Monday, August 26, 2013

எண்ணும் மனிதன்

கோடிவீட்டு கொழந்தசாமியின் அழகிய இளம் மனைவி குஞ்சாயியை மடக்குவதில் நீங்கள் வெற்றி காண வேண்டும் எனில் உங்கள் மனதில் உள்ள அந்த ஆசையை நீங்கள் முதலில் குஞ்சாயிடம் தெரிவிக்க வேண்டும். நேரடியாக இத்தகவலை நீங்கள் சொல்லப்போக குஞ்சாயிக்கு அது பிடிக்காமல் போக அதை அவள் தன் பாய் பிரண்ட் ஜூடோ ஜோஸின் காதில் கண்ணீருடன் போட்டு வைக்கப்போக... உங்கள் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆகவே உங்கள் மன இச்சையை குஞ்சாயியிடம் க்ளியர் ஆக்கும் முன்பாக குஞ்சாயிக்கு இனியவனாக நீங்கள் மாறுவதே நல்லது.

சில விடயங்களை இலகுவாக உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அதன் வடிவத்தை மாற்றல் நலம் பயிற்கும். மாட்டிறைச்சியை பர்கர் ஆக்குவது போல. மாங்காயை ஊறுகாய் ஆக்குவது போல போதனைகள், அறிவுரைகள், நீதிக்கருத்துக்கள் போன்றவற்றை மக்கள் மனதில் பதியச் செய்ய சிறப்பான வழியாக அவற்றை கதைகளில் கலந்து சொல்லி மக்களிடம் கடத்துவது தொண்டு தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. யேசு முதல் திருமுருக கிருபானந்த வாரியார்வரை இதை ட்ரை பண்ணி வெற்றி கண்டிருக்கிறார்கள். ஈசாப் நீதிக் கதை முதல் பஞ்ச தந்திரம் வரை இதே டெக்னிக் பயனளித்து இருக்கிறது. கசப்பு மருந்தை வெல்லக்கட்டிக்குள் வைத்து தருவதே நலம் என்கிறார் நர்ஸ் சரசு. அதை அவர் கையால் ஊட்டி விட்டால் இன்னும் நலம் என்கிறேன் நான். ஆக எமக்கு பிடிக்காத ஒன்றைக்கூட வேறு ஒன்றின் உதவியுடன் எமக்கு பிடித்ததாகவோ அல்லது ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகவோ ஆக்கிட முடியும்.

இவ்வாறான வழியைத் தழுவியே பிரேசிலிய கணிதப் பேராசிரியர் மற்றும் ஆசிரியரான Júlio César de Mello e Souza கணிதப் புதிர்கள் சில குறித்த தன் சுவாரஸ்யமான படைப்பான எண்ணும் மனிதனை உருவாக்கி இருக்கிறார்.  Malba tahan எனும் புனைபெயரில் அவர் இப்படைப்பை எழுதியிருக்கிறார்.
சமராவிலிருந்து பாக்தாத் நோக்கி செல்லி திரும்பிக் கொண்டிருக்கும் ஹனாக் தடே மையா வழியில் ஒரு விசித்திரமான மனிதனை சந்திக்கிறான். அம்மனிதனின் பெயர் பெரமிஸ் சமீர். வானில் பறக்கும் பறவைகள், ஆட்டு மந்தையில் இருக்கும் ஆடுகள், மரத்தில் இருக்கும் இலைகள் என எல்லாவற்றையும் சரியாக எண்ணிச் சொல்பவனாக இருக்கிறான் இந்தப் பெரமிஸ் சமீர். பெரமிஸ் சமீரின் திறமையைப் பாராட்டும் ஹனாக் தடே மையா அவனை தன்னுடன் பாக்தாத் நகரிற்கு அழைத்து செல்கிறான்.
இப்படியாக ஆரம்பிக்கும் இக்கதை படிப்படியாக பெரமிஸ் சமீரின் கணித அறிவாற்றலை சவாலிற்கு அழைத்து செல்கிறது அதன் வழி வாசகனையும் ஒரு வகையில் அது சவாலிற்கு அழைக்கிறது. பெரமிஸ் சமீர் முன் வைக்கப்படும் புதிர்களையோ, சிக்கல்களையோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வாசகனும் விடுவிக்க முயலலாம். வெற்றி கிட்டினால் அட நானும் பெரமிஸ் தான் என வாசிப்பை பெருமையுடன் தொடரலாம் இல்லையேல் என்னைப்போல இதுக்கு இப்ப எனக்கு நேரமில்ல மாயாவி கத படிக்கனும் என்று சொல்லி சமாளித்து பெரமிஸ் புதிர்களிற்கு விடை கண்டுபிடிப்பதை படித்து களிக்கலாம்.

தந்தை விட்டு சென்ற ஒட்டகங்களை சரியாக பிரித்து அரேபிய சகோதரர்களிடம் வழங்குவதில் இருந்து உலகப் பேரறிஞர்கள் முன் வைக்கும் வினோதமான புதிர்கள் வரை பெரமிஸ் தயக்கமின்றி செல்கிறான். சுவையாக அவற்றை விடுவிக்கிறான். இங்கு சிக்கல்களோ, புதிர்களோ யாவுமே சுவாரஸ்யமான கதை வடிவில் சொல்லப்படுவது வாசிப்பை இலகுவானதாகவும், சுவை கொண்டதாகவும் ஆக்குகிறது. முலாம் பழம் முதல் சிங்கம் நரி பங்கு பிரித்தல் வரை பெரமிஸ் பொளந்து கட்டுகிறான். குரான் பத்தி ஒரு பரா இருக்கிறது. அட்டகாசமான பரா அது.

அறிவும், அடக்கமும் ஒருங்கே கூடிய பெரமிஸ் வரலாற்றின் மிக முக்கிய கணித அறிஞர்களின் திறமைகளை நினைவுகூறுகிறான். கவிஞர்களின் கவிதைகளை மீட்டுப் பார்க்கிறான். பாக்தாத்தில் எதிரிகளை சம்பாதிக்கிறான். நீதிக்கு தன் தர்க்கம் வழி வழி காட்டுகிறான். கலீபாவின் உச்ச பந்தயத்தை ஏற்று அரேபிய அழகியின் காதலிற்காக ஏழு புதிர்களை வெற்றி கண்டு அழகியை வெல்கிறான்.

சலிப்பே தராத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை அனைவராலும் படிக்கப்படக்கூடியது. இறுதிப் புதிர்களில் ஒன்றில்- ஆறாவது புதிரில்- சந்தேகம் ஒன்று எனக்குண்டு. அதை தமிழ் தவிர்ந்த பிற மொழி ஒன்றில் படித்து தெளிந்து கொள்வதே ஒரே வழி என எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் ஏதேனும் குளறுபடியா என தெரியவில்லை. கதையின் உச்சக்கட்டப் புதிரான  கண்களை மறைத்து கட்டியிருக்கும் அழகான அடிமைப் பெண்களின் விழிகளின் வண்ணங்களை பெரமிஸ் சமீர் தர்க்க ரீதியாக கண்டு பிடிப்பது என்னை மிக மிக கவர்ந்தது.

1938 ல் போர்த்துகேய மொழியில் வெளியாகிய இந்நூலை கயல்விழி மிக சரளமாக மொழிபெயர்த்து இருக்கிறார். அறிவூட்டும் சுவையான வாசிப்புகளை விரும்புவர்கள் இதை படிக்கலாம்.

Wednesday, August 21, 2013

அம்மாவின் ரகசியம்

மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை அதிகாரங்கள் இனபேதங்கள் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் தம் லட்சிய பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவது இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டு இருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்.

அம்மாவின் ரகசியம் எனும் இக்குறுநாவல் உடவளவ எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு எதிராக பொலிஸ் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பபகுதி கூறப்படுகிறது.

வறிய குடும்பமொன்றில் பிறந்த முத்துலதா, அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் உதயசிறியை திருமணம் செய்து கொள்கிறாள். உதயசிறி முத்துலதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வருவதற்கு முத்துலதாவின் தாய் பேபினோனா அவளை ஒரு விளக்குமாறு கட்டை உடையும்வரை அடிக்க வேண்டியிருந்தது. தன் மகளின் வாழ்க்கையும் தன் வாழ்க்கைபோல ஆகிவிடக்கூடாது எனும் அக்கறை பேபினோனோவிற்கு. பாலம் கட்ட வந்தாலும், படம் வரைய வந்தாலும் ஊர்க்குமரிகளின் வாழ்க்கைகள் பல அவற்றிற்கு பலியாக தவறுவது இல்லை என்பதை பேபினோனா அனுபவம் வழி அறிந்திருக்கிறாள். சிங்கள கிராமங்களில் தம் காமத்தை தணிக்க தவறாத நகர்ப்புற அரச உத்தியோகர்களின் இந்தப் பண்பாட்டை அந்த ஒருவரியிலேயே ஆழமாக பதிக்கிறார் கதாசிரியை சுநேத்ரா ராஜகருணாநாயக.

உடவளவ அமைதியான ஒரு கிராமம். சேனைப்பயிர் செய்கை, ரத்தின சுரங்கங்களில் கூலி வேலை போன்றவற்றில் வறிய குடும்ப ஆண்கள் சிறுவயது முதலே இறங்கிவிடுகிறார்கள். பெண்கள் வசதி படைத்த குடும்பங்களில் பணிப்பெண்களாகவோ அல்லது ரோட்டோரா உணவுக் கடைகளை நடத்துபவர்களாகவோ தம் வாழ்க்கைகளை கொண்டு செல்கிறார்கள். ஆறு கதிரைகளும், ஒரு மேசையும், ஒரு கண்ணாடி அலுமாரியும் எல்லாப் பெண்களினதும் கனவுகளிலும் இருக்கிறது என்பதன் வழி அந்த அடித்தட்டு வர்க்கப் பெண்களின் கனவுகளின் உச்சம் என்ன என்பதை சுநேத்ரா தெளிவாக உணர்த்தி விடுகிறார். முத்துலதாவிற்கும் இக்கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குகிறாள்.

அவள் செய்த தையல் வேலையில் சேகரித்த பணத்தில் அவள் மேலும் தையல் இயந்திரங்கள் வாங்க ஆசைப்படுகிறாள். தன் குடும்பத்தின் நிலை மாறவேண்டும் என எல்லாப் பெண்களும் அந்நிலையில் கொள்ளும் ஆசை அவளிற்கும் உண்டு. அதிக பணம் கிடைக்கும் என தொப்பிகள்கூட செய்து விற்கிறாள் ஆனால் அவள் வாழ்க்கை நிலை பெரிதான மாற்றங்கள் எதையும் கண்டு விடுவது இல்லை. முத்துலதாவின் கணவன் உதயசிறி கடினமான வேலைகளை செய்து பழக்கம் இல்லாதவன் ஆனால் நல்ல கணவன். நாட்டின் அரசியல் சூழல் குறித்த செய்திகளை வாசிக்கும் ஆர்வம் அவனிற்கு இருக்கிறது. தலையில்லா உடல்கள் வீதிகளில் வீசப்படுவதும், டயர் அடுக்குகளினுள் மனிதர்கள் எரிக்கப்படுவதும், ஆற்றில் உயிரற்ற சடலங்கள் பயணிப்பதும் என நாட்டின் நிலை சற்று பதட்டமாக இருக்கும் ஒரு காலத்திலேயே கதை நிகழ்கிறது. உதயசிறியின் அரசியல் ஆர்வம் செய்திகளை வாசிப்பதுடன் திருப்தியுற்று விடும். அவன் எல்லை அவ்வளவே. பொலிஸைக் கண்டால்கூட விலகியே செல்பவன் அவன். ஆனால் உதயசிறி வீட்டில் இல்லாத ஒரு நாளில் அவன் தம்பியை தேடி அவன் வீட்டிற்கு ராணுவத்தினர் வருகிறார்கள். அந்தப் பொழுதில் இருந்து முத்துலதாவின் வாழ்க்கையானது அதன் வழமைநிலையை இழந்து போனது. தன் கணவனிற்கு பதிலாக ராணுவ முகாம் செல்லும் முத்துலதா அங்கிருந்து திரும்புகையில் தன்னுடன் கூடவே ஒரு ரகசியத்தையும் எடுத்து வருபவள் ஆகிறாள்.

முத்துலதா, உதயசிறி, பேபினோனா போன்ற பாத்திரங்கள் வழியாக உடவளவயின் அன்றைய நிலையை வாசகனிடம் ஆர்ப்பாட்டங்கள் இன்றி எடுத்து சொல்கிறார் சுநேத்ரா. அடித்தட்டு மக்கள், அரசாங்க ஊழியர்கள், வசதி படைத்தவர்கள் ஊடாக நகரும் கதையானது அடித்தட்டு மக்களின் குரலிலேயே பேசுகிறது. இதன் பின்னணியில் அம்மக்களை திகில் அடையச் செய்து கொண்டிருக்கும் நாட்டின் நிலையும் கூடவே வருகிறது. தன் கணவனை இழந்தபின்பாகவும்கூட தன் மனதில் வாழும் அந்த ரகசியத்துடன் முத்துலதா தன் வாழ்க்கையை மாற்ற போராடுபவளாகவே இருக்கிறாள். முத்துலதா தன் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்பதை வாழ்வின் துடிப்பாக கொண்ட பெண். மனிதர்களை வெட்டிப்போட வேண்டும் எனும் கோபம் குடிவந்து அமர்ந்த பெண்.இலங்கையின் வாழும் ஒரு அப்பாவிப் பெண்ணை இனபேதமின்றி அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. எல்லைகளையும் தாண்டி உலகில் வாழ்ந்திருக்கும் வறிய அப்பாவி பெண்களையும் அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் எனும் முனைப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் வாழும் நிலை மாறும்வரையில் நாம் அவதானிப்பதே இல்லை.

அவள் வீதீயோர உணவகத்தினை நடாத்துகிறாள், அயல்நாடுகள் சென்று பணிப் பெண்ணாக பணிபுரிகிறாள். துபாய், சைப்பிரஸ், பிரான்ஸ், சீனா என அவள் வாழ் அனுபவங்கள் நீள்கின்றன. ஆனால் அவள் மனதில் உள்ள ரகசியம் ரகசியமாகவே இருக்கிறது. அதை அவள் யாரிடமும் பேசியது இல்லை. அயல்நாட்டில் பணிபுரிந்து அவள் தனது வீட்டை அழகானதாகவும், உடவளவயிலேயே அற்புதமான பொருட்கள் நிறைந்ததாகவும் நிரப்பி தன் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துவிட்ட பொழுதிலும் கூட அவள் ரகசியம் அவளிடமே இருக்கிறது. தனது வீடு எப்போதும் சுத்தமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் முத்துலதா முனைப்பாக இருக்கிறாள். சேற்றுக்காலுடன் தன் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்கிறாள். வெத்திலைச்சாற்றை உமிழ்ந்து தன் முற்றத்தை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்கிறாள். அவள் அகத்தில் வாழ்ந்திருக்கும் ரகசியத்திற்கு எதிரான தூய்மை கொண்டதாக முத்துலதா தன் புறத்தை பேணுவதில் அக்கறையாக இருக்கிறாள். தனித்து வாழும் பெண்கள் உள்ள ஒரு வீட்டில் அவள் ரகசியம் அவர்களை உயிருடன் புசிக்க விரும்பும் ஒரு அரக்கனாக  இருக்க முயல்கிறது. அவள் பிறர்க்கு விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவளின் வசதியான வாழ்க்கை நிலையும் ஊர் மக்களை டுபாய்காரனிற்கும், சீனாக்காரனிற்கும் தூக்கிக் கொடுத்து கொண்டு வந்து கொட்டிய சொத்துதானே இது என பேச வைக்கிறது. ஆனால் முத்துலதா அசைந்தாள் இல்லை. தன் மனதில் சுமையேறிக் கொண்டிருந்த ரகசியம் வெளியில் உரைத்தாள் இல்லை. ஆனால் முத்துலதா அழுத்திப் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவளாகவே வெளியே சொல்லும் சந்தர்ப்பம் அவளைத் தேடி தானாகவே வந்து சேர்கிறது.

அலங்காரங்கள் ஏதுமற்ற, எதார்த்தம் நிறைந்த, எளிமையான எழுத்துக்கள்தான் சுநேத்ராவின் பலம். அவர் வாசகனை புதிர் நிறைந்த வரிகளால் வியக்க வைக்க முயல்வது இல்லை. மாறாக எளிமையின் ஆச்சர்யத்தில் பங்குகொள்ள செய்கிறார். இந்த எளிமையானே கதையாடலே வாசகனை தயக்கமின்றி அவர் எழுத்துக்களுடன் இணக்கமாக்குகிறது. கதையை மொழிபெயர்த்து இருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பும் கதையை சரளமான தமிழ் நடையில் செவ்வனே மொழிபெயர்த்து இருக்கிறார். ஒரு துன்பத்தை சுற்றி நெய்யப்படும் அழுவாச்சி காவியமாகவோ, அல்லது ஒப்பாரி சங்கீதமாகவோ கதையை உருவாக்காது, மிகையுணர்ச்சிகளின் உதவிகளை நாடாது, பரபரப்புக்களை விலக்கி, மனித மனங்களின் இயக்கங்களுடனும், வாழ்வின் நிகழ்வுகளுடனும், சம்பவங்களுடனும் இயல்பான ஓட்டத்தில் பயணிக்கிறது சுநேத்ராவின் குறுநாவல்.

அயல்வாழ் மக்களின் வாழ்வின் ஒரு சித்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை சுநேத்ராவின் கதை எமக்கு வழங்குகிறது. சுநேத்ரா சிங்கள மொழியில் பிரபலமான படைப்பாளி. பல தளங்களில் இயங்குபவர். அவரது குறுநாவலான அம்மாவின் ரகசியத்தின் மிக முக்கியமான தருணம் அதன் முடிவில் முத்துலதா கூறுவதாக அமையும் வரிகளில் இருக்கிறது. "இப்ப அழ வேணாம். அந்த நாட்கள்ல எனக்கு அழத் தேவையிருந்தது ஆனாலும் அழ முடியாமப் போச்சு. எனக்கு செத்துபோக வேண்டியிருந்தது ஆனாலும் நான் வாழ்ந்தேன்" இவ்வரிகளை சொன்னபின்பாககூட வாழ்க்கையிடமிருந்து அற்புதங்கள் எதையும் எதிர்பார்த்துக் காத்திராத ஒரு பெண்ணாகவே முத்துலதா புன்னகைக்கிறாள். கதையை படித்து வரும் வாசகனை அதில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தம் சற்று உலுக்கிப் பார்க்கவே முயல்கிறது. இந்த உலகில் எத்தனை பெண்கள் இதே போன்ற வரிகளை தம் வாழ்வில் சொல்லியிருப்பார்கள், எத்தனை பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் சொல்லப் போகிறார்கள். இந்தப் புள்ளியில் உலகின் பெண்கள் எல்லாரையும் சுநேத்ரா தொட்டு விடுகிறார். இப்பெண்கள்கூட வாழ்வு தரும் அற்புதங்களிற்காக காத்திருப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தம் மனதின் ரகசியங்களோடு அரூப யுத்தங்களை ஓயாது நிகழ்த்தியவாறே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகசியம் தன்னை அடையாளம் காட்டும்போது பலவீனமாகி விடுகிறது ஆனால் அதை சுமந்து வந்தவர்கள் கனமற்றவர்களாகி விடுகிறார்கள். வாழ்க்கையின் சொற்கள் அவர்களிடம் தயக்கமின்றி பேச ஆரம்பிக்கின்றன. வசந்தத்தின் பூக்களைப்போல.







Saturday, August 10, 2013

கொம்பு குதிரை - இறுதிப்பாகம்


"அறிவியலின் ஒளி ஒரு யுகத்தினை வெளிச்சமாக்ககூடும் ஆனால் மனித அறிவிற்கு எட்டாத சில இருளான பகுதிகள் எப்போதும் இருக்கவே செய்யும்... நம்பிக்கைகள் அங்குதான் தஞ்சம் அடைகின்றன. அவற்றை அழிக்க முடியாது"


இத்தொடர் ஆரம்பமானதில் இருந்து இது முழுமையாக தமிழில் வெளிவந்தேயாக வேண்டும் எனும் முனைப்பில் என்னைவிட பிடிவாதமாக நின்று அதை சாதித்துக் காட்டிய அந்த இரு நண்பர்களிற்கும் என் மனதார்ந்த நன்றிகள். இப்பாகம் அவர்களிற்காகவே.

முதல் மூன்று பாகங்களையும் மீண்டுமொரு தடவை படித்துவிட்டு இறுதிப்பாகத்திற்குள் நுழைவது வாசிப்பை இலகுவாக்கும் என்பது என் கருத்து. அதுவே இப்படைப்பின் அனுபவத்தை முழுமையான ஒன்றாக்கவும் உதவிடலாம்.

நான்காம் பாகத்தை தரவிறக்க
https://app.box.com/s/8nlc1zhwcndscucq00xk

முன்னைய பாகங்களிற்கு
http://issuu.com/georgecustor

Saturday, August 3, 2013

அக்னி நிலம்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 11

அரிசோனாவில் அமைந்திருக்கும் Tucson எனும் நகரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் கொலைத்தாக்குதலிற்கு முகம் தந்து கொண்டிருக்கும் செவ்விந்தியக் குடியிருப்பொன்றின் பூர்வகுடிகளை காப்பாற்றும் வண்ணம் மோதலில் இறங்குகிறார்கள் டெக்ஸும், கார்சனும். அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடிகள் மீதான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலிற்கு பொறுப்பானவர்களை கதை முடிவதற்குள் டப்பா டான்ஸ் ஆட வைக்க போவதாகவும் அவர்கள் பூர்வகுடிகளின் தலைவனிற்கு வாக்கு தருகிறார்கள்…..

அமெரிக்க பூர்வகுடிகள் வாழ்ந்திருந்த வளமான நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அவற்றின் தீவீரமான உச்சங்களை எட்டிய நிலையில் பூர்வகுடிகளின் எதிர் நடவடிக்கைகள் உருவாக்கிய விளைவுகள் ஆதிக்கவாதிகளை சமாதான ஒப்பந்தங்கள் எனும் தந்திரோபாயத்தின் பக்கம் இட்டு வந்தன. இரு பக்க நலன்களையும் கருத்தில் கொண்டதாக இவ்வாறான சமாதான ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இரு பக்க நலன் என்பது ஆதிக்கவாதிகளின் இருபக்க நலனாகவே மதிக்கப்பட்டதேயொழிய பூர்வகுடிகளின் நலன் என்பதாக மதிக்கப்படவில்லை. பல சமயங்களில் இந்த ஓப்பந்தங்களை எவ்வகையிலாவது பூர்வகுடிகளை மீறவைப்பதன் வழி அவர்களை ஆயூதம் கொண்டு அழித்தொழிக்கும் தந்திரங்களும் முனைப்பாக இயற்றப்பட்டன.

வாழ்வாதாரம் மிக்க பகுதிகளில் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளை இச்சமாதான ஒப்பந்தங்கள் அவர்கள் வாழியல்பிற்கு முரணான நிலங்களில் குடியிருப்புகளை உருவாக்கி கொள்ள பணித்தன. பெருமேற்கின் காற்றாய் குதிரைகளின் பாதங்களுடன் நடமாடிக் கொண்டிருந்த பூர்வகுடிகள் அவர்களிற்கென ஒதுக்கப்பட்ட வலயங்களை தாண்டுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டார்கள். தம் சராசாரி தேவைகளையும், வாழ்சுகங்களையும் பறிகொடுத்தவர்களாக இவ்வலயங்களில் பூர்வகுடிகள் தமக்கென நியமிக்கப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கின் எல்லைகளற்ற பரவெளியில் கட்டற்று இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பூர்வகுடி இனமானது கிளைகள் வெட்டப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்ட மரம்போல வாழத் தம்மை பழக்கி கொண்டது.
கடலில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு உயிரை ஒரு சிறு நீர் தொட்டியில் இட்டால் அது உணரக்கூடிய ஒடுக்கம் போல இந்த குடியிருப்பு வலயங்கள் பூர்வகுடிகள் மனதில் உருவாக்கிய ஒடுக்கம் பெருமேற்கின் விசாலமான ஆன்மாவிற்கு முரணாக அவர்கள் முன் நின்று அவர்களை கேலி செய்தவாறே வதைத்துக் கொண்டிருந்தது. தம் அடைபடலின் ஆற்றாமை அவர்களில் பற்றி எரிய தொடங்க விழிசிமிட்டும் அக்னி துளியாக துடித்துக் கொண்டேயிருந்தது. இந்த துளிமீது ஆதிக்கவாதிகள் தம் நயவஞ்சகங்கள், துரோகங்கள், சதிகள் மூலமாக எரிதிரவத்தை ஓயாமல் ஊற்றியவாறேயிருந்தார்கள். ஏதோ ஒரு எல்லை தாண்டிய கணத்தில் இத்துளி பற்றி தன் எல்லை தாண்டி தகனநடை நடந்திடும் பொழுதில் எல்லாம் பூர்வகுடிநாய்கள் எம்முடன் செய்த ஒப்பந்தந்தை மதிக்காது எம்மை தாக்கிவிட்டார்கள் எனும் காரணம் உடனடியாக முன்வைக்கப்பட்டு அந்த ஆதிகுடிகளின் இனவொழிப்பு உற்சாகத்துடனும் வெளிக்காட்டா வரவேற்புடனும் கையெடுக்கப்பட்டது.
தாம் வாழ்ந்திருந்த மண்ணிலேயே அடையாளம் இழந்த நிலையில், கதியற்று போனவர்களாக வாழ்ந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைக்கு பதில் தந்த போராளிகளும் வாழ்ந்திருந்தார்கள். பெருமேற்கின் ஆக்கிரமிப்பாளர்களிற்கு மிகுந்த அச்சத்தையும், அழிவையும் தந்தவர்களாகவே வரலாற்றில் அப்பாச்சே போராளிகள் கருதப்படுகிறார்கள். உணவோ, நீரோ இன்றி நீண்ட மணிநேரம் தாக்குப் பிடிக்கவும், மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்களாகவும் திகழ்ந்த அப்பாச்சேக்கள் வெள்ளையர்களிற்கு துர்க்கனவின் நேர்ச்சொல்லானார்கள். அவர்களின் தாக்குதல்கள் காலனித்துவத்தின் பிஞ்சு வேர்களில் அச்சம் எனும் சுடுநீரை மழையாக பொழிந்தது. அமைதியான வாழ்க்கை என்பது இப்போராளிகளின் இருப்பால் ஆதிக்க நகரங்களின் கேள்விக்குறிகளாகின. இவ்வகையான போராளிகளின் தாக்குதல்களை அடுத்து பூர்வகுடிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடையாளமற்ற வன்முறையும், காலனித்துவ நகர்களில் குடியேறிவிட்ட பதட்டநிலையும், இப்பதட்ட நிலையை தம் லாபங்களிற்காக நீடிக்க விரும்பிய மனிதர்களின் சதிகளும் வாஷிங்டன் வாழ் அரசியல்வாதிகளை அமைதி அரசியலை நாட வைத்தன. யாரிற்கும் அடங்கிடாது ஆதிக்கவாதிகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த இந்த பூர்வகுடிப் போராளிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களை அமைதியின் பாதையில் திரும்பிடச் செய்யும் அமைதி அரசியலிற்கான பிரதிநிதிகளை வாஷிங்டன் பதட்டம் நிறைந்த பகுதிகளிற்கு அனுப்பி வைத்தது. இவ்வாறான ஒரு பிரதிநிதியான ஜான் ஆடம்ஸை சந்திப்பதற்காகவே டெக்ஸும், கார்சனும் டுசான் நகரை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் வழியிலேயே அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பூர்வகுடி குடியிருப்பின் மீது நடாத்தப்படும் கொலைத்தாக்குதலை கண்ட சாட்சியுமாகிறார்கள்.
fa1ஆற்றங்கரையோராமாக யார் வம்பிற்கும் செல்லாது வாழ்ந்து கொண்டிருந்த ஜிகரில்லா அப்பாச்சேகள் மீது கதையின் ஆரம்பத்தில் நிகழ்த்தப்படும் கொலைத்தாக்குதல் Camp Grant ல் பூர்வகுடிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடிப்படையாக கொண்டது. பூர்வகுடிகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் எதிர்பாராவிதமாக துரிதமாக தாக்கி ஒருவர் பாக்கியில்லாமல் கொன்றுபோடும் வகையிலான தாக்குதல் அது. க்ராண்ட் முகாமில் தாக்குதலிற்கு தப்பிய சிறுவர்களும், பெண்களும் மெக்ஸிக்கோவில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இக்கதையிலும் அச்செயலை நினைவுகூர வைப்பதுபோல வரிகள் அமைந்திருக்கும். கதாசிரியர் நிச்சியும் க்ராண்ட் முகாம் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களே சாண்ட் கார்லோஸ் குடியிருப்பின் மீதான தாக்குதலை நிகழ்த்துவதாக தன் கற்பனையை விரிக்கிறார். இந்த தாக்குதல் குழுவிற்கு தலைமை வகிப்பவனாக டான் லாட்டிமர் இருக்கிறான். அவன் திட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கும் டெக்ஸ் மட்டும் அவ்வழியே தன் குதிரையின் மீதேறி வந்திருக்காவிடில். [ க்ராண்ட் முகாம் தாக்குதல் குறித்து படித்தபோது அத்தாக்குதலில் 92 பபகோ பூர்வகுடிகள் அப்பாச்சேக்களை அழிப்பதில் பங்கு கொண்டார்கள் எனும் தகவல் திகைக்க வைத்தது. பூர்வகுடிகள் மத்தியில் நிலவியிருந்த வேறுபாடுகள் மற்றும் துவேஷத்திற்கு சான்றாகவே இதை என்னால் கருதமுடிகிறது.]
சாண்ட் கார்லோஸ் குடியிருப்பில் வாழ்ந்திருந்த ஜிகரில்லா அப்பாச்சேக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர்த்துப் போராடினாலும் டான் லாட்டிமரின் ஆயுத மற்றும் ஆட்பலம் முன்பாக அவர்களால் எதிர்நிற்க முடிவது இல்லை. குண்டடிபட்டு உயிர்கள் மண்ணில் விழ, பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் குடியிருப்பின் அருகோடிய ஆற்றைக் கடந்து அதன் மறுகரைக்கு தப்பிச் செல்வதற்காக தம் உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஓட, அந்த அப்பாவிகளை மறுகரையை அவர்கள் எட்டும் முன்னமே கொன்று போட்டு விடுவது என டான் லாட்டிமரின் ஆட்கள் தம் குதிரைகளில் விரைய, அந்த அப்பாவிகளை காப்பாற்ற யாருமே இல்லையா பகவானே என நாம் எம் மனதில் அந்த ஆழ்கூச்சலை மெளனமாக சிந்துகையில், கூப்பிட்ட குரலிற்கு கும்பிட மறந்த தெய்வமே தந்த பதிலாய், பரட்டையின் ஆல்ஹஹால் நிரம்பிய போதை வழியும் பகற்கனவுகளில் கூட அவரை கொல்லை வீட்டை நோக்கி ஓட வைக்கும் ஒரு காட்சியாய், ஒரு தேவனாய், செமையான ஒரு எண்ட்ரியாய் வருவார் பாருங்கள் நம் ரேஞ்சர்….. அட அட அடடா. அக்காட்சியைக் கண்டால் மட்டமான சரக்கு அடித்து ஏற்கனவே முக்கால் முழுதாய் கெட்டுப் போய், கதை மாறி கதை டப்பு டப்பு என இலக்கில்லாமல் சுடும் பரட்டையின் கண்கள் டோட்டலாய் இட்லியாகும் என்பதை டெக்ஸின் அன்பு ரசிகர்களிற்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! வந்தவர், டான் லாட்டிமர் ஆட்களுடன் துப்பாக்கி சங்கீதக் கச்சேரியை ஆரம்பித்து அவர்களை அட பரட்டையை இந்தக் கதைக்கு ஹீரோவாகப் போட்டிருக்கலாமே, எதார்த்தமான முடிவு என பரட்டையை தவிர எல்லாரையும் கொன்று போட்டிருப்போமே என அழ வைக்கும் அழகுடன் விரட்டியடிக்கும் அந்த பாணி இருக்கிறதே ஆகா, ஆகா, ஆகா! பெருமேற்கில் எதார்த்தம் இருக்கலாம் ஆனால் எதார்த்தம் எனும் பெயரில் பம்மாத்து பதார்த்தம் இருப்பதை அங்கு வாழும் பேராத்மாவே மன்னிக்காது.
தம் குடியிருப்பின் மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதலிற்கு உடனடியாக பதிலடி தரவேண்டும் எனத் துடிக்கும் ஜிகரில்லா அப்பாச்சேக்களின் தலைவரை தன் கண்ணியமான மொழியாலும் ஸ்டைலாலும் சாந்தமாக்கும் டெக்ஸ் இக்கதையில் ஸ்டண்டிற்கு தானே முழுப்பொறுப்பு என்பதை சொல்லாமல் சொல்லி தாக்குதல் நடாத்தியவர்களை போட்டுத்தள்ளும் பொறுப்பை தனதாக்கி கொள்கிறார். குடியிருப்பின் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியே தெரிந்தால் அப்பாச்சே போராளிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிகழாது என்பதை பருவப் பெண் மீதான ஒரு முத்தம்போல உணரும் டெக்ஸ், வறள்நில நரி போல ரகசியமாக தன் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனும் தீர்மானத்திற்கும் வருகிறார். டுசான் நகரில் தனக்காக காத்திருக்கும் வாஷிங்டன் பிரதிநிதியான ஜான் ஆடம்ஸுடன் இத்தாக்குதல் குறித்து தனித்து பேசிட வேண்டும் எனவும் முடிவெடுத்தவாறே அவர் டுசான் நகர் நோக்கி கார்சனுடன் விரைகிறார்.
fa2டுசான் நகரை அவர் அடைந்து ஜான் ஆடம்ஸை சந்தித்து உரையாடி பூர்வகுடிகள் மீதான தாக்குதல் குறித்தும் தெரியப்படுத்துகிறார். வாஷிங்டன் நிலைநாட்ட விரும்பும் அமைதி அரசியலை குலைக்கும் முயற்சி ஒன்றின் பின்பாக செயல்படும் டான் லாட்டிமரை டெக்ஸிற்கு அடையாளம் தெரிந்திருந்தாலும் அவனை கண்டுபிடித்து தன் பாணியில் விசாரிக்காது  மேலதிக தகவல்களை அவரால் அறிந்து கொள்ள முடியாது எனும் பட்சத்தில், அப்பாச்சே போராளியான டெல்ஹாடோவை அமைதிப் பேச்சிற்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஜான் ஆடம்ஸ் சகிதம் அதற்கான பயணத்தை அவர் ஆரம்பிக்கிறார். ஆனால் டுசான் நகரின் அரசியல்வாதிகளும், பெருவணிகர்களும், ஊடகங்களும் ஜான் ஆடம்ஸ் முன்வைக்கும் அமைதி அரசியலை விரும்புவர்கள் அல்ல. உண்மையில் பூர்வகுடிகளுடனான அமைதி முயற்சிகள் எதுவுமே அவர்களிற்கு உவப்பான ஒன்றாக இருப்பது இல்லை. அரிசோனா எப்போதும் பதட்டம் நிறைந்த ஒரு அக்னி நிலமாக  இருப்பதன் வழியாகவே அவர்களால் தம் சுயலாபங்களை நிரப்பிக் கொள்ளமுடியும். அதுவே அவர்களின் குறிக்கோள். ராணுவ நடவடிக்கைகள் மூலமான இனவழிப்பே அவர்களிற்கு பிடித்தமான தீர்வு. இவர்களின் கைப்பாவையே டான் லாட்டிமர். ஆனால் டெல்ஹாடோவை தேடி பயணமாகும் டெக்ஸ் இவற்றை அறிந்தார் இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்துதரவென பயணிக்கும் எம் நாயகன் தன் வழியில் சந்திக்கப்போகும் ஆச்சர்யங்களின் எண்ணிக்கைகளையும்கூட அப்போது அறிந்தார் இல்லை.
TEX Special கதை வரிசையில் அதிக கதைகளை எழுதியவர் எனும் பெருமை க்ளோடியோ நிச்சியையே சேரும். நிச்சி என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் அல்ல. விறுவிறுப்பான கதைகளைவிடவும் சுமாரான அல்லது அதற்கும் குறைவான கதைகளை உருவாக்கியவர் அவர் என்பது என் கருத்து. ஆனால் கதாசிரியர் நிச்சி TEX Special n°5 ன் கதையான Flammes sur l’Arizona வழியாக டெக்ஸின் கதைகளில் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் எனலாம். சாண்ட் கார்லோஸ் குடியிருப்பு மீதான தாக்குதலின் பின்பான பகுதி அதிக அதிரடிகள் இல்லாது உரையாடல்கள் நிரம்பியதாக இருந்தாலும், வாஷிங்டன் அரசியல், அரிசோனாவில் நிலவும் பூர்வகுடிகளுடனான அமைதிப் பேச்சுக்கள் குறித்த மனநிலை, அமைதிப்பேச்சுக்கள் மீது பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என கதையின் முக்கிய இழையையும் அது குறித்த தகவல்களையும் சிறப்பாக அம்மிகையான உரையாடல்கள் வழி நிச்சி வாசகர்களிடம் எடுத்து வருகிறார்.கதையில் இடம்பிடிக்கும் அமைதி முயற்சிகளை முறியடிக்க செயற்படும் குழு, அவர்களின் நகர்வுகள், இதையறியாமலே டெல்ஹாடோவை தேடிச்செல்லும் டெக்ஸ் எனும் தருணங்களை வாசகர்களிடம் கச்சிதமாக கொண்டு சேர்த்த பின்பாக எதிர்பாரா திருப்பங்களிற்கும், அதிரடிகளிற்கும் தன் கதைசொல்லலில் அவர் குறை வைக்கவில்லை. அதுவும் டெக்ஸின் எதிரிகள் டெக்ஸ் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை முன்னமே கணித்து அதற்கு/அவரிற்கு ஒருபடி மேலாக காய்நகர்த்தி செல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருப்பது கதையின் திருப்பங்களை சுவாரஸ்யமாக்குகிறது.
Fuenteடெக்ஸிற்கு கதையில் வரும் பல செவ்விந்தியர்களை தெரிந்திருக்கிறது. கதையில் வரும் எல்லா செவ்விந்தியர்களிற்கும் டெக்ஸ் பற்றி தெரிந்திருக்கிறது. அப்பாச்சேக்கள் குறித்துப் பேசும் இக்கதையில் கொச்சிஸ், டெல்ஹாடோ, ஒஜோ ப்ளாங்கோ [ வெள்ளை விழி], மந்திரவாதி செங்கொம்பன் போன்ற பாத்திரங்கள் பக்குவமாக பொருந்திக் கொள்கின்றன. அதுவும் கொச்சிஸுடன் குவாட்டரும் பிரியாணியும் அடித்துவிட்டு குப்புறப் படுத்து குறட்டை விடும் அளவிற்கு டெக்ஸிற்கு கொச்சிஸுடன் நட்பு இருந்திருக்கிறது என்பதை நாம் அறியும் போது எம் அருகில் நிற்கும் கள்ளிச்செடிகளின் ரோமங்களும் ரோமாஞ்சனம் அடைவது ஆச்சர்யமான நிகழ்வல்ல. அப்பாச்சேக்களை அப்பாவிகளாக, பெரும் போராளிகளாக, சுயலாபத்திற்காக செயற்படும் துரோகிகளாக, தக்க சமயத்தில் துணைக்கு வரும் தோழர்களாக பல பரிமாணங்களிலும் கதையில் சித்தரித்து சிறப்பித்து இருக்கிறார் கதாசிரியர்.
மிகவும் விவேகமான எதிரிகளின் திட்டங்களின் முன்பாக சுவர் ஒன்றுடன் முட்டி மோதி என்ன செய்வது என்பது தெரியாமல டெக்ஸ் அமைதியாகும் ஒரு தருணத்தில் அவரை நாடி வரும் ஒரு எதிர்பாரா உதவி, உண்மைகளை கண்டறிய அவரை அனைத்து வழிமுறைகளையும் துணைதேடச் செய்கிறது. கட்டில் அறைக்குள்ளும் கனல் கக்கும் கண்களுடன் செல்ல டெக்ஸால் மட்டுமே முடியும்! விவேகமான எதிரிகளிற்கு விவேகமாகவும், மூர்க்கமான அவர்களின் செயற்திட்டங்களிற்கு அதிமூர்க்கமாகவும் பதில் தருகிறார் டெக்ஸ். அப்பாச்சேக்களின் வீரம் குறித்து சிறு இழையாகவேனும் செயற்பட விரும்பும் இக்கதை டெக்ஸ், கார்சன் உயிர் போகப்போகிறது எனும் நிலையில் அவர்களை காப்பாற்றுவது அப்பாச்சேக்களே என்பதன் வழியாக அதை கதையில் நிலைநாட்டுகிறது.
இக்கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் பிரபல சித்திரக் கலைஞரான Victor de la Fuente. கதையின் பல இடங்களில் டெக்ஸும், கார்சனும் சோமாலியா பிரஜைகள் போல நோஞ்சான் பாடியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். டெக்ஸ் சில கட்டங்களில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஜார்ச் டபிள்யூ புஷ்சை நினைவூட்டுகிறார். ஆனால் விக்டர் டு லா ஃப்யோண்ட் திறமைசாலி. பூர்வகுடிகள் விடயத்தில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். பெருமேற்கின் நிலவியலை அசாத்தியமாக அவர் விரல்கள் வரைந்து தள்ளியிருக்கிறது. மோதல் காட்சிகளும் சிறப்பாக கட்டங்களிற்குள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. டெக்ஸ் கதைக்கு வரைய அவர் பிரியம் காட்டாமல் இருந்தார் எனவும் பின் மனம் மாறினார் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பொனெலிக்குதான் எம் நன்றிகள் உரித்தாகும். மெதுவாக ஆரம்பித்து வேகமாக நகர்ந்து அதிரடியாக நிறைவடையும் இந்த டெக்ஸ் கதை அவர் ரசிகர்களை எளிதாக திருப்தி செய்யும் அம்சங்களை தன்னுள் தாராளமாக கொண்டிருக்கிறது.

Saturday, July 20, 2013

சிக்கன் வித் ப்ளம்ஸ் - தமிழில்

மார்ஜான் சத்ராபியின் குறிப்பிடத்தக்க படைப்பான சிக்கன் வித் ப்ளம்ஸ் இணையத்தில் தமிழில் தரவிறக்க கிடைக்கிறது. நுண்ணிய உணர்வுகளை தன் கோடுகளிற்குள் மந்தகாசமான அங்கதத்துடன் ஒளித்து வைக்கும் திறமைசாலி சத்ராபி. வழமையிலிருந்து வேறுபட்ட வாசிப்புக்களை தேடும் நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு அதிரடி ஆக்சன் சாகஸம் அல்ல, அகமொன்றின் ஆற்றாமையின் தளர்நடையின் மெளனமான இசைவரி.



தரவிறக்க
http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr

தொடர்புடைய பதிவு
http://illuminati8.blogspot.fr/2013/02/chicken-with-plums.html

Sunday, July 7, 2013

நீரோட்டத்தின் நிழல்

தன் கணவனை கொலை செய்வதற்கு துணை தேடும் அழகான மனைவிகளிற்கு நீங்கள் உதவ முன்வரும் பட்சத்தில் நீங்கள் அவர்களை விட விவேகமானவர்களாகவும், அவர்கள் விவேகவேகத்தினை கடந்து ஓடக்கூடியவர்களாகவும் இருப்பது நல்லது.
ஜேம்ஸ் எம் கெய்ன் எழுதிய நாவலான Double Indemnity இவ்வகையான அழகான மனைவி ஒருத்தியின் கவர்ச்சியில் ஆழும் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டின் பரிதாபமான முடிவிற்கு வாசகர்களை சிறப்பாக எடுத்து செல்கிறது.

கணவனை கொலை செய்வதன் வழி அவன் இன்சூரன்ஸ் பணத்தை தனதாக்கி கொள்ள விரும்பும் ஒரு பெண். அதற்கு துணைபோகும் இன்சூரன்ஸ் தொழிலின் அனைத்து தந்திரங்களையும் அறிந்த ஒரு மனிதன். இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஓட்டைகள் ஏதுமற்ற ஒரு கொலைத்திட்டம். அதன் நிறைவேற்றம். அதன் பின்பான திருப்பங்கள். கவர்ச்சியின் உறை களையும் வேளையில் மனிதர்கள் மீது இறங்கும் தெளிவின் கனம்.

அந்த தெளிவு அவனை அவளை வெல்ல தூண்டுகிறது. அவளிடமிருந்து வேறுபட்ட ஒரு அன்பை தனதாக்கி கொள்ள இயக்குகிறது. இன்சூரன்ஸ் கம்பனியின் அனுபவம் பெற்ற அதிகாரியின் நடவடிக்கைகளிற்கும், எதிர்பாரா நிகழ்வுகள் வழங்கும் சறுக்கல்களிற்கும் முன்பாக தன்னை ஒரு திறமைசாலியாக நிரூபித்திட உந்துகிறது. ஆனால் ஒரு மனிதன் ஓடுவதை நிறுத்தும் எல்லை என ஒன்று உள்ளது. அது அயர்ச்சியாலோ, களைப்பாலோ ஏன் அன்பினாலோ கூட இருக்கலாம். வால்ட்டர் ஹஃப் எனும் அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தோற்பது ஒரு பெண்ணால். ஆனால் அது தன் கணவனை கொலை செய்வதற்கு துணைபோன பெண்ணான பைலிஸ் அல்ல.  பெண்ணின் அருகாமையே மனதில் அமைதியையும் சாந்தத்தையும் குடி கொள்ளச் செய்து மனிதனை இளைப்பாற்றும் காதலை ஒருவனில் உருவாக்ககூடிய பெண்ணவள்.

ஆனால் வால்ட்டர் ஹஃப்பிற்கு கிடைப்பது பரிதாபமான முடிவு. இவ்வகையான நாவல்கள் வழங்கக்கூடிய அருமையான முடிவும் கூட. அம்முடிவின் தருணத்தில் கூட நாவலாசிரியர் ஜேம்ஸ் எம் கெய்ன் தன் எழுத்துக்கள் மூலம் கொணரும் இறுக்கமான உணர்வை சிறிதும் தளர்த்திடவில்லை. நீரோட்டம் ஒன்றின் ஆழங்கள் கொண்டுள்ள ரகசியங்கள் போலவே மனித மனங்களும். அவற்றின் ரகசியங்களும், அன்புகளும் மேற்பரப்பில் கோலங்கள் இட்டு அழகோவியமாவதில்லை.

நாவல் தந்த அனுபவம் திரைப்படத்தை பார்க்க தூண்டியது. இருபது நிமிடங்களின் பின்பாக திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். பிரதான காரணம்; வால்டர் ஹஃப் பாத்திரம் திரையில் ஓயாமல் பேசுகிறது. நாவலில்கூட கதை சொல்லி அவனாகவே இருந்தாலும் அவன் கதையை சொல்வதை தவிர்த்து வார்த்தைகளை தேவை மீறி உபயோகிப்பவனாக இருப்பது இல்லை. அவன் பாத்திரம் நாவலில் உருவாக்கும் பிம்பம் திரையில் ஆரம்ப கணத்திலேயே உடைந்து விடுகிறது. அது போலவே கதையில் இன்சூரன்ஸ் அதிகாரியாக வரும் கீய்ஸ் பாத்திரத்தை சிறு பராவில் தீர்க்கமானதாக உருவாக்கி காட்டுவார் நாவலாசிரியர் கெய்ன் ஆனால் திரையிலோ அவரும் அதிகம் பேசுவதாகவே நான் உணர்கிறேன். இது நாவல் என் மீது உருவாக்கிய சித்திரத்திற்கும் திரைப்படத்தின் ஆரம்ப நிமிடங்கள் தந்த அனுபவங்களிற்குமான இடைவெளி மட்டுமே. என் கருத்தில் நாவல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது என்றே சொல்வேன்.

ஜேம்ஸ் எம் கெய்ன் சுற்றி வளைக்காது நேரடியாக விடயத்திற்கு வரும் எழுத்துக்களின் சொந்தக்காரர். 1936 களில் வெளியான இந்நாவலின் கச்சிதம் வியக்க வைக்கும் ஒன்று. ஒரு க்ரைம் நுவார் வாசகனிற்கு தர வேண்டிய உணர்வையும், அவனை இட்டு செல்ல வேண்டிய சூழலையும் , பாத்திரங்களின் இக்கட்டான நிலையையும் அவர் எழுத்து சிறப்பாக நாவலில் எடுத்து வருகிறது. தேவையற்ற வர்ணனைகள், உரையாடல்கள் போன்றவற்றை கெய்னின் எழுத்துக்கள் கொண்டிருப்பது இல்லை என்பேன். அது போல நாவலில் அங்காங்கே சில வரிகள், நின்று மீண்டும் படித்து ரசித்து செல்ல வைக்கும் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. இவ்வகை கதைகளில் பாத்திரங்களை வாசகனிடம் உணர்வுபூர்வமாக நெருங்க வைப்பது ஒரு மலிவான உத்தி என நான் கருதுகிறேன். அதை கெய்ன் தன் நாவலில் செய்வது இல்லை. நாவலின் பாத்திரங்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்மான பிடிப்பை ஏற்படுத்துவதை கெய்னின் கதை சொல்லல் தடுக்கவே முயல்கிறது. இருப்பினும் வால்ட்டர் ஹஃபின் முடிவு அதை வெற்றி கொள்கிறது எனலாம்.

இவ்வகை நாவல்களின் பிரதான பாத்திரங்களில் செயற்படும் அறம் மிகவும் புதிரான ஒன்று.  அவற்றின் வினோதமான ஆட்டத்தின் பொம்மைகளாகவே பாத்திரங்கள் இயங்கி மயங்குகின்றன. அதுவே அப்பாத்திரங்களின் முடிவுகளையும் தீர்மானித்து விடுகிறது போல. ஆரம்ப கால ஹார்ட் பாய்ல்ட் வகை நாவல்களில் மிகச்சிறப்பான ஒரு நாவல் Double Indemnity என்பது உண்மையே.

Monday, July 1, 2013

பாவம் கழுவாய்

ஒரு குற்றப்புனைவின் பிரதான இழையானது குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் எடுத்து வரல் அல்லது அறம் சார்ந்த ஒரு தீர்ப்பை புனைவின் முடிவில் குற்றமிழைத்தவர்களிற்கு வழங்கல் போன்ற பண்புகளை தன்னுடன் இழைத்துக் கொண்டதாக இருக்கும். இப்பண்புகள் இவ்வகை புனைவுகளை படிக்கும் வாசகர்களின் மனநிறைவிற்கும், திருப்திக்கும் உத்தரவாதம் அளிப்பவையாகவும் திகழும். குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது எனும் நிம்மதியும், மகிழ்ச்சியும் வாசகர்களை அரவணைத்துக் கொள்ளும்.

இவ்வகையான இனியெல்லாம் சுபமே முடிவுகளைக் கொண்ட குற்றப்புனைவுகள் அனைத்துமே படிப்பவர்களை திருப்தி செய்து விடுமா எனும் கேள்வியைக் என்னிடம் கேட்டால் என் பதில் இல்லை என்பதுதான். இவை பெரும்பாலும் வேகமான வாசிப்பிற்கு என உருவாக்கப்பட்ட படைப்புக்களாகவும், இலகுநுகர் பண்டங்களாகவும், விற்பனை யுக்திகள் மற்றும் விளம்பர திணிப்பு, மந்தைவிமர்சன கலாச்சாரம் என்பவை வழியாக  அவற்றிற்குரிய தரத்தைவிட அதிக தரம் சுமத்தப்பட்ட படைப்புக்களாகவும் காணப்படுகின்றன என்பது என் கருத்து. இவற்றிற்கு உதாரணமாக அண்மைக்காலங்களில் அதிகம் பேசப்படும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகளை நான் சுட்டிக் காட்டுவேன். ஸ்டெய்க் லார்சனும் சரி கமிலா லாக்பெர்க்கும் சரி லார்ஸ் கெப்லரும் சரி அவர்களிற்கும் அவர்கள் படைப்புக்களிற்கும் கிடைத்திருக்கும் பெயரிற்கும், பிரபலத்திற்கும் ஏற்புடைய படைப்புக்களை தரவில்லை என்பது என் வாசிப்பனுபவம். அவர்கள் படைப்புக்களை Fred Vargas எழுதிய Wash this Blood clean from my Hand ஐ படித்தபின்பாக சாதாரண குற்றப்புனைகள் என்பதாகவே என்னால் வகைப்படுத்த கூடியதாகவே இருக்கிறது.

ஆனால் பிரெஞ்சு நாவலாசிரியையான ஃப்ரெட் வார்கா தனது இப்படைப்பில் குற்றத்தை ஒரு பரபரப்பு ஆக்கியிருக்க மாட்டார். அதுதான் இப்புனைவின் மொத்த உயிர் என உருக்காட்டியிருக்க மாட்டார். அசர வைக்கும் துப்பறியும் நுட்பங்களோ, அல்லது அறிவியல் நுட்பங்களோ கதையில் பெரிதும் திருப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் படைப்பை அவர் எழுதியிருக்க மாட்டார். கதையின் நாயக பிம்பமானது கதையில் வரும் ஏனைய பாத்திரங்களை தாண்டி புனித தன்மையோ அல்லது புத்திசாலித்தனமோ அல்லது செயற்திறனோ அல்லது வீரமோ கொண்டது என வற்புறுத்திய திணிப்புடன் காட்டவே மாட்டார். ஆனால் இவை அனைத்துடனுமே அவர் தனது நாவலை ரசிக்க செய்து விடுகிறார். அவ்வகையில்தான் ஃப்ரெட் வார்கா மிகவும் சிறப்பானதொரு படைப்பாளியாகவும், கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்தாளாராகவும் தகுதி பெறுகிறார்.

கதை, 30 வருடங்களிற்கு மேலாக சமார்த்தியமாக கொலைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் கொலைஞனை ஆடம்ஸ்பெர்க் எனும் பொலிஸ் அதிகாரி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை விபரிக்கிறது. பாரிஸின் குற்றப் பொலிஸ் பிரிவொன்றில் பழுதடைந்து போன வெப்பமூட்டியை தன் பார்வையால் திருத்திட முயலும் ஆடம்ஸ்பெர்க்குடன் கதை ஆரம்பமாகிறது. அதிலிருந்து வேறுபட்ட சுவையை தேடும் வாசகனிற்கு விருந்துதான். பாரிஸ் குற்றப்பிரிவின் அவலங்கள், அதில் பணிபுரிபவர்களின் வாழ்க்கைகள், அவர்கள் குணாதிசயங்கள் போன்றவற்றை மென்மையான நகைச்சுவையுடன் தன் வார்த்தைகளில் விதைக்கிறார் ஃப்ரெட் வார்கா. அவர் வரிகளை படிப்பது பனிநிறைந்த காலை ஒன்றில் இதமான சூரியக்கதிர்களோடு உலாச்செல்வதுபோல அவ்வளவு இதமாக இருக்கிறது.[ மொழிபெயர்ப்பாளார் Sian Reynolds கதையை அருமையாக மொழிபெயர்த்து இருக்கிறார்]

படிப்படியாக வாசகனை Trident எனும் கொலைஞனின் பாதைக்கு இட்டுச் செல்லும் கதை, தான் செல்லும் வழியில் அவனிற்கு காட்டும் சுவாரஸ்யங்கள் ஏராளம். நிதானமான கதை சொல்லல் என்பது குற்றப்புனைவின் மிகப் பெரிய எதிரி. அந்த எதிரியையே தனது சுவை நிறைந்த கதை சொல்லலால் இனிய அனுபமாக்கிவிடுவதுதான் ஃப்ரெட் வார்காவின் திறமை. அவர் குற்றத்தை விடவும் தன் கதையின் மாந்தர்களை தன் படைப்பில் அதிகம் பிரதானம் செய்கிறார். அவர்களின் ஆன்மாக்களை தன் எழுத்துக்களால் வாசகனை நெருங்க செய்கிறார். ஆடம்ஸ்பெர்க் எனும் தலைமை பாத்திரத்தை தாண்டியும் பிரான்சின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு ஒய்வுபெற்ற முதியவரையும் - அவர் ஒரு சில பக்கங்களிலேயே கதையில் வந்தாலும்- எம்மால் ரசிக்கவும், நெருங்கவும் அவரால் செய்ய முடிகிறது. அதுபோலவே பிரான்சின் ஆன்மாவினையும் நாவலினூடு அவர் எழுத்துகள் நுட்பமாக பதித்து விடுகின்றன.

பாத்திரங்கள் மட்டுமல்லாது கனடாவில் இருக்கும் ஒரு அணிலையோ அல்லது அங்குள்ள குளிர் ஏரியில் ராஜாங்கம் செய்யும் ஒரு வாத்தையோ அல்லது இறந்த ஆழ் ஏரி ஒன்றில் ஜீவித்திருக்கும் ஒரு முற்சரித்திர மீன் வகையையோ அல்லது பிரான்சின் ஸ்டார்ஸ்பூர்க் எனும் இடத்திலிருக்கும் கோதிக் கோயிலையோகூட அவர் தன் எழுத்துக்களால் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் ஆக்குகிறார். கதையின் ஓட்டத்தில் இவை உருப்படுத்தும் குறியீடுகள் வாசகனிற்கு எடுத்துவரும் அனுபவம் அலாதியானது. அந்த வகையில் ஃப்ரெட் வார்காவின் எழுத்து தனித்துவமானது, வழமையான மையநீரோட்ட குற்றப்புனைவுகளிலிருந்து வெகுதூரம் விலகி வரிகளினுள் புதைக்கப்பட்ட புதையலை தேடியலையும் வாசகனை வேண்டி நிற்பது. அவ்வகையான வாசகர்கள் மட்டுமே அவரின் பகட்டற்ற எழுத்துக்களின் பின் மறைந்திருக்கும் மறையழகை கண்டுணர முடியும். அவர் எழுத்துக்கள் படைப்பு என்பதையும் தாண்டி உங்கள் வாசிப்பனுபவத்தை மெருகேற்றும் ஆற்றலை தம்மில் கொண்டிருக்கின்றன.

ஃப்ரெட் வார்கா 
Trident ன் கரங்கள் நீண்டவை. அவனை நோக்கி ஆடம்ஸ்பெர்க் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனை அவன் அழிவை நோக்கி இட்டுச் செல்பவையாக இருக்கும். ஆடம்ஸ்பெர்க்க்கும் தர்க்கங்களை பெரிதும் நம்பாது தன் உள்ளுணர்வுகளையும், கனவுகளையும் நம்புபவன். தர்க்கங்களும், ஆதாரங்களும் மட்டுமே ஒருவனை குற்றவாளியாக்கிடவோ, நிரபராதியாக்கிடவோ முடியும் எனும்போது ஆடம்ஸ்பெர்க் இவற்றை தாண்டி தன் தேடலை நடாத்துகிறான். இதனாலேயே அவன் தனியனாக சித்தரிக்கப்படுகிறான். அவன் ஒவ்வொரு ஆதாரங்களாக தேடிச் சென்று தோல்வியுற்று பின் அவற்றை கண்டடையும் வழிகள் எல்லாமே வாசகனை ஏமாற்றாதவை. கதையின் பாத்திரங்கள் யாவுமே ஆடம்ஸ்பெர்க்கிற்கு ஏதோ வகையில் அவன் தேடலில் உதவுகின்றார்கள். அவனிற்கு உதவுவதன் வழி அவர்கள் தம்மை படைப்பில் செதுக்கி கொள்கிறார்கள். எதிர்பாரா திருப்பங்களை கதைக்கு இட்டு வரும் இப்பாத்திரங்களை ஃப்ரெட் வார்கா உருவாக்கி, கதையில் நடமாடவிட்டிருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக கிளிமென்டின், ஜொசேட் எனும் முதிய பெண்களின் கூட்டணி அசத்தல் என்பேன். அதுவும் அவர்கள் உரையாடல்கள், அவர்கள் பற்றிய ஃப்ரெட் வார்காவின் விபரிப்புக்கள் யாவுமே அருமையாக இருக்கும். கதைமாந்தர்கள் என்னை இவ்வளவு கவர்ந்த குற்றப்புனைவு இதுவாகத்தானிருக்கும் என்றால் அது மிகையல்ல.

ஆடம்ஸ்பெர்க், தொடர்கொலைஞனின் குற்றவடிவு என்ன என்பதையும் அது எதைப் பிரதிபலிக்கிறது என்பதையும் கண்டறியும் தருணங்கள் உண்மையிலேயே நல்லதொரு கற்பனை. அந்த வடிவை பூரணமாக்குவதைப் போலவே நாவலின் முடிவும் அமைந்து இருக்கிறது. ஏனெனில் தொடர்கொலைஞர்களிலும் கலைஞர்கள் உண்டு. அவர்கள் தம் கொலைகள் வழி தம் படைப்பின் பூரணம் காணவே விழைகிறார்கள். அது அவர்களின் விடுதலை. பாவத்தை கழுவுதல் என்பதும் ஒரு வகையில் விடுதலையே. ஆடம்ஸ்பெர்க் ஒரு சில பாவங்களை தானும் கழுவிக் கொள்கிறான். ஆனால் அவன் வெற்றி பெறுகிறானா அல்லது கொலைஞன் வெற்றி பெறுகிறானா என்பதற்கு நாவலில் ப்ரெட் வார்கா தரும் முடிவு மிகவும் எதார்த்தமானது.

இயந்திர வேகமும், அறிவியல் நுட்பமும் கலந்து ஒளியின் வேகத்தில் பயணிக்க துடிக்கும் குற்றப்புனைகளின் மத்தியில் இளைப்பாறலின் இன்பத்தையும், வாசிப்பிலுள்ள சுகத்தையும் வாசகனிற்கு வழங்கி மனிதமும்,  மனிதவாழ்வின் சிக்கல்களினூடன இயல்பான பயணமும், மனித மனதில் ஆழத்தில் வாழும் இருளும் கலந்து ப்ரெட் வார்கா தந்திருக்கும் இப்படைப்பு சிறப்பானது அன்றி வேறல்ல.


Sunday, June 9, 2013

ஜாஸ் மெய்னார்

எந்த அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அரிதாக நிகழும் ஒன்று. Jazz Maynard கதை அவ்வகையானது.

பத்து வருடங்களிற்கு மேலாக பார்சலோனாவிலிருக்கும் தன் பிறந்த இடமான எல் ராவலை விட்டு நீயூயார்க் சென்று இசைக் கலைஞனாக ஜீவிதம் நடாத்தி வரும் ஜாஸ் மெய்னார், மீண்டும் தன் நகரிற்கு திரும்பி வருகிறான். அதுவும் தன் தங்கையுடன் !!

தங்கை ஏன் நியூயார்க் சென்றாள், எவ்வாறு ஜாஸ் மெய்னாரை அங்கு கண்டுபிடித்தாள் என்பதை ஜாஸ் தன் நண்பனான தியோவிற்கு சொல்கிறான். ஒரு ப்ளாஷ்பேக்காக, இரு நண்பர்களும் கதிரைகளில் முதுகைக் காட்டிய நிலையில் அமர்ந்திருக்க விலங்கிட்ட நிலையில், அவர்களை சூழ கோட் சூட் அணிந்த முரடர்கள் துப்பாக்கியும், நரகத்தின் சாயல் கலந்த பாவனையும் கொண்டு காவல் நிற்க.

ஏன் ஜாஸும், அவன் நண்பன் தியோவும் கதிரைகளுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கிறார்கள்? அதற்கான காரணத்தை அட்டகாசமானதொரு கதை சொல்லலால் மிக வேகமாக ப்ளாஷ்பேக், ஃபாஸ்ட் கட் உத்திகளால் சொல்கிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கதாசிரியரான Raule.

எல் ராவல் ஒரு குற்ற நகரம், அடக்குமுறையும் அராஜகமும் கொண்ட காவல்துறை, தெய்வீக நிஞ்சா ரவுடிகள், இனிதாகப் பேசி இளம் பெண்களை மாஃபியாவிற்கு விற்கும் ஆசாமிகள், Snuff திரைப்படங்களை நெறியாளும் பெண், காவல்துறை அதிகாரிகளையே மரண அடி அடிக்கும் மாஃபியா கும்பல், அதன் தலைவனான யூதாஸ், முதலாளித்துவத்திற்கும், பூர்ஜுவாஸிகளிற்கும் எதிராக முளைவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு புரட்சி என கதையின் பக்கங்களில் ஆச்சரயங்கள் மேல் ஆச்சர்யம் உண்டு. கதை சொல்லலும் அலட்டல் இல்லாதது. தேர்ந்த ஒரு சமையற்காரன் தன் கத்தியால் காய்கறிகளை வேகமாக நறுக்கி துண்டாக்குவது போல் கச்சிதமான கதை சொல்லல் என்பேன்.

நியூயார்க்கில் தன் தங்கை அனுப்பிய கடிதம் மனதில் ஒலிக்கும் குரலாய் தொடர Hells Kitchen எனுமிடத்தில் இருக்கும் உயர்மட்ட விபச்சார விடுதி ஒன்றில் ஜாஸ் நிகழ்த்தும் அதிரடிகளை பார்க்கும்போது அட்டைப்படத்தில் இருக்கும் ஜாஸ்தானா இவன் என விரியும் ஆச்சர்யம், பக்கங்களை புரட்ட புரட்ட அதிகமாகும். ட்ரம்பெட் கலையிலும் சரி துப்பாக்கியை கையாளுவதிலும் சரி, வேறு எவராலும் ஆற்ற முடியாத குற்றங்களை ஆற்றுவதிலும் சரி ஜாஸ் ஒரு கலைஞன். என்ன அவன் இசையில் காட்டாத வன்முறை அவன் அதிரடிகளில் இறங்கும்போது சங்கீதமாகும்.

த்ரில்லர் நுவார் அதுவும் Neo Noire வகை கதைகளின் ரசிகர்களிற்கு இக்கதை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும். கதைக்கு சித்திரங்களை வழங்கியிருக்கும் ஸ்பெயின் நாட்டு சித்திரக் கலைஞரான Roger தன் அசாத்தியமான திறமையை பக்கங்களில் நிரூபித்து இருக்கிறார். அற்புதமான நவபாணியும், கம்பீரமும் கொண்ட சித்திரங்கள் கதையின் வேகத்தின் உந்துவிசையாக இருந்து கொண்டே இருக்கும்.

ஜாஸ் மெய்னார் கதையின் முதல் மூன்று ஆல்பங்களும் பார்சலோனா ட்ரையாலஜி என அழைக்கப்படுகிறது. கதை, சித்திரங்கள், இவற்றில் கலந்திருக்கும் வேகம், வன்முறை என  இதன் முதன் ஆல்பம் ஏமாற்றாத ஒன்று. இதுவே இதன் அடுத்த இரு ஆல்பங்களையும் உடனடியாக படிக்க வேண்டும் எனும் ஆவலையும் பற்ற வைத்து விடுகிறது. அவையும் இதனைப் போல ஏமாற்றாது வாசிப்பின்பத்தை நல்கும் என நம்புகிறேன் !

Saturday, June 8, 2013

துணையான ஒரு சொல்

நாசிக்கள் அதிகாரத்தில் இருந்தபோது நடந்த இனவழிப்புக்களில் பெரிதாக அறியப்பட்டது யூத இனத்தினதாகவே இருந்து வருகிறது. பொதுப்பார்வையில் அதிகம் படாத இனவழிப்புக்களில் ஒன்றாக, நாடோடிக் கூட்டம் என அழைக்கப்படும் ஜிப்சிக்களின் இனவழிப்பை சொல்லலாம். யூத இனவழிப்பானது தொடர்ச்சியான நினைவுகூறலிற்கு உட்படுத்தப்படும் அளவில் பொதுவெளியில் ஜிப்சி இனத்தின் அழிவு நினைவுகூறப்படவில்லை எனலாம். தம் வரலாற்றை ஆவணப்படுத்தாத மக்கள் எனும் வகையிலும் ஜிப்சிக்களை அடக்கலாம். இருப்பினும் அவர்கள் பேசும் மொழி ஒன்றே. அது ரொமானி என அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்து இப்பேச்சு மொழி உருவாகியிருக்கலாம் எனக் கூறுகிறார்கள்.

இந்தியாவின் மேற்கிலிருக்கும் பஞ்சாபிலிருந்து நான்காம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஜிப்சிகள்  புலம்பெயர்தலில் ஈடுபட்டார்கள். இந்த புலம் பெயர்தலிற்கான சரியான காரணம் என்ன என்பது அறியப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டளவில் ஜிப்சி இன மக்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் தம் நாடோடி வாழ்க்கையில் வியாபித்திருந்தார்கள்.

ஜிப்சி இன மக்களை இரு கரம் நீட்டி வரவேற்கும் நாகரீக சமூகங்கள் இல்லை எனலாம். இது அன்றும் இன்றும் பொருந்திடும் வரி.  அவர்கள் மீது சமூகங்கள் கொண்டிருந்த புரிந்து கொள்ளவியலா அச்சமும், வெறுப்பும்,  ஊர் அல்லது நகரின் எல்லைகள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களிலேயே அவர்களிற்கான தங்குமிடங்களை வழங்கின. ஜிப்சிகள் என்றால் திருடர்கள் எனும் பார்வை சமூகத்தின் ஆழத்தில் ஆழமாக வேர் பிடித்திருக்கிறது. இதற்கு ஜிப்சிகளின் செயல்களும் துணை போகவே செய்கின்றன. அன்றைய கோழித்திருடர்கள் முதல் இன்று ஐரோப்பாவின் பெருநகர்களின் பிக்பாக்கெட்டுக்கள் வரை ஜிப்சிகள் தம் திறமையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இது அந்த இன மக்களின் ஒரு சிறு பகுதி, ஒரு சிறு கூறு, ஒரு சித்திரத்தின் சின்னஞ்சிறு சதுரம்.

தமக்கென ஒரு வரலாற்றை கொண்டிராத மக்கள் இல்லை. இருந்தால் அவர்கள் வரலாறு காலத்தில் நிலைத்திருக்கும் மொழிகளில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக ஜிப்சிகளின் வரலாறும் ஆவணப்படுத்தல் எனும் அதிர்ஷ்டத்தை இழந்த ஒரு வரலாறாகவே இருக்கிறது. அவ்வகையான பாரம்பரியத்தை கொண்ட ஜிப்சி கூட்டம் ஒன்றின் பயணம் குறித்தே Batchalo கதை பேசுகிறது.

செக்ஹோஸ்லாவாக்கியாவில் அமைந்திருக்கும் பொஹெமியா எனும் பிரதேசத்தில் 1939ல் கதை ஆரம்பிக்கிறது. கதை நடக்கும் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் காணாமல் போகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பாக அக்கிராமத்தில் வந்து முகாமிட்டிருக்கும் ஜிப்சிகள் மீது கிராமத்தவர்களிற்கு சந்தேகம் உருவாகிறது. சந்தேகத்தை உறுதிப்படுத்த ஜிப்சிகள் தங்குமிடத்தை நோக்கி செல்லும் கிராம மக்கள் அங்கு ஜிப்சி இன சிறுவர்களும் காணாமல் போயிருப்பதை அறிந்து கொள்கிறார்கள்.

கிராமத்தின் காவல்துறையை சேர்ந்த ஜோசப்பின் மகன் ரோமனும் காணாமல் போன சிறுவர்களில் ஒருவன். ஜிப்சிகள்,காணாமல்போன தம்மின சிறுவர்களை சில தடங்களை தொடர்வதன் வழி தேடிச் செல்லலாம் எனும் முடிவிற்கு வருகிறார்கள். ஜிப்சிகளுடன் இணைந்து கொள்கிறான் ஜோசப். அவர்கள் ஆரம்பிக்கும் அந்த தேடல் வழியாக ஜிப்சி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும், காலகாலமாக அம்மக்கள் மீது காட்டப்படும் வெறுப்பையும் பாட்சலோ கதை அதிக ஆழமற்ற விதமாக சொல்கிறது.

ஜெர்மனிய சமூகத்தில் ஜிப்சி பிளேக் எனும் சொல் இருந்து வந்தது. அந்த சொல்லின் அர்த்தம் அந்த இனத்தின் மீதான அக்கால ஜெர்மனிய சமூகத்தின் பார்வையை தெளிவாக விளக்கும். தூய ஜெர்மானிய சமூகத்தை உருவாக்கும் கனவில் இல்லாது ஆக்கப்படும் இனங்களின் பட்டியலில் ஜிப்சிகளும் இருந்தார்கள். திருத்த முடியாத குற்றவாளிகள் கூட்டம் எனவும் அவர்கள் நாஸிக்களால் வகைப்படுத்தப்பட்டார்கள். 1939ல் ஜெர்மனியில் ஜிப்சி அபாயம் என்பதற்கு எதிரான ஒரு சட்டமும் அமுலிற்கு வந்தது. இவ்வகையான மனநிலை கொண்ட ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் 1939 ல் செக்கோஸ்லோவாக்கியாவும் தன்னை இணைத்துக் கொண்டது.

பொஹெமியாவில் ஆரம்பித்த ஜிப்சிகளின் தேடல் பயணம் ஒரு பாதையிலும், ஜெர்மனிய ராணுவ வீரர்களால் கடத்தி செல்லப்படும் சிறுவர்கள் செல்லும் ஒரு பாதையிலுமாக பாட்சலோ கதை பயணிக்கிறது. இந்த இரு பாதைகளும் இணைவது ஒஷ்விட்ஸ் மரண முகாமில்.  இந்த மரண முகாமிற்கு வருவதற்கு முன்பாக, ஜிப்சிகள் மீது சமூகம் கொண்டிருக்கும் வெறுப்பு, ஜிப்சி இரட்டையர்கள் மீது டாக்டர் ராபர்ட் ரிட்டர் நிகழ்த்திய ஆய்வுகள், ஜிப்சிகளிற்கான லெட்டி கடூழிய முகாம், ஜிப்சிகளின்  வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள், பண்பாடுகள் மீதான நகர்வாக கதை பயணிக்கிறது.

யூத இன மக்களை விட குறைவாகவே ஜிப்சி இனம் மரண முகாமில் வேதனைகளை அனுபவித்ததாக கதை சொல்கிறது. ஆனால் முடிவு என்ன என்பதை வரலாறு சொல்லும். ஓஷ்விட்ஸ் மரண முகாமில் மரண தேவன் என அழைக்கப்பட்ட டாக்டர் மெங்கலெ, ஜிப்சிகள் மீதும் தன் மனித தன்மையற்ற ஆய்வுகளை நிகழ்த்த தவறினாரில்லை. ஜிப்சி இனவழிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 500 000  என்கிறது ஐரோப்பா.  1948ல் ராபார்ட் ரிட்டர் மீது  உயிர் தப்பிய ஜிப்சிகள் தொடுத்த வழக்கானது தகுந்த ஆதாரங்களின்மையால் அவரை நிரபராதியாக்கி விடுவித்தது. டாக்டர் மெங்கலெ தென் அமெரிக்காவில் மறைந்து வாழ்ந்தார். 1979ல் வால்ஃப்ஹாங் ஜெர்ஹார்ட் எனும் பெயருடன் அவருடல் பிரேசிலில் அடக்கம் செய்யப்பட்டது. ஜிப்சிகளிற்கான கடூழிய முகாம் இருந்த இடத்தில் இன்று ஒரு பெரும் பன்றி தொழுவம் இருக்கிறது. அருகிலேயே ஜிப்சிகள் நினைவகம். அப்பன்றி தொழுவத்தை அவ்விடத்திலிருந்து நீக்க சொல்லி ஐரோப்பிய பாராளுமன்றம் செக் அதிகாரத்திடம் கேட்டுக் கொண்டும் அதற்கான பலன் ஏதும் இல்லை.

ஜிப்சிகளின் இனவழிப்பை ஆவணப்படுத்தும் இக்கதையின் சித்திரங்கள் பழுப்பு வண்ணத்தின் ஆக்கிரமிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வண்ணத் தெரிவு கதையை கடந்த காலத்திற்கு இலகுவாக கடத்தி செல்ல உதவுவதுடன் மட்டுமல்லாது அதற்கு மென்சோகம் ஒன்றையும் உபரியாக வழங்குவதில் சிறப்பாக செயல்படுகின்றன. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Arnaud Bétend. தெளிவான கோடுகளில் சிறப்பாக சித்திரங்களை உருவாக்கி இருக்கிறார். அட்டைப்படம் மிக அருமையான ஒன்று இருப்பினும் இதைவிட சிறப்பாக சித்திரங்கள் அமைந்திருக்கலாம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சக்தி வாய்ந்த ஒரு கதையை சொல்ல வேண்டிய பணி, வரலாற்று உண்மையை சித்திரக் கதையாக சொல்ல வேண்டிய பொறுப்பு இவை இரண்டும் Le galli Michael கைகளில். ஜிப்சிகள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகள், வன்முறைகளை வரிகளாக மட்டும் உள்ளெடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அவர் கதை சொல்லல். கதையில் இருக்க வேண்டிய உணர்வுகள் குறைவாகவும், வாசகனை நெருங்கி வரும் தன்மை இல்லாததாகவும் அவர் கதையை கூறியிருப்பதாக நான் உணர்கிறேன். ஏறக்குறைய ஒரு ஆவணப்படம், அதுவும் அதிக சலனங்களை ஏற்படுத்திடாத ஒரு படைப்பை அனுபவித்திடும் உணர்வே எனக்கு கிட்டியது. வாசிப்பின் முடிவில் பெரும் வேதனை எதையும் என் மனம் உணரவில்லை, அம்மக்களின் துன்பங்களிற்காக என்னிடம் பரிதாபமும் உருவாகவில்லை, அதை என்னில் செயற்கையாக உருவாக்கவும் அதை இங்கு எழுதவும் நான் இன்னம் தகுதி பெறவில்லை. இவ்வகையான ஒரு இனவழிப்பு குறித்த படைப்பில் அது தோல்வியாகவே இருக்கும் என நான் கருதுகிறேன். இருப்பினும் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத ஜிப்சி மக்களின் இனவழிப்பு, அவர்கள் வாழ்முறை போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதால் இது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படைப்பாகவே இருக்கிறது.

இன்றைய நாட்களில் இந்த நாடோடி மக்கள் குறித்து மக்கள் மனநிலையில் என்ன மாற்றம் எனும் கேள்வியை என்னிடம் கேட்டால் அதற்கு பதிலாக பெரிதாக ஏதுமில்லை என்பதையே நான் தர முடியும். நான் தினந்தோறும் காணும் ஜிப்சிகள் தெருக் கலைஞர்களாக, பாதாள ரயில்களில் இசைக் கலைஞர்களாக பரிமளிக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் எழுதிச் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையும், பண்பாடும் , பராம்பரியமும், வரலாறும், அவர்களும் என்னால் அறியப்படாததை போன்ற அறியாமையின் கீழேதான் பெரும்பான்மையான நாகரீக சமூகம் இருக்கிறது. இன்றும் அவர்கள் தங்குமிடங்கள் கலைக்கப்படுகின்றன. அவர்கள் நடுத்தெருவில் விடப்படுகிறார்கள். அவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Batchalo எனும் ரொமானிய சொல்லிற்கு நல்லதிர்ஷ்டம் என்பது அர்த்தமாம், அவர்களிற்கு அது மிகவும் தேவையான, துணையான ஒரு சொல்தான், சந்தேகமேயில்லை

Tuesday, May 14, 2013

டைலான் டாக் - தமிழில்!!

இத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கிறது. மிகவும் எளிமையான, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத இக்கதை மென்மையான உள்ளங்கள் கொண்ட வாசகர்களின் மனங்களை கனக்க வைத்து, விழிகளின் ஓரத்தில் துளியாய் ஒரு கண்ணீரை உருவாக்க வல்லது. ஆர்வம் உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.





Sunday, May 12, 2013

காவலர்களின் காலன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 10

 எ நவஹோ சிக்ஸ்பேக் சிப்பெண்டெல் டெக்ஸ் குங்ஃபூ !

ஆக்‌ஷன் மசாலா அதிரடிக் காமிக்ஸ் கதையொன்றின் ஆரம்ப பக்கங்கள் அதன் வாசகர்களின் வாலிபவாசம் இழக்காத நரம்புகளை சூடேற்றும் வகையில் அமைந்திருப்பதென்பது அக்கதைக்கு வலிமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக அமையும். அதுவும் அந்தக் கதையின் நாயகன் கதையில் தன் அறிமுகத்தை நிகழ்த்தும் தருணமானது அக்கதையின் சூடுபறக்கும் ஓட்டத்தோடு பொருந்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கையில் அந்த நாயக அறிமுகமானது கதைக்களத்தை மேலும் சூடேற்றி விடுவதாக இருக்கும். Les Justiciers de VEGAS எனத் தலைப்பிடப்பட்ட, டெக்ஸ் n°601, n°602 மாத இதழ்களின் சிறப்பு தொகுப்பானது நவஹோ திலகம் டெக்ஸிற்கு சிறப்பானதொரு நாயக அறிமுகத்தினை டெக்ஸ் ரசிகர்கள் பரவசமாகி விசில் அடிக்கும் வண்ணமாக தன்னில் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையல்ல.
கதை ஆரம்பமாவது மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகோ எனும் சிறுகிராமத்தின் விடுதியொன்றில். வறள்நில சுடுகாற்று நகோவின் உயிரற்ற தெருக்களினூடு அனலாய் சுழன்று கொண்டிருக்க, அந்த உயிரற்ற தன்மையை உயிர்க்க வைப்பது போல வெடிக்கும் துப்பாக்கி ஓசை. விடுதியினுள்ளே வெடித்த தோட்டாவின் புகையை இன்னும் பிரியாத துப்பாக்கியுடன் ஒரு மனிதன். விடுதியின் தரையில் உயிரைப் பிரிந்தவனாக ஒருவன். இச்சூழ்நிலை விதைப்பில் உடன் அறுவடையான பயத்தில் உறைந்துபோன இரு சிறுவர்கள். இவற்றை வேடிக்கையுடன் பார்க்கும், மரணத்தையும், மற்றவற்றையும் துச்சமென மதிக்கும் இன்னும் இருவர். விடுதியில் இந்த மூன்று கேடிகளின் பிரசன்னமும் அச்சத்தினதும், ஆபத்தினதும், பதட்டத்தினதும் சுவாசங்களின் நாடித்துடிப்பாக அதிர்கின்றன. அடுத்த நொடியில் என்ன கேடு நடக்கும் எனும் பரபரப்பில் நனைந்த தீமையின் பிரகாசத்தின் முன் கையறு நிலையில் அல்லாடும் அறம். மீண்டும் வெடிக்கும் தோட்டாவொன்றின் முத்தத்தில் தன் கன்னிமையை இழக்கும் டெகிலா புட்டி, தோட்டா வாசத்தில் தன் வாடையை கலந்து விடுதியில் கனக்கிறது. இவ்வாறாக தீமையின் நர்த்தன  சித்திரமொன்றினை அவ்விடுதியின் நடுவில் தன் தேர்ந்த கதைசொல்லல் வழியாக வாசக மனதில் பதிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Mauro Boselli.
உண்ட உணவானது திருப்தியானதாக இல்லை என்பதற்கு பதிலாக விடுதி உரிமையாளனின் உயிரை சன்மானமாக எடுத்துக் கொண்டவனையும், அவன் தோழர்களையும் பதட்டம் ததும்பும் சூழ்நிலை ஒன்றின் துடிப்போடு வாசகர்களிடம் எடுத்து வருகிறார் பொசெலி. அடுத்து என்ன நடக்கும், இந்த கேடிகளின் நகர்வு என்னவாக இருக்கும் எனும் கேள்விகள் வாசகர்களிடம் வியப்பாக எழும் நிலையில், எம்மை அசைக்க இக்கணத்தில் இவ்விடத்தில் எவரும் இல்லை என அம்மூன்று கேடிகளும் எண்ணுவதான உணர்வு வாசகனை வந்தடையும் நிலையில்.. அத்தருணத்தில்… அந்நொடியில்… அதிர்வுகள் வெடிநிலையில் துள்ளும் அக்கணத்தில்… அறமும், நீதியும், சத்தியமும் ஸ்தலத்தில் குற்றுயிராக துடிக்கும் அப்பொழுதில்… அவ்விடுதிக்குள் திரை விலக்கி புயலாய் நுழைகிறான் ஒரு மனிதன்… அவன்?!
jv1நான் இதுவரை படித்த டெக்ஸ் கதைகளில், இக்கதையில் உள்ளதுபோல சூடான டெக்ஸின் அறிமுகத்தை நான் கண்டது இல்லை என்பேன். எண்ட்ரி என்றால் எண்ட்ரி அப்படி ஒரு எண்ட்ரி. உங்கள் வீட்டு எண்ட்ரியா, எங்கள் வீட்டு எண்ட்ரியா, இல்லை இல்லை எமன் வீட்டு எண்ட்ரி என்பேன். மனிதர் விஷ்க் என்று மறைப்பு சீலை ஒன்றை ஒதுக்கி விட்டு விடுதி உள்ளே நுழைவார் பாருங்கள், பரட்டைக்கு ஒன் த ஸ்பாட் பேதி உறுதி. கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட முதிய நவஹோ தம்பதிகளின் மரணத்திற்காக நீதி வேண்டி மெக்ஸிக்கோ எல்லையை மீறும் டெக்ஸ், அந்த சிறுவிடுதியில் பேசும் வசனங்களும், தரும் பதிலடிகளும், கதையின் தனித்துவமான பாணி கொண்ட ஓவியரான Corrado Mastantuono  அவரிற்கு வழங்கியிருக்கும் உடல் மொழியும், எந்த எச்சரிக்கையுமில்லாது வெடிக்கும் ஒரு வெடிகுண்டு போல வெடிக்கும் அந்த மோதலும்…. டெக்ஸ் கதைகளில் சூடான டெக்ஸ் எண்ட்ரிகளை பட்டியலிட்டால் இக்கதையும் அப்பட்டியலில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கதையின் ஆரம்பத்தில் டெக்ஸ், கிட், டைகர் ஜாக் ஆகியோரே கதைக்களத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். கார்சன் கதையில் உடனடியாக அறிமுகமாகி விடுவது இல்லை. கிராமத்தில் நடந்து முடியும் மோதலின் பின்பாக கேடிகளின் உடமைகளின் மத்தியில் நீயு மெக்ஸிக்கோவை சேர்ந்த வங்கி ஒன்றின் பணமுடிப்புக்களை கண்டு கொள்ளும் டெக்ஸ் & கோ, அது குறித்த மேலதிக தகவல்களை அறிவதற்காக நீயு மெக்ஸிக்கோ நோக்கி தம் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
நீயு மெக்ஸிக்கோவை வந்தடைந்த பின்பாக அந்நகர ஷெரீஃப்புடனான உரையாடலின் வழியாக, அங்கு இடம்பெற்ற வங்கிக் கொள்ளை குறித்தும், அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிலரது பிரத்தியேக அடையாளங்கள் குறித்தும் டெக்ஸ் அறிந்து கொள்கிறார். ஆனால் வெகாஸ் நகரின் நீதியின் காவலர்கள் வங்கிக் கொள்ளையர்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர்களில் எஞ்சியிருக்ககூடியவன் ஒருவனே எனவும் மேலதிக தகவல்களை டெக்ஸிற்கு வழங்குகிறார் நீயு மெக்ஸிக்கோவின் ஷெரீஃப். இந்நிலையில் வெகாஸ் நகரின் காவலர்கள் யார் எனக் கேட்டறிந்து கொள்ளும் டெக்ஸ் அவர்களை நேரில் சென்று காண்பது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இப்பகுதியில் குற்றங்கள் நிறைந்து, அமைதியே செத்துப் போயிருந்த நகரமான வெகாஸை எவ்வாறு தம் அதிரடி நடவடிக்கைகளால் அமைதிப் பூங்காவாக நீதியின் காவலர்கள் மாற்றினார்கள் எனும் விபரிப்பின் வழி அந்த நீதிக்காவலர் பாத்திரங்களை வாசகர் மனதில் புகுத்த ஆரம்பிக்கிறார் கதாசிரியர் பொசெலி.
கதாசிரியர் பொசெலியின் கதைகளில் என்னைக் கவரும் அம்சம் என்னவெனில் அவர் தன் கதைகளின் எதிர் நாயகர்களை சோப்ளாங்கிகளாக சித்தரிப்பது இல்லை என்பதுதான். திறமை மிக்கவர்களாகவும், தந்திரங்களில் தேர்ந்தவர்களாகவும், டெக்ஸ் எனும் நாயக பிம்பத்தின் விரைப்பைகளை தம் கைகளில் இறுக்கி சவால் விடுபவர்களாகவும் பொசெலி தன் எதிர்நாயகர்களை உருவாக்குவார். இவ்வகையான எதிர்நாயக உருவாக்கத்தின் வழியாக கதையில் வாசகர்களிடம் அவர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இக்கதையிலும் தன் பாணியிலிருந்து சற்றும் விலகிடாது கதையின் எதிர்நாயகர்களாக மாறிடப்போகும் வெகாஸின் நீதிக்காவலர்கள் பற்றிய சித்திரத்தை சிறப்பான ஒன்றாக தீட்டுகிறார் கதாசிரியர் பொசெலி.
jv2அதற்காக அவர் இரு இழைகளை தன் கதைசொல்லலினூடு ஓட விட்டிருப்பார். ஒன்று, கதையின் முதல் பாகத்தில் கார்சனிற்கு பதிலாக புலம்பும் பணியை எடுத்துக் கொள்ளும் கிட், வங்கிக் கொள்ளையர்கள் எல்லாம் ஏறக்குறைய பரலோகம் சென்றுவிட்ட நிலையில் நாம் ஏன் வெகாஸிற்கு வீணாக செல்ல வேண்டும் எனக் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ் சொல்லும் பதிலும், கதையும். இரண்டாவது வழிப்பறிக் கொள்ளை சம்பவம் ஒன்றில் உயிர்பிழைக்கும் வெல்ஸ் பார்கோ கம்பனி ஊழியனான மலோரி, வெகாஸ் நகரின் நீதிக்காவலர்களின் விசாரணையின் முடிவில் ஐயமுற்று நடாத்தும் விசாரணை.
இந்த இரு இழைவிபரிப்பின் மத்தியில் கதையின் எதிர்நாயகர்களின் திறமைகள், குணாதிசயங்கள் குறித்தும், அவர்கள் வெகாஸின் நீதிக்காவலர்களாக இருந்தாலும் அதனை ஒரு கவசமாக கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நிழலான நடவடிக்கைகளுடனான அவர்கள் தொடர்புகளையும் சிறுகச் சிறுக கதையில் கொணர ஆரம்பிக்கிறார் பொசெலி. இந்த உத்தி வழியாக கதையில் கொள்ளையர்கள் யார் எனும் மர்மம் நீங்கிவிட, மிகவும் தந்திரமான, நீதிக்காவலர்கள் எனும் பெயரின் துணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஒரு குழுவை டெக்ஸ் & கோ எதிர்கொள்ளப் போகிறது எனும் பரபரப்பை பொசெலி வாசகர்களிடம் எளிதாக கடத்தி விடுகிறார்.
தலைமைப் பண்பும், தந்திரமும், வாழ்வின் இன்பங்களில் நுண்ணிய சுவையும் கொண்ட  நீதிபதியான Hoodoo Brown. வளைந்து கொடுக்காத உறுதியான ஷெரீஃபான Mysterious Dave, இவர்களின் உதவியாளர்கள் என டெக்ஸ் குழுவினர் முகம் கொடுக்கப் போகும் எதிராளிகள் சிறப்பான ஒரு எதிர்நாயகக் கலவை எனலாம். ப்ரவுனும் சரி, டேவும் சரி அமெரிக்க வரலாற்றில் தம் தடம் விட்டு சென்ற நிஜப் பாத்திரங்கள் ஆவார்கள். பொசெலி அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தன் கதையுருவாக்கத்தில் தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக எதிர்நாயகர்கள் குறித்த தகவல்களை வாசகர்கள் உள்வாங்கிய நிலையில்தான் புலம்பல் மகாராஜான், வெள்ளிச்சிகையான் கிட் கார்சனின் அறிமுகம் கதையில் நிகழும். டெக்ஸின் அறிமுகத்திற்கு குறைவான அறிமுகமல்ல அது. நீதிக்காவலர்கள் எனும் போர்வையில் குற்ற ராஜாங்கம் நடத்தும் கொடியவர்களின் எல்லைக்குள் முதலில் காலடி எடுத்து வைப்பது கார்சனே, டெக்ஸ் அல்ல. அதற்கு தக்கவாறு அந்த தருணத்தில் சூட்டையும் ஏற்ற பொசெலி தவறவில்லை.
டெக்ஸ் சிக்ஸ்பேக்
அதேபோல கதையில் கார்சன் நிகழ்த்தும் அதிரடிகள் அபாரமானது. கார்சன் மேல் பொசெலிக்கு தனிப்பிரியம் இருக்க வேண்டும். கார்சனின் கடந்த காலம் போலவே இக்கதையிலும் கார்சனின் பாத்திரப்படைப்பானது டெக்ஸை விட சிறப்பான ஒன்றாக உணர்ந்து கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. அதுவும் கார்சன் தனியே நடத்தும் அந்த அதிரடி துப்பாக்கி மோதல் மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் முன்னமே எழுதியது போல மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்கள் சண்டைக்காட்சிகளிற்கு விறுவிறுப்பையும், உயிர்ப்பையும், பரபரப்பையும் சிறப்பாக வழங்குபவை. இக்கதையின் சண்டைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல.
கதையின் இரண்டாம் பாகத்தில் டெக்ஸ் குழுவும் வெகாஸிற்குள் நுழைய, விசாரணைகளை ஆரம்பிக்க, எதிர்நாயகர்கள் தந்திரமாக தம் ஆட்டத்தை ஆரம்பிக்க என டெக்ஸ் ரசிகர்களிற்கு ஏமாற்றம் அளிக்காத விருந்து ஒன்று அங்கு தன்னை பந்தி விரிக்கிறது. நிஜ வரலாற்றில் ப்ரவுன், டேவ் இருவரினதும் முடிவுகள் அவர்களிற்கு பெருமை தரக்கூடியவையாக இல்லாவிடிலும் கதாசிரியர் பொசெலி இங்கு அவர்கள் இருவரிற்கும் கவுரமான முடிவுகளை வழங்குகிறார். நிஜத்தில் வாழ்ந்திருந்த தன் எதிர் நாயகர்களிற்கு அவர் தன் கற்பனை முடிவு வழியாகவேனும் சிறிது ஆறுதலை தர முயன்றிருக்கிறார்.
டெக்ஸ் லாஜிக் மட்டுமே பொருந்திப் போகும் கதையிது. எனவே வேறு தர்க்கங்களை இக்கதையில் நாம் பொருத்திப் பார்த்தல் முடியாது. அது கதையை ரசிக்கவும் வைக்காது. ஓவியர் மாஸ்டாண்ட்யூனோ டெக்ஸையும், கார்சனையும் இளமையாக வரைந்திருக்கும் விதம் கதைக்கு தனி இளமையை வழங்கிவிடுகிறது. இவ்வளவு இளமையுடன் வேறு கதைகளில் நான் டெக்ஸையும் கார்சனையும் தரிசித்தது கிடையாது எனலாம். வழமையாக தீர்க்கமான கோடுகளுடன் தெளிவான சித்திரங்களை வழங்கும் மாஸ்டாண்ட்யூனோவின் சித்திரங்களில் கிறுக்கல்தன்மையை வாசகர்கள் உணரலாம். ஆனால் அவரின் இந்தப் பாணியையும் நான் மிகவும் ரசித்தேன். அதிகம் ஏமாற்றாத டெக்ஸின் ஆக்சன் என்பதற்காகவும் தன் மகனான கிட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர் காட்டும் சிக்ஸ் பேக்கிற்காகவும் தவறாது படிக்க வேண்டிய டெக்ஸ் சாகசங்களில் ஒன்று இது என்பேன்.

Thursday, May 9, 2013

மனோவசியன்

ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் தம் பிரதான இழையான குற்றம் அதன் மீதான விசாரணை நடவடிக்கைகள் என்பவற்றுடன் கூடவே கதை நடைபெறும் சமூகத்தின் மீதான அழுத்தமான பார்வைகளையும் முன் வைப்பவைகளாக இருப்பது அவற்றின் சிறப்பு தன்மை எனக் கூறப்படுகிறது. இது உண்மையானதுதான். Lars Kepler ஜோடி எழுதியிருக்கும் The Hypnotist கதை, சுவீடிய சமூகம் தொடர்பாக எனக்கு வழங்கியிருக்கும் பார்வையை இங்கு சிறிது பார்க்கலாம்!!

- சுவீடியர்களிற்கு பிடித்தமான பானம் சூடான காப்பி, எப்போதும் காப்பி அருந்த அவர்களிற்கு பிடித்திருக்கிறது. கொலை, உடலுறவு, சச்சரவு போன்றவற்றிற்கு பின்பாக எல்லாம் காப்பி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சுவிடியர்களின் வாழ்க்கையில் காப்பி வகிக்கும் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
- காலையுணவாக சாண்ட்விச் பெரும்பாலும் உண்ணப்படுகிறது சாண்ட்விச்சுடன் துணையாக காப்பி இணைந்து கொள்கிறது
- டிசம்பர் மாதத்தில் சுவீடனில் கடும் குளிரும், பனி வீழ்ச்சியும் இருக்கிறது
- ஆண்கள் திருமணத்தின் பின் வேறு பெண்களுடன் உடலுறவு கொள்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்
- பெண்களும் ஆண்கள் இழைத்த துரோகத்திற்காக கணவர்களை தவிர்த்த வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள்
- திருமணமான ஆண் என்பது தெரிந்தாலும் சில இளம் பெண்கள் தம் காதலில் வெற்றி கொள்ள சகல வழிகளையும் கையாளுவார்கள்.... உடலுறவு உட்பட
- சுவீடிய சமுகத்தில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மிகுந்திருக்கிறது
- பெண்களை ஆண்கள் தமக்கு சரிநிகராக கருதுவதிலும் சிக்கல் இருக்கிறது
- உளநல சிக்கல் கொண்டவர்கள் ஆற்றும் செயல்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது
- சிறுவர் துஷ்பிரயோகம் கணிசமான அளவில் காணப்படுகிறது, இது சந்ததி சந்ததியாக தொடரும் ஒரு விடயம் போல் உணர்த்தப்படுகிறது
- சுவீடிய இளம் தலைமுறை தறிகெட்ட ஒன்றாக உருவாகி வருகிறது, அது எதையும், எவரையும் மதிப்பது இல்லை
- நாஸி தத்துவத்தை மதிப்பவர்கள் இன்னம் இருக்கிறார்கள்
- சுவீடிய பொதுநலத்துறைகளிலும் மூடிமறைப்பு சர்ச்சைகள் உண்டு
- சுவீடிய காவல்துறை செயற்திறன் நலிந்த ஒரு துறையாகும் 
லார்ஸ் கெப்லர் மற்றும் ஸ்காண்டிநேவிய குற்றப்புனை நாவலாசியர்களின் படைப்புக்களின் வாசிப்பின் முடிவில் சுவீடிய சமூகமும் பிற சமூகங்களைப் போலவே நலமற்ற ஒரு சமூகம் என்பதை ஒருவர் தெளிவாக உணரலாம். இவ்வகையான ஸ்காண்டினேவிய குற்றப்புனைகள் தவறாது தம்மில் கொண்டிருக்கும்  ஒரு பிம்ப சமூகத்தின் பார்வை என்பது வாசகனிற்கு என்ன புது அனுபவத்தை படைப்பின் வாசிப்பில் வழங்கிட முடியும் என்பதை நான் இங்கு ஒரு கேள்வியாக்குகிறேன். மேற்கூறிய அல்லது நான் தவறவிட்ட,சமூகம் மீதான பார்வைக் கூறுகள் இதே வடிவிலோ அல்லது பிற வடிவிலோ உலகெங்கும் உள்ள சமூகங்களில் பரவியே இருக்கிறது. ஸ்காண்டிநேவியாவிலும் இவை உள்ளன என்பதை ஒரு அல்லது இரு படைப்புக்கள் வழி சொல்லி ஓய்ந்தால் போதாது என்று ஸ்காண்டிநேவியப் குற்றப்புனைகள் பெரும்பாலும் தம் சமூகத்தின் அவலங்களை தாம் சொல்ல வந்த குற்ற புலனாய்வைவிட பிடிவாதமாக அதிகம் பேசுகின்றன,  அந்த சமூக அவலங்கள் அவற்றின் பொது தன்மையாக உருப்பெறுகின்றன, தொடர் வாசிப்பின்போது சலிப்பின் காரணிகளாக மாற்றம் கொள்கின்றன, ஸ்காண்டிநேவிய குற்றப்புனைகள் இன்று கண்டிருக்ககூடிய தற்காலிகமான அசாத்திய பிரபலத்தை அர்த்தமற்றது என உணரச் செய்கின்றன. 
த ஹிப்னோடிஸ்ட் கதையின் சாரத்தை, மனோவசியம் மூலம் தன் வாழ்க்கையில் பலவற்றை இழந்த ஒருவனிற்கு பத்து வருடங்களிற்கு பின்பாக அதே மனோவசியம்  மீண்டும் வெல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது என நான் சொல்வேன். இதை 600 பக்கங்களிற்கு மேல் எடுத்து சொல்வதற்கு துணையாக ஒரு குற்றம். ஆனால் இங்கு குற்றம் அது சார்ந்த விசாரணை போன்றவற்றை தனியே பிரித்து எடுத்தால் அவற்றை ஒரு 150 பக்கத்திற்குள் அடக்கி விடலாம். எ க்ரைம் நாவல் வகையறா நாவல் போல அது இருக்கும். ஆனால் லார்ஸ் கெப்லர் ஜோடி ஸ்காண்டிநேவிய குற்றப்புனை பராம்பரியத்தை பேணுவதற்காக வெகு சிரமப்பட்டு 450 பக்கங்களை வியர்வை சிந்தி எழுதியிருக்கிறார்கள். 
கதையின் பிரதான காவல் துறை அதிகாரி பாத்திரம் ஜூனா லினா. இவர் குற்ற விவகாரங்களை கையில் எடுத்தால் அவற்றினை தீர்க்காது ஓய மாட்டார். தேசிய குற்றப் புலனாய்வு பிரிவில் இவர் உள்ளுணர்வு தீர்த்து வைத்தது போல வேறு எதுவும் குற்ற விவகாரங்களை தீர்த்து வைத்தது இல்லை. இதை இங்கு நீங்கள் படிக்கும்போது ஒரு அதிரடியான அதிகாரியாக அவரை உருப்படுத்திக் கொண்டால் அது தவறு. ஜூனா லினா அதிராத ஒரு பாத்திரம், அவர் ஊகங்களும் சரி உள்ளுணர்வு வழி அவர் காணும் முடிவுகளும் சரி புல்லரிக்க வைக்கிறது. மன்னிக்கவும் ஜன்னலை மூடாது நாவலைப் படித்ததால் வந்த விளைவது. ஜூனா லினாவினால் அல்ல.
கிழிச்சீங்க !!
கதையின் முடிவில் தான் தொலைத்து விட்ட, தொலைத்து கொண்டிருக்கும் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நிலைக்கு வரும் ஹிப்னாட்டிஸ்டாக எரிக் மரியா பர்க். இவரின் வாழ்க்கையை சுற்றியே பெரிதும் கதை உலாவரும். இப்பாத்திரத்தின் மீது வாசகர்கள் பிடிப்பொன்றை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் வாழ்க்கையின் மீது சோகரசம் ததும்புமாறு கதாசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமையற்ற இல்லறம், வியாதி கொண்ட ஒரு மகன், பேர் கெட்டுப் போன ஒரு தொழில் என எரிக் வாழ்க்கை சோகமோ சோகம். எரிக் இவற்றை எல்லாம் வெல்ல காப்பி அருந்துகிறார். நிறைய மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். மது அருந்துகிறார். மாத்திரைகளை போட்டுக் கொள்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாத்திரைகள் போடும் ஒரு பாத்திரம் குற்றப்புனைவில் எனக்கு இதுவே முதல் முறை. ஆனாலும் எரிக் தெளிவான நிலையிலேயே கதையில் நடமாடுகிறார்.
எரிக்கின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் சொன்னால் சலிப்பு ஏற்பட்டு இது ஒரு சமூகப்புனையாக ஆகிவிடும் அதில் சர்வதேச லெவலில் ரமணிசந்திரனுடன் போட்டி போட முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்ததால் கதையின் ஆரம்பத்தில் ஒரு கொலை, அதன் விசாரணைகள், அதனை தொடரும் ஆட்கடத்தல் என்பன வழியாக வந்து சேரும் எரிக் மரியா பெர்க் வாழ்வில் பத்து வருடங்களிற்கு முன்பாக நடந்த ஒரு சோகம், அதன் பின்பிருக்கும் மர்மம் போன்றவற்றையும் கதை தன்னில் கொண்டிருக்கிறது. பிரதான கொலைகளிற்கு காரணம் யார் என அறிந்த பின்னும், அந்தக் கொலையாளியின் உடல் நிலை இவ்வாறாக இருக்கிறது என்பது தெரிந்தபின்னும் வாசகன், லார்ஸ் கெப்லர் படைத்திருக்கும் அந்தக் கொலையாளி அவனுடைய அந்த உடல் நிலையுடன் ஆற்றும் செயல்களை நம்ப முடியும் எனில், இந்த நாவல் சுவீடனில் மட்டுமல்லாது சர்வதேசம் எங்கும் இதன் அட்டை பீற்றிக் கொள்வது போல விற்பனையில் கொடி கட்டிப் பறக்க முடியும் எனில், உலகெங்கும் தரமற்ற படைப்புக்களை வாசித்து புகழும் கலாச்சாரம் வேரூன்றி விருட்சமாகி நிற்கிறது என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்கவே வழியில்லை. இவ்வகையான படைப்புக்கள் விற்பனை உச்சத்தை தொடக் காரணம் மந்தைமேய்ச்சல் வாசிப்பு பழக்கமேயன்றி வேறல்ல.
இந்தக் கதையில் லார்ஸ் கெப்லர் ஜோடியால் ஆழமாக அலசப்பட்டது எது என ஒரு கணம் சிந்தித்தால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் இத்தனை வரவேண்டும் என்பதாகவே இருக்கும். மனோவசியமும் சரி, உளநலப்பிறழ்வுகளும் சரி, குற்றங்களும் சரி, பாத்திரப் படைப்பும் ஏன் கதை சொல்லும் முறையும் சரி சூவிடன் ஏரியொன்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்பாளத்தின் ஆழத்தை ஒத்த உறை நிலையிலேயே உள்ளன. லார்ஸ் கெப்லரின் எழுத்துக்கள் இவ்வளவு மோசமாக உள்ளதா அல்லது மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு மோசமாக மொழிபெயர்த்திருக்கிறாரா என்பதை இக்கதாசிரியர்களின் ஏனைய படைப்புக்களை படித்த நல்ல உள்ளங்கள் மட்டுமே அறியும். நான் அந்த சாகசத்தில் இறங்கப் போவது இல்லை.

Thursday, May 2, 2013

இரு காமிக்ஸ் கதைகள்

 தமிழாக்கம் செய்யப்பட்ட இரு காமிக்ஸ் கதைகள் தற்போது தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கின்றன. விரும்புபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலலாம்! நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.



பராகுடா
http://www.multiupload.nl/BI9AXXSX9G



லான்ஃபெஸ்ட்

Monday, April 29, 2013

கொலம்பஸிற்கு வந்த சோதனை !


கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடும் பிரயத்தனங்களோடு கடலோடி, வரலாற்றில் தனக்காக சேர்த்து வைத்திருந்த நல்ல அபிப்பிராயங்கள் எல்லாம் இன்று தொலைந்துபோய் விட்டன எனலாம். அமெரிக்காவை அவர் கண்டுபிடிக்கவில்லை, அமெரிக்காவில் முதல் காலடி வைத்த ஐரோப்பியர் அவரில்லை, அவர் பயணங்கள் இன அழிவிற்கும், அமெரிக்க நிலத்தின் வளங்கள் பிறதிசைகள் நோக்கி பயணிக்கவும் காரணமாக இருந்தன என அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவாறாக உள்ளன. அமெரிக்காவை முதல் முதலாக  வரைபடத்தில் பதிந்தவர் எனும் பெருமையாவது அவரிற்கு கிடைக்குமா எனில் 16ம் நூற்றாண்டில் காணாமல் போன அவரின் வரைபடம் இன்னம் யார் கைகளிற்கும் கிடைக்கவில்லை. ஆக கடலோடிகள் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படும் கொலம்பஸ் இழந்து கொண்டிருக்கும் பெயரைக் காப்பாற்ற யாரும் இல்லையா என கதறி ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஸ்டீவ் பெரியின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

ஸ்டீவ் பெரி வரலாற்று மர்மக்கதைகள் எழுதுபவர். இதுவரை 10க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய The Columbus Affair சனி பகவான் அருளால் என் பார்வையில் பட்டது. கொலம்பஸ், நாஸ்ட்ராடமுஸ், டாவின்ஸி, மிக்கேல் ஏஞ்சலோ எனும் பெயர்களை கண்டவுடனேயே கவிழ்ந்துவிடும் எனக்கு இந்நாவலை படித்தேயாக வேண்டும் எனும் ஆசை வந்ததில் என்ன தவறு இருக்க முடியும். மேலும் என்னைப்போன்ற ஏமாளிகள் இல்லையெனில் ஸ்டீவ் பெரியின் நாவல்களை படிப்பது யார்?  உண்மையில் ஏமாளிகளை தவிர்த்து ஸ்டீவ் பெரியின் நாவல்களை தொடர்ந்தும் படிப்பவர்கள் அவர் ஜீவிதம் நடாத்த வேண்டும் எனும் நல்லவுள்ளம் கொண்ட உயர்ந்தவர்கள் எனவே நான் எண்ணுகிறேன். அவர்கள் மட்டும் சற்று கல்மனம் கொண்டவர்களாகவும் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை இன்னம் மறக்காமலும் இருப்பவர்களாக இருந்தால் ஸ்டீவ் பெரி இன்று கொலம்பஸ் கண்டுபிடித்ததாக பீலா விட்டுக் கொண்ட நிலத்தில் புல்லு செதுக்கி கொண்டிருப்பார்.

கொலம்பஸ் செய்த பயணத்திற்கு காரணம் வணிகம் அல்ல எனவும் அதன் பின்பாக ஒரு இனம் அழியாது இருப்பது  தங்கியிருக்கிறது எனவும் தன் கற்பனையால் கோலம் போடுகிறார் ஸ்டீவ் பெரி. கொலம்பஸ் உண்மையில் யார் என்பதையும் அவர் இனவடையாளம் என்ன என்பதையும் மிகவும் சிரமப்பட்டு சொல்ல விழைகிறார் அவர். இதற்கு சான்றாக சில வரலாற்று தகவல்கள் கூடவே தன் அபாரமான வறட்டுக் கற்பனையால் படைத்த தகவல்கள். இவ்வாறு கொலம்பஸ் செய்த அப்பயணத்தின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இன்றைய நாளில் ஒரு முக்கிய ஸ்தலத்தை தேடி தேடலில் இறங்கும் ஒரு கொடியவன். அவனை எதிர்க்கும் ஒரு அல்லது சில மனிதர்கள்.

கொலம்பஸ் குறித்த வரலாற்று தகவல்கள் இல்லை எனில் இந்நாவல் சுண்டல் சுற்றக்கூட உதவிடாது [ இருந்தாலும் உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது]. ஆகவே கொலம்பஸ் குறித்த தகவல்களை அதிகம் தந்து சமாளித்து இருக்கிறார் ஸ்டீவ் பெரி. ஆனால் இந்நாவலில் வரும் கதாமாந்தர்கள் போன்ற அறிவிலிகளை நீங்கள் எங்கும் சந்திக்கப் போவது இல்லை. நம்ப இயலவில்லையா? நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு முன்னாள் பிரபல பத்திரிகையாளன், யூத செல்வந்தன், இஸ்ரேலிய தூதரக இயக்குனர், அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, ஜமைக்கா தாதா என ஒருவரிற்கு ஒருவர் யார் சிறந்த அறிவிலி என்பதற்கு  கதையில் பெரும்போட்டியே நடக்கிறது. ஆனால் இப்போட்டியில் எளிதாக பரிசை வெல்வது பத்திரிகையாளன் மகளான ஆல். இப்படி ஒரு அறிவிலியை இக்கதையில் வரும் பாத்திரங்கள்கூட கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வகையான கதைகள் பல நாடுகளில் கதைக் களத்தை கொண்டிருக்க வேண்டும் எனும் வரைவிலக்கணப்படி அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜமைக்கா போன்ற நாடுகளில் இக்கதை சம்பவங்கள் நிகழ்கிறது.  உல்லாச வழிகாட்டி தகவல்களை பார்த்து பிரதி செய்து எழுதியதைப் போல் தகவல்களை அள்ளி வீசுகிறார் ஸ்டீவ் பெரி. ஆஸ்திரியா, ஜமைக்கா, மற்றும் வார இறுதியில் க்யுபா செல்பவர்கள் தங்கள் வழிகாட்டி ஏடாக இந்நாவலை பயன்படுத்தலாம். தகவல்கள் சரியாக இல்லை எனில் ஸ்டீவ் பெரிக்கு சரியான தகவல்களை நீங்கள் அனுப்பி வைத்தும் உதவலாம்.

அவன் கைகள் நடுங்கின.
அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
துப்பாக்கியின் முனை அவன் நெற்றியை அழுத்தியது.
அவன் விரல்கள் விசையை அமுக்கின.
வீட்டின் கதவு தட்டப்பட்டது.

இதுதான் ஸ்டீவ் பெரியின் அட்டகாசமான கதை சொல்லும் பாணி. அது மட்டுமல்லாது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும் உத்தி வேறு. வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிக்கு இதைவிட வேறுவழி இன்னம் வசப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
அவன் விரல்கள் துப்பாக்கி விசையை அழுத்தின.
துப்பாக்கி வெடித்தது.

இது நான் எழுதியது. வெடித்த துப்பாக்கியின் முனையில் இருக்கும் நெற்றி ஸ்டீவ் பெரியினுடையதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா. ஸ்டீவ் பெரியின் எழுத்துக்களிற்கு ஒத்த சொல், மொக்கை!

Friday, April 19, 2013

நிற்றல்- சரிதல்

1936களில் சீனாவின் தெற்குபகுதியில் அமைந்திருக்கும் Foshan எனுமிடத்தில் ஆரம்பமாகிறது இயக்குனர் Wong Kar-wai ன் திரைப்படமான The Grand Master. கொட்டும் மழையில் தன்னுடன் பொருத வந்தவர்களை எதிர்ப்பவராகவும் திரைப்படத்தின் கதையை இறுதிவரை கூறிச்செல்பவராகவும் அறிமுகமாகிறார் Wing Chun எனும் தற்காப்பு கலைப் பாணியின் கலைஞரான Ip Man. ஆனால் திரைப்படம் இப் மேனை கதை சொல்லியாக கொண்டாலும் அவரை பிரதானமான ஒருவராக அது முன்னிறுத்த விழையவில்லை. கதையின் நாயகன் எனும் மயக்கத்தை தரும் விதமாக இப் மேன் பாத்திரத்தின் ஆதிக்கம் திரையிலிருந்தாலும  கதையானது குங்ஃபூவின் இன்னம் சில ஆசான்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஓடிச் செல்லும் காலத்துடன், இப்மேனும் ஏனைய ஆசான்களும், அவர்களின் ஒப்பற்ற கலையான குங்ஃபூவும் எவ்வாறான முடிவுகளை நோக்கி நகர்ந்தன என்பதே திரைப்படத்தின் பிராதான இழையாக என்னால் உணரப்பட முடிகிறது.

ஃபோசானில் மிகுந்த வசதிபடைத்தவராக வாழ்ந்திருந்த இப்மேனின் வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பின்பாக எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது. ஹாங்ஹாங்கிற்கு வந்து சேரும் இப்மேன் அங்கு எப்படியான ஒருவராக மாற்றம் கொள்கிறார் எனும் இருபுள்ளிகளிற்கு இடையில், மா சான், கொங் எர், ரேஸர் எனும் மூன்று பேராசான்களின் குங்ஃபூ பாணிகளையும், அவற்றுடன்  பொருதிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையையும் திரைப்படம் விபரிக்கிறது. கூடவே குங்ஃபூ என்பது  நாம் வழமையாக பார்ப்பதுபோல மலிவான சர்க்கஸோ அல்லது ஸ்டண்ட் வித்தையோ அல்லது பணத்திற்காக ஆடப்படும் கேளிக்கை கூத்தோ அல்ல என்பதையும் அது மிக ஆழமாக உணரச் செய்கிறது.

ஒரு குரு தான் ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின் ஒருவனை நியமிப்பது வழக்கம். குங்ஃபூ எனும் கலை பல பள்ளிகளையும், பாணிகளையும், ஆசான்களையும் கொண்ட ஒரு பெருங்கலையாகும். இவற்றை ஒரு குடையின்கீழ் கொணர்ந்து சீன தற்காப்பு கலைகளின் பெருந்தலைவராக இருக்கும் பாவோசான், சீனாவின் மேற்குப் பகுதியில் தன் சீடனான மா சானை தனக்கு பின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக தேர்வு செய்கிறார். தெற்கு பகுதியின் தலைமைக்காக அவர் தன்னுடன் ஒருவர் பொருதி வெல்ல வேண்டும் என அறிவிக்கிறார். தெற்கு பகுதி குங்ஃபூ ஆசான்கள் அவர்களின் பிரதிநிதியாக இப்மேனை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்மேன் பேராசான் பாவோசான் அவர்களுடன் தன் நடனத்தை நிகழ்த்துகிறான்.

குங்ஃபூ கரங்களை ஆயுதமாக்குகிறது, சித்தாந்தங்களை தியானமாக்குகிறது, வன்முறை என்பதை வக்கிரம் ஆக்குகிறது, தற்காப்பு கலையினை ஒரு நடனம் போலவே அழகான ஒன்றாக்குகிறது. திரைப்படம் முழுதும் சண்டைக் காட்சிகளிற்கு பதில் அழகான நடனங்களை உருவாக்கி தந்திருக்கிறார் கலைஞர் Yuen Woo-ping. அவர் உருவாக்கி தந்திருக்கும் அந்த நடனக் காட்சிகள் விசிலடிக்க வைக்கவில்லை மாறாக அந்நடனங்களினுள் ஒருவனை தன்னை இழக்க செய்கின்றன, அந்த அசைவுகளின் நளினங்களிலும், அந்த நளினங்கள் பிறப்பிக்கும் உணர்வுகளிலும் கிடைத்திடும் திரையனுபவம் அலாதியானது. இதுவரை திரைகளில் பார்த்த குங்ஃபூ மோதல் காட்சிகளின் வக்கிரம் உறைக்கும் தருணமது. கலையென்பது  கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போது அதுவும் அதற்கென தம்மை அர்பணித்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போதும் அங்கு உருப்பெறும் ஆத்ம நடனத்தின் ஒரு சிறு சாட்சியாக இப்படத்தின் மோதல் காட்சிகள் உளப்புலன்களிற்கு விருந்தாகின்றன. இயக்குனர் வொங் கார் வாய் அவர்களின் நெறியாள்கையில் அக்காட்சிகள் திரையில் பெறும் பிரசன்னம் உன்னதமான ஒன்றாக இருக்கிறது.

 பேராசான் பாவோசானுடனான இப்மேனின் நடனத்தின் பின்பாக கதை பேராசனின் மகள் கொங் எர் இப்மேனிற்கு விடுக்கும் சவால், அதன் பின்பாக இப்மேனிற்கும் கொங் எரிற்குமிடையில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு மதிப்புணர்வு மற்றும் சொல்லப்படாத ஒரு காதல், மா சான் இழைக்கும் துரோகம், அந்த துரோகத்திற்கான வஞ்சத்தையும், தன் குடும்பத்தின் கவுரவத்தையும் மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கொங் எர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ரேஸர் எனும் ஆசானின் கதை, உள்நாட்டு யுத்தம், ஹாங்ஹாங்கில் மூன்று கதாமாந்தர்களின் நிலை என்பதாக கதை பயணிக்கிறது. ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது கொங் எர் பாத்திரமே. அந்த பெண் கலைஞியின் கதை மட்டுமே இப்படத்தில் முழுமை கொண்டது என்பேன் நான். இப்மேனும் சரி ஏனைய பாத்திரங்களும் சரி குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் நகர்வை காலத்தின் ஒரு புள்ளிக்கு எடுத்து வர உதவும் காவிகளாகவே இப்படைப்பில் எனக்கு தெரிகிறார்கள். எனவேதான் அவர்களின் கதைகள் முற்றுப் பெறா ஒரு நிலையை அடைகின்றன. திரைப்படமும் முழுமை காணா ஒரு படைப்பின் அழகு போன்ற அலைகளை மனதிற்குள் நீர்வரிபோல எழுதுகிறது. அந்த அலைவரிகளின் மேல் தம் அற்புதமான திறமையால் அழகு செய்கிறார்கள் நடிகர்கள்.

 வொங் கார் வாய் மிகவும் அழகுணர்ச்சி கொண்ட இயக்குனர். அவர் படைப்பு அழகால் செதுக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் இன்னொரு ஜீவ நாடி இசை, படைப்பின் உயிர்வண்ணமாக ஒலிப்பதிவு, ஆன்மாவின் சிமிட்டலாக எடிட்டிங். இவ்வாறாக முழுமை தரா ஒரு படைப்பாக இருந்தாலும் அதன் படைப்பில் இவை யாவும் கலந்தே அதை சிறப்பான ஒரு திரையனுபவமாக்குகின்றன. வசனங்களில் கலந்திருக்கும் சித்தாத்தங்கள்  அவற்றை சாதாரண திரைவசனங்களாக கடந்து செல்ல தடைவிதிக்கின்றன. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இப்மேனிற்கு ஒரு சிறுவன் சீடனாக வந்து சேருவான். அவன் யார் என்பதை உங்களிற்கு சொல்ல தேவையில்லை. திரைப்படமும் சொல்லாது. வொங் கார் வாய் இம்முறை தந்திருப்பது குங்ஃபூ எனும் தற்காப்பு கலைக்குரிய ஒரு கவுரவத்தை. மிக மிக அழகாக. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட. நிற்றலிலிம்- சரிதலிலும் இருக்கும் அழகின் உணரனுபவமே அவரின் இப்படைப்பு.




Wednesday, April 17, 2013

ஜோன்ஸ் வடை !

முன்பெல்லாம் வீட்டில் எலித்தொல்லை அதிகமாகும்போது எலிப்பொறி எனும் அழிவாயுதத்தின் உதவியை நாடிச் செல்வதென்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. எலிப்பாசனங்கள் எனும் ரசாயான ஆயுதம் அறிமுகமாகியது எலிப்பொறியின் செயற்திறனில் எலியினவழிப்பாளர்களின் நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்த வேளையிலேதான். மேலும் எலிப்பொறியில் எலியைக் கவர அதற்கு பிடித்த ஏதாவது ஒன்றை லாகவமாக பொருத்தி பொறியை இழுத்துவிட வேண்டும். தேங்காய் துண்டு, வடையின் ஒரு பகுதி போன்றன நம்மூரில் எலிகளிற்கு பிடித்த விடயங்களில் முன்னணியில் இருந்தன. மேற்குலகில் இவற்றிற்கு பதிலாக பாற்கட்டி. இருப்பினும் எலிகளிற்கு புத்தகங்களையும் பிடிக்கும். ஆனால் அவற்றை யாரும் பொறிகளில் வைத்ததாக நான் அறிந்தது இல்லை. இப்படி பொறிகள் வைத்தாலும் அகப்படாது தண்ணி காட்டும் எலிகள் உண்டு. எல்லாப் பொறிகளையும், ரசாயனங்களையும், பூனை போன்ற உயிராயுதங்களையும் தாண்டி வென்று இயற்கை மரணத்தை ஹெமிங்வே எழுதிய நூலொன்றை சுவைத்தபடியே இறந்துபோன எலிகள் வரலாற்றில் உண்டு. மக்லேன், ஹெமிங்வேயை படித்ததாக வான்ஹாம் எழுதியது இல்லை ஆனால் எல்லா வகையான பொறிகளையும் சமார்த்தியமாக கடந்து வெல்லும் ஒரு எலியாக நாம் மக்லேன் மாமா அவர்களை உருவகப்படுத்தலாம்.

எனவே தங்கள் கைகளில் சிக்காது எஸ்கேப்பாகி இயற்கையில் கலந்துபோன மக் மாமாவை அவர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமாயின் அவரிற்கு பிடித்தமான ஒரு பொருளை பொறி ஒன்றில் வைத்தால் போதும் என்பதுதான் XIII - L'Appat  கதையில் USAFE அமைப்பு பிரயோகிக்கும் ராஜதந்திரம். மக்லேன் மாமாவிற்கு பிடித்த பொருள் என்னவென்று தேடியதில் அவர்களிற்கு விடையாக கறுப்பு வைரம் ஜோன்சையும், பொறியை வைக்குமிடம் எது என்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானையும் கதாசிரியர் ஈவ்ஸ் செண்ட் வழங்கியுதவியிருக்கிறார்.

தனக்கு மிகவும் பிடித்தமான காலனல் ஜேம்ஸ், கொடிய தலீபான்கள் கையில் அதுவும் ஒற்றைக்கண்ணுடைய ஒருவரை தலீபான் அணி தலைவராக கொண்ட ஒரு குழுவின் பிடியில் மாட்டிக் கொள்ளும்போது, தலீபான்களும் வீடீயோ கமெராக்கள் வழியாக பயணக் கைதிகள் சிலரின் தலைகள் உருளுவதை வெளியுலகிற்கு அனுப்பி வைக்கும்போது, தன் உயிரிற்கு நெருக்கமான ஜோன்சை மீட்க ஓடிச் செல்கிறார் மக்லேன். மக்லேனை இந்த திட்டத்திற்குள் இழுக்கும் கயிறாக ஜெனரல் காரிங்டன். கதையின் இன்னொரு தளத்தில் Betty மக்லேன் கேட்டுக் கொண்ட சில ரகசியங்களையும், தகவல்களையும் கண்டறிய பயணிக்கிறாள். அவளை அமெரிக்க காவல்துறை, FBI, மற்றும் ஒரு மாஃபியா குழு துரத்துகிறது.

பிரான்சிலிருந்து எந்த சிக்கலுமில்லாது பாகிஸ்தான்
சென்றிறங்கி அங்கிருந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் பனிசிஸ்தான் எனும் தலீபான்களின் மலைகோட்டை குகைக்குள் - இங்கு ஆப்கானிஸ்தானும் சரி பாக்கிஸ்தானும் சரி ஏன் அமெரிக்க படைகளும் சரி நெருங்கவே முடியாதாம் - காரிங்டனுடன் நுழைந்து அது USAFE ன் சதி என்பதை மக் மாமாவும், காரிங்டனும் அறிந்து கொள்ளும்வரை கதை என்பது நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது.  வழமைபோலவே தர்க்கம் எல்லாம் பார்க்காது கதையை படித்திட வேண்டியது ஒன்றுதான் வழி. அதேபோல தனியாளாக Betty நிகழ்த்தும் சாகசங்களை விழுங்கி கொள்ள திமிங்கலமாக இருந்தால் மட்டுமே முடியும். இவ்வளவு வருடமாக இக்கதையை படித்துக் கொண்டு வரும் ஒரு வாசகன் கதையில் இன்னம் கொஞ்சம் நம்பகத்தன்மையுள்ள களத்தையும், நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சிறிது புத்திசாலித்தனத்தையும் எதிர்பார்த்தால் அது இங்கு கிடைக்காது வேறிடம் பாருங்கள் என அடித்துக் கூறுகிறார் கதாசிரியர் ஈவ் சென்ட்.

ஆப்கானிஸ்தானில் அருமையான ப்ரியாணி ஒன்றை மக் மாமாவிற்கு அறிமுகப்படுத்தும் காரிங்டன், ஜோன்ஸ் தப்பிக்க வசதியாக பாரசூட்டை அவர் தப்பிச் செல்லும் வழியில் வைத்த தலீபான்கள், என் தண்ணீர் பாட்டிலிற்குள் இருப்பது நைட்ரோ கிளிசரின் என மிரட்டி தலீபான்களை நம்ப வைக்கும் காரிங்டன்-- இந்த தலிபான்களைத்தான் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினரால் நெருங்கவே முடியவில்லை!!-- தன்னை பலர் பின் தொடரக்கூடும் என்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாது மதுவை சுவைத்தபடியே உள்ளாடைகளுடன் ரிலாக்ஸாக ஸாக்காரியாஸ் காத்தவேயின் டைரியை படிக்கும் Betty, இப்படியாக செமையான காமெடிகள் இந்த ஆல்பத்தில் உண்டு.  மேலும் மக்லேன் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்த டோரதி எனும் பூனை மேஃப்ளவர் எனும் அந்தக் கப்பலின் மாதிரியாக உருவாக்கப்பட்ட கப்பலில் Betty க்காக காத்திருப்பது.... என்ன ஒரு குறியீடு. பின்னிட்டாங்க.

ஒரே ஒரு ஆறுதல் ஜிகுனோவின் சித்திரங்கள். பனிசிஸ்தான் மலைப்பகுதிகளில் அவர் வரைந்து வழங்கியிருக்கும் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. அவர் சித்திரங்கள் நவீன நுட்பங்களுடன் மெருகேறியிருக்கிறது என்பது தெளிவு.

ஆப்கானிஸ்தானிலேயே மக் மாமாவிற்கு பொறி வைத்த USAFE அவனை தன் பக்கம் இழுத்திட எடுத்திடப் போகும் நடவடிக்கைகளுடனும், மக்லேன் கேட்டுக் கொண்ட தகவல்களை அறிய ரயிலில் பயணிக்கும் Betty யின் புதிர்கள் கோலமிட்ட முகத்துடன் விரையும் ரயிலின் முகத்துடனும் நிறைவு பெறும் இரண்டாம் சுற்றின் இரண்டாம் ஆல்பத்தினை வாசித்து முடிக்கையில் எம் முகத்தில் பூத்திருக்ககூடியது முட்டாள் களை மாத்திரமே !!