Monday, April 29, 2013

கொலம்பஸிற்கு வந்த சோதனை !


கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடும் பிரயத்தனங்களோடு கடலோடி, வரலாற்றில் தனக்காக சேர்த்து வைத்திருந்த நல்ல அபிப்பிராயங்கள் எல்லாம் இன்று தொலைந்துபோய் விட்டன எனலாம். அமெரிக்காவை அவர் கண்டுபிடிக்கவில்லை, அமெரிக்காவில் முதல் காலடி வைத்த ஐரோப்பியர் அவரில்லை, அவர் பயணங்கள் இன அழிவிற்கும், அமெரிக்க நிலத்தின் வளங்கள் பிறதிசைகள் நோக்கி பயணிக்கவும் காரணமாக இருந்தன என அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவாறாக உள்ளன. அமெரிக்காவை முதல் முதலாக  வரைபடத்தில் பதிந்தவர் எனும் பெருமையாவது அவரிற்கு கிடைக்குமா எனில் 16ம் நூற்றாண்டில் காணாமல் போன அவரின் வரைபடம் இன்னம் யார் கைகளிற்கும் கிடைக்கவில்லை. ஆக கடலோடிகள் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படும் கொலம்பஸ் இழந்து கொண்டிருக்கும் பெயரைக் காப்பாற்ற யாரும் இல்லையா என கதறி ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஸ்டீவ் பெரியின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

ஸ்டீவ் பெரி வரலாற்று மர்மக்கதைகள் எழுதுபவர். இதுவரை 10க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய The Columbus Affair சனி பகவான் அருளால் என் பார்வையில் பட்டது. கொலம்பஸ், நாஸ்ட்ராடமுஸ், டாவின்ஸி, மிக்கேல் ஏஞ்சலோ எனும் பெயர்களை கண்டவுடனேயே கவிழ்ந்துவிடும் எனக்கு இந்நாவலை படித்தேயாக வேண்டும் எனும் ஆசை வந்ததில் என்ன தவறு இருக்க முடியும். மேலும் என்னைப்போன்ற ஏமாளிகள் இல்லையெனில் ஸ்டீவ் பெரியின் நாவல்களை படிப்பது யார்?  உண்மையில் ஏமாளிகளை தவிர்த்து ஸ்டீவ் பெரியின் நாவல்களை தொடர்ந்தும் படிப்பவர்கள் அவர் ஜீவிதம் நடாத்த வேண்டும் எனும் நல்லவுள்ளம் கொண்ட உயர்ந்தவர்கள் எனவே நான் எண்ணுகிறேன். அவர்கள் மட்டும் சற்று கல்மனம் கொண்டவர்களாகவும் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை இன்னம் மறக்காமலும் இருப்பவர்களாக இருந்தால் ஸ்டீவ் பெரி இன்று கொலம்பஸ் கண்டுபிடித்ததாக பீலா விட்டுக் கொண்ட நிலத்தில் புல்லு செதுக்கி கொண்டிருப்பார்.

கொலம்பஸ் செய்த பயணத்திற்கு காரணம் வணிகம் அல்ல எனவும் அதன் பின்பாக ஒரு இனம் அழியாது இருப்பது  தங்கியிருக்கிறது எனவும் தன் கற்பனையால் கோலம் போடுகிறார் ஸ்டீவ் பெரி. கொலம்பஸ் உண்மையில் யார் என்பதையும் அவர் இனவடையாளம் என்ன என்பதையும் மிகவும் சிரமப்பட்டு சொல்ல விழைகிறார் அவர். இதற்கு சான்றாக சில வரலாற்று தகவல்கள் கூடவே தன் அபாரமான வறட்டுக் கற்பனையால் படைத்த தகவல்கள். இவ்வாறு கொலம்பஸ் செய்த அப்பயணத்தின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இன்றைய நாளில் ஒரு முக்கிய ஸ்தலத்தை தேடி தேடலில் இறங்கும் ஒரு கொடியவன். அவனை எதிர்க்கும் ஒரு அல்லது சில மனிதர்கள்.

கொலம்பஸ் குறித்த வரலாற்று தகவல்கள் இல்லை எனில் இந்நாவல் சுண்டல் சுற்றக்கூட உதவிடாது [ இருந்தாலும் உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது]. ஆகவே கொலம்பஸ் குறித்த தகவல்களை அதிகம் தந்து சமாளித்து இருக்கிறார் ஸ்டீவ் பெரி. ஆனால் இந்நாவலில் வரும் கதாமாந்தர்கள் போன்ற அறிவிலிகளை நீங்கள் எங்கும் சந்திக்கப் போவது இல்லை. நம்ப இயலவில்லையா? நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு முன்னாள் பிரபல பத்திரிகையாளன், யூத செல்வந்தன், இஸ்ரேலிய தூதரக இயக்குனர், அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, ஜமைக்கா தாதா என ஒருவரிற்கு ஒருவர் யார் சிறந்த அறிவிலி என்பதற்கு  கதையில் பெரும்போட்டியே நடக்கிறது. ஆனால் இப்போட்டியில் எளிதாக பரிசை வெல்வது பத்திரிகையாளன் மகளான ஆல். இப்படி ஒரு அறிவிலியை இக்கதையில் வரும் பாத்திரங்கள்கூட கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வகையான கதைகள் பல நாடுகளில் கதைக் களத்தை கொண்டிருக்க வேண்டும் எனும் வரைவிலக்கணப்படி அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜமைக்கா போன்ற நாடுகளில் இக்கதை சம்பவங்கள் நிகழ்கிறது.  உல்லாச வழிகாட்டி தகவல்களை பார்த்து பிரதி செய்து எழுதியதைப் போல் தகவல்களை அள்ளி வீசுகிறார் ஸ்டீவ் பெரி. ஆஸ்திரியா, ஜமைக்கா, மற்றும் வார இறுதியில் க்யுபா செல்பவர்கள் தங்கள் வழிகாட்டி ஏடாக இந்நாவலை பயன்படுத்தலாம். தகவல்கள் சரியாக இல்லை எனில் ஸ்டீவ் பெரிக்கு சரியான தகவல்களை நீங்கள் அனுப்பி வைத்தும் உதவலாம்.

அவன் கைகள் நடுங்கின.
அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
துப்பாக்கியின் முனை அவன் நெற்றியை அழுத்தியது.
அவன் விரல்கள் விசையை அமுக்கின.
வீட்டின் கதவு தட்டப்பட்டது.

இதுதான் ஸ்டீவ் பெரியின் அட்டகாசமான கதை சொல்லும் பாணி. அது மட்டுமல்லாது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும் உத்தி வேறு. வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிக்கு இதைவிட வேறுவழி இன்னம் வசப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

அவன் துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.
அவன் விரல்கள் துப்பாக்கி விசையை அழுத்தின.
துப்பாக்கி வெடித்தது.

இது நான் எழுதியது. வெடித்த துப்பாக்கியின் முனையில் இருக்கும் நெற்றி ஸ்டீவ் பெரியினுடையதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா. ஸ்டீவ் பெரியின் எழுத்துக்களிற்கு ஒத்த சொல், மொக்கை!

Friday, April 19, 2013

நிற்றல்- சரிதல்

1936களில் சீனாவின் தெற்குபகுதியில் அமைந்திருக்கும் Foshan எனுமிடத்தில் ஆரம்பமாகிறது இயக்குனர் Wong Kar-wai ன் திரைப்படமான The Grand Master. கொட்டும் மழையில் தன்னுடன் பொருத வந்தவர்களை எதிர்ப்பவராகவும் திரைப்படத்தின் கதையை இறுதிவரை கூறிச்செல்பவராகவும் அறிமுகமாகிறார் Wing Chun எனும் தற்காப்பு கலைப் பாணியின் கலைஞரான Ip Man. ஆனால் திரைப்படம் இப் மேனை கதை சொல்லியாக கொண்டாலும் அவரை பிரதானமான ஒருவராக அது முன்னிறுத்த விழையவில்லை. கதையின் நாயகன் எனும் மயக்கத்தை தரும் விதமாக இப் மேன் பாத்திரத்தின் ஆதிக்கம் திரையிலிருந்தாலும  கதையானது குங்ஃபூவின் இன்னம் சில ஆசான்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஓடிச் செல்லும் காலத்துடன், இப்மேனும் ஏனைய ஆசான்களும், அவர்களின் ஒப்பற்ற கலையான குங்ஃபூவும் எவ்வாறான முடிவுகளை நோக்கி நகர்ந்தன என்பதே திரைப்படத்தின் பிராதான இழையாக என்னால் உணரப்பட முடிகிறது.

ஃபோசானில் மிகுந்த வசதிபடைத்தவராக வாழ்ந்திருந்த இப்மேனின் வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பின்பாக எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது. ஹாங்ஹாங்கிற்கு வந்து சேரும் இப்மேன் அங்கு எப்படியான ஒருவராக மாற்றம் கொள்கிறார் எனும் இருபுள்ளிகளிற்கு இடையில், மா சான், கொங் எர், ரேஸர் எனும் மூன்று பேராசான்களின் குங்ஃபூ பாணிகளையும், அவற்றுடன்  பொருதிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையையும் திரைப்படம் விபரிக்கிறது. கூடவே குங்ஃபூ என்பது  நாம் வழமையாக பார்ப்பதுபோல மலிவான சர்க்கஸோ அல்லது ஸ்டண்ட் வித்தையோ அல்லது பணத்திற்காக ஆடப்படும் கேளிக்கை கூத்தோ அல்ல என்பதையும் அது மிக ஆழமாக உணரச் செய்கிறது.

ஒரு குரு தான் ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின் ஒருவனை நியமிப்பது வழக்கம். குங்ஃபூ எனும் கலை பல பள்ளிகளையும், பாணிகளையும், ஆசான்களையும் கொண்ட ஒரு பெருங்கலையாகும். இவற்றை ஒரு குடையின்கீழ் கொணர்ந்து சீன தற்காப்பு கலைகளின் பெருந்தலைவராக இருக்கும் பாவோசான், சீனாவின் மேற்குப் பகுதியில் தன் சீடனான மா சானை தனக்கு பின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக தேர்வு செய்கிறார். தெற்கு பகுதியின் தலைமைக்காக அவர் தன்னுடன் ஒருவர் பொருதி வெல்ல வேண்டும் என அறிவிக்கிறார். தெற்கு பகுதி குங்ஃபூ ஆசான்கள் அவர்களின் பிரதிநிதியாக இப்மேனை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்மேன் பேராசான் பாவோசான் அவர்களுடன் தன் நடனத்தை நிகழ்த்துகிறான்.

குங்ஃபூ கரங்களை ஆயுதமாக்குகிறது, சித்தாந்தங்களை தியானமாக்குகிறது, வன்முறை என்பதை வக்கிரம் ஆக்குகிறது, தற்காப்பு கலையினை ஒரு நடனம் போலவே அழகான ஒன்றாக்குகிறது. திரைப்படம் முழுதும் சண்டைக் காட்சிகளிற்கு பதில் அழகான நடனங்களை உருவாக்கி தந்திருக்கிறார் கலைஞர் Yuen Woo-ping. அவர் உருவாக்கி தந்திருக்கும் அந்த நடனக் காட்சிகள் விசிலடிக்க வைக்கவில்லை மாறாக அந்நடனங்களினுள் ஒருவனை தன்னை இழக்க செய்கின்றன, அந்த அசைவுகளின் நளினங்களிலும், அந்த நளினங்கள் பிறப்பிக்கும் உணர்வுகளிலும் கிடைத்திடும் திரையனுபவம் அலாதியானது. இதுவரை திரைகளில் பார்த்த குங்ஃபூ மோதல் காட்சிகளின் வக்கிரம் உறைக்கும் தருணமது. கலையென்பது  கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போது அதுவும் அதற்கென தம்மை அர்பணித்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போதும் அங்கு உருப்பெறும் ஆத்ம நடனத்தின் ஒரு சிறு சாட்சியாக இப்படத்தின் மோதல் காட்சிகள் உளப்புலன்களிற்கு விருந்தாகின்றன. இயக்குனர் வொங் கார் வாய் அவர்களின் நெறியாள்கையில் அக்காட்சிகள் திரையில் பெறும் பிரசன்னம் உன்னதமான ஒன்றாக இருக்கிறது.

 பேராசான் பாவோசானுடனான இப்மேனின் நடனத்தின் பின்பாக கதை பேராசனின் மகள் கொங் எர் இப்மேனிற்கு விடுக்கும் சவால், அதன் பின்பாக இப்மேனிற்கும் கொங் எரிற்குமிடையில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு மதிப்புணர்வு மற்றும் சொல்லப்படாத ஒரு காதல், மா சான் இழைக்கும் துரோகம், அந்த துரோகத்திற்கான வஞ்சத்தையும், தன் குடும்பத்தின் கவுரவத்தையும் மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கொங் எர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ரேஸர் எனும் ஆசானின் கதை, உள்நாட்டு யுத்தம், ஹாங்ஹாங்கில் மூன்று கதாமாந்தர்களின் நிலை என்பதாக கதை பயணிக்கிறது. ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது கொங் எர் பாத்திரமே. அந்த பெண் கலைஞியின் கதை மட்டுமே இப்படத்தில் முழுமை கொண்டது என்பேன் நான். இப்மேனும் சரி ஏனைய பாத்திரங்களும் சரி குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் நகர்வை காலத்தின் ஒரு புள்ளிக்கு எடுத்து வர உதவும் காவிகளாகவே இப்படைப்பில் எனக்கு தெரிகிறார்கள். எனவேதான் அவர்களின் கதைகள் முற்றுப் பெறா ஒரு நிலையை அடைகின்றன. திரைப்படமும் முழுமை காணா ஒரு படைப்பின் அழகு போன்ற அலைகளை மனதிற்குள் நீர்வரிபோல எழுதுகிறது. அந்த அலைவரிகளின் மேல் தம் அற்புதமான திறமையால் அழகு செய்கிறார்கள் நடிகர்கள்.

 வொங் கார் வாய் மிகவும் அழகுணர்ச்சி கொண்ட இயக்குனர். அவர் படைப்பு அழகால் செதுக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் இன்னொரு ஜீவ நாடி இசை, படைப்பின் உயிர்வண்ணமாக ஒலிப்பதிவு, ஆன்மாவின் சிமிட்டலாக எடிட்டிங். இவ்வாறாக முழுமை தரா ஒரு படைப்பாக இருந்தாலும் அதன் படைப்பில் இவை யாவும் கலந்தே அதை சிறப்பான ஒரு திரையனுபவமாக்குகின்றன. வசனங்களில் கலந்திருக்கும் சித்தாத்தங்கள்  அவற்றை சாதாரண திரைவசனங்களாக கடந்து செல்ல தடைவிதிக்கின்றன. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இப்மேனிற்கு ஒரு சிறுவன் சீடனாக வந்து சேருவான். அவன் யார் என்பதை உங்களிற்கு சொல்ல தேவையில்லை. திரைப்படமும் சொல்லாது. வொங் கார் வாய் இம்முறை தந்திருப்பது குங்ஃபூ எனும் தற்காப்பு கலைக்குரிய ஒரு கவுரவத்தை. மிக மிக அழகாக. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட. நிற்றலிலிம்- சரிதலிலும் இருக்கும் அழகின் உணரனுபவமே அவரின் இப்படைப்பு.




Wednesday, April 17, 2013

ஜோன்ஸ் வடை !

முன்பெல்லாம் வீட்டில் எலித்தொல்லை அதிகமாகும்போது எலிப்பொறி எனும் அழிவாயுதத்தின் உதவியை நாடிச் செல்வதென்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. எலிப்பாசனங்கள் எனும் ரசாயான ஆயுதம் அறிமுகமாகியது எலிப்பொறியின் செயற்திறனில் எலியினவழிப்பாளர்களின் நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்த வேளையிலேதான். மேலும் எலிப்பொறியில் எலியைக் கவர அதற்கு பிடித்த ஏதாவது ஒன்றை லாகவமாக பொருத்தி பொறியை இழுத்துவிட வேண்டும். தேங்காய் துண்டு, வடையின் ஒரு பகுதி போன்றன நம்மூரில் எலிகளிற்கு பிடித்த விடயங்களில் முன்னணியில் இருந்தன. மேற்குலகில் இவற்றிற்கு பதிலாக பாற்கட்டி. இருப்பினும் எலிகளிற்கு புத்தகங்களையும் பிடிக்கும். ஆனால் அவற்றை யாரும் பொறிகளில் வைத்ததாக நான் அறிந்தது இல்லை. இப்படி பொறிகள் வைத்தாலும் அகப்படாது தண்ணி காட்டும் எலிகள் உண்டு. எல்லாப் பொறிகளையும், ரசாயனங்களையும், பூனை போன்ற உயிராயுதங்களையும் தாண்டி வென்று இயற்கை மரணத்தை ஹெமிங்வே எழுதிய நூலொன்றை சுவைத்தபடியே இறந்துபோன எலிகள் வரலாற்றில் உண்டு. மக்லேன், ஹெமிங்வேயை படித்ததாக வான்ஹாம் எழுதியது இல்லை ஆனால் எல்லா வகையான பொறிகளையும் சமார்த்தியமாக கடந்து வெல்லும் ஒரு எலியாக நாம் மக்லேன் மாமா அவர்களை உருவகப்படுத்தலாம்.

எனவே தங்கள் கைகளில் சிக்காது எஸ்கேப்பாகி இயற்கையில் கலந்துபோன மக் மாமாவை அவர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமாயின் அவரிற்கு பிடித்தமான ஒரு பொருளை பொறி ஒன்றில் வைத்தால் போதும் என்பதுதான் XIII - L'Appat  கதையில் USAFE அமைப்பு பிரயோகிக்கும் ராஜதந்திரம். மக்லேன் மாமாவிற்கு பிடித்த பொருள் என்னவென்று தேடியதில் அவர்களிற்கு விடையாக கறுப்பு வைரம் ஜோன்சையும், பொறியை வைக்குமிடம் எது என்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானையும் கதாசிரியர் ஈவ்ஸ் செண்ட் வழங்கியுதவியிருக்கிறார்.

தனக்கு மிகவும் பிடித்தமான காலனல் ஜேம்ஸ், கொடிய தலீபான்கள் கையில் அதுவும் ஒற்றைக்கண்ணுடைய ஒருவரை தலீபான் அணி தலைவராக கொண்ட ஒரு குழுவின் பிடியில் மாட்டிக் கொள்ளும்போது, தலீபான்களும் வீடீயோ கமெராக்கள் வழியாக பயணக் கைதிகள் சிலரின் தலைகள் உருளுவதை வெளியுலகிற்கு அனுப்பி வைக்கும்போது, தன் உயிரிற்கு நெருக்கமான ஜோன்சை மீட்க ஓடிச் செல்கிறார் மக்லேன். மக்லேனை இந்த திட்டத்திற்குள் இழுக்கும் கயிறாக ஜெனரல் காரிங்டன். கதையின் இன்னொரு தளத்தில் Betty மக்லேன் கேட்டுக் கொண்ட சில ரகசியங்களையும், தகவல்களையும் கண்டறிய பயணிக்கிறாள். அவளை அமெரிக்க காவல்துறை, FBI, மற்றும் ஒரு மாஃபியா குழு துரத்துகிறது.

பிரான்சிலிருந்து எந்த சிக்கலுமில்லாது பாகிஸ்தான்
சென்றிறங்கி அங்கிருந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் பனிசிஸ்தான் எனும் தலீபான்களின் மலைகோட்டை குகைக்குள் - இங்கு ஆப்கானிஸ்தானும் சரி பாக்கிஸ்தானும் சரி ஏன் அமெரிக்க படைகளும் சரி நெருங்கவே முடியாதாம் - காரிங்டனுடன் நுழைந்து அது USAFE ன் சதி என்பதை மக் மாமாவும், காரிங்டனும் அறிந்து கொள்ளும்வரை கதை என்பது நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது.  வழமைபோலவே தர்க்கம் எல்லாம் பார்க்காது கதையை படித்திட வேண்டியது ஒன்றுதான் வழி. அதேபோல தனியாளாக Betty நிகழ்த்தும் சாகசங்களை விழுங்கி கொள்ள திமிங்கலமாக இருந்தால் மட்டுமே முடியும். இவ்வளவு வருடமாக இக்கதையை படித்துக் கொண்டு வரும் ஒரு வாசகன் கதையில் இன்னம் கொஞ்சம் நம்பகத்தன்மையுள்ள களத்தையும், நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சிறிது புத்திசாலித்தனத்தையும் எதிர்பார்த்தால் அது இங்கு கிடைக்காது வேறிடம் பாருங்கள் என அடித்துக் கூறுகிறார் கதாசிரியர் ஈவ் சென்ட்.

ஆப்கானிஸ்தானில் அருமையான ப்ரியாணி ஒன்றை மக் மாமாவிற்கு அறிமுகப்படுத்தும் காரிங்டன், ஜோன்ஸ் தப்பிக்க வசதியாக பாரசூட்டை அவர் தப்பிச் செல்லும் வழியில் வைத்த தலீபான்கள், என் தண்ணீர் பாட்டிலிற்குள் இருப்பது நைட்ரோ கிளிசரின் என மிரட்டி தலீபான்களை நம்ப வைக்கும் காரிங்டன்-- இந்த தலிபான்களைத்தான் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினரால் நெருங்கவே முடியவில்லை!!-- தன்னை பலர் பின் தொடரக்கூடும் என்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாது மதுவை சுவைத்தபடியே உள்ளாடைகளுடன் ரிலாக்ஸாக ஸாக்காரியாஸ் காத்தவேயின் டைரியை படிக்கும் Betty, இப்படியாக செமையான காமெடிகள் இந்த ஆல்பத்தில் உண்டு.  மேலும் மக்லேன் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்த டோரதி எனும் பூனை மேஃப்ளவர் எனும் அந்தக் கப்பலின் மாதிரியாக உருவாக்கப்பட்ட கப்பலில் Betty க்காக காத்திருப்பது.... என்ன ஒரு குறியீடு. பின்னிட்டாங்க.

ஒரே ஒரு ஆறுதல் ஜிகுனோவின் சித்திரங்கள். பனிசிஸ்தான் மலைப்பகுதிகளில் அவர் வரைந்து வழங்கியிருக்கும் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. அவர் சித்திரங்கள் நவீன நுட்பங்களுடன் மெருகேறியிருக்கிறது என்பது தெளிவு.

ஆப்கானிஸ்தானிலேயே மக் மாமாவிற்கு பொறி வைத்த USAFE அவனை தன் பக்கம் இழுத்திட எடுத்திடப் போகும் நடவடிக்கைகளுடனும், மக்லேன் கேட்டுக் கொண்ட தகவல்களை அறிய ரயிலில் பயணிக்கும் Betty யின் புதிர்கள் கோலமிட்ட முகத்துடன் விரையும் ரயிலின் முகத்துடனும் நிறைவு பெறும் இரண்டாம் சுற்றின் இரண்டாம் ஆல்பத்தினை வாசித்து முடிக்கையில் எம் முகத்தில் பூத்திருக்ககூடியது முட்டாள் களை மாத்திரமே !!

Friday, April 12, 2013

விடுமுறைக் கொலைஞன் !

மர்மக் கொலைஞன் ஒருவன் விடுமுறை தினங்களில்! கொத்தம் நகரில் கொலைகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறான். கொத்தம் நகர ஊடகங்கள் இவனை ஹாலிடே என அழைக்க ஆரம்பிக்கின்றன. கொத்தம் நகரின் முதன்மை மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனின் ஆதிக்கத்திலிருந்து நகரத்தை விடுவிக்க வேண்டும் என விரும்பும் பேட், விடுமுறைதின கொலைஞன் ஹாலிடே யார் என்பதையும் அறிய தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்….
கார்மைன் பால்கனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியின் திருமணத்தில் ஆரம்பமாகிறது Jeph Loeb ன் கதையான The Long Halloween. அங்கிருந்து நகரும் கதை முடிவை எட்ட பதின்மூன்று அத்தியாங்களை தனதாக்கி கொண்டிருக்கிறது. ஜெப் லீப்பின் கதை பேட்மேன் கொத்தம் நகரில் இயங்க ஆரம்பித்ததின் ஆரம்ப காலங்களில் கூறப்படுகிறது. மாஃபியா தலைவன் கார்மைன் பால்கனை எப்படியாவது சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என பேட்மேன், ஹார்வி டென்ட், ஜிம் ஹோர்டான் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். கேட் வுமனும் இதில் கார்மைனிற்கு எதிராக பேட்மேனிற்கு உதவ முன்வருகிறாள்.
கார்மைன் பால்கான் அசைக்க முடியாத குற்றத்தலைவனாக இருக்கிறான். அவன் இடத்திற்கு போட்டியாக மரோனி எனும் இன்னொரு தலைவன். இவர்களிற்கிடையில் இருக்கும் போட்டியும், நட்பும் சந்தர்ப்பங்களை பொறுத்து இடம் மாறிக் கொண்டே இருக்கும். கதையில் இந்த இடம் மாறலை லீப் சிறப்பாக பயன்படுத்தி இருப்பார். எதிரி நண்பனாவதும், நண்பன் குழிபறிப்பதும் என திருப்பங்களின் உருவாக்கத்திற்கு இந்த இரு மாஃபியா தலைவர்களிற்கும் இடையிலான உறவும் பயன்படுகிறது. அதே போல நீதியின் காவலர்களான பேட், ஹார்வி, ஹோர்டான் ஆகியோரிற்கு இடையிலான உறவும் கதையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும். பேட் தான் நம்பிக்கை வைக்கும் இரு மனிதர்களாகவே ஹோர்டானையும், ஹார்வியைம் சித்தரிக்கிறார். இவர்களிற்கிடையே உள்ள நம்பிக்கையில் விரிசல் தன் ரேகைகளை பதிக்கும்போது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையின் உறுதி கொள்ளும் கோலங்களையும் கதாசிரியர் கதையில் வெளிக் கொணர தவறவில்லை.
ஹோர்டான், ஹார்வி இருவருமே தம் பணிக்காக தம் குடும்ப வாழ்க்கையை பெரிதும் இழப்பவர்களாக கதையில் காட்டப்பட்டு இருப்பார்கள். பேட்மேன் அல்லது ப்ரூஸ் வெய்ன் தனிமையிலும், கடந்தகால நினைவுகளிலும் மூழ்கி ஏங்குவதாக கதை சித்தரிக்கிறது. முன்னைய இருவரினதும் மனைவிகள் எவ்வளவு பொறுமை கொண்டவர்கள் என்பதை கதை பெரிதுபடுத்தாமல் அழுத்தமாக விதைக்கிறது. இல்லறத் துணைவர்களின் பணிச்சுமை அவர்களை ஓயாது அழுத்தும் இயந்திரமாக இயங்கி கொண்டிருக்க, வீடு திரும்பும் வேளைகளில் தம் குடும்ப கடமைகள் குறித்த குற்றவுணர்வு ஒரு கையாலாகா தீயாக அவர்களில் முகிழ, அதைக் கிள்ளி வீசி எறிந்து தம் துணைகளை பெரிதும் அணைத்துக் கொள்ளும் துணைவிகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். தம் துணைவர்கள் தம்முடன் வாழ வேண்டிய காலத்தை அவர்கள் பணி பறித்துக் கொள்கிறதே எனும் வேதனையை அவர்கள் முகங்களில் குடியேறி இருக்கும் அயர்ச்சியும், அவர்கள் உதிர்க்கும் அழுத்தம் கலந்த சொற்களும் தெளிவாக முன்னிறுத்துகிறது. ஏன் அவர்கள் இந்த கொத்தம் நகரை விட்டு சென்று விடக்கூடாது எனும் கேள்வியையும் அது கதையில் பிறப்பிகிறது. ஏன் எனும் கேள்விக்கு பதிலை பேட்மேன் வழியாகவே கதை அளிக்கிறது. அனைவரும் நீதிக்கு தரும் விலை என ஒன்று இருக்கிறது. இவர்கள் அனைவரும், பேட் உட்பட நீதிக்கும் சுதந்திரத்திற்கும் வழங்கும் விலை கொத்தம் நகரில் வாழ்ந்திருப்பதுதான்.
கதையின் பிரதான பாத்திரங்களிற்கும் அவர்களின் தாய், தந்தையர்களிற்கும் இடையிலான உறவையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை. அந்த உறவுகளே இன்று அப்பாத்திரங்களின் வாழ்நிலைக்கு காரணமாக அமைந்தது என்பதை வாசிப்பினூடு ஒருவர் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பேட்மேனின் பெற்றோரின் மரணம் அவரை ஒரு நீதிக்காவலானக நிறுத்தியது எனும் அதே வேளையில் மரோனியின் தந்தையால் மரோனி வன்முறையினதும், அதிகார ஆதிக்கத்தினதும் உச்ச எல்லைகளை கையகப்படுத்த நோக்கி நகர்த்தப்படும் ஆடுகாயாகவே இருக்கிறான். தம் புத்திரர்களின் கொலைகளிற்கு பின்னாக கார்மைனும், கார்லாவும் எடுக்கும் அவதாரம் வன்முறையின் பாசக்கோலமே. இவ்வகையில் பேட்மேனும், ஹார்வியும் தமக்கென பெற்றோர் இல்லாத நிலையில் தம்முள் வாடும் நிலையை பக்கங்கள் சிறிதேனும் விபரித்தே செல்கின்றன. ஒவ்வொரு தனயனிற்காகவும் பெற்றோர் சிந்தும் கண்ணீரிலும் பெற்றோரிற்காக தனயர் சிந்தும் கண்ணீரிலும்தான் கல்லறை வளர் புற்களின் பசுமைநுனி பனித்துளிகள் உயிர்ப்பாக இருக்கின்றதா? சிந்த வைக்கப்படும் குருதியிலும், சிந்தும் குருதியிலும் பாசத்தின் வண்ணத்தை காண்பவர்கள் மனிதர்கள் இல்லையா? நீதியும், குற்றமும் மனிதர்கள்தானே.
tg1ஒவ்வொரு மாதமும் விடுமுறை தினமன்று கொலைகளை செய்யும் குற்றவாளி மிக புத்திசாலித்தனமாக தன் கொலைகளை ஆற்றுவான். குற்ற மனதானது நீதிக்கு விடும் அபாரமான சவாலாக இதை இங்கு எடுத்துக் கொள்ளலாம். புதினங்களை தவிர்த்து உலகில் எத்தனை கொலைகளின் உண்மையான ஆற்றுனர்களிற்கு நீதி வழி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதி ஒரு நகைச்சுவை நாடகம் என்பதை புரியாத மனங்கள் அல்லவே நாங்கள். புதினங்களிலாவது நீதியை உணரந்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான். பிரான்சில் தற்போது மார்சைய், மற்றும் கோர்ஸ் எனும் இருபகுதிகளில் இடம்பெற்று வரும் தொடர் குற்ற உச்சங்களும் அதை தடுக்க முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டு வேடிக்கை பொருளாகிப் போன பிரான்ஸ் நீதி, மற்றும் காவல் துறைகளும் இதற்கு மிக சிறப்பான ஒரு உதாரணம் ஆகும். நீதி வகுத்துள்ள வழிகளில் குற்றத்தை வெல்வது என்பதும் வேடிக்கையான ஒரு சவால் அல்லவா? ஆனால் இங்கு பேட்மேன் கூட்டணி நீதி வகுத்த வழிகளிலேயே பெரிதும் செயற்பட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு தரும் விலை அதிகமானது. ஒரு மனிதன் இரு ஆளுமைகளாக பிளவுபட்டுப் போகும் பரிதாபமான முடிவை, பேட்மேன் கதையில் உறுதியாக தன் மனதின் வேதனையாக நிலை நிறுத்துவார்.
விடுமுறைதின கொலைஞனாகிய ஹாலிடே முதல் ஆற்றும் கொலை கார்மைனின் சகோதரி கார்லா விட்டியின் மகன் ஜானி விட்டியினுடையது. கொலை ஸ்தலத்தில் சில பொருட்களை விட்டு செல்வதன் மூலம் தான் ஒரு தொடர் கொலைஞன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்வான் ஹாலிடே. கார்மைனிற்கு நெருக்கமானவர்களை ஹாலிடே கொல்வதன் வழி அவன் ஒரு வகையில் அந்த மாஃபியா தலைவனை பலவீனமாக்குகிறான். கார்மைனும் ஹாலிடே யார் என்பதை அறிய விளைகிறான். இங்கு குற்றங்கள் வழி குற்றத்திற்கு முடிவு காணும் செயற்பாட்டை வாசகர் உணரலாம். ஆனால் நீதியில் இதற்கு இடமில்லை எனும் வகையில் பேட்மேனும் அவர் சகாக்களும் சுழல்புதிரில் சிக்கி திணற வேண்டியே இருக்கிறது. பேட்மேன் சுழல்புதிரில் மட்டுமல்ல கேட்வுமன், பாய்சன் ஐவி ஆகிய பெண்களிடமும் மாட்டவே செய்கிறார். இருவருமே பேட்மேனை தம் கவர்ச்சிக்குள் இட்டு வர விரும்புவதை கதையில் காணலாம். இதுவே சில சமயங்களில் அவரின் மீட்சியாகவும் கதையில் செயற்படுகிறது.
tlh3கார்மைன் மட்டுமல்ல நீதியின் காவலர்களும் ஹாலிடே யார் என்பதை அறிய ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கு பேட்மேன் ஆர்க்காம் காப்பகத்திலுள்ள காலண்டர் மேனிடம் சில தகவல்களை வேண்டுவார். ஆக குற்றத்தின் நகர்பாதையை குற்றமூளை வழியே குறுக்கு வழியால் சென்று கண்டடையவே பேட்மேன் உட்பட அனைவரும் விரும்புகிறார்கள். கார்மைன், ரிட்லரின் திறமையை இதற்காக பயன்படுத்திக் கொள்வான். ஆக குற்றம், நீதி என இரு எதிர்புள்ளிகளும் போட்டியிட்டு தேடும் ஒரு மர்மமாகவே ஹாலிடே கதையில் இருக்கிறான். குற்றமும், நீதியும் தேடி அறிய முடியா புதிராக அவன் கதையில் உருக்கொள்கிறான். இந்த இரு எதிர்புள்ளிகளினதும் எதிர்புள்ளியாக அவன் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படியானால் நீதிக்கும், குற்றத்திற்கும் எதிரான அப்புள்ளிக்கு நீதியில் வழங்கப்படக்கூடிய பெயர் என்ன?! அவன் குறித்த கணிப்புக்கள் அடையாளங்கள் எல்லாம் ஒருவனைக் காட்டி நிற்பதற்கு பதிலாக பல சாத்தியங்களை முன்னிறுத்துகின்றன. இந்த சாத்தியங்கள் உருவாக்கும் சந்தேகங்கள் கதையின் புதிர்தன்மையை அதிகரிக்கின்றன. கதையின் நீட்சியை ஒரு கட்டத்தில் இழுவை என வாசகன் தீர்மானிக்கும் நேரத்தில் அவன் தீர்மானத்தை அவை விலக செய்கின்றன. வாசகனும் துப்பறிவாளனே என்பது குற்றப்புனைவுகளின் இன்னுமொரு பக்கம். வாசிப்பினூடு வாசகனும் குற்றவாளியை தேடுவான், நாயகர்களிற்கு முன்பாக அதை கண்டடைய முயற்சிப்பான், சில சமயங்களில் வெற்றியும் காண்பான். அது இந்தப் படைப்பிலும் நிகழும் ஆனால் அதற்கும் ஒரு பரிகாரத்தை ஜெப் லீப் வைத்திருக்கிறார். அதுவே இக்கதையை சுவாரஸ்யமான ஒன்றாக ஆக்குகிறது. குற்றவாளி இவர்தான் என யாவும் சுட்டிக் காட்டினாலும் வாசகன் மனதில் ஒரு முனையில் முளைத்து நிற்கும் ஒரு சந்தேகம்தான் இக்கதையை பேட்மேன் கதைகளில் தனித்து நிற்க வைக்க முயல்கிறது.
tlh 2தனித்து நிற்க வேண்டும் என்பதில் உச்ச ஆர்வம் கொண்ட ஜோக்கர், ஹாலிடே யார் என அறிவதற்காக ஆடும் ஆட்டம் ஜோக்கர் பாத்திரத்தினை இரு அத்தியாயங்களில் உறுதியாக நீரூபிக்க முயல்கிறது எனலாம். எந்த ஆணும் தன் கவர்ச்சியில் இருந்து தப்ப முடியாது என்பதை பாய்சன் ஐவியும் காட்டிச் செல்கிறாள். கேட் வுமன் செயல்களில் உள்ள மர்மம் கதையின் ஓட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. கொத்தம் நகர காவல்துறையின் ஊழலிற்கு மனிதர்கள் தரும் விலையின் வலியும் கதையின் நெடுகே காட்டப்படுகிறது. இதுவே நீதியின் முகத்தையும் பதம் பார்க்கும் ஒரு காரணியாக இறுதியில் அமைந்து விடுகிறது. பேட்மேனின் பிரதான எதிர்நாயகர்களை சுவையான வகையில் கதையின் திருப்பங்களிற்காக ஜெப் லீப் பயன்படுத்தி இருப்பார். ஹார்வி டெண்டின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அவரால் சொல்லப்பட்டு இருக்கிறது எனலாம். கதையின் இறுதிப் பக்கம்வரை விசுவாசமாக வரும் ஒரு வாசகனே ஹார்வியின் வாழ்க்கையின் ஆழ்சோக நிழல்களின் வேதனையை உணர்ந்து கொள்ளமுடியும். நாணயங்களின் பக்கங்கள் தீர்மானிப்பதை முடிவாக எடுக்கும் ஒருவனின் வாழ்க்கையின் நாணயமான பக்கத்தின் அர்த்தம் எவ்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தன்னுள்ளே இறக்கி கொள்ள முடியும்.
மனித உறவுகள், நீதி, குற்றம், தன்னிலை, தீர்ப்பு என்பவற்றை கொத்தம் நகர வாசிகளைக் கொண்டு அருமையாக களப்படுத்தி பார்வையாக முன்வைத்து இருக்கும் இக்கதையின் இரண்டாவது உயிர் இதன் சித்திரக் கலைஞர் Tim Sale. கதையின் இருள்மையை உயிர்க்க வைப்பவர் இவரே. அத்தியாயத்திற்கு அத்தியாயம் தன் திறமையை அட்டைப்படம் முதல், இறுதிப்பக்கம்வரை அவர் பல இடங்களில் நிரூபித்துக் கொண்டே இருப்பார். அவர் சித்திரங்களிற்காகவேனும் இதை நீங்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்திடலாம் . குற்றவாளி என நீங்கள் கருதும் ஒருவன் உங்கள் மனதில் விதைக்கும் சிந்திக்க வைக்கும் ஒரு கேள்வி உங்கள் கணிப்புக்களையும், முடிவுகளையும் மறுபடியும் விசாரணை செய்ய தூண்டும். ஹாலிடே யார் என்பதும் உங்கள் அகவிசாரணையிலேயே இருக்கிறது. பேட்மேன் படைப்புக்களில் நான் விரும்பும் ஆழத்தை இக்கதை எட்டாவிடிலும் இது பேட்மேன் ரசிகர்கள் தவிர்க்க கூடாத ஒரு படைப்பு என்பேன்.

Wednesday, April 10, 2013

அன்புள்ள வேற்றுக்கிரகவாசிகளே.....


எம் அறிவிலும் சிறந்த பெருமதிப்பிற்குரிய வேற்றுக்கிரகவாசிகளிற்கு....

எப்போது பார்த்தாலும் நீங்கள் வாழ்ந்திருந்த நிலமானது தன்னுயிரை நீத்த பின்பாக அண்டம் விட்டு அண்டம் பாயும் நீங்கள், வாழுயிரிகள் வாழ் நிலங்களின் வளங்களை உறிஞ்சி அவற்றையும் மரிக்க வைப்பதாக காண்படைப்புக்களில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பூமியில் வாழ்ந்து வரும் முட்டாள்களாகிய நாங்களும் அவ்விடயத்தில் உங்களிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிவுள்ள எவரும் உடனே உணர்ந்து கொள்ள முடியும். இயற்கை வளங்களை சகட்டு மேனிக்கு நுகர்வுட்குட்படுத்திய அறிவியல், தொழில் நுட்ப, தொழில் துறை, சனத்தொகை வளர்ச்சி காரணமாக ஏற்கனவே எம் நிலம் முக்கால்வாசி கற்பழிக்கப்பட்டு விட்டது எஞ்சியிருப்பது சொற்பமே, அதுவும் விரைவில் அழிக்கப்பட்டு விடும்.

மேலும் நீங்கள் நினைப்பது போல் எங்களை எதிர்க்க சிறப்பான ஆயுதம் எதையும் உங்களை பிரம்மா என சொல்லியாக வேண்டிய அவசியம் தவிர்த்து நீங்கள் உருவாக்க தேவை இல்லை. எங்களை நாங்களே அழித்துக் கொள்வோம். இன, நிற, மொழி, கலாச்சார ஆயுதங்கள் மட்டுமன்றி அணு ஆயுதங்களும் நம்மிடம் உள்ளன. இல்லையேல் இருக்கவே இருக்கின்றன அணு உலைகளும், பூகம்பங்களும், சுனாமிகளும். அவைகள் அடங்கி இருந்தாலும் வேடிக்கை வாரிசுகளின் எல்லை தகராற்றில் எங்காவது, எப்போதாவது ஒன்று சும்மாவேனும் வெடிக்காமலா போய்விடும்.

ஆக உங்களிற்கு ஏன் வீண் அலைச்சல், சிரமம். நீங்கள் செய்ய போகும் இந்த உட்டாலங்கடியைதான் எந்த கிராபிக்ஸும் இல்லாது நாமே செய்து கொண்டிருக்கிறோமே ! எந்தக் கிலேசமும் இல்லாமல் !

உங்கள் உள்ளூர் ஏஜெண்டான ஜோசப் கொஸின்ஸ்கி கிராபிக் நாவல்கள் எழுதுவார் போல. அதைத்தான் உங்களிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதை நம்பி நீங்கள் உங்கள் இயந்திர அறிவு சேனைகளுடன் களத்தில் குதித்து அசிங்கப்பட்டு போக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உறிஞ்ச ஏதுமற்ற உடம்பில் கொசுவிற்கு என்ன வேலை. அதுவேதான் வரும் காலத்தில் உங்களிற்கும் மற்றும் இதே ஐடியாவில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் அனைத்து அறிவில் சிறந்த வே.கி.வாசிகளிற்கும்.

மேலும் இந்த ஏஜெண்டு நம்49 ஜாக் ஹீப்பர் போலவே ஒருவன் டாப் கன் எனும் படைப்பில் அதிவேக விமானத்தின் ஓட்டுனனாக எம்மை பழி வாங்கியிருக்கிறான். நம் 49 அச்சு அசல் அதே ஜாடை. என்ன இங்கு ட்ரான்களை ஓட்டுகிறான். அதுவும் ட்ரான்களை என்னவோ தானே ஓட்டுவது போல அவன் தரும் முக பாவங்கள் இருக்கிறதே அப்பப்பா. ஸ்டார் வார்ஸ் விண் ஓட துரத்தல்களை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைவூட்டியதற்கு அதனால்தான் நன்றி கூற முடியவில்லை. பெண் ஏஜெண்டுகள் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு திறமையா !

தயவு செய்து திரையரங்கு வாசலில் வைத்து ரசிகர்களின் நினைவுகளையும் ஒரு இரு மணி நேரத்திற்கு நீங்கள் அழித்து விடுவீர்களேயானால் டெட்டிற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

புண்ணியம் செய்யாத புவிவாசி.

Wednesday, April 3, 2013

அடிக்க முடியா மன்னன் !


வேங்கிக் கோட்டையின் கதவுகள் திறந்தே கிடந்தன! என மன்னன் மகள் நாவலின் இறுதிப்பகுதியின் ஒரு அத்தியாயத்தில் எழுதுகிறார் சாண்டில்யன். கங்கையை கொண்டபின் அரையன் ராஜராஜன் படைகளிற்கும் ராஜராஜேந்திரன் படைகளிற்கும் இடையில் தன் படையைக் காவு கொடுக்க விரும்பாத ஜெயசிம்ம சாளுக்கியன் மேலைச்சாளுக்கியத்திற்கு சோழர்படைக்கு எதிர்ப்பு ஏதும் காட்டாது சென்றுவிட்டதையே அவர் இப்படி எழுதுகிறார். ஆனால் இந்த எதிர்ப்பின்றிய பின்வாங்கலிற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கரிகாலன் எனும் கற்பனைப் பாத்திரம் வழியாக தன் நாவலில் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார் சாண்டில்யன்.

சூடாமணி விகாரத்திலிருந்து தர்க்க மற்றும் பல சாஸ்திரங்களை கற்று வெளியேறும் கரிகாலன் தன் பிறப்பின் ரகசியம் குறித்து அறியும் ஆவல் கொண்டவனாக இருக்கிறான். அவனின் அந்த தேடலின் குறுக்கே வருகிறாள் வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி. வேங்கி நாடோ சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதிக்கத்தில். இதை தன் தந்திரத்தால் கரிகாலன் எப்படி முறியடிக்கிறான் என்பது கதையின் கற்பனை இழை. இது ராஜேந்திர சோழனின் பராக்கிரம விஸ்தரிப்பு எனும் வரலாற்று தகவலுடன் இணைந்து ஒரு வரலாற்று சாகச சித்திரமாகிறது சாண்டில்யனின் வரிகளில்.

கதையின் பெரும்பகுதி கரிகாலன் தன் தர்க்க வலிமையால் எவ்வாறாக வேங்கி நாட்டை ரத்தக் களரி அதிகமில்லாது ராஜராஜ நரேந்திரன் கைகளில் ஒப்படைக்கிறான் என்பதை பிரதான இழையாக கொண்டு ஓடுகிறது. அரையன் ராஜராஜன், பிரம்ம மராயன், வந்தியதேவன், ராஜராஜேந்திரன் எனும் முக்கியமான வரலாற்று பாத்திரங்களை தன் தர்க்க சாஸ்திர வலிமையால் கரிகாலன் வென்று செல்வதை இன்றைய வாசிப்பில் புன்னகையுடன் கடந்து செல்ல முடிகிறது. அதேபோல தர்க்கம் புகுந்து விளையாடும் நாவலில் நாம் தர்க்கம் பார்க்க ஆரம்பித்தோமானால் நாவல் நகராது ஆகவே கரிகாலன் மட்டும் நாவலில் தர்க்கம் பேசவிடுதலுடனும் தேடவிடுதலுடனும் நாம் நிற்பதுவே நலமாக இருக்கும்.

வரலாற்று நாவல் எனில் துறவிகள், ஓற்றர்கள் இல்லாமலா! இருக்கிறார்கள் கரிகாலன் பிறப்பு ரகசியம் அவனிற்கு தெரிந்துவிடக்கூடாது என அக்கறை கொண்ட பெளத்த துறவிகள் கூடவே கரிகாலனை எப்படியாவது பழிவாங்கிவிடுவது என அலையும் போலித்துறவி என துறவிகள் நாவலில் அங்கதசுவையை பதித்து செல்கிறார்கள்.

பிறப்பு ரகசியம் கதையின் இறுதிவரை சிறப்பாக கடத்தப்பட்டு இருக்கிறது. அது உடைபடும் வேளை ஒரே உணர்ச்சிகரம்தான். அன்றைய நாட்களில் குமுதம் இதழில் கதையை படித்த வாசகர்களின் மனக்கண்ணீரை இன்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கதையில் வீரம், புத்திசாலித்தனம் போன்றவற்றை தாண்டி தியாகம் தனித்து நிற்கிறது. கரிகாலன் ஏன் கரிகாலன் குடும்பமே தியாகத்தின் வடிவாக சித்தரிக்கப்படுகிறது. வார வாசிப்பில் வாசக நெஞ்சங்களில் கரிகாலனை மறக்க செய்யாத பாத்திரமாக இது நிலைக்க செய்திருக்கலாம்.

காதல் இல்லாத சாண்டில்யனா! வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி, அரையன் ராஜராஜன் மகள் செங்கமலச் செல்வி என இரு பருவ சிட்டுக்கள் சாண்டில்யனின் மகோன்னத வர்ணனைகளில் இன்றைய வாசிப்பிலும் இன்பம் ஏற்றுகிறார்கள். சாண்டில்யனின் கதையில் என்னால் ரசிக்க முடிந்தது அவரின் அடிக்க முடியாத அந்த வர்ணனைகளைத்தான். மனிதர் இரு பக்கத்தில் மார்புகளை வர்ணித்தாலும் களைப்பு அடையாத சிருங்கார வரி யோகி. சிருங்காரம் என்பது சாண்டில்யன் வரிகளில் அழகுறுகிறது அதுவே பலரின் வரிகளில் ஆபாசமாகிறது தேன் குடிக்கும் வண்டா இல்லை சகதியில் அமரும் கொசுவா எனும் கேள்விக்கு வாசகன் சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளில் தேன் குடிக்கும் வண்டாகவே உன்மத்தம் கொள்கிறான். இது அக்காலத்தில் ஆபாசம் என எதிர்க்கப்பட்டது என்பதை நினைக்கையில் இன்று அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து சர்வதேசமெங்கும் ஒலிக்கும் நான் ஒன்னாங்கிளாஸ் படிக்கும்போது எனும் ஒப்பற்ற பாடலை என்னவென்பது.

சாண்டில்யனின் கதைகளில் எனக்கு பிடித்தது கடல் புறா. மன்னன் மகள் அதன் அளவிற்கு இல்லை எனினும் கூட சாண்டில்யனின் தமிழ் இன்னம் சில காலம் நிற்கும். அவ்வகையில் வரலாற்று சாகச நாவல்களின் அடிக்க முடியா மன்னன் அவர்.

ரகசியத்தின் காவலர்கள்


 வாழ்சமூகத்தின் அஸ்திவாரமான நம்பிக்கைகள் மீது ஐயம் உருவாக்கும் வகையில் கற்பனையான தர்க்கவாதங்களை முன்வைத்து அந்நம்பிக்கைகளை சிறிதேனும் ஆட்டம் காணச்செய்யும் உத்தியை வரலாற்றுத் தகவல்களையும், நம்பத்தகுந்த கற்பனை தரவுகளையும் கலந்து உருவாக்கப்படும் வரலாற்று மர்மப்புனைகள் தம்மில் கொண்டிருக்கும். காலகாலமாக நிறுவனங்களால் உறுதியாக்கப்பட்ட அந்நம்பிக்கைகளின் உண்மைநிலை என்ன எனும் கேள்வியையும், பரபரப்புநேச வாசகத்தளத்தில் சுறுசுறுப்பான விமர்சனங்களையும் இவ்வகையான படைப்புக்கள் உருவாக்கவும் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. சமகாலத்தில் Angels & Demons வழியாக டான் ப்ரவுன் இவ்வகையான புனைவுகளிற்கு ஒரு வாசலை திறந்துவைத்தார். ஆனால் அவர் பிரபலமானது The Da Vinci Code வழியாகவே.

The Guardians of Covenant ஐ எழுதிய நார்வேஜிய எழுத்தாளரான Tom Egeland அவர்கள் 2001 ல் எழுதிய Relic எனும் நாவலிற்கும் 2003 ல் வெளியாகிய டாவின்சி கோட் க்குமிடையில் தகவல் ஒற்றுமைகள் வியப்புதரும் வகையில் உண்டு என்கிறது விக்கி. டாம் எக்லேண்டின் நாவலை நான் படிக்கும்போது என்ன இவர் டான் ப்ரவுன் போல எழுத முயற்சிக்கிறாரே என்ற எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் டாவின்சி கோட் டில் உள்ள தகவல்கள் உங்கள் நாவலில் உள்ள தகவல்களுடன் ஒத்தவையாக இருக்கிறதே, உங்கள் நாவல் காப்பி அடிக்கப்பட்டது என நீங்கள் எண்ணுகிறீர்களா என டாம் எக்லேண்டிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நானும் , டான் ப்ரவுனும் நிகழ்த்திய தேடல்களில் கிடைத்த தகவல்கள் ஒத்துப் போவதாக இருக்கிறது அவ்வளவே எனக்கூறியிருக்கிறார் எக்லேண்ட்.

டாம் எக்லேண்டின் கதை ஐஸ்லாந்தில் ஆரம்பமாகிறது. சிரா மக்னேஸ் எனும் மதகுருவின் கைகளில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஆவணத்தொகுப்பு வந்து சேர்கிறது. அந்த ஆவணத்தொகுப்பில் சில ரகசிய தகவல்கள் இருக்ககூடும் என எண்ணும் மதகுரு தன் நண்பனும் தொல்லியலாளனுமான பிஜ்ஜோர்ன் பெல்டோவை துணைக்கு அழைக்கிறார்.... அங்கிருந்து ஆரம்பமாகும் தேடல் ஐஸ்லாந்து மற்றும் நார்வேயில் உள்ள புராதண ஸ்தலங்களில் ரகசியமாக விட்டு செல்ல்பபட்டிருக்கும் தகவல்கள் வழியாக இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, அமெரிக்கா என ஓடி சென் டாமிங்கோவில் உச்சம் கண்டு, மறுபடியும் எகிப்தில் நிறைவு பெறுகிறது.

சங்கேத எழுத்துருக்கள், புனித வடிவியல் போன்றவை வழியாக ஸ்தலம் விட்டு ஸ்தலம் சென்று சங்கேத மொழி நிபுணர்களின் உதவியுடன் இன்று வாழ்சமூகம் நம்பியிருக்ககூடிய நம்பிக்கைகள் சிலவற்றை சந்தேகத்திற்குள்ளதாக்க விழைகிறார் டாம் எக்லேண்ட்.

அவரின் நாவல் ஆதி நார்வேஜிய கலாச்சாரத்திற்கும் பண்டைய எகிப்திய கலாச்சாரத்திற்குமிடையில் நிகழ்ந்திருக்ககூடிய பரிமாற்றங்களை எடுத்து வருகிறது. கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தில் காலடி வைக்கும் முன்பாகவே அங்கு வைக்கிங்குகள் சென்றிருந்திருக்கிறார்கள் என நிறுவுகிறது. முரட்டுத்தனமான கொள்ளையர்களான வைக்கிங்குகள் எகிப்து வரையில் பயணித்து அங்கிருந்து மிக முக்கியமானதொருவரின் பாடம் செய்யப்பட்ட உடலொன்றையும், அதனுடன் கூடவே இருந்த ஆவணங்களையும் நோர்வேக்கு இட்டு வந்தார்கள் எனக் கூறுகிறது.... அந்த ரகசியம் மிக முக்கியமான ஒன்றாக பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கிறது என்பதை விபரிக்கிறது.

கதையின் நாயகன் பிஜோர்ன் பெல்ட்டோ இந்த பாடம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பதையும், அந்த ஆவணங்கள் என்ன என்பதையும் தன் தேடல் வழி கண்டடைகிறார். டாம் எக்லேண்ட் உலகின் மூன்று பெருமறைகளின் பிதாவாக இருக்ககூடிய ஒரு பாத்திரத்தின் வரலாற்றை தன் கற்பனையில் பிறிதொன்றாக காட்டுகிறார். புனித நூல்களில் உள்ளவற்றின் ஆதார வேர்கள் என்னவாக இருக்கலாம் என்பதை விளக்குகிறார். இதன் வழியாக முப்பெருமறைகளும் இதுவரை நிறுவியிருந்த நம்பிக்கைகளை மாற்றுப் பார்வையில் நோக்க செய்கிறார்.

 சிறிய சிறிய அத்தியாயங்களுடனும், வரலாற்று தேடல் தகவல்களுடனும், நம்பகத்தன்மை குறைந்த கற்பனை வாதங்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நாவலானது டான் ப்ரவுன் திறந்து வைத்த வாசல் வழியேயே பயணிக்கிறது. ஆனால் ஆழமும், ஆர்வமும் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்காத வகையில். ஒரு கிண்ணம் திராட்சை மதுவிற்குள் ஒரு ஜாடி நீரைக் கலந்து சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இதன் வாசிப்பு அனுபவம்.

Saturday, March 9, 2013

தாக்குதல் தருணம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 9

அரிசோனாவிலுள்ள சிறு நகரமான சியரா விஸ்டாவின் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து கைதிகளை நீதிவிசாரணைக்காக ஃபீனிக்ஸ் எனும் இடத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு டெக்ஸ் தலைமையில் செயற்படும் ரேஞ்சர்களின் குழுவிடம் கையளிக்கப்படுகிறது. கைதிகளை ஃபீனிக்ஸ் நகர் நோக்கி பாதுகாப்புடன் இட்டுச் செல்லும் டெக்ஸ் குழுவினர் வழியில் எதிர்பாராதவிதமாக தாக்கப்படுகிறார்கள். டெக்ஸை தவிர மீதி ரேஞ்சர்கள் மரணத்தை தழுவ, ஐந்து கைதிகளையும் ரேஞ்சர்களின் பாதுகாப்பிலிருந்து மீட்டுச் செல்கிறது அந்த மர்மக்குழு. தன் எதிரிகளை நரகத்தின் குகைகள் வரை விடாது தேடிச்சென்று நீதி வழங்கும் டெக்ஸ், விசாரணைக் கைதிகளையும் அவர்களை மீட்டுச் சென்றவர்களையும் தேடிச்செல்லும் ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிக்கிறார்…….
மாட்டுத்தோலை விட வலிதான மாமிசத்திற்கும், சூடான பீரிற்கும் பிரபலமான நகரம்தான் சியரா விஸ்டா. வெம்புழுதியின் உறைநிலமான அந்நகரின் சிறைக்கு டெக்ஸ் வந்து சேரும் தருணம் முதலே அவர் பாதுகாவலில் எடுத்து செல்லப்படவேண்டிய கைதிகளின் குணாதிசயங்களை TEX MAXI n° 15 ஆக வெளியாகியிருக்கும் L’Or du Massacre கதையில் விபரிக்க ஆரம்பித்து விடுகிறார் டெக்ஸ் கதைகளின் குறிப்பிடத்தக்க கதாசிரியரான அண்டோனியோ செகுரா. கைதிகள் யார், அவர்கள் செய்த குற்றம் என்ன, சிறையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் போன்றவை வழியே தல டெக்ஸிற்கு கதையில் அவர்கள் தரப்போகும் தலைவலிக்கோலத்தின் ஆரம்ப வளைகோடுகள் அந்தப் பக்கங்களிலேயே எழுதப்பட்டு விடுகின்றன. கைதிகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்ட வாசகர்களும் ஆகா அடிதூள்பறக்கும் கதையாக அல்லவா இது இருக்கப்போகிறது எனும் ஆவலில் பக்கங்களை திருப்ப தவறமாட்டார்கள்.
மிகவும் கடுமையான தாக்குதல் ஒன்றில் தன் காவலில் வந்த கைதிகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் இழந்து நிற்கும் டெக்ஸின் மனதில் எழும் கேள்விகள் எதற்காக இந்த தாக்குதல்? யார் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடாத்தி இருப்பார்கள்? ஐந்து கைதிகளில் இத்தாக்குதலோடு தொடர்புள்ளவர்கள் யார்? என நீளுகின்றன. இக்கேள்விகளிற்கு உடனடியாக விடை தருவதற்கு பதிலாக கைதிகளை மீட்டுச் சென்ற குழு ஒரு கைதியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஏனைய நால்வரையும் திசைக்கொருவராக தம்மை தொடரக்கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டி விடுகிறது. இங்கு வாசகர்களிற்கும் தாக்குதல் நடாத்திய குழுவிடம் தங்கிவிடும் கைதியின் அடையாளத்தை அறியத்தராவகையில் கதையின் மர்ம இழையின் வலிமையை சற்றே உறுதியானதாக்குகிறார் செகுரா. இதனால் டெக்ஸ் மட்டும் அல்லாது வாசகனும் டெக்ஸின் விசாரணைகள் இட்டு வரும் தகவல்களிற்காக வேகமாக கதையின் பக்கங்களினூடாக பயணிப்பவன் ஆகிறான். இந்தக் கதையில் டெக்ஸின் வழமையான சகபாடிகள் யாரும் கிடையாது. டெக்ஸ், டெக்ஸ் மட்டுமே. மொத்த அதிரடிக்குத்தகையும் டெக்ஸ் கரங்களில். மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள், வெள்ளம் அதிசீற்றத்துடன் நடக்கும் ஆறுகள், அடித்துக் கொட்டும் பெருநிலமழை, உயிரைக் காயவைக்கும் சூரியன் என அவரின் தனித்த பயணம் இவை யாவற்றினூடாகவும் நீதியை நிலைநாட்டுவதில் பிடிவாதம் கொண்ட ரேஞ்சர் ஒருவனின் தேடலாக அமைந்துவிடுகிறது.
lor du m 1தன் குழுவின்மீதான தாக்குதலின் பின்பாக சியரா விஸ்டா திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்து கைதிகள் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்கிறார். சியரா விஸ்டா நகரின் பத்திரிகையாளரான நோர்ட்டனுடன் அவர் கைதிகளில் இத்தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடியவன் யார் என தரவுகளை வைத்து கணிக்கவும் செய்கிறார் இருப்பினும் அத்தரவுகள் வழி அவர் அடையும் விடையை விலக்கிவைத்து மனிதசாட்சியம் ஒன்றினதும் தன் உள்ளுணர்வின் மீதான நம்பிக்கையிலும் கைதிகளில் ஒருவனான Black Puma எனும் அப்பாச்சி செவ்விந்தியன் தஞ்சம் தேடியிருக்ககூடிய அவன் மக்கள் வாழும் குடியிருப்பை நோக்கி அவர் பயணிக்கிறார்.

சான் கார்லோஸிலிருக்கும் செவ்விந்திய குடியிருப்பின் ஏஜெண்டான சாமுவேல் க்ளோவரைக் கொலை செய்ய முயற்சித்தமைக்காக கைது செய்யப்பட்டவன் ப்ளாக் புமா. அவன் இனமக்கள் குடியிருக்கும் பகுதியினுள் சில கிறிஸ்தவ துறவிகளின் உதவியின் மூலமே டெக்ஸால் எந்த சிக்கலுமின்றி நுழைய முடிகிறது. இங்கு ஒரு கிறிஸ்தவ துறவி, பூர்வகுடி சித்தர்கள் மீது கொண்டிருக்கும் பார்வை கிறிஸ்தவ அதிகாரபீடம் அந்நாளில் அவர்கள்மீது கொண்டிருந்த பார்வைக்கு முரணான ஒன்றாக காட்டப்படுகிறது. செவ்விந்திய மதகுருவான பியர் ஃபீட் மதிக்கத்தக்க ஒரு ஞானி என்பதாகவே அந்தக் கிறிஸ்தவ துறவி எண்ணுகிறார். இவ்வகையான ஒரு பார்வையை இற்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு முன்பாக இத்தாலியில் வெளிவரும் ஒரு வெகுஜனக் காமிக்ஸ் கதையில் கூறிட இயலுமா என நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் செகுரா, கிறிஸ்தவ மதம் பூர்வகுடிகள் மீது சிலுவையாக இறக்கிய ஒரு பார்வையிலிருந்து முரண்பட்ட துறவிகளும் இருந்தார்கள் என்பதைக் காட்ட இங்கு விழைந்திருக்கலாம்.

செவ்விந்தியக் குடியிருப்பில் தன் விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்பாகவே அங்கு வாழும் செவ்விந்தியர்களின் அவலநிலையும், அவர்களில் வாழ்ந்திருக்கும் வெறுப்பும் டெக்ஸால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அம்மக்களிற்காக ஒரு கணமேனும் நிஜமாக வருந்தும் டெக்ஸாக அவரை அங்கு அந்தக் கணத்தில் ஒருவர் காணமுடியும். செகுராவின் கதைசொல்லும் அம்சங்களில் இது ஒன்று எனலாம். வழமையாக மதிக்கப்படாத உணர்வுகள் குறித்த கண்ணியமான வரி ஒன்று அவர் கதைகளில் எங்காவது ஒரு முடுக்கில் அமைந்து இருக்கும். வெள்ளையினம் கட்டுவித்த எதிரான பிம்பங்கள் சிலவற்றையேனும் அவரின் அந்த வரிகள் இந்தக் கதைகளிலாவது பொய்யெனெக் காட்டக்கூடும். டெக்ஸ் தொடரும் தன் விசாரணைகளில் ப்ளாக் புமா கைது செய்யப்பட்டதன் பின்னணியிலிருக்கும் உண்மைகளை அறிகிறார். நீதியை தன் பாணியில் நிலைநாட்டவும் முயல்கிறார். கதையின் இப்பகுதியில் முக்கியமான ஒரு மனிதனின் இறப்பு குதிரைகளின் காலடியிலிருந்து பிறக்கும். அந்த இறப்பின் பின்னிருக்கும் தர்மத்தை இலகுவில் உதறி சென்றிட முடியாது. விலங்குகளும் ஆத்மாக்களே எனும் எண்ணம் கொண்ட நிலத்தில் நிகழும் அந்த நிகழ்வில் அதிக ஆச்சர்யத்தை நாம் கண்டிட முடியாது. செகுரா இங்கும் கதை நிகழும் மண்ணிலிருக்கும் ஒரு நம்பிக்கையின் வழியாக தீமைகளிற்கு எதிரான தீர்ப்பை எழுதுகிறார். டெக்ஸ் அதற்கு சாட்சியமாக இருக்கிறார். ப்ளாக் புமாவிடம் தன் கேள்விகளை கேட்டு அதற்கு அவன் தரும் பதில்களை பெற்றுக் கொண்ட பின்பாக அவரின் அடுத்த இலக்கு செடோனா எனும் நகராக இருக்கிறது.

lor du m 2சியரா விஸ்டா சிறையிலிருந்த ஐந்து கைதிகளில் ஒருவனான ஹூவான் அலமீடா அந்த நகரின் வங்கியின் இயக்குனராக இருந்தவன். அதே வங்கியின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி மாட்டிக் கொண்டவன். அப்படியான ஒரு மனிதன்மீது அந்நகர மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எப்படியாக இருக்கும் என்பது நகரில் டெக்ஸ் நுழைந்து அலமீடாவின் வீடு எங்கே என கேட்கும்போதே தெளிவாக கதையில் விபரிக்கப்படுகிறது. ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்தவனிற்கு உலகெங்கும் ஒரே மரியாதைதான். இங்கு டெக்ஸ் அலமீடாவின் மனைவியிடமும், அவள் சகோதரனிடமுமே உரையாட முடிகிறது விசாரணையின் முடிவு அவரிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஆனால் விசாரணை என்பது எப்போதுமே திருப்தியான விடைகளின் வதிவிடமும் இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் வழியில் டெக்ஸ், பத்திரிகையாளனான நோர்ட்டன் தனக்காக வெளியிட்டிருக்கும் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொண்டு தன் தேடலை Safford நகர் நோக்கி திசை திருப்புகிறார்.

சஃபோர்ட் நகரில் தங்கம் தேடி செல்வம் சேர்க்கும் மனித வாழ்வின் அவலநிலையை சுருக்கமாக ஆனால் சிறப்பாக எழுதுகிறார் செகுரா. வல்லவர்கள் வைத்ததே சட்டம், நினைத்தவுடன் அரங்கேற்றப்படும் தூக்கு தண்டனைகள், திருட்டு, மோசடி என பூலோக பாவபூமி ஒன்றின் வருத்தமான நிலமது. தங்கம் தேடி செல்வந்தர்களாக வேண்டும் என எண்ணம் கொண்ட மனிதர்களை ஏமாற்ற செய்யப்படும் தந்திரங்கள், அதில் தம்மை வீழ்த்தி தம் வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் நரகமாக்கிடும் மனிதர்கள் வாழ்வு தங்கத்தைபோல பிரகாசமானதாக இருந்திருக்கவில்லை. கதையின் இப்பகுதியில் உப்பு நிரப்பிய தோட்டா என்பது உபயோகிக்கப்படும். மனிதரைக் கொல்லாது கொடிய வலியை தரக்கூடிய இத்தோட்டா வகை இருந்தது என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். கதையின் இப்பகுதியில் டெக்ஸின் தந்திரங்கள், அடிதடிகள், துப்பாக்கி பாவனைகள் எல்லாம் அவருடைய ஆக்‌ஷன் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் வகையில் இருக்கும். சஃபோர்டில் அவர் தன்னிடமிருந்து மீட்கப்பட்ட டிக் கிராமர் எனும் கைதியை விசாரிக்க முயல்கிறார். போலி தங்க சுரங்க உரிமைகளை விற்று மாட்டிக் கொண்ட வேளையில் ஷெரீஃபை கொலை செய்ததிற்காக கைது செய்யப்பட்டவன் டிக் கிராமர். அவனிடம் டெக்ஸ் விசாரணை நடாத்தும்போது பெரும்பாலும் அவர் துப்பாக்கியே பேசுகிறது. அவர் தேடிய கேள்விக்கான விடை கிடைக்காத நிலையிலேயே சஃஃபோர்டை விட்டு விலகுகிறார் அவர்.

lor du m 3மீண்டும் சியரா விஸ்டா செல்லும் வழியில் செவ்விந்தியர்களிற்கு பயந்து மறைந்திருக்கும் ஒரு குடும்பத்தை பாதுகாப்பாக கிறிஸ்தவ துறவிகள் மடம் ஒன்றில் கொண்டு சேர்க்கிறார். அங்கு அவர் தன்னிடம் இருந்து மீட்கப்பட்ட கைதிகளில் ஒருவனான அல்பேர்ட் டெக்கர் மீண்டும் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டதை தெரிந்து கொள்கிறார். டெக்கரையும் அவன் கும்பலையும் தேடிச்செல்லும் ஷெரீஃப் குழுவினரோடு தன்னையும் டெக்ஸ் இணைத்துக் கொள்கிறார். டெக்கரிடம் இருந்தும் டெக்ஸ் தன் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்வது இல்லை. சியரா விஸ்டாவிற்கு திரும்பும் டெக்ஸ் அங்கு ஐந்தாவது கைதியான பால் லாருயூ குறித்த ஒரு அதிர்ச்சி தரும் தகவலை அறிந்து கொள்கிறார்.. மொத்தத்தில் டெக்ஸின் கேள்விகளிற்கு அவர் விசாரணையும் தேடலும் விடையளிப்பது இல்லை. அப்படியானால் யார் கைதிகளை மீட்டது? எதற்காக? …. மீதியிருக்கும் பக்கங்களில் இதற்கான விடையை வாசகர்களிற்கு தருகிறார் கதாசிரியர் செகுரா.

செகுராவின் மர்ம முடிச்சு சுவாரஸ்யமானது ஆனால் தேர்ந்த வாசகன் ஒருவன் ஏன் இப்பெயர் டெக்ஸின் விசாரணைகளில் இரு இடங்களில் வருகிறது எனும் ஒரு கேள்வியை எழுப்பும் பட்சத்தில் சுவாரஸ்யம் பணால் ஆகிவிடும். ஐந்து கைதிகளின் வாழ்வின் சிறு கூறுகளை டெக்ஸின் விசாரணை வழி சுவையுடன் சலிப்பில்லாமல் எடுத்து வரும் கதை அதன் இறுதிப்பகுதியில் அதன் வீர்யத்தை சற்று இழந்தும் விடுகிறது. டெக்ஸ் மேக்ஸி கதைகளில் மிகச்சிறிய கதை இது எனலாம். 303 பக்கங்கள்தான். வேகமாக வந்து முடியும் இறுதிப்பகுதி, யார் குற்றவாளி எனும் விடை, அக்குற்றவாளியின் வழமையான வில்லத்தனங்கள் போன்றன கதை உருவாக்கி வைத்த எதிர்பார்ப்பை பூரணமாக்க தவறி விடுகின்றன. கதையின் ஓவியர் எனக்கு மிகவும் பிடித்தமானவரான ஹோசே ஒர்ட்டிஸ். கதையின் சில பகுதிகளில் தீர்க்கமற்ற கோட்டு சித்திரங்களின் தீவிரமான எல்லையை தொட்டு விடுவது என அவர் தீர்மானம் கொண்டிருக்கிறார். சில பகுதிகளில் சித்திரங்கள் பூர்த்தியாகாத நிலையிலேயே அச்சிற்கு வந்து விட்டனவோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது எனினும் ஓர்ட்டிஸின் சித்திரங்களை வெறுக்க முடியாது. கதாசிரியர் அண்டோனியோ செகுரா எழுதிய இறுதி டெக்ஸ் கதை இது. 2012 ஜனவரியில் அவர் காலமாகிவிட்டார். டெக்ஸின் கதைகளிற்கு இது ஒரு பேரிழப்பே என்பது செகுராவின் கதைகளின் ரசிகர்களிற்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்று. கதையில் சஃபோர்டில் நடக்கும் துப்பாக்கி மோதலின்போது ஒரு வசனம் வரும் அது டெக்ஸிற்கு மட்டும் அல்ல செகுராவிற்கும் பொருந்தும்….. டேய் இவன் மனுஷன் இல்லேடா…. மிசின் கன்னுடா !!!!

Monday, February 18, 2013

கில்லிங் ஜோர்டான் - 3 - போக்கா போட்ட கியர்

தமிழ் காமிக்ஸில் அற்புதங்கள் தனித்து வருவது இல்லை. அதுவும் துப்பறிவாளர்களின் கதை எனில் உரையாடல் குமிழிகளில் அற்புதங்கள் கூடி நின்று கும்மி அடித்து குலவை எழுப்பும். துப்பறிவாளர் ஜெரோம் கதையில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. ஜில் ஜோர்டானும் ஒரு துப்பறிவாளர் என்பதைக் கண்டு கொண்ட அற்புதங்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை  விட்டுவிடலாம்!

பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!

பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!

சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!

பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!

குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]

பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS  சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!

ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!

அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.

நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.

40 வருடங்கள் பராம்பரியம் கொண்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் தனது 40வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியிடும் தொகுப்பில் அலைகளின் ஆலிங்கனம் எனும் இக்கதையையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது எனும் வகையில் இதன் ஆசிரியபீடம் இக்கதையில் இப்பதிவில் கூறப்பட்டு இருக்கும் விடயங்களை தெரிந்து கொண்டுதான் அதை அனுமதித்ததா?

அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?

இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?

கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.

Sunday, February 17, 2013

பனிநிலத்தின் துராத்மா

வதனமோ சந்த்ரபிம்பமோ - 8 

இலையுதிர் காலத்தின் ஆரம்பம் இலைகளின் அந்திமத்தின் உதயம். தம் உயிரின் அசைவென இருந்த இலைகளை உதிர்க்ககூடிய விருட்சங்கள் தம்மை புதியதொரு துளிர்ப்பின் முன்பான தியானத்தினுள் ஆழ்த்திட அடங்கிடும் பருவம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியினுள் அமைந்திருக்கும் Salish செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே ஒடிச்செல்லும் அந்த ஆற்றில் இலையுதிர்காலத்தின் குளிர்காற்று தன் கோலங்களை கண்ணறியா விரல்களால் வரைந்து ஓடிச் செல்கிறது. காலம் போல ஆறும் தன்னைச் சுற்றியவை குறித்த பிரக்ஞையற்று தன் வழியில் வழுகி ஒடுகிறது. அதன் ஓட்டத்தில் தன்னை இழந்து மிதந்து வருகிறது ஒரு சிறுபடகு. ஆற்றின் ஓட்டமும், காற்றின் ஸ்பரிசமும் அப்படகை செவ்விந்தியக் குடியிருப்பின் கரைகளில் ஒதுங்க செய்கிறது. கரையொதுங்கிய சிறுபடகில் கிடக்கிறது ஒரு வெள்ளை மனிதனின் உடல். அம்மனிதனின் உடலை ஆராயும் பூர்வகுடிகளின் மதகுரு  கடிதம் ஒன்றைக் கண்டு கொள்கிறார். அக்கடிதம் ஜிம் பிராண்டன் எனும் கனேடிய குதிரைப் பொலிஸ் அதிகாரிக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. பூர்வகுடி மதகுரு வெள்ளை மனிதனின் சடலத்தையும், கடிதத்தையும் செண்ட் ஜான் கோட்டையில் கொண்டு சேர்க்கிறார்…
dtso1வாசகனை தன் முதல் பக்கத்திலேயே கதை நிகழும் பிரதேசத்திற்குள் இட்டுச் செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். ஆனால் TEX MAXI n° 5 ஆக வெளியாகி இருக்கும் Dans les Territoires du Nord-Ouest கதையின் ஓவியர் Alfonso Font அதை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். தெளிவான நீர் கொண்ட ஏரியொன்றின் அருகில் அமைந்திருக்கும் சலிஷ் இன இந்தியர்களின் சிறுகிராமம். கிராமத்தின் பின்னணியில் இருக்கும் காடுகள். அக்காட்டில் உள்ள மரங்கள். அவற்றில் இல்லாது இருக்கும் இலைகள். நீண்ட தொலைவில் இருக்கும் பனிபூத்த மலைகள். அவற்றின் மேலாக உஷ்ன வலயம் நோக்கி வலசை பறக்கும் பறவை இனங்கள். சலிஷ்களின் தங்குமிடங்களிலிருந்து மேல் கிளம்பும் புகை. சலிஷ்களின் குலச்சின்ன நடுமரங்கள், அவர்களின் செதுக்கு மரச்சிற்ப வேலைப்பாட்டழகுகள். ஏரியின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறு படகுகள். ஏரியின் தொலைவில் மிதந்து வரும் ஒரு படகு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் கொண்ட வாசகன் கண்களின் வழியே ஆன்மாவில் நுழையும் இலையுதிர்காலத்தின் உதிரழகு. ஸ்பெயின் நாட்டவரான அல்போன்சோ ஃபொண்ட் தனது சித்திரங்களில் ஏராளமான தகவல்களை தருவதில் நாட்டம் உடையவர். டெக்ஸின் இக்கதையிலும் அவர் அதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. செயிண்ட் ஜான் கோட்டையின் அதிகாரி மேஜர் டிக்கின்ஸின் அலுவலகத்தை அவர் தன் சித்திரத்தால் விபரிக்கும் விதம் அபாரமானது. சிறு சிறு பொருட்களையும் விடாது தன் சித்திரத்தினுள் சேர்த்துக் கொண்டு ஒரு சித்திரம் விபரிக்க விரும்பும் ஸ்தலத்தை அவர் பூரணமாக்கும் திறன் நின்றுபார்த்து நிதானமாக ரசித்துப் பின் கடந்து செல்ல வேண்டிய தன்மையை தன்னில் கொண்டிருக்கிறது.
அலாஸ்காவில் அமைந்திருக்கும் நகரான SKAGWAY க்கு டெக்ஸும், கார்சனும் வந்து சேரும்போது செயிண்ட் ஜான் கோட்டைக்கு விஜயம் செய்த கனேடிய பொலிஸ் அதிகாரி ஜிம் பிராண்டன், பின் எந்த தகவலுமின்றி மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருக்கிறது. டெக்ஸையும், கார்சனையும் மறைந்துபோன அதிகாரியான பிராண்டனை கண்டுபிடித்து தரவே அங்கு வரவழைக்கிறான் அவர்களின் நண்பனான ஃபட் ஜான். கனேடிய குதிரைப் பொலிஸ், பிராண்டன் தன் பதவியை விட்டு சொல்லாது ஓடி விட்டான் எனக் கணிக்கிறது. ஆனால் பிராண்டனை நன்கறிந்த ரேஞ்சர்களான டெக்ஸும், கார்சனும் அதை நம்ப தயாராக இல்லை. எனவே பிராண்டன் சென்ற திசையில் பயணித்து அவனை தேடுவது எனும் முடிவிற்கு அவர்கள் ஃபட் ஜானுடன் உடன்படுகிறார்கள். இதற்காக அவர்கள் அலாஸ்கா எல்லையை தாண்டி பனிநிலமான கனேடிய வடமேற்கு பிரதேசத்தினுள் பயணித்தாக வேண்டியிருக்கிறது.
இக்கதையில் குதிரைகளை நாம் அதிகம் காண முடியாது. பிராண்டன் செயிண்ட் ஜான் கோட்டைக்கு வரும் நிகழ்வுகளுடன் கதையில் குதிரைகளும் காணாமல் போய்விடுகின்றன. கவ்பாய் கதாநாயகர் ஒருவர் குதிரையின்றி கொண்டெடுக்கும் சாகசம் என்பது ஒரு சிறு முரண்நகைதான். ஆனால் கதை இடம்பெறும் பகுதியில் பயணத்திற்கு நாய்களால் இழுத்து செல்லப்படும் இழுவை சறுக்கு வண்டிகளே பயன்படுத்தப்படும் குதிரைகள் அல்ல என்பது எதார்த்தம். குதிரையில் ஏறி சாகசம் செய்த நம் டெக்ஸும், கார்சனும் இழுவை வண்டியில் சாகசம் செய்ய கிளம்பும் அழகோ அழகு! அதிலும் தன் உடலில் இருக்கும் அனைத்து என்புகளிற்கும் உதிரிக்கட்டு இட்டு கட்டி வைத்திருக்கும் கார்சனிற்கு இவ்வகையான பயணமுறை எவ்வளவு சந்துஷ்டியை அளிக்கும் என்பது தெளிவு. டெக்ஸ் அண்ட் கோ பயணிக்கும் வழியும் இலகுவான வழியல்ல, உறுதியான மனமும், தேர்ந்த அனுபவமும் கொண்ட வழிகாட்டிகளால் மட்டுமே அவ்வழியால் அபாயங்களை தவிர்த்து பயணிக்க முடியும். எனவே ஃபட் ஜானின் பரிந்துரையின் வழியாக கேத்தி டாவ்ன் எனும் இளம் பெண்ணை தமக்கு வழிகாட்டியாக இணைத்துக் கொள்கிறார் டெக்ஸ். கார்சனிற்கு எலும்புகளில்தான் உதிரிக்கட்டு, பெருசு பெண்கள் விடயத்தில் ஒரு மன்மத மைனா என்பது ஊரறிந்த விடயம், கார்சன் தன் திறமைகளை டாவ்னிடம் காட்ட தயங்குவதோ தவறுவதோ இல்லை.
dtso2அடர்த்தியான பனிப்போர்வை மீது வழுக்கிப் பயணிக்க இழுவை வண்டி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை இழுத்து செல்லும் நாய்கள். கதாசிரியர் Mauro Boselli கதையில் இது குறித்து தரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை. ஜோடி ஜோடியாக வண்டியில் இணைக்கப்படும் நாய்களின் நிலைகள், அவற்றிற்கான காரணங்கள் என அவர் தர ஆரம்பிக்கும் தகவல்கள் கதை நெடுகிலும் அடர்பனி பிரதேசம் ஒன்றினூடாக பயணிக்கும் மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை தந்து கொண்டே இருக்கிறது. இவ்வகையில் பொசெலி ஒரு அற்புதமான கதாசிரியர் எனலாம். அதேபோல அருமையான கதைக்களத்தை உருவாக்கி அதில் வரும் எதிர்நாயகர்களை சோடை போகாத வகையில் சித்தரிக்கும் பண்பும் பொசெலியிடம் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதிய சிறப்பான கதையான கார்சனின் கடந்த காலம்.
இம்முறையும் அவர் கதைக்களத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டிடவில்லை. பிராண்டனின் மறைவிற்கு ஒரு வகையில் காரணமான கடிதம் கொண்டிருக்கும் மர்மம், மனித ஆன்மாக்களை தன்வசமாக்கி அவர்களை நடைப்பிணங்களாக்கும் வெண்டிகோ எனும் துராத்மாவின் வடிவான தங்கவிழி மனிதன் போன்றவற்றை மனிதர்கள் முன் மாபெரும் சக்தியாக தன்னை நிறுத்தும் இயற்கையுடன் அவர் கதைப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் ரயில், நாவல்மரம், சொம்பு என்பவையும் ஒரு பாத்திரமே எனச் சொல்வதுபோல பொசெலியின் இக்கதையில் அவர் உருவாக்கி இருக்கும் பிரதான எதிர்நாயகன் இயற்கை. –30°C ல் குளிர் இறங்கி தாண்டவமாடும் வெண்பனி நிலத்தில் அவர் சாதாரண மனிதர்களின் நாயகத்தன்மையை பொருத செய்திருக்கிறார். கதையில் பரபரப்பிற்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லை எனலாம்.
கதையின் பிரதான பெண்பாத்திரமான Kathy Dawn செவ்விந்திய தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் பிறந்தவள். ஆனால் அவள் செவ்விந்திய மரபிலேயே வளர்கிறாள். அவள் தந்தை பொலிசாரால் கொல்லப்பட்டது பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒரு வெறுப்பை அவளில் உருவாக்கி வைத்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தன் இனத்திற்கு கேடுதான் எனும் ஒரு எண்ணம் அவள் மனதில் பதிந்துபோய்க் கிடக்கிறது. ஆரம்பத்தில் அவள் டெக்ஸ், கார்சனுடன் பழகும் முறையில் ஒரு அந்நியத்தன்மை வெளிப்பட்டாலும் கதையின் நகர்வில் அவள் அவர்களுடன் இணைந்து போராடுபவளாக மாறுகிறாள். செவ்விந்தியக் குடிகளில் அடங்கியிருக்கும் ஒரு பெண்ணாக டாவ்ன் காட்டப்படுவது இல்லை மாறாக மிகுந்த மனத் தைரியத்துடன் இயற்கையையும், மனிதர்களையும் எதிர்த்துப் போராடும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் செவ்விந்திய மரபு அவளில் ஏற்றிவைத்த மூட நம்பிக்கைகளையும் அவள் தன்னில் கொண்டிருக்கிறாள். கதையின் ஒரு பரபர தருணத்தில் பெண் சொல்வதை ஆண் ஒரு போதும் நம்பக்கூடாது என டாவ்னின் துணைவனான ஜெரிக்கோ கூறுவதன் மூலம் செவ்விந்தியக் குடிகளில் பெண்ணின் நிலை எப்படியானது என்பதை வரிப்படுத்துகிறார் பொசெலி. அதேபோல பெண்ணின் இந்நிலை அல்லது தகுதியை வைத்தே எதிரிகளிடம் வாயைத் திறக்காத ஒரு செவ்விந்திய வீரனை டெக்ஸ் வில்லர் உடைப்பதாகவும் அவர் கதையை உருவாக்கி இருப்பார். பெண்ணினால் ஏற்படும் மரணம் வீர மரணம் அல்ல எனும் நம்பிக்கையை கொண்டதாகவும் சில செவ்விந்தியக் குடிகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. இதுதான் டெக்ஸ் கதைகளின் அழகு. எது ஒரு எதிர்மறை அம்சமோ அதை வைத்து கதையில் திருப்பங்களை உருவாக்குவது. இதுவே பரட்டை கதையாக இருந்தால் பரட்டையின் அலம்பல்கள் தாளாது வாசகர்கள் கண்ணீர் கடலில் படகு ஓட்ட ஆரம்பித்து இருப்பார்கள்.
dtso3மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கதையில் உருவாக்கப்படும் பாத்திரம் தங்கவிழி மனிதன். அவன் சக்திகள், அவன் ஆற்றும் கொடூர செயல்கள், அவன் அடியாட்கள், அவன் பலம் என கதையின் நகர்வில் அவன் குறித்த பிம்பத்தை பெரிதான ஒன்றாக உருவாக்குகிறார் பொசெலி. டாவ்னிற்கும், பிராண்டனிற்கும் தங்கவிழி மனிதனைக் கொல்ல தகுந்த காரணங்கள் இருக்கிறது. பிராண்டனின் விதி அது எனவும், செவ்விந்தியர்களின் பேராத்மாக்கள் அவன் தங்கவிழி மனிதனை அழிக்க துணைபுரிவார்கள் என்பதாகவும் கதை அடுக்கி கொண்டே செல்கிறது. நழுவும் நிழல் எனும் செவ்விந்திய பாத்திரம் ஒரு செவ்விந்திய கிராமத்தின், மக்களின் அழிப்பிற்கு துணைபோகிறான் பின் ஒரு தருணத்தில் பனியில் பிணங்களுடன் ஆழ்ந்து போய்க்கிடக்கும் அதே கிராமத்தில் அவன் தன் மரணத்தை சந்தித்துக் கொள்கிறான். கதாசிரியர் பொசெலி தர்மம் ஒன்றன் வழி செயற்படும் நீதி எனும் கருத்தை இங்கு தன் கதையில் முன் வைக்கிறார். ஆனால் தங்கவிழி மனிதன் விடயத்தில் அனைத்தும் பொய்த்துப் போகிறது.
ஏனெனில் தங்கவிழி மனிதனைக் கொல்வது பிராண்டனோ, டாவ்னோ அல்ல. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட பாத்திரமான தங்கவிழி மனிதனிற்கும் நாயகர்களிற்கும் எதிரான போராட்டம் உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமலும் இருந்திருக்க வேண்டும் மாறாக கதையில் அது டப் என முடிந்துபோய்விடுகிறது. கதையின் அனைத்து நல்ல அம்சங்களையும் இந்த மிகையான ஏமாற்றம் அடித்துப் போட்டு விடுகிறது. இப்படி அருமையாக ஒரு கதையை சொல்லி வந்துவிட்டு இறுதியில் இப்படி ஒரு நமத்துப் போன சீனிப்பட்டாசு வெடிப்பை தந்தால் யார்தான் திருப்தி கொள்வார்கள். இதுவே எதிரானதாக இருந்திருந்தால் கதை டெக்ஸின் டாப் கதைகளில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் கதை சுவாரஸ்யமானது, ரசிக்க அனேக தருணங்கள் உண்டு. ஓயா புலம்பல் புகழ் கார்சன் பனியில் புலம்புவது ஒரு சுகம். லிண்ட்மேன் ஏரியின் அருகே நிகழும் நீண்ட சண்டைக் காட்சி வாரே வா. டெக்ஸா கொக்கா. கார்சனையும், டெக்ஸையும் அவர்களின் முகத்தில் இட்ட கோடுகள் வழியாக முதுமைத்தோற்றம் கொண்டவர்கள்போல தோன்ற வைத்தாலும் கதையின் பெரும்பான்மையான காட்சிகளில் அதிரடி செய்திருக்கும் அல்ஃபோன்சோ பொண்ட். கோஸ்ட், ஜெரிக்கோ, நழுவும் நிழல், கருமின்னல் போன்ற சுவாரஸ்யமான சிறு பாத்திரப் படைப்புக்கள் என கதை மோசம் எனும் நிலையிலிருந்து கணிசமான தொலைவில்தான் நிற்கிறது. இக்கதையில் குளிருக்குள் ஒரு சூடான Bourbon மதுவை அடித்த இன்பம் உண்டு ஆனால் முழுமையான கிக் எட்டிவிடாத நிலையில்.

Saturday, February 16, 2013

கில்லிங் ஜோர்டான் - 2 - ஒரு பெட்ரோல் தீர்ந்த மர்மம்

நீங்கள் ஒரு பழங்காமிக்ஸ் சேகரிப்பாளர் மற்றும் விற்பனையாளர். பழங்காமிக்ஸ் எங்கு கிடைத்தாலும் அதை ஆவலுடன் சேகரிக்கும் பழக்கம் உங்கள் உடலின் தோலுடன் இணைந்துவிட்ட உற்சாகமான பொழுதுபோக்கு. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் சேகரிப்பார்வம் குறித்து நன்கறிந்தவர்கள். அவ்வப்போது தாங்கள் வாங்கியதுபோக எஞ்சியிருக்கும் பழங்காமிக்ஸ் குறித்த தகவல்களை அவர்கள் உங்களிற்கு அறியத்தருவதும் வாடிக்கையான ஒரு விடயமாகும்.

டியர் சார், ஆர்ச்சிசிட்டிக்கு போயிருந்தேன் பங்கா பக்கி தியேட்டரிற்கு அருகாலே ஒரு கழுதமடம் இருக்கு, அதச்சுத்தி பின்னாடி போனீங்கன்னா ஒரு சின்ன தெரு வரும். தெரு முனைல இரண்டு குப்பைத்தொட்டி, அதுமேல ஃபொரெவர் ஸ்டீல் எனும் வரிகள், அதத்தாண்டி ஸ்ட்ரெய்டா போனீங்கன்னா ஒரு மரம் வரும். அதுல ஒரு பொந்து இருக்கும். பொந்துல ஒரு பந்து இருக்கும். இல்லேன்னா பருந்து இருக்கும். பந்து இருந்தா திரும்பிடுங்க, பருந்து இருந்தா அதுகிட்ட இதச் சொல்லுங்க......

                                   .......  யூ காட் எனி பால்ஸ் டு பெக் மீ ........

பதிலுக்கு பருந்து உங்களிற்கு சில இன்ச்ட்ரெக்‌ஷன்ஸ் தரும், அப்புறம் என்ன ஜாலிதான். அள்ளிகிட்டு வந்திடுங்க. அப்புறம் அட்டையை போட்டோ எடுத்து சமூக வலைப்பின்னல்களில மாலை கட்டி தோரணமாக்கி அடி பின்னுங்க.

உங்கள் வாடிக்கையாளன்
பழங்காமிக்ஸ் பலவர்மன்

பழங்காமிக்ஸ் பலவர்மன் எனும் பெயர்கொண்டவர்களை உங்களிற்கு தெரியாது இருந்தாலும் தமிழ் காமிக்ஸ் உலகில் புனைபெயர்கள்தான் உண்மையை சொல்லும் என்பதை நீங்கள் அனுபவத்தால் கற்றிருப்பீர்கள். பருந்தை தேடிச்செல்லுவது எனும் தீர்மானத்திற்கு வந்து சென்றும் விடுகிறீர்கள். அங்கு பொந்தில் பருந்து, பந்து ஏதுமில்லை. மரத்தின் கீழ் சில சமணத்துறவிகள் சம்மணமிட்டு அமர்ந்து நாவலோ நாவல் என்று கூவிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கடுப்பாகி யோவ் காமிக்ஸ் இருந்தா சொல்லுங்க, இல்ல கழுவில ஏற்றிடுவேன் எனச் சீறுகிறீர்கள்..... சீறுவீர்களா இல்லையா.... பழங்காமிக்ஸ் பலவர்மன் உங்களை இப்படிக் கடிதம் எழுதி நைச்சியமாக ஏமாற்றியது உங்களிற்கு கோபத்தை உண்டாக்குமா இல்லையா... ஆம் என்றால் நீங்கள் மாரிஸ் திலியூவின் நிகிட்டா சிக்ஸ் பாத்திரத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பவர் எனக் கூறிடலாம் ஆனால், தமிழில் அனாமதேயக் கடிதம் எழுதி ஏமாற்றப்பட்ட ஒருவரின் உணர்வுகளை அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கம் விபரிக்கிறதா? அனாமதேயக் கடுதாசி என்கிறப்பவே ஜாக்ரதையா இருந்திருக்கனும்,.... இத எழுதின பய மட்டும் என் கைல கிடைச்சான்... என்ன வடிகட்டின முட்டாள் ஆக்கிட்டானே... காமெடி செய்றதுக்கு நான் எதிரி இல்ல ஆனா இது எல்லை மீறிப் போச்சுலே... என்பதாக நிகிட்டா சிக்ஸின் உணர்வுகளை பிரெஞ்சு மூலத்தில் சொல்கிறார் மாரிஸ் திலியூ, ஆனால் தமிழில் நிலை என்ன....  ஆர்வம் ஊற்றடித்து உந்தித்தள்ளி வந்தது முட்டாள்தனமோ என எண்ணுகிறார் நிகிட்டா சிக்ஸ். அந்த நிலையில் மாரிஸ் படைத்த நிகிட்டா அப்படி நடந்து கொள்ளவில்லை ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒரு அகிம்சைப் பிரியர் போலும். அதுதான் தமிழ் காமிக்ஸின் அற்புதம்.

மேலும் காமிக்ஸ் ஒரு காட்சி ஊடகம் என என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டம் அந்த கதை நிகழும் இடத்தின் சூழலை அப்படியே வர்ணிக்கிறது. அச்சித்திரத்தை பார்த்து, அச்சூழலினை உள்ளெடுப்பதும் ஒரு வாசிப்புதான். ஆகவேதான் கார்மேகம், ஆர்ப்பரிக்கும் கடல், மலைப்பாம்பு போன்றவை காட்சி ஊடகமாகவும் இருக்க வேண்டிய ஒரு ஆக்கத்தை வாசிப்பு ஊடகமாக மட்டும் அனுபவித்து செல்லக்கூடிய போக்கை ஊக்குவிப்பவையாக இருக்கின்றன. வெறுமனே வாசித்து விட்டு செல்வது என்றால் காமிக்ஸில் சித்திரங்களின் தேவை என்ன?  மாரிஸ் ஏன் சிரத்தை எடுத்து, மழைத்துளிமுதல், அலைகள் வரை வரைய வேண்டும் என்பது இங்கு நாம் கவனிக்காமல் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதோடு நீங்கள் கண்டிப்பாக ஒத்துப் போவீர்கள். மேலும் மாரிஸ் திலியூ என்ன பெரிய கொம்பனா எனும் கேள்வியையும் நாங்கள் கேட்டுக் கொள்ளத் தவறக்கூடாது.

நிகிட்டா சிக்ஸின் காரை காணும் மீனவர்கள் அது குறித்து காவல் அதிகாரிக்கு தெரிவிக்கிறார்கள், அவர் ஹோட்டல் ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார், ஹோட்டலில் இரவு தங்கியவர்கள் யார் யார் எனக் கேள்வியையும் விடுக்கிறார்.... பதிலுக்கு ஹோட்டல் ஊழியர் என்ன ஏதாவது கசமுசாவா என்று கேட்டிருக்கலாம், அதற்கு அதிகாரி ப்ரோகார்ட் தரும் பதில் இப்படி இருக்கிறது ...... உன் ஹோட்டல் மூட்டைப்பூச்சிகள் ஆரம்பிச்சு வெச்ச கச்சேரிய மீனுங்க மங்களம் பாடி முடிச்சிருச்சு..... இந்த வரியில் உள்ள நுட்பமான நையாண்டியை கவனியுங்கள். என்ன அப்படி ஒன்று தமிழில் இல்லையா. மன்னிச்சிடுங்க ஆமா அது தமிழில் இல்லை. 197 ம் பக்கத்தில் அதற்கு பதிலாக போலீஸ்காரன் தான் ராப்பகலா புலனாய்வு செய்யனுமே எனும் வரிதான் இருக்கிறது இல்லையா. காவல்துறைக்கு முதல் மரியாதை செய்த அந்த மொழிபெயர்ப்பாளரிற்கு ஒரு பொலிஸ் சல்யூட்டை எழுந்து நின்று நீங்கள் இருக்கும் இடத்திலேயே அடியுங்கள். உங்கள் முன் காவல்துறை இல்லாமல் இருக்கும் பட்சத்தில்.

பொலிஸ் புலனாய்வு எனும்போதுதான் ஒரு விடயம் மனதில் வந்து விழுகிறது. அலைகளின் ஆலிங்கனம், பிரபல பக்கம் 197ல் பொலிஸ் அதிகாரி ப்ரொகார்ட் தன் மேலதிகாரியிடம் நிகிட்டா சிக்ஸின் காரில் பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது எனக் கூறுகிறார். அதை ப்ரோகார்ட் எப்படி புலனாய்ந்தார் என்பதை நாங்கள் புலனாய்வோமா? ஏனெனில் பிரெஞ்சு மூலத்தில் கார் பழுதாகி இருக்க வேண்டும் என்று இருக்கிறது. கதையின் நகர்வில் ஒரு திகில் தருணத்தில்  ஜில் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிப்பார் ஆனால் கதையின் 197ம் பிரபல பக்கத்தில் அந்த தருணத்தில் காரில் பெட்ரோல் இல்லை என்பதை ப்ரோகார்ட் எப்படி அவ்வளவு உறுதியாக பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது என்கிறார்?!! கண்டிப்பாக மாரிஸ் திலியூதான் எங்கோ எதையோ தவற விட்டிருக்க வேண்டும் என்பது நிச்சயம். அதுதான் தமிழ் காமிக்ஸின் அற்புதம். மேலும் ஜில் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடாத்தினார் எனப் படித்திருக்கிறேன் அவர் நீயூஸ் ஏஜென்ஸியும் நடாத்தினார் எனும் தகவலை அலைகளின் ஆலிங்கனம் 198ம் பக்கத்தின் முதல் கட்டம் எனக்கு அளித்தது ஒரு பேரற்புதம் அன்றி வேறென்ன.


Wednesday, February 13, 2013

கில்லிங் ஜோர்டான் - 1

அலைகளின் ஆலிங்கனம் கதையின் மாதிரிப்பக்கம் இணையவெளியை ஆலிங்கித்தபோது அதிலிருந்த மொழிபெயர்ப்பு தரத்தைக் கண்ணுற்று அதிர்ச்சியடையாமல் இருந்திருக்ககூடியவர்கள் இருவரே. ஒருவர் பெனுவா XVI, அடுத்தவர் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு. விஜயன்.

முன்னவர் ஆத்ம பரிசோதனையில் தன்னை இழந்திருந்தபடியால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்தவரிற்கு கதையின் மொழிபெயர்ப்பு மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பது அதிர்ச்சியை உருவாக்க வாய்ப்பை அளிக்கவில்லை. அதனால்தான் கதையை முழுதுமாக படித்தபின்பாக மொழிபெயர்ப்புக் குறித்துக் கூறுங்கள் என ஒரு காணொளியில் அவர் கூறியிருந்தார். அலைகளின் ஆலிங்கனத்தின் மாதிரிப்பக்கத்தில் கார் கதவை நிகிட்டா சிக்ஸ் அறைந்து சாத்தும் சத்தம் இல்லாமல் இருந்ததும், NBS ல் சத் எனும் கவித்துமான ஓசை அதன் இடத்தை பிடித்ததும் ஒரு அற்புதம் எனலாம். ஆனால் அற்புதம் என்பது தனித்து வருவது இல்லை. அது வரும்போது அலையலையாக வரும். வாசகனை அப்படியே தன் அலைக்கரங்களில் அள்ளி ஆலிங்கனம் செய்திடும். இவ்வகையான ஒரு முன்னோக்கு அர்த்தத்துடனேயே அலைகளின் ஆலிங்கனம் எனும் தலைப்பு அக்கதைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாதுதான்.

எனது இந்த தொடர் பதிவுகளின் நோக்கமும் கதையின் வாசிப்பின்போது என்னை அலைக்கரங்களால் ஆலிங்கனம் செய்த  அந்த அற்புதங்களை இங்கு பகிர்ந்து கொண்டிட வேண்டும் என்பதுதான். இது ஒரு ஒழுங்கற்ற தொடர். எப்போது வேண்டுமானாலும் வரும். வராமல் போகும். என் போக்கிற்கேற்ப, மனநிலைக்கு ஏற்ப பதிவாக்கி விடுகிறேன். அவ்வளவுதான். இந்த பதிவினால் தமிழ் காமிக்ஸின் மொழிபெயர்ப்பு தரம் மாற்றம் காணும் என நான் எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் அறிவு ஜீவித்தனமானது என்பது தெரியும் என்பதனால் நான் என் எல்லைக்குள் நின்று கொள்வது நலம். காலத்தை விரயமாக்கி பக்கங்களை மொழிபெயர்த்து ஒப்பிடுவதையும் நான் செய்யப் போவது இல்லை. இத்தனையாம் பக்கம், இத்தனையாம் கட்டம், அசலில் இப்படி, தமிழில் இப்படி என்று சொன்னால் புரிந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன். புரிபவர்களிற்காவது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார். பெயர்த்தும் விடுகிறார். மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தை மேற்பார்வையாளர் படைப்பின் மூலப்பிரதியுடன் ஒப்பிடுகிறார். உதாரணமாக படைப்பு மாரிஸ் திலியூ என்பவரால் உருவாக்கப்பட்டது என வைத்துக் கொள்வோம்.

..........மார்பிஹானிலிருக்கும் ஒரு சிறு மீன்பிடிதுறைதான் லாப்ரான். D 21A பாதை வழியாக அங்கு நீங்கள் நுழைகையில் கடலில் அமர்ந்திருக்கும் குஜால் குதிரைவீரன் கோட்டை உங்கள் கண்களில்படும். சிதிலமடைந்த அக்கோட்டையில் இன்று கடந்தகாலத்தின் நினைவுகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அக்கோட்டையை தன்மீது தாங்கியிருந்த பாறையானது எட்டு கிலோ மீற்றர் நீளம் கொண்ட, நீரில் மூழ்கிடக்கூடிய ஒரு கற்பாதையால் கரையுடன் இணைக்கப்பட்டிருந்தது. எமனின் பாதை அது. மத்திய காலத்தில் கட்டப்பட்டு கடந்த ஏழு நூற்றாண்டுகளாக தன்னை தினந்தோறும் மூழ்கடிக்கும் கடல் ஏற்றங்களை வெற்றிகரமாக தாங்கி வரும் பாதை. இப்பாதையில் கடலுடன் கைகுலுக்குபவனிற்கு ராகு உச்சம். இப்பாதையை கடப்பதற்கு ஒரு கையை கடவுளிடமும் மறு கையை எமனிடமும் தரவேண்டும் என எச்சரிக்கிறது ஒரு முதுமொழி. குளிர்காலத்தில் இப்பகுதி ஆளரவமற்றதாகவிருக்கும். ஆனால் டிசம்பரின் அந்த நாளில்.....

இப்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டிய [ இது என்னாலானது, இதனை விட சிறப்பாக செய்தால் அனுப்பி வையுங்கள்  கண்டிப்பாக அடுத்த பதிவில் பிரசுரிக்கிறேன்.... இல்லை, நான் PDF கோப்பு அனுப்ப மாட்டேன்]  La Voiture Immergée ன் அதாவது NBS ன் அலைகளின் ஆலிங்கனத்தின் முதல் பக்கத்தின் முதல் கட்டமானது ஏதோ இதனுடன் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்குமாறான வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் [ அட வெட்கப்படாமல் NBS ல் அலைகளின் ஆலிங்கனம் முதல் பக்கம் முதல் கட்டத்தை பாருங்கள்]. ஆனால் அது மாரிஸ் திலியூவினால் எழுதப்பட்ட வரிகளின் மொழிபெயர்ப்பு அல்ல. அப்படியானால் அவ்வரிகள் யாரால் எழுதப்பட்டன? படைப்பை உருவாக்கியவரின் வரிகளை விட்டு ஏன் மொழிபெயர்ப்பாளர் புதிய சொற்களை உருவாக்க வேண்டும்? அப்படியானால் இது மாரிஸ் திலியூவின் கதையின் மொழிபெயர்ப்பு இல்லையா? அப்படியானால் இக்கதையை படைத்தவர் யார்? ஏன் அவரின் பெயரிற்கு பதிலாக மாரிஸ் திலியூவின் பெயர் அலைகளின் ஆலிங்கனத்தை ஆரத்தழுவுகிறது? மாரிஸ் திலியூவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஒரு படைப்பாளியின் வரிகளை அதற்கு பதிலாக பயன்படுத்தி அதனை சந்தைப்படுத்தலை என்ன சொல்லி அழைக்கலாம்? இதனை மொழிபெயர்ப்பு எனச் சொல்லலாமா ? மேற்பார்வையாளரிற்கு கேள்விகள் உருவாகலாம் ஆனால் எதுவுமே உருவாகமால் படித்து செல்வதன் பெயர்தான் அற்புதம் அல்லவா. அதையே அப்படியே பிரசுரிப்பது பேரற்புதம் அல்லவா... நாமெல்லாம் அற்புதமான வாசகர்கள் அல்லவா !!!!

அற்புதங்கள் வரும்....


Saturday, February 2, 2013

நரிகளின் ஜதி

அமெரிக்க மண்ணில் ரகசியமாக இயங்கிவரும் மொஸாட் உளவாளியான Dovev யார் என்பதைக் கண்டறிந்து மடக்கும் சிஐஏ யின் நடவடிக்கையில், ஜனாதிபதி வில்லியம் ஷெரீடான் தரும் அழுத்தத்தினால் இணைந்து கொள்கிறார் காலனல் ஏமஸ்……
XIII தொடரினை ஆர்வமுடன் படித்த வாசகர்களிற்கு அக்கதையில் இடம்பெறும் பாத்திரங்களில் ஏதேனும் ஒன்றாவது அவர்களின் அபிமானத்திற்குரியதாக இருந்திட வாய்ப்புகள் உண்டு. மயக்கும் விழியாள் மேஜர் ஜோன்ஸ் ரசிகர்கள், கவர்ச்சிக் கன்னி ஜெசிக்கா மார்ட்டின் ரசிகர்கள், இரும்புப் பெண் இரீனா ரசிகர்கள் என வாசகர்கள் அவரவர் ருசிக்கும், சுவைக்கும், ஏகாந்தத்திற்கும் ஏற்றவாறு தங்கள் அபிமானங்களை வரித்துக் கொண்டிருக்கலாம். ஏன் தன் கட்டு மஸ்தான இரும்புடலில் பச்சை குத்திய மறதித் திலகம் மக்லேன் அங்கிளிற்கும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். மக்லேனிற்கே இருக்கும்போது கனவான் தொனி கொண்ட பெரியமனிதர் ஏமஸிற்கு ரசிகர்கள் இருக்கமாட்டார்களா எனும் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது XIII Mystery கதைவரிசையில் நான்காவது ஆல்பமான Colonel Amos.
பிரதான கதை வரிசையாகிய XIII ல் காலனல் ஏமஸ் குறித்து மேலோட்டபாணியில் கூறப்பட்ட தகவல்களை சற்று விரிவாகவும், அக்கதை வரிசையின் வழியாக ஒருவர் அறிந்திருக்க முடியாத ஏமஸ் குறித்த சில ரகசியங்களையும் விபரிக்க விழைகிறது கதாசிரியர் Didier Alcante உருவாக்கியிருக்கும் இக்கதை. கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் தனக்கென ஒரு தனிப்பாணியை பிரபலமாக்கிய சித்திரக் கலைஞரான Fançois Boucq.
இஸ்ரேலிய உளவாளி டொவெவை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள முதலில் மறுக்கும் ஏமஸ், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்றை பொறுப்பாக நடாத்தி வருபவர்.  Frank Giordino [CIA], Heideger [NSA] ஆகியோர் கேட்டுக் கொண்டும் இஸ்ரேலிய உளவாளியை மடக்கும் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள மறுக்கும் காலனல் ஏமஸ் பின் ஜனாதிபதியின் கட்டளையின்கீழ் இந்நடவடிக்கைகளில் தான் விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றுடன் இணைந்து கொள்கிறார். இந்த தருணத்திலிருந்து கதை இரு தளங்களில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது எனலாம். ஒரு தளத்தில் காலனல் ஏமஸின் தொழில்சார் வாழ்க்கை அலசப்படுகிறது. காலனல் ஏமஸின் கடந்தகாலம் குறித்த சுருக்கமான ஆனால் தகவல் விரிவான பகுதியும், அமெரிக்க மண்ணில் இயங்கும் இஸ்ரேலிய உளவாளி யார் என்பதை கண்டறிய காலனல் ஏமஸ் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் இத்தளத்தில் கூறப்படுகிறது. மற்றய தளம் ஏமஸ் சாலமோனின் தனிப்பட்ட வாழ்வு, அதில் அவரிற்கு இருந்திருக்ககூடிய சில உறவுகள் என்பதை கதையில் வடிக்கிறது.
இருப்பினும் தொழில்சார் தளத்தில் காலனல் ஏமஸ், இஸ்ரேலிய உளவாளியை மடக்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் காணப்படும் அபத்தங்கள் ஒரு சாதாரண வாசகனைக்கூட விழிகளை விரிய வைக்கும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. ஏன் கதையில் இப்படியான சம்பவக்கோர்வைகள்? அதுவும் மொஸாட்டை முட்டாள்களாக சித்தரிக்கும் வகையில் என கேள்விகள் கதைச் சம்பவங்களின் சித்தரிப்புக்களுடன் கூடவே எழும்… இக்கேள்விகள் கதாசிரியர் டிடியர் அல்காண்ட் ஏன் இப்படி மலிவான ஒரு கதையை உருவாக்கினார் எனும் சீற்றத்தையும் கதையை அதன் இறுதிப்பக்கங்களை நெருங்கும்வரை உருவாக்கி கொண்டேயிருக்கும். இக்கேள்விகள், சீற்றம் போன்றன கதையின் இறுதிப்பக்கங்களால் துடைத்து நீக்கப்பட்டு விடுகின்றன.
colamoஇஸ்ரேலிய ராணுவத்தில் சாதாரண ஒரு கேப்டனாக ஆரம்பித்து பின் மொஸாட்டின் உருவாக்கத்தில் பங்காற்றிய காலனல் ஏமஸ், ஏன் இஸ்ரேலை விட்டு விலகி அமெரிக்கா வருகிறார், இஸ்ரேல் மற்றும் மொஸாட் மீது அவர் கொண்ட வெறுப்பிற்கான காரணங்கள் என்ன, சிஐஏல் அவர் எவ்வாறு இணைந்தார், அமெரிக்க மண்ணில் அவர் கண்ட சிக்கல்கள் என்ன என காலனல் ஏமஸின் தொழில்சார் தளம் விறுவிறுப்பான நகர்வைக் கொண்ட ஒன்று. நீளும் இத்தளம் இஸ்ரேலிய உளவாளியின் அடையாளத்தை காலனல் ஏமஸும், பிராங் ஜியோர்டினோவும் வெளிக்கொணர்வதோடு முடிவடைகிறது. இக்கதையின் முடிவு வித்தியாசமானதோ அல்லது புதிதானதோ என்று கூறப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. உளவாளிகள் சம்பந்தமான நாவல்களில் இதைப்போன்ற முடிச்சவிழல்களை ஏற்கனவே கண்டிருக்கும் அனுபவம் அல்காண்டின் முடிவை சாதாரணமான ஒன்றாக அல்லது ஊகிக்ககூடிய வாசகன் ஒருவனின் சரியான ஊகமாகவே மாற்றியடிக்கிறது எனலாம்.
ஏமஸின் தனிப்பட்ட வாழ்கை விபரிக்கப்படும் தளத்தில் அவர் Kira எனும் பெண்ணுடன் கொண்டிருந்த உறவானது எவ்வகையில் முடிவுறுகிறது, அவ்வுறவு ஏமஸின் வாழ்க்கையில் அளித்திடக்கூடிய நீட்சிகள் என்ன, உணர்வுகளிற்கு சில தருணங்களிலாவது அடங்கிடும் ஒரு மனிதன் எனும் வகையில் ஏமஸ் என்பவனில் ஒளிந்திருக்ககூடிய ஒரு நெகிழ்வான பக்கம் எப்படியானது என்பவை கூறப்படுகின்றன. இத்தளத்தில் காணப்படும் ஆழமற்ற தன்மை…. இதை கதாசிரியர் இத்தளத்தை பின்தள்ளுவதற்காக விரும்பியே செய்திருக்கலாம்… உணர்வுபூர்வமாக இத்தளத்தின் நிகழ்வுகளோடு ஒன்றவிடாதபடி செய்துவிடுகிறது. கதையில் ஏமஸிற்கு வழங்கப்படும் நெகிழ்ச்சியான தருணங்கள் நெகிழவைப்பதான உணர்வுகள் எதையும் மனதில் உருவாக்கவில்லை. இதனாலேயே ஏமஸ் எனும் மனிதன் ஆழமாக விதைக்கப்படாமல் போகிறான். இருப்பினும் XIII பிரதான தொடரில் இடம்பெறும் ஒரு முக்கிய பாத்திரத்திற்கும் காலனல் ஏமஸிற்கும் இடையில் இருக்ககூடிய ஒரு மர்மம் கதையின் இறுதிப்பக்கத்தில் காட்டப்படுகிறது. இம்மர்மம் இக்கதையை பொறுத்தவரையில் எந்தவிதமான அதிர்வையும் எழுப்பிடவில்லை சிறு ஆச்சர்யத்தை மட்டும் தருகிறது எனலாம்.
பிராங் ஜியோர்டினோவின் புத்திசாலித்தனத்திற்கு தான் சளைத்தவன் அல்ல என்பதை ஏமஸ் நிரூபிக்கும் வகையில் கதை நிறைவுபெறுகிறது. நரிகளின் பரதத்தில் நரிகளே ஜதிகளையும் இசைக்கின்றன. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் பிரான்சுவா புக் அவர்களின் சித்திரங்கள் கதையை தாண்டி வியக்கும் வண்ணம் எதையும் சித்திரித்திடவில்லை. புக்கின் பாணிக்கு பழகிய நண்பர்கள் இச்சித்திரங்களையும் ரசிக்கலாம். இக்கதையைவிட Bouncer ல் அவர் சித்திரங்கள் ரசிக்கும்படி உள்ளது என்பது என் கருத்து. அதிகம் அதிர்ந்திடாத ஏமஸின் அதிரடிப் பக்கம் எனும் வகையில் XIII மிஸ்டரி கதை வரிசையில் வந்த குறிப்பிடத்தக்க கதையான La Mngouste உடன் Colonel Amos ம் தன்னை இணைத்துக் கொள்கிறது.

Thursday, January 17, 2013

முகம் தந்தவன் காதல்

முதல் காதலியின் முகத்தை மறப்பது மிக இலகுவானது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை, அந்தப் பொறுப்பை அயர்வற்ற கால்களுடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் தன் கைகளில் எடுத்துக் கொண்டுவிடும். ஆனால் ஜேசன் மக்லேனோ அல்லது XIII கதைவரிசையின் வாசகர்களோ ஸ்டீவ் ரோலண்டின் முகத்தை மறப்பது அந்தளவிற்கு இலகுவானதாக இருக்காது. ஏனெனில் மக்லேனின் முகத்தை நாம் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அதில் நாம் காண்பது ஸ்டீவ் ரோலண்டையே. இந்த விடயத்தை மிக இலகுடன் வரித்துக்கொண்ட அசட்டையுடன் நாம் மறந்து செல்ல பழகியிருக்கிறோம். அதேபோல் இன்று காமிக்ஸ் வாசகர் மத்தியில் பிரபலமாகிய XIII பச்சையை தன்னுடலில் முதலில் பதித்து சுமந்து வீழ்ந்தவனும் ஸ்டீவ் ரோலண்ட்தான். அதனாலேயே இன்று XIII எனும் பச்சை காமிக்ஸ் அட்டைகளில் தோன்றும் இடங்களில் எல்லாம் அவனுடைய அரூபப்புன்னகை  பின்னணியில் தன்னை விழியறியா மச்சமாக பதித்து நிற்கிறது. XIII க்கு முகம் தந்தவன் கதையையே XIII மிஸ்டரி கதைவரிசையின் ஐந்தாம் ஆல்பமும் விபரிக்கிறது.
ஜனாதிபதி வில்லியம் ஷெரீடானின் வரவை எதிர்பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அருகில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் ஏதோவொன்றின் ஏதோவொரு அறையின் காற்றுவாசலை திறந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொலையிலக்கு துப்பாக்கியை தீவிரமான முகத்துடன் வெளியே எடுக்கும் ஸ்டீவ் ரோலண்ட். அவன் மனதின் முனுமுனுப்பாக ஸ்டீவ், என்றாவது ஒரு நாள் நீ சரித்திரத்தில் இடம்பிடிப்பாய் என அவன் தாய் அவனிற்கு உரைத்த சொற்களின் உச்சாடனம். அங்கிருந்து காலத்தில் பின்னோக்கி பாயும் கதை என்பதாக ஸ்டீவ் ரோலண்ட் கதையை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இழையாக சலிப்பின்றி சொல்கிறார் கதாசிரியர் Fabien Nury. இக்கதைக்கான சித்திரங்களை வழங்கியிருக்கிறார் Richard Guérineu.
காலத்தின் பின்னோக்கிய பார்வையில் சவுத்பர்க் எனும் புறநகரொன்றில் வாழும் வசதியான குடும்பம் ஒன்றின் வாரிசாக அறிமுகமாகிறான் பதினான்கு வயதின் முடிவை எட்டிக் கொண்டிருக்கும் ரோலண்ட். அவன் தாய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவளாக இருக்கிறாள். அவன் தந்தை தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் பிடிக்குள் தன்னை அடிமையாக்கி கொண்டவராக இருக்கிறார். தன் தாயை அதிகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மகனாக சித்தரிக்கப்படும் ரோலண்ட், தன் தந்தை மீது கொண்ட ஆதர்சத்தாலும், அவன்மீது அவர் ஓயாது திணிக்கும் தீவிர இனவெறி மற்றும் வலதுசாரிக் கருத்துக்களாலும் இனவெறி ஊட்டப்பட்டு வளர்ந்த ஒருவனாக இருக்கிறான்.
கறுப்பினத்தவர் மீது ஸ்டீவ் ரோலண்ட் கொண்ட வெறுப்பானது அவனுடன் அவனுள் கூடவே வளர்ந்து வரும் ஒன்றாக கதையில் கூறப்படுகிறது. கறுப்பினத்தவர்களிற்கு வழங்கப்படக்கூடிய ஒரே நீதி வன்முறை மாத்திரமே எனும் மந்திரத்தின் ஓயா உச்சாடனன் அவன். கல்லூரி நாட்களில்கூட விளையாட்டுப் போட்டிகளில் கறுப்பினத்தவர்களிடம் தோற்றுப் போவதை அவன் விரும்புவது இல்லை. அனைத்திலும் அவன் முதல்வனாக இருக்க வேண்டும் இரண்டாமிடம் என ஒன்று இல்லை,  அது ஒன்றுமேயில்லை என்பது அவன் வாழ்க்கையின் உயிர்வரி. தன் வீழ்ச்சியின் உறுதியின் புலர்தலில்கூட அவனிற்கு துணைவருவது இந்த உயிர்வரிகள்தான் ஆனால் அவ்வரிகள் அவன் முதல்வன் இல்லை என்பதையே அவனிற்கு உணர்த்தி நகர்கின்றன. கதையின் இறுதிவரை தான் இளமையில் கொண்ட கருத்துக்களில் இருந்து மாற்றம் கொள்ளாத ஒருவனாகவே ஸ்டீவ் ரோலண்ட் இருக்கிறான். தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனும் தீவிர முனைப்பில் அவன் கதை நெடுக நிகழ்த்துவது இனவாதத்தின் வன்கவிதைகளையே. தன் கல்லூரி நாட்களில் சகோதரத்துவம் எனும் குழுவுடன் இணைந்து இனவாதப் போராட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ் ரோலண்ட். இந்த சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வருங்கால மனைவியான கிம் காரிங்டனையும் சந்திந்துக் கொள்கிறான்.
srஸ்டீவ் ரோலண்டின் தந்தை தன் சிந்தாந்தங்களின் நீட்சிக்காக எவ்வாறு அவனை பயன்படுத்திக் கொண்டாரோ அவ்வாறே தன் ரகசிய திட்டங்களிற்காக அவனை கிம் பயன்படுத்திக் கொள்கிறாள். ஸ்டீவின் பலவீனங்களை அவள் தவளையொன்றின் குறிதவறா நாக்குப்போல பற்றியிழுத்து தன் வலையினுள் அவனை அவனறியாவண்ணம் திசைப்படுத்திச் செல்கிறாள். ஏறக்குறைய அவன் முடிவினையும் அவளே முன்னெழுதி வைத்தாள் என்றுகூட கூறிடலாம். ஏனெனில் கிம், மங்கூஸை பரிந்துரைத்து சதியினுள் நுழைக்க அவள் தன் கணவனான ஸ்டீவ் மனநிலைமீது கொண்ட ஐயமும் ஒரு காரணமாகும். ஸ்டீவ்மீது கிம் கொண்ட காதல் இலகுவாக துடைத்துவிடக்கூடிய ஒரு அரிதாரப்படலம். ஸ்டீவுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவள் அதை பூசிக்கொள்ள வேண்டியது ஒரு கட்டாயம். தனது மகன் குறித்த அக்கறை அவள் பூசும் அந்தப் பூச்சை நியாயப்படுத்துவதாக காட்ட விழைகிறது. இருப்பினும் ஸ்டிவ் குறித்த தன் எண்ணங்களை அவனுடன் தீவிரமான தருணமொன்றில் நேர்மையுடன் அவள் பகிரவே செய்கிறாள். இந்த தருணமே கதையில் வாசகனை நெகிழ வைக்கும் பகுதியாகவும், சாதாரணமாக கடந்து செல்லககூடிய ஒரு அதிரடிக் கதையை அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதாக மாற்றிவிடுவதாகவும் இருக்கிறது. அது போலவே தன் வாழ்க்கையில் எங்கும் எப்போதும் பிறரால் பயன்படுத்திக் கொள்ளப்படும் மனிதனாகவும், தீவிர இனவெறியனாகவும் இருக்கும் ஸ்டீவ் ரோலண்ட் குறித்த ஒரு பண்பையும் அது அறிந்து கொள்ளச் செய்கிறது.
ஸ்டீவ் ரோலண்ட் என்னதான் ஒரு பாதகனாக இருந்தாலும், தன் மனைவியான கிம் அவன் வாழ்வில் இழைத்தது எல்லாம் துரோகம் என்பதை அவள் கூறி அவன் அறிந்தாலும், அவள்மீது அவன் கொண்ட அந்த முதல் காதலை அவன் இழப்பதேயில்லை. கிம்மின் சொற்கள் அவன் உயிரைப் பறித்த பின்பாகவும் கூட அவள்மீது அவன் கொண்ட காதலின் ஒளியில் மலர்ந்திட விழையும் மலரிதழ்மனம் அவனது. கிம் தன்னை பயன்படுத்தியிருந்தாலும்கூட, தன்னை நேசிக்கவேயில்லை முற்றாக வெறுக்கிறாள் என்பதை தெரிந்தபின்பாகவும்கூட அவள் என்றும் நலமாக இருக்க வேண்டும் என மனதார விரும்புபவன் அவன். கிம் மீது அவன் கொண்ட காதலிற்கு அவனுடைய இறுதி மூச்சுவரை உண்மையாக இருந்த ஸ்டீவ் ரோலண்ட், அந்த அரிதாரக் காதலின் கரங்களின் அணைப்பினிலேயே இறந்தும் போகிறான். அவன் இறந்து புதைக்கப்பட்டாலும், அன்பினில் சாந்திபெறா ஆவியென அவன் முகம் நடமாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகத்தில் அவன் கொண்டிருந்த உண்மையான காதலும் அரூபமான மச்சமாகவே புன்னைகத்து மறைகிறது. ஸ்டீவ் ரோலண்ட் சரித்திரத்தில் இடம்பிடிக்கவே செய்கிறான்……. காதலின்.