Tuesday, April 8, 2014

முக்கோணம் இல்லா முச்சந்தி அல்லது நீதி செத்த நிலம்


வதனமோ சந்த்ரபிம்பமோ - 14

டெக்ஸ் கதைகளின் ரசிகர்களாக இருக்கும் அன்பர்கள் புதியதொரு டெக்ஸ் கதையை படிக்க ஆரம்பிக்கும்போது கடவுளே இது பரட்டை கதையை விட மோசமாக இருக்ககூடாது எனும் வேண்டுதலுடனேயே அதை படிக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் ஒரு தந்திரம் உண்டு. எந்த பரட்டை கதையுமே டெக்ஸ் கதையை விட மொக்கையாக இருப்பது ஒன்று. பரட்டை கதையை விட மொக்கையாக டெக்ஸ் கதை எதுவுமில்லை என்பது இன்னொன்று. இந்த நம்பிக்கையின் துணையுடனும் எவ்ளோ அடிச்சாலும் நாம தாங்குவோம் எனும் டெக்ஸ் கதைகள் தந்த சிந்தாந்த அனுபவ முதிர்ச்சியுடனும் கைகோர்த்து டெக்ஸ் கதைகளை படித்து செல்கையில் கண்களின் ஓரம் வழிந்திடும் கண்ணீர் கூட ஆனந்தப் பன்னீராகவே வாசம் வீசி எம் சுற்றுச் சூழலை கிறங்க வைக்கும் என்பதை அறியாத டெக்ஸ் ரசிகரும் இங்குண்டோ. அந்த ஆனந்த கிறக்கத்திலே ஊறி பெருமேற்கின் எல்லையற்ற வெளிகளின் வன்காற்றாய் உருமாறி வெஸ்டெர்ன் எனும் தேரேறி வந்திடும் தேவர்களன்றி வேறு யாராக டெக்ஸ் ரசிகர்கள் இன்று இருந்திடவோ இனம் கண்டறியப்படவோ கூடும் என்பதை உரைப்பீரோ பார் உறை பாவலரே!!

இவ்வாறாக 1989ம் ஆண்டில் இந்தப் புவியில் மலர்ந்திட்ட சிறப்பு மலராம் TEX SPECIAL n°2 ன் கதையான Terre sans Loi எவ்வாறு டெக்ஸ் ரசிகர்களை களிப்புற வைக்கிறது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம். கதை வெளியாகி வெள்ளிவிழா காணும் காலம் வந்துவிட்ட பின்பும்கூட ஒரு கதையை படிக்க நாம் தைரியமாக தயாராகிறோம் என்றால் உண்மையாக அது ஒரு காலம் கடந்து நிற்கும் படைப்பு அல்லது கரும்பாறை ஒன்றின் புடைப்பு என்பதை அறியாதவர்கள் அல்ல டெக்ஸ் அபிமானிகள். ராட்சத டெக்ஸ் என இத்தாலியில் இதன் ஆரம்ப காலங்களின் செல்லமாகவும் டெக்ஸ் கதைகளிற்கே உரித்தான செருக்குடனும் அழைக்கப்பட்ட இவ்வகை கதைகள் மாத வெளியீடுகளில் இருந்து தம்மை தனித்து அடையாளம் காட்டுபவையாக இருந்தன. கதை மொக்கையாக இருந்தாலும்கூட ராட்சத டெக்ஸ் 2 ஒரு மொக்கை என இலக்கத்துடன் தனித்து அடையாளம் காணப்படக் கூடியவையாகவும் சுட்டிக் காட்டப்படக் கூடியவையாகவும் இவை இருந்தன என்பதும் இவற்றின் தனித்துவங்களில் ஒன்று.

இப்போது நீதியில்லா நிலம் எனும் இக்கதையின் தலைப்புக்கு வருவோம். இந்த உலகில் எங்குதான் நீதி வாழ்கிறது எனும் கேள்வியை எழுப்பாத அவநம்பிக்கையாளர்கள் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக அந்த ஊரிற்கு டெக்ஸை அவரின் கூட்டாளிகளுடன் எப்படியாவது ஒரு சாக்கு சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். டெக்ஸ் அந்த ஊரிற்கு போய் ஒரு ஐம்பது பக்கங்களின் பின் அங்கு அதுவரை இல்லாமல் இருந்த நீதி துளிர்விட ஆரம்பித்து டெக்ஸ் அண்ட் கோ குட்பை சொல்லி அந்த ஊரை விட்டு கிளம்பும் நிலையில் ஆயிரமாண்டு விருட்சத்தின் வளர்ச்சியை பெற்றிருக்கும். இப்போது அவநம்பிக்கையாளர்களை ஒரு துச்சப்பார்வை பார்த்து கண்களில் சற்று ஏளனத்தையும் வரவழைத்துக் கொண்டு டேய் போய் சாஃபோர்ட்ல பாருங்கடா நீதி எப்டி கிளை விட்டு நிழல் தருதுங்கிறத என்று சொல்லி விட்டு ஒரு டெக்ஸ் ரசிகன் நிமிர்ந்து நேராக ஒரு நேர்கோட்டு பாதையில் - சூரியன் மறைந்து கொண்டிருக்கும் திசையும் நேரமுமாய் இருந்தால் உசிதம்- கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும். மனதில் எழும் எந்த வசையும் வெளியில் வந்திடாத ஒரு உறங்கும் எரிமலையாக நடப்பது என்பதை கருவறையிலேயே ஒரு டெக்ஸ் ரசிகன் கற்று விட்டிருக்கிறான்.  ஆக அநீதியின் அந்தப்புரமான சாஃபோர்ட் நகரில் நீதியை தம் காலின் கீழ் போட்டு குத்து பரதம் டிஸ்கோ சல்சா கரகம் டிவிஸ்ட் ஸ்விங் போன்ற இன்னபலவகை நடனங்களை ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு நீசர் கும்பலை அடி பின்னியெடுத்து எவ்வாறு அங்கு நீதி விதையை  டெக்ஸ் அண்ட் கோ விதைக்கிறார்கள் என்பதுதான் டெக்ஸ் ஸ்பெசல் 2 ன் மையக்களம் என்பதை டெக்ஸ் அபிமானிகள் லக்கியின் துப்பாக்கி சுடும் வேகத்தைவிட வேகமாக சுட்டிருக்க வேண்டும்.

க்ராண்ட் கோட்டைக்கு டெக்ஸை அழைத்து யப்பா ஒரு நடை சாஃபோர்ட் வரை போய்ட்டு வாப்பா என காலனல் வெல்ஸ் சொன்னதுதான் தாமதம் டெக்ஸ் உடனடியாக நான் என்ன செய்தாலும் அதை யாரும் எதுவும் கேட்ககூடாது அதற்கு உத்தரவு தாங்கன்னு உறுமும் காட்சியில் டெக்ஸின் ரசிகர்களின் கையில் இருந்த மிக்ஸர் தட்டு கீழே விழுவது உறுதி. தயவுசெய்து மீண்டும் உங்கள் தட்டில் மிக்ஸரை நிரப்பாதீர்கள். ஏனெனில் மிக்ஸர் தட்டு மட்டுமல்ல நீங்களே படித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து தூக்கி எறியப்படும் அளவிற்கு இக்கதையில் ஆக்சன் இருக்கிறது. இந்த ஆக்சன்களை நான்கு கட்டங்களாக இந்தக் கதையில் பிரிக்கலாம்.

1- சாஃபோர்ட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தபின் வாய்பா க்ரீக்கில் வந்து தங்கியிருக்கும் மாக் கார்மிக்கை தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக சந்திக்க செல்லும் டெக்ஸ் அண்ட் கோ, கானாடோ எனும் அப்பாசேயின் தலைமையின் கீழ் இயங்கும்  அப்பாசே அடியாள் அணியுடன் அதிரடியாக ஆக்சனில் இறங்கும் ஆக்சன். அப்பாசேக்கள் மலையில் இருந்து குதித்து சீறிப்பாயும் ஆற்றில் சிம்பிளாக நீந்தி செல்வதில் வல்லவர்கள் என்பதை கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி உணர்ச்சிகரமாக நிறுவும் அற்புதமான ஒரு சந்தர்ப்பமாக இது கதையில் அமைகிறது. மேலும் தனக்கு சாஃபோர்டில் நிகழும் அநீதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் ஏதும் தெரியாது என்றுவிட்டு சாஃபோர்டில் நிகழும் அனைத்தையும் மாக் கார்மிக் புட்டு புட்டு வைக்கும் காமெடி உலகத்தரமான காமெடி என்பதையும் நாம் ஒதுக்கி விடலாகாது.

2- பால் மாரிசன் எனும் குதிரை வியாபாரியிடம் தகவல் அறியச் செல்லும் டெக்ஸ் அண்ட் கோ தகவல்களை அறிவதற்காக பால் மாரிசன் காங்குடன் போடும் ஆக்சன். ஐந்தடி தூரத்தில் நின்று சுட்டாலும் தோட்டா உங்கள் உடலில் படாமல் நெளிவது எப்படி எனும் பாலபாடத்தின் அரிச்சுவடி தன் கையெழுத்தை இந்த ஆக்சன்களில் கிறுக்குவதை அபாரமாக காட்டி இருக்கிறார்கள்.

3- ஃபக்கோ சாவேஸ் [ தவறாக உச்சரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல] பண்டமாற்று நிலையத்தில் வறுத்த இறைச்சி உருளைக்கிழங்கு பொரியல் பீர் என போட்டு தாக்கி செரிமானம் கண்டபின்பாக டெக்ஸ் அண்ட் கோ ஃபக்கோ சாவேஸ் அண்ட் கோவுடன் போடும் ஆக்சன். ஜன்னல்களினூடாக துப்பாக்கிகளை பறிப்பது. ஜன்னல்களிற்கு அப்பால் நிற்பவர்களை சுடுவது. ஜன்னல் அருகே விழுந்து சாவது. ஜன்னல் வழியாக தப்பி ஓடுவது. மூன்றடி தூரத்தில் டெக்ஸ் விழுந்து கிடந்தாலும் டெக்ஸை சுடாமல் டெக்ஸ் பிருஷ்டத்திற்கு அருகே சுட்டு மண் கிளப்புவது என ஆக்சனும் காமெடியும் கலந்து கட்டி நீயா நானா சூப்பர் ஜோடி மேளா நாடாத்தும் ஆக்சன் தருணமாக இது அமைகிறது.

4. அ] ஃபக்கோ சாவேஸ் பண்டமாற்று நிலையத்திலிருந்து செமகாமெடி கெட்டப் ஒன்றில் டெக்ஸ் அண்ட் கோ கிழட்டு நெட்டின் குதிரை வண்டியில் செல்லும் வழியில் இடைமறிக்கும் கேடி கெவின் க்ராஸ்பி காங்குடனான ஆக்சன். மேற்கில் வரட்சி பெண்களை அடையாளம் காண்பதிலும் நிலவுகிறது என்பதை கதாசிரியர் சூசகமாக கோடிட்டு காட்டும் பகுதி இது. பெண்களால்தான் சும்மா இருந்த அமைதிப் பூங்காக்களில் எல்லாம் மோதல் முளைவிடுகிறது எனும் உண்மையை அப்பட்டமாக கன்னத்தில் அறைந்து கூறும் ஆக்சன் இங்கு குதிரைகள் களைக்கும்வரை ஓடி ஓடி காட்சியாக்கப்படுகிறது. டெக்ஸின் இஸ்பானிய மொழிப்புலமையும் அதை அவர் பிரயோகிக்கும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் தங்கப்பனையும் ஆஸ்கரும் பெர்லின் தங்கக்கரடியும் சேர்த்து தந்தாலும் கிடைக்காத ஒரு திறமை மேற்கின் சொர்ண்மால்யனாக அவரை அடையாளம் காட்டி நிற்கிறது.

ஆ] சாஃபோர்ட் சிறையை கேடி கெவின் க்ராஸ்பியும், மெக்ஸிக்க வெடைக்கோழி லோலா சாவேஸும் இணைந்து தாக்கும் ஆக்சன். கதையின் இறுதி ஆக்சன். சும்மா கோழிக்கூட்டுக்குள் அடைபட்ட சிங்கம்போல் டெக்ஸ் அடிபின்னும் காட்சி இது. இந்த ஆக்சனிற்காகவே லோலா சாவேஸ் இறுக்கமான கால்சட்டை அணிந்து வருகிறார். அப்போது அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது.

அல்ஃபெர்டோ ஜியோலிட்டி பிரபலமான ஒரு சித்திரக்கலைஞர். சிஸ்கோ கிட், ஸ்டார் ட்ரெக், பிளானட் ஆப் த ஏப்ஸ், லோர்ட் ஜிம், டார்ஸான், ஸோரோ என நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார்.  காமிக்ஸ் துறையில் வால்ட் டிஸ்னிக்கு பின்பாக எடிசன் விருதை பெற்ற பெருமையும் பெற்றவர். அவர் பாணி தனித்துவமானது, மரபார்ந்தது என்ற போதிலும் அது என்னை அதிகம் கவரவில்லை. அவர் சித்திரங்களை காண்கையில் அது குறித்த ஒரு கிண்டலுணர்வு குளமொன்றின் மேல் அலைந்திடும் துரும்பாக அலைவதை தடுக்க இயல்வதென்பது அடிக்க ஓங்கிய டெக்ஸின் கையை தடுப்பதற்கு சமனாக இருக்கிறது. கார்சனை நடிகர் திலகம் சிவாஜி போலவும் டெக்ஸை ஹிந்திபட டாடி போலவும் வரையும் திறன் அவரின் தனித்துவங்களின் ஒன்று என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

மொத்தத்தில் 25 வருடங்களுக்கு முன்பாக வந்த ஒரு வெஸ்டெர்ன் ஆக்சனை சகிக்கும் மனப்பான்மை நிரந்தரமாக உடைய வாசக உள்ளங்களுக்கு இக்கதை ஒரு வரப்பிரசாதமாகும். டெக்ஸ் இவ்வளவு வன்முறையாளராக இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கிறாரா தெரியவில்லை. உணர்ச்சியின் வேகத்தில் கார்சனின் கன்னத்தில் ஒன்று போடவும் தயாராக இருக்கும் டெக்ஸை வாசகர்கள் இக்கதையில் சந்திக்கலாம். அடி அடி அடி என்று போட்டு அடிக்கிறார் டெக்ஸ். குதிரைகள் மாடுகள் வல்லூறுகள் என அந்த வறள்நில வாழ் பிராணிகள் எல்லாம் டெக்ஸின் கையில் மாட்டிக் கொண்டவர்களிற்காக கண்ணீர் சிந்துவதை  ஒரு அனுபவம் கொண்ட வாசகர் கதையின் சட்டகங்களிற்கு பின்னால் உணர்ந்திட முடியும். மாறாக இக்கதையை படிக்கையில் சொர்க்கலோக பூங்காவனம் ஒன்றின் உள்ளே இருப்பதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுமாயின் நீங்கள் உங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொள்ளலாம். உண்மையான டெக்ஸ் ரசிகர் நீங்கள்தான் என்பதற்கான அடையாளம் அதை தவிர்த்து வேறில்லை. இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!!

Saturday, January 18, 2014

6174

பூமியின் மேலே இரு விண்கற்கள் புவிநிலை வட்டப்பாதையின் இரு குறித்த புள்ளிகளில் நிலைபெற்று புவியை வலம்வர ஆரம்பிக்க... வடகொரிய மற்றும் ரஷ்ய போர்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மூன்றாம் உலகப்போரிற்கான சாத்தியம் ஒன்றினை உருவாக்க நகர... தொன்மம் ஒன்றின் பரமரகசியமானது உலகிற்கு தன் முகம் காட்டும் ஆயத்தங்களில் இறங்குகிறது... மனித குலத்தின் அழிவு என்பதே முடிவு என இயங்கும் இச்சக்திகளின் ஆவேச ஆட்டத்திலிருந்து மனிதகுலத்தை காத்திட யாரால்தான் முடியும்? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என பாசத்துடன் முன்வந்து ஒரு நிபுணர் குழுவை தன் 6174 நாவலில் களமிறக்கி இருக்கிறார் நாவலாசிரியர் சுதாகர். அறிந்ததை கொண்டு அறியாததை அறியும் தேடலில், வாழ்ந்திருந்த நம்பிக்கைகள் இறக்க புதிய நம்பிக்கைகள் தொன்மங்களுடன் உயிர்துளிர்க்கும் புனைவில்; வரலாறு, தொன்மம், அறிவியல், சர்வதேச ராஜதந்திர அரசியல், உளவுத்துறைகள், ரகசியக்குழுக்கள், அங்காங்கே தூவப்பட்டிருக்கும் நுட்பமான நகைச்சுவை என இப்பட்டியலை இன்னம் நீளவைக்கும் அளவிற்கு  தன் படைப்பை பல்லம்சங்களால் நிரப்பியிருக்கிறார் சுதாகர்.

நாவலின் ஆரம்பத்தில் கதையானது அழகான சிட்டுக்கள் மத்தியில் தனியாக விடப்பட்ட ஒரு அப்பாவி கணவனின் விழிகளைப்போல காலம்விட்டு காலம் தாவுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பாயும் கதையின் காலம், இடம், வேளை என்பவற்றை ஒரு கனமாக எடுத்திடாது கதையோட்டத்துடன் கலந்துவிடுவது இப்பகுதியில் வாசகர்களிற்கு நலமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கதையின் ஓட்டத்தில் தான் உருவாக்கிய காலப்பாய்ச்சல்கள் எல்லாவற்றிற்குமான காரணங்களை கதையில் விளக்கிவிடுகிறார் சுதாகர். இந்தக் காலப்பாய்ச்சல்களினூடு கதையின் பிரதான பாத்திரங்கள் சென்னையில் ஒன்று கூட கதையும் பாய்ச்சல்களிலிருந்து ஓய்வுபெற்று முன்னோக்கி சீராக நகர ஆரம்பிக்கிறது.

6174ன் ஆரம்ப பக்கங்களில் சுதாகரின் கதைசொல்லும் பாணி அல்லது அவரின் புனைவு மொழியுடன் ஒன்றிட எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது அந்தக் கதைசொல்லும் பாணியுடன் என்னால் உடனடியாக ஒன்றிட முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு 150 பக்கங்களின் பின்பாக அவருடைய நடையுடன் என்னால் ஒன்றிட முடிந்தது. இடறல்கள் ஏதும் இல்லாமல் கதையோட்டத்துடன் கைகோர்த்திட முடிந்தது. சுதாகரின் கதைமொழி இளமையாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அதனுடன் என்னை இணைத்துக் கொள்ள நானும் என்னை இளமையாக்கிகொள்ள வேண்டியிருந்தது. இளமைகள் ஈடாகிவிட்டநிலையில் ஓட்டத்தில் தடையேதுமிருக்கவில்லை.

சிதம்பரம் முதல் சிதம்பலம்வரை, மயன் முதல் மாயன்வரை உள்ள தொடர்புகளையும் மேலும் இதுபோன்ற பிற தகவல்களையும் படிப்படியாக வாசகன் முன் பரிமாற ஆரம்பிக்கிறார் சுதாகர். அனகொண்டா எல்லாம் எங்கள் ஊர் சிட்டிசன் என்கிறார். எதிர்த்து ஏதும் மனதில் கேள்வி எழுந்தால் அகராதியை ஆதாரமாக கொண்டு மிரட்டுகிறார். இப்படியாக அவர் அள்ளிப் போடும் தகவல் கோலங்கள் உருவாக்கும் சுவாரஸ்யமானது கதையை வேகமாக நகர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. தேடி எடுத்த தகவல்களை எல்லாம் சீரான பொருத்தத்துடன் தக்க இடங்களில் இடம்பெறசெய்த சுதாகர் பாராட்டிற்குரியவர்.

கதையானது 150 பக்கங்களை தாண்டி கருஞ்சுழி எண் குறித்த விளக்கத்தை எட்டியபின்பாக நாவல் தன் வேகத்தை அதிகரித்து விடுகிறது. மிங்குனிற்கு செல்லும்வரை நாவலின் பக்கங்களை வேகமாக புரட்டுவது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. விறுவிறுப்பாக, எளிதான மொழியில், புரியும்விதமாக இப்படியான ஒரு கதையை தமிழில் சொல்ல முடியும் என சுதாகர் அடித்து சொல்லும் பகுதியாக நாவலின் மத்திய பகுதி அமைகிறது. தமிழ் நாவல்களில் சாதாரணமாக கையாளப்படும் அறிவியல் தகவல்களின் ஆழத்தை இன்னும் ஆழமாக்கிவிட்டு அதை இலகுவாக புரிந்திட செய்வதில் சுதாகர் சிறப்பாக செயற்பட்டு இருக்கிறார். ஆனால் மிங்குனை அடைந்தபின் கதை பகோடாவையும், குளத்தையும், பாதாளத்தையும் சற்று அதிகமாக சுற்றி சுற்றி வருகிறதோ எனும் ஒரு தொய்வையும் நாவல் ஏற்படுத்தியது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

மூலக்கூறுகளின் பொருண்மைகளை தரவாக்கி அதன் வழியாக தனிநபரை இனம்காணல், செயற்கை குரல் ஒன்றை புத்திசாலித்தனமாக உருவாக்கல் என சுதாகர் புதிய நுட்பங்களால் திகிலூட்டுகிறார். தோலிற்கு கீழே பதிக்கும் நுண்கருவிகள் பற்றி பேசும் சுதாகர் தமிழ் செய்யுள்களாலும், பாடல்களாலும், வடிவக்கணிதத்தாலும் புதிர்களையும் போடுகிறார். போட்ட புதிர்களை என்னைப்போன்ற வாசகர்களிற்காக அவிழ்க்கவும் செய்கிறார். அவர் செய்யுள் புதிர்களை அவிழ்க்கும்போது என் தமிழ் புலமை குறித்த எண்ணமும் அவிழ்ந்து கீழே வீழ்ந்து விடுகிறது. இத்தரைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது மிக எளிமையான சொற்களிலான செய்யுள்களே எனும்போது தமிழை தவறவிட்ட ஏக்கம் மெதுவாக மனதில் வடிவக்கணித கோலம் போடுகிறது. அவர் நாவல் தமிழை போற்றுகிறது என்றால் அது மிகையல்ல.

சுதாகர் தன் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட தகவல்களை விளக்குவதில் உள்ள எளிமை அவரின் பலம் என்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு தகவலை தந்துவிட்டு அதை நீங்களே தேடிப்பார்த்து கொள்ளுங்கள் என வீட்டுவேலை தரும் கறாரான ஆசிரியபண்பும் அவரிடம் இருக்கிறது. 1908 ல் சைபீரியாவின் சுங்குஸ்காவில் என்ன நடந்தது என்பதை தேடி அறிந்தால் மட்டுமே சுதாகர் தன் நாவலில் முன்வைக்கும் பேரழிவு குறித்த ஒரு மனச்சித்திரத்தை வாசகன் தன்னுள் உருவாக்கி கொண்டு அந்த பரபரப்புடன் நாவலை தொடர முடியும். இவ்வகையில் நாவலாசிரியனும், வாசகனும் இணைந்து களப்பணியாற்றக்கூடிய பண்பையும் இந்நாவல் கொண்டிருக்கிறது எனலாம்.

சீலகந்தா மீன்கள் பற்றிய வரலாற்றை கதையில் சுவையாக தருகிறார் சுதாகர். ஏன் அந்த மீன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான விளக்கங்களுடனும் கூடவே நேஷனல் ஜியோகிராபிக் அம்மீன் குறித்து நிகழ்த்திய மிக ரகசியமான ஆய்வு ஒன்றைப்பற்றிய  விபரங்களுடனும். அவர் வழங்கியவற்றை படித்தபின் யார் இந்த சீலகந்தா, அவர் எப்படியிருப்பார் என அறிந்துகொள்ளாவிடில் என் தலைக்குள் புகுந்த வண்டு வெளியேறாது என்பது உறுதியானது. கூகிள் இமேஜை தட்டி அதில் வந்த போட்டோவை பார்த்தால்.. சீலகந்தா... நம்புங்கள் காஜல் அகர்வால் இடையை எவ்வளவு கரிசனையுடன் ஒரு ரசிகர் வர்ணிப்பாரோ அப்படியாக சீலகந்தாவை கதையில் வர்ணித்திருக்கிறார் சுதாகர். இதற்காக சீலகந்தா இனமே அவரிற்கு கடமைப்பட்டு இருக்கிறது.

இவ்வாறாக சற்று பெரிதான எதிர்பார்ப்பை வாசகன் மத்தியில் உருவாக்கும் நாவல் அதன் முழுமையானநிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறதா எனக் கேட்டால் எனது பதில்; முழுமையாக அந்த எதிர்பார்ப்பு நாவலில் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான். அனந்த், ஜானகி இருவரும் அன்னியர்களாக இருந்தாலும் கூட கதையோட்டத்தில் பெரிதான தாக்கங்கள் உருவாகி இருக்குமா என்பது ஒரு கேள்வி. லெமூரியர்கள் புரிந்து கொள்ள எடுக்கும் நேரம் குறித்த நுட்பமான நகைச்சுவை.. ஏன் இவள் லெமூரியாவை கட்டி அழுகிறாள், கிழம் ராவுகிறது போன்றவற்றில் இல்லை. எனக்கு சுதாகரின் நுட்பமான நகைச்சுவைதான் இணக்கமானதாக இருக்கிறது. ஐராவதி நதி இன்னம் முழுமையாக ஆய்வுக்குட்படாத நதி அதன் ஆழத்தில் மர்மமான ஜீவன்கள் வாழ வாய்ப்புண்டு எனும் சுதாகரின் வரிகள் கதையின் உச்சக்கட்டத்தில் தரும் ஆச்சர்யம் கதையை சிறிது பலவீனமாக்குகிறது. தொன்மங்கள், ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பெளதிக வகுப்பறை, டாம் க்ளான்ஸி என விரியும் அந்த கூட்டு உச்சக்கட்டத்தில் நாவல் என்னை விட்டு சற்று விலகி சென்றது என்பதுதான் உண்மை. இதை நான் நேர்மையாக சொல்வதே தமிழ் வாசக பரப்பில் இவ்வளவு துணிச்சலுடன் இப்படியான ஒரு நாவலை தயங்காது முன் வைத்த சுதாகரிற்கு நான் தரும் உண்மையான பாராட்டும் உற்சாகமுமாக இருக்ககூடும். இதே சமயத்தில் சகட்டு மேனிக்கு மேற்கத்தைய எழுத்துக்களுடன் சுதாகரின் எழுத்தை ஒப்பிட்டு அவர் படைப்பின் மீது நியாயமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் பதிவுகளையும் ஒரு வாசகர் அவதானமாக கையாள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பின்பாக உள்ள ஆட்பலமோ, பணப்பலமோ, விளம்பரபலமோ சுதாகரிடம் இல்லை. தன் ஓய்வு நேரத்தில் தன் படைப்புக்கான தேடல்களை செய்து தன் நாவலை அவர் சிறுக சிறுக உருவாக்கி இருப்பார் என்றே நம்புகிறேன். அந்த உழைப்பும் அர்ப்பணமும் அவர் நாவலில் நான் கண்ட சில குறைகளை தாண்டியும் மதிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன். சுதாகரின் உழைப்பிற்குரிய வரவேற்பும், உற்சாசகமும், பாராட்டுமே அவரை மேலும் செய்யுள்களால் புதிர்போட வைக்கும். இவ்வகையான நாவல் ஒரு நல்ல ஆரம்பம். ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார் சுதாகர், அது பெருந்தீயாக மாறி டான் ப்ரவுன்களை எரிக்கட்டும்.



Wednesday, January 1, 2014

The Wise Man's Fear - The Goodbye Kiss - Jar City

The Wise Man's Fear

நீங்கள் படிக்கும் ஒரு நாவல் விறுவிறுப்பான ஒன்றாக ஆன அதன் 600 பக்கங்கள் வரை நீங்கள் சென்றாக வேண்டும் என்றால் உங்கள் நிலை எப்படி இருக்கும். இங்கு 600 பக்கம் என்பது நாவலின் மூன்றில் இரண்டு பகுதி என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.என் நிலையும் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் இங்கு எழுதவே தேவையில்லை.

அந்த 600 பக்கங்கள் வரை கதையின் பிரதான பாத்திரத்துடன் நானும் தேமனே அலைந்து திரிந்தேன். ஹாரிபாட்டர் கதைகளின் சாயல் இப்பகுதிகளில் தெரிவது போல எனக்கு தோன்றியதற்கு பற்றிக் ராத்பஸின் இந்த மிக நீண்ட தட்டையான கற்பனை பதிவே காரணம் என்பேன். Kvothe பள்ளிக்கு காசு செலுத்த கஷ்டப்படுகிறார், மதுவிடுதிகளில் இசைக்கலைஞனாக சிறப்பிக்கிறார், சொல்ல முடியாத ஈர்ப்புடன் ஒரு பெண்ணின் பின் சுற்றுகிறார், செல்வந்த பிரபுவின் வாரிசுடன் தொடர்ந்தும் மோதுகிறார், தன் குடும்பத்தை அழித்த அமானுடர்கள் குறித்த தேடல்களை தொடர்கிறார்... சில மந்திர ஏவல்களை முறியடிக்கும் சம்பவங்களையும், அங்காங்கே காணப்படும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் தவிர்த்து இப்பகுதிகளில் பெரிதாக ஏதும் இல்லை. ஆனால் இவற்றைதானே கதைவரிசையின் முதல் பாகத்திலேயே படித்து விட்டோம். என்ன கொடுமை இது என எண்ணி நான் விம்ம ஆரம்பித்த நேரத்தில் Kvothe ஒரு பயணத்தில் இறங்குகிறார்.

அப்பயணம் அவரை செவெரென் எனும் இடத்திற்கு கொண்டு செல்கிறது அங்கு அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பானவை. பக்கங்கள் பரபரவென நகர்ந்து 600 பக்க கொடுமைக்கு ஓரளவேனும் நஷ்ட ஈடு தருகின்றன. காடு ஒன்றினுள் நடக்கும் மோதல் காட்சி ஒன்றின் விவரிப்பை கதாசிரியர் சொற்களில் கொண்டு வந்திருக்கும் விதம் அபாரமானது. இதன் பின் கதையில் Kvothe பிற நிலம் ஒன்றில் சென்று அந்த இன மக்களின் தற்காப்பு கலைகளிலும் மொழிகளிலும் பயிற்சி பெற்று குறிப்பிடத்தக்க பெயர் எடுப்பது எல்லாம் பெருசு ஜோர்டானின் கதைகளில் ட்ராகன் ரீ பார்ன் செய்து விட்டார்.

அடுத்த பாகத்துடன் கதை முடியவில்லை எனில் இக்கதை வரிசையை நான் தொடரப்போவது இல்லை. அடுத்த பாகமானது 1000 பக்கம் என்றால் நான் 600 ம் பக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பிப்பேன்.


The Goodbye Kiss

போனோமா அலுவல முடிச்சோமான்னு இருக்கனும் என்பார்கள் அனுபவஸ்தர்கள். இத்தாலிய வெகுஜன குற்றப்புனையாசிரியர் Massimo Carloto வின் எழுத்துக்களும் அதைப்போன்றதே. அவர் கதை சொல்லல் தன் பாதையிலிருந்து விலகி பூ பறிக்கவோ அல்லது அந்தி சூரியனின் அழகை சொல்லழகால் கவிப்படுத்தவோ செய்வது இல்லை. கொல்வது மட்டுமே காரியம் என்றால் அவர் எழுத்துக்கள் கொல்வதை மட்டுமே செய்கின்றன. அவ்வகையில் அவர் எழுத்துக்கள் ஆழம் அற்றவையாக இருந்தாலும் பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் குறைந்து போவது இல்லை.

The Goodbye Kiss நாவல் முன்னாள் தீவிர இடதுசாரி சிந்தனை போராளி ஒருவனின் கதை. இத்தாலியில் நிகழ்ந்த கலகங்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தென்னமெரிக்க கெரில்லாக்களோடு தன்னை இணைக்கும் ஒருவன் மீண்டும் தன் தாய் மண்ணிற்கு திரும்பி, வாழ்க்கையில் வெற்றி பெற ஓடுவதே கதை. அதை அவன் எவ்வாறு செய்கிறான் என்பதை தன் வரிகளில் அதிர்வு குறையாமல் எழுதுகிறார் கார்லோட்டோ.

தன் போராளி சகாக்களை போட்டுக் கொடுப்பதில் இருந்து அறம், மனச்சாட்சி போன்ற பம்மாத்து வார்த்தைகளை பத்திக்கு பத்தி உயிர் கசிய நசுக்கி கொண்டு பறக்கிறது கதை. வாலிப வயதின் வேகத்தில் இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான் தேடும் ஒரு வாழ்க்கைக்காக எடுக்கும் உரு, ஆணி பதித்த செருப்பால் வாசகனை அடி மேல் அடித்து ரத்த களறியாக்குகிறது. சமூகம் கொண்ட வேடம் யாவையும் துகிலுரித்து வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறது கார்லோட்டாவின் எழுத்துக்கள்.

விலைமாதர்கள், போர் குற்றவாளிகள், முன்னாள் போராளிகள், ஊழலில் கொழுத்த சட்ட அதிகாரிகள், குற்ற தலைவர்கள் , புதிய சமூகமொன்றின் நாகரீக குற்றவான்கள் என இத்தாலியின் குற்ற சமூகத்தினூடு வாசகனை கட்டி அவன் உடல் காயம்பட இழுத்து செல்கிறது கதை.

அமெரிக்க ஹார்ட் பாய்ல்ட்டுகளில் காணப்படும் ஆபத்தான பெண், பெண்கள் மீதான கரிசனம், ஈர்ப்பு , இரக்கம் போன்றவை யாவற்றையும் கால்வாயில் வீசி விட்டு செல்கிறார் கார்லோட்டோ. அவர் கதைகளில் அறம், தர்மம், ஒழுக்கம் ஜெயிப்பது இல்லை. வாழ்க்கை தன் அசுரப்பற்களுடன் இரத்தம் வழிய எள்ளல் புன்னகை மட்டும் செய்கிறது. எளிமையான, வழிதப்பாத, ஆழமற்ற, அட்டகாசமான, வன்மையான எழுத்துக்கு சொந்தக்காரர் கார்லோட்டோ


Jar City

கொல்பெர்க் எனும் எழுபது வயதுடைய நபர் அவன் வசிக்குமிடத்திலேயே கொலை செய்யப்படுகிறான். கொலையை செய்தவன் புதிரான ஒரு தகவலை கொலை நிகழ்ந்த இடத்தில் விட்டு செல்கிறான். இக்கொலை பற்றிய புலனாய்வை குற்றபிரிவு அதிகாரிகளான எர்லெண்டரும் அவரது சகாக்களும் தம் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஐஸ்லாந்து நாட்டின் புகழ்பெற்ற குற்றபுனையாசிரியர்களில் Arnaldur Indridason ஒருவர். அவரின் ஜார் சிட்டி நாவல் ஸ்காண்டினேவிய குற்றபுனைகளின் முக்கிய பண்புகளில் ஒன்றான சமூக அவலங்கள் மீதான பார்வையை தன்னில் தெளிவாக உள்ளடக்கி இருக்கிறது. கொலை செய்யப்படும் கொல்பெர்க் பாத்திரத்தின் பின்பாக உள்ள ரகசியங்கள் வாயிலாக ஐஸ்லாந்து சமூகத்தின் அவலநிலை சிலவற்றை நாவல் விபரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறை என்பது பிரதான முன்வைப்பாக இருந்தாலும், பெற்றோரிற்கும் குழந்தைகளிற்குமான உறவென்பது ஐஸ்லாந்தில் எவ்வாறனதாக இருக்கிறது  என்பதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது.

குற்றங்களிற்கு ஐஸ்லாந்து நீதிமன்றங்களில் கிடைக்கும் தண்டனையின் அளவு எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை கதாசிரியர் தெளிவு படுத்துகிறார். குற்றவாளிகள் விடுமுறைக்காலத்தை கழிப்பது போல தமக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைகளை வரவேற்பதை அவர் வரிகள் சொல்கின்றன. திட்டமிட்ட ஒரு கொலைக்கு  இரு வருடங்கள் சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வழங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் இவ்வகையான செயல்களை செய்யும் மனிதர்கள் மத்தியில் அது பலமான மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை எனும் வாதத்தையும் இண்ட்ரிடாசன் தன் வரிகளின் பின்னால் சொல்கிறார்.

ஐஸ்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் மீது நீதித்துறையிலிருந்து காவல்துறைவரை ஒரு வகை சட்ட நிர்பந்தத்தின் பேரில் காட்டும் சகிப்புதன்மை வியக்க வைக்கிறது. கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் காவல்துறையிலும், மருத்துவதுறையிலும் இருந்து வரும் மெத்தனப் போக்குகள், அலட்சியமான சேவை மனப்பான்மை இவற்றின் வழியாக பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் இண்ட்ரிடாசனின் கதை பேசுகிறது.

கொலை குறித்த விசாரணைகள் வழியே வண்புணர்ச்சி எனும் குற்றத்தினால் உடையும் வாழ்க்கைகள் பற்றி மென்மையான சோகத்துடன் கதையை எடுத்து செல்கிறார் கதாசிரியர். மென்மையான ஒரு பெண்ணின் வாழ்க்கை வண்புணர்ச்சி ஒன்றின் பின்பாக கொள்ளும் மாற்றங்கள், அவளின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், அதன் பின் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குழந்தை ஒன்றின் இழப்பு தரும் வேதனைகளை புலனாய்வு வழி உணர ஆரம்பிக்கும் ஒரு மனிதன், தன் மகளுடன் தன் உறவை புதிதாக்கி கொள்ளும் நிலையையும் நாவலில் ஒருவர் காணலாம். அதே வேளையில் தன் மகளை துஷ்பிரயோகம் செய்ய தயங்காத மனிதர்களையும் ஒருவர் கதைசொல்லலில் கண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

மனித உடலின் உறுப்புக்களை பரிசோதனை தேவைகளிற்காக போத்தல்களில் போட்டு பாதுகாப்பதுபோல மனிதர்கள் தம்மைபற்றி அறிந்திராத ரகசியங்களும் போத்தல்களில் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரகசியங்களை உடைக்கும் வழி அறிந்தவன் ரகசியங்களை அறிந்து கொள்கிறான். தன் வலி தன்னுடன் முடியட்டும் என்பதற்கான செயல்களில் தன்னை மீறி இறங்குகிறான். வண்புணர்ச்சியானது வாழ்க்கைகளை ரகசியங்கள் இடப்பட்ட போத்தல்களை போல மூடச் செய்கிறது, எங்கோ ஒரு ஆய்வுகூடத்தின் இருண்ட அடுக்கொன்றிற்கு  அவற்றை காவிச்சென்று அங்கு அவற்றை மறைத்துக் வைக்க முயல்கிறது ஆனால் அது விதைத்த வாழ்க்கைகள் வினைகளிற்கான ஆதாரங்களை ரகசியங்களுடன் சேர்த்து நொருக்க விழைகின்றன.

இண்ட்ரிடாசனின் நாவலில் பொதிந்திருக்கும் ஒரு சோகம் கதையை குற்றப்புனை என்பதை தாண்டியும் சற்று ஆழமானதாக்குகிறது. கதையுடன் தொடர்பில்லாத விடயங்களை எல்லாம் கதைக்குள் இழுத்து வந்து சுற்றோ சுற்றென சுற்றி பக்கங்களை அதிகரித்து கதையை சலிப்படைய வைக்காது சிறப்பாக கதையை சொல்கிறார் கதாசிரியர். இண்ட்ரிடாசனின் எழுத்தில் ஒரு வீதம் ஸ்வீடன் குற்றபுனையாசிரியர் ஸ்டெய்க் லார்சனின் எழுத்துக்களில் இருந்திருந்தால் அவர் நாவல்கள் இன்று பெற்றிருக்கும் புகழ் நியாயமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு ஐஸ்லாந்து நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே தெரிகிறது.



Wednesday, December 25, 2013

மணல்மேல் கட்டிய பாலம்

சிறுவயது முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
சு.கி. ஜெயகரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பான மணல் மேல் கட்டிய பாலம் நாம் வாழ்வில் இன்னம் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிற ஒரு நூலாகும். அல்லது நம்பிக்கை இழந்தவை பற்றி தகவல்கள் சிலவற்றை தெளிவாக்குகின்ற ஒரு தொகுப்பாகும். நிலவியல், தொல்லியல் போன்ற துறைசார் சான்றுகளுடன் ஜெயகரன்  தன் கருத்துக்களை கட்டுரைகளில் முன்வைக்கிறார். இதுவரை எம் மனதில் இடம்பெற்றிருந்த ஒரு பிம்பம் மீதான பார்வை இவர் கட்டுரைகளின் பின்பாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அப்பிம்பங்கள் இல்லாமலும் போய்விடுகிறது.
கட்டுரை தொகுப்பில் இடம்பெறும் முதல் கட்டுரையான மணல்மேல் கட்டிய பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் குறித்தது. சில வருடங்களின் முன் நாசா செய்மதி நிழற்படங்கள் துணையுடன் ராமர் கட்டிய பாலம் நிஜமே என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு முடிவுகளாலும், சான்றுகளாலும் இக்கட்டுரையில் எதிர் கொள்கிறார் ஜெயகரன். ராமர் பாலத்தை கட்டவில்லை என்றால் பாக் நீரிணையில் இருக்கும் அந்த கடலடி மணல் தட்டு என்ன? இதற்கான விளக்கத்தை தெளிவாக இக்கட்டுரை தருகிறது.
வேதங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு ஒரு காலத்தில் ஜீவ நதியாக ஓடி இன்று மறைந்து போய்விட்டது என்பது ஒரு தகவல். ஹரிஜானா, ராஜாஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளை செய்மதி எடுத்த படங்கள் தரையில் இருந்து பார்க்கும்போது கண்ணிற்கு தென்படாத ஆற்றுப்படுகைகளை காட்டின. சரஸ்வதி ஆறு ஆர்வலர்கள் இதை தமக்கு கிடைத்த ஆதாரமாக கொண்டு வேதகாலம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானது எனும் கருத்தை பலப்படுத்த ஆரம்பித்தனர். ஜெயகரனின் சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரீகமும் எனும் கட்டுரை வேதகாலம் உண்மையிலேயே சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானதா என்பதை தெளிவாக்க முயல்கிறதுஆர்வலர்களின் ஆர்வக் குளறுபடிகள் குறித்தும் சொல்ல தயங்கவில்லை ஜெயகரன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த நில நீட்சி என்ன என்பது பற்றி குமரிக்கண்டம்- லெமூரியாக் குழப்பம் கட்டுரையில் விரிவாக எழுதுகிறார் கட்டுரையாசிரியர். தமிழகத்தின் தெற்கே கண்டம் என அழைக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருந்ததா? குமரிக்கண்டம், மு எனும் நிலப்பரப்பு, லெமூரியாக் கண்டம் இவை எல்லாம் ஒன்றா? லெமூரியா எனும் கருத்தாக்கம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஆராய விழையும் ஜெயகரனின் கட்டுரை மரபு மரபாக பழந் தமிழ் இலக்கியம் கட்டி வைத்த கற்பனை அடுக்குகளை நொருக்கி விடுகிறது. கட்டுரை தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இது அமைகிறது.
காம்பே கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான சிதைவுகள் வரலாற்றிற்கு முன்பான காலத்தவையா என்பதை தேட விழைகிறது காம்பே கடலுக்கடியில் ஒரு கட்டுக் கதையா? எனும் கட்டுரை. கடலடிக்கு எவ்வாறு படிவங்கள் வந்து சேர்ந்திருக்கும், கடலடி அகழாய்வு, நிலத்தடி அகழாய்வு இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் என சுவையான தகவல்களுடன் காம்பே கடலடி சிதைவுகள் குறித்த கேள்விகளையும் ஜெயகரன் தன் வரிகளில் உருவாக்குகிறார்.
போளுவாம்பட்டி புலவர் . இராமசாமி, பேரூர் கருப்புசாமி இவர்கள் இருவரும் சேகரித்து வைத்திருந்த சுடுமண் ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள், சித்திரங்கள், கிறுக்கெழுத்துக்கள், சங்கேதங்கள் போன்றவை பழந்தமிழ் எழுத்துக்களா? சங்க காலத்தவையா? என்பதை ஆராய்ந்து விடை காண்கிறது பேரூர் சுடு மண் ஓடுகள். ஆச்சர்யங்கள் நிறைந்த கட்டுரை இது. இராமசாமி, கருப்புசாமி இருவரினதும் திறமைகள் வியக்க வைப்பவையாக இருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் சிலப்பதிகாரம் குறித்த வரலாற்று உண்மைகள் என்ன? சிலப்பதிகாரத்தின் சாயல் கொண்ட இரு பழந்தமிழ்க் கதைகள் எவை? இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இருக்க வாய்ப்புக்கள் உண்டா? சிலப்பதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால் எனும் கட்டுரை.
Chariots of Gods எனும் பிரபல நூலை எழுதிய எரிக் வோன் டேனிகன், வேற்றுலகிலிருந்து பூமிக்கு வருகை தந்த கடவுளர்களின் உதவியாலேயே சில நாகரீங்கள் பரிணாமம் பெற்றது எனும் கருத்தை கொண்டவர். கடவுளர்களின் உதவி இல்லாவிடில் பிரமிடுகள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனும் கருத்தை முன் வைப்பவர் இவர். எரிக் வொன் டெனிகனின் புரட்டுக்கள், அவர் முன் வைக்கும் வேற்றுலக கடவுளர்களின் பூமி விஜயத்திற்கு முரணனா சில சான்றுகளையும், கருத்துக்களையும் ஜெயகரன் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் கட்டுரையில் பகிர்கிறார். சுவையான கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பேன். எரிக் வோன் டேனிகனின் கருத்துக்களில் இருக்கும் இனவுயர்வுவாதம் குறித்தும் ஜெயகரன் சிறிதாக விளக்கம் தருகிறார்.

தொடரும் கட்டுரைகள், பப்புவா நியுகினியில் எரிமலை விஜயம், தமிழகத்தில் திடீரென தோன்றிய கற்பாறைகளின் மர்மம், கொங்கு நாட்டில் நிலத்தடி நீர் போன்றவை பற்றி கூறுகின்றன. ஆனால் இவை மேற்சொன்ன கட்டுரைகளின் அளவிற்கு விறுவிறுப்பானவை அல்ல. எளிய தமிழில், ஒரு புலன் விசாரணை போல விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிலவியல், தொல்லியல், வரலாற்றியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வாசகர்களை திருப்திப்படுத்தும். டாவின்சி கோட் போல தமிழிலும் கதைகள் எழுதலாம் எனும் எண்ணத்தை இக்கட்டுரை தொகுதி பலப்படுத்தவே செய்கிறது. ராமர் பாலம் கட்டினாரா எனும் கேள்விக்கு இனி உங்கள் சிலரின் பதில்களிலும் மாற்றம் வரக்கூடும். சிற்றிதழ்களில் கட்டுரைகளாக வந்தவற்றை தொகுத்து காலச்சுவடு நூலாக வெளியிட்டு இருக்கிறது.

Monday, December 16, 2013

Imperium & The Hobbit: The Desolation of Smaug


Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

The Hobbit: The Desolation of Smaug

மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.

ஹாபிட்டில் எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.

நாவலில் மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.

திரைக்கதை படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.

ஸ்மொக், அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.

மொத்தத்தில் ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!

Sunday, December 15, 2013

Farseer 2 &3

Royal Assassin

உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் மலை ராஜ்ஜியத்தில் தன் தோல்விகளை எண்ணிப்பார்க்கும் ராஜகொலைஞன் ஃபிட்ஸுடனேயே தொலைதிருஷ்டியர் முப்பாக நாவல் வரிசையின் இரண்டாம் பாகத்தை திறக்கிறார் கதாசிரியை ராபின் ஹாப்.

ஆனால் அந்த உடல் நிலையுடனேயே ஃபிட்ஸ் மீண்டும் பக்கீப்பிற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. மர்மமான ஒரு அயர்ச்சியால் வாடும் அரசன் , கரையோர நிலங்களை சூறையாடி மகிழும் செங்கல கொள்ளையர்களை எதிர்த்து நிற்க துடிக்கும்  வெரிட்டி, தன்னிடம் அதிகாரம் வர வேண்டும் என காரியமாற்றும் ரீகல் இவர்களின் மத்தியில் ராஜகொலைஞன் ஃபிட்ஸ் தன் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் தர தயாராக உள்ள விலை என்ன? அது அவனை என்ன நிலைக்கு தள்ளப் போகிறது?

இவற்றிற்கான விடையை தன் ஆடம்பரமற்ற வரிகளில் நாவலில் கொணர்கிறார் ஹாப். காதல், வீரம், தியாகம், விசுவாசம், சதிகள் என்பவற்றின் மத்தியில் தன் முடிவை நோக்கி விரைகிறான் ஃபிட்ஸ். பக்கீப் எனும் இடத்தை விட்டு நகராது அதனுள்ளேயே கதையையும் உணர்வுகளையும் வாசகனுடன் மோத விடுகிறார் ஹாப். அவர் எழுத்துக்களை எல்லாராலும் ரசிக்க முடியாது என்பது தெளிவு. ரசிக்க முடிந்தால் அதன் சுவை இனிது என்பது ஒருவர் பெறும் அறிவு.

காதல் காட்சிகளில் மீள்கூறல் சற்று அயர்ச்சியை தருகிறது. ஹாப்பின் எழுத்துக்களில் மீள்கூறல் அலல்து எழுதல் ஒரு பண்பாகவே இருக்கிறது என்பேன். விலங்குகள் மீதான பார்வையை தன் எழுத்துக்களில் உயர செய்யவும் ஹாப் முயல்கிறார். விலங்கிற்கும் மனிதனிற்குமான உணர்வு சார்ந்த உறவின் வலிமையை அவர் தன் நாவலில் முக்கியமான ஒரு அங்கமாக்கியிருக்கிறார்.

கரையோர நிலங்களை தாக்கியழிக்கும் செங்கல கொள்ளையர்கள், அவர்களால் உணர்விலிகளாக ஆக்கப்படும் அந்நிலவாழ் மனிதர்கள், மேலும் இந்நிகழ்வுகளின் பின்னிருக்கும் மர்மம் இப்பாகத்திலும் ஒரு நீளும் இழையாகவே இருக்கிறது. பட்டத்திற்குரிய இளவரசன் வெரிட்டி செங்கல தாக்குதல்களிற்கு எதிராக எடுக்க விழையும் நடவடிக்கைகள், அவற்றில் ஃபிட்ஸின் பங்கு, இவை வழியாக ஆழமாகும் அவர்களிற்கிடையிலான பிணைப்பு என நகரும் கதையில் ஃபிட்ஸின் விசுவாசம் யாரிற்கானது என்பது கேள்வியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. வெரிட்டியின் மனைவி கெட்ரிக்கன் பக்கீப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு ராணியாக ஆகுவதற்குரிய ஆரம்ப அறிகுறிகளும் நாவலில் சொல்லப்படுகிறது. தொலைதிருஷ்டியர்களின் பரம்பரை சொத்தான மனோமந்திரம் குறித்த புரிதல்களும், அபாயங்களும் விரிவாக ஆரம்பிக்கின்றன. எல்டர்லிங்கை மூன்றாம் பாகத்திலும் ஹாப் காட்டமாட்டார் போலிருக்கிறது.

சிறு வயதில் ஃபிட்ஸை வளர்த்த வுரிச்சிற்கும் ஃபிட்ஸிற்குமிற்கிடையிலான உறவின் உணர்ச்சிகரமான தருணங்கள், ஃபிட்ஸின் தந்தையின் மனைவியான லேடி பேஸன்ஸ், ஃபிட்ஸ் மீது கொண்டிருக்கும் உணர்வுகளுடன் சென்று நெகிழ்வலைகளாக மோதுகின்றன. முதிய ராஜகொலைஞன் சேட் வழமை போலவே மறைவாக இயங்க ராஜாவின் முட்டாளை சுற்றியுள்ள புதிர்கள் விடுபடுமாற்போல இறுகுகிறது. ராஜமுட்டாளின் விசுவாசம் கதையில் மிக சிறப்பாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் வழி செயற்பட ஃபிட்ஸ் விழைந்தாலும் நிகழ்வுகளின் ஆட்டங்களின் விளைவால் அவன் தனித்து எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் எப்படியாக பக்கீப்பையும் அவன் வாழ்க்கையும் மாற்றி அடிக்கிறது என்பதை சலிப்பே இல்லாமல் ஹாப் எழுதுகிறார்.
மெதுவாக நகரும் நாவல் விரைவாக படிக்க தூண்டும் எழுத்தைக் கொண்டிருக்கிறது. உச்சக் கட்டத்தில் வழமை போலவே ராபின் ஹாப்பின் முத்திரை உண்டு. இரண்டாம் பாகத்தின் முடிவில் நான் உடனே தேடியது மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தை.

Assassin's Quest

ஒரு கதை நல்ல கதையாக இருந்தாலும், உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக இருந்தாலும், சர்வதேசரீதியாக விற்பனையில் உச்சங்களை தொட்டு இருந்தாலும் வாசகனின் மனதை நெருங்கி வராத வகையில் அவை வாசகனிற்கு பிடித்தமானவையாக ஆவது இல்லை.

ராபின் ஹாப்பின் எழுத்துக்கள் மிகைபுனைவின் உச்சநிலை என நான் எழுதப் போவது இல்லை. என் வாசிப்பு அனுபவத்தின் படி அப்படியான ஒரு உச்சநிலை என்பது தற்காலிகமானதே. இன்று எமக்கு உச்சநிலையை தரும் ஒரு படைப்பானது காலத்தின் நகர்வில் அதன் உச்சநிலையிலிருந்து கீழிறங்குவது இயல்பான ஒன்றே.

மிகவும் பிரம்மாண்டமான மிகைபுனை கதை வரிசைகளான WOT, ASOIAF போன்றவற்றின் மிகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட படைப்புக்களாகவே ராபின் ஹாப்பின் படைப்புக்கள் இருக்கிறது. ஜோர்டானின் எழுத்துக்களின் கம்பீரமோ, பலமோ அல்லது மார்டினின் எழுத்துக்களின் உக்கிரமோ வன்மமோ ராபின் ஹாப்பின் எழுத்துக்களில் இருப்பது இல்லை. அதேபோல அவர்கள் உருவாக்கிய உலகுகளின் பிரம்மாண்டங்களும், சிக்கலான கதைநகர் களமும் ஹாப்பின் எழுத்துக்களில் காணக்கிடைப்பது இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகைபுனை ரசிகர்களிற்கு அவரின் கதை சொல்லல் பிடிக்குமா என்பதே சந்தேகம்தான். இருப்பினும் அவர் எழுத்துக்கள் என்னை மிகவும் நெருங்கியிருக்கின்றன.

Farseer முப்பாக நாவல் வரிசையின் மூன்றாவது நாவலான Assassins Quest என் வாசிப்பில் ஒரு அருமையான படைப்பு. பிரதான பாத்திரமான ஃபிட்ஸ் சிவாலெரி மிகைபுனை வரலாற்றில் தன்னை ஒரு சிறப்பான பாத்திரமாக நிரூபிக்கும் படைப்பு. இதற்காக ஃபிட்ஸை ஒரு வீர தீர சாகசனாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பின் எப்படி அவன் சிறப்பான பாத்திரமாகிறான் என்பதை நீங்கள் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கதையின் பிரதான எதிர்பாத்திரமான ரீகலின் மரணம் சம்பவிக்கும் விதம் அபாரமான ஒன்று. நீண்ட கதை சொல்லலில் முன்நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் நினைவு மட்டுமே அதன் மர்மத்தை உடனடியாக அவிழ்க்க முடியும்.

ஜோர்டானும், மார்ட்டினும் என்னை ரசிக்க பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஹாப் தன் மிகைபுனைவால் என் உள்ளத்தை உணர்ச்சிக் குவியலாக்கி விட்டார். அசாத்திய பொறுமையும், சிறப்பான எழுத்துக்கள் மீதான நேசமும் மட்டுமே அவர் எழுத்தை படிப்பதற்கு உங்களுக்கு துணை வரக்கூடும்.

Saturday, September 7, 2013

அடிமைகளின் ஆண்டவன்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 13

குருவானவர் மத்தியோவின் கடிதம் கண்டு சான் ஹுவான் மடத்திற்கு விரையும் டெக்ஸ், அங்கு வாழ்ந்திருந்த மூன்று சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொள்கிறார். குருவானவர் மத்தியோ மற்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் கண்ட வண்டி ஓட்டியான சேவியர் ஆகியோர் வழங்கும் தகவல்களை அடுத்து டெக்ஸ் தன் சகா கார்சன் சகிதம் நோகலெஸ் நகரில் தன் விசாரணையை ஆரம்பிப்பதற்காக புறப்படுகிறார்....

டெக்ஸ் பரட்டை அல்ல. எந்த வேலையும் ஆற்றாது கள்ளியின் நிழலில் கவிழ்ந்து கிடந்து மதுப்புளிப்பின் கனாக் காண! டெக்ஸிற்கு நின்றால் நிமிர்ந்தால் நடந்தால் இடறினால் 1008 வேலை இருக்கிறது. தமிழில் வேறு உயிரை எடுப்பது போல பேசியாக வேண்டிய தார்மீக கடமை வேறு!! உதிரியாக. ஒரு கதை முடிவதற்குள் டெக்ஸ் அடுத்த விசாரணைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேரமே நேரத்தை பார்த்து தலையை பிறாண்ட வைக்கும் டெக்ஸின் டைம்டேபிளில் குருவானவர் மத்தியோவிற்கும் இடம் இருக்கிறது என்றால் அவர் டெக்ஸிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதை உலகெங்குமிருக்கும் டெக்ஸின் ரஸிக சமுத்திரம் இக்கதையை படிக்காமலே சொல்லி விடும். குருவானவர் மத்தியோ எவ்வாறு டெக்ஸின் விஐபி பட்டியலில் இடம்பிடித்தார் என்பதை டெக்ஸே கார்சனிடம் சான் ஹூவான் மடத்திற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கூறுவார். அமெரிக்க மண்ணின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சென்று மடங்களை அமைத்த துறவிகள் மதத்தை பரப்புவதோடு மட்டும் நின்று விடாது வழியற்ற மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதிலும் பங்குபற்றியதை டெக்ஸ் கார்சனிற்கு கூறும் கதை அதனுள் கொண்டிருக்கும்.

கதையில் இரு குருவானவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒருவர் மத்தியோ, அடுத்தவர் எலிசியோ. ஒருவர் கதையை ஆரம்பித்து வைப்பதிலும் அடுத்தவர் கதையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த செய்வதிலும் உதவுவார்கள். ஆக TEX Special n° 17 ஆக க்ளோடியோ நிஸ்ஸியின் எழுத்தில் உருவாகியிருக்கும் Marchands D'Esclaves கதை, மதம் பரப்ப சென்ற குருவானவர்களிற்கான ஒரு சிறு சமர்ப்பணம் என்றே எண்ண வைக்கிறது. மதம் பரப்பும் செயல் நீடிக்க வேண்டும், தம் அரவணைப்பின் கீழ் வந்த வழியற்றவர்களை நடுத்தெருவில் வீசி விட்டு செல்லக்கூடாது என்பதற்காக இந்த துறவிகள் சென்றிருக்ககூடிய சில எல்லைகளை தன் கற்பனையில் வடிக்கிறார் நிஸ்ஸி. இதில் எலிசியோ செல்லும் எல்லை சற்று மிகையான ஒன்றாக தோன்றினாலும் கதைக்கு அது சுவை தருவதாகவே இருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

டெக்ஸின் விசாரணைகள் நோகலெஸில் ஆரம்பிக்கும்போது அவரின் கேள்விகளிற்கான விடைகள் இலகுவில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விடைகள் உண்மையாக அமைவது இல்லை. இது குறித்து மத்தியோ ஏற்கனவே தந்த தகவல்கள் டெக்ஸின் மனதில் காதல் ஹைக்கூவாக நகர்ந்து அவர் கோபத்தின் டிகிரியை எரிமலையொன்றின் ஆழ்மனதின் ஆணிவேரின் கொதிப்பிற்கு இட்டுச் செல்லும் வேளைகளில் கதையில் அதிரடி வெடிக்கிறது. உண்மை வேண்டும் எனில் டெக்ஸ் தன் விசாரணை முறைகளின் எல்லைக் கற்களை இடம் மாற்றுவார். அவர் கற்களை நகர்த்தும் முறைகளிற்கேற்ப உண்மைகளும் இடம் மாறிக் கொள்கிறது. இருப்பினும் மிகவும் தந்திரமான மனிதர்களின் திட்டங்களையும் டெக்ஸ் நோகலெஸில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தந்திரமான மனிதர்களையும் அவர் தன் தந்திரத்தால் மயக்கிடும் அவசியமிருக்கிறது. ஆனால் டெக்ஸின் தந்திரம் பலிக்காது போகும்போதுதானே கதையில் விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள முடியும். டெக்ஸின் கணிப்புகளிற்கு மாறாக கதையில் திருப்பங்கள் வரும்போது கதை டெக்ஸின் குதிரையின் பின்புறத்தில் பதமாக ஒரு தட்டு தட்டி வேகத்தை அதிகரிக்க வைக்கிறது.

நோகலெஸிலிருந்து மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகரான ஹெர்மொசிலோவை டெக்ஸும் கார்சனும் சென்று சேர்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் திறமைக்கு சமனான பலம் கொண்டவையாக இருக்கின்றன. சில தந்திரங்களில் புராண நெடி அடித்தாலும் டெக்ஸிற்காக அவற்றை நாம் மன்னிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். தான் செய்யும் காரியம் குறித்து எந்த ஆதாரமும் இருக்ககூடாது என இயங்கும் ஒரு மனிதனிற்கு எதிராக டெக்ஸும் கார்சனும் உயிரைப் பணயம் வைத்து போராட வேண்டியிருக்கிறது. ஹெர்மசிலோவில் ஒரு பத்திரிகையாளர் சொல்வார் ... டெக்ஸ் நீங்க எப்ப மெக்ஸிக்கோ வந்தாலும் பத்திரிகைகளில தலைப்பு செய்தி ஆகிடுறீங்க .... உண்மைதான் ஹெர்மசிலோவின் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெறும் துப்பாக்கி மோதலில் தோட்டாக்கள் உயிர்வாங்கும் கவிதை எழுதுகின்றன. முதல் பரிசு வெல்பவர் டெக்ஸ். தோற்பதும் அவர்தான். அவர் தேடி வந்த தகவலும் குறைப்பிரசவமாக தன் உயிரை விட்டு விடுகிறது. இந்தவேளையில்தான் எலிசியோ கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை உருவாக்குபவராக உருப்பெறுகிறார். கதையின் நீட்சியில் எலிசியோ பாத்திரத்தின் உறுதி தெளிவாக்கப்பட்டாலும் இறுதியில் டெக்ஸின் உறுதி வெல்வதாக காட்டப்படுகையில் எலிசியோ பாத்திரம் மீது உருவான எதிர்பார்ப்பு சற்று குறையவே செய்யும். இறைவனின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் உறுதி ஒரு உயிரை எடுத்தல் எனும் எல்லைக் கோட்டில் தயங்கும் எனில் அங்கு இறைவன் அனுப்பி வைத்த ஆண்டவனாக இருப்பவர் எங்கள் நாயகன் டெக்ஸ்தான்.

உலகில் சமூகங்கள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே அடிமைகளும் இருந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள். கதையில் ஒரு தருணத்தில் பிரதான எதிர்பாத்திரமான டான் மானுவல் ஒப்ரகொன்..... லாபம் அதிகரிக்கிறது எனில் எந்த முதலாளியும் அது எப்படி வருகிறது என்பதை பொருட்படுத்தமாட்டான்.... எனும் அற்புதமான உண்மையை சொல்வான். இதில் எந்த ஊரிலும் பேதம் இருக்காது. இன்றைய நாட்களிலும் அதன் சுயரூபத்திலும் அல்லது மாற்றுரூபங்களிலும் மனிதர்களின் லாபங்களிற்காக அடிமைத்தனம் என்பது வாழ்ந்தே வருகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அது அலங்கார சாயங்களை பூசியவாறே வழியற்றவர்களை உறிஞ்சுகிறது. அதன் உதவியால் கொழுக்கும் மனிதர்களின் அதிகார பலங்கள் அவற்றை ஆண்டாண்டு காலமெல்லாம் வாழ வைப்பதாகவே இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் நான்கூட ஒரு அடிமைதான்!!

பைபிளில் எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து மோயீசன் மனிதர்களை மீட்டதாக ஒரு கதை இருக்கிறது. மீட்கப்பட்டு சென்ற மனிதர்கள் இன்று மற்றவர்களிற்கு சுதந்திரத்தையா வழங்கி விட்டார்கள் என இன்றைய நிலையில் கேட்டுப்பார்த்தால் வேடிக்கையான ஒரு பதிலை நாம் உருவாக்கலாம். ஆள்பவன் என்பவன் இருக்கையில் ஆளப்படுபவன் என்பவனும் இருந்தேயாக வேண்டும் அல்லவா. ஆனால் பைபிளில் மோயீசனைப் போல இந்த உலகிலும் அவ்வப்போது சில மனிதர்கள் உருவாகுவார்கள். இக்கதையில் மோயீசனாக டெக்ஸ். அவர் எவ்வாறு செவ்வனான திட்டங்களுடன் இயங்கும் டான் மானுவல் ஒப்ரகொனை முறியடிக்கிறார் என்பதை டெக்ஸ் கதைகளின் சகல அம்சங்களுடனும் இக்கதை வாசகர்களிடம் எடுத்து வருகிறது.

கதையின் சித்திரப் பொறுப்பு மிகப்பிரபலமான ஸ்பெயின் கலைஞர் Manfred Sommer இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கதைகளிற்கு வரைவதை குறைத்துக் கொண்டு ஓவியக் கலையில் தன் திறமையை கலந்து கொண்டிருந்த மான்ஃப்ரெட் சமர் இக்கதைக்கு பொனெலியின் வேண்டுகோளின் பேரில் வரைந்ததன் பின் மீண்டும் சித்திரக் கதைகளிற்காக வரையும் ஆர்வம் தூண்டப்பெற்றார். பக்கங்களில் தன் பெயரை அழகான ஒப்பமாக பதிப்பதோடு மட்டும் நின்று விடாது தன் திறமையால் டெக்ஸ் கதையின் சித்திரங்களை அழுத்தமாக பதித்திருக்கிறார் சமர். அவர் படைத்திருக்கும் டெக்ஸினதும், கார்சனினதும் கம்பீரங்களை கண்ணயர பார்த்து மகிழலாம். அதுவும் சில காட்சிகளில் இரு ரேஞ்சர்களிலும் அவர்களின் வயதிற்கு ஒத்துவராத வாலிபம் துள்ளி விளையாடுகிறது. எதிர்பாத்திரமான டான் மானுவலை சமர் உருவாக்கி வடித்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் க்ளாஸான ஒரு எதிர்பாத்திரம் அவன். மெக்ஸிக்கர்கள், கதை பயணிக்கும் பகுதிகளின் நிலவியல், அடிமைக் களம், சண்டைக்காட்சிகள் என பிளந்து கட்டியிருக்கிறார் சமர். நிஸ்ஸியின் வேகமான கதையும் சமரின் கம்பீரமான சித்திரங்களும் கலந்து கட்டி அடிக்கும் இக்கதை டெக்ஸ் ரஸிக ரஞ்சன சபா டாப் லிஸ்டில் தன் இடத்தை சிரமமின்றி தேடிக்கொள்ளும்.


Sunday, September 1, 2013

செமினொல்



வதனமோ சந்த்ரபிம்பமோ - 12 

லூசியானாவில் அமைந்திருக்கும் ஃபோர்ட் பிளிஸில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மரணதண்டனைக் கைதியான ஓச்சாலாவை டெக்ஸாஸிற்கு மீள்விசாரணைக்கு இட்டு செல்வதற்காக கார்சன் சகிதம் அங்கு வருகை தருகிறார் டெக்ஸ். தன் பாதுகாப்பின் கீழ் அழைத்து செல்ல வேண்டிய நபரான ஓச்சாலா குறித்த தகவல்களை ஃபோர்ட் பிளிஸின் மேலதிகாரியிடம் இருந்து டெக்ஸ் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் லோங் நைஃப் எனும் தன் சகாவின் உதவியுடன் ஃபோர்ட் பிளிஸிலிருந்து தப்பி செல்கிறான் ஓச்சாலா……

பெருமேற்கின் நம்பர் 1 நாயகனான டெக்ஸ், தன் பொறுப்பான பாதுகாவலின் கீழ் ஒரு கைதியை எங்காவது இட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது எனும் தகவலிலேயே டெக்ஸின் பாசமிகு வாசக சமுத்திரமானது டெக்ஸ் செல்லப்போகும் வழியில் காத்திருக்கும் அதிரடிகளை எண்ணி ஆவல் கொள்ளும், நுரையலை கிளப்பி ஆர்ப்பரிக்கும். அப்பாசச் சமுத்திரத்தின் கனவானது ஓச்சாலா, கோட்டைக் காவலிலிருந்து தப்பியோடியிராவிடில் நிறைவேறியிருக்கவேகூடும். ஆனால் இத்தாலிய Fumetti வரலாற்றில் Storia del West எனும் பெருந்தொடர் உருவாக காரணமாக இருந்த கதாசிரியரான Gino D’Antonio இக்கதையின் சுவாரஸ்யத்திற்கு சுவையேற்றும் விதமாக ஓச்சாலாவை தேடி வேட்டையாடும் கதையாக TEX Special n°22 ன் Seminoles ஐ உருவாக்கி அதை டெக்ஸின் வாசக சமுத்திரத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.
இரு கொலைகளிற்காக மரணதண்டனை வழங்கப்பட்ட கைதியொருவனை அமெரிக்க ஜனாதிபதி வழங்கும் அழுத்தத்தின் பேரிலேயே டெக்ஸாஸ் நோக்கி அழைத்து செல்ல வருகிறார் டெக்ஸ். ஒரு சாதாரண செவ்விந்தியனிற்கு வழங்கப்பட்ட தண்டனையை டெக்ஸாஸில் மீள்விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன, இதில் அமெரிக்க சனாதிபதியின் தலையீட்டிற்கு காரணம் என்ன எனும் கேள்விகள் டெக்ஸ் மனதில் எழாமல் இல்லை. ஆனால் தனது மேலதிகாரிகளினதும், ஜனாதிபதியனதும் உத்தரவுகளை அவரால் உடனடியாக மறுத்துவிட முடிவது இல்லை. தன் பாதுகாப்பின் கீழ் டெக்ஸாஸ் செல்ல வேண்டிய ஓச்சாலா தன் கழுகுக் கண்கள் முன்பாகவே பெருநிலப்புல்வெளி முயல்போல் தப்பியோடும்போது டெக்ஸிற்கு இருப்பதும், தெரிந்ததும் ஒரே வழிதான். மனித வேட்டை. டெக்ஸ் தப்பி ஓடிய கைதியை உயிருடன் பிடித்து நீதியின் முன்பாக நிறுத்த விரும்புகிறார். ஆனால் ஓச்சாலாவின் உயிர் தன் கைகளினாலேயே போகவேண்டும் எனும் முனைப்புடன் ஓச்சாலாவை வேட்டையாடக் கிளம்புகிறான் இன்னொருவன். நாய்மனிதன் என பட்டப்பெயர் பெற்ற அம்மனிதனின் பெயர் லாபார்ஜ்.
பூர்வகுடிகளின் இனவழிப்பானது உக்கிரம் பெற்றபோது அவர்கள் தம் வாழ்நிலங்களிலிருந்து விலகி தாம் பாதுகாப்பாக வாழக்கூடிய பகுதிகளில் புகலிடம் தேடிக் கொண்டார்கள். இவ்வாறாக ஃப்ளோரிடாவின் சதுப்புநிலக்காட்டுப் பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வந்து குடியேறிய க்ரீக் பூர்வகுடிகளின் வழிவந்தவர்களே செமினோல்கள். செமினோல்கள் என்பதற்கு ஓடிச் சென்றவர்கள், கட்டுக்கடங்காதவர்கள், சுதந்திரிகள் எனும் அர்த்தங்கள் உண்டு. Everglades எனப்படும் இந்த சதுப்புவனப் பகுதியானது அடர் தாவரச் செழுமையும், நிலப்பரப்பைவிட அதிகமான நீர்ப்பரப்பையும், அபாயகரமான இரைகொல்லிகளையும், புதைமணல் கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த, மனிதர்களால் இலகுவாக உள்நுழைந்துவிட முடியாத ஒரு வனமாக இருந்தது. இயற்கை தன் நுட்பத்தால் உருவாக்கிய இந்த பாதுகாப்பு வலயத்தினுள்ளே சென்று புகலிடம் தேடிக் கொண்டவர்கள் செமினோல்கள் மட்டுமல்ல அமெரிக்க தெற்கின் நிலக்கிழார்களின் கீழ் அடிமைகளாக இருந்து விடுதலை வேண்டி தப்பி சென்ற கறுப்பினத்தவர்களும் எவெர்கிலேட்ஸ் சதுப்பு வனத்தினுள் ஆழமாக சென்று மறைந்து வாழ்ந்தார்கள். இவ்வாறாக தப்பி ஓடி எவெர்கிலேட்ஸினுள் தஞ்சம் புகுந்த கறுப்பினத்தவர்களை செமினோல்கள் தம்மிடையே வரவேற்று அவர்களையும் தங்களில் ஒருவராக அங்கீகரித்தார்கள்.
semi1இவ்வாறாக ஒதுங்கி இயற்கையின் பாதுகாப்பினுள் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளையும் தேடியழிக்க ராணுவம் நடவடிக்கைகளில் இறங்கியபோது அவர்களின் பிரதான எதிரியாக உருப்பெற்றது எவெர்கிலேட்ஸ் எனும் இந்த சதுப்புவனமே. இவ்வனப்பகுதியில் வழியைக் கண்டுபிடிப்பது ராணுவத்திற்கு மிகச்சிரமமான ஒன்றாக இருந்தது. வனத்தின் அடர்வுக்குள் மறைந்திருந்து தாக்கி மறையும் பூர்வகுடிகள் கூடவே இரைகொல்லிகள், புதைமணல்கள், எதிர்பாராமல் வந்து தாக்கும் நோய்கள் என அச்சூழலே அவர்களை எதிர்த்து தாக்கியது. அவர்கள் எதிர்கொண்ட இவ்வகையான தடங்கல்களை தவிர்க்கும் பொருட்டு இச்சதுப்புவனத்தினூடாக தம்மை சிரமங்கள் இன்றி வழிநடாத்தி செல்லக்கூடிய வழிகாட்டிகளின் சேவைகளை நாடிச் சென்றார்கள். அவ்வகையான வழிகாட்டிகளில் திறமையும், குரூரமும் ஒருங்கே படைத்த ஒருவனே லாபார்ஜ்.
வழிகாட்டிகளில் பெரும்பாலானவர்கள் ராணுவம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி அவர்களை ஆபத்துகளை விலக்கி அழைத்து செல்பவர்களாகவே இருப்பார்கள். மோதல்கள் உருவாகும் சமயங்களிலே அவர்கள் ராணுவத்தின் பக்கமாக நின்று மோதுவார்கள். ஆனால் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கும் முன்பாகவே பூர்வகுடிகளின் தலைத்தொலிகளை வேட்டையாடி அதில் இன்பம் காண்பவனாக இருந்தவன் லாபார்ஜ். பூர்வகுடிகளை கொன்றொழிப்பதிலேயே அவன் மகிழ்ச்சி உதயமாகிறது. தன் இளமையில் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கி அவன் அழித்தொழித்த பூர்வகுடிகளின் வாழ்க்கைகள் அதிகமே. இந்த செயலிற்கு துணையாக எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தில் பூர்வகுடிகளை மோப்பம் பிடித்து கண்டறிய அவன் சில நாய்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகத்திறமையாக மோப்பம் பிடிக்கும் இந்நாய்கள் லாபார்ஜின் கட்டளைப்படி மனிதர்களை உயிருடன் குதறிக் கிழித்துப்போடும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. இந்நாய்களுடனான நெருக்கமும், உறவும் லாபார்ஜையும் அந்நாய்களைப் போலவே மோப்பம் பிடிக்க கூடியவனாகவும், நுட்பமாக தடயங்களை தேடிச் செல்லக்கூடியவனாகவும் படிப்படியாக உருவாக்கியது. அந்நாட்களில் குரூரத்தில் சிறந்தது நாய்களா அல்லது லாபார்ஜா எனும் கேள்விக்கு விடையறிவது இலகுவான ஒன்றாக இருந்ததில்லை. கதையின் ஒரு தருணத்தில் செமினோல்களின் கிராமத்தில் நாய்களே இல்லை எனும் படிமம் முன்வைக்கப்படும்.
sem1டெக்ஸின் கதைகளின் எதிர்பாத்திரங்கள் எமகாதகர்களாக இருக்கின்ற வேளையில் கதைகளின் வேகமும், விறுவிறுப்பும் கணிசமான அளவில் அதிகரித்துவிடும். லாபார்ஜ் தன் குரூரம் வழியே டெக்ஸ் வாசகர்களின் மனதில் தன்னை நிறுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம். ஓச்சாலா மீது அவன் கொள்ளும் கொலைவெறி மிகவும் வேடிக்கையான ஒன்றாகவே கதையின் ஆரம்பத்தில் வாசகர்களிற்கு தோற்றம் தரும். ஓச்சாலா கைது செய்யப்படக் காரணமானவன் லாபார்ஜ்தான். அந்த சம்பவத்தின்போது லாபார்ஜை நோக்கி ஓச்சாலா துப்பாக்கி பிரயோகம் செய்கிறான். லாபார்ஜுடன் கூடவே சென்றிருந்த ராணுவவீரர்கள் ஓச்சாலாவின் துப்பாக்கி பிரயோகத்தை தற்பாதுகாப்பு என்பதாக கருதுகிறார்கள். ஆனால் லாபார்ஜோ அது தன்மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் என்பதாக தீர்மானித்துக் கொள்கிறான். அக்கணம்முதலே ஓச்சாலா மீதான கொலைவெறி லாபார்ஜினுள் ஒரு மூர்க்கமான விலங்குபோல நடைபயில ஆரம்பிக்கிறது. கோட்டை காவலிலிருந்து ஓச்சாலா தப்பிச் சென்று விடும்போது அவனைத் தேடி டெக்ஸிற்கு முன்பாக செல்பவர்களில் லாபார்ஜும் இருக்கிறான். ஒரு தருணத்தில் ராணுவத்தினரை உதறிவிட்டு ஓச்சாலாவை தன் தனிப்பட்ட பிரச்சனையாக கொண்டு தனியாகவே ஓச்சாலாவை வேட்டையாடும் முயற்சிகளை ஆரம்பிக்கிறான்.
வயதில் முதுமை சற்றே வந்தேறி அமர்ந்துவிட்டாலும் கதையில் டெக்ஸிற்கு பெரும் தலைவலியாக அமைவது லாபார்ஜ்தான். ஆனால் கதையின் வில்லன் லாபார்ஜ் இல்லை. டெக்ஸ்தான். லாபார்ஜிற்கு அவர் செய்யும் செயல்களையும் அவற்றில் ஒலிக்கும் தொனிகளையும் அவதானிக்கும்போது அவரை ஒரு நாயகன் எனச் சொல்ல முடியாது. வயதான நிலையில், தனக்கு துணையாக நாய்களும் இல்லாத நிலையில், ஓச்சாலாவைவிட டெக்ஸை கொல்லும் வெறி தன்னுள் நீர்மட்டம்போல உயர உயர பெருமேற்கின் பெருநாயகனான டெக்ஸின் மிரட்டல்கள் முன் மடிந்துவிடாது மனவுறுதியுடன் தன் இலக்கு நோக்கி குரூரமிழக்காது பயணிக்கும் லாபார்ஜ் இக்கதையின் உச்ச நட்சத்திரம் என்றால் அது மிகையல்ல.
காவலில் இருந்து தப்பியோடிய ஓச்சாலா ஒரு செமினொல். எனவே அவன் லூசியானாவிலிருந்து எவெர்கிலேட்ஸ் நோக்கி விரைகிறான். லாபார்ஜ் அவனை பின் தொடர்வதை தடுப்பதோடு அவனை தான் பின் தொடர்வதையும் டெக்ஸ் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தின் ஆழமான பகுதியில் வாழ்ந்திருந்த ஓச்சாலா லூசியானா நோக்கி வந்ததிற்கும் அவன் அங்கு ஆற்றிய கொலைகளிற்கும் காரணம் என்ன எனும் கேள்வி டெக்ஸ் மனதில் எழுகிறது. அதற்கான காரணங்களை தன் கதையோட்டத்துடன் சலிப்பின்றி விபரிக்கிறார் கதாசிரியர் ஜினோ ட அண்டோனியோ. அது என்ன என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளும் தருணம் யார் யாரால் வேட்டையாடப்படுகிறார்கள் எனும் கேள்வியின் விடையானது மெல்ல மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும்.
டெக்ஸ் வாழ்ந்திருக்கும் மேற்கானது தான் உருவாக்கிய மேற்கிலிருந்து வேறுபட்ட ஒன்று எனச் சொன்னவர் இக்கதையின் கதாசிரியரான ட அண்டோனியோ. அவரின் Storia del West பெருமேற்கு குறித்த சித்திரக்கதை படைப்புக்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 1967 களில் அவர் ஆரம்பித்த மேற்கின் கதை எனும் அத்தொடர் பல சித்திரக் கலைஞர்களின் திறமையான ஒத்துழைப்புடன் 1980 வரை தொடர்ந்து நிறைவுற்றது. ஏறக்குறைய 7500 பக்கங்கள் கொண்ட தொடரிது. எனினும் பொனெலியின் வேண்டுகோளிற்கிணங்கி ட அண்டோனியொ உருவாக்கியிருக்கும் இந்தக் கதை டெக்ஸ் கதைகளின் வழமையாகிய மிகையான தர்க்க மீறல்களை தன்னில் இயன்றளவு விலக்கி கொள்ள முயன்றிருக்கிறது ஆனால் முழுமையாக அல்ல. ஓச்சாலா, லாபார்ஜ் போன்ற பாத்திரங்களை அவர் டெக்ஸை விட மிக சிறப்பானவைகளாக உருவாக்கி இருக்கிறார். டெக்ஸை ஒரு முரட்டு மனிதனாக காட்டுவதில் ட அண்டோனியா வெற்றி பெற்றிருக்கிறார். கார்சனிற்கு இக்கதையில் அதிக பங்கு கிடையாது. கதையின் ஆரம்ப பகுதியிலேயே காலில் அடிபட்டவராக ஃபோர்ட் பிளிஸில் சிகிச்சை பெற சென்று அங்கு தங்கி விடுகிறார் அவர். கார்சனின் இடத்தை இட்டு நிரப்ப யேசு எனும் வழிகாட்டியை தன் உதவிக்கு சேர்த்துக் கொள்கிறார் டெக்ஸ். அடர் சதுப்புவனமான எவெர்கிலேட்ஸில் டெக்ஸிற்கு வழிகாட்டியாக செயற்படுபவன் யேசு எனும் கறுப்பு இனத்தவனே. ப்ளோரிடாவின் சதுப்புக்காடுகளினுள் டெக்ஸ் ஏற்கனவே டிஸ்கோ டான்ஸ் ஆடியிருந்தாலும் லாபார்ஜிற்கு எதிராக தனக்கு ஒரு துணை தேவை என்பதை அவர் கதையில் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.
sem2எவெர்கிலேட்ஸின் சிட்டிசனான ஒரு ராட்சத முதலையுடன் டெக்ஸ் கட்டிப்பிடித்து போடும் சண்டை பசுபிக் ரிம் கைஜு மோதல் காட்சிகளை மிக்கி மவுஸ் கார்ட்டூன் நிலைக்கு படியிறக்கி விடுகிறது. இச்சண்டைக்காட்சியை பார்த்த ஒரு கைஜு இந்த மவராசான் கிட்ட நான் அடிபடனும், அவர் கைல நான் சாவனும் என தன் உளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆற்றில் மிதந்தபடியே ராட்சத முதலை டெக்ஸ் நீ ஆம்பளயா இருந்தா உள்ள ஒத்தைக்கு ஒத்தை வாடா என சவால்விட பதிலுக்கு டெக்ஸ் விடும் பஞ்ச் டயலாக்கில் சுனாமிகளை உருவாக்ககூடிய ஐந்து பூமியதிர்ச்சிகளின் சக்தி அடங்கி அதிர்ந்து எவெர்கிலேட்ஸையே ஆடச்செய்கிறது. அப்புறம் அந்த முதலைக்கு என்ன ஆச்சு என நீங்கள் உங்கள் மனதில் கேள்வி எழுப்பினால் இதுவரையில் தலைவர் டெக்ஸின் கதைகளை படித்திராத அபாக்கியசாலிகள் நீங்கள் என்பது இங்கு உறுதியாகிறது.
ட அண்டோனியோ எழுதியிருக்கும் கதையின் முக்கிய திருப்பங்கள் நிகழும் எவெர்கிலேட்ஸ் பகுதிகளை அப்படியே வாசகரிடம் சித்திரங்களில் வழங்கியிருப்பவர் Lucio Filippucci. மர்ம மனிதன் மார்டின் கதைகளிற்கு சித்திரங்களை வரைபவர்களில் ஒருவர் இவர். மிகத் தெளிவான கோடுகள் வழியாகவும் கறுப்பு, வெள்ளை வண்ணங்களின் செறிவு வேறுபாடு, ஒளிசேர்முறை வழியாகவும் சிறப்பான சித்திரங்களை அவர் இக்கதைக்கு வழங்கியிருக்கிறார். அதுவும் எவெர்கிலேட்ஸ் பகுதிக்குள் கதை நுழைந்துவிட்ட பின்பாக பின்னி எடுத்து இருக்கிறார் மனிதர். அடர்காட்டின் தாவரச்செழுமையை ஊடறுத்துக் கொண்டு ஒளிப்பட்டையாக நீளும் சூரியன் வாசகர் மனதில் இலகுவாக இடம் பிடிக்கிறான். சதுப்புவனச்சூழலை அவர் வரைந்து வழங்கியிருக்கும் திறமையில் ஒரு சில கணங்கள் நிலைத்து அதில் அவர் சேர்த்துக் கொண்டிருக்கும் தகவல்களையும் அதற்கு பின்பாகவுள்ள அவர் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தெளிவாக ஒருவரால் அவதானித்திட முடியும். லாபார்ஜ் எனும் பாத்திரத்திற்கு ஃபிலிபூஸ்ஸி உயிர் தந்திருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக அவனது முகம். கொலைவெறி நடனமிட, அவன் முகத்தில் ஏளனமாக நளினக்கோலமிடும் குரூரமும் அவன் முகபாவனைகளும் வாசகர்கள் நினைவில் சிறிது காலம் நிலைக்கவே செய்யும். செமினோல் பூர்வகுடிகள், அவர்கள் வாழிடங்கள் போன்றவற்றையும் நுட்பமான தகவல்களுடன் அவர் சித்திரங்களாக உருவாக்கியிருக்கிறார். சித்திரங்களும், கதையும் இணைந்து டெக்ஸின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அரிதான கதைகளில் செமினோலிற்கும் இடமுண்டு.