Sunday, November 7, 2010

புதைக்கப்பட்டவன்


மயக்கமுற்ற நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பும் பால் கான்ராய் [Ryan Reynolds], இறுக மூடப்பட்ட சவப்பெட்டி ஒன்றினுள் வைத்து தான் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறான். அவனிற்கு துணையாக அந்த சவப்பெட்டியினுள் ஒரு ஸிப்போ லைட்டர், ஒரு கைத்தொலைபேசி கூடவே 90 நிமிடங்கள் மட்டுமே அவன் உயிர் வாழத்தேவையான ஒக்சிஜன் என்பனவும் புதைக்கப்பட்டிருக்கின்றன….

இறுக மூடப்பட்ட ஒரு சவப்பெட்டியினுள் அடைக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வுகளையும், அதிலிருந்து வெளியேறிவிட அவன் நடாத்தும் போராட்டங்களையும் மட்டுமே திரையில் காட்டி 90 நிமிடங்களிற்கு பார்வையாளர்களை சஸ்பென்ஸால் திணற அடிக்க முடியுமா எனும் கேள்விக்கு, ஆம் எனும் பதிலாக அமைந்திருக்கிறது ஸ்பானிய இயக்குனர் Rodrigo Cortés ஆங்கில மொழியில் உருவாக்கியிருக்கும் Buried எனும் இத்திரைப்படம். மிகக்குறைந்த செலவில் விறுவிறுப்பான படைப்பினை வழங்க முடியும் என்பதனையும் இத்திரைப்படம் தெளிவாக்குகிறது. திரைப்படம் ஆரம்பித்து அது நிறைவு பெறும்வரை பார்வையாளன், பால் கான்ராயுடன் மூடப்பட்ட சவப்பெட்டியினுள் இருந்தாக வேண்டிய கட்டாயம்! ஒரு கணம்கூட கமெரா சவப்பெட்டியின் உள்வெளியை விட்டு விலகுவதில்லை.

இருண்ட திரையுடனும், ஆழமான மூச்சு ஒலிகளுடனும் ஆரம்பிக்கும் திரைப்படம், ஸிப்போ லைட்டரை எரியவிட்டு தான் ஒரு புதைக்கப்பட்ட சவப்பெட்டியினுள் அடைபட்டிருப்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ளும் திகில் கணங்கள் வழியாக பார்வையாளனிற்கு முதல் அதிர்ச்சியை எடுத்து வருகிறது. அம்மனிதன் அடைக்கப்பட்டிருக்கும் அந்த ஒடுங்கிய வெளியினுள், அவனது குழப்பமும், அச்சமும், கையறுநிலையும், சவப்பெட்டியை ஸிப்போவின் ஒளி நிரப்புவதைபோல் ரசிகனின் மனதை இருளும் ஒளியும் கலந்த பரப்பாக நிரப்புகின்றன. ஸிப்போவின் ஒளியிலும், கைத்தொலைபேசியின் மிளிர்விலும், மூச்சுத்திணற வைக்கும் கோணங்களிலும் ஒளிப்பதிவானது அடைபட்ட உணர்வை திரைக்கு அப்பால் கடத்த, இசை; திகிலை செவி வழி ஊதுகிறது. இந்த மனிதன் யார்? எதற்காக அவன் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறான்? எனும் கேள்விகளிற்கான விடைகள் குறுகிய வெளியினுள் ஆரம்பமாகும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரசிகனை எட்டுகின்றன.

buried-2010-18948-624553307 2006ம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் கனரக வாகன சாரதியாக ஈராக்கில் பணிபுரியச் சென்ற ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையே பெட்டிக்குள் அடைக்கப்பட்ட மனிதன் என்பதையும், அவன் பெயர் பால் கான்ராய் என்பதையும் தொலைபேசி உரையாடல்கள் வழியாக பார்வையாளன் அறிந்து கொள்கிறான். பால் கான்ராய் ஏற்படுத்தும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், உரையாடலும் அவற்றிற்கேயுரிய திகிலை பார்வையாளனிடம் கடத்த தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் தொலைபேசி உரையாடல் ஏதோ ஒரு காரணத்திற்காக துண்டிக்கப்படும்போதும் இதயம் தன் துடிப்பை சற்று உயர்த்தி இறக்குகிறது.

தன்னைப் புதைத்த மனிதனுடன்[ அல்லது பயங்கரவாதியுடன்!] பால் கான்ராய் உரையாடும் தருணங்களில், இரு பக்கங்களிலும் இருந்து பரிமாறப்படும் வாதங்களும், நியாங்களும் இந்த இரு மனிதர்களையும் பெரும் அரசுகளின் யுத்த அரசியலிற்கு பலியான இனமாகவே அடையாளம் காட்டுகின்றன. பால் கான்ராய் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பணம் சம்பாதிக்க அமெரிக்காவிலிருந்து ஈராக்கிற்கு பணிபுரிய வந்த ஒரு மனிதன். பால் கான்ராயை புதைத்தவனிற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவனும், அவன் குடும்பமும், அவன் தேசமும்கூட எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத யுத்தமொன்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை வலிமையாக முன்வைக்கிறார் இயக்குனர். விரும்பத்தகாத இந்த நிலைக்கு இவ்விரு மனிதர்களையும் இட்டு வந்த பணத்தின் பிரசன்னம் அரூபமாக ஒடுங்கிய வெளிக்குள் நகைக்கிறது.

நிலத்திற்குள் புதைக்கப்பட்ட நிலையில் தன் மீட்பிற்காக போராடும் ஒரு மனிதனை, அவன் நாட்டின் அரசின் பிரதிநிதிகளும், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகார உச்சங்களும் எவ்விதமாக புதைக்கமுடியும் என்பதை வலி ததும்ப இன்னொரு பக்கமாக திரையில் விரிக்கிறார் இயக்குனர் ராட்ரிகோ கோர்டேஸ். அரச பிரதிநிதிகளின் மெத்தனமும், கையாலாகத்தனமும், பொய்களும், இக்கட்டான சூழ்நிலைகளில் தம் பொறுப்புகளிலிருந்து கழன்றுவிடத்துடிக்கும் முதலாளிகளின் நரித்தனமான தந்திரங்களும் மனங்களை அதிரச் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

திரைக்கதையில் தொலைபேசி உரையாடல்கள் மூலம் மனித உறவுகளின் பல்வேறுபட்ட முகங்களை சவப்பெட்டியின் மீது மோத வைத்திருக்கிறார் இயக்குனர். உரையாடல்களை மட்டும் நம்பியிராது திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் பார்வையாளனை அசர அடிக்கிறார் அவர்.

படத்தின் ஒரே ஒரு நடிகரான! ரையான் ரெனோல்ட்ஸ், ஒரு குறுகிய வெளிக்குள் அடைப்பட்ட மனிதனின் உணர்வுகளை மிகவும் சிறப்பாக திரையில் காட்டியிருக்கிறார். ஒரு சில தருணங்களில் அவரின் நடிப்பும், உரையாடல்களும் மிகையானதாகவும், பொருத்தமற்றதாகவும் உணரப்படக்கூடும் எனிலும் படத்தின் இறுதித்தருணங்களின் வேகமும், திகிலும் சவப்பெட்டியின் பிளவுகளினுடாக வந்து விழும் மணல் போல் பார்வையாளனை திக்கு முக்காட வைக்கின்றன. Buried திரைப்படம் சஸ்பென்ஸ் பிரியர்களை மூச்சடைக்க வைக்கும். [***]

ட்ரெயிலர்

11 comments:

 1. படத்தில் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறாரா?

  ReplyDelete
 2. வித்தியாசமான படம்!
  நல்ல விமர்சனம்.
  பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 3. அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்படுவது சாமனியர்களே!விமர்சனம் வழக்கம் போல அருமை.
  என்ன தான் படம் புதைக்கப்பட்ட மனிதனின் தவிப்பைப் பற்றி சொன்னாலும்,வேறொரு அதிமுக்கியமான தவிப்பைப் பற்றி சொல்லும் "வ" படத்திற்கு இணையாக இது வருமா என்று சந்தேகிக்கிறேன். ;)

  ReplyDelete
 4. ட்ரைலர் பார்த்தாலே மூச்சு முட்டுது. லிப்ட்ல மாட்டினாலே டென்ஷனாகிடுவேன். இந்தப் படம் பார்த்தா அந்த பயம் போய்விடும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 5. நண்பர் எஸ்.கே., பிரதான நடிகரைத் தவிர்த்து குரல்கள் மூலமாகவே பிற பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. தொலைபேசியில் வரும் ஒரு காணொளியையும் தவிர்த்தால், படத்தில் ஒரே ஒரு நடிகர்தான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, ஆம் அரசியல் சதுரங்கத்தில் அப்பாவி ஜனங்கள் கேள்விகள் ஏதுமின்றி பலியாவது உண்மைதான். வ திரைப்படம் ஒரு ஆஸ்கார் படைப்பு என்று நண்பர் கருந்தேளே கூறிவிட்டார். தவித்த வாய்க்கு தண்ணி கிடைக்காது அல்லல்படும் ஒரு சாதரண குடிமகனின் கதை என்பதை நினைத்தாலே உடம்பு புல்லரிக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பின்னோக்கி, படத்தைப் பாருங்கள், பிரேதப்பெட்டியே வெறுத்துவிடும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 6. (மடலில்) நீங்கள் சொன்னதிலிருந்து படம் பார்க்கும் முயற்சியை தொடங்கிவிட்டேன் நண்பரே. இந்த இடுகையின் மூலம் 'அநியாத்திற்கு' ஆர்வத்தை மிகுதியாக்கி உள்ளீர்கள். கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன் நண்பரே ...
  பகிர்வுக்கு நன்றி.
  // தொலைபேசி உரையாடல்கள் மூலம் மனித உறவுகளின் பல்வேறுபட்ட முகங்களை சவப்பெட்டியின் மீது மோத வைத்திருக்கிறார் இயக்குனர்// அடடா ... எவ்வளவு அருமையான திரைக்கதை. சொந்த அனுபவத்தில் நான் கூட சில வேளைகளில் தொலைபேசி வழியாக மனித உறவுகளின் (கோர)முகங்களை பார்த்துள்ளேன்

  ReplyDelete
 7. எனக்கு, இந்த விமர்சனம், அட்டகாசமான பின்னணி இசையுடன் கூடிய கில் பில் 2 வை நினைவுபடுத்தியது... ப்ரைட், சவப்பெட்டியிலிருந்து தப்பிக்கும் காட்சி :-)

  படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி காதலரே.. :-)

  ReplyDelete
 8. நண்பர் வேல்கண்ணன், பார்த்துவிடுங்கள், மனதை கனக்க வைக்கும் ஒரு படைப்பாக இது உங்களிற்கு அமையும் வாய்ப்புக்கள் அதிகம். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், ஆம் கில் பில் சவப்பெட்டிக் காட்சி ஒரு பரபரப்பான காட்சிதான் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 9. நான் கூட ‘பர்ரி அலைவ்’ wwe பற்றி எழுதிபுட்டீங்களோன்னு பதறிப் போய் வந்தேன். நல்ல பட அறிமுகம். இன்னும் 10 புறாக்கள் கிடைக்க வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 10. நண்பரே..உங்கள் பதிவு Vanishing என்ற படத்தை ஞாபகப்படுத்தியது. அப்படத்தில் ஒரு சைக்கோ இதே போன்று காஃபினில் அடைத்து உயிரோடு புதைத்து விடுவான்.இப்படத்தை டிவிடி கிடைத்ததும் பார்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 11. நண்பர் மரா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் உலக சினிமா ரசிகரே, Adrien Brody நடித்த Oxygen எனும் திரைப்படத்திலும் சவப்பெட்டியினுள் வைத்து பிளாக்மெயில் செய்வது இடம்பெறும். திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete