Friday, April 30, 2010

நூறு தோட்டாக்கள்


சோப்பு போட்டுக் கழுவினாலும் மனதை விட்டு நீங்காத சிறையின் நாற்றம். பதினைந்து வருடச் சிறை. சிறைத் தண்டனையை முடித்தும் Dizzyயின் மனதில் விடுபடாமலிருக்கும் அந்தக் குற்றவுணர்ச்சி. தன் அன்பு மகன் ஹெக்டரும், காதல் கணவன் சாண்டியாகோவும் படுகொலை செய்யப்பட தானே முழுக் காரணம் எனும் எண்ணம் அவள் மனதைக் கூரான சிறு கத்திபோல் குத்திக் கொண்டிருந்தது.

100b1 சிறையிலிருந்து விடுதலை. வீடு நோக்கிய பயணம். சிந்தனைகளின் சுழல்களில் சிக்கி உழலும் மனம். ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அந்த நபர் டிஸ்ஸியை நோக்கி வந்தார். அவள் அருகில் அமர்ந்தார்.

ஏஜண்ட் கிரேவ்ஸ் என்று தன்னை டிஸ்ஸியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த நபரிற்கு டிஸ்ஸியின் வாழ்க்கை குறித்து அத்துப்படியாக தெரிந்திருக்கிறது. அவள் வாழ்க்கை ரோஜா இதழ்களால் நெய்யப்பட்டிருக்கவில்லை. டிஸ்ஸி, சிறு வயதிலேயே குற்றச் செயல்களிற்கு அறிமுகமானவள். சீர்திருத்தப் பள்ளிகளில் தன் நாட்களைக் கழித்தவள்.

பின்பு சாண்டியாகோவுடன் காதல். திருமணம். அன்புக் குழந்தை ஹெக்டர். புதிய வாழ்க்கை. திடீரென ஒரு நாள் தெருவில் இடம்பெறும் ஒர் துப்பாக்கி மோதல். மோதலில் உயிர்பிழைத்த டிஸ்ஸி குற்றவாளியாகச் சிறையில். கணவனும், மகனும் இனந்தெரியாத நபர்களால் தெருவில் வைத்து சுடப்பட்டு படுகொலை. தன்னை வஞ்சம் தீர்ப்பதற்காகவே தனக்கு எதிரான ரவுடிக் குழுவொன்றால் இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதும் டிஸ்ஸி.

ஆனால் ஏஜண்ட் கிரேவ்ஸ், டிஸ்ஸியின் மகனையும், கணவனையும் கொன்றது இரு பொலிஸ் அதிகாரிகள் என்பதை அவளிற்கு தெரிவிக்கிறார். அந்த அதிகாரிகளின் போட்டோவொன்றையும் கிரேவ்ஸ் டிஸ்ஸிற்கு வழங்குகிறார். கூடவே ஒரு சூட்கேஸையும் அவளிடம் தருகிறார்.

அந்த சூட்கேஸினுள் அடையாளம் காண முடியாத நூறு தோட்டாக்களும், ஒரு கைத்துப்பாக்கியும் இருக்கின்றன. கொலைகாரர்களான இரு பொலிஸ் அதிகாரிகள் குறித்து டிஸ்ஸி செய்ய விரும்பியதை செய்வதற்கு க்ரீன் சிக்னல் வழங்குகிறார் ஏஜென்ட் கிரேவ்ஸ். எந்த விசாரணைகளிலிருந்தும் அவளைத் தான் காப்பாற்றுவேன் என்பதனையும் கிரேவ்ஸ் அவளிற்கு தெரிவிக்கிறார்.

டிஸ்ஸியின் முடிவு இரு பொலிஸ் அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுவது எனில், அது குறித்த பொலிஸ் விசாரணைகள் மரணத்திற்கு காரணமான தோட்டாக்களை கண்டெடுப்பதுடன் நின்றுவிடும் என்பதையும் கூறிவிட்டு டிஸ்ஸியை விட்டு விலகிச் செல்கிறார் கிரேவ்ஸ்….

100b2 டிஸ்ஸி எடுத்த முடிவு என்ன? தன் கணவன் மற்றும் மகன் இருவரினதும் படுகொலைகளிற்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அவள் கண்டு பிடித்தாளா? வஞ்சத்தின் சுவையை டிஸ்ஸி அறிந்து கொண்டாளா?

=========

வழமையான மதுபான விடுதிக் கைகலப்பு. உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளைக் கூட்டி அள்ளுகிறான் லீ. உடைந்துபோன அவன் வாழ்க்கையைத்தான் அவனால் அள்ளிவிட முடியவில்லை.

அழகான மனைவி. புத்திசாலிக் குழந்தைகள். இனிய குடும்ப வாழ்க்கை. லீ, பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளன். பின் ஒரு நாள் லீயின் வீட்டினுள் நுழையும் FBI ஏஜண்டுகள். லீயின் கணணியில் அவனிற்கு தெரியாமலே வந்து குந்தியிருக்கும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக [Pedophile] போட்டோக்கள்.

லீயின் பெயரும் பீடோபைல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஊடகங்கள் அவனைச் சிலுவையில் அறைகின்றன. அவன் மனைவியும் குழந்தைகளும் அவனை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள். லீயின் உணவகம் வாடிக்கையாளர்களை இழந்து, நஷ்டத்தில் மூடப்படுகிறது.

இப்போது, அழுக்கு வடிந்தொழுகும் இந்த மதுபான விடுதியில் லீ ஒரு ஊழியன். தன் வாழ்க்கையை யாரோ சதி செய்து உடைத்தார்கள் என்று உறுதியாக நம்புகிறான் லீ. கையாலாகதவனாக.

குடிகாரர்கள், விபச்சாரிகள், வாழ்வைத் தொலைத்தவர்கள். அழுக்கான பார். மேலும் அழுக்கேற முடியாத வாழ்க்கை. அந்த பாரில்தான் லீயை வந்து சந்திக்கிறான் ஏஜண்ட் கிரேவ்ஸ். லீயின் கணிணியில் பீடோபைல் போட்டோக்களை பதுக்கியது யார் என்பதை லீக்கு அறியத்தருகிறான் கிரேவ்ஸ்.

அவள் ஒரு அழகிய இளம் பெண். அவள் பெயர் மெகான். வழமை போலவே அடையாளம் காண முடியாத நூறு தோட்டாக்களையும், ஒரு கைத்துப்பாக்கியையும் கொண்ட ஒரு சூட்கேஸை லீயிடம் விட்டுச் செல்கிறான் கிரேவ்ஸ். தன் வாழ்வை நொருக்கியவளை பழி வாங்குவது இனி லீயின் கைகளில்…

யார் இந்த மெகான்? ஏன் மெகான் அந்த போட்டோக்களை லீயின் கணிணிக்கு அனுப்பி வைத்தாள்? மெகானை லீ பழிவாங்கினானா?

100B3 அடையாளமில்லாத நூறு தோட்டாக்கள் மனிதர்களின் வாழ்வில் கொண்டு வரும் அதிரடிச் சம்பவங்களை வாசகன் கண்முன் விரிக்கும் மேற்கூறியவை போன்ற கதைகள்தான் 100 Bullets காமிக்ஸ் தொடரின் உயிர்நாடி. தன் மனதில் இருக்கும் வஞ்சத்தை தீர்க்க மனிதர்களிற்கு தரப்படும் ஒரு வாய்ப்பு. அந்த வஞ்சத்தை தேடிய அவர்களின் பயணத்தில் வெளிக்கிளம்பும் எதிர்பாராத ரகசியங்கள். அவர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்தார்களா இல்லை அந்த வஞ்சம் அவர்களை வேறு சுழல்களிற்குள் இட்டுச் சென்றதா என்பதை அருமையான கதை சொல்லலுடனும், கதைகளின் இருளை உணர்த்திடும் அசர வைக்கும் சித்திரங்களுடனும் வாசகனிடம் எடுத்து வருகிறது 100 Bullets.

டிஸ்ஸியின் கதையை எடுத்துக் கொண்டால், அவள் வாழும் இடத்தின் சூழலையே உயிர் ததும்ப கதாசிரியர் Brian Azzarello கதைக்குள் புகுத்தி விடுகிறார். வசதியற்ற மெக்ஸிகன் வம்சாவழி மக்கள் அடர்ந்து வாழும் அந்தப் பகுதியில் நிலவும் வறுமை, வெறுமை, குற்றக் குழுக்கள், அவற்றிற்கிடையேயான மோதல்கள், போதைப் பொருள், கொலைகள், காவல்துறையின் தகிடுதித்தங்கள், தங்கள் துணைகள் சிறையில் வாழ்ந்திருக்க வெளி உலகில் வாழத் தவிக்கும் இளம் அன்னைகள் என அச்சூழல் குறித்த ஒரு நிறைவான பார்வையை மூன்று பாகக் கதையில் வழங்குகிறார் கதாசிரியர்.

100b4 லீயின் கதை மதுபான விடுதியையும், அதனை நாடி வருபவர்களையும் பிரதானமாகக் காட்டி இரு பாகங்களில் கதையை நகர்த்துகிறது. ஆடை அவிழ்ப்பு நடன பார்களில் லீ காணும் நடனங்கள் மட்டுமே அவனை மனிதனாக உணர வைக்கும் தருணங்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உச்ச செல்வந்த அதிகாரத்தையும்,அறிவையும், உடைந்து போன மனிதன் ஒருவனின் வஞ்சத்தையும் மோதவிட்டிருக்கிறார் கதாசிரியர். இக்கதையின் முடிவு மனதை நெகிழ வைக்கும்.

கதைகளில் வரும் பிரதான பாத்திரங்களின் வலிகள், பலவீனங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை குறித்த அவர்களின் கேள்விகள் என்பவற்றின் துணையுடனேயே கதையை நகர்த்துகிறார் பிரையன் அஸாரெல்லோ. அப்பாத்திரங்களிற்கு அவர் மிகையான சக்திகளையோ, வாய்ப்புக்களையோ வழங்கவில்லை. நாளாந்த வாழ்வின் நிகழ்வுகளோடும், உணர்வுகளோடும் சாதாரண மனிதர்கள்போல் மோதுகிறார்கள் அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரங்கள். கதையில் வஞ்சம் என்பதன் வெற்றி, வஞ்சம் தீர்க்க விழையும் பாத்திரங்களின் வாழ்க்கை ஓட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இதுதான் இக்காமிக்ஸ் தொடரின் மிகவும் கவர்சியான அம்சமாகும்.

கதை நடக்கும் சூழலிற்கேற்ப மொழியையும் சிறப்பாக கையாள்கிறார் கதாசிரியர். சில உரையாடல்களில் கத்தியின் கூர்மை மின்னுகிறது. உரையாடல்கள், படிப்பவர்களைக் கதையின் சூட்டோடு ஒன்றச் செய்வதில் வெற்றி காண்கின்றன. ஒரு Noir வகைத் த்ரில்லரிற்குறிய அம்சங்களை அளவுடன் உள்ளடக்கி கதைகள் சிறப்பான வகையில் வடிவம் பெற்றிருக்கின்றன.

கதைகளின் இருளையும், சூட்டையும், சூழலையும், கவர்ச்சியையும் கண்முன் நிறுத்துகின்றன ஓவியக் கலைஞர் Eduardo Risso வின் சித்திரங்கள். மிகவும் நளினமான பாணியில் அமைந்திருக்கும் அவர் சித்திரங்கள் காமிக்ஸ் தொடரின் கூடுதல் பலம். வாசகர்களிற்கு கொண்டு செல்ல வேண்டிய உணர்ச்சிகளை அவர்களிடம் அழகாக எடுத்து வருகிறது ரிஸோவின் சித்திரங்கள். நிழலும், ஒளியும் கலந்த அவர் சித்திரங்கள், கதை நகரும் சூழலோடு அதனைப் படிப்பவர்களை இலகுவாக ஒன்ற வைக்கிறது. ரிஸோ வழங்கியிருக்கும் ஆக்‌ஷன் தருணச் சித்திரங்கள் அதிர்கின்றன. தனக்கென தனிப் பாணி கொண்ட காமிக்ஸ் ஓவியர்களில் ரிஸோ குறிப்பிடத்தக்க ஒருவர்.

கதைத் தொடரின் மிக முக்கிய கேள்வி, யார் இந்த ஏஜண்ட் கிரேவ்ஸ் என்பதாகும். கிரேவ்ஸ் ஏன் மனிதர்களிற்கு வஞ்சம் தீர்ப்பதற்குரிய வாய்ப்பை வழங்குகிறார்? அம்மனிதர்கள் குறித்து அவர் எவ்விதம் அறிந்து கொண்டார்? இதன் மூலம் கிரேவ்ஸ் அடைய விரும்புவது என்ன? மொத்தம் 13 தொகுப்புக்களாக வெளிவந்திருக்கும் 100 Bullets காமிக்ஸ் தொடர் இக்கேள்விகளிற்கான விடைகளை வழங்கும். 100 Bullets கதை நெற்றியில் துப்பாக்கி ஒன்று அழுத்தும் உணர்வின் ஒரு அலையை வாசகனிடம் இலகுவாகக் கடத்திவிடுகிறது. படிக்க ஆரம்பித்தால் ஆல்பத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்க வைக்கும் காமிக்ஸ் கதைகளில் 100 Bullets சுலபமாக இணைந்து கொள்கிறது. [****]


முதல்பாகத்தினை தரவிறக்க

Wednesday, April 28, 2010

இரும்பால் செய்த சுறா


அமெரிக்காவின் புகழ் பெற்ற தொழிலதிபரும், இரும்பு மனிதன் எனும் புதிய ஆயுத தொழில் நுட்பத்தின் கண்டு பிடிப்பாளருமான டோனி ஸ்டார்க் [Robert Downey Jr], தன் அசகாயச் செயல்களால் கிடைத்த புகழ் சாரலில் திளைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அமெரிக்க அரசோ, ஸ்டார்க்கின் இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை தேச நலன் கருதி அமெரிக்க அரசிற்கு ஸ்டார்க் வழங்க வேண்டும் என கிடுக்கிப் பிடி போடுகிறது.

இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை அமெரிக்க அரசிற்கு தர மறுத்து விடும் ஸ்டார்க், போனால் போகிறதென்று அமெரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்நிலையில் ஸ்டார்க் உயிர் வாழ்வதற்காக தன் உடலில் பொருத்தியிருக்கும் கருவியின் பேட்டரியே அவன் உயிரிற்கு பேராபத்தாக அமைய ஆரம்பிக்கிறது.

ஸ்டார்க்கின் ரத்தத்தில் பலேடியம் எனும் தனிமத்தின் நச்சுத்தன்மையின் அளவு இதனால் நாள்தோறும் அதிகரிக்கிறது. தான் உயிர் வாழக்கூடிய நாட்கள் இனி அதிகமில்லை என்பதனை உணர்ந்து கொள்ளும் ஸ்டார்க், தனது கம்பனியின் முழுப் பொறுப்புகளையும் தன் காரியதரிசி பெப்பரிடம் [Gwyneth Paltrow] ஒப்படைத்து விட்டு தனக்கு எஞ்சியிருக்கும் நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்குத் தயாரகிறான். தனது உடல்நிலை சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது எனும் தகவலை ஸ்டார்க் பிறர் அறியாது ரகசியமாக வைத்துக் கொள்கிறான்.

தன் வாழ்வினை உல்லாசமாக கழிப்பதன் ஆரம்பமாக, மொனாக்கோவில் நடைபெறவிருக்கும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக மொனாக்கோவிற்கு பயணமாகிறான் ஸ்டார்க். தனக்கு புதிய உதவியாளராக நத்தாலி [Scarlett Johansson] எனும் இளம் பெண்ணையும் அவன் பணிக்கமர்த்திக் கொள்கிறான்.

iron-man-2-2010-17000-749832716 இக்காலப் பகுதியில் ரஷ்யாவின் ஒரு மூலையில், வசதிகள் அற்ற வீடொன்றில், தன் அன்பு மகன் இவானின் [Mickey Rourke] பராமரிப்பில் மரணப் படுக்கையில் கிடக்கிறார் விஞ்ஞானி அன்ரன் வான்கோ. அமெரிக்க தேசமே கொண்டாடும் இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பத்தில் தன் பங்கும் உண்டு என்பதை வேதனையுடன் நினைவு கூர்ந்தவாறே தன் மகனின் கைகளில் தன் உயிரை விடுகிறார் அவர்.

அன்ரனின் மகனான இவான் ஒரு பெளதிக விஞ்ஞானி. தன் தந்தையின் மரணத்தின் பின், ஸ்டார்க் கம்பனி தன் தந்தைக்கு இழைத்த அநீதிக்காக, புகழ் பெற்ற இரும்பு மனிதன் ஸ்டார்க்கிற்கு ஒரு பாடம் புகட்ட விரும்புகிறான் இவான். இதற்காக தன் தந்தை விட்டுச் சென்ற இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பத் தகவல்களைப் பயன்படுத்தி, தன்னிடமிருக்கும் குறைவான வசதிகளுடன் புதியதொரு ஆயுதத்தை உருவாக்க ஆரம்பிக்கிறான் அவன். தன் தந்தை இறந்து ஆறு மாதங்களின் பின்பாக, ஸ்டார்க் கலந்து கொள்ளவிருக்கும் அதே மொனாக்கோ கார் ரேஸ் திடலிற்கு தன் புதிய ஆயுதம் சகிதம் வந்து சேர்கிறான் அவன்.

மொனாக்கோ கார் பந்தயத் திடலில் ரேஸ் ஆரம்பமாகிறது. வேகமெடுத்துப் பாய்கின்றன கார்கள். இவ்வேளையில் கார்கள் ஓடும் திடலில் தன் கால்களை உறுதியுடன் எடுத்து வைக்கிறான் இவான். இரும்பு மனிதன் தொழில் நுட்பம் சேர்த்து உருவாக்கப்பட்ட சாட்டை போன்ற அமைப்புக்களால் தன் முன் பாய்ந்து வரும் கார்களை அடித்து துண்டாக்க ஆரம்பிக்கிறான் இவான். அவன் துண்டாக்கிய கார்களில் இரும்பு மனிதன் ஸ்டார்க்கின் பந்தயக் காரும் அடக்கம்.

iron-man-2-2010-17000-1547120092 பந்தயத் திடலில், பலம் பொருந்திய இவானிடம் மிகவும் வகையாக மாட்டிக் கொள்கிறான் ஸ்டார்க், அதிஷ்டவசமாக ஸ்டார்க்கின் நண்பர்கள் உதவியுடன் தன் இரும்பு மனிதன் கவசத்தை அணிந்து இவானைக் கார் பந்தயத் திடலில் இடம்பெறும் மோதலில் வீழ்த்துகிறான் அவன். இதன் பின் மொனாக்கோ பொலிஸ் இவானைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது.

இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பம் உலகில் எவரிடமும் இல்லை எனக் கூறி வந்த ஸ்டார்க்கின் முகத்தில், கார் பந்தயத் திடலில் நிகழ்ந்த மோதல் கரி பூசி விடுகிறது. இவான் சிறையில் இருக்கிறான் எனும் நம்பிக்கையில் தனக்கு எஞ்சியிருக்கும் நாட்களை ஜாலியாக, பொறுப்பற்ற வகையில் கழிக்கிறான் ஸ்டார்க். இது அவனிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்திருந்த அமெரிக்க ராணுவத்திற்கு திருப்தி தருவதாக இல்லை. அமெரிக்க ராணுவ அதிகாரியும், ஸ்டார்க்கின் நண்பனுமான கேணல் ரோடி[Don Cheadle] இதனால் ஸ்டார்க் மீது கோபம் கொள்கிறான்.

இவ்வேளையில் ஸ்டார்க் கம்பனிக்கு போட்டியாக இயங்கி வரும் கம்பனியின் தலைவனான ஜஸ்டின் ஹாமர் [Sam Rockwell], மொனாக்கோ சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவானைத் தன் முயற்சிகளால் சிறையிலிருந்து தப்பிக்க வைக்கிறான். இவானின் அறிவை மெச்சும் ஜஸ்டின், ஸ்டார்க்கின் இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை உலகம் குப்பையில் தூக்கி எறிந்திட வைக்கும் வகையில் புதிய ஆயுதக் கவசங்களை தனக்காக இவான் உருவாக்கித் தர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறான். இதற்கு மகிழ்ச்சியுடன் உடன்படுகிறான் இவான். அவன் மனதில் மறைந்திருக்கிறது ஒரு திட்டம். ஸ்டார்க் கம்பனியை மட்டுமல்ல ஸ்டார்க்கின் இரும்பு மனிதனையே பொடிப்பொடியாக்கும் திட்டமது…..

iron-man-2-2010-17000-1423148502 அதிருப்தியுற்ற அமெரிக்க ராணுவம் என்ன செய்தது? தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கின் கதி என்ன? இவானின் பயங்கரமான திட்டத்தை ஸ்டார்க்கால் முறியடிக்க முடிந்ததா? இக்கேள்விகளிற்கு விடையளிக்கிறது Iron Man 2 திரைப்படத்தின் மீதிக் கதை….. ஆனால்!! கடவுளே அது ஒரு நிறைவான சித்திரவதை!

மார்வல் காமிக்ஸ் நாயகர்களில் ஸ்பைடர் மேனைத் தவிர என் மனதைக் கவர்ந்தவர்கள் வேறு யாருமில்லை என்றிருந்தபோது, இரு வருடங்களிற்கு முன்பு வெளியாகிய Iron Man திரைப்படத்தின் வழியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேன் பாத்திரம் என்னைக் கவர்ந்திழுத்தது. அத்திரைப்படத்தின் அபத்தமான உச்சக்கட்டக் காட்சிகளைத் தவிர்த்து அதனை என்னால் ரசிக்க கூடியதாகவிருந்தது.

அந்த நம்பிக்கையிலேயே அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தைரியமாக காணச் சென்றேன். என் நம்பிக்கையின் மேல் இவானின் சாட்டை அடிகள் போல் இரக்கமேயில்லாமல் இடிகள் வந்து வீழ்ந்தன. ஆரம்பம் அமர்க்களம்தான். அமெரிக்க அரசைச் சீண்டும் ஸ்டார்க், தன் தந்தைக்காக பழி வாங்கத் துடிக்கும் இவான், இவற்றுடன் சேர்ந்து AC DCயின் பாடல்கள் என எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது படம்.

அந்த எதிர்பார்புக்கள் எல்லாம் படத்தில் இடிந்து விழும் கட்டிடங்களுடன் சேர்ந்து நொருங்கிப்போய் விடுகிறது. மொனாக்கோ சிறையிலிருந்து இவான் காப்பாற்றப்பட்டதிலிருந்து, திரைப்படம் முடியும் வரை ரசிகர்கள் திரையில் சந்திக்கும் தருணங்கள் பெருத்த ஏமாற்றத்தை இரும்பை ஒத்த உறுதியுடன் வழங்கிச் செல்கின்றன.

iron-man-2-2010-17000-1664946236 ஜானி ஸ்டார்க் பாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர், படு ஸ்டைலாக பேசுகிறார், குடிக்கிறார், இரும்பு மனிதன் உடையில் நடனமாடுகிறார் பறந்து பறந்து சண்டை போடுகிறார். முதல் பாகத்தில் பின்பற்றிய பாணியை அச்சுப் பிசகாமல் தொடர்கிறார். தன் தந்தை தனக்கு விட்டுச் சென்ற செய்தியைக் கேட்டு வீறு கொண்டு எழுந்து புதிய தனிமம் ஒன்றை அவர் தனியாக கண்டுபிடிக்கும் காட்சி படத்தின் நகைச்சுவை வறட்சிக்கு நல்ல நிவாரணி.

இவான் வேடத்தை ஏற்றிருப்பவர் நடிகர் மிக்கி ரோர்க். ஆஜானுபாகுவான பாத்திரம். மிகவும் எதிர்பார்க்க வைத்த பாத்திரம். மிக்கி ரோர்க்கியின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு ஏற்ற ஏமாற்றம் ரசிகர்களிற்கு தாராளமாகக் கிடைக்கிறது. ரஷ்ய மொழியிலும், கொஞ்சம் ஆங்கிலத்திலும் வசனம் பேசிக் கொண்டு ஆரம்பத்தில் அசத்த ஆரம்பிக்கும் ரோர்க்கியை படத்தின் முக்கால் பகுதிக்கு ஆய்வுகூடங்களில் சிறை வைத்து விடுகிறது மோசமான திரைக்கதை. ரோர்கி, வெள்ளைக் கிளியைக் கொஞ்சிக் கொண்டு மந்தகாசப் புன்னகை புரிகிறார். இறுதியில் ஒரு நழுநழுத்த சண்டை. இப்படி ஒரு வீணடிப்பா. ரோர்கி எப்படி இப்பாத்திரத்தினை ஏற்பதற்கு உடன்பட்டாரோ தெரியவில்லை.

iron-man-2-2010-17000-778820578 நத்தாலி வேடத்தில் வருபவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். ஸ்டார்க்கின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளும், S.H.I.E.L.D எனும் அமைப்பின் ரகசிய ஏஜண்ட்டாக வருகிறார். தன் தலைமுடியின் வண்ணத்தையும், சிகையலங்காரத்தையும் மாற்றி செக்ஸியான தோற்றம் பெற்றிருக்கிறார் ஜோஹான்சன். ஜோஹான்சன், ஸ்டார்கின் கழுத்தில் ஊசி குத்துகிறார், கைக்கடிகாரம் எடுத்து தருகிறார், இறுதியில் சிரமப்பட்டு ஒரு சண்டை போடுகிறார். ஹிட் கேர்ல் சிறுமி மட்டும் அந்த சண்டையைப் பார்ப்பாள் எனில் புதன் கிரகத்திற்கு டிக்கட் இன்றே புக் பண்ணியிருப்பாள்.

முதல் பாகத்தில் நடிகர் டெரென்ஸ் ஹாவார்ட் செய்த கேணல் ரோடி பாத்திரத்தை இம்முறை நடிகர் டொன் சீடேல் ஏற்றிருக்கிறார். பாவம். பரிதாபம். உச்சக் கட்டக் காட்சியில் இரும்பு மனிதனிற்கு பங்காளியாக மாறும் சீடேலைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. இரும்பு மனிதன் கவசத்திற்குள் பொருந்திக் கொள்ள முடியாது தவிக்கிறார் அவர். க்வினெத் பல்ட்ரோ, சாமுவேல் ஜாக்சன் ஆகியோர் சொல்லித் தந்தபடி சுவாரஸ்யமற்ற நடிப்பை வழங்கிச் செல்கின்றனர்.

இந்த ஏமாற்றங்களையெல்லாம் எம்மேல் திணித்த இயக்குனர் Jon Favreau கூட திரைப்படத்தில் ஒரு வேடமேற்றிருக்கிறார். அவரது மனச்சாட்சி அவரை வறுத்தெடுத்திருக்க வேண்டும். ஸ்டார்க்கின் கார் டிரைவர் பாத்திரமேற்று தான் செய்யும் அபத்த செயல்களால் ரசிகர்களை சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் அவர். நல்ல மனம் கொண்ட இயக்குனர். ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க அவர் எடுத்த முயற்சியும் பரிதாபமாக தோல்வியைத் தழுவிவிடுகிறது.

விறுவிறுப்பான கதை, சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என்பவற்றை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களிற்கு இத்திரைப்படம் வழங்குவது பூரணமான பெப்பெப்பே ஒன்று மட்டுமே. அதிலும் உச்சக் கட்ட சண்டைக் காட்சியில் இரண்டு டஜன் இயந்திரங்களுடன் நடைபெறும் அந்த மோதல் எப்போது இது முடிந்து தொலையும் என்ற உணர்வை வழங்குகிறது. Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப்பி வைப்பதற்கு உகந்த ஒரு அயிட்டம். [*]

ட்ரெயிலர்

Tuesday, April 27, 2010

பென்டகனின் ஆடுகள்


பாப் வில்டன் [Ewan McGregor], அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் செய்தியாளனாகப் பணியாற்றி வருகிறான். பாப், பணிபுரிந்து வரும் பத்திரிகையின் தலைமை ஆசிரியருடன் காதல் கொள்ளும் பாப்பின் மனைவி டெபோரா, புதிய காதலிற்காக அவனைப் பிரிந்து விடுகிறாள். இதனால் மிகுந்த மனவருத்தம் அடையும் பாப், தன் மனைவி டெபோராவிற்கு தன் ஆளுமையை நிரூபிக்க விரும்பி யுத்த முனையான ஈராக்கிற்கு[2003] சென்று செய்திகள் சேகரிப்பது எனும் முடிவிற்கு வருகிறான்.

ஈராக்கினுள் நுழைவதற்கு முன்பாக குவைத்தில் பாப் தங்கியிருக்கும் ஹோட்டலில் லின் கஸடி [George Cloony] எனும் நபரின் அறிமுகம் அவனிற்கு கிடைக்கிறது. தன் பத்திரிகைக்காக பாப் முன்பு சந்தித்திருந்த ஒரு முன்னைநாள் அமெரிக்க ராணுவ வீரன் வழியாக லின் கஸடி குறித்து ஏற்கனவே சிறிது அறிந்து கொண்டவனாகவிருக்கிறான் பாப்.

1983களில் அமெரிக்க ராணுவமானது “புதிய புவி ராணுவம்” என்றவொரு பிரிவை உருவாக்க விழைந்தது. பெண்டகன் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது. புதிய புவி ராணுவமானது சாதாரண வீரர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்க முயன்றது.

சூப்பர் ராணுவ வீரர்கள் அல்லது ஜெடாய் [Jedi] வீரர்கள் ஆயுதங்களால் போரிடுபவர்கள் அல்ல! மாறாக தமது சிறப்பான மனோசக்தியின் வழியாக எதிரிகளை ஒற்றறிதல், அவர்களின் எண்ணங்களைப் படித்தல், அவர்களின் ரகசியங்களை கண்டறிதல், சுவர்களை ஊடுருவிச் செல்லல்! பிறர் கண்களிற்கு தென்படாமல் மாயமாக மறைதல்! மனோசக்தி வழியாக உயிரைப் பறித்தல்! போன்ற செயல்களில் திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.[ உயிரைப் பறித்தல் என்பது புதிய புவி ராணுவத்தின் ஜெடாய் வீரர்கள் செய்யக் கூடாத ஒன்றாகும்]

இவ்வகையான ஜெடாய் வீரர்களில் மிகச் சிறந்தவனே லின் கஸடி. ராணுவத்திலிருந்து விலகியபின் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் லின், தன் பணி நிமித்தம் ஈராக்கிற்கு செல்வதற்காக அந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறான். லின் போன்ற வீரர்களின் செயல்களைக் குறித்து ஒரு செய்திக் கட்டுரை தயாரிக்க விரும்பும் பாப், அது குறித்த தகவல்களை லின்னிடமிருந்து அறிய முயல்கிறான். இதற்காக லின்னுடன் சேர்ந்து ஈராக்கினுள் நுழையவும் அவன் தயாராகவிருக்கிறான்.

the-men-who-stare-at-goats-2009-17418-1713590814 முதலில் பாப்பின் வேண்டுகோள்களை நிராகரிக்கும் லின், பாப் தனது நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்திருந்த ஒரு கிறுக்கல் ஓவியத்தைக் கண்டபின்பாக அவனின் வேண்டுகோள்களிற்கு சம்மதிக்கிறான். ஏனெனில் பாப் தற்செயலாக தன் நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கியது ஜெடாய் வீரர்களின் சின்னமான மூன்றாம் கண் ஆகும்.

மறுநாள் காலை லின்னும், பாப்பும் ஈராக் நோக்கி தம் பயணத்தை ஒரு காரில் ஆரம்பிக்கிறார்கள். பாலைவனங்களை கடந்து செல்லும் அந்தப் பயணத்தில் தன் கதையை பாப்பிடம் கூற ஆரம்பிக்கிறான் லின். கதையை மட்டுமல்ல தன்னிடம் இருக்கக்கூடிய சில சிறப்பான சக்திகளையும் பாப்பின் முன் பார்வைக்கு வைக்கிறான் லின். லின்னின் நம்ப முடியாத அக்கதையையும், சக்தியே இல்லாத அவன் சக்திகளையும் அறிந்து வாயடைத்துப் போகிறான் பாப்.

வியட்நாம் யுத்தத்தில் ஹெலிஹாப்டர் ஒன்றிலிருந்து கீழே வீழ்ந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகும் ராணுவ அதிகாரி பில் டிஜாங்கோவின் [Jeff Bridges ] மனதில் புதிய சிந்தனைகள் காயத்திலிருந்து வழியும் குருதியாக ஊற்றெடுக்கின்றன. யுத்தத்திலிருந்து நாடு திரும்பும் பில், புதிய வகை ராணுவ வீரர்களை உருவாக்கும் திட்டத்தை அதிகாரிகள் முன்வைக்க, பென்டகன் அதனை அங்கீகரிக்கிறது. புதிய புவி ராணுவப் பிரிவை மகிழ்சியுடன் ஆரம்பிக்கிறான் பில் டிஜாங்கோ.

இவ்வேளையில் ராணுவ அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் லின், அங்கிருக்கும் கணினிகளை தனக்குள் பொதிந்திருக்கும் அபூர்வ சக்தியால் அவனை அறியாமலே செயலிழக்கச் செய்கிறான். இதனை அறிந்து கொள்ளும் அவன் மேலதிகாரி, லின், அவன் சக்திகளை தகுந்த வகையில் விருத்தி செய்யும் பொருட்டு அவனைப் புதிய புவி ராணுவப் பிரிவில் இணைத்து விடுகிறார்.

the-men-who-stare-at-goats-2009-17418-1828079063 புதிய புவி ராணுவப் பிரிவில் பில் டிஜாங்கோவின் தலைமையின் கீழ் தன் மனோசக்திகளை சிறப்பாக விருத்தி செய்ய ஆரம்பிக்கிறான் லின். மிகச் சிறந்த ஒரு ஜெடாய் வீரனாக லின் உருவாகி வருகையில் புதிய புவி ராணுவத்தில் வந்து சேர்ந்து கொள்கிறான் லேரி கொப்பெர் [Kevin Spacey].

தன் மனோசக்தியைப் பயன்படுத்தி உலோகங்களை வளைக்ககூடிய சக்தி லேரியிடம் இருக்கிறது. புதிய புவி ராணுவம் குறித்து ஒரு எள்ளல் மனப்பான்மை கொண்டவனாகவும் லேரி இருக்கிறான். லின்னின் சக்தி வலிமையுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத லேரி தன் மனதில் பொறாமையை வளர்க்க ஆரம்பிக்கிறான். தனது சக வீரன் ஒருவனிற்கு போதை மருந்து தந்து லேரி செய்யும் ஒரு பரிசோதனை முயற்சி விபரீதத்தில் சென்று முடிகிறது. அதுவே புதிய புவி ராணுவத்தின் முடிவாகவும் அமைகிறது.

லேரி தன் பரிசோதனையை மேற்கொண்ட அவ்வீரன் தன் மனநிலை பிறழ்ந்து, நிர்வாணமான நிலையில் சக வீரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதோடு நின்று விடாது, தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறான். சம்பவம் மீதான விசாரணையின்போது பில் டிஜாங்கோவின் நடவடிக்கைகளிற்கு எதிராக சாட்சியம் அளிக்கிறான் லேரி. இதனால் பில்லின் பதவி பறிபோகிறது. தான் உருவாக்கிய ராணுவப் பிரிவை விட்டுப் பிரிந்து தனியே தன் வழி செல்கிறான் பில் டிஜாங்கோ.

இதனைத் தொடர்ந்து லேரி, லின்னைக் குறி வைக்கிறான். தனது மேலதிகாரியை அனுகும் லேரி, மனோசக்தியால் உயிர்களை பறிக்கலாம் என்பதை அவரிற்கு தெரியப்படுத்துகிறான். அதிகாரியும் இதனைப் பரிசோதித்துப் பார்க்க சம்மதம் தெரிவிக்கிறார். இந்தக் கொடிய பரிசோதனையை நிகழ்த்துவதற்கு ஜெடாய் வீரர்களில் சிறந்தவனான லின் அழைக்கப்படுகிறான்.

the-men-who-stare-at-goats-2009-17418-1122251288 பரிசோதனைக்காக லின்னின் முன்பாக ஒரு அப்பாவி ஆடு நிறுத்தப்படுகிறது. அந்த ஆட்டை அவனுடைய மனோசக்தியால் கொல்லப் பணிக்கப்படுகிறான் லின். ஒரு உயிரைப் பறிப்பது என்பது புதிய புவி ராணுவத்தின் கொள்கைகளிற்கு எதிரானது. ஆனால் அத்தருணத்தில் மனோசக்தியின் தீமையின் பக்கத்தால் ஆட்கொள்ளப்படும் லின், அந்த ஆட்டை தன் கண்களால் கூர்மையாக நோக்கி அதன் உயிரைப் பறித்து விடுகிறான்.

தான் செய்த செயல் லின்னின் மனதைக் கூறு போடுகிறது. ராணுவத்திலிருந்து பதவி விலகிச் செல்கிறான் சிறந்த ஜெடாய் வீரனான லின்.தன் சக்தியால் ஒரு ஆட்டின் உயிரைப் பறித்ததால் தன்னை விட்டு தன் மனோசக்திகள் நீங்கி விட்டதாகவும் அவன் நம்புகிறான்.

இந்த நம்ப முடியாச் சோகக் கதையை லின் கூறி முடிப்பதற்குள்; லின்னும், பாப்பும் பயணம் செய்யும் கார் பாலைவனத்தில் கல்லொன்றில் மோதி செயலிழக்கிறது, பாலைவன வீதியில் நின்று லிஃப்ட் கேட்கும் அவர்களை ஆயுததாரிகள் சிலர் கடத்திச் செல்கின்றனர், ஆயுததாரிகளிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பும் லின்னும், பாப்பும் அவர்களிடமிருந்து மஹ்முட் எனும் பணயக் கைதியை காப்பாற்றுகின்றனர், பின் ஈராக்கில் செயற்பட்டு வரும் இரு தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் வீரர்களிற்கிடையில் நிகழும் ஆயுத மோதலில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

அந்த மோதலின் மத்தியிலிருந்து மஹ்முட்டின் வழிகாட்டலில் தப்பி ஓடும் அவர்கள், ராணுவத்தால் சேதமாக்கப்பட்ட மஹ்முட்டின் இல்லத்தில் இரவைக் கழிக்கிறார்கள், மறுநாள் மஹ்முட் தரும் ஒரு காரில் தம் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கிறார்கள். லின்னின் அபாரமான சக்தியின் வழிகாட்டலினால் கண்ணி வெடி ஒன்றில் கார் மாட்டிக் கொள்கிறது. பரந்த பாலைவனத்தில் வழி தெரியாது அலைய ஆரம்பிக்கிறார்கள் லின்னும், பாப்பும். இதன் காரணமாக லின் மீது சீறி விழுகிறான் பாப். அப்போதுதான் லின் அந்த உண்மையை பாப்பிற்கு கூறுகிறான்.

the-men-who-stare-at-goats-2009-17418-872394732 தன் கனவில் பில் டிஜாங்கோ தோன்றியதாலேயே அவனைத் தேடி தான் ஈராக் வந்த விபரத்தை பாப்பிடம் கூறுகிறான் லின். பில் ஈராக்கில் எங்கே இருக்கிறான் என்பது லின்னிற்கு தெரிந்திருக்கவில்லை. லின்னின் சக்திகள் அவனிற்கு உதவ மறுக்கின்றன. பாலைவனத்தின் வெப்பத்தில் கருகி மணல்திட்டு மீது அயர்ந்து போகிறார்கள் அவர்கள். அவர்கள் அயர்ந்த அவ்வேளை பாலைவனத்தில் எங்கிருந்தோ வரும் மணி கட்டிய ஒரு ஆடு அவர்களைக் கடந்து செல்கிறது.

மணிச்சத்தம் கேட்டு விழிக்கும் பாப் வியப்புடன் ஆட்டைத் தொடர்ந்து செல்கிறான். அந்த ஆடு ஒரு தண்ணீர் குட்டையின் முன்பாக சென்று நிற்கிறது. லின்னை தேடி வந்து எழுப்பும் பாப், அவனை அந்த தண்ணீர் குட்டைக்கு அழைத்துச் செல்கிறான். லின், பாப், ஆடு என யாவரும் குட்டையில் இருக்கும் தண்ணீரை ஆசையுடன் பருக ஆரம்பிக்கிறார்கள். இவ்வேளை பாலைவன வானிலிருந்து இவர்களை நோக்கி கீழே இறங்க ஆரம்பிக்கிறது ஒரு ஹெலிகாப்டர்…. பின்பு நடந்த நம்பவே முடியாத நிகழ்வுகள் என்ன என்பதை திரைப்படம் உங்களிற்கு தெளிவு படுத்தும்..

இத்திரைப்படத்தில் இடம்பெறும் பெரும்பான்மையான சம்பவங்கள் நிஜமானவையே எனும் அறிவிப்புடனேயே The Men Who Stare at Goats திரைப்படம் ஆரம்பமாகிறது. ஆனால் திரைப்படத்தில் வரும் சம்பவங்களை அப்படியே நம்புவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது. Jon Ronson என்பவர் எழுதிய நூலைத் தழுவி இந்த நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளுனியின் தோஸ்த் Grant Heslov.

பாப் பாத்திரம் தன் அனுபவங்களை கூறிச் செல்வதாக ஆரம்பிக்கும் திரைப்படம், காலத்தின் முன்னும் பின்னும் நகர்ந்து இரு வேறு தளங்களில் கதையை நகர்த்தியவாறே முன்னேறுகிறது. தாம் வாழ்வில் நம்பிய உண்மைகளிற்காக தம் வாழ்க்கையை உடைத்த சில மனிதர்கள் எவ்வாறு தம் மீட்பைக் கண்டடைகிறார்கள் என்பதை கதை விபரிக்கிறது. லின் மற்றும் பில்லின் மீட்பிலேயே பாப்பின் மீட்பும் ஒளிந்திருக்கிறது என்பதும் கதையில் தெளிவாகிறது.

the-men-who-stare-at-goats-2009-17418-632456675 கதையில் வரும் நம்பவே முடியாத நிகழ்வுகளை நகைச்சுவை மூலம் எளிதாகவும், கனமின்றியும் ரசிகர்களை உட்கொள்ளும்படி செய்திருக்கிறார் இயக்குனர் கிராண்ட் ஹெஸ்லவ். நிதானமான வேகத்தில் நகரும் இப்படத்தினை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதில் நகைச்சுவைக்கு பெரும் பங்குண்டெனில், திரைப்படத்தின் நடிகர்களின் தேர்வு அதன் அடுத்த கவர்ச்சியாக அமைகிறது. ஜார்ஜ் க்ளுனி, ஜெஃப் பிரிட்ஜஸ், கெவின் ஸ்பேஸி, இவான் மக்கிரகோர் எனும் அட்டகாசமான நடிகர் கூட்டணியின் திறமை படத்தினை ரசிக்க வைக்கிறது.

ஜார்ஜ் க்ளுனி தன் வசீகரமான தோற்றத்தையும் கவர்ச்சிகரமான நடிப்பையும் சற்று தள்ளி வைத்து விட்டு ஒரு சூப்பர் வீரன் அவதாரம் எடுத்திருக்கிறார். பில் டிஜாங்கோவின் ராணுவப் பிரிவில் ஹிப்பி சிகையலங்காரத்துடன் அவர் நடனம் ஆட ஆரம்பிப்பதில் இருந்து தான் கொன்ற ஒரு ஆட்டிற்காக அவர் செய்யும் இறுதிச் செயல் வரை தன் அபத்தங்களால் சிரிக்கவும், தன் மனித நேயத்தால் நெகிழவும் வைக்கிறார் அவர். மஹ்முட்டின் வீட்டில் அவரிற்கும் மஹ்முட்டிற்குமிடையில் இடம்பெறும் அந்த சிறு உரையாடல் நெகிழ்வான ஒரு தென்றல்.

க்ளுனியிடம் வந்து தானாகவே மாட்டிக் கொண்டு திணறும் பாப் பாத்திரத்தில் இவான் மக்கிரகோர். க்ளுனி தன் சக்திகளை அவரிற்கு காட்ட விரும்பும் போதெல்லாம் அது எந்த மாற்றங்களையும் தருவதில்லை என அறிந்து அப்பாவியாக அவர் ஏமாறுவதும், க்ளுனியின் புதிய புவி ராணுவத்தின் செயல் முறைகளிற்குள் மாட்டிக் கொண்டு அவர் அனுபவிக்கும் கொடுமைகளும் ரசிகர்களை இலகுவாக சிரிக்க வைத்து மக்கிரகோரின் பாத்திரத்தினை ரசிக்க செய்கின்றன. தான் தன் மனோசக்தியால் கொன்ற ஆடு தன் கனவில் வந்து மெளனமாக வாயை அசைத்துக் கொண்டு நிற்கிறது என்று அவரிடம் க்ளுனி கூறுகையில் பதிலிற்கு Silence of The Goats என மக்கிரகோர் கூறும் அந்த வசனம் திரையரங்கைக் குலுங்க வைக்கிறது.

நீண்ட நாட்களின்பின் கெவின் ஸ்பேஸியை லேரி பாத்திரம் மூலம் திரையில் காணமுடிகிறது. வில்லத்தனமான பாத்திரம் ஆனால் ரசிகர்களைக் கவரும் வகையில் அப்பாத்திரம் உருவாக்கப்படவில்லை. எனவே ஸ்பேஸிக்கு அதிக வேலையில்லாமல் போய்விடுகிறது.

திரைப்படத்தில் என் மனதைக் கவர்ந்தவர் பில் டிஜாங்கோ வேடம் ஏற்றிருக்கும் ஜெஃப் பிரிட்ஜஸ். வியாட்னாம் போரில் ஞானம் பெற்று, பின் உலக அனுபவங்கள் கண்டு, புதிய புவி ராணுவத்தை ஆரம்பித்து, அந்த ராணுவத்திற்கு அவர் வழங்கும் அபத்தமான பயிற்சிகள் மூலம் எம்மை சிரிக்க வைக்கும் அந்த பிரிட்ஜஸ், இறுதியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சாதாரண ஒரு எடுபிடிபோல் ஊழியம் புரிகையில் மனதை கலங்கடிக்கிறார். ஜெஃப் பிரிட்ஜஸ் எனும் நல்ல கலைஞனைத் திரையுலகம் தகுந்த முறையில் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

the-men-who-stare-at-goats-2009-17418-193906874 ஈராக்கில் ராணுவங்களால் மட்டுமன்றி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களாலும், ஆயுதக் குழுக்களாலும் அப்பாவி மக்களின் வாழ்க்கையும், உரிமைகளும் சேதமாக்கப்படுகின்றது என்பதையும், போரைச் சாக்காகக் கொண்டு ஈராக்கினுள் நுழைந்த வல்லரசுகள் மற்றும் பெரு நிறுவனங்கள், ஈராக் ஒப்பந்தங்களையும், நுகர்வோர் சந்தையையும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக தம்மகப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் குரூரமான மனநிலையையும் படம் மெலிதாக கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க ராணுவமானது ஏதுமறியாப் பிராணிகளான ஆடுகளை தன் சில பரிசோதனைகளிற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறது. அப்பரிசோதனைகளின் முடிவில் அந்த ஆடுகளின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகவிருக்கும். இதே நிலைதான் ராணுவத்தில் பணிபுரியும் சில மனிதர்களிற்கும் என்பது வேதனையளிக்கும் ஒன்றாகும். அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் ராணுவங்களில் இந்த அவல நிலை நிலவுகிறது .

திரையரங்கிலேயே திரைப்படத்தின் இறுதித் தருணம் வழங்கும் சிரிப்புடன் விட்டுவிட்டு வரக்கூடிய இத்திரைப்படமானது அதில் பொதிந்திருக்கும் அன்பாலும், மனித நேயத்தாலும் மனங்களை நெருங்கி வருகிறது. புதிய புவி ராணுவ வீரர்களில் உறைந்திருக்கும் இப்பண்புகளே அவ்வீரர்கள் மேல் ரசிகனின் பார்வையை சற்று நிலைபெறவும் செய்கிறது. நட்சத்திரப் பட்டாளத்தின் திறமைக்காகவும், நம்பவே முடியாத நகைச்சுவை கலந்த அபத்த நிகழ்வுகளிற்காவும் பார்த்து ரசித்து சிரிக்கக்கூடிய திரைப்படங்களில் அமைதியாக தனது இடம் பிடித்துக் கொள்கிறது இத்திரைப்படம். [**]

ட்ரெயிலர்

Sunday, April 25, 2010

ஜாங்ரிஜட்டி சூப்பர் ஹீரோஸ்


kick-ass டேவ் [Aaron Johnson], நீங்கள் தினமும் [அமெரிக்க] வீதிகளில் காணக்கூடிய சாதாரண பள்ளி மாணவர்களில் ஒருவன். அவனிடம் சிறப்பான திறமைகள் என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் கிடையாது. பள்ளி வளாகத்தில் பிறரால் கவனிக்கப்படாது உலாவரும் உயிர்களில் அவனும் அடங்குவான். தன் தாயின் மரணத்தின் பின் அவன் தந்தையுடன் வசித்து வரும் டேவ், ஒரு காமிக்ஸ் ரசிகன். குறிப்பாக சூப்பர் ஹீரோக்கள் மீது அவனிற்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

காமிக்ஸ் கதைகளில் விதம்விதமாய் உருவெடுத்து, தீமைகளை ஓட ஓட விரட்டும் சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ஏன் இருப்பது இல்லை என்ற கேள்விக்கு அவன் மனம் விடை காண முயல்கிறது. மாறாக காமிக்ஸ் கதைகளில் வரும் வில்லன்களை விட மோசமான மனிதர்களை டேவ், நிஜ உலகில் தினம் தினம் காண்கிறான்.

உலகில் ஒரு மனிதன் கூட தீமைகளை அடக்கி பிறரிற்கு உதவுவதற்காக சூப்பர் ஹீரோ வேடம் போட்டதேயில்லையா என்று தன்னையே கேள்வி கேட்கும் டேவ், தன்னைச் சுற்றி நிகழும் குற்றச் செயல்களை தாங்கிக் கொள்ள முடியாது, தானே ஒரு சூப்பர் ஹீரோவாக மாற முடிவெடுக்கிறான். இணையத்தில் சூப்பர் ஹீரோக்கள் அணிவது போன்ற ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு Kick-Ass எனும் சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறான் டேவ்.

சிறப்பான சக்திகளோ, தகுந்த தற்பாதுகாப்பு பயிற்சிகளோ அற்ற டேவின் சூப்பர் ஹீரோ வேடம் நடைமுறையில் அவ்வளவு எளிதானதாக இல்லை. தீமையை எதிர்த்து, நீதியை நிலைநாட்ட கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே, கிக் ஆஸாகிய டேவை ரவுடிகள் கத்தியால் குத்தி, மரண அடி அடித்து விடுகிறார்கள். தெருவில் வரும் ஒரு கார், கிக் ஆஸின் மீது மோதி விட்டு பறந்து விடுகிறது. படு காயங்களிற்குள்ளாகும் கிக் ஆஸ் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறான்.

G17443371521644 சிறிது கால சிகிச்சையின் பின் உடல் நலமாகி மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் கிக் ஆஸ், மேலும் மன உறுதி கிடைக்கப் பெற்றவனாய், மீண்டும் தீமையை எதிர்த்துப் போராடக் கிளம்புகிறான். இம்முறை காணாமல் போய்விட்ட பூனை ஒன்றை தேடிச் செல்லும் கிக் ஆஸ், தெருவில் இடம் பெறும் கைகலப்பு ஒன்றில் சந்தர்ப்பவசமாக மாட்டிக் கொள்கிறான்.

தெருவில் நடைபெறும் அம்மோதலில் மூன்று தடியர்களின் பயங்கரமான அடி உதையிலிருந்து ஒரு மனிதனைக் காப்பாற்றுகிறான் கிக் ஆஸ். அந்த மூன்று தடியர்களிடமும் மரண அடி வாங்கியவாறே கிக் ஆஸ் சளைக்காமல் மோதுவதை கைத்தொலைபேசியில் படம் பிடிக்கும் ஒரு இளைஞன் அதனை இணையத்தில் போட்டு விட, ஒரே நாளில் தன் தீரச் செயலால் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுகிறான் கிக் ஆஸ்.

கிக் ஆஸ் காமிக்ஸ், கிக் ஆஸ் டீ சர்ட், கிக் ஆஸ் காப்பி கப் என கிக் ஆஸ் பெயரில் வியாபாரம் களை கட்டுகிறது. கிக் ஆஸின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அல்லல்களை தீர்த்து வைக்குமாறு விண்ணப்பித்து மின் மடல்கள் வருகின்றன. ஒரு நாள் தன் நண்பிக்கு தொல்லை தரும் போதை மருந்து விற்பனையாளன் ஒருவனை மிரட்டுவதற்காக அவன் வசிக்குமிடத்திற்கு செல்லும் கிக் ஆஸ், அங்கு போதை பொருள் விற்பனையாளனின் அடியாட்களிடம் வகையாக சிக்கிக் கொள்கிறான்.

ஆனால் கிக் ஆஸை போதைப் பொருள் வியாபாரி அடித்து துவம்சம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு திடீரெனத் தோன்றும் ஒரு சிறுமி, அங்கிருக்கும் அடியாட்களை தன் குத்து வாளால் வெட்டியும், குத்தியும் கொல்கிறாள். சூப்பர் ஹீரோக்கள் போல் உடையணிந்து, எதிரிகளை பந்தாடும் அச்சிறுமியின் திறமையைக் கண்டு தன் வாயைப் பிளக்கிறான் கிக் ஆஸ். அச்சிறுமியுடன் ஒப்பிடுகையில் தான் ஒரு பூஜ்யம் என்பதனையும் அவன் உணர்ந்து கொள்கிறான்.

kick-ass-2010-17443-1075845859 போதை மருந்து வியாபாரியையும், அவன் அடியாட்களையும் கொன்று தீர்க்கும் அச்சிறுமி தன்னை Hit-Girl [Chloe Grace Mortez]என கிக் ஆஸிடம் அறிமுகம் செய்து கொள்கிறாள். அச்சிறுமியுடன் Big-Daddy [Nicolas Cage]என்பவனும் சேர்ந்து ஒரு அணியாக தீமையை எதிர்த்துப் போராடுவதையும் கிக் ஆஸ் தெரிந்து கொள்கிறான். தம்மைப் பற்றி எவரிடமும் எதுவும் பேசக் கூடாது என கிக் ஆஸை எச்சரித்து விட்டு ஹிட் கேர்லும், பிக் டாடியும் அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்கிறார்கள்.

இதே வேளையில் நகரின் முக்கியமான தாதாவான பிராங், தனது போதைப் பொருட்களை யாரோ சூறையாடுவதையும், தனது அடியாட்களை எவரோ கொன்று போடுவதையும் அறிந்து கோபம் கொள்கிறான். சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து இந்தப் படுபாதகச் செயலை செய்வது கிக் ஆஸ்தான் என்று பிராங்கை நம்ப வைத்து விடுகிறது. கிக் ஆஸின் கதையை எவ்வகையிலாவது முடித்து வைத்து விடுவது என உறுதி கொள்கிறான் தாதா பிராங்……

கொடிய தாதாவான பிராங்கின் போதைப் பொருட்களை அபகரித்து, அவன் அடியாட்களை பரலோகம் அனுப்பி வைக்கும் அந்தப் படு பாவிகள் யார்? ஹிட் கேர்ல், பிக் டாடி எனும் மோஸ்தரான பெயர்களிற்கு சொந்தக்காரர்கள் யார்? அவர்கள் ஏன் தீமையை எதிர்த்துப் போர் புரிகிறார்கள்? அப்பாவி சூப்பர் ஹீரோவான கிக் ஆஸ், தாதா பிராங்கின் கொடிய கரங்களிலிருந்து தப்ப முடிந்ததா?

உங்கள் வாழ்க்கையில் ஒரு கணமாவது இரும்புக்கை மாயாவியாகவோ, அல்லது வேதாள மாயாத்மாவாகவோ மாற நீங்கள் விரும்பியதில்லையா? அல்லது உங்கள் உள் மனதில், உங்கள் கண் முன்னால் தீமை செய்பவர்களை கேப்டன் போலவோ அல்லது இளைய தளபதி போலவோ போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டதில்லையா? என்ன, அது பெரும்பாலும் அந்த ஆசையுடனேயே நின்று விடும். எம்முன் நடக்கும் அநியாயங்களை பார்த்து உள்ளம் கொதித்தாலும், தட்டிக் கேட்க மனம்[மீசை] துடித்தாலும், ஏதும் பேசாது நகர்ந்து விடுவோம். பிறரிற்கு என்ன நடந்தாலும் அது குறித்து எமக்கு அக்கறையில்லை.

kick-ass-2010-17443-1019486074 தன் கண்களிற்கு முன் நிகழும் தீமைகளை, சூப்பர் ஹீரோ வேடம் போட்டு தட்டிக் கேட்க விரும்பும் அப்பாவி இளைஞன் ஒருவனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை காமெடி கலந்து Kick-Ass திரைப்படத்தில் ரசிக்கும் வண்ணம் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Matthew Vaughn. Kick-Ass எனும் பெயரில் Mark Millar உருவாக்கிய காமிக்ஸ் கதையை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

எந்தவித பயிற்சியுமே இல்லாது மூன்று குண்டர்களுடன் ஒரு இளைஞன் மல்லுக் கட்ட முடியும்! 11 வயதே ஆன சிறுமி ஒருத்தி கொசுக்களை போல் ரவுடிகளைக் கொல்ல முடியும், இருளில் அங்கும், இங்கும், எங்குமாய்ப் பறக்கும் தோட்டாக்கள், ஹீரோ எவர் மீதும் படாது வில்லன்களின் உயிரை மட்டுமே பறிக்க முடியும்! ஒரு மணி நேரத்தில் பறக்கும் இயந்திரம் ஒன்றை இயக்குவது பற்றி அறிந்து கொண்டு, நகரத்தின் மீது பறந்து, வில்லனின் அடுக்கு மாடியிருப்பினை அடைந்து அதனை தவிடு பொடியாக்க முடியும்! இவ்வகையான முடியும்களை நீங்கள் எவ்வித எதிர் கேள்வியும் கேட்காது ஜாலியாக ரசிக்க முடியும் எனில் நீங்கள் தாரளாமாக இப்படத்தை சிரித்துக் கொண்டே பார்க்க முடியும்!

ஆரம்பத்தில் காமெடியாக ஆரம்பித்து, நடுப்பகுதியில் சிறிய தொய்வு பெற்று, இறுதிப் பகுதியில் நம்ப முடியாத அசத்தல் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்டுடன் நிறைவடைகிறது படம். படத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருவது படம் நெடுகிலும் ஒடி வரும் நகைச்சுவைதான்.

kick-ass-2010-17443-599943070 Kick-Ass பாத்திரத்தில் வரும் இளம் நடிகர் ஆரோன் ஜான்சன் அற்புதமான தெரிவு. ஒரு சாதரண இளைஞனிற்குரிய ஆசைகளும், கனவுகளும் கொண்ட அவர், தன் சூப்பர் ஹீரோ ஆசையால் நிஜ உலகில் பரிதாபமாக வாங்கும் அடிகள் சிறப்பாக கதையில் காட்டப்படுகிறது. சூப்பர் ஹீரோவாக வேடம் புனைந்து தன் நண்பியை வளைக்க முயலல், உலகில் தீமையின் குரூர முகத்தை அறிந்து கொண்ட பின் சூப்பர் ஹீரோ எண்ணமே வேண்டாம் என முடிவெடுத்தல் என சிரிப்பிற்கு மேல் சிரிக்க வைக்கிறார் ஆரோன். ரெட் மிஸ்டின் காரில் பாட்டிற்கு நடனமாடிக் கொண்டு அவர் வரும் காட்சி சூப்பர்.

ஹிட் கேர்ல், பிக் டாடி ஆகியோரது பாத்திரங்கள் இதற்கு மாறாக அமைந்து இருக்கின்றன. நிஜ வாழ்வில் அவர்கள் தந்தையும், மகளும் ஆவார்கள். பிறந்த நாளிற்கு கத்திகளை மகளிற்கு பரிசாக வழங்கல், துப்பாக்கி தோட்டாக்களின் உதைக்கு மகளை பயிற்றுவித்தல், பார்த்துப் பார்த்து ஆயுதங்களை வாங்கல், சகட்டு மேனிக்கு தீயவர்களை கொன்று குவித்தல் என்று நம்ப முடியாத பாத்திரங்களாக அவை உருப்பெற்றிருக்கின்றன.

kick-ass-2009-17443-1662744509 தனது ஒரே மகளை இப்படியாக ஒரு தந்தை வளர்க்க முடியுமா எனும் கேள்வி எழாமலில்லை. நிஜ உலக வாழ்க்கையில், காமிக்ஸில் உலா வரக்கூடிய தன்மை கொண்ட தந்தை, மகள் பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். ஒரு இடத்தில் காமிக்ஸ் கட்டங்களால் கடந்த காலக் காட்சிகள் விபரிக்கப்படுகிறது. ஹிட் கேர்ல் பங்கு பெறும் ஒரு துப்பாக்கி மோதல், வீடியோ கேம் போல் படமாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தந்தை, மகளிடையே வன்முறை மட்டுமல்ல அன்பும் வாழ்கிறது என்பதை சில காட்சிகள் வழி சிறப்பாக காட்டி விடுகிறார் இயக்குனர் மாத்யூ வேன். அதே வேளையில் கண்முன்னே திரையில் நிஜக் கொலை நடந்தாலும், அதனை ஒரு கேளிக்கை நிகழ்சியாக மட்டுமே எடுத்துக் கொண்டு உணர்ச்சியை மட்டும் சிந்தும் நவீன சமுகத்தின் மனப்பான்மையையும் இயக்குனர் கிண்டல் அடிக்கத் தவறவில்லை.

பிக் டாடி பாத்திரத்தில் நிக்கோலாஸ் கேஜ் சிறப்பாக எதனையும் செய்து விடவில்லை. தாதா பிராங் வேடத்தில் வரும் என் அபிமான நடிகர் மார்க் ஸ்ட்ராங்கிற்கும் பெரிதாக வாய்புக்கள் இல்லை. ரசிகர்களின் கண்களையும், வாயையும் அகலத் திறக்க வைப்பவர் ஹிட் கேர்லாக வரும் குளோவேய் கிரேஸ் மொர்டெஸ். சவடாலான பேச்சுக்கள் ஆகட்டும், பல்டிகள் அடித்து, சுவர் மேல் நடந்து, காற்றில் பறந்து அடிப்பதில் ஆகட்டும், கத்தி, துப்பாக்கி வகையறாக்களை சுளுவாக கையாளுவதில் ஆகட்டும், ஆத்தா, இந்தச் சிறுமி அடிக்கும் கூத்து ஆனாலும் கொஞ்சம் ஓவர். இளைய தளபதிக்கு சரியான போட்டி.

திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகளில் காரம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதிலும் சிறுமி ஹிட் கேர்ல் வாங்கும் அடிகளின் வலியை அரங்கில் உள்ள பார்வையாளர்கள் உணருமளவிற்கு வன்முறைக் காட்சிகளில் உக்கிரம் நிரம்பி வழிகிறது. பின்னனி இசையும், ஆக்‌ஷன் தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன.

காதில் நல்ல மல்லிப் பூவாகப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டு, லாஜிக்கையெல்லாம் பெரிய மூட்டையாக கட்டி எறிந்து விட்டு இத்திரைப்படத்தைப் பார்த்தால் நிறையச் சிரிக்கலாம், அளவாய் ரசிக்கலாம். Kick-Ass, இன்னும் வலுவாய் இருந்திருக்கலாம். [**]

ட்ரெயிலர்

Friday, April 23, 2010

இருளே என் பெயர் இரினா


13049_167674563396_89262728396_2619981_6052789_n வெண்பனி, அளவெடுத்து போர்வை தைத்து பெலரூஸின் அந்தக் கிராமப்புறத்தை போர்த்தியிருந்தது. காமம் கொண்ட காதலன் போல், இரவு பிடிவாதமாக அப்போர்வையின் மீது படிந்திருந்தது. கிராமத்திலிருக்கும் அந்த அனாதை விடுதியின் விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருக்கின்றன. பெண்களிற்கான அந்த விடுதியின் படுக்கை மண்டபத்தினுள், தன் கையில் ஒரு டார்ச் விளக்குடன் நுழைகிறாள் விடுதியைக் காவல் காக்கும் பெண்.

மண்டபத்தில் நீண்டு கிடக்கின்றன படுக்கைகள். அனாதையான எதிர்காலங்கள் அவற்றின்மேல் தம்மை மறந்து துயில் கொண்டிருக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் இரினா மற்றும் யூலியா ஆகிய இரு இளம் பெண்களையும் அவர்களின் உறக்கத்திலிருந்து எழுப்பும் விடுதியின் காவற்காரி, அவர்களைத் தனியே அழைத்துச் செல்கிறாள்.

அனாதை விடுதியில் சுகாதர விதிமுறைகள் எவ்வாறு பேணப்படுகின்றன எனபது குறித்து, திடீர் சோதனையிட மொஸ்கோவிலிருந்து வந்திருக்கும் அதிகாரி ஒருவன், இந்த நள்ளிரவிலும் அவர்களைத் தனித் தனியே சோதனையிடப் போகிறான் என்பதை டார்ச் லைட்டின் வீர்யமற்ற பிரகாசத்தில் இளம் பெண்களிற்கு விளக்குகிறாள் அனாதை விடுதியின் காவற்காரி.

முதலாவதாக யூலியாவை அதிகாரி பரிசோதிப்பதற்காக அவனிருக்கும் அறைக்கு இட்டுச் செல்கிறாள் காவற்காரி. தனது ஆருயிர் தோழியை எதிர்பார்த்து இருளில் காத்திருக்கிறாள் இரினா. யூலியாவின் இதழ்களின் சுவை இரினாவில் விழித்திருந்தது.

சில மணித்துளிகளின் பின் யூலியாவும், காவற்காரியும் இருளில் காத்திருந்த இரினாவை நெருங்கி வருகிறார்கள். தனது தோழி யூலியா மடங்கியவாறே நடந்து வருவதையும், அவள் முகத்தில் ஓடும், வலியின் விகாரமான கோடுகளையும் அவதானித்து விடுகிறாள் இரினா.

iri1 விடுதியின் காவற்காரி இரினாவை மறு பேச்சு பேசாது உடனடியாக படுக்கை மண்டபத்திற்கு திரும்ப உத்தரவு தருகிறாள். இரினாவோ யூலியாவிற்கு என்ன நிகழ்ந்தது என்று அக்கறையுடன் விசாரிக்க, யூலியாவின் உடல் நிலை திடீரென சீர் கெட்டு விட்டது எனப் பதில் தருகிறாள் காவற்காரி. இரினாவை உடனடியாகப் படுக்கைக்கு திரும்பச் சொல்லும் காவற்காரி யூலியாவை விடுதியின் சிகிச்சைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறாள்.

காவற்காரி, யூலியாவுடன் சிகிச்சைப் பிரிவை நோக்கி மறைந்ததும், யூலியாவை சோதனையிட்ட அறையை நோக்கி மெதுவாக நகர்கிறாள் இரினா. அந்த அறையை நெருங்கும் அவள், அங்கு ஒரு அதிகாரி தன் கத்தியையும், தரையில் சிந்தியிருந்த ரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். சிறிது நேரத்தில் அந்த அதிகாரி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி விட, அறையினுள் நுழையும் இரினா தரையில் ஊறியிருந்த ரத்த வாடையை முகர்கிறாள், கீழே வீழ்ந்திருந்த ஒரு சிகப்பு நட்சத்திரப் பதக்கத்தையும் கண்டெடுக்கிறாள்.

மறுநாள் காலை, யூலியா அந்த அனாதை விடுதியிலிருந்து தடயம் ஏதுமின்றி காணமல் போயிருக்கிறாள். அனாதை விடுதிக் காவற்காரியை தன் தோழி பற்றிய கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள் இரினா. ஆத்திரமுறும் காவற்காரி இரினாவை அடித்து, மிரட்டுகிறாள்.

தன் உயிர்த் தோழியின் மறைவிற்காக மனம் வருந்தும் இரினா, பரிசோதனையின்போது யூலியா அதிகாரியால் சேதமாக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறாள். காயமுற்றிருந்த யூலியா பின்பு சிகிச்சைப் பிரிவில் இறந்திருக்க வேண்டும் எனும் முடிவிற்கு வரும் இரினா, பெயர் தெரியாத அந்த அதிகாரியை, அவன் யாராகவிருந்தாலும், அவன் எங்கேயிருந்தாலும் அவன் உயிரைத் தானே பறிப்பேன் என சபதமிடுகிறாள். அந்த அதிகாரியின் முகத்தை தன் மனதில் பதித்துக் கொள்கிறாள். சில நாட்களின் பின் அந்த அனாதை விடுதியிலிருந்து தப்பிச் செல்லுகிறாள். அவள் வாழ்வே அவளிடமிருந்து தப்பிச் செல்லப் போகிறது என்பதை அறியாமல்.

iri2 அனாதையான ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழும் உலகை விட சிறந்த நரகம் வேறேதுமில்லை. Minsk எனும் சிறு நகர் ஒன்றிற்குள் நுழையும் இரினா, உண்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் வீடுகளில் திருடுகிறாள். மூதாட்டிகளை அடித்து, நொருக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கிறாள். ஆனால் இரினா அந்நகரில் நுழைந்ததிலிலிருந்து ஒரு குழு அவள் நடவடிக்கைகளை தொடர்ந்து வேவு பார்த்து வருகிறது.

ஒரு சமயம் வீடொன்றில் திருடி விட்டுத் திரும்பும் இரினா இந்தக் குழுவிடம் மாட்டிக் கொள்கிறாள். அவர்களிடமிருந்து முரட்டுத்தனமாக தப்பிக்க முயலும் இரினாவை அடிகளால் பின்னி எடுக்கிறார்கள் அக்குழுவினர். அவர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காதிருக்கிறாள் இரினா. அவளின் உறுதி அக்குழுவினரை அசத்தியிருக்க வேண்டும். இரினாவிற்கான புதைகுழியை இரினாவையே தோண்டச் சொல்கிறார்கள் அவர்கள்.

பனி உறைந்த நிலம், காதலைப் புறக்கணித்த பெண்களின் மனங்களை விடக் கடினமானது. அந்த நிலத்தில் புதைகுழியை தோண்ட முடியாது தினறுகிறாள் இரினா. அந்த வேளையிலும், துப்பாக்கி தன் உயிரைக் குறி வைத்தபோதும், அக்குழுவினரின் கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை அவள். உயிரே போனாலும் சரி, தன் வாழ்க்கையில் மீண்டும் அந்த அனாதை விடுதிக்கு திரும்ப மாட்டேன் என உறுதியுடன் பேசுகிறாள் இரினா. அவளின் அந்த உறுதிதான் அவள் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவளைக் கொல்லப் போவதாக மிரட்டிய அக்குழுதான் அவளை KGB யில் கொண்டுபோய் சேர்த்தது.

அந்தக் குழுவானது Minsk நகரில் இரினாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தது. நூறு வீதம் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டிய ஒர் சூழலில், எவ்வாறு அவள் தன்னைக் காத்துக் கொள்கிறாள், உயிர் வாழப் போராடுகிறாள், அவளது திறமைகள், அவளது தவறுகள் என யாவும் அக்குழுவால் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இரினாவிடம் அவர்களிற்கு மிகவும் பிடித்திருந்தது என்னவெனில், உயிர் தப்ப வேறு வழிகள் ஏதும் இல்லாத வேளையில், மரணத்தை மட்டுமே அவள் உறுதியாக எதிர் கொள்ளத் துணிந்தாள் எனும் அந்தத் தகுதிதான்.

KGB யில் இரினா பெறும் பயிற்சிகள், அதிகாரத்தின் கட்டளைகளிற்கு மறுபேச்சு ஏதும் பேசாது அடி பணியும் ஒரு தேர்ந்த கொலை எந்திரமாக அவளை வார்த்து எடுக்கிறது. KGBல் தான் பெற்ற பயிற்சிகளையும், தன் கவர்ச்சியையும் உபயோகித்து, அனாதை விடுதிக்கு நள்ளிரவில் விஜயம் செய்த அதிகாரி யார் என்பதை இரினா கண்டு பிடித்து விடுகிறாள். அந்த அதிகாரியின் பெயர் வசிலி இவானென்கோ. KGBன் உயர் மட்ட அதிகாரிகளுடன் நெருக்கம் கொண்டவன். KGBல் அவள் இணைந்ததிற்கு ஒர் புதிய அர்த்தம் கிடைத்து இருப்பதை இரினா உணர்ந்து கொள்கிறாள். இப்போது வாழ்வில் அவளிற்கு தேவையானது ஒன்று மட்டுமே, அது வசிலி இவானென்கோவின் ரத்தம்….

iri3 12 வருடங்களின் பின் இரினா எவ்வாறு வசிலி இவானென்கோவை நீயூயார்க்கில் வைத்து பழிவாங்குகிறாள் என்பதை விபரித்து செல்கிறது தொடரும் கதை. ஜெசிக்காவை KGBன் பக்கம் இழுப்பதற்காக இரினா, ஜெசிக்காவுடன் ஆடும் காதல் நாடகம், கேணல் ஏமஸை கொலை செய்யும் முயற்சி, மங்கூஸ்ட்டுடனான அறிமுகம் என XIII காமிக்ஸ் தொடரின் பிரபல பாத்திரங்களை கதைக் களத்திற்குள் புகுத்தியிருக்கிறார் கதாசிரியர் Corbeyran. கதாசிரியர் கோர்பேரான் எழுதிய ஒரு காமிக்ஸ் தொடர் குறித்து இரவுப் பறவையின் கானம் பதிவில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஜிவ்வென வேக விமானம் போல் பறக்க வேண்டிய கதை, மழையில் நனைந்த புறாவாக தத்துகிறது. கதையின் ஆரம்பத்தில் இருந்த வேகம் கதையின் ஓட்டத்தில் காணமல் போய்விடுகிறது. இரினா, இவானென்கோவிற்கு நெருங்கிய KGBன் குறிப்பிடத்தக்க அதிகாரியான விளாடிமீரை சந்தித்தல், விளாடிமீர் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தும் அவனைத் திருமணம் செய்தல், ஜெசிக்காவுடனான முதல் சந்திப்பிலேயே அவளை இரினா தன் காதல் வலையில் வீழ்த்தல், அமெரிக்காவில் KGBக்காக இரினா ஆற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் யாவும், கதையில் தட்டில் வைத்து இரினாவிற்கு வாய்ப்புக்களும்,அதிர்ஷ்டங்களும் பரிமாறப்படும் எளிமையான உணர்வை வழங்குகின்றன. இவற்றை போராடி அடைந்தால் அல்லவா வாசகனிற்கு இரினா பாத்திரம் மறக்க முடியாத ஒன்றாகவிருந்திருக்கும். அதிலும் KGB அதிகாரி இவானென்கோ, ஜெசிக்காவை சந்தித்த இரு மணி நேரத்திலேயே, அவளுடன் காதல் செய்வதற்காக ஒரு மூன்றாம்தர ஹோட்டலிற்கு ஓடி வருவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

தன் தோழி யூலியா போலவே தோற்றம் கொண்டவள் ஜெசிக்கா என்பதால்தான் அவள் மேல் இரினா கூடுதலான ஈர்ப்பு உடையவளாக இருக்கிறாள் என்று கதையில் கூறப்படுகிறது. ஆனால் இந்த உறவை வலுவாக்கும் உணர்வுகள் சிறப்பாக கதையில் வெளிப்படவில்லை என்பதால் அந்த உறவு நாடகம் எனும் நிலையிலேயே நின்று விடுகிறது. கதையில் இரினா குறித்து மங்கூஸ்ட் எவ்விதம் தெரிந்து கொண்டான் என்பதற்குரிய எந்தக் காரணங்களும் வழங்கப்படவில்லை. வாசகர்கள் பக்கங்களை பிறாண்டிக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி.

iri4 கேணல் ஏமஸ் கொலை முயற்சியும், அதன் பின்னே இருக்கும் KGBன் சதியும் உண்மையிலேயே ஒரு அமெச்சூர் நாடகம் பார்த்த உணர்வை வழங்கும் தரத்தில் இருக்கிறது. இவ்வகையான ஒரு நொளாநொளா கதை சொல்லலால், XIIIன் மிக முக்கிய வில்லியான இரினா பாத்திரத்தை வாசகர்கள் மனதில் உறுதியாக ஊன்றக் கிடைத்த வாய்ப்பை அநியாயத்திற்கும் தவற விட்டிருக்கிறார் கதாசிரியர்.

இரினா தங்கியிருந்த அனாதை விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை வாசகர்கள் அறியும் போது, இரினா மேல் இரக்கப்படுவதற்குப் பதிலாக அட போங்கய்யா என்று சொல்ல வைத்து விடுகிறது விறுவிறுப்பற்ற கதையோட்டம். மங்கூஸ்ட் கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு, மங்கூஸ்ட் பாத்திரத்திற்கு அக்கதையின் கதாசிரியர் சேவியர் டாரிசன் வழங்கியிருந்த புதிய பரிமாணம் போன்ற அம்சங்கள் இந்தக் கதையில் உயிரற்று மிதக்கிறது.

கதைக்கு சிறப்பான சித்திரங்களை வரைந்திருப்பவர் Philippe Berthet. கதை நெடுகிலும் மயக்கமான ஒரு இருள் மறைந்திருக்குமாற்போல் சித்திரங்களை வழங்கியிருக்கிறார் அவர். பனி படர்ந்த பெலரூஸ், வசந்தகால அமெரிக்கா, வான்ஸிற்கு இஷ்டமான மழைக்காட்சி என்று தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஓவியக் கலைஞர் பிலிப் பேர்த்தே.

சித்திரங்களில் அவர் காட்டியிருக்கும் ஒளி விளையாட்டுக்கள் அருமை. இளைமைப் பருவ இரினாவின் அழகை அவர் அழகாக வடித்திருக்கிறார். இரினாவினதும், ஜெசிக்காவினதும் இளமை அழகுகள் வாசகர்களிற்கு தாராளமாக அள்ளி வழங்கப்படுகிறது. வான்ஸ் உருவாக்கிய இரினாவைத் தழுவி, ஒரு புதிய, இளமையான இரினாவை வாசகர்களிற்கு தருவதில் பேர்த்தே வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் காமிக்ஸ் ஆல்பத்தை காப்பாற்றுவதில் பேர்த்தேயின் சித்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல.

XIII மிஸ்டரியின் இரண்டாவது ஆல்பமாகிய இரினா, வான்ஹாம் உருவாக்கிய இரினாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. பணத்தை அள்ளுவதற்காக மட்டுமே தொடரை நீட்டினால், இவ்வகையான விளைவுகள் தவிர்க்க முடியாத ஒன்றே. தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் இருளில் நின்றவாறே எங்களைப் பார்த்து கவர்சியாகப் புன்னகைக்கிறாள் அழகி இரினா. அவளைச் சூழ்ந்திருக்கும் அந்த இருள் நீங்கப் போவதில்லை. வான்ஹாம் உருவாக்கிய இரினா மட்டுமே எங்கள் மனதில் நிலைத்திருப்பாள். இருள் மாறாமலே. [*]

Wednesday, April 21, 2010

முன்னே ஓடும் மிருகம்


முன்னே ஓடும் மிருகம் எனும் இப்பதிவைத் தயாரித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடிச் சென்று விட்ட நிலையில் இன்று இதனை உங்கள் பார்வைக்கு எடுத்து வருகிறேன். இப்பதிவை முதலில் நான் எழுத ஆரம்பித்த போது என்னிடம் ஸ்கேனர் இருந்ததில்லை. என் ஆரம்ப கால பதிவுகள் சின்ன அணில் மார்க் டிஜிட்டல் கமெராவினால் பிடிக்கப்பட்ட படங்களின் துணையுடனேயே வெளியாகின என்பதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சின்ன அணில் கமெராவானது எனக்கு அலெக்ஸாண்டார் பிரபுவால் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நண்பர்கள் அறிவீர்கள்.

ஸ்டீபன் கிங்கின் இருள்கோபுரம் பதிவிலேயே ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை நான் முதன்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தேன். அந்தக் காலப்பகுதியில் என் வலைப்பூவில் காமிக்ஸ் குறித்து மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன் [லார்கோவின்ச் திரைப்பட விமர்சனம் ஒரு விதி விலக்கு]. ஸ்கேனர் தந்த மயக்கத்தில், முன்னே ஓடும் மிருகம் எனும் இப்பதிவில் ஸ்கேனர் உதவியால் பிரதி செய்யப்பட்ட சில படங்களையும் இணைத்து, சின்ன அணில் மார்க் டிஜிட்டல் கமெரா உதவியால் பிடிக்கப்பட்ட பக்கங்களையும் இணைத்து பதிவை ஒரு வகை ரீ மிக்ஸாக நிறைவு செய்திருந்தேன். ஆனால் இன்று வரை இப்பதிவானது வெளியிடப்படாமல் ஓரத்தில் தூக்கிப்போட்ட பதிவாக இருந்து வந்திருக்கிறது. கடந்த பதிவான ஏலகிரியில் சிறுத்தை வேட்டையானது இப்பதிவிற்கு ஒரு புதிய கதவை திறந்து விட்டிருக்கிறது. இப்பதிவை நீங்கள் படிக்கும் போது அதனைப் புரிந்து கொள்வீர்கள். இந்த தருணத்தில் இப்பதிவை நண்பர் ஒருவர் மொழிபெயர்த்துள்ள ஒரு கவிதையுடன் வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன்,

பறவைகளின் அழுகை

மீன்களின் கண்ணீர்

ஏகும் இளவேனில்.


numérisation0047

ma2

18ம் நூற்றாண்டு. பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பொண்ட் டு வொ வுவசான்எனும் மலையோரக் கிராமமொன்றின் எல்லையில், நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் பைன் மரக்கூட்டங்களின் அருகில், சேதமுற்றிருக்கும் ஒர் வீட்டை ஆராய்ந்து கொண்டிருக்கிறது பிரான்ஸ் மன்னனின் சிறப்பு வீரர் குழு. வீட்டினுள் பொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. ஆடு ஒன்றின் வயிற்றுப் பகுதி உண்ணப்பட்டு, குடல்கள் வெளியேறிய நிலையில் அது இறந்து போய்க் கிடக்கிறது. வீட்டில் வசித்த தம்பதிகளின் நிலையும் இந்நிலையிலிருந்து மாறுபடவில்லை.

வீரர்களின் உரையாடலிலிருந்து சேதத்தை ஏற்படுத்திய மிருகத்தினை கொல்வதற்காக அவர்கள் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. தாம் கற்பனை செய்திருந்ததிலும் பார்க்க மிருகம் அளவில் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறான் ஒர் வீரன். மற்றொருவனோ மிருகத்தின் எடை ஒர் டன் வரை இருக்கலாம் எனக் கூறுகிறான். தேடலை வீட்டில் முடித்துக் கொண்ட வீரர்களின் காப்டனான சேவியர், வீரர்களை கிராமத்தை நோக்கி நகரச் சொல்கிறான்.

மலைகளும், மரங்களும், மென் குளிர்காற்றும், சூழ நின்று பசுமை தர வீற்றிருக்கும் கிராமத்தினுள் நுழையும் வீரர்கள், கிராமம் வெறிச்சோடிக் கிடப்பதை அவதானிக்கிறார்கள். வீடுகளில் யாருமில்லை, விளை நிலங்களிலும் யாருமில்லை. கிராமத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தின் மேலாக காகங்கள் கூட்டமாக பறப்பதை அவதானிக்கும் காப்டன் சேவியர், வீரர்களையும் அழைத்துக்கொண்டு அப்பகுதியை நோக்கி செல்கிறான்.

ஆலயத்தின் அருகிலிருந்த புதைகுழிகள் கிளறப்பட்டு, மனித எலும்புகளும், மண்டையோடுகளும் வெளியே சிதறிக் கிடக்கின்றன. தன் வீரர்களை குதிரையிலிருந்து கீழே இறங்குமாறு உத்தரவிடும் சேவியர், மிருகத்தின் தடங்களைத் தேடி அது திரும்பிச் சென்ற பாதையைக் கண்டுபிடிக்குமாறும் , மறைந்து விட்ட கிராம மக்களை தேடும் படியும் அவர்களைப் பணிக்கிறான்.

வீரர்கள் தேடலை ஆரம்பிக்கிறார்கள். பயத்தினால் ஆலயத்தினுள் ஒளிந்து கொண்டிருக்கும் கிராம மக்களை இறுதியில் அவர்கள் கண்டு பிடிக்கிறார்கள். வீரர்களிற்கு உணவு தந்து , களைப்பாறச் செய்யும் கிராம மக்கள், நடந்தவற்றை வீரர்களிடம் விபரிக்கிறார்கள்.

இரவின் ஆரம்பத்தில் தங்கள் விளை நிலங்களில் வேலை முடிந்து வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருந்த கிராமத்தவர்களின் காதில், கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள வீட்டில் இருந்தவர்களின் கதறல் சத்தங்கள் கேட்டிருக்கிறது. வீட்டிலிருந்தவர்களின் கதறலிற்கும் மேலாக ஒலித்த ஒரு மிருகத்தின் கர்ஜனையால் அவர்கள் குலை நடுங்கியது. அவர்கள் அவ் வீட்டினை நோக்கி ஓடினார்கள். காட்டினுள் மீண்டும் அம்மிருகம் நுழைவதற்கு முன்பாக அதன் அளவைக் கண்டவர்கள் பயத்தினால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

numérisation0048அவர்களின் பேச்சை இடைமறிக்கும் சேவியர், அம்மிருகத்தின் சாயல் எப்படி இருந்தது எனக் கேட்கிறான். அதன் சாயல் கரடியை ஒத்திருந்தாலும் கரடியை விட அது அளவில் பெரிதாக இருந்தது என்கிறான் ஒருவன். இதில் ஒருவர் அது ஒர் நர ஒநாயாக இருக்கலாம் எனத் தன் கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்.

அம்மிருகத்தை கண்டு பீதியடைந்த கிராமத்தவர்கள், கிராமத்து ஆலய மணியை அடித்து, கிராம மக்களை ஒன்று கூட்டி ஆலயத்தினுள் ஒளிந்து கொண்டதாகவும், இரவு முழுதும் ஆலயத்தை அண்மித்த பகுதியின் தரையைக் கிளறியவாறே அம்மிருகம் மூர்க்கமாக ஓலமிட்டுக் கொண்டு அலைந்ததாகவும் கிராமத்து மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மிருகம் திரும்பி வந்து மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் கிராம மக்கள், இறந்த உடல்களை நஞ்சூட்டலாம், பொறிகள் தோண்டலாம் என ஆலோசனை தெரிவிக்கிறார்கள். அருகிலுள்ள மலைக் கிராமங்களில் இவ்வழிமுறைகளை கையாண்டும் அம்மிருகம் மிகத் தந்திரமாகவும், கவனமாகவும் அவற்றை தவிர்த்ததை கிராம மக்களிற்கு விளக்கும் சேவியர், இம்மிருகம் தான் தாக்கும் இரைகளை முழுமையாக உண்ணாது அவற்றின் வயிற்றுப் பகுதியை மட்டுமே உண்ணுகிறது என்றும், ஒர் முறை தாக்கிய இடத்தில் அது மறு முறை தாக்குவதில்லை எனவும், இது சாதாரமான ஒர் மிருகம் அல்ல என்றும் கூறுகிறான்.

பிரான்ஸ் மன்னர் இம்மிருகத்தினைக் கொல்ல தங்களை பிரத்தியேகமாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கும் சேவியர், மிருகத்தின் தடங்கள் பிரான்ஸின் எல்லையைக் கடந்து இத்தாலியின் எல்லைக்குள் சென்றிருப்பதால், தங்களால் ஒர் முழு வீரர் குழுவாகவோ அல்லது பிரான்ஸ் வீரர்களின் சீருடையிலோ இத்தாலிய எல்லையைக் கடந்து அம்மிருகத்தினை வேட்டையாட முடியாது என்கிறான். தான் எல்லையைக் கடந்து செல்லப் போவதாகவும் தன்னுடன் கூட வர விரும்பும் வீரர்கள் யார் எனத் தெரிவிக்கும் படியும் சேவியர் தன் வீரர்களிடம் வினவுகிறான்.

ma3

பிரான்ஸ் எல்லையைத் தாண்டி இத்தாலியின் சவுவா பிரதேச மலைக்காடுகளில் மிருகத்தினை தேடிச் செல்கிறது வீரர்கள் குழு.பளிங்கு நீர் கொண்ட அருவிகளையும், உயர்ந்த மரங்களையும், குளிர் காற்றையும் தன்னுடன் கொண்ட வனத்தை குதிரைகளின் மீதமர்ந்து ஊடுருவிச் செல்கிறது அச்சிறு குழு.

வீரர்கள் மத்தியில் வேட்டையாடப்படும் மிருகம் குறித்து பலவித ஊகங்கள் பேசப்படுகின்றன. ஜான் வஃப்டிஸ்ட், வீரர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாது அமைதியாக வருகிறான். அவனை மற்ற வீரர்கள் கிண்டல் செய்கின்றனர். ஜானின் உடையிலிருந்தே அவன் பிரான்ஸ் மன்னரின் வீரர் குழுவைச் சேர்ந்தவன் அல்ல என்பது தெரிகிறது. காப்டன் சேவியர், ஜானைத் தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என தங்களிற்குள் பேசிக் கொள்கிறார்கள் வீரர்கள்.

பயணத்தின் ஒர் தருணத்தில், காட்டினுள் முதுகு மேல் சுமைகளை சுமந்து கொண்டு நடந்து வரும் மனிதர்களைக் காணும் சேவியர் குதிரைகளை நிறுத்த சைகை செய்கிறான். சுமைகளை சுமந்து வந்த கூட்டத்தின் தலைவன் போல் காணப்படுபவன் சேவியரிடம் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என வினவ, தாங்கள் ரோமை நோக்கி யாத்திரை செய்கிறோம் எனப் பதில் தருகிறான் சேவியர். ஆனால் அக்கூட்டத்தினர் மீது சேவியரிற்கு சந்தேகம் உண்டாகிறது. காடுகள் வழியே, தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் ஒரு கூட்டமாக அது இருக்கலாம் என்பது சேவியரின் ஐயம்.

புகையிலை வேண்டுமா எனக் கேட்டவாறே தன் பையினுள் கையை வைத்து துப்பாக்கியை எடுக்க முனையும் கூட்டத்தின் தலைவனை அவன் வாயில் சுட்டுக் கொல்கிறான் சேவியர். தொடரும் துப்பாக்கி மோதலில் சில கடத்தல்காரர்கள் இறந்து விழ, எஞ்சியுள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள். தன் அருகில் இருந்த ஒர் கடத்தல் காரனை குறிபார்த்துச் சுடத் தவறி விடுகிறான் ஜான்.

numérisation0050

ma4

தாக்குதல் தந்த அதிர்ச்சியாலும், வனத்தினூடு செய்த பயணத்தின் களைப்பினாலும், ஏரி ஒன்றின் அருகில் ஓய்வெடுக்க ஒதுங்குகிறது வீரர் குழு. மோதலின் போது காயம் பட்ட வீரனொருவனின் காயத்திற்கு கட்டுப் போடுகிறான் ஜான். ஓய்வெடுக்கும் வீரர்கள், ஜான் அருகிலிருந்த நபரைக் கூட குறி பார்த்து சுட முடியாததைக் கூறி கிண்டல் பண்ணுகிறார்கள்.

சேவியர், ஜானிடம் அவன் யாரையும் இதுவரை கொன்றதில்லையா என வினவுகிறான். ஜானோ, துரதிர்ஷ்டவசமாக நான் கொன்றிருக்கிறேன், ஆனால் நான் அச் செயலை விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறான்.

சேவியரோ, தான் ஒரு முறை துப்பாக்கி ஏந்தி நின்ற ஒரு சிறுவனை நெற்றியில் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறான். அது எனக்குப் பெருமை தரவில்லை ஆனால் அதனை மாற்றியமைப்பதற்காக கடந்த காலத்திற்கு என்னால் திரும்பிச் செல்ல முடியாது. அதனுடன் நான் வாழ்கிறேன், அதிலிருந்து முன்னோக்கிச் செல்கிறேன் அதே போன்று ஜானும் கடந்த காலத்தின் கசப்புக்களை மறக்க முயல வேண்டும் என்கிறான்.

இதே வேளை பயங்கரமான கர்ஜனை ஒன்று அவர்கள் தங்கியிருந்த பகுதியில் ஒலிக்கிறது. ஓய்வில் நின்ற குதிரைகள் தறி கெட்டு ஓடுகின்றன. கர்ஜனை வந்த திசை நோக்கி ஜானும், சேவியரும் ஓடுகிறார்கள். ஏரியின் கரையருகில் ஒர் வீரன், வயிற்றுப் பகுதி கடித்து உண்ணப்பட்டுள்ள நிலையில் இறந்து போய்க் கிடக்கின்றான். ஏரியின் கரைகளை நோட்டம் விடும் சேவியர், ஜான் சுட்டிக் காட்டிய திசையில், தூரத்தில் தெரியும் ஒர் மிருகத்தின் உருவத்தை நோக்கிச் சுடுகிறான் ஆனால் மிருகம் மறைந்து விடுகிறது.

numérisation0051

அழகான மலைப் பூக்களில், தேனீக்கள் உற்சாகமாக தேன் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. விழுந்து கிடந்த மரமொன்றின் உடல் மீது இரு பைன் மரக் காய்களை இலக்கென வைத்து, ஜானிற்கு துப்பாக்கி சுடப் பயிற்சி தருகிறான் சேவியர்.

ஜான் விரைவாக கற்றுக் கொள்வதாக தன் பாராட்டுக்களையும் சேவியர் தெரிவிக்கின்றான். பயிற்சியை முடித்துக் கொண்டு இருவரும் வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்புகிறார்கள்.

அருகில் இருந்த கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வரச் சென்ற வீரர்கள், சற்றுத் தொலைவிலுள்ள மலைக் கிராமமொன்றில் பசுக்கூட்டங்களை மிருகம் தாக்கியதாகவும், எல்லைகளினூடாக பொருட்களைக் கடத்திச் செல்பவர்களோடு தாங்கள் கொண்ட மோதல் கிராம அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப் பட்டால் பிரான்சின் மன்னர் கூட தங்களை விடுவிக்க மாட்டார் என்பதனை உணரும் சேவியர், தான் தனியே மிருக வேட்டையை தொடர்வதாகவும், மற்றவர்களை திரும்பி போகவும் சொல்கிறான்.

ma5

சில வீரர்கள் கிளம்பிச் சென்றுவிட, ஜானும், எஞ்சிய சில வீரர்களும் சேவியருடன் மிருகத்தினை தேடிச் செல்ல உடன் படுகிறார்கள். மலையில் வளர்ந்துள்ள முட் செடியொன்றை[Thistle] அவதானிக்கும் ஜான், நாளை மதியம் மழை வரும் என்கிறான். உடனிருந்த வீரர்கள் அவன் ஒர் கிறுக்கன் என நினைத்துக் கொள்கிறார்கள்.

தாங்கள் அதிகாலையில் பயணத்தை ஆரம்பித்தாலும் கிராமத்தை மழை வருமுன் சென்றடைய முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். மழையினால் மிருகத்தின் தடங்கள் அழிந்தால் பயணத்தில் பலனேதும் இல்லையல்லவா. எனவே அன்றிரவே கிளம்பலாம் என்கிறான் ஜான்.

இந்த மலைக் காட்டில் இரவில் யார் வழி காட்டுவார்கள் என வீரர்கள் வினவ, மலையின் புற்பரப்பில் மலர்ந்திருக்கும் பூக்களில் தேனெடுத்துச் செல்லும் தேனீக்களை தொடர்ந்து செல்கிறான் ஜான். சிறிது நேர தொடர்தலின் பின் தேனீக்களை வளர்க்கும் நபர் ஒருவனைக் கண்டு கொள்ளும் ஜான் அவனுடன் உரையாடுகிறான்.

வசந்த காலத்தின் போது மலைகளில் தேனீக் கூடுகளை இடங்கள் மாற்றுவர். மலையின் வெவ்வெறு பகுதிகளில் மலர்ந்து கிடக்கும் மலர்களின் தேனை தேனீக்கள் உறிஞ்சுவதற்காகவே இந்த நடவடிக்கை. தேன் கூடுகளை இடம் மாற்ற வேண்டுமானால், தேனீக்கள் கூட்டில் உறங்கும் இரவு வேளையே அதற்கு உகந்தது. வீரர்கள் குதிரைகளில் தன் தேன் கூடுகளை சுமந்து வந்து உதவுவார்களேயானால், அவர்களிற்கு தான் இரவில் காட்டில் வழிகாட்டுவதாக சம்மதம் தருகிறான் தேனீக்கள் வளர்ப்பவன்.

பயணம் ஆரம்பமாகிறது. கையில் ஏந்திய லாந்தர்களுடன் வனத்தின் அடர்ந்த இருளினூடு நடந்து செல்கிறார்கள் அவர்கள். மலைப் பாதையின் ஒரு பகுதியில் ஓநாய்க் கூட்டமொன்றின், மினுங்கும் வெளிர் பச்சைக் கண்கள் இரவினைக் கிழித்து அவர்களை வெறித்துப் பார்க்கின்றன. அவர்களின் உள்ளம் கடவுளை வேண்டிக் கொள்கிறது. அவர்களின் அதிர்ஷ்டம் ஓநாய்கள் அவர்களைத் தாக்கவில்லை.

காலையில் அவர்கள் செல்ல வேண்டிய கிராமத்தின் வழியில் அவர்களை விடுகிறான் தேனீ வளர்ப்பவன். அப் பாதையில் தங்கள் பயணத்தை தொடரும் வீரர் குழுவை பலத்த மழை எதிர் கொள்கிறது. துப்பாக்கியின் வெடி மருந்துகள் நனையாது பாதுகாக்கும் படி வீரர்களைக் கேட்டுக் கொள்கிறான் சேவியர். அவ்வேளையில் அவர்களை, தங்கள் கழுத்தில் கட்டியுள்ள சிறு மணிகள் ஒலியெழுப்ப பதட்டத்துடன் ஒடிக், கடந்து செல்கின்றது ஒர் பசுக்கூட்டம்.

அப்பசுக் கூட்டத்தினை தொடர்ந்து ஓடி வரும் பெண்கள், வீரர்களைக் கண்டு கொள்கிறார்கள். இருள் மிருகம் திரும்பவும் வந்து விட்டதாகவும், தங்களிற்கு உதவி செய்யும் படியும் வீரர்களை வேண்டுகிறார்கள். பெண்னொருத்தி மலையின் ஒர் பகுதியில் அமைந்திருக்கும் சிலுவை ஒன்றினைச் சுட்டிக் காட்டுகிறாள். கடும் மழையினுள், இருண்ட உருவமாய், சிலுவையை விட உயரமாக எழுந்து நிற்கிறது அந்த மிருகம். சிலுவையை நோக்கி குதிரைகளில் விரைகிறார்கள் வீரர்கள். அவர்கள் சிலுவையை நெருங்கும் வேளையில் அம்மிருகம் அங்கிருந்து மறைந்து விடுகிறது.

numérisation0049

அன்றைய இரவில், கிராமத்தில் தங்கும் வீரர்களிடம் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்கள் கிராமத்தில் வாழும் பெண்கள், ஆண்கள் மலை அடிவாரத்தை அண்டிய பகுதிகளில் வேலை செய்வதால் அவர்களால் தினந்தோறும் வீடு திரும்ப முடியாது எனும் தகவல் வீரர்கள் சிலரிடம் ரகசியப் புன்னகையை உண்டாக்குகிறது. பெண்களிடம் மிருகத்தைப் பற்றி வினவுகிறான் சேவியர். அம் மிருகம் மலையின் உயர்ந்த சிகரப் பகுதியில், மனிதர்கள் இது வரை காலடி எடுத்து வைக்காத பிரதேசத்தில் வாழ்வதாக கூறுகிறார்கள் பெண்கள். இனி மிருகத்தை தொடர்வது பைத்தியக்காரத்தனமான செயல் என மற்ற வீரர்கள் ஒதுங்கிக் கொள்ள, மறு நாள் காலையில், மனிதர்கள் சென்றிராத மலைப்பகுதியினை நோக்கி மிருகத்தினை தேடிச்செல்கிறார்கள் ஜானும், சேவியரும்......

ma6

மலைப் பயணத்தின் ரம்யம், அதன் அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள், மலைகளின் பிரம்மாண்டமும் மனிதனின் தனிமையும் மனித மனதில் ஆடும் விளையாட்டு, தன் எல்லைக்குள் அத்து மீறி விட்ட இரு மனிதர்களை அலைக்கழித்து, ஆட்டம் காட்டும் தந்திரம் அறிந்த ஒர் மிருகம், இறுதியாக மனிதனிற்கும் மிருகத்திற்குமிடையிலான நேருக்குநேர் மோதல். இரு மனிதர்களின் வாழ்க்கையிலும் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் எனத் தொடர்கிறது கதை.

Le Marquis d'Anaon(The Marquis of Anaon) எனும் காமிக்ஸ் தொடர் வரிசையில், 2006ல் வெளியான La Bete [மிருகம்] எனப்படும், நான்காவது ஆல்பம் இதுவாகும். 18ம் நூற்றாண்டில் பிரபல்யமான இக்கதை வரிசை இப்போது காமிக்ஸ் வடிவில் வெளியாகிறது. லு மார்கி ட'அனாவொன் என்பது அல்லறும் ஆன்மாக்களின் ஆண்டகை எனப் பொருள் படும். இது வரையில் மொத்தம் 5 ஆல்பங்கள் இக் கதை வரிசையில் வெளியாகி உள்ளன.

எந்த வித அதிரடி ஆர்பாட்டங்களோ, அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளோ இல்லாது அமைதியாக நகர்கிறது கதை. மனிதர்களை, மனிதர்களாகவே சித்தரிக்கும் இக்கதையானது வேகக் கதை ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளாது.

இயற்கையோடு ஒன்றி வாழும் மலைப் பிரதேச மக்கள், பணம் என்பதன் தாக்கம் பற்றி அதிகம் அறிந்திராத மக்கள், ஒருவரிற்கு ஒருவர் உதவி செய்து அனைவரும் நலமாக வாழ வேண்டுமென வாழும் ஏழை மக்கள், கடந்த கால நினைவுகளில் கூடு கட்டி முடங்கிப் போயிருக்கும் ஜான் [இவர் தான் அந்த ஆண்டகை] , கடந்த காலத்தின் ஆவிகளை தான் வெற்றிகரமாக கடந்து விட்டேன் எனும் மாயையில் புரளும் காப்டன் சேவியர், மனிதனின் வாழ்விட எல்லைகளும், அவன் ஆசைகளும் விரிந்து கொள்ள, குறுகிய பகுதிக்குள் தங்களை அடக்கி கொள்ள வேண்டிய இயற்கையும் ,விலங்குகளும் என கதையை தெளிவாக நகர்த்திச் செல்கிறார் ஃபவியன் வெஹ்ல்மேன் (Fabien Vehlmann).

வெஹ்ல்மேன், 1972ல் பிரான்சில் பிறந்தவர். சிறு வயது முதலே காமிக்ஸ் மேல் காதல் கொண்டவர். நிர்வாகத் துறையில் கல்வி. சித்திரக்காரராக முயற்சித்து பின் கதாசிரியராக தன்னை நிலை நாட்டிக் கொண்டார். இவரின் மற்றுமொரு புகழ் பெற்ற தொடரான கீரின் மனோர் பற்றிய பதிவை நண்பர் ரஃபிக் அவர்களின் காமிக்காலஜியில் நீங்கள் படிக்கலாம்.

கதையின் மென்மையான ஓட்டத்திற்கேற்ப, மலைப் பிரதேசத்தின் வனப்பை அழகான காட்சிகளாக விரிய விட்டிருக்கிறார் மாத்தியூ பொன்னொம் [Mathhieu Bonhomme]. 18ம் நூற்றாண்டின் மலைப்பகுதி கிராமங்கள், அங்கு வசிக்கும் மக்கள், அவர்களின் வதிவிடங்கள், மலைக் காடுகளின் வனப்பு, மலைகளின் ரம்யம், திகில் ஊறச் செய்யும் இரவுக் காட்சிகள் என தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இறுதி மோதல் காட்சியில் சித்திரங்களை மிகையின்றி இயல்பாக வரைந்து மனதை அள்ளுகிறார். இவர் 1973ல் பாரிசில் பிறந்தவர். சித்திரங்கள் வரைதல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தன் கல்வியையும் கலைத்துறையிலேயே தொடர்ந்தார். ஸ்பிரு போன்ற சித்திர இதழ்களில் பணியாற்றியவர். என் சித்திரங்கள், முதலில் என்னைக் களிப்படையச் செய்தாலே அது வாசகர்களையும் களிப்படையச் செய்யும் என்று கூறுபவர். காமிக்ஸ் உலகின் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர். சுருக்கமாக கூறினால், இயற்கை ஆர்வலர்களைக் கவரும் கதையாக இக்காமிக்ஸ் கதை அமைந்திருக்கிறது.

இயற்கையில் வாழும் மிருகங்களை எளிதாக வெற்றி கொள்ளும் மனிதன், தன் மனதில் வாழும் மிருகங்களை வெற்றி கொள்வதில் எப்போதும் ஜெயித்து விடுவதில்லை. தானும் ஒரு மிருகம் என்பதை அவன் இலகுவாக மறந்துவிடக்கூடியவனாகவே வாழ்ந்து வருகிறான். மிருகம் முன்னே ஓடிக் கொண்டேயிருக்கிறது. [***]


ஆர்வலர்களிற்கு

Fabien Vehlmann

Mathhieu Bonhomme

Le Marquis d'Anaon