
பேரழிவை ஏற்படுத்திடக்கூடிய நச்சுப்பொருளையும், எரிபொருளையும் ஏற்றிக்கொண்ட ஒரு சரக்கு ரயில்வண்டி, ஓட்டுனர் அற்ற நிலையில் தறிகெட்ட வேகத்தில் பொதுமக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியை நோக்கி விரைகிறது. நிறுத்தப்பட முடியாத ரயில் வண்டியாக கருதப்படும் இவ்வண்டியை நிறுத்தியே தீருவது எனும் முடிவிற்கு வருகிறார்கள் பிறிதொரு ரயில் வண்டியில் சரக்குகளோடு சென்று கொண்டிருக்கும் பிரான்க் [Denzel Washington] எனும் ரயில்வண்டி ஓட்டுனரும், வில்[Chiris Pine] எனும் நடத்துனரும்…..
இயக்குனர் Tony Scott, தனது அபிமான நடிகரான Denzel Washington ஐ இம்முறை ஒரு ரயில் வண்டி ஓட்டுனராக என்ஜின் பெட்டிக்குள் உட்கார வைத்து Unstoppable திரைப்படத்தில் அழகு பார்த்திருக்கிறார். கூடவே டென்சலிற்கு பேச்சுத்துணையாகவும், சிறிது ஆக்சனிற்காகவும் இளம் நடிகர் Chris Pine துணை வந்திருக்கிறார்.
பிரான்க், ரயில்வே நிர்வாகத்தால் ஒரு வகை கட்டாய ஓய்விற்கு அனுப்பப்படும் நிலையில் உள்ளவன். இளைஞன் வில், சேவையில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகும் நிலை. புதிய தலைமுறை இளைஞர்களின் வரவால், நீண்ட காலமாக ரயில்வண்டி ஓட்டும் சேவையில் இருந்த அனுபவம் பெற்றவர்களை நிர்வாகம் வெளியே அனுப்பும் நிலையைக் கொண்டு ஆரம்பாமாகும் இருவரினதும் முதல் ரயில் ஓட்டம் இருவரிற்குமிடையிலான வேறுபாடுகளின் வெளிப்பாடுகளில் ஆரம்பமாகி, தமது வாழ்க்கை கதைகளை பரிமாறி, அவர்கள் பின்பு ஒன்றுபட்டு எதிர் கொள்ளும் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மதிப்பு மிகுந்த ஒரு உறவாக பரிணமிக்கிறது.
எவ்வாறு ஒரு ரயில் வண்டி, ஓட்டுனர் இல்லாத நிலையில் வேகமெடுத்து பேரழிவை தரிப்பாக கொண்டு பயணமாகிறது என்பதுடன் வேகமெடுக்கும் திரைப்படம், உச்சக்கட்டக் காட்சிகள்வரை தன் வேகத்தை குறைப்பதில்லை. தறிகெட்டு பயணிக்கும் ரயில், ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், ரயில்சேவை நிர்வாகம், தொலைக்காட்சி சேவைகளின் நேரடி ஒளிபரப்பு என்பவறின் ஊடாக மாறி மாறி பயணிக்கும் காட்சிகளில் வேகத்தையும், விறுவிறுப்பையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் பரபரபரப்பையும் சிறப்பாக பரிமாறியிருக்கிறார் டானி ஸ்காட். இவ்வகையான வேகமான பயணத்தினூடும் பிரான்கினதும், வில்லினதும் கதைகளை மிகச்சுருக்கமாக அவர் திரையில் பதித்தும் விடுகிறார்.
டென்ஸலிற்கு நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பெட்டியினுள் அவரின் பிரசன்னம் ஒன்று மட்டுமே போதுமான ஒன்றாகவிருக்கிறது. சற்றுத் துருத்த துடிக்கும் தனது வெண்பற்களை பளிச் அடித்து சிரித்தவாறே, உட்கார்ந்த நிலையிலேயே ஜாலியாக தன் திறமையை வழங்கியிருக்கிறார் அவர். இறுதிக் காட்சிகளில் ரயில் வண்டியின் கூரைமேல் ஓடி ஆக்ஷன் செய்வதாக நம்ப வைக்க கடுமையாக முயல்கிறார். இளம் நடிகரான கிரிஸ் பைன் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த இரு பாத்திரங்களினதும் வாழ்க்கைகள் கூட இந்த ரயில்வண்டியால் சிறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றன எனலாம்.
தனது வழமையான முறையில் திரையில் பதட்டத்தை தேர்ந்த கலைஞன் போல் உருவாக்கி, திகிலையும், விறுவிறுப்பையும் வேகமாக பயணிக்க வைக்கிறார் இயக்குனர் டானி ஸ்காட். ஒர் ஆபத்தான சூழ்நிலையின் முன்பாக கூட தம் லாப நஷ்டங்களை எடைபோட்டு பார்த்து முடிவெடுக்கும் அதிகாரங்களை அவர் தனக்கேயுரிய பாணியில் நகைப்பிற்குரிய வகையில் சித்தரித்திருக்கிறார். ஓடும் ஒரு ரயிலை வைத்துக் கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுவிட முடியும் என்பதை அவரின் இத்திரைப்படம் மறுக்கவியலாத வகையில் நிரூபிக்கிறது. குறிப்பாக உச்சக்கட்டக் காட்சிகளில், எடிட்டிங், ஒளிப்பதிவு[ அபாரம், அட்டகாசம்] இசை, இயக்கம் என யாவுமே டைனமைட் கூட்டுப் பக்குவத்துடன் அமைந்திருக்கிறது. செண்டிமெண்ட், ஆக்ஷன், நாயக பிம்ப கலவையாக வந்திருக்கும் Unstoppable, கிழட்டு டானி ஸ்காட்டால் இன்றும் கூட ரசிகர்களின் அடிவயிற்றில் திகில் பம்பரம் விட முடியும் என்பதை தெளிவாக்குகிறது. [***]
ட்ரெயிலர்
