டாற்றியிருக்கிறார். இது ஒரு பயங்கரமான ஏமாற்றமாகும். மேலும் முக்கியமான மர்மம் விடுபட்ட பின், இப்படியான ஒரு மார்ட்டின் ஹாரிஸ் பாத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய அதிரடி ஆக்‌ஷன் தீனியின் பற்றாக்குறை குறித்த ஆதங்கமும் எழவே செய்கிறது. அதிர்ச்சியால் மறைந்த நினைவுகள் சில அதிர்ச்சியாலேயே மீண்டும் நினைவிற்கு வருவது கறுப்பு வெள்ளை தமிழ் படங்களிலேயே காட்டப்பட்டிருக்கிறது.

படத்தின் அந்த முக்கியமான திருப்பத்தை அற்புதமாக இறுதிவரை கொண்டு வந்து சேர்த்த இயக்குனர் திறமைசாலிதான். அதேபோல் உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக் கொள்கிறது. அந்த தருணங்கள் ஒரு நிறைவான திரில்லரிற்குரிய உணர்வுகளை திரைக்கு அப்பால் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன. அவற்றிற்காகவேனும் இப்படத்தை பார்த்து வைக்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல், குறிப்பாக லியம் நீசனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காமல் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் Unknown க்கும் இடமுண்டு. [**]

ட்ரெயிலர்

Sunday, March 6, 2011

காத்திருந்த பாறை


மலையேறுவதில் அதிக விருப்பம் கொண்ட இளைஞனான Aron Ralston, வார இறுதி ஒன்றை மலைக்குன்றுகளும், கணவாய்களும் பெருகிய இயற்கைப் பூங்கா ஒன்றில் கழிக்க செல்கிறான். அப்பிரதேசத்தில் மிகுந்த உற்சாகத்துடன் மலையேறி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஏரோன், இரு குன்றுகளிற்கிடையிலுள்ள பிளவொன்றினுள் முன்னேற முயலும்போது ஒரு பாறை சரிந்து அவன் கரத்தின் மீது வீழ்ந்து இறுகிக்கொள்கிறது. ஏரோன் எங்கு சென்றான் என்பதை அவனிற்கு நெருங்கியவர்கள் யாரும் அறிந்திராத நிலையில், அவன் உதவிக்கு வர எவருமே இல்லை எனும் இக்கட்டான சூழலில், பாறையில் அகப்பட்ட தன் கரத்தை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஏரோன்….

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், சர்ச்சையையும் உருவாக்குவதில் வெற்றி கண்ட Slumdog Millionaire திரைப்படத்தின் இயக்குனரான Danny Boyle அவர்களின் சமீபத்திய படைப்புதான் 127 Hours. 2003ல் ஏரோன் ரால்ஸ்டன் எனும் மலையேறியின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு நூலைத் தழுவி இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்லாம்டாக் மில்லியனெர் திரைப்படத்தில், புதிர்க் கேள்விகளுடன் நாயகன் ஜமால் மலிக் நிகழ்த்திடும் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் களித்திட, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் ஒரு தேசமும், அரங்கொன்றில் நாயகனை சூழ அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டமும் உன்னிப்புடன் தயாராக இருக்கும். அவனது ஒவ்வொரு பதிலுக்கும் கிடைக்கும் கரகோஷங்களும், ஆரவாரங்களும் அவனை உற்சாகப்படுத்தும். 127 Hours நாயகன் ஏரோனின் நிலையோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானது.

சிக்கிக் கொண்ட பிளவையே அரங்கமாக கொண்டு, தன் கரத்தை பாறையிலிருந்து விடுவிப்பதற்காக தனியனாக அவன் அரங்கேற்றும் அவல நாடகத்தை கைதட்டி ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ, விசிலடிக்கவோ அங்கு யாருமில்லை. அவன் இருத்தல் குறித்த எந்த அக்கறையும் இன்றி உலகம் தன் பாட்டிற்கு இயங்கிச் செல்வதுபோல் ஒரு காகம் அவன் மாட்டிக் கொண்ட பிளவின் மேலாக பறந்து செல்கிறது. தன் அவல நாடகத்தின் அறிவிப்பாளனாக, நாயகனாக, பார்வையாளனாக, ஒளிப்-பதிவாளனாக அவனே இருந்தாக வேண்டிய நிலை. திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் ஏரோன் இதனை நிகழ்த்தியே காட்டுகிறான். மனதைக் கலங்க வைக்கும் தருணங்களில் ஒன்றாக அது திரைப்படத்தில் இடம்பிடிக்கிறது. ஐந்து நாளிற்கு மேலாக பிளவினுள் இடம்பெறும் ஏரோனின் வாழ்வா சாவா எனும் போராட்டத்தையே எம்மை பார்வையாளர்களாக்கி திரையில் வடிக்கிறார் இயக்குனர் டேனி பாய்ல்.

ஒரு பிளவிற்குள், ஒரு மனிதனை மட்டுமே வைத்து ஐந்து நாட்களிற்கு ஒரு கதையை நகர்த்துவது என்பது எளிதான ஒன்றல்ல. திரைப்படத்தின் ஆரம்பத்தில் மலைக்குன்றுகளை நோக்கி ஏரோன் பயணப்படும் போதும், மலைக்குன்றுகள், கணவாய்கள், ரகசிய நீர்நிலைகள் என்று அவன் அலைந்து மகிழும் கணங்களிலும் திரைப்படத்தில் இளமையின் தீவிரமான உற்சாகம் வேகமாக பீறிட்டு ஓடுகிறது. அதேபோல் ஒரு முக்கிய முடிவை எடுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன் கரத்தை விடுவிக்க ஏரோன் முனையும் உச்சக்கட்டக் காட்சிகளில் எம் கரத்திலேயே கத்தி புகுந்து அறுக்கும் உணர்வின் தாக்கத்தை எம்மால் எட்டிவிட முடிகிறது. அக்காட்சிகளின் அப்பட்டமான குரூரம் அரங்க இருக்கைகளில் ரசிகனை அசெளகரியத்துடன் நெளிய வைக்கிறது.

127-heures-2011-19393-667242516ஆரம்பக் காட்சிகளின் உற்சாகம், உச்சக்கட்ட அதிர்ச்சி எனும் இரு புள்ளிகளிற்கிடையில் ஏரோன் பிளவிற்குள் கழிக்கும் மணித்துளிகளை அவன் கடந்த காலம் குறித்த நினைவலைகள் மூலமும், விடுதலையை வேண்டும் மனம் இயற்றும் இனிய கனவுகள் வழியேயும் நிரப்புகிறார் இயக்குனர். தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் காதலி என ஏரோனின் மனம் கடந்த காலத்தை அசைபோட்டு மீள்கிறது. சிறைப்பட்ட மனிதனின் ஏக்கம்போல் இச்சைகள் குறித்த கனவுகள் அவனை மூழ்கடிக்கின்றன. தன் உறவுகள் தன் மீது காட்டும் அன்பையும், அக்கறையையும் தன் அதீதமான தன்னம்பிக்கையால் உதாசீனப்படுத்தும் ஒருவனாகவே இங்கு ஏரோன் உருப்பெறுகிறான். பிறரின் உதவிகள் இன்றி தன்னால் தனித்து எதையும் சாதிக்க முடியும் என்ற அவன் மனப்பான்மையையும், அவன் அதீத தன்னம்பிக்கையையும் காலம் முதல் அவனிற்காக காத்திருந்து அவன் கரத்தின் மேல் விழும் அப்பாறை சப்பளித்து விடுகிறது.

தான் வாழும் உலகின் உறவுகளை தவிர்த்து தனியனாக வாழ விரும்பும் ஏரோன், மலைகள் உள்ள பூங்காவில் வழி தவறி விட்ட பெண்களிற்கு தானே முன் சென்று வழிகாட்டுகிறான். அங்கு அவன் கழிக்கும் பொழுதுகளில் அவன் வேறு மனிதனாக இருக்கிறான். மலையும் மலை சார்ந்த இடமும் அவன் இறுக்கத்தை கட்டவிழ்க்கிறது. அவனை பிறிதொரு இனிதான மனநிலைக்கு தள்ளுகிறது. அவனை விடுவிக்கிறது. அவனை சிறைப்பிடிக்கிறது.

ஏரோனின் நினைவலைகளும், கனவுகளும் பார்வையாளனை கட்டிப்போட வைப்பதில் தகுந்த விதத்தில் செயலாற்றாது போக இப்பகுதியில் தன் இயக்கத்தில் இறங்கிவிடுகிறார் இயக்குனர் டேனி பாய்ல். ஏரோனின் கடந்தகால மீட்டல்கள் சலிப்பை பிளவினூடு மெதுவாக கடத்தி வருகின்றன. அவ்வகையில் பாதிப் படத்தினையே இயக்குனாரால் திறமையாக பரிமாறக் கூடியிருக்கிறது.

உற்சாகாமான ஆரம்பக் காட்சிகளில் ரகுமானின் இசை அதிரடிக்கிறது. குறிப்பாக மலைக் குன்றுகளிற்கு ஏரோன் கிளம்பிச் செல்லும் வேளையில் ஒலிக்கும் பாடலும் இசையும் உணர்வுகளை அதிர வைக்கின்றன. ஆனால் பாறையில் தன் கரத்தை மாட்டிக்கொண்டு ஒரு மனிதன் போராடிச் சோர்ந்து கிடக்கிறான், ஒரு நாளில் குறுகிய நேரத்திற்கு மட்டுமே அவன் மாட்டியிருக்கும் பிளவிற்குள் சூரியன் தன் கதிர்களால் வருடிச் செல்லும். அந்த வேளை வருகிறது. சூரியக் கதிர்கள் மென் விரல்களென அவன் மேல் வீழ்கிறது. அந்த ஸ்பரிசம் அந்த மனிதனின் பால்ய கால நினைவுகளைத் தூண்டுகிறது. தன் தந்தையுடன் அவன் பார்த்து ரசித்த சூரிய உதயங்களை அவன் மனம் மீட்டெடுக்கிறது. இந்த தருணத்தில் பின்னனி இசை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாது அந்தக் காட்சிகள் தரும் உணர்வுகளிலிருந்து பார்வையாளனை விலத்தி எடுத்து செல்வதாகவே ரகுமானின் இசை இருக்கிறது. ரகுமானின் இசை மிகச் சிறப்பாக செயற்பட்ட திரைப்படமாக இது இல்லை என்பதுதான் என் கருத்து.

படத்தின் மிகச் சிறந்த திறமை எதுவெனில், அது ஏரோன் வேடத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் James Franco தான். எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சிலந்தி மனிதனின் வைரி. வீடியோ கமெராவில் தானே நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி பதிவு செய்யும் காட்சி, உச்சக்கட்டக் காட்சி என்பவற்றில் மனங்களை இளக வைத்து விடுகிறார் ஜேம்ஸ் பிராங்கோ. அவர் திறமையைக் காட்ட கிடைத்த வாய்பை தவறாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளம் நடிகர்.

ஏரோன் அகப்பட்ட பிளவினுள் பார்வையாளனை இறக்கி, அவனை ஏரோன் இடத்தில் நிறுத்துவதே என் நோக்கம் என்றிருக்கிறார் டேனி பாய்ல். இந்த நோக்கத்தில் அவரிற்கு கிடைத்திருப்பது முழுமையான ஒரு வெற்றியல்ல. விலங்குகளிற்கு பொறி வைக்கப்படும் சமயங்களில் அவற்றில் மாட்டிக் கொள்ளும் விலங்குகள் அதிலிருந்து தம்மை விடுவிக்க பொறியில் மாட்டிய தம் அவயவங்களை அறுத்துக்கொண்டு தப்புவதுண்டு. பொறிகளில் வாலோ, ஒரு காலோ மட்டும் எஞ்சியிருக்கும். அவ்விலங்குகளின் விடுதலையின் விலையாக, தழும்பாக அந்த அவயவங்கள் மாறிப்போகும். ஏரோனின் கரம் அவனை பிரபலமாக்கியது, அந்தக் கரம் இன்றும்கூட அவன் விடுதலையினதும், தொடரும் வாழ்வினதும் அடையாளமாக, மலையும் மலை சார்ந்த இடங்களிற்கும் அவனுடன் சலிக்காது துணை சென்று கொண்டேயிருக்கிறது. அவன் மறைவின் பின்பாகக்கூட அந்தக் கரத்திற்காகவே அவன் பெரிதும் நினைவுகூறப்படுவனாக இருப்பான். [**]

ட்ரெய்லர்