Saturday, August 3, 2013

அக்னி நிலம்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 11

அரிசோனாவில் அமைந்திருக்கும் Tucson எனும் நகரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் கொலைத்தாக்குதலிற்கு முகம் தந்து கொண்டிருக்கும் செவ்விந்தியக் குடியிருப்பொன்றின் பூர்வகுடிகளை காப்பாற்றும் வண்ணம் மோதலில் இறங்குகிறார்கள் டெக்ஸும், கார்சனும். அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடிகள் மீதான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலிற்கு பொறுப்பானவர்களை கதை முடிவதற்குள் டப்பா டான்ஸ் ஆட வைக்க போவதாகவும் அவர்கள் பூர்வகுடிகளின் தலைவனிற்கு வாக்கு தருகிறார்கள்…..

அமெரிக்க பூர்வகுடிகள் வாழ்ந்திருந்த வளமான நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அவற்றின் தீவீரமான உச்சங்களை எட்டிய நிலையில் பூர்வகுடிகளின் எதிர் நடவடிக்கைகள் உருவாக்கிய விளைவுகள் ஆதிக்கவாதிகளை சமாதான ஒப்பந்தங்கள் எனும் தந்திரோபாயத்தின் பக்கம் இட்டு வந்தன. இரு பக்க நலன்களையும் கருத்தில் கொண்டதாக இவ்வாறான சமாதான ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இரு பக்க நலன் என்பது ஆதிக்கவாதிகளின் இருபக்க நலனாகவே மதிக்கப்பட்டதேயொழிய பூர்வகுடிகளின் நலன் என்பதாக மதிக்கப்படவில்லை. பல சமயங்களில் இந்த ஓப்பந்தங்களை எவ்வகையிலாவது பூர்வகுடிகளை மீறவைப்பதன் வழி அவர்களை ஆயூதம் கொண்டு அழித்தொழிக்கும் தந்திரங்களும் முனைப்பாக இயற்றப்பட்டன.

வாழ்வாதாரம் மிக்க பகுதிகளில் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளை இச்சமாதான ஒப்பந்தங்கள் அவர்கள் வாழியல்பிற்கு முரணான நிலங்களில் குடியிருப்புகளை உருவாக்கி கொள்ள பணித்தன. பெருமேற்கின் காற்றாய் குதிரைகளின் பாதங்களுடன் நடமாடிக் கொண்டிருந்த பூர்வகுடிகள் அவர்களிற்கென ஒதுக்கப்பட்ட வலயங்களை தாண்டுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டார்கள். தம் சராசாரி தேவைகளையும், வாழ்சுகங்களையும் பறிகொடுத்தவர்களாக இவ்வலயங்களில் பூர்வகுடிகள் தமக்கென நியமிக்கப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கின் எல்லைகளற்ற பரவெளியில் கட்டற்று இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடி இனமானது கிளைகள் வெட்டப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்ட மரம்போல வாழத் தம்மை பழக்கி கொண்டது.
கடலில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு உயிரை ஒரு சிறு நீர் தொட்டியில் இட்டால் அது உணரக்கூடிய ஒடுக்கம் போல இந்த குடியிருப்பு வலயங்கள் பூர்வகுடிகள் மனதில் உருவாக்கிய ஒடுக்கம் பெருமேற்கின் விசாலமான ஆன்மாவிற்கு முரணாக அவர்கள் முன் நின்று அவர்களை கேலி செய்தவாறே வதைத்துக் கொண்டிருந்தது. தம் அடைபடலின் ஆற்றாமை அவர்களில் பற்றி எரிய தொடங்க விழிசிமிட்டும் அக்னி துளியாக துடித்துக் கொண்டேயிருந்தது. இந்த துளிமீது ஆதிக்கவாதிகள் தம் நயவஞ்சகங்கள், துரோகங்கள், சதிகள் மூலமாக எரிதிரவத்தை ஓயாமல் ஊற்றியவாறேயிருந்தார்கள். ஏதோ ஒரு எல்லை தாண்டிய கணத்தில் இத்துளி பற்றி தன் எல்லை தாண்டி தகனநடை நடந்திடும் பொழுதில் எல்லாம் பூர்வகுடிநாய்கள் எம்முடன் செய்த ஒப்பந்தந்தை மதிக்காது எம்மை தாக்கிவிட்டார்கள் எனும் காரணம் உடனடியாக முன்வைக்கப்பட்டு அந்த ஆதிகுடிகளின் இனவொழிப்பு உற்சாகத்துடனும் வெளிக்காட்டா வரவேற்புடனும் கையெடுக்கப்பட்டது.
தாம் வாழ்ந்திருந்த மண்ணிலேயே அடையாளம் இழந்த நிலையில், கதியற்று போனவர்களாக வாழ்ந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைக்கு பதில் தந்த போராளிகளும் வாழ்ந்திருந்தார்கள். பெருமேற்கின் ஆக்கிரமிப்பாளர்களிற்கு மிகுந்த அச்சத்தையும், அழிவையும் தந்தவர்களாகவே வரலாற்றில் அப்பாச்சே போராளிகள் கருதப்படுகிறார்கள். உணவோ, நீரோ இன்றி நீண்ட மணிநேரம் தாக்குப் பிடிக்கவும், மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்களாகவும் திகழ்ந்த அப்பாச்சேக்கள் வெள்ளையர்களிற்கு துர்க்கனவின் நேர்ச்சொல்லானார்கள். அவர்களின் தாக்குதல்கள் காலனித்துவத்தின் பிஞ்சு வேர்களில் அச்சம் எனும் சுடுநீரை மழையாக பொழிந்தது. அமைதியான வாழ்க்கை என்பது இப்போராளிகளின் இருப்பால் ஆதிக்க நகரங்களின் கேள்விக்குறிகளாகின. இவ்வகையான போராளிகளின் தாக்குதல்களை அடுத்து பூர்வகுடிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடையாளமற்ற வன்முறையும், காலனித்துவ நகர்களில் குடியேறிவிட்ட பதட்டநிலையும், இப்பதட்ட நிலையை தம் லாபங்களிற்காக நீடிக்க விரும்பிய மனிதர்களின் சதிகளும் வாஷிங்டன் வாழ் அரசியல்வாதிகளை அமைதி அரசியலை நாட வைத்தன. யாரிற்கும் அடங்கிடாது ஆதிக்கவாதிகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த இந்த பூர்வகுடிப் போராளிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களை அமைதியின் பாதையில் திரும்பிடச் செய்யும் அமைதி அரசியலிற்கான பிரதிநிதிகளை வாஷிங்டன் பதட்டம் நிறைந்த பகுதிகளிற்கு அனுப்பி வைத்தது. இவ்வாறான ஒரு பிரதிநிதியான ஜான் ஆடம்ஸை சந்திப்பதற்காகவே டெக்ஸும், கார்சனும் டுசான் நகரை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் வழியிலேயே அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பூர்வகுடி குடியிருப்பின் மீது நடாத்தப்படும் கொலைத்தாக்குதலை கண்ட சாட்சியுமாகிறார்கள்.
fa1ஆற்றங்கரையோராமாக யார் வம்பிற்கும் செல்லாது வாழ்ந்து கொண்டிருந்த ஜிகரில்லா அப்பாச்சேகள் மீது கதையின் ஆரம்பத்தில் நிகழ்த்தப்படும் கொலைத்தாக்குதல் Camp Grant ல் பூர்வகுடிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடிப்படையாக கொண்டது. பூர்வகுடிகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் எதிர்பாராவிதமாக துரிதமாக தாக்கி ஒருவர் பாக்கியில்லாமல் கொன்றுபோடும் வகையிலான தாக்குதல் அது. க்ராண்ட் முகாமில் தாக்குதலிற்கு தப்பிய சிறுவர்களும், பெண்களும் மெக்ஸிக்கோவில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இக்கதையிலும் அச்செயலை நினைவுகூர வைப்பதுபோல வரிகள் அமைந்திருக்கும். கதாசிரியர் நிச்சியும் க்ராண்ட் முகாம் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களே சாண்ட் கார்லோஸ் குடியிருப்பின் மீதான தாக்குதலை நிகழ்த்துவதாக தன் கற்பனையை விரிக்கிறார். இந்த தாக்குதல் குழுவிற்கு தலைமை வகிப்பவனாக டான் லாட்டிமர் இருக்கிறான். அவன் திட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கும் டெக்ஸ் மட்டும் அவ்வழியே தன் குதிரையின் மீதேறி வந்திருக்காவிடில். [ க்ராண்ட் முகாம் தாக்குதல் குறித்து படித்தபோது அத்தாக்குதலில் 92 பபகோ பூர்வகுடிகள் அப்பாச்சேக்களை அழிப்பதில் பங்கு கொண்டார்கள் எனும் தகவல் திகைக்க வைத்தது. பூர்வகுடிகள் மத்தியில் நிலவியிருந்த வேறுபாடுகள் மற்றும் துவேஷத்திற்கு சான்றாகவே இதை என்னால் கருதமுடிகிறது.]
சாண்ட் கார்லோஸ் குடியிருப்பில் வாழ்ந்திருந்த ஜிகரில்லா அப்பாச்சேக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர்த்துப் போராடினாலும் டான் லாட்டிமரின் ஆயுத மற்றும் ஆட்பலம் முன்பாக அவர்களால் எதிர்நிற்க முடிவது இல்லை. குண்டடிபட்டு உயிர்கள் மண்ணில் விழ, பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் குடியிருப்பின் அருகோடிய ஆற்றைக் கடந்து அதன் மறுகரைக்கு தப்பிச் செல்வதற்காக தம் உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஓட, அந்த அப்பாவிகளை மறுகரையை அவர்கள் எட்டும் முன்னமே கொன்று போட்டு விடுவது என டான் லாட்டிமரின் ஆட்கள் தம் குதிரைகளில் விரைய, அந்த அப்பாவிகளை காப்பாற்ற யாருமே இல்லையா பகவானே என நாம் எம் மனதில் அந்த ஆழ்கூச்சலை மெளனமாக சிந்துகையில், கூப்பிட்ட குரலிற்கு கும்பிட மறந்த தெய்வமே தந்த பதிலாய், பரட்டையின் ஆல்ஹஹால் நிரம்பிய போதை வழியும் பகற்கனவுகளில் கூட அவரை கொல்லை வீட்டை நோக்கி ஓட வைக்கும் ஒரு காட்சியாய், ஒரு தேவனாய், செமையான ஒரு எண்ட்ரியாய் வருவார் பாருங்கள் நம் ரேஞ்சர்….. அட அட அடடா. அக்காட்சியைக் கண்டால் மட்டமான சரக்கு அடித்து ஏற்கனவே முக்கால் முழுதாய் கெட்டுப் போய், கதை மாறி கதை டப்பு டப்பு என இலக்கில்லாமல் சுடும் பரட்டையின் கண்கள் டோட்டலாய் இட்லியாகும் என்பதை டெக்ஸின் அன்பு ரசிகர்களிற்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! வந்தவர், டான் லாட்டிமர் ஆட்களுடன் துப்பாக்கி சங்கீதக் கச்சேரியை ஆரம்பித்து அவர்களை அட பரட்டையை இந்தக் கதைக்கு ஹீரோவாகப் போட்டிருக்கலாமே, எதார்த்தமான முடிவு என பரட்டையை தவிர எல்லாரையும் கொன்று போட்டிருப்போமே என அழ வைக்கும் அழகுடன் விரட்டியடிக்கும் அந்த பாணி இருக்கிறதே ஆகா, ஆகா, ஆகா! பெருமேற்கில் எதார்த்தம் இருக்கலாம் ஆனால் எதார்த்தம் எனும் பெயரில் பம்மாத்து பதார்த்தம் இருப்பதை அங்கு வாழும் பேராத்மாவே மன்னிக்காது.
தம் குடியிருப்பின் மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதலிற்கு உடனடியாக பதிலடி தரவேண்டும் எனத் துடிக்கும் ஜிகரில்லா அப்பாச்சேக்களின் தலைவரை தன் கண்ணியமான மொழியாலும் ஸ்டைலாலும் சாந்தமாக்கும் டெக்ஸ் இக்கதையில் ஸ்டண்டிற்கு தானே முழுப்பொறுப்பு என்பதை சொல்லாமல் சொல்லி தாக்குதல் நடாத்தியவர்களை போட்டுத்தள்ளும் பொறுப்பை தனதாக்கி கொள்கிறார். குடியிருப்பின் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியே தெரிந்தால் அப்பாச்சே போராளிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிகழாது என்பதை பருவப் பெண் மீதான ஒரு முத்தம்போல உணரும் டெக்ஸ், வறள்நில நரி போல ரகசியமாக தன் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனும் தீர்மானத்திற்கும் வருகிறார். டுசான் நகரில் தனக்காக காத்திருக்கும் வாஷிங்டன் பிரதிநிதியான ஜான் ஆடம்ஸுடன் இத்தாக்குதல் குறித்து தனித்து பேசிட வேண்டும் எனவும் முடிவெடுத்தவாறே அவர் டுசான் நகர் நோக்கி கார்சனுடன் விரைகிறார்.
fa2டுசான் நகரை அவர் அடைந்து ஜான் ஆடம்ஸை சந்தித்து உரையாடி பூர்வகுடிகள் மீதான தாக்குதல் குறித்தும் தெரியப்படுத்துகிறார். வாஷிங்டன் நிலைநாட்ட விரும்பும் அமைதி அரசியலை குலைக்கும் முயற்சி ஒன்றின் பின்பாக செயல்படும் டான் லாட்டிமரை டெக்ஸிற்கு அடையாளம் தெரிந்திருந்தாலும் அவனை கண்டுபிடித்து தன் பாணியில் விசாரிக்காது  மேலதிக தகவல்களை அவரால் அறிந்து கொள்ள முடியாது எனும் பட்சத்தில், அப்பாச்சே போராளியான டெல்ஹாடோவை அமைதிப் பேச்சிற்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஜான் ஆடம்ஸ் சகிதம் அதற்கான பயணத்தை அவர் ஆரம்பிக்கிறார். ஆனால் டுசான் நகரின் அரசியல்வாதிகளும், பெருவணிகர்களும், ஊடகங்களும் ஜான் ஆடம்ஸ் முன்வைக்கும் அமைதி அரசியலை விரும்புவர்கள் அல்ல. உண்மையில் பூர்வகுடிகளுடனான அமைதி முயற்சிகள் எதுவுமே அவர்களிற்கு உவப்பான ஒன்றாக இருப்பது இல்லை. அரிசோனா எப்போதும் பதட்டம் நிறைந்த ஒரு அக்னி நிலமாக  இருப்பதன் வழியாகவே அவர்களால் தம் சுயலாபங்களை நிரப்பிக் கொள்ளமுடியும். அதுவே அவர்களின் குறிக்கோள். ராணுவ நடவடிக்கைகள் மூலமான இனவழிப்பே அவர்களிற்கு பிடித்தமான தீர்வு. இவர்களின் கைப்பாவையே டான் லாட்டிமர். ஆனால் டெல்ஹாடோவை தேடி பயணமாகும் டெக்ஸ் இவற்றை அறிந்தார் இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்துதரவென பயணிக்கும் எம் நாயகன் தன் வழியில் சந்திக்கப்போகும் ஆச்சர்யங்களின் எண்ணிக்கைகளையும்கூட அப்போது அறிந்தார் இல்லை.
TEX Special கதை வரிசையில் அதிக கதைகளை எழுதியவர் எனும் பெருமை க்ளோடியோ நிச்சியையே சேரும். நிச்சி என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் அல்ல. விறுவிறுப்பான கதைகளைவிடவும் சுமாரான அல்லது அதற்கும் குறைவான கதைகளை உருவாக்கியவர் அவர் என்பது என் கருத்து. ஆனால் கதாசிரியர் நிச்சி TEX Special n°5 ன் கதையான Flammes sur l’Arizona வழியாக டெக்ஸின் கதைகளில் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் எனலாம். சாண்ட் கார்லோஸ் குடியிருப்பு மீதான தாக்குதலின் பின்பான பகுதி அதிக அதிரடிகள் இல்லாது உரையாடல்கள் நிரம்பியதாக இருந்தாலும், வாஷிங்டன் அரசியல், அரிசோனாவில் நிலவும் பூர்வகுடிகளுடனான அமைதிப் பேச்சுக்கள் குறித்த மனநிலை, அமைதிப்பேச்சுக்கள் மீது பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என கதையின் முக்கிய இழையையும் அது குறித்த தகவல்களையும் சிறப்பாக அம்மிகையான உரையாடல்கள் வழி நிச்சி வாசகர்களிடம் எடுத்து வருகிறார்.கதையில் இடம்பிடிக்கும் அமைதி முயற்சிகளை முறியடிக்க செயற்படும் குழு, அவர்களின் நகர்வுகள், இதையறியாமலே டெல்ஹாடோவை தேடிச்செல்லும் டெக்ஸ் எனும் தருணங்களை வாசகர்களிடம் கச்சிதமாக கொண்டு சேர்த்த பின்பாக எதிர்பாரா திருப்பங்களிற்கும், அதிரடிகளிற்கும் தன் கதைசொல்லலில் அவர் குறை வைக்கவில்லை. அதுவும் டெக்ஸின் எதிரிகள் டெக்ஸ் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை முன்னமே கணித்து அதற்கு/அவரிற்கு ஒருபடி மேலாக காய்நகர்த்தி செல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பது கதையின் திருப்பங்களை சுவாரஸ்யமாக்குகிறது.
Fuenteடெக்ஸிற்கு கதையில் வரும் பல செவ்விந்தியர்களை தெரிந்திருக்கிறது. கதையில் வரும் எல்லா செவ்விந்தியர்களிற்கும் டெக்ஸ் பற்றி தெரிந்திருக்கிறது. அப்பாச்சேக்கள் குறித்துப் பேசும் இக்கதையில் கொச்சிஸ், டெல்ஹாடோ, ஒஜோ ப்ளாங்கோ [ வெள்ளை விழி], மந்திரவாதி செங்கொம்பன் போன்ற பாத்திரங்கள் பக்குவமாக பொருந்திக் கொள்கின்றன. அதுவும் கொச்சிஸுடன் குவாட்டரும் பிரியாணியும் அடித்துவிட்டு குப்புறப் படுத்து குறட்டை விடும் அளவிற்கு டெக்ஸிற்கு கொச்சிஸுடன் நட்பு இருந்திருக்கிறது என்பதை நாம் அறியும் போது எம் அருகில் நிற்கும் கள்ளிச்செடிகளின் ரோமங்களும் ரோமாஞ்சனம் அடைவது ஆச்சர்யமான நிகழ்வல்ல. அப்பாச்சேக்களை அப்பாவிகளாக, பெரும் போராளிகளாக, சுயலாபத்திற்காக செயற்படும் துரோகிகளாக, தக்க சமயத்தில் துணைக்கு வரும் தோழர்களாக பல பரிமாணங்களிலும் கதையில் சித்தரித்து சிறப்பித்து இருக்கிறார் கதாசிரியர்.
மிகவும் விவேகமான எதிரிகளின் திட்டங்களின் முன்பாக சுவர் ஒன்றுடன் முட்டி மோதி என்ன செய்வது என்பது தெரியாமல டெக்ஸ் அமைதியாகும் ஒரு தருணத்தில் அவரை நாடி வரும் ஒரு எதிர்பாரா உதவி, உண்மைகளை கண்டறிய அவரை அனைத்து வழிமுறைகளையும் துணைதேடச் செய்கிறது. கட்டில் அறைக்குள்ளும் கனல் கக்கும் கண்களுடன் செல்ல டெக்ஸால் மட்டுமே முடியும்! விவேகமான எதிரிகளிற்கு விவேகமாகவும், மூர்க்கமான அவர்களின் செயற்திட்டங்களிற்கு அதிமூர்க்கமாகவும் பதில் தருகிறார் டெக்ஸ். அப்பாச்சேக்களின் வீரம் குறித்து சிறு இழையாகவேனும் செயற்பட விரும்பும் இக்கதை டெக்ஸ், கார்சன் உயிர் போகப்போகிறது எனும் நிலையில் அவர்களை காப்பாற்றுவது அப்பாச்சேக்களே என்பதன் வழியாக அதை கதையில் நிலைநாட்டுகிறது.
இக்கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல சித்திரக் கலைஞரான Victor de la Fuente. கதையின் பல இடங்களில் டெக்ஸும், கார்சனும் சோமாலியா பிரஜைகள் போல நோஞ்சான் பாடியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். டெக்ஸ் சில கட்டங்களில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஜார்ச் டபிள்யூ புஷ்சை நினைவூட்டுகிறார். ஆனால் விக்டர் டு லா ஃப்யோண்ட் திறமைசாலி. பூர்வகுடிகள் விடயத்தில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். பெருமேற்கின் நிலவியலை அசாத்தியமாக அவர் விரல்கள் வரைந்து தள்ளியிருக்கிறது. மோதல் காட்சிகளும் சிறப்பாக கட்டங்களிற்குள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. டெக்ஸ் கதைக்கு வரைய அவர் பிரியம் காட்டாமல் இருந்தார் எனவும் பின் மனம் மாறினார் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பொனெலிக்குதான் எம் நன்றிகள் உரித்தாகும். மெதுவாக ஆரம்பித்து வேகமாக நகர்ந்து அதிரடியாக நிறைவடையும் இந்த டெக்ஸ் கதை அவர் ரசிகர்களை எளிதாக திருப்தி செய்யும் அம்சங்களை தன்னுள் தாராளமாக கொண்டிருக்கிறது.

2 comments:

  1. உங்களுடைய மார்க் என்ன?

    ReplyDelete
  2. adada seekiram tamilil vara asaipadugiren!

    ReplyDelete