Saturday, December 10, 2011

காமத்தின்முன் கீழ்விழல்


காமம் எனும் அடிப்படையான மனித இச்சை குறித்த உங்கள் நேர்மையான பார்வைதான் என்ன? நாம் வாழும் சமூகம் கொண்டுள்ள மதிப்பீடுகளிற்கு அஞ்சி, ஒருவரின் பாலியல் இச்சை என்பதானது மறைத்து வைக்கப்படவேண்டிய ஒன்றாகிறதா? தீராப்பசிபோல தீராத காமம் என்பது இயல்பானதா இல்லை இயல்பை மீறியதா? பாலியல் இச்சை என்பது அடக்கப்படவேண்டிய ஒன்றா அல்லது அணையற்ற வெள்ளத்தினுள் முங்குதல்போல் அனுபவித்து தீரவேண்டி முடியாமல்போகும் ஒன்றா? நீடிக்கும் உறவுகள் மீது நம்பிக்கையற்ற ஆணொருவன் தன் உடலின் பசியை ஆற்றுவதென்பது உங்கள் பார்வையில் எவ்வகையில் மொழிபெயர்க்கப்படுகிறது? இவ்வாறாக தன் உடலின் இச்சையை கட்டுப்படுத்த இயலாத மனிதனொருவனின் அந்தரங்கம் என்பது பொதுவெளியில் சித்திரமாக்கப்படும்போது அதன் பெயர் அவமானம் என விழிக்கப்படுமா? சமூகம் அவமானம் என்பதை அந்த ஆண் உணர்தல் நியாயமானதா? தன்னைப்போலவே பிறிதொரு ஆளுமைமீது இவ்வகையான ஒரு மனிதன் கொண்டிருக்ககூடிய பார்வைதான் என்ன? சமூகத்தின் முன்பாகவும், நாம் போற்றிடும் கலாச்சாரங்கள், பண்பாடுகள் முன்பாகவும் நாம் மேற்கூறிய கேள்விகளிற்கு அளித்திடும் நேர்மையான பதில்கள் எம்மை அவமானம் கொள்ள செய்யுமா இல்லை விழுமியங்களை போற்றியொழுகும் மனிதர்களின் அவமானம் நிறைந்த பார்வையை நாம் எம்மீது சுமந்துகொள்ள வைக்குமா? முடிவேயற்று நீண்டு செல்லக்கூடிய கேள்விகளைப் போலவே பார்ப்பவன் மனதில் சிந்தனைகளை எழுப்பி உக்கிரமாக மோதுகிறது இயக்குனர் Steve Mcqueen இயக்கியிருக்கும் Shame திரைப்படம்.

பிராண்டன் எனும் மனிதனின் அடக்க இயலா காமத்தை மையமாக கொண்டு அவனைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதும், பிராண்டன் மீதும் காமம் அணிந்திருக்கக்கூடிய வெவ்வெறு கவுரவமான முகமூடிகளை கிழித்துக் போட்டுக் கொண்டேயிருக்கிறது கதை. ஒவ்வொரு முகமூடியின் வீழ்வின் பின்பாகவும் காமம் கிண்டலுடன் மனிதர்களை பார்த்து சிரித்துக் கொண்டே முன்னகர்ந்து செல்கிறது. பெண்ணுடனான உடலுறவோ, சுய இன்பமோ, போர்னோ தளங்களோ, பாலியல் தொடர்பாடல்களோ இல்லாமல் தன் வாழ்க்கையை கழிக்க முடியாத பிராண்டனின் ஆவேசம் அவன் இச்சையில் சக்தியாக மறுவுரு எடுத்து அவனை அக்கினியாக எரித்துக் கொல்கிறது. தன் இச்சை மீது அவன் கொண்டுள்ள குற்றவுணர்வானது தன் காமம் குறித்து எவரும் அறிந்திடக்கூடாது என்பதில் பிடிவாதமாக உருமாறியிருக்கிறது எனவேதான் அவன் பணியிடத்தின் கழிவறையில் சுய இன்பத்தில் ஈடுபடும் முன்பாககூட கழிவறையிருக்கையை சுத்தமாக துடைத்து போடுவதில் அவதானமாக இருக்கிறான்.

அவனது குடியிருப்பின் மறைவிடங்களில் அவனின் இச்சையின் அந்தரங்கங்கள் ஒளிந்திருக்கின்றன. அவனைத் தேடிவரும் விலைமாதுவின் சிறு அசைவிலும் தன் இச்சையின் தணிக்கவியலா தாகத்தை தணிக்க வழி தேடுகிறான் பிராண்டன். அவன் தினந்தோறும் புணர்ந்தெழும்போதும் தொலைபேசியின் பதில்விடு கருவியில் அவன் சகோதரியின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தொலைபேசியை எடுத்து தன்னுடன் உரையாடு என அதில் அவன் சகோதரி சிஸ்ஸியின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிஸ்ஸியின் அழைப்புகளிற்கு அவன் பதில் அளிப்பதில்லை. தன் சகோதரியின் தகவல் குறித்த எந்த சலனமுமின்றி தன் வாழ்க்கையை தொடர்கிறான் பிராண்டன். இவ்வாறான நிலையில் அவன் குடியிருப்பிற்கே வந்து சேர்ந்துவிடுகிறாள் சிஸ்ஸி. தன் காமத்தை பொத்தி வைத்த அந்தரங்ககூட்டில் ஆக்கிரமிப்பான ஒன்றாக இதை உணர்கிறான் பிராண்டன். இதனாலேயே பின்பு தன் சகோதரியுடன் கடினாமன சொற்களை அவன் பரிமாறிக் கொள்கிறான். காமத்தின் முன்பாக ரத்த உறவுகூட தூக்கியெறியப்படும் கணம் சற்றும் அதிர்ச்சி தருவதாக இல்லை. பிராண்டன் கூறுவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்றே முடிவிற்கு வரமுடிகிறது.

shame-2011-12016-286421857சிஸ்ஸி தன் காதலனுடன் உறவை சிக்கலாக்கி கொண்டே பிராண்டனின் குடியிருப்பிற்கு வந்து சேர்கிறாள். பிராண்டன் காதுகளில் விழுமாறே அவள் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன் காதலனை தொலைபேசியில் இரஞ்சுகிறாள். பாடகியான அவள் பாடும் பாடலில் துணையொன்றிற்கான ஏக்கம் கலந்தே ஒலிக்கிறது. துணையொன்றுடன் இணைந்து வாழும் வாழ்க்கை ஒன்றின் மீதான கனவுகள் அவள் பாடலில் ஏக்கமான குரலாக ஒலித்து ஒழுகுகிறது. அப்பாடலை தன் தோல்வியாகவும் தன் சகோதரி மீது கொண்டுள்ள அன்பாகவும் உள்ளெடுக்கும் பிராண்டன் விழிகளில் கண்ணீர் வழிகிறது. ஆனால் பார்வையாளன் முகத்தில் எதிர்பாராமல் அறைவதுபோல் பிராண்டனின் முதலாளியான டேவிட்டுடன் அன்றிரவே உடலுறவு கொள்கிறாள் சிஸ்ஸி. இதை பிராண்டனால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. அவன் அறையில் அவர்கள் உறவுகொள்ள ஆரம்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அவன் தெருவில் இறங்கி ஓட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறான். தினந்தோறும் காமத்திற்கு வடி இல்லாது உறங்கமுடியாத ஒருவன் பிறர் காம இச்சை முன்பாக குறிப்பாக அவன் சகோதரியின் காம இச்சை முன்பாக படும் அவமானம் அதிர வைக்கிறது. ஓடி முடிந்து களைத்து வீடு வந்து உறங்கச் செல்லும் அவனை அன்புடன் அணைக்கும் சிஸ்ஸியுடன் அவன் சீறும் சீற்றம் அவன் தன்னுள் கொண்டு வாழும் அவமானத்தின் தாண்டவப் பரிமாணம்.

பிராண்டனின் முதலாளியான டேவிட் மணமானவன். குழந்தையும் உண்டு. சிஸ்ஸியைக் கண்ட அரைமணிநேரத்தில் தன் குடும்பத்தையே மறந்து உடலுறவிற்கு தயாராகிவிட்ட அவன் பிராண்டனின் கணிணியிலிருந்த போர்னோ சரக்குகளை குறித்து ஒரு நீதிமான்போல் பேசுகிறான். காமம் என்பது தனக்குரிய தேவை எனும்போது அது குறித்த எந்த அருவருப்போ அல்லது அறமீறல்கள் குறித்த பிரங்ஞையோ மனிதரிடமிருந்து காணமல் போய்விடுகிறது என்பது வியப்பளிப்பாதாக இல்லையா. இதே வியப்புடன்தான் டேவிட்டின் அலுவலக அறையை விட்டு அவன் உரையாடலை பாதியில் விட்டு செல்கிறான் பிராண்டன். கணிணிக்குள் ஒளிந்திருக்கும் காமத்தினை கண்டுகொள்ள முடிகிறது மனதினுள் ஒளிந்திருக்கும் காமத்தை கண்டுகொள்ளத்தான் வழி இல்லையோ. தன் காமம் வடிந்த மனிதம் என்ன வேடமும் அணிந்திட தயக்கம் கொள்வதேயில்லை.

தான் சுய இன்பம் செய்வதை சிஸ்ஸி தற்செயலாக பார்த்துவிடுவதனால் தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறான் பிராண்டன் ஆனால் அவன் இயல்பு அவனை விட்டு நீங்குவதாக இல்லை. நீடிக்ககூடிய உறவொன்றிற்காக முனையும் அவன், அலுவலகலத்தில் பணிபுரியும் சகாவான மரியானுடன் உறவுகொள்ள முனைகிறான். ஆனால் அவனால்அவளுடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை. அவள் உடலின் முன்பாக அவன் காமம் செயலிழந்து நிற்கிறது. நீடித்து நிற்கும் உற்வொன்றின் மீதான சந்தேகம் அவன் உணர்ச்சியை நீர்த்துவிடச்செய்கிறது. அவளை ஹோட்டல் ரூமிலிருந்து அனுப்பி வைக்கும் பிராண்டன், தான் மரியானை உணவுவிடுதியொன்றில் சந்திக்கும் முன்பாக தெருவில் உலாச்சென்றபோது கண்ட ஒரு உடலுறவு நிலையை ஒரு விலைமாதுவுடன் நிகழ்த்தி தன் காமத்தை வடித்துக் கொள்கிறான். மேற்குறிப்பிட்ட உணவு விடுதிச் சந்திப்பில், நீடிக்கும் உறவு ஒன்றிற்கான தேடலின் வடிவாக மாரியானும், உடல் இச்சையை ஆற்றிக்கொள்ள புதிய உடல்களை ஓயாது தேடும் காமத்தின் வடிவாக பிராண்டனும், இவ்வகையான தேடல்களினூடே எந்தவித லஜ்ஜையுமின்றி நகர்ந்து செல்லும் வாழ்க்கையின் வடிவமாக உணவுவிடுதிப் பரிசாரகனும் தோன்றுகிறார்கள்.

டேவிட் தன் விரலில் திருமண மோதிரம் அணிந்திருந்தை நீ அவதானிக்கவில்லையா என சிஸ்ஸியிடம் கோபம் கொள்வான் பிராண்டான், ஆனால் இதே பிராண்டன் கையில் திருமண மோதிரம் அணிந்த ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து செல்ல தயங்குவதில்லை. அவன் ஆளுமையின் முரண்தன்மையை திரைப்படம் நெடுகிலும் ஒரு ரசிகன் அவதானித்திட முடியும். தன் இயல்பை கட்டுப்படுத்த முடியாதவனாக அவன் இச்சையை தீர்ப்பதற்காக அவன் அலைந்து சென்று கொண்டேயிருக்கிறான். அதற்காக அவன் அவமானங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கிறான். இச்சை அவனை விடுதலை ஆக்க ஆக்க அவனுள் நுழையும் அவமானம் அவனை குறுக வைத்துக் கொண்டே செல்கிறது. காமம் எனும் பெரும்சக்தியின் முன்பாக வெற்றி பெறவியலாத பெரும்பாலான சாதாரண மனிதர்களைப் போன்றே அவனும் அதன்முன்பாக மண்டியிட்டுக் கொள்கிறான். ஆனால் சிஸ்ஸியோ தீவிரமான ஒரு முடிவை தேடிச்செல்கிறாள். விரலில் திருமண மோதிரம் அணிந்த அதே பெண்ணை மீண்டும் அவன் ரயிலில் காண்கிறான். அவளும் அவனை அழைப்புடன் பார்க்கிறாள். பிராண்டன் காமத்தை வெல்வானா என்பதற்கு விடையில்லை. காமத்தை வென்றவன் என்று யாருமில்லை. மிகவும் உக்கிரமான இப்படம் ரசிகனின் உள்ளத்தை சற்று ஆட்டிப்பார்த்துதான் விடுகிறது. பிராண்டன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் Michael Fassbender, அவரின் சகோதரி சிஸ்ஸியாக வேடமேற்றிருக்கும் நடிகை Carey Mulligan ஆகியோர் மிகவும் அருமையாக நடித்து சென்றிருக்கிறார்கள். திரைப்படத்தின் இசை காமத்தின் வேகத்தையும், இன்பத்தையும், தந்திரத்தையும், வலியையும், அவமானத்தையும் ஒலிக்க விடுகிறது. அதிர்ச்சியும் நேர்மையுமான இப்படைப்பை பக்குவமான உள்ளங்கள் பார்த்து ரசிக்கலாம். [***]

ட்ரெய்லர்

Saturday, December 3, 2011

பேச மறுத்த கலைஞன்


1927ல் ஹாலிவூட் ஊமைப்படங்களில் மிகப்பிரபலமான நாயகனாக திகழ்கிறான் ஜார்ஜ் வலண்டைன். சினிமா எனும் கலைக்கு இன்றியமையாத துணையான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி Talkies எனப்பட்ட பேசும் படங்களை நோக்கி முன்னேற ஆரம்பிக்கையில் அந்தப் பாதையில் தன் பாதங்கள் படாது கலை செய்ய விரும்புகிறான் ஜார்ஜ் வலண்டைன். இதேவேளையில் அவனுடன் ஒரு படத்தில் துணைப்பாத்திரமாக நடித்து அவன் மனதை சலனகலனம் செய்த பெண்ணான பெப்பி மில்லர், பேசும் படங்களில் மிகப்பிரபலமான நாயகியாக உருவாக ஆரம்பிக்கிறாள்…..

The Artist திரைப்படத்தின் ஆரம்பம், ஒரு ஒற்றன் சிறையிலிருந்து தப்பிக்கும் சாகசத்துடன் ஆரம்பமாகிறது. அந்த ஒற்றனின் சாகசம் The Russian Affaire எனும் திரைப்படத்தின் இறுதித் தருணமாக அமைகிறது. அத்திரைப்படத்தை வெள்ளையும் கறுப்புமாக ஆடம்பர ஆடையணிந்த ஆடவரும் பெண்டிரும் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கின் திரையின் முன்பாக ஒரு ஆர்கெஸ்ட்ரா திரைப்படத்திற்கான பின்னணி இசையை நேரடியாக இசைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது. 1927களில் காட்சிகளுடன் இசை கோர்த்துக் கொள்ளாத திரைப் படைப்பொன்றினை அந்த அரங்கில் ரசிகர்கள் ரசித்து மகிழும் தருணத்தை இக்கால ரசிகர்களிடம் கொண்டு வருகிறார் திரைப்படத்தின் இயக்குனரான Michel Hazanavicius. ஒரே ஒரு வித்தியாசம். எமக்கு முன்பாக இசைக்குழு இல்லை என்பதுதான். பேசும் படங்கள் திரையுலகை புரட்டிப்போட்டு ஆட்சியை கைப்பற்றும் முன்பாக சினிமாதுறையை கலக்கிய ஊமைப்படங்கள் பாணியில் கறுப்பு வெள்ளையில், நடிகர்கள் வாய் அசைவின் பின்பாக கறுப்பான திரையில் தோன்றும் வெள்ளை நிற வசனங்களுடனும், பிரகாசமான ஒளி அமைப்புக்களுடனும் நகைச்சுவையாக ஆரம்பிக்கிறது திரைப்படம். ஊமைப்படங்களிற்கு தற்கால பிரெஞ்சு இயக்குனர் ஒருவர் வழங்கியிருக்கும் கவுரமாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

இயக்குனர் மிசேல் ஹசானாவிசியுஸிற்கு பிரபலத்தை பெற்றுத்தந்தது அவர் இயக்கிய OSS 117 திரைப்படங்கள்தான். ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் OSS 117. அப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரெஞ்சு நடிகர் Jean Dujardin. முதல் பாகம் பெரு வெற்றி பெற்று இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வசூல் கண்டது. இந்த திரைப்படத்தில் ஜார்ஜ் வலண்டைன் எனும் ஊமைப்பட நாயகனாக பாத்திரமேற்றிருப்பவரும் அவரே. நகைச்சுவையை வெளிப்படுத்தும் கலைஞராக அறிமுகமான ஜான் டுஜார்டானிற்கு இத்திரைப்படத்தின் கலகலப்பான ஆரம்பக் காட்சி நிகழ்வுகள் இலகுவாக கைவந்திருக்க வேண்டும். மிகவும் அனாசயமாக அப்பகுதிகளை ரசிகனை மென்சிரிப்புடன் கடந்து செல்ல வைக்கிறது அவரின் திறமை. ஊமைப்படம் என்பதால் முகபாவனைகளும், உடல் அசைவுகளும்கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையவேண்டும் என்பதற்காக அவர் முகமும் உடலும் திறமையுடன் இழைகோர்த்து சென்றிருக்கிறது.

ஆனால் ஜான் டுஜார்டான் ஏற்றிருக்கும் ஜார்ஜ் வாலன்டைன் பாத்திரம் கலகலப்பை மட்டுமே கொண்ட ஒன்றல்ல. மனைவியை புரிந்து கொள்ளவியலாத ஒரு கணவனாக, தன் காதலை வெளிப்படுத்த முடியாத ஒரு காதலனாக, பேசும் படங்களின் முன் தன் பெருமையை இழக்க விரும்பாத பிடிவாதமான கர்வம் கொண்ட ஒரு கலைஞனாக, மனித நேயத்தின் ஒரு சில வரிகளாவது ஓடும் ஒரு மனிதனாக, பேசும் சினிமாவின் வெற்றியால் யாவற்றையும் இழந்து நொடிந்து போகும் ஒருவனாக அப்பாத்திரம் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. மிகை நடிப்பு, மிகையுணர்வு வெளிப்படுத்தல் என அடையாளப்படுத்தக்கூடிய வகையில் ஒரு ஐந்து வருடகால வாழ்க்கையை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜான் டுஜார்டான். ஆனால் அவரின் இவ்வகையான நடிப்பைவிட லக்கி லூக் எனப்படும் கவ்பாய் பாத்திரமே எனக்கு பிடித்திருக்கிறது. இவ்வகையான நடிப்பை தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்து பழகிப்போனதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கேன்ஸ் அவரின் இப்பாத்திரத்திற்கு சிறந்த நடிகரிற்கான விருதை வழங்கி கவுரவித்ததையும் இங்கு நான் எழுதியாக வேண்டி இருக்கிறது.

the-artist-2011-21224-435674912ஜார்ஜ் வாலண்டைனினால் திரைப்படங்களில் துணை நடிகையாக தன் தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் பாத்திரம் பெப்பி மில்லர். அவர்கள் இருவரும் முதலில் சந்திக்கும் நிகழ்ச்சியே பெப்பி மில்லரின் போட்டோவை தினசரி ஒன்றின் முதல் பக்கத்தில் வர வைத்து விடுகிறது. அதன் வழியே ஆரம்பமாகும் பெப்பி மில்லரின் சினிமா வாழ்க்கையின் புகழும் வெற்றியும், ஜார்ஜ் வாலண்டைனின் வீழ்ச்சியும் திரைப்படத்தில் ஒருங்கே பயணிக்கின்றன. நடனத்தில் ஆரம்பமாகும் அவர்கள் கலைப்பயணம், அருமையான ஒரு நடனத்துடனேயே நிறைவு பெறுவது அழகான பொருத்தம்.

ஜார்ஜ் வாலண்டைனிற்கான தன் காதலை வெளிப்படுத்தாதவாறு அவன் நலனை பேணி அவனை மீட்டெடுக்க விழையும் பெப்பி மில்லர், அவன் தோல்விகள் ஒவ்வொன்றிலும் அவனிற்காக வருந்துபவளாக இருக்கிறாள். அவன் கலை மீதும் அவன் மீதும் அவள் கொண்ட பற்றை அவள் ஒரு போதும் இழப்பதேயில்லை. வெற்றியின் களிப்பில் அவள் வார்த்தைகளில் சறுக்கி விட்டபோதும் வீழ்ந்து விட்ட ஜார்ஜ் வாலன்டைனிற்கு அது வலிக்ககூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறாள். படத்தின் இயக்குனரின் வாழ்க்கை துணையான நடிகை Bérénice Bejo சிறப்பாக தன் வேடத்தை ஆற்றியிருக்கிறார். ஜார்ஜ்ஜும், பெப்பியும் ஆடும் நடனம் அழகானது. திரை இசையும் இனிமையானது. ரசிகர்களின் உணர்வுகளை உருக்க வேண்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்குமேயாயின் கொளுத்தி வைக்கப்படாத மெழுகுவர்த்திகூட சில சமயங்களில் உருகிப்போகும் அளவு உருக்கமான சம்பவக் கோர்வைகளிற்கு கதையில் பஞ்சம் என்பதே இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகிறது.

ஆனால் இவ்வகையான காதல் கதைகளை ஏற்கனவே பார்த்து விட்ட ஒரு உணர்வு மேலோங்கி செல்வதை தடுக்க முடியாமல் இருக்கிறது. வழமையாக பார்த்து பழகிய காட்சிகள் வேறு ரூபத்தில் வந்துவிட்டது போல ஒரு பிரமை கண்ணாடி மீது வழுகிச்செல்லும் நீர்துளியாக நழுவுகிறது. ஒரு வருடம் சம்பளம் தராவிடிலும் விசுவாசமாக வேலை பார்க்கும் கார் சாரதி, காதலிற்காக காதலன் அறியாது அவனிற்கு உதவிகள் செய்யும் ஒரு பெண், முன்னாள் நட்புகள் கைவிட நொடிந்து தனியனாகப் போகும் ஒரு முன்னாள் பிரபலத்தின் சோக சரிதம் என பல திக்குகளிலும் பார்த்த நினைவுகள் கண்சிமிட்டுகின்றன. இருப்பினும் பார்த்து ரசித்திட அருமையான மனதைத் தொடும் நுட்பமான காட்சி தருணங்கள் படத்தில் உண்டு. மிகையான பாராட்டுக்களிற்கும், எதிர்பார்ப்புக்களிற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு நல்ல படம். மகோன்னத படம் அல்ல. அல்லது ஊமைப்படக் கலைஞன் பேச மறுத்தது போலவே படமும் என்னுடன் பேசமறுத்து விட்டது போலும். [** ]

ட்ரெய்லர்

Saturday, November 26, 2011

கொலைஞனின் சீடன்


மாயபுனைவுகளின் வரிகளில் வாழ்ந்து வருபவனிற்கு ஒரு ஏக்கம் இழையோடும் எதிர்பார்ப்பு காலைப்புகாரில் கலந்திருக்கும் குளிர்போல் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பாரா ஒரு திருப்பம் அல்லது ஒரு நிகழ்வு. ஒரு புதிய அனுபவம். குருதியை இதமாக திராட்சை மதுபோல் வெப்பமாக்கும் சாகசம். மனதை பனியொழுகும் ஒரு மொட்டுப்போல் வீங்கச் செய்யும் தியாகம். வியக்க வைக்கும் புதுவகை மந்திரம். திகைக்க வைக்கும் உயிரிகள். அரிதாகவே காணக்கூடிய நகைச்சுவை. வரிகளிடையே இளம்கொடிபோல் படர்ந்து கிடக்கும் முதல் காதல். புது உலகமும் அதன் நிலவியலும் உயிரியலும் சனவியலும் அதனூடு அவன் வாழ்ந்து செல்லக்கூடிய பயணமும்.

ஒவ்வொரு மாயபுனைவும் படிப்பவனை மயக்கிவிடவேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல. படிப்பவை எல்லாம் மயக்குபவையாக இருந்தால் அந்த உலகங்களில் இருந்து மீட்சிதான் ஏது. இருப்பினும் ஒவ்வொரு மாயபுனைவு எழுத்தாளரும் தனக்கென ஒரு சிறப்பை உருவாக்கி கொள்ளவே விழைகிறார்கள். அவர்களிற்கென தனித்துவமான ஒரு சுவையை அவர்கள் சமைத்துக் கொள்கிறார்கள். அதைப் படிப்பவன் ஒன்று அதை தீராப்பசியுடன் சுவைப்பவன் ஆகிறான், இல்லை பந்தியிலிருந்து சுவைவிலகி செல்பவனாகிறான். ஒவ்வொரு மாயபுனைவும் அதன் அட்டைக்கு பின்னால் விருந்தொன்றை விரித்து வரிகளில் பாய்விரித்திருக்கிறது. அது தரும் சுவை வாசகனின் ரசனையுடன் ஒன்றிச்செல்லும் தருணத்தில் அது நீண்டு செல்லும் ஒரு ஆனந்த மோகானுபவமாக மாறிவிடுகிறது.

ராபின் ஹாப்பின் பெயர் எனக்கு தெரிய வந்த நாளிலிருந்து அவரை ஒரு ஆண் என்றே வருடக்கணக்கில் நான் எண்ணி வந்திருக்கிறேன். எண்ணங்களும் உண்மைகளும் எதிராகும் புள்ளிகளில்தானே ஆச்சர்யம் கருவாகிறது. ராபின் ஹாப் ஒரு பெண் எழுத்தாளர் என்பது என்னை உண்மையில் ஆச்சர்யப்படுத்திய ஒன்று. பிரான்ஸில் மாயபுனைவு வாசகர்களால் மிகவும் சிலாகிக்கப்படும் எழுத்தாளர் அவர். திரைப்பட வெளியீடுகளிற்குரிய கவுரவங்களுடன் அவர் நூல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஜார்ஜ் மார்ட்டினிற்கோ , ராபார்ட் ஜோர்டானிற்கோ இது இங்கு இதுவரை கிடைக்காத ஒன்று. பாதாள ரயில் நிலைய சுவர்களை சுவரொட்டிகளாக, மயங்கவைக்கும் வகையில அலங்கரிக்கும் அவர் நூல்களின் முன்னட்டைகளை நான் நின்று ரசித்திருக்கிறேன். அபாரமான வரவேற்புகளுடன் அவர் நாவல்கள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அவர் எழுதும் மொழியில் அவரிற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு என்பது இங்கிருப்பதைவிடவும் அளவில் குறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் அவர் எழுதும் வரிகளில் வழமையான மாயபுனைவொன்றில் இருக்கக்கூடிய அதிரடிகளும், பரபரப்புகளும், சாகசங்களும், மாயங்களும் அளவில் குறைந்ததாகவே காணக்கிடைக்கிறது. அவர் எழுதிய நாவலான Assasin's Apprentice எனும் நாவல் எனக்களித்த அனுபவம் இது. Farseer முப்பாக நாவல்களில் முதல் புத்தகம் இது.

வழமையான மாயபுனைவொன்றின் நாயகனிற்கு கிடைக்ககூடிய வெற்றி, புகழ் என்பன இக்கதையின் நாயகன் எனக்கருதக்கூடிய Fitz ற்கு கதையின் முடிவின்பின்கூடக் கிடைக்காது. நாயகன் வெற்றி பெறவேண்டும், வாகை சூட வேண்டும் என மாயபுனைவுகளின் மரபில் ஒய்வெடுக்கும் உள்ளங்கள் அலறித்துடித்தபோதும், ராபின் ஹாப் அந்த அலறல்களிற்கு எல்லாம் காது கொடுப்பதில்லை. மிக எதார்த்தமாக, ஏன் மிகை எதார்த்தத்துடன் ஆனால் படிப்பவர்களின் உணர்வுகளை குழைந்திட செய்யும் வகையில் நாயகனின் கதையை ஹாப் கூறிச் செல்கிறார்.

பட்டத்திற்குரிய இளவரசன் ஒருவனிற்கு தவறான வழியில் பிறந்த ஃபிட்ஸ், ஆறு வயதில் அவன் பாட்டனாரின் அரண்மனை வாசலில் கைவிடப்படுகிறான். அங்கு அவன் ஆரம்பிக்கும் அந்த புதிய அரண்மனை வாழ்வில் அவன் என்ன பங்கு வகிக்கப் போகிறான், அவன் வாழ்க்கை என்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறது, அவன் சந்திக்கப்போகும் மனிதர்கள் என்ன வகையானவர்கள், அவர்கள் அவனை எப்படிப்பட்ட ஒருவனாக உருமாற்றப் போகிறார்கள், அவனில் மறைந்திருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்ன, அவன் சந்திக்கப்போகும் இடர்பாடுகளிலும், சவால்களிலும் அவன் வெற்றி காண்பானா.... இவை எல்லாவற்றையும் தனக்கேயுரிய மென்மையான ஒரு நடையில் ஹாப் விபரிக்கிறார். தவறான முறையில் பிறந்த ஒரு ராஜரத்த வாரிசின் வாழ்க்கை என்பது எவ்வளவு சோகமான ஒன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுவதை விட சோகமான ஒன்றாக ஃபிட்ஸின் வாழ்வை விபரிக்க ஹாப்பால் முடிந்திருக்கிறது. உன் ரத்தத்தை உன் எதிரி உனக்கெதிரான ஆயுதமாக மாற்றுமுன் அவனை நீ உன் விசுவாசத்திற்குரிய ஆயுதமாக்கு எனும் ராஜ தந்திரத்தின் பின்னால் ஒரு சிறுவன் வாழ்ந்து செல்லக்கூடிய வேதனைகள் வரிகளில் வாழும் வகையில் ஹாப்பால் இக்கதையை சொல்ல முடிந்திருக்கிறது. சுமாராக ஆரம்பிக்கும் ஒரு சுவாரஸ்யமற்ற படகுப் பயணம், ஆற்றின் நீளத்தினோடு அழகும் சுவையும் பெற்றுக் கொண்டு விடுவதுபோல் அவரின் எழுத்துக்கள் மென்மையான அதன் ஓட்டத்தில் படிப்பவனை ஒன்றிக் கொள்ள வைக்கின்றன.

Farseer கள் எனும் வழிவந்தவர்களின் வரலாற்றையும், தொன்மங்களையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பையும், அதில் வாழ்ந்திருக்கும் இனங்களையும், அந்த நிலத்தில் குடியிருக்கும் மந்திரத்தையும் அளவான முறையில் எழுதுகிறார் ஹாப். நீண்ட மாயபுனைவுகளின் மத்தியில் 400 பக்கங்கள் கொண்ட அவர் நாவலை ஒரு சிறுகதையாகவே கருத முடியும். ஆனால் உணர்வுகளை கலங்க வைக்கும் மென்மையான ஒரு சிறுகதை அது. ஏற்கனவே கூறியதுபோல மாயபுனைவுகளின் அதிரடிகளிலிருந்து மிக நீண்ட தூரம் இந்நாவலில் விலகி நிற்கும் ஹாப், வாசகனை கவர்வது அவர் கதையில் இடம்பிடிக்கும் பாத்திரங்களின் உணர்வுகளின் ஓட்டத்தினாலேயே. அது மனிதர்களாகவும், விலங்குகளாகவும், மன்னனின் கிறுக்கனாகவும் படிப்பவனின் உணர்வுகளோடு விளையாட தவறுவதில்லை. ஹாப்பின் எழுத்துக்களில் சோடனைகள், அலங்காரங்கள் இல்லை. அதிரடித் திருப்பங்கள் இல்லை ஆனால் படிப்பதை வாசகன் நிறுத்திவிட முடியாத சுவை இருக்கிறது. 200 வது பக்கத்தின் பின்பாக கதையை படிப்பதை நிறுத்தி வைப்பதை ஒரு சோதனையாக நான் கருத வேண்டியிருந்தது. இந்நாவலின் இறுதிப் பரா போல்... பின்னுரை அல்ல.... என் கண்கள் அருகில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்த மாயப்புனைவு வேறில்லை எனலாம். மாயப்புனைவுகளின் தனித்துவமான வகை எழுத்தாளர் ஹாப். அவர் உள்ளங்களிற்காக எழுதுகிறார். உயிருள்ள உள்ளங்களிற்கு அவரைப் பிடிக்கும். மாயப்புனைவு ரசிகர்கள் அவரின் இப்படைப்பை படித்து பார்த்திட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். [***]


Sunday, November 13, 2011

ரியல் ஸ்டீல் டின்டின் ஜானி இங்லிஷ்


2020 களில் மனிதர்களிற்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டிகள் வழக்கொழிந்துபோக எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைப் போட்டிகள் அதிநொழில்நுட்ப உதவியுடன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதாக இருக்கின்றன. சார்ல்ஸ் கெண்டன் எனும் முன்னாள் குத்துச் சண்டை வீரன் பழைய ரோபோக்களை மோதல்களில் ஈடுபட வைத்து பந்தயங்களில் ஜெயிக்க முயன்று வருகிறான். ஊர் விட்டு ஊர் அலையும் சார்ல்ஸிற்கு அவன் முன்னாள் காதலி இறந்து போகும் செய்தியுடன் அவன் மகனை வளர்க்கும் பொறுப்பை தன் காதலியின் சகோதரியிடம் கையளிக்கும் நிலை வந்து சேர்கிறது. இருப்பினும் சில வாரங்கள் சார்ல்ஸின் மகன் அவனுடன் சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன…

பெரும்பாலான குத்துச்சண்டை திரைப்படங்களில் குத்துச்சண்டைகளைவிட உறவுகளிற்கிடையில் நிகழும் போராட்டங்கள் வலியை தருவதாக இருக்கும். இயக்குனர் Shawn Levy இயக்கியிருக்கும் Real Steel திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பொறுப்பற்ற ஒரு தந்தைக்கும், அந்த தந்தையில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு மகனிற்கும் இடையிலான பரிமாற்றங்களை எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் மூலம் திரையில் பரிமாறுகிறது இத்திரைப்படம்.

தன் முன்னால் காதலி இறந்துவிட்ட செய்தியை அறிந்த சார்லஸ், தன் மகன் மேக்ஸை வளர்க்கும் பொறுப்பை அந்தக் காதலியின் சகோதரியிடம் தருவதற்காக ஒரு லட்சம் டாலர் பேரம் பேசும் ஒரு தந்தையாகத்தான் அறிமுகமாகிறான். ரோபோ மோதல் பந்தயங்களில் அவன் பெறும் தோல்விகள் அவனை ஒரு கடன்காரனாக மாற்றியடித்திருக்கின்றன. தன் மகன்மேல் பாசத்திற்கான எந்த அறிகுறிகளும் கொண்டிராத சார்லஸ் கூடவே கட்டாயமாக பயணிக்கிறான் மேக்ஸ். இந்தப் பயணம்தான் தந்தையினதும் மகனினதும் உறவை உயிர் கொள்ள வைக்கிறது. தந்தையின் தோல்வியிலிருந்து எவ்வாறு மகன் அவனை மீட்டெடுக்கிறான், தந்தை மகன் உறவு எவ்வாறு மீட்டெடுக்கப்படுகிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படத்தின் பிரதான அம்சமான ரோபோக்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் நன்றாகவே திரைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் பல திரைப்படங்களில் பார்த்து பார்த்து சுவை தேய்ந்துபோன காட்சிகள் படம் முழுதும் உண்டு. தன் தவறை உணர்ந்து தன் பொறுப்புக்களை ஏற்க விரும்பும் ஒரு தந்தை, ஒன்றுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக சாம்பியன் குத்துச் சண்டைக்கு முன்னேறும் ஒரு ரோபோ என பழைய பதார்த்தங்கள் லிஸ்ட் நீளுகிறது படத்தில்.

பிரதான பாத்திரமான சார்ல்ஸை ஏற்று நடித்திருப்பவர் நடிகர் Hugh Jackman. மனிதர் செம மிடுக்காக இருக்கிறார். நாயகத்தனங்களை துறந்த ஒரு பாத்திரத்தில் இயல்பாக நடிக்க அவர் முனைந்திருக்கிறார் இருப்பினும் அவர் மட்டுமல்ல திரைப்படத்தின் எந்தப் பாத்திரங்களும் மனதை அருகில் நெருங்கிவிடவில்லை. அவ்வகையில் பாதி ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாகவே இது அமைந்து விடுகிறது. உறவையும் பாசத்தையும் வென்றெடுப்பதற்கான யுத்தம் எனில் அது செய்யப்பட வேண்டிய யுத்தமே. இந்த யுத்தத்தில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இருக்ககூடும். [**]


les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-14794-2075921682பழைய பொருட்கள் விற்கும் சந்தை ஒன்றில் யுனிகார்ன் எனும் பெயர் கொண்ட அழகான ஒரு பாய்மரக்கப்பலை வாங்குகிறான் டின்டின். அவன் அப்பாய்மரக்கப்பலை வாங்கிய நிமிடத்திலிருந்து அதனை அவனிடமிருந்து கைப்பற்றிவிட முயலுகிறார்கள் சில ஆசாமிகள். இதனால் ஆர்வமாகும் பத்திரிகையாளன் டின்டின் அக்கப்பலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அது அவனை ஒரு சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது…..

ஒரு ரெயின் கோட், வெள்ளைக் காலுறைகளிற்குள் செருகப்பட்ட பேண்ட், சூப்பிய பனங்கொட்டை சிகையலங்காரம், கூடவே ஒரு சிறு வெள்ளைநாய் சகிதம் 88 வருடங்களாக உலகை வலம்வரும் காமிக்ஸ் பாத்திரமான டின்டின் குறித்து அறியாதவர்கள் எண்ணிக்கை அரிதாகவே இருக்ககூடும். Hergé என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியத்தை சேர்ந்த ஜார்ஜ் ரெமி எனும் கலைஞரால் உருவாக்கப்பட்ட பாத்திரம் அது.

உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பு வைத்துக் கொள்ளுமளவு ஊர் சுற்றி சாகசம் செய்திருக்கும் டிண்டின் மீது புகழ் மட்டுமல்ல சர்ச்சைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. சர்ச்சைகளை தாண்டியும் இன்றும் அவர் சாகசங்கள் சிறுவர்களால் படிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் நான் இப்பாத்திரத்தின் ரசிகன் அல்ல. சிறுவயதிலிருந்து அப்பாத்திரத்தினை விட காப்டன் ஹடோக் எனும் அப்பாத்திரத்தின் நண்பன் மீதே எனக்கு பிடிப்பு இருந்து வருகிறது. நிச்சயமாக ஹடோக் கையில் பெரும்பாலும் இருக்கும் பொருள் அதற்கு காரணமாக இருக்க முடியாது.

தொலைக்காட்சி அனிமேஷன் வடிவம், திரைவடிவம் என முன்பே டின்டின் சாகசங்கள் வெளிவந்திருந்தாலும் இவ்வருடம் வெளியாகியிருக்கும் வடிவம் பலத்த எதிர்பார்ப்பை பெற்றது. அதற்கு காரணம் இரு பெயர்கள். கோயாவி மற்றும் வவ்வாலான். அல்லது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் பீட்டர் ஜாக்சன். ஸ்பீல்பெர்க் இயக்கி தயாரிக்க, ஜாக்சன் தயாரிப்பில் பங்கேற்றிருக்கிறார், அவர் கடமை அத்துடன் நின்றிருக்காது என்பது ரசிகர்கள் எல்லாரிற்கும் தெளிவாக தெரிந்த ஒன்று.

les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-2011-14794-224173399The Adventures of Tintin: The Secret of The Unicorn என தலைப்பிடப்பட்டிருந்தாலும் சீக்ரெட் ஆஃப் யுனிகார்ன் கதையை சிறிது மாற்றியும் தாண்டியும், சில சம்பவங்களையும், சில பாத்திரங்களையும் பிற ஆல்பங்களில் இருந்து கதையில் அருமையாக கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கதைக்கு அதிக சாகசச்சுவையை சிறப்பாக இட்டு வந்திருக்கிறது. மேலும் படம் திரையாக்கப்பட்டிருக்கும் விதம் அசர வைக்கிறது. கண்களிற்கு விருந்து என்பார்கள் அல்லவா அப்படி ஒரு விருந்து இப்படத்தில் ரசிகர்களிற்கு காத்திருக்கிறது. எனவே நல்ல பிரதிகளில் படத்தை பார்ப்பதே சிறந்தது என்பதை கண்டிப்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

படத்தின் மிகச்சிறப்பான பாத்திரம் என நான் ஹடோக்கைதான் சொல்வேன். அவரின் அட்டகாசங்கள் இரு வேறுபட்ட கால இடைவெளிகளிலும் ரசிக்க வைக்கின்றன. 17ம் நூற்றாண்டு காப்டனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை என்னவென்று சொல்வது. சில நிமிடங்கள் வந்தாலும் பிரான்சிஸ் ஹடோக் பாத்திரம் மனதை அழகான இளம் வாலிபி போல் கொள்ளை கொண்டு விடுகிறது. டின்டின் பாத்திரம் ஹெர்ஜெ படைத்த பாத்திரத்தைவிட அழகாகவும், உயிர்ப்புடனும் திரைப்படத்தில் உலாவருகிறது, ஹெர்ஜெ படைத்த ஸ்னொவியிடம் இருந்த குறும்புத்தனமும் மென்மையும் சற்று குறைந்த ஸ்னொவியை திரையில் காணலாம்.

பகார் எனும் மரொக்க துறைமுக நகரில் நடக்கும் துரத்தல் காட்சிகள், 17ம் நூற்றாண்டில் கடலில் நிகழும் கடற்கொள்ளையர்களுடான மோதல் என்பன அசரவைக்கும் ஆகஷன்ரகம். மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளிற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சேர்த்திருக்கும் தரத்தையும் அதற்கு காரணமானவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிற்கு சாகசத்திரைப்படங்கள் என்றால் அல்வா செய்வது போல. மனிதர் தேங்காய் எண்ணெய், சிகப்பு அரிசி மா, கருப்பட்டி, தேங்காய்ப்பால் சகிதம் கோதாவில் குதித்து உருவாக்கியிருக்கும் இந்த சாகச அல்வா, பனித்துளி போல் ரசிகர்கள் மனதில் கரைகிறது. திரையரங்கில் அனைத்து வயதிலும் டிண்டின் ரசிகர்களை காணக்கூடியதாக இருந்தது என்பதும் மகிழ்ச்சியான ஒரு விடயமே. சிறுவயது நாயகர்கள் அவ்வளவு இலகுவில் மனதை விட்டு நீங்கி விடுவதில்லை என்பது உண்மைதான் போலும். முதல் காதலின் தலைவிதி என்பது இதுதானோ. [****]


johnny-english-le-retour-johnny-english-2-20791-1172805843மொஸாம்பிக் நாட்டில் தன் கடமைகளை சரிவர ஆற்றத்தவறிய ஸ்பெஷல் ஏஜெண்டு ஜானி இங்க்லிஷ், திபெத்தின் மலைப்பிரதேச துறவி மடமொன்றில் சேர்ந்து கொள்கிறார். ஆனால் சீனப்பிரதமரைக் கொலை செய்யும் சதியை துப்பறிவதற்கு அவரை விட்டால் வேறு எவரும் இல்லை எனும் நிலையில் ஜானி இங்கிலிஷை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறது MI7…….

இப்படி ஒரு மோசமான திரைப்படத்தை என்னை வெறுப்பேற்றும் நாவலாசிரியரான பிராண்டன் சாண்டர்சனிற்குகூட நான் பரிந்துரைக்க மாட்டேன் ஏனெனில் மோசமானவற்றிலும் தரமானவை உண்டு. ரோவான் அட்கின்சனிற்கு வயதாகி விட்டது, இருந்தாலும் Jhonny English: Reborn திரைப்படத்தில் மனிதர் சிரிக்க வைக்க பிரம்மபிரயத்தனங்கள் செய்கிறார். ஆனால் சிரிப்பதுதான் எனக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஆனால் திபெத்திய மடாலயத்தில் புடுக்கில் கற்பாறை கட்டி இழுக்கும் காட்சி சிரிக்க வைத்தது. பின் படம் முழுதும் உங்கள் புடுக்கில் ஒரு கற்பாறையை நீங்கள் சுமந்து கொண்டிருப்பதை உணரலாம்.

இங்கிலாந்து வந்து சேர்ந்தது முதல் ஆரம்பமாகும் ஜானி இங்கிலிஷின் சாகசங்கள்!!! டாக்கியோ, ஸ்வீஸ் என ஓட்டம் காட்டுகிறது. எப்படா சாகசம் முடியும் என கண்ணீர் மல்கும் நிலையில் ஏதோ கொஞ்சம் இரக்கப்பட்டு படத்தை முடித்து வைக்கிறார்கள். ஆள்மாறாட்ட கடுப்பு நகைச்சுவை, அப்பாவித்தனமான முட்டாள் நகைச்சுவை, கையை சும்மா வைத்திருக்க முடியா அலட்டல் ஆக்‌ஷன் நகைச்சுவை என படத்தில் பல நகைச்சுவைகள். சிரிப்பதைவிட சாகலாம் என்பது என்ன என்பதை உணர வைத்திருக்கிறார்கள், நன்றி.

ஜானி இங்லிஷிற்கு ஒரு பார்ட்னரை தருவார்கள். அவர் ஒரு கறுப்பினத்தவர். அப்பாத்திரத்தின் பெயர் Tucker. க்ரிஸ் டக்கரை கிண்டல் அடிக்கும் விதத்தில் இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்குமேயானால் இப்படத்தை க்ரிஸ் விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருப்பார். தனக்கு நெருங்கியவர்களையும் இப்படத்தை பார்க்க தூண்டியிருப்பார். அதன்பின் அவர்கள் க்ரிஸிற்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்களா என்பதை க்ரிஸ்தான் சொல்ல வேண்டும்.

ரோவான் அட்கின்சனை ஒய்வெடுக்க விடுங்கள். எங்களை வாழ விடுங்கள். இப்படியான படங்களை எடுப்பதிற்கு பதிலாக இளையதளபதிக்கு அண்ணாவாக நடியுங்கள். படம் நெடுகிலுமே எனக்கு அருகில் இருந்த ஒரு ரசிகை சிரித்துக் கொண்டே இருந்தார்... கொடுத்து வைத்த ஜீவன்!!!

Sunday, November 6, 2011

காற்றின் பெயர்


மாயபுனைவுகள் எவ்வளவு விரைவில் வாசகனை தங்கள் உலகிற்குள் எடுத்து செல்கின்றனவோ அவ்வளவிற்கு வாசகனிற்கு அவ்வுலகில் வாழ்தல் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களாலேயே வாசகர்கள் மனதில் மாயபுனைவுகளின் உலகுகளும் பாத்திரங்களும் மறக்க முடியாதவைகளாக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கு காலம் மாயபுனைவுகள் தம்மை மாற்றத்திற்குள்ளாக்கி கொண்டே இருக்கின்றன.

பக்கத்திற்கு பக்கம் மந்திரங்களும், மாயஜாலங்களும், வினோத ஜந்துக்களும் நிறைந்த மாயபுனைவுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு எதார்த்தத்துடன் தம்மை இயலுமானவரை பிணைத்துக் கொள்ளும் மாயபுனைவுகள் இன்று மாயபுனைவுகளின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இவ்வகையான புனைவுகளின் மிகப்பிரபலமான உதாரணமாக George R.R. Martin ன் கணிக்கமுடியாத படைப்பான A Song of Ice and Fire ஐ கூறலாம். Patrick Rothfuss படைத்திருக்கும் அவரின் முதல் நாவலான The Name of The Wind ஐயும் நான் எதார்த்த மாயபுனைவு எனும் பிரிவிற்குள் இட்டு வரமுடியும்.

ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை வாசகனை Kvothe எனும் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விபரித்தவாறே அதே மதுவிடுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் அவனை நிற்கவைத்துவிட்டு பக்கங்களை முடித்துக் கொள்கிறது. கிராம மதுவிடுதி அறிமுகமாகும் ஆரம்ப பக்கங்களிலேயே வாசகனை தன் தேர்ந்த மொழிநடை வழியாக அவர் படைத்திருக்கும் உலகில் இழுத்துக் கொண்டு விடுகிறார் பற்ரிக் ராத்ஃபஸ். மூன்று நாட்களில் கூறப்படப்போகும் கதையின் முதல் நாளிற்குரிய பகுதிதான் காற்றின் பெயர் எனப்படும் இந்நாவல்.

கிராம மதுவிடுதி உரிமையாளனை சூழ்ந்திருக்கும் மர்மங்களை அவனைக் கொண்டே விடுவிக்கும் வகையில் ருத்ஃபஸ் அப்பாத்திரத்தின் வழியாகவே கதையை கூறிச்செல்கிறார். கதையுடனும், அப்பாத்திரத்துடனும் வாசகனை நெருக்கமாக வைக்கும் இந்த உத்தி மிகசிறப்பான பலனை ராத்ஃபஸ்ஸின் படைப்பிற்கு அளித்திருக்கிறது. பக்கங்கள் நகர நகர வோத் பாத்திரத்துடனும் அவன் வாழ்க்கையின் பக்கங்களுடனும் வாசகன் ஒன்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.

the_name_of_the_wind_by_marcsimonettiமாயபுனைவுகளின் வழக்கம் போலவே ஒரு தனி உலகம்--- மனித நாகரீகத்தின் நான்கு மூலைகள் என இக்கதையில் அழைக்கப்படுகிறது, சிறப்பான ஒரு மந்திர சக்தி----- Sympathy என அழைக்கப்படும் மந்திரசக்தி கதையில் அறிமுகமாகிறது, தொன்மங்கள்---- Chandrian என அழைக்கப்படும் இருள் தேவர்கள் கதைக்கு திகிலை ஏற்றுகிறார்கள். இவை அனைத்தை தாண்டியும் சில ஆச்சர்யங்களை ராத்ஃபஸ் தன் நாவலில் வைத்திருக்கிறார். காற்றின் பெயர் என்ன எனும் கேள்விக்கு விடையை நாவலில் வோத் போலவே நாமும் தேடிக் கொண்டிருப்போம், அதை வோத் அறியும் தருணம் உண்மையிலேயே எதிர்பாரா ஒரு தருணமாகும். இவ்வகையான ஆச்சர்யங்கள் இந்நாவலின் இன்னொரு பலமாகும்.

வோத்தின் சிறுவயதை விபரித்து ஆரம்பமாகும் கதை, அவன் பெற்றோர்கள், அவர்கள் நடாத்தும் நாடோடி நாடகக்கூழு, கிராமம் கிராமமாக அவர்கள் செய்யும் பயணங்கள், மந்திர சக்தியுடனான வோத்தின் அறிமுகம், வோத்தின் பெற்றோர்களினதும் நாடோடி நாடகக்குழுவினதும் படுகொலை, அதன் பின்னான வோத்தின் அனாதை வாழ்க்கை, Arcanum எனவழைக்கப்படும் பல்கலைகழகத்தில் அவன் அனுமதி பெறல், பல்கலைக்கழக மாணவனாக வோத்தின் வாழ்க்கை என நகர்கிறது. வழமையான அனாதை பாத்திரங்களிற்கு வழங்கப்படும் கருணை ஏதுமற்ற நிலையில் வோத் படும் அல்லல்கள் கதையில் எதார்த்தமாக விபரிக்கப்படுகின்றன.

தன் பெற்றோர்களின் படு கொலைகளிற்கு காரணமானவர்களை பற்றி அறிந்து கொள்ளும் தீரா வேட்கையும், Denna எனும் இளம் பெண்ணின் மேல் வோத் கொள்ளும் சொல்ல முடியாக் காதலும் சிறப்பாக ருத்ஃபஸ்ஸால் எழுதப்பட்டிருந்தாலும், தொன்மங்களை எழுதுவதில் சறுக்கியிருக்கிறார் அவர். மேலும் வோத்தின் பல்கலைக்கழக வாழ்க்கை நீண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே செல்கிறது. ஆரம்ப பக்கங்களில் அட போட வைத்த எழுத்துக்கள் சலிப்பின் எல்லையை தொட்டு விடுமளவு சுவாரஸ்யமற்ற வகையில் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு பக்கங்களை அர்பணித்திருக்கிறார் ராத்ஃபஸ். ஆனால் நாவலை அதன் இறுதிப்பகுதி காப்பாற்றி விடுகிறது. பல்கலைக்கழகத்தை விட்டு வோத் ஒரு தகவலை அறிவதற்காக வெளியே செல்லும் பயணத்திலிருந்து நாவலின் முடிவுவரை பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர். காதல், சாகசம், எதார்த்தத்துடன் கூடிய நாயகத்தனம் என பக்கங்கள் பரபரவென நகர்கின்றன. குறிப்பாக டெனா மீது வோத்தின் காதல் வெளிப்படும் வரிகள் கொரிய திரைப்படங்களை விட அதிகமாகவே வாலிப மனதை இளகவைக்கின்றன Sourire. கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. சமீப காலத்தில் இவ்வளவு கவித்துவமான எழுத்துக்களை மாயபுனைவில் நான் படித்ததில்லை.

மதுவிடுதிக்கும், கடந்தகாலத்திற்குமாக பயணிக்கும் கதையின் இரு காலங்களிலும் மர்மமும் திகிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் கதையை திட்டமிட்டிருக்கிறார் பற்ரிக் ராத்ஃபஸ். கதையின் முதல் பாகம் முடிவடையும்போது அடுத்த பாகத்தை உடனடியாக படித்திட வேண்டும் என எழும் ஆர்வம் அவரின் திறமைக்கு சான்று. சலிக்க வைக்க்கும் நடுப்பகுதியை பொறுமையுடன் கடந்து வந்தால் உங்களிற்கு கிடைக்கப்போவது நல்ல ஒரு மாயபுனைவு வாசிப்பனுபவம். [**]

Monday, August 15, 2011

சீசரின் வீடு


மூளையின் சிதைவுற்ற திசுக்களை மீளுற்பத்தி செய்யும் ஆய்வுகளை வாலில்லா குரங்குகளில் மேற்கொண்டு வருகிறான் விஞ்ஞானியான வில். அவன் ஆய்வுகள் சாதகமான முடிவுகளை வழங்கும் நிலையை எட்டும்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாலில்லாக் குரங்கு ஒன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதனால் அக்குரங்கு சுட்டுக் கொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு ஈன்ற குட்டியை ஆய்வுகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்து வந்து தன் வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கிறான் வில். சீசர் எனப் பெயரிடப்பட்ட அந்த வாலில்லாக் குரங்கின் மூளைச் செயற்பாடுகள் வில்லை வியப்பிற்குள்ளாக்கும் எல்லைகளை தொட்டு நிற்கின்றன…..

பிரெஞ்சு அறிபுனைக் கதாசரியரான Pierre Boulle அவர்கள் 1963ல் படைத்த La Planete Des Singes எனும் நாவலைத் தழுவி அதன் சினிமா, தொலைக்காட்சி, காமிக்ஸ் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. பீய்ர் வூல் கற்பனை செய்த, மனிதர்களை அவர்களின் பரிணாம அதிகார மற்றும் அறிவடுக்குகளிலிருந்து கீழிறக்கி விட்டு குரங்குகள் ஆதிக்கம் செய்யும் உலகொன்று தோன்றுவதற்கு காரணமான ஆரம்பங்களை முன்வைப்பதாகவே இயக்குனர் Rupert Wyatt வழங்கியிருக்கும் Rise of the Planete of the Apes திரைப்படம் அமைகிறது.

புரட்சியையோ எழுச்சியையோ ஒரு விதைக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில் எதிர்காலமொன்றில் மனிதர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து பூமியில் விழும் விதையாக சீசர் எனும் சிம்பன்ஸி உருவாக்கப்பட்டிருக்கிறது. சீசர் எனும் அவ்விதைக்கு நீருற்றி வளர்த்ததில் மரபணுவியல் விஞ்ஞானத்திற்கும், தனக்கு கீழான விலங்குகள் என மனிதன் கருதும் ஜீவன்கள்மீது அவன் நிகழ்த்தும் அடக்குமுறையுடன் கூடிய வன்முறைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. பீர் வூலின் நாவலில் குரங்குகள் என்பது மனிதனின் மனதில் வாழும் மிருகத்தனமான உணர்ச்சிகளை குறிப்பதாகவும், அடக்குமுறை, வன்முறை, இன நிற துவேஷம் என்பன அவனை மனிதன் எனும் ஸ்தானத்திலிருந்து துரத்தி பரிணாம ஏணியில் அவன் மிருக குணங்கள் ஆதிக்கம் பெறுவதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

ரூப்பர்ட் வைய்யேட்டின் இயக்கத்தில் குரங்குகளின் எழுச்சியைவிட அவை மனிதனுடன் கொண்டிருக்கும் உறவே பிராதனப்படுத்தப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பரிசோதனக்காகவும், மிருககாட்சி சாலைகளில் காட்சிப் பொருளாகவும், சர்க்கஸுகளில் வித்தை காட்டும் மிருகமாகவும் சித்தரிக்கப்படும் குரங்குகள் சில வேளைகளில் மனிதர்களின் இல்லங்களில் செல்லப்பிராணிகளாகவும் இடம் பிடித்துக் கொள்கின்றன. அவ்வகையான வாய்ப்பு பெற்ற சீசரிற்கும் அவனை தன் வீட்டில் பராமரிக்கும் வில்லிற்கும், அல்ஸெய்மர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லின் தந்தை சார்ல்ஸிற்கும் இடையில் உருவாகும் பாசம் மிகுந்த உறவு படத்தின் பலம் வாய்ந்த அம்சமாகும்.

rise-of-the-planet-of-the-apes-2011-20170-634715338rise-of-the-planet-of-the-apes-2011-20170-153087889சிறு குட்டியாக வில்லின் வீடு வந்து சேரும் சீசர் அங்கு படிப்படியாக வளர்வதும், தன் தாய் வழியாக அவன் மரபணுவில் கடத்தப்பட்ட அலகுகள் வழி அவன் மூளை அறிவு விருத்தியில் வியக்கதகு எல்லைகளை தொடுவதும் ஒரு சிறு குழந்தையின் குறும்புகளை ரசிக்க வைக்கும் விதத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானி வில் இங்கு நோயால் பீதிக்கப்பட்ட தன் தந்தைக்கும், சீசரிற்கும் ஒரு தந்தையாக ஆகி விடுகிறான். மனதை தொட வைக்கும் காட்சிகளால் திரைப்படத்தின் இப்பகுதி ரசிகர் மனதை தொட்டுக் கொண்டே இருக்கிறது. சீசரின் அரவணைப்பும், அவன் தொடுதல்களும் பாசத்தின் நீட்சிகளாக மனதில் படர்கின்றன. சீசர் பாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஆக்கிரமிப்பது வில்லின் வீட்டில்தான்.

சீசர், வில்லையும், அவன் தந்தையும் தன் குடும்பமாக நினைத்துக் கொள்கிறான். அவன் தான் ஒரு சாதாரண வளர்ப்பு பிராணி அல்ல என்றே கருதுகிறான். இதனால்தான் தன் கழுத்துப் பட்டியை கழட்டி விட்டு வில்லின் காரில் பயணிகள் இருக்கையில் அவன் வந்து அமர்ந்து கொள்கிறான். வில்லின் தந்தைக்கு துன்பம் தரும் அயலவனையும் சீசர் தாக்குவது அவர்கள் தன் குடும்பம் எனும் எண்ணத்தினாலே ஒழிய வளர்ப்பு பிராணி காவலன் எனும் ஸ்தானத்தினால் அல்ல. தான் குடும்பத்தில் ஒருவன் என்பதை சீசர் நிரூபிக்கும் காட்சிகள் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் சீசர் அவன் வீட்டிற்குள்ளேயே இருக்க பணிக்கப்பட்டிருக்கிறான். சாளரம் ஒன்றின் வழியே அவன் வெளியுலகை, பரந்த உலகை எண்ணி ஏங்குவது உணர்த்தப்படுகிறது. வீடு ஒரு சிறை ஆனால் அன்பு நிறைந்த சிறை. பரந்த வெளியில் விருட்சங்களினூடாக தாவிப் பாயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீசர் தன்னை விடுவித்துக் கொள்கிறான். விருட்சங்களும், சுவர்கள் அற்ற வெளிகளும் அவனிற்கு பிடித்திருக்கின்றன. சாளரம் என்பது சீசரிற்கு அன்பான சிறையின் அடையாளம். அதனால்தான் தான் அடைக்கபபடும் கூண்டின் சுவரில் அவன் அன்பை வரைந்து கொள்கிறான். அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் கெடுபிடிகள் என்பவற்றின் நத்தை வேக நகரல் அவனிற்கு தன் இனத்தின் மீது மனிதன் காட்டி வரும் குரூரத்தை காட்டி விடுகிறது, தன் இனத்திற்கிடையில் நிலவும் வன்முறையின் பிடியை அனுபவிக்க செய்கிறது, தன் இனத்தை இதே நிலையில் தொடர்ந்தும் நீடிக்க விடக்கூடாது எனும் தீர்மானத்திற்கு சீசரை இட்டு வருகிறது. நம்பிக்கை ஒன்றின் முறிதலும், அவன் மனதில் எழும் சுதந்திர கனவும் அவனை தான் அடைபட்ட கூட்டில் அவன் வரைந்த சாளரத்தை அழிக்க செய்கின்றன. தமக்குரித்தான வீட்டை தாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதை அவனிற்கு உணர்த்திவிடுகின்றன. மனிதகுலத்துடன் இணைந்து வாழ்தல் என்பது தம் இயல்பிற்கு மாறானது என்பதை சீசர் உணர்வதுதான் எழுச்சியின் முதல் முளை.

la-planete-des-singes-les-origines-2011-20170-807017264சீசர் எனும் குரங்கு Motion Capture எனும் நுட்பத்தால் உருவாக்கப்பட்டாலும் அக்குரங்கின் நடிப்பிற்கு மூலமாக இருந்தவர் நடிகர் Andy Serkis. இணையத்தில் அவர் நடிப்பு எவ்வகையாக சீசராக பரிமாணம் பெற்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஆண்டி செர்கிஸ் எனும் சீசர்தான் என்பதில் ஐயமே இல்லை. அதே போல் நவீன தொழில் நுட்பத்தின் வழி உருவாக்கப்பட்டிருக்கும் குரங்குகள், அவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் வியக்க வைக்கின்றன. குரங்குகளை அடைத்து வைக்கும் நிலையத்தில் குரங்குகளினிடையே நிகழும் சம்பவங்கள் நல்ல ஆய்வின் பின்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. பபூனிற்கும் சீசரிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை கலந்து உருவாக்கபபட்டிருக்கின்றன.

திரைப்படத்தின் இறுதிப் பகுதியான குரங்குகளின் எழுச்சி, பரபரபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை அக்காட்சிகள் பெரிதும் கவரவில்லை. ஆய்வுகூட அழிப்பு, வன்முறை என்பன திரைப்படத்தை வழமையான வசந்த வசூல் அள்ளி சூத்திரத்தினுள் தள்ளி விடுபவையாக அமைகின்றன. இவ்வளவு சிறிய இடைவெளியில் இவ்வகையான ஒரு சிறையுடைப்பை குரங்குகள் ஒருங்கமைக்க முடியுமா எனும் கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் மிக மென்மையான மனித உணர்வுகளை தழுவியணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்னைய பகுதிகள் இத்திரைப்படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றி அடிக்கின்றன. மனிதகுலத்தின் அழிவு மனிதனாலேயே என்பதாக படம் நிறைவு பெறுகிறது. ஆனால் சீசர் தன் இனத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அழியப்போகும் மனிதகுலத்தை உயர்ந்த விருட்சமொன்றின் உச்சத்தில் நின்றவாறே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை கொல்ல வருபனையும் கொல்லத் தயங்கும் அவன் கண்கள் எம் கண்களுடன் இணைந்து கொள்கின்றன. [***]

Monday, August 8, 2011

சூப்பர் 8


லிலியான் எனும் புறநகரொன்றில் நிகழும் ரயில் விபத்தொன்றின் பின்பாக அந்த சிறிய நகரில் மர்மமான சில சம்பவங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. இச்சம்பவங்கள் அந்நகர மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைப்பவையாக அமைகின்றன. இந்த ரயில் விபத்தைக் குறித்த ஒரு ரகசியத்தை வெளியே விடாது காத்து வருகிறது ஒரு சிறார் குழு….

அமைதியான ஒரு புறநகர், சூட்டிகையான ஒரு நண்பர் குழு, துவிச்சக்கரவண்டி உலாக்கள், சிறு நகரை சல்லடை போட்டுத் தேடும் ராணுவம், இவற்றின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு மர்மம் போன்ற அம்சங்கள் Super 8 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இயக்கிய அருமையான படைப்பான E.T. யிலும் காணக்கிடைக்குமெனினும் சூப்பர் 8 திரைப்படமானது அதன் பார்வையாளர்களிற்கு வழங்கிடும் திரையனுபவம் அதனின்றும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.

சூப்பர் 8, திரைப்படத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அதன் இயக்குனர் J.J. Abrams திரையில் கொணர்ந்திருக்கும் மனித உறவுகள் குறித்த மென்மையான விபரிப்பு, உற்சாகம் துள்ளும் ஒரு சிறுவர் குழு அதன் நடவடிக்கைகள், இனிமையான பின்னனிப் பாடல்களுடன் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் 70களின் அந்திமம் என்பவற்றைக் கூறலாம்.

மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள் அற்ற திரைப்படத்தின் மர்மமுடிச்சுகூட ஒரு ஆறுதல் எனலாம். ஆனால் அந்த மர்மமுடிச்சை சூப்பர் 8ன் சிறப்புக்களில் ஒன்றாக கருத இயலாதவாறே அதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவு, நட்பு, காதல் எனும் பிரதான வீதிகளில் நகரும் கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திட அந்த மர்மமுடிச்சு இயக்குனரிற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதில் பிரம்மித்திட ஏதும் இல்லை. இயக்குனரின் பிரதான இலக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழத்தில் துயிலும் மென்மையான உணர்வுகளிற்கு தூண்டில் போடுவதாகவே அமைகிறது. அவரின் அத்தூண்டில் சரியாகவே வீசப்பட்டிருக்கிறது எனலாம். மாறாக மர்மமுடிச்சிற்கும் மனிதர்களிற்குமிடையில் இருக்ககூடிய உறவானது மனதை தொடும் ஒன்றாக திரைக்கதையில் உருவாக்கப்படவில்லை.

தனக்கான ஒரு இடத்தை நோக்கி திரும்பல் அல்லது வீடு செல்லல் என்பதனை திரைக்கதையின் இழைகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது சூப்பர் 8. திரைப்படத்தில் வரும் சிறுவன் ஜோ, சிறுமி ஆலிஸ் ஆகிய இருவரும் தம் அன்னையரை இழந்தவர்கள். ஜோவின் தாய், தொழிற்சாலை விபத்தொன்றில் பலியாகிவிடுகிறாள். ஆலிஸின் தாய் தன் குடிகாரக் கணவனுடன் வாழ விரும்பாது அவனை விட்டு விலகிச் சென்று விடுகிறாள். தாயன்பு வெறுமையான இரு வீடுகளில் வாழும் இரு சிறார்களாக இவ்விரு பாத்திரங்களும் கதையில் காட்டப்படுகிறார்கள்.

ஜோவிற்கும், ஆலிஸிற்கும் அவர்களின் தந்தைகளிற்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வின்மை என்பதன் அரூப சுவர்களை கொண்டதாகவே அவர்கள் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இச்சுவர்களுடனான மோதலே இவ்விரு சிறுவர்களையும் அச்சுவர்களிற்கு வெளியே அல்லது அச்சுவர்கள் மறையும் தருணத்தில் உற்சாகமாக இயங்க செய்கின்றன. தம்மிருவர் இடையேயும் ஒரு அந்தரங்க வெளியை உருவாக்க உந்துகின்றன.

super-8-2011-20233-1562492729இயக்குனர் ஏப்ராம்ஸ் இச்சிறார்கள் எதிர்கொள்ளும் வெறுமையான கணங்களையும், சிறுவர்களின் தந்தைகளிற்கும் சிறுவர்களிற்குமிடையில் உரையாட முடியாமல் துடிக்கும் பாசத்தையும், அக்கறையையும், இவ்விரு சிறார்களும் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் இடையில் முளைவிடும் ஈர்ப்பையும் மிகவும் அழகாக திரைப்படுத்தியிருக்கிறார்.

கனமான வெறுமை அழுத்தும் வீடுகளிலிருந்து விடுபட்டு நட்பையும், சாகசத்தையும், விருப்புடன் தேடி ஒடும் இந்த இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஈர்க்கப்படுவது என்பது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. தம் தந்தைகள் இடும் தடைகளைத் தாண்டியும் அவர்கள் தம் சந்திப்புக்களை தொடர்வதற்கு காரணம் அந்த சந்திப்பில் அவர்கள் உணரும் அன்பான ஒரு வெளியே. இந்த அன்பும் அக்கறையுமே இறுதியில் ஆலிஸை காப்பாற்றுவதற்காக ஜோவை ஓட வைக்கிறது. அதற்காக அவன் எதிர்கொள்ள வேண்டிய ஜீவன் அவன் உயிரை எடுத்துவிடலாம் என்பதை அவன் அறிந்தே தன் நண்பர்களுடன் ஆலிஸை தேடிச் செல்கிறான்.

இவ்வாறான ஒரு நண்பர் குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் குணாதிசயங்களுடன் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஏப்ராம்ஸ். அவர்கள் கூடும் போதெல்லாம் உற்சாகம் அங்கு கும்மியடிக்க ஆரம்பித்து விடுகிறது. சூப்பர் 8 கமெரா ஒன்றின் உதவியுடன் குறும்படத்தை இயக்கும் சார்ல்ஸ், வெடி நிபுணன் கேரி, குறும்படத்தில் டிடெக்டிவ் பாத்திரமேற்று நடிக்கும் மார்ட்டின் என ஒவ்வொருவரும் தனி ரகமாக சிரிக்க வைக்கிறார்கள். வயதிற்கு மீறிய உரையாடல்களை நிகழ்த்தி உயிரை வாங்கும் சிறுவர்கள் நிறைந்த படைப்புக்களில் இருந்து சூப்பர் 8 வேறுபடுவது ரசிகனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். இச்சிறார்களின் குடும்பங்கள் வழியேயும், நகரில் வாழும் மக்கள் வழியேயும் சிறிய புறநகர் சமூகமொன்றின் வேறுபட்ட மனநிலைகளையும் ஏப்ராம்ஸ் மெலிதாக காட்டியிருக்கிறார்.

திரைப்படம் நிறைவடைந்த பின்பாக சிறுவன் சார்லஸ் இயக்கிய திகில் குறும்படம் பார்வைக்கு வரும். அது அட்டகாசமான ஒரு அனுபவமாக அமையும். அதேபோல் சிறுமி ஆலிஸாக வேடமேற்றிருக்கும் Elle Fanning, சார்ல்ஸின் திரைப்பட காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் தன் துணைவனான டிடெக்டிவ்வை பிரிய மறுத்து உரையாற்றுமிடத்தில் அவர் முகத்தில் வந்துவிழும் உணர்வுகளின் தொகுப்பு அசர வைக்கிறது.

இழப்புக்களின் பின்பாகவும் வாழ்க்கையை தொடர்ந்திட வேண்டியதன் அவசியத்தையும், அன்பான உறவு மற்றும் நட்பின் பெறுமதிகளையும் வலியுறுத்துவதாக சூப்பர் 8 திரைப்படத்தின் இறுதிப்பகுதி அமைந்திருக்கிறது. நெருக்கடிகள் சில வேளைகளில் உறவுகளை எதிர்பாராத வகைகளில் புதுப்பித்து தருகின்றன. கையெட்டும் தூரத்தில் இருந்த பாசத்தை எட்டியணைக்கவும், ஆரத்தழுவிடவும் செய்கின்றன. தனக்கான ஒரு கூட்டை நோக்கி திரும்பும் எந்த ஜீவனும் அங்கிருக்கும் வெறுமைக்காக வேகம் காட்டுவதில்லை. தனக்கென அங்கிருக்கும் அன்பும், பாசமுமே அதன் வீடு திரும்பலை காலகாலத்திற்கும் இனிமையான ஒரு அனுபவமாக ஆக்ககூடும். ரசிகர்களின் மனதில் ஏக்கம் சுற்றிப் புதைத்திருந்த ஒரு ரகசியமான வீடு திரும்பலை மீண்டும் மேற்பரப்புகளிற்கு இட்டு வருவதிலும், அவர்கள் தம் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைப்பதிலும் சூப்பர் 8 சுபமாக வீடு திரும்பியிருக்கிறது. [**]

ட்ரெய்லர்

Friday, August 5, 2011

டீச்சரம்மா


வசதிபடைத்த ஆசாமி ஒருவனுடன் திருமண நிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட சிறுவர் பள்ளி ஆசிரியையான எலிசபெத் [Cameron Diaz], அவள் வகித்து வரும் ஆசிரியை பதவியை திருமணத்திற்காக ராஜினாமா செய்கிறாள். ஆனால் வசதி படைத்த அந்த ஆசாமியோ தன் பணத்தையே எலிசபெத் அன்பு செய்கிறாள் என்பதை கண்டு கொண்டு அவளுடனான தன் திருமண நிச்சயத்தை முறித்துக் கொள்கிறான்.

இந்த நிச்சய முறிவால், இன்னுமொரு வசதிபடைத்த ஆண் கிடைக்கும் வரையில் மீண்டும் தன் ஆசிரியைத் தொழிலை செய்யும் நிர்பந்தத்திற்குள்ளாகிறாள் எலிசபெத். தன் மார்புகளை பெரிதாக்கி கொள்வதும், பசையுள்ள பார்ட்டி ஒன்றை விரைவில் மடக்கி விடுவதும் அவள் மனதில் இருக்கும் மிக முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இவற்றிற்காக எந்த வழிமுறைகளிலும் இறங்க எலிசபெத் தயாராக இருக்கிறாள். ஆனால் எலிசபெத்தின் இந்த குறிக்கோள்கள் நிறைவேறுதற்கு ஒரு தடையாக வந்து சேர்கிறாள் அவளுடன் பணிபுரியும் சக ஆசிரியையான அமி…..

சற்றுக் கவர்ச்சியாக உடையணிந்து வரும் ஒரு ஆசிரியை. தன் வகுப்பு மாணவர்களிற்கு பாடங்களை நடாத்த விருப்பமின்றி அவர்களை வகுப்பறையில் திரைப்படங்களை பார்க்க செய்யும் ஒரு ஆசிரியை. வகுப்பறையில் தூக்கம் போடும் ஒரு ஆசிரியை. மது, போதைப் பொருள் போன்றவற்றை தன் வகுப்பறையிலேயே ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் ஒரு ஆசிரியை. தன் மார்க்கச்சையை தன் மாணக்கனிடம் கழட்டி அன்பளிப்பாக தரும் ஒரு ஆசிரியை [ இதில் வக்கிரம் ஏதும் இல்லை என்றாலும்].

இப்படியான, சற்றே வயதான ஒரு கவர்ச்சி ஆசிரியையை ஒரு சிறுவர் பள்ளி நிர்வாகம் ஆசிரியப் பணியில் தொடர்ந்து நீடித்திருக்க அனுமதிக்குமா என எழும் கேள்வியை, கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் விமலா டீச்சர் + கணேசன் = டாய்லெட்டில் கிச்கிச் எனும் வரிகளை பிரின்ஸிபால் கணேசன் வேகமாக துடைத்துப் போடுவதைப்போல் நீங்கள் துடைத்துப் போட முடிந்தால் Jake Kasdan இயக்கியிருக்கும் Bad Teacher எனும் இப்படத்தை நீங்கள் தாராளமாக ரசித்திடலாம்.

bad-teacher-2011-17974-1875525872ஃபரெலி சகோதரர்கள் இயக்கிய There’s Something about Mary திரைப்படத்திற்கு பின்பாக இவ்வளவு மோசமான குணங்கள் கொண்ட ஆனால் ரசிக்க வைக்கும் ஒரு பாத்திரமாக பெரியம்மா கமரூன் டயஸை திரையில் காண்பதே அலாதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் க்ளோஸப் காட்சிகளை தவிர்த்தல் அவரிற்கும், அவர் ரசிகர்களிற்கும் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றே நான் கருதுகிறேன். வாய் நிறையப் பொய், அண்டப் புளுகு, கெட்ட வார்த்தை, தன் மனதில் நினைப்பதை கன்னத்தில் அறைவதுபோல் சொல்லும் பண்பு என திரையில் அவரின் வயது உறுத்தலாக இருந்தாலும் ரசிகர்களை தான் ஏற்றிருக்கும் ஆசிரியை பாத்திரத்தை விரும்ப செய்து விடுவதில் உற்சாகாமான வெற்றி கமரூன் டயஸிற்கு வந்து சேர்கிறது. மிகவும் கொண்டாட்டமான உணர்வுடன் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் பெரியம்மா.

தன் மார்புகளை பெரிதாக்க தேவைப்படும் பணத்திற்காக அவர் செய்யும் தில்லுமுல்லுகள், சக ஆசிரியனான ஸ்காட்டை தன் கவர்ச்சி வலையில் வீழ்த்த அவர் நிகழ்த்தும் சதிகள், வகுப்பறையில் தன் மாணக்கர்களிற்கு அவர் செய்யும் கொடுமைகள் என அவர் செய்திடும் எல்லாவற்றையும் சலிப்பின்றி ரசிக்க கூடியதாகவே இருக்கிறது. தன் மார்புகளை பெரிதாக்க விரும்பி சத்திர சிகிச்சை நிபுணரிடம் செல்லும் கமரூன் அங்கு ஒரு நங்கையின் ஒரு ஜோடி சத்திர சிகிச்சை மார்புகளை வருடி சாம்பிள் பார்ப்பது அவரின் ஜாலியான கெட்ட குணத்திற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாயகிக்கு ஏற்ற எதிர் நாயகியாக, கமரூன் டயஸிற்கு இத்திரைப்படத்தில் அருமையான ஒரு எதிர்பாத்திரமாக அமைகிறார் அமி எனும் சக ஆசிரியை வேடமேற்றிருக்கும் நடிகையான Lucy Punch. கமரூன் எவ்வளவிற்கு ஒரு கெட்ட ஆசிரியையாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு ஒரு முன்மாதிரியான நல்லாசிரியையாக இருக்கிறார் அமி. அந்தப் பாத்திரம் வரும் காட்சிகளில் எல்லாம் கமரூனின் ரசிகர்கள் மனதில் கிளர்ந்தெழும் அந்த மெலிதான எரிச்சலே போதும் நடிகை லுசி பன்ச்சின் திறமையை சொல்ல. கமரூனின் தில்லுமுல்லகள் குறித்து பிரின்ஸிபால் கணேசனிடம் போட்டுக் கொடுத்து கமரூனின் சீட்டைக் கிழித்து வீட்டிற்கு அனுப்ப அவர் முயலும் போதெல்லாம் அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கமரூன் மடக்க விரும்பிய ஸ்காட்டை தான் மடக்கிய பின் லுசி அடிக்கும் காதல் கூத்துக்களும், கமரூனிற்கும் அவரிற்குமிடையில் நிகழும் குளிரான மோதல்களும் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. லுசியின் நடிப்பு கமரூனை மேலும் ரசிக்க செய்கிறது என்றால் அது மிகையல்ல. மாறாக ஸ்காட் வேடத்தில் வரும் நடிகர் Justin Timberlake ன் பாத்திரம் ரசிகர்களிற்கு ஏமாற்றத்தை வழங்கும் ஒரு பாத்திரமாக அமைகிறது.

படம் நெடுகிலும் நன்றாக வாய்விட்டு சிரிக்ககூடிய காட்சிகள் கொண்ட, சலிப்பை தராத ஒரு திரைப்படமாகவே Bad Teacher அமைந்திருக்கிறது. இருப்பினும் பயங்கரமான ராவடிகளில் ஈடுபட்டு பின் தனக்கென ஒரு பொருத்தமான பாதையை கமரூன் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக படத்தை நிறைவு செய்வது அப்பாத்திரத்தைக் குலைப்பது போல் உள்ளதாக நான் உணர்கிறேன். இத்திரைப்படம் ஒரு தரமான காமெடியா…இல்லை. புத்திசாலித்தனமான காமெடியா…. இல்லை. இத்திரைப்படம் உலகிலுள்ள அக்மார்க் ஜொள்ளு ஜமீந்தார்களிற்கு என அளவு எடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. Bad Teacher கையில் சிக்கிய ஜொள்ளு ஜமீந்தார்கள் ஏமாற வாய்ப்பில்லை. [**]

ட்ரெய்லர்

Thursday, August 4, 2011

கோளியா கொக்கா


கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர் வினை.

cockraj1கடந்த சில தினங்களாக மிகுந்த மனவுளைச்சலிற்கு உள்ளான ஒருவனாக நான் மாறியிருக்கிறேன். நம் லோக்கல் வைரம் கோயாவி, லோக்கல் கோமேதகம் வவ்வாலான் சாகசக் கதைகளின் சூப்பர் ஹிட் வெற்றி என்பது என் மனதிற்கு பெருமகிழ்ச்சியை தந்தாலும், சமகாலத்தின் சாபமும் வரமுமான இணைய தொழில்நுட்பத்தின் துணையுடன் சில விஷமிகள் கோளிக் காமிக்ஸ் குறித்து அரங்கேற்றும் மலிவு நாடகமும், ஒரு லோக்கல் காமிக்ஸ் இதழ் மீது குறிவைத்து கண்மூடித்தனமாக வீசப்படும் ஈனத்தனமான பல்தேசிய அதிகாரங்களின் அடக்குமுறை கணைகளும் என்னை சீறத் தயாராகிவிட்ட ஒரு எரிமலையாக உருவாக்கிவிட்டிருக்கிறது.

எமது முகவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் ஆனந்தத்தையும், வேதனையும் எமக்கு ஒருங்கே அளிப்பவையாகவே உள்ளன. காமிக்ஸ் இதழ்கள் தீர்ந்து போனதன் பின்பாக முகவர்களை தேடி வரும் அன்பு வாசகர்கள், இதழ்கள் தீர்ந்துபோன ஏமாற்றத்தினை தாங்கிக் கொள்ளவியலாத நிலையில் முகவர்களின் மீதான கட்டற்ற வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.

இவ்வன்முறையானது உலகின் பல மூலைகளிலும் ஒரு பொல்லாத தொற்றுநோய் போல பரவியிருப்பதையே மருத்துவமனைகளில் இருந்து தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பாடல் வழியாக வலியுடன் ஒலிக்கும் எம் முகவர்களின் குரல்கள் தெளிவான ஒரு காமிக்ஸ் பக்கம் போல் எமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. வன்முறையால் மட்டுமே சிக்கல்களிற்கு உடனடித் தீர்வு கண்டடையப்படக்கூடும் எனும் இன்றைய காலகட்டத்தின் மோசமான புரையேறி கருத்தாக்கம் எம் சமூகத்தை வெகுவாக பாதித்திருப்பதை நாம் இன்னமும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது.

kcom 1எமது காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும் தருணங்களில் தவறாமல் அதற்கான அறிவிப்புக்களை நாம் முன்கூட்டியே வழங்கி வருகிறோம். ஒரு லோக்கல் காமிக்ஸ் என்ற வகையில் அதன் ஆசிரியன் என்ற நிலையில் இதையிட்டு நான் பெருமைபட்டுக் கொள்வதில் நாணப்படப் போவதில்லை. ஆனால் உங்கள் செயல்வேகமே நீங்கள் கோளிக் காமிக்ஸை கையகப்படுத்துவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி என்பதை தீட்சண்யமாக நீங்கள் உங்கள் நினைவில் இருத்திக் கொள்ளல் வேண்டும். வேகமற்ற வேங்கை வேங்கையாக இருக்க முடியாது வேண்டுமானால் அது ஒரு கொங்கையாக நீடித்திடலாம். கடந்தவாரம் எம் முகவர்களின் மீது ஜமைக்காவில் இடம்பெற்ற வன்முறையில் இறங்கிய ஒருவரின் பெயர் உசைன் போல்ட் என்பதை இங்கு எழுதி செல்ல விரும்புகிறேன்.

எம் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இதழ்கள் அவர்கள் கைக்கு கிட்டாமல் போகும் ஏமாற்றத்தின் வலியை வன்முறை அலையாக உருமாற்ற கூடாது என்று அவர்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உள்ளத்தில் வன்முறை கொப்புளிக்க ஆரம்பிக்கும் தருணங்களில் நீங்கள் காந்தி, மார்ட்டின் லூதர் கிங், டொமினிக் ஸ்ட்ராஸ்கான் போன்றவர்களை உங்கள் மனத்திரையில் ஒரு அழகான கறையாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என உங்களை நான் அன்புடன் வேண்டி நிற்கிறேன். முகவர்களை தாக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள். நீங்களே ஒரு முகவராகி விடுங்கள். நீங்கள் விரும்பும் இதழ்கள் உங்களிற்கு தவறாமல் கிடைக்க இதைவிட வேறு என்ன சிறப்பான வழி இருக்க முடியும். ஆனால் எதற்கும் ஜூடோ பழகிக் கொள்ளுங்கள். நீங்களும் முகவராகலாம் எனும் தலைப்பில் இதற்கான விபரங்கள் அடுத்த இதழின் 69ம் பக்கத்தில் வெளியாக உள்ளது என்பதை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

vavalanவானதுர்கா பதிப்பகத்தின் ஓயாத பெருங்குரல் கோளிக் காமிக்ஸ் வெளியீடுகள் வருங்காலத்தில் சர்வதேச சந்தையில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களின் முன்சங்கொலியாகவே என் காதுகளில் ஒலிக்கிறது. பல போலிப் பெயர்களிலும், அடையாளங்களிலும் அந்த ஐரோப்பிய பதிப்பகம் ஒரு குடிசைத் தொழிலிற்கு ஒப்பிடக்கூடிய நிலையில் இன்று இருக்கும் கோளிக் காமிக்ஸ் மீது நடாத்தும் அபாண்டமான தாக்குதல்களும், எந்தவிதமான ஆதாரங்களுமற்ற பிரச்சாரங்களும், வழங்கும் மூலக்கதையின் விபரங்களும், இணையத்தில் அவற்றைக் கண்டடையக்கூடிய முகவரிகளும் எம் வெளியீடுகள் மீது அவர்கள் கொண்டுள்ள அச்சத்தையே காட்டுகிறது. வானதுர்கா பதிப்பகம் சில ஐரோப்பிய காமிக்ஸ்களுடன் என்னை பிராங்ஃபர்ட் விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய மேற்கொண்ட முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது அவர்கள் அடிவயிற்றில் விழுந்த ஒரு பலமான உதையாகவே இன்று அவர்களால் உணரப்படும். இருப்பினும் பெருநிறுவனமான வானதுர்காவின் லாபியிங் காரணமாக ஐரோப்பாவில் கோளிக் காமிக்ஸ் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான ஒரு செய்தியே.

ஆனாலும் இவ்வகையான தடைகளையும் மீறி ஐரோப்பிய கறுப்பு சந்தையில் கோளிக் காமிக்ஸ் தங்கு தடையின்றிப் புழங்குவதற்கு நான் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். இதனால் கோளிக் காமிக்ஸிற்கு கிடைக்ககூடிய அவப்பெயரை வாசகர்களின் அபாரமான வரவேற்பு சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும் என நான் எண்ணுகிறேன். கள்ளக் காமிக்ஸ் கொக்ராஜ் என சரித்திரம் அதன் வரிகளில் என்னை நினைவுகூரட்டும்.

pvppநோர்வே உளவுத்துறையில் இருந்து என்னை வந்து சந்தித்த அதிகாரி ஒருவர், தலைகீழாக ஒரு தம் பீடி கதையில் இடம்பெற்றதைப் போலவே அண்மையில் தம் நாட்டை ஒரு நிகழ்ச்சி கலக்கிப் போட்டதை சுட்டிக் காட்டி நோர்வேயைச் சேர்ந்த சில ரகசிய அமைப்புக்களுடன் எனக்கு தொடர்பிருக்கிறதா என அறிய முயன்றார். ஆர்ஜெண்டினாவில் இரு பிரெஞ்சு பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக [ பாலியல் வன்கலவிக்கு பின்பாக] கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சு அசலாக பாலைவனத்தில் பத்மா! பத்மா! கதையில் வரும் காட்சியை ஒத்திருப்பதாக கூறி பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஒரு நாள் முழுதாக என்னை வறுத்தெடுத்தார்கள். பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதையில் தனக்கு பீடியை கடன் தர மறுக்கும் பொட்டிக்கடை பாஸை பார்த்து கோயாவி சீற்றத்துடன் கூறும் வரிகளான “ஆனானப்பட்ட அமெரிக்காவே கடனில் நொடிந்து போகும் நாள் தொலைவில் இல்லை” என்பது குறித்த ஒரு நீண்ட விளக்கத்தை நான் அமெரிக்க அதிகாரத்திற்கு அளிக்க வேண்டியிருந்தது. வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகள் மேட் இன் சைனா என தெரிய வந்ததிலிருந்து சீனாவில் கோளிக் காமிக்ஸ் தடை செய்யப்பட்ட இதழாகியிருக்கிறது. ஆனால் வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகளின் ஏற்றுமதியை அந்நாடு தடை செய்யவில்லை!

இவ்வாறான பல்முகசிக்கல்களிற்கு முகம் கொடுக்கும் ஒரு ஏழைக் காமிக்ஸ் எடிட்டரின் தொழில் வாழ்க்கையின் ஒரு நாளை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். சில வேளைகளில் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு போர்னோ துறையில் இறங்கிவிடலாமா என்றுகூட பயங்கரமான சிந்தனைக் குட்டைகளிற்குள் நான் வீழ்ந்து போயிருக்கிறேன். இருப்பினும் உலகெங்கும் உங்கள் கைகளில் கோளிக் காமிக்ஸ் எனும் என் இலட்சிய தாகம் தீரும்வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறேன். புரட்சியின் விதை நிலத்தில் விழும்போது அது புரட்சியின் விதை என்பது யாரிற்கும் தெரிந்திருப்பதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

palivankumarkidஇவ்வகையான சர்வதேச அழுத்தங்களின் கொடூரப்பிடியில் நெருக்கப்பட்டிருக்கும் எனக்கு கோளிக் காமிக்ஸ் வெளியீடான பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டின் முன் அட்டை ஸ்கேன், கோளிக் காமிக்ஸின் கோமேதகம் வவ்வாலனின் பெயர் போன்றவற்றை என் அனுமதி இன்றி பிரசுரித்ததோடு மட்டுமில்லாது சர்வதேச பரிசு வழங்கி விடுவார்கள் என என் வெளியீட்டைக் கிண்டலும் அடித்து கொக்ராஜ் செய்வதை செய்து கொள்ளட்டும் என சவடால் விட்டிருக்கும் அந்தப் பாஸிசப் பதிவரை நினைத்தால் பரிதாபமாகவே இருக்கிறது. வானதுர்கா பதிப்பகத்திற்கு மிக நெருங்கிய அப்பாஸிசப் பதிவரிடமிருந்து இதைவிட நான் வேறு எந்த தரத்திலும் ரசனையிலும் கருத்துக்களை எதிர்பார்த்திட முடியும். அந்த வானதுர்கா பாஸிச சொம்பர் கால்விரல்களால் பதிவெழுதி சாதனை படைக்கும் நாள் வெகு அருகிலேயே உள்ளது என்பதை இக்கணத்தில் அவரிற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மிகத் தந்திரமாக அப்பாஸிசப் பதிவர் சொல்லாமல் சென்ற விடயம் என்னவெனில் பழிவாங்கும் ஆர்க்கிட் எனும் வரவிருக்கும் எம் கதையின் தலைப்பை சீனக் கணணி வல்லுனர்களின் உதவியுடன் தெரிந்து கொண்டு அதனை தன் சமீபத்திய பதிவின் தலைப்பாக இட்டிருக்கிறார் என்பதுதான். சாகஸ மங்கை செக்ஸி குயின் சக்கி, தன் கணவன் மரணத்திற்கு காரணமானவர்களை நவீன முறைகளில் பழிவாங்கிடும் கதைதான் பழிவாங்கும் ஆர்க்கிட். கோளிக் காமிக்ஸ் ரசிகர்களை பல கோணங்களில் இக்கதை திருப்திப்படுத்தும் என்பதை இப்போதே என்னால் உறுதியாக கூறமுடியும். இதேவேளையில் என்னை மீண்டும் மீண்டும் சீண்டும் மிகையதிகாரங்களிற்கும், வான்துர்காவின் வாய்தா பதிவரிற்கும் நான் கூறிக்கொள்வது இது ஒன்றுதான், உலைமூடியை வைத்து எரிமலையை மூட முடியாது. ஐ வில் வி பேக்.

பி.கு: நாளை பேஸ்புக்கின் தமிழ் காமிக்ஸ் குழும முகவரியில் சூடாக வெளியாக இருக்கும் கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா மேன்மைதகு கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர்வினை இன்றே சீன கணனி வல்லுனர்கள் உதவியால் வானதுர்கா பாஸிச சொம்பரால் இங்கு பிரசுரமாகி உள்ளது. இந்த முயற்சியில் உதவிட்ட குத்து டைம்ஸுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

Wednesday, August 3, 2011

பழிவாங்கும் ஆர்க்கிட்


முன்பொரு காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கண்டுகளித்த சில திரைப்படங்களில், தன் குடும்பத்தை பூண்டோடு அழித்த கொடியவர்களை பிரதான பாத்திரங்கள் எவ்வழியிலாவது பழிவாங்கிவிடுவது என்பது மிகவும் முக்கியமானவொரு அம்சமாக இடம்பெற்றிருந்தது.

கதையின் நாயகன் அல்லது நாயகியின் அன்பு உறவுகள் கொடியவர்களால் கறுப்பு வெள்ளையில் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, இந்த நாயகனோ அல்லது நாயகியோ ஒரு பொட்டியின் அல்லது அருகில் இருக்கும் மர்ம அறையொன்றின் சாவித்துவாரம் வழியாகவோ, அல்லது கட்டிலின் கீழிருந்தோ[…அய்யய்யோ மெத்தை பையன் தலைல முட்டிடப் போகுதே மாரியாத்தா காப்பாற்றும்மா…..] அல்லது வைக்கோல் போரிற்குள் மறைந்திருந்தோ தங்கள் உறவுகளின் கொடூரமான முடிவை பயம், கண்ணீர், கிளிசரின்,பரிதாபம், கையாலாகமை என்பன தம் முகத்தில் தாண்டவமாடிட பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த கொடிய செயலில் ஈடுபட்ட நீசர்களை நயகனோ நாயகியோ அல்லது திரையரங்கில் வீற்றிருக்கும் ரசிகர்களோ எதிர்காலத்தில் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் சில அடையாளங்கள் அந்த நீசர்களிற்கு வழங்கப்படிருக்கும். மண்டையோடு பச்சை, முகத்தின் குறுக்கே ரயில் தண்டவாளம் போல் ஒரு தழும்பு, ஓநாய் தலையை பூணாக கொண்ட ஒரு கைத்தடி என்பன இவ்வகையான அடையாளங்களிற்கு சில உதாரணங்களாகும். ஜாலியாக தம் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அடையாளங்கள் பழிவாங்குதல் எனும் கடமையை நாயகன் அல்லது நாயகிக்கு நினைவூட்டும். அவர்களும் தம் கடமையை ஆற்ற புறப்படுவார்கள். அரங்கில் விசிலடியும், பலகை இருக்கைகளின் தட்டலும் பட்டையைக் கிளப்பும்.

நல்ல வேளையாக Olivier Megaton இயக்கியிருக்கும் Colombiana எனும் திரைப்படத்தில் சிறுமி Cataleya வின் குடும்பத்தை அவள் கண்கள் முன்பாகவே அழித்தொழிக்கும் கொடியவர்களிற்கு மேற்கூறப்பட்ட சிறப்படையாளங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அந்தக் கொடியவர்களின் பிடியிலிருந்து தப்பி அமெரிக்கா வந்தடைந்து, ஆளாகி, கறுப்பு ஆர்க்கிட்டாக பூத்து நின்ற போதிலும் கத்தலியாவின் மனதில் அந்தக் கொடியவர்களின் முகம் மறைந்திடவில்லை. துரதிர்ஷ்டவசமாக இதுமட்டுமே இத்திரைப்படத்தின் ஆறுதலான ஒரு அம்சம்.

மனிதர்கள் அறிந்தும் தவறு செய்பவர்களே. ஆனால் இத்திரைப்படம் ஆரம்பமாகும்வரை நான் அறியாமல் ஒரு தவறு செய்வது எனக்கு தெரிந்திருக்கவில்லை. வழமையான விளம்பரங்கள் ஓடித் தீர திரைப்படம் ஆரம்பமாகி இத்திரைப்படம் Europa Corp தயாரிப்பு என்பது தெரியவந்தபோது என் அடிவயிற்றில் பகீரொன்றின் ப உருப்பெற ஆரம்பித்திருந்தது.

colombiana-2011-20332-1345479037இயூரோபா கார்ப் தயாரிப்பாக இருந்தாலும் சிலவேளைகளில் அந்த நபர், திரைக்கதை, வசனம் எழுதாத திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உண்டு என மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் திரைக்கதைக்கு பொறுப்பாக அந்த நபரின் பெயரும் வந்து திரையில் விழுந்தபோது ஏற்கனவே உருப்பெற்ற ப வுடன் கீரும் முழுமை பெற்று சேர்ந்து கொண்டது. அடக் கடவுளே என மனதில் எண்ணிக் கொண்டேன். யார் சொன்னது கடவுளிற்கு காது கேட்பதில்லை என!!

1- கொலம்பியா: சிறுமி கத்தலியாவின் குடும்பத்தை அழிக்க அவள் வீட்டிற்கு வருகிறது முரடர் படை. அவர்களிடமிருந்து கத்தலியா தப்பி ஓடுகிறாள், முரடர்கள் துப்பாக்கியால் அவளை நோக்கி தாறுமாறாக சுடுகிறார்கள். அப்போது முரடர்களின் தலையான மார்கோ கூறுகிறான் சூடாதீங்கடா, அவ எனக்கு உயிரோட வேணும்… இந்த துரத்தல் முடிவிற்கு வருகையில் சிறுமி கத்தலியா பாதாள சாக்கடை ஒன்றினுள் புகுந்துவிட அவளை நோக்கி தன் துப்பாக்கியால் சராமாரியாக சுட ஆரம்பிப்பது மேற்கூறிய அறிவுறுத்தலை தந்த அதே மார்கோதான்.

2- அமெரிக்கா: பொலிஸ் கார் ஒன்றின் மீது வேகமாக வரும் ஒரு கார் மோதுகிறது. மோதியது ஒரு பெண். மிகையான போதை. ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸ்நிலையத்தில் அப்பெண் தடுத்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணின் மிகை போதையை தெளிவிப்பதற்காக அவளிற்கு காப்பி!!!! வழங்கச் சொல்கிறார் பொலிஸ் அதிகாரி. அப்பெண்ணிற்கு ஒரு கிண்ணத்தில் காப்பி எடுத்துச் செல்லும் ஒரு பெண் பொலிஸ், அக்கிண்ணத்தை காப்பி கலக்கிய உலோகக் கரண்டியுடனே!!!! காவல் அறை கதவின் மீது வைத்து விட்டு அசால்ட்டாக திரும்புகிறார்.

மேலே எழுதிய இரண்டும் சிறு உதாரணங்களே. பக்கம் பக்கமாக எழுத படத்தில் உதாரணங்கள் இருக்கிறது. Luc Besson திருந்தவே போவதில்லை, ரசிகர்களை மடச் சாம்பிராணிகளாகவே எண்ணிக்கொண்டு அவர் எழுதி வழங்கும் படைப்புகள் வருடத்திற்கு வருடம் மேலும் தரம் கெட்டவையாகவே உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆக்‌ஷன் படத்தில் எதற்கு தர்க்கரீதியான சம்பவங்களை நான் தேட வேண்டும் எனும் கேள்வியை நான் கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால் இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டால் பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதைக்கு ஏதாவது சர்வதேச விருதை வழங்கி விடுவார்களோ எனும் பயம் உருவாகி இருக்கிறது.

kcom 1அவதார் எனும் படத்தில் நீலப்பூச்சு பூசி நடித்த நடிகையான Zoe Saldana இப்படத்தில் நீலப்பூச்சின்றி கத்தலியாக வேடமேற்றிருக்கிறார். Cattleya எனும் ஆர்க்கிடு வகையின் பெயரை தழுவி கத்தலியாவின் பெயர் உருவாக்கப்பட்டதாம். தன் பழிவாங்கும் ஆட்டத்தில் கத்தலியா மேற்குறித்த ஆர்க்கிட்டினை ஒரு அடையாளமாக வரைவாராம் அல்லது விட்டுச் செல்வாராம். நடிகை ஸோவே சல்டானாவிற்கு அதிரடியான இந்த ஒப்பந்தக் கொலைகாரி பாத்திரம் பொருந்தவேயில்லை. அவர் அடிதடிகளில் இறங்கும்போது இரக்கம்தான் வருகிறது. குளியல் காட்சியில் அவர் கரங்களிற்கு சோப்பு போடுவதை தெளிவாக காட்டுகிறார்கள். ஆனால் அவர் மார்புகள் சிறிதானவை என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள அவர் அனுமதித்திருக்கிறார். சிக்காகோவில் இருக்கும் கத்தலியாவின் மாமாவாக வரும் நடிகர் Cliff Curtis க்கு ராபர்ட் டிநீரோ போல நடிக்க வேண்டும் எனும் விபரீத ஆசை ஏற்பட அந்த ஆசையை இத்திரைப்படத்தில் நிறைவேற்றியிருக்கிறார். வேதனையான முகபாவம் காட்டும் ராபார்ட் டிநீரோவின் முகத்தில் முட்டைத்தோசை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது க்ளிஃப் கர்ட்டிஸின் நடிப்பு.

சரி படத்தில் புதிதாக ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தால், கொலம்பியப் பவேலாக்களின் கூரை உச்சிகள் வழியே நடக்கும் துரத்தலில் Yamakasi, அமெரிக்கா வரும் கத்தலியா தான் ஒரு கொலைகாரியாக வேண்டும் என தன் மாமாவிடம் கேட்கையில் Léon, உறவுகளை விலத்தி தனியே வாழும் ஒப்பந்தக் கொலைகாரி ஒருத்தியின் வாழ்க்கை முறை, உளவியல்! அவளின் விசித்திரமான காதல்!!! போன்றவற்றில் Nikita என லுக் பெசனின் பழைய படைப்புக்களின் நிழல்கள் கொலம்பியான திரைப்படத்தில் நிழல் நடனம் புரிகின்றன. இப்படி ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தக் கொலைகாரியை லுக் பெசனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்கு அவளின் அந்த விசித்திரமான காதலே சான்று. லுக் பெசன் படித்த கடைசி க்ரைம் நாவல் பாங்காக்கில் தமிழ்வாணானாக இருக்குமோ எனும் சந்தேகம் எழாமல் இருக்க முடியுமா என்ன.

ஹாலிவூட் மகாராஜாக்கள் வழங்கும் அதிரடி ஆக்‌ஷன்களைப்போல் தன் படைப்புக்கள் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக முயலும் லுக் பெசன் இப்படத்திற்கு எழுதியிருக்கும் வசனங்கள் அமெச்சூர் நாடக வசனங்கள் போலிருக்கின்றன. ஆனால் லுக் பெசன் ஓய மாட்டார். உலகெங்கிலும் சூப்பர் ஹிட்டாகும் ஒரு அதிரடி ஆக்‌ஷனை தரும் வரையில் அவர் கற்பனை நதி நிற்கப்போவதில்லை, அந்த வேட்கை அவரை தன் கைக்குள் வைத்து விபரீத விளையாட்டு காட்டியபடியே இருக்கும். நான்தான் அவதானமாகவும் ஜாக்ரதையாகவும் இருக்க வேண்டும். வவ்வாலான் மட்டும் லுக் பெசனை கடத்திச் சென்று கண்காணா இடத்தில் மறைத்து வைத்தால் அவரிற்கு மேட் இன் சைனா ஹிட் சூட் ஒன்றை நான் வாங்கிப் பரிசளிப்பேன். வஞ்சம் அழகானது என்பதால் நான் கண்ணை மூடிக் கொண்டு இருக்க இயலுமா. வேட்டைக்காரன், வேங்கை வகையான திரைப்படங்களை எள்ளி நகையாடும் முன் கொஞ்சம் கொலம்பியானா பாருங்கள் ராஜாக்களே.

பி.கு: பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு ஸ்கேன், வவ்வாலன் பெயர் போன்றவற்றின் உபயோகத்திற்கு கோளிக் காமிக்ஸ் எடிட்டரு கொக்ராஜிடம் நான் அனுமதி பெறவில்லை அவர் செய்வதை செய்து கொள்ளட்டும்.

ட்ரெய்லருங்கோ

Sunday, July 31, 2011

எறும்புகள்


பூட்டுக்கள், மற்றும் சாவிகள் சம்பந்தமான திருத்தல் வேலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜோனதன், பாரிஸின் அபாயம் நிறைந்த புறநகர்ப் பகுதிகளில் இரவு வேளைகளில் பணியாற்ற மறுத்தமைக்காக வேலை நீக்கம் செய்யப்படுகிறான்.

இவ்வேளையில் அவனது மாமா எட்மொண்ட், அவரது இறப்பிற்குப் பின் அவனிற்கு உரித்தாக எழுதிச் சென்ற வீடு அவனிற்கு கிடைக்கிறது.

ஜோனதனின் மாமா எட்மொன்ட் உயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். மர்மமான முறையில் குளவிகளால் தாக்கப்பட்டு மரணமடைவதற்கு முன்பாக எறும்புகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். எறும்புகளின் மீதான அவதானிப்புக்களின் விளைவாக அவர் ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார் ஆனால் அதனை பிறர் கண்களில் படாது மிக ரகசியமாக பாதுகாத்திருந்தார்.

வேலையற்ற நிலையில் வாடகைச் செலவைக் குறைக்கும் முகமாக தன் மாமா எட்மொண்டின் வீட்டிற்கு தன் மனைவி லூசி, மகன் நிக்கோலா, மற்றும் அவனது வளர்ப்பு நாய் சகிதம் குடி வருகிறான் ஜோனதன்.

தனது மாமா எட்மொண்ட் எதற்காக அவர் வீட்டை தனக்கு உயிலில் எழுதி வைத்தார் என்பது ஜோனதனிற்குப் புதிராகவே இருக்கிறது. தன் மாமாவைக் குறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக தனது பாட்டியை சென்று பார்க்கிறான் அவன்.

பாட்டி கூறும் விபரங்களிலிருந்து எட்மொண்ட் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்கிறான் ஜோனதன். பாட்டியிடமிருந்து அவன் விடைபெறும் வேளையில் ஜோனதனிடம் கையளிக்கச் சொல்லி எட்மொண்ட் விட்டுச் சென்றிருந்த ஒரு கடிதத்தை அவனிடம் தருகிறாள் பாட்டி. அக்கடிதத்தை திறந்து பார்க்கும் ஜோனதன் அதில் "என்ன நிகழ்ந்தாலும் நிலவறைக்குள் மட்டும் நுழையாதே” எனும் ஒரே ஒரு வரி தன் மாமா எட்மொண்டின் கைகளால் எழுதப்பட்டிருப்பதை கண்டு வியப்பும், அச்சமும் கொள்கிறான்.

9782226061188FS வீடு திரும்பும் ஜோனதன் தன் மனைவியிடமும், மகனிடமும் எக்காரணம் கொண்டும் யாரும் நிலவறைக்குள் நுழையக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறான். அங்கே முரட்டு எலிகள் அதிகம் வாழ்வதாகவும் அவர்களை எச்சரிக்கிறான்.

எட்மொண்டின் வீட்டில் ஜோனதன் குடும்பத்தினரின் வாழ்க்கை அதன் வழமையான நிகழ்வுகளுடன் நகர்கிறது. புதிய வேலையொன்றை ஜோனதன் விரைவில் தேடிக் கொள்ள வேண்டும் என அவனை நிர்பந்திக்கிறாள் லூசி. ஜோனதனிற்கும், லூசிக்கும் இடையில் பிரிவு என்னும் சொல்லின் ஆரம்பம் உருவாகத் தொடங்கிய வேளையில் அவர்களது வளர்ப்பு நாயானது காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போன நாயை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதனைக் கண்டு பிடிக்க முடியாததால், வீட்டிலிருக்கும் நிலவறைக்குள் இறங்கி அதனை தேடிப்பார்க்கும்படி ஜோனதனை அவனது மனைவியும் மகனும் பிடிவாதமாகக் கேட்டுக் கொள்கிறார்கள்.

முதலில் தயங்கும் ஜோனதன், அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாக நிலவறைக்குள் நுழைகிறான். நீண்ட நேரத்திற்கு பின்பு நிலவறையிலிருந்து வெளிவரும் அவன் கைகளில் அவர்களினது வளர்ப்பு நாய் குருதி தோய்ந்த நிலையில் பிணமாகக் கிடக்கிறது.

இந்நிகழ்விற்கு பின்பாக ஜோனதனின் நடத்தைகள் சிறிது சிறிதாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன. வீட்டுச் செலவிற்கே பணம் போதாத நிலையிலும் எறும்புகள் சம்பந்தமான நூல்களை வாங்கிக் குவிக்கிறான் அவன். நிலவறைக்குள் தனது நாட்களை கழிக்கிறான். இது அவனிற்கும் லூசிக்கும் இடையில் மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

ஒரு நாள் நிலவறைக்குள் வழமை போலவே நுழையும் ஜோனதன் அங்கிருந்து திரும்பி வராது போகிறான். அவனைத் தேடி செல்லும் அவனது மனைவியும் மறைந்து போகிறாள். இவர்களைத் தேடி நிலவறைக்குள் நுழையும் ஒரு பொலிஸ் அதிகாரியும், தீயணைப்பு படை வீரர்களும் காணாமல் போய்விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலவறையை சீல் வைக்கிறது. நிக்கோலா ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறான்..

9782226086365FS ஜோனதன் தன் மாமாவின் வீட்டிற்கு குடிவரும் அதே வேளையில் Bel o Kan எனப்படும் எறும்பு நகரில்[ புற்றில்], தன் பனிக்கால தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறது ஆண் எறும்பு 327.

நகரில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஏனைய சில எறும்புகளுடன், நகரை விட்டு வெளியேறும் 327, சூரிய ஒளியில் குளித்து தன் சக்தியைப் புதுப்பித்துக் கொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து தேவையான சக்தியைப் பெற்ற பின் கடமையே கண்ணாக தன் நகரிற்குள் திரும்பும் 327, அங்கு இன்னமும் உறக்கம் கலையாமல் இருக்கும் எறும்புகளை தொட்டு, அவற்றின் துயில் கலைக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறாக நீண்ட உறக்கத்திலிருந்து செவ்வெறும்புகளின் நகரமான பெல் ஒ கான் உயிர் பெறுகிறது.

நகரில் விழித்தெழும் செவ்வெறும்புகள் அவரவர்க்குரிய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, 327க்கு உணவு வேட்டைக்கு போகும்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வேட்டைகளில் ஏற்கனவே அனுபவம் பெற்ற எறும்புகளுடன் உணவு வேட்டைக்கு கிளம்பிச் செல்கிறது 327. அவர்களின் உணவு வேட்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெல் ஒ கானிற்கு திரும்பும் வழியில் அந்த எறும்புக் கூட்டம் மிக மர்மான ஒரு முறையில் தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 327 மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விடுகிறது.

உயிர்தப்பிய 327 பெல் ஒ கானிற்கு விரைவாக வந்து சேர்கிறது. எவ்வகையான தாக்குதல், தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என்பது தெரியாத நிலையில் 327ன் முறைப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் நகரில் குடிமக்கள் அலட்சியம் செய்கின்றார்கள்.

நகரின் அதிகார உச்சமான எறும்பு ராணியும்[ 327, மற்றும் பெல் ஒ கான் எறும்புகளின் தாயார்] 327ன் புலம்பல்களை பொருட்படுத்தாது விடுகிறாள். வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தும்படி ராணி, 327க்கு ஆலோசனையும் தருகிறாள். ஆனால் 327க்கு அதன் நகரத்திற்கு ஏதோ ஒரு அபாயம் வரவிருக்கிறது எனும் அச்சம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதனால் 327 இம்மர்மம் குறித்து தனியாக தனது தேடலை ஆரம்பிக்கிறது. அதன் தேடல்கள் பெல் ஒ கான் நகரினுள்ளேயே அதன் குடி மக்களிற்கு தெரியாது நிகழும் ஒரு சதியை அது கண்டுகொள்ள வைக்கிறது…..

ஜோனதனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்தது என்ன? நிலவறையின் ரகசியம்தான் என்ன? 327 கண்டுகொண்ட சதிதான் என்ன?

இரு வேறு தளங்களில் விறுவிறுவென ஒரு த்ரில்லர் போல் பயணித்து, இரு தளங்களையும் ஒரே புள்ளியில் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து இணைக்க செய்கிறது Les Fourmis [எறும்புகள்] எனும் இச்சிறு நாவல். நாவலை எழுதியவர் பிரெஞ்சு மொழியின் பிரபல நாவலாசிரியரான Bernard Werber.

BernardWerber ஒரு எறும்பின் பனிக்கால துயில் கலைதலிலிருந்து ஒரு எறும்பு புற்றினுள் நிகழும் பல்வேறுவகையான நிகழ்வுகளை சுவையாக விபரிக்கிறது நாவல். எறும்புகள் எவ்வாறு தமக்குள் உரையாடிக் கொள்கின்றன, உணவு வேட்டை, எதிரிகளை எதிர்த்து தாக்குதல், யுத்த தந்திரங்கள், காதல் கலப்பு பறத்தல், புதிய நுட்பங்களின் கண்டுபிடிப்பு, எறும்பு புற்றின் உருவாக்கம், அதன் அபிவிருத்தி, அதன் ஆதிக்க விரிவு என நாவலில் படிக்க கிடைக்கும் விடயங்கள் வாசகனை மயங்கடிக்கின்றன.

நாவலைப் படிக்க படிக்க எறும்புகள் மீதான அபிப்பிராயம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தச் சின்ன உருவங்களிற்குள் இவ்வளவு பெரிய அறிவா என உருவாகும் வியப்பு சுள்ளென்று கடிக்கிறது. நாவலாசிரியர் தன் கற்பனைகளில் இருந்த தகவல்களை உருவாக்காது நிஜமான தகவல்களை வழங்கியிருப்பது கதையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

கதையில் அடிக்கடி குறுக்கிடும் எட்மொண்ட்டின் கலைக்களஞ்சியப் பக்கங்கள், உலகில் பூச்சி இனத்தின் தோற்றம், தொடர்ந்து அவற்றிற்கு எதிராக நிகழும் அழிப்பு செயல்களிலிருந்து நீடிக்கும் அவைகளின் இருத்தல், மனித சமூகத்திற்கும், எறும்புகள் கூட்டத்திற்குமிடையிலான ஒப்பீடுகள், சித்தாந்தம் என சிறப்பான குறிப்புக்களை வழங்குகின்றன.

எறும்புகளின் டிராகன் [ஓணான்] வேட்டை, சிலந்தியின் வலை வீடு நிர்மாணம், நத்தைகளின் காதல் என சுவையான பல தகவல்கள் நாவலில் இருக்கின்றன.

உன் எதிராளி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வரை காத்திருப்பதை விடச் சிறந்த யுத்த தந்திரம் எதுவுமில்லை” இப்படி ஒரு பஞ்ச் சித்தாந்தத்தை உதிர்ப்பவர்; வலையைப் பின்னி விட்டு அதில் விழுந்த இரை, உயிரிற்காக துடிப்பதை அவதானிக்கும் ஒரு சிலந்தியார். இவ்வகையான பூச்சி சித்தாந்தங்களிற்கு கதையில் குறைவில்லை.

71YDW4MXSBL._SS500_.gif பெர்னார் வெர்வேயின் எளிமையான கதை சொல்லல் நாவலின் முக்கிய பலம். சாதாரண வாசகன் அதிகம் அறிந்திராத எறும்புகளின் உலகிற்கு அவனை அழைத்துச் சென்று அதன் பிரம்மாண்டத்தில் அவனை திக்குமுக்காட வைக்கிறது கதை. அறிவியல் சொற்களை அதிகம் புகுத்திக் கதையோட்டத்தை தடுக்காது, தெளிவாக, மென் நகைச்சுவையுடன் கதையை நகர்த்துகிறார் வெர்வே. கதையின் விறுவிறுப்பு பக்கங்களை தொய்வின்றிக் கடத்திச் செல்கிறது.

வெர்வே, பிரெஞ்சு மொழியில் புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியர். இவரது நாவல்கள், அறிவியல், தொன்மம், ஆன்மீகம், சித்தாந்தம், சாகசம், எதிர்காலம் குறித்த பார்வைகள் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. 1991ல் எறும்புகள் நாவல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. எறும்புகளின் தொடர்ச்சியாக Le Jour des Fourmis[ நாளை எறும்புகளின் நாள்], La Revolution des Fourmis[ எறும்புகளின் புரட்சி], என மேலும் இரு நாவல்களை அவர் எழுதினார். நாவல்கள், சினிமா, சித்திரக்கதை, நாடகம், என பல தளங்களில் இயங்குபவர் வெர்வே. 35 மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. உலகில் அதிகம் வாசிக்கப்படும் பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவராக வெர்வே இருக்கிறார். எறும்புகள் நாவல் ஆங்கிலத்தில் Empire Of The Ants எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

கதையின் முடிவானது அறிவு கொண்ட இரு இனங்களிற்கிடையிலான ஒரு புதிய ஆரம்பத்தை முன் வைக்கிறது. அதன் சாத்தியம் குறித்த கேள்விகளை இது ஒரு புனை கதை எனும் எண்ணம் அடக்குகிறது. ஆனால் மனதில் கேள்விகள் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. மனிதர்களை விட எறும்புகள் பராக்கிரமம் மிகுந்தவை, இந்த உலகின் உண்மை ஆண்டகைகள் அவைகளே என்பதாக கதை நிறைவு பெறுகிறது. அதனை நம்பால் இருப்பதுதான் சற்றுக் கடினமான செயலாக இருக்கிறது. [***]