
பிரான்சு தேசத்தின் ஒப்பற்ற நாடக நடிகையான ஸாரா பெர்ன்[ஹா]ஆர்ட், ஐரோப்பிய கலாரசிகர்களின் உள்ளக் கோவில்களில் குடியிருந்த ஒரு கலைத்தேவதையாவார். ஸாராவின் கலைச்சேவையின் எல்லைகளை விரிவாக்க விரும்பும் கலை ஏஜெண்டான ஜாரெட், அமெரிக்காவில் ஸாராவின் கலைச்சுற்றுப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறான். அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்கும் கலைப்புயலின் சூறாவளிப் பயணத்தில், அவளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக அமெரிக்க ராமராஜன் லக்கி லூக்கை நியமிக்கிறார் ஜனாதிபதி ரதர்ஃபோர்ட் ஹேய்ஸ் [ ஆட்சிக்காலம்.. 1877-1881]….
இப்பதிவின் முதல் வரிகளில் கூறியிருப்பது எவ்வளவு நிஜமானதோ அவ்வளவு நிஜமானது ஸாரா பெர்ன்ஹார்ட் எனும் பாத்திரமும். அவரது நடிப்புத் திறமையில் தம் மனதை பறி கொடுத்த இதயங்கள் ஏராளம் ஏராளம். 1844ல் பாரிசில் பிறந்தவர் ஸாரா. நடிப்புத் துறையில் பிரபலமாகும் முன்பாக தன் அழகையும் திறமைகளையும் சிருங்கார சேவைக்கு அள்ளி வழங்கியிருக்கிறார் அவர்.
ஸாராவிற்கு கலைஞர்கள், அரசியல் புள்ளிகள், இலக்கியவாதிகள், பிரபலங்கள் என எக்கச்சக்கமான காதல் உறவுகள் இருந்திருக்கிறது. விக்டர் ஹ்யூகோவிற்கும் ஸாராவிற்குமிடையில் காதல் இலக்கியம் ஓடியதாக ஒரு கிசுகிசு உண்டு. தன் காதல் உறவுகளில் அவர் ஆண், பெண் என்ற பேதம் பார்த்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
பிரேதப் பெட்டி ஒன்றினுள் உறங்குகிறேன் என்று கூறி பெரும் சர்ச்சையை உருவாக்கிய ஸாரா, அதனை போட்டோக்களாகவும், போஸ்டு கார்டுகளாகவும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியவர். அதேபோன்ற தீவிரம் அவரது கலைச்சேவையிலும் இருந்தது. நோயொன்றின் பின்னர் ஸாராவின் கால் ஒன்றை அகற்றியாக வேண்டிய கட்டாயம் உருவானது. மேடை நாடக கலைஞர்களிற்கு வதனம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்களின் கால்களும் முக்கியமானவையே. முடவன் வேடம் போடுவதானலும் கால்கள் வேண்டும் என்பதை நாம் இங்கு மறந்து விடலாகாது. சிகிச்சையின் பின்பாக ஒரு கால் அகற்றப்பட்டாலும் நாடக மேடைகளில் இருக்கைகளில் அமர்ந்த நிலையில் அம்மணி ஸாரா நடிப்பில் வெளுத்து வாங்கினார். அப்போது அவரின் வயது 71 ஆகும்.
ஒரு சமயம் அமெரிக்க கலைச் சுற்றுப் பயணத்தின்போது, அரங்கில் இருந்த கலாரசிகர்களின் கலையுணர்வுகள் சுனாமி அளவிற்கு சென்றுவிட அரங்கில் கலையுணர்வுகளின் இரைச்சல் அதிகமாகிவிட்டிருக்கிறது. இது நாடகத்தை தொடர்ந்து நடாத்த இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்த ஸாரா, இப்போது நீங்கள் அமைதியாகாவிடில், இரண்டாம் அங்கத்தில் நான் இறந்துவிடுவேன் என கலாரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஸாராவின் மேல் மயங்கியிருந்த அந்த கலைச்சுனாமி அமைதியானது. இது ஸாரா, தன் ரசிகர்கள் மீது கொண்டிருந்த பலமான கவர்ச்சிப்பிடிக்கு ஒரு சிறிய உதாரணமாகும்.
Sarah Bernhardt எனும் தலைப்புக் கொண்ட லக்கி லூக் சாகசமானது 1982ல் முதலில் வெளியாகியது. இது லக்கி லூக்கின் ஐம்பதாவது ஆல்பமாகும். சித்திரங்களை மொரிஸ் வரைய, கதை இலாகவை Xavier Fauche மற்றும் Jean Léturgie ஆகியோர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
ஸாரா பென்ஹார்ட்டின் அமெரிக்க விஜயமானது, கலாரசிகர்களின் அதீத வரவேற்பையும், அறக்காவலர்களின் அபாரமான எதிர்ப்பையும் கிளப்புகிறது. அறக்காவலர்களின் சீற்றம், ஏதேனும் விபரீதமான செயல்களாக உருவெடுத்துவிடலாம் எனும் அச்சத்தினாலேயே அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் லக்கிலூக்கை ஸாராவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கிறார்.
அமெரிக்க ஜானாதிபதி அஞ்சியது போலவே ஸாராவின் கலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டைகள் வந்து சேர்கின்றன. ஸாரா பயணம் செய்யும் ரயில் பெட்டி கழற்றி விடப்படல், பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மாயமாதல், அவர் பயணம் செய்யும் ரயில் வண்டி குண்டு வைத்து தகர்க்கப்படல், ஸாராவை ஆற்றில் மூழ்கடிக்கும் முயற்சி, ஸாரா பயணிக்கும் படகில் தீ வைத்தல், ஸாரா குழுவினரை செவ்விந்தியர்களிடம் மாட்டி விடுதல்.. இவ்வாறான பல தடைகளை ஸாரா தன் கலைப்பயணத்தில் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவங்களில் எல்லாம் நகைச்சுவையின் அளவு ஸாரா பெர்ன்ஹார்டின் நடிப்புத் திறமையின் அளவிற்கு இல்லை என்பது வேதனையானது.
விளம்பரப் பிரியனும், செவ்விந்தியர்களிடம் கூட ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதில் விற்பனனுமான ஸாராவின் ஏஜெண்டான ஜாரெட், பழக்கேக்கு ஒன்றை பக்குவமாக உருவாக்கத் தெரியாமல் திணறும் சமையல்காரன் ச்சுய்னார், ஸாராவின் மீது மையல் கொண்ட நீராவிக் கப்பலின் காப்டன், தொழிலதிபர் ஸ்மித், குத்து டான்ஸ் புகழ் மேடை மேனகா [Pamela Podium], செவ்விந்திய பெருந்தலைவர் போன்ற பல பாத்திரப் படைப்புக்கள் வழி கதாசிரியர்கள் வாசகர்களை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி அதிக வெற்றி எதனையும் தந்து விடவில்லை. கதையில் சற்று சிரிப்பை வரவழைப்பது ஸாராவிற்கு உதவிகள் செய்வதாக கூறி அவள் பெயரை தன் நிறுவனம் தயாரிக்கும் பெண்களின் உள்ளாடை விளம்பரத்திற்கு தந்திரமாக பயன்படுத்திக் கொள்ளும் ஸ்மித்தின் செயல்களே.
வழமை போலவே லக்கி லூக், ஸாராவின் கலைப்பயணத்திற்கு தடைகளைப் போடும் சூத்திரதாரியை அந்த தடைகளை எல்லாம் வெற்றி கொண்டு இறுதியில் கண்டுபிடிக்கிறார். கதையில் நகைச்சுவை இல்லாது போனாலும் கூட மொரிஸின் சித்திரங்கள் தனியாக கதை கூறி வாசகர்களை சிரிக்க வைக்கும். இந்த ஆல்பத்தில் அது காணாமல் போயிருக்கிறது எனலாம். லக்கிலூக் கதைகளில் சுமாரான கதை ஒன்றாகவே இந்த ஆல்பத்தை என்னால் கருத முடிகிறது. கலைத்தேவதையின் அமெரிக்க சுற்றுப்பயணம் லக்கிலூக்கின் விசிறிகளிற்கு சோளப்பொரி மட்டுமே! [*]
