Showing posts with label Dave Gibbons. Show all posts
Showing posts with label Dave Gibbons. Show all posts

Wednesday, December 31, 2008

பாதாளத்தின் கண்கள்

நண்பர்களே, மீண்டும் ஒர் புதிய பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்சி
அடைகிறேன்.
முதலில் நண்பர்கள்,வலைப்பூவை தொடர்பவர்கள்,எட்டிப்பார்ப்பவர்கள் , இந்நியாமற்ற உலகின் எந்தவொரு மூலையிலும் அன்பிற்காக,அமைதிக்காக,நீதிக்காக காத்து நிற்கும் அனைத்து உள்ளங்களிற்கும் என் இனிய புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


நலமும், வளமும், அன்பும், மகிழ்சியும் நிறைந்த ஆண்டாக இது உலக
மனித குலத்திற்கு அமைந்திட வேண்டுகிறேன். முன்னைய பதிவுகளிற்கான
உங்கள் கருத்துக்களிற்குரிய என் பதில்களை, அப் பதிவிற்குரிய கருத்துப் பெட்டிகளில் நீங்கள் படித்திடலாம், உங்கள் கருத்துக்களே என் ஊக்க மருந்து எனவே தயக்கமின்றி பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.

இப்பதிவில் WATCHMEN எனும் சித்திர நாவலைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

உலகின் சித்திர நாவல்களில் இதற்கு ஒர் தனியிடம் உண்டு என்பதனை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன். அதனை உங்களிற்கு அறிமுகப்படுத்துவது,மழை நாள் ஒன்றில்,கண்ணாடிகளின் வியர்வைத்துளிகளை ரசித்தவாறே, ஜெனிலியாவின் கண்களில் படியும், சூடான தேனீரின் ஆவியை பருகும் பரவசத்தை எனக்கு அளிக்கிறது.

1985 நியூயார்க் நகரம்.
எட்வர்ட் பிளேக்(EDWARD BLAKE) எனும் நபர், உயரமான கட்டிடத்திலுள்ள தன் வதிவிடத்திலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைகிறான். புலன் விசாரணையை ஆரம்பிக்கும் பொலிசார், புகழ் இழந்து, ஒதுக்கப்பட்டு, மக்களால் வெறுக்கப்படும் மூகமூடி நாயகனான ரோர்ஷாக் (RORSCHACH)இவ்விடயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைப்பான் என்று அஞ்சுகிறார்கள். மூகமூடி நாயகர்களிற்கான கட்டாய ஓய்வு சட்டத்தினை மதியாது, தன் வன்முறை வழிகளில் தீமையை தொடர்ந்து எதிர்த்து வரும், ரோர்ஷாக்கை பொலிசார் கொலைக்குற்றத்திற்காக தேடியும் வருகிறார்கள்.

பொலிஸ் அதிகாரிகள் ஐயமுற்றதை நியாயப்படுத்தும் விதத்தில், அன்றிரவே எட்வர்ட் பிளேக்கின் வதிவிடத்திற்குள் ரகசியமாக நுழைகிறான் ரோர்ஷாக். வதிவிடத்தில் , தன் தீவிரமான, நுணுக்கமான தேடுதலின் பலனாக, ரகசிய மறைவிடமொன்றில் எட்வர்ட் பிளேக் மறைத்து வைத்திருந்த, மூகமூடி நாயகனிற்குரிய ஆடை அணிகளை கண்டு கொள்கிறான். இறந்த எட்வர்ட் பிளேக் வேறு யாருமல்ல, கட்டாய ஓய்வின் பின், அமெரிக்க அரசிற்காக பணிபுரிந்து கொண்டிருந்த காமெடியன்(COMEDIAN)எனும் மூகமூடி நாயகன் என்பதை தெரிந்து கொள்கிறான்.

ரோர்ஷாக், தனது பாணியில் விசாரணையை ஆரம்பிக்கின்றான்.
மனிதர்களை கடுமையாக வெறுக்கும் அவன்,தன் உடல் துர்நாற்றத்தை கேலி செய்த நபரின் கைவிரல்களை உடைக்கிறான். அபாயமான நாட்களில் இம்மனித குலத்தை தான் கைவிடுவேன் என மனதில் கறுவிக்கொள்கிறான்.
அவனைக்கண்டு மக்கள் அச்சம் கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற மூகமூடி நாயகர்கள் மத்தியிலும் தன் விசாரணையை மேற்கொள்கிறான். அவர்கள் இது ஒர் அரசியல் கொலையாக இருக்கலாம் என அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். இவர்களிற்கு மாறாக ரோர்ஷாக் மூகமூடி நாயகர்களை தீர்த்துக்கட்ட யாரோ கிளம்பியிருக்கிறார்கள் எனும் முடிவிற்கு வருகிறான்.

காமெடியனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் மூகமுடி நாயகர்களான,
இரவு ஆந்தை( NITE OWL),ஒஸி மண்டியாஸ்(OZYMANDIAS), சூப்பர் ஹீரோவான டாக். மன்ஹெட்டன்(Dr.MANHATTAN)
ஆகியோர் எண்ணங்களில், காமெடியனின் ஞாபகங்கள் அலையடிக்கின்றன. இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் ஒர் மர்ம ஆசாமியைப்பற்றிய தகவலை ரோர்ஷாக்கிற்கு தெரிவிக்கிறான் டாக்.மன்ஹெட்டன். அவன் வீட்டிற்கு சென்று அவனை" நல்ல" முறையில் விசாரிக்கிறான் ரோர்ஷாக். காமெடியன்,ஒர் தீவைப்பற்றியும், அதில் இடம்பெறும் நிழலான நிகழ்சிகள் பற்றியும் அச்சம் கொண்டிருந்தது அவனிற்கு தெரிய வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்கிறான் டாக். மன்ஹெட்டன். அங்கு பத்திரிகையாளர்கள் அவனுடன் பழகிய நபர்களிற்கு புற்றுநோய் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் தர வேண்டுகிறார்கள். இதனால் பதட்டமடையும் டாக்.மன்ஹெட்டன் தான் தங்கியிருக்கும் ராணுவ தளத்திற்கு திரும்புகிறான். அவன் அறையின் கதவில் கதிரியக்க எச்சரிக்கை ஒன்று ஒட்டப்படுவதை காணும் அவன் அதிர்ச்சியுறுகிறான். தன் துணைவியான லோரி தன்னை விட்டு பிரிந்த வேதனையும் இச்சம்பவங்களுடன் ஒன்று சேர பூமியை விட்டு புதன் கிரகத்திற்கு TELEPORTING மூலம் சென்று விடுகிறான்.இவ்வேளையில் ரஷ்யா, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விட்டதாக செய்தி கிடைக்கிறது.

புதன் கிரகத்திற்கு சென்றுவிட்ட டாக்.மன்ஹெட்டன்,தன் கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். விஞ்ஞான ஆய்வுகூடமொன்றில் ஒர் சாதாரண விஞ்ஞானியாக தான் பணியாற்றிய நாட்கள், அங்கு ஏற்பட்ட விபத்தொன்றினால் தனக்கு கிடைத்த புதிய உருவம்,கிடைத்த எண்ணிலடங்கா சக்திகள், தன் வருகையால் முதல் ஒதுக்கப்பட்டு பின்பு அரசால் கட்டாய ஓய்விற்கு அனுப்பப்பட்ட மூகமூடி நாயகர்கள், தனது காதல்கள் என எண்ணிப்பார்க்கும் அவன் இறுதியில் தன் சக்தியால் புதன் கிரக மணலிலிருந்து ஒர் வினோதமான அமைப்பை உருவாக்க ஆரம்பிக்கிறான்.


ஒஸிமண்டாஸ் எனப்படும் ஓய்வு பெற்ற மூகமூடி நாயகன். தற்போது மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவனை கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிகிறது. இதனால் உந்தப்படும் ரோர்ஷாக் தன் விசாரணையை தீவிரமாக்குகிறான். இதனிடையில் ரோர்ஷாக் பற்றிய தகவல் ஒன்றை தொலைபேசி மூலம் பொலிசிற்கு தெரிவிக்கிறான் ஒர் மர்ம ஆசாமி. தன்னை தேடி வரும் பொலிசாருடன் மோதும் ரோர்ஷாக் இறுதியில் கைது செய்யப்படுகிறான்.

சிறையில் அடைக்கப்படும் ரோர்ஷாக் தீவிரமான உளவியல் அலசலிற்கு உட்படுத்தப்படுகிறான். குரூரமான அவன் சிறுவயது வாழ்க்கை வெளிவர ஆரம்பிக்கிறது.

இரவு ஆந்தை, தான் ரோர்ஷாக்கை சிறையிலிருந்து மீட்க விரும்புவதை தன் நண்பியும், டாக். மன்ஹெட்டனின் தோழியுமாகிய லோரியிடம் தெரிவிக்கின்றான்.லோரி, இதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள்........

ரோர்ஷாக்கை இரவு ஆந்தை மீட்க முடிந்ததா? மூகமூடி நாயகர்களை ஒழித்துக்கட்ட சதி செய்வது யார்? இச்சதியின் பின்னனியிலுள்ள உண்மை என்ன? உலக மனித குலத்தின் எதிர்காலம் யார் கைகளில் தங்கிள்ளது? இக்கேள்விகள் மட்டுமல்லாது, கதையின் பல புதிர்களிற்கு விடையளிக்கிறது 300 பக்கங்களிற்கும் அதிகம் கொண்ட இச்சித்திர நாவல்.

ஆறு மூகமூடி நாயகர்களின் வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக விபரிக்கிறது நாவல். கட்டாய ஒய்வின் பின் அவர்களில் பெரும்பாலானோர்,தாங்கள் அணிந்த மூகமூடிக்கு கொடுக்கும் விலை,எதிர்பாராதது. விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம்,ஆக்‌ஷன் எனும் கலவையை சுவைபட தந்துள்ளார் கதாசிரியர் அலன் மூர். 55 வயதாகும் இவர் ஒர் ஆங்கிலேயர். பல கதைகளை உருவாக்கியுள்ளார் இவரின் பிரபலமான கதைகளில் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.





இவை மூன்றும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன, அதில் மூன்றாவது கதையான THE LEAGUE OF EXTRAORDINARY GENTELMAN ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஒர் அற்புதமான சொதப்பல். அலன் மூரைப்பற்றிய விரிவான,சுவாரஸ்யமான தகவல்களிற்கு கீழே க்ளிக்கவும்.



கதையில் சில உரையாடல்களில் தத்துவ நெடி தலையை கிறுகிறுக்க வைக்கிறது. ரோர்ஷாக்கின் வாழ்க்கை கூறப்படும் அத்தியாயம், மிகவும் இருண்ட , முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் பகுதியாகும். சிறையில் சக கைதிகளை ரோர்ஷாக் தைரியத்துடன் எதிர் கொள்ளும் காட்சிகள் யாவும் அபாரம். வசனங்களின் பெரும்பகுதி அர்த்தங்கள் செறிந்தவையாகவும், சவரக்கத்தியின் கூர்மை உடையனவாகவும் உள்ளன. சில சமயங்களில் நாவலை மூடி வைத்துவிட்டு எங்களை சிந்திக்கவும் தூண்டுகின்றன. எல்லாவற்றையும் விட கதையின் முடிவில் அலன் மூர் வழங்கும் முடிவை ஏற்பது சற்று சிரமம் தான், ஆனால் இதனை விட சிறப்பான முடிவை வழங்க முடியாது என்பதுதான் உண்மை.

கதாசிரியருடன் போட்டி போட்டுக் கொண்டு, அற்புதமான சித்திரங்களை வரைந்து அதன் மூலம் கதை சொல்லியிருப்பவர் டேவ் கிப்பொன்ஸ்(DAVE GIBBONS). வயது 59. இங்கிலாந்துக்காரர். இவரைப்பற்றிய விரிவான தகவலிற்கு கீழே க்ளிக்குங்கள்.



இந்நாவலில் வரும் சித்திரங்களிற்கு கூர்மையான அவதானிப்பை அளிக்காவிடில், பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.டேவ் கிப்பொன்ஸ் இந்நாவலில்மிக சிறப்பாக தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளார். அதிலும் ரோர்ஷாக் கடத்தப்பட்ட சிறுமி ஒருத்தியை தேடிச்செல்லும் காட்சிகளில், சிறுமிக்கு ஏற்பட்டுவிட்ட கதியை எவ்வித சொற்களுமின்றி, சித்திரங்கள் மூலம் மட்டுமே சொல்லி எங்கள் கற்பனை ஜன்னல்களின் கதவை சற்று திறந்து விடுகிறார் டேவ் கிப்பொன்ஸ்.

சித்திரங்களிற்கு வண்ணமளித்தவர் JHON HIGGINS, கண்களை உறுத்தாது, கதையோட்டத்திற்கேற்ப வண்ணமளித்துள்ளார்.

இந் நாவல், 1986-1987 களில் 12 சிறு அத்தியாயங்களாக DC காமிக்ஸினரால் வெளியிடப்பட்டது, காமிக்ஸின் எல்லைகளை விரிய வைத்த நாவல் என்று இதனை கூறுகிறார்கள், அது உண்மையே. இந்நாவல் 1987ல் அலன் மூரிற்கும், டேவ் கிப்பொன்ஸ்ஸிற்கும் முறையே JACK KIRBY BEST WRITER AWARDஐயும், JACK KIRBY WRITER/ARTIST COMBINATION AWARDஐயும் பெற்றுத்தந்துள்ளது.

இக் கதை 1989ல் பிரான்சின் அங்குலெம்(ANGOULEME) கண்காட்சியில், சிறந்த பிறமொழி சித்திரநாவலிற்கான பரிசை வென்றது. TIME சஞ்சிகையின், இது வரை வெளியாகியுள்ள 100 தரமான ஆங்கில நாவல் பட்டியலில் இந்நாவல் இடம் பிடித்துள்ளது. வார்னர் பிரதர்ஸின் தயாரிப்பில், 300 எனப்படும் சூப்பர் ஹிட் படத்தினை இயக்கிய ZACK SNYDERன் இயக்கத்தில் இவ்வாண்டு இது ஒர் திரைப்படமாக வெளியாகிறது. ட்ரெயிலர் கீழே உள்ளது பார்த்து மகிழுங்கள். நான் இப்பதிவில் கூறாதுவிட்ட பல மர்மங்களும், முடிச்சுக்களும், திருப்பங்களும் கதையில் உண்டு, நாவலை படிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அவற்றினை இத்திரைப்படம் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.

நாவல் நான் வாழும் உலகைப்பற்றி என்னை ஒர் கேள்வியை எழுப்ப வைத்தது. எங்கள் உலகை எந்த மூகமூடி நாயகர்கள் காப்பாற்றப் போகிறார்கள்?

இறுதியாக, ரோர்ஷாக்கின் அத்தியாய முடிவில் அலன்மூர் தரும் மேற்கோள் ஒன்றுடன் பதிவினை
நிறைவு செய்கிறேன்.
"நீ மிருகமாக மாற விரும்பாத வரை மிருகங்களுடன் மோதாதே, பாதாளத்தின் உள்ளே நீ எட்டி பார்க்கும் போது பாதாளமும் உன் உள்ளே எட்டிப்பார்க்கும்"
இவ்வாக்கியத்திற்கு உரிமையாளர் யாரென்பதை கண்டுபிடியுங்களேன், கண்டு பிடித்து முதலில் கருத்து எழுதுபவர்களிற்கு பாராட்டு நிச்சயம். மறந்திடாது பதிவினைப்பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.

அகொதீக தலைவர், டாக்டர் செவன் மிக அற்புதமான, எனக்கு பிடித்த ஒர் கதையினைப் பற்றிய பதிவை பதிவிட்டுள்ளார் அதனைக் காண கீழே க்ளிக்குங்கள்.



ட்ரெயிலர்கள்