Wednesday, January 13, 2010

மான்டோகிறிஸ்டோ மர்மம்


சர்வதிகார ஆட்சிகளாலும், அதன் பின் நிகழ்ந்த கப்சா புரட்சிகளாலும் அல்லல்பட்ட தென்னமெரிக்காவின் சிறு நாடுகளில் ஒன்று கொஸ்டா வேர்ட்.opm1 NSAயின் இயக்குனன் ஜியோர்டினோவின் கொடூரக் கொலைஞர்களின் சதிப்பொறிகளிலிருந்து வெற்றிகரமாகத் தப்பிக்கும் மக்லேன், அமெரிக்காவை நீங்கி தன் முன்னாள் காதலி[மனைவி!] மரியா ஜனாதிபதியாகவிருக்கும் கொஸ்டா வெர்ட் நாட்டை வந்தடைகிறான்.

கொஸ்டா வெர்ட் நாட்டின் அண்டை நாடான சன் மிகுவெலில் தஞ்சம் புகுந்திருந்த ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், கேணல் ஏமஸ் ஆகியோர் அங்கு நிகழ்ந்து விட்ட எதிர்பாராத அசம்பாவிதங்களினால் கொஸ்டா வெர்ட் நாட்டில் மக்லேனிற்கு முன்பாகவே வந்து தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

தாங்கள் தேடும் மக்லேன் கோஷ்டி, கொஸ்டா வெர்ட்டில் தங்கியிருப்பதை அறிந்து கொள்ளும் அமெரிக்க அரசு உடனடியாக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கொஸ்டா வெர்டின் ஜனாதிபதி மரியாவிடம் கேட்டுக் கொள்கிறது. மக்லேன் கோஷ்டியுடன் கொஸ்டா வெர்டில் சிறை வைக்கப்பட்டிருக்கும் காலஞ் சென்ற சர்வதிகாரி ஓர்ட்டிஸின் ஆசைநாயகி, அம்சமான அழகி பெலிசிடி பிரவுனையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்க அரசு வேண்டுகிறது.

தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் கொஸ்டா வெர்ட் நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அமுலிற்கு கொண்டு வரும் எனவும் மரியாவிற்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை செய்கிறது.

தன் நாட்டினை மேலும் சிக்கலுக்குள் மாட்டி வைக்க விரும்பாத மரியா, அமெரிக்காவின் வேண்டுகோளிற்கு இணங்க அவர்கள் கேட்ட நபர்களை கொஸ்டா வெர்டிலிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கச் சம்மதிக்கிறாள்.

ராணுவச் சிறையொன்றில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த மக்லேன் கோஷ்டி மற்றும் பெலிசிடி பிரவுன் ஆகியோரைக் சளைக்காமல் கொட்டும் மழையில் பலத்த ராணுவப் பாதுகாப்புடன் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்துச் செல்கிறார்கள் கொஸ்டா வெர்ட் வீரர்கள். செல்லும் வழியில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் மக்லேன் கோஷ்டியும், பெலிசிட்டி பிரவுனும் கடத்தப்பட்டு விடுகிறார்கள்.

தங்களை ஒர் பழிவாங்கும் குழுவாக அடையாளம் காட்டிக்கொள்ளும் இனம் தெரியாத ஆயுததாரிகள், தாங்கள் கடத்திச் சென்றவர்களை விடுவிக்க வேண்டுமானால் அதற்குப் பதிலாக பெருந்தொகைப் பணம் பணயத்தொகையாக தங்களிற்கு தரப்பட வேண்டும் என அமெரிக்க தூதரகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இதனை அறிந்து கொள்ளும் மரியா கடத்தப்பட்டவர்களை தேடுவதற்கான நடவடிக்கைகளில் தன் வீரர்கள் உடனடியாக இறங்குவார்கள் என அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கிறாள்.

opm2 மக்லேன் கோஷ்டியைக் கடத்திச் சென்ற ஆயுததாரிகள் தங்கள் நிஜ முகத்தை அவர்களிற்கு வெளிப்படுத்தும் போது ஆச்சர்யத்தால் அதிர்ந்து போகிறது மக்லேன் கோஷ்டி. கொஸ்டா வெர்டில் தங்களிற்கு நெருக்கமானவர்களின் அட்டகாசமான ஏற்பாட்டில் நடைபெற்ற நாடகம்தான் இந்தக் கடத்தல் நடவடிக்கை என்பதையும் அக்கோஷ்டி அறிந்து கொள்கிறது.

மாண்டோகிறிஸ்டோ அணைக்கு அருகில், செயற்கை ஏரி ஒன்றின் நெருக்கத்திலுள்ள ஒர் தங்குமிடத்திற்கு மக்லேன் கோஷ்டியை அழைத்துச் செல்கிறார்கள் அந்த ஆயுததாரிகள். இயற்கையின் எழில் காதலுடன் ஆக்கிரமித்திருக்கும் அப்பகுதியில் அவர்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறான் ஷோன் முல்வே. மக்லேன் கோஷ்டி ஏரிப்பகுதியில் சுதந்திரமாக உலாவ ஆரம்பிக்க பெலிசிடி பிரவுன் மட்டும் ஆயுததாரிகளினால் தனியாக அடைத்து வைக்கப்படுகிறாள்.

இவ்வளவு நாட்களாக கொஸ்டா வெர்டில் தான் தேடி அலைந்து கொண்டிருந்த ஓர் ரகசியம் குறித்து மக்லேன் கோஷ்டிக்கு விளக்கும் ஷோன், அந்த ரகசியம் மண்டோகிறிஸ்டோ ஏரியில், ஐம்பது மீற்றர் ஆழத்தில் அமிழ்ந்திருக்கிறது எனும் தகவலை தான் கண்டுபிடித்துவிட்டதையும் அவர்களிடம் கூறுகிறான். இதேவேளை தனியாக சிறை வைக்கப்படிருந்த பெலிசிட்டி, தன் கவர்ச்சியால் ஒர் காவல் வீரனை மயக்கி அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுகிறாள்.

opm3 ஆயுததாரிகளிடமிருந்து தப்பிய பெலிசிட்டி நேரடியாக கொஸ்டா வெர்டின் CIA பொறுப்பதிகாரி ஸ்பென்ஸரிடம் தஞ்சமடைகிறாள். தனக்குப் பணமும், பாஸ்போர்ட்டும் சிஐஏ தந்து உதவுமானால் மக்லேன் கோஷ்டியின் இருப்பிடத்தை தான் காட்டித்தருவதாக அவள் ஸ்பென்சருடன் பேரம் பேசுகிறாள். பெலிசிட்டியின் பேரத்தை ஸ்பென்ஸர் ஏற்றுக்கொள்கிறான்.

பெலிசிட்டி, மக்லேன் கோஷ்டியின் இருப்பிடத்தை ஸ்பென்சரிற்கு காட்டித்தருகிறாள். ஸ்பென்ஸர் அமெரிக்க தலைமையகத்தை தொடர்பு கொண்டு இப்புதியதகவலை தெரிவிக்கிறான். இந்த தகவலை அறியும் ஜியோர்டினோ, ஜெனரல் விட்டேக்கரிடம் உடனடியாக காமாண்டோ குழுவொன்றை ரகசியமாக கொஸ்டா வெர்டிற்கு அனுப்பி வைத்து மக்லேன் கோஷ்டியின் கதையை முடிக்கச் சொல்கிறான். இதனை மறுத்து விடும் ஜெனரல் விட்டேக்கர் தான் ஜியோர்டினோவின் சதிகளில் இனி பங்கு கொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கிறான்.

இதனால் சற்றும் அசந்து போகாத ஜியோர்டினோ சிஐஏயின் தலைவருடன் ஒர் புதிய திட்டத்தை உருவாக்குகிறான். சிஐஏயின் ரகசிய அதிரடி அணியொன்றை கொஸ்டா வெர்டிற்கு அனுப்பி வைத்து மாண்டோகிறிஸ்டோ அணையை சிதறடிக்க செய்வதே அத்திட்டம்.

opm4 வெடிப்பினால் உருவாகும் வெள்ளப் பேரழிவில் அணைக்கு அருகிலிருக்கும் பல கிராமங்கள் நீரில் மூழ்கும், வெள்ளத்தில் அகப்பட்டு மக்லேன் கோஷ்டியும் பரலோகம் செல்வார்கள், பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் ஏற்படும் பதட்ட நிலையைப் பயன்படுத்தி மரியாவின் ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்க கைப்பாவை அரசொன்றை கொஸ்டா வெர்ட்டில் நியமிக்கலாம் என்பன அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். அத்திட்டத்திற்கு ஜியோர்டினோ ஆப்பரேஷன் மாண்டோகிறிஸ்டோ எனப் பெயர் சூட்டி மகிழ்கிறான்.

பெலிசிட்டி தப்பி ஒடியதால் மாண்டோகிறிஸ்ரோ ஏரியில் மூழ்கி அங்கு அமிழ்ந்திருக்கும் ரகசியத்தினை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுகிறது. மக்லேனும், மேஜர் ஜோன்ஸும் ஏரி நீரில் மூழ்குகிறார்கள். இதே ஏரியின் அடியில் மாண்டோகிறிஸ்ரோ அணையைத் தகர்ப்பதற்காக குண்டுகளை வைக்க சிஐஏயின் ரகசிய அதிரடிப்படை நபர்கள் ஏற்கனவே மூழ்கியிருப்பதை பாவம் அவர்கள் அறியமாட்டார்கள்….

XIII காமிக்ஸ் தொடரின் 16வது ஆல்பமான OPERATION MONTECRISTO விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஓர் கதை சொல்லலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மக்லேன் கோஷ்டியை ஆயுததாரிகள் கடத்துவதிலிருந்து கதையின் முடிவு வரை, சில தருணங்களை தவிர்த்து தொய்வில்லாது தெளிவாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் வான் ஹாம். பெலிசிட்டி ஆயுததாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற பின்பாக கதையின் வேகம் அதிகரிக்கிறது. மக்லேனும், ஷோன் முல்வேயும் உணர்சி தெறிக்க உரையாடும் தருணங்கள் கதையின் வேகத்திற்கு தடை போடும் தருணங்களாக அமைந்து விடுகின்றன.

opm5 கடந்த ஆல்பங்களில் ஜியோர்டினோ சொல்வதெற்கெலாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த ஜெனரல் விட்டேக்கர், ஜியோர்டினோவின் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதை, XIII காமிக்ஸ் தொடரின் இரண்டாம் சுற்றின் முடிவை முன்னறிவிக்கும் திருப்பங்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.[நீரினடியிலிருக்கும் பிறிதொரு திருப்பத்தை கதையைப்படிக்கும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்]

கதையின் இறுதிப்பக்கங்களில் மக்லேன் அணியினரிற்கு ஓர் இழப்பு ஏற்படுகிறது. வாசகர்களிற்கு உணர்ச்சிகரமான தருணத்தை தர விரும்பி வான் ஹாம் இதனை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இது தேவையற்ற ஓர் இழப்பு என்பதே என் தாழ்மையான கருத்து.

ஜெனரல் காரிங்டனின் பாத்திரம் கதையிலும், சித்திரத்திலும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. காரிங்டனை வான்ஸ் மிக எடுப்பாக வரைந்திருக்கிறார். ஜனாதிபதி மரியா, மேஜர் ஜோன்ஸ் என எந்தப் பெண் வந்தாலும் கூச்சமில்லாமல் அணைத்துக் கொள்கிறார் மக்லேன். மக்லேனிற்கு ஜேசன் ஃப்ளை, கெலி பிரையன் போன்ற பெயர் வரிசைகளில் ஜெமினி கணேசன் எனும் பெயரையும் சூட்டி மகிழவே மனம் விரும்புகிறது. பெலிசிட்டி இந்த ஆல்பத்தின் கவர்ச்சி வினியோகத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். பெலிசிட்டிக்கு வயதுதான் கொஞ்சம் அதிகம் மிகுதியெல்லாம்……தாராளம். மக்லேன் எந்தப் பெண்ணிற்கு அருகில் சென்றாலும் மூஞ்சியை நீட்டும் மேஜர் ஜோன்ஸ், அழகு.

கொட்டும் மழையில் இடம்பெறும் கடத்தல் காட்சி, இயற்கை எழில் சூழ்ந்த மாண்டோகிறிஸ்டோ ஏரிக்காட்சிகள், நீரடிக் காட்சிகள் என வான்ஸ் கலக்கியிருக்கிறார். ஆனால் நீரடி மோதல் காட்சிகளில் பாத்திரங்களை சரியாக அடையாளப் படுத்திக் கொள்ள வாசகன் பக்கங்களை மீண்டும் மீண்டும் பார்த்து சிரமப்பட வேண்டியிருக்கிறது.

XIII காமிக்ஸ் தொடரின் 16வது ஆல்பம் அது வெளியாகுமுன்பே கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒன்று, டார்கோட் தளத்தில் சில வருடங்களின் முன்பாக XIIIன் ஆல்பங்களிலேயே அதிகம் விற்பனையான ஆல்பம் என்று அறிவிக்கப்பட்ட ஒன்று. இவற்றைத் தாண்டி XIIIன் இரண்டாவது சுற்றில் தேறிய அரிதான ஆல்பங்களில் ஒன்று. [***]

எஞ்சியிருக்கும் இரு ஆல்பங்கள் குறித்தும் சுருக்கமாக கூறுவதே நல்லது என்று எண்ணுகிறேன். முடிவைத் தொட்டுவிட்ட தொடர் ஒன்றின் மர்மங்களை உடைக்காது இருப்பதே சாலச்சிறந்தது.

9782871297550 XIII.17- மக்ஸிமிலியனின் தங்கம்

opm6 கொஸ்டா வெர்ட்டில் அபாயங்களை முறியடிப்பதில் வெற்றி கண்ட மக்லேன் குழுவினர், ஏரியின் அடியில் கண்டெடுத்த ரகசியத்துடன் கொஸ்டா வெர்ட் நாட்டை நீங்கி மெக்ஸிக்கோவிற்கு செல்கின்றனர். பசுபிக் கரைகளின் அருகிலிருக்கும் ஒர் பகுதியில் ஜெனரல் காரிங்டனிற்கு வேண்டிய ஒருவனின் விடுதியில் ரகசியமாக மறைந்திருக்கின்றனர் மக்லேன் குழுவினர்.

தன்னுடன் இணைந்து செயற்பட மறுத்து விட்ட ஜெனரல் விட்டேக்கரை தீர்த்துக் கட்ட உத்தரவுடுகிறான் ஜியோர்டினோ. இக்கொலை முயற்சி ஏற்படுத்தும் விளைவுகள் ஜியோர்டினோவை மக்லேன் கோஷ்டியைத் தேடி மெக்ஸிக்கோ நோக்கி செல்ல வைக்கின்றன.

தாங்கள் ஏரியில் கண்டெடுத்த ரகசியத்தின் உதவியுடன் மக்லேன் குழுவானது மெக்ஸிக்கோவில் அவர்கள் தேடி வந்த பொருள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. அப்பொருளைத் தேடி மெக்ஸிக்கோவின் ஆளரவமற்ற அபாயமான மலைப்பகுதிக்கு விரைகிறார்கள் அவர்கள். இவர்களை ரகசியமாகப் பின் தொடர்கிறது மெக்ஸிக்கோ கொள்ளைக் கோஷ்டி ஒன்று….

இந்த ஆல்பம் குறித்து பெரிதாகக் கூற எதுவுமில்லை. கதையில் எதிர்பாராதது ஆல்பத்தின் இறுதிப்பக்கத்தில் ரீ எண்ட்ரியாகும் ஒரு பெண்பாத்திரம். முன்னைய ஆல்பம் ஒன்றில் இப்பாத்திரம் மீது ரசிகர்கள் கொண்ட பிரியத்தை உடைக்கும் மீள்வருகையாக அது அமைந்து விடுகிறது. வான்ஸின் ஓவியங்களில் ஊசி மலைக்காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. காமிக்ஸ் தொடரின் இறுதி ஆல்பத்திற்கு முன்பான ஆல்பத்தில் கோட்டை விட்டிருக்கிறார் வான் ஹாம். வலுவற்ற கதை கொண்ட இந்த ஆல்பம் ரசிகர்களை ஏமாற்றவே செய்யும். [**]

XIII.19- இறுதிச் சுற்று

treize_19_le_dernier_round பத்திரிகையாளன் டேனி வெளியிடும் இரு புத்தகங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மெக்ஸிக்கோவில் மறைந்திருக்கும் மக்லேன் குழுவையும், அவர்களை முடித்து விடுவதற்காக அங்கு சென்றிருக்கும் ஜியோர்டினோவையும், விசாரணை ஒன்றின் முன்பாக நிறுத்துவதற்காக உடனடியாக அமெரிக்க மண்ணிற்கு எவ்வழியிலாவது கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒர் ஏஜெண்டிடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்பணியை நிறைவேற்ற மெக்ஸிக்கோ கிளம்பிச் செல்கிறார் அந்த ஏஜெண்ட்.

மெக்ஸிக்கோவில் இருக்கும் மக்லேன் குழுவை தீர்த்துக்கட்ட ஜியோர்டினோ, மெக்ஸிக்கோ மாபியா கும்பல் என்பன முழுவீச்சில் இறங்க, அமெரிக்காவில் நடக்கவிருக்கும் விசாரணையில் சில முக்கிய சாட்சிகள் பங்கு கொள்ளவே கூடாது என விரும்புகிறான் அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருக்கும் ஒர் நபர். தன் விருப்பத்தை நிறைவேற்ற அவன் கூலிக்கமர்த்திக் கொள்வது மேன்மைமிகு கொலைகாரி இரினாவை….

பல வருடங்களாக XIII காமிக்ஸ் தொடரின் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்த அதன் இறுதி ஆல்பம் முதல் பாதியில் பரபரப்பாக நகர்கிறது. திடீர் திருப்பங்களிற்கும், ஆக்‌ஷனிற்கும் குறைவேயில்லை. ஆல்பத்தின் பின்பாதி விசாரணைக் காட்சிகளில் தன்னை மூழ்கடிக்கிறது. ஆல்பத்தின் இறுதிப்பக்கத்தை படித்து முடிக்கும் போது “அட இவ்வளவுதானா” என்ற முனகல் வருவதைத் தவிர்க்க முடியாது.

opm7 தொடர் நெடுகிலும் முன்னைய ஆல்பங்களில் வாசகர்கள் அறிந்திருந்த தகவல்கள் மீண்டும் கூறப்படுகிறது. தமிழில் கதையை ஒரே தொகுப்பில் படிக்கப்போகும் வாசகர்களை இது சற்றுச் சலிப்படையவே வைக்கும். ஏஜெண்ட் XIIIன் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது இருப்பினும் அவனின் முன்னைய நினைவுகள் அவனிற்கு திரும்பவில்லை. ஆனால் கதையை வேறு ஓர் தளத்தில் தொடர்ந்து கொண்டு செல்வதற்குரிய சாத்தியத்தையும்! மர்மத்தையும்!! ஆல்பம் தன்னுள் கொண்டிருக்கிறது.

கதையின் நெகிழ்வான தருணம், கடற்கரையில் ஏஜெண்ட் XIIIஐ நினைவிழந்த நிலையில் காப்பாற்றிய தம்பதிகள் தங்கள் இறப்பின் பின்னும் கூட அவனிற்கு தரும் ஓர் அன்பு நிறைந்த, ஆச்சர்ய வடிவில் வருகிறது.

வான்ஸும், வான் ஹாமும் தங்கள் பணியை இயன்றளவு செய்திருந்தாலும் கூட XIIIன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை இந்த ஆல்பம் முழுமையாக நிறைவு செய்து விடவில்லை என்பதே உண்மை. தமிழ் ரசிகர்கள் மனதில் தொடரின் முடிவு தரும் எதிர்வினைகளையும், XIII எனும் நாயகன் மேல் அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தின் உருமாற்றத் தெறிப்புகளையும் தமிழ் தொகுப்பின் வரவின் பின் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். [***]

XIII-Treize XIII காமிக்ஸ் தொடர் போன்று வாசகர்களை பரவலாகச் சென்றடைந்து வெற்றி பெற்ற காமிக்ஸ் தொடர்கள் காமிக்ஸ் வரலாற்றில் அதிகமில்லை. அதே போன்று காமிக்ஸ் சந்தையை XIIIக்கு முன், XIIIக்கு பின் எனவும் பிரித்துக் கொள்ளலாம்.

XIII 2 காமிக்ஸ் சந்தைக்கு அது கண்டிராத வகையில் விளம்பரப் பிரசார நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை XIII தொடரிற்கு உண்டு. அதன் படிப்படியான வளர்ச்சி இன்று Dan Brown நாவல்களின் விளம்பரங்கள், மற்றும் பிரபல சினிமா தயாரிப்புக்களிற்கு செய்யப்படும் விளம்பரங்கள் போன்று காமிக்ஸ் ஆல்பங்களிற்கும் விளம்பரங்கள், ட்ரெயிலர்கள் உருவாக்கப்படுகின்றன. வெகுஜன ஊடகங்களில் புதிய ஆல்பங்களின் வருகை, வெளியீடு போன்றவை குறித்த செய்திகள் வருவதற்கு தவறுவதே இல்லை.

சுருக்கமாக கூறினால் காமிக்ஸ் துறை நன்றாக இயங்குகிறது. பல்வேறுபட்ட காமிக்ஸ் பதிப்பகங்களிற்கிடையிலான போட்டியின் விளைவாக மிகச் சிறப்பான படைப்புக்கள் வாசகனை வந்தடைகின்றன. கிராபிக் நாவல்களின் தரமும், உள்ளடக்கமும் அசத்துகிறது. மங்கா வகை தனக்கென ஓர் தனியிடத்தையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கி வெற்றி நடை போடுகிறது.

bd_xiii001 XIII காமிக்ஸ் தொடரின் வாசகர்களில் ஒருபகுதியினர் அவர்களிற்கு கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட காமிக்ஸ் பிரதிகளின் வாசிப்பின் மூலம் XIIIன் வாசிப்பனுபவத்தை கடந்து சென்று விடுகிறார்கள். புதிய படைப்புக்களின் வாசிப்பனுபவம் XIII தந்திருந்த வாசிப்பனுபவத்தை சில வேளைகளில் ஒரு படி கீழே இறக்கி விடுகிறது. இவ்வகை வாசகர்களிற்கு இப்போது XIII என்பது சிறந்த ஓர் வாசிப்பனுபவமோ அல்லது குறிப்பிடத்தக்க காமிக்ஸ் தொடரோ அல்ல.

ஆனால் XIIIக்கு இன்றும் வாசகர்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறார்கள். XIIIஐ புதிதாய் கண்ட வாசகனை அத்தொடர் தன்பால் கவர்ந்திழுக்கும் மந்திரத்தை தன்னுள் கொண்டதாகவே இருக்கிறது. தொடர் ஆரம்பித்து இருபத்தி ஐந்து வருடங்களாகியும் இன்றும் வெளிவரும் புதிய பதிப்புகள் XIII தொடரிற்கிருக்கும் கிராக்கியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது தொடரும்.

இனியும் XIII என்பதனை ஓர் அதிர்ஷ்டமில்லாத எண் என்று முழுமையாகக் கூறிவிட முடியுமா என்ன?!

ஒன்று, இரண்டு….XIII நிறைவடைந்தது.

நண்பர்கள் அனைவரிற்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

முன்னைய XIII பதிவுகள்

Thursday, January 7, 2010

விபத்து


accident-2009-19048-318566964 ஹாங்காங்கில் இயங்கும் தொழில்முறைக் கொலைகாரர் குழுவொன்றின் தலைவனாக செயற்பட்டு வருகிறான் Ho. ஹோவின் குழு தாங்கள் செய்யும் கொலைகளை எதிர்பாரமல் அல்லது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விபத்து போல் அரங்கேற்றி, நடாத்தி முடிப்பதில் கைதேர்ந்த கில்லாடிகளாகத் திகழ்கிறது.

கொலைகளைத் திட்டமிடுவதிலும், அதற்கான ஆயத்தங்களிலும், ஒத்திகைகளிலும், பின் அக்கொலைகளை செயற்படுத்துவதிலும் மிக நுணுக்கம் கொண்ட அவதானிப்புக்களும், எச்சரிக்கைகளும் நிறைந்ததாக அவர்கள் நடைமுறைகள் காணப்படுகின்றன.

கொலை நடக்கும் இடத்தில், தங்களை அக்கொலையுடன் தொடர்பு படுத்திவிடக்கூடிய எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காது, அது ஒரு விபத்து என்று பொலிஸ் விசாரணையை மூடி விடும்படி பார்த்துக் கொள்கிறது ஹோவின் குழு.

இவ்வாறான நேர்த்தியான ஹோவின் கொலைச் சேவையை நாடி வருகிறான் Wong எனும் நபர். முடமான நிலையில் இருக்கும் தன் தந்தையை தீர்த்துக் கட்டும் பணியை ஹோ குழுவிடம் ஒப்படைக்கிறான் அவன்.

வொங் ஏன் தன் தந்தையை தீர்த்துக் கட்ட விரும்புகிறான் எனும் கேள்வி ஹோவின் மனதில் எழுகிறது. இருப்பினும் பணியை ஏற்றுக் கொண்ட ஹோ, தன் குழுவினரோடு வொங்கின் தந்தையை எவ்விதமாக இல்லாமல் ஆக்குவது என்று திட்டம் ஒன்றை உருவாக்க ஆரம்பிக்கிறான்.

வொங், தினந்தோறும் தன் தந்தையை சக்கர நற்காலியில் வைத்து தள்ளியவாறே உலவச் செல்வதை ஹோவின் குழு அவதானிக்கிறது. அவர்கள் செல்லும் பாதையின் சூழல் கூர்மையான கவனிப்புக்கு உள்ளாகிறது. வொங்கின் நடவடிக்கைகளையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். வொங் தன் தந்தையை உலவ அழைத்துச் செல்லும் பாதையில் நிகழும் ஒரு திட்டமிட்ட விபத்தில், அவன் தந்தையை எவ்விதம் இரையாக்கலாம் என்பதை அவர்கள் தங்கள் அவதானிப்புக்களைக் கொண்டு திட்டமிடுகிறார்கள்.

accident-2009-19048-1389085322 மழைநாள் ஒன்றில், வொங் செல்லும் வழியில் ஓடும் ட்ராம் வண்டிக்கு மின் சக்தியை வழங்கும் கம்பியில் ஒரு நூலைத் தொங்க வைத்து, அந்த நூலை சக்கர நாற்காலியில் இருக்கும் வொங்கின் தந்தையின் உடல்மேல் பட வைத்து, அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக பிறர் எண்ணும் வகையில் ஓர் விபத்தை ஜோடனை செய்கிறது ஹோவின் குழு.

விபத்து போன்ற அந்தக் கொலையினை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்தபின், ஒரு நல்ல நாளில் அத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள் அவர்கள். ஆனால்….

அக்கொலையை முடித்து விட்டு கிளம்பிச் செல்லும் ஹோவை நோக்கி பாய்ந்து வருகிறது தெருவிலிருந்து விலகிய ஒரு பஸ். தன்னை நோக்கி வரும் பஸ்ஸிலிருந்து மயிரிழையில் விலகித் தப்பிக்கிறான் ஹோ. ஆனால் அவன் சகாவான குண்டு பஸ்ஸில் மோதி சாகும் நிலையில் தெருவில் துடிக்கிறான்.

தெருவில் சாகக் கிடக்கும் தன் சகாவை நெருங்கும் ஹோ, அவனிடமிருந்து பொலிஸ் கைப்பற்றி விடக்கூடிய பொருட்களை தான் எடுத்துக் கொள்கிறான். வலியில் துடிக்கும் குண்டு, ஈனமான குரலில் ஹோவைப் பார்த்து இது ஒரு விபத்து என்கிறான். ஆனால் ஹோவின் மனதிலோ இது தன்னைத் தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு விபத்து எனும் சந்தேகம் பூதாகரமாக எழுகிறது.

accident-2009-19048-1589339923 தன் குழுவினர் மேல் கூட நம்பிக்கை கொள்ளாது இந்த விபத்தின் பின்னிருக்கும் சதியை தானே தனியாக தேட ஆரம்பிக்கிறான் ஹோ. அவன் சந்தேகங்கள் அவனை இட்டுச் செல்லப் போகும் பொறி குறித்து அவன் அறிந்திருக்கவில்லை….

புத்திசாலியும், எச்சரிக்கை நிறைந்தவனும், நுட்பமான விதத்தில் செயல்படுபவனுமான ஒரு கொலையாளி, அவனிற்கு ஏற்படும் ஒரு சந்தேகம் காரணமாக, தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும், நிகழ்வையும் எவ்விதமாக மொழிபெயர்க்கிறான் என்பதை அருமையாகக் கூறுகிறது Accident எனப்படும் இந்த ஹாங்காங் திரைப்படம். திரைப்படத்தை தயாரித்திருப்பவர் பிரபல இயக்குனரான Johnnie To. இயக்கியிருப்பவர் Soi Cheang.

பெரும்பாலான ஹாங்காங் தயாரிப்புக்களில் தவறாது இடம்பிடிக்கும், நிற்காமல் வெடிக்கும் துப்பாக்கிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்‌ஷன், இவற்றை ஒரு அழகிய நடனம் போல் மெல்லசைவில் காட்டும் நுட்பம், அதிலும் இயக்கம் ஜான் வூவாக இருந்தால் குறுக்கே பறக்கும் வெள்ளைப் புறாக்கள் என பின்னி எடுத்து இருப்பார்கள். ஆனால் சொய் ச்சீன், உறுதியான திரைக்கதையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

மூன்று வருடங்களாக செப்பனிட்ட இத்திரைக் கதையை பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளால் நிரப்பாது, ஒரு கிளாசிக் த்ரில்லர் போன்ற அழகுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர்.

accident-2009-19048-1734012294 படத்தில் ஹோ குழுவினர் ஆற்றும் இரு கொலைகள் இடம் பெறுகின்றன. அவற்றை விபத்து போல் காட்டுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் எங்களை இருக்கைகளுடன் ஒட்டிக் கொள்ள வைக்கின்றன. விபத்து என்பதற்கு உங்கள் அகராதியில் இனி அர்த்தமே வேறு என்ற படத்தின் பஞ்ச் வரிகளிற்கேற்ப நுட்பத்துடன் அமைந்து சிலிர்க்க வைக்கின்றன அக்காட்சிகள்.

தன் சகாவான குண்டு இறந்தபின், யாரையும் நம்பாத நிலையில் பித்துப் பிடித்தவன்போல் ஹோ நிகழ்த்தும் தேடல்களும், நடவடிக்கைகளும் பார்வையாளனை ஹோ அகப்படப்போகும் பொறிக்குள் அழகாக அழைத்துச் செல்கின்றன.

Accident Photocall 66th Venice Film Festival groE2jNSlmFl அழகாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், அலட்டிக் கொள்ளாத ஒளிப்பதிவும், தெளிவான கதை சொல்லலும் ஹோ பாத்திரத்தில் வேடமேற்றிருக்கும் Louis Kooன் இயல்பான நடிப்பும் படத்தின் பலம். ஹோவின் குழுவில் இடம்பெறும் மாமா எனும், தான் செய்யும் செயல்களை மறந்துவிடும் பாத்திரமும் மனதை தொடுகிறது.

ஹோவின் கடந்தகாலம் பற்றிய தகவல் உறுதியாக மனதைப் பற்ற மறுக்கிறது. திரைப்படத்தின் இறுதியில் ஏற்படும் திருப்பங்களும், உச்சக்கட்டமும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் ரசிகனிடம் தூண்டிவிட்ட எதிர்பார்ப்பினை முழுமையாக தீர்க்கவில்லை, இருப்பினும் தரமான, வேறுபட்ட த்ரில்லர்கள் வகையில் எளிதாக இடம்பிடித்துக் கொள்கிறது இத்திரைப்படம். சிக்கல் நிறைந்த ஒரு கதையை எவ்விதம் தெளிவாக பார்வையாளனிடம் கொண்டு சேர்ப்பது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இத்திரைப்படம்.

சந்தேகமும் விபத்தைப் போல் கொல்லும். [**]

ட்ரெயிலர்

Friday, January 1, 2010

முசோலினியின் மனைவி


இத்தாலியின் மிலான் நகரத்தில் 1914ல் இத்தாலிய சோசலிசக் கட்சியை சேர்ந்தவனான பெனிட்டோ முசோலினி, அதிகாரத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து மிலான் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை முன்னின்று நடாத்துகிறான்.

முசோலினியின் ஆளுமையால் வெகுவாகப் கவரப்படும் Ida Dalser எனும் பெண் அவன் மீது காதல் வயப்படுகிறாள். ஐடா, மிலான் நகரில் ஒரு அழகுநிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறாள். மிலான் நகரிற்கு அவள் வருமுன்பாகவே முசோலினியைத் தெரிந்தவளாக அவள் இருக்கிறாள்.

முசோலோனி பங்கேற்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் அவனைக் கண்டுகொள்ளும் ஐடா, கூட்டத்தினுடாக அவனை அணுகுகிறாள். தன் இருப்பிடத்தின் முகவரியை முசோலினியிடம் ரகசியமாக தருகிறாள்.

அன்றிரவு ஐடாவின் வீட்டிற்கு வருகிறான் முசோலினி. முசோலினி மீதான காதலும், ஈர்ப்பும், பொங்கித் ததும்பும் அவள் இளமையும் ஐடாவை அவனுடன் கலக்க வைக்கின்றன. முசோலினி மீதான தன் முழுமையான காதல் வீச்சுடன் அவனுடன் உறவு கொள்கிறாள் அவள். ஆனால் முசோலினியின் கண்களோ அதிகாரம் மீதான அவன் கனவுகளை அந்த அறையின் மெலிந்த இருளில் தேடிப்பயணிக்கின்றன. சிந்தனையிலாழ்ந்த ஒரு எந்திரம் போல் ஐடாவின் உடல்மேல் இயங்குகிறான் அவன்.

ஐடாவின் காதல் முசோலினியுடன் தொடர்கிறது. இவ்வேளையில் முதலாம் உலக யுத்தம் ஆரம்பமாகிறது. அது நாள்வரையில் போரிற்கு எதிரான கருத்துக்களை உரக்கப் பேசிக்கொண்டிருந்த முசோலினி, போரிற்கு ஆதரவாக தன் கருத்துக்களைப் பேச ஆரம்பிக்கிறான். இது இத்தாலிய சோசலிசக் கட்சியில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணுகிறது. தொழிற்சங்கவாதிகள் முசோலினி தன்னை பிரான்ஸ் நாட்டிற்கு விற்ற ஒரு துரோகி எனக் கொதிக்கிறார்கள். இவ்வகையான சர்ச்சைகளால் முசோலினி பணியாற்றிக் கொண்டிருந்த சோசலிசச் சார்பு பத்திரிகையான Avanti [முன்னோக்கிய] யிலிருந்தும், இத்தாலிய சோசலிசக்கட்சியிலிருந்தும் அவன் வெளியேற்றப்படுகிறான்.

gimg_814820 முசோலினியின் வாழ்வின் இலட்சியக் கனவுகளை நன்கறிந்த ஐடா, தன் அழகு நிலையம், வீடு, நகைகள் என தன்னிடமிருந்த அனைத்தையும் விற்று வந்த பணத்தை முசோலினிக்கு தருகிறாள். ஐடா வழங்கிய பணத்தின் உதவியுடன் முசோலினி Il Popolo d’Italia [இத்தாலி மக்கள்] எனும் ஓர் பத்திரிகையை ஆரம்பிக்கிறான்.

முசோலினியின் பத்திரிகை இத்தாலி, போரில் இணைந்து கொள்ள வேண்டும் எனும் கருத்தினை ஆவேசமாக முன்வைக்கிறது. முசோலினியின் கருத்துக்கள் இத்தாலியின் தேசியவாத பூர்ஜூவாக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. [பின்வரும் காலங்களில் இப்பத்திரிகையே முசோலினியின் பாஸிசக் கருத்துக்களின் பிரச்சார அச்சாணியாக செயற்பட்டது.]

முசோலினியுடன் கொண்ட உறவால் தான் கர்ப்பமுற்றிருப்பதை அறிகிறாள் ஐடா. இந்த மகிழ்ச்சியான செய்தியை முசோலினியுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவனைத்தேடி அவன் பத்திரிகை அலுவலகத்திற்கு செல்கிறாள் அவள். முசோலினிக்கு தான் கர்ப்பமுற்றிருக்கும் தகவலையும் தெரிவிக்கிறாள். ஆனால் சந்தர்ப்பவசமாக முசோலினிக்கு ஏற்கனவே ரேச்சல் எனும் பெண்ணுடன் தொடர்பும் அவள் வழியாக பிறந்த ஒரு பெண் குழந்தையும் இருப்பதை அவள் அறிந்து கொள்கிறாள். மனதில் கோபம் பொங்க பத்திரிகை அலுவலகத்தை விட்டு வெளியேறிச் செல்கிறாள் ஐடா.

ஐடாவின் குழந்தை உலகை எட்டிப்பார்க்கும் போது முசோலினி யுத்தக்களத்தில் இருக்கிறான். மோதல் ஒன்றில் முசோலினி காயமடைந்து விட்டதை பத்திரிகைகள் வழி அறிந்து கொள்ளும் ஐடா, முசோலினி சிகிச்சை பெறுமிடத்தில் அவனை உடனே சென்று பார்க்க விரைகிறாள்.

அங்கு காயமடைந்து கட்டிலில் படுத்திருக்கும் முசோலினியை அன்புடன் பராமரித்துக் கொண்டிருக்கிறாள் ரேச்சல். ஐடா அங்கு வந்திருப்பதைக் காணும் ரேச்சல் அவளை கண்டபடிக்கு திட்டுகிறாள். தானே முசோலினியின் மனைவி எனக் கத்துகிறாள் ரேச்சல். பரிதாபமான நிலையில் தன்னையும் தன் குழந்தையையும் கைவிட வேண்டாம் என முசோலினியிடம் கண்ணீருடன் வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள் ஐடா.

vincerecouple யுத்தம் நிறைவடைந்த பின் முசோலினி அதிகாரத்தின் படிகளில் வேகமாக ஏற ஆரம்பிக்கிறான் [ 1921களில் தேசிய பாசிசக் கட்சியை அவன் ஆரம்பிக்கிறான்]. ஆனால் ஐடாவோ அவனிற்கு விடாது தொல்லை தருகிறாள். பொது இடங்களில் முசோலினியை சங்கடப்பட வைக்கிறாள். அரச அதிகாரிகள், இத்தாலிய மன்னர், பாப்பாண்டவர் ஆகியோரிற்கு முசோலினி தனக்கு இழைத்த அநீதி குறித்து கடிதங்கள் எழுதுகிறாள். ஐடாவின் தொந்தரவுகளை ஒரு வழி பண்ண வேண்டிய நிலையில் தன் செல்வாக்கின் மூலம் ஐடாவை Trente எனும் ஊரிற்கு இடம்பெயரச் செய்கிறான் முசோலினி.

திரென்ந்த் எனும் அந்த ஊரில் தன் சகோதரன் வீட்டில் பலத்த கண்காணிப்பின்கீழ் தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள் ஐடா. அவள் மகன் பெனிட்டோ அல்பினோ முசோலினி ஒரு சாதாரண பள்ளியில் தன் கல்வியை தொடர்கிறான். இது அவளிற்கு பெரிதும் விசனத்தை தருகிறது.

தன் சகோதரன் வீட்டிலிருந்தும் அதிகாரங்களை நோக்கி கடிதங்களை எழுதுகிறாள் ஐடா. அவள் எழுதும் எந்தவொரு கடிதத்திற்குமான பதிலும் அவளிற்கு கிடைத்ததில்லை.

முசோலினியை மறந்துவிட்டு வேறொருவனைத் தேடிக்கொள் என்கிறான் அவள் சகோதரன். ஆனால் அவளோ முசோலினியைத் தவிர வேறு எந்த ஆணும் தனக்கு வேண்டியதில்லை என்கிறாள். முசோலினி ஏற்கனவே ரேச்சலை பதிவுத் திருமணம் செய்து கொண்ட விடயத்தை அவள் அறிந்திருக்கவில்லை.

சலிப்பான நாட்களைக் கடந்து கொண்டிருக்கும் ஐடா, முசோலினியின் கட்சி அதிகாரத்தில் அமர்வதை அறிந்து கொள்கிறாள். தானே முசோலினியின் உண்மையான மனைவி எனவும், தன் மகனே முசோலியின் உண்மையான வாரிசு எனவும் எல்லாரிடமும் கூறிவருகிறாள் அவள். முசோலினிக்கும் அவளிற்கும் கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெறும் திருமணம் அவள் கனவுகளில் வெளிச்சமாக மலர்கிறது.

சிறிது காலத்தின் பின் திரெந்த் ஊரிற்கு விஜயம் செய்யும் முசோலினிக்கு நெருக்கமான மந்திரி ஒருவனை அவன் எதிர்பாராதவிதமாக அணுக முயல்கிறாள் ஐடா. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவளை மடக்கிப் போட்டு விடுகிறார்கள்.

ஐடாவின் தீராத தொல்லைகளை இல்லாதொழிக்க விரும்பும் முசோலினி அவளை மனநல மருத்துவமனை ஒன்றில் பலவந்தமாக அனுமதிக்க செய்கிறான். ஐடாவின் மகன் அவளிடமிருந்து பிரிக்கப்பட்டு கத்தோலிக்க விடுதி ஒன்றில் வளர்க்கப்படுகிறான். அங்கு அவன் தந்தை பெயர் முசோலினி இல்லை என்று அவனிற்கு கூறப்படுகிறது. தன் தந்தை முசோலினி மீது வெறுப்புடன் வளர்கிறான் அவன்.

vincere-marco-bellocchio-L-5 மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐடா, தான் முசோலினியின் மனைவி என்பதனையும், தன் மகனே முசோலினியின் வாரிசு என்பதனையும் அங்கு அவளிற்கு வழங்கப்படும் சிக்கிச்சைகளையும் மீறி தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறாள். அவள் மகனைப் பார்ப்பதற்கோ இல்லை அவனைத் தொடர்பு கொள்வதற்கோ அவளிற்கு அனுமதி மறுக்கபடுகிறது. அவளது மகன் எழுதியது போன்ற பொய்க் கடிதங்களைக் காட்டி அவளை ஏமாற்றவும் முயற்சிக்கிறது மருத்துமனை நிர்வாகம்.

ஐடாவிற்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் ஒருவர், ஐடா தன் பையனை மீண்டும் பார்க்க விரும்பினால், அவளுடைய போக்கை அவள் மாற்றிக் கொள்ள வேண்டுமென ஆலோசனை தருகிறார். மனநல மருத்துவமனையைவிட்டு அவள் வெளியேற விரும்பினால் முசோலினிக்கும் அவளிற்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று ஐடா நடிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஆனால் ஐடாவோ தான் உண்மையை உரக்கக் கூறுவேன் என்று கூறுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன, மனநல விடுதிகளில் அலைக்கழிக்கப்பட்டு தன் காலத்தை இழக்கிறாள் ஐடா. அவன் மகனோ இளைஞனாக வளர்ந்து நிற்கிறான். மனநலவிடுதிகளில் இருப்பவர்களை விட வெறிபிடித்தவனான தன் தந்தை முசோலினியின் வீராவேசப் பேச்சுக்களை தன் நண்பர்களிற்கு நடித்துக் காட்டிக் களைக்கிறான் அவன். இவ்வாறான ஒரு நாளில் தன் தாயின் சகோதரனைக் கண்டுகொள்கிறான் அவன். ஐடாவின் சகோதரனை ரகசியமாக அணுகும் அவன், தன் தாயிடம் எப்படியாவது கொண்டு சேர்த்து விடும்படி கூறி அவரிடம் ஒரு கடிதத்தை ஒப்படைக்கிறான்.

ஐடா தங்கவைக்கப்பட்டிருக்கும் மனநல மருத்துவமனையில் பணியாற்றும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு சகோதரியின் மூலம் அக்கடிதத்தை ஐடாவிடம் சேர்ப்பிக்கிறான் ஐடாவின் சகோதரன். நீண்ட கால இடைவெளியின் பின்பாக தன் கைகளில் வந்து சேர்ந்திருக்கும் தன் அன்பு மகனின் கடிதத்தைப் படித்துப்பார்த்து அழுது கொண்டேயிருக்கிறாள் ஐடா.

ஐடாவிற்கு கடிதத்தை ரகசியமாகத் தந்த சகோதரி அன்றிரவு ஐடாவின் அறைக்கு வருகிறாள். அங்கு அழுதபடியே இருக்கும் ஐடாவைக் காணும் அவள், ஐடாவின் மகன் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்க்கிறாள். அக்கடிதத்தில் துடித்துக் கொண்டிருக்கும் பிரிவும், பாசமும் அவள் கண்களை ஈரமாக்குகிறது. தன் உடைகளையும், சாவிகளையும் ஐடாவிடம் தந்து மனநல மருத்துவமனையிலிருந்து அன்றிரவே ஐடா தப்பிச் செல்ல உதவிகிறாள் அவள்.

அடித்துப் பெய்யும் மழையினூடாக மனநல மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுகிறாள் ஐடா. தன் சகோதரனின் வீட்டை அடையும் வரையிலும் அவள் தன் வேகத்தைக் குறைக்கவில்லை. தன் சகோதரனின் வீட்டுக்கதவுகளை அவள் திறக்கிறாள், அங்கே ஏற்கனவே அவளைத்தேடி காவலர்கள் வந்து காத்திருக்கின்றனர்.

VINCERE 4 காவலர்களைத்தாண்டி மாடிப்படிகளில் ஏறி தன் மகன் சிறுவனாக இருந்தபோது தூங்கிய கட்டிலில் விழுந்து கதறுகிறாள் ஐடா. தன்னை மீண்டும் மனநல விடுதியில் அடைக்க வேண்டாம் எனக்கெஞ்சிக் கேட்டவாறே அழுகிறாள் அவள்.

காவலர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்கள். வீட்டு வாசலில் ஊர்மக்கள் கூடி நிற்கிறார்கள். கொலைகாரர்களே, அவளை விடுதலை செய்யுங்கள் எனும் கூச்சல் இடைவிடாது அவர்களிடமிருந்து எழுகிறது. கும்பலைத்தாண்டி ஐடாவை தங்கள் காரில் ஏற்றிவிடுகிறார்கள் காவலர்கள்.

கார் மெதுவாக ஓட ஆரம்பிக்கிறது. கூட்டத்திலிருந்த சிறுமி ஒருத்தி தான் கொய்த மலர்களை ஐடாவிற்கு காரின் கண்ணாடி வழியாக வழங்குகிறாள். ஐடாவின் கரங்களைப் பற்றி அவளிற்கு ஆறுதல் தருகின்றனர் ஊர்மக்கள். என்னை மறந்து விடாதீர்கள் என்று ஊர்மக்களைப் பார்த்துக் கேட்கிறாள் ஐடா. காரிற்குளிருந்து ஊர் மக்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஐடாவின் பார்வை இப்போது அரங்கில் இருக்கும் பார்வையாளனை நோக்கித் திரும்புகிறது, பார்வையாளனின் கண்களை நேரே எதிர் கொள்கின்றன கலங்கியிருக்கும் அவள் விழிகள். திரையிலிருந்து அவள் மறையும்வரை பார்வையாளனின் கண்களைப் பார்த்தவாறே இருக்கிறாள் ஐடா. அவளின் பார்வை நீங்களும் என்னை மறந்து விடாதீர்கள் என்று எங்களிடம் அவள் கெஞ்சிக் கேட்பதுபோல், எங்கள் மனங்களில் மென்மையாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

6a00d834529f5d69e200e54f0acf858833-800wi ஐடா டால்சர்- 1937ல் வெனிஸில் உள்ள மனநல மருத்துவமனையொன்றில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இறந்து போனாள். அவள் இறக்கும்வரையிலும் அவள் மகனைச் சந்திப்பதற்கு அவளிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஐடாவிற்கும், முசோலினிற்கும் திருச்சபை சாட்சியாக இடம்பெற்ற திருமணத்திற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

பெனிட்டோ அல்பினோ முசோலினி- 1932ல் அவனது குடும்பப் பெயர் முசோலினி என்பதிலிருந்து பெர்னார்டி என்பதாக மாற்றப்பட்டது. கடற்படையில் பணிபுரிந்த அவன் சீனாவிற்கு சேவைக்காக சென்று திரும்பியபின் பலவந்தமாக மனநல விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டான். 26/07/1942ல் தனது 26 வயதில் அம்மருத்துவமனையிலேயே இறந்து போனான்.

ஐடாவினதும், அவன் மகனினதும் கதையை மனதை உருக்கும் விதத்தில் திரையில் கொணர்ந்திருக்கிறது Vincere [ வெல்லுதல்] எனும் இந்த இத்தாலியத் திரைப்படம். 1907லிருந்து ஆரம்பித்து ஏறக்குறைய 30 வருட வரலாற்றை தன்னுள் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். திரைப்படத்தினை சிறப்பாக இயக்கியிருக்கிறார் Marco Bellochio எனும் இயக்குனர். இத்திரைப்படத்தின் கதையை உருவாக்குவதற்கு Marco Zeni என்பவர் எழுதிய இரு நூல்கள், மற்றும் ஒரு தொலைக்காட்சி விவரணச் சித்திரம் என்பன அவரிற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

ஐடாவின் வரலாறு வழி இயக்குனர் இத்தாலியின் சரித்திரத்தில் முக்கியமான பாத்திரங்களில் ஒருவனாகிய முசோலினியின் வளர்ச்சியையும், அவனது துரோகச் செயல்களையும், இத்தாலியில் பாசிசத்தின் உட்புகலையும் சிறப்பாகக் கூறியிருக்கிறார். படத்தின் பின்பாதியில் முசோலினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமை ஐடாவிடமிருந்து அவனை அன்னியப்படுத்தும் உணர்வைத் தருகிறது.

மனநல மருத்துவமனையில் ஐடா தன் மகனைப் பிரிந்து வேதனைப்படும் உணர்வுகளை, அம்மருத்துவமனையில் திரையிடப்படும் சார்லி சாப்ளினின் The Kid படத்தில் வரும் காட்சிகளுடன் இயக்குனர் சங்கமிக்க வைத்திருக்கும் விதம் அருமை.

19103535.jpg-r_760_x-f_jpg-q_x-20090511_033201 படத்தின் மிக முக்கிய பாத்திரமான ஐடாவை திரையில் உயிர்க்க வைத்திருக்கிறார் நடிகை Giovanna Mezzogiorno. தன் அற்புதமான திறனால் ரசிகர்களின் உள்ளங்களை கரைய வைக்கிறார் அவர். ஐடா பாத்திரத்தில் பொதிந்திருக்கும் அந்தச் சக்தியை முழு வீச்சுடன் வெளிப்படுத்துவதில் வெற்றி காண்கிறார் இந்த அழகான இத்தாலிய நடிகை. கேன் திரைப்படவிழாவில் ஏன் இவரின் சிறந்த நடிப்பிற்கு விருது வழங்கப்படவில்லை எனும் கேள்வி என் மனதில் எழுகிறது.

முசோலினி பாத்திரத்திலும், ஐடாவின் மகன் பாத்திரத்திலும் நடித்திருப்பவர் Filippo Timi. முசோலினி பாத்திரத்தில் வெறுக்கவும், மகன் பாத்திரத்தில் கலங்கவும் வைக்கும் சிறப்பான நடிப்பிற்கு சொந்தக்காரர்.

சிறப்பான ஒளிப்பதிவு, இனிமையான இசை, கவித்துவமான காட்சிகள், பொருத்தமான ஆவணப்படங்களின் பிட் சொருகல்கள் என அருமையாக வந்திருக்கிறது இத்திரைப்படம். இத்தாலியின் சரித்திரத்தில் அதிகம் பேசப்படாத, பூசி மறைக்கப்பட்ட ஒரு உண்மையை பாசாங்கின்றி சொல்வதில் வென்றிருக்கிறது இத்திரைப்படம்.

மனநலவிடுதிகளிலும் ஐடா தன் கடிதங்களைத் தொடர்ந்து எழுதுகிறாள். ஆனால் அவற்றை உரியவரிடம் அனுப்புவதற்கு அவளால் முடிவதில்லை. அக்கடிதங்களை இரும்புக் கம்பிகள் கொண்ட பிரம்மாண்டமான ஜன்னல்கள் வழியே வெளியே வீசுகிறாள் அவள். ஆகாயத்திலிருந்து கொத்தாக கவிழ்த்துவிடப்பட்ட வெள்ளை மலர்களைப்போல் வெளியே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. ஐடா எறிந்த கடிதங்களில் அவள் எழுதியிருந்த உண்மைகள் இயற்கையின் பெருவெளியின் மடிப்புக்களில் மடங்கிப்போய்க் கிடக்கின்றன. அவற்றின் மீதாகக் காலம் மெளனமாக தன் பயணத்தை தொடர்ந்து செல்கிறது. [***]

நண்பர்கள் அனைவரிற்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தாலிய ட்ரெயிலர்

Monday, December 28, 2009

சாலமன் கேன்


solomon_kane_trailer-1253294637 பில்லி சூனியங்களும், பைசாசங்களும், இருளும் தங்கள் கிளைகளைத் தடையற்று விரித்துக் கொண்டிருந்த 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். தீமையின் கருவான சாத்தானையும், அவன் ஏவலர்களையும் எதிர்த்துப் போராட எவருமே இல்லை என்பதால் தீமை தன் எல்லைகளை உலகில் விரிவு படுத்திக் கொண்டிருந்தது.

சாலமன் கேன், இங்கிலாந்து நாட்டிற்காக யுத்தங்களில் பங்கு கொள்ளும் ஒரு போர் வெறியன். போர்க்களமே அவன் இனிய இல்லம். உயிர்களை அறுப்பது என்பது அவனிற்கு மிக லகுவானது. எதிரியின் ரத்தத்தில் முகம் துடைப்பது அவனிற்கு மிகப் பிடித்தமானது. வன்முறையைப் போற்றும், அழிவை விதைக்கும் ஒரு முரடன் அவன்.

ஆபிரிக்காவில் இடம்பெறும் குரூரமான யுத்தம் ஒன்றில் எதிரிகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்ளும் சாலமன், அரண்மனையில் உள்ள மன்னனின் அறையைச் தன் சக வீரர்களுடன் தேடிச் செல்கிறான். சபிக்கப்பட்டிருக்கும் அந்த அரண்மனையில் இருக்கும் மாயக் கண்ணாடிகளில் அடைபட்டு இருக்கும் கொடிய பைசாசங்கள் சாலமனின் வீரர்களை ஒவ்வொருவராக தங்கள் கண்ணாடிகளிற்குள் இழுத்துக் கொள்கின்றன.

solomon-kane-2009-15998-646189897 இதைப் பொருட்படுத்தாத சாலமன் அச்சமின்றி மன்னனின் அறைக்குள் நுழைகிறான். வழமைக்கு மாறாக குளிர் உடுத்தியிருந்த அந்த அறையின் கதவுகள் அவன் பின் மூடிக்கொள்கின்றன. அறையின் காற்றில் கரிய நிற இழைகள் உருவாகி வேகமாக ஓட ஆரம்பிக்கின்றன. இக்கரிய நிற இழைகள் யாவும் ஒன்று சேர்ந்து உருவாகிறது ஒரு நெடிய, கரிய உருவம்.

சாத்தானிற்காக ஆன்மாக்களை அறுவடை செய்பவன் என்று கொடூரமான குரலில் தன்னை அறிமுகம் செய்யும் அந்தக் கரிய அங்கி அணிந்த உருவம், சாலமனின் ஆன்மா சபிக்கப்பட்டது என்பதையும் அவனின் ஆன்மாவை சாத்தானிற்காக பறித்துக்கொள்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது. சாலமன் எதிர்ப்பதை விட்டு விட்டு தன் முன் மண்டியிடும்படி அவ்வுருவம் சாலமனிற்கு கட்டளையிடுகிறது.

சாத்தானின் அறுவடையாளனின் மிரட்டல்களிற்கு அடங்காத சாலமன் அவனை எதிர்த்து மோதி அவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபிரிக்காவிலிருந்து இங்கிலாந்து திரும்பும் சாலமன், தன் செல்வங்களை திருச்சபைக்கு தந்து, வன்முறைகளைத் துறந்து, ஓர் துறவி மடத்தில் சென்று அடைக்கலம் பெற்றுக் கொள்கிறான். அமைதியின் பாதைக்கு திரும்பி விட்ட ஒரு மனிதனாக வாழ்வதற்கு முயல்கிறான்.

மடத்தில் தங்கியிருக்கும் சாலமனைக் குறித்து துர்க்கனவுகளைக் காணும் துறவி மடத்தின் தலைமைத் துறவி, சாலமனை அம்மடத்தினை விட்டு நீங்கும்படி கேட்டுக்கொள்கிறார். சாலமனின் வேண்டுதல்களை உறுதியுடன் தட்டிக்கழித்து விடும் தலைமைத்துறவி, சாலமனை துறவி மடத்தில் இனி தங்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிடுகிறார்.

அடைக்கலம் புறக்கணிக்கப்பட்ட வேதனையுடன் துறவி மடத்தை விட்டு நீங்கிச் செல்கிறான் சாலமன். கருமை சூழ்ந்த வானம், விடாது கொட்டும் மெல்லிய பனி, நினைத்தவுடன் பொழியும் மழை என்பவற்றினூடு மரங்கள் அடர்ந்த பாதைகளில் தன் பயணத்தை தொடர்கிறான் அவன்.

அவன் செல்லும் வழிகளில் கறுப்பு மரணத்தின் கோரப்பிடியை அவன் காண்கிறான். தூக்கு மரங்களில் உயிரற்ற மனித உடல்கள் தோரணங்களாக தொங்குகின்றன. இவை யாவற்றையும் மெளனமான ஒரு பார்வையுடன் கடந்து செல்கிறான் சாலமன்.

solomon-kane-2009-15998-1603977828 நீண்ட பயணத்தின் இடையில், காட்டு வழியில் சிறிது ஓய்வெடுப்பதற்காக தங்கும் சாலமனை கள்வர்கள் தாக்குகிறார்கள். அமைதி வழிக்கு திரும்பி வன்முறையைக் கைவிட்ட சாலமன் அவர்களை திருப்பித்தாக்காது இருக்கிறான். கள்வர்கள் அடிக்கும் அடியில் துவண்டு மயங்கி விடுகிறான். மயங்கிக் கிடந்த சாலமனை அவ்வழியே தன் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கும் வில்லியம் என்பவன் காப்பாற்றுகிறான்.

இங்கிலாந்தை விட்டு நீங்கி, அமெரிக்காவிற்கு சென்று ஒரு புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக தன் மனைவி, மகன்கள், மகள் மெரிடித் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறான் வில்லியம். வில்லியம் குடும்பத்தின் கனிவான பராமரிப்பில் உடல் நலம் தேறும் சாலமன், அவர்களுடன் தன் பயணத்தை தொடர்கிறான்.

அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் அந்தப் பிரதேசத்தில் மலாக்காய் எனும் துர் மாந்திரீகன் தன் வன்முறை ஆதிக்கத்தை குரூரமான வழிகளால் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறான்.

மலாக்காய், தன் துர் மாந்தீரிகத்தால் தனக்கு அடிமையான, முகமூடி அணிந்த ஒரு குதிரை வீரன் மூலம், அப்பிரதேசத்தில் வாழும் வலிமை நிறைந்த ஆண்களை தன் மந்திரக் கட்டிற்குள் கொணர்ந்து, தன் நாச வேலைகளை இயற்றும் ஏவலர்களாக உருமாற்றுகிறான். வலிமையற்றவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் நர மாமிசம் உண்ணும் நடைப் பிணங்களாக நிலத்திற்கு அடியில் வாழ்கிறார்கள்.

வில்லியம் குடும்பத்தினர் ஓய்வெடுக்கும் வேளை ஒன்றில், முகமூடி வீரன் தலைமையில் அவர்களைத் தாக்குகிறது மலாக்காயின் காட்டுமிராண்டிக் குழு. வில்லியத்தையும், அவன் இரு மகன்களையும் கத்திகளால் வெட்டிப் போடுகிறார்கள் அவர்கள். இந்நிகழ்வால் சாலமன் கேன் தன் அமைதிப் பாதையை விட்டு நீங்கி மீண்டும் வன்முறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Solomon-Kane-16-29559 சாலமன் முரடர்களை எதிர்த்துப் போராடினாலும் அவர்களை அவனால் வெல்ல முடியவில்லை. மெரிடித்தை சிறைப்பிடித்துக் கொண்டு சென்று விடுகிறார்கள் மலாக்காயின் ஏவலர்கள். உயிர் பிரிந்து கொண்டிருக்கும் வில்லியம், தன் மகள் மெரிடித்தை சாலமன் காப்பாற்ற வேண்டுமென அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்கிறான். மெரிடித்தை சாலமன் காப்பாற்றினால் சபிக்கப்பட்டிருக்கும் சாலமனின் ஆன்மா இரட்சணியமடையும் என்றும் கூறிவிட்டு கண்களை மூடுகிறான் வில்லியம்.

தான் எவ்வழியிலாவது மெரிடித்தை மீட்டு வருவதாக வில்லியத்தின் மனைவியடம் கூறிவிட்டு, துர் மாந்திரீகன் மலாக்காயையும், அவனின் பைசாசங்களையும் தேடித் தன் சகாசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் சாலமன் கேன்….

B0000VD12I.01.LZZZZZZZ Conan எனும் பெயரைக் கேட்டால், சினிமா ரசிகர்களிற்கு உடனே நினைவில் மலர்வது, உருண்டு திரண்ட இரும்பு உடல், ஒரு சின்ன ஜட்டி, நெற்றியில் ஒரு பட்டி, கையில் நீண்ட வாளுடன் காட்சிதரும் ஆர்னால்ட்தான்.[ அவர் கூட வரும் அழகியும்தான்]

464px-Robert_E_Howard_suit அந்தக் Conan எனும் உலகப் புகழ் பெற்ற பாத்திரத்தை உருவாக்கிய Robert Ervin Howard எனும் அமெரிக்க எழுத்தாளரே சாலமன் கேன் எனும் பாத்திரத்தையும் 1928களில் தன் கதைகளில் அறிமுகம் செய்தார்.

சாலமன் கேன், இருள் குடி புகுந்த ஒரு பாத்திரம். தீமைகளை எவ்வழியிலும் வெற்றி கொள்வது என்பதே அவன் குறிக்கோள். கெட்டவர்களிற்கு மகா கெட்டவன் அவன். அவன் எங்கிருந்து வருகிறான் எங்கே போகிறான் என்பது யாரிற்கும் தெரியாத ஒன்று. இவ்வாறாகவே தன் சிறிய அத்தியாயங்கள் கொண்ட கதைகளில் ராபர்ட் ஹோவார்ட், சாலமனைச் சித்தரித்திருக்கிறார். சாலமன் கேனின் கதைகளை மார்வலும், டார்க் ஹார்சும் காமிக்ஸ் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.

கொனன் அளவிற்கு புகழ் பெறவில்லை என்றாலும், தனக்கேயுரிய ரசிகர்களை கொண்டவன் சாலமன் கேன். அந்த சாலமன் கேனை வெள்ளித்திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குனர் Michael J Basset.

துர்மாந்திரீகம், பைசாசங்கள், சாத்தானின் ஏவலர்கள் என இருள் கொண்ட உலகம், இதனுள் பயணிக்கும் அட்டகாசமான சாலமன் கேன் பாத்திரம் என்பவற்றின் துணையுடன் அற்புதமாக உருவாகியிருக்க வேண்டிய இத்திரைப்படத்தை முடமாக்கியிருக்கிறார் இயக்குனர் பாஸட்.

comic history - Solomon Kane 1985 Jaw solomon_kane1 மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் அசத்த வைக்கும் கிராபிக் காட்சிகளோ, சுறுசுறு விறுவிறு சண்டைக்காட்சிகளோ, இவை இல்லாவிடிலும் கூட ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்க கூடிய ஒரு கனமான கதையோ கிடையாது என்பது வேதனையான ஒன்று. சாலமன், தன் ஆன்மாவை மீட்டு, தீமைக்கு எதிராக போராடும் தன் பாதையைக் கண்டு கொள்வதை திரைக்கதை சோம்பேறித்தனமாக கூறுகிறது. [ஆனால் இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் மிக வெற்றிகரமான ட்ரெயிலர்களில் ஒன்றாகும். அது வெளியான நாள்முதலாக இப்படத்தை ஆவலுடன் எதிர்பர்த்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.]

சாலமன் கேன் பாத்திரத்தை திரையில் ஏற்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் நடிகரான James Purefoy, அப்பாத்திரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு தெரிவு. சாலமன் கேன் பாத்திரம் மட்டுமே சிலவேளைகளில் இத்திரைப்படத்தை தன் தோள்களில் ஏந்திக் காப்பாற்றியிருக்கக்கூடும், ஆனால் ஜேம்ஸ் ப்யூர்போய் தன்னால் சுமக்க இயலாத ஒரு வேடத்தை சுமந்து ஒடிந்து போகிறார். சாலமனின் சக்தியை திரையில் கொணர முடியாது மூச்சிரைக்கிறார்.

படத்தில் குறிப்பிட்டுக் கூறத்தக்க அம்சங்கள் எனில்; ஒன்று ஒளிப்பதிவு.கார் மேகங்கள் சூழக் கருமை கொண்ட இங்கிலாந்துக் காடுகள், காடுகளில் நடந்து செல்லும் புகார், தொடர்ந்து தூவும் பனி என கதையின் இருளை ஒரளவேனும் சுவைக்க வைத்து விடுகிறது ஒளிப்பதிவு. அடுத்தது கலை இயக்கம். குறைந்த பட்ஜெட் எனினும் கிடைத்ததைக் கொண்டு சிறப்பான அரங்குகளையும், அலங்காரங்களையும் அமைத்திருகிறார்கள். மலாக்காயின் கோட்டை, 17ம் நூற்றாண்டு இங்கிலாந்துச் சூழல் என குறை கூறவியலாதபடி செய்திருக்கிறார்கள்.

இவை இரண்டும் மட்டும் ஒரு படத்தைக் காப்பாற்றிவிடமுடியுமா என்ன! மாய, மாந்திரீக கற்பனைக் கதை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்க வேண்டிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளாசிக் கதாபாத்திரத்தை, உழைப்பும், அனுபவமுமற்ற இயக்கமும், கஞ்சத்தனமான ஐரோப்பிய தயாரிப்பும் கொன்று போட்டு விட்டதற்கான சாட்சியாக வந்து நிற்கிறான் இந்த சாலமன் கேன்.

ரட்சணியத்திற்கு இட்டுச் செல்ல பல பாதைகள் உண்டு, அவற்றில் எல்லாப் பாதைகளும் அமைதி நிறைந்தவை அல்ல. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக அதனை உணர்ந்திருப்பார்கள். [*]

ட்ரெயிலர்

Saturday, December 26, 2009

மில்லேனியம் 1- பெண்களை வெறுக்கும் ஆண்கள்


அழகும், குளிரும் கலந்து, பொன்னிறக் கூந்தல் அழகிகளால் மேலும் அழகூட்டப்படுவதுமான சுவீடன் தேசத்தில் வெளியாகும் ஒர் மாத இதழ்தான் மில்லேனியம். மில்லேனியம் அதிகளவு வாசகர்களை கொண்ட ஒரு மாத இதழ் அல்ல இருப்பினும் அது தனக்கென ஓர் பெயரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு இதழ்.

மில்லேனியத்தின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவன் Carl Mikael Blomkvist. மில்லேனியம் இதழில் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை எழுதி வரும் ப்ளொம்கிவிஸ்ட், நிதி மோசடிகள், பங்குச்சந்தை ஊழல்கள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் குறித்து காரமான கட்டுரைகளை எழுதி வருகிறான்.

தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் Hans-Erik Wennerstrom எனும் தொழிலதிபர் குறித்த கட்டுரை ஒன்றை மில்லேனியத்தில் வெளியிடுகிறான் ப்ளொம்க்விஸ்ட். மில்லேனியத்தில் வெளிவந்த கட்டுரையை அடுத்து ப்ளொம்க்விஸ்ட் மீது வழக்கொன்றைத் தாக்கல் செய்கிறான் வென்னெர்ஸ்ட்ரம்.

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில் தீர்ப்பு ப்ளொம்கிவிஸ்டிற்கு எதிரானதாக அமைந்து விடுகிறது. பண அபராதமும், மூன்றுமாத சிறைத்தண்டனையும் அவனிற்கு வழங்கித் தீர்ப்பளிக்கிறது நீதி மன்றம். இத்தீர்ப்பானது மில்லேனியம் பத்திரிகையின் மீது விழுந்த பலத்த அடியாகவும் இருக்கிறது. தோல்வியால் மனமுடையும் ப்ளொம்கிவிஸ்ட் மில்லேனியம் பத்திரிகையிலிருந்து வெளியேறுகிறான்.

சர்ச்சைக்குரிய வென்னெர்ஸ்ட்ரம் விவகாரத்தை முனைப்பாக தொடர்ந்து வருகிறான் சூவிடனின் வேஞ்சர் கம்பனிகளின் ஓய்வு பெற்ற அதிபரான Henrik Vanger. ப்ளொம்கிவிஸ்டைக் குறித்து நன்கு அறிந்து கொள்ள விரும்பும் ஹென்ரிக் வேஞ்சர் அதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை தன் வக்கீல் வழியாக தொடர்பு கொள்கிறான்.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்மானி தன் நிறுவனத்தில் சுதந்திரமாக பகுதி நேரப் பணியாற்றி வரும் Lisbeth Slander எனும் இளம் பெண்ணிடம் ப்ளொம்கிவிஸ்ட் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரிக்கும் பணியை ஓப்படைக்கிறான்.

n246161 ஸ்லாண்டர் வழங்கும் ப்ளொம்கிவிஸ்ட் குறித்த அறிக்கையால் திருப்தி கொள்ளும் வேன்ஞ்சர், ப்ளொம்கிவிஸ்டை தன் வக்கீல் மூலமாக தொடர்பு கொள்கிறான். வயதாகி விட்ட நிலையில் தளர்ந்து போன வேஞ்சரை சிரமம் பாராது ஒரு முறை ப்ளொம்கிவிஸ்ட் வந்து சந்திக்க வேண்டுமென அவனிடம் வேண்டிக் கொள்கிறான் வேஞ்சரின் வக்கீல்.

அவனிருந்த மனநிலையில் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் ப்ளொம்கிவிஸ்ட், வேஞ்சர் வசிக்கும் HEDEBY எனும் சிறுதீவிற்கு சென்று அவனைச் சந்திக்கிறான். தன் அழகிய வீட்டில் அவனை வரவேற்கும் வேஞ்சர், ப்ளொம்கிவிஸ்டை தான் அங்கு வரவழைத்ததற்கான காரணங்களை அவனிடம் கூற ஆரம்பிக்கிறான்.

வேஞ்சர் குடும்பத்தின் வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை ப்ளொம்கிவிஸ்ட் எழுத வேண்டுமென்பது முதலாவது காரணம். நாற்பது வருடங்களிற்கு முன்பாக காணாமல் போய்விட்ட தன் சகோதரனின் மகளான Harriet மீதான மர்மத்தை ப்ளொம்கிவிஸ்ட் ரகசியமாக ஆராய வேண்டும் என்பது இரண்டாவது.

ஹாரியட் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றே வேஞ்சர் கருதுகிறான். ஹாரியட் காணமல் போன வருடத்திலிருந்து தன் பிறந்த நாளின் போது மர்மமான நபர் ஒருவர் தனக்கு அனுப்பி வைக்கும் சட்டத்திற்குள் அடைக்கப்பட்ட உலர்ந்த பூக்களை ப்ளொம்கிவிஸ்டிடம் வேதனையுடன் காட்டுகிறான் வேஞ்சர். கற்சுவரொன்றின் மீது மர்மங்களை சுமந்தவாறு தொங்குகின்றன அந்த உலர்ந்த பூக்கள். ஹாரியட்டைக் கொலை செய்த நபர் தன் குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென திடமாக நம்புகிறான் வேஞ்சர்.

tyler2 வேஞ்சரின் விளக்கங்களைக் உன்னிப்பாகக் கேட்கும் ப்ளொம்கிவிஸ்ட், வேஞ்சர் பெரும் தொகைப் பணத்தை அவனிற்கு ஊதியமாக தர முன் வந்த போதும் இவ்விவகாரம் பெரும் நேர விரயம் என்று கூறி வேஞ்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விடுகிறான்.

இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த வேஞ்சர் தன் துருப்புச் சீட்டை ப்ளொம்கிவிஸ்ட் முன் கவிழ்க்கிறான். ஒரு வருட கால ஒப்பந்தத்தில், ப்ளொம்கிவிஸ்ட் தான் வேண்டிக் கொண்ட காரியங்களிற்காக சிரத்தையுடன் பணியாற்றினால், ப்ளொம்கிவிஸ்ட் தன் உள்மனதில் ரகசியமாக திருப்பித்தாக்க துடித்துக் கொண்டிருக்கும் வென்னெர்ஸ்ட்ரம் குறித்த முக்கியமான சில தகவல்களை ப்ளொம்கிவிஸ்டிற்கு தான் வழங்குவதாக வேஞ்சர் தெரிவிக்கிறான்.

வென்னெர்ஸ்ட்ரம் ஒரு ஊழல் எலி என்பதை எவ்வழியிலாவது வெளிச்சத்திற்கு கொண்டு வரத்துடிக்கும் ப்ளொம்கிவிஸ்ட் வேஞ்சரின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வேஞ்சரின் குடும்பம், மற்றும் ஹாரியட் மீதான தன் ஆய்வுகளை ஆரம்பிக்கிறான். அவன் ஆய்வுகள் நாற்பது வருடங்களிற்கு மேலாக இருளின் ஆழத்தில் புதைந்து கிடைந்த மர்மங்களை வெளிக்கொணர ஆரம்பிக்கின்றன, தன் ஆய்வுகளில் தனக்கு உதவி புரிய தன் வாழ்வை ரகசியமாக வேவு பார்த்து அறிக்கை தயாரித்த திறமைசாலியான இளம் பெண் ஸ்லாண்டரை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் ப்ளொம்கிவிஸ்ட். அவர்கள் கிண்டியெடுக்கும், ஹாரியட்டின் மறைவிற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான உண்மைகள், அவர்கள் இருவரையும் அவர்களுடைய உயிரின் விளிம்புகளை நோக்கி தள்ளத் துடிக்கின்றன….

ஹாரியட்டிற்கு நடந்தது என்ன? வேஞ்சர் குடும்பத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? வென்னெர்ஸ்ட்ரம்மின் நிஜ முகத்தை உலகிற்கு காட்டினானா ப்ளொம்கிவிஸ்ட் என்பதனை நாவலைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

6a00d8341c93ee53ef0120a5f07b90970c-800wi மொத்தம் மூன்று நாவல்களை கொண்ட மில்லேனியம் வரிசையில், முதல் நாவலான Man Som Hatar Kvinnor முதலில் சுவீடிய மொழியிலேயே வெளியாகியது. இந்நாவல்களை சூவிடனைச் சேர்ந்த Stieg Larsson எனும் எழுத்தாளார் எழுதினார். ஆங்கிலத்தில் இந்நாவலின் தலைப்பு The Girl With the Dragon Tattoo என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சுவீடிய மொழியில் தலைப்பு பெண்களை வெறுக்கும் ஆண்கள் என்றே பொருள்படுகிறது. பிரெஞ்சு மொழியில் வெளியாகிய நாவலின் தலைப்பும் இதை ஒத்திருக்கிறது. மாறாக ஆங்கிலத் தலைப்பு கதையின் முக்கிய பாத்திரமான ஸ்லாண்டரை அவளின் தோளில் இருக்கும் பச்சை வழி முன்னிறுத்துகிறது.[ ஆங்கில அட்டைப்படத்தை விட பிரெஞ்சு அட்டைப்படமே என்னைக் கவர்ந்தது]

காணாமல் போன பெண் ஒருத்தியின் மறைவில் ஒளிந்திருக்கும் மர்மங்களைத் தேடுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தாலும், சுவீடன் நாட்டில் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறையே நாவலின் முக்கியமான மையக்கருவாக அமைகிறது. சுவீடனில் பெண்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளின் புள்ளிவிபரங்களுடனேயே நாவலின் நான்கு பகுதிகளும் ஆரம்பமாகின்றன.

பெண்களை துன்புறுத்துவதில் இன்பம் பெறும் ஆண்கள், தொடர் கொலைஞர்கள் ஆகியோரின் உளவியல் மிகச்சுருக்கமான விதத்தில் வாசகர்களிற்கு கூறப்படுகிறது. சுவீடன் நாட்டின் இனவெறி மற்றும் நாஸிக் குழுக்களின் சரிதமும் சிறியளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கேடித் தொழிலதிபர்களின் நிழல் நடவடிக்கைகள் பற்றியும் நாவல் பேசுகிறது.

கதையின் மிக முக்கியமான பாத்திரம் இளம் பெண் ஸ்லாண்டர். உளவியல் சிக்கல்கள் உடையவள் என்று கணிக்கப்பட்டு, காப்பகங்களிலும் பரமாரிப்புக் காவலர்களின் கட்டுப்பாடுகளிற்குள்ளும் வாழும் அவள் தன் சிறு வயது முதலே வன்முறைக்குள்ளாக்கப்படும் ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள்.

தன் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை வலியுடன் அவள் உள்வாங்கிக் கொண்டாலும், அந்த வன்முறைகளின் உக்கிரங்களால் அவள் நொருங்கி விடாது, தானே அவ்வன்முறைகளிற்கு எப்போதும் தக்க பதிலடி தருபவளாக அவள் இருக்கிறாள். பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக நாவலாசிரியர் உருவாக்கியிருக்கும் சிறப்பான பாத்திரம் ஸ்லாண்டர்.

Millenium_Grande_affiche_m புறப்பார்வையில் சாதாரணத்திற்கும் கீழாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய பெண்ணாக தோற்றமளிக்கும் ஸ்லாண்டர், சுவீடனிலேயே தலை சிறந்த Hacker ஆவாள்[ கணினிக்குள் கன்னமிடுதல்]. அவள் நினைவாற்றல் Photographic Memory வகையை சார்ந்தது.[ எதையும் இசகு பிசகில்லாது துல்லியமாக நினைவில் மீட்கும் நினைவாற்றல்] இவ்வாறான ஸ்லாண்டரின் திறமைகள் வெளிவரும் தருணங்கள் வாசகர்களை தாராளமாக திருப்திப்படுத்துகின்றன.

நாவலின் ஆரம்ப பகுதியில் வேஞ்சர் குடும்பம் குறித்த ப்ளொம்கிவிஸ்டின் தேடல்கள் மெதுவாகவே நகர்கின்றன. இதனை ஈடு செய்வது போல் ஸ்லாண்டர் எவ்வாறு தன்மீதான ஓர் வன்முறையை திட்டமிட்டு தகர்க்கிறாள் என்பது பரபரப்பாக வேறு தளத்தில் நாவலில் கூறப்படுகிறது. ஸ்லாண்டர் பாத்திரம் வாசகர்களின் மனதினுள் இறங்கிக் கொள்ளும் பகுதியும் இதுதான். நாவலின் பெண்பாத்திரங்கள் தங்கள் வாழ்க்கை மீது முழு அதிகாரமும், சுதந்திரமும் கொண்ட பெண்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

289c0n4 ப்ளொம்கிவிஸ்டின் தேடலில் ஸ்லாண்டர் இணைந்தபின் கதையில் சூடும், வேகமும் கணிசமாக அதிகரித்து விடுகிறது. அவர்களின் தேடலில் அவர்கள் கண்டறியும் உண்மைகள் வாசகனின் மனதைப் புரட்டிப் போட்டு விடக் கூடியவையாக இருக்கின்றன. ஹாரியட் மறைவின் பின் உள்ள மர்மங்கள் பயங்கரமானவை என்றால் கேடித் தொழிலதிபரான வென்னெர்ஸ்ட்ரம்மை ப்ளொம்கிவிஸ்டும், ஸ்லாண்டரும் தனித் தனியே தங்கள் பாணியில் தகர்க்கும் நாவலின் இறுதிப்பகுதி அட்டகாசம்.

கதையினை மர்மங்களும், திருப்பங்களும் ஆக்கிரமித்திருந்தாலும் மனித உறவுகள் வழியே வாசகர்களின் மென்மையான பக்கத்தை நாவலாசிரியர் தொட்டு விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குப் பிடித்த மர்ம நாவலாசிரியர்களின் பெயர்களையும் நாவலில் தயங்காது நுழைத்திருக்கிறார் அவர்.

நாவலாசிரியர் Stieg Larsson 1954ல் பிறந்தவர். சுவீடன் கம்யூனிஸ்ட் உழைப்பாளர் லீக்கில் செயலாற்றியவர். விஞ்ஞான புனைகதைகள் மீது பிரியம் கொண்ட இவர் சுவீடனின் விஞ்ஞானக்கதைகள் ரசிகர் மன்றத்தலைவராக இருந்திருக்கிறார்.

ஸ்டீக் லார்சன், பின்பு தன்னை Expo Foundation எனும் அமைப்பில் இணைத்துக் கொண்டார். நவ நாஸியம், தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெள்ளை இன மாட்சிமை போன்றவற்றின் வளர்ச்சி சுவீடனின் இளம் சமுதாயத்தில் பரவி வருவதை தடுப்பதை இந்த அமைப்பு தன் நோக்கமாக கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பில் இருந்து வெளியாகிய EXPO எனும் சஞ்சிகைக்கு லார்சன் ஆசிரியராகவும் செயலாற்றினார். சுவீடனில் இயங்கும் இனவாத, தீவிர வலது சாரிக் குழுக்களை அடையாளம் காட்டுவதில் லார்சன் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதனால் அவர் அரசியல் எதிரிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் அவரிற்கு வந்த வண்ணமேயிருந்தன.

08090bookssteig_330 2004ல் லார்சன் சுவீடனின் பிரபலமான Norstedts பதிப்பகத்தில் தன் மூன்று நாவல்களையும் கையளித்தார். அவரின் முதல் நாவலை பதிப்பகம் 2005ல் வெளியிட்டது. அந்நாவல் வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. லார்சனின் மூன்று நாவல்களும் சுவீடனில் இன்று வரை 2.3 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்திருக்கின்றன.

லார்சனின் மூன்று நாவல்களும் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்கப்பட்டு உலக மர்ம நாவல்கள் வரிசையில் விற்பனைச் சாதனை படைத்திருக்கின்றன. பிரான்ஸில் இந்நாவல்களிற்கு இமாலாய வெற்றி கிடைத்தது. நாவல்களிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முதல் நாவலானது சுவீடிய மொழியில் திரைப்படமாக உருவாகி சுவீடனில் சிறப்பான வெற்றியை ஈட்டியது.

தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் போது துரதிர்ஷ்டவசமாக அதனை வாங்கிக் கொள்ள லார்சனிற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆம், தன் நாவல்களின் மகத்தான வெற்றியைக் காணும் முன்பே, தன் நாவல்கள் வெளிவரும் முன்பே 9/11/2004ல் இதயவலியால் இறந்து போனார் ஸ்டீக் லார்சன்.

இன்று ஸ்லாண்டர், ப்ளொம்கிவிஸ்ட் எனும் பாத்திரங்கள் உலகெங்கும் மர்மக் கதை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பாத்திரங்களாக மாறியிருப்பார்கள். நாவலின் வெற்றிக்கு பெண் வாசகிகளே பெரும் காரணமாக இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். கனமான வாசிப்பிலிருந்து ஒரு கணம் விடுபட நீங்கள் நினைத்தால் இந்நாவலை நீங்கள் தயங்காது நாடலாம். ஆனால் பெண்களை வெறுக்கும் ஆண்களிற்கு மட்டும் இந்நாவல் அறவே பிடிக்காது என்பது உண்மை. [**]

சுவீடிய மொழி ட்ரெயிலர்