Sunday, June 9, 2013

ஜாஸ் மெய்னார்

எந்த அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அரிதாக நிகழும் ஒன்று. Jazz Maynard கதை அவ்வகையானது.

பத்து வருடங்களிற்கு மேலாக பார்சலோனாவிலிருக்கும் தன் பிறந்த இடமான எல் ராவலை விட்டு நீயூயார்க் சென்று இசைக் கலைஞனாக ஜீவிதம் நடாத்தி வரும் ஜாஸ் மெய்னார், மீண்டும் தன் நகரிற்கு திரும்பி வருகிறான். அதுவும் தன் தங்கையுடன் !!

தங்கை ஏன் நியூயார்க் சென்றாள், எவ்வாறு ஜாஸ் மெய்னாரை அங்கு கண்டுபிடித்தாள் என்பதை ஜாஸ் தன் நண்பனான தியோவிற்கு சொல்கிறான். ஒரு ப்ளாஷ்பேக்காக, இரு நண்பர்களும் கதிரைகளில் முதுகைக் காட்டிய நிலையில் அமர்ந்திருக்க விலங்கிட்ட நிலையில், அவர்களை சூழ கோட் சூட் அணிந்த முரடர்கள் துப்பாக்கியும், நரகத்தின் சாயல் கலந்த பாவனையும் கொண்டு காவல் நிற்க.

ஏன் ஜாஸும், அவன் நண்பன் தியோவும் கதிரைகளுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கிறார்கள்? அதற்கான காரணத்தை அட்டகாசமானதொரு கதை சொல்லலால் மிக வேகமாக ப்ளாஷ்பேக், ஃபாஸ்ட் கட் உத்திகளால் சொல்கிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கதாசிரியரான Raule.

எல் ராவல் ஒரு குற்ற நகரம், அடக்குமுறையும் அராஜகமும் கொண்ட காவல்துறை, தெய்வீக நிஞ்சா ரவுடிகள், இனிதாகப் பேசி இளம் பெண்களை மாஃபியாவிற்கு விற்கும் ஆசாமிகள், Snuff திரைப்படங்களை நெறியாளும் பெண், காவல்துறை அதிகாரிகளையே மரண அடி அடிக்கும் மாஃபியா கும்பல், அதன் தலைவனான யூதாஸ், முதலாளித்துவத்திற்கும், பூர்ஜுவாஸிகளிற்கும் எதிராக முளைவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு புரட்சி என கதையின் பக்கங்களில் ஆச்சரயங்கள் மேல் ஆச்சர்யம் உண்டு. கதை சொல்லலும் அலட்டல் இல்லாதது. தேர்ந்த ஒரு சமையற்காரன் தன் கத்தியால் காய்கறிகளை வேகமாக நறுக்கி துண்டாக்குவது போல் கச்சிதமான கதை சொல்லல் என்பேன்.

நியூயார்க்கில் தன் தங்கை அனுப்பிய கடிதம் மனதில் ஒலிக்கும் குரலாய் தொடர Hells Kitchen எனுமிடத்தில் இருக்கும் உயர்மட்ட விபச்சார விடுதி ஒன்றில் ஜாஸ் நிகழ்த்தும் அதிரடிகளை பார்க்கும்போது அட்டைப்படத்தில் இருக்கும் ஜாஸ்தானா இவன் என விரியும் ஆச்சர்யம், பக்கங்களை புரட்ட புரட்ட அதிகமாகும். ட்ரம்பெட் கலையிலும் சரி துப்பாக்கியை கையாளுவதிலும் சரி, வேறு எவராலும் ஆற்ற முடியாத குற்றங்களை ஆற்றுவதிலும் சரி ஜாஸ் ஒரு கலைஞன். என்ன அவன் இசையில் காட்டாத வன்முறை அவன் அதிரடிகளில் இறங்கும்போது சங்கீதமாகும்.

த்ரில்லர் நுவார் அதுவும் Neo Noire வகை கதைகளின் ரசிகர்களிற்கு இக்கதை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும். கதைக்கு சித்திரங்களை வழங்கியிருக்கும் ஸ்பெயின் நாட்டு சித்திரக் கலைஞரான Roger தன் அசாத்தியமான திறமையை பக்கங்களில் நிரூபித்து இருக்கிறார். அற்புதமான நவபாணியும், கம்பீரமும் கொண்ட சித்திரங்கள் கதையின் வேகத்தின் உந்துவிசையாக இருந்து கொண்டே இருக்கும்.

ஜாஸ் மெய்னார் கதையின் முதல் மூன்று ஆல்பங்களும் பார்சலோனா ட்ரையாலஜி என அழைக்கப்படுகிறது. கதை, சித்திரங்கள், இவற்றில் கலந்திருக்கும் வேகம், வன்முறை என  இதன் முதன் ஆல்பம் ஏமாற்றாத ஒன்று. இதுவே இதன் அடுத்த இரு ஆல்பங்களையும் உடனடியாக படிக்க வேண்டும் எனும் ஆவலையும் பற்ற வைத்து விடுகிறது. அவையும் இதனைப் போல ஏமாற்றாது வாசிப்பின்பத்தை நல்கும் என நம்புகிறேன் !

Saturday, June 8, 2013

துணையான ஒரு சொல்

நாசிக்கள் அதிகாரத்தில் இருந்தபோது நடந்த இனவழிப்புக்களில் பெரிதாக அறியப்பட்டது யூத இனத்தினதாகவே இருந்து வருகிறது. பொதுப்பார்வையில் அதிகம் படாத இனவழிப்புக்களில் ஒன்றாக, நாடோடிக் கூட்டம் என அழைக்கப்படும் ஜிப்சிக்களின் இனவழிப்பை சொல்லலாம். யூத இனவழிப்பானது தொடர்ச்சியான நினைவுகூறலிற்கு உட்படுத்தப்படும் அளவில் பொதுவெளியில் ஜிப்சி இனத்தின் அழிவு நினைவுகூறப்படவில்லை எனலாம். தம் வரலாற்றை ஆவணப்படுத்தாத மக்கள் எனும் வகையிலும் ஜிப்சிக்களை அடக்கலாம். இருப்பினும் அவர்கள் பேசும் மொழி ஒன்றே. அது ரொமானி என அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்து இப்பேச்சு மொழி உருவாகியிருக்கலாம் எனக் கூறுகிறார்கள்.

இந்தியாவின் மேற்கிலிருக்கும் பஞ்சாபிலிருந்து நான்காம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஜிப்சிகள்  புலம்பெயர்தலில் ஈடுபட்டார்கள். இந்த புலம் பெயர்தலிற்கான சரியான காரணம் என்ன என்பது அறியப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டளவில் ஜிப்சி இன மக்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் தம் நாடோடி வாழ்க்கையில் வியாபித்திருந்தார்கள்.

ஜிப்சி இன மக்களை இரு கரம் நீட்டி வரவேற்கும் நாகரீக சமூகங்கள் இல்லை எனலாம். இது அன்றும் இன்றும் பொருந்திடும் வரி.  அவர்கள் மீது சமூகங்கள் கொண்டிருந்த புரிந்து கொள்ளவியலா அச்சமும், வெறுப்பும்,  ஊர் அல்லது நகரின் எல்லைகள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களிலேயே அவர்களிற்கான தங்குமிடங்களை வழங்கின. ஜிப்சிகள் என்றால் திருடர்கள் எனும் பார்வை சமூகத்தின் ஆழத்தில் ஆழமாக வேர் பிடித்திருக்கிறது. இதற்கு ஜிப்சிகளின் செயல்களும் துணை போகவே செய்கின்றன. அன்றைய கோழித்திருடர்கள் முதல் இன்று ஐரோப்பாவின் பெருநகர்களின் பிக்பாக்கெட்டுக்கள் வரை ஜிப்சிகள் தம் திறமையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இது அந்த இன மக்களின் ஒரு சிறு பகுதி, ஒரு சிறு கூறு, ஒரு சித்திரத்தின் சின்னஞ்சிறு சதுரம்.

தமக்கென ஒரு வரலாற்றை கொண்டிராத மக்கள் இல்லை. இருந்தால் அவர்கள் வரலாறு காலத்தில் நிலைத்திருக்கும் மொழிகளில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக ஜிப்சிகளின் வரலாறும் ஆவணப்படுத்தல் எனும் அதிர்ஷ்டத்தை இழந்த ஒரு வரலாறாகவே இருக்கிறது. அவ்வகையான பாரம்பரியத்தை கொண்ட ஜிப்சி கூட்டம் ஒன்றின் பயணம் குறித்தே Batchalo கதை பேசுகிறது.

செக்ஹோஸ்லாவாக்கியாவில் அமைந்திருக்கும் பொஹெமியா எனும் பிரதேசத்தில் 1939ல் கதை ஆரம்பிக்கிறது. கதை நடக்கும் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் காணாமல் போகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பாக அக்கிராமத்தில் வந்து முகாமிட்டிருக்கும் ஜிப்சிகள் மீது கிராமத்தவர்களிற்கு சந்தேகம் உருவாகிறது. சந்தேகத்தை உறுதிப்படுத்த ஜிப்சிகள் தங்குமிடத்தை நோக்கி செல்லும் கிராம மக்கள் அங்கு ஜிப்சி இன சிறுவர்களும் காணாமல் போயிருப்பதை அறிந்து கொள்கிறார்கள்.

கிராமத்தின் காவல்துறையை சேர்ந்த ஜோசப்பின் மகன் ரோமனும் காணாமல் போன சிறுவர்களில் ஒருவன். ஜிப்சிகள்,காணாமல்போன தம்மின சிறுவர்களை சில தடங்களை தொடர்வதன் வழி தேடிச் செல்லலாம் எனும் முடிவிற்கு வருகிறார்கள். ஜிப்சிகளுடன் இணைந்து கொள்கிறான் ஜோசப். அவர்கள் ஆரம்பிக்கும் அந்த தேடல் வழியாக ஜிப்சி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும், காலகாலமாக அம்மக்கள் மீது காட்டப்படும் வெறுப்பையும் பாட்சலோ கதை அதிக ஆழமற்ற விதமாக சொல்கிறது.

ஜெர்மனிய சமூகத்தில் ஜிப்சி பிளேக் எனும் சொல் இருந்து வந்தது. அந்த சொல்லின் அர்த்தம் அந்த இனத்தின் மீதான அக்கால ஜெர்மனிய சமூகத்தின் பார்வையை தெளிவாக விளக்கும். தூய ஜெர்மானிய சமூகத்தை உருவாக்கும் கனவில் இல்லாது ஆக்கப்படும் இனங்களின் பட்டியலில் ஜிப்சிகளும் இருந்தார்கள். திருத்த முடியாத குற்றவாளிகள் கூட்டம் எனவும் அவர்கள் நாஸிக்களால் வகைப்படுத்தப்பட்டார்கள். 1939ல் ஜெர்மனியில் ஜிப்சி அபாயம் என்பதற்கு எதிரான ஒரு சட்டமும் அமுலிற்கு வந்தது. இவ்வகையான மனநிலை கொண்ட ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் 1939 ல் செக்கோஸ்லோவாக்கியாவும் தன்னை இணைத்துக் கொண்டது.

பொஹெமியாவில் ஆரம்பித்த ஜிப்சிகளின் தேடல் பயணம் ஒரு பாதையிலும், ஜெர்மனிய ராணுவ வீரர்களால் கடத்தி செல்லப்படும் சிறுவர்கள் செல்லும் ஒரு பாதையிலுமாக பாட்சலோ கதை பயணிக்கிறது. இந்த இரு பாதைகளும் இணைவது ஒஷ்விட்ஸ் மரண முகாமில்.  இந்த மரண முகாமிற்கு வருவதற்கு முன்பாக, ஜிப்சிகள் மீது சமூகம் கொண்டிருக்கும் வெறுப்பு, ஜிப்சி இரட்டையர்கள் மீது டாக்டர் ராபர்ட் ரிட்டர் நிகழ்த்திய ஆய்வுகள், ஜிப்சிகளிற்கான லெட்டி கடூழிய முகாம், ஜிப்சிகளின்  வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள், பண்பாடுகள் மீதான நகர்வாக கதை பயணிக்கிறது.

யூத இன மக்களை விட குறைவாகவே ஜிப்சி இனம் மரண முகாமில் வேதனைகளை அனுபவித்ததாக கதை சொல்கிறது. ஆனால் முடிவு என்ன என்பதை வரலாறு சொல்லும். ஓஷ்விட்ஸ் மரண முகாமில் மரண தேவன் என அழைக்கப்பட்ட டாக்டர் மெங்கலெ, ஜிப்சிகள் மீதும் தன் மனித தன்மையற்ற ஆய்வுகளை நிகழ்த்த தவறினாரில்லை. ஜிப்சி இனவழிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 500 000  என்கிறது ஐரோப்பா.  1948ல் ராபார்ட் ரிட்டர் மீது  உயிர் தப்பிய ஜிப்சிகள் தொடுத்த வழக்கானது தகுந்த ஆதாரங்களின்மையால் அவரை நிரபராதியாக்கி விடுவித்தது. டாக்டர் மெங்கலெ தென் அமெரிக்காவில் மறைந்து வாழ்ந்தார். 1979ல் வால்ஃப்ஹாங் ஜெர்ஹார்ட் எனும் பெயருடன் அவருடல் பிரேசிலில் அடக்கம் செய்யப்பட்டது. ஜிப்சிகளிற்கான கடூழிய முகாம் இருந்த இடத்தில் இன்று ஒரு பெரும் பன்றி தொழுவம் இருக்கிறது. அருகிலேயே ஜிப்சிகள் நினைவகம். அப்பன்றி தொழுவத்தை அவ்விடத்திலிருந்து நீக்க சொல்லி ஐரோப்பிய பாராளுமன்றம் செக் அதிகாரத்திடம் கேட்டுக் கொண்டும் அதற்கான பலன் ஏதும் இல்லை.

ஜிப்சிகளின் இனவழிப்பை ஆவணப்படுத்தும் இக்கதையின் சித்திரங்கள் பழுப்பு வண்ணத்தின் ஆக்கிரமிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வண்ணத் தெரிவு கதையை கடந்த காலத்திற்கு இலகுவாக கடத்தி செல்ல உதவுவதுடன் மட்டுமல்லாது அதற்கு மென்சோகம் ஒன்றையும் உபரியாக வழங்குவதில் சிறப்பாக செயல்படுகின்றன. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Arnaud Bétend. தெளிவான கோடுகளில் சிறப்பாக சித்திரங்களை உருவாக்கி இருக்கிறார். அட்டைப்படம் மிக அருமையான ஒன்று இருப்பினும் இதைவிட சிறப்பாக சித்திரங்கள் அமைந்திருக்கலாம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சக்தி வாய்ந்த ஒரு கதையை சொல்ல வேண்டிய பணி, வரலாற்று உண்மையை சித்திரக் கதையாக சொல்ல வேண்டிய பொறுப்பு இவை இரண்டும் Le galli Michael கைகளில். ஜிப்சிகள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகள், வன்முறைகளை வரிகளாக மட்டும் உள்ளெடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அவர் கதை சொல்லல். கதையில் இருக்க வேண்டிய உணர்வுகள் குறைவாகவும், வாசகனை நெருங்கி வரும் தன்மை இல்லாததாகவும் அவர் கதையை கூறியிருப்பதாக நான் உணர்கிறேன். ஏறக்குறைய ஒரு ஆவணப்படம், அதுவும் அதிக சலனங்களை ஏற்படுத்திடாத ஒரு படைப்பை அனுபவித்திடும் உணர்வே எனக்கு கிட்டியது. வாசிப்பின் முடிவில் பெரும் வேதனை எதையும் என் மனம் உணரவில்லை, அம்மக்களின் துன்பங்களிற்காக என்னிடம் பரிதாபமும் உருவாகவில்லை, அதை என்னில் செயற்கையாக உருவாக்கவும் அதை இங்கு எழுதவும் நான் இன்னம் தகுதி பெறவில்லை. இவ்வகையான ஒரு இனவழிப்பு குறித்த படைப்பில் அது தோல்வியாகவே இருக்கும் என நான் கருதுகிறேன். இருப்பினும் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத ஜிப்சி மக்களின் இனவழிப்பு, அவர்கள் வாழ்முறை போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதால் இது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படைப்பாகவே இருக்கிறது.

இன்றைய நாட்களில் இந்த நாடோடி மக்கள் குறித்து மக்கள் மனநிலையில் என்ன மாற்றம் எனும் கேள்வியை என்னிடம் கேட்டால் அதற்கு பதிலாக பெரிதாக ஏதுமில்லை என்பதையே நான் தர முடியும். நான் தினந்தோறும் காணும் ஜிப்சிகள் தெருக் கலைஞர்களாக, பாதாள ரயில்களில் இசைக் கலைஞர்களாக பரிமளிக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் எழுதிச் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையும், பண்பாடும் , பராம்பரியமும், வரலாறும், அவர்களும் என்னால் அறியப்படாததை போன்ற அறியாமையின் கீழேதான் பெரும்பான்மையான நாகரீக சமூகம் இருக்கிறது. இன்றும் அவர்கள் தங்குமிடங்கள் கலைக்கப்படுகின்றன. அவர்கள் நடுத்தெருவில் விடப்படுகிறார்கள். அவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Batchalo எனும் ரொமானிய சொல்லிற்கு நல்லதிர்ஷ்டம் என்பது அர்த்தமாம், அவர்களிற்கு அது மிகவும் தேவையான, துணையான ஒரு சொல்தான், சந்தேகமேயில்லை