Showing posts with label Mike Mitchell. Show all posts
Showing posts with label Mike Mitchell. Show all posts

Thursday, July 1, 2010

ஷ்ரெக் 4


தொலைதூர ராஜ்யத்தின் இளவரசியான பியோனாவை திருமணம் செய்து, மூன்று குழந்தைச் செல்வங்களையும் பெற்ற பச்சை அரக்கன் ஷ்ரெக், குடும்ப வாழ்வின் பொறுப்புக்கள் நாள்தோறும் தரும் அழுத்தத்தில், தான் சுதந்திரமான காளையாக கட்டற்று திரிந்து, ரவுடித்தனம் செய்த நாட்களை மனதில் எண்ணி மருகுகிறான். தன் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவன்று பியானாவோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டு, பிறந்தநாள் கொண்டாடங்களிலிருந்து கோபமாக வெளியேறுகிறான்.

இவ்வாறான சமயத்தில் ஷ்ரெக்கின் பாதையில் குறுக்கே வரும் ஒரு துர்மந்திரவாதி , ஷ்ரெக் தன் மனதில் எண்ணி ஏங்கும் வாழ்வை தன்னால் அவனிற்கு வழங்க முடியும் எனக்கூறி, ஒரு ஒப்பந்தத்தில் ஷ்ரெக்கை கையொப்பமிடச் சொல்கிறான்.

துர்மந்திரவாதியின் நைச்சியமான பேச்சில் மயங்கி, மந்திரவாதியின் நயவஞ்சகமான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடும் ஷ்ரெக், அதன் விளைவாக தன் வாழ்கையே தலைகீழாக மாறிவிடுவதை கண்டு அதிர்ச்சியுறுகிறான். இருபத்திநான்கு மணிநேர அவகாசத்தினுள், தான் இழந்துபோன அருமையான வாழ்வை மீட்டெடுக்க போராட ஆரம்பிக்கிறான் பச்சை அரக்கன் ஷ்ரெக்…..

பச்சை அரக்கன் ஷ்ரெக்கை, துர்மந்திரவாதி ஏன் மடக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை சிறிய பிளாஷ்பேக்காக காண்பித்து ஆரம்பமாகிறது Sherek 4 திரைப்படம். இயக்குனர் Mike Mitchell இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தன் குடும்ப வாழ்வில் மனைவி, குழந்தைகளால் வந்து குவியும் பொறுப்புக்கள், நண்பர்களால் வந்து சேரும் அன்புத் தொல்லைகள் மற்றும் முன்னொரு காலத்தில் தன் நிழலைக் கண்டாலே அலறிக் கொண்டோடும் பொதுஜனத்திற்கு தான் ஒரு வேடிக்கை கண்காட்சிப் பொருளாக மாறிவிட்ட அவலம் என சாதாரண ஒரு குடும்ப வாழ்வை வெறுக்கும் ஷ்ரெக்கை பார்க்கும் பல இளம் ரவுடிக் கணவர்கள், அட இது நம்ப கதையாச்சே என்று மனதில் கூறவே செய்வார்கள்.

shrek-4-il-etait-une-fin-2010-15110-1002790572 இவ்வகையான தொல்லைகளிலிருந்து ஒரு நாளாவது விடுதலை கிடைக்காதா என்று ஏங்குபவர்களைப் போலவே ஏங்கும் ஷ்ரெக், தான் விரும்பியது கிடைக்கும் வேளையில், தன் மனைவி பியோனோ மற்றும் தன் நண்பர்களான கழுதை, பூட்ஸ் பூனை ஆகியோர் தன்னை அறியாதவர்களாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான். பியோனாவை அவன் மீண்டும் காதலிக்க வேண்டியிருக்கிறது, கழுதை மற்றும் பூட்ஸ் பூனையிடம் அவன் மீண்டும் தன் நட்பை வெல்ல வேண்டியிருக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் எனும் பழமொழி ஷ்ரெக்கிற்கு தெரியாததால் வந்த வினை இது.

ஷ்ரெக்கை யாரென்று தெரியாது புலம்பும் கழுதையும், அது அடிக்கும் லூட்டிகளும், தான் பால் குடிக்கும் தட்டில், எலியொன்று வந்து பால் குடிக்க அனுமதிக்குமளவிற்கு சோம்பேறியாகி கொழுத்த பூட்ஸ் பூனையும், அதனது ஆக்‌ஷன்களும் சிரிக்க வைக்கின்றன.

ஆனால் படத்தில் மனதை தொடுவது ஷ்ரெக்கிற்கும், துர்மந்திரவாதியை எதிர்த்துப் போராடும் புரட்சித் தலைவியான பியோனாவிற்கும் இடையில் நிகழும் காதல் காட்சிகள். தன்னை யார் என்று அறியாத பியோனாவிடம் ஒவ்வொரு தடவையும் ஷ்ரெக் தன் அன்பையும், காதலையும் வெளிப்படுத்த துடிக்கும் தருணங்களும், வசனங்களும் மனதை நெகிழ வைக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக திரைப்படத்தில் பியோனா பேசும் வசனங்களை கேட்கும் பெண் ரசிகைகள் தம் அருகில் அமர்ந்திருக்கும் காதலர் அல்லது கணவர்களிற்கு ஒரு இடி கொடுப்பது நிச்சயம். பியானோ ஆண்களின் மனச்சாட்சியை தன் வசனங்களால் மனவேதனைப்படுத்தி விடுகிறார். அதேபோல் ஷ்ரெக் க்ளைமாக்ஸ் காட்சியில் பியோனாவிடம் பேசும் வரிகள்.. அடடா..என்ன ஒரு உணர்ச்சிகரமான தருணமது.

shrek-4-il-etait-une-fin-2010-15110-1245994063 சூன்யக்காரிகளின் டிஸ்கோ பார்ட்டி, பச்சை அரக்கர்களின் குரூப் டான்ஸ் என்பன ரசிக்க வைக்கின்றன. ஆனால் சூன்யக்காரிகள், துர்மந்திரவாதி, குழல் ஊதும் கண்ணன் [Pied Piper], ஆகிய பாத்திரங்கள் மனதைக் கவர தவறுகின்றன.

ஷ்ரெக் தொடரை நிறைவு செய்வதாக கூறும் இத்திரைப்படத்தில் அனிமேஷன் மற்றும் கதை இலாகாக்களும் ஷ்ரெக்கைப் போலவே வாழ்க்கையில் சலிப்பை எட்டி விட்டனபோலும். பிக்ஸாரின் தரத்தை பார்த்தபின்னும் எவ்வாறு இவர்கள் கோட்டை விட்டார்கள் என்பது பெரும் கேள்வி. அடுத்த கேள்வி ஏன் இந்தப் படம் 3Dயில் உருவாக்கப்பட்டது என்பதாகும். கண்ணாடிக்கு கொடுத்த காசுக்கு பேசாமல் பீர் அடித்திருக்கலாம் என்பதை உணரும்போது மனம் தாகத்தால் வாடுகிறது.

புதிய பாத்திரங்களை உருவாக்குவதிலும், நகைச்சுவை இழைந்த கதையை படைப்பதிலும் காட்டியிருக்க வேண்டிய கற்பனை திரைப்படத்தில் முழுமையை எட்டவில்லை. ராட்சத வாத்து பாத்திரம் ஒரு கொடுமை. உணர்ச்சிகரமான காதல் காட்சிகளில் நெகிழ வைக்கும் திரைப்படம் ஒரு முழுப்படைப்பாக பார்க்கப்படும்போது திருப்தியற்ற உணர்வையே தருகிறது. பிரபலமான பச்சை அரக்கன் ஷ்ரெக்கின் கதையின் இறுதிப்பாகம் இதனைவிட சிறப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அது அவ்வாறாக இல்லை என்பதுதான் உண்மை. [**]

ட்ரெயிலர்