Sunday, November 6, 2011

காற்றின் பெயர்


மாயபுனைவுகள் எவ்வளவு விரைவில் வாசகனை தங்கள் உலகிற்குள் எடுத்து செல்கின்றனவோ அவ்வளவிற்கு வாசகனிற்கு அவ்வுலகில் வாழ்தல் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களாலேயே வாசகர்கள் மனதில் மாயபுனைவுகளின் உலகுகளும் பாத்திரங்களும் மறக்க முடியாதவைகளாக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கு காலம் மாயபுனைவுகள் தம்மை மாற்றத்திற்குள்ளாக்கி கொண்டே இருக்கின்றன.

பக்கத்திற்கு பக்கம் மந்திரங்களும், மாயஜாலங்களும், வினோத ஜந்துக்களும் நிறைந்த மாயபுனைவுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு எதார்த்தத்துடன் தம்மை இயலுமானவரை பிணைத்துக் கொள்ளும் மாயபுனைவுகள் இன்று மாயபுனைவுகளின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இவ்வகையான புனைவுகளின் மிகப்பிரபலமான உதாரணமாக George R.R. Martin ன் கணிக்கமுடியாத படைப்பான A Song of Ice and Fire ஐ கூறலாம். Patrick Rothfuss படைத்திருக்கும் அவரின் முதல் நாவலான The Name of The Wind ஐயும் நான் எதார்த்த மாயபுனைவு எனும் பிரிவிற்குள் இட்டு வரமுடியும்.

ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை வாசகனை Kvothe எனும் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விபரித்தவாறே அதே மதுவிடுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் அவனை நிற்கவைத்துவிட்டு பக்கங்களை முடித்துக் கொள்கிறது. கிராம மதுவிடுதி அறிமுகமாகும் ஆரம்ப பக்கங்களிலேயே வாசகனை தன் தேர்ந்த மொழிநடை வழியாக அவர் படைத்திருக்கும் உலகில் இழுத்துக் கொண்டு விடுகிறார் பற்ரிக் ராத்ஃபஸ். மூன்று நாட்களில் கூறப்படப்போகும் கதையின் முதல் நாளிற்குரிய பகுதிதான் காற்றின் பெயர் எனப்படும் இந்நாவல்.

கிராம மதுவிடுதி உரிமையாளனை சூழ்ந்திருக்கும் மர்மங்களை அவனைக் கொண்டே விடுவிக்கும் வகையில் ருத்ஃபஸ் அப்பாத்திரத்தின் வழியாகவே கதையை கூறிச்செல்கிறார். கதையுடனும், அப்பாத்திரத்துடனும் வாசகனை நெருக்கமாக வைக்கும் இந்த உத்தி மிகசிறப்பான பலனை ராத்ஃபஸ்ஸின் படைப்பிற்கு அளித்திருக்கிறது. பக்கங்கள் நகர நகர வோத் பாத்திரத்துடனும் அவன் வாழ்க்கையின் பக்கங்களுடனும் வாசகன் ஒன்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.

the_name_of_the_wind_by_marcsimonettiமாயபுனைவுகளின் வழக்கம் போலவே ஒரு தனி உலகம்--- மனித நாகரீகத்தின் நான்கு மூலைகள் என இக்கதையில் அழைக்கப்படுகிறது, சிறப்பான ஒரு மந்திர சக்தி----- Sympathy என அழைக்கப்படும் மந்திரசக்தி கதையில் அறிமுகமாகிறது, தொன்மங்கள்---- Chandrian என அழைக்கப்படும் இருள் தேவர்கள் கதைக்கு திகிலை ஏற்றுகிறார்கள். இவை அனைத்தை தாண்டியும் சில ஆச்சர்யங்களை ராத்ஃபஸ் தன் நாவலில் வைத்திருக்கிறார். காற்றின் பெயர் என்ன எனும் கேள்விக்கு விடையை நாவலில் வோத் போலவே நாமும் தேடிக் கொண்டிருப்போம், அதை வோத் அறியும் தருணம் உண்மையிலேயே எதிர்பாரா ஒரு தருணமாகும். இவ்வகையான ஆச்சர்யங்கள் இந்நாவலின் இன்னொரு பலமாகும்.

வோத்தின் சிறுவயதை விபரித்து ஆரம்பமாகும் கதை, அவன் பெற்றோர்கள், அவர்கள் நடாத்தும் நாடோடி நாடகக்கூழு, கிராமம் கிராமமாக அவர்கள் செய்யும் பயணங்கள், மந்திர சக்தியுடனான வோத்தின் அறிமுகம், வோத்தின் பெற்றோர்களினதும் நாடோடி நாடகக்குழுவினதும் படுகொலை, அதன் பின்னான வோத்தின் அனாதை வாழ்க்கை, Arcanum எனவழைக்கப்படும் பல்கலைகழகத்தில் அவன் அனுமதி பெறல், பல்கலைக்கழக மாணவனாக வோத்தின் வாழ்க்கை என நகர்கிறது. வழமையான அனாதை பாத்திரங்களிற்கு வழங்கப்படும் கருணை ஏதுமற்ற நிலையில் வோத் படும் அல்லல்கள் கதையில் எதார்த்தமாக விபரிக்கப்படுகின்றன.

தன் பெற்றோர்களின் படு கொலைகளிற்கு காரணமானவர்களை பற்றி அறிந்து கொள்ளும் தீரா வேட்கையும், Denna எனும் இளம் பெண்ணின் மேல் வோத் கொள்ளும் சொல்ல முடியாக் காதலும் சிறப்பாக ருத்ஃபஸ்ஸால் எழுதப்பட்டிருந்தாலும், தொன்மங்களை எழுதுவதில் சறுக்கியிருக்கிறார் அவர். மேலும் வோத்தின் பல்கலைக்கழக வாழ்க்கை நீண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே செல்கிறது. ஆரம்ப பக்கங்களில் அட போட வைத்த எழுத்துக்கள் சலிப்பின் எல்லையை தொட்டு விடுமளவு சுவாரஸ்யமற்ற வகையில் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு பக்கங்களை அர்பணித்திருக்கிறார் ராத்ஃபஸ். ஆனால் நாவலை அதன் இறுதிப்பகுதி காப்பாற்றி விடுகிறது. பல்கலைக்கழகத்தை விட்டு வோத் ஒரு தகவலை அறிவதற்காக வெளியே செல்லும் பயணத்திலிருந்து நாவலின் முடிவுவரை பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர். காதல், சாகசம், எதார்த்தத்துடன் கூடிய நாயகத்தனம் என பக்கங்கள் பரபரவென நகர்கின்றன. குறிப்பாக டெனா மீது வோத்தின் காதல் வெளிப்படும் வரிகள் கொரிய திரைப்படங்களை விட அதிகமாகவே வாலிப மனதை இளகவைக்கின்றன Sourire. கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. சமீப காலத்தில் இவ்வளவு கவித்துவமான எழுத்துக்களை மாயபுனைவில் நான் படித்ததில்லை.

மதுவிடுதிக்கும், கடந்தகாலத்திற்குமாக பயணிக்கும் கதையின் இரு காலங்களிலும் மர்மமும் திகிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் கதையை திட்டமிட்டிருக்கிறார் பற்ரிக் ராத்ஃபஸ். கதையின் முதல் பாகம் முடிவடையும்போது அடுத்த பாகத்தை உடனடியாக படித்திட வேண்டும் என எழும் ஆர்வம் அவரின் திறமைக்கு சான்று. சலிக்க வைக்க்கும் நடுப்பகுதியை பொறுமையுடன் கடந்து வந்தால் உங்களிற்கு கிடைக்கப்போவது நல்ல ஒரு மாயபுனைவு வாசிப்பனுபவம். [**]

10 comments:

 1. //கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு// இதற்காவே படிக்கவேண்டும் நண்பா (நலமா ?) . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. பல ஆண்டு காலங்கள் கழிந்தபின்னர் மறுபடி வந்திருக்கும் உங்களுக்கு வாள்த்துகள் :-) . . இருங்க படிச்சிட்டு வாரேன்

  ReplyDelete
 3. படிச்சிட்டேன். Song of Ice and fire - Game of thrones என்ற பெயரில், தொலைக்காட்சி சீரீஸாகப் பார்த்துவிட்டேன். எனக்கு மிகப் பிடித்தது. அதன் இரண்டாவது ஸீஸனுக்காக வெயிட்டிங். அதுபோல் இது எதுனா படமாவோ இல்ல ஸீரிஸாவோ வருதா? அதைப் பார்ப்பது, படிப்பதை விட சுலபமல்லவா? ஹீ ஹீ

  ReplyDelete
 4. அன்பு நண்பரே,

  எத்தனை உலகங்களில் மாட்டிக் கொண்டு அல்லல் படுவது? பாதி உலகங்கள் முடிவுறாமல் இருக்கின்றன. சில முடிவுறுமா என்ற சந்தேகத்துடன் இருக்கின்றன.

  அமேசானிலும் ஐந்து நட்சத்திரங்கள் நிறைய வாங்கியிருக்கிறது இந்த நாவல். படிப்பேன்.

  தமிழில் ஏன் மாயப் புனைவுகள் வருவதில்லை அணில் மாமாவிற்கு பிறகு என்ற வினாவிற்கு என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்?

  ReplyDelete
 5. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நண்பர் வேல்கண்ணன், நலமே, அன்பான நன்றிகள்.

  நண்பர் கருந்தேள், இது தொலைக்காட்சி தொடராக வரும்போது பார்த்து மகிழுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.

  டியர் ஜோஸ், என் பாட்டிற்கு சிட்டுக்களை பார்த்துக் கொண்டிருந்தேன்!! ஆனால் என்னை ஒரு நபர் இந்த மாய உலகிற்குள் மாட்டி வைத்து விட்டார் :) முந்தாநாள் ஸ்டீவன் எரிக்சனின் நிலவின் நந்தவனத்தை வாங்கி விட மனது சதிலீலை செய்தது. நல்லவேளையாக ராஜேந்தர் சாமி மீது நான் செய்திருந்த ரத்த சபதத்தின் பவர் அந்த சதிலீலையிலிருந்து என்னைக் காப்பாற்றியது. அமோசனின் 5 நட்சத்திரங்கள் மீது எனக்கு சிறிது சந்தேகம் உண்டு, அந்திவெளிச்சம், நடுநிசியின் கோபுரங்கள், ஏராகன் போன்ற நாவல்களிற்கும் அங்கு 5 நட்சத்திரங்கள் வழங்கியிருக்கிறார்கள் :)) அணில்மாமாவைக் கண்டு உங்கள் கேள்வியை நான் கேட்டேன் அவர் கமுக்கமாக சிரித்துக் கொண்டே ஜார்ஜ் மார்ட்டினிற்கு கதையை எழுதி தராமல் இழுத்தடித்து இம்சை தருவது யார் எனும் கேள்வியை உங்கள் மனதில் கேட்டுப் பாருங்கள் எனக்கூறிவிட்டு பறந்து சென்றார். அட ரஃபிக்கை நாயகனாக வைத்து நாமே ஏன் ஒரு மாயப்புனைவை எழுதக் கூடாது..:)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  மாய உலகம் அன்பரே, தங்களிற்கும் இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,நன்றி.

  ReplyDelete
 7. நண்பரே, உங்கள் பதிவிற்காக நீண்டநாட்கள் காத்திருந்தேன்! அருமையான பதிவு. டின் டின் படம் பற்றிய உங்கள் விமர்சனத்தை விரைவில் வெளியிடவும்! :)

  ReplyDelete
 8. //ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை//
  பல கதைகள் இங்கேதான் ஆரம்பம். நீங்கள் சொன்னது போன்று பல கதைகள் வரலாம் போகலாம் மிகச் சிலவே எமது மனதில் நிலைத்து நின்றுவிடுகின்றன.

  ReplyDelete
 9. நண்பர் காப்டன் டைகர், டிண்டின் திரைப்படத்தை தவறாது பாருங்கள். சிறப்பான சாகச பொழுது போக்கு அது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் மயூ, நான் படித்த மாயப்புனைவுகளில் இக்கதை மட்டுமே மதுவிடுதியில் ஆரம்பமாகிறது. ஆனால் மாயப்புனைவுகளில் மதுவிடுதிகள் வகிக்கும் இடம் மிக முக்கியமானது. கதைக்கு அவை வழங்கும் சுவை என்னால் மிகவும் ரசிக்கப்படும் ஒன்று. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 10. торговая площадка древесного угля http://charcoal.mybb.ru
  На данной торговой площадке можно найти объявления купи продай древесный уголь, можно познакомится с передовыми разработками отечественных и иностранных производителей углевыжигательных установок типа ЭКОЛОН, МПРУ (Мобильные пиролизные ретортные установки), УВП и другие. Древесный уголь можно найти по городам, например Древесный уголь в г. Ижевске. компания ТМ-Групп izh.wood.ru и udm.wood.ru. Древесный уголь в крафт мешках и п/п оптом и в розницу.
  [color=white]продам древесный уголь оптом, закупаем древесный уголь, древесный уголь купить украина, спрос на древесный уголь, куплю древесный уголь в украине, потребители древесного угля, сколько стоит древесный уголь, древесный уголь цена купить , куплю древесный уголь цена
  Купим уголь древесный оптом. Закупаем 300 тн. древесного угля в месяц. Фасовка в крафт-мешки (2, 3, 5, 10 кг.) или полипропилен. Работаем только с производителями древесного угля. Заинтересованы в сотрудничестве на постоянной основе[/color]

  ReplyDelete