Wednesday, February 3, 2010

முத்தம் கேட்கும் தவளை


கேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி.

சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசை இறுக்கமாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

la-princesse-et-la-grenouille-2010-16870-1932302936 சார்லொட்டிற்கு நல்லதொரு நண்பியாக டினா இருக்கிறாள். வசதிகளற்ற கறுப்பின குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். டினாவின் தந்தைக்கு ஒரு தரமான உணவு விடுதியை ஆரம்பித்து நடத்த வேண்டுமெனும் ஒரு கனவு இருக்கிறது. டினாவும் சிறு வயதிலேயே சமையல் கலையில் சிறந்தவளாக விளங்குகிறாள். தன் தந்தையின் கனவை தன் மனதிலும் இருத்தி வளர்க்கிறாள் அவள்.

காலங்கள் கனவுகளிற்காக காத்திருப்பதில்லை. ஆர்லியன்ஸின் அழகான மிசிசிபி நதியோடு அதுவும் நிற்காது ஓடிச் செல்கிறது. டினாவின் தந்தை தன் கனவை நனவாக்காது இவ்வுலகை விட்டு நீங்கி விடுகிறார்.

பெரியவளாகியிருக்கும் டினா, அந்தக் கனவை தான் நனவாக்கிக் காட்டுவேன் எனும் வைராக்கியத்தில் இரவு, பகல் பாராது உணவு விடுதி ஒன்றில் பணிபுரிகிறாள். தன் இளம் வயதிற்குரிய சுகங்களை தன் கனவிற்காக தியாகம் செய்கிறாள்.


la-princesse-et-la-grenouille-2010-16870-1806884052 நியூ ஆர்லியன்ஸ் நகரில் பிரபல்யமான Mardi Gras [ கிறிஸ்தவர்களின் நோன்பு காலம் ஆரம்பமாவதற்கு முதல் வரும் செவ்வாய்க் கிழமை] கேளிக்கைக் கொண்டாட்டம் நெருங்குகிறது. இவ்வேளையில் அங்கு மால்டினியா நாட்டின் இளவரசன் நவீன் வருகை தருகிறார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களில் அதிகம் பிரியம் கொண்ட நவீன், எந்த வேலையையும் செய்யத் தெரியாதவன்.

நவீனின் இந்தப் போக்கை கண்டிக்கும் அவன் பெற்றோர், அவனிற்கு தாங்கள் வழங்கி வந்த பண உதவியை நிறுத்தி விடுகிறார்கள். செல்வந்தர் பிக் டாடியின் மகள் சார்லொட்டை திருமணம் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொத்துக்கள் வழி சுக வாழ்வு வாழும் ஆசை நவீன் மனதிலிருக்கிறது. நவீனின் உதவியாளர் லாரன்ஸ், காலகாலமாக பிறரிற்காக உழைத்தே களைத்துப் போனவர். நவீனிற்கு எடுபிடியாக நியூ ஆர்லியன்ஸிற்கு அவரும் வருகிறார்.

இளவரசன் நவீன் நியூ ஆர்லியன்ஸிற்கு வருவதை அறியும் சார்லொட் துள்ளிக் குதிக்கிறாள். பிக் டாடி, தன் வீட்டில் ஏற்பாடு செய்யும் பெரும் விருந்து ஒன்றிற்கு இளவரசனை அழைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். எப்படியாவது நவீனின் இதயத்திற்குள் இடம் பிடித்து விட வேண்டுமென்பதில் சார்லொட் அக்கறை கொண்டவளாகவிருக்கிறாள்.

la-princesse-et-la-grenouille-2010-16870-293513387 ஆனால் நவீனின் வரவு நியூ ஆர்லியன்ஸ் நகரின் இன்னொரு நபரின் மனதிலும் கனவுகளை விரிக்கிறது. அவர்தான் டாக்டர் பசிலியர். டாக்டர் பசிலியர் ஒரு வூடு மந்திரவாதி, கெட்ட ஆவிகளின் தோஸ்த். பிக் டாடியைக் கவிழ்த்து அவன் சொத்துக்களை எல்லாம் தான் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என விரும்பும் பசிலியர், தன் மனதில் ஒரு கொடிய திட்டத்தை உருவாக்குகிறான்.

தன் கடின உழைப்பால் தான் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு, தன் தந்தை உணவு விடுதியாக மாற்றக் கனவு கண்ட சீனி ஆலையொன்றை வாங்குவதற்கு சிறிதளவு முன் பணத்தை சொத்து தரகர்களிடம் கையளிக்கிறாள் டினா. தன் கனவுகள் நிறைவேறும் நாள் வந்ததே எனும் எண்ணம் அவள் களைப்பை சிறிதளவு போக்குகிறது.

நியூ ஆர்லியன்ஸிற்கு வந்து சேர்ந்த இளவரசன் நவீன், வீதிகளில் ஆடிப் பாடி நேரத்தைக் கழிக்கிறான். லாரன்ஸ் இதனை அதிகம் விரும்பவில்லை. நியூ ஆர்லியன்ஸிற்கு வந்த காரியத்தை பார்க்கும்படி நவீனிற்கு ஆலோசனை தருகிறார் அவர். இவ்வேளையில் தெருவில் நவீனை அணுகும் டாக்டர் பசிலியர் அவனுடன் நயமாகப் பேசி தன் வூடு சூனிய வீட்டிற்கு நவீனையும், லாரன்ஸையும் அழைத்துச் செல்கிறான்.

la-princesse-et-la-grenouille-2010-16870-505218150 நவீன், லாரன்ஸ் இருவரிற்கும் தன் மந்திரச் சீட்டுக்களால் வித்தை காட்டும் பசிலியர், இருவரது மனங்களையும் மாற்ற ஆரம்பிக்கிறான். நவீனிற்கு பசிலியரின் சதி புரியவில்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கஷ்டப்பட்ட லாரன்ஸ், நவீனிற்குப் பதிலாக தான் இளவரசனாக மாறி சுக வாழ்வு வாழலாம் எனும் ஆசையில் பசிலியரின் சதியில் கூட்டுச் சேர்கிறான். இதன் முடிவாக நவீனை ஒரு தவளையாக உருமாற்றி விடுகிறான் பசிலியர். லாரன்ஸ், இளவரசன் நவீனின் தோற்றத்தைப் பெறுகிறான்.

பிக் டாடி வீட்டில் விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. சார்லொட் தன்னை அழகு செய்வதில் மும்முரமாக ஈடுபடுகிறாள். விருந்திற்கான உணவு வகைகளைத் தயாரிப்பதும், பரிமாறுவதற்குமான பொறுப்பை டினா ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

உணவு வகைகளை விருந்தினர்களிற்குப் பரிமாறிக் கொண்டிருக்கும் டினாவை நெருங்கும் சீனி ஆலையின் சொத்து தரகர்கள், வரும் புதன் கிழமைக்கு முன்பாக சீனி ஆலைக்குரிய மொத்தப் பணத்தையும் டினா செலுத்தாவிடில் சீனி ஆலையானது வேறு ஒருவரின் கைக்கு மாறிவிடும் என்று ஒரு அதிர் குண்டைப் போடுகிறார்கள். இச்செய்தியால் உடைந்து போகிறாள் டினா.

இத்தருணத்தில் நவீனாக உருமாற்றம் பெற்றிருக்கும் லாரன்ஸ், பிக் டாடியின் மாளிகைக்கு சமூகமளிக்க, விருந்து களை கட்டுகிறது. சார்லொட், போலி இளவரசனுடன் நடனம் ஆடுகிறாள். தன் கனவுகள் சிதறிய சோகத்தில் மாளிகையின் மாடியிலிருந்து வானத்தில் மின்னும் அதிர்ஷ்ட நட்சத்திரத்தை பார்த்து தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள் டினா. அவள் வேண்டி முடித்த கணத்தில் அவள் அருகில் வந்து நிற்கிறது நவீன் தவளை.

la-princesse-et-la-grenouille-2010-16870-1525048751 தவளையை தன் அருகில் காணும் டினா, உனக்கென்ன முத்தமா வேண்டும் என அதனிடம் கிண்டலாகக் கேட்க, டினாவின் ஆடையலங்காரத்தைப் பார்த்து அவள் ஒரு இளவரசியென தவறாகப் புரிந்து கொள்ளும் நவீன் தவளை ஆம் எனப் பதிலளிக்கிறது.

பேசும் தவளையைக் கண்டு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடையும் டினா, தவளையை விரட்ட முயன்று தோற்கிறாள். தன் சோகக் கதையை டினாவிடம் கூறும் நவீன் தவளை, தேவதைக் கதைகளில் வருவது போல் ஒரு இளவரசி முத்தம் தந்தால் தான் மீண்டும் மனித உருப் பெறலாம் என்று கூறுகிறது.

டினாவின் கதையைக் கேட்கும் நவீன் தவளை, தான் மனித உருப் பெற்றதும் டினா தன் உணவு விடுதியை ஆரம்பிப்பதற்கு தேவையான பணத்தை தான் வழங்குவதாக டினாவிடம் உறுதியளிக்கிறது. தன் கனவை நிறைவேற்றும் ஒரே ஒரு காரணத்திற்காக நவீன் தவளையை முத்தமிடுகிறாள் டினா. ஆனால் நவீனைப் போன்றே டினாவும் ஒரு தவளையாக உருமாறி விடுகிறாள்!!

தவளைகளாக உருமாறிய நவீனும், டினாவும் பிக்டாடியின் மாளிகைக்கு வந்த பசிலியரிடம் அகப்படாது தப்பிக்கிறார்கள். தங்கள் மேல் நிகழ்த்தப்பட்ட துர் மந்திரத்தைக் கலைப்பதற்காக அவர்கள் நியூ ஆர்லியன்ஸின் சதுப்பு ஏரிக் காடுகளிற்குள் வசிக்கும் மந்திரவாதி மம்மா la-princesse-et-la-grenouille-2010-16870-902173703 ஓடியைத் தேடிச் செல்கிறார்கள். இவர்களின் இந்த சாகசப் பயணத்தில் இவர்களிற்கு துணையாக வந்து சேர்கிறார்கள் குண்டு முதலையான லூயிஸ், மற்றும் பல் விழுந்த மின்மினிப் பூச்சி ரேய் ஆகியோர்.

நவீன், டினா மனித உருவத்தை மீளப் பெற்றார்களா? அவர்கள் இருவரது மனக் கனவுகள் நிறைவேறியதா? என்பதை படத்தின் மீதிக் கதை அட்டகாசமாக விபரிக்கிறது.

தன் கனவை நிறைவேற்றுவதற்காக, நம்பிக்கையும் கடும் உழைப்பும் கொண்டு, தன் முன் விழும் தடைகளை தகர்த்தெறியும் ஒரு கறுப்பின இளம் பெண்ணின் கதையை, மயக்கடிக்கும் இசை நிறைந்த பாடல்கள், நடனம், காமெடி, சாகசம், மென்மையான காதல் என்பவற்றை கச்சிதமாகக் கலந்து சொல்கிறது வால்ட் டிஸ்னியின் The Princess And The Frog எனும் அனிமேஷன் திரைப்படம்.

நியூ ஆர்லியன்ஸ் நகரின் [1920] கிறங்கடிக்கும் அழகையும், கொண்டாட்ட உலகையும், சதுப்பு ஏரிக் காடுகளின் மர்மமான அழகையும் அசர வைக்கும் அழகுடன் விருந்தாக வழங்குகிறது திரைப்படம்.

la-princesse-et-la-grenouille-2010-16870-299738659 படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இசை. காட்சிகள் கண்ணிற்கு விருந்தெனில், இசையும், பாடல்களும், செவிகளிற்கும், மனதிற்கும் மாவிருந்து படைக்கின்றன. ஜாஸ், ஃப்ளூஸ், கிரியோல் இசை என்பவற்றுடன் கரீபியன் ரம் கலந்து கலக்கி விட்டிருக்கிறார் இசையமைப்பாளார் Randy Newman.

குண்டு முதலை லூயிஸ் தன்னை டிரம்பெட் [Trumpet] கலைஞனாக தவளைகளிடம் அறிமுகம் செய்து கொள்ளும் When We’re Human பாடல் டிரம்பெட் சரவெடி. நவீன், டினா தவளைகளிற்கு சதுப்பு ஏரிக் காட்டிற்குள்ளாக வழிகாட்டியவாறே மின்மினி ரே, தன் குடும்பத்துடன் வழங்கும் Gonna Take you There பாடல் சதுப்பு ஏரிக் காட்டை நட்சத்திரக் காடாக்கி விடுகிறது. ரம்யமான இரவில் தன் காதலியைப் பார்த்து ரேய் பாடும் Ma Belle Evangeline[ என்னழகே ஏவாஞ்சலின்] பாடல் மனங்களில் வண்ணத் தாமரைகளை சுற்றி ஓட வைக்கும் தேன் கலந்த ரொமான்ஸ் மெட்டு. மம்மா ஓடியின் மர வீட்டில் இடம்பெறும் Dig A Little Deeper பாடலும், செந்நாரைகளின் நடனமும் அக்மார்க் ஆர்லியன்ஸ் கொஸ்பல் குத்து.

la-princesse-et-la-grenouille-2010-16870-709924432 வூடு மந்திரவாதி டாக்டர் பசிலியரின் நடனத்தில் பிரபல பாடகர்கள் பிரின்ஸ், மைக்கல் ஜாக்சன் ஆகியோரின் நளினத்தைக் காணமுடிகிறது.[ பாடகர் பிரின்ஸ் கூட டாக்டர் பசிலியர் போல் கையில் ஒரு கோலை வைத்திருந்தாக ஞாபகம் இருக்கிறது]

கதையில் பிரதான பாத்திரங்களான டினா, நவீன், பசிலியர் ஆகியோரை எகிறித்தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் சாப்பாட்டுப் பிரியரும், டிரம்பெட் வித்தகருமான நடன மாமணி குண்டு முதலையார் லூயிஸ் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரோமியோவை காமெடி ஹீரோவாக்கி விடுமளவிற்கு தன் காதலி ஏவாஞ்சிலினை உயிராகக் காதலிக்கும் மின்மினி ரேய். இவர்களில் முதலிடம் மின்மினி ரேய்க்குத்தான்.

கறுப்பினத்தவர்களிற்குரிய கவர்ச்சியான மொழி உச்சரிப்புடன் பேசிக் கொண்டு ரேய் வரும் காட்சிகள் யாவும் மிளிர்கிறது. ரேய் தன் காதலியை யார் என்று வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கும். இறுதிக் காட்சிகளில் ரேய் யாரிற்காவது கண்ணீரை வரவழைக்கத் தவறினால், அவர்களிற்கு உலகின் மகா கல் நெஞ்சர்கள் என்ற பட்டத்தை தாராளமாகத் தரலாம். படம் நிறைவடையும்போது வானத்தில் ஒளிரும் பிரகாசமான நட்சத்திரமென மனதில் நிறைந்து விடுகிறது ரேயின் பாத்திரம்.

la-princesse-et-la-grenouille-2010-16870-827018211 இந்த 2D அனிமேஷன் படத்தை திறம்பட இயக்கியிருப்பவர்கள் Ron Clements மற்றும் John Musker. 2Dயில் இன்னமும் மந்திரம் மாயம் காட்ட எங்களால் முடியும் என்று வால்ட் டிஸ்னி வல்லுனர்கள் இப்படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார்கள். இது தொடர வேண்டும் என்பதே என் அவா.

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்து மகிழ வேண்டிய படமிது. காதலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்! படத்தின் முடிவில் காதலியிடமிருந்து ஒரு முத்தமாவது கிடைக்காவிடில், காதலர்கள் அந்தக் காதலியைக் கழட்டி விடுவது நல்லது!! [***]








ட்ரெயிலர்

11 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கும் டிஸ்னியின் 2D படம்! எதிர்பார்ப்பு எல்லை மீறுகிறது!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. அருமையான விமர்சனம்.
  சண்டே குடும்பத்தோடு பாக்க ஒரு படம் கிடைச்சிருச்சு.
  டவுன்லோடு போட்டுடறேன் .நன்றி தல.
  ஓட்டு போட்டுட்டேன்.

  ReplyDelete
 3. மீ த தேர்டு . . ஹீ ஹீ . . . இது ஒரு நல்ல படம் என்று பாலாவும் எழுதியிருக்கிறார் . . இந்த மாதிரிப் படங்கள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். . (பிடித்த இன்னொரு படம் - பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட்) . . நாமெல்லாம் யூத்து என்று மறுபடி நிரூபித்திருக்கும் காதலருக்கு ஒரு ஓ !!! :-)

  ReplyDelete
 4. ஆஹா . . அண்ணாமலையான் மூணாவதா கருத்து போட்டு, என்ன மீ த ஃபோர்த்து ஆக்கிட்டாரு .. (இப்போ ஃபிஃப்த்து . . ) . .

  ReplyDelete
 5. காதலரே,
  //சஹாரா பூக்கள் பூக்குதோ ///

  // நீ முத்தம் ஒன்று ///

  பாடல்களுடன் விமர்சனம் அருமை காதலரே...

  அன்புடன்,
  லக்கி லிமட்

  ReplyDelete
 6. நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க நண்பா
  //படத்தின் முடிவில் காதலியிடமிருந்து ஒரு முத்தமாவது கிடைக்காவிடில், காதலர்கள் அந்தக் காதலியைக் கழட்டி விடுவது நல்லது!! [***]//
  இது சூப்பர்

  ReplyDelete
 7. தலைவர் அவர்களே உங்கள் எதிர்பார்ப்பை படம் தீர்த்து வைக்கும் தயங்காது பார்த்திடுங்கள்.

  நண்பர் கைலாஷ், குடும்பத்தோடு ஆனந்தமாக நேரத்தைக் கழிப்பதற்கு இது உகந்த படமே. கருத்துக்களிற்கும் வோட்டுக்களிற்கும் நன்றி.

  நண்பர் அண்ணாமலையான், உங்கள் கருத்துகள் சரியானதே, நன்றி.

  நண்பர் கருந்தேள், நாமெல்லாம் யூத் என்று நிரூபிக்க வேண்டியதை எண்ணித்தான் மனம் கவலை கொள்கிறது!! நண்பர் பாலா மிகச்சரியாகவே எழுதியிருக்கிறார். சிறப்பான படமிது. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் லக்கி லிமட், உங்கள் ரசனையான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் கார்த்திகேயன், இப்படி ஒரு படத்தைப் பர்த்துவிட்டு முத்தம் தராமல் இருந்தால் அந்தக் காதலி வேஸ்ட். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 8. யூத்து அண்ணன்கள் எல்லாருக்கும் என்னுடைய வணக்கம்.

  வயசுல என்னைவிட நீங்க எல்லாரும் பெரியவங்க என்பதால் நீங்கள் எல்லோருமே யூத்து என்பதை மறுக்க முடியாது. அண்ணன் சொல் தட்டாத தம்பி அல்லவா?

  மற்றபடி இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதை அண்ணன் கனவுகளின் காதலன் சொல்லி விட்டதால் நோ அப்பீல்.

  ReplyDelete
 9. வலையுலக மார்க்கண்டேயர் விஸ்வா அவர்களே, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 10. உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்.....
  வந்து அவசியம் பாத்துட்டு போங்க தல....

  ReplyDelete