Showing posts with label Robin Hobb. Show all posts
Showing posts with label Robin Hobb. Show all posts

Sunday, December 15, 2013

Farseer 2 &3

Royal Assassin

உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் மலை ராஜ்ஜியத்தில் தன் தோல்விகளை எண்ணிப்பார்க்கும் ராஜகொலைஞன் ஃபிட்ஸுடனேயே தொலைதிருஷ்டியர் முப்பாக நாவல் வரிசையின் இரண்டாம் பாகத்தை திறக்கிறார் கதாசிரியை ராபின் ஹாப்.

ஆனால் அந்த உடல் நிலையுடனேயே ஃபிட்ஸ் மீண்டும் பக்கீப்பிற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. மர்மமான ஒரு அயர்ச்சியால் வாடும் அரசன் , கரையோர நிலங்களை சூறையாடி மகிழும் செங்கல கொள்ளையர்களை எதிர்த்து நிற்க துடிக்கும்  வெரிட்டி, தன்னிடம் அதிகாரம் வர வேண்டும் என காரியமாற்றும் ரீகல் இவர்களின் மத்தியில் ராஜகொலைஞன் ஃபிட்ஸ் தன் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் தர தயாராக உள்ள விலை என்ன? அது அவனை என்ன நிலைக்கு தள்ளப் போகிறது?

இவற்றிற்கான விடையை தன் ஆடம்பரமற்ற வரிகளில் நாவலில் கொணர்கிறார் ஹாப். காதல், வீரம், தியாகம், விசுவாசம், சதிகள் என்பவற்றின் மத்தியில் தன் முடிவை நோக்கி விரைகிறான் ஃபிட்ஸ். பக்கீப் எனும் இடத்தை விட்டு நகராது அதனுள்ளேயே கதையையும் உணர்வுகளையும் வாசகனுடன் மோத விடுகிறார் ஹாப். அவர் எழுத்துக்களை எல்லாராலும் ரசிக்க முடியாது என்பது தெளிவு. ரசிக்க முடிந்தால் அதன் சுவை இனிது என்பது ஒருவர் பெறும் அறிவு.

காதல் காட்சிகளில் மீள்கூறல் சற்று அயர்ச்சியை தருகிறது. ஹாப்பின் எழுத்துக்களில் மீள்கூறல் அலல்து எழுதல் ஒரு பண்பாகவே இருக்கிறது என்பேன். விலங்குகள் மீதான பார்வையை தன் எழுத்துக்களில் உயர செய்யவும் ஹாப் முயல்கிறார். விலங்கிற்கும் மனிதனிற்குமான உணர்வு சார்ந்த உறவின் வலிமையை அவர் தன் நாவலில் முக்கியமான ஒரு அங்கமாக்கியிருக்கிறார்.

கரையோர நிலங்களை தாக்கியழிக்கும் செங்கல கொள்ளையர்கள், அவர்களால் உணர்விலிகளாக ஆக்கப்படும் அந்நிலவாழ் மனிதர்கள், மேலும் இந்நிகழ்வுகளின் பின்னிருக்கும் மர்மம் இப்பாகத்திலும் ஒரு நீளும் இழையாகவே இருக்கிறது. பட்டத்திற்குரிய இளவரசன் வெரிட்டி செங்கல தாக்குதல்களிற்கு எதிராக எடுக்க விழையும் நடவடிக்கைகள், அவற்றில் ஃபிட்ஸின் பங்கு, இவை வழியாக ஆழமாகும் அவர்களிற்கிடையிலான பிணைப்பு என நகரும் கதையில் ஃபிட்ஸின் விசுவாசம் யாரிற்கானது என்பது கேள்வியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. வெரிட்டியின் மனைவி கெட்ரிக்கன் பக்கீப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு ராணியாக ஆகுவதற்குரிய ஆரம்ப அறிகுறிகளும் நாவலில் சொல்லப்படுகிறது. தொலைதிருஷ்டியர்களின் பரம்பரை சொத்தான மனோமந்திரம் குறித்த புரிதல்களும், அபாயங்களும் விரிவாக ஆரம்பிக்கின்றன. எல்டர்லிங்கை மூன்றாம் பாகத்திலும் ஹாப் காட்டமாட்டார் போலிருக்கிறது.

சிறு வயதில் ஃபிட்ஸை வளர்த்த வுரிச்சிற்கும் ஃபிட்ஸிற்குமிற்கிடையிலான உறவின் உணர்ச்சிகரமான தருணங்கள், ஃபிட்ஸின் தந்தையின் மனைவியான லேடி பேஸன்ஸ், ஃபிட்ஸ் மீது கொண்டிருக்கும் உணர்வுகளுடன் சென்று நெகிழ்வலைகளாக மோதுகின்றன. முதிய ராஜகொலைஞன் சேட் வழமை போலவே மறைவாக இயங்க ராஜாவின் முட்டாளை சுற்றியுள்ள புதிர்கள் விடுபடுமாற்போல இறுகுகிறது. ராஜமுட்டாளின் விசுவாசம் கதையில் மிக சிறப்பாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் வழி செயற்பட ஃபிட்ஸ் விழைந்தாலும் நிகழ்வுகளின் ஆட்டங்களின் விளைவால் அவன் தனித்து எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் எப்படியாக பக்கீப்பையும் அவன் வாழ்க்கையும் மாற்றி அடிக்கிறது என்பதை சலிப்பே இல்லாமல் ஹாப் எழுதுகிறார்.
மெதுவாக நகரும் நாவல் விரைவாக படிக்க தூண்டும் எழுத்தைக் கொண்டிருக்கிறது. உச்சக் கட்டத்தில் வழமை போலவே ராபின் ஹாப்பின் முத்திரை உண்டு. இரண்டாம் பாகத்தின் முடிவில் நான் உடனே தேடியது மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தை.

Assassin's Quest

ஒரு கதை நல்ல கதையாக இருந்தாலும், உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக இருந்தாலும், சர்வதேசரீதியாக விற்பனையில் உச்சங்களை தொட்டு இருந்தாலும் வாசகனின் மனதை நெருங்கி வராத வகையில் அவை வாசகனிற்கு பிடித்தமானவையாக ஆவது இல்லை.

ராபின் ஹாப்பின் எழுத்துக்கள் மிகைபுனைவின் உச்சநிலை என நான் எழுதப் போவது இல்லை. என் வாசிப்பு அனுபவத்தின் படி அப்படியான ஒரு உச்சநிலை என்பது தற்காலிகமானதே. இன்று எமக்கு உச்சநிலையை தரும் ஒரு படைப்பானது காலத்தின் நகர்வில் அதன் உச்சநிலையிலிருந்து கீழிறங்குவது இயல்பான ஒன்றே.

மிகவும் பிரம்மாண்டமான மிகைபுனை கதை வரிசைகளான WOT, ASOIAF போன்றவற்றின் மிகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட படைப்புக்களாகவே ராபின் ஹாப்பின் படைப்புக்கள் இருக்கிறது. ஜோர்டானின் எழுத்துக்களின் கம்பீரமோ, பலமோ அல்லது மார்டினின் எழுத்துக்களின் உக்கிரமோ வன்மமோ ராபின் ஹாப்பின் எழுத்துக்களில் இருப்பது இல்லை. அதேபோல அவர்கள் உருவாக்கிய உலகுகளின் பிரம்மாண்டங்களும், சிக்கலான கதைநகர் களமும் ஹாப்பின் எழுத்துக்களில் காணக்கிடைப்பது இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகைபுனை ரசிகர்களிற்கு அவரின் கதை சொல்லல் பிடிக்குமா என்பதே சந்தேகம்தான். இருப்பினும் அவர் எழுத்துக்கள் என்னை மிகவும் நெருங்கியிருக்கின்றன.

Farseer முப்பாக நாவல் வரிசையின் மூன்றாவது நாவலான Assassins Quest என் வாசிப்பில் ஒரு அருமையான படைப்பு. பிரதான பாத்திரமான ஃபிட்ஸ் சிவாலெரி மிகைபுனை வரலாற்றில் தன்னை ஒரு சிறப்பான பாத்திரமாக நிரூபிக்கும் படைப்பு. இதற்காக ஃபிட்ஸை ஒரு வீர தீர சாகசனாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பின் எப்படி அவன் சிறப்பான பாத்திரமாகிறான் என்பதை நீங்கள் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கதையின் பிரதான எதிர்பாத்திரமான ரீகலின் மரணம் சம்பவிக்கும் விதம் அபாரமான ஒன்று. நீண்ட கதை சொல்லலில் முன்நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் நினைவு மட்டுமே அதன் மர்மத்தை உடனடியாக அவிழ்க்க முடியும்.

ஜோர்டானும், மார்ட்டினும் என்னை ரசிக்க பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஹாப் தன் மிகைபுனைவால் என் உள்ளத்தை உணர்ச்சிக் குவியலாக்கி விட்டார். அசாத்திய பொறுமையும், சிறப்பான எழுத்துக்கள் மீதான நேசமும் மட்டுமே அவர் எழுத்தை படிப்பதற்கு உங்களுக்கு துணை வரக்கூடும்.

Saturday, November 26, 2011

கொலைஞனின் சீடன்


மாயபுனைவுகளின் வரிகளில் வாழ்ந்து வருபவனிற்கு ஒரு ஏக்கம் இழையோடும் எதிர்பார்ப்பு காலைப்புகாரில் கலந்திருக்கும் குளிர்போல் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பாரா ஒரு திருப்பம் அல்லது ஒரு நிகழ்வு. ஒரு புதிய அனுபவம். குருதியை இதமாக திராட்சை மதுபோல் வெப்பமாக்கும் சாகசம். மனதை பனியொழுகும் ஒரு மொட்டுப்போல் வீங்கச் செய்யும் தியாகம். வியக்க வைக்கும் புதுவகை மந்திரம். திகைக்க வைக்கும் உயிரிகள். அரிதாகவே காணக்கூடிய நகைச்சுவை. வரிகளிடையே இளம்கொடிபோல் படர்ந்து கிடக்கும் முதல் காதல். புது உலகமும் அதன் நிலவியலும் உயிரியலும் சனவியலும் அதனூடு அவன் வாழ்ந்து செல்லக்கூடிய பயணமும்.

ஒவ்வொரு மாயபுனைவும் படிப்பவனை மயக்கிவிடவேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல. படிப்பவை எல்லாம் மயக்குபவையாக இருந்தால் அந்த உலகங்களில் இருந்து மீட்சிதான் ஏது. இருப்பினும் ஒவ்வொரு மாயபுனைவு எழுத்தாளரும் தனக்கென ஒரு சிறப்பை உருவாக்கி கொள்ளவே விழைகிறார்கள். அவர்களிற்கென தனித்துவமான ஒரு சுவையை அவர்கள் சமைத்துக் கொள்கிறார்கள். அதைப் படிப்பவன் ஒன்று அதை தீராப்பசியுடன் சுவைப்பவன் ஆகிறான், இல்லை பந்தியிலிருந்து சுவைவிலகி செல்பவனாகிறான். ஒவ்வொரு மாயபுனைவும் அதன் அட்டைக்கு பின்னால் விருந்தொன்றை விரித்து வரிகளில் பாய்விரித்திருக்கிறது. அது தரும் சுவை வாசகனின் ரசனையுடன் ஒன்றிச்செல்லும் தருணத்தில் அது நீண்டு செல்லும் ஒரு ஆனந்த மோகானுபவமாக மாறிவிடுகிறது.

ராபின் ஹாப்பின் பெயர் எனக்கு தெரிய வந்த நாளிலிருந்து அவரை ஒரு ஆண் என்றே வருடக்கணக்கில் நான் எண்ணி வந்திருக்கிறேன். எண்ணங்களும் உண்மைகளும் எதிராகும் புள்ளிகளில்தானே ஆச்சர்யம் கருவாகிறது. ராபின் ஹாப் ஒரு பெண் எழுத்தாளர் என்பது என்னை உண்மையில் ஆச்சர்யப்படுத்திய ஒன்று. பிரான்ஸில் மாயபுனைவு வாசகர்களால் மிகவும் சிலாகிக்கப்படும் எழுத்தாளர் அவர். திரைப்பட வெளியீடுகளிற்குரிய கவுரவங்களுடன் அவர் நூல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஜார்ஜ் மார்ட்டினிற்கோ , ராபார்ட் ஜோர்டானிற்கோ இது இங்கு இதுவரை கிடைக்காத ஒன்று. பாதாள ரயில் நிலைய சுவர்களை சுவரொட்டிகளாக, மயங்கவைக்கும் வகையில அலங்கரிக்கும் அவர் நூல்களின் முன்னட்டைகளை நான் நின்று ரசித்திருக்கிறேன். அபாரமான வரவேற்புகளுடன் அவர் நாவல்கள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அவர் எழுதும் மொழியில் அவரிற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு என்பது இங்கிருப்பதைவிடவும் அளவில் குறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் அவர் எழுதும் வரிகளில் வழமையான மாயபுனைவொன்றில் இருக்கக்கூடிய அதிரடிகளும், பரபரப்புகளும், சாகசங்களும், மாயங்களும் அளவில் குறைந்ததாகவே காணக்கிடைக்கிறது. அவர் எழுதிய நாவலான Assasin's Apprentice எனும் நாவல் எனக்களித்த அனுபவம் இது. Farseer முப்பாக நாவல்களில் முதல் புத்தகம் இது.

வழமையான மாயபுனைவொன்றின் நாயகனிற்கு கிடைக்ககூடிய வெற்றி, புகழ் என்பன இக்கதையின் நாயகன் எனக்கருதக்கூடிய Fitz ற்கு கதையின் முடிவின்பின்கூடக் கிடைக்காது. நாயகன் வெற்றி பெறவேண்டும், வாகை சூட வேண்டும் என மாயபுனைவுகளின் மரபில் ஒய்வெடுக்கும் உள்ளங்கள் அலறித்துடித்தபோதும், ராபின் ஹாப் அந்த அலறல்களிற்கு எல்லாம் காது கொடுப்பதில்லை. மிக எதார்த்தமாக, ஏன் மிகை எதார்த்தத்துடன் ஆனால் படிப்பவர்களின் உணர்வுகளை குழைந்திட செய்யும் வகையில் நாயகனின் கதையை ஹாப் கூறிச் செல்கிறார்.

பட்டத்திற்குரிய இளவரசன் ஒருவனிற்கு தவறான வழியில் பிறந்த ஃபிட்ஸ், ஆறு வயதில் அவன் பாட்டனாரின் அரண்மனை வாசலில் கைவிடப்படுகிறான். அங்கு அவன் ஆரம்பிக்கும் அந்த புதிய அரண்மனை வாழ்வில் அவன் என்ன பங்கு வகிக்கப் போகிறான், அவன் வாழ்க்கை என்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறது, அவன் சந்திக்கப்போகும் மனிதர்கள் என்ன வகையானவர்கள், அவர்கள் அவனை எப்படிப்பட்ட ஒருவனாக உருமாற்றப் போகிறார்கள், அவனில் மறைந்திருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்ன, அவன் சந்திக்கப்போகும் இடர்பாடுகளிலும், சவால்களிலும் அவன் வெற்றி காண்பானா.... இவை எல்லாவற்றையும் தனக்கேயுரிய மென்மையான ஒரு நடையில் ஹாப் விபரிக்கிறார். தவறான முறையில் பிறந்த ஒரு ராஜரத்த வாரிசின் வாழ்க்கை என்பது எவ்வளவு சோகமான ஒன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுவதை விட சோகமான ஒன்றாக ஃபிட்ஸின் வாழ்வை விபரிக்க ஹாப்பால் முடிந்திருக்கிறது. உன் ரத்தத்தை உன் எதிரி உனக்கெதிரான ஆயுதமாக மாற்றுமுன் அவனை நீ உன் விசுவாசத்திற்குரிய ஆயுதமாக்கு எனும் ராஜ தந்திரத்தின் பின்னால் ஒரு சிறுவன் வாழ்ந்து செல்லக்கூடிய வேதனைகள் வரிகளில் வாழும் வகையில் ஹாப்பால் இக்கதையை சொல்ல முடிந்திருக்கிறது. சுமாராக ஆரம்பிக்கும் ஒரு சுவாரஸ்யமற்ற படகுப் பயணம், ஆற்றின் நீளத்தினோடு அழகும் சுவையும் பெற்றுக் கொண்டு விடுவதுபோல் அவரின் எழுத்துக்கள் மென்மையான அதன் ஓட்டத்தில் படிப்பவனை ஒன்றிக் கொள்ள வைக்கின்றன.

Farseer கள் எனும் வழிவந்தவர்களின் வரலாற்றையும், தொன்மங்களையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பையும், அதில் வாழ்ந்திருக்கும் இனங்களையும், அந்த நிலத்தில் குடியிருக்கும் மந்திரத்தையும் அளவான முறையில் எழுதுகிறார் ஹாப். நீண்ட மாயபுனைவுகளின் மத்தியில் 400 பக்கங்கள் கொண்ட அவர் நாவலை ஒரு சிறுகதையாகவே கருத முடியும். ஆனால் உணர்வுகளை கலங்க வைக்கும் மென்மையான ஒரு சிறுகதை அது. ஏற்கனவே கூறியதுபோல மாயபுனைவுகளின் அதிரடிகளிலிருந்து மிக நீண்ட தூரம் இந்நாவலில் விலகி நிற்கும் ஹாப், வாசகனை கவர்வது அவர் கதையில் இடம்பிடிக்கும் பாத்திரங்களின் உணர்வுகளின் ஓட்டத்தினாலேயே. அது மனிதர்களாகவும், விலங்குகளாகவும், மன்னனின் கிறுக்கனாகவும் படிப்பவனின் உணர்வுகளோடு விளையாட தவறுவதில்லை. ஹாப்பின் எழுத்துக்களில் சோடனைகள், அலங்காரங்கள் இல்லை. அதிரடித் திருப்பங்கள் இல்லை ஆனால் படிப்பதை வாசகன் நிறுத்திவிட முடியாத சுவை இருக்கிறது. 200 வது பக்கத்தின் பின்பாக கதையை படிப்பதை நிறுத்தி வைப்பதை ஒரு சோதனையாக நான் கருத வேண்டியிருந்தது. இந்நாவலின் இறுதிப் பரா போல்... பின்னுரை அல்ல.... என் கண்கள் அருகில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்த மாயப்புனைவு வேறில்லை எனலாம். மாயப்புனைவுகளின் தனித்துவமான வகை எழுத்தாளர் ஹாப். அவர் உள்ளங்களிற்காக எழுதுகிறார். உயிருள்ள உள்ளங்களிற்கு அவரைப் பிடிக்கும். மாயப்புனைவு ரசிகர்கள் அவரின் இப்படைப்பை படித்து பார்த்திட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். [***]