Saturday, December 13, 2008

ஒன்று.. இரண்டு.. XIII

மலை உச்சி மர்மம். 1

வணக்கம் கூறி வரவேற்கிறேன், நண்பர்களை என் முதல் பதிவிற்கு. முதலாவது பதிவாக XIIIன் 18 வது ஆல்பத்தை பற்றி எழுதுகிறேன். சற்றுப் பெரிய பதிவு என்பதால் 3 பதிவுகளாக இட எண்ணியுள்ளேன். கணணி உலகில் எனக்கு எதுவும் தெரியாது, எதோ என்னால் இயன்றதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். இத் தருணத்தில் இம்முதல் பதிவை சக காமிரேட்களான,
கிங் விஸ்வா, தலைவர் டாக்டர் செவன், ரஃபிக்ராஜா ஆகியோர்க்கு சமர்ப்பிக்கிறேன். என் துரோணர்கள் இவர்களே. சிறப்புகள் எல்லாம் அவர்களிற்கே உரியது.
கனவுகளின் காதலன்.


ன்று மாலை நான் வீடு திரும்பியபோது என் அப்பா இறந்த சேதியை எனக்கு அம்மா தெரிவித்தார். என் அப்பா BRENDAN O'NEIL , 1979ல் LORD MOUNTBATTENன் கொலையின் பின் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் எதுவுமின்றி 30 வருட கடுங்காவல் தண்டனை அவரிற்கு அளிக்கப்பட்டது. ஐரிஷ் விடுதலை ராணுவத்தின் தொண்டர் என் அப்பா, தனக்கு அரசியல் கைதி அங்கீகாரம் வேண்டி, மற்றும் பல கைதிகளுடன் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார். சாதரண கைதிகளிற்குரிய உடைகளை நிராகரித்து, உணவு உண்ணாது, நீரை மட்டும் ஆகாரமாக கொண்டு, கடும் குளிரில் ஒர் கிழிந்த போர்வையினோடு மெல்ல மெல்ல உறைந்தும், இறந்தும் கொண்டிருந்தார் அவர். விரதத்தின் 56ம் நாளில் அவர் இறந்து போனார்.

ல்லறையில் வீசிக்கொண்டிருந்த எலும்புகளை உறைய வைக்கும் குளிர்காற்று என் மனதில் கனன்று கொண்டிருந்த வஞ்சத்தை அணைக்க முயன்றதில் தோற்றது. என் மாமா TERRENCE PARNELL , IRAவின் ஒர் சிறிய பொறுப்பாளாராக இருந்தார். என்னை IRAவில் சேர்த்துக் கொள்ளும் படி அவரிடம் வேண்டினேன். குண்டு வைப்பவர்களை விட, நன்கு கற்றவர்களே எங்கள் போராட்டத்தினை மேலெடுத்து செல்ல எங்களிற்கு தேவை எனக்கூறி, என் கல்வியை தொடர சொன்னார் அவர்.குளிரும், வெறுப்பும் நிறைந்த மூன்று வருடங்கள் ஓடியது. BELFASTல் பள்ளியில் இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருந்தேன். சரித்திரப்பாடம் என்னை மிகவும் கவர்ந்தது. சரித்திர ஆசிரியர் EAMON O'SHEA அயர்லாந்து மக்களின் வீரமும், போராட்டமும், வலிகளும் நிறைந்த சரித்திரத்தை எங்களிற்கு கற்பித்தார். ஒர் நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தவேளையில் O'SHEA வகுப்பறையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார் . அவரை பொலிசாரிடமிருந்து காப்பாற்றப்போய், நான் IRAல் இணந்துகொள்ள நேர்ந்தது. MAIREADம் என் வாழ்வின் குளிர்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.MAIREAD, BELFASTல் உள்ள காய்கறி கடையொன்றில் வேலையில் இருந்தாள். ஆனால் அவளின் உண்மையான பணி என்னவெனில் மறைவிடங்களிலிருந்து பிறிதோர் மறைவிடத்திற்கு ஆயுதங்களை கடத்துவது ஆகும். IRAவில் நான் அவளிற்கு கீழே பணிபுரிந்தேன். உண்மையை கூறினால், என் கனவுகளிலும் நிலை அதுதான்.அவள் என்னுடன் சிறிதே பேசுபவளாகவும்,சிரிப்பே இல்லாதவளாகவும் இருந்தாள். MAIREADன் அப்பா 1972ல் ஏற்பட்ட ரத்த வெள்ளி கலவரத்தில் இறந்து போனார், கடந்த வருடத்தில் அவள் தாயும் நோயுற்று இறந்தாள். அனாதையான அவளை என் கைகளில் அள்ளிக் கொள்ளவே விரும்பினேன் ஆனால் அன்று அதற்குரிய துணிச்சல் இருக்கவில்லை. இச்சமயத்தில் ஒர் புதிய நடவடிக்கைக்கான உத்தரவு, எங்களிற்கு கிடைத்தது.IRAவின் ஆயுதப்பிரிவினர், வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்றினை புரொடெஸ்டாண்ட் மத மக்கள் வாழும் குடியிருப்பிலுள்ள பல்பொருள் அங்காடிக்கருகில் நிறுத்தி வைப்பார்கள். குண்டு வெடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, MAIREAD பொலிசிற்கு போன் செய்து இதனை தெரியப்படுத்த வேண்டும். இதுதான் திட்டம். ஆனால் குண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வெடித்தது. என் கண்களின் முன்பாக அழுகையும், ஓலமும் உயிர்களும் சிதறிப்போயின. நாங்கள் ஓடத்தொடங்கினோம். பொலிஸ் தன் தேடல் வேட்டையை தொடங்கியது. எங்கள் மறைவிடத்தை கண்டுபிடிக்க அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. தோட்டாக்கள் எல்லாப்பக்கங்களிலும் சீறின, நானும், என் மாமாவும், MAIREADம் ஒர் சிறிய படகில் ஏறி ஆற்றைக்கடக்கும் வேளையில், சீறி வந்த தோட்டாக்கள் MAIREADன் உடலை வெட்டிப்போட்டன. அவள் உடலை என் கைகளில் ஏந்திக்கொண்டேன். அவள் உயிர் பிரிந்த அத்தருணத்தில் முதன்முதலாக என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நண்பனே JASON FLY, அந்தப் புன்னகையை மட்டும், என்றும் மறவாது என் உயிரின் அருகில் வைத்துக்கொண்டேன்.

[தொடரும்]10 comments:

 1. ஷங்கர் விஸ்வலிங்கம் அன்பரே, வலை உலகத்தின் புது அங்கத்தினரை வருக வருக என்று வரவேற்கிறேன். கனவுகளின் காதலன், நல்ல புனை பெயர் தான்.

  அருமையான தமிழ் நடையுடன் ஒரு பதிவு, கொஞ்சம் Prelogue செய்திகளுடன் பதிவை ஆரம்பித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அடிப்படையில் இது எந்த XIII பாகத்தின் கதை என்று சற்று குழம்பி போய் 2விட்டேன். அட்டை படத்தை வைத்து 18 வது பாகம் என்று எண்ணுகிறேன்.

  சில எழுத்துக்கள் இன்னும் பிரெஞ்சு மொழியில் உள்ளதே.... blog அங்கே பதிவு செய்து இருகிறீர்களா ?

  ReplyDelete
 2. நண்பர் அவர்களை வலையுலகத்திற்கு வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். இது நாள் வரை அ.கொ.தீ.கவின் அயல் நாட்டு தலைவராக இருந்து பெரும் பணி ஆற்றிய நீங்கள், தற்போது ஒரு கனவு பெட்டகத்தை திறந்தது எங்களுக்கு பெரும் மன மகிழ்வை தந்தது. கண்கள் பனித்தன. இதயம் இனித்தது.

  கனவுகளின் காதலன் என்ற கவித்துவமான பெயரே எங்களை கொள்ளை கொண்டு விட்டது. பிடியுங்கள் முதல் பாராட்டை. உங்களின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

  தமிழ் குட்டியை போல நீங்களும் ஒரு கவிதை எழுதுபவராக இருந்தால் அதில் வியப்பேதும் இல்லை.

  //குண்டு வைப்பவர்களை விட, நன்கு கற்றவர்களே எங்கள் போராட்டத்தினை மேலெடுத்து செல்ல எங்களிற்கு தேவை// உலக நியதியோ?

  //குளிரும், வெறுப்பும் நிறைந்த மூன்று வருடங்கள் ஓடியது// + //MAIREADம் என் வாழ்வின் குளிர்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்//, இன்று நான் கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். நான், தமிழில் காமிக்ஸ் என்று ஒன்றை ஆரம்பித்தால் அதில் முதல் கதையை தமிழாக்கம் செய்பவர் நீங்கள் தான்.

  //அவள் உயிர் பிரிந்த அத்தருணத்தில் முதன்முதலாக என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நண்பனே JASON FLY, அந்தப் புன்னகையை மட்டும், என்றும் மறவாது என் உயிரின் அருகில் வைத்துக்கொண்டேன்// மிக, மிக ஆழ்ந்த உள் அர்த்தம் கொண்ட வார்த்தைகள் இவை. பிரிவின் வலியையும், அது தரும் சோகத்தையும் உணர்ந்தவர்கள் மட்டுமே இதனை புரிந்து கொள்ள இயலும்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 3. வேலைப்பளுவிலும், மனச்சோர்வினாலும் இந்த பதிவின் தலைப்பை பற்றி கூற மறந்து விட்டேன்.

  ஒன்று, இரண்டு....பதிமூன்று.

  என்ன ஒரு தலைப்பு. இதற்கே இந்த வருடத்தின் காமிக்ஸ் ஆஸ்கார் விருதை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து எழுதுங்கள். ஆரம்பத்தில் உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் சிரமம் ஆக இருந்தன. ஆனால் உங்கள் பின்புலத்தை அறிந்து கொண்ட பின்னர், உங்கள் பாணியை ரசிக்க ஆரம்பித்தேன்.

  தலைப்பு அருமை.

  ஆனாலும் இந்த வலைப்பூவின் விபரத்தை செல்போன்'இல் இரவு பனிரெண்டு மணி முப்பது நிமிடதிர்ற்கு சொன்ன நண்பர் விஸ்வா வாழ்க.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்.
  Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 5. Bienvenue!

  உங்களின் மொழி நடை மிகவும் சிறப்பாக இருக்கிறது. உங்களின் அடுத்த பதிவுகளுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 6. வணக்கம் கூறி வரவேற்கிறேன், நண்பர்களை என் முதல் பதிவிற்கு= உங்கள் பின்புலம் தெரியாமல் போய் இருந்தால் இது ஜுனூன் தமிழ் என்று கூறி இருப்பேன்.

  தூக்கம் வராததால் யோசித்து போட்ட கமெண்ட் இது.

  ஒலக காமிகஸ் ரசிகன்
  Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 7. நண்பரே!

  முன்னவர்கள் சொன்னது போலவே - உங்களது எழுத்தின் நடை ரம்மியமாய் இருக்கிறது. பதிவின் ஒரு பகுதிதான் என்றாலும் கூட ஒரு முழுமையை உணர முடிகிறது. புரட்சியாளனின் துயரங்கள் நிறைந்த தருணங்களை உங்களது வார்த்தைகள் வெகு இயல்பாக வெளிபடுத்துகின்றன.

  எழுத்துருக்களின் அளவை மட்டும் சற்று பெரிது படுத்தினால் படிக்க சிரம இல்லாமல் இருக்கும்.

  ReplyDelete
 8. உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

  ReplyDelete
 9. //நான் அவளிற்கு கீழே பணிபுரிந்தேன். உண்மையை கூறினால், என் கனவுகளிலும் நிலை அதுதான்.//

  Classic!

  ReplyDelete
 10. நண்பர்களே உங்கள் மேன்மையான கருத்துக்களை , என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு முதற்கண் நன்றி.

  ரஃபிக், வலைப்பூவின் கருத்துக்களத்தை மங்களகரமாக ஆரம்பித்து வைத்துள்ளீர்கள், நன்றிகள். தற்போது வலைப்பூவில் பிரெஞ்சு எழுத்துருக்கள் தெரியாது. மீண்டும் வருகை தர வேண்டுகிறேன்.

  எனதருமை கிங் விஸ்வா, நீங்களோ, அல்லது டாக்டரோ இல்லாவிடில் இம்முயற்ச்சி பலித்திருக்காது. என் ஒரே கவலை தலைவரிற்கு இன்னும் பதிவை பார்த்திட வாய்ப்பு கிட்டவில்லை என்பதே. நன்றி மீண்டும், மீண்டும் வருக.

  GREATEST EVER COMICS, கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள். விஸ்வாவிற்கு இரவுக்கழுகு என ஒர் பெயர் உண்டு என்பது உங்களிற்கு தெரியாதா.

  பங்கு வேட்டையரே, நன்றி. உங்களைப்போல் எழுத்துக்களால் கிச்சு கிச்சு காட்ட என்னால் முடியாது, ஆனால் உங்கள் பாராட்டு என்னை பெருமிதம் கொள்ள ஆசை காட்டுகிறது.

  நண்பரே அ.வெ. , எழுத்துருக்களின் அளவை மாற்றியுள்ளேன், தொடர்ந்து வாருங்கள், குறையோ நிறையோ தயங்காது உங்கள் எண்ணங்களை பதிந்திடுங்கள்.

  JOSH, என்ன சொல்ல, you hit the spot. தொடருங்கள் உங்கள் ஆதரவை, நன்றி

  ReplyDelete