Sunday, February 14, 2010

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி


தெஹரான், 1958.

pap1 தெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.

நாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை மதிக்கும் நாசீர் வேறு வேலைகள் செய்வதில் விருப்பமின்றி இருக்கிறான்.சில தினங்களிற்கு முன்பாக வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் ஒன்றின் போது அவன் மனைவி நகீட், அவனுடையை டார் வாத்தியத்தை முறித்து விடுகிறாள்.

தன் வாத்தியக்கருவி உடைந்து போனது நாசீர் அலிக்கு அவன் வாழ்வின் ஆதாரமே நொருங்கிப் போனது போன்ற உணர்வைத் தருகிறது. தனக்கு மிக நெருக்கமான ஒன்றை இழந்துவிட்ட உணர்வில், இசைக்கருவிகளை விற்கும் கடை ஒன்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன அவனுடைய தளர்வுற்ற கால்கள்.

வாத்தியக் கருவிகள் விற்கும் கடையின் உரிமையாளன் மிர்ஷா, நாசீரை உவகையுடன் வரவேற்கிறான். நாசீரின் டார் உடைந்து விட்ட செய்தியை அறியும் மிர்ஷா, தன் கடையிலிருக்கும் ஒரு டார் வாத்தியத்தை நாசீரிற்கு தருகிறான்.

மிர்ஷா தந்த டார் வாத்தியத்தை இசைத்துப் பார்க்கும் நாசீர், அவ்வாத்தியம் எழுப்பும் இசையில் திருப்தி கொள்ளாதவனாக இருக்கிறான். தன் கடையில் மிகையாக இருக்கும் ஈரலிப்பே டார் வாத்தியத்தை பாதித்திருப்பதாகக் கூறும் மிர்ஷா, நாசீர் வீட்டின் உலர்ந்த ஓர் பகுதியில் ஒரு வாரம் கருவி இருக்குமானால் அது தன் இனிய இசையை வழங்க தயாராகிவிடும் என்று கூறுகிறான்.

ஒரு வார காலம் தன் வீட்டில் வைத்திருந்த பின்னும், புதிய டார் கருவி எழுப்பும் இசையில் திருப்தி பெறாத நாசீர், கருவியை மீண்டும் மிர்ஷாவிடம் எடுத்துச் செல்கிறான். இவ்வாறாக ஒரு மாத காலத்தில் மிர்ஷா வழங்கிய நான்கு டார் வாத்தியங்கள் தரும் இசையிலும் நிறைவடையாத நாசீர் அலி, மிர்ஷாவிடம் கோபித்துக் கொள்கிறான்.

pap2 மனம் சோர்வடைந்த நிலையில் தன் வீட்டில் முடங்கியிருக்கும் நாசீர் அலியைக் காண அவன் நண்பன் மனோட்சேர், நாசீரின் வீட்டிற்கு வருகிறான். நாசீரின் சோர்வான தோற்றத்தைக் காணும் அவன், ஈரான் நாடு தற்போதிருக்கும் நிலையில் எவருமே சுகமாக இருக்க முடியாது என்று அலட்டிக் கொள்கிறான். 1953ல் CIA மற்றும் ஆங்கிலேயர்களின் துணையுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்பாக ஈரானில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பது அவன் கருத்து.

நாசீரின் கவலைக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் மனோட்சேர், மஸாட் நகரிலிருக்கும் தன் நண்பன் ஒருவனிடம் அருமையான டார் வாத்தியம் ஒன்று இருப்பதாகக் தெரிவிக்கிகிறான். நாசீர் தன் நண்பனை அங்கு சென்று சந்தித்தால் அவன் அதிர்ஷ்டத்தை அவனால் கண்டடைய முடியும் என்றும் நாசீரை உற்சாகப்படுத்தி விடைபெறுகிறான் மனோட்சேர்.

சில நாட்களின் பின் தன் மனைவி நகீட்டிடம், தான் மஸாட் நகரிற்கு செல்ல விரும்பும் தகவலைக் கூறுகிறான் நாசீர். அவர்களின் கடைக்குட்டிப் பையனான மொஸாபரை யார் பார்த்துக் கொள்வது என்பதில் அவர்களிற்கிடையில் தகராறு ஏற்படுகிறது. வேறு வழியின்றி மொஸாபரையும் தன்னுடன் மஸாட்டிற்கு அழைத்துச் செல்கிறான் நாசீர்.

நீண்டதொரு பஸ் பயணத்தின் பின்பாக அவர்களிருவரும் மாஸட் நகரை வந்தடைகிறார்கள். பஸ் பயணத்தின்போது இடைவிடாது பாடல்களை பாடி சக பயணிகளின் சாபத்தை வாங்கிக் கொள்கிறான் சிறுவன் மொஸாபர். நாசீர், மொஸாபாரின் பாடல்களால் காது கேட்காத நிலைக்கு வந்து விட்டிருக்க்கிறான். தெருவில் செல்லும் வாகனங்களின் ஹாரன் ஓலி கூட அவன் காதில் புக மறுத்து விடுகிறது.

மாஸாட் நகரின் இருண்ட தெருக்கள் வழியே தாம் தேடி வந்த நபரான ஹவுசானின் வீட்டை வந்து அடைகிறார்கள் நாசீரும், மொஸாபரும். அவர்களை மகிழ்சியுடன் வரவேற்கும் ஹவுசான், அவர்களை தன் இல்லத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.

நாசீர் சற்றுப் பதட்டமான நிலையிலிருப்பதை அவதானிக்கும் ஹவுசான், நாசீரை இளைப்பாற்றுவதற்காக அபின் நிரம்பிய சுங்கான் ஒன்றை புகைப்பதற்காக அவனிடம் தருகிறான். பின்பு தன்னிடம் இருக்கும் டார் வாத்தியத்தை வாசிப்பதற்காக நாசீரிடம் கையளிக்கிறான்.

அபின் தந்த இதமான மயக்கத்தில் அந்த டார் வாத்தியத்தை இசைக்கும் நாசீர் அது தரும் இசையில் திருப்தி கொள்கிறான். இவ்வளவு ரம்யமான இசையை இதுவரை தான் கேட்டதில்லை எனக்கூறும் ஹவுசான், நாசீரை மேலும் கருவியை இசைக்கும்படி வேண்டுகிறான். 2000 டுமான்கள் கொடுத்து அந்த டாரை ஹவுசானிடமிருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் நாசீர். இம்முறை சிறுவன் மொஸாபர் அருந்திய பாலில் அபின் சிறிதளவு கலக்கப்பட்டதால் பயணம் அவன் பாடல்களில்லாமல் இனிதே கழிந்தது.

pap4 காலையில் விழித்தெழும் நாசீர், சிகை திருத்தும் நிலையம், மீசை திருத்தும் நிலையம் என்பவற்றிற்கு சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் ஆடைகளில் மிகவும் அழகான ஆடைகளை அணிந்து கொள்கிறான்.

pap3 நாசீரின் நடவடிக்கைகளை கவனிக்கும் மனைவி நகீட், ஷா மன்னரைச் சந்திக்க செல்கிறாயா என அவனைக் கிண்டல் செய்கிறாள். மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும்வரை அமைதியாக காத்திருக்கிறான் நாசீர். அவர்கள் கிளம்பிச் சென்றபின், தன் கடைக்குட்டிப் பையன் மொஸாபரை அயலில் உள்ள வீடு ஒன்றில் கொண்டு விடுகிறான்.

வீடு திரும்பும் நாசீர் ஒர் சிகரெட்டை ரசித்துப் புகைக்கிறான். அவன் விரல்கள் டார் இசைக்கருவியை இசைக்கும் முன்பாக அவன் விழிகள் நீண்ட நேரம் அக்கருவியின் மீது நிலைத்திருந்தன.

டார் வாத்தியத்தை இசைக்க ஆரம்பிக்கிறான் நாசீர், அதிலிருந்து எழும் இனிய இசை மெல்ல மெல்ல அவன் காதுகளில் அபஸ்வரமாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. எந்த ஒரு டார் வாத்தியமும் அவனிற்கு இசைக்கும் இன்பத்தை வழங்காத நிலையில், நாசீர் அலி இறந்து விடுவது எனத் தீர்மானிக்கிறான். அமைதியாகத் தன் கட்டிலில் சென்று படுத்துக் கொள்கிறான் நாசீர்.

எட்டு நாட்களிற்கு பின்பாக நாசீரின் உடல், அவன் அன்னையைப் புதைத்த கல்லறையில் அவளிற்கருகில் அடக்கம் செய்யப்படுகிறது. அவனை அறிந்தவர்கள் யாவரும் அன்று அந்தக் கல்லறையின் அருகில் இருந்தார்கள்……

நாசீரின் மரணத்திற்கு முன்பான எட்டு நாட்களிலும் நிகழும் சம்பவங்கள் வழி, நாசீரின் வாழ்கையை தன் அற்புதமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களாலும், சிறப்பான கதை சொல்லலாலும் எம்முன் கொணர்ந்திருக்கிறார் திறமைமிகு கலைஞியான Marjane Satrapi.

நாசீரிற்கும் அவன் தாய், சகோதரன், சகோதரி ஆகியோரிற்கிடையான உறவு, அவனது இசைப்பயிற்சி, அவனது காதல் தோல்வி, நகீட்டுடான அவனது திருமணம், அவனது குழந்தைகளின் எதிர்காலம், மரண தேவன் அஸ்ரேலுடனான உரையாடல் என நாசீரின் மனதில் விரியும் காட்சிகள் மூலம் வாசகனை நாசீரின் மனவேதனைகள், ஏக்கங்கள், தோல்விகள், சின்ன சின்ன இன்பங்கள் என்பவற்றினூடாக வேதனையும், நகைச்சுவையும் தெளித்து பயணிக்க வைக்கிறார் மார்ஜேன் சட்ராபி.

pap5 சட்ராபியின் முன்னைய கதையான Persepolis ல் இருந்தளவு அரசியல் இக்கதையில் இல்லை. எனினும் சில பாத்திரங்கள் ஈரானின் அரசியல் நிகழ்வுகள் குறித்து தம் பார்வையை முன்வைக்கவே செய்கின்றன.

கதை நெடுகிலும் மனதை தும்பை விரல்களால் வருடிச்செல்லும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. சூபி ஞானி, மற்றும் மரண தேவன் அஸ்ரேலுடன் நாசீர் நடாத்தும் உரையாடல்கள் அற்புதமானவை.

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாசீர், தான் இன்னமும் இறக்காமல் இருக்க காரணம் யாரோ தனக்காகப் பிரார்த்திப்பதே என எண்ணுகிறான். அது தன் மூத்த மகளாக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவன் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவனிற்காக பிரார்திப்பது யார் என்பது தெரியவரும் அந்தச் சித்திரப்பக்கம் மனங்களை உணர்ச்சி சுனாமியாக்கிவிடும்.

நாசீர் ஏன் அந்த டார் வாத்தியத்தை அளவற்ற அன்புடன் இசைக்கிறான், நேசிக்கிறான்? அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா? இல்லை நண்பர்களே, அந்த டார் வாத்தியத்தில் நாசீர் இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.

நகீட், அவன் டாரை உடைத்தபோது கூட அவன் காதல் உடைந்து விடவில்லை, ஆனால் தெஹரானின் தெருவொன்றில் ஒரு பெண்ணிடமிருந்து வரும் சில வார்த்தைகள் நாசீரையே முற்றிலுமாக உடைத்து விடுகிறது….

marjane_satrapi_vincent_paronnaud மார்ஜேன் சட்ராபி, 1966ல் ஈரானில் பிறந்தவர். ஈரானில் அரசியல் நிகழ்வுகள் காரணமாக வியன்னாவிற்கு தன் கல்வியை தொடரச் சென்றவர். பின்பு தன் கல்வியை பிரான்சிலும் தொடர்ந்தார். தற்போது பாரிசில் வசித்து வருகிறார்.

அவரது முதல் சித்திர நாவலான Persepolis அவரிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் இக்கதையை அவர் Vincent Parnnaud வுடன் சேர்ந்து ஒரு அனிமேஷன் படமாக உருவாக்கினார். இத்திரைப்படம் 2007ல் கேன் திரைப்படவிழாவில் ஜூரி விருதையும், அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கவுரவமான கலை விருதான செஸார் விருதுகள் இரண்டையும் வென்றது. தமிழில் விடியல் பதிப்பகம் இந்நாவலை ஈரான் – குழந்தைப்பருவம், திரும்புதல் எனும் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறது. எனவே அச்சித்திர நாவலைப் படிக்கத் தவறாதீர்கள்.

pap6 Poulet Aux Prune சித்திரநாவல் 2004ல் Angouleme காமிக்ஸ் விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான விருதை வென்றது. சட்ராபி மீண்டும் வன்சென் பார்னோவுடன் இணைந்து இக்கதையை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இத்திரைப்படம் அனிமேஷன் வடிவமாக இருக்கப்போவதில்லை. நிஜ நடிகர்களை கொண்டு படத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம். இச்சித்திர நாவலின் ஆங்கிலப் பதிப்பு Chicken With Plums எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி நாசீரிற்கு பிடித்தமான உணவு, அவன் கனவுகளில் அதுவே நடிகை சோபியா லாரனாக உருமாற்றம் கொள்கிறது. திறந்து கிடக்கும் மலை போன்ற சோபியாவின் மார்பகங்களின் இன்பத்தில் உறங்கிப்போகிறான் நாசீர். அவன் வாழ்வில் இன்பத்தின் வரவும், வெளியேற்றமும் சோபியா வடிவில் எழுகிறது. அவனிற்கு கிடைக்கும் இச்சிறு இன்பங்களைக் கூட உடைத்து அவன் வாழ்வையே மடிந்து போகச் செய்து விடும் வார்த்தைகளை நாம் காதல் என்றும் அழைக்கலாம். [****]

வாலிப, வயோதிப அன்பர்கள் அனைவரிற்கும் மன்மதனின் காதலர் தின நல்லாசிகள்!!

12 comments:

 1. அருமையான பதிவு
  http://vittalankavithaigal.blogspot.com/

  ReplyDelete
 2. தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசத்தால் கவரப்பட்டு வாசித்தாலும் இன்றுதான் பதில் போடக் கிடைத்தது.

  அருமையான பதிவு நண்பரே. கறுப்பு வெள்ளையில் வித்தியாசமான பாணியில் அமைந்த சித்திரங்கள் வித்தியாசமாக இருந்தது.

  டொரண்டில் தேடிப் பார்த்தும் கிடைக்காத புத்தகம் இது என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete
 3. அன்பு நண்பரே,

  பல்வேறு வண்ணங்களில் அசத்தும் வண்ணம் சித்திரங்களை கொண்ட கதைகள் வந்த போதிலும், தெரிந்த கதையை இரு வண்ணங்களில் சுமாரான சித்திரங்களுடன் (மேலோட்டமாக பார்க்கும்பொழுது) எழுதி வெளியிட்டது, வெளியிடப்பட்டதை நினைக்கும்போது ஒரு பெருமூச்சு தான் விட முடிகிறது.

  அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வர்த்தக நாடாக இருந்தாலும், ஐரோப்பா கலையுலகின் பொக்கிஷமாகவே இன்னும் இருக்கிறது. ஒருவேளை அமெரிக்காவின் தொடர்ந்த எரிச்சலுக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

  விடியல் பதிப்பகம் வெளியிட்ட பெர்ஸ்போலிஸ் (தமிழ் மொழிபெயர்ப்பில்) இரு புத்தகங்களையும் நானும் வாங்கிவிட்டேன். சுமாரான மொழிபெயர்ப்பு.

  சிறப்பான அறிமுகம். முன்னணி சித்திரக் கதைகள் பதிப்பகங்கள் பற்றி கூட ஒரு அறிமுகக்கட்டுரை நீங்கள் எழுதலாம். அவர்களின் முன்னணி முயற்சிகள் குறித்து தெரிந்துக் கொள்ள உதவியாய் அமையும்.

  வேலன்டைன் சில இடங்களுக்கு சென்றால் அவரை தூக்கில் போட்டுவிடுவார்கள். :)

  ReplyDelete
 4. //இந்த வருடமாவது உங்களை பார்த்து மன்மதன் தன் கணைகளை எய்யட்டும்//
  ஏதோ ஏன் பதிவ படிக்க சொன்னேன்ற குத்தத்துக்காக இப்டி போட்டு தள்ள நினைக்குறது எல்லாம் ஓவர்.கொஞ்ச நாள் சந்தோசமா இருந்துக்குரேனே ப்ளீஸ் ப்ளீஸ்.....

  ReplyDelete
 5. ஏன்? ஏன்னு கேக்க வச்சிட்டீங்க கதய சொல்லி. ... உங்கள் அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. காதலரே,
  அருமையான காமிக்ஸ் அறிமுகத்துக்கு நன்றி.உங்கள் மொழிபெயர்ப்போடு வித்தியாசமான சித்திரத்தோடு அருமையாக இருந்தது. உங்கள் பதிவை படித்தவுடன் ஆங்கில மூலத்தை டவுன்லோட் செய்து விட்டேன்.

  இதோ லிங்க் : http://www.mediafire.com/?ilhgj5m14ic

  ReplyDelete
 7. நண்பரே
  அருமையான பதிவு.
  //இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.///
  கவித்துவமான வரிகள்.
  //விடியல் பதிப்பகம் இந்நாவலை ஈரான் – குழந்தைப்பருவம், திரும்புதல் எனும் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறது//
  தகவலுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 8. காதலரே . . சித்திர நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். அவற்றுக்காக உயிரையே கூட விட்டு விடுவேன் . . :-) . . ஆனால், நான் முன்னரே கூறியிருந்தபடி, இங்கு இந்தியாவில், மிஞ்சிமிஞ்சிப் போனால், பேட்மேனின் சித்திர நாவல்கள் தான் கிடைக்கின்றன (அதற்காக, அவை குப்பை என்று சொல்ல வரவில்லை. அவற்றில் சில அருமையான பட்டையைக் கிளப்பும் கதைகள் உள்ளன. . 'தி கில்லிங் ஜோக்', 'தி லாங் ஹாலோவீன்', 'தி மேன் ஹு லாப்ஸ்' ஆகியன உதாரணங்கள்) . . இதைப் போன்ற சித்திர நாவல்களுக்காகப் பசித்திருக்கிறேன் . . நெட்டில் தேடித் பார்க்கிறேன் . .

  மிக நல்ல விமர்சனம். இந்த சித்திர நாவலைப் படித்தே ஆகவேண்டும் . .

  ReplyDelete
 9. நண்பர் Vittalan அவர்களே, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  நண்பர் ஜே, நீண்ட நாட்களின்பின் கருத்துக் களத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சியை தருகிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. நண்பர் லிமட் கதையை பதிவிறக்க வசதியாக சுட்டியை அளித்திருக்கிறார்.

  ஜோஸ், பார்க்கத்தான் படங்கள் அப்படி, கதையை ஒரு அருமையான மொழிபெயர்ப்பில் அல்லது உங்களது தாய் மொழியான பிரெஞ்சில் படித்தீர்களேயானால் கதையின் சித்திரங்களில் மயங்கிப் போவீர்கள்.

  மொழிபெயர்பு செய்வதை ஒரு கடமையாகவும், தொழிலாகவும் மட்டுமே செய்யும்போது மொழிபெயர்ப்புக்குள்ளாக்கப்படும் படைப்பின் உண்மையான சுவை பெரும்பாலும் வாசகனிற்கு வந்து சேர்ந்து விடுவதில்லை. கதையை மொழிபெயர்த்தவர் முதலில் அது என்ன கூற வருகிறது, எத்தகைய உணர்ச்சிகளுடன் அக்கதை கூறப்படுகிறது என்பதை தெளிவாக புரிந்து அக்கதையை ரசிப்பவராக இருக்கவேண்டும். இல்லையேல் வெறும் சொற்களிற்கான மொழிபெயர்ப்பே நிகழ்த்தப்படும். அதனை அகராதியே செய்து விடும் எனும் போது மொழிபெயர்பாளனின் கடமை என்ன என்பது கேள்வியாக் எழுகிறது. எத்தனை மொழிபெயர்ப்பாளர்கள் மூலப்படைப்பின் ஆன்மாவை தங்கள் மொழி பெயர்ப்பில் கொணர்ந்து விடுகிறார்கள் என்பதை நான் கூறத்தேவையில்லை. மொழிபெயர்ப்பு ஒரு கலை அது தொழில் மட்டும் அல்ல என்பது பலபேரிற்கு புரிவதில்லை. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் இலுமினாட்டி, தனிமையில் இனிமையா, அனுபவியுங்கள் நண்பரே.

  நண்பர் அண்ணாமலையான் அவர்களே உங்கள் பாராட்டுக்களிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.


  நண்பர் லிமட் கதையை மிகவும் நிதானமாகப் படியுங்கள். உங்களிற்கு கதை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். சுட்டிக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  நண்பர் வேல்கண்ணன், அவ்வரிகள் கதையிலேயே இருக்கும், நான் செய்தது என் பாணியில் தமிழிக்கு மாற்றியமைத்ததே. அந்த நாவலும் சிறப்பான ஒரு நாவல் நண்பரே, வாய்ப்புக் கிடைத்தால் படித்திடுங்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள், இவ்வகையான புத்தகங்கள் கூட அங்கே கிடைக்கின்றன. நண்பர் ரஃபிக் இது குறித்த தகவல்களை வழங்குவதில் கில்லாடி. இப்புத்தகத்தை அவர் வாங்கிப் படித்துவிட்டு என்னுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ரஃபிக் எங்கு வாங்கலாம் என்பதை தெரிவியுங்கள் நண்பரே.

  ஆக்‌ஷன் கதைகளிலிலிருந்துதானே காமிக்ஸ் காதலே ஆரம்பித்தது. அதனை எப்படி மறக்க முடியும் கருந்தேள். ஆக்‌ஷன் கதைகளும் பதிவாக வரும். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 10. காதலரே, இப்போதெல்லாம் வேலை பெண்டை நிமிர்த்துகிறது... அதன் காரணமாகவே உங்கள் காதலர் தின சிறப்பு பதிவை கூட ஒரு மாதம் தாமதமாக தான் படிக்க முடிந்தது. இருந்தாலும்

  நாங்க எல்லாம் லேட்டஸ்டா வருவோம்ல... :p

  சிக்கன் வித் ப்ளம்ஸ் நான் சமீபத்தில் படித்த கதைகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்பதில் ஐயமில்லை. ஒரு வெகுஜன உத்யோகத்தல் இல்லாத ஒருவன் தன் பிரியமான ஒரு காரியத்தை செய்யும்போது, அது மற்றவர்களிடம் இருந்து எவ்வகை வெறுப்பை, அவர்கள் உற்ற உறவாகினும் சரி, சம்பாதித்து தரும் என்பதை உணர்த்தும் சித்திரகதை. மர்ஜானே சத்ரபி க்கு உண்மையிலேயே ஒரு காமடி கலந்த சித்திர அமைப்பு நடை ஒரு வரபிரசாதம். தன் கொள்ளு மாமாவின் கடைசி நாட்களை இவ்வளவு அற்புதமாக விவரிக்க

  அவரால் எப்படி சாத்தியமானது என்று வியக்கிறேன். நேரில் இருந்து பார்த்தது போல அவர் கூறியது, அவர் மாமாவின் கடைசி கட்டங்களை கற்பனை செய்தா, அல்லது சுற்றி இருப்பவரிடம் விவரம் சேர்த்தா என்று தங்களுக்கு தெரியுமா காதலரே ?

  தான் மிகவும் நேசித்த வாத்திய கருவி உடைந்து போனதே என்று தன் உயிரை மாய்த்து கொள்ள ஏன் அவர் எத்தனித்தார், என்பதற்கு கடைசி அத்தியாத்தில் வெறும் படங்கள் மூலமே

  காரணத்தை கற்பித்திருக்றார். அந்த கருவியின் பிண்ணயில் இருந்த இசைக்கான காரணம் தெரிய வரும் போது மனம் கனக்கிறது.

  தன்னை யார் பிரார்த்தனை உயிருடன் வைத்திருக்கிறது என்று எண்ணும் கட்டத்தில், அவர் எதிர்பாரா ஒரு குடும்ப உறுப்பினர் பிரார்த்திக்கும் கட்டம், தன் சகோதரனை நீ மட்டும்

  பொறுப்பானவனா என்று சமாளிக்கும் கட்டம், அட்டையில் இவர் தனியாக நடந்து போகும் அதே இடத்தில், கடைசி பக்கங்களில் மரண தூதுவன் மயான அமைதியுடன் நடக்கும் கட்டம் என்று

  சொல்லி கொண்டே போகலாம்.

  கதையின் ஆரம்ப கட்டத்தில் தோன்றும் அந்த பெண்மணி கூறிய பதிலை, கடைசி கட்டங்களில் ஆத்மார்த்த அர்த்தம் தெரிவித்து முடித்திருக்கும் கட்டம் இது வரை நான் சித்திர நாவல்களில் பார்க்காத ஒன்று.

  மொத்தத்தில் ஒரு காமிக்ஸ் காவியம். அதன் நடையில் எந்தவித குறையும் வைக்காமல், அதே நேரம் கதையின் உள்ளே புதைந்திருக்கும் அந்த மர்ம முடிச்சை அவிழ்த்து விடாமல் கவனமாக

  பதிவை செதுக்கியிருக்கிறார்கள். பாராட்டுகள் காதலரே.

  ReplyDelete
 11. சமீப காலமாக இத்தகைய சித்திரகதைகள் (டிசி,மார்வல்,டார்க் ஹார்ஸ் என்ற பெரும் நிறுவனங்களின் வெளியீடுகள் அன்றி) இங்கு லாண்ட்மார்க் போன்ற பெரிய புத்தக விற்பனை தொடர்

  கடைகளில் அவ்வப்போது விற்பனைக்கு கிடைக்க பெருகிறது. அமெரிக்க பெரும் நிறுவனங்களில் பேட்மேன்,சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன் போன்ற அரைத்த மாவு கதைகள் நடுவே, இவைகள்

  தொலைந்து போய் விடுகின்றன. இத்தகைய இதழ்களை பற்றி முன்பே அறிந்தோர் மட்டுமே இதை தேடி வாங்குகிறார்கள். அதனால், பெரும்பாலான சமயங்களில் இவைகள் எப்போதும் கிடைத்த

  வண்ணமே இருக்கிறது. விலை சற்று அதிகம் தான். சில நேரங்களில் அவை சகாய விலையில் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கவும் பெறலாம், நமது அதிர்ஷ்டத்தை பொருத்து.

  அப்படி ஒரு சமயத்தில் தான் 5 மாதங்கள் முன்பு லாண்ட்மார்க் விற்பனையில் இந்த புத்தகத்தின் பல பிரதிகளை மிகவும் தள்ளுபடி விலையில் கண்டேன். அப்போது இத்தகைய சித்திரங்களுக்கு

  நான் பழக்கபடவில்லை என்பதால், இது ஒன்றும் உயர்த்தியான படைப்பு அல்லவே என்று அப்போது மர்ஜானேவின் இன்னொரு படைப்பான பெர்ஸிபோலிஸ் மட்டும் வாங்கி வந்திருந்தேன்.

  பிறகு காதலர் பரிந்துரைத்த பின்பு, ஆவலுடன் திரும்ப போய் பார்த்தால் ஒரு பிரதி தான் எனக்காக காத்து கிடந்தது... ஒரு வழியாக அதை கைபற்றி விட்டேன். நன்றி காதலரே.

  இந்த சித்திரகதை மூலம் மர்ஜானேவின் படைப்புகள் மேல் ஒரு தனிபட்ட காதலே உருவாகி விட்டது. அடுத்து பெர்ஸ்போலீஸ் நாவலை படித்து முடிக்க வேண்டும். 50 பக்கங்கள் கொண்ட

  சிக்கன் கதையிலேயே இவ்வளவு தாக்கத்துடன் சொல்ல முடிந்திருக்கிறது என்றால், 2 புத்தகங்களில் அவர் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பார் என்று எண்ண தோன்றுகிறது.


  காதலரே, மார்ஜானேவுடன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்களேன்... 40 வயதிலும் அம்மணி சிக்கென்று தான் இருக்கிறார். கல்யாணமே செய்து கொள்ள வில்லையாமே ???

  இன்னொரு விடயம், இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் முன்தினம், பத்திரிக்கை செய்தியில் சிதார் இசை கலைஞர் அம்ஜத் அலி கானின், பிரியமான மற்றும் பழமையான சிதார் இசை

  கருவி, ஏர் இந்தியாவின் கவனக்குறைவினால் உடைக்கபட்டது

  என்ற செய்தியும், அதை அம்ஜத் அலி கான் கண்ணீருடன் மற்றவர்களுக்கு தெரிவித்ததையும் படிக்க நேர்ந்தது. அப்போது அவரின் அந்த கஷ்டத்தை என்னால் சரிவர புரிந்து கொள்ள

  முடியவில்லை. ஆனால் சிக்கன் வித் ப்ளம்ஸ் படித்த பின் அதை நிதர்சனமாக உணர்ந்தேன்.

  இந்த பதிவின் மூலம் அந்த அனுபவத்தை திரும்பவும் நினைவுக்கு கொண்டு வந்த காதலருக்கு நன்றிகள். தொடருங்கள் உங்கள் அமர்க்களமாக அறிமுகங்களை.

  பி/கு. 1: வழக்கம் போல மொழிபெயர்க்கபட்ட அந்த பக்கங்கள் அருமை. மரண் தூதுவன் நம்ம விஜய் ஸ்டைலில் கதாய்ப்பதும், ஆங்கிலத்தின் கலோக்கியலான விவர கட்டங்களின் போது, நம் லோக்கல் பாஷையை புகுத்தி இருப்பதும் என்று கலக்கி இருக்கிறீர்கள். உங்கள் கர்மசிரத்தை மெய் சிலிர்க்க வைக்கிறது, தோழரே.

  பி.கு. 2: நண்பர் ஜோஷின் மொழியாக்க தரத்திற்கு தங்கள் பதிலை நான் முழுமனதுடன் ஆமோதிக்கிறேன். மொழிபெயர்ப்பை ஒரு வேலையாக தான் நம் ஊரில் காரியமாற்றுகிறார்கள். மொழி பெயர்க்கபடும் மூலம் மட்டுமல்ல, அந்த ஊடகத்தின் மீதும் உண்மையான அக்கறை உள்ள ஒருவரால் மட்டுமே, அந்த கதையை தரம் குறையாமல் எடுத்து வைக்க முடியும். அப்படிபட்ட நபர்கள் இக்கால சூழலில் அரிதாக போய் விட்டதே இப்படி தரமில்லா படைப்புகளை நம் மேல் தினிக்கபடுவதற்கு காரணமாகி விடுகிறது. லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் போன்று இருக்கும் சொற்ப ஆர்வலர்கள் கூட, ஆர்ச்சி, ஸ்பைடர் என்று தங்கள் சிறுபிராய கதைகளை மட்டுமே போற்றி கொண்டாடி கொண்டிருந்தால், நம் தமிழ் காமிக்ஸ் சர்வதேச தரத்திற்கு உயர்வது எட்டாக்கணி தான். புரிபவர்களுக்கு புரிந்தால் தேவலம்.

  ReplyDelete
 12. ரஃபிக், லேட்டாக வந்தாலும் கருத்துக்களத்தை பின்னி எடுத்திருக்கிறீர்கள் உங்கள் கருத்துக்களால், கதையைப் பற்றி இருவரும் பேசி சிலாகித்த தருணம் நினைவுக்கு வருகிறது. சத்ராபி, தன் குடும்ப உறுப்பினர்களின் உதவி கொண்டுதான் தகவல்களை சேகரித்திருக்க முடியும். ஏன் என்பதை பெர்ஸ்பொலிஸ் உங்களிற்கு விளக்கும்!

  புத்தகத்தை எங்கு வாங்குவது என்பது குறித்த தகவல்களிற்கு நன்றி. கண்டிப்பாக உங்களிற்காகவேனும் வய்ப்புக் கிடைக்கும்போது சத்ராபியுடன் அல்லது சத்ராபியை மட்டும் போட்டோ பிடித்து அனுப்புகிறேன். 40 வயது என்றால் எனக்கு நன்றாக பிடிக்கும்.

  பக்கங்களை மொழிபெயர்ப்பு செய்தபோது தளபதியின் வேட்டைக்காரன் ரசிகர்களைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தது எனவேதான் மரணதேவனிற்கு அவர் டப்பிங் செய்தார்.

  தமிழ் காமிக்ஸ் சர்வதேச தரத்தை எட்டுவதா, கமலிற்கு ஆஸ்கார் கிடைத்தால் போல்தான் இதுவும். வேதனையோடுதான் இதனை எழுதுகிறேன். தங்களது விரிவான அலசலிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete