
பதினேழு வயதை எட்டிவிடும் இளைஞன் Andy, அவன் சிறுவயதில் வாஞ்சையுடன் அரவணைத்து விளையாடி மகிழ்ந்த பொம்மைகளை முகட்டறையில் போட்டுவிட்டு தன் கல்லூரி வாழ்வை ஆரம்பிப்பதற்கு தயாராகிறான்.
முகட்டறையில் பொம்மைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அவற்றை ஆன்டி ஒரு பையினுள் இட்டு வைக்கிறான். ஆனால் எதிர்பாராது குறுக்கிடும் சில திருப்பங்களால், பொம்மைகள் இருக்கும் அந்தப் பையை குப்பை எனக்கருதி அதனை தெருவில் வீசிவிடுகிறாள் ஆன்டியின் தாய்.
தாம் தெருவில் குப்பையாக வீசப்பட்டதை தாங்கிக் கொள்ளமுடியாத ஆன்டியின் பொம்மைகள், சிறுவர்கள் பராமரிப்பகம் ஒன்றில் தம் வாழ்வை தொடரலாம் என்ற தீர்மானத்திற்கு வருகின்றன….
சிறுவர்களின் கனவு மற்றும் கற்பனை உலகானது என்றும் புதிதானதும், வியப்பானதுமான கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறான ஒரு கற்பனைக் கதையுடனேயே Toy Story 3 திரைப்படம் ஆரம்பமாகிறது.
தன் பிரியத்திற்குரிய பொம்மைகளை நாயகர்களாகக் கொண்டு சிறுவன் ஆன்டி உருவாக்கி மகிழும் அந்தக் கதையே சிறுவர்களினது கற்பனை உலகில் பொம்மைகள் வகிக்கும் பங்கை அழகாக எடுத்துக் கூறுகிறது. அந்தக் கதையில் இருந்த கற்பனையின் வீச்சு, திருப்பம், நகைச்சுவை, விறுவிறுப்பு ஆகியவை சற்றும் குறைந்துவிடாது மனதை நெகிழ வைத்து நகர்கிறது இயக்குனர் Lee Unkrich இயக்கியிருக்கும் டாய் ஸ்டோரியின் மூன்றாம் பாகம்.
தம் நேசத்திற்குரிய ஆன்டியின் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டதாலும், தொடரும் சில நிகழ்வுகள் ஆன்டியின் பொம்மைகளிற்கு சாதகமாக அமையாததாலும், அப்பொம்மைகள் எடுக்கும் அவசரமான ஒரு முடிவு அவற்றை சிறுவர் பராமரிப்பகத்தில் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க வைக்கிறது. இந்நிலையில் மனிதர்களை மிகவும் நெருங்கிவிடுகின்றன இப்பொம்மைகள்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவசர முடிவெடுத்து மீளமுடியாத சுழலில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள் போலவே, தமது புதிய வாழ்வு ஒரு சித்திரவதை என்பதை பொம்மைகள் மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கின்றன. அந்த வாழ்விலிருந்து தம்மை திசைமாற்றிக் கொள்ள அவை விரும்பும்போது தாம் சூழ்நிலையின் கைதிகளாக மாற்றிவிடப்பட்டிருப்பது அப்பொம்மைகளிற்கு புரிய ஆரம்பிக்கிறது. அன்பிற்கு மட்டுமே கைதிகளாக இருக்க விரும்பும் அப்பொம்மைகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றன.
சிறுவர் பராமரிப்பகத்திலிருந்து ஆன்டியின் பொம்மைகள் தப்பிச் செல்லும் சிறையுடைப்பைப் போல ஜாலியான, சஸ்பென்ஸ் நிறைந்த ஒன்றை நான் சமீப காலத்தில் அனுபவித்ததேயில்லை. பராமரிப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மையான Lotso, ஒரு ஜெண்டில்மேன் தாதா. அந்தக் கரடி தாதாவின் அடியாள் பொம்மைகளின் கட்டுக் காவலிலிருந்து தப்பிச் செல்வதற்காக ஆன்டியின் பொம்மைகள் இயற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் அபாரம். இச்சிறையுடைப்பின் ஒவ்வொரு நிலையும் களிப்பின் எல்லைக்கு ரசிகனை இட்டுச் செல்ல முயற்சிக்கிறது.
பரபரப்பாக சிறை உடைப்பு நடந்து கொண்டிருக்கையில், ஸ்பானிய மொழி பேசுபவராக மாறிவிடும் Buzz Lightyear பின்னி எடுக்கிறார். அவர் பேசும் ஸ்டைலே சிரிப்பை வரவழைத்து விடுகிறது. இது போதாதென்று அவர் ஆடும் நடனங்கள் எல்லாம் அட்டகாசம் . அந்த நடன அசைவுகளில் இருக்கும் அழகே பிக்ஸாரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சான்றாக அமைந்து விடுகிறது. கவ் கேர்ல் ஜெசியுடனான காதல் காட்சிகளில் காதல் மன்னனாக பிய்த்து உதறுகிறார் பஸ் லைட்இயர்.
கதையில் வில்லனாக உருவெடுக்கிறார் கரடி பொம்மை லொட்சொ. திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மென்மையாக, அழகாக வில்லத்தனம் செய்ய முடியுமா என்பதனை லொட்சோவிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். திரைப்படத்தில் இப்பாத்திரத்திற்கு வழங்கப்படும் முடிவானது அவர் ரசிகர் என்றவகையில் என் மனதினை வேதனைப்படுத்துகிறது. கதை இலாகாவாவது இந்தக் கரடியிடம் கொஞ்சம் இரக்கமாக நடந்து கொண்டிருக்கலாம். லொட்சொவிற்கு குரல் வழங்கி உயிர்ப்பூட்டியிருக்கும் கலைஞர் Ned Beatty ன் திறமை சிறப்பானது. திரைப்படத்தில் எனக்குப் பிடித்த பாத்திரமாக இருப்பவர் கரடி லொட்சொதான்.
Barbie மற்றும் Ken பொம்மைகள் திரைப்படத்தின் அருமையான புது வரவுகள். கென் பாத்திரத்தை எப்படியான ஒன்றாக சித்தரிக்க விரும்பியிருக்கிறார்கள் என்பது தெளிவு. அப்படி அது தெளிவுறாவிடிலும் கென் எழுதும் கடிதத்தை பார்ப்பதன் மூலம் அது தெள்ளத் தெளிவாகிவிடும். பார்பியின் கடைக்கண் பார்வையை பெற அவர் அடிக்கும் டயலாக்குகள் கிச்சு கிச்சு. பார்பியை அசத்துவதற்காக அவர் நிகழ்த்தும் Catwalk கலக்கல். அதேபோல் கென்னின் விருப்பத்திற்குரிய ஆடைகளை கிழித்து அவனிடமிருந்து ரகசியங்களை கறக்கும் பார்பி, தற்கால மனைவியர் சமூகத்தின் அச்சு அசல் பிரதிநிதி என்றால் அது மிகையாகாது.
கரடி லொட்சொவின் பிளாஷ்பேக் [அதனை சிரிப்பை தொலைத்த ஒரு கோமாளி பொம்மையை கொண்டு சொல்ல வைத்தது], நடு இரவில் தன்னந்தனியாக ஊஞ்சலில் அமர்ந்திருந்து வானில் காயும் நிலவை ஏக்கத்துடன் பார்க்கும் Big Baby, ஆன்டிக்கும் பொம்மைகளிற்குமிடையிலான இறுதிக் காட்சிகள் போன்றவை மனதை மென் தென்றலாக தொட்டு நெகிழவைப்பவை.
பிரிதல் குறித்து இவ்வளவு உணர்வுபூர்வமாக ஒரு திரைப்படத்தை அனிமேஷனில் வழங்க முடியுமா என்பதற்கான விடையாக அமைந்திருக்கிறது டாய் ஸ்டோரி 3 திரைப்படம். அற்புதமான கற்பனையில், அனிமேஷன்,நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட், புதிய பாத்திரங்களின் அறிமுகம் என பிக்ஸார் அணியினரின் ஈடுஇணையற்ற உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படைப்பானது பிக்ஸாரிற்கு மேலும் புகழை ஈட்டித்தருகிறது.
தம் அன்பிற்குரியவர்களை தவிர்க்க முடியாத தருணமொன்றில் பிரிந்து செல்வதென்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் பிரிதலின் பின்பாக புதியதோர் வாழ்வு காத்திருக்ககூடிய சாத்தியமும் இருக்கவே செய்கிறது. ஆன்டியின் பொம்மைகள் சிலவற்றின் காலணிகளில் ஆன்டியின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அந்தக் காலணிகள் வெறும் காலணிகளாகவல்ல மாறாக அவை அந்தப் பொம்மைகளின் இதயங்களாகவே எனக்குத் தோற்றம் தருகின்றன. [****]
ட்ரெயிலர்
