Monday, February 15, 2010

மின்னல் திருடன்


lightning நியூயார்க் நகரின் யான்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு சாதாரண மாணவன் பெர்சி ஜாக்சன். பெர்சிக்கு எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஒரு இடத்தில் கையைக் காலை ஆட்டாது அவனால் இருக்க முடியாது. மிகையான துறுதுறுப்பு கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். கல்லூரியில் அவன் உற்ற நண்பணாக குரோவர் எனும் இளைஞன் இருக்கிறான். யான்சிக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான பிரன்னர், பெர்சி மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

பெர்சி தன் தந்தை முகம் அறியாதவன். தன் தாய் சலியின் அன்பிலும், பராமரிப்பிலும் வளர்பவன். அதிக வசதிகள் கொண்டிராத குடும்பம் அது. சலியின் தற்போதைய துணைவனாகிய கபி ஒரு சோம்பேறி. வீட்டில் இருந்து பீர்களைக் குடித்தவாறே சீட்டாட்டம் ஆடுவதே அவன் முக்கிய வேலையாக இருக்கிறது. பெர்சியையும், சலியையும் கண்ணியக் குறைவாக நடத்துபனாக இருக்கிறான் கபி. இதனால் கபிக்கும், பெர்சிக்கும் தகராறுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

கல்லூரி வாழ்க்கையில் சுற்றுலாக்கள் சகஜமான ஒன்று. யான்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் அருங்காட்சியகம் ஒன்றைச் சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். இக்குழுவை பிரன்னர் மற்றும் மேடம் டொட்ஸ் ஆகிய ஆசிரியர்கள் தம் பொறுப்பில் பார்த்துக் கொள்கிறார்கள்.

அருங்காட்சியகத்தின் கிரேக்க ரோமானியப் பிரிவில் வைத்து மாணவர்களிற்கு கிரேக்கப் புராணக் கடவுள்கள் குறித்துக் கூறிக் கொண்டிருக்கிறார் பிரன்னர். தன் துறுதுறுப்பான தலையை அங்கும் இங்கும் அலைபாயவிடும் பெர்சியை மெல்ல அணுகும் மேடம் டொட்ஸ், பெர்சியுடன் தான் தனியாகப் பேச விரும்புவதாக தெரிவிக்கிறார்.

மேடம் டொட்ஸை பின் தொடர்கிறான் பெர்சி. அவர் எதைக் குறித்து தன்னுடன் தனியாக உரையாட விரும்புகிறார் என்பது அவனிற்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. அருங்காட்சியகத்தின் ஆளரவமற்ற பகுதிக்கு பெர்சியை அழைத்துச் செல்லும் மேடம் டொட்ஸ், பெர்சி தன் கனவிலும் கண்டிராத வகையில் ஒரு ராட்சத வெளவால் தோற்றம் கொண்ட மிருகமாக மாறிவிடுகிறார் [Furie]. வெளவால் வடிவில் மாறிய மேடம் டொட்ஸ் பெர்சியை தாக்க ஆரம்பிக்கிறார். மின்னல் கணை எங்கே! மின்னல் கணையை என்னிடம் தந்துவிடு என்று கடூரமான குரலில் கூவியவாறே வெளவாலின் தாக்குதல் தொடர்கிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-637160746 மேடம் டொட்ஸ் தன் வெளவால் உதடுகளால் கேட்கும் கேள்விகளிற்கு பெர்சியிடம் பதில்களில்லை. இது என்ன புதுக் குழப்பம் என குழம்புகிறான் அவன். இவ்வேளையில் அங்கு வரும் குரோவரும், பிரன்னரும் வெளாவல் வடிவான ஃப்யூரியை விரட்டியடித்து பெர்சியைக் காப்பாற்றுகிறார்கள்.

நடந்த சம்பவத்தினால் அதிர்சியடைந்திருந்த பெர்சியிடம், பெர்சி, கடவுள் பாதி, மனிதன் பாதியான ஒரு கலவை என்பதை கூறுகிறார் பிரன்னர். ஆம் கிரேக்க கடவுள்களில் முக்கியமான ஒரு கடவுளின் வாரிசுதான் பெர்சி. பெர்சியின் பாதுகாவலானாக நியமிக்கப்பட்டவனே குரோவர். கொடிய மிருகங்கள் பெர்சியை மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் பிரன்னர் அவனை உடனடியாக ஒரு விசேட முகாமிற்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை எடுக்கிறார். குரோவருடன் பெர்சியை அவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

பெர்சியின் வீட்டில் சலியிடம் நடந்த சம்பவங்களை இரு இளைஞர்களும் விபரிக்கிறார்கள். இதனால் அச்சம் கொள்ளும் சலி உடனடியாக தன் மகனை பிரன்னர் குறிப்பிட்ட விசேட முகாமிற்கு கொண்டு சேர்த்து விடக் கிளம்புகிறாள். நண்பர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு காரை விரைவாக ஓட்டுகிறாள் சலி.

bull-man_03 முகாமை நோக்கிச் செல்லும் வழியில் பெர்சியின் தந்தையான கடவுள் குறித்துப் பேசுகிறாள் சலி. இவ்வேளையில் உடலின் தலைப் பகுதி எருமை வடிவமும், அதற்கு கீழான பகுதி மனித வடிவமும் கொண்ட Minotaur எனும் மிருகம் அவர்கள் பயணம் செய்யும் காரை மூர்க்கமாக தாக்க ஆரம்பிக்கிறது.

மினொடோரின் கடுமையான தாக்குதலிற்குள்ளாகும் கார் ஓடும் பாதையிலிருந்து தூக்கி வீசப்படுகிறது. பெர்சியை சேர்க்க வேண்டிய முகாம் அருகில் உள்ள நிலையில் பெர்சியையும், குரோவரையும் தப்பிக்கச் சொல்கிறாள் சலி. இந்நிலையில் குரோவர் காரினுள் இருந்தவாறே தன் ஜீன்ஸைக் கழற்றுகிறான். தன் நண்பண் இடுப்பிற்கு கீழே ஒரு ஆடு [Satyr] என்பதை அந்த இக்கட்டான தருணத்தில் தெரிந்து கொள்கிறான் பெர்சி.

காரிலிருந்து வெளியேறும் மூவரையும் நோக்கிப் பாய்ந்து வருகிறது மினொடோர். அதனிடமிருந்து தப்பிக்க மூவரும் முகாமை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நர எருமை சலியை தன் வலிய கரங்களில் பிடித்து அழித்து விடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் பெர்சி நர எருமையுடன் மோதுகிறான். அதனை அழித்தும் விடுகிறான். இம்மோதலினால் ஏற்பட்ட களைப்பினால் நினைவிழக்கும் பெர்சியை குரோவர் விசேட முகாமிற்குள் கொண்டு செல்கிறான்.

விசேட முகாமில் கண்விழிக்கும் பெர்சி, அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு வியக்கிறான். கலப்புக் குருதிக் காலனி என்று அம்முகாம் அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணக் கடவுள்களின் வாரிசுகள், தேவதைகள், விசித்திர மிருகங்கள் என அங்கிருப்பவர்கள் மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

Percy-Jackson-trailer-still-Pierce-Brosnan யான்சிக் கல்லூரியின் ஆசிரியரான பிரன்னர், அம்முகாமில் மேலுடம்பு மனிதன், கீழுடம்பு குதிரை வடிவம் கொண்ட செண்டோராக [Centaur] தன் நிஜ வடிவத்திற்கு உருமாறியிருக்கிறார். முகாமில் இருக்கும் வாரிசுகளின் பயிற்சிகளிற்கு அவர் பொறுப்பு வகிக்கிறார். பெர்சியுடன் உரையாடும் அவர், அவன் தந்தை, கிரேக்க புராண பிரதான கடவுள்களில் ஒருவனான பொசைடன் [Poseidon] என்பதை அவனிற்கு தெரிவிக்கிறார்.

கிரேக்கப் புராணத்தில் 12 கடவுள்கள் இருந்தாலும், டைட்டான்களின் தலைவனாகிய குரொனொஸின் மகன்களான, ஸியுஸ் [Zeus], பொசைடன், ஹெடிஸ் [Hades] ஆகிய மூவருமே முக்கியமான கடவுள்கள் ஆவார்கள். இம்மூவரில் ஸியுஸே தலைமைக் கடவுளாக இருக்கிறான்.

ஸியுஸ் வானுலகின் அதிபதியாகவும், பொசைடன் சமுத்திரங்களின் கடவுளாகவும், ஹெடிஸ் பாதாளவுலகம் அல்லது நரகத்தின் ராஜாவாகவும் ஆட்சி செலுத்தி வருகிறார்கள்.

ஸியுஸிடம் மிக வலிமை வாய்ந்த ஆதி முதல் மின்னல் கணை எனும் ஆயுதம் இருந்தது. ஆனால் அந்த ஆயுதம் திருடு போனதைத் தொடர்ந்து ஸியுஸிற்கும், பொசைடனிற்குமிடையில் தகராறு உருவாகிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1870183035 கடவுள்கள் திருட முடியாது என்பதால், பொசைடனின் மகன் பெர்சியே மின்னல் கணையைத் திருடியிருக்க வேண்டுமென குற்றம் சாட்டுகிறார் ஸியுஸ். ஜூன் 21ம் திகதி வரும் வேனில்கால கதிர்திருப்பத்தின் முன் [Solstice] தன் மின்னல் கணை தனக்கு கிடைக்காவிடில் போர் வெடிக்கும், உலகம் அழியும் எனவும் எச்சரிக்கிறார்.

இத்தகவல்களை பெர்சிக்கு விளக்கும் பிரன்னர், பெர்சி ஸியுஸை சந்தித்து மின்னல் கணையை அவன் திருடவில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறார். ஆனால் அதற்கு முன்பாக கடவுளின் வாரிசு ஒருவனை உலகில் குறி வைத்திருக்கும் அபாயங்களை எதிர் கொள்ளுவதற்காக, முகாமில் அவன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் பணிக்கிறார்.

இதனையடுத்து முகாமில் தற்காப்பு பயிற்சிகளை ஆரம்பிக்கிறான் பெர்சி. இப்பயிற்சிகளின்போது எதீனா எனப்படும் பெண் தெய்வத்தின் மகளான அனபெத்துடன் அவன் நட்புக் கொள்கிறான். முகாமில் பயிற்சிகளில் பெர்சி மூழ்கியிருக்கும் ஒரு நாள் நரகத்தின் அதிபதியான ஹெடிஸ் தன் கோர உருவுடன் முகாமில் காட்சி அளிக்கிறார்.

அதிகாரத்திற்காக மனிதர்களிற்கிடையில் மட்டுமல்ல கடவுள்களிற்கிடையிலும் போட்டிகள் உண்டு. ஸியுஸின் மின்னல் கணையைத் தனதாக்கிக் கொண்டு மூன்று உலகங்கள் மீதும் தன் அதிகாரத்தை செலுத்த விரும்பும் ஆசை பாதாளவுலகின் அதிபதியான ஹெடிஸிற்கு இருக்கிறது. பிரம்மாண்டமான தீப்பிழம்புகளிற்கிடையில் தன் அகோரமான உருவைப் பரப்பியவாறே கடூரமான குரலில் மின்னல் கணையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி பெர்சியிடம் கேட்கிறான் ஹெடிஸ்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-318868360 பெர்சியின் தாய் இறக்கவில்லை, பாதாளவுலகில் தன்னிடம் அவள் சிறையிலிருக்கிறாள் என்பதையும் தெரிவிக்கும் ஹெடிஸ். மின்னல் கணையை பெர்சி தன்னிடம் தந்தால் பெர்சியின் தாயை தான் விடுவிப்பதாகவும் கூறுகிறான். இத்தருணத்தில் பிரன்னரின் தலையீட்டால ஹெடிஸ் முகாமிலிருந்து மறைந்து விடுகிறான்.

தன் தாய் நரகத்தில் சிறையிலிருப்பதை அறியும் பெர்சி அவளைக் காப்பாற்றத் துடிக்கிறான். முகாமில் தங்கியிருக்கும் பிரயாணங்களின் கடவுளான ஹெர்மீஸின் மகனான லூக் பெர்சிக்கு நரகத்திற்கு செல்வதற்கான ஒரு வரைபடத்தையும், சிறகுகள் முளைத்த பறக்கும் காலணிகளையும் வழங்கி உதவுகிறான். இவற்றின் உதவியோடு, பிரன்னரிற்கு தெரியாது, நரகம் நோக்கிய தன் சாகசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் பெர்சி. குரோவரும், அனபெத்தும் அவனிற்கு துணையாக நரகப் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

பெர்சி தன் தாயை மீட்டானா? ஸியுஸின் மின்னலைத் திருடிய திருடன் யார்? உலகம் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டதா? என்பதை அறிய ஒன்று நீங்கள் Percy jackson & The Olympians: The lightning Thief எனும் திரைப்படத்தை பாருங்கள் அல்லது Rick Riordan எழுதியிருக்கும் இதே பெயர் கொண்ட நாவலின் முதல் பாகத்தைப் படியுங்கள். முன்னையதை விட பின்னையது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

ஹாரி பொட்டர் நாவல்கள் போல் பெர்சி ஜாக்சன் நாவல்களும் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர்குரிய நாவல்களே. ஹாரி பொட்டர் போல் புகழ் பெறவில்லையெனிலும் பெர்சி ஜாக்சன் நாவல்கள் சுவையில் ஹாரி பொட்டரை எட்டிப் பிடிக்கும் தன்மை கொண்டவையாகும்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-89025506 பெர்சி ஜாக்சன் நாவல்கள், கிரேக்க புராணக் கடவுள்கள், தேவதைகள், மிருகங்கள், அவர்களின் சக்திகள், லீலைகள், பலவீனங்கள் என்பவற்றை தற்கால உலகுடன் இணைத்துக் கதையை நகர்த்துகின்றன. கடவுளின் வாரிசான பெர்சி ஜாக்சன் கதையின் நாயகன். தன் முன் விழும் தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தன் நண்பர்கள் துணையுடன் அவன் எதிர் கொண்டு தன் ஆளுமையை மேம்படுத்துகிறான் என்பதை கதை படு சுவாரஸ்யமாக விபரிக்கும்.

பெர்சி ஜாக்சன் கதைத் தொடரில் மொத்தம் ஐந்து நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இக்கதைத் தொடரின் மிக முக்கிய அம்சம் அதில் கலந்திருக்கும் எள்ளல் கலந்த நகைச்சுவையாகும். வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் நுண்ணிய நகைச்சுவைக் கூறுகளை இக்கதைத் தொடர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

கிரேக்க புராணம் குறித்து [என்னைப்போல்] எந்த அறிவும் இல்லாதவர்களிற்கும் கூட பெர்சி ஜாக்சன் நாவல்கள் அது குறித்த ஒரு எளிமையான அறிமுகத்தை சிரமமின்றி ஊட்டிவிடுகிறது. ஆனால் பெர்சி ஜாக்சன் கதையின் முதல் பாகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் மூலக் கதையிலிருந்து பல சம்பவங்களை மாற்றி ஒரு வேகமான நகர்வைக் கொண்ட திரைக்கதையை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதுவே படத்திற்கு ஒரு நிறைவற்ற தன்மையை வழங்கி விடுகிறது.

நாவலைப் படித்து விட்டு படத்தைப் பார்ப்பவர்களிற்கு அது தவறாக நாவலைப் புரிந்து கொண்ட ஒருவர் வழங்கியிருக்கும் வேகமான கதைச்சுருக்கம்போல் தோற்றமளிக்கும். ரிக் ரியோர்டன் கதையில் இருந்த அந்த ஆத்மா, திரைப்படத் தழுவலில் இல்லாமல் போயிருக்கிறது.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-2125119581 கிரேக்க புராணம் குறித்து அறியாதவர்கள் அல்லது பெர்சி ஜாக்சன் நாவலைப் படிக்காதவர்கள் திரைக்கதை சொல்லப்படும் வேகத்தில் சற்றுக் குழப்பமடைவார்கள். ஆனால் திரைப்படம் வளரிளம் பருவ ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க புராணம் குறித்து அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவா போகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் ரசனையே வேறல்லவா!!

அவர்களைக் கவரும் விதமாக சிறகுகள் முளைத்த Converse காலணிகள், I phone, அழகான Maserati ஸ்போர்ட்ஸ் மாடல் கார், பிகினியில் வலம் வரும் கவர்ச்சியான சிட்டுக்கள் என்பன கிரேக்க புராணத்தை பின் தள்ளுகின்றன. பெர்சி ஜாக்சனாக நடித்திருப்பவர் இளம் நடிகர் Logan Lerman. இப்படி ஒரு பெர்சி ஜாக்சனை என் கொடிய கனவிலும் நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இவரின் நடிப்பை வளரிளம் சிட்டுக்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1948394478 நாவலில் பெர்சி, குரோவர், அனபெத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக இருப்பார்கள். திரைப்படத்தில் அனபெத் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. படத்தில் அதிகம் ரசிகர்களைக் கவர்பவர் குரோவர் பாத்திரத்தில் வரும் Brendan T.Jackson. தனது சேஷ்டைகளால் ஒரளவு சிரிப்பை வரவழைக்கிறார் அவர். தனது ஆட்டுக் கால்களுடன் லோட்டஸ் காசினோவில் அவர் ஆடும் நடனம் அருமை. அதேபோல் பாதாள உலகின் அதிபதி ஹெடிஸின் வில்லங்க மனைவி பெர்செஃப்னியின் கவர்ச்சிக் கணைகளிலிருந்து தப்ப அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. பெர்செஃப்னியாக வரும் நடிகை Rosario Dawson, ஒரு கவர்ச்சி மின்னல் கணை!

திரைப்படத்தில் ஸியுஸாக Sean Bean, மெடுசாவாக[Medusa] நடிகை Uma Thurman, செண்டோராக வரும் ஆசிரியர் பிரன்னராக ஜேம்ஸ்பாண்ட் புகழ் Pierce Brosnan என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. இதில் தலை முடிகளெல்லாம் கொடிய பாம்புகளாகவுள்ள மெடுசாக வரும் நடிகை உமா துர்மன் மட்டுமே மனதில் நிற்கிறார்.

நாவலில் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளாக மெடுசா, பெர்சியையும் அவன் நண்பர்களையும் நைச்சியமாகப் பேசி அவர்களை கற்சிலைகளாக உருமாற்றிவிட எத்தனிக்கும் பகுதியும், பெர்சி குழு பாதாளவுலகில் செய்யும் பயணமும் அமைந்திருந்தன. இவ்விரு பகுதிகளும் நாவலில் மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பாதாளவுலக காட்சிகளில் ரிக் ரியோர்டன் கலந்திருக்கும் நகைச்சுவையும், பாதாள உலகம் குறித்த அவர் வர்ணனைகளும் அபாரமாக இருக்கும்.

percy-jackson-le-voleur-de-foudre-2010-15035-1991462770 திரைப்படத்தில் மெடுசா தோன்றும் காட்சிகள் ஒகே ரகம். ஆனால் நடிகை உமா துர்மனின் அந்த அழகிய கண்கள் ரசிகர்களின் மனங்களை சிலைகளாக மாற்றியடித்து விடுவதால் அக்காட்சிகள் பாஸாகின்றன. ஆனால் பாதாளவுலகக் காட்சிகள் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் ஏற்படுத்த தவறிவிடுகின்றன. எரிமலைக் குளம் ஒன்றை பார்த்த உணர்வு மட்டுமே தேங்கி நிற்கிறது.

படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் ஜித்து விளையாட்டுக்களின் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புராண மிருகங்கள் கூட பிரமிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. உச்சக் கட்ட நீர் கிராபிக்ஸ் நல்ல தமாஷ். குறைந்த செலவில் இவற்றை உருவாக்கியிருப்பார்களோ எனும் எண்ணம் தோன்றாமலில்லை.

படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Chris Colombus. ஹாரி பொட்டர் திரைப்படத்தின் முதலிரு பாகங்களையும் இயக்கியவர். இவர் இயக்கிய Home Alone, Mrs.Doubtfire ஆகிய படங்கள் என்னைக் கவர்ந்தவையாகும். தனக்கேயுரிய ஸ்டைல்களை கிரிஸ், மின்னல் திருடன் திரைப்படத்தில் சுளுவாக நுழைத்திருந்தாலும் இது அவரின் சிறந்த படமென யாரும் கூறமாட்டார்கள் என்பது உறுதி.

மின்னல் திருடன் திரைப்படம் வளரிளம் ரசிகர்களிற்கு சரவெடியாக அமைந்து விடுகிறது. ஆனால் என்னைப் போல் வளர்ந்த இளம் ரசிகர்கள் தலையின் மேல் அது ஜிவ்வென ஒரு இடியாக இறங்கிவிடுகிறது!! [*]

பெர்சி ஜாக்சன் எனும் சிறந்த கதைத் தொடரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு என் அன்பான நன்றிகள்.

ட்ரெயிலர்

9 comments:

  1. நண்பரே,

    இந்த படம் இங்கு இந்த வெள்ளி அன்றுதான் ரிலீஸ் ஆகின்றது. பார்க்க முடிவெடுத்துள்ளேன். சரியான முடிவா?

    ReplyDelete
  2. கிரேக்க இதிகாசங்களின் மேலுள்ள காதல் என்னை இந்த படத்தை பற்றி காத்திருக்க வைத்திருந்தது. அனால் உங்கள் பதிவு அதனை சற்று தாழ்த்தி உள்ளது. இருந்தாலும் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விஸ்வா இந்த படத்தை பார்ப்பார்.

    ReplyDelete
  3. அடப்பாவிகளா,

    நம்ம ராம நாராயணுக்கு போட்டியாக இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களா?
    அந்த சூலம் போஸ் பிரம்மாதம்.

    ReplyDelete
  4. Friend,I heard that the book is better.I'm planning to read it too.

    ReplyDelete
  5. காதலரே . .

    விஸ்வாவைப் போல் எனக்கும் கிரேக்கப் புராணங்கள் மீதும் கடவுளர்கள் மீதும் நிறைய விருப்பம் உண்டு (ஏஜ் ஆப் மைதாலாஜி விளையாடிய பாதிப்பு) . .இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால், படத்தில் கிராபிக்ஸ் சரியில்லை என்பது ஒரு வருத்தம் தான் . .மாறாக இக்கதையைப் படிக்க முயல்கிறேன் . . இதோ டவுன்லோட் செய்தாயிற்று . . படிக்கப் போகிறேன் . .:-) படித்துவிட்டு, (முடிந்தால்) படத்தைப் பார்க்கிறேன் . . விமர்சனம் சூப்பர் !!

    ReplyDelete
  6. நண்பர் அண்ணாமலையான் அவர்களே உங்கள் ஆதரவிற்கு நன்றி.

    விஸ்வா தயங்காது பாருங்கள். இளம் காளைகளை இப்படம் நிச்சயம் கவரும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ஓலக காமிக்ஸ் ரசிகரே, பெர்செஃப்னியின் போஸ் கண்ணில் படவில்லையா. சபரி மலைக்கு மாலை போட்டு இருக்கிறீர்களா :)

    நண்பர் இலுமினாட்டி, நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், கதையில் பெர்சி கலப்புக் குருதிக் காலனிக்குள் நுழைந்த பின்பாக புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக கதை நகரும். படியுங்கள். திரைப்படத்த்தைப் பாருங்கள். மாற்றங்களைக் கண்டு கொள்வீர்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. நல்லதொரு விமர்சனம்
    நன்றிகள்

    ReplyDelete
  8. நண்பர் நினைவுகளுடன்-நிகே- வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  9. காதலேரே, இது எனது முதலாவது தமிழ் ப்ளாக்... உங்கள் கமென்ட்களை அதில் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன்! http://minnixs.blogspot.com/

    ReplyDelete