
ஹாகூல் எனப்படும் ஆந்தைகளின் உலகில், பலவேறுபட்ட ஆந்தை இனங்களும் சுபீட்சமாக தம் வாழ்கையை நடாத்தி வாழ்ந்திருக்கின்றன. தூய ரத்தம் உடலில் ஓடும் டைடோஸ் எனும் ஆந்தைக்கூட்டமே ஆந்தைகள் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட, சர்வாதிகார போக்குடைய ஆந்தையான எஃகு அலகு, ஆந்தைகள் உலகின் அதிகாரத்தை தான் கைப்பற்றிக் கொண்டு ஆந்தைகள் உலகின் ஒரே ஒரு மன்னனாக தான் இருக்க விரும்புகிறது.
இதற்காக ஹாகூலில் வாழ்ந்திருக்கும் இளம் ஆந்தைகளை தன் ஆந்தை அடியாள்கள் மூலம் கடத்தி, அவற்றின் சிந்தனைகளை மழுங்கடித்து, தனக்காக போரிடக்கூடிய ஒரு சேனையை உருவாக்குகிறது எஃகு அலகு. இப்படியான ஒரு ஆந்தை கடத்தல்[ பிடித்தல்] படலத்தில், எஃகு அலகின் அடியாட்களின் பிடிக்குள் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக் கொள்ளுகிறார்கள் இளம் ஆந்தைகளான சொரெனும் அவனது சகோதரனுமான க்ளட்டும்.
க்ளட், டைடோஸ்கள் மத்தியில் தனக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரத்திற்காக எஃகு அலகின் பக்கம் சேர்ந்து கொள்ள, டைடோஸ்களின் கோட்டையிலிருந்து தப்பிச் செல்கிறான் சொரென். தன் தந்தை கூறிய ஆந்தை உலகின் காவலர்களின் சாகசக் கதைகளை தன் மனதில் கனவாக இருத்தி வாழும் சொரென், எஃகு அலகின் கொடிய திட்டத்திலிருந்து ஆந்தை உலகை காப்பாற்ற வேண்டி, ஹாகூல் ராஜ்யத்தின் காவலர்களை தேடி ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறான்….
Kathryn Lasky அவர்கள் சிறுவர்களிற்காக எழுதிய Guardians of Ga’Hoole எனும் மிகுபுனைவு கதை வரிசையினைத் தழுவியே Legend of The Guardians: The Owels of Ga’Hoole அசைவூட்டத் திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. 300ல் ஸ்பார்டானின் அதிரடி வீரர்களையும், வாட்ச்மேனில் தம் சூப்பர்ஹீரோ வாழ்வில் சலிப்புற்றுபோன மனிதர்களையும் திரையில் உலவவிட்ட இயக்குனர் Zack Snyder, ஆந்தைகளின் விசித்திர உலகை வெள்ளித்திரைக்கு எடுத்து வரப்போகிறார் என்பதை அறிந்தபோது, அதனை நம்பமுடியாது விழிகளை அகல விரித்தவர்களின் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
மிகுபுனைவு கதைகளில் கதாசிரியர்கள் சிருஷ்டித்த உலகங்களை திரையில் தீட்டுவது என்பது இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர், திறமையான ஒரு அணியின் கூட்டுடன் உருவாக்கியிருக்கும் ஆந்தைகளின் பூமி அசர வைக்கிறது. பொதுப்புத்தியில் ஆந்தைகள் இருளோடு தொடர்பு கொண்ட உயிரினங்களாக அறியப்பட்டு இருக்கையில், இயக்குனரின் ஆந்தைகள் உலகம் ஒளியால் சூழப்பட்ட, சந்துஷ்டி மிக்க, எழில் நிறைந்த ஒரு பூமியாக காட்டப்பட்டிருக்கிறது. திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்த ஆந்தைகளின் பூமிக்குள் ரசிகர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள்.
காடுகள், மலைகள், குகைகள், கடல், ஆகாயம் என ரகசியமான ஒரு கனவின் நனவு வடிவாக வியக்கவைக்கிறது செயற்கையான உத்திகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்னெய்டெரின் ஆந்தைகள் பூமி. இலைகள் மென்மையான காற்றில் நடனமிடுவதாகட்டும், அந்திச் சூரியனின் கதிர்கள் மேகங்களை ஊடுருவி சூழலை ரம்யமாக மாற்றி அடிப்பதாகட்டும், மழைத்துளிகளும், பனித்துளிகளும் அவற்றிற்கேயுரிய குளிர்ந்த அழகுடன் வீழ்ந்து சிதறுவதாகட்டும் அண்மைக்காலத்தில் இவ்வளவு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட அசைவூட்டக் காட்சிகளை நான் பார்த்ததில்லை எனலாம். சொரெனின் தங்கை, அவனது இறகுகளிற்குள் பொதிந்து தூங்கும்போது, அக்கணத்தின் மென்மையை, அந்த இறகு மெத்தையின் மென்மையை ரசிகனும் உணர்ந்து கொள்ளக்கூடிய தத்ரூபம் அது.
இயக்குனர் ஸாக் ஸ்னெய்டரிற்கு மென்னகர்வில் காட்சிகளை உருவாக்குவதில் உள்ள பிரியம் அலாதியானது. இத்திரைப்படத்திலும் அவ்வகையான காட்சிகள் உண்டு. குறிப்பாக ஆந்தைகளின் பறத்தல் காட்சிகள். மிகவும் ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பறத்தல் காட்சிகள் திரைப்படத்தில் ரசிகர்களை மயங்க செய்யும் அம்சங்களில் ஒன்று. அதிலும் புயல் மழைத்துளிகளினூடு சொரென் தன்னை இழந்து பறந்து செல்லும் காட்சியின் அழகு விவரிக்க முடியாத ஆனால் உணர மட்டுமே படக்கூடிய ஒன்றாகும். இவ்வகையான காட்சிகளின் அழகை மெருகேற்றுவதில் 3D நுட்பம் சிறப்பான பங்காற்றியிருக்கிறது.
சண்டைக் காட்சிகளிலும் ஸாக் ஸ்னெய்டர் தயங்கவில்லை. அதே மென்னகர்வுடன் சிறுவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் வகையில் ஆந்தைகளிற்கிடையான மோதல் காட்சிகளை அவர் திரைப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியான மோதல்கள் சலிப்படைய வைக்கின்றன.
ஆந்தைகள் உலகை உருவாக்குவதிலும், அதனை அற்புதமாக ரசிகர்களிற்கு பரிமாறுவதிலும் அபார வெற்றி கண்ட ஸ்னெய்டர், திரைப்படத்தின் பாத்திரங்களை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் வலுவானவையாக உருவாக்குவதில் தவறியிருக்கிறார். சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்ட பல கதாபாத்திரங்கள் படத்தில் இருப்பினும் அதில் ஒருவர்கூட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வேதனையானது.
சண்டைக்காட்சிகளில் இருந்த ஆக்ரோஷம், பாத்திரங்களின் உணர்வுகளில் சுரமிழந்திருக்கிறது. சாகசம், போராட்டம், சகோதர பாசம், லட்சியம், வீரம், மந்திரம் எனும் அம்சங்கள் கொண்ட கதை இருந்தும், மனதை கதை முழுமையாக ஆக்கிரமிக்காத வகையில் அமைந்திருக்கிறது கதை நகர்வு. மேலும் அசைவூட்ட படைப்புக்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய நகைச்சுவையை சிறப்பாக பயன்படுத்தியிருக்ககூடிய பாத்திரங்கள் இருந்தும் திரைப்படத்தில் நகைச்சுவை மிகவும் குறைந்த அளவிலேயே காணக்கிடைக்கிறது. ஸாக் ஸ்னெய்டரிற்கும் நகைச்சுவைக்கும் இடையில் தூரம் அதிகமாக இருக்கிறது.
செரொனின் பறத்தல் முதல், காவலர்களை தேடிய அவன் பயணம், எஃகு அலகுடானான இறுதி மோதல் என படத்தின் நிகழ்வுகள் யாவும் மிகவும் அவசரகதியில் பொட்டலமாக்கப்பட்டு பார்வையாளன் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக எழும் உணர்வை தவிர்க்க முடியாது. ஒன்றரை மணி நேரத்தினுள் அசர வைக்கும் ஆந்தை உலகையும், ஆக்ஷனையும் வழங்கிய ஸ்னெய்டர், உணர்வுகளால் ரசிகர் மனதை கொத்தும் வாய்ப்பை இழந்திருக்கிறார். ஆந்தைகள் ராஜ்யமான ஹாகூலின் அனுபவம், மெலிதான ஏமாற்றத்தையும் கூடவே ஒரு சிறகாக உதிர்த்து செல்கிறது. [**]
ட்ரெய்லர்