
மாயபுனைவுகள் எவ்வளவு விரைவில் வாசகனை தங்கள் உலகிற்குள் எடுத்து செல்கின்றனவோ அவ்வளவிற்கு வாசகனிற்கு அவ்வுலகில் வாழ்தல் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களாலேயே வாசகர்கள் மனதில் மாயபுனைவுகளின் உலகுகளும் பாத்திரங்களும் மறக்க முடியாதவைகளாக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கு காலம் மாயபுனைவுகள் தம்மை மாற்றத்திற்குள்ளாக்கி கொண்டே இருக்கின்றன.
பக்கத்திற்கு பக்கம் மந்திரங்களும், மாயஜாலங்களும், வினோத ஜந்துக்களும் நிறைந்த மாயபுனைவுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு எதார்த்தத்துடன் தம்மை இயலுமானவரை பிணைத்துக் கொள்ளும் மாயபுனைவுகள் இன்று மாயபுனைவுகளின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. இவ்வகையான புனைவுகளின் மிகப்பிரபலமான உதாரணமாக George R.R. Martin ன் கணிக்கமுடியாத படைப்பான A Song of Ice and Fire ஐ கூறலாம். Patrick Rothfuss படைத்திருக்கும் அவரின் முதல் நாவலான The Name of The Wind ஐயும் நான் எதார்த்த மாயபுனைவு எனும் பிரிவிற்குள் இட்டு வரமுடியும்.
ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை வாசகனை Kvothe எனும் பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை விபரித்தவாறே அதே மதுவிடுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்புடன் அவனை நிற்கவைத்துவிட்டு பக்கங்களை முடித்துக் கொள்கிறது. கிராம மதுவிடுதி அறிமுகமாகும் ஆரம்ப பக்கங்களிலேயே வாசகனை தன் தேர்ந்த மொழிநடை வழியாக அவர் படைத்திருக்கும் உலகில் இழுத்துக் கொண்டு விடுகிறார் பற்ரிக் ராத்ஃபஸ். மூன்று நாட்களில் கூறப்படப்போகும் கதையின் முதல் நாளிற்குரிய பகுதிதான் காற்றின் பெயர் எனப்படும் இந்நாவல்.
கிராம மதுவிடுதி உரிமையாளனை சூழ்ந்திருக்கும் மர்மங்களை அவனைக் கொண்டே விடுவிக்கும் வகையில் ருத்ஃபஸ் அப்பாத்திரத்தின் வழியாகவே கதையை கூறிச்செல்கிறார். கதையுடனும், அப்பாத்திரத்துடனும் வாசகனை நெருக்கமாக வைக்கும் இந்த உத்தி மிகசிறப்பான பலனை ராத்ஃபஸ்ஸின் படைப்பிற்கு அளித்திருக்கிறது. பக்கங்கள் நகர நகர வோத் பாத்திரத்துடனும் அவன் வாழ்க்கையின் பக்கங்களுடனும் வாசகன் ஒன்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான்.
மாயபுனைவுகளின் வழக்கம் போலவே ஒரு தனி உலகம்--- மனித நாகரீகத்தின் நான்கு மூலைகள் என இக்கதையில் அழைக்கப்படுகிறது, சிறப்பான ஒரு மந்திர சக்தி----- Sympathy என அழைக்கப்படும் மந்திரசக்தி கதையில் அறிமுகமாகிறது, தொன்மங்கள்---- Chandrian என அழைக்கப்படும் இருள் தேவர்கள் கதைக்கு திகிலை ஏற்றுகிறார்கள். இவை அனைத்தை தாண்டியும் சில ஆச்சர்யங்களை ராத்ஃபஸ் தன் நாவலில் வைத்திருக்கிறார். காற்றின் பெயர் என்ன எனும் கேள்விக்கு விடையை நாவலில் வோத் போலவே நாமும் தேடிக் கொண்டிருப்போம், அதை வோத் அறியும் தருணம் உண்மையிலேயே எதிர்பாரா ஒரு தருணமாகும். இவ்வகையான ஆச்சர்யங்கள் இந்நாவலின் இன்னொரு பலமாகும்.
வோத்தின் சிறுவயதை விபரித்து ஆரம்பமாகும் கதை, அவன் பெற்றோர்கள், அவர்கள் நடாத்தும் நாடோடி நாடகக்கூழு, கிராமம் கிராமமாக அவர்கள் செய்யும் பயணங்கள், மந்திர சக்தியுடனான வோத்தின் அறிமுகம், வோத்தின் பெற்றோர்களினதும் நாடோடி நாடகக்குழுவினதும் படுகொலை, அதன் பின்னான வோத்தின் அனாதை வாழ்க்கை, Arcanum எனவழைக்கப்படும் பல்கலைகழகத்தில் அவன் அனுமதி பெறல், பல்கலைக்கழக மாணவனாக வோத்தின் வாழ்க்கை என நகர்கிறது. வழமையான அனாதை பாத்திரங்களிற்கு வழங்கப்படும் கருணை ஏதுமற்ற நிலையில் வோத் படும் அல்லல்கள் கதையில் எதார்த்தமாக விபரிக்கப்படுகின்றன.
தன் பெற்றோர்களின் படு கொலைகளிற்கு காரணமானவர்களை பற்றி அறிந்து கொள்ளும் தீரா வேட்கையும், Denna எனும் இளம் பெண்ணின் மேல் வோத் கொள்ளும் சொல்ல முடியாக் காதலும் சிறப்பாக ருத்ஃபஸ்ஸால் எழுதப்பட்டிருந்தாலும், தொன்மங்களை எழுதுவதில் சறுக்கியிருக்கிறார் அவர். மேலும் வோத்தின் பல்கலைக்கழக வாழ்க்கை நீண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே செல்கிறது. ஆரம்ப பக்கங்களில் அட போட வைத்த எழுத்துக்கள் சலிப்பின் எல்லையை தொட்டு விடுமளவு சுவாரஸ்யமற்ற வகையில் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு பக்கங்களை அர்பணித்திருக்கிறார் ராத்ஃபஸ். ஆனால் நாவலை அதன் இறுதிப்பகுதி காப்பாற்றி விடுகிறது. பல்கலைக்கழகத்தை விட்டு வோத் ஒரு தகவலை அறிவதற்காக வெளியே செல்லும் பயணத்திலிருந்து நாவலின் முடிவுவரை பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர். காதல், சாகசம், எதார்த்தத்துடன் கூடிய நாயகத்தனம் என பக்கங்கள் பரபரவென நகர்கின்றன. குறிப்பாக டெனா மீது வோத்தின் காதல் வெளிப்படும் வரிகள் கொரிய திரைப்படங்களை விட அதிகமாகவே வாலிப மனதை இளகவைக்கின்றன . கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. சமீப காலத்தில் இவ்வளவு கவித்துவமான எழுத்துக்களை மாயபுனைவில் நான் படித்ததில்லை.
மதுவிடுதிக்கும், கடந்தகாலத்திற்குமாக பயணிக்கும் கதையின் இரு காலங்களிலும் மர்மமும் திகிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் கதையை திட்டமிட்டிருக்கிறார் பற்ரிக் ராத்ஃபஸ். கதையின் முதல் பாகம் முடிவடையும்போது அடுத்த பாகத்தை உடனடியாக படித்திட வேண்டும் என எழும் ஆர்வம் அவரின் திறமைக்கு சான்று. சலிக்க வைக்க்கும் நடுப்பகுதியை பொறுமையுடன் கடந்து வந்தால் உங்களிற்கு கிடைக்கப்போவது நல்ல ஒரு மாயபுனைவு வாசிப்பனுபவம். [**]
