Showing posts with label Le Chant des Stryges. Show all posts
Showing posts with label Le Chant des Stryges. Show all posts

Saturday, May 23, 2009

இரவுப் பறவையின் கானம்


Intro வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவிற்கான உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில் கருத்துக்களை அப்பதிவின் கருத்துப் பெட்டியில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

இம்முறை நாம் பார்க்கப் போகும் கதைத்தொடர் ஒர் அற்புதமான த்ரில்லர் ஆகும். விறு விறுப்பான நடையும், திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் கொண்ட இக்கதை தொடரின் முதல் ஆல்பமான OMBRES (நிழல்கள்) என்பதை பற்றிய பதிவு இது.

cds2 அரிஸோனாவின் எல்லையிலுள்ள மொஜாவ் பாலைவனத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள ராணுவ கட்டமைப்பு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. புதிய கட்டமைப்பை திறந்து வைப்பதற்காக மேன்மை தங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருக்கிறார். கட்டிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறான், ஜனாதிபதியின் மெய்க்காவலர் படையை சேர்ந்த கெவின் நிவெக். ஜனாதிபதி வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் ராணுவக் கட்டிடத்தை அண்மிக்கிறது.cds4

கட்டிடத்தினுள், கண்ட்ரோல் அறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள், நான்கு ஆயுததாரிகள். அவர்கள் முகம் மூகமூடிகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. கண்ட்ரோல் அறையின் கதவை நெருங்கும் அவர்கள், குரல் சோதனை, மின்காந்த சோதனையை வெற்றிகரமாக கடந்து கண்ட்ரோல் அறையினுள் நுழைகிறார்கள்.

ஜனாதிபதியை சுமந்து வரும் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்குகிறது, ராணுவக் கட்டமைப்பின் தலைமை அதிகாரி ஜெனரல் கோரே எவர்சன், ஜனாதிபதியை பெருமிதத்துடன் வரவேற்கிறார். தளத்திலிருந்து ராணுவக் கட்டிடத்தினை நோக்கி நகர ஆரம்பிகிறார் ஜனாதிபதி. பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசோதிக்க கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொள்கிறான் கெவின்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களை தீர்த்துக்கட்டி விட்ட ஆயுததாரிகளில் ஒருவன், கெவினிற்கு ஜனாதிபதி உள்ளே நுழைவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன எனப் பதிலளித்து விட்டு, கணணி மூலமாக அவசரகாலத்தில் தப்பிக்கும் வழிமுறைகளை முடக்க ஆரம்பிக்கிறான்.

கட்டிடத்தினுள் நுழையும் ஜனாதிபதி அங்கு பணிபுரிபவர்களுடன் அளவளாவியபடியே கட்டிடத்தின் வசதிகளை சுற்றிப் பார்க்க ஆரம்பிக்கிறார். கட்டுப்பாட்டு அறையில் கணணியில் முன் அமர்ந்திருக்கும் ஆயுததாரி இட்ட கட்டளையொன்றை கணணி மறுத்து விடுகிறது. வியப்பினால் ஆயுததாரியின் முகம் கோண ஆரம்பிக்… நான் இவ் வாக்கியத்தை முடிக்கும் முன் அவன் கழுத்து வெட்டப்பட்டு, ரத்தம் சீறியடிக்க கீழே சாய்கிறான்.

ராணுவக் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் காவலில் நிற்கும் ராணுவ வீரர்களில் ஒருவன் சங்கேத எண் சாவி மூலம் கதவை திறக்க முயற்சிக்கையில் அது திறக்கவில்லை என்பதால், அதனைக் கையால் திறக்க முயற்சிக்கிறான். அதுவும் பலன் தரவில்லை என்றவுடன் அவன் சந்தேகம் வலுக்கவே, கெவினை தொடர்பு கொண்டு அபாய எச்சரிக்கையை தந்து விடுகிறான். ராணுவ அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்த ஜனாதிபதியை நோக்கி ஓடும் கெவின், அவரை இழுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும் பாதையில் ஓட ஆரம்பிக்கிறான்.

cds3 கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆயுததாரிகளை ஒருவர் பின் ஒருவராக தன் கத்தியால் கதையை முடிக்கிறாள் அந்தப் பெண்.கறுப்பு ஆடைகள் அவள் அழகை கவ்வி நிற்கின்றன. அவள் ஒரு அழகான ஆபத்து அல்லது விஷ அமிர்தம். அவள் தொட்டாள் மலர்வது மரணம். அவள் கூந்தல், மோதலிலும் அலை பாய்கிறது, அலை போல் அசையும் அவள் நகர்வுகள் கொலையாகிறது.

கட்டிடத்தினுள் கெவின் ஜனாதிபதியுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது கட்டிடத்தினுள் குண்டுகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன, வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வலையாலும், அனல் காற்றாலும் தூக்கி எறியப்படுகிறார்கள் இருவரும். தீ, உக்கிரமாக பற்றி எரிய ஆரம்பிக்க, தீயணைப்பு படை வீரர்கள் தீயுடன் போராட ஆரம்பிக்கிறார்கள். கெவின் சாதாரன சிராய்ப்புக்களுடன் தப்பி விட, கடும் காயங்களிற்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார் ஜனாதிபதி.

கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில், எரியும் நெருப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். அந்த உக்கிரமான நெருப்பின் மத்தியில் பறந்து செல்லும் அந்தக் கரிய உருவம் தான் என்ன?!

cds5 ஜனாதிபதியின் மீதான தாக்குதலிற்கு மறுநாள், பெண்டகனில் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்படுகிறது. ஜெனரல் கோரேயும், சிஐஎயின் அதிகாரி டவுனியும், கெவினை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களை இடைவெட்டும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி குரொம்பி, ஜனாதிபதியின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது மர்மமான ஒர் வெளியாள் இடையீட்டால் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறான். சிஐஎ அமைப்பு தீவிரவாதிகளின் ஊடுருவல் ஏற்படலாம் என எச்சரிக்கவில்லை, அதே சமயம் மிக ரகசியமான இடம் எனக் கூறப்பட ராணுவக் கட்டமைப்பு பற்றி சிலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், ஆகவே கோரேக்கும், டவுனிக்கும் கூட தவறில் பங்குண்டு என்கிறான் குரொம்பி.

கெவின் இதனைப்பற்றி தங்களிற்கு விளக்க முடியுமா என அவனிடம் வினவுகிறான் குரொம்பி. கெவின் இதனைப் பற்றி நடந்து கொண்டிருக்கும் விசாரணை தான் எதையாவது விளக்க கூடும் என்கிறான். மேலும் உண்மையான குற்றவாளிகளிற்கு தான் ஒர் இலக்காக அமைந்து விட்டதே இவ்விவகாரத்தில் தன்னுடைய ஒரே தவறு எனக்கூகிறான். இதனைக் கேட்ட டவுனியும், கோரேயும் கொதிக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தும் குரொம்பி, பரிசோதனை கூடத்திலிருந்து ஒளிபரப்பாகும்,ராணுவக் கட்டிட தாக்குதலின் பின் கண்டெடுக்கப்பட்ட ஒர் உடலின், பிரேத பரிசோதனையின் ஒளிபரப்பை மிக உன்னிப்பாகப் பார்வையிடப் பணிக்கிறான்.

ஒளிரும் திரையில் பிரேத பரிசோதனைக்கு தயாராகி கொண்டிருக்கும் பெண் மருத்துவரைக் காணும் கெவின், மெலிண்டா எனும் பெயரை மனதில் உச்சரித்துக் கொள்கிறான். மெலிண்டா பரிசோதனைக்கு தயாரகவுள்ள உடல் குறித்த தகவல்களினைக் கூறியவாறே இறந்த உடலை அண்மிக்கிறாள். ஒளிபரப்பு ஆரம்பித்த சில நிமிடங்களின் பின் கெவினின் திரை அணைக்கப் படுகிறது. தன் திரையில் படம் வரவில்லை எனும் கெவினிடம், அவன் தன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள அறிவிப்பு தனக்கு தற்போது தான் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறான் குரொம்பி.

மெக்ஸிக்கன் உணவு விடுதி ஒன்றில், தன் முன்னாள் காதலியான டாக்டர் மெலிண்டாவைச் சந்திக்கிறான் கெவின். நீண்ட காலமாக தன்னை பார்க்க விரும்பாத கெவினுடன் கடுமையாகப் பேசுகிறாள் மெலிண்டா. தன் தற்போதைய நிலையை அவளிற்கு விளக்கி, தனக்கு அவள் பரிசோதனை செய்த உடல் பற்றிய தகவல்களை தந்து உதவும் படி கெவின் அவளிடம் வேண்டுகிறான். அதனை செய்ய தனக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள் மெலிண்டா.

numérisation0007 மெலிண்டாவுடன் உரையாடியவாறே, உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் இரு நபர்கள் தம்மைக் கண்காணிப்பதை அவதானித்து விடும் கெவின், மெலிண்டாவை தனக்காக அங்கேயே காத்திருக்க கூறி விட்டு, உணவு விடுதிக்கு வெளியே புகை பிடிப்பதற்காக செல்வது போல் வாயில் ஒர் சிகரட்டை கொளுத்தி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்த இரு ஆசாமிகளும் அவனைப் பின் தொடர்கிறார்கள்.

ஒடுங்கிய தெரு ஒன்றில் திரும்பி மறைந்து கொள்ளும் கெவின் தன்னை பின் தொடரும் மனிதர்களை எதிர்பார்த்து நிற்கிறான். தெருவில் ஒருவன் நுழைய அவன் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் கெவின் அவனுடனிருந்த மற்றவன் எங்கே என்றும் ஏன் அவர்கள் அவனைப் பின் தொடர்கிறார்கள் எனவும் கேட்கிறான். கெவின் எதிர்பாராத விதமாக பின்னாலிருந்து அவன் தலையில் துப்பாக்கியினால் அடித்து அவனை நினைவிழக்க செய்து விடுகிறான் அந்த மற்றவன்.

தெருவில் நினைவிழந்து கிடந்த கெவினின் தலையிலிருந்து சிந்திய குருதியை நக்கிக் குடிக்கிறது ஒர் பூனை. மெதுவாக நினைவு திரும்பும் கெவின் தன் தலையைத் தடவிப் பார்க்கிறான். அவன் தலைக் காயத்திலிருந்த குருதி அவன் விரல்களில் ஒட்டிக் கொள்ள, தன் முன்னாலிருக்கும் பூனையிடம் தன் விரல்களை நக்கி சுத்தம் செய்யத் தருகிறான். பின் அப் பூனையையும் தன் கையில் தூக்கிக் கொண்டு உணவு விடுதியை நோக்கி செல்கிறான். உணவு விடுதியிலிருந்த மெலிண்டா தனக்காக காத்திராது கிளம்பிச் சென்று விட்டதைக் காணும் அவன் சிறிது வேதனை கொள்கிறான். பின்பு அங்கேயிருந்த தொலைபேசி ஒன்றின் மூலம் ஜோஷ் என்பவனைத் தொடர்பு கொள்கிறான்.

வாஷிங்கடனின் புற நகர் பகுதியில் அமைந்திருக்கும் செவ்விந்தியர்கள் அங்காடி ஒன்றின் கீழ்தளத்தில் ரகசியமான அலுவலகம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் புரொடியை காண வருகிறாள் அவள். உன் கடைசி ஆபரேஷன் பாதி தான் வெற்றியடைந்ததாகக் கூறி அவளை வரவேற்கிறான் புரொடி. ஜனாதிபதி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார் எனப் பதிலளிக்கிறாள் அவள். இருவரிற்கும் சிறிய வோட்கா கிண்ணங்களில் வோட்காவை நிரப்புகிறான் புரொடி. அவனிடமிருந்து ஒர் கிண்ணத்தை பெற்றுக் கொள்ளும் அவள், தான் ராணுவக் கட்டிடத்தின் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில் கண்ட விசித்திர உருவத்தைப் பற்றி தெரிவிக்கிறாள். அவளின் மனப்பிரமையாக அது இருக்கும் எனக் கூறும் புரொடியிடம் கோபம் கொள்கிறாள் அவள். அவள் கோபத்தை கண்டு கொள்ளாத புரொடி அடுத்த நடவடிக்கையாக கெவின் மற்றும் மெலிண்டா என்பவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அவளிடம் வழங்குகிறான்.

தன் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் மெலிண்டா அவள் அலுவலகம் உச்ச பாதுகாப்பு மாடி ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதையும், ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலின் மீதான ஆய்வுகள் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்த விவகாரம் மூடப்பட்டு விட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். மெலிண்டாவின் மேலதிகாரி பின்ச்சர், இந்த விவகாரத்தில் மேலும் ஈடுபட ஆவல் காட்ட வேண்டாம் என அவளிற்கு ஆலோசனை தருகிறார்.

cds6 ஜோஷின் வீட்டிற்கு அவனைத் தேடிச் செல்கிறான் கெவின். தன் பூந்தோட்டத்தில் அழகிய ரோஜாச் செடிகளை பராமரித்தவாறே அவனுடன் உரையாடுகிறான் ஜோஷ். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அவனிடம் தெரிவிக்கிறான் கெவின். அவனை தன் வீட்டினுள் அழைத்து சென்று விபரங்களை விரிவாகக் கேட்டறியும் ஜோஷ், கெவின் இவ்விவகாரத்தில் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக தான் கருதுவதாக கூறுகிறான். இவ்வேளையில் அறையிலிருந்த தொலைபேசி ஒலிக்க அதனை எடுக்கிறான் கெவின்.

cds7 தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் மெலிண்டா, தன் அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அலுவலக ஊழியர்கள் கண்காணிக்கப்படுவதனையும் கெவினிற்கு தெரிவிக்கிறாள். பிரேத பரிசோதனை ஒளிப்பதிவை இணையம் மூலம் ஜோஷின் கணணிக்கு அனுப்புவதாக கூறுகிறாள் அவள். கணணித் திரையில் மெலிண்டா அனுப்பி வைத்த ஒளிப்பதிவினைக் காணும் ஜோஷ், உடலின் சிறு திசுத் துணுக்குகள் சிலவற்றை அவனிற்கு அனுப்பி வைக்க முடியுமா என வினவுகிறான். இதே வேளையில் திடீரென திரையில் ஒடிக் கொண்டிருந்த பிரேத பரிசோதனையின் காட்சி மறைந்து விடுகிறது.

தன் வீட்டின் தொலைபேசி இணைப்பு செயலிழந்து விட்டதை உணர்ந்து கொள்ளும் மெலின்டா, அவசரமாக தன் அலுவலகத்திற்கு ஓடுகிறாள். மெலிண்டாவிற்கு ஏதாகிலும் அபாயம் ஏற்பட்டிருக்கிலாம் எனும் ஐயத்தில் ஜோஷின் வீட்டை விட்டு கிளம்புகிறான் கெவின். கெவின் கிளம்பிச்செல்லும் காரைப் பார்த்தவாறே தன் மனதில், கெவின் உனக்கு உண்மையைச் சொல்லும் நேரம் இன்னமும் வரவில்லை எனக்கூறிக் கொள்கிறான் ஜோஷ்.





cds8 அலுவலகத்திற்கு விரையும் மெலிண்டா அங்கு பணிபுரியும் நண்பனின் உதவியுடன் பலத்த காவல் போடப்பட்டுள்ள பிரேத கிடங்கினுள் நுழைகிறாள். ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இருந்த அறையை திறந்து அதனுள் நுழைகிறாள் அவள். உடல் கிடத்தப்பட்டுள்ள மேஜையை நெருங்கும் அவள் தன் கைப்பையிலிருந்து சிறு கத்தியையும், ஒர் போத்தலையும் வெளியே எடுக்கிறாள். அவ் உடலின் ஒர் சிறு திசுப் பகுதியை வெட்ட விரும்பி அதனை அண்மிக்கும் அவள் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவள் கையிலிருந்த போத்தலும், கத்தியும் கீழே விழுகின்றன. வெளியே காவலிற்கு நின்ற வீரர்கள் அறையினுள் இருந்து ஒலிக்கும் கத்தலினால் திடுக்கிட்டு அறையினுள் நுழைகிறார்கள். அறையில் யாருமில்லை. கருகிய உடலும், மெலிண்டாவும் அவ்வறையில் இருந்து மறைந்து போயிருந்தார்கள்.

cds9 மெலிண்டாவின் வீட்டை அடையும் கெவின் அவள் வீட்டை யாரோ கலைத்துப் போட்டிருப்பதைக் காண்கிறான், என்ன நடந்திருக்கலாம் என்பதனை அவன் மனம் ஊகிக்க ஆரம்பிக்க, அவன் கண்கள், ஜன்னல் அருகே மறைந்து நிற்கும் உருவம் ஒன்றைக் கண்டு விடுகின்றன. தன் துப்பாக்கியால் உருவத்தை நோக்கி அவன் சுட, உருவம் லாகவமாக கீழே குதித்து ஓடுகிறது. அவ்வுருவத்தினை பின் தொடர்ந்து ஓடுகிறான் கெவின். கைவிடப்பட்ட தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்றினுள் உருவத்தை தொடர்ந்து நுழையும் கெவின் அங்கு உருவம் மறைந்து விட்டதைக் காண்கிறான். தன் தேடலை அவன் தொடரும் ஒர் தருணத்தில் அசையாதே, நீ சாகப் போகிறாய் என்று கூறியவாறே மறைவிடமொன்றிலிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளியே வருகிறாள் அவள்.

பெண்டகனில் கூட்டப்படும் அவசரக் கூட்டத்தின் பின் சிஐஎயின் டவுனியை ரகசியமாக சந்திக்கும் குரொம்பி, கெவின், மெலிண்டா, கருகிய உடல் மூன்றும் இல்லாமல் போகவேண்டும் எனக் கட்டளையிடுகிறான்…

பிரேத கிடங்கில் மெலிண்டாவிற்கு நடந்தது என்ன? கருகிய உடல் மாயமாக மறைந்தது எவ்வாறு? ஜோஷ் கெவினிடமிருந்து மறைக்கும் விடயம் என்ன? ஜனாதிபதியின் கொலை நடவடிக்கையின் பின் புதைந்து கிடக்கும் மர்மம் என்ன? குரொம்பி ஏன் கெவின் மற்றும் மெலிண்டாவை தீர்த்துக் கட்ட விரும்புகிறான்? யார் அந்த அழகிய அவள்? புரொடி நிழலாக செயற்படுவது எக்காரணத்திற்காக?

மர்மம், மர்மம், மர்மம், இக்கேள்விகள் எவற்றிற்கும் முதல் ஆல்பத்தில் விடை இல்லவே இல்லை. எனவே வாசகர்கள் இரண்டாவது ஆல்பத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அங்கும் அந்தக் கருகிய உடல் ராணுவக்கட்டிடத்திற்கு எவ்வாறு வந்து சேர்ந்தது என்பதை தவிர வேறு மர்மங்கள் விடுபடாது. ஆனால் கதையில் மர்மங்கள் அதிகரிக்கும்.இவ்வாறாக பிரென்ச்சு வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ஒர் மர்மத் தொடராக வெற்றி நடை போடுகிறது LE CHANT DES STRYGES எனும் இக் காமிக்ஸ் தொடர்.

chant-stryges-2 STRYGE (STRYX) எனப்படுபவை பாதி மனித, பாதி பறவைத் தோற்றம் கொண்ட புராண துர்தேவதைகள் ஆகும். இவை ரத்தம் உறிஞ்சுபவை என நம்பப்படுகிறது. பண்டைய ரோம வரலாற்றுக் காலத்திலிருந்தே இத் தேவதைகள் பற்றிய வர்ணனைகள் காணக்கிடக்கின்றன. கிரேக்க சொல்லான STRIGX என்பதற்கு இரவுப் பறவை என அர்த்தம் கொள்ளலாம். மானுட வரலாற்றில் இவை ஆடும் ஆட்டம் என்ன? இக் கற்பனைக்கு விடை தருவதாக கதையை அமைத்திருக்கிறார் கதாசிரியர் ERIC CORBEYRAN.

கொர்பிரான் பிரான்சின் புகழ் பெற்ற துறைமுக நகரான மார்செய்யில் 1967ல் பிறந்தவர். புகைப்படக் கலை, சிறுவர் இலக்கியம், விளம்பரத்துறை என்பவற்றில் பணியாற்றி, சித்திரக்கதை துறையில் 1990ல் நுழைந்தவர். சரித்திரம், கற்பனை, த்ரில்லர் என எவ்வகைக் கதையாயினும் சவாலை திடமாக எதிர் கொள்பவர். 30க்கும் மேற்பட்ட ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார்.

காமிக்ஸ் தொடரிற்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் RICHARD GUERINEAU எனும் பிரெஞ்சுக்காரர். 1969ல் பிறந்தவர். சிறு வயது முதலே அவரை காமிக்ஸ் பேய் பிடித்துக் கொண்டது. 1991ல் கதாசிரியர் கொர்பிரானுடனான சந்திப்பு சிறப்பான ஒர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது. LE CHANT DES STRYGES தொடரில் சித்திரக்கட்டங்களை நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைத்திருப்பார். இது வேகமான கதை சொல்லலிற்கு உதவும். சித்திரங்களில் காணப்படும் பதட்டம் வாசகர்களையும் தொற்றிக் கொள்ளும்.

debrah-x2-22 stryge5 இக்கதையின் இரு பிரதான பாத்திரங்களான, STRYGE, DEBRA FAITH ஆகியோரின் சிறிய உருவச்சிலைகள் DOMINIQUE MUFRAGGI என்பவரால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1997 முதல் 2008 வரையில் மொத்தம் 12 ஆல்பங்கள் வெளியாகி இருக்கின்றன. 6 ஆல்பங்கள் ஒரு பருவம் என அழைக்கப்படுகிறது. 3ம் பருவம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இக்கதையினைப் படித்த போதும் பதிவினை எழுதிய போதும் X- FILES தொடரின் நினைவு மனதில் எழுந்தது. நண்பர்கள் பதிவு குறித்த உங்கள் மேன்மையான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டுகிறேன்.

ஆல்பத்தின் தரம் ****

ஆர்வலர்களிற்கு

LE CHANT DES STRYGES