Saturday, July 26, 2014

க்ரீன்ஃபால்ஸ் திரும்புதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கே அமைந்திருக்கும் பனிசிஸ்தானில் தீவிரவாதிகளின் குகையொன்றில் கறுப்பு கரும்பு கட்டழகு இரும்பு  ஜோன்ஸை சிறைமீட்க வந்து சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்லேனை தம் வழிக்கு கொண்டு வருவதென்பது சிரமமான ஒன்றாகவே இருக்கும் என்பது USAFE அறியாதது அல்ல. ஆகவே அதற்காக அவர்கள் ஒரு சிறு விளையாட்டை தங்கள் ஏஜெண்ட் யூலியானா மூலம் ஆட வைப்பார்கள்.

மறதி அங்கிள் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் சிறையறைக்கு வெளியே அமெரிக்காவின் வரைபடம் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும். முகத்தில் மக்லேன் தழும்பு போட்டாலும் அழகைக் கீழே இன்னும் போடாத யூலியானா பெண்களை கவுரவிக்கும் வகையில் அவ்வரைபடத்தை நோக்கி கையால் வீசக்கூடிய ஒரு சிறு அம்பை வீசும்படியாக காலனல் ஜோன்ஸை கேட்பாள். சற்று தயங்கும் கறுப்பு கமலம் தன் வெண்டை விரல்களால் நிறுத்தப்பட்ட அமெரிக்காவை நோக்கி சிறு அம்பை வீசும். அந்த அம்பு சென்று தைக்கும் இடம் பெரும்பாலான அமெரிக்கர்களே அறியாத ஒரு தொலை நகராகவும் இருக்கும். இரு நாட்களின் பின் அந்நகரில் பள்ளி மாணாக்கர்களின் பேருந்து வண்டியில் ஏறும் ஒரு மனிதன் சராமாரியாக குழந்தைகளை நோக்கி துப்பாக்கியை இயக்க அச்சம்பவம் உலகெங்கும் காட்சி ஊடகங்கள் வழி பயணிக்கும். அப்பயணம் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் மலைக்குகையையும் வந்து தன்னை காட்சிப்படுத்தும்.

தமது உயிரை துச்சமென மதித்து தியாகம் செய்திடக்கூடியவர்கள்தான் மக் அன்ட் கம்பனி ஆனால் அப்பாவி உயிர்கள் பலியாக தாம் காரணமாக இருக்ககூடாது என்பதிலும் அவர்கள் உறுதியுடையவர்களே. வேறு வழியின்றி யூலியானாவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வருகிறார் மக்லேன். இவ்வாறுதான் XIII ன் இரண்டாம் சுற்றின் மூன்றாவது ஆல்பமான Retour à Greenfalls ஆரம்பிக்கிறது. உலகமெங்கும் வெகுவாக தேடப்பட்டு வரும் நபரான மக்லேன் எவ்வாறு அமெரிக்க மண் திரும்புகிறார் என்பதற்கு நீங்கள் இப்பதிவை படிக்க வேண்டியது அவசியமில்லை பார்த்தாலே போதுமானதாகும். அவர் திரும்பும் முறையில் பல பொருட்கள் அமெரிக்க மண்ணை வந்து சேர்ந்திருக்கின்றன. USAFE அமைப்பின் செல்வாக்கு பாயும் இடங்களை கதையில் பார்க்கும்போது அவர்களிற்கு இது ஒரு சாதாரண விடயமாகவே இருக்கும். முன்னைய ஆல்பத்தை போல மக்லேன் வெகு இயல்பாக விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிரித்தபடியே தாண்டி வரவில்லை எனும் நிம்மதியுடன் கதையை தொடர இங்கு வாய்ப்பு தரப்படுகிறது.

அதே சமயத்தில் கவர்ச்சி குண்டு Betty  அமெரிக்க மண்ணில் தன் தேடலை தொடர்கிறாள். சான் பிரான்ஸிஸ்கோ சென்று சில தகவல்களையும், நிழற்படங்களையும் சேகரிக்கிறாள். சண்டா மொனிக்காவில் NO MEN NO BRA எனும் கவர்ச்சி விடுதியில் ஜோனதன் ப்ளை பயணித்த பஸ்ஸின் ட்ரைவர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்கிறாள். மக்லேனுக்கு பரிசாக கிடைக்கும் ஒரு முத்தத்தையும் தன் இதழ்களில் ஏந்திக் கொள்கிறாள். காரை வாடகைக்கு எடுத்தாலும், விமானத்தை வாடகைக்கு அமர்த்தினாலும் தன் சொந்த பெயரில் உள்ள கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்கிறாள். இது FBI ன் கணிணிகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. வழமைபோலவே உள்ளூர் காவல்துறையிடமிருந்து பெரும்பாலான சமயங்களில் பெட்டி தப்பி செல்கிறாள். அவளை கோட்டை விட்ட FBI ஏஜெண்டுகள் உள்ளூர் பொலிசாரின் திறமையின்மையை விமர்சித்தவாறே தங்கள் கோட் சூட் மீது கெட்ச்சப் கொட்டாதவாறு பர்கர் சாப்பிட்டு பெட்டியை தேடி ஓடி மீண்டும் அவளை கோட் சூட் கசங்காது கோட்டை விடுகிறார்கள். இக்கதை FBI மற்றும் அமெரிக்க புறநகர் பொலிசாரை கிண்டல் அடிக்கும் நோக்கம் கொண்டதா எனும் சந்தேகம் எழுவது இவ்வகையான சமயங்களில் இயல்பான ஒன்றாகி விடுகிறது.

அமெரிக்க மண் வரும் மக்லேனுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவர் நாடிச் சென்ற உளவியல் மருத்துவியான சூசான் லெவின்சன் USAFE உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டி அழுத்தம் தரப்பட்டிருப்பதை அவன் அறிகிறான். சூசானும் அவள் தந்தையும் இணைந்து நடத்தும் பரிசோதனைகளால் நினைவுக்கு கொண்டு வரமுடியாதிருந்த தன் கடந்தகாலத்தின் பகுதிகளுக்கு மீண்டும் செல்ல ஆரம்பிக்கிறான் மக்லேன். கதையின் இந்த ஆல்பத்தில் ஏன் USAFE  மக்லேனின் நினைவுகளை துழாவி மீட்க விரும்புகிறது என்பது தெளிவாக்கப்படுகிறது. மேஃப்ளவர் கப்பலில் பயணித்தவர்களிற்கிடையே ஏற்பட்ட சில விரும்பதகாத நிகழ்வுகள், அவை எவ்வாறு காலம் காலமாக ஒரு தேடலை முக்கியமானதாக ஆக்கின, இத்தேடலிற்கும் மக்லேனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்பன கதையின் ஓட்டத்தில் அம்பலமாக்கப்பட்டு விடுகின்றன. மக்லேன் இன்னும் ஓட வேண்டும் என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது. அதற்கேற்ப மக்லேனும், பெட்டியும் தனித்தோ அல்லது சேர்ந்தோ ஓடுகிறார்கள். அதிரடிப்படை நுட்பங்களை உபயோகிக்கிறார்கள். ரகசியமொன்றினை அறிய க்ரீன்பால்ஸ் திரும்புகிறார்கள். ஷெல்பர்ன் குடியிருப்பு அமெரிக்க பூர்வகுடிகளை அமெரிக்க இனவாதத்திலிருந்து மீட்கிறார்கள். அவர்கள் தேடி வந்த ரகசியம் அவர்கள் கைகளுக்கு வருவதற்காக அவர்கள் சில காயங்களை தாங்கிக் கொள்கிறார்கள்.

முடிவாக மேலும் ஒரு முடிச்சுடன், மக்லேன் ஓட வேண்டி இருக்கிறது. புனித ஆண்ட்ரு அனாதைவிடுதியில் சிறுவயது மக்லேனை தேடி வந்து க்ரீன்ஃபால்ஸிற்கு அழைத்து சென்ற அம்மனிதனைத் தேடி, USAFE க்கு எதிராக இயங்கும் வேறு அமைப்புக்களை தேடி வாசகர்களும் ஓட வேண்டிய நிலைக்கு கதையின் இறுதியில் தள்ளப்படுகிறார்கள். வழமையான XIII கதை வரிசைக்குரிய ஆழமற்ற கதைசொல்லல், தர்க்கமற்ற சம்பவ கோர்வைகள் எனும் பராம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டாலும் கதை விறுவிறுப்பாகவே நகர்கிறது. சித்திரங்களில் ஜிகுனோவ் சந்தேகமேயில்லாமல் அடி பின்னி இருக்கிறார். அழகுகளின் மார்பழகுகளை காட்சியாக்கும் வழக்கம் இரண்டாம் சுற்றில் இல்லை என்பதும் கதையில் தெளிவாகிறது. XIII ல் புதுமையான ஆச்சர்யங்களை அறிமுகம் செய்யமாட்டார்களா எனும் கேள்விக்கு இந்த ஆல்பமும் பிடிவாதமாக எதிர்மறை பதிலொன்றையே தந்து நிற்கிறது.