Monday, May 31, 2010

ரேப் ட்ராகன் - 3


குத்தலகேசியும் குத்துப்பிடியும்

இளவரசி குந்தவி கடத்தப்பட்ட செய்தி அறிந்த குத்து நகர மன்னன் குத்தலகேசி, முதலில் அந்த செய்தியை நம்ப முடியாது வியந்தான். அவன் மனதில் ரகசியமாக நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்தது. அப்பாடா தீர்ந்தது பெரும் தலைவலி என்று மனதில் களி கொண்டவாறே மந்திராலோசனை மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் மன்னன் குத்தலகேசி.

மன்னர் குத்தலகேசியின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒருவாறு ஊகித்துக் கொண்ட குத்து நகர மந்திரி குத்துப்பிடி தொண்டையை மென்மையாக செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

- மன்னாதி மன்னனே, என்ன இருந்தாலும் குந்தவி உங்கள் புத்ரி

- ஹா.. குந்தவி என் புத்ரியல்ல என் மானத்தை வாங்க வந்த சத்ரி அவள்.

- அதற்காக!! மன்னன் மகளை புரட்சிக்காரன் ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து, எம் கடுங்காவலைக் கடந்து, அந்தப்புர பள்ளியறைக்குள் நுழைந்து கடத்திச் சென்றிருப்பதனை அப்படியே விட்டுவிட முடியுமா?!

- விட்டு விட்டோமானால் எம்மிடம் எஞ்சியிருக்கும் கொஞ்ச மானமாவது மிஞ்சும், இவ்வார்த்தைகளை உதிர்த்தபோது மன்னன் குத்தலகேசியின் குரல் தாழ்ந்திருந்தது.

- மன்னா, நாளை இந்த ஊரும், உலகமும் உம்மைத் தூற்றுமே, பெற்ற மகளையே காப்பாற்ற முடியாத மன்னன் என இகழுமே, ஏனைய நகர மன்னர்கள் எம்மைப் பார்த்து நகைப்பார்களே என்பதனைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் என்றவாறே மந்திரி குத்துப்பிடி மதுபான வகையறாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தன மர மேஜையை அணுகினார்.

- குத்துப்பிடி என் மகள் குந்தவி பற்றி உனக்குத் தெரியாதா? அவள் உன்னையும்கூட…. மன்னன் மேலும் வார்த்தைகளை தொடரமுடியாதபடி அவனை அவசர அவசரமாக இடைவெட்டிய மந்திரி குத்துப்பிடி,

- வேண்டாம் மன்னர் மன்னா, அதனை நான் மறந்து விட்டேன். இன்னமும் காயங்கள்கூட சரியாக ஆறவில்லை. ராஜ வைத்தியர் ஏழு அவர்கள் தந்த பச்சிலை வைத்தியம்தான் கொஞ்சம் உதவுகிறது என்றவாறே மதுக்குப்பி ஒன்றிலிருந்த மதுவை ஒரு குவளையில் அளவாக ஊற்றி, இரு குளிர் கட்டிகள் போட்டு மன்னன் குத்தலகேசியிடம் தந்தார் மந்திரி குத்துப்பிடி. குந்தவி தனக்குச் செய்த அந்தப் பாதகச் செயலை எண்ணிப் பார்க்கையில் அவர் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் கட்டியணைத்துக் கொண்டு சிலிர்த்தெழுந்தன.

மந்திரியிடமிருந்து மதுக் குவளையைப் பெற்ற மன்னன் குத்தலகேசி, குளிர் கட்டிகள் மதுக் குவளையின் சுவரில் மோதி மென்சதங்கை ஒலி எழுப்பும் வகையில் குவளையைச் சில சுழட்டுகள் சுழட்டி, பின் தன் இதழ்களில் குவளையைப் பொருத்தி ஒரு மெகா இழுவை இழுத்தார். தரமான அந்த மது அவர் தொண்டையை ஆலிங்கணம் செய்தது. ஹ்ம்ம்ம்ம்… என்ற பெருமூச்சொன்று மன்னன் குத்தலகேசியிடமிருந்து சோகமாக வெளிவந்தது.

- மந்திரியாரே, இந்த குத்து நகரில் என் மகள் குந்தவியால் கற்பழிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆண்கள் வெகு சிலரே. அவள் தொலைந்தாள் எனில் இந்நகரம் அவள் கொடும் பிடியிலிருந்து விடுபடும். என் மனமும் வேதனைகள் சிலவற்றிலிருந்து விடைபெறும். மன்னரின் மனதின் சோகங்களை மது, வார்த்தைகளாக மாற்றி வெளியே தள்ளியது.

- மன்னா, நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனாலும் இது எங்கள் கவுரவப் பிரச்சினை. குந்தவியை காப்பாற்ற நாம் முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடத்தியவன் இந்நாட்டின் முன்னாள் வீர கவி, ஆயனச் சிற்பி ரஃபிக். முன்பு ஒரு காலத்தில் உங்கள் மகள், அவனை உயிராக காதலித்தாள். ஆனால் அதனை நீங்கள் தடுத்தீர்கள். ரஃபிக்கிற்கு நீதியற்று தண்டனை வழங்கினீர்கள். இன்று அவன் புரட்சி எனும் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான். உங்கள் மகள் அதனால் மனம் வெம்பி… வார்த்தைகளை முடிக்காது விட்டார் மந்திரி குத்துப்பிடி.

- என்னிலும் தவறிருக்கிறது மந்திரியாரே, குந்தவியின் இஷ்டப்படி ரஃபிக்கையே அவள் மணமுடிக்க நான் சம்மதித்திருக்க வேண்டும், ஆனால் ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே.. ஹாஆஆஆ மன்னன் குத்தலகேசியின் வேதனைக்குரல் மந்திரியின் மனதைப் பிசைந்தது.

- மன்னா, நடந்தது நடந்து விட்டது இனியும் நாம் தாமதித்தல் ஆகாது. இளவரசி குந்தவியின் பள்ளியறையில் கிடைத்த கைக்குட்டையில் ட்ராகன் இலச்சினை இருக்கிறது. புரட்சி நகரின் இலச்சினை அது. பிரபஞ்ச புரட்சிக்காரர்களின் குருகுலம் அது. நாம் விரைந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் எமக்கு எம் ஒற்றர்கள், வீரர்களைத் தவிர நம்பிக்கையாக உதவி செய்யக்கூடியவர் ஒருவர்தான்… மந்திரி வார்த்தைகளை வேகமாகக் கொட்டினார்.

- யார் அந்த ஒருவர் மந்திரியாரே ?

- ராஜ மந்திரவாதி மன்னர் பெருமானே, எம் ராஜ மந்திரவாதி.

[தொடரும்]

Sunday, May 30, 2010

ரேப் ட்ராகன் - 2


மாடத்தில் ஒரு சுறா

பஞ்சணையில் மயங்கிய பைங்கிளி குந்தவியை, மென்மையான ரோஜாவைத் தாங்குவது போல் ஏந்திக் கொண்டு பள்ளியறையை விட்டு மாடத்தை நோக்கி ஓடியது அவ்வுருவம். அவ்வுருவம் மாடத்தை நெருங்குவதற்கும் அந்தப்புர ராஜலேடிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிரடிப்படையின் தலைமை வீரன், தன் வீரர் குழுவோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்தவாறே அதே மாடத்தை நெருங்குவதற்கும் சரியாகவிருந்தது.

இளவரசியின் பள்ளியறையிலிருந்து ஒரு உருவம் தன் கைகளில் இளவரசியுடன் ஓடி வருவதைக் கண்ட தலைவனும் வீரர்களும் உஷாரானார்கள். அடடா ஒரு பெரும் தொல்லை இன்றுடன் தீர்ந்ததே என்று அவர்கள் தங்களிற்குள் நினைத்து மகிழ்ந்தாலும் குத்து நகர மன்னனின் தண்டனைக்கு அஞ்சி, மர்ம உருவத்தை தடுத்து நிறுத்துவது எனும் முடிவிற்கு வந்தார்கள்.

- ஏய்ய்ய்ய், யாரங்கே ஓடாதே நில். வீரர் தலைவனின் குரல் மாடமெங்கும் மோதியது. மாடத்தினைக் கடந்து கீழே பாய எத்தனித்த மர்ம உருவமோ இக்குரலால் சற்று நிதானித்தது. குத்து நாட்டு அந்தப்புர அதிரடிக் காமாண்டோக்களை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையையும் அது வீசியது.

- என்னையா யாரென்று கேட்கிறீர்கள் ? உருவத்தின் குரலில் இடியின் வலிமையும், சிங்கத்தின் கர்ஜனையும் கலந்திருந்தது. அந்தப்புர காமாண்டோகளிற்கு இந்தக் குரலை முன்பு எங்கோ கேட்ட உணர்வு தோன்றி மறைந்தது.

- ஆம், யார் நீ? காமாண்டோக்களின் தலைவன் குரலில் உறுதி அதிகரிக்க எத்தனித்து, தோற்றது.

- என்னை நன்றாகப் பாருங்கள் வீரர் தலைவனே, என் கண்களைப்பாருங்கள், முறுக்கேறிய இந்த உடலைப் பாருங்கள், உளி ஏந்திய இந்தக் கரங்களைப் பாருங்கள், கவிதை படைத்த இந்த விரல்களை பாருங்கள். ம்ம்.. நன்றாகப் பாருங்கள். வன்முறையும், மதுவும், காமமும் மறைத்து திரையிட்டிருக்கும் உங்கள் நினைவுகளை அவை விழித்தெழச் செய்கின்றனவா என்று பார்க்கலாம்

மாடத்தில் ஒளிர்ந்த விளக்குகளின் பிரகாசம் அந்த உருவத்தின் முகத்தை தெளிவாக பார்த்தறிய உதவவில்லை என்பதால் வீரர் தலைவன் அந்த உருவத்தை சற்று நெருங்கி இரு அடிகள் எடுத்து வைத்தான். அந்த உருவத்தின் முகம் இப்போது அவனிற்கு தெரிந்தது. பேரிடி அவன் மேல் வீழ்ந்தது. அவன் குரல் திக்கியது.

- நீயா? என்ற வீரர் தலைவன் குரலில் நடுக்கம் சேர்ந்திருந்தது

-ஆம், நானேதான். ஆனால் முன்பு போல் உங்களைக் கண்டு இந்த மாடத்தில் நடுங்கி, ஒடுங்கி உறையும் புறா அல்ல நான், உங்கள் உயிர்களெல்லாம் மறுபிறப்பே வேண்டாம் எனக் கதற வைக்கும் வகையில் உங்களைக் கூறு போடும் சுறா நான். இளவரசி குந்தவியை நான் உங்கள் முன் கடத்திச் செல்கிறேன் வீரம், திறமை இருந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றவாறே மர்ம உருவம் மாடத்திலிருந்து கீழே மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

- ஆயன சிற்பி, வீரக் கவி, புரட்சிக்காரன் என்ற சொற்களை வீரர் தலைவன் உதடுகள் திகிலுடன் முனுமுனுத்தன. மாடத்திலிருந்து கீழே குதித்து குதிரை வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி விற்களையும், அம்புகளையும் எய்ய முனைந்த வீரர்களை தடுத்த வீரர் தலைவன்,

- ஆயுதங்கள் குறி தவறிப் பாயட்டும், உங்கள் மேல் பொய்க் காயங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், இங்கு பெரும் மோதல் நிகழ்ந்ததாக காட்டிக் கொள்ளுங்கள். குந்தவி எனும் தொல்லை இன்றுடன் ஒழிந்தது. ரஃபிக், எங்களைக் குந்தவியிடமிருந்து காப்பாற்றிய தெய்வமே உனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வோம். இது குருஜி குத்தானந்தா மேல் சத்தியம் என்று உணர்ச்சிவசப்பட்டான்.

வீரர்கள் விட்ட அம்புகள், விற்கள் என்பன அந்தப்புர பூங்காவனத்தின் செடி, கொடிகளை தாக்கிக் கொண்டிருக்க, சளைக்காத வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான் அவன். ஆம் முன்பொருகாலத்தில் அவன் ஆயனச் சிற்பி, வீரக் கவி, இன்று குத்து நகரமே அஞ்சும் புரட்சிக்காரன். குத்து நகர மன்னன் மகள் குந்தவியின் முன்னாள் காதலன். இன்று காதலை இழந்து அவளையே கடத்திச் செல்லும் கயவன். அவன் பெயர் ரஃபிக். அவனிற்கு பிடித்த வார்த்தை குவிக்.

- யாரங்கே?

- நாங்கள் மட்டும்தான் நிற்கிறோம் வீரர் தலைவரே

- குத்து நகர மன்னனிற்கு இந்த மகிழ்ச்சியான அதிர்ச்சியான செய்தியை உடனே தெரிவியுங்கள்

- ஒகே ..பாஸ்

- அதன் பின்பு இந்த மகிழ்சியான தருணத்தைக் கொண்டாட ஒரு குளிர் பீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

- ஜெய் ஜக்கம்மா ஜாலியோ ஜாலி பாஸ்

- அது மட்டுமல்ல, துகிலுரி நடன அழகிகளின் ஆட்டம் தூள் பறக்க வேண்டும். ராஜ மந்திரவாதிக்கும் அழைப்பு வையுங்கள்.

- அவரில்லாமாலா…. .ஏய் டண்டனக்கா டனக்கு னக்கா டனக்கு டனக்கு டன்கு டங்கா…..

[ இன்னும் வேணுமா!]

Friday, May 28, 2010

ரேப் ட்ராகன் - 1


பட்டுக் கைக்குட்டை

குத்து நகரில் இரவு தியானித்துக் கொண்டிருந்தது. நகரின் கேளிக்கைகளிற்கு அடிமையாகிவிட்ட நீசர்களின் போதை கலந்த குரல்கள் மட்டும் இரவின் தியானத்தைக் கலைத்தபடியே இருந்தன. பிரபஞ்சம் எங்கும் புகழ் பெற்ற குத்து நகர அழகிகளின் மோகம் கலந்த க்ளுக் சிரிப்பொலிகள் இரவின் குளிரை ஊதிப் போக்கின. ஆஹா!! அழகிகளின் சிரிப்பொலிகளில்தான் எத்தனை ராஜ்யங்கள் புதையுண்டு கிடக்கின்றன.

நகரின் அழகான பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது குத்து நகர அரண்மனை. புரட்சிக்காரர்களின் புண்ணியத்தால் நகரில் காவல் கெடுபிடிகளிற்கு பஞ்சமில்லாது இருந்தது. அரண்மனையைச் சுற்றி சுற்றி கடுங்காவல் உடுக்கடித்தது.

அரண்மனையின் மேற்குப்புறத்தில் ராஜலேடிகள் தங்கும் அந்தப்புரம் அமைந்திருந்தது. அழகிய பூங்காவனம், நீச்சல் தடாகம், அல்லி, செந்தாமரை, நீர் மல்லி போன்ற பூக்கள் மிதக்கும் சிறு வாவிகள் , பள்ளியறைகள், பஞ்சணைகள், அனுபவசாலிகளின் கண்களிற்கு மட்டுமே தெரிந்திடும் வியாக்ரா குளிகைகள்.

அந்தப்புரத்தின் அந்த அழகான பூங்காவனத்தினுள் ஒளிர்ந்த விளக்குகளின் மந்தமான பிரகாசத்தைக் கிழித்துக் கொண்டு அந்த உருவம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தில் ஒரு அழகு ஒட்டியிருந்தது. தன் வேகமான நகர்வால் அந்தப்புரக் கட்டிடத்தை நெருங்கிய அந்த உருவம், அந்தப்புரத்தின் தூண் ஒன்றைப் பற்றி பரபரவென உடும்பு ஸ்டைலில் தூணில் ஏற ஆரம்பித்தது.

அந்தப்புர மாடமொன்றில் குதித்து இறங்கிய அவ்வுருவம், சத்தம் எழுப்பாது மாடத்தின் அருகே அமைந்திருந்த பள்ளியறையை நோக்கி நகர்ந்தது. பள்ளியறையின் உள்ளே கிடந்த பஞ்சணை மீது அழகெல்லாம் ஒன்றாய் சேர்த்து செய்த சிலையென உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாள் குத்து நகர இளவரசி குந்தவி.

பஞ்சணையில் மலர்ந்து குலுங்கும் பூந்தோட்டமாக உறங்கும் இளவரசி குந்தவியின் அழகை அந்த உருவம் ஒரு கணம் ரசிக்கவே செய்தது. ஆனால் அதன் மனம் இது நல்லதல்ல என்று உருவத்திற்கு சுட்டிக்காட்டியது. தன் மனதை திட்டிக் கொண்டே இளவரசி குந்தவியின் மயக்கடிக்கும் அழகிலிருந்து விடுபட்ட அந்த உருவம் உடனடியாக செயலில் இறங்க ஆரம்பித்தது.

பைங்கிளி குந்தவியின் பஞ்சனையை பூனைப் பாதங்களில் நெருங்கிய அவ்வுருவம், அவள் மார்புகள் அலைகள் போல் ஏறி இறங்குவதைக் கண்டு ஏங்கியது. குந்தவி தன் வாளிப்பான தேகத்தில் பூசியிருந்த வாசனைத் திரவியங்களின் கிறங்க வைக்கும் நறுமணம் உருவத்தை உன்மத்தம் கொள்ளவைத்தது. சிறிதும் தயங்காது அவ்வுருவம் குந்தவியின் முகத்தின் மேல் ஒரு பட்டுக் கைக்குட்டையை மென்மையாக விரித்தது.

அப்பட்டுக் கைக்குட்டையில் தடவியிருந்த மயக்கமருந்தானது இளவரசி குந்தவியின் சுவாசத்தோடு கலந்து அவள் உடலினுள் பரவ ஆரம்பித்தது. குந்தவியின் சுவாசம் பட்ட அப்பட்டுக் கைக்குட்டையில் ஒரு விசித்திர உருவம் புலனாக ஆரம்பித்தது. குந்தவி முழு மயக்க நிலையை அடைந்தபோது பட்டுக் கைக்குட்டையில் புலனாகிய உருவம் தெளிவாக தெரிந்தது. தன் சிறகுகளை தூக்கி மடக்கியபடி நின்றிருந்த ஒரு ட்ராகனின் உருவம் பட்டுக் கைக்குட்டையில் முழுமையாகியிருந்தது.

பஞ்சணையில் மயங்கிய நிலையில் கிடந்த குந்தவியை தன் கைகளில் அள்ளிக் கொண்ட மர்ம உருவம், மாடத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கியது.

[தொடரும்]

Thursday, May 27, 2010

பெர்ஷிய இளவல்


பரந்து விரிந்த பெர்ஷிய ராஜ்ஜியத்தை திறம்பட ஆட்சி செய்து வருகிறான் நீதி வழுவாத மன்னன் ஸாரமான். பெர்ஷிய மன்னன் ஸாரமானிற்கு டஸ், கார்சவி, தஸ்டான் [Jake Gyllenhal] எனும் மூன்று மைந்தர்கள் இருக்கிறார்கள். இதில் தஸ்டான் பெர்ஷிய மன்னனின் வளர்ப்பு மகன் ஆவான்.

பெர்ஷிய ராஜ்ஜியத்தின் எல்லையில் அலமுத் எனும் நகர் அமைந்திருக்கிறது. காலகாலமாக இந்நகரம் ஒரு புனித நகரமாக கருதப்பட்டு வருகிறது. புனித நகர் மீது போர் தொடுத்த களங்கம் தன்னை வந்து சேரக் கூடாது என விரும்பும் மன்னன் ஸாரமான், பேச்சுவார்த்தைகள் வழியாக அலமுத் நகரை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர விரும்புகிறான். இதற்காக தன் கூடப் பிறந்த தம்பியான நிஸாமை [Ben Kingsley], தன் மூன்று மகன்களுடனும், சேனைகளுடனும் அலமுத் நகரை நோக்கி அனுப்பி வைக்கிறான் அவன்.

பெர்ஷிய மன்னனின் சேனை அலமுத் நகரை நெருங்கிய வேளையில் தனது சித்தப்பா நிஸாமின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு, அலமுத் நகர அதிகாரத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது அந்நகரை தன் சேனைகளைக் கொண்டு தாக்கிக் கைப்பற்றுவது எனும் முடிவிற்கு வருகிறான் ஸாரமான் மன்னனின் மூத்த மகனான டஸ்.

இந்த முடிவினால் அலமுத் நகரின் மீதான தாக்குதல் ஆரம்பமாகிறது. அரச சேனைகளுடன் கலந்து போரிடாமல், பிறிதொரு வழியால் தன் குழுவினருடன் தந்திரமாக அலமுத் கோட்டைக்குள் புகுந்து, பெர்ஷிய படைகள் அலமுத் நகரினுள் நுழைவதற்கான வழியொன்றை ஏற்படுத்தி தருகிறான் தஸ்டான். இதனால் நீண்ட யுத்தம் ஒன்றினால் ஏற்படக்கூடிய உயிரழப்புக்கள் தவிர்க்கப்படுகின்றன.

prince-of-persia-les-sables-du-temps-2010-16254-825362568 அலமுத் நகரிற்குள் பெர்சியப் படைகள் நுழையும் சமயத்தில், அந்நகரின் இளவரசியான தமின்னா [Jemma Arterton], அலமுத் நகரில் மிகவும் புனிதமான பொருளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு அபூர்வ சக்தி பொருந்திய குறுவாளை தீயவர்களின் கைகளிற்குள் சிக்கிவிடாது நகரை விட்டு ரகசியமாக வெளியேற்றி விட முயல்கிறாள்.

துரதிர்ஷ்டவசமாக இக்குறுவாளை தஸ்டான் ஒரு மோதலின்போது தனதாக்கிக் கொள்கிறான். அலமுத் இளவரசி தமின்னாவும் பெர்சிய வீரர்களால் பிடிக்கப்படுகிறாள். இளவரசி தமின்னாவின் அழகில் மயங்கும் முடிக்குரிய இளவரசன் டஸ், இளவரசியை தன் மனைவியாக்கி கொள்ளப் போவதாக அறிவிக்கிறான்.

அலமுத் நகரை தன் சேனைகள் மோதல் மூலம் கைப்பற்றியதை அறிந்து கொள்ளும் மன்னன் ஸாரமான் கோபத்துடன் அலமுத் நகரை வந்தடைகிறான். வன்முறையைப் பிரயோகித்து புனித நகரை டஸ் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்ததை கண்டிக்கிறான் மன்னன் ஸாரமான். அலமுத் நகரம் பெர்ஷிய ராஜ்ஜியத்தின் எதிரிகளிற்கு ஆயுதம் தந்து உதவியது என்பதை தான் ஆதாரங்களுடன் நிரூபிப்பதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு அலமுத் நகரை விட்டு கிளம்புகிறான் இளவரசன் டஸ்.

அலமுத் நகரை விட்டு இளவரசன் டஸ் நீங்கிச் செல்லும் முன், தஸ்டானை அவன் சந்திக்கிறான். அழகான வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு மேலங்கியை தஸ்டானிடம் தரும் இளவரசன் டஸ், அந்த மேலங்கியை தன் தந்தைக்கு தஸ்டான் பரிசாக வழங்க வேண்டும் என வேண்டுகிறான். தந்தை ஸாரமான் மகிழ்ந்திருக்கும் வேளையில் இளவரசி தமின்னாவுடனான தன் திருமண விடயம் குறித்து நயமாகப் பேசி அவரின் சம்மதத்தை தஸ்டான் வெல்ல வேண்டும் எனவும் டஸ் கேட்டுக் கொள்கிறான்.

இளவரசன் டஸ் நகரை விட்டு நீங்கியபின், தன் வளர்ப்புத் தந்தையான மன்னன் ஸாரமானை சென்று பார்த்து தன் மரியாதைகளைச் செலுத்துகிறான் தஸ்டான். டஸ் தன்னிடம் தந்த அழகான மேலங்கியையும் அவரிற்கு பரிசாக வழங்குகிறான். மன்னரும் மகிழ்ச்சியுற்றவராக அழகான அந்த மேலங்கியை உடனே அணிந்து கொள்கிறார். தக்க தருணத்தில் மன்னரிடம் டஸ்ஸின் திருமண விடயம் குறித்து பேச ஆரம்பிக்கிறான் தஸ்டான். சற்று சிந்தனையில் ஆழும் மன்னன் ஸாரமான், டஸ்ஸிற்கு ஏற்கனவே மனைவி இருப்பதால் அழகான இளவரசி தமின்னாவை தஸ்டானே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவாகக் கூறி விடுகிறார்.

prince-of-persia-les-sables-du-temps-2010-16254-1689507389 இவ்வேளையில் மன்னன் அணிந்திருந்த அழகான மேலங்கி புகைய ஆரம்பிக்கிறது. மேலங்கியில் ரகசியமாகத் தடவப்பட்டிருந்த கொடிய விஷம் மன்னன் ஸாரமானைக் கொல்ல ஆரம்பிக்கிறது. உடல் எரிந்து பரிதாபமாக இறந்து போகிறான் மன்னன் ஸாரமான்.

மன்னரிற்கு மேலங்கியை பரிசாக வழங்கிய தஸ்டானே கொலைகாரன் என அங்கிருப்போர் யாவரும் முடிவிற்கு வந்து தஸ்டானை கைது செய்து தண்டிக்க விரும்புகிறார்கள். ஆனால் தஸ்டானோ அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறான். இந்தக் குழப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தஸ்டானுடன் சேர்ந்து நழுவுகிறாள் இளவரசி தமின்னா. தஸ்டான் அலமுத் நகரிலிருந்து பாதுகாப்பாக தப்பி செல்வதற்கு தான் உதவுவதாக தமின்னா தஸ்டானிடம் கூறுகிறாள். தஸ்டானும், தமின்னாவும் சேர்ந்து வெற்றிகரமாக அலமுத் நகரை விட்டு தப்பிச் செல்கிறார்கள்.

தந்தையின் இறப்பின் பின் மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான் டஸ். தப்பிச் சென்றுவிட்ட தஸ்டானையும், தமின்னாவையும் பிடித்து வர இளவரசன் கார்சவி தலைமையில் ஒரு குழு கிளம்புகிறது.

தன் தந்தையின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க விரும்புகிறான் தஸ்டான். தஸ்டானின் இடையில் நைச்சியமாக குந்தியிருக்கும் மந்திரக் குறுவாளை எவ்வழியிலாவது கைப்பற்றி அதனை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறாள் இளவரசி தமின்னா. ஆனால் அந்த மந்திரக் குறுவாளை தன் ஆசைக் கனவை தீர்த்துக் கொள்வதற்காக அடைய விரும்புகிறான் இன்னொருவன். இதற்காக மிகவும் தேர்ந்த கொலையாளிகளை அவன் தஸ்டான், தமின்னா ஆகியோரைத் தேடிச் செல்ல ஏவுகிறான். இவர்களின் விருப்பங்கள் நிறைவேறியதா? அந்த குறுவாளில் மறைந்திருக்கும் அபூர்வ சக்திதான் என்ன?

prince-of-persia-les-sables-du-temps-2010-16254-1955360640 வீடியோ கேம் ஏரியாவில் மிகவும் பிரபலம் பெற்ற, உலகெங்கும் ரசிகர்களை வென்ற கேம்களில் ஒன்றுதான் Prince of Persia. அதனை வெள்ளித் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Mike Newell. மந்திரம், மாயம், ஆக்‌ஷன், காதல், காமெடி எனும் கலவையுடன் கதையை நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆனால் அதில் அவர் முழுமையான வெற்றி காணவில்லை என்பது வேதனையானது.

படத்தின் நாயகனாக, தஸ்டான் வேடம் ஏற்றிருக்கும் நடிகர் ஜேக் ஜிலென்ஹால் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்திருப்பவர். ஒரு சாகசக் கதாநாயகனாக இப்படத்தில் அவரின் உருமாற்றம் அதிகம் ஏமாற்றத்தை தரவில்லை. எந்தக் கட்டுகளுமின்றி, பெர்ஷியன் தெருக்களில் பாய்ந்து திரியும் ஜாலியான ஒரு இளவரசனாக அறிமுகமாகும் அவர், பின் தான் நிரபாரதி என்பதை நிரூபிக்க தப்பி ஓடும் போது, குறும்பு, ஆக்‌ஷன், எனச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

அவரின் கட்டு மஸ்தான இளமை அவரிற்கு பக்கபலமாக நின்றாலும் காதல் காட்சிகளில் அவர் அதிகம் சோபிக்கவில்லை. இளவரசி தமின்னாவின் ஓயாத வாய்க்கு [வெரி நைஸ் வாய்] அவர் ஈடு கொடுப்பது அழகு. ஜேக் ஜிலென்ஹாலிடம் இப்போது இதற்குமேல் எதிர்பார்க்க கூடாது. முடியாது.[ ஜேக்கை, ஜெம்மாவிற்கு ஒரே ஒரு முத்தம் தர- அதுவும் லேசான- அனுமதித்த இயக்குனரிற்கு என் மனதார்ந்த நன்றிகள்]

திரைப்படத்தில் என்னைப் போன்ற ஜொள்ளு ஒட்டகங்கள் அதிகம் எதிர்பார்த்து சென்றது இளவரசி தமின்னாவாக வரும் செல்லக்குட்டி, வெல்லக் கட்டி ஜெம்மா ஆர்தெர்டெனை. அந்தோ!!! பெர்ஷிய சூரியனின் கதிர்கள் தடவியதால் சிவந்த ஜெம்மாவின் வதனம் மட்டும் அழகாக இருக்கிறது. மற்ற அயிட்டங்களைக் காட்டினால்தானே பார்ப்பதற்கு. முழுமையாக போர்த்திக் கொண்டு திரிகிறார் ஜெம்மா. துணிகளும் சற்றுத் தடிப்பான துணிகளாக இருந்து தொலைக்கின்றன. எவ்வளவு நேரம்தான் முகத்தை மட்டுமே பார்ப்பது. இருப்பினும் தன் அழகான யெளவனத்தாலும், துடுக்குத்தனமான நடிப்பாலும், வா டார்லிங், வா வந்து கவ்வு என அழைப்பு விடுக்கும் அந்த உன்னதமான மேலுதட்டாலும் ஜொள்ளு ஒட்டகங்களின் இதயத்தில் சிறு ஓட்டை போட்டு விடுகிறார் ஜெம்மா பேபி.

phpThumb_generated_thumbnailjpg படத்தில் இடம்பெறாத ஜெம்மாவின் ஸ்டில் ஒன்று ஜொள்ளு ஒட்டகங்கள் சார்பில் இங்கு இணைக்கப்படுகிறது[ ஜெம்மாவின் சகோதரனே என ஆரம்பிக்கும் உங்கள் மேலான பின்னூட்டங்களைப் பதிந்து எனக்கு இதய வலி வரப் பண்ணாதீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்]

திரைப்படத்தில் நகைச்சுவைக்காக அடிமை வியாபாரி மற்றும் தீக்கோழி ரேஸ் நடத்தும் ஷேக் அமர் பாத்திரம் இடம் பெற்றிருக்கிறது. ரசிகர்களை ஒரளவு அவர் சிரிக்க வைக்கிறார். பெரிய வாளாக இருந்தால் அது சின்னதாக என்ற ஜோக் சிறுவர்களின் நகைச்சுவை உணர்வு வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது. ஷேக் அமரின் ஆபிரிக்க நண்பனாக வரும் குறுவாள் வீச்சு வல்லுனர் திரைப்படத்தின் இறுதித் தருணங்களில் மனதை தொட்டு விடுகிறார். பென் கிங்ஸ்லி நடிப்புக் குறித்து எழுத என்னிடம் எதுவுமே இல்லை. ஆனால் அவரின் கண் மை செம அழகு.

மாயம், மந்திரம், ஆக்‌ஷன் எனக் கலக்கியிருக்க வேண்டிய திரைக்கதையில் அவற்றின் அளவும், தரமும் குறைந்தே காணப்படுகின்றது. அலமுத் நகரைக் கைப்பற்றும் காட்சிகளில் இருந்த விறுவிறுப்பு, நகைச்சுவை, ஆக்‌ஷன் என்பன தொடரும் திரைக்கதையில் காணமல் போய்விடுகிறது. எனவே சலிப்பு மெல்ல தன் முகத்தைக் காட்டிவிடுகிறது.

மிகக் கொடூரமானவர்களும், வல்லவர்களுமான ஹஸஸின்கள் குழுவானது, தஸ்டானையும், மந்திரக் குறுவாளையும் தேடி வரும் சமயங்களில் ரசிகர்கள் மனதில் உருவாகும் எதிர்பார்ப்பு அவர்கள் நேரில் மோதிக் கொள்ளும் போது நசிந்து போகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் வலிமை வாய்ந்தவையாக இல்லை என்பது ஒரு குறையே. கூரை விட்டு கூரைகள் பாய்ந்து ஓடும் ஆக்‌ஷன் காட்சிகளை இன்னமும் எத்தனை படங்களில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால் ஹஸஸின் குழுவின் மந்திரத்திற்குள் கட்டுப்பட்ட பாம்புகள் தஸ்டானை தாக்கும் காட்சி திகில் ரகம்.

திரைக்கதையில் மாயம், மந்திரம் இருப்பதால் காதில் பூச்செடி வைக்கும் உணர்வைத் தரக்கூடிய இறுதிக் காட்சிகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை. உச்சக்கட்டக் காட்சி கூட சுமார் ரகமே. இந்தப் பெர்ஷிய இளவரசனில் கொஞ்சம் கவர்ச்சியிருக்கிறது. ஆனால் ரசிகர்களின் ராஜ்ஜியத்தைப் பிடிப்பதற்கு அது மட்டும் போதாதே. [**]
ட்ரெயிலர்

Tuesday, May 25, 2010

வெற்று துப்பாக்கி


Tango [Don Cheadle], போதைப் பொருள் விற்பனைக் கோஷ்டிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, அக்கோஷ்டிகளிற்கு மத்தியிலேயே தன்னைக் கரைத்துக் கொண்ட ஒரு பொலிஸ் அதிகாரி. போதைப் பொருள் கும்பல்களின் மத்தியில் தன் பொலிஸ் பணிக்காக அவன் வாழ்ந்து வரும் அபாயமான ரகசிய வாழ்க்கை மீதான அவன் வெறுப்பு, நாளிற்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்புகிறான் அவன். ஆனால் அவன் மேலதிகாரியோ டாங்கோவிடமிருந்து மேலும் மேலும் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறான். டாங்கோ பதிலுக்கு தன் பதவியை உயர்த்தும்படி தன் மேலதிகாரியை அழுத்துகிறான். போதைப் பொருள் விற்பனைக் கோஷ்டி ஒன்றின் தலைவனும், டாங்கோவின் நண்பனுமாகிய Caz [Wesley Snipes] ஐ பொலிஸிடம் வகையாகச் சிக்க வைப்பதற்கு டாங்கோ உதவினால் அவனிற்கு பதவி உயர்வு நிச்சயம் என உறுதியளிக்கிறான் டாங்கோவின் மேலதிகாரி…

Sal [Ethan Hawke], பொலிஸ் துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரிபவன். பொலிஸ் பணியால் அவனிற்கு கிடைக்கும் சொற்ப வருமானம் அவன் குடும்பத்தைக் காப்பாற்றவே போதாத நிலையில், தன் மனைவிக்கும், குழந்தைகளிற்கும் வசதியான வீடொன்றை வழங்க விரும்புகிறான் ஸல். இதற்கான பணத்தை எவ்வகையிலும் அடைந்துவிடத் துடிக்கும் ஸல், போதைப் பொருள் ரெய்டு நடக்கும் இடங்களில் கண்டெடுக்கப்படக்கூடிய பணத்தை யாரிற்கும் தெரியாமல் அபகரிக்க திட்டம் போடுகிறான்…

Eddie [Richard Gere], பொலிஸ் சேவையில் இருபத்தி இரண்டு வருடங்களை எந்தவித சிராய்ப்புக்களுமின்றி கடந்து வந்தவன். காலையில் காப்பிக்கு பதிலாக மதுவை அருந்துபவன். அவனது பொலிஸ் சேவையில் சொல்லிக் கொள்ளும்படியாக அவன் சாதித்தது எதுவுமில்லை. தனது சகாக்களின் கிண்டல்களை அமைதியாக விழுங்கிக் கொள்பவன். விலைமாது ஒருத்தியின் அணைப்பில் அன்பைத் தேடுபவன். அவன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதற்கு இன்னமும் ஒரு வாரம் இருக்கையில், நகரின் அபாயமான பகுதிகளில் தகுந்த வகையில் பணியாற்றுவதற்கு புதிய பொலிஸ் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் பொறுப்பு அவன்மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. இதேவேளை தான் பணி புரியும் பொலிஸ் நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் காணாமல் போன அறிவிப்பும் எடியின் கண் பார்வையில் விழுகிறது…

G168141846477116 புரூக்ளின் நகரில், மிகவும் அபாயகரமான பகுதி எனக் கருதப்படும் 65 வது வலயத்தில் இந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தம் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்….

கொள்ளை, கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், போதைப்பொருள் விற்பனை, விபச்சாரம் போன்ற குற்றச் செயல்களிற்கு மத்தியில், தம் பணியில் சிதறும் மூன்று பொலிஸ் அதிகாரிகளின் கதையை இயல்பான வகையில் கூற முயல்கிறது Brooklyn’s Finest எனும் இத்திரைப்படம். அழுத்தங்களையும், அபாயங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டிய பொலிஸ் பணியுடனும், தங்கள் கைகளை விட்டு வேகமாக நழுவி ஓடிவிட்ட வாழ்க்கையுடனும் இந்த மூன்று மனிதர்களும் நிகழ்த்தும் ஓயாத போராட்டத்தை விபரிக்கிறது கதை.

போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் மத்தியில் அவர்களில் ஒருவனாக கலந்திருக்கும் டாங்கோ. தன் பணியின் அழுத்தம் தாளாது அதிலிருந்து விடுபட ஏங்குபவன். தனது மேலதிகாரியிடம் தன் வாழ்க்கையை தன்னிடம் திருப்பித் தரும்படி வேண்டுபவன். கடத்தல் கும்பலில் தன்னோடு மிகவும் நெருங்கி விட்ட காஸை முதுகில் குத்த விரும்பாதவன். எதற்கும் அஞ்சாத ரவுடிகளின் முன்பு மன உறுதியுடன் நிமிர்ந்து நிற்பவன். இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் டான் சீடேல் அதனை மிகவும் இயல்பாக செய்திருக்கிறார்.

நண்பன் காஸிற்கு துரோகம் இழைப்பதா அல்லது தன் பதவி உயர்வா என மனதினுள் திணறும் தருணங்களிலும், தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதை வலியுடன் ஏற்றுக் கொள்ளும் கணத்திலும், தன் மேலதிகாரிகளுடன் ஆக்ரோஷமாக வெடிக்கும் சமயங்களிலும் நடிகர் டான் சீடேலின் திறமை அழகாக வெளிப்படுகிறது. திரைப்படத்தின் முன்பகுதியில் சற்று பின்னால் தள்ளப்பட்டது போன்ற உணர்வைத் தரும் டான் சீடேலின் பாத்திரம், உச்சக்கட்டக் காட்சியில் விட்டதை எட்டிப் பிடிக்கிறது [இரும்பு மனிதனில் விட்டதையும்தான்]. டான் சீடேலின் நண்பனாக வரும் கடத்தல் கும்பல் தலைவன் காஸ் வேடமேற்றிருக்கும் வெஸ்லி சினைப்ஸ் கூட தன் வழமையான அலம்பல்களை தள்ளி வைத்துவிட்டு வித்தியாசமான ஒரு பாத்திரமாக கதையில் உருப்பெற்றிருக்கிறார்.

l-elite-de-brooklyn-2010-16814-1215792068 தனது அன்பான குழந்தைகள், கர்ப்பமுற்றிருக்கும் மனைவி, இவர்களைத் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு உதவாத அவன் சம்பளம். இருப்பினும் ஒரு பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவனாக தன் குடும்பத்திற்கு நல்லதொரு வாழ்க்கையை எவ்வகையிலும் வழங்கிட வேண்டுமென நிலை கொள்ளாது ஓடும் மனிதனாக ஸல்.

ஸல்லிற்கு திரையில் உயிர் தருகிறார் நடிகர் ஏதன் ஹாக். தனது குடும்பத்தின் நலனிற்காக கொலை செய்வதற்குக்கூட தயங்காத ஸல், தான் ஆற்றும் செயல்கள் வழங்கும் குற்றவுணர்வில் அமிழ்ந்து தொலைபவன். தந்தை, கணவன், பொலிஸ் என ஒவ்வொரு கடமையிலும் தோல்வி தன்னை அடித்து வீழ்த்துவதை உணர்பவன். போதைப்பொருள் கோஷ்டிகளின் பணத்தை அபகரிக்க முயன்று தோற்கும் போதெல்லாம் அவன் வாழ்க்கை அவனை நோக்கி திருப்பும் அழுத்தங்களில் அவன் உடைந்து உருமாறுகிறான். நடிகர் ஏதன் ஹாக் இந்தப் பாத்திரத்தின் உணர்வுகளையும், அழுத்தங்களையும், உருமாற்றத்தையும் மிகையின்றி அற்புதமாக உணர வைக்கிறார். தான் செய்யும் செயல்களை தனக்குள்ளே நியாயப்படுத்தி அல்லலுறும் பாத்திரமாக அவரின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. திரைப்படத்தில் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்களில் முதலிடம் பிடிக்கிறார் ஏதன் ஹாக்.

பணியில் இருந்தாலும் தன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பாது வெறுமையாக விட்டிருக்கும் பொலிஸ் அதிகாரி எடியாக ரிச்சர்ட் கீய்யர். தனது வாழ்வின் வெறுமையை கணம்தோறும் சுவைக்கும் எடி, அதிலிருந்து விடுபட முயலும்போது அவனிற்கு துணையாவது மது, விலைமாது மற்றும் தற்கொலை முயற்சி. தன் மன அழுத்தங்களை வெளித்திறந்து விடும் வாசலாக விலைமாதுவின் வாய்ப்புணர்ச்சி அவனிற்கு அமைகிறது.

இருபத்தியிரண்டு வருட பொலிஸ் சேவையில் தன் வாழ்வின் முழு அர்த்தங்களையும் தொலைத்து விட்ட எடி, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பாக புதிதாய் பிறக்க விரும்புகிறான். நீண்ட நாட்களின் பின் கலைஞர் ரிச்சர்ட் கீய்யரின் பக்குவமான, சாந்தமான நடிப்புத் திறன் எடி பாத்திரம் வழியாக திரையில் பார்வையாளனோடு கை குலுக்கிக் கொள்கிறது.

பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அவரின் பொலிஸ் பட்ஜ் குப்பைபோல் தூக்கி எறியப்படும் வேளையிலும், தான் நேசிக்கும் விலைமாது தன்னுடன் வாழ மறுத்துவிடும் போதும், மேலதிகாரிகள் பொய் சாட்சி சொல்ல தூண்டும்போது அதனை பிடிவாதமாக எதிர்க்கும்போதும் அமைதியாக அசத்திக் காட்டுகிறார் ரிச்சர்ட் கீய்யர். இறுதியில் எடி பாத்திரத்திற்கு கிடைக்கும் திருப்பம் அருமை.

l-elite-de-brooklyn-2010-16814-1873167045 போதைப் பொருள் கோஷ்டிகளின் நடவடிக்கைகள், அவர்கள் மீதான பொலிஸ் ரெய்டுகள், புரூக்ளின் தெருக்களில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் என பரபரப்பான காட்சிகள் இருந்தாலும் திரைப்படம் நிதானமான ஒரு வேகத்திலேயே நகர்கிறது. அதிரடி ஆக்‌ஷன்களையும், வற்புறுத்தி திணிக்கப்படும் பரபரப்புகளையும் தவிர்த்து இயலுமானவரை மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தங்கள் பணியிலும், வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் நம்பத்தகுந்த நிகழ்வுகளுடன் கதை பயணிக்கிறது. படத்தின் உரையாடல்கள் பல தருணங்களில் எளிதாக இதயங்களை தொட்டு விடுகின்றன.

திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் புரூக்ளினின் ஒரு சூடான பகுதிக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகளையும் வெவ்வேறு நோக்கங்களிற்காக இட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கைகள் போலவே அப்பகுதியில் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் அந்த மனிதர்கள் சந்திக்கும் முடிவுகள் பார்வையாளனை அதிர வைக்கும் தன்மை கொண்டவையாக அமைந்திருக்கின்றன.

லிப்டுகள், இருண்ட வாராந்தாக்கள், மறைவிடங்கள் என ஒவ்வொரு பாத்திரத்தினதும் பயணத்தையும் காட்சி காட்சியாக மாற்றிக் காட்டி அக்காட்சிகளில் வாழ்ந்திருக்கும் இருளை ரசிகனிடம் வெற்றிகரமாக எடுத்து வருகிறார் இயக்குனர். அந்த உறுதியான, சஸ்பென்ஸ் நிறைந்த உச்சக்கட்டக் காட்சிகள் ரசிகர்களை தம் வலிமையான பிடிக்குள் இறுகப் பற்றிக் கொள்கின்றன. இயக்குனரின் திறமை முத்திரையையும் திரையில் பதித்துச் செல்கின்றன.

பொலிஸ் துறையின் வெற்றிப்பதக்கங்களை தவிர்த்து, அத்துறையின் சேவையில் தம்மைக் கரைத்து அழிந்துபோகும் மனிதர்களின் கதையை திரைக்கு சிறப்பான முறையில் எடுத்து வந்திருக்கிறார் Training Day திரைப்படம் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் Antoine Fuqua. ட்ரெயினிங் டே திரைப்படத்தின் வேகமும், காரமும் இப்படத்தில் இல்லாது போனாலும் கூட Brooklyn’s Finest நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டிய நல்லதொரு த்ரில்லர் நுவார். [***]

ட்ரெயிலர்

Monday, May 24, 2010

சிங்கம் சென்ற பாதைகாமிக்காலாஜி நிறுவனர் திரு. ரஃபிக் அவர்கள் சமகால காமிக்ஸ் படைப்புக்களை காமிக்ஸ் ரசிகர்களிற்கு மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்துவதில் இன்று முன்னனியில் இருப்பவர். அவரது பதிவுகள் அழகையும், ஆழத்தையும் ஒருங்கே பெற்றவை என்ற பாராட்டுக்களை அள்ளிக் கொள்ளத் தவறியதேயில்லை.

phantom2_0405 ராணி காமிக்ஸ், ஒரு மென்பொருளாளனின் நாட்கள் [அங்கத்தவர்களிற்கு மாத்திரம்] என மேலும் இரு வலைப்பூக்களையும் அவர் மிகத் திறமையுடன் நிர்வகித்து வருகிறார். நாளொன்றிற்கு 30 மணிநேரம் அயராது பணிபுரியும் திரு. ரஃபிக் அவர்கள் தனது பரபரப்பான மணித்துளிகளிடையே எமக்கும் சிறிது நேரம் ஒதுக்கினார். அவரது நீண்ட பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கு நாம் உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

நிருபர்: வணக்கம் திரு ரஃபிக் அவர்களே, உங்கள் பொன்னான நேரத்தை எங்களிற்கு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள். நீங்கள் பதிவிடும் வேகம் உலகப் பிரசித்தம் பெற்றது. எனவே முதல் கேள்வியை அதிலிருந்தே ஆரம்பிக்கிறேன். எப்படி இவ்வளவு வேகமாக உங்களால் சராமாரியாக பதிவுகளை பிரசுரிக்க முடிகிறது ?

ரஃபிக்: ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது உலக வழக்கு. அதையே 30 மணி நேரமாக மாற்றியது என் கணக்கு. தூக்கம் ஒய்வை மட்டுமே தரும். சிலர் கனவுகளையும் தரும் என்பார்கள்.[ பெரிதாக சிரிக்கிறார்.. அது செல்போன் சிணுங்கியது போல் இருக்கிறது] ஆனால் நான் நேரத்திற்கு முன்பாக ஓட விழைகிறேன். இது காலத்துடன் நான் நடத்தும் போட்டி. ஒவ்வொரு தடவையும் அதில் வெற்றி என்னைத் தழுவும் போதும் அது எனக்கு மேலும் உத்வேகத்தை தருகிறது. இன்னும் வேகமாக ஓட உந்துகிறது.

நி: எவ்வாறு உங்களால் ஒரு நாளிற்குள் 3 பதிவுகளை பிரசுரிப்பது என்பது சாத்தியமாகிறது?

Aldebaran-TheGroup ர: காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் நாம் உணவருந்த மறக்கிறோமா? அதில் தவறுகிறோமா? என் பதிவுகளை உணவாக அருந்துபவர்களை நான் பட்டினி போட விரும்புவதில்லை! அவர்களில் ஒருவரின் மனம் நிரம்பாவிடில் கூட நான் என் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்து விடுகிறேன்.

நி: உங்களின் இந்த வேகத்தில் ராணி காமிக்ஸ் வெளியிட்ட அனைத்து இதழ்களும் இன்னம் சில வாரங்களிற்குள் பதிவாக இடப்பட்டுவிடும். இது ராணிக் காமிஸ் வலைப்பூவின் இயக்கத்தை முடங்க செய்து விடுமே. அதாவது உங்கள் வேகமே இங்கு உங்களிற்கு எதிராக திரும்பும் ஒரு சாத்தியம் தோன்றுகிறது அல்லவா?

ர: இது எனக்கு ஒரு சவால். என் வேகம் எனக்கு விடுக்கும் சவால். என்னுடன் நானே மோதுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் ஒய்ந்து விடப் போவதில்லை. ராணிக் காமிக்ஸ் இதழ்கள் அனைத்தும் பதிவாக்கப்பட்டுவிடும் தருணத்தில், அப்பதிவுகள் அனைத்தையும் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு மீண்டும் புதிதாக பதிவிட ஆரம்பிப்பேன். அதனை நினைக்கையில் இப்போதே என் உடல் சிலிர்க்கிறது[ கைகளைக் காட்டுகிறார், கை முடிகள் சிலிர்த்துப் போய் எழுந்து நிற்கின்றன. கூர்மையான அவதானிப்பில் பிடரி முடிகள் கூட சிலிர்த்திருப்பதை அவதானிக்க முடிகிறது]

நி: ஒரு மென்பொருளாளனின் நாட்கள் வலைப்பூவில் நீங்கள் அலசாத விடயங்களே இல்லை எனலாம். மிகவும் குறுகிய காலத்தில் உங்கள் மற்றைய வலைப்பூக்களை விட, பதிவு மற்றும் வாசகர் எண்ணிக்கையில் முந்திச் செல்லும் வலைப்பூவாக அது நிமிர்ந்து நிற்கிறது. இது நீங்களே விரும்பிச் செயல்படுத்தும் ஓர வஞ்சனையா?

blueberry 85-03 ர: இங்கு நீங்கள் பிரயோகிக்கும் ஓர வஞ்சனை எனும் சொற்பதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் [ கண்கள் சிவப்பேறி கனல் பறக்கிறது, மிகவும் சிரமபட்டு தன் கோபத்தை அடக்குகிறார். குருஜி குத்தானந்தாவின் போட்டோவைப் பார்த்து அமைதியாகிறார்] ஒவ்வொரு நாளும் பகிர்வதற்கும், சிந்திப்பதற்கும், வாதிடுவதற்கும் உரிய எண்ணற்ற விடயங்களுடனேயே பிறக்கிறது. மென்பொருளாளின் நாட்கள் வலைப்பூ அதற்கு ஒரு களமாக செயற்படுகிறது. அதன் உருமாற்றமும், கவர்ச்சியும் தானே உருவானது. காமிக்ஸ் வலைப்பூக்களை அது மிஞ்சுவதற்கு காரணம் அதில் மிகவும் சூடான விடயங்கள் உடனுக்குடன் நேர்மையாக அலசப்படுவதுதான். ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் எப்படியோ அதே அக்கறையுடனேயே என் மூன்று வலைப்பூக்களையும் பராமரித்து வருகிறேன்[ தண்ணீர் குடிக்கிறார்]

நி: நீங்கள் முழுமை செய்த வேதாள மாயத்மா- கானகக் காற்று [10 பாகப் பதிவு], Bone- ஒரு மீள் பார்வை, மாண்ட்ரெக்கின் மந்திரம்- மனோவசிய மஸ்தான், அல்டெப்ரான் – வேற்று அறிவு, ஸ்கார்பியோன் – தேளின் பொந்திற்குள்ளே, மாடஸ்டி- ஒரு அழகான வாழ்க்கை, ஃப்ளுபெரி- மேற்குத் தடம் போன்ற பதிவுகள் சர்வதேச அங்கீகாரம் வென்றவை. எவ்வாறு உங்களால் இதனை நிகழ்த்த முடிகிறது? உங்கள் ரகசியம் என்ன ?

modesty-blaise-1 ர: ஒரு கதையைப் படிக்கும் போதே என் மனதில் பதிவு சூல் கொண்டு விடுகிறது. மறு நாள் உதயத்தின் முன்பாக அக்கதைகள் அல்லது அக்கதையின் நாயகர்கள் குறித்த என் பதிவு தயாராகி விட வேண்டுமென்பதில் நான் உறுதியாகவிருக்கிறேன். அதனையே செயற்படுத்தியும் வருகிறேன். இது தொடரும். ஒரு முறை ஒரே நாளில் இரு கதைகளைப் படித்து முடித்து விட்டதால் இரு பதிவுகளை எழுதியே ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது. நான் தயங்கவில்லை. ஒரு பதிவை இடது கையாலும், மற்றயதை வலது கையாலும் இரு வேறு கணினிகளில் தட்டினேன். இரண்டு பதிவுகளையும் நான் ஒரே நாளில் இட்ட போது பதிவர் மைனர் மச்சான் ஒரு நாளில் இரு உதயம் என்று எழுதினார். அது உண்மைதான்.[ முகத்தில் ஒரு புன்சிரிப்பு, அதில் பெருமை கலந்திருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது] மேலும் குருஜி குத்தானந்தாவின் கை மாற்றிக் கை தியானம் என் சக்தியை மேலும் பெருக்குகிறது.[ குருஜியின் படத்தை மீண்டும் பரவசத்துடன் பார்க்கிறார்]

playboyg நி: கொஞ்சம் கடினமான கேள்வி, தொடர்ந்து எழுதுவது சலிப்பைத் தரவில்லையா? என்றாவது பதிவுகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று உங்கள் மனதில் ஒர் எண்ணம் ஓடியதில்லையா?

ர: [பதிலளிப்பதற்கு முன்பு சற்று சிந்தனையில் ஆழ்கிறார், அதிர்ந்த கைத்தொலைபேசியை அடக்குகிறார்] மூச்சு விடுவதை நான் நிறுத்தும் போது என் எழுத்துக்களும் நிற்கும்.

பதிலைக் கூறி விட்டு எழுகிறார் ரஃபிக், அவர் எமக்கு ஒதுக்கியிருந்த நேரம் ஓடிச் சென்றிருந்தது. அவரிற்கு மீண்டும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். தன் மந்திரப் புன்னகையுடன் எம்மிடமிருந்து விடைபெற்ற ரஃபிக் கம்பீரமாக நடந்து சென்றார். அவரது அலுவலக அறையை அவர் அடைவதற்குள் அவர் பதிவுகளின் எண்ணிக்கை மேலும் இரண்டாக அதிகரித்திருக்கும். அந்த தன்னம்பிக்கையும், வேகமும் சிங்கம் சென்ற பாதையில் பதிந்த தடமாக அவர் பின்னால் சென்று கொண்டேயிருந்தன.

குத்து டைம்ஸுக்காக - கபால் வைரவ்

தவிர்க்க முடியாத காரணங்களினால் தமிழ்நாட்டு மார்க்கோபோலோ அவர்களின் பேட்டியை எம்மால் பிரசுரிக்க முடியவில்லை. இயன்றளவு விரைவில் அவரின் பேட்டியை உங்களிற்கு குத்து டைம்ஸ் வழங்கும்.

Thursday, May 20, 2010

கிரேஸி நைட்


திருமணமாகி, பிள்ளைகளும் பெற்று, குடும்ப வாழ்வை அது வழங்கும் அழுத்தங்களோடு ஈடு கொடுத்து வாழ்ந்து வரும் Phil [Steve Carell], Claire [Tina Fey] தம்பதியினர், தம் வாழ்வில் சலிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

அவர்கள் இருவரிற்கிடையிலுமான கணவன் மனைவி உறவென்பது கடமைக்கு அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்காக மாறி விட்டிருக்கிறது. இந்நிலையில் பில் மற்றும் கிளேர் தம்பதிகளின் குடும்ப நண்பர்களாக இருந்து வரும் ஒரு ஜோடி விவாகாரத்து செய்து கொள்ளும் முடிவிற்கு வருகிறது. மிகவும் மகிழ்ச்சியான ஜோடியாக வெளியுலகிற்கு தம்மைக் காட்டிக் கொண்ட அந்த ஜோடியின் முடிவு பில்லினால் நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது.

தங்களது வாழ்வும் இவ்வகையான ஒரு முடிவை எட்டக் கூடாது என விரும்பும் பில்லும், கிளேரும் தமது வழக்கங்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இதன் ஆரம்பமாக வாரந்தோறும் அவர்கள் இரவுணவு அருந்தச் செல்லும் உணவகத்தை தவிர்த்து விட்டு, மன்ஹாட்டன் நகரில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான உணவகம் ஒன்றிற்கு செல்வதென தீர்மானிக்கிறார்கள்.

பிரபலமான அந்த உணவு விடுதிக்கு பில்லும், கிளேரும் மிகவும் தாமதமாக வந்து சேர்வதால் அவர்களிற்கு அங்கு உணவருந்த இடம் கிடைக்காமல் போகிறது. இருப்பினும் சிறிது நேரம் காத்திருந்து ஏதாவது மேசை காலியாகுமா எனப் பார்ப்பது என முடிவெடுக்கிறார்கள் பில், கிளேர் தம்பதியினர்.

உணவகத்தின் பாரில், குடி பானங்களை அருந்தியவாறு காத்திருக்கும் பில்லும், கிளேரும், அந்த உணவகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ட்ரிப்பிள்ஹார்ன் எனும் ஜோடியை தேடுவதைக் காண்கிறார்கள். இந்தக் கணத்தில் பில்லின் மூளை சுறுசுறுப்பாக இயங்க, தாமே அந்த ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதி என உணவு விடுதிப் பெண்ணிடம் ஒரு பொய்யைக் கூறி, ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதி பதிவு செய்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள் பில் தம்பதியினர்.

crazy-night-2010-18374-671457665 உணவகத்தில் பரிமாறப்பட்ட ருசியான உணவு வகைகளை பில் தம்பதியினர் சுவைத்து உண்டு கொண்டிருக்கும் தருணத்தில், அந்த உணவு விடுதிக்குள் நுழையும் இரு முரட்டு நபர்கள், பில் தம்பதியினர் உணவருந்திக் கொண்டிருக்கும் மேசையை அண்மித்து ட்ரிப்பிள்ஹார்ன் என்பவர்கள் நீங்கள்தானா என வினவ, வரவிருக்கும் விபரீதத்தை அறியாது நாங்கள்தான் ட்ரிப்பிள்ஹார்ன் எனக்கூறி விடுகிறார்கள் பில் தம்பதியினர்.

பில்லையும், கிளேரையும் ட்ரிப்பிள்ஹார்ன்கள் என நம்பிக் கொண்ட இரு முரட்டு நபர்களும் அவர்களை உடனடியாக உணவு விடுதிக்கு வெளியே வருமாறு மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். வேறு வழியில்லாத நிலையில் பில்லும், கிளேரும் அந்த இரு முரடர்களுடனும் உணவு விடுதிக்கு பின்பாக அமைந்திருக்கும் சந்தொன்றிற்கு செல்கிறார்கள்.

ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சந்தில், துப்பாக்கி சகிதம் பில்லையும், கிளேரையும் மிரட்டுவதை தொடரும் முரடர்கள், ஜா மிலேட்டோ என்பவனிடமிருந்து அவர்கள் திருடிய பிளாஷ் ட்ரைவ்வை மரியாதையாக தம்மிடம் திருப்பித் தந்து விடும்படி கேட்கிறார்கள். பில் தம்பதியினர் தாங்கள் ட்ரிப்பிள்ஹார்ன்கள் அல்ல என்ற உண்மையை எடுத்துச் சொன்னாலும் முரடர்கள் அவர்களை நம்புவதாக இல்லை. நிலைமை எல்லை மீறிச் செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் பில், பிளாஷ் ட்ரைவ்வை தான் ஒரு பூங்காவில் மறைத்து வைத்திருப்பதாக இன்னுமொரு பொய்யைக் கூறி இரு முரடர்களையும் கிளேர் சகிதம் பூங்காவொன்றிற்கு அழைத்துச் செல்கிறான்.

பூங்காவில் இரு முரடர்களினதும் கவனம் வேறுபக்கம் திரும்பிய வேளையில் அவர்களை தாக்கி விட்டு, தன் மனைவி கிளேருடன் பூங்காவிலிருந்து தப்பி ஓடுகிறான் பில். பின் பொலிஸ் நிலையம் ஒன்றை அடைந்து தமக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து முறையிடும் பில் தம்பதியினர், தம்மை உணவகத்தில் தேடி வந்து மிரட்டிய இரு முரட்டு நபர்களும் அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகளே என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

crazy-night-2010-18374-903756135 இக்காரணத்தினால் பொலிஸ் நிலையத்திலிருந்து தந்திரமாக நழுவுகிறார்கள் பில் தம்பதியினர். பில் தம்பதியினரை பொலிஸ் நிலையத்தில் கண்டு கொள்ளும் இரு கேடிப் பொலிஸாரும் அவர்களைப் பின் தொடர ஆரம்பிக்கிறார்கள். தங்களிற்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் விபரீதங்களிற்கு எல்லாம் காரணம் ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதியினரின் பெயரை தாம் உபயோகித்ததே எனும் முடிவிற்கு வரும் பில்லும், கிளேரும் நிஜமான ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதிகளை தேடி தம் வேட்டையை ஆரம்பிக்கிறார்கள்….

சலிப்பின் ராஜ்ஜியத்திற்குள், தம் உறவின் எந்தவிதமான மகிழ்சிகளையும் இழந்து வாழ்ந்திருந்த பில் தம்பதியினர், ஒரு இரவினுள் அவர்கள் எதிர் கொள்ளும் எதிர்பாராத அதிரடிச் சம்பவங்கள் வழி, தங்கள் மனங்களில் மறைந்திருந்த அழுத்தங்களையும், ஏக்கங்களையும் பகிர்ந்து, அவர்களை கிடுக்கிப் பிடி போடும் அபாயங்களை ஜோடியாக வெற்றி கண்டு, இனிமையான உறவின் கதவைத் திறக்கிறார்கள் என்பதனை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறது Date Night எனும் இத்திரைப்படம். இதில் உள்ள சின்ன சிக்கல் என்னவெனில் படத்தில் நகைச்சுவையைத் தேடி நாம் பில் தம்பதியினரை விட வேகமாக ஓட வேண்டியிருக்கிறது என்பதுதான்.

இரு கேடிப் பொலிஸாரிடமிருந்தும் பில் தம்பதியினர் தப்பிச் செல்லும் வேளைகளில் அவர்கள் எதிர் கொள்ளும் நிகழ்வுகளை இயக்குனர் நகைச்சுவையாக காட்ட முயன்று இருக்கிறார் ஆனால் சிரிப்புத்தான் வரமாட்டேன் என்கிறது. பில் ஆக வேடமேற்றிருக்கும் ஸ்டீவ் கேரலும், கிளேர் ஆக நடித்திருக்கும் டினா ஃபேயும், நகைச்சுவைக் கற்பனை வறட்சி ஓங்கிய திரைக்கதையிலிருந்து ரசிகர்களிற்கு சிரிப்பை வரவழைக்க தங்கள் முக மற்றும் உடல் அசைவுகளை நம்பியிருக்கிறார்கள். போதாதென்று பாலியல் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது என்ற பெயரில் இம்சை தருகிறது.

crazy-night-2010-18374-1143356950 துப்பறிவாளராக வேடமேற்றிருக்கும் நடிகர் Mark Whalberg, மேல் சட்டை அணியாது, வெற்று மார்புடன் தன் கட்டு மஸ்தான உடலுடன் வலம் வரும்போது கிளேர் அதனைப் பார்த்து ரசிப்பதை விரும்பாத பில் எரிச்சலுற்று, மார்க் வேல்பெர்க்கிடம் சட்டையைப் போடுடா எனக் கதறும் போதும், ஆடை அவிழ்ப்பு நடன விடுதியில் நடனம் எனும் பெயரில் பில் தம்பதியினர் அடிக்கும் கூத்தும் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது. பிற காட்சிகளிற்கு சிரிப்பை ரசிகர்கள் வலிய வரவழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு காரை ஒரு கார் தள்ளிக் கொண்டு செல்லும் நம்பவே முடியாத ஒரு கார் சேஸிங்கும் உண்டு.

பிளாஷ் ட்ரைவ்வில் அப்படி என்ன மறைந்திருக்கிறது? தாதா ஜோ மலேட்டோ அதனை ஏன் அவசரமாக கைப்பற்ற விரும்புகிறான்? ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதியினரின் உண்மையான திட்டம் என்ன என்பதை விறுவிறுப்பாக காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர். அதிலும் திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியைப் போல் ஒரு அபத்தமான காட்சியை அண்மைக் காலத்தில் நான் திரையில் கண்டதில்லை.

The Pink Panther, Night at the Museum ஆகிய திரைப்படங்களை சிறப்பாக இயக்கிய இயக்குனரான Shawn Levy, நகைச்சுவை குறித்த மாறுபட்ட கருத்துக்களை இத்திரைப்படத்தை உருவாக்கியபோது கொண்டிருந்தார் போலும். இதில் கொடுமை என்னவென்றால் அரங்கில் சில ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து என் நகைச்சுவை ரசனையின் மீது என்னையே சந்தேகம் கொள்ள வைத்ததுதான். Date Night; உங்களை சுறாவிற்கு கோவில் கட்டிக் கும்பிட வைக்கும். [*]

ட்ரெயிலர்

Sunday, May 16, 2010

இகோமுசி


ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா போன்ற படங்களிலிருந்து என் நினைவுகளில் இன்று எஞ்சி நிற்பவை கறுப்பு வெள்ளையும், கதாநாயகிகளின் கனத்த மார்புகளுமே! அவர்களின் பின்னழகுகளை ரசிக்கும் வயது அப்படங்களை பார்த்தபோது எனக்கு வந்திருக்கவில்லை. ரீட்டாவினதோ அல்லது காஞ்சனாவினதோ முகங்கள் எனக்கு இன்று நினைவில் இல்லை.

ஆனால் கவ்பாய் கதைகள் என்றதும் லக்கி லூக்கும், கப்பு அங்கிள் டெக்ஸும், குடிகார ப்ளுபெரியும் சொய்ங் என காமிக்ஸ் காதலர்கள் முன்பாக குதிரைகளில் வருவது போல், குதிரைகள் மேல் ஏறி வந்து, தீயவர்களைக் கொன்றொழித்து, வஞ்சம் தீர்த்து, வணக்கம் போடும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் எனக்கு ரீட்டா, காஞ்சனா பெயர்கள் மறையவில்லை. துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் தன்னுடன் இழுத்துக் கொண்டலையும் ஒரு சவப்பெட்டியால்!

மேற்குலக கவ்பாய் திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ்கள் குறித்து நண்பர்களிற்கு கூறத்தேவையில்லை. அவை ஏறக்குறைய ஒரு மதமாக ரசிகர்கள் மனதில் ஒளிந்திருக்கின்றன. கவ்பாய் காமிக்ஸ் கதைகளில் இன்றும் சூப்பர் ஸ்டாராக கப்பு அங்கிள் டெக்ஸும், அல்டிமேட் ஸ்டாராக ப்ளுபெரியும் இருந்து வருகிறார்கள்.

ஆனால் டாக்டர் இளைய தளபதியாக இன்றும் எம் மனதில் சுறா போல் இடம் பிடித்திருப்பவர் லக்கி லூக் அவர்களே. ஏனெனில் அவர் ஒரு அப்புரானி, வன்முறையை விரும்பாதவர், சிகரெட் புகைப்பதை தன் ரசிகர்களிற்காக விட்டொழித்தவர், கப்பு அங்கிள் டெக்ஸ் போலில்லாது குறைந்தது ஒரு கதைக்கு ஒரு முறையாவது தான் அணியும் துணிகளைக் கழுவுபவர், துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவர். இவற்றையெல்லாம் தாண்டி தன் கதைகளிலுள்ள நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்து உசுப்பேற்றுபவர்.

Irumbu-Kottai-Murattu-Singam-movie-latest-stills-pics-photo-gallery-01 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமும் கவ்பாய் கதைதான். காமெடி கலந்த கவ்பாய் கதை. நீண்ட காலத்தின் பின் தமிழ் திரைகளில் ஒரு கவ்பாய் கதை வெளிவந்திருக்கிறது. நீண்ட கால இடைவெளி என்பதால் தமிழ் கவ்பாய் கதைகளுடனான தமிழ் திரைப்பட ரசிகர்களின் உறவை அது புதுப்பிக்க முயல்கிறது. திரைப்படத்தை தன் வழமையான பாணியில் கலவையாக உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்.

தூக்கு தண்டனைக் கைதியான சிங்காரத்தை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றி, காணாமல் போன நாடோடி புரட்சிக்காரனான சிங்கம் போல் நடிக்கச் சொல்கிறது ஜெய்சங்கர் புரத்தை சேர்ந்த நால்வர் குழு. சிங்காரம் அச்சு அசலாக சிங்கம் போல் தோற்றம் அளிப்பதே இதற்குரிய பிரதான காரணம்.[ அடுத்த காரணம் அவர்தான் படத்தின் கதாநாயகன் லாரன்ஸ் ராகவேந்திரா என்பது]

சிங்கம் போல் ஜெய்ஷங்கர் புரத்தில் காலடி எடுத்து வைக்கும் சிங்காரம், ஒடுக்கப்பட்டதால் அடங்கியிருந்த ஜெய்சங்கர் புர மக்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்து, அவர்களை ஏறக்குறைய அடிமைகளாக நடாத்தி வந்த உசா புர கொடுங்கோலன் கிழக்கு கட்டையின் சர்வதிகார ராஜ்ஜியத்திற்கு ஒரு முடிவு கட்டுவதே இகோமுசியின் கதை ஆகும்.

IMG 1 மன்னர் ஜோக்ஸ் கலாச்சாரம் தமிழ் மக்களின் நகைச்சுவை ரசனையில் பங்கேற்ற அளவிற்கு, கவ்பாய்களின் ஜோக்ஸ் பங்கேற்றிருக்குமா என்பது இங்கு முக்கியமான ஒரு கேள்வி. ஆனால் மேற்குலக காமெடிக் கவ்பாய் திரைப்படங்கள் அந்தப் பங்கை செய்திருக்கின்றன. டெரென்ஸ் ஹில், பட் ஸ்பென்ஸர் போன்றவர்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் இருப்பவர்கள். காமெடிக் கவ்பாய் படமொன்றினுள் மன்னர் ஜோக்ஸை புகுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். விளைவுகள் கவ்பாய் ரசிகனையோ அல்லது காமெடி ரசிகனையோ முழுமையாக திருப்தி செய்யும் வகையில் அமைந்திடவில்லை என்பது கவலைக்குரியது.

சிம்பு தேவன் கதை நடப்பது 18ம் நூற்றாண்டில் எனக் கூறினாலும் அவர் கதையில் பிரதானப்படுத்துவது சமகால நிகழ்வுகளையே. ஒரு நகைச்சுவைத் துணுக்கு கலைஞன் பார்வையில் சமகால நிகழ்வுகளை காமெடி கலந்து கலாய்த்திருக்கிறார் அவர். அமிதாப், ஜெய்சங்கர், அசோகன், க்ளிண்ட், ஜான் வெய்ன் போன்ற இருபத்தோராம் நூற்றாண்டின் பிரபலங்களை ஜெய்சங்கர் புரத்தின் சரித்திரம் ஆக்கியிருக்கிறார் சிம்பு தேவன்.

வில்லன் கிழக்கு கட்டை ஆட்சி செலுத்தும் USA என்கிற உசா புரத்தை மேற்குலக ஆதிக்க அதிகாரமாக முன்னிறுத்தும் இயக்குனர் அந்த ஆதிக்க சக்திகளிற்கு எதிரான ஒரு கலைஞனின் குரலாக தன் படைப்பை நிறுத்த விழைந்திருக்கிறார். தமிழ் மக்கள் பேச்சிலும், எழுத்திலும் உணர்ச்சியும் வீரமும் தெறிக்கப் பாய்ந்து விட்டு, வெட்டியாய் டீக்கடையில் இருந்து பேசும் பண்பாட்டை அவர் சாடுகிறார். யாவர்க்கும் கல்வி வழங்குதல் என்பதே சகல ஆதிக்கங்களினதும் அழுத்தும் அடிமைப்படுத்தல்களிற்கு எதிரான முக்கியமான ஆயுதம் என எடுத்துக் கூறுகிறார். வேறுபட்ட சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கம் என்பது அவசியமானது என்று சுட்டிக் காட்டுகிறார்.

279IKMS_PREVIEW மேற்கூறியவை எல்லாவற்றிற்கும் அவர் தமிழ் கவ்பாய் வேடம் போட்டு குதிரைகளில் ஏற்றி விட்டிருக்கிறார். எனவே முழுமையான ஒரு கவ்பாய் படைப்பு தர வேண்டிய அனுபங்களிலிருந்து சிம்பு தேவனின் படம் விலகிச் செல்கிறது. இது ஒரு வகைக் கலவையான கவ்பாய் படம் என்பதனை ரசிகன் ஊகித்துக் கொண்டு அது அளிக்கும் உணர்வுகளை ஏற்க வேண்டியிருக்கிறது. நேர்மையாகச் சொன்னால் இது கவ்பாய்களை காமெடி செய்யும் ஒரு படமாகும். அந்த வகையில் சிம்புதேவன் வெற்றி பெற்று இருக்கிறார்.

உலக்கை, கிழக்கு கட்டை, பாஸ்மார்க், ஷோலே புரம் எனச் சொற்களை வைத்து நகைச்சுவை காட்ட விழைகையில் இயக்குனர் பலவீனமாகத் தெரிகிறார். குறைந்த பட்ஜெட் என்பது படத்தின் செட்டுக்களிலும், அலங்காரங்களிலும் ஆடை அணிகலன்களிலும் கண்கூடாக தெரிகிறது என்பதனை விட ஒரு தமிழ் கவ்பாய் சமூகத்தை உயிரோடு எம் கண்முன் கொண்டு வந்திருக்கிறது திரைப்படம் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

நகலெடுத்த காட்சிகளை, நான் அவருடைய சிஷ்யன் என்று நாயகனை கூறவைப்பதன் மூலம் நியாயப்படுத்தி தன் நேர்மையைக் காட்டுகிறார் இயக்குனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கரீபியன் கடற் கொள்ளையர்கள் படத்தின் பின்னனி இசையை நகலெடுத்து சிறு துண்டுகளாக இசையில் கலந்து தன் நேர்மையைக் காட்டியிருக்கிறார். லாரன்ஸ் யாரை நகலெடுத்தார் என்பது சின்னக் குழந்தையும் சொல்லக் கூடிய ஒன்றே.

தன் நிழலை விட வேகமாக சுடும் திறனை லக்கி லூக்கிடமிருந்து சுட்டாலும், தன் நிழலை விட வேகமாக எதிரியின் காலில் விழும் திறனை உருவாக்கியதிலும், இதய வடிவில் மயக்க அம்பெய்யும் செவ்விந்தியர்கள்,அசோகனை சுதந்திர சிலை போல் சித்தரிதது போன்றவற்றிலும் சிம்பு தேவன் தெரிகிறார். ஆனால் இவ்வகையான கற்பனைகளின் வறட்சி பாலை நிலம் போல் படைப்பில் பரந்திருக்கிறது.

173656_757407783_concarne_H125730_L images (1) இகோமுசி திரைப்படத்தில் உண்மையிலேயே வாய்விட்டு சிரிக்க வைக்கும் காட்சிகள் செவ்விந்தியக் குடியிருப்பில் இடம்பெறும் காட்சிகளே. அதுவும் அந்தப் பரத நாட்டியமும், உல்டா பாடலும், வாத்தியக் கோஷ்டியும், ஜதி சொல்லலுமென இத்திரைப்படத்தின் மறக்க முடியாத தருணம் அதுவே எனலாம்.

செவ்விந்தியத் தலைவராக வரும் பாஸ்கரும், அவரது மொழிபெயர்ப்பாளரும் படத்தின் ஏனைய பாத்திரங்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு பின்னியிருக்கிறார்கள். அழுவதைக் கூட மொழிபெயர்க்க வைத்திருக்கிறார் சிம்புதேவன். இவர்களிற்கு அடுத்து என்னைக் கவர்ந்தவர் உலக்கை. முன்னாள் நடிகர் பாலையாவின் ஸ்டைலுடன் அமைந்திருக்கும் அவர் நடிப்பு, சில பல இடங்களில் மிகையாகத் தெரிந்தாலும் ரசிக்க வைக்கிறது. லாரன்ஸ் நன்றாக நடனம் ஆடுவார், ஆடுகிறார். இந்தப் படத்தில் பெண் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள சிரமமாகவிருக்கிறது.

எந்தவித சுவாரஸ்யமுமற்ற, புதையல் தேடிச் செல்லும் ஒரு நீண்ட பயணம் சலிப்பைத் தருகிறது. க்ளைமாக்ஸ், அதனையும் ஒரு காமெடியாக சேர்த்துக் கொள்ளலாம். நடனங்கள் ஒரு ஆறுதல். இசை!!?

பொதுவாக கவ்பாய் படங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற வரும் படங்களாக இருப்பதில்லை. அதிலும் தமிழர்களிற்கு எந்தப் பாதார்தத்திலும் கொஞ்சம் காரம் வேண்டும் என்பது போல் தன் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூற விரும்பியிருக்கிறார் இயக்குனர். ஒரு சாதரண ரசிகன் என்ற வகையில் இயக்குனர் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. கேளிக்கையை தரமான ஒரு கேளிக்கையாக வழங்குவதினால் ஒரு கலைஞன் குறைந்து போய்விடப் போவதில்லை. கருத்து, காமெடி, கவ்பாய்க் கலவையாக வந்திருக்கும் இகோமுசி மெக்ஸிகன் சில்லியையும் மசாலா தோசையும் குழைத்து சாப்பிட்ட உணர்வையே தருகிறது. [**]

Friday, May 14, 2010

சுறா The Legend அல்லது சுறா The One and Only


jaws_dts_hires வாழ்க்கை சில சந்தர்ப்பங்களை மிக அரிதாகவே உங்களிற்கு வழங்குகிறது. அந்த அரிதான சந்தர்ப்பங்களில் சிலவற்றை நீங்களே தேடிச் சென்று கண்டடைவதுண்டு. ஏனையவை நீங்கள் எதிர்பார்த்திராத தருணங்களில் பாரிஸின் பாதாள ரயில்களின் டிக்கெட் பரிசோதகர்கள் போல் மூலைகளிற்குள் ஒளிந்து நின்று உங்களை தெனாவெட்டாக எதிர் கொள்ளும். என்ன செய்வது என்ற முடிவிற்கு நீங்கள் வருவதற்குள் அந்தச் சந்தர்ப்பம் உங்களை தன் அதிர்ஷ்டக் கரங்களால் அடித்து வீழ்த்தி விடும். சுறா காவியத்தை நான் பார்த்து உவகை எய்வதற்கான சந்தர்ப்பமும் எனக்கு இவ்வாறாகவே வாய்த்தது.

பதிவுலகமே சுறாவைத் துண்டு துண்டாகக் கூறு போட்டு, பங்கு பங்காகக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்த சமயத்தில், சுறா இருக்கும் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற எண்ணமே என் மனதில் ஓங்கி நின்றது. ஆனால் பதமான விஸ்கியை ஊற்ற ஊற்ற, கண்ணாடிக் குவளை கூட ஒரு அழகிய பெண்போல் தெரியும் என்பதுபோல் என் நண்பர்கள் சுறா பாருங்கள் என்று கமெண்டுகள் போட்டே சுறா மீது ஒரு ஈர்ப்பை என்னையறியாமல் என் மனதில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அவர்களிற்கெல்லாம் எப்படி நன்றி கூறப் போகிறேன்! பதிலுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்!

பரந்து விரிந்த கடலின் ஓயாத அலைகளைப் போலவே யாழ்நகர் குப்ப மக்களின் வேதனைகளும் ஒய்ந்ததில்லை. ஆனால் இருளிற்குள் உதிக்கும் சூரியனைப் போலவே அக்குப்பத்தில் வாழ்கிறான் ஒருவன். அவன்தான் சுறா. இந்த யாழ்நகர் குப்பத்தை ஒரு கொடிய அரசியல்வாதியின் பிடியிலிருந்து மீட்டு, அந்தக் குப்பத்தை எவ்வாறு பிரான்ஸ் நாட்டின் செல்வம் கொழிக்கும் அழகிய Cote d’Azur போல் மாற்றிக் காட்டுகிறான் என்பதே சுறா காவியத்தின் அற்புதமான கதை.

sura1 சுறா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் அல்லது நீந்தியிருக்கும் டாக்டர் விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தின் வழியாக எடுத்துக் கூற வரும் கருத்துக்கள் சமுத்திரங்களை விட ஆழமானவையாகவும், அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கின்றன.

ஒரு வாரமாக கடலில் தத்தளித்த மீனவர்களை, அவர்கள் படகுகளுடன் ஒரு தீவில் கரையேற்றுகிறான் சுறா. இங்குதான் சுறா காலத்தை உறைய வைக்கிறான். ஒரு வாரத்தின் பின்பாக கடற்படை, வான்படை போன்றவர்களினால் காப்பாற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்படும் மீனவர்களின் முகங்களில் பசியின் களைப்பையோ அல்லது கூடுதலாக துளிர்த்து விட்ட ஒரு முடியையோ நீங்கள் காட்ட முடியாது. காலத்தை சுறா கட்டிப் போட்ட விதம் அப்படி. ஊக்க மருந்து குடித்த விளையாட்டு வீரர்கள் போல் மீனவர்கள் கரையில் இறங்கி ஓடி வரும் காட்சி! அடடா. சுறா, HAITI ல் பூகம்பம் வந்தபோது நீ எங்கு சென்றிருந்தாயோ?

கடலில் புயலில் அகப்பட்ட மீனவர்களைக் காப்பாற்றிய சுறா கடலில் மறைந்து விடுகிறான். யாராலுமே அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்குதான் சுறா கிரேக்க புராணத்திற்கு கிச்சு கிச்சு மூட்டுகிறான். பெர்சி ஜாக்சன் மட்டும்தான் சமுத்திரங்களின் மடிகளிலே உலவித் திரிய முடியுமா என்று திருப்பிக் கேட்கிறான். கடல்களின் தேவன் பொசைடனுடன் கில்லி விளையாடுபவன் சுறா என்பது பல ரசிகர்களிற்கு புரியவில்லை என்பது வேதனையானது.

sura4 அதிலும் பொசைடனுடன் கில்லி விளையாடி விட்டு, டால்பின் மீன்கள்போல் பாய்ந்து பாய்ந்து சுறா கடலில் நீந்தி வருவது, உலகின் நீச்சல் வீரர்கள் எல்லாம் தம் கண்கள் குளிரப் பார்த்து, அதைப் போலவே பயிற்சியும் எடுத்து பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் சுறா நடாத்திக் காட்டும் டெமொ. அடுத்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் தமிழ் இளைஞர்களின் பெயர்களின் பின்னே பதக்கங்கள் பிரகாசிக்க வேண்டும் என்று விரும்பும் சுறாவை நாங்கள் பாராட்ட வேண்டாமா?

உலகில் பல வகையான நடனங்கள் உண்டு. ஆனால் உலகிற்கு புதிதாக ஒன்று காட்ட விரும்புகிறான் சுறா. அதற்காக அவன் கடுமையாக உழைத்திருக்கிறான். நியூசிலாந்து வீதிகளில் வேகமாக விரைந்து வந்து சுறாவைச் சப்பையாக்கி விட்டு செல்லக்கூடிய வாகனங்களையெல்லாம் துச்சமாக மதித்து அவன் ஆடும் அந்த நடனம்! கல்லறைக்குள் இருந்து Bambi பற்றி கனவு கொண்டிருக்கும் மைக்கல் ஜாக்சனையே திரும்பி குப்புற படுக்க வைக்கும் ரகம். சற்று உங்கள் காதுகளை தீட்டி நீங்கள் கேட்டால் ஜாக்சனின் மெல்லிய அழுகுரல் உங்கள் காதுகளிற்கு கேட்கும். சுறாவின் நடனம் சிவ தாண்டவத்தின் மாறுவேடம்.

மாறுவேடம் என்றால் என்ன?! ஒரு மனிதன் தன்னை அறிந்த மனிதர்களின் கண்களிற்கு வேறு ஒரு மனிதனாக தோன்றுவது. உலகப் படங்களில் எத்தனை வகையாக இதனை நாம் கண்டு களித்திருப்போம். பெஞ்சமின் பெர்ட்டன், மிஸன் இம்பொசிபில், இதயக் கனி போன்றவற்றை நாம் மறக்க முடியுமா என்ன. ஆனால் சுறா ஒரு புதிய வகை மாறுவேடத்தை நாம் வாழும் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்கிறான்.

Girls_Beautyful_Girls_Sexy_girl_on_the_beach_018750_ மறு பிறப்புக்களில் உங்களிற்கு நம்பிக்கை உண்டு எனில் சுறாவில் சீக்கிய மாலுமியாகவரும் சுறா சிங் ஒரு மறு பிறப்பே. கண் மொழி, மூக்கு மொழி, விரல் மொழி, தாடி மொழி என முழுமையான ஒரு புது அவதாரம் எடுத்து உலகின் தலை சிறந்த மேக் அப் கலைஞர்களை எல்லாம் வேறு வேலை தேட வைத்திருக்கிறான் சுறா. கிரேக்க புராண அழகுச் சிட்டு மெடுஸாவின் விழிகளைப் பார்க்கும் மானுடர்கள் கற் சிலைகளாக உறைவதைப் போல் தன் ஈடிணையற்ற நடிப்பால் ரசிகர்களை அவர்கள் இருக்கும் இருக்கைகளிலேயே கற் சிலைகளாக மாற்றுகிறான் சுறா. அந்தக் காட்சியில் சுறாவின் தேனும் காரமலும் கலந்து குழைத்த குரலில் வெளிவரும் வசனங்களே அந்தச் சிலைத்தன்மையிலிருந்து ரசிகர்களை மீட்டெடுக்கின்றன.

கேத்தரின் பிகலோவாம்! ஹர்ட் லாக்கராம்! ஆஸ்கார் விருதுகளாம்! செம காமெடிதான். அணு குண்டு ஒன்றை ஐந்து செக்கனிற்குள் எப்படிச் செயலிழக்க செய்வது என்பதனை ஒரு பாடமாக நடத்திக் காட்டியிருக்கிறான் சுறா. தங்களால் மட்டுமே வெடிகுண்டுகளை நுணுக்கமான முறையில் செயலிழக்க செய்ய முடியும் என்ற மேற்குலக ஆதிக்க மனப்பான்மைக்கு அந்த ஐந்து செக்கனிற்குள் சாவு மணி அடித்து தலைகுனிய வைக்கிறான் சுறா. கேத்தரின் பிகலோ, சுறாவைப் பார்த்தார் எனில் தனது ஆஸ்கார்களை ஆஸ்கார் கமிட்டியிடம் மறு பேச்சிலாது திரும்பக் கையளிப்பார் என்பது நிச்சயம். இதே சமயத்தில் எந்தக் குண்டாக இருந்தாலும் சுறா அதனை தனியாளாக சாமாளிப்பான் என அவன் உலக வல்லரசுகளை நோக்கி விடும் ஒரு எச்சரிக்கைதான் அக்காட்சியின் உண்மையான அர்த்தம் என்பது எத்தனை பேரிற்கு புரிந்திருக்குமோ தெரியாது.

இது மட்டுமல்ல என்னும் எத்தனையோ, எத்தனையோ. சுறா ஒரு பிள்ளையார் ஆனால் நான் ஒரு வியாசன் இல்லையே. சுறா சும்மா ஒரு படமல்ல, அது ஒரு சர்வதேசக் குளோபல் பிரபஞ்ச மா காவியம். அதனை ஒரு முறை பார்த்தால் பேரானந்தம், பலமுறை பார்த்தால் பரமானந்தம். உலகின் வழமைப்படி இந்தக் அற்புதக் காவியமும் ஒரு குப்பையாகவே கருதப்படும், விமர்சிக்கப்படும். கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்த உலகமிது, சுறாவையா விட்டு வைக்கப் போகிறது. சுறாவைப் பார்த்தேன், என் பிறவிப் பயன் கண்டேன் எம்பெருமானே. [*******]

Thursday, May 13, 2010

விருட்சங்களின் வில்லாளி


புனித மண்ணில், சிலுவைப் போரில் பங்கு பற்றிய பின், தன் நாடு திரும்பும் இங்கிலாந்து மன்னனான ரிச்சர்ட், பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கோட்டை, கொத்தளங்களை தன் துருப்புக்கள் சகிதம் முற்றுகையிட்டு அழிக்கிறான்.

மன்னன் ரிச்சர்ட்டின் துருப்புக்களில் அங்கம் வகிக்கும் வில் வீரர்களில் மிகவும் சிறந்த வில்லாளியாக திகழ்ந்து வருகிறான் Robin Longstride [Russell Crowe]. ராபினின் சிறு வயதிலேயே அவன் தந்தை அவனை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறும் ராபின், தந்தையின் நெருக்கமும், அன்பும் கிடைக்காத ஒருவனாகவே தன்னை உருவகித்துக் கொள்கிறான்.

கோட்டைகள் மீதான தாக்குதல்கள் ஓய்வு பெற்றிருந்த இரவு நேரமொன்றில், மன்னன் ரிச்சர்ட் தன்னிடம் கேட்கும் கேள்விகளிற்கு நேர்மையாகப் பதிலளிக்கிறான் ராபின். இந்த நேர்மைக்கு பரிசாக ராபினையும், அவன் நண்பர்களையும் தளைகளில் பூட்டி வைக்குமாறு தண்டனை வழங்குகிறார் மன்னன் ரிச்சர்ட்.

தன் மண்ணில் அட்டூழியங்களை துணிவுடன் நிகழ்த்தி வரும் இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டை எவ்வகையிலாவது தீர்த்துக் கட்ட வேண்டுமென்று விரும்புகிறான் பிரான்ஸ் மன்னனாகிய பிலிப். இதற்காக Godfrey [Mark Strong] எனும் ஆங்கிலேயனின் உதவியை அவன் நாடுகிறான்.

கோட்ஃப்ரேய், மன்னன் ரிச்சர்ட்டின் பொறுப்பற்ற சகோதரன் ஜானிற்கு மிகவும் நெருக்கமானவன். மன்னன் ரிச்சர்ட்டை ஒழித்துக் கட்டினால் அதன் பின் மன்னனாக பதவியேற்கும் ஜானின் திறமையற்ற ஆட்சியின்போது இங்கிலாந்து நாட்டை எளிதாக வெற்றி கொள்ளலாம் எனும் பேராசை பிரான்ஸ் நாட்டு மன்னன் பிலிப்பிற்கு இருக்கிறது. பிரான்ஸ் நாட்டு மன்னன் தனக்கு வழங்குவதாக ஆசைகாட்டும் செல்வத்திற்காக மன்னன் ரிச்சர்ட்டை தீர்த்துக் கட்டுவதற்கு உடன்படுகிறான் கோட்ஃப்ரேய்.

robin-des-bois-2010-14633-1741134152 இந்த சமயத்தில் கோட்டை ஒன்றின் முற்றுகையின் போது, அம்பு ஒன்று கழுத்தில் பாய்ந்து பிரான்ஸ் மண்ணிலேயே தன் உயிரை துறக்கிறார் இங்கிலாந்து மன்னரான ரிச்சர்ட். மன்னன் ரிச்சர்ட்டின் மரணச் செய்தியை அறிந்து கொள்ளும் ராபினும் அவனது நண்பர்களும் அவர்களது நண்பன் ஒருவனின் உதவியால் தளைகளிருந்து விடுவிக்கப்பட்டு, மோதல் நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கிறார்கள். வெகு விரைவாக இங்கிலாந்திற்கு சென்று விட வேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாகவிருக்கிறது.

இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட், களத்தில் வீர மரணம் அடைந்த செய்தியை இங்கிலாந்து நாட்டிற்கு தெரிவிக்க ஒரு வீரர் குழுவுடன் கிளம்பிச் செல்கிறான் ரிச்சர்ட்டின் நம்பிக்கைக்குரிய வீரனான Robert Loxley. இறந்த மன்னனின் முடியையும் அவன் தன்னுடன் கூடவே எடுத்துச் செல்கிறான்.

ராபர்ட் லொக்ஸ்லியின் குழுவை, இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டும் அவன் வீரர்களுமென நினைத்து அவர்கள் செல்லும் வழியில் எதிர் கொண்டு தாக்குகிறது கோட்ஃப்ரேயின் கூலிப்படை. தாக்குதலின் முடிவில் குற்றுயிராக நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் ராபர்ட் லொக்ஸ்லியிடமிருந்து மன்னன் ரிச்சர்ட் மரணமான செய்தியைக் கேட்டு ஆச்சர்யமும், மகிழ்வும் கொள்கிறான் கோட்ஃப்ரேய்.

ராபர்ட் லொக்ஸ்லி தன்னுடன் எடுத்து வந்த மன்னன் ரிச்சர்ட்டின் முடியை தன்னகப்படுத்த விரும்புகிறான் கோட்ஃப்ரேய் ஆனால் மோதலில் ஏற்பட்ட அச்சத்தால் மன்னனின் முடியிருந்த பையை சுமந்து வந்த குதிரை வெருண்டு தறி கெட்டு ஓட ஆரம்பிக்கிறது.

robin-des-bois-2010-14633-1709390665 முடியைக் கைப்பற்றும் பொருட்டு வேகமாக ஓடிச் செல்லும் குதிரையை துரத்த ஆரம்பிகிறார்கள் கோட்ஃப்ரேயின் கூலிப்படையினர். மரங்களடர்ந்த பாதையினுடாக ஓடும் குதிரை, ராபினும் அவன் நண்பர்களும் தப்பிச் சென்று கொண்டிருக்கும் பாதைக்கு வந்து விடுகிறது. தனியாக ஓடி வரும் குதிரையை மடக்க எத்தனிக்கிறான் ராபின். ஆனால் குதிரையை துரத்தி வந்த கோட்ஃப்ரேயின் கூலிப்படையினர் ராபினையும் அவன் நண்பர்களையும் தாக்க ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் மோதலில் கோட்ஃப்ரேயையும் அவன் கூலிப்படையையும் விரட்டி அடிக்கிறார்கள் ராபின் குழுவினர். ராபின் எய்யும் அம்பிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறான் கோட்ஃப்ரேய்.

கூலிப்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி குற்றுயிராக நிலத்தில் கிடக்கும் ராபர்ட் லொக்ஸ்லியின் உதவிக் குரல் கேட்டு அவனை நெருங்குகிறான் ராபின். தன்னிடமிருக்கும் தன் தந்தையின் வாளை அவரிடம் திருப்பி ஒப்படைக்கும்படி ராபினிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டு தன்னுயிர் நீங்குகிறான் ராபர்ட் லொக்ஸ்லி.

லொக்ஸ்லியும் அவனது வீரர்களையும் இங்கிலாந்திற்கு ஏற்றிச் செல்வதற்காக அவர்களிற்காக காத்திருக்கும் ஒரு கப்பலை நோக்கியே அவர்கள் பயணம் அமைந்திருந்தது என்பதை ஒரு வரைபடம் மூலம் அறிந்து கொள்ளும் ராபினும் அவனது நண்பர்களும் கூலிப்படையுடனான மோதலில் உயிர் நீத்த வீரர்களின் உடைகளை அணிந்து கொண்டு, மன்னன் ரிச்சர்ட்டின் முடியையும் எடுத்துக் கொண்டு கப்பல் நிற்கும் இடத்தை அடைந்து இங்கிலாந்து பயணமாகிறார்கள்.

இங்கிலாந்து நோக்கிய கப்பல் பயணத்தின்போது லொக்ஸ்லியின் வாளின் கைபிடியை ஆராயும் ராபின், அதில் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் தனக்கு முன்பே பரிச்சயமாக உள்ள மாதிரியான ஒரு உணர்வை அவனிற்கு வழங்குவதை எண்ணி குழம்புகிறான். கடல் பயணத்தின் முடிவாகக் கப்பலும் இங்கிலாந்தை வந்தடைகிறது.

இங்கிலாந்து அரச மாளிகையில் ரிச்சர்ட்டின் தாயிடம் அவன் அணிந்திருந்த முடியை வழங்குகிறான் ராபின். தன் அன்பு மகனின் மரணச் செய்தியால் வருந்தும் அந்தத் தாய் தனது இளைய மகன் ஜானிற்கு அந்த இடத்திலேயே முடியைச் சூட்டி அவனை இங்கிலாந்தின் மன்னன் ஆக்கி விடுகிறாள். இந்தவேளை அரண்மனையை வந்தடையும் மன்னன் ஜானின் நண்பனான கோட்ஃப்ரேய் அங்கு ராபினைக் கண்டு கொள்கிறான். தன்னைப்பற்றிய உண்மையை அறிந்த ராபினை தீர்த்துக் கட்டுவது என்ற தீர்மானத்திற்கும் அவன் வருகிறான்.

robin-des-bois-2010-14633-815822688 அரண்மனையில் முடியைக் கையளித்த கையோடு அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் செல்லும் ராபின், ராபர்ட் லொக்ஸ்லிக்கு தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவன் தந்தை வாழ்ந்து வரும் கிராமத்தை நோக்கி தன் நண்பர்களுடனும், லொக்ஸி தந்த வாளுடனும் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான்.

நோட்டிங்ஹாம் எனும் பகுதியில் அமைந்திருக்கும் அச்சிறு கிராமத்தின் மக்கள், மன்னன் விதித்த வரிகளாலும், கிறிஸ்தவ மதத்தின் மனித நேயமற்ற பேராசையாலும் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அங்கு லொக்ஸ்லியின் மனைவியான Marion னிடம் [Cate Blanchett] தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் ராபின்.

தன் மகன் ராபர்ட் லொக்ஸியின் வரவை பல வருடங்களாக ஆசையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வால்ட்டர் லொக்ஸ்லி, தன் வீட்டில் அவனுடைய மரணச் செய்தியை வரவேற்கிறார். வாளை தன்னிடம் அக்கறையாக எடுத்து வந்த ராபினின் குடும்பப் பெயரை கேட்டு அறியும் கண் பார்வையற்ற வால்ட்டரின் முகத்தில் ஆச்சர்யத்தின் அறிகுறிகள் புலனாகின்றன. ராபின் தனது வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து தன் மகனைப் போல கிராமத்தவர்களிடம் நடித்தால் ராபின் குறித்த சில விடயங்களை அவனிற்கு தான் தெரிவிப்பதாக அவனிடம் கூறுகிறார் பெரியவர் வால்ட்டர். வாளின் கைப்பிடியில் எழுதியிருந்த வார்த்தைகள் தந்த உணர்வால் உந்தப்படும் ராபின் இதற்கு உடன்படுகிறான்.

இங்கிலாந்தின் மன்னனாக புதிதாகப் பதவியேற்ற ஜான், தன் கஜானாவை நிரப்பும் பொருட்டு மேலதிகமான வரிகளை விதிக்க ஆரம்பிக்கிறான். வரிகளை தராது இழுத்தடிக்கும் மக்களையும், ஆட்சியாளர்களையும் தகுந்த முறையில் கவனித்து அவர்களிடமிருந்து வரிப் பணத்தை சேகரித்து வரும் பொறுப்பை மன்னன் ஜான், தனக்கு நெருக்கமான கோட்ஃப்ரேய்க்கு வழங்குகிறான்.

பிரான்சில் இருந்து இங்கிலாந்து மண்ணிற்கு ரகசியமாக வந்திறங்கிய பிரெஞ்சு வீரர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, மன்னன் ஜான் பெயரால் இங்கிலாந்துக் கிராமங்களைச் சூறையாட ஆரம்பிக்கிறான் கோட்ஃப்ரேய். இதனால் பாதிப்புற்ற கிராம மக்களும், ஆட்சியாளர்களும் இங்கிலாந்து மன்னன் ஜானிற்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள்.

robin-des-bois-2010-14633-496198866 இதற்காகவே காத்திருந்த கோட்ஃப்ரேய், பிரான்ஸ் நாட்டு மன்னன் பிலிப்பை இங்கிலாந்திற்கு தன் படைகளுடன் கிளம்பி வருமாறு தகவல் சொல்லியனுப்புகிறான். மேலும் தன் ஒற்றன் ஒருவன் வழியாக தான் தீர்த்துக் கட்ட விரும்பும் ராபின் சிறு கிராமமொன்றில் ராபர்ட் லொக்ஸ்லி எனும் பெயரில் வாழ்ந்து வருவதையும் அவன் அறிந்து கொள்கிறான். ராபின் வாழ்ந்து வரும் அந்த சிறு கிராமத்தை நோக்கி தன் படைகளுடன் விரைந்து செல்கிறான் கோட்ஃப்ரேய்…..

வால்டரிடமிருந்து ராபின் அறிந்து கொண்ட விடயங்கள் என்ன? மன்னன் ஜானிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்களின் நிலை என்னவாயிற்று? கோட்ஃப்ரேய் தான் பழி தீர்க்க விரும்பிய ராபினை தீர்த்துக்கட்ட முடிந்ததா? இங்கிலாந்தை கைப்பற்ற வேண்டும் என ஆசை கொண்டிருந்த பிரான்ஸ் மன்னன் பிலிப்பின் கனவுகள் நனவாகியதா? படத்தைப் பார்த்து விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

இங்கிலாந்து நாட்டார் இலக்கியத்தின் புகழ் பெற்ற நாயகர்களில் ஒருவன் ராபின் கூட். செல்வம் படைத்தவர்களிடமிருந்து எடுத்து வழியற்றவர்களிற்கு வழங்குபவனாகவும், அதிகாரத்தை எதிர்த்து மோதுபவனாகவும் அவன் சித்தரிக்கப்படுகிறான். ராபினிற்கு பின்னால் கூட் எனும் பெயர் வந்து ஒட்டிக் கொண்டு விடுவதற்கு முன்னாகவுள்ள அந்த நாயகனின் வாழ்வை திரைக்கு எடுத்து வருகிறது பிரபல இயக்குனர் Ridley Scott இயக்கியிருக்கும் Robin Hood எனும் இத்திரைப்படம்.

ரிட்லி ஸ்காட்டின் படங்களிலிருக்கும் வழமையான பிரம்மாண்டத்தின் அளவு இப்படைப்பில் ஒரு படி குறைவாகவே இருந்தாலும், ரிட்லி ஸ்காட்டின் கைகளில் ராபின் கூட் பாத்திரம் எவ்வாறு உருவாகி வரப் போகிறது என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களை அவர் அதிகம் ஏமாற்றி விடவில்லை. தன் திறமையான இயக்கத்தால் படத்தின் கதையையும் தொய்வற்ற வகையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

சிலுவைப் போர் தந்த அனுபவங்களினால் போரை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவனாக இருக்கும் ராபின், நேர்மையான ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுகிறான். தான் தந்த வாக்குறுதியை காப்பாற்றுவதை முதன்மையானதாகக் கருதுகிறான். மனித நேயமற்ற மதத்தின் பிடிகளிலிருக்கும் மனிதர்களிற்கு வாழ்வை இலகுவாக்கவும் அவன் தயங்குவதில்லை. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டின் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் எந்த சுதந்திரமுமின்றி ஒடுக்கப்படுவதை அவன் எதிர்க்கிறான். இதே ஜான் மன்னனிற்காக பிரெஞ்சு நாட்டுப் படைகளுடன் அவன் மோதுகிறான்.

robin-des-bois-2010-14633-1121125798 கனமான இந்தப் பாத்திரத்தை எந்தவித அலட்டலுமில்லாது, இயல்பாக, ரசித்து செய்திருக்கிறார் நடிகர் ரஸ்ஸல் குரோவ். ராபின் பாத்திரத்தில் மிளிரும் அவரின் மிகையற்ற நடிப்பு அந்தப் பாத்திரத்தை ரசிகர்கள் மனதில் மிக இலகுவாக ஒன்ற வைத்து விடுகிறது. ரஸ்ஸலிற்கும் கண்பார்வையிழந்த வால்ட்டர் லொக்ஸிக்கும் இடையிலான சில தருணங்கள் மனதை நெகிழ வைக்கும். நடிகர் ரஸ்ஸலிற்கும் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டிற்குமிடையில் மந்திரம் வேலை பார்த்திருக்கிறது.

ரஸ்ஸலிற்கும், மரியானாக வரும் நடிகை கேட் பிளாஞ்சட்டிற்குமிடையில் ஜோடிப் பொருத்தம் அபாரம். அவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல மென்மையாக மலரும் உறவில் புதிதாய் பூத்த பூவின் அழகு கலந்திருக்கிறது. அதிகாரத்தினதும், மதத்தினதும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் ஒரு கடின உழைப்பாளியாக மரியான் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலமே தன்னுடன் வாழ்ந்த கணவனின் இறப்பை தன் விழிகளில் வேதனையுடன் விழுங்கிக் கொள்கையில் நடிகை கேட் பிளாஞ்சட் அசத்துகிறார். தனது பாத்திரத்தை அதற்குரிய அழகுடனும் கண்ணியத்துடனும் செய்து காட்டியிருக்கிறார் அவர். இன்னும் கொஞ்சம் கனிவாகக் கேள் என்று ரஸ்ஸல், கேட்டை மடக்கும் தருணங்கள் இரண்டும் அருமை.

படத்தில் அடுத்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் மார்சல் வில்லியமாக வரும் நடிகர் வில்லியம் ஹர்ட் மற்றும் குரூரமான வில்லன் கோட்ஃப்ரேயாக தோன்றும் நடிகர் மார்க் ஸ்ட்ராங். வில்லியம் ஹர்ட் தனது கம்பீரமான நடிப்பில் அசத்துகிறார் எனில் எரிச்சல் கொள்ள வைக்கும் வில்லனாக அடக்கமாக நடித்திருக்கிறார் நடிகர் மார்க் ஸ்ட்ராங். மார்க் ஸ்ட்ராங்கின் திறமைக்கேற்ற வகையில் அவர் பாத்திரம் உருவாக்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது.

robin-des-bois-2010-14633-459631032 திரைப்படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, அழகான இயற்கைக் காட்சிகள், காடுகள், யுத்தக் காட்சிகள் என புகுந்து விளையாடி இருக்கிறது கமெரா. மத்திய காலப் பகுதிக்குரிய அலங்காரங்களையும், செட்டுக்களையும் அமைத்து அசத்தியிருக்கிறது கலை இயக்கத்திற்கு பொறுப்பான அணி. ரிட்லி ஸ்காட்டின் படங்களில் வழமையாகக் கேட்டு ரசிக்க கூடிய இசையும் உண்டு.

இருப்பினும் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. ஆக்‌ஷன் விருந்தை எதிர்பார்த்து சென்றவர்களிற்கு பாதி விருந்துதான் கிடைக்கிறது. ஆரம்பத்தில் வரும் கோட்டைத் தாக்குதல் காட்சி தந்த ஆசை படத்தில் முழுமையாகவில்லை. இங்கிலாந்தின் தென்பகுதிக் கடற்கரையில் இடம்பெறும் இறுதிச் சண்டைக்காட்சி கூட சற்று ஏமாற்றியே விடுகிறது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் உள்ள கொதிப்பையும், கொந்தளிப்பையும், வன்னதிர்வையும் திரை வழியே ரசிகர்களிடம் எடுத்து வருவதில் தான் ஒரு மன்னன் என்பதை ரிட்லி ஸ்காட் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

ராபின் லாங்ஸ்டிரைட் எந்தக் காரணத்தால் ராபின் கூட்டாக மாறினான், மரங்கள் அடர்ந்த காடுகளில் ஒரு சட்ட விரோதியாக ஏன் அவன் வாழ வேண்டியிருந்தது என்பதோடு படம் நிறைவடைந்து விடுகிறது. பாதிக் கதையுடன் திரைப்படம் முடிவடைந்து விட்டதே என மனதில் எழும் நிறைவற்ற உணர்வை விலத்த முடியாதிருக்கிறது. தன் திறமையான இயக்கத்தால் கதையை அருமையாக நகர்த்திச் சென்று அதன் வழி ரசிகர்களின் மனதில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர் திரைப்படத்திற்கு வழங்கும் முடிவு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நசுக்கி விடுகிறது. இந்த முடிவிற்குதானா இவ்வளவும் என்ற கேள்வி திடமாக எழுகிறது. ஒரு வெறுமை அந்த முடிவை சூழ்ந்திருக்கிறது.

ரிட்லி எய்த இந்த அம்பு அதன் இலக்கை தொட்டிருக்கிறது ஆனால் அதன் இதயத்தை எட்டவில்லை! [***]

ட்ரெயிலர்