Thursday, November 25, 2010

மணிபல்லவம்


தமிழ் நாவல் வகைகளில் சரித்திரப் புனைகதைகள், என் முதிரா இளம் பருவத்தில் நான் விரும்பிப் படித்தவைகளாகும். அவற்றில் இருந்த சாகசங்களும், காதலும், சிருங்காரமும் என்னை அவ்வகை நாவல்களுடன் மிகவும் நெருக்கமாக்கின. வரலாறு என்பது அந்த வயதில் முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. இன்றைய கருத்துக்கள்படி அந்நாவல்களில் வரலாறு அதிகம் இருந்ததில்லை என்பதாகிறது.

அன்றைய வாசக ரசனைக்கு அக்கதைகளில் கூறப்பட்ட வரலாறு போதுமானதாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அளவே போதும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் நான் இன்று எந்த ஒரு கனமான நாவலையும் தயக்கமின்றி அணுகுவதற்கு, அந்த சரித்திர புனைகதைகளுடனான என் நெருக்கமே எனக்கு உதவியாக இருக்கிறது.

சாண்டில்யனையும், கல்கியையும் விரும்பிப் படித்த எனக்கு விக்கிரமனையும், கோவி.மணிசேகரனையும் நெருங்க முடியவில்லை. இன்றுவரை இதற்கான காரணம் என்ன என்பது என்னால் கண்டறியப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அன்றைய சரித்திரப் புனைவுகளில் நா. பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் சற்று வேறுபட்டது என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன். மணிபல்லவத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்பதை அறியும் என் ஆவல் அண்மையில் நிறைவேறியது.

மணிபல்லவம் நாவலைப் படித்து முடித்தபோது, அந்நாவலிலும் இன்று தமிழ் மசாலா சினிமாவின் உச்ச நாயகர்களிற்காக உருவாக்கப்படும் கதை ஒன்றிலும் இருக்ககூடிய ஒற்றுமைகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும். சோழர் ஆட்சியில், சித்திரை மாதத்தில், இந்திரவிழா விமர்சையாக கொண்டாடப்படும் பூம்புகார் பட்டிணத்தில் இடம்பெறும் மல்யுத்தப் போட்டி ஒன்றிலேயே கதையின் நாயகனான இளங்குமரன் வாசகர்களுடன் அறிமுகமாகிறான்.

இளங்குமரன் அழகன், செந்நிறமேனிக்கு சொந்தக்காரன், மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் இயல்பு அவனுடன் கூடவே பிறந்திருக்கிறது என ஒரு கதாநாயகனிற்குரிய லட்சணங்களை தவறாமல் இளங்குமரனிற்கு அளித்திருக்கிறார் நா.பா. பூம்புகாரில் இருக்கும் வீரர்களை அடித்து வீழ்த்தி, அந்நகரின் ஆண்மையை பரிகாசித்து சவால்விடும் யவன மல்லன் ஒருவனை நாவலின் ஆரம்ப பக்கங்களில் புரட்டி எடுக்கிறான் இளங்குமரன். என்ன ஆச்சர்யம்! அப்போட்டியை பல்லக்கு ஒன்றினுள் இருந்தவாறே பார்த்து வியக்கும் ஒரு அழகுப் பைங்கிளி, இளங்குமரன் வீரத்திலும், அழகிலும் தன் இதயத்தை பறிகொடுத்து விடுகிறாள். அந்த அழகியின் பெயர் சுரமஞ்சரி, செல்வம் கொழிக்கும் குடும்பத்தை சேர்ந்தவள் அவள். தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் விசிலடியும், கனவுப் பாடலொன்றில் அருமையான குலுக்கல்களும் இடம்பெறும். அவை கதையில் இல்லை என்பது குறையாக தோன்றவில்லை.

அது மட்டுமா! அழகி சுரமஞ்சரியின் அன்பை தூக்கி எறிகிறான் நாயகன் இளங்குமரன். செல்வமும், அழகும் அவனைப் பொறுத்தவரையிம் மதிப்பில்லாதவை என்பதை வாசகன் அறிந்து கொள்கிறான். பெற்றோர்கள் இல்லாத அனாதையாக அருட்செல்வ முனிவரால் சிறுவயது முதலே வளர்க்கப்பட்டு, நீலநாக மறவர் எனும் ஒப்பற்ற வீரரின் படைச்சாலையில் யுத்தப் பயிற்சிகளில் தேர்ந்த நாயகன் இளங்குமரனை கதையில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இளங்குமரனின் அழகு, வீரம், குணாதிசயங்கள் என ஏதாவது ஒன்றை எந்த ஒரு பாத்திரமாவது உயர்த்திப் பேசியபடியே இருக்கிறது. இளங்குமரனை ஒழித்துக் கட்ட விரும்பும் நகைவேழம்பர் மற்றும் பூம்புகாரின் எட்டிப் பட்டம் பெற்ற வணிகரான பெருநிதிச் செல்வர் ஆகிய இருவரையும் இந்த புகழும்- ஜால்ரா- கூட்டத்திலிருந்து பிரித்து அடையாளம் காணமுடிகிறது.

இந்நிலையில் தமிழ் மசாலா சினிமாவின் தீவிர ரசிகர்கள், இளங்குமரனை ஒழித்துக் கட்ட துடிக்கும் வணிகரான பெருநிதிச்செல்வரின் மகளே இளங்குமரன் அன்பிற்காக ஏங்கும் சுரமஞ்சரி என்பதை நான் எழுதாமலேயே ஊகித்திருப்பார்கள். சரித்திர புனைகதைகளின் தவறவிடக்கூடாத வழக்கம்போன்று செல்வந்த அழகி சுரமஞ்சரி மட்டுமல்ல, இளங்குமரனின் பால்யகால நண்பனான கதக்கண்ணனின் தங்கையான முல்லைக்கும் கூட இளங்குமரன் மேல் அன்பு [காதல்] இருக்கிறது. ஆனால் முல்லை அழகில் சுரமஞ்சரியை விட ஒரு படி குறைவானவளாகவும், செல்வத்தில் அதிக படிகள் குறைவானாவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஆகவே இளங்குமரனின் மனம் எந்தப் பெண் பக்கம் சாயும் என்பதும் ஒரு மர்மமாக!! கதை நெடுகிலும் நீண்டு[ இழுத்துக் கொண்டு] செல்கிறது.

சுரமஞ்சரி, முல்லை ஆகிய இருபெண்களும் இளங்குமரனிற்காக ஏங்குகிறார்கள், கண்ணீர் சிந்துகிறார்கள், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுகிறார்கள், சரித்திர நாவல்களில் இடம்பெறும் பெண்களின் குணங்களை அவர்கள் கடந்து சென்றார்களில்லை. முடிவில் இவ்விரு பெண்களும் இளங்குமரனிற்காக தியாகம் செய்யவும் தயங்கினார்களில்லை. தமிழ் சமுதாயம் பார்த்து பெருமை கொள்ளும் வண்ணமே இந்த இரு நாயகிகளும் நா.பாவால் இழைத்து இழைத்து செதுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் முல்லைக்கு வழங்கப்பட்டிருக்கும் முடிவு என் மனதையே நெகிழ்த்தி விட்டதெனில், கதை தொடராக கல்கி வார இதழில் வெளிவந்தபோது முல்லைக்காக வாசக, வாசகிகள் கண்ணீர் வடித்திருப்பார்கள் என்பது உறுதி. விசாகை போன்ற பெண் துறவிகளை இவ்வகையான கதைகளிலேயே இன்று காணமுடியும் போலும்.

தந்தை, தாய் யாரென்பதை அறியாது, வம்புகளை வீணே வாங்கி வரும் இளைஞனான இளங்குமரனை, பூம்புகாரின் பெரும் வணிகரான பெருநிதிச்செல்வர் ஏன் அழிக்க முற்படவேண்டும்? இதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக வாசகர்கள் இளங்குமரனோடு மணிபல்லவத் தீவிற்கு பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக சண்டைகளில் வீரனாக இருந்த இளங்குமரன், ஞானமே உண்மையான வீரம் என்பதை கண்டுணர்ந்து சான்றோனாக மாறுவதை வாசகர்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

விறுவிறுப்பாக ஆரம்பமாகிய நாவலில், மூன்றாம் பருவமான வெற்றிக்கொடி, நாங்கூர் அடிகள் எனும் ஞானச் செல்வரிடம் இரு வருடங்கள் தங்கியிருந்து அறிவு எனும் ஒளியை இளங்குமரன் தன்னுள் ஏற்றிக் கொண்டபின் ஆரம்பமாகிறது. சமயவாதங்கள், தத்துவ வாதங்கள் செறிந்த ஒரு பகுதியாக இது இருக்கிறது. இன்றைய வாசிப்பில் வாசகனை சற்று வியப்பிலாழ்த்துவதாகவும், விறுவிறுப்பான கதை சொல்லலிருந்து வேகம் குறைந்த நிலைக்கு கதையை எடுத்து செல்லவதாகவும் இப்பகுதி அமைந்திருக்கிறது. நிச்சயமாக இப்பருவம் அக்கால வாசகர்கள் மத்தியில் உயர்ந்த வரவேற்பை பெற்றிருக்கும் என எண்ணுகிறேன். இப்பகுதியை கடப்பதில் எனக்கு சிரமமிருந்தது என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். வாயைத் திறந்தாலே தத்துவமாக கொட்டும் இளங்குமரனை இன்றைய ஒரு தளபதியுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பினாலும், தத்துவமும், தருக்கமும் குறுக்கே நிற்கின்றன.

தான் படித்த இலக்கியங்கள் வழி நா.பா அவர்கள் தன் நாவலின் வரிகளில் சிருஷ்டித்திருக்கும் பூம்புகாரானது ஒரு பரபரப்பான பல்பொருள் கண்காட்சியை பார்த்தது போன்ற உணர்வையே இன்று வழங்கக்கூடியதாகவிருக்கிறது. பூம்புகாரின் வனப்புடன் அதன் மங்கிய பக்கங்களையும் மெலிதாக கோடிட்டுக் காட்டிய நா.பா, அந்த மங்கிய பக்கங்களை பிரகாசம் கொண்டதாக மாற்ற துடித்திட்ட கதையின் நாயகனான இளங்குமரனை, இறுதியில் சாதாரண ஒரு குடும்பஸ்தனாக அதே பூம்புகார் நகர தெருக்களில் வாசகனிடமிருந்து பிரியாவிடை பெறச்செய்வதென்பது வேதனையான ஒரு நிகழ்வே.

கதையில் இல்லாமல் போயிருக்கும் சிருங்காரம், நா.பாவிற்கும் அவ்வகையான வருணனைகளிற்கும் வெகுதூரம் என்பதற்கு சான்று பகர்கிறது. ஆனால் மிகவும் நீண்ட எண்ண உரையாடல்கள் வாசிப்பின் ஒரு எல்லைக்குமேல் அயர்ச்சியை உருவாக்குகின்றன. இருப்பினும் வாசகனிற்கு நல்ல தகவல்களை சொல்ல வேண்டும் எனும் நா.பாவின் ஆர்வத்திற்கு முன்பாக அவர் மீது மதிப்பை மட்டுமே என்னால் உருவாக்கி கொள்ள முடிகிறது [ நான் படித்த அவரின் படைப்பு மணிபல்லவம் மட்டுமே ]. நாவலின் பல பகுதிகளிலும் அவர் சுவையான , அரிய தகவல்களை தந்து செல்கிறார். நூழிலாட்டு, வல்வில்வேட்டம், போன்ற சொற்கள் எதை உணர்த்துகின்றன என்பதை அறிதல் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. வில்லாதி வில்லன் எனும் சொற்றொடர் மூலம் இன்று நாம் உணர்ந்து கொள்ளும் அர்த்தமும் அச்சொற்றொடரிற்கு நா.பா நாவலில் தந்திருக்கும் அர்த்தத்தையும் ஒப்பிடும்போது எனக்கு என்னவோ செய்தது.

நாவலின் மூன்றாம் பாகத்தை தாண்டிய பின்பாக, அத்தியாயங்கள் தேவையற்று நீண்டு செல்வதான ஒரு உணர்வு தோன்றிவிடுகிறது. மன்னர்களையும், ராணிகளையும், இளவரசிகளையும், யுத்தங்களையும் பேசிடாது பூம்புகார் பட்டிணத்தில் வாழ்ந்திருந்த ஒரு சாதரண இளைஞனின் வாழ்க்கை கதையை தன் கற்பனையின் மூலம் புனைவாக்கியிருப்பதும், அக்கதையில் இடம்பெறும் சமய, தத்துவ வாதங்கள் மற்றும் நல்ல சுவையான தகவல்கள் என்பனவுமே வழமையான சரித்திரப் புனைவுகளிலிருந்து மணிபல்லவத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. மணிபல்லவம் வாரத் தொடராக வெளிவந்த காலத்தில் மகத்தான வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்றுகூட அதற்கான ரசிகர்களை கொண்டிருந்தாலும் இன்றைய வாசிப்பில் மணிபல்லவம் பெரிதான பரவசங்கள் எதையும் வழங்கிவிடவில்லை என்பதை பூம்புகாரின் வன்னிமன்ற காபலிகையான பைரவி என் கழுத்தை நெரித்தாலும் தயங்கிடாமல் கூறிடுவேன்.

16 comments:

 1. //மசாலா சினிமாவின் உச்ச நாயகர்களிற்காக உருவாக்கப்படும் கதை ஒன்றிலும் இருக்ககூடிய ஒற்றுமைகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்//

  இந்த நாவலில் மட்டுமல்ல, நான் படித்த பிற நா.பா வின் நாவல்களிலும் சினிமாதனமான கதாபாத்திரங்கள் அதிகம் இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு..(என்ட தான் கோளாறோ... )

  ReplyDelete
 2. என்ன தீடீர்னு தமிழ் நாவல்??? அதுவும் தியாகராஜ பாகவதர் காலத்தது......

  ReplyDelete
 3. நண்பர் கொழந்த, நா.பாவின் பிற நாவல்களை குறித்து அவற்றை படிக்காமல் நான் கருத்துக் கூறவியாலாது ஆனால் இந்நாவலில் பாத்திரங்களில் சினிமாதன்மை இல்லை என்று கூறவியலாது. நீண்ட நாளாக படிக்க ஆசைப்பட்ட நாவல். முன்பே தமிழ் புத்தகங்கள் குறித்து எழுதியிருக்கிறேன் எனவே இது திடீர் அல்ல :) கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 4. வாண்டுமாமாவின் சுயசரிதையைப் படித்திருக்கிறீர்களா? அதில் அவர் நா.பா.வைப் பற்றி அவர்களிருவரும் கல்கியில் பணியாற்றிய போது நிகழ்ந்த சில சம்பவங்களைப் பிட்டு பிட்டு வைத்துள்ளார்!

  படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்! சொல்லப் போனால் மொத்த புத்தகத்தில் இவர் ஒருவரைப் பற்றிதான் வாண்டுமாமா கொஞ்சம் போட்டு உடைத்தாற்போல் எழுதியிருப்பார்!

  கல்கியில் நா.பா. எந்தவொரு தொடரை எழுத ஆரம்பித்தாலும் உடனே வாசகர்களின் பாராட்டுக் கடிதங்கள் குவிந்து விடுமாம்! கிட்டத்தட்ட நாம் அடிக்கும் கும்மி கமெண்டுகள் போலத்தான் இதுவும்! அந்த காலத்திலேயே கும்மி மன்னராக விளங்கியிருக்கிறார் நா.பா.!

  அப்போதுதானே அவரது தொடர் நிறுத்தப்படாமல் வெளிவரும்! இக்கதையும் அதே போல் கல்கியில் தொடராக வந்ததே! ஆகையால் தான் பின்னாட்களில் ஜவ்வாக இழுக்கப்பட்டிருக்கக் கூடும்!

  இக்கதை கல்கியில் வெளிவந்த ஒரிஜினல் சித்திரங்களுடன் கூடிய பைண்டிங் ஒன்று என்னிடம் உள்ளது! வேறு ஏதோவொரு காரணத்துக்காக இதை வாங்கினேன்! ஆனால் இன்று வரை படிக்க மனம் வரவில்லை!

  பை த பை...ஜஸ்ட்டு மிஸ்ஸில் மீ த செகண்டு!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. தலைவர் அவர்களே, வாண்டுமாமாவின் சுயசரிதையை படிக்கவில்லை :)ஆனால் நா.பா மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார் என்பதை அறிவேன். கலக்கிட்டீங்க அய்யா என்று ஒரு வாசகர் எழுதும் கடித்தத்திற்கு நா.பாவின் எதிர்வினை எவ்வாறாக இருக்கும் என்பதை கற்பனை செய்தாலே சுவையாக இருக்கிறது. ஒரிஜினல் சித்திரங்களுடன் கூடிய பைண்டிங் என்றால் அது ஒரு பொக்கிஷமாக்கும். காலம் கூடிவரும்போது படித்து மகிழுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 6. மூன்று வருடங்களுக்கு முன் இளங்கலை படித்த போது இந்த புத்தகத்தை படித்தேன் பாஸ். தமிழ் சரித்திர நாவல்கள் அரசர்கள் அல்லாது, ஒரு சாதாரண மனிதன் முதன் முதலாக நாயகனாக உருபெற்றது இந்த நாவலில் தானாம். பழைய நினைவுகளை கிளறி விட்டீர்களே... :)

  ReplyDelete
 7. சாண்டில்யன்,கல்கி விரும்பி படித்துள்ளேன்.சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் படித்த பிறகு சரித்திர நாவலில் புதிய வெளிச்சம் கிடைத்தது.பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் படித்து வியந்திருக்கிறேன்.மணிபல்லவம் படித்துவிடுகிறேன்.நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. //தமிழ் நாவல் வகைகளில் சரித்திரப் புனைகதைகள், என் முதிரா இளம் பருவத்தில் நான் விரும்பிப் படித்தவைகளாகும். அவற்றில் இருந்த சாகசங்களும், காதலும், சிருங்காரமும் என்னை அவ்வகை நாவல்களுடன் மிகவும் நெருக்கமாக்கின.//

  எனக்கும் அப்படியே! கல்கியில் ஆரம்பித்த இந்தக் காதல், சாண்டில்யனில் முடிந்தது. பின்னர், வேறு யார் எழுத்தும் ருசிக்கவில்லை. :)

  //மணிபல்லவம் நாவலைப் படித்து முடித்தபோது, அந்நாவலிலும் இன்று தமிழ் மசாலா சினிமாவின் உச்ச நாயகர்களிற்காக உருவாக்கப்படும் கதை ஒன்றிலும் இருக்ககூடிய ஒற்றுமைகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்.//

  அந்தக் காலத்தில் ,சினிமா அதிகம் இல்லாத குறையை தீர்க்க நடத்திய முயற்சி போல. பின்னால்,சினிமாவில் நடக்கப் போகும் கூத்துக்களைப் பற்றி தெரிய வந்திருந்தால்... ;)
  மணிபல்லவம் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன்.ஆனால்,எப்படி இருக்குமோ என்ற தயக்கத்தின் காரணமாய் வாங்கவில்லை.எனக்கு எப்போதும் சாண்டில்யன் தான். :)

  ReplyDelete
 9. எனக்கு பிடித்த சரித்திர கதைகளில் இதுவும் ஒன்று.

  நன்றி காதலா !

  ReplyDelete
 10. நண்பர் பிரசன்னா ராஜன், பழைய நினைவுகள் இனிமையானவை அல்லவா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் உலக சினிமா ரசிகரே, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் படித்திருக்கிறேன். சிறப்பான நாவல் அது. ரத்தம் ஒரே நிறம்கூட வித்தியாசலாக இருக்கும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, சாண்டில்யனின் நாவல்கள் குறித்து எழுதுங்கள் :) கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் புதுவை சிவா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 11. வித்தியாசமான விமர்சனம்! சரித்திர கதைகள் ஒரு தனிரகம்தான்!

  ReplyDelete
 12. // கதையில் இல்லாமல் போயிருக்கும் சிருங்காரம், நா.பாவிற்கும் அவ்வகையான வருணனைகளிற்கும் வெகுதூரம் என்பதற்கு சான்று பகர்கிறது. //

  ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம ரேப் ட்ராகன் மாதிரி (சிருங்காரம் மற்றும் வருணனைகள்) வருமா காதலரே :))
  .

  ReplyDelete
 13. //சாண்டில்யனின் நாவல்கள் குறித்து எழுதுங்கள்//

  கண்டிப்பா!ஆனா,நான் அதை மறுபடி படிச்சு, பின்ன எழுதி... :)
  எப்ப நடக்குமோ தெரியல.ஆனா,கண்டிப்பா எழுதுவேன்.

  ReplyDelete
 14. நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, ஏன் இந்தப் புகழ்ச்சி, நான் என் கடமையைத்தானே செய்தேன் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, எப்பன்னாலும் எழுதுங்கள். கடந்த இரு வருடங்களாக புரட்சித்தீ பதிவு ட்ரெயிலர் பார்த்துக் கொண்டிருக்கும் எங்களிற்கு இதெல்லாம் ஜூஜூபி.. அக்காங் :))

  ReplyDelete
 15. சிறப்பாக ஒரு புத்தக விமர்சனம்

  ReplyDelete
 16. நண்பர் சிவ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete