Sunday, February 27, 2011

தில்


பதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..

ஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.

நீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.

true-grit-2011-18464-2069476055டாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.

கோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர்! பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ரொஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]

ட்ரெயிலர்

Saturday, February 26, 2011

வானகப் பருந்து


sh1பிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.

1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்தியப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.

கிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…

sh2கிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.

ஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.

sh3ஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.

செவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.

sh4செவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள்ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.

தொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]

Wednesday, February 23, 2011

உடும்புக் குஞ்சானின் நுனி


குத்து டைம்ஸ் ஆசிரியரின் விகாரமான மனக்கோலத்தினை என் பக்கங்களிற்கு அவர் அளித்திருக்கும் தலைப்பிலிருந்தே வாசகர்கள் தெளிந்துணர்ந்திட முடியும். இத்தரைக்கும் மேன்மைதகு திரு உடும்புக் குஞ்சான் அவர்களின் க்ரொனிக்கல்ஸ் என்றே தலைப்பிடுமாறு அவரை நான் வேண்டிக் கொண்டிருந்தேன் [பார்க்க படம்]. வழமைபோலவே ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்த அவர், நீ எழுதப் போகும் பக்கங்களிற்கு நான் வைக்கும் தலைப்பு இதுதான் என்று விட்டார். அதிகம் பேசினால் அந்த தலைப்பிலிருந்து உடும்பை நீக்கி விடுவேன் எனவும் எச்சரித்தார். அவர் சொல்லிற்கு மறுபேச்சு இல்லை என்பதால் உடும்புக் குஞ்சானின் நுனி [க்ரொனிக்கல்ஸ்] துடிக்க வேண்டிய வேளைகளில் துடித்து அடங்கும் என்பதை வாசக அன்பர்களிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற ஞாயிறு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன், கனரக வாகனப் புகையினுள் மறைந்து போன பருவ சிட்டின் முகம் போல் போக்கு காட்டினான். உடும்பு மார்க் மழைக்கோட்டினுடாக என் வால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. வானில் இருந்து சிந்திய சில துளிகள் வாலை ஸ்பரிசித்து கிச்சு கிச்சு மூட்டின. நான் என் தொப்பியை சரி செய்து கொண்டேன். அப்படியிருந்தும் தூறல் முகத்தில் அடித்தது ஒரு வித கடுப்பை அளித்தது. தெரு, சிட்டுக்கள் நடமாட்டம் இல்லாது கல்லறைபோல் இருந்தது. நான் என் நீண்ட நாக்கை ஒரு முறை நீட்டி உள்ளிழுத்தேன். கெட்ட பழக்கம். சிறுவயது முதல் இருந்தே இருக்கிறது. விட முடியவில்லை. வழமைபோலவே காக்காநரி கஃபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

காக்காநரி கஃபேயில் வழமையான கூட்டம். நரியார் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். காகம் கல்லாவின் பின்பாக ஊன்றியிருந்த தடியின் உயரத்தில் அமர்ந்திருந்து கடையைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. வயதான பாட்டி ஒருவர் வடை சுட்டுக் கொண்டிருக்கும் போட்டோ சுவரில் தொங்கியது. நான் கஃபேக்குள் நுழைந்தபோது தடியில் இருந்த காகம், அதன் கரகரத்த குரலில் காலை வணக்கம் உடும்புக் குஞ்சான் என்று தன் தலையை சரித்தவாறே வரவேற்றது. கல்லாவிலிருந்த நரியின் வால் உஷாராகி அடங்க, அது என்னைப் பார்த்து நரிச் சிரிப்பு சிரித்தது. நலமாக இருக்கிறீர்களா உடும்புக் குஞ்சான் என்றார் நரியார். ஏதோ போகுது என்றேன் நான்.

கல்லாவிற்கு அருகில் இருந்த மேசையில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இதில் ஒரு காரணம் இருக்கிறது. காக்காநரி கஃபேயில் பரிமாறும் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் குரங்குகள் ஆவார்கள். முதலாளிகளின் கண்களிற்கு அகப்படாது குரங்கு சேஷ்டைகளை காட்டுவதில் எத்தர்கள். ஆனால் நல்லவர்கள். எனக்கு நாக்கு. அவர்களிற்கு சேஷ்டை. பிறக்கும்போதே ஒட்டிக் கொண்ட பண்புகள். வெட்டி எறிந்தால் இயல்பு குலையும். நான் நீண்ட நாள் வாடிக்கையாளன் என்பதால் சேஷ்டைகளின் அளவும் கவனிப்பின் அளவிற்கு இருக்கும். கல்லாவின் அருகில் இருந்தால் இந்த சேஷ்டைகளின் அளவு குறைவாக இருக்கும்.

jewish-connection-16282-459425600நான் மேசையில் அமர்ந்ததைக் கண்ட கிங்காங், என் மேசையை நெருங்கினான். வாங்க குஞ்சான் என்றான். சொன்னேன் இல்லையா, சேஷ்டைகள் இப்படித்தான் ஆரம்பமாகும். நரியார் தொண்டையைச் செருமினார். சூடாக இறால் வடை இருக்கிறது, சாப்பிடுகிறீர்களா என்றான் கிங்காங். இரண்டு இறால் வடை, ஒரு இஞ்சி தேனீர், தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி என்றேன் நான். எனக்கு அருகில் இருந்த மேசையில் புத்தகப் புழுவார் அமர்ந்திருந்தார். சந்திர வட்டக் கண்ணாடி, நீல ஆமைக் கழுத்து ஸ்வெட்டர், காக்கி ஜீன்ஸ் என கலக்கலாக இருந்தார். மேசையில் இருந்த பேப்பர் தோசை ஆறிக் கொண்டிருக்க புத்தகமொன்றில் ஆர்வமாக மூழ்கியிருந்தார்.

நான் என் தலையை சற்று குனிந்து புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன். கூளமாதாரி என்றிருந்தது. என் அசைவை அவதானித்து விட்ட புத்தகப் புழுவார், என்ன உடும்புக் குஞ்சான், அமைதியாக வந்திருக்கிறீர்கள் எனக் கேட்க, நான் தலையை அசைத்தவாறே அவர் கையிலிருந்த புத்தகத்தை சுட்டினேன். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன், ஆடு மேய்க்கும் சிறுவனான கூளையன் குறித்த முதல் அத்தியாயத்திலேயே மனதை கனக்க செய்துவிடுகிறார் பெருமாள்முருகன், படித்து விட்டு உங்களுடன் முழுதும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார். சொன்ன மறுகணமே புத்தகத்தினுள் மீண்டும் நுழைந்து விட்டார். கொடுத்து வைத்த பிறவி.

நரியார் மீண்டும் செருமினார். சில சமயங்களில் உணர்ச்சிகளை நரியாரால் கட்டுப்படுத்த முடியாது போகும், அப்போது செருமல் ஊளையாகி விடும். வாடிக்கையாளர்கள் இதற்கு பழக்கப்பட்டு விட்டதால் சிக்கல்கள் ஏதுமில்லை. உடும்புக் குஞ்சான், Holy Rollers எனும் திரைப்படத்தைப் பார்த்தேன் என ஆரம்பித்தார் நரியார். கிங்காங் நான் கேட்டவற்றை மேசையில் கொண்டு வந்து வைத்தான். நான் நன்றி கிங்காங் என்றேன். ஆ, பன்றி அதோ அந்த மூலையில் தன் நண்பியுடன் கொஞ்சிக் கொண்டு இருக்கிறார் என்றவாறே நகர்ந்தான் கிங்காங். இதை அவன் பன்றியாரிற்கும் கேட்கும் வகையில் கூறியதால் பன்றியார் கிங்காங்கை ஒரு முறைப்பு முறைத்தார். பின் தன் நண்பியுடன் இழைந்து கொண்டார்.

jewish-connection-2011-16282-573290385மிகவும் ஆச்சாரமான யூதக் குடும்பத்து பையன் சாம் கோல்ட். தனது தந்தையின் துணிக்கடையில் பணிபுரிந்தவாறே படிப்பையும் தொடர்கிறான். சாமின் தந்தைக்கு அவனை யூத மதகுருவாக ஆக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை. சாமிற்கோ வேறு தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை. சாமின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. மக்கர் பண்ணும் காஸ் அடுப்புடன் மல்லுக் கட்டி வாழும் குடும்பம் அது. சாமின் அயலவனான யோசெப், பணம் சம்பாதிக்க ஒரு வழி இருக்கிறது என சாமிடம் கூறுகிறான். ஆம்ஸ்டர்டாமிலிருந்து சில மருந்துகளை அமெரிக்காவிற்கு எடுத்து வந்தால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறான். சாமும் இதற்கு சம்மதிக்கிறான். மருந்துகளையும் ஆம்ஸ்டர்டாமிலிருந்து எடுத்து வருகிறான். ஆனால் அம்மருந்துகள் Ecstasy எனப்படும் மனதை இலகுவாக்கும் ஒரு வகை இன்ப போதை மாத்திரைகள் என்பதை அவன் அறிந்து கொள்கிறான். முதலில் தயங்கினாலும் கிடைக்கும் பணத்திற்காக எக்ஸ்டசி வில்லைகளை ரகசியமாக அமெரிக்காவினுள் கடத்தி வருபவனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பிக்கிறான் சாம். அவனது வாழ்க்கையில் உருவாகும் மாற்றங்களைதான் Holy Rollers படம் கூறுகிறது. படத்தை Kevin Acsh இயக்கியிருக்கிறார் என்று சொல்லி முடித்து விட்டு திராட்சை வத்தல் ஒன்றை வாயிலிட்டு சுவைக்க ஆரம்பித்தார் நரியார்.

படத்தில் விசேஷமாக ஏதாவது என்றவாறே நான் வடையை சட்னியில் தொட்டுக் கடித்தேன். விசேஷம் என எதுவும் இல்லை. உண்மை நிகழ்வுகளை வைத்தே படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 1996 லிருந்து 1998 க்குள் இப்படியான ஆச்சாரமான யூதக் குடும்பத்து இளைஞர்களை கழுதைகளாக பாவித்து ஒரு மில்லியனிற்கு மேலாக எக்ஸ்டசி வில்லைகளை அக்கடத்தல் கும்பல் கடத்தியிருக்கிறது.

ஆச்சாரமான யூத குடும்பம் ஒன்றின் மீதான பார்வை ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. பணம் சம்பாதிக்க ஆசைப்படாத யூதக் குடும்பம் ஒன்றை திரையில் காண்பது ஆச்சர்யமான ஒன்றுதானே. நரியார் கண்ணை சிமிட்டியவாறே தொடர்ந்தார். ஆச்சாரம் மிகுந்த யூதக் குடும்பங்களில் தம் பெண்களை திருமணம் செய்யப் போபவர்கள் குறித்த கண்டிப்பான விசாரணை இருப்பது கூட வியப்பான ஒன்றுதான். சாமிற்கு பெண் தர மறுக்கும் யூதக் குடும்பம், சாமின் நிழலான நடவடிக்கைகள் அறியப் பெற்றவுடன் அவனை நல்ல வழிக்கு கொண்டு வரமுயற்சிக்கும் அவன் நண்பன் மற்றும் யூத மத குரு, அவனை தன் சமூகத்திலிருந்து விரட்டி விட முன் வரும் பாசம் மிகுந்த தந்தை என ஒரு ஆச்சாரமான யூத சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவம் படத்தில் காட்டப்படுகிறது. சாமிற்கும் அவன் தந்தைக்குமிடையிலான காட்சிகள் நெகிழ வைப்பவை. Social Networkல் மார்க் ஸுக்கர்பெர்க்காக தோன்றிய Jesse Eisenberg தான் சாமாக நடித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் படம் மிகையான காட்சிகள் ஏதுமின்றி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஒன்றரை மணி நேரம் போனது மூன்று மணிநேரம் போல் பிரமையை தந்தது. பெரும் ஸ்டூடியோக்களின் ஆதரவின்றி சிறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஆச்சர்யங்கள் குறைந்த ஒரு சிறுகதைபோலவே இருக்கிறது என சொல்லி முடித்த நரியார், பன்றியாரின் பில்லிற்கு காசு வாங்கி மீதியை அளித்தார்.

மீதியை வாங்கிக் கொண்டே கஃபேயை விட்டு தன் நண்பியுடன் மிகையாக இழைந்தவாறே வெளியேறினார் பன்றியார். எனக்கு நாக்குடன், பெருமூச்சு ஒன்றும் வெளியில் வந்தது. நரியார் என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரித்தார். தடியில் அமர்ந்திருந்த காகம், பாண்டிச்சேரியிலிருந்து என் நண்பர் இந்த இசையைக் கேட்க சொன்னார் நீயும் கேட்டுப் பார் என்றவாறே அருகில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தியது. குழலிசை, பியானோவிசை, வயலினிசை என வழிய ஆரம்பித்த இசையானது, பூட்டிய அறையில் போடப்பட்ட அகிற் புகைபோல் படர ஆரம்பித்தது. அருமையாக இருக்கிறதே, இந்தக் கரிய காலைகூட ஒருவித அழகை இந்த இசையால் பெறுகிறதே, இதனை அமைத்தவர் யார் என்று காக்கையாரிடம் கேட்டேன். கிரேக்க நாட்டை சேர்ந்த Yanni எனும் கலைஞன். இது நைட்டிங்கேல் எனும் நறுக்கு. இணையத்தில் இவர் இசை கிடைக்கிறது கேட்டு ரசி என்றார் காக்கையார்.

சற்று நேரம் அந்தக் இசைக் கலைஞனின் இசையை கேட்டு ரசித்தேன். பின் கஃபேயிலிருந்து வெளியேறினேன். இசை எனக்குள் வந்து விட்டாற்போல் ஒரு உணர்வு. இந்த நாள் அழகுடன் முடியும் என்று உணர்ந்தேன். என்னைக் கடந்து சென்ற சுமாரான சிட்டுக்கள்கூட அழகாக தெரிந்தார்கள். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன் அழுக்கான கிழிந்த திரைச்சீலைக்கு பின்பாக நின்று புன்னகைக்கும் சிட்டுப்போல் சூரியன் தெரிந்தான்.

குத்து டைம்ஸிற்காக உடும்புக் குஞ்சான்

Saturday, February 19, 2011

அன்னமாகி நின்றாள்


நீயூயார்க் நகர பாலே குழுவில் நடனம் ஆடும் பெண்களில் ஒருவளாக நினா இருக்கிறாள். அக்குழுவின் கலையரங்கில் புதிய நிகழ்ச்சி ஒன்றை வழங்க விரும்பும் பாலே நடன இயக்குனன் தாமஸ் அதற்காக Swan Lake எனும் படைப்பை தேர்ந்தெடுக்கிறான். அந்த படைப்பின் பிராதான வேடத்தை ஏற்க தாமஸ், நினாவை தெரிவு செய்கிறான். அரிதான இந்த வாய்பிற்காக காத்திருந்த நினாவில் இந்த பிரதான பாத்திரம் சில மாற்றங்களை உருவாக்க ஆரம்பிக்கிறது…

தம் வாழ்க்கையையே கலைக்காக ஒப்புக்கொடுத்து அந்தக் கலையாகவே உருமாறிடும் கலைஞர்களை நாம் கலைத்துறைகளில் காணமுடியும். கண்டிப்பான ஒழுக்கமும், கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நிறைந்ததாகவும், உலகின் இன்பங்களை தம் கலைக்காக தியாகம் செய்ததாகவும் அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கும். பாலே நடனக்காரி நினாவும் அவ்வகையான கலைஞர்கள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்வதற்கு தகுதியான ஒருத்தியாகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள்.

சிறு வயது முதலே பாலே நடனத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் நினா, தான் ஒரு நட்சத்திரமாக மிளிரும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். கடுமையான பயிற்சிகளும், உழைப்பும் நிறைந்த அவள் நடன வாழ்க்கையின் ஒரு திருப்பமாக Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் அதிர்ஷ்டம் அவளை வந்தடைகிறது.

சாதாரண ஒரு இளம் பெண்ணிற்குரிய உலக வாழ்வை முற்றிலுமாக தவிர்த்து, நடனப் பயிற்சிகள், வீடு, கண்டிப்பான உணவுமுறை என தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள் நினா. நினாவின் தாய் அவளை இன்னமும் ஒரு சிறுமிபோலவே கவனித்து வருகிறாள். நினாவின் மேல் மிகையான அக்கறை கொண்டவளாகவும் இதன் வழியாக ஒரு வகையில் நினாவின் மேல் அழுத்தங்களை பிரயோகிப்பவளாகவும் அவள் இருக்கிறாள்.

ஒரு பாலே நடனத்தின் பிரதான பாத்திரத்தை தமதாக்கி கொள்வதற்கு, நடனம் ஆடும் பெண்கள் மத்தியில் பெருத்த ஆர்வமும், போட்டியும் எப்போதும் இருந்தே வருகிறது. இந்நிலையில் அந்த வாய்ப்பு நினாவிற்கு எதிர்பாராத விதத்தில் கிடைக்கையில் அதானல் அவள் பூரித்துப் போய்விடுகிறாள். தனக்கு கிடைத்த சந்தர்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவதற்காக அவள் தன் பயிற்சிகளை கடுமையாக்க ஆரம்பிக்கிறாள்.

Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் நர்த்தகி, இரு அன்னங்களின் வேடங்களை மேடையில் ஆடியாக வேண்டும். தூய்மையும், சாந்தமும், அழகும் பொருந்திய வெள்ளை அன்னத்தின் பாத்திரத்தை எந்த சிரமமும் இல்லாமல் ஆடிவிடும் நினாவிற்கு, தந்திரமும், கவர்ச்சியும், சூதும் நிறைந்த கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அதற்கேற்ற உணர்வுகளுடன் நிறைவாக ஆட முடியாமல் இருக்கிறது. இந்தக் கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை தன் ஆட்டத் திறமையால் பூரணமான ஒன்றாக்க கடுமையாக உழைக்கும் நினாவின் ஆளுமையில் கறுப்பு அன்னம் தன் இறகுகளை பிறப்பிக்க ஆரம்பிக்கிறது. இந்த ஆளுமைக்கும், நிஜ நினாவிற்குமான போராட்டத்தையும், அது அவள் வாழ்க்கை முறையில் இட்டு வரும் மாற்றங்களையும், ஓய்வற்ற இப்போராட்டம் வழி தன் கலையை பூரணமாக்குவதற்கு நினா தரும் விலை என்ன என்பதையும் அதிர வைக்கும் விதத்தில் Black Swan ல் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Darren Aronofsky.

black-swan-2011-14580-559664933நினா பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகை Natalie Portman, இதுவரை அவர் திரையில் ஏற்ற வேடங்களில் மிகவும் குழப்பமான, தீவிரமான, உடல் மற்றும் உள ரீதியாக அவரை அயர்ச்சியுற செய்துவிடும் ஒரு பாத்திரத்தை, ரசிகர்கள் வியப்படைய வைக்கும் அளவு செய்து காட்டியிருக்கிறார். அவரின் உழைப்பு திரையில் தனித்து தெரிகிறது. தன் தாய், நடன இயக்குனன் தாமஸ், தனக்கு கிடைத்திருக்கும் பிரதான பாத்திரத்தை தட்டிச் செல்லும் திறமை படைத்த நடனக்காரி லில்லி ஆகியோர் வழியாக அவள் பெறும் அழுத்தங்களுடன், நிஜத்திற்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத சூழல் ஒன்றில் அவள் மாட்டிக் கொண்டு, தன் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காணவியலாது, தன் அடையாளத்தின் எல்லைகளை வரையறுக்கும் சுயாதீனம் இழந்து, தன் லட்சியக் கனவிற்காக நினா ஓடும் ஓட்டம் எம்மை மூச்சு வாங்க வைக்கிறது. அபார சக்தியை செலவழித்து நினா பாத்திரத்தை நிறைவான ஒன்றாக ஆக்கியிருக்கிறார் நத்தாலி போர்ட்மேன். அப்பாவியாக இருந்த ஒரு இளம்பெண் எவ்வாறு கரிய அன்னமெனும் இருளின் சுழிக்குள் தன் கலையால் அமிழ்ந்து போகிறாள் என்பதை நினாவின் பாத்திரம் சொல்லவெண்ணா வலிகளுடன் ஆடித்தீர்க்கிறது.

படம் ஆரம்பித்தது முதற் கொண்டே, நினாவின் பிறழ்வுகளிற்குள்ளும், வேதனைகளிற்குள்ளும், அச்சங்களிற்குள்ளும், அரிதாக கிடைக்கும் அவள் புன்னகைகளிற்குள்ளும் பார்வையாளனை தன் இயக்கத்தால் இழுத்து சென்றுவிடுகிறார் இயக்குனர். திரையில் நினா ஒவ்வொரு முறையும் குழப்பமடையும் நிலையிலும் பார்வையாளனையும் அக்குழப்பத்தில் முழுதாக பங்கேற்க செய்து விடுகிறது டாரென் அரொனொஃப்ஸ்கியின் நேர்த்தியான இயக்கம். நினாவின் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக செறிவாக்கி, அதன் உச்சத்தில் அந்த ஆளுமையின் தீவிர வெளிப்பாட்டை அதன் முழு சக்தியுடனும், வெறியுடனும் திரைப்படுத்துவதில் அபார வெற்றி கண்டிருக்கிறார் டாரென். நினாவின் அப்பாவித்தன்மை தேயத் தேய அவளுள் கறுப்பு அன்னம் பூரணமாகிக் கொண்டு வருவதை தன் பாணியில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அவர். நினாவின் நகங்கள் வெட்டப்படும் காட்சிகளில் எம் கால் விரல்கள் கூசுவது அவரின் அழுத்தம் மிகுந்த இயக்கத்திற்கு சான்று. நடன இயக்குனன் தாமஸாக வேடமேற்றிருக்கும் Vincent Cassel தன் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார் ஆனால் நத்தாலி போர்ட்மேனின் பாத்திரம் ஏனைய எல்லா நடிகர்களையும், அவர்களின் திறமைகளையும் இரக்கமின்றி விழுங்கிப் பசியாறுகிறது.

பாலே நடனக்காட்சிகளில் கமெரா சுற்றி, சுழன்று, வளைந்து, அதுவும் ஒரு பாலே நடனக் கலைஞனாகிவிடுகிறது. திரையில் ஒலிக்கும் பிண்ணனி இசை, இருளையும், அச்சத்தையும், வேதனையையும் மனதில் கூட்டிச் செல்கிறது. உச்சக்கட்டக் காட்சியில் நத்தாலி போர்ட்மேனின் அபாரமான திறமை, டாரெனின் இயக்கம், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து ஒரு அதிர வைக்கும் முடிவை கண்களை சிமிட்ட முடியாது உறைந்துபோன நிலையில் ரசிக்க வைக்கின்றன. டாரெனின் இயக்கத்தில் வெளியாகிய தீவிரமான படங்களில் Black Swan க்கு முதலிடம் உண்டு. நத்தாலி போர்ட்மெனின் திரையுலக வாழ்வில் கறுப்பு அன்னம் அவரை மலை உச்சிக்கு தள்ளியிருக்கிறது. அதிலிருந்து விழுவதோ இல்லை இன்னமும் மேலே செல்வதோ இனி அவரின் கைகளிலேயே உள்ளது. உக்கிரமான உளவியல் த்ரில்லர் ரசிகர்களையும், டாரென் அரொனொஃப்ஸ்கியின் தீவிர ரசிகர்களையும் கறுப்பு அன்னம் தன் கவர்ச்சி சிறகுகளிற்குள் மயக்கி விடும் மந்திரத்தை கொண்டேயிருக்கிறது. [***]

ட்ரெயிலர்

Saturday, February 12, 2011

கொஞ்சம் திக்குங்கள் என் ராஜாவே


நிர்ப்பந்தங்கள் மிகுந்த சூழ்நிலைகளில் 1936ல் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான் ஆறாம் ஜார்ஜ். சிறுவயது முதலே அவனிற்கு இருக்கும் திக்குவாய் காரணமாக அவன் தாழ்வுணர்வு கொண்டவனாகவும், மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்கு சிரமப்படுபவனாகவும் இருக்கிறான்….

Colin Firth அமைதியான நடிகர்களின் பட்டியலில் சத்தமின்று இடம்பிடித்துக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர். அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகரான Hugh Grant பெற்ற புகழின் அளவுகூட அவரிற்கு கிடைத்திருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதே. மங்கிய ஒளியில் தோன்றி மறையும் ஒரு நிழல் நாயகனாகவே அவரின் திரை வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வெளியாகிய A Single Man எனும் திரைப்படம் காலின் ஃபர்த் எனும் நடிகர் மேல் பல ரசிகர்கள் கொண்டிருந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியது. அத்திரைப்படத்தில் அவரின் அமைதியான பண்பட்ட நடிப்பு பலரின் விழிகளையும் வியப்பால் விரிய வைத்தது. அந்த திரைப்படம் ஒரு தற்செயல் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணமாக வந்து சேர்ந்திருக்கிறது The King's Speech எனும் திரைப்படம். திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Tom Hooper இயக்கியிருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், கண்காட்சி ஒன்றை நிறைவு செய்து உரையாற்ற வேண்டிய இளவரசன் ஆல்பர்ட், தன் திக்குவாய் காரணமாக சில சொற்களிற்கு மேல் அந்த உரையை தொடர முடியாத நிலையில் திணறுவதையும், பெரும் மக்கள் திரளின் முன்பாக அவமானத்தில் அவன் குறுகிப்போவதையும் நாம் காண்கிறோம். காலங்கள் ஒடுகின்றன, ஆறாம் ஜார்ஜ் மன்னனாக முடிசூடிக் கொண்ட நிலையில் இளவரசன் ஆல்பர்ட், ஹிட்லர் தன் நாட்டு மக்கள் முன்னிலையில் ஆவேசமாக உரையாற்றுவதையும், ஹிட்லரின் பேச்சில் மதிமயங்கி கிடக்கும் ஜனத்திரள் அவன் பேச்சினால் உந்தப்பட்டு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பரிப்பதையும் திரையில் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த இரு காட்சிகளின் ஒப்பீடுமே மக்களிடம் உரையாடல் என்பதன் முக்கியத்துவத்தை சிறப்பாக உணர்த்திவிடுகின்றன. தன் பேச்சால் மக்களை கவர முடியாத எவருமே அவர்கள் மனதில் இடம்பிடிப்பதில்லை, மக்களை நெருங்கிவிடுவதில்லை, மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்வதில்லை. மேடைப் பேச்சுக்களை நம்பி ஏமாறி வரும் மக்கள் கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் இளவரசன் ஆல்பர்ட்டின் தலையாய பிரச்சினையோ தன் குறைப்பிரசவ வார்த்தைகளால் பிறரை எதிர்கொள்வது என்பதாக இருக்கிறது.

le-discours-d-un-roi-2011-18825-1562528584 இளவரசன் ஆல்பர்ட் தன் திக்குவாயை குணப்படுத்துவதற்காக பல மருத்துவர்களை அணுகுகிறான், ஆனால் எந்த சிகிச்சையும் அவனிற்கு பலனளிப்பதில்லை. குணப்படுத்த முடியாத இந்தக் குறை அவனை எளிதில் கோபம் கொள்ள வைப்பவனாக மாற்றுகிறது, குடி மக்கள் மத்தியில் அவன் பிரசன்னமாகும் போதெல்லாம் இந்த திக்குவாயால் அவன் தலை குனிய வேண்டியிருக்கிறது. தன் ஆளுமையை அவன் முடக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் மனைவியான எலிசபெத் அவனை எப்போதும் தேற்றுபவளாகவே இருக்கிறாள். அவள் தோள்கள் அவன் குனிந்த தலையை அன்புடன் தாங்கிக் கொள்கின்றன. அவர்கள் தோள்கள் அவர்களிருவரினதும் கண்ணீரையும் தாங்கிக் கொள்ளும் அனுபவத்தில் தேர்ந்திருக்கின்றன. எலிசபெத்தான் Lionel Logue எனும் சாதாரண ஒரு பேச்சுத்திறன் சிகிச்சையாளனிடம் இளவரசன் ஆல்பர்ட்டை அழைத்து செல்கிறாள். தன் கணவனின் இடர் களைவதில் அவள் இடையுறாது முன்னிற்கிறாள்.

லியனல் லோக், ஒரு வெற்றி பெறாத மேடை நடிகன். இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்பதற்காக இளவரசன் ஆல்பர்ட்டிற்கு சிறப்பான சலுகைகளையோ, கவனிப்பையோ அவன் வழங்குவதில்லை. தன்னிடம் சிகிச்சை பெறும் சாதாரண ஒரு நபரைப் போன்றே இளவரசனையும் லியனல் கவனித்துக் கொள்கிறான். ஆனால் லியனல் தன்னிடம் சிகிச்சை பெற வருபவர்களின் மீது அதிக அக்கறை கொள்பவனாக இருக்கிறான். அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காக அவன் சில வேளைகளில் எல்லைகளை மீறவும் தயங்குவதில்லை.

the-king-s-speech-2010-18825-953387368 ஆரம்பத்தில் லியனலின் நிபந்தனைகள் காரணமாக லியனலை தூக்கி எறியும் ஆல்பர்ட் பின் அவன் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் மிகையற்ற நட்பு ஒன்று உருவாகிறது. அந்த நட்பு அதன் எல்லைகளை அறிந்திருக்கிறது. அதற்குரிய பிரிவுகளையும், சந்தேகங்களையும் அது கண்டு மீள்கிறது. லியனல் லோக் பாத்திரத்தில் பண்பட்ட நடிகரான Geoffrey Rush அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு சில்லிங்கிற்காக ஆல்பர்ட்டை சீண்டுவதும், தன் வித்தியாசமான பயிற்சி முறைகளால் ஆல்பர்ட்டை புரட்டி எடுப்பதும், தன் துடுக்குத்தனமான வசனங்களால் இளவரசனை எதிர் கொள்வதுமாக சிறப்பான பாத்திரம் அவரிற்கு. மன்னன் முடிசூடும் இருக்கையில் அவர் அமர்ந்திருந்து ஆல்பர்டை சீண்டி, தூண்டியெழுப்பும் காட்சி கலக்கலாக இருக்கிறது. தனக்கு நன்றி செலுத்த வேண்டுமானால் தன்னை ஒரு Knight ஆக்கலாம் என ஆறாம் ஜார்ஜ்ஜிடம் அவர் அடிக்கும் கிண்டல், அக்மார்க் ஆங்கிலேயக் கிண்டல்.

திக்குவாய் குறைபாட்டால் தாழ்வுணர்வு கொண்ட ஆல்பர்ட்டை, தன் பயிற்சிகள் மூலம் அவன் அகத்துடனே மோதச் செய்கிறான் லியனல். தன் மீது நமிக்கையிழந்திருந்த ஆல்பர்ட் மெதுமெதுவாக தன்னம்பிக்கை பெற ஆரம்பிக்கிறான். படிப்படியாக அவன் சொற்கள் திக்கும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூட வேண்டியிருக்கிறது. ஹிட்லரின் படைகளை எதிர்த்து செய்யப் போகும் போரிற்காக அவன் இங்கிலாந்து நாட்டு மக்களிடம் வானொலி வழியாக உரையாற்ற வேண்டியிருக்கும் மிகப் பெரிய சவாலும் அவனை வந்து அடைகிறது. அந்த சவாலை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் உச்சக்கட்டமாக அமைகிறது.

le-discours-d-un-roi-2011-18825-713197437 படம் ஆரம்பித்தது முதலே தன் அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை அள்ளி எடுக்கிறார் காலின் ஃபர்த். தன் இயலாமையால் தனிமையில் அழுது வெம்புவதானாலும், தன்னிடம் கதை சொல்லுமாறு கேட்கும் தன் குழந்தைகளிடம் திக்கியவாறு கதை கூறுவதானாலும், தன் தந்தை இறந்த நிலையில் லியனல் லோக்கிடம் தன் மனதை திறப்பதானாலும், தனக்கெதிராக சதி செய்கிறாய் எனக் குற்றம் சாட்டும் தன் மூத்த சகோதரனிடம் தன் கருத்தை கூற முடியாமல் திக்குவதானாலும், அதே சகோதரனிற்காக லியனிலிடம் நீ துரோகி என வெடிப்பதானாலும், மக்களிடம் ஆற்ற வேண்டிய உரைக்காக அழுத்தங்கள் நிறைந்தநிலையில் பரபரவென தயாராவதானாலும் காலின் ஃபர்த் திரைப்படத்தில் வழங்கியிருப்பது அசத்த வைக்கும் நடிப்பு. மதிப்பை தேடி வரவைக்கும் நடிப்பு. இயக்குனர் மிகச் சிறப்பான ஒரு பாத்திரத்தை காலின் ஃபர்த்திடமிருந்து உருவி எடுத்திருக்கிறார். அந்த உரைக்கு முன் அவர் எடுக்கும் ஆயத்தங்கள் ஜாலியான அதிரடி.

the-king-s-speech-2010-18825-1864527704 படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வானொலி உரையை முடித்தபின் காலின் ஃபர்த் தன் உடல்மொழியில் கொண்டுவரும் மாற்றம் அபாரமானது. கம்பீரமும், ராஜகளையும் சூடி அவர் அரண்மனையில் வீறு பெற்று நடந்து வரும் அத்தருணம் படத்தின் மிக முக்கியமான தருணம். இளவரசன் எட்வர்ட்டின் காதல் விவகாரங்கள், இங்கிலாந்தின் அரசியல் என்பன திரைப்படத்தின் நிதானமான வேகத்தை மேலும் நிதானமாக்கி விடுகின்றன. காலின் ஃபர்த்தின் மனைவியாக வேடமேற்றிருக்கும் ஹெலனா பொன்ஹாம் கார்ட்டரை இப்படியான ஒரு அடக்கமான வேடத்தில் காண்பதே ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. டிம் பர்ட்டனின் அடுத்த இயக்கத்தில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

வழமை போலவே இசை மனதை நெகிழ வைக்க உதவுகிறது. நல்ல திரைக்கதை, சிறப்பான இயக்கம் என்றிருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது காலின் ஃபர்த்தும், ஜியோப்ஃரி ரஷ்ஷுமே. ஆஸ்கார் விருது எல்லாம் இந்த பண்பட்ட கலைஞர்களின் திறமைக்கு சரியான அங்கீகாரமாக அமையப் போவதில்லை என்பதே என் கருத்து. மன்னனின் இந்த உரை, தித்தித்தித்-திக்கும் ராஜோபசாரம். [***]

ட்ரெயிலர்

Saturday, February 5, 2011

கால்கள் பருகும் தூரம்


1939ல் ஜெர்மனியும், சோவியத்தும் போலந்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன.சோவியத் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்படும் ஜனுஸ் எனும் போலந்து இளைஞன், மக்கள் எதிரி எனவும் ஒற்றன் எனவும் குற்றம் சாட்டப்பட்டு சைபீரியாவில் இருக்கும் கடூழிய சிறை ஒன்றிற்கு தண்டனையை அனுபவிக்க அனுப்பி வைக்கப்படுகிறான். ஒரு மனிதன் இறக்கும்போது அவன் சுதந்திர மனிதனாகவே இறக்க வேண்டும் எனும் கொள்கையை கொண்ட ஜனுஸ், சைபீரிய கடூழிய சிறையிலிருந்து மேலும் சில கைதிகளுடன் தப்பித்து செல்கிறான்…..

நேரத்தை சேமித்தல் எனும் எண்ணமானது எம் சமூகத்தை வேகத்துடன் இணைந்து ஆக்கிரமித்து இருக்கும் இக்காலகட்டத்தில் உங்களால் நடக்ககூடிய அதிகபட்ச தூரம் எவ்வளவாக இருக்கும்? இந்த நடை ஆரோக்கியத்திற்கான நடையாகவோ, இயற்கையின் அழகை உள்வாங்கி தூய காற்றை சுவாசித்து களிக்கும் நடையாகவோ இல்லாது மாறாக உங்கள் விடுதலைக்கான நடை எனும்போது உங்கள் மனவுறுதி எந்த தொலைவுவரை உங்கள் கால்களையும், பாதங்களையும் சோர்வடையாது காத்திருக்கும்?

Master and Commnader திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், போலந்து ராணுவ அதிகாரியான Slavomir Rawicz ன் அனுபவங்களை கூறும் The Long Walk எனும் நூலைத் தழுவியே The Way Back எனும் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Peter Weir.

1940களில் சைபீரிய கடூழிய சிறையிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு குழு, சைபீரியாவின் கொடும் காலநிலையையும், காடுகளையும், மொங்கோலியாவின் பெருவெளிகளையும், பாலைவனங்களையும், சீனப்பெருஞ்சுவரையும், திபெத்தையும், இமயமலைகளையும் தாண்டி ஒரு வருட காலத்தில் 6500 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்து ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் இந்தியாவிற்கு வந்து சேரும் அனுபவங்களை வலியுடன் திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் பீட்டர் வெய்ர்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் அதிகாரங்களின் அடக்குமுறைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மனிதர்களின் சிறை அனுபவங்களை மெலிதாக கோடிட்டு காட்டுகின்றன. கலைஞர்கள், வேற்று நாட்டவர், இவர்களுடன் நிஜக் குற்றவாளிகள் என சிறைவாசிகளின் முகங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. சிறையில் ஒருவனின் வாழ்வை அதிகாரிகளோ, அவர்கள் துப்பாக்கிகளோ முடித்துவைக்க வேண்டிய அவசியம் கிடையாது. சைபீரியாவின் கடும் குளிரே அதனை பொறுப்பாக செய்துவிடும். இவ்வகையான உக்கிரமான காலநிலை கொண்ட சைபீரியாவும், அதன் இயற்கையும்கூட ஒரு பரந்த சிறைதான் என்பதனை ரசிகன் உடனடியாக உணர்ந்து கொள்ளமுடியும்.

les-chemins-de-la-liberte-2011-18387-1753952537 ஜனுஸ், சிறைக்கு வந்து சேர்ந்ததிலிருந்தே அங்கிருந்து தப்பித்து செல்ல விரும்பியவனாகவே இருக்கிறான். அதற்கான ரகசிய காரியங்களில் இறங்குகிறான். அவன் திட்டத்தில் சில சிறைவாசிகளும் இணைந்து கொள்கிறார்கள். தகுந்த ஒரு சமயத்தில் அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தும் விடுகிறார்கள். ஆனால் அந்தச் சிறையைவிட மிகக் கடுமையானதும் , இரக்கமற்றதுமான சைபீரிய இயற்கையின் தாக்குதல்களை அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் ஆரம்பித்த பயணம், உயிர் பிழைத்தலிற்காக இயற்கையுடன் மனிதன் நிகழ்த்தும் பெரும் போராட்டமாக உருமாறிவிடுகிறது. இயற்கையை மனிதனும், மனிதனை இயற்கையும் மாறி மாறி தாண்டிச் சென்று கொண்டேயிருப்பதை படத்தின் நெடுகிலும் ஒருவர் அனுபவித்திட முடியும். பசி, தாகம் என்பன வாட்ட, கால்கள் அவர்களை கைவிட, துவண்டு அவர்கள் விழும் சமயங்களில் எல்லாம் ஜனுஸ் அவர்களை ஊக்குவிப்பவனாக இருக்கிறான். அவனுள் இருக்கும் சுதந்திர தாகம் தூரங்களை அவன் கால்களால் பருக செய்துவிடுகிறது. அடக்குமுறையின் கரங்களின் முரட்டுப் பிடியிலிருந்து சுதந்திரத்தின் பெருவெளிகளின் உயிர்க் காற்றை உள்ளெடுக்க அவன் கால்கள் தூரங்கள் தோறும் அவனை ஏந்திச் செல்கின்றன.

சிறையில் வாழும் மனிதன் தனக்குள்ளேயே ஒரு அகச்சிறையை உருவாக்கி அதனுள் தன்னை சிறை வைத்துக் கொள்கிறான். சக மனிதனிடம் தன்னைப் பற்றிய உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அவனிற்கு பிடித்தமான ஒன்றாக எப்போதும் இருப்பதில்லை. சிறையிலிருந்து தப்பிச் செல்லும் மனிதர்களின் பயணத்தின் வழியில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும் இரினா எனும் இளம்பெண், இம்மனிதர்களின் அகச்சிறையின் பூட்டிய கதவுகளை மெல்ல மெல்ல திறக்க ஆரம்பிக்கிறாள். பரந்த பசும் வெளிகளின் சிரிப்பாய் மலரும் வெள்ளைப் பூக்கள்போல் அவர்கள் முகத்தில் புன்னகைகளை பூக்க செய்கிறாள். பாலைவனத்தில் அரிதாகக் காணக்கிடைக்கும் ஒரு நீருற்றுபோல் மனிதர்களின் இறுகிய மனங்களில் அவள் நீரைச் சொரிகிறாள். அவள் திறந்த கதவுகள் வழி கைதிகள் ஒருவர் குறித்து ஒருவர் அறிந்து கொள்கிறார்கள். இவ்வகையில் அம்மனிதர்களை அவர்களின் அகச்சிறையிலிருந்து விடுவிப்பவளாகவே இரினா தென்படுகிறாள். கொடும்பயணத்தின் ஓவியத்தில் ஒரு வசந்தக் கோடாக அவள் வந்து மறைகிறாள். இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகையான Saorise Ronan மென்மையான நடிப்பில் கவர்கிறார்.

வழமையாக இவ்வகையான படங்களில் இருக்ககூடிய சாகசத்தன்மையை இயக்குனர் பீட்டர் வெய்ர் முற்றிலும் தவிர்த்திருக்கிறார். மனிதர்களையும், இயற்கையும் அவர் இயல்பாக எதிர்கொள்ள விட்டிருக்கிறார். ஒநாய்களை விரட்டி விட்டு அவற்றின் வேட்டையை ரத்தம் வழிய உண்ணும் மனிதர்களையே படத்தில் நாம் காண்கிறோம். இரக்கம் என்பதும், மனிதம் என்பதும் இல்லாது இருந்த சில மனிதர்களில் இப்பயணம் அவற்றை அவர்கள் மனதில் சிறு ஊற்றாக கசிய வைக்கிறது. இதுதான் அனைத்துவகையான இன்னல்களையும் தாண்டி அவர்களை ஒன்றிணைத்து, உறுதிபெறும் மனவுறுதியுடன் அவர்கள் இலக்கை நோக்கி அவர்களைப் பயணிக்க வைக்கிறது. கதையில் வரும் வேறுபட்ட மனிதர்களின் உணர்வுகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் மனதை நெகிழும் வகையில் நீண்ட பயணத்தினூடு இயக்குனர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எட் ஹாரிஸ் ஒரு பண்பட்ட நடிகர், முகத்தில் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத அவர்கூட படத்தின் நெகிழ வைக்கும் காட்சிகளில் அமைதியாக சிறப்பித்திருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் அவருடையது அல்ல.

les-chemins-de-la-liberte-2011-18387-500223674 காலின் ஃபாரல் என்றுமே எனக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்ததில்லை. இந்தப் படத்தில் மட்டும் அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொள்கிறேன். மேல் சட்டைக்காக கொலை செய்ய தயங்காத ஒரு குற்றவாளியாக வரும் வால்கா பாத்திரம் நடிகர் காலின் ஃபாராலிற்கு மிகவும் பொருந்திப் போகிறது. பயணத்தில் அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் நாகரீக சமூகத்தால் தயக்கத்துடன் நோக்கப்பட்டாலும் அவற்றில் பொதிந்திருக்கும் எதார்த்தம் அபாரமானது. மிகச்சிறிய ஒரு பாத்திரமானாலும் மனதில் நின்றுவிட்ட பாத்திரம் வால்காவுடையது. ஜனுஸ் எனும் பிரதானமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் Jim Sturgess ன் நடிப்பில் அதிக திறமைகள் வெளிப்படவில்லை என்பது மெலிதான ஏமாற்றத்தையே தருகிறது.

பசியால் வாடும்போது கிடைக்கக்கூடிய உணவும், கடும் தாகத்தால் வாடி வதங்கி விழும் நிலையில் பருகக்கிடைக்ககூடிய நீரும், தரையில் துவண்டு விழும் கணத்தில் ஆதரவுடன் தூக்கி செல்லக்கூடிய கரங்களுமே இவ்கையான பயணத்தின் திருப்பங்களும், ஆச்சர்யங்களுமாக இருக்கின்றன. திரைப்படத்திலும் அவையே ரசிகர்களிற்கு அந்த உணர்வுகளை வழங்குகின்றன. இந்தப் பயணத்தின் தூரத்தையும், அதன் சலிப்பையும், ஏமாற்றத்தையும், வெற்றிகளையும் உணர்த்துவதைப் போலவே படமும் நகர்கிறது. ஆனால் பொறுமையுடன் பார்த்து ரசித்தால் சாகச நாடகத்தன்மையற்ற நல்ல ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம் கிடைக்கும். திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் சிறிதளவு ஏமாற்றத்தை வழங்கிவிடுகின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டிய ஒன்றே.

அடக்குமுறையை பிரயோகிப்பவர்களும் மனிதர்களே, விடுதலைக்காக போராடுபவர்களும் அவர்களே. இயற்கையுடன் போராடி, பெரும் தூரங்களை கடந்து, சுதந்திர மனிதனாக ஒரு மனிதன் தன் சொந்த வீடு வந்து சேரும் அந்த தருணத்தில் கூட அவன் தன் கால்களிற்கு நன்றி கூறுவதில்லை. [**]

ட்ரெயிலர்