Saturday, December 20, 2014

மரண நாடகம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 19

கலாராடோ பகுதிக்கு விஜயம் செய்யும் டெக்ஸும் கார்சனும் அங்கிருக்கும் ரேஞ்சர்களின் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு பொறுப்பில் இருக்கும் ஊழியர், அருகிலிருக்கும் ஒரு சிறுநகரில் நிகழ்ந்த ரேஞ்சரின் கொலையொன்றின் விசாரணையில் தனக்கு உதவும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ரேஞ்சர்கள் இருவரும் ஊழியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கொலை நடந்த சிறு நகரை நோக்கி பயணிக்கிறார்கள் .....

எங்கு அநீதி தன் கொட்டத்தை மேடைபோட்டு கும்மியடித்து என்னை தட்டிக் கேட்க யாருமில்லை என உரக்க குரல் தருகிறதோ அதை தொடர்ந்த இரு பக்கங்களில் அப்பகுதியின் வழியாக டெக்ஸ் அண்ட் கோ தற்செயலாக சென்று கொண்டிருப்பதையும், கொட்டம் அடித்து உரக்க குரல் தந்த அநீதியை அடக்க விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் பொறுப்பை எடுத்து கொள்வதையும் ஆச்சர்யம் கண்களில் கண்ணீருடன் மல்க நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். எப்படி டெக்ஸ் சொல்லி வைத்தாற்போல் இப்பகுதியால் வந்தார், வென்றார், சென்றார் என்ற கேள்விகளிற்கு டெக்ஸின் அன்பு விசிறிகள் மனதிலும், சிந்தையிலும் இடமில்லை. எனவே காலாராடோ  ரேஞ்சர்களின் அலுவலகத்தில் ஒரு சிறு பீர்கூட அருந்தாது நமது பிரியரேஞ்சர்கள் இருவரும் கொலை விசாரணைக்கு புறப்படுகையில் வழமைபோலவே பழக்கப்பட்ட டெக்ஸ் வாசக உதடுகள் மனதில் ஒரு விசிலை உற்சாகமாக அடித்து அவர்கள் இருவரையும் கனிசன் எனும் அந்த சிறுநகரிற்கு வழியனுப்பி வைக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரேஞ்சர் ஜோன்ஸ், அபின் கடத்தல் விவகாரம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்ததை டெக்ஸுக்கு தெளிவாக்கி இருந்தார் ரேஞ்சர் அலுவலக ஊழியர். இதை தன் மூளையில் போட்டு கெட்டி சட்னிபோல அரைத்தபடியே கனிசன் நகரை வந்து சேரும் டெக்ஸ் முதலில் தன் விசாரணைகளை ஆரம்பிப்பது நகரின் ஷெரீப் அலுவலகத்தில். கனிசன் நகர ஷெரீப் தன் இருக்கையை விட்டு அதிகம் நகர விரும்பாத ஒரு மனிதன். கொலைவிசாரணையை சுறுசுறுப்பாக எடுத்து நடாத்துவது என்பது அவன் இயல்பிலேயே இல்லை. இதை டெக்ஸ் தெளிவாக புரிந்து கொள்கிறார், பதவிக்காகவும் அது தரும் பகட்டிற்காகவும் அதிகம் சிரமப்படாது மாதந்தோறும் தவறாமல் வந்துவிடும் சம்பளத்திற்காகவும் நீதி இவ்வாறான மனிதர்கள் கையில் உதாசீனம் செய்யப்படுவது அவரிற்கு சினத்தை தருகிறது. ஆனால் டெக்ஸால் செய்யக்கூடியது ஷெரீஃப் அணிந்திருக்கும் நட்சத்திரத்திற்கு அவன் அவமானம் என்பதை அவனிடம் சொல்வது மட்டுமே. அதன்பின்னாக கொலைநடந்த இரவன்று நகரை விட்டு எந்த தகவலும் தராது கிளம்பிச் சென்ற நாடக குழு பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் நகரின் நாடகசபா உரிமையாளரை தேடிச்செல்கின்றனர்.

நாடகசபா உரிமையாளர், மோர்கன் தியேட்டர் நாடககுழு ஒப்பந்தத்தை மதிக்காது இரவோடு இரவாக நகரைவிட்டு நீங்கியது குறித்து கோபத்தில் உழழ்பவர். விற்பனைசெய்த சீட்டுக்களிற்கு எல்லாம் பணத்தை திருப்பிதர வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது கோபம் வருவது அதுவும் தன்மீது தவறு இல்லாதபோது வருவது நியாயமான ஒன்றே என்பதை தர்மத்தின் காவல்தூண்களான டெக்ஸ் ரசிக சிங்கங்கள் அறிவார்கள். ஆகவே நாடகசபா உரிமையாளரிற்காக இரு துளி கண்ணீரை பாசத்துடன் சிந்திவிட்டே கதையை தொடரக்கூடியதாக இருப்பது இங்கு டெக்ஸ் ரசிகர்களிற்கு பழகிவிட்ட ஒரு நற்பண்பாக நீடிப்பதை அவர்கள் அருகில் இருப்பவர்கள் அவதானித்திருக்கலாம். தன் கோபத்தின் மத்தியிலும் மோர்கன் நாடகக்குழு செல்லவிருக்கும் நகரங்களின் பட்டியலை டெக்ஸ் அண்ட் கார்சனிற்கு தருகிறார் நாடகசபா உரிமையாளர். ஒரு நாடகத்தின் திரைக்கு பின்னால் நடப்பது என்ன என்பதை பெரும்பாலும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வது இல்லை அதைப்போலவே நாடகசபா உரிமையாளரின் அலுவலக கதவிற்கு பின்பாக மறைந்து இருந்து ரேஞ்சர்களுடன் உரிமையாளர் நடத்திக் கொண்டிருந்த உரையாடலை ஓட்டுக் கேட்ட மனிதனையும் ரேஞ்சர்கள் கதையின் இறுதிவரையில் அறியப்போவதே இல்லை. நாடகக்குழுவின் அடுத்த நிறுத்தம் மொண்ட்ரோஸ் எனும் நகர் என்பதை அறிந்து கொண்ட ரேஞ்சர்கள் அங்கு செல்ல தீர்மானிக்கிறார்கள்.  அதற்கு முன் மொண்ட்ரோஸ் நகரை நோக்கி பறக்கிறது ஒரு தந்தி. ரேஞ்சர்களின் வருகையை அறிவித்து, எச்சரித்து.

இந்த அவசரத் தந்திக்கான காரணம் என்ன எனும் கேள்வி நண்பர்கள் மனதில் எழலாம். அதற்கான விடை அபின் கடத்தல் என்பதாகும். அபின் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது சட்டத்தின் கண்களிற்கு தெரியாமல் அது பயணிப்பது அவசியமாகிறது. பாவனையாளர்களை அது சென்றடையும் வழிகளும், முறைகளும், அதை எடுத்து செல்லும் மனிதர்களும் சட்டத்தின் பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகிறது. வாரவாரம் நகரிற்கு நகர் பயணித்து கலைச்சேவையாற்றும் நாடகக்குழு ஒன்று அபின் கடத்தலிற்கு துணைபோகிறது என்பதை இயல்பாக யாருமே கற்பனை செய்து பார்க்கமாட்டார்கள். நகரிற்கு நகர் இடம்மாறும்போது அபின் பொதியும் அந்நகரிலிருக்கும் அபின் வினியோகியிடம் கைமாறுவது எவ்வித சிக்கலுமில்லாது நடந்துவிடும். வினியோகியிடமிருந்து அபினை கொண்டு வந்து தருபவனிற்கு பணமும் கைமாறிவிடும். கலைச்சேவை நல்ல ஒரு போர்வையாக இருக்க அதன் கீழ் போதைப்பொருள் கடத்தல் என்பது இலகுவாக அதிக பணம் சம்பாதிக்க வழி செய்து தருவதாக இருக்கிறது. இவ்வகையான வாய்புக்களை வாழ்க்கையில் எதற்கும் துணிந்து எவ்வழியிலாவது செல்வமும் வளமும் பெறவேண்டும் என எண்ணும் மனிதர்கள் தவறவிடுவது இல்லை. அவ்வகையான மனிதர்களில் ஒருவனே ரிக் டுவால்.

மோர்கன் நாடகக்குழுவின் நாடகங்களில் பெண்களை கவரும் ஆண்மகனாக வேடங்கள் தரிப்பவன் ரிக் டுவால். வேடங்களிற்கு ஏற்ப மோர்கன் நாடககுழுவின் உரிமையாளர் மோர்கனின் இரண்டாவது மனைவி ஏவாயையும் அவன் தன் காதல் வலைக்குள் வீழ்த்திவிட்டவன். வயதான கணவன், சலித்துபோன, எந்த சுகத்தையும் பகட்டையும் தராத, ஊர் ஊராக அரிதாரம் போட்டு அயர்ச்சியுறும் வாழ்க்கையிலிருந்து புதியதொரு சொகுசு வாழ்க்கையை தேடும் ஏவா, தன் ரகசியக் காதலன் ரிக் டுவாலின் அபின் கடத்தலில் அவனுடன் தயங்காது துணை நிற்பவள். அபின் கடத்தல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ரேஞ்சர் ஜோன்ஸை தன் காதலன் ரிக் கொலை செய்தபோதும்கூட அவள் தன் புதிய வாழ்வை மட்டுமே எண்ணி ரிக்குடனான தன் உறவையும், அபின் கடத்தலில் தன் பங்களிப்பையும் தொடர்கிறாள். தங்களிருவரிற்குமான உறவு ரகசியமானது என்றும், அபினை தாம் கடத்தி செல்வது தங்களிருவரையும் தவிர்த்து வேறு எவரிற்கும் தெரியாது என்றும் அவர்கள் உறுதியாக நம்பி வருகிறார்கள். ஆனால் கள்ளக்காதல் தன் சித்திரங்களை பொதுவெளிகளில் தீட்டுவது இல்லை. அது அதற்காக ரகசியமான மறைவுகளை வேண்டுகிறது. ரகசியமான மறைவுகளில் தற்செயலாக குறுக்கே செல்லும் மனிதர்கள் பிறரின் கனவுகளை கலைத்துப்போட்டு தம் கனவுகளிற்குரிய சாலைகளை அதில் போட்டு விடுவார்கள் என்பது இக்கதைக்கும் விதிவிலக்கல்ல.

ரிக் டுவால் அபினை சீனர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு நகரிலும் சீன ஏஜெண்டுகளிடம் அவன் அபினை தந்து பணத்தை பெற்றுக் கொள்கிறான். இந்த அபின் கடத்தலிற்கு தலைவனாக வுவாங் சிங் எனும் சீனன் இருக்கிறான். கனிசன் நகரிலிருந்து செல்லும் தந்தி வுவாங் சிங்கின் கவனத்திற்கு வருகிறது. ரிக் டுவாலை ரேஞ்சர்கள் கைது செய்தால் தன் அபின் கடத்தலும் வெளியே தெரியவரும் என்பதை உணர்ந்து கொள்ளும் வுவாங் சிங் மொண்ட்ரோஸிலேயே ரேஞ்சர்களை யாரும் அறியாது தீர்த்துக் கட்டுவது எனும் முடிவிற்கு வருகிறான். கனிசன் நகரில் மதுப்பிரியன் ஒருவனிடமிருந்து முக்கியமான தகவலை பெற்றுக்கொள்ளும் டெக்ஸும் கார்சனும் மொண்ட்ரோஸ் நகரிற்கு விரைந்து வருகிறார்கள்.

ஆனால் வாழ்க்கை என்பது மேடையில் நிகழும் நாடகத்தைவிட வேடிக்கையானது என்பதற்கேற்ப நிகழ்வுகள் மொண்ட்ரோஸில் அரங்கேற ஆரம்பமாகின்றன. ரிக், ஏவா இருவரினதும் ரகசியக் காதல் நாடகக்குழுவின் தலைவரும் ஏவாவின் கணவருமான மோர்கனிற்கு தெரியவருகிறது. மொண்ட்ரோஸில் நாடகத்தை அரங்கேற்றியபின் மோர்கன் ஏவாவை பிரிந்து செல்வது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இத்தருணத்தில் தன்னைவிட வயதில் குறைந்த ஒர் பெண்ணின் ஆசைகளை தீர்க்க முடியாத, நாடகத்தை மட்டுமே தன் வாழ்வில் அறிந்த ஒரு வயதான கலைஞனின் வேதனை சிறப்பாக சொல்லப்படும். அக்கலைஞன் எடுக்கும் அந்த எதார்த்தமான முடிவும்கூட அப்பெண்ணின் அவன்மேல் கொண்ட நிஜமான காதலே என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கும்.

மொண்ட்ரோஸில் நாடகம் மேடையேறும்போது மேடையில் ரிக் சுட்டுக் கொல்லப்படுவது போல ஒரு காட்சி வரும் ஆனால் நிஜமாகவே அவன் கொல்லப்படுவான். அவன் பயணிக்கும் வண்டியில் அவன் மறைவிடத்தில் பதுக்கி வைத்த அபினும் மாயமாக மறைந்துவிடும். ரிக் டுவாலை தன் கணவன் பொறாமையால் சுட்டுக் கொன்று விட்டான் என ஏவா குற்றம் சாட்ட அவரை நகர ஷெரீப் கைது செய்து சிறையில் அடைக்கிறார். உண்மையில் ரிக்கை கொன்றது யார்? அவனிடமிருந்த அபினை அபகரித்தது யார்? அபின் கடத்தல் தலைவன் வுவாங் சிங்கை டெக்ஸ் கும் கும் என்று குத்தி டுமீல் டுமீல் எனப் போட்டுத்தள்ளுவாரா எனும் கேள்விகளிற்கு விடையளிக்கிறது TEX #451  ன் கதையான Opium.

கதை அக்காலத்தின் மனிதர்கள் நாடிய சில போதைகள் குறித்து மேலோட்டமாக விபரிக்கிறது. தேனீரகங்கள், புகையகங்களில் ரகசியமாக பரிமாறப்பட்ட அபின் ஒரு போதை எனில் இரவுப் பொழுதுகளில் மேடைகளில் அரங்கேறும் நாடகங்கள் இன்னும் ஒரு போதையாக உருப்பெறுகின்றன. இரண்டையுமே அனுபவிக்க பணம் தந்தாக வேண்டும். ஆனால் அபின் தனக்கேயுரிய அழிவின் அழகை கொண்டிருக்கிறது. நாடகம் கலையின் கண்ணீரை தன் வேரிற்கு தந்து கொண்டேயிருக்கிறது. சீன சமூகம் முக்கியமான ஒரு அங்கமாக கதையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டாலும் பாதிக்கதையில் அது காணாமல் போய்விடுகிறது. கடும் உழைப்பும், சகிப்புத்தன்மையும் கொண்ட சீனர்கள் தம்மைவிட வளம் செழிப்பவர்களாக உருமாறுவது பிடிக்காத பொதுவான வெள்ளை மனப்பான்மையும் கதையில் சொல்லப்படுகிறது. இருப்பினும் சட்டத்தின் பிரதிநிதிகளிற்கே தண்ணீர் காட்டும் நுட்பங்களுடன் இயங்கும் சீனன் வுவாங் சிங்கின் கட்டுக்கோப்பான அபின் கடத்தல் அமைப்பு அவர்களின் திறமைக்கு சான்று.

நண்பர்கள் தயவுசெய்து இக்கதையின் அட்டைப்படத்தை பாருங்கள். தன் ட்ராகனாசனத்தில் அமர்ந்திருக்கும் வுவாங் சிங்கையும், அவரை விறைப்பான கைகளுடன் நோக்கிக் கொண்டிருக்கும் டெக்ஸையும் பாருங்கள். செமையான ஒரு மோதல் உண்டு எனும் எண்ணம் உங்கள் மனதில் எழலாம். அதில் தப்பேயில்லை ஏனெனில் எனக்கும் அதே எண்ணம் எழுந்தது. ஆனால் இந்தக் காட்சியே கதையில் இல்லை! ஏன் வுவாங் சிங்கின் முகத்தையோ அல்லது அவன் யார் என்பதையோ டெக்ஸ் இக்கதையில் அறிவது இல்லை. அபின் கடத்தலின் தலைவன் யார் என்பதை டெக்ஸ் அறியாமலேயே இக்கதை நிறைவுபெறும். வுவாங் சிங்கும் கதையின் ஒரு தருணத்தில் ரேஞ்சர்களை கொல்வதற்கு அவசியமில்லை என நழுவிவிடுவான். என்ன ஒரு பெருத்த ஏமாற்றம் இது.

டாக்டர் செவென்போல உருவச்சாயல் கொண்ட வுவாங் சிங், ஊதுபத்தி புகை அவரிருக்கும் அறையில் ட்ராகன் வால்போல நெளிந்து சுருண்டோட மங்கிய வெளிச்சத்தில் அறிவுக்களைகொண்ட வில்லத்தனமுகம் காட்டி கன்பூசியஸ் பெயரை கண்டபடி உபயோகித்து என்னில் உருவாக்கிய எதிர்பார்ப்பு எல்லாம் மணல்கனவாக சிதைந்தது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் அவர் தரும் பில்ட் அப்கள் எல்லாம் ஒரு பெரும் மோதலையே படிப்பவரின் மனதில் விதைக்கிறது. பாதியில் இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக கதை திரும்புகையில் கிடைக்கும் ஏமாற்றம் டெக்ஸே எம் மூஞ்சியில் ஓங்கி குத்துவது போல இருக்கிறது. மேலும் இக்கதையில் டெக்ஸ் யாரையும் அடிப்பது இல்லை, துப்பாக்கியால் யாரையும் சுடுவதும் இல்லை என்றால் நம்புவீர்களா. நம்புங்கள்! டெக்ஸ் இக்கதையில் தன் துப்பாக்கியை ஒரு தடவைதான் உபயோகிப்பார், அதுவும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண்டியை நிறுத்துங்கள் என எச்சரிப்பதற்காக மட்டுமே.

கதையில் டெக்ஸின் உச்சபட்ச வன்முறை என்பது நாடக அரங்கில் நாடகம் நடைபெறும் வேளையில் டெக்ஸும், கார்சனும் இங்கிதம் இல்லாது உரையாடிக் கொண்டிருக்க அது பிடிக்காத ஒரு கனவான் அவர்கள் பேசுவதை நிறுத்த சொல்வார், இதனால் அப்செட் ஆகும் டெக்ஸ் டாய்! நாடகம் முடிய வெளில வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என அந்த நோஞ்சான் கனவானை மிரட்டுவது என்பதாக இருக்கிறது. இது டெக்ஸின் மீதான மதிப்பை இழக்கசெய்யும் ஒரு காட்சி அமைப்பாகவே இருக்கிறது நகைச்சுவையை தருவதாக அல்ல. கதையின் விசாரணையில் கூட ரேஞ்சர்கள் எதையும் கண்டுபிடிப்பது இல்லை, கதையின் துணைப்பாத்திரங்கள் அவர்கள் விசாரித்து அறிய வேண்டியற்றை எல்லாம் ரேஞ்சர்களை தேடி வந்தே சொல்லி விடுகின்றனர். இப்படி ஒரு அஹி[இ]ம்சையான டெக்ஸ் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. இவ்வளவு பரபரப்புடன் ஆரம்பமாகி இப்படியான ஒரு அமெச்சூர் நாடகம்போல முடிவடையும் கதையையும் நான் படித்தது இல்லை. கதையின் ஒரே ஆறுதல் தனக்கேயுரிய தனித்த பாணியில், இருளையும் ஒளியையும் பக்கங்களில் மனித உணர்வுகளுடன் இழையவிட்டு அட்டகாசமாக Andrea Venturi உருவாக்கியிருக்கும் சித்திரங்கள். அவரின் திறமை க்ளோடியோ நிஸ்ஸியின் மொக்கை கதை ஒன்றில் இப்படியாக வீணாகிப்போனதே என்பதும் வேதனையான ஒன்றுதான். நாடகம் எல்லாம் பார்க்கிற ஆள் நானில்ல என்று உதார்விடும் கார்சன் பாதி நாடகம் முடிய கதையில் ஒன்றிப்போய் அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என இருக்கையில் உறுதியாய் உட்காரும் அத்தருணம் ரசிக்க வைக்கும் ஒரு தருணம். இனி டெக்ஸ் ரசிகர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், பரட்டையின் தீவிரவாத ரசிகக்கண்மணிகள் கையில் இக்கதை கிடைக்ககூடாது என பயபக்தியோடு பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தை வேண்டி நிற்பதுதான். மரண நாடகம் முடிகையில் பாடையில் இருப்பது வாசகர்கள்.