Sunday, March 22, 2015

ஆந்தைகளின் இரவு

ஒருவன் தன் வாழிடம் குறித்து தனக்கு அனைத்தும் தெரியும் எனும் நம்பிக்கையை கொண்டிருக்கலாம். அதன் இண்டு இடுக்குகள் அனைத்திலும் தான் அறியாத எதுவுமே இல்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கலாம். அங்கு வாழ்பவர்கள் மீதும் அவர்களின் வாழ்க்கைநிலை மீதும் அக்கறை கொள்பவனாக இருக்கலாம். அந்த வாழ்க்கைநிலையை மேம்படுத்த புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்பவனாக இருக்கலாம். அந்த வாழிடத்தின் காவலனாகவும், நீதியின் மேகவொளிச்சித்திரமாகவும் அவன் தன்னை நிலைநிறுத்தி இருக்கலாம். ஆனால் இவை யாவுமே கேள்விக்குறியாகி நிற்கும் தருணம் எப்போதாவது வருவதுண்டு. செல்வந்தன் ப்ருஸ் வெய்னிற்கு மரணதண்டனையை ஆந்தைகள் அவை வழங்கும் தருணமே அது.

கோத்தம் நகரின் முன்னேற்றத்திற்கான புது திட்டங்களை ப்ரூஸ் வெய்ன் முன்னெடுக்கையில் கிடைக்கும் இந்த தகவல் பேட்மேனை விசாரணை களத்தில் இறக்குகிறது. புதிய ஒரு துவக்கத்தை ஆரம்பிக்கும் பேட்மேன் கதைவரிசைகளில் பேட்மேனிற்கு உக்கிரமான சவாலாக ஆந்தைகள் அவை எனும் ரகசிய அமைப்பையும் அறிமுகம் செய்கிறது. கதையின் ஆரம்பமே அர்க்ஹாம் மனநல காப்பகத்தில் பேட்மேனும் ஜோக்கரும் ஒரே அணியாக இனைந்து நின்று எதிரிகளை துவம்சம் செய்வதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார் கதாசிரியர் Scott Snyder. மிக ஆச்சர்யம் தரும் காட்சி உருவாக்கம் அது. அதன் பின்பாகவுள்ள மர்மம் தெரியவரும்போது பேட்மேன் கதைகளில் அறிவியல் நுட்பங்களும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பதும் கதைக்களங்களும், பாத்திரங்களின் மனநிலைகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதும் தெளிவாகிறது.

முதல் பாகமான Court of Owls ஆரம்பத்தில் மட்டுமல்லாது கதை நெடுகிலும் ஆச்சர்யங்களை கதாசிரியர் தந்து செல்கிறார். இலகுவில் முறியடிக்கப்படமுடியாத பேட்மேனை ஆந்தைகள் அவை புதிர்ச்சுழலில் சிக்கவைத்து மனப்பிறழ்வு எய்ய செய்யும் நிலைவரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, தன் நகரென பேட்மேன் எண்ணியிருந்த கோதத்தை தம் லாசரஸ் குழந்தைகளான ஏவலர்கள் துணையுடன் தமதாக்கி கொள்ளும் திட்டத்தை அவர்கள் செயற்படுத்தும்வரை கதையின் முதல்பாகம் மெதுவாக நகர்ந்தாலும் அதில் இருக்கும் நவீனமும், மர்மமும் கதையை விறுவிறுபாக்குகிறது. ஆந்தைகள் குறித்த தொன்ம நம்பிக்கைகள் கதையில் அதிகம் ஆந்தைகள் அவையின் இயல்பை தெளிவாக்க கையாளப்பட்டிருக்கும்விதம் சிறப்பாக இருக்கிறது. வவ்வால்களிற்கும், ஆந்தைகளிற்கும் இடையில் முன்னொரு காலத்தில் வெய்ன் மாளிகையில் இடம்பெற்ற போட்டியின் முடிவையே உபகதையாக கதாசிரியர் ஒரு முக்கிய தருணம்வரை கொண்டு சென்று உக்கிரமாக முடிப்பது ஆக்சன் கதை பிரியர்களை முழுமையாக நிறைவடையச் செய்யும்.

அதிகாரமும், பலமும், செல்வாக்கும், செல்வமும் நிறைந்த ஆந்தைகள் அவைதான் ப்ரூஸ் வெய்னின் முன்னைய தலைமுறை உறுப்பினர் சிலரின் அழிவிற்கு காரணம் எனும் கருத்தை கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர் ஸ்காட் ஸ்னைடர். கதையின் இரண்டாம் பாகத்தில் தனியாக கூறப்பட்டு இருக்கும் ஆல்பிரட்டின் தந்தையான ஜார்விஸ் பெனிவொர்த்தின் கதை அதை உறுதிப்படுத்துவதாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஆல்ஃபிரட்டின் தந்தையின் இறப்பிற்கும் காரணம் என ஆந்தைகள் அவையையே சுட்டுகிறது. இக்கதையை போன்றே மிஸ்டர் ப்ரீஸின் கடந்த காலத்தை நோக்கி சென்று மிஸ்டர் ப்ரீஸின் அன்னையுடனான அவனின் உறவைச் சொல்லும் மனதை நெகிழச்செய்யும் கதை ஒன்றும் உண்டு. இக்கதைகள் இரண்டும் ஆந்தைகள் அவையின் ஆதிக்க நீட்சியை விபரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கதைகள் ஆகும்.

ஆந்தைகள் அவை கோத்தம் நகரை தமதாக்க அறிவியல்நுட்பங்களை பயன்படுத்தி Talons எனும் வீரர் குழுவை உருவாக்குகிறார்கள் ஆனால் அவர்கள் எதிர்பாராத திருப்பம் ஒன்று கதையில் உண்டு. பேட்மேனிற்கு சகலவகையிலும் சவாலாக அமையும் அந்த திருப்பம் அருமையான ஒன்று. கதையின் இரண்டாம் பாகமான Night of Owls வேகமும் விறுவிறுப்பும் திருப்பங்களிற்கும் பஞ்சமில்லாத ஒன்று. முதல் பாகம் மெதுவாக நகர்ந்தது எனும் எண்ணத்தை இப்பாகம் இல்லாது ஆக்கி கதையை முழுமையாக்கும். கதையின் முடிவானது ஆந்தைகள் அவை மீண்டும் வரும் என்பதை மறைமுகமாக சொல்லி கோதத்தை அவற்றின் உகிர்களின் பிடியிலிருந்து விடுவித்து பேட்மேனின் கரங்களில் அளித்து நிறைவடைகிறது. ஸ்னைடர் மற்றும் சில கதாசிரியர்களின் சலிக்க வைக்காத திருப்பங்கள் நிறைந்த கதை சொல்லலும், அசத்தலான சித்திரங்களிற்கு பொறுப்பான Greg Capullo வின் திறமையும் பேட்மேன் கதை வரிசைகளில் இவ்விரு தொகுப்புகளையும் குறிப்பிடத்தக்கவையாக சொல்ல வைக்கின்றன.

9 comments:

 1. நன்று!உங்கள் சொல்லாடல் சுவையாகவுள்ளது.
  அப்புறம் ஒனறு கேட்க வேண்டும்...யாருடைய பின்னூட்டத்திற்க்கும் நீங்கள் பதிலளிக்காதது ஏனோ?!

  ReplyDelete
  Replies
  1. கடைந்தெடுந்த சோம்பேறித்தனம் தவிர வேறு ஏதுமில்லை நண்பரே :)

   Delete
 2. சூப்பர் ஜி!

  ReplyDelete
 3. பேட்மேன் கதைகள் நான் ஒன்றுகூட இதுவரை படித்ததில்லை.திரைப்படங்கள் மட்டுமே ரசித்துள்ளேன்.தங்களின் பதிவு ஆவலைத் தூண்டுகிறது.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழிலும் சிறப்பான பேட்மேன் கதைகள் வந்து உங்களை மகிழ்விக்கட்டும் நண்பரே.

   Delete
 4. வாங்கி விடுகிறேன் - புதிய series யாரவது விமர்சிக்கும் வரை காத்திருந்தேன் !

  ReplyDelete
  Replies
  1. வாங்கி படித்துவிட்டு நீங்களும் அதகளமாக விமர்சியுங்கள் :)

   Delete