Saturday, March 28, 2015

இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்

வாழ்க்கையின் ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழலையும், அவரளித்த அவமானங்களையும் விலத்தி நின்று தனியே போராடி முன்னேறி செல்ல துடிக்கும் ஒரு மகன் தன் தந்தையை தன் வாழ்வின் எல்லைக்குள் வராது விடச்செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். குற்றவாளி அமைப்பு ஒன்றின் தலைவனின் விசுவாசமான முன்னாள் அடியாளான தன் தந்தையை பற்றி எண்ணிட அந்த மகனிடம் கசப்பேறிக் காய்ந்த நினைவுகளை தவிர என்னதான் இருக்க முடியும். ஆனால் ஒரு இரவு முடிவதற்குள் அவன் உள்ளம் தன் தந்தையின் இருளான நிழலிற்கு இடமளிக்குமா. தந்தை, மகன், குடும்பம், உறவுகள், நட்பு, விசுவாசம் என்பவற்றினூடாக உணர்சிகரமாகவும், மிக வேகமாகவும் நகர்கிறது இயக்குனர் Jaume Collet - Serra  இயக்கியிருக்கும் Run All Night திரைப்படம்.

ஷான் எனும் குற்றக்குழு தலைவனின் முன்னாள் தளபதி ஜிம்மி. இன்று தன் கடந்தகாலத்தின் இருளான நினைவுகளை மறப்பதற்காக மதுவில் ஆழ்கிறான். இன்றைய தலைமுறையின் நகைப்பின் உச்சப்பொருளாகிறான். அவனது வாழ்க்கை என்பது அர்த்தம் அற்ற ஒன்றாக அவன் பறித்த உயிர்கள் கேட்கும் கனவுக்கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறது. தன் தலைவனான ஷானிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம் அபாரமானது. கடந்தகாலத்தில் அவன் அதற்காக  சென்ற எல்லைகள் இன்றும் அவனை அவன் உறவுகள் அஞ்ச வைப்பதாகவே இருக்கிறது. ஷானின் மதுவிடுதியில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து எழுந்து சூடாக்கி ஒன்றை வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் போட்டு சொதப்பும் பரிதாபமானவனாக ஜிம்மி பாத்திரத்தில் லியம் நீசன் அறிமுகம் ஆகும்போதே அவரின் பண்பட்ட நடிப்பு ஆக்கிரமிப்பை செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரடியாக அலட்டாமல் தன் நடிப்பை வழங்கும் எட் ஹாரிஸும் ஷான் வேடத்தில் இலகுவாக பொருந்திக் கொள்கிறார்.

நட்பும், விசுவாசமும் உதிர்ந்து செல்லக்கூடிய எல்லை என ஒன்று உண்டாஎன ஜிம்மி அறியும் வேளையும் வருகிறது. அந்த தருணமே ஜிம்மி உண்மையிலேயே எப்படியான ஒரு தந்தை என்பதை சொல்ல ஆரம்பிக்கிறது. துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வால் ஷானின் மகனை ஜிம்மி தன் மகனான மைக்கேலை காப்பாற்றுவதற்காக கொல்ல நேரிடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் ரசிகர்களை உணர்ச்சிகரமான மென் திருப்பங்களோடு மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவை நோக்கி படு வேகமான கதையுடனும், வன்முறை தெறிக்கும் நிகழ்வுகளுடனும், அழுத்தமும், பதட்டமும், வேகமும், திகிலும் குறையாது அழைத்து செல்கிறது. காவல்துறை, அடியாள் கூட்டம், தொழில்முறைக் கொலைஞன் என தன்னாலான அனைத்து அழிவு சக்திகளையும் ஷான் ஜிம்மியின் மகனை ஒரு இரவு முடிவதற்குள் முடிப்பதற்கு ஏவ அவற்றை எவ்வாறு ஜிம்மி எதிர் கொள்கிறான் என்பது மிகச் சாதரணமான ஒரு கதையே ஆனால் அதை இயக்குனர் திரையில் தந்திருக்கும் விதமே அந்த நிகழ்வுகளின் பின்னான அழுத்தத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கடத்தி இவ்வகையான ஆக்சன்கள் இன்றும் சிறப்பான ஒரு திரையனுபவத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கிறது. ஷானுக்கும், ஜிம்மிக்கும் இடையிலான அந்த உச்சக் கட்டம் கண்ணியம் தவறாத ஒரு அஸ்தமனம் போல அழகானது. அரவணைப்பும், விசுவாசமும் சிலரிற்கிடையே மரணத்திலும் புது அழகாக உருப்பெறுகிறது போலும். தன்னை வெறுக்கும், தன் குழந்தைகளை கூட தன் தந்தையிடம் அறிமுகப்படுத்த விரும்பாத ஒரு மகனிடம் தந்தை எனும் இடத்தை பெறுவதற்காக குற்றவாளியான அவன் தந்தை செய்ய வேண்டியது எல்லாம் அவனும் தன்னை போல ஆகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அல்லவா. அதைவிட சிறப்பாக அந்த தந்தை என்னதான் தன் மகனிற்கு இந்த குரூரமான சமூகத்தில் தந்துவிட முடியும்.

சில உறவுகளின் இடைவெளிகளில் பேசப்படாத வார்த்தைகள் துளிகளாக நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. துளிகள் நிரம்பி வழியும் தருணத்தில் குரல் ஏதுமின்றி தன்னை அக்கறை எனும் அடையாளமாக காட்டி செல்கிறது பாசம். அது சொற்களால் ஆனது அல்ல செயல்களால் ஆனது. அந்தப் புரிதலில் மலர்வது மனதில் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்.

Sunday, March 22, 2015

ஆந்தைகளின் இரவு

ஒருவன் தன் வாழிடம் குறித்து தனக்கு அனைத்தும் தெரியும் எனும் நம்பிக்கையை கொண்டிருக்கலாம். அதன் இண்டு இடுக்குகள் அனைத்திலும் தான் அறியாத எதுவுமே இல்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கலாம். அங்கு வாழ்பவர்கள் மீதும் அவர்களின் வாழ்க்கைநிலை மீதும் அக்கறை கொள்பவனாக இருக்கலாம். அந்த வாழ்க்கைநிலையை மேம்படுத்த புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்பவனாக இருக்கலாம். அந்த வாழிடத்தின் காவலனாகவும், நீதியின் மேகவொளிச்சித்திரமாகவும் அவன் தன்னை நிலைநிறுத்தி இருக்கலாம். ஆனால் இவை யாவுமே கேள்விக்குறியாகி நிற்கும் தருணம் எப்போதாவது வருவதுண்டு. செல்வந்தன் ப்ருஸ் வெய்னிற்கு மரணதண்டனையை ஆந்தைகள் அவை வழங்கும் தருணமே அது.

கோத்தம் நகரின் முன்னேற்றத்திற்கான புது திட்டங்களை ப்ரூஸ் வெய்ன் முன்னெடுக்கையில் கிடைக்கும் இந்த தகவல் பேட்மேனை விசாரணை களத்தில் இறக்குகிறது. புதிய ஒரு துவக்கத்தை ஆரம்பிக்கும் பேட்மேன் கதைவரிசைகளில் பேட்மேனிற்கு உக்கிரமான சவாலாக ஆந்தைகள் அவை எனும் ரகசிய அமைப்பையும் அறிமுகம் செய்கிறது. கதையின் ஆரம்பமே அர்க்ஹாம் மனநல காப்பகத்தில் பேட்மேனும் ஜோக்கரும் ஒரே அணியாக இனைந்து நின்று எதிரிகளை துவம்சம் செய்வதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார் கதாசிரியர் Scott Snyder. மிக ஆச்சர்யம் தரும் காட்சி உருவாக்கம் அது. அதன் பின்பாகவுள்ள மர்மம் தெரியவரும்போது பேட்மேன் கதைகளில் அறிவியல் நுட்பங்களும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பதும் கதைக்களங்களும், பாத்திரங்களின் மனநிலைகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதும் தெளிவாகிறது.

முதல் பாகமான Court of Owls ஆரம்பத்தில் மட்டுமல்லாது கதை நெடுகிலும் ஆச்சர்யங்களை கதாசிரியர் தந்து செல்கிறார். இலகுவில் முறியடிக்கப்படமுடியாத பேட்மேனை ஆந்தைகள் அவை புதிர்ச்சுழலில் சிக்கவைத்து மனப்பிறழ்வு எய்ய செய்யும் நிலைவரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, தன் நகரென பேட்மேன் எண்ணியிருந்த கோதத்தை தம் லாசரஸ் குழந்தைகளான ஏவலர்கள் துணையுடன் தமதாக்கி கொள்ளும் திட்டத்தை அவர்கள் செயற்படுத்தும்வரை கதையின் முதல்பாகம் மெதுவாக நகர்ந்தாலும் அதில் இருக்கும் நவீனமும், மர்மமும் கதையை விறுவிறுபாக்குகிறது. ஆந்தைகள் குறித்த தொன்ம நம்பிக்கைகள் கதையில் அதிகம் ஆந்தைகள் அவையின் இயல்பை தெளிவாக்க கையாளப்பட்டிருக்கும்விதம் சிறப்பாக இருக்கிறது. வவ்வால்களிற்கும், ஆந்தைகளிற்கும் இடையில் முன்னொரு காலத்தில் வெய்ன் மாளிகையில் இடம்பெற்ற போட்டியின் முடிவையே உபகதையாக கதாசிரியர் ஒரு முக்கிய தருணம்வரை கொண்டு சென்று உக்கிரமாக முடிப்பது ஆக்சன் கதை பிரியர்களை முழுமையாக நிறைவடையச் செய்யும்.

அதிகாரமும், பலமும், செல்வாக்கும், செல்வமும் நிறைந்த ஆந்தைகள் அவைதான் ப்ரூஸ் வெய்னின் முன்னைய தலைமுறை உறுப்பினர் சிலரின் அழிவிற்கு காரணம் எனும் கருத்தை கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர் ஸ்காட் ஸ்னைடர். கதையின் இரண்டாம் பாகத்தில் தனியாக கூறப்பட்டு இருக்கும் ஆல்பிரட்டின் தந்தையான ஜார்விஸ் பெனிவொர்த்தின் கதை அதை உறுதிப்படுத்துவதாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஆல்ஃபிரட்டின் தந்தையின் இறப்பிற்கும் காரணம் என ஆந்தைகள் அவையையே சுட்டுகிறது. இக்கதையை போன்றே மிஸ்டர் ப்ரீஸின் கடந்த காலத்தை நோக்கி சென்று மிஸ்டர் ப்ரீஸின் அன்னையுடனான அவனின் உறவைச் சொல்லும் மனதை நெகிழச்செய்யும் கதை ஒன்றும் உண்டு. இக்கதைகள் இரண்டும் ஆந்தைகள் அவையின் ஆதிக்க நீட்சியை விபரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கதைகள் ஆகும்.

ஆந்தைகள் அவை கோத்தம் நகரை தமதாக்க அறிவியல்நுட்பங்களை பயன்படுத்தி Talons எனும் வீரர் குழுவை உருவாக்குகிறார்கள் ஆனால் அவர்கள் எதிர்பாராத திருப்பம் ஒன்று கதையில் உண்டு. பேட்மேனிற்கு சகலவகையிலும் சவாலாக அமையும் அந்த திருப்பம் அருமையான ஒன்று. கதையின் இரண்டாம் பாகமான Night of Owls வேகமும் விறுவிறுப்பும் திருப்பங்களிற்கும் பஞ்சமில்லாத ஒன்று. முதல் பாகம் மெதுவாக நகர்ந்தது எனும் எண்ணத்தை இப்பாகம் இல்லாது ஆக்கி கதையை முழுமையாக்கும். கதையின் முடிவானது ஆந்தைகள் அவை மீண்டும் வரும் என்பதை மறைமுகமாக சொல்லி கோதத்தை அவற்றின் உகிர்களின் பிடியிலிருந்து விடுவித்து பேட்மேனின் கரங்களில் அளித்து நிறைவடைகிறது. ஸ்னைடர் மற்றும் சில கதாசிரியர்களின் சலிக்க வைக்காத திருப்பங்கள் நிறைந்த கதை சொல்லலும், அசத்தலான சித்திரங்களிற்கு பொறுப்பான Greg Capullo வின் திறமையும் பேட்மேன் கதை வரிசைகளில் இவ்விரு தொகுப்புகளையும் குறிப்பிடத்தக்கவையாக சொல்ல வைக்கின்றன.

Sunday, March 15, 2015

மம்மியுடன் மங்காத்தா

வதனமோ சந்த்ர பிம்பமோ - 21

கியோவா செவ்விந்தியர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஜெஸ் ஹாக் எனும் வயதான ரேஞ்சரை காப்பாற்றுகிறது டெக்ஸ், கார்சன் அணி. செவ்விந்தியர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட ஜெஸ் ஹாக்,  செர்னாவின் பண்ணை உரிமையாளர் ஒக்டாவியோவின் இரு குழந்தைகளையும் கடத்தி சென்ற ஹுவான் ரஸாவின் தடத்தை தொடர்ந்து தான் சென்று கொண்டிருப்பதாக டெக்ஸிடம் தெரிவிக்கிறார். அதிரடி ரேஞ்சர்கள் இருவரும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்கு ஜெஸ் ஹாக்குடன் தாம் துணையிருப்பதாக கூறி மெக்ஸிக்க எல்லையை கடந்து தேடலை ஆரம்பிக்கிறார்கள் ... இச்சம்பவங்களிற்கிடையே மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் எகிப்திய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது .....

ஆம் நண்பர்களே மெக்ஸிக்கோவை டெக்ஸ் விடுவதாக இல்லை. அம்மண் எம் நாயகனிற்கு அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறது. நம் நாயகன் டெக்ஸும் அந்த அறைகூவல்களை தன் அதிரடிகளால் எதிர்கொண்டுகொண்டே இருக்கிறார். மெக்ஸிக்கோ என்பது அவர் மாமியார்வீடு என்பது போன்ற ஒரு உணர்வை டெக்ஸின் ரசிகர்கள் அனுபவிக்க ஆரம்பித்து குறிப்பிடத்தக்க காலம் ஓடிவிட்டது. மெக்ஸிக்கோவின் வடகிழக்கு எல்லை நகர்களின் தெருக்கள் எல்லாம் தாம் பிறந்த ஊரின் தெருக்கள் போல் டெக்ஸின் ரசிகர்களிற்கு தோன்றுவது அதனால்கூடவாக இருக்கலாம். அம்மண்ணின் கதிரவனின் அனற்கதிர்களை நழுவச்செய்யும் ஒரு பெருந்தொப்பி, புழுதிக்காற்றினை மேனியில் ஏந்திட ஒரு பான்ச்சோ மேலணி சகிதம் நாமும்கூட அந்த தெருக்களின் குட்டிச்சுவர்களில் சாய்ந்து நின்று டெகிலா தந்த இன்பத்தின் இழையில் கிதார்களில் சில பாடல்களை இசைக்கும் நினைவுகள் அந்த சுவர் ஓரமாக முளைத்து நிற்கும் கள்ளியின செடிகளின் விளிம்புகளில் அதிகாலையில் தொங்கி நிற்கும் நீர்த்துளிகள்போலவே மென்மையானவை ...

ஆனால் மென்மை என்பது மெக்ஸிக்கோவில் மிகவிரைவில் ஆவியாகிவிடக்கூடியது. அம்மண்ணின் ஆன்மாக்களின் உக்கிரத்தின் வெம்மை அத்தகையது. அதனாலேயே மெக்ஸிக்க மண்ணில் டெக்ஸ் நடத்தும் அதிரடிகளிலும் உக்கிரத்தின் அளவு அதிகமாக இருப்பது உண்டு. ஆனால் TEX  #452, #453,#454 ல் தொடராக வெளியாகிய இக்கதையில் அந்த உக்கிரத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. மாறாக காதல், நட்பு, தொல் எகிப்தின் மர்மங்கள் என்பன கலந்த, ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கலவையாக இக்கதை கதாசிரியர் Mauro Boselli யால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் மொரிஸ்கோ எனும் தலைப்பில் இக்கதையின் முதல்பாகம் ஆரம்பமாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் எகிப்தில் பாட்சா மெஹ்மெட் ஆண்டிருந்த காலத்தில் கதை சொல்லப்படுகிறது. பாட்சா மெஹ்மெட் எகிப்து நாட்டின் கலைப்பொக்கிஷங்கள், தேசிய சொத்துக்கள் அயல்நாடுகளிற்கு எடுத்து செல்லப்படுவதற்கு தடையை விதித்து இருந்தார் இருப்பினும் அரசு எந்திரத்தில் நிரம்பியிருந்த ஊழல் அத்தடை செவ்வனே நடைமுறைக்கு உள்ளாவதை சிரமமான ஒன்றாக்கியிருந்தது. இக்காலகட்டத்தில் ஓக்டாவ், டேவிஸ் எனும் இரு அகழ்வாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றுபவனாக எல் மொரிஸ்கோ பாத்திரம் அறிமுகமாகிறது.

அக்காலத்தில் எல் மொரிஸ்கோவின் பெயர் அஹ்மெட் ஜமால் ஆகும். தன் தந்தையை போலவே மருத்துவனாக பணியாற்றினாலும் அகழ்வுகள் மற்றும் எகிப்தின் தொன்மங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுபவனாகவும், பண்டைய எகிப்தின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டவனாகவும் எல் மொரிஸ்கோ சித்தரிக்கப்படுகிறான். இயற்கை விஞ்ஞானம், மருத்துவம் போன்றவற்றில் கல்வி கற்ற எல் மொரிஸ்கோ தன்னுடன் மருத்துவம் கற்ற சக மாணவியான அழகி நெஃப்ரெட் மீது மென்மையான ஒரு காதலையும் கொண்டவனாவான். அழகி நெஃப்ரெட் எகிப்தின் தொன்மையான சாஸ்திரங்களிலும், ஞானங்களிலும் சிறப்பான பரிச்சயம் கொண்டவளாக கதையில் திகழ்கிறாள். பண்டைய எகிப்தின் காதல் கவிதைகளை எல் மொரிஸ்கோவும், நெஃப்ரெட்டும் படித்து தம் மனங்களை இணைத்துக் கொள்ளும் காட்சி டெக்ஸ் கதைகளில் அரிதாக கிடைக்ககூடிய காதல் காட்சிகளில் ஒன்றென கூறலாம்.

துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்து வந்த எகிப்தை அதன் பிடியிலிருந்து விடுவிக்க பாட்சா மெஹ்மெட் மேற்கு நாடுகளின் நட்பையும் உதவியையும் நாடினார். ஆகவே அத்தருணத்தில் எகிப்தின் மீது இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளின் செல்வாக்கு சற்று அதிகமாக இருந்தது. மொரிஸ்கோ இணைந்து பணியாற்றும் அகழ்வாய்வாளர்கள் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களே. எகிப்தின் அருங்காட்சியகங்கள் எலிகளாலும், திருடர்களாலும் நிரம்பி இருக்கிறது, பண்டைய எகிப்து நாகரீகத்தின் பொக்கிஷங்கள் பாதுகாப்பாக பேணப்படும் இடம் மேற்குலகின் அருங்காட்சியகங்களே எனும் கருத்து இந்த அகழ்வாய்வாளர்களின் கருத்தாக கதையில் ஒலிக்கிறது. அகழ்வாய்வாளர்கள் மொரிஸ்கோவிற்கு தெரியவந்த ஒரு ரகசியத்தின்படி ஒரு அகழ்வில் ஈடுபடுகிறார்கள். இந்த ரகசியம் மொரிஸ்கோவிற்கு தெரியவந்ததற்கு காரணமாக இருப்பது அழகி நெஃப்ரெட்டின் நெருக்கமே.

மொரிஸ்கோவின் மீது நல்லெண்ணம் கொண்ட நெஃப்ரெட், தான் செயல்படும் தேசியவாதக் குழுவான ஹோரஸின் மைந்தர்கள் எனும் அமைப்பில் அவனையும் சேர்த்து விடுகிறாள். அந்த அமைப்பின் நூலகத்திலேயே சுவாரஸ்யமான ஒரு தகவலை மொரிஸ்கோ அறிந்து கொள்கிறான். ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பு மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனும் தகவல் கதையில் முன்வைக்கப்படுகிறது. அமெனோபிஸ் IV அல்லது அகெனெட்டான் எனும் பெயரில் அழைக்கப்பட்ட பாராவோன் எகிப்தின் பண்டைய தெய்வ வழிபாட்டிலிருந்து விலகி தன்னை முழுமையாக சூரியக்கடவுள் வழிபாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டான். இதை கடுமையாக எதிர்த்த மாந்தீரிகனும், மதகுருவுமான அஹ்ரான் பண்டைய எகிப்தின் தெய்வ வழிபாடுகள் அழிந்து போய்விடல் ஆகாது என்பதற்காக ஆரம்பித்த மதக்குழுதான் ஹோரஸின் மைந்தர்கள். எகிப்திய மதகுருவான அஹ்ரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியையும் கொண்டவன் என்பது பண்டைய ஆவணங்களில் எழுதப்பட்டிருக்கும் தகவல் ஆகும். இந்நிலையில் அஹ்ரானின் கல்லறை இருக்கும் இடம் குறித்த தகவலை கண்டுபிடிக்கும் மொரிஸ்கோ அந்த தகவலை தன் சகாக்களுடன் பகிர்ந்துகொள்ள அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடிக்கும் அகழ்வு இயன்றளவு ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் அகழ்வுகளை மேற்கொள்பவர்கள், திருடர்கள், போட்டி அகழ்வாய்வாளர்கள், அரசின் சட்டதிட்டங்கள் போன்றவற்றால் பல வகையிலும் பாதிக்கப்பட்டார்கள். இது போதாது என்று எகிப்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அயலவர்கள் சூறையாடுகிறார்கள் எனும் எண்ணத்தை வலுவாக கொண்ட ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பும் அகழ்வாளர்களின் முயற்சிகளிற்கு தன்னாலான சிரமங்களை அளித்து வந்தது. ஆகவே ஓக்டாவ், டேவிஸ், மொரிஸ்கோ தம் அகழ்வை மிக ரகசியமாகவே நடத்த வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள். அவர்கள் அகழ்வு செய்யும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்களை கூட அவதானமாக கண்காணிக்க வேண்டியதொரு நிலை அவர்களிற்கு இருந்தது. இந்நிலை பதட்டத்தை அந்த அகழ்வு தளத்தில் அதிகரிக்கவே செய்தது. பதட்டங்களினதும், அச்சங்களினதும் மத்தியில் நண்பர்கள் மூவரும் அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடித்து விடுகிறார்கள். உள்ளே நுழையவும் செய்கிறார்கள்.

அஹ்ரானின் கல்லறை பொறிகள் நிரம்பியதாக இருக்கிறது. அஹ்ரானின் அமைதியை கலைப்பவர்களை அழிக்கும் உத்திகள் கல்லறைகளில் ஒளிந்த ரகசியமாக காத்திருக்கிறது. இவை போதாது என்று அஹ்ரான் தன் கல்லறையில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாபமும் உள்ளே நுழைபவர்களிற்கு அச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. என் ஓய்வை குலைக்க துணிபவர்களிற்கு அய்யோ கேடு ... ஏனெனில் என் மரணத்தை நான் அவர்களிற்கு தந்து அவர்கள் உயிரை எனதாக்கி கொள்வேன் .. இவ்வுலகில் மீண்டும் என் பாதங்கள் பதியும் மாறாக அவர்களோ என்றென்றைக்கும் இறந்தவர்களின் உலகில் அலைந்து திரிவார்கள் என்பதே அஹ்ரானின் சாபம் ஆகும். இதை எல்லாவற்றையும் மீறி ஆய்வாளர்கள் அஹ்ரனின் ஈமப்பேழையை திறக்கிறார்கள் ஆனால் அது வெறுமையாக இருக்கிறது. ஆய்வாளர்களுடன் கல்லறைக்குள் இறங்கிய பணியாளர்கள் கொல்லப்படுகிறார்கள் ... அஹ்ரனின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது எனும் அச்சம் ஆய்வாளர்களை ஆக்கிரமிக்கிறது. தம் உயிரைக் காக்க அஹ்ரனின் கல்லறையை விட்டு அவர்கள் விலகி செல்கிறார்கள். ஹோரஸின் மைந்தர்களிற்கு அஞ்சி மொரிஸ்கோ எகிப்தை விட்டு வெளியேறுகிறான்...

இந்நிகழ்வுகள் நடந்து முப்பது வருடங்களின் பின்பாகவே டெக்ஸும், கார்சனும் கடத்தப்பட்ட குழந்தைகளை தேடி ஜெஸ் ஹாக்குடன் சாகசத்தை ஆரம்பிக்கிறார்கள். இதே சமயத்தில்தான் மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் ஒரு எகிப்திய மம்மி கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த மம்மி வேறு யாருடையதும் அல்ல ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பை நிறுவிய அஹ்ரா
னின் மம்மியே அது.

டெக்ஸும் கார்சனும் கதையில் வந்து சேர்ந்து கொள்ளும் தருணம் முதல் அவர்கள் கேட்கும் கேள்வி குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதே. குழந்தைகளை கடத்தி செல்பவனும் திறமையில் குறைந்தவன் அல்ல. கார்சனால்கூட அவன் தடத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் எனும் ஒரு எண்ணம் கதையின் ஆரம்ப பகுதியில் ஹுவான் ரஸாவின் பாத்திரத்தின் வீர்யத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்படும். இறுதிவரையில் ஹூவான் ரஸாவும் அந்த வீர்யத்தை தக்க வைத்துக் கொள்ள கதையில் வாய்ப்பு தரப்படுகிறது. டெக்ஸைவிட அதிகமாக கதாசிரியர் கருத்தில் கொண்டிருப்பது ஹுவான் ரஸாவின் பாத்திரத்தையே. அவனது நுட்பங்கள், தந்திரங்கள், தைரியம், தீய செயல்களை செய்பவனாக இருந்தாலும் அவன் மனதின் ஆழத்தில் இருக்ககூடிய ஈரம் என அவனை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் மோரோ பொசெலி.

ஒரு பக்கத்தில் குழந்தைகளை தேடிச் செல்லும் ரேஞ்சர்களின் கதை எனில் மறுபுறம் மொரிஸ்கோவும் அவன் முன்னைநாள் நண்பர்களும் எதிர்கொள்ளும் அமானுடச் சாயல் கொண்ட நிகழ்வுகள் என கதை இரு தடங்களில் பயணிக்கிறது. எகிப்தின் தொன்ம தெய்வங்களும், அவர்களின் ஏவலாட்களும் மெக்ஸிக்கோவின் இரவுகளில் உருவாக்கும் திகில் படிப்படியாக கதையில் கலக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கனவுக்கும், தொன்ம நம்பிக்கைகளுக்கும் இடையில் கதையிழை நெய்யப்பட்டு கொண்டே செல்கையில் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கவே செய்கிறது.

ஹுவான் ரஸாவின் தந்திரங்களை வென்று குழந்தைகள் கொண்டு செல்லப்படும் இடத்தை டெக்ஸ் குழுவினர் ஊகித்து கொண்டு அதை நோக்கி பல தடைகளை எதிர்கொண்டு பயணிக்கிறார்கள். முதிய ரேஞ்சராக அறிமுகமாகும் ஜெஸ் ஹாக், பார்வைத்திறன் குன்றியவராக சித்தரிக்கப்படுகிறார். அவருடனான டெக்ஸ், கார்சனின் சந்திப்பு வயதாகும் ரேஞ்சர்களின் வாழ்க்கை எவ்விதமானது எனும் ஒரு கேள்வியை அகத்தில் எழுப்பவே செய்கிறது. டெக்ஸ், கார்சன் போன்ற பாத்திரங்களை வயதானவர்களாக அல்லது வயதானவர்களாக அவர்களது வாழ்க்கை எப்படியானது என்பதை நாம் எண்ணியே பார்ப்பது இல்லை அல்லவா. ஆனால் வயதான ரேஞ்சர் ஜெஸ் ஹாக் பாத்திரம் அந்த சலனத்தை என்னில் உருவாக்கி சென்றது. வயதானபோதும், பார்வை குன்றியபோதும் ஜெஸ் ஹாக்கின் குறி மட்டும் தப்பாது உயிர்களை எடுப்பது இப்பாத்திரத்தின் மீதான ஒரு முரண். ஆனால் கதையின் ஒரு கட்டத்தில் அவர் கார்சனை நோக்கி சுட்டு விடுவது மென்மையான ஒரு நகைச்சுவையை கதையின் அந்த சமயத்தில் அள்ளித் தருகிறது.

எல் மொரிஸ்கோவின் நண்பர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பில் இருந்த எகிப்தின் பண்டைய சடங்கு பொருட்களும் திருட்டு போகின்றன. டுராங்கோவில் எல் மொரிஸ்கோவும் அவனிடம் இருக்கும் சில பொருட்களிற்காக தாக்கப்படுகிறான். இவையெல்லாம் ஹோரஸின் மைந்தர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைகளின் கடத்தல்களிற்கும், பண்டைய எகிப்தின் மதச்சடங்கு பொருட்களை ஹோரஸின் மைந்தர்கள் தேடி அபகரிப்பதற்கும், டுராங்கோவில் வந்து சேர்ந்த மம்மிக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்து விட முடியும். நரபலி சடங்கு, மம்மியை உயிர்ப்பிக்க வைத்தல் எனும் சொற்களில் அவற்றை இங்கு அடக்கி விடலாம். ஆனால் மாவீரன் டெக்ஸ் இருக்கையில் அஹ்ரனின் மம்மி விழிக்குமா என்பதுதான் கேள்வி. கதையும் அக்கேள்விக்கான விடையை வாசகர்களிற்கு சிறிது ஏமாற்றத்துடன் தந்து நிறைவடைகிறது.

கதையில் டெக்ஸ், கார்சன் பங்கு சிறிது குறைவே. ஹுவான் ரஸா, மொரிஸ்கோ எனும் பாத்திரங்கள் கதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்கு கூறலாம். எகிப்திய வரலாறு கற்பனை கலந்து சிறப்பாக கூறப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட நரபலிச்சடங்கிலும் இறந்தோர் உலகின் ஏழு கதவுகளையும் ஒரு உயிர் தாண்டி வரும் நிலை எளிதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களை உயிர்பிற்பதற்கான சடங்குகளில் பயன்படும் கருவிகள் கதையில் சித்தரிக்கப்படுகின்றன. எகிப்து, மற்றும் மாயா நாகரீங்கள் அட்லாண்டிஸ் நாகரீக வழிவந்தவையே எனும் நம்பிக்கை கொண்டவனாக ஒரு மதகுரு பாத்திரம் உலாவருகிறது. இந்த எல்லா தகவல்களும் வாசிப்பை சுவாரஸ்யம் ஆக்குகின்றன என்பது உண்மையே ஆனால் இறுதியில் நிகழ வேண்டிய அம்முக்கிய சம்பவம் வாசகர்களை அதிர வைப்பதற்கு பதில் அழ வைத்து விடுவதாக இருக்கிறது. கதையின் சம்பவங்களிற்கு தரப்படும் விளக்கங்கள் நம்பகத்தன்மையை கதைக்கு தருவதிலிருந்து தொலைவில் சென்று நிற்கின்றன. விறுவிறுப்புடனும், திகிலுடனும் நகர்ந்த கதை இறுதியில் வேகம் தளர்ந்து வீழ்ந்த கதையாகி விடுகிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Guglielmo Letteri . இவர் வரையும் பாத்திரங்கள் தலைகளை சரித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதையும், அவர்களின் கழுத்துப்பகுதி ஒரு ஆமையுடையதைப்போல சுருங்கிப் போய் இருப்பதையும் வாசகர்கள் நன்கு அவதானிக்க முடியும். ஆரம்ப பக்கங்களில் ஓவ்வாத ஒரு உணர்வை லெட்டெரியின் சித்திரங்கள் வழங்கினாலும் கதையின் நகர்வோடு அவை பிடித்தவையாக மாறிடும் அதிசயத்தை நீங்கள் உணரலாம். உணர்வுகளை முகங்களில் சிறப்பாக கொணரும் கலைஞர்களில் லெட்டெரி ஒருவர். நரபலித்தருணக் காட்சிகளில் குழந்தைகள் இருவரினதும் முகபாவங்கள் இதற்கு சான்றாக இருக்கும். எகிப்தின் தொன்மங்கள் சம்பந்தப்பட்ட தருணங்களில் இவர் சித்திரங்கள் வழங்ககூடிய காட்சித்தகவல்கள் சிறப்பாக இல்லை எனினும் கதையின் திகிலை இருளுடன் சிறப்பாக லெட்டெரி கொணர்ந்திருக்கிறார்,

கதையை படிக்க ஆரம்பிக்கையில் மூவாயிரம் ஆண்டுகளிற்கு பின் கண்விழிக்கும் அஹ்ரனின் மம்மி போயும் போயும் டெக்ஸின் முகத்திலா விழிக்க வேண்டும் எனும் ஒரு பாசவுணர்வு டெக்ஸின் ரசிகர்களில் அரும்பலாம். டெக்ஸும் மம்மி இன்னிக்கு இருக்குடி உனக்கு மங்காத்தா எனும் வகையில் பேய்க்குன்றை நோக்கி பயணித்திருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல சக்தி எல்லாரையும் காத்து விட்டது கதையின் இறுதியில். வாசகர்களை தவிர்த்து.


Sunday, February 22, 2015

Bs & Cs - Feb 2015

காடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.

காட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.

நான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.

தங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.
அமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.

நீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.

காயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.

அவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.

கதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.

நரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)டெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம்  Raymond Khoury எழுதி பின்  நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.

ந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....

இதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...

புனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ...  இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.

மதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை.  காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....இத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.

American Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.

க்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல்  குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.

க்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.

இதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின்  ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.

Sunday, February 1, 2015

கான்ஃபெடரேட் தங்கம்

ஏப்ரல் 1865ல் பிரிவினை கோரிய அமெரிக்க தெற்கின் தலைநகரான ரிச்மாண்ட், யூனியன் படைகளின் கைகளில் வீழ்ந்தபோது அமெரிக்க உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்தது. நகர் யூனியன் படைகளின் கைகளில் வருவதற்கு முந்தையநாளின் இரவில் தெற்கின் படைவீரர்களும், அவர்களின் ஜனாதிபதியான ஜெஃபர்சன் டேவிஸும் நகரிலிருந்து தப்பி சென்று தலைமறைவானார்கள். அவர்கள்கூடவே அவர்கள் கஜானாவின் 500,000 லட்சம் மதிப்பு வாய்ந்த தங்கடாலர்களும் நகரிலிருந்து தலைமறைவாகின.

இந்த பணத்தின் உதவியுடன் மறுபடியும் யூனியன் படைகளிற்கு எதிரான போராட்டத்தை மீட்டெடுக்க முடியும் என ஜெஃபர்சன் நம்பிக்கை கொண்டிருந்தார். மீண்டும் புரட்சி ஒன்று ஆரம்பம் ஆகக்கூடாது எனும் நோக்கில் யூனியன் அரசு இந்த தங்கடாலர்களை தேடும் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நடவடிக்கைகள் எந்த பயனையும் நல்குவதாக இருக்கவில்லை. தெற்கின் சார்பாக யூனியன் படைகளிற்கு எதிராக யுத்தத்தை நடாத்திய தளபதிகளான லீ, கிர்பி ஸ்மித் ஆகியோரின் சரணடைவின் பின்பாக ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் க்ரீன்ஸ்போரோ எனும் சிறுநகரில் பின்னர் ஜெஃபர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடமும்கூட கான்ஃபெடரேட் கஜானாவின் தங்கடாலர்கள் என்ன ஆனது என்பது குறித்து யூனியன் அரசால் அறிந்துகொள்ள முடியாமலே போனது. கான்ஃபெடரேட் தங்கம் என அழைக்கப்படும் Blueberry கதை வரிசையானது இந்த தங்கடாலர்களை கண்டடைவதற்கான சகசங்களை எடுத்து சொல்வதாக இருக்கிறது. அந்த தேடலில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு அரசதிகாரங்களின் காய்நகர்வுகளிற்கு பலியாகும் மனிதர்களின் கதையாகவும்கூட இதை நாம் பார்க்க முடியும். Chihuahua Pearl, L'Homme qui valait 500 000 $, Ballade por une Cercueil ஆகிய மூன்று ஆல்பங்களில் கான்ஃபெடரேட் தங்கம் கதையானது பிரதானமாக சொல்லப்படுகிறது.

மெக்ஸிக்க எல்லையை அண்மித்த பகுதிகளில் தன் ரோந்துப்பணியை முடித்துவிட்டு நவஹோ கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் லெப்டினெண்ட் ப்ளுபெரி, அமெரிக்க எல்லைக்குள் ஒரு மனிதனை விரட்டி வரும் மெக்ஸிக்க வீரர்களை தடுத்து அவர்களை அமெரிக்க எல்லையை விட்டு நீங்க செய்கிறார். இந்த மெக்ஸிக்க வீரர் குழுவிற்கு தலைமை தாங்கி வரும் காமாண்டர் விகோ தன் பெயரை ப்ளுபெரி நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டே மெக்ஸிக்கோ எல்லை நோக்கி திரும்புகிறான். அமெரிக்க எல்லைக்குள் புகுந்து தப்பிய மெக்ஸிக்கனை விசாரிப்பதற்காக ப்ளுபெரி அவனை தொடர்ந்து செல்கிறான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மனிதன் ஒரு பள்ளத்தில் வீழ்ந்து மரணமாகிறான். அவன் உடலை சோதனைபோடும் ப்ளுபெரி அமெரிக்க ஜனாதிபதிக்கு அவன் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருப்பதை அறிகிறான். நவஹோ கோட்டைக்கு அக்கடிதத்தை அவன் எடுத்து சென்று  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த சில வாரங்களின் பின் ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகரான ஜெனரல் மக்பெர்சன் அவனை  வந்து சந்திக்கிறார். காணாமல் போன கான்ஃபெடரேட் தங்கம் இருக்குமிடம் தெரிந்த ஒரு மனிதனை மெக்ஸிக்க சிறையொன்றில் இருந்து விடுவிக்கும் பணியையும் ப்ளுபெரி பொறுப்பேற்றுக் கொள்ள வைக்கிறார்.

அமெரிக்க அரசு ராஜீய வழியில் மெக்ஸிக்க சிறையில் இருக்கும் கைதியை விடுவிக்க விரும்புவது இல்லை. மெக்ஸிக்க அரசு ஏற்கனவே இந்த கான்ஃபெடரேட் தங்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதை அமெரிக்க அரசு அறிந்தே இருக்கிறது. ஆகவே மிக ரகசியமாக இவ்விடயத்தையும் ரகசியம் தெரிந்த மனிதனை மீட்டு தங்கடாலர்களை அமெரிக்க மண்ணிற்கு எடுத்து வருவதையுமே விரும்புகிறது. ஆகவே அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றவே தகுதியற்றவன் எனக் கருதப்படும் ப்ளுபெரியை இந்த ரகசிய நடவடிக்கையை அவன் மேற்கொள்ளாவிடில் அவன் பதவி உடனடியாக பறிக்கப்படும் என மிரட்டி பணியவைக்கிறது. ப்ளுபெரியும் மீட்கப்படும் தங்கடாலர்களில் தனக்கு ஒரு சிறுதொகை தரப்படும் எனும் வாக்கு ஜெனரல் மக்பெர்சனிடமிருந்து கிடைத்த பின்பாகவே இந்த ரகசியப் பணியில் ஈடுபட சம்மதிக்கிறான். மெக்ஸிக்கோவின் சிறுநகரான சிகுகுவா நோக்கி அவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். தனக்கு துணையாக நண்பர்கள் ஜிம்மி மற்றும் ரெட் நெக் அந்நகரில் வந்து தன்னுடன் சேர்ந்து கொள்வதற்கான செயல்களிளும் இறங்குகிறான்.

இங்கு மக்பெர்சனிடம் மீட்கப்படும் தங்கடாலர்களில் ப்ளுபெரி பங்கு கேட்பதைப்போலவே, ஜிம்மியை தேடிச்செல்லும் ப்ளுபெரி ஜிம்மிக்கும் தங்கடாலர்களின் மீது ஆசையை உருவாக்க வேண்டி இருக்கிறது. ப்ளுபெரியைப் போலவே ஜிம்மியும் சமூகசேவை செய்வதில் ஆர்வமற்று தன் தங்கம் தேடும் காரியத்தில் மதுவுடன் மூழ்கி கிடக்கவே விரும்புகிறான் ஆனால் ப்ளுபெரி அவனிற்கு உன் வாழ்க்கை முழுதிலும் நீ இங்கு எடுக்கப்போகும் தங்கத்தை காட்டிலும் அதிகமாக மெக்ஸிக்கோவில் சில நாட்களில் உனக்கு கிடைக்கும் என ஆர்வமூட்டி ஜிம்மியை தன்னுடன் மெக்ஸிக்கோவில் வந்து சேர்ந்து கொள்ள சம்மதிக்க வைக்கிறான். இதன் பின்பாகவே ஜிம்மி, ரெட் நெக்கை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் ப்ளுபெரி ராணுவ பொருளாளரை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்படுவதையும், அவனை உயிருடன் பிடித்து கொடுப்பவர்களிற்கு 1000 டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படும் எனும் சுவரொட்டிகளை ஜிம்மி காண்கிறான். அதுகுறித்து ப்ளுபெரியை எச்சரிக்கவும் செய்கிறான். மெக்ஸிக்கோவில் தன் ரகசியப்பணியை இலகுவாக்குவதற்காக ஜெனரல் மக்பெர்சன் செய்திருக்கும் காரியம் இது என்பதை புரிந்து கொள்ளும் ப்ளுபெரி தன் பயணத்தை தொடர்கிறான். ஆக தங்கடாலர்களின் மீது கொண்ட ஆசையால் அரசின் ரகசிய ஆட்டத்தில் தம்மை பலிகொடுக்க முன்வந்த இரு நபர்களாக இங்கு ப்ளுபெரியையும், ஜிம்மியையும் பார்க்கமுடியும் அல்லவா.

அதேவேளையில் அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆட்டத்தினுடன் அமெரிக்க அரசின் வேண்டுகோள் ஏதுமின்றி தம்மை அதில் இணைத்துக் கொள்பவர்களையும் கதைவரிசை கொண்டிருக்கிறது. முன்னைநாள் அமெரிக்க தெற்கின் ராணுவ வீரர்களும், இன்னாள் வழிப்பறி கொள்ளையர்களுமான ஹைஜாக்கர்ஸ் எனும் குழுவின் தலைமைகளான கிம்பாலும், பின்லேயும் அவ்வகையை சார்ந்தவர்கள் எனலாம். வாஷிங்டனிற்கு தகவல் அனுப்ப செல்லும் நவஹோ கோட்டையின் தபால் ஊழியரை கொல்வதன் வழியாக அவர்கள் அமெரிக்க அரசு கான்ஃபெடரேட் தங்கத்தை மீட்க ஒருவனை மெக்ஸிக்கோவிற்கு அனுப்பியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுகிறார்கள், அத்தங்கடாலர்களை தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்குகிறார்கள்.

மெக்ஸிக்கோவினுள் ரகசியமாக நுழைய விரும்பும் ப்ளுபெரி அதற்காக மிம்ப்ரேஸ் எனும் எல்லைப்புற கிராம வழியை தெரிவு செய்கிறான் ஆனால் அங்கு வெகுமதி வேட்டையன் ஏப் டொனாகனுடன் அவன் மோத வேண்டி வருகிறது. ப்ளுபெரியை உயிருடன் பிடித்தால் 1000 டாலர் வெகுமதி என்பதற்காக ப்ளுபெரி சிந்திப்பது போலவே சிந்தித்து ப்ளுபெரிக்காக மிம்ப்ரேஸ் பண்டகசாலையில் மாறுவேடமிட்டு காத்திருந்து தோற்கும் ஏப் டொனாகன் இக்கதை வரிசை அதன் முடிவை எட்டும்வரை அவ்வெகுமதிக்காக மட்டுமே ப்ளுபெரியை தேடியலைபவனாக சித்தரிக்கப்படுவான். மிக முக்கியமான ஒரு தருணத்தில் ப்ளுபெரியை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றி விடுபவனாக கதையில் வரும் டொனாகன் 1000 டாலரைவிட அதிகம் அள்ள கிடைக்கும் வாய்ப்பைகூட விரும்பாதவனாகவே இருப்பான். ப்ளுபெரி உயிருடன் இருப்பது அவனிற்கு அதிக பணத்தை எடுத்து வரக்கூடிய ஒன்று எனும் எண்ணமும் அவன் மனதில் துளிர்த்திருக்கும். ஆனால் அவன் எந்த தொகையும் கிடைக்கப்பெறாதவனாகவே கதையின் கட்டங்களில் மறைந்து போவான்.

மிம்ப்ரேஸில் ஏப் டொனாகனை முடக்கிவிட்டு மெக்ஸிக்க எல்லைக்குள் நுழையும் ப்ளுபெரி அங்கு அவனிற்காக காத்திருக்கும் காமண்டர் விகோவிடம் மாட்டிக் கொள்வான்.  கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்த விகோ அந்த தங்கடாலர்கள் அமெரிக்க மண்ணை அடைந்திடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன். மெக்ஸிக்க அரசு அவனை அந்தப் பணிக்கென சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கும். கதையின் மிகப்பெரிய மர்மத்தை அவிழ்ப்பவனாகவும், உச்சக்கட்டத்தில் ப்ளுபெரியை பழிவாங்குவதில் வெல்பவனாகவும் இருக்கும் விகோ இக்கதையின் மிக முக்கிய பாத்திரங்களில் ஒருவன். இருப்பினும் சிகுவகுவா பேர்ல் ஆல்பத்தின் பின்பாக அவன் பாத்திரம் முதன்மை பெறுவது கான்ஃபெடரேட் தங்கம் எனும் கதைவரிசை நிறைவுறும் சவப்பெட்டிக்காக ஒரு உலா எனும் ஆல்பத்திலேதான். சார்லியரின் கதைகளில், எதிர் பாத்திரங்களும் அவர்களின் புத்திசாலித்தனமும், கதையின் பிரதான பாத்திரத்திற்கு சளைக்காத வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இக்கதை வரிசை தொடரில் அதிகம் உண்டு எனலாம். காமாண்டர் விகோ அவ்வகையான பாத்திரங்களில் ஒருவன். ப்ளுபெரியை கைது செய்து பின் தப்பியோட விட்டு சிகுகுவாவிற்கு அவனை தேடி வந்து அங்கு அவனைப்பற்றிய விசாரிப்புகளை மேற்கொண்டு சிகுகுவா கவர்னர் லொபெஸிடம் ப்ளுபெரியை கைதுசெய்யும் பொறுப்பையும், கான்ஃபெடரேட் தங்கத்தையும் குறித்து தெளிவுபடுத்தி செல்லும் விகோ தன் புத்தியால் பிறரை வைத்து தன் இலக்குகளை வெல்பவனாக இருப்பான். இறுதியில் அவன் வெல்லும் முதன்மையான இலக்கு ப்ளுபெரி. அவ்வகையில் இக்கதையில் வெல்பவன் விகோதான்.

மெக்ஸிக்கோ எல்லையில் நுழைந்த பின்பாக காமாண்டர் விகோவின் சதியிலிருந்து தப்பும் ப்ளுபெரி மெக்ஸிக்கோவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கான்ஃபெடரேட் தங்கடாலர்கள் குறித்து தெரிவித்த நபரைச் சந்திப்பதற்காக சிகுகுவா எனும் நகரிலிருக்கும் ஹாசா ரோஹா எனும் கேளிக்கை விடுதிக்கு செல்லவேண்டி இருக்கும். அங்கு அவன் வூடினி எனும் வித்தைக் கலைஞனையும், சிகுகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகியையும் சந்திக்க வேண்டி வரும். வூடினி ஒரு விலாங்கைப்போல வால் காட்ட வேண்டிய இடத்தில் வாலையும் தலை காட்ட வேண்டிய இடத்தில் தலையும் காட்டி தன் பையை நிரப்புவதில் தேர்ந்தவன். கதையில் தகவல் வேண்டும் பாத்திரங்கள் அனைவரிற்கும் வேறுபாடு காட்டாது தகவல் தரும் வூடினி பாத்திரம் சிறிதளவே கதையில் இடம்பிடித்தாலும் கதையின் முக்கிய தருணங்கள் சிலவற்றில் அப்பாத்திரத்தின் பாதிப்பு இருக்கவே செய்கிறது. சிகுவகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகி வூடினிக்கு மாறாக இக்கதைவரிசை ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பவளாக இருக்கிறாள்.

ஹாசா ரோகா விடுதியில் வூடினியின் மூலம் சிகுவகுவா பேர்லை சந்திக்கிறான் ப்ளுபெரி. அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக தகவல் தந்தது அவளே என்பதை அறிகையில் ப்ளுபெரிக்கு மட்டுமல்ல வாசகர்களிற்கும் அத்தருணம் ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கும் ஆனால் சிகுவகுவா பேர்ல் உருவாக்கும் ஆச்சர்யங்கள் அந்த தருணத்துடம் மட்டும் நின்று போவது இல்லை. தங்கடாலர்களை அடைவதில் மட்டுமே கண்ணாக இருக்கும் சிகுகுவா பேர்ல் அதற்காக எடுக்கும் முகங்கள் அவளை சமூகத்தின் அறம்சார்ந்த பார்வைகளில் ஒழுங்கான ஒருத்தியாக காட்டாது. ஆனால் அவள் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் யாவும் தான் விரும்பியதை அடைந்து தன் வாழ்வில் ஒரு நிலையான வசதியான கட்டத்தை அடைய விரும்புபவர்கள் பார்வையில் அதற்கான முயற்சிகளாகவே தெரியும். தங்கத்திற்காகவே அவள் அமெரிக்க தெற்கின் முன்னாள் காலனலான ட்ரெவரை மணப்பாள். அதை அவள் வெளிப்படையாகவே சொல்லுவதற்கு தயங்குவது கிடையாது. கவர்னர் லொபெஸை அவள் மணக்க சம்மதம் தெரிவிப்பதும்கூட தங்கடாலர்களிற்காகத்தான். இதை அந்த ஆண்களும் அறியவே செய்கிறார்கள். ஆனால் சிகுவகுவா பேர்லை அவர்களால் வெறுக்க முடிவது இல்லை. காலனல் ட்ரெவர் தன் ரகசியத்தை சொல்லி செல்வதும் அவளிடமே. அவள் காரணமாக ஓயாது இழப்புக்களை சந்திக்கும் கவர்னர் லொபெஸ் இறங்குவதும் அவளிடமே. ஏன் அவளை சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவளை முத்தமிடும் ப்ளுபெரி அவள் மீது ஒரு ஈர்ப்பை கண்டடைவதும் பின் அவள் தனக்கு எதிராக செயற்பட தயங்காதவள் என அறிகையில் அவளை எதிர்கொள்வதும், பெண் எனக்கூட பாராது கன்னத்தில் அவளை அறைவதும் என கதைவரிசையில் உலவிடும் ஆண்பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்களில் சிகுகுவா பேர்ல் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் கதையின் ஆரம்பத்தில் ஹாசா ரோகாவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரோட்டி வழியாக சிகுகுவா நகரையே தன் கவர்ச்சியிலும், குரலிலும் கட்டிப்போட்ட நிலையில் அறிமுகமாகும் அப்பெண், கதையின் இறுதியில் சலினாஸ் எனும் ஒரு சிறுநகரின் விடுதியொன்றின் முன் தொங்கும் அறிவிப்பாக தன் வாழ்க்கையை தொடர்பவளாக நிற்பது மனதில் ஒரு வேதனையான சலனத்தை உருவாக்கியே செல்லும். ஆனால் அவள் வாழ்க்கை அவ்விடுதியுடன் முடிந்து விடுவது இல்லை.

கான்ஃபெடரேட் தங்கம் கதைவரிசையின் இன்னும் இரு முக்கிய பாத்திரங்களாக கவர்னர் லொபெஸையும், காலனல் ட்ரெவரையும் குறிப்பிடலாம். கவர்னர் லொபெஸ் அறிமுகவாவது கூட ஹாசா ரோஹா விடுதியில்தான். பாடகி சிகுவகுவா பேர்ல் மீது ஆசை கொண்டவனாக, அவளை நெருங்கும் ஆண்களை வெறுப்பவனாக, சிகுவகுவா பேர்லின் வார்த்தைகளை தட்டாதவனாக அறிமுகமாகும் கவர்னர் லொபெஸ், காமாண்டர் விகோ மூலம் கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்தபின் அதையும் கூடவே சிகுவகுவா பேர்லையும் அடைந்திட ஓயாது போராடுபவன். மெக்ஸிக்க ஜனாதிபதி ஹுவாரஸ் இந்திய வம்சாவளியினன் என்பதை சுட்டிக் காட்டுகையில் கொன்கிஸ்டார்களின் இனவெறி அவனுள் ரகசியமாக ஓடிக்கொண்டிருப்பதை ஒருவர் உணரமுடியும். இக்கதையின் சிறப்பான பாத்திரம் என்றால் அது கவர்னர் லொபெஸ் என்றால் அது மிகையல்ல. சிகுவகுவா பேர்ல் தன்னை ஏமாற்றுகிறாள் என்பதை அறிந்த பின்னும்கூட அவளை மதிப்புடன் பார்ப்பது, அவள் சதிகளிற்கு மாற்றுசதிகளை சிந்திப்பது, ப்ளுபெரியை அவன் செல்லும் இடமெல்லாம் சலிக்காது துரத்தி சென்று துயரமான ஒரு முடிவை எய்துவது என அருமையான அதேவேளை கண்ணியமும் உறுதியும் நிறைந்த பாத்திரப்படைப்பு கவர்னர் லொபெஸ். மிக மிடுக்காக கவர்னர் லொபெஸை ஜான் ஜிரோவின் தூரிகைகள் உயிர்ப்பித்து இருக்கும். தங்கம் பலியெடுத்தபின்னும்கூட அதை தேடி வருபவனாக அவனை கதையில் சித்தரிப்பார்கள் அந்தளவு விடாப்பிடியன் லொபெஸ். ஆனால் அவனை மட்டுமா கான்ஃபெடரேட் தங்கம் பலியெடுக்கிறது.

கான்பெடரேட் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவிற்கு எடுத்து வந்து பின் கவர்னர் லொபெஸின் சிறையை வந்தடையும் ட்ரெவர் ஒரு புதையல் காத்த பூதம். ராணுவ ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும், கன்ணியத்தையும் தவற விரும்பாத ஒருவன். தன்னையும், ஜைஜாக்கர்கள் குழுவை சேர்ந்த கிம்பாலையும், பின்லேயையும் வேறுபட்ட ஆளுமைகளாக பிரிப்பதிலிருந்தே அவன் வேறுபட்ட ஒருவன் என்பதை அறியலாம். தன்னிடம் இருக்கும் ரகசியத்திற்காக சிகுவகுவா பேர்ல் தன்னை மணந்திருந்தாலும் அவள்மேல் அவன் கொண்ட காதலை இழப்பது இல்லை. அதேபோல தான் மறைத்து வைத்திருக்கும் தங்கம் தெற்கின் விடுதலைப்போராட்டத்திற்கானது எனும் எண்ணமும் கொண்டவன். ஆனால் இவை எல்லாம் கொடுங்கனவாகிப் போய்விடுகின்றன. ஒரு ஜோடி காலணிகளுக்காக அவன் கொலை செய்யப்படும் வேளையில் அவன் கொண்டு செல்வது என்ன எனும் கேள்வி உருவாகாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் கொண்டு செல்லாத ரகசியம் ஒன்று உண்டு. அவன் மிகப் பாதுகாப்பாக காத்து வந்த தங்கடாலர்கள் பற்றியது அது. அதை கதையில் அறிந்தவன் இறுதியில் சிரிக்க ஆரம்பிப்பான். அந்த சிரிப்பை காலனல் ட்ரெவர் இறந்துகிடக்கும் அத்தருணத்துடன் பொருத்திப் பார்ப்போமேயானால் இறந்துபோன அந்த மனிதன் மீதான எம் இரக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

தங்கடாலர்களை காத்து நின்ற ட்ரெவெர் போலவே அதை சுருட்டலாம் என எண்ணம் கொண்டு மெக்ஸிக்கோவினுள் நுழைந்து தங்கத்தின் பின் ஓடி சதிகளின் பின் சதிகளாக தொடரும் பின்லே மற்றும் கிம்பால் கூட தம் உயிர்களை தங்கத்தின் முன்பாக இழக்கவே செய்கிறார்கள். ஆனால் தங்கத்தின் நிறம் அப்போது மாறிவிட்டிருக்கும். அவர்கள் வாழ்வின் வண்ணங்களைப் போல. சொந்த மண்ணின் விடுதலைக்காக போராடி சொந்த நாட்டின் மனிதர்களிடமே தோல்வியுற்ற அம்மனிதர்களிற்கு கிடைப்பது ஆறு அடி மண்ணே. இக்கதைவரிசையின் பரிதாபமான பாத்திரங்களில் ஹைஜாக்கர்ஸ் குழுவும் அடங்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் விடுதலைக்காக பேணப்பட்ட பணம் இன்னொரு நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வதும்கூட விடுதலைகளை நிர்ணயிப்பதில் பணத்தின் பங்கை தெளிவாக காட்டவே செய்கிறது.

முடிவாக ப்ளுபெரியை கமாண்டர் விகோ சிறைக்கு அனுப்பி வைப்பதுடன் இக்கதை வரிசை நிறைவுக்கு வருகிறது. ஆனால் விகோவை மீண்டும் சந்திப்பேன் என சூளுரைக்கிறான் ப்ளுபெரி. அது பிறிதொரு தருணத்தில். ப்ளுபெரி கதைகளின் கதாசிரியர் சார்லியர் தன் திறமையின் உச்சதருணங்களில் இருந்தபோது உருவாக்கப்பட்ட கதை இது. திருப்பத்திற்கு திருப்பம், சதிக்கு சதி, அதிரடிக்கு அதிரடி என மிக பரபரப்பாகவும் வேகமாகவும் சலிப்பின்றி பயணிக்கும் இக்கதை வரிசை ப்ளுபெர்ரி கதை வரிசைகளில் முதலிடம் பிடிக்ககூடிய ஒன்றாகும். கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஜான் ஜிரோவும் சளைத்தவரல்ல கதையின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம்பெற்று செல்வதையும் நாம் அவதானிக்க முடியும். வறள் நிலமான மேற்கின் நிலவியல் ஆகட்டும், வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் ஆகட்டும் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். வெஸ்டெர்ன் கதைகள் பல வந்திருக்கலாம் ஆனால் கான்பெடரேட் தங்கம் கதைவரிசை தரும் அனுபவம் வேறானது, தனித்தது. அதனாலேயே இக்கதை வெளியாகி ஏறக்குறைய நாற்பது வருடங்கள்  ஓடிவிட்ட பின்பாகவும் கூட மறுவாசிப்பில் இது இன்னும் புதிதாகவும் உயிர்ப்பாகவும் உணர்வுகளின் துடிப்புக்களை இழக்காமலும் இருக்கிறது.

Sunday, January 11, 2015

ராஜாளிப்பாறை காதலன்


வதனமோ சந்த்ர பிம்பமோ - 20

கனேடிய குதிரைப்பொலிஸ்படை அதிகாரி காலனல் ஜிம் பிராண்டன், தனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போன நிலையில் ஒரு குற்றவாளியை சட்டத்தின் பிடியினுள் இட்டு வரும் பொருட்டு பனிச்சிங்கம் டெக்ஸின் உதவியை நாடுகிறார். ஜிம் பிராண்டன் மீதும் கனேடிய பட்டை விஸ்கி மீதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடான நட்பு கொண்ட டெக்ஸ், தனது பங்காளி கார்சன் மற்றும் கனடாவில் இடம்பெறும் டெக்ஸ் சாகசங்களில் டெக்ஸிற்கு GPS ஆக பணியாற்றும் க்ரோ ஜான் சகிதம் ஜிம் பிராண்டனை வந்து சந்திக்கிறார் ....

டெக்ஸ் கனடாவிற்கு செல்கிறார் என்றாலே மனதில் அந்தப் பெரும்நிலத்தினை காணும் ஆர்வம் குடிவந்து விடுகிறது. அழகான இயற்கையின் துணையுடன் டெக்ஸ் செய்யும் சாகசங்கள் அக்கதைகளின் சித்திரங்கள் வாயிலாக எம்முடன் ஒன்றிக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமாக அவற்றில் இருக்கும். TEX Special n°11 ன் கதையான L'ultime Frontiere ன் அட்டைப்படத்தை பாருங்கள் சாஸ்காச்சேவான் ஏரியில் சிறுபடகொன்றில் ஜிம் பிராண்டன் துடுப்பு போட டெக்ஸ் தன் கையில் வின்செஸ்டரை தயார்நிலையில் தாங்கியவாறே வெண்பனிபோர்த்த அந்த மலைப்பகுதியில் சிறுபடகில் ஒரு சீறும் எரிமலையாக நிற்பது எவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னட்டையில் இக்காட்சி தரும் உணர்வுகளுடன் கதையில் இக்காட்சியை தேடினால் அது கதையில் எங்கும் கிடைக்காது. ஆம் நண்பர்களே கதையில் வராத சம்பவங்களை சித்திரப்படுத்தும் முன்னட்டை கொண்ட டெக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதனால் வாசக அன்பர்கள் உடனே வேதனையாகி கண்ணீர் சிந்தக்கூடாது. கதையில் டெக்ஸ் பூர்வகுடிகளின் இச்சிறுபடகில் பயணிப்பது மட்டுமல்லாது சாஸ்காச்சேவான் ஏரியின் காவல் தேவதை கதறி அழும் வகையிலான ஆக்சன்களையும் செய்வார்.

ஜிம் பிராண்டனின் அழைப்பை ஏற்று கனடாவில் அமைந்திருக்கும் சஸ்கட்டூனிற்கு டெக்ஸ் வந்து சேருவதற்கு ஒன்றரை மாதங்களின் முன்பாக குதிரைப்பொலிஸ் காலனல் ஜிம் பிராண்டன் ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கான ஒரு ரகசியத்தாக்குதலில் இறங்குவார். ஆனால் மூர்க்கமும், தந்திரமும், வெள்ளையர்கள் மீதான வெறியும் கொண்ட அந்த கலப்பின கொலைகாரன் ஜிம் பிராண்டனையே மரணத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் அளவிற்கு பதிலடி தருவான். வெள்ளையின தந்தைக்கும், செவ்விந்திய தாய்க்கும் பிறந்த அந்த கலப்பின இளைஞன் இரு வருட காலமாக சாஸ்காச்சேவானை அண்மித்த பகுதிகளில் தன் கொலைவெறியை அரங்கேற்றி வரும் ஒருவன். அவன் பெயர் யேசு ஸேன்.

யேசு ஸேனின் தந்தையான சிலாஸ் தன் பாதி வாழ்க்கையை காடுகளிலே கழித்து ஏறக்குறைய ஒரு காட்டுவாசியாகிப் போனவன். மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்று ஜீவிதம் நடாத்தும் அவன் வாழ்க்கை இலட்சியம் பூர்வகுடிகளை கொல்வது மட்டுமே. ஒரு நாள் அவன் வழியில் குறுக்கிட்ட ஒரு பூர்வகுடி பெண்ணை அவன் வன்புணர்வு செய்கிறான். அன்றிரவே மது தந்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் அவனை அப்பூர்வகுடிப் பெண் கொலை செய்கிறாள். அப்பெண்ணின் குடி அவளை விலக்கி வைக்க தனித்து நின்று தன் மகனை அவள் வளர்க்கிறாள், அச்சிறுவன் மனதில் வெள்ளையினத்தவர்களின் மீதான வெறுப்பையும் ஊட்டுகிறாள். தன்னால் இயலாது எனும் நிலையில் மதகுருவானவர்களின் அனாதை விடுதி ஒன்றில் தன் மகனை கொண்டு சேர்க்கிறாள். யேசு ஸேன் எனும் பெயர் அந்த விடுதியை நடத்தும் குருக்களாலேயே அவனிற்கு வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவ குருக்களின் வழிநடத்தலின் கீழ் யேசு ஸேனின் வாழ்க்கை அவனிற்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது இல்லை. பிரார்த்தனை, போதனை, கட்டுபாடு, ஒழுங்கு என அவனிற்கு பிடிக்காத விடயங்கள் அங்கு ஏராளமாக இருந்தன. கூடவே அவன் தாய் அவன் மனதில் வளர்த்த வெள்ளையினத்தவர் மீதான வெறுப்பு விடுதியில் வாழ்ந்திருந்த வெள்ளையின சிறுவர்கள் மீது அவன் வன்முறையை பிரயோகிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. நடப்பது நடக்கும் என்பது போல அவன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் சம்பவங்களும் நடந்தேறின.

டெக்ஸின் பல கதைகளில் நாம் பார்த்தது போல மீண்டும் ஒரு மனித வேட்டையையே இங்கு கதாசிரியர் நிஸ்ஸி கதையின் ஆரம்ப பகுதியில் சொல்கிறார். ஜிம் பிராண்டனையும் அவனுடன் வந்த காவலர்களையும் யேசு ஸேன் தாக்கும் ஆரம்பக் காட்சியில் அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நிஸ்ஸி உறுதிப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் தலைத்தோல்களை உரித்தெடுக்கும் செயலை அவர் பூர்வகுடிகளிடம் கடத்தி விடுகிறார். சிலாஸ் பூர்வகுடிகளை கொல்வதில் எவ்வளவு விருப்பம் உள்ளவனாக இருந்தானோ அதேபோன்ற அல்லது அதனிலும் சற்று அதிகமான விருப்புடன் வெள்ளையினத்தவர்களை கொல்பவனாக யேசு ஸேனை அவர் சித்தரிக்க விரும்புகையில் தலைத்தோல்களை உரிக்கும் செயலிலிருந்து ஸேனை கதாசிரியர் விலக்கியது அவன்மீது வாசகர்கள் அதிகளவு எதிரான உணர்வுகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்பது கதையின் நகர்வில் பின் புலனாக ஆரம்பிக்கும்.

சஸ்கட்டூனிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஜிம் பிராண்டனுடான சந்திப்பின் பின் செல்லும் முதலிடம் யேசு ஸேன் சில வருடங்கள் தன் வாழ்க்கையை கழித்த கிறிஸ்தவ குருமார்களால் நடாத்தப்படும் அனாதை விடுதியே. அங்கு செல்லும் வழியில் பிராண்டனாலேயே அவனை கைது செய்ய முடியல, நீ மட்டும் என்ன கிழிக்கப் போறே என சற்று சலித்துக் கொள்வார் கார்சன் அதற்கு டெக்ஸ் நான் அதிர்ஷ்ட நட்சத்திரத்தில பொறந்த பய என பதில் சொல்வார். அந்த பதிலுக்கு ஏற்றவாறு கதையின் பல காட்சிகளில் அதிர்ஷ்ட தேவதை டெக்ஸிற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பதை வாசக வெள்ளம் நுரைபொங்க ரசித்திட முடியும். அதில் ஒரு அதிர்ஷ்டம்தான் குருவானவர் எலியாஸ் டெக்ஸிற்கு தரும் தகவல்.

கதையின் இப்பகுதி யேசு ஸேனின் இன்னொரு முகத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறது. வெறுப்பு மட்டுமல்லாது நட்பும், காதலும் கூட அவன் மனதில் வாழ்ந்திருக்கிறது என்பதை கடந்தகால சம்பவங்கள் வழியாக குருவானவர் எலியாஸ் வாசகர்களிடம் கடத்துகிறார். அனாதை விடுதியில் நட் மோர்கன் எனும் வெள்ளையினச் சிறுவனுடனும், ஷீபா எனும் பூர்வகுடி சிறுமியுடனும் யேசு ஸேனின் இனிய சில கணங்களை விபரிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர். ஆரம்பத்தில் அழகுச்சிறுமி ஷீபாவின் நட்பை வெல்ல போட்டியிடும் நட்டும், ஸேனும் காலத்தின் நகர்வில் அவள் மனதில் இடம்பிடிக்க போட்டி போட ஆரம்பிக்கிறார்கள். விதியின் ஓட்டம் ஸேனை கொலைகாரனாக்க, அவன் மனதில் இன்னும் அழியாமல் இருக்கும் வெறுப்பின் காரணத்தால் தன் மனதை நட்டிடம் தந்து விடுகிறாள் ஷீபா. திருமணமான நிலையில் கனவா ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு பண்ணையில் தம் வாழ்க்கையை இனிதே கழித்து வருகிறது இத்தம்பதி. ஆனால் யேசு ஸேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது தன் மனதில் தன் காதலியாக, தன் மனைவியாக எப்போதும் இருக்கும் ஷீபாவை நட்டிடமிருந்து கவர்ந்து செல்வது எனும் தீர்மானத்திற்கு அவன் வந்து விடுகிறான். அதை நிறைவேற்றவும் செய்கிறான். இதை நிறைவேற்ற தன் பழைய நண்பனான நட்டுடன் அவன் மோத வேண்டி வருகிறது. மூர்க்கமான ஒரு மோதலில் நட்டை நினைவிழக்க செய்கிறான் யேசு. ஆனால் அம்மோதலின் முன்பாக அவன் நட்டிடம் வழங்கிய ஒரு தகவலே அவனிற்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.

சிறுவர்கள் நட், ஷீபா, ஸேன் ஆகியோரிற்கு இடையிலான நட்பும் பின் அது வளர்ந்து காதலாவதும் ஸேனை ஷீபா காதலிக்க மறுப்பதும் என கொடூரமான ஒரு உலகின் ஒரு சிறு தென்றல் தருணம் என கதையின் இப்பகுதி அமைகிறது. ஸேன் மீது வாசகர்கள் கொண்ட பார்வைகளும் கதையின் இப்பகுதியிலேயே மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும். அன்பை தேடும் ஒருவனாக, அது மறுக்கப்பட்ட நிலையிலும் அதை மூர்கத்துடன் தனதாக்க விழையும் ஒருவனாக ஸேன் மாற்றம் பெரும் தருணமிது. ஆனால் அவன் இழைத்த குற்றங்கள் அவனை விடுவதாக இல்லை. குருவானவர் எலியாஸின் சந்திப்பின் பின்பாக கனவா ஆற்றின் பண்ணை வீட்டிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஷீபாவை ஸேன் கவர்ந்து சென்றிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். தன் மனைவியை காப்பாற்ற புறப்படவிருக்கும் நட்டை அதை செய்ய வேண்டாம் என ஆலோசனை சொல்லவும் செய்கிறார்கள். அந்த உரையாடலின்போதே ஸேனைப் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ரேஞ்சர்கள் அறிந்து கொள்கிறார்கள். விஸ்கி மற்றும் துப்பாக்கிகளை கடத்துவதன் மூலமே ஸேன் பணம் சம்பாதிக்கிறான் எனும் தகவல்தான் அது.

இந்த தகவலை டெக்ஸ் அண்ட் கோ பெறும் தருணத்திலிருந்து கதை அதிரடியான ஓட்டம் பெற்று விடுகிறது. சஸ்கட்டூன் நகரில் செயற்படும் கடத்தல்காரர்கள் யாரென அறிந்து கொள்ள ரேஞ்சர்கள் கிளம்ப, தன் மனைவி ஷீபாவை தேடி நட்டும் தன் தேடலை ஆரம்பிக்கிறான். இத்தேடல்களின் பாதைகள் இட்டுவரும் எதிர்பாராதவொரு மனநெகிழ்வான முடிவை நோக்கி கதை வாசகனை வேகமாக இட்டு செல்கிறது.

டெக்ஸின் வழமையான அதிரடிகள் ஆரம்பமாகும் தருணங்கள் அவர் கடத்தல்காரர்களை விசாரணை செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. முகமூடிகளை அணிந்து கொண்டு அவர் தன் விசாரணை முறையை மாற்றாது கடத்தல்காரர்களை அடி அடி என்று அடிக்கிறார். உடலை விறைக்க வைக்கும் ஏரி நீரில் அவர்களை போட்டு மூச்சு திணற வைக்கிறார். உண்மைகளை வலியுடனும், கண்ணீருடனும் சிந்த வைக்கிறார். தனிப்பட்ட முறையில் உண்மையில் இக்கதையின் நாயகன் டெக்ஸ் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கதையின் முடிவுப் பகுதி அப்படி.

ஷீபாவை கவர்ந்து வந்து தன் மறைவிடமான ராஜாளிப்பாறையின் அருகிலான குடியிருப்பில் கட்டிப்போட்டு வைத்தாலும் கூட ஸேனால் அவள் மனதை மாற்றவோ, வெல்லவோ முடிவதில்லை. ஸேன் நினைத்திருந்தால் தன் தந்தைபோல ஷீபாவை வன்புணர்விற்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் அதை அவன் செய்வதில்லை. அவளின் மறுப்புக்கள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஒவ்வொரு இறப்புகளாக இறங்கி கொண்டே இருந்த போதிலும் ஷீபாவின் நலன்களை கவனிக்க அவன் தவறுவதே இல்லை. காதலிடமும், வாழ்க்கையிடமும் அவன் கேட்பது ஒரு வாய்ப்பைத்தான், ஆனால் அவை அவன் அபயக்குரலின் மொழி புரியாத சிலைகளாக ராஜாளிப்பாறையின் கூடாரத்திற்குள் உறைந்து போகின்றன.

டெக்ஸுடனான இறுதி மோதலின்போதும்கூட ஸேன் பேசும் வசனங்கள், வாசகர்களை நெகிழ வைப்பதாக இருக்கும். ஏன் டெக்ஸே கூட வியந்துபோகும் ஒருவனாக மாறிப்போவான் ஸேன். எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது. மரணித்துக்கொண்டிருக்கும் விதையாக. நீர் ஊற்றுகிறோமா, தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் Goran Parlov. மேஜிக் விண்ட், நிக் ரைடர் போன்ற பொனெலி குழும கதைகளிற்கு தன் ஆற்றலை அர்பணித்தவர். யேசு ஸேனை பார்க்கும்போது அட இது மேஜிக்விண்டா எனும் ஒரு உணர்வு தோன்றுவதுபோல அவர் ஸேனை சித்திரப்படுத்தி இருக்கிறார். கனேடிய மலைகளும், ஏரிகளும், வனங்களும் அவர் கைகளில் அருமையாக வந்திருக்கின்றன. மனிதர்கள் ஓடும்போது பின்னே மரங்கள் நகர்வதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் ஒரு சித்திரக்கட்டம் இருக்கிறது அது என்னை மிகவும் கவர்ந்தது. சில சமயங்களில் சாதாரண கிறுக்கல்கள் போல தோன்றினாலும் கொரான் பார்லோவின் சித்திரங்கள் நின்று நிதானமாக ரசித்து பின் நகர வேண்டிய திறமையை தம்முள் உள்ளடக்கி இருக்கின்றன.

டெக்ஸின் கதைகளில் அவரையே பின் தள்ளி எதிர் நாயகனான ஸேன் முன்னிடம் பிடிக்கும் வண்ணமாகவே இக்கதையை என்னால் உணர முடிகிறது. யேசு ஸேன் டெக்ஸ் கதைகளில் நினைவில் நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான் என்பது என் எண்ணம். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையை பிரபல காமிக்ஸ் கலைஞர் அமரர் ஹூகோ பிராட்டிற்கு சமர்பித்து இருக்கிறார். ராஜாளிப்பாறையை தழுவி ஓடும் ஆற்றின் மீதான காற்றில் கரைந்து உலவியிருக்கும் ஆன்மாக்களின் உதடுகள் முடிவிலா காலத்தின் எல்லைகளிலும் கிசுகிசுக்கும் ராஜாளிபாறைக் காதலனின் காதல் மொழியை.

Saturday, January 3, 2015

கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்

சமீபத்தில் சிகுகுவாபேர்ல் முதல் அரிசோனா லவ் வரையிலான  ப்ளுபெரியின் பிரதான கதைவரிசை ஆல்பங்களை மீண்டும் படித்தேன். படித்தபின்பாக அவற்றின் தமிழ் வடிவங்களின் சில பக்கங்களை யதேச்சையாக காண நேர்ந்தது. தமிழில் டைகர் தொடரை படிக்காதது நல்லதே எனும் எண்ணம் வலுப்பெற்றது. இதில் ரத்ததடம் விதிவிலக்கு, சிறப்பான மொழிபெயர்ப்பு என அதை நான் உணர்ந்தேன். சமீபத்தில் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்பது அதன் காரணமாக இருக்கக்கூடும்.

சந்தேகமேயில்லாமல் இந்த ஆல்பங்களில் சிகுகுவாபேர்ல், 500 000 டாலர் மனிதன், சவப்பெட்டிக்காக ஒரு உலா, எனும் கதைகள் அடங்கிய கான்ஃபெடரேட் தங்கம் இன்றும் சிறப்பாக இருக்கிறது. சார்லியரின் திறமையான கதைசொல்லலிற்கு சான்றாக இக்கதைவரிசையையே நான் தேர்ந்தெடுப்பேன். ஜிரோவின் சித்திரங்கள் அது உருவாக்கப்பட்ட காலத்தில் அதிக வரவேற்பை பெற்றிருக்கலாம், இன்றும் அச்சித்திரங்கள் சிறப்பாகவே உள்ளன ஆனால் தொடரின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம் பெற்று செல்வதை நாம் அவதானிக்கலாம். ஜிரோவின் சித்திரங்களில் தரம் ஏறிச்செல்லுவதாக நான் உணர்ந்த வேளையில் சார்லியரின் கதைசொல்லல் தடுமாற்றமான தருணங்களை சந்தித்து நகர்ந்தது என்பதே என் கருத்து.

ஜனாதிபதி கிராண்ட் மீதான முதல் கொலைச்சதி எனும் கதைவரிசை சட்டவிரோதி எனும் ஆல்பத்தில் ஆரம்பமாகிறது. 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கைதியாக ப்ளுபெரி, பிரான்சிஸ்வில் சிறைச்சாலையில் காமாண்டர் கெலி கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறார் ... இருப்பினும் பின் தன் நேர்மையை நிரூபிக்க தப்பி செல்கிறார் ... அதன் வழியாக ஜனாதிபதி கிராண்ட் கொலைச்சதியில் பலிக்கடாவாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சார்லியரின் திணறல் கதையை படிக்கையிலேயே உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதையின் திணறலை சமாளிக்கும் பொருட்டு ஜிரோ பெரிது பெரிதாக சித்திரங்களை வழங்கி இருக்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். ஏஞ்சல்பேஸ் எனும் பாத்திரம் முக்கியமான ஒன்றாக கதையின் ஆரம்பத்தில் சித்தரிக்கப்பட்டு பின் ப்ளுபெரியால் டெமொன்பேஸாக மாற்றம்பெறும் வில்லன்பாத்திரமாக மாறும். டுயுராங்கோ நகரில் மாறுவேடத்தில் ப்ளுபெரி ஓடுவது, கிழவியை காப்பாற்றுவது, போஸ்டர் ஒட்டுவது, தண்ணீர் தாங்கியில் ஒளித்து இருப்பது என ஒட்டுமொத்த யூனியன் படைகளையும் அதிகாரிகளையும் லாயக்கற்ற ஏமாளிகளாக சித்தரிக்ககூடிய கதை. இறுதியில் டென்னஸி ப்ளேக் கும்பலை முறியடித்து! ரயில் வெடிப்பில் மறைந்துபோகும் ப்ளுபெரி ராணுவ சர்வதிகார அரசொன்றின் உருவாக்கத்தையும் தகர்க்கிறார். போதாக்குறைக்கு குண்டு கூஃபி ஃபால்மர் குதிரைவண்டிலில் குற்றுயிரும் குலையுயிருமாக வந்து கிராண்டின் பழைய காதல் நினைவுகளை பழைய படம் ஒன்றினால் கிளறும் படாவதி செண்டிமெண்ட் காட்சி. இப்படியாக ஏஞ்சல்பேஸில் நிறைவுக்கு வரும் இக்கதை இக்கதை வரிசையில் சுமாரான ஒன்றே. இது போதாது என்று 30 வருட தண்டனையை 20 வருட தண்டனையாக கதையில் சார்லியர் குறைக்கும் காமெடி எல்லாம் உண்டு. அவை எடிட்டிங்கின்போது கண்டு கொள்ளப்படமால் போனது எவ்வாறு என்பது ஆச்சர்யமே.

நல்லது ரயில்வெடிப்பில் காணாமல்போன ப்ளுபெரி என்ன ஆனார். எங்கே சென்றார். தேடப்படும் சிறைப்பறவை கதைவரிசையில் அதை நாம் கண்டு கொள்ளலாம்.

செவ்விந்திய ஏஜெண்ட் டொல்சன் அநீதியான முறையில் செவ்விந்தியர்களுடன் நடந்து கொள்ள அதற்கு பதிலடி தருகிறார்கள் செவ்விந்தியர்கள். ஆனால் அந்தப் பதிலடியில் செவ்விந்திய வெள்ளைய தாக்குதல் உத்திகள் கலந்து பயன்படுத்தபடுகின்றன. வெள்ளையர்களிற்கு இது ஆச்சர்யமானாலும் அப்பாச்சேகளிற்கு இது ஆச்சர்யமல்ல. ஏனெனில் சகோ உடைந்தமூக்கார்தான் அவர்களை தன் தந்திரங்களால் வெற்றிகளிற்கு அழைத்து செல்வது.

அமெரிக்க சட்டத்தால் தலைக்கு விலை வைக்கப்பட்ட நிலையில் [ 50000, 10000, 20000 என கதைநெடுக மாறும் தலைவிலை சார்லியரின் கைங்கைர்யம்] அப்பாச்சே பெருந்தலைவர் கொச்சிஸிடம் சென்று அங்கு அவர் மகள் ச்சினியை வளைத்துப்போட விட்டோரியோ எனும் அப்பாச்சேவுடன் முறுகும் ப்ளுபெரி செய்யும் சாகசங்கள் ஒன்று இரண்டல்ல ... ச்சினிக்கு பரிசு கொணர்வது, கழுகை பிடிக்க செல்வது, விட்டோரியோவின் தவறால் முற்றாக அழிக்கப்பட இருந்த கொச்சிஸ் கூட்டத்தை காப்பாற்றுவது .. பின் வெள்ளையின துரோகி என குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் யூனியன் துருப்புக்களின் சிறைக்கு வந்து சேர்வது ... இக்கதையின் இரு முக்கிய பாத்திரங்கள் எக்ஸ்கல் ஜெடியோன் ... செவ்விந்தயர் மண்டைத்தோலை கிழிப்பதை தொழிலாக கொண்டு இரு மோப்ப நாய்களுடன் அலையும் தடவேட்டையன், மற்றது சும்மா புளுகிக்கொண்டு திரியும் வைல்ட் பில் ஹிக்காக், இருவருமே ப்ளுபெரியினை பிடித்து தருவதால் கிடைக்கும் வெகுமதிக்கு வேட்டை போடுபவர்கள்... இதில் வைல்ட் பில் சாடிஸம் குறைந்தவனாக சித்தரிக்கப்படுவான் ... எக் ஸ்கல் இக்கதையின் மூன்று பாகங்களிலும் அப்பாச்சேக்கள், ப்ளுபெரி பின் ஓடி தேடிச் சென்று தன் உயிரைவிடுவான் .. வைல்ட் பில்லை விட மூர்க்கமான படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை உருவாக்கும் பாத்திரம் எக்ஸ்கல்...

நீண்ட பயணம் ஆல்பம் ப்ளுபெரி எப்படி சான் கார்லோஸில் இருக்கும் செவ்விந்தியர்களை காப்பாற்றுகிறார் என்பது பற்றியது... மீண்டும் ஜிம்மி, ரெட்நெக், சிகுகுவா பேர்ல் இக்கதையில் அறிமுகமாவார்கள்... காப்பாற்றுவார்கள் ... உதவுவார்கள்... சொதப்புவார்கள்.... அதற்குள் ச்சின்னி விட்டோரியோவை மணந்து கொள்ள வேண்டும் என தன் மூக்கை சிந்தியபடியே காதலிற்கு குட்பை சொல்வார் ப்ளுபெரி ... வழமைபோலவே ராணுவவீரர்களிற்கு தண்ணி காட்டி ப்ளுபெரி தப்புவார் .. சான் கார்லோஸில் பீப்பீயை விடியும்வரை மூடு பனிக்குள் ஊதி கொச்சிஸை காப்பாற்றுவார் ... மூன்றாம் பாகத்தில் கொச்சிஸ் கண்மூடுவார் ... விட்டோரியோ தலைமையை ஏற்றுக் கொண்டு மெக்ஸிக்கோவிற்குள் தன் குடியை வழிநடாத்தி ச்சின்னியுடன் செல்ல ப்ளுபெரி தன் பங்கிற்கு மெக்ஸிக்கோவின் சிகுகுவாவை நோக்கி பயணிப்பார். செமையான இழுவை கொண்ட கதை ... செவ்விந்தியர்கள் ஓடுவதும் ... மாட்டிக் கொள்வதும் ...ப்ளுபெரி ஓடுவதும் மாட்டிக் கொள்வதும் ... பின்னர் தப்பிப்பதும் ... போக்கு காட்டி ஏமாற்றப்படும் ராணுவ வீரர்கள் ஏமாளிகளாக துரத்தி துரத்தி வருவதும் என முன்னொரு காலத்தில் அசத்தல் என சொல்லக்கூடிய கதை இன்று அப்படி தரப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது இருப்பினும் கிராண்ட் கொலைச்சதியைவிட இது சிறப்பான கதை என்பேன்.

இதன்பின் வருவது ப்ளுபெரி சிகுகுவா சென்று அங்கு காமாண்டர் விகோ கவர்னராகியிருப்பதை அறிந்து அங்கு சிறையில் அடைபட்டு பின் விடுபட்டு மரணதண்டனை பெற்ற விகோவை காப்பாற்றி தன் நேர்மையை நிரூபிக்க அமெரிக்கா அழைத்து வர முயல்வது ... இறுதி சீட்டு ஆல்பம் கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்பு இதுதான் என சொல்லக்கூடிய ஒரு ஆல்பம். குறிப்பாக சித்திரங்களும் ... விக்கோவின் பாத்திரப்படைப்பும் அதற்கு நன்கு துணை செய்கின்றன ... வழமைபோல மாறுவேடம், மெக்ஸிக்க வீரர்களை ஏமாளியாக்குவது போன்றவற்றுடன் பித்துப்பிடித்த கொள்ளையனான பரோன் டு லிஸ்ட்ராக் பாத்திரம் ... உச்சக்கட்டத்தில் விகோ ப்ளுபெரியை மிஞ்சுவார்... லுலு பெல் என ஒரு அம்மிணி ... அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்ந்து சதிகளில் உதவி ப்ளுபெரி முன் சங்கோஜம் இன்றி மேலாடையைக் கழட்ட தயங்காதவர் .. சிகுகுவா பேர்லிற்கு டூப்பாக சார்லியர் உருவாக்கி இருக்கும் பாத்திரம் .. ஒரு வழியாக மெக்ஸிக்க சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ப்ளுபெரி அமெரிக்க எல்லைக்குள் நுழைவார் .. நீரோட்டத்தின் வேகத்துடன் அவர் கரையை அடையும் முறையை படமெல்லாம் போட்டு காட்டி இருப்பார்கள் ...

இருந்த ஒரே சாட்சியம் விகோவும் மண்டையைப் போட்டதால் விகோ தந்த ஆவணங்களை கொண்டு தன் நேர்மையை நிரூபிக்க ப்ளுபெரி எடுக்கும் முயற்சிகளே ஓட்டத்தின் முடிவு ஆல்பம். ரயிலில் போய் டொட்ஜிடம் வேண்டுகோள் வைப்பது, பிரான்சிஸ்வில் சிறையின் காமாண்டர் கெலிக்கு மொட்டைக் கடுதாசி அனுப்புவது, டெல்டா ராஞ்சில் மாட்டிக் கொள்வது, இறுதியாக மீண்டும் கிராண்டின் மீதான கொலைச்சதி 2 ஐ முறியடிப்பது. ஜெனரல் அலிஸ்டரின் மறுவரவு நல்ல சஸ்பென்ஸ். சார்லியரின் கதைசொல்லல் மிளிரும் தருணங்கள் கொண்ட ஆல்பம் இது. ஜிரோவும் தன் சித்திரங்களில் ஒரு நேர்த்தியை காட்டியிருப்பார். கிராண்ட் வரும் ரயில் அதை தடுத்து ப்ளுபெரி கிராண்டை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் போன்றன நல்ல பரபரப்புதான் என்றாலும் கதைதானே என ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. கதையின் இறுதியில் தன் நேர்மையை நிரூபித்து , தங்கத்தையும் ரெட்நெக், ஜிம்மியுடன் பங்கிட்டு கொண்டு அவசரமாக கிளம்புகிறார் ப்ளுபெரி ...எங்கு

தகாமோவில் சிகுகுவாபேர்லின் திருமணத்திற்கு ... அரிசோனா லவ் கதை சிகுகுவாபேர்ல் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது, அவரது உடலழகை கண்ணிற்கு விருந்தாக்குகிறது, ப்ளுபெரியை காமெடிபீஸ் ஆக்குகிறது, கூடவே ட்யூக் சாண்டனையும் ... நெகிழ்வான ஒரு முடிவு. ஆனால் கதை சுமாரிற்கும் கீழே.

காமிக்ஸ் வரலாற்றில் ப்ளுபெரி தனி இடம் வகிக்கிறார். அதற்கு இங்கு குறிப்பிட்ட கதைகளில் சிலவும் அமெரிக்க ரயில்பாதை, சியாரா தங்கம் தொடர்களில் இடம்பெற்ற கதைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. பல விமர்சனங்கள் இருந்தாலும் ப்ளுபெரியின் அந்த இடம் தகுதியானதே என்பதையே இம்மறுவாசிப்பு எனக்கு உணரச்செய்தது.  அதேபோல மறுபதிப்பு முயற்சியானது திருத்தப்பட்ட ஒன்றாக வருதலே நலம். சில விலகல்களை சரிசெய்வதன் வழி சிறப்பான ஒரு மறுபதிப்பாக அது உருப்பெறலாம். ஆனால் நம் குரலைக் கேட்கத்தான் காதில்லையே. என்ன ஆனாலும் எது நடந்தாலும் நான் சொல்வது மாறப்போவது இல்லை. பரட்டை ஒழிக.