
திருமணமாகி, பிள்ளைகளும் பெற்று, குடும்ப வாழ்வை அது வழங்கும் அழுத்தங்களோடு ஈடு கொடுத்து வாழ்ந்து வரும் Phil [Steve Carell], Claire [Tina Fey] தம்பதியினர், தம் வாழ்வில் சலிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
அவர்கள் இருவரிற்கிடையிலுமான கணவன் மனைவி உறவென்பது கடமைக்கு அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்காக மாறி விட்டிருக்கிறது. இந்நிலையில் பில் மற்றும் கிளேர் தம்பதிகளின் குடும்ப நண்பர்களாக இருந்து வரும் ஒரு ஜோடி விவாகாரத்து செய்து கொள்ளும் முடிவிற்கு வருகிறது. மிகவும் மகிழ்ச்சியான ஜோடியாக வெளியுலகிற்கு தம்மைக் காட்டிக் கொண்ட அந்த ஜோடியின் முடிவு பில்லினால் நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது.
தங்களது வாழ்வும் இவ்வகையான ஒரு முடிவை எட்டக் கூடாது என விரும்பும் பில்லும், கிளேரும் தமது வழக்கங்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இதன் ஆரம்பமாக வாரந்தோறும் அவர்கள் இரவுணவு அருந்தச் செல்லும் உணவகத்தை தவிர்த்து விட்டு, மன்ஹாட்டன் நகரில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான உணவகம் ஒன்றிற்கு செல்வதென தீர்மானிக்கிறார்கள்.
பிரபலமான அந்த உணவு விடுதிக்கு பில்லும், கிளேரும் மிகவும் தாமதமாக வந்து சேர்வதால் அவர்களிற்கு அங்கு உணவருந்த இடம் கிடைக்காமல் போகிறது. இருப்பினும் சிறிது நேரம் காத்திருந்து ஏதாவது மேசை காலியாகுமா எனப் பார்ப்பது என முடிவெடுக்கிறார்கள் பில், கிளேர் தம்பதியினர்.
உணவகத்தின் பாரில், குடி பானங்களை அருந்தியவாறு காத்திருக்கும் பில்லும், கிளேரும், அந்த உணவகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ட்ரிப்பிள்ஹார்ன் எனும் ஜோடியை தேடுவதைக் காண்கிறார்கள். இந்தக் கணத்தில் பில்லின் மூளை சுறுசுறுப்பாக இயங்க, தாமே அந்த ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதி என உணவு விடுதிப் பெண்ணிடம் ஒரு பொய்யைக் கூறி, ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதி பதிவு செய்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள் பில் தம்பதியினர்.
உணவகத்தில் பரிமாறப்பட்ட ருசியான உணவு வகைகளை பில் தம்பதியினர் சுவைத்து உண்டு கொண்டிருக்கும் தருணத்தில், அந்த உணவு விடுதிக்குள் நுழையும் இரு முரட்டு நபர்கள், பில் தம்பதியினர் உணவருந்திக் கொண்டிருக்கும் மேசையை அண்மித்து ட்ரிப்பிள்ஹார்ன் என்பவர்கள் நீங்கள்தானா என வினவ, வரவிருக்கும் விபரீதத்தை அறியாது நாங்கள்தான் ட்ரிப்பிள்ஹார்ன் எனக்கூறி விடுகிறார்கள் பில் தம்பதியினர்.
பில்லையும், கிளேரையும் ட்ரிப்பிள்ஹார்ன்கள் என நம்பிக் கொண்ட இரு முரட்டு நபர்களும் அவர்களை உடனடியாக உணவு விடுதிக்கு வெளியே வருமாறு மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். வேறு வழியில்லாத நிலையில் பில்லும், கிளேரும் அந்த இரு முரடர்களுடனும் உணவு விடுதிக்கு பின்பாக அமைந்திருக்கும் சந்தொன்றிற்கு செல்கிறார்கள்.
ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சந்தில், துப்பாக்கி சகிதம் பில்லையும், கிளேரையும் மிரட்டுவதை தொடரும் முரடர்கள், ஜா மிலேட்டோ என்பவனிடமிருந்து அவர்கள் திருடிய பிளாஷ் ட்ரைவ்வை மரியாதையாக தம்மிடம் திருப்பித் தந்து விடும்படி கேட்கிறார்கள். பில் தம்பதியினர் தாங்கள் ட்ரிப்பிள்ஹார்ன்கள் அல்ல என்ற உண்மையை எடுத்துச் சொன்னாலும் முரடர்கள் அவர்களை நம்புவதாக இல்லை. நிலைமை எல்லை மீறிச் செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் பில், பிளாஷ் ட்ரைவ்வை தான் ஒரு பூங்காவில் மறைத்து வைத்திருப்பதாக இன்னுமொரு பொய்யைக் கூறி இரு முரடர்களையும் கிளேர் சகிதம் பூங்காவொன்றிற்கு அழைத்துச் செல்கிறான்.
பூங்காவில் இரு முரடர்களினதும் கவனம் வேறுபக்கம் திரும்பிய வேளையில் அவர்களை தாக்கி விட்டு, தன் மனைவி கிளேருடன் பூங்காவிலிருந்து தப்பி ஓடுகிறான் பில். பின் பொலிஸ் நிலையம் ஒன்றை அடைந்து தமக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து முறையிடும் பில் தம்பதியினர், தம்மை உணவகத்தில் தேடி வந்து மிரட்டிய இரு முரட்டு நபர்களும் அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகளே என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
இக்காரணத்தினால் பொலிஸ் நிலையத்திலிருந்து தந்திரமாக நழுவுகிறார்கள் பில் தம்பதியினர். பில் தம்பதியினரை பொலிஸ் நிலையத்தில் கண்டு கொள்ளும் இரு கேடிப் பொலிஸாரும் அவர்களைப் பின் தொடர ஆரம்பிக்கிறார்கள். தங்களிற்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் விபரீதங்களிற்கு எல்லாம் காரணம் ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதியினரின் பெயரை தாம் உபயோகித்ததே எனும் முடிவிற்கு வரும் பில்லும், கிளேரும் நிஜமான ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதிகளை தேடி தம் வேட்டையை ஆரம்பிக்கிறார்கள்….
சலிப்பின் ராஜ்ஜியத்திற்குள், தம் உறவின் எந்தவிதமான மகிழ்சிகளையும் இழந்து வாழ்ந்திருந்த பில் தம்பதியினர், ஒரு இரவினுள் அவர்கள் எதிர் கொள்ளும் எதிர்பாராத அதிரடிச் சம்பவங்கள் வழி, தங்கள் மனங்களில் மறைந்திருந்த அழுத்தங்களையும், ஏக்கங்களையும் பகிர்ந்து, அவர்களை கிடுக்கிப் பிடி போடும் அபாயங்களை ஜோடியாக வெற்றி கண்டு, இனிமையான உறவின் கதவைத் திறக்கிறார்கள் என்பதனை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறது Date Night எனும் இத்திரைப்படம். இதில் உள்ள சின்ன சிக்கல் என்னவெனில் படத்தில் நகைச்சுவையைத் தேடி நாம் பில் தம்பதியினரை விட வேகமாக ஓட வேண்டியிருக்கிறது என்பதுதான்.
இரு கேடிப் பொலிஸாரிடமிருந்தும் பில் தம்பதியினர் தப்பிச் செல்லும் வேளைகளில் அவர்கள் எதிர் கொள்ளும் நிகழ்வுகளை இயக்குனர் நகைச்சுவையாக காட்ட முயன்று இருக்கிறார் ஆனால் சிரிப்புத்தான் வரமாட்டேன் என்கிறது. பில் ஆக வேடமேற்றிருக்கும் ஸ்டீவ் கேரலும், கிளேர் ஆக நடித்திருக்கும் டினா ஃபேயும், நகைச்சுவைக் கற்பனை வறட்சி ஓங்கிய திரைக்கதையிலிருந்து ரசிகர்களிற்கு சிரிப்பை வரவழைக்க தங்கள் முக மற்றும் உடல் அசைவுகளை நம்பியிருக்கிறார்கள். போதாதென்று பாலியல் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது என்ற பெயரில் இம்சை தருகிறது.
துப்பறிவாளராக வேடமேற்றிருக்கும் நடிகர் Mark Whalberg, மேல் சட்டை அணியாது, வெற்று மார்புடன் தன் கட்டு மஸ்தான உடலுடன் வலம் வரும்போது கிளேர் அதனைப் பார்த்து ரசிப்பதை விரும்பாத பில் எரிச்சலுற்று, மார்க் வேல்பெர்க்கிடம் சட்டையைப் போடுடா எனக் கதறும் போதும், ஆடை அவிழ்ப்பு நடன விடுதியில் நடனம் எனும் பெயரில் பில் தம்பதியினர் அடிக்கும் கூத்தும் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது. பிற காட்சிகளிற்கு சிரிப்பை ரசிகர்கள் வலிய வரவழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு காரை ஒரு கார் தள்ளிக் கொண்டு செல்லும் நம்பவே முடியாத ஒரு கார் சேஸிங்கும் உண்டு.
பிளாஷ் ட்ரைவ்வில் அப்படி என்ன மறைந்திருக்கிறது? தாதா ஜோ மலேட்டோ அதனை ஏன் அவசரமாக கைப்பற்ற விரும்புகிறான்? ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதியினரின் உண்மையான திட்டம் என்ன என்பதை விறுவிறுப்பாக காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர். அதிலும் திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியைப் போல் ஒரு அபத்தமான காட்சியை அண்மைக் காலத்தில் நான் திரையில் கண்டதில்லை.
The Pink Panther, Night at the Museum ஆகிய திரைப்படங்களை சிறப்பாக இயக்கிய இயக்குனரான Shawn Levy, நகைச்சுவை குறித்த மாறுபட்ட கருத்துக்களை இத்திரைப்படத்தை உருவாக்கியபோது கொண்டிருந்தார் போலும். இதில் கொடுமை என்னவென்றால் அரங்கில் சில ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து என் நகைச்சுவை ரசனையின் மீது என்னையே சந்தேகம் கொள்ள வைத்ததுதான். Date Night; உங்களை சுறாவிற்கு கோவில் கட்டிக் கும்பிட வைக்கும். [*]
ட்ரெயிலர்
