Sunday, January 18, 2009

உப்புக் கடல் பாடல்

வணக்கம் நண்பர்களே,பொங்கல் விழாவினை குடும்பத்தினருடன் இனிதே கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். சென்ற பதிவான மங்கா காமிக்ஸூக்கு நீங்கள் தந்த வரவேற்பிற்கு நன்றி.இருப்பினும் கருத்துக்கள் எழுத ஏன் தயக்கம். பதிவினைப்படித்த பின் தயங்காது உங்கள் மனதில் தோன்றுவதை எழுதிடுங்களேன்.உங்கள் மனதில் தோன்றுவதனை எழுதிட நீங்கள் பதிவு எழுதப்பட்ட காமிக்ஸை படித்திருக்க வேண்டும் என்பது ஒர் கட்டாயம் அல்ல. நீங்கள் படித்த பதிவில் உங்களிற்கு பிடித்தது, பிடிக்காதது எது என தயங்காது உங்கள் எண்ணங்களை பகிர்ந்திட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மான்ஸ்டரின் 18 பாகங்களையும் டவுன்லோட் செய்திடும் வசதியை ஏற்படுத்தி சென்ற அனாமியாரே, நன்றி.தொடர்ந்து வாருங்கள் உங்கள் அட்சய பாத்திரத்துடனும்,பதிவினைப்பற்றிய உங்கள் கருத்துக்களுடனும்; நண்பர்களே,சென்ற பதிவிற்கான உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில் அப்பதிவிற்கான கருத்துப்பெட்டியில் இருக்கிறது.

கடந்த பல சில வருட காமிக்ஸ் பொங்கல்களை ஒன்று சேர்த்து மெகா பொங்கல் விருந்து படைத்து அசத்தியிருக்கிற்றார் ஒப்பற்ற பயங்கரவாதி டாக்.செவன். காமிக்ஸ்பொங்கல்

XIII எனப்படும் ரத்தப்படலத்தினை முன்பதிவு செய்வது ஆமைவேகத்தில் நகர்கிறது என தன் அன்பான கோபத்தினை வெளிப்படுத்தி, தன் பதுக்கு காமிக்ஸ் அட்டைகளை பிரசுரித்து, காமிக்ஸ் வேட்டையர்களின் நாவில் ஜலம் ஊறச் செய்துள்ளார் வயதில் முதிர்ந்த இளங் காளை. XIIIமுன்பதிவு

செய்வன திருந்தச் செய் என்பதனை இடைவிடாது நிரூபித்து வரும் நண்பர் ரஃபிக் 2008 அனிமேஷன் மூவி ரவுண்ட் அப்பை திருஷ்டி சுத்தி போடுமளவிற்கு பதிவிட்டுள்ளார். அவர் வழங்கியுள்ள ரேட்டிங்குகளை காணத் தவறாதீர்கள். மூவிரவுண்டப்2008

பிரபல எழுத்தாளர் எஸ்ரா அவர்கள் ஒர் சித்திர நாவலைப்பற்றி எழுதியுள்ளார், கட்டாயாமாகப் படியுங்கள், பொய்சொல்லும்பூனை

உப்புக்கடல் பாடல் பதிவு, கோடிகளின் நாடோடிக்குப் பின் என்னால் எழுதப்பட்ட இரண்டாவது பதிவு ஆகும். அகொதீகவிற்காகத்தான் இது எழுதப்பட்டது,டாக்.செவன் இதனை முன்னமே படிக்கும் பாக்கியம்!!! பெற்றவர். தன் தாராள மனத்துடன் என்னை இப்பதிவினை பதிவிட அனுமதித்தற்கு என் நன்றிகள் கோடி. ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தாள்!!! என்பது தான் தெரியவில்லை.

சற்று நீண்ட பதிவு இது. நண்பர்கள், உங்கள் பொன்னான நேரத்தின் சில நிமிடங்களை இதற்காக தியாகம் செய்திட வேண்டுகிறேன். கடல் காற்று வீசும் ஒலி காதில் விழுகிறதா,அக்காற்றில் தவழும் ஒர் பாடல் உங்களிற்கு கேட்கின்றதா..... அப்படியானால் நண்பர்களே பதிவினை நீங்கள் அண்மித்து விட்டீர்கள் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.





















1.

தென்பசுபிக்கடல், சீறும் காற்று, ஆர்ப்பரிக்கும் அலைகள் , முதல் நாள் வீசிய புயலிலிருந்து தப்பி, பிஜி பூர்வகுடி மாலுமிகளுடன் கடலோடிக்கொண்டு இருக்கிறது காப்டன் ராஸ்புடினின் படகு. உப்புக் கடல் பாடல், 1913ம் ஆண்டு ஆச்சர்யங்களின் நாளென அழைக்கப்படும் நவம்பர் மாதத்தின் 1ம் நாள் ஆரம்பமாகிறது.

கடலில் மிதந்து வரும் சிறு படகொன்றில் நினைவற்ற நிலையில் இருக்கும் ஒர் இளைஞனையும், இளைஞியையும் மீட்கும் மாலுமிகள் அதை ராஸ்புடினிற்கு தெரிவிக்கிறார்கள். ஆத்திரமடையும் ராஸ்புடின் காப்பாற்றப்பட்டவர்கள் செல்வந்தக் கப்பல் ஒன்றை சேர்ந்தவர்கள் எனக் கண்டு கொள்கிறான். அவர்கள் பெற்றோரிடமிருந்து பணயப்பணம் கறக்கும் ஆசையில் அவர்களை குணப்படுத்த உத்தரவிடுகிறான். படகு கைசரின்(KAISERINE) எனும் ஜெர்மனிய தளத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது.

நினைவு திரும்பும் இளம் பெண், தன்னுடன் தவறாக நடக்க முயற்சிக்கும் ராஸ்புடினை தாக்குகிறாள்.கடலில் கை , கால்கள் கட்டப்பட்டு மரத்துண்டங்களோடு இணைக்கப்பட்டு மிதந்து வரும் மனிதனை காணும் தலைமை சிப்பந்தி கிரானியோ (CRANIO), ராஸ்புடினை அழைக்கிறான். அந்த மனிதன் கார்ட்டோ மால்ட்டேஸ்(CORTO MALTESE) என கண்டுகொள்ளும் ராஸ் அவனை அங்கேயே தொலைத்துக்கட்ட நினைத்தாலும் கடற் கொள்ளையர் தலைவனான '' துறவி'' மேல் கொண்டுள்ள அச்சம் காரணமாக அவ்வெண்ணத்தை கைவிடுகிறான்.


கப்பலில் ஏற்றப்பட்ட கார்ட்டோ தன் கப்பல் பறிபோன கதையை கூறுகிறான். வொன்ஸ்பீக்(VON SPEEK) என்பவன் பற்றி ராஸிடம் விசாரிக்கும் கார்ட்டோ, நிலக்கரி ஏற்றி செல்லும் ஒல்லாந்துக் கப்பல் ஒன்றை கடத்தும்படி அவனிடம் கேட்கிறான். போர் பிரகடணமானால்தென் பசுபிக் தள ஜெர்மானியர்களிடம் நிலக்கரிக்கு நல்ல கிராக்கி நிலவும் எனவும் அதனை அதிக விலைக்கு விற்கலாம் எனவும் கூறும் கார்ட்டோ திரைச்சீலை ஒன்றின் பின் மறைத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்ணை கண்டு கொள்கிறான்.

இளம் பெண் தன்னை பன்டோரா குருவ்ஸ்னொர் (PANDORA GROOVESNORE) என அறிமுகப்படுத்தி கொள்கிறாள். கார்ட்டோ அவள் சிட்னியை சேர்ந்த பிரபல கப்பல் கட்டுனனான தடியோ குருவ்ஸ்னோரின்(TADDEO GROOVESNORE) மகள் என தெரிந்து கொள்கிறான். குறிவைத்து காத்திருக்கும் நிலக்கரி கப்பலை கைப்பற்றும் ராஸ், எதிர்க்கும் ஒல்லாந்து காப்டனையும், கப்பல்
சிப்பந்திகளையும் சுட்டுக்கொல்கிறான். இதனை எதிர்க்கும் கார்ட்டோவை அடித்து மயக்கமுற செய்யும் கிரானியோவை, கார்ட்டோவிற்கு நினைவு திரும்பியதும் அவனை, கப்பலின் கொதிகலன் பகுதியில் வேலையிலீடுபடுத்தவும் பணிக்கிறான்.

இதே வேளை நினைவு திரும்பும் இளைஞனான கெய்ன்(CAIN) ற்கு நடந்தேறிய சம்பவங்களை கூறும் பண்டோரா கைப்பற்றப்பட்ட நிலக்கரியை வொன்ஸீபிக்கிடம் ராஸ் விற்கப்போவதை தெரிவிக்கிறாள். வொன்ஸீபிக் ஒர் ஜெர்மனிய அட்மிரல் என்கிறான் கெய்ன். கெய்ன், பண்டோராவின் குடும்பத்தினன் என்பதும் தெரியவருகிறது.

கொதிகலன் பகுதியில் வேலையில் வேகும் கார்ட்டோவை அழைத்து வரச்சொல்லும் ராஸ், கைசரின் தளத்தை கப்பல் நெருங்கும் போது பணயக்கைதிகள் இருவரையும் கார்ட்டோ தன் பொறுப்பில் எடுத்து ஒர் ஆற்றங்கரைக்கருகில், தனக்காக காத்திருக்கும்படி வேண்டுகிறான். கைதிகள் இருப்பு தெரிய வரின் ஜெர்மனிய அதிகாரிகள் அவர்களை விடுவித்து விடுவார்கள் எனவும்அஞ்சுகிறான். பணயப்பணத்தை துறவிக்கு தெரியாது தாங்களிருவரும் பங்கு போட்டுகொள்ளலாம் என ஆசை காட்டுகிறான்.


ஜெர்மனிய தளத்தை அண்மித்ததும் பணயக்கைதிகளை தான் கூறிய இடத்திற்கு எடுத்து செல்லும்படி கார்ட்டோவிடம் கேட்கும் ராஸ் அவ்வாற்றங்கரையின் அருகில்
வாழ்கின்ற, நரமாமிச உண்ணிகளும்,
திருட்டிற்கு பேர் போனவர்களுமான செனிக் பூர்வகுடிகள் (SENIK) பற்றி எச்சரிக்கிறான். 3 தினங்களிற்குள் தன் வேலையை முடித்துக்கொண்டு பின் அவர்களுடன் இணைவதாக கூறுகிறான். கிரானியோவையும் தன்னுடன் அழைத்து செல்கிறான் கார்ட்டோ.

ராஸ் ஜெர்மனியர்களிற்கு செய்யும் உதவிக்கு பதிலாக நடுநிலை வகிக்கும் நாடொன்றின் வங்கிக் கணக்கில் அவர்களிற்காக தங்கம் வைப்பிலிடப்படுமெனவும்,அவனுடன் இணைந்து பணியாற்ற ஸ்லட்டர்(SLUTTER) எனும் அதிகாரியை ராஸ் கூட அனுப்புவதாகவும்,உதவிக்கு ஒர் சிறிய நீர்மூழ்கி கப்பலும், இரண்டு சிறு பீரங்கி படகுகளும் வழங்கப்படுமெனவும் ஒப்பந்தமாகிறது. இதனை மனமின்றி ஏற்றுக்கொள்கிறான் ஸ்லட்டர். நிலக்கரி கப்பலிற்குரிய தங்கம் அன்றே கைமாறுகிறது.

இதேவேளை கார்ட்டோவின் காவலில் இருந்து தப்பி ஜெர்மனியர்களிடம் தஞ்சம் புக விரும்பும் கெய்னை தடுக்கிறாள் பண்டோரா. தற்போது தங்களை விட கடற் கொள்ளையர்களே ஜெர்மனியர்களிற்கு உபயோகமானவர்கள் என்றும் கூறுகிறாள்.எனினும் தப்ப முயற்சிக்கும் கெய்னை கிரானியோ பிடித்துவிடுகிறான். இரு கைதிகளையும் எச்சரிக்கும் கார்ட்டோ, ராஸ் கூறிய இடத்திற்கு படகை செலுத்த உத்தரவிடுகிறான்.

வழியில் கடற்கொந்தளிப்பினால் படகு கவிழ கெயினும் படகிலிருந்த பூர்வகுடி இளைஞனான தராவோவும் (TARAO) ஒர் கரையில் ஒதுங்கி குகையொன்றில் பதுங்கிக்கொள்கிறார்கள். குகையை, புதிய குரல்கள் அண்மிக்கின்றன.


2.
கடல் மணலில் தெரியும் காலடித் தடங்களைக் கொண்டு இளைஞர்கள் இருவரினதும் மறைவிடத்தை கண்டு கொள்கிறார்கள் புதிய குரல்களிற்கு சொந்தக்காரர்களான செனிக் பூர்வகுடிகள். இளைஞர்கள் இருவரும் செனிக்குகளின் கிராமத்திற்கு இட்டுச் செல்லப் படுகிறார்கள்.








இக்காட்சியை மறைந்திருந்து காணும் கார்ட்டோ, பண்டோராவை அலைகளில் இருந்து காப்பாற்றும் வேளையில்,கிரானியோ கரையை நோக்கி நீந்தியதை நினைவு கூருகிறான் . ராஸ் தேடி வரும் வரையில் காத்திருப்பதே நல்லது என தீர்மானிக்கும் அவன் தான் பண்டோராவுடன் ஒளிந்திருக்கும் குகைக்கு திரும்புகிறான். தான் கெயினை பார்க்கவில்லை என பண்டோராவிடம் சொல்கிறான். இதனை நம்பாத பண்டோரா கார்ட்டோ அசந்த தருணம் பார்த்து அவன் துப்பாக்கியை கைப்படுத்தி அவனை சுட்டுவிடுகிறாள். வெடிச்சத்தத்தை கேட்கும் செனிக்குகள் அவர்களின் ஒளிவிடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள்.



பண்டோராவை சிறைப்பிடித்து வரும் செனிக்குகள் அவளை கெயினுடனும் தராவோவுடனும் ஒர் குடிலிற்குள் அடைத்து வைக்கிறார்கள், காயமடைந்து நினைவிழந்த நிலையில் இருக்கும் கார்ட்டோ வேறொர் குடிலிற்கு தூக்கிசெல்லப்படுகிறான்.


இவர்கள் அனைவரிற்கும் முன்னதாகவே கரையை அடைந்திருக்கும் கிரானியோ கிராமத்தின் மதகுரு ஒருவனை ரகசியமாக கொன்று அவன் முகமூடியை தான் அணிந்து கொள்கிறான். செனிக்குகளின் மொழி பேசத் தெரிந்த அவன் ரகசியமாக பண்டோராவை சந்தித்து கிராமத்தை விட்டு தப்பிப்போவதற்கான திட்டத்தை விபரிக்கிறான். தக்கசமயத்தில் கிரானியோ குடில் ஒன்றிற்கு தீ வைக்கிறான். கிடைக்கும் குழப்பமான தருணத்தை பயன்படுத்தி தங்கள் குடில் காவலனை வீழ்த்தி விட்டு மூன்று இளைஞர்களும் ஏற்கனவே கிரானியோ தயார் செய்து வைத்துள்ள படகொன்றில் கார்ட்டோவுடனும் கிரான்னியோவுடனும் தப்பி செல்கிறார்கள். பின்தொடரும் செனிக்குகளின் கப்பல்களை விட்டு நீண்டதூரம் ஒடி கடல் பயணத்தை தொடரும் அவர்களின் வழியை மறித்துக்கொண்டு அவர்கள் முன் எழுகிறது ஒர் சிறிய நீர்மூழ்கி.

ஜெர்மனியர்களால் வழங்கப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கியில் வரும் ராஸ் தப்பியவர்களை அதில் ஏற்றிக்கொள்ள, சிறுபடகானது ஜெர்மனிய பீரங்கிகளால் தகர்க்கப்படுகிறது. நீர்மூழ்கிப்பயணத்தின் போது ஸ்லட்டரிடம் தங்களைப்பற்றிய உண்மைகளை கூறிவிடுகிறான் கெய்ன். இதனை அறியும் ராஸ் நீர்மூழ்கியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கிறான். அவனை தடுக்கும் கார்ட்டோ, துறவி ஜெர்மனியர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மதிக்குமாறு கேட்கிறான்.
கெயினையும் பண்டோராவையும் தான் பாதுகாப்பதாக ஸ்லட்டர் அவர்களிடம் சொல்கிறான். நீர்மூழ்கி துறவியின் கடற்தளமான எஸ்கொண்டிடா (ESCONDIDA) தீவை நோக்கி தன் பயணத்தை தொடர்கிறது.


தீவை வந்தடையும் பிரயாணிகளிற்கு தங்குமிட வசதிகளை ஏற்ப்படுத்தித் தரும் பூர்வகுடிகள், துறவி இரண்டு நாட்களில் தீவிற்கு திரும்புவான் எனத் தெரிவிக்கிறார்கள். துறவியின் இல்லத்தில் தங்கியுள்ள பண்டோராவை தீவைச் சுற்றிக்காட்ட ஒர் காரில் அழைத்துச் செல்கிறான் கார்ட்டோ. வழியில் மறைந்திருக்கும் ஓர் உருவம் துப்பாக்கியால் கார்ட்டோவை சுட, குறி தவறி காரோட்டி பலியாகிறான். பாதையை விட்டு விலகி உயரத்திலிருந்து கடலை நோக்கி விழுகிறது கார். மின்னல் வேகத்தில் செயற்படும் கார்ட்டோ, கடலில், ஆழத்தில் மூழ்கிய பண்டோராவைக் காப்பாற்றுகிறான்.
தன்னை குறி வைத்தது ராஸ் எனச் சந்தேகிக்கும் கார்ட்டோ, அவனுடன் மோதுகிறான். ராஸ் இதனை மறுக்கிறான். இவ்வேளை துறவி தீவை வந்தடைகிறான். அனைவரையும் அழைக்கும் துறவி இங்கிலாந்து ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவிப்பு செய்துவிட்டதை தெரிவிக்கிறான். வொன்ஸ்பீக்கிற்கு தான் இரண்டு தீவுகளை அவன் கப்பல்களின் பாவனைக்காக ஒதுக்கியுள்ளதையும் அவர்களிடம் கூறுபவன், இரண்டு நாட்களில் தான் ஸ்லட்டரினுடன் கடலிற்கு செல்லப்போவதாக கூறுகிறான்.

இதேவேளை தான் தீவிலிருந்து தப்பி செல்ல உதவுமாறு தராவோவிடம் கேட்கிறான் கெய்ன். தன் துப்பாக்கியை உபயோகித்து கார்ட்டோவை சுட முயற்சித்தது கெய்ன் என அறியும் ராஸ் அவனைத் தாக்குகிறான். துறவி மோதலை தடுத்து விடுகிறான். இதன் பின் கெய்னிடம் அவன் குடும்பத்தை பற்றி விசாரித்து அறிய முயல்கிறான் துறவி. குறிப்பாக கெய்னின் மாமனான தாமஸ் குருவ்ஸ்னோர் பற்றி ஆவலுடன் வினவுகிறான். தாமஸ், பண்டோராவின் தாயார் திருமணத்தில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் இறந்து விட்டதாக சொல்கிறான் கெய்ன். பண்டோரா உறங்குவதை பார்வையிடும் துறவி பதட்டம் அடைகிறான். தன் பயணத்தை உடனே ஆரம்பிக்க விரும்பும் அவன் ராஸை தீவிற்கு பொறுப்பாக விட்டு கார்ட்டோவை தன்னுடன் வரும்படி அழைக்கிறான். இதன் காரணத்தை அறிய அவனுடன் வாதிடும் கார்ட்டோவை தாக்கி உயரத்திலிருந்து எறிந்துவிடுகிறான் துறவி. பின் ஸ்லட்டருடன் அவன் நீர்மூழ்கியில் கிளம்பிச் செல்கிறான்.

ஸ்கொண்டிடா தீவிலிருந்து வெகு தொலைவில் நண்டு பிடிப்பதற்காக தங்கள் கப்பலை விட்டு கரைக்கு வரும் ஆங்கிலேய வீரர்களால் கண்டெடுக்கப்படும் போத்தல் ஒன்றினுள் இடப்பட்டுள்ள தகவலை கொண்டு,தென்பசுபிக்கடலில் கொள்ளையில் ஈடுபடும் ஜெர்மனிய நீர்மூழ்கிபற்றி தெரிந்து கொள்கிறார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். நீர்மூழ்கிக்கு எரிபொருள் எவ்வாறு கிடைக்கிறது என கேள்வியைஎழுப்புகிறார் கப்பற்படை அதிகாரி ரீனல்ட் குருவ்ஸ்னோர் .



3.
எஸ்கொண்டிடா தீவில் பண்டோராவுடன் உலாவும் கிரானியோ தான் கார்ட்டோவை காப்பாற்றி தன் பாதுகாப்பில் வைத்திருப்பதை கூறுகிறான். இதே வேளை ஜெர்மனிய நீர்மூழ்கியை தேடித்திரியும் ஜப்பானிய கடற்படைக் கப்பல், தீவை அண்மிக்கிறது. தீவை வேவு பார்க்க தன் வீரர்களை அனுப்புகிறது. ஜப்பானிய வீரர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து விடுகிறாள் பண்டோரா இதனால் தீவிலுள்ள பீரங்கிகள் ஜப்பானிய கப்பலை தகர்க்கின்றன.கரைக்கு வந்தவீரர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணமான பண்டோராவை தன்னிடம் ஒப்படைக்க மறுக்கும் கிரானியோவை சுட்டுக்கொல்கிறான் ராஸ்.








இந்த தருணத்தை பயன்படுத்தி கைதிகள் இருவருடனும் தப்பி போக விரும்புகிறான் தராவோ. பண்டோராவை அவனுடன் அனுப்பி வைக்கும் கெய்ன் தான் தனியனாக கார்ட்டோவை தேடிச்செல்கிறான். தன்னை கெய்ன் தேடி வந்ததையிட்டு மகிழ்வுறுகிறான் கார்ட்டோ. மூன்று நாட்களாக கிரானியோ தன்னை தீவிலிருந்து தொடர்பு கொள்ளவில்லை என்பதினால் எஸ்கொண்டிடா தீவை நோக்கி நீர்மூழ்கியை செலுத்துமாறு ஸ்லட்டரிடம் கூறுகிறான் துறவி. இதேவேளை பண்டோராவுடன் வுரானியா(BURANEA) தீவை அடையும் தராவோ அவளை அங்குள்ள ஆங்கிலேய அதிகாரிகளிடம் கையளிக்கிறான்.
தீவிற்கு திரும்பிவிட்ட துறவியை ரகசியமாக சந்திக்கும் கார்ட்டோ நடந்த விபரங்களை கூறுவதுடன் தீவை விட்டு உடனே கிளம்புவது நல்லது என ஆலோசனை கூறுகிறான். தீவிலிருந்து தென்திசையில் தரித்துள்ள ஒர் கப்பல் தீவை வேவு பார்க்கிறது. இதேவேளை ஆங்கிலேய கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் தராவோவின் வழிகாட்டலுடன் எஸ்கொண்டிடா தீவிற்கு விரைகின்றன. பண்டோராவும், ரீனல்ட்குருவ்ஸ்னோரும் உடன் வருகிறார்கள்.
தீவில் கெய்னை தனியே சந்திக்கும் துறவி அவனிடம் இளமையில் தான் பண்டோராவின் தாயை காதலித்த தகவலை கூறுகிறான். ஆங்கிலேயர்கள் தீவைக் கைப்பற்ற முன் தீவைவிட்டுத்தப்பி செல்வோம் என்கிறான். தீவை நெருங்கி விட்ட ஆங்கிலேய கப்பல்கள் வானில் ஒளி பரப்பும் குண்டுகளை எறிகின்றன.
இதனை கண்டுவிடும் கார்ட்டோ துறவியைத்தேடி ஓடுகிறான், ஆனால் துறவியோ நீர்மூழ்கியை தனதாக்கி தப்பும் நோக்கத்தில் ஸ்லட்டரை சுட்டுவிட்டு தீவிலிருந்து தப்பி விடுகிறான். காயமடைந்த ஸ்லட்டரை காப்பாற்றி மறைத்து வைக்கிறான் கார்ட்டோ. தீவிற்குள் தராவோவின் வழிகாட்டலில் நுழையும் வீரர்கள், கார்ட்டோ, ராஸ் என அனைவரையும் கைது செய்கிறார்கள்.



ஸ்லட்டரை தங்களிடம் ஒப்படைத்தால் நிறையப்பணமும் தந்து கார்ட்டோவை விடுதலையும் செய்வதாக ஆசைகாட்டும் ஆங்கில அதிகாரிகளிடம் அது முடியாது எனக் கூறிவிடுகிறான் கார்ட்டோ. இதற்கிடையில் நீயுசிலாந்து வீரன் ஒருவனின் சீருடையை அணிந்து கொண்டு சென்று இரண்டு ஆங்கிலேய கடற்படை கப்பல்களை தகர்த்து விடுகிறான் ஸ்லட்டர் . கைது செய்யப்படும் அவனிற்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
ஸ்லட்டரின் மரண தண்டனையின் பின்அவன் தங்கியிருந்த குடிலிற்கு செல்லும் கெய்னும், தராவோவும் ஸ்லட்டர் ஒர் கடிதத்தினை கார்டோவிற்கு விட்டுச் சென்றிருப்பதை கண்டு கொள்கிறார்கள்.







கடிதத்தை படிக்கும் கார்ட்டோ துறவிதான் பண்டோராவின் உண்மையான தகப்பன் என அறிந்து கொள்கிறான்.அதிகாரி ரீனல்ட் குருவ்ஸ்னோரிடம் செல்லும் கார்ட்டோ ,ரீனல்ட்டின் சகோதரன் தாமஸ் குருவ்ஸ்னோரே கடற்கொள்ளையர் தலைவனான துறவி என்பதை போட்டு உடைக்கிறான், இவ்வுண்மையை மறைக்க விரும்பும் ரீனல்டினை, மிரட்டி ராஸிற்கும், தனக்கும் விடுதலையை விலையாக பெறுகிறான் கார்ட்டோ.
தீவிலுள்ள தன் நண்பர்களிடம் விடை பெறுகிறான் கார்ட்டோ. அவனுடன் பயணத்தில் இணைந்து கொள்கிறான் தராவோ.தன் வீட்டின் கதவுகள் கார்ட்டோவிற்கும் அவன் நண்பர்களிற்குமாக எப்போதும் திறந்திருக்கும் என நெகிழ்கிறான் கெய்ன்.

" உன்னைப்போல் யாரும் என் கண்களிற்கு தெரிவதில்லை எனவேதான் நான் செல்லுமிடம் எங்கெங்கும் உன்னைக் காண விழைகிறேன்'' என கூறி பண்டோராவை பிரிகிறான் கார்ட்டோ. என்றும் வீசும் காற்றில் பறக்கும் வெள்ளை கடல் பறைவகளுடன் கடலில் தூரமாக செல்கிறது கார்ட்டோவின் படகு.

கதையை முடித்து ஆல்பத்தை மூடும்போது, கார்ட்டோவின் படகு எங்கள் மனங்களில் ஓடத்தொடங்கியிருக்கும். எமக்கு தமிழில்அறிமுகமாகியுள்ள டம் டமால், டும் டுமீல்,இந்தா வாங்கிக்கோ வகை சித்திரக்கதைகளில்இருந்து , வேறுபட்டு ஒர் புதிய,உன்னதமான ரசனைக்கு வழி சமைக்கிறது ''உப்புக்கடல் பாடல்'' . ஒர் வேகக்கதை ரசிகனை எளிதில் ஏமாற்றம் அடையச் செய்துவிடும் இந்நாவல், காலத்தின் களைப்புறா அலைகளால் அவன் இழப்பை எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கும்.

கடல் முன் அமர்ந்து கண்களை மூடி நாம் வேறெங்கோ செல்ல முயல்தல் போல், கதையினுள் இறங்கினால், அது எங்களை படிப்படியாக தன் கட்டங்களினுள் இறக்கி , கதையில் கண்கள் காணவியலாத பாத்திரங்களாக எங்களை உருமாற்றிவிடும். தென் பசுபிக் கடலிலுள்ள தீவுகளில் வாழும் பூர்வகுடிகள் கடலோடும் போது பாடும் பாடல்கள் கதையில் இடம்பெறுகின்றன. பாடல்களில் மயங்கிய கதாசிரியர் நாவலிற்கு இத்தலைப்பை வழங்கியிருக்கலாம். அல்லது தென்பசுபிக் கடல்மேல் தங்கள் வாழ்க்கைப்பாடலை மெளனமாக பாடிச்செல்லும் இக்கதையின் நாயகர்களின் வேறுபட்ட,உப்புச்சுவை செறிந்த பாடல்களையும் அது குறிக்கலாம். பூர்வகுடிப்பாத்திரங்களை, கோமாளிகளாக சித்தரிக்காதுஅவர்களின் தனித்தன்மைகளுடனும் பெருமையுடனும் உலவ செய்துள்ளார் நாவலாசிரியர்.

பின்பு வரவுள்ள கதைகளின் பிரபல நாயகனான கடலோடி கார்ட்டோ, இந்நாவலிலேயே அறிமுகம் ஆகிறான். நாம் பொதுவாக பார்த்துப் பழக்கப்பட்ட, பார்க்க விழைகின்ற,
எம் ஆழ்மனக் கனவு நிரப்பி நாயகனிலிருந்து வேறுபட்டவனாய் கார்ட்டோ காட்டப்படுகிறான். கதையின் பெரும் பகுதியில் கார்ட்டோ இரண்டாம் நிலையிலேயே வைக்கப்படுகின்றான். அவனின் இறுதி வெற்றி என்பது அவன் மிரட்டிப்பெறும் விடுதலையே. கொடியவனாகத் தெரியும் ராஸ்புடின் தனக்கு நல்ல நண்பன் ஒருவனைத்தேடி ஏங்குகிறான், கார்ட்டோ அவன் நட்பை உதாசீனம்செய்யும் போதெல்லாம் நாங்கள் ராஸ்புடினிற்கு நண்பர்களாகி விடுவோம். அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் துறவி பாத்திரம் இறுதியில் ஏமாற்றம் அடையவைக்கிறது. கிரானியோ தன் மூதாதையர்கள் வழங்கிய உலகம் கண்முன் அந்நியர்களால் சிதைக்கப்படுவதை எண்ணி வேதனை அடைபவனாகவும், தென்பசுபிக் தீவுகளின் பூர்வகுடிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென வேட்கை கொண்டவனாகவும் இருக்கிறான். தராவோ ஒர் தேர்ந்த கடலோடி, கடலில் வழி காட்டலிற்கு நட்சத்திரங்களையும், சுறாக்களையும் துணைக்கழைப்பவன். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட மனதில் ஒட்டிக்கொள்பவன் ஜெர்மனிய அதிகாரி ஸ்லட்டர். அதிகாரத்தின் முன் தன் கருத்துக்களும், கனவுகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் சிதறிப்போகும் அவன் உப்புக்கடல் பாடலின் மிகச்சிறந்த வரிகளாகிறான். கவலையில் தேயும் அவனிற்கு கார்ட்டோ சொல்வதை பாருங்கள்,

'' நண்பனே, கடந்த காலத்தில் நிலைப்பதென்பது கல்லறையொன்றை
பார்த்துக்கொண்டிருத்தல் போன்றது. இதோ ,இந்த இலைகளை ஆடையாக கொண்ட இளம்பெண்களுடன் நேரத்தை செலவிடு ஆனால், இலையுதிர் காலம் வரும் வரையில் காத்திருக்காதே"

உலகின் தரம் வாய்ந்த ரசனைக்குரிய சித்திரக்கதை நாவல்களில் (THE BALLAD OF THE SALT SEA) உப்புக்கடல் பாடலானது முதல் பத்து இடங்களிற்குள் வரும் என்பதில் ஐயமில்லை. ஏறக்குறைய 170 பக்கங்களை கொண்ட உப்புக்கடல் பாடலின் ஓவியரும் கதாசிரியரும் இத்தாலியை சேர்ந்த கியூகோ பிராட் ஆவார் ( HUGO PRATT). 1967-1969 வரையில் சர்ஜண்ட் கிர்க்(SERGENT KIRK) எனும் இத்தாலிய சஞ்சிகையில் இக்கதை தொடராக வெளியானது. பின் 1973ல் பிரான்சின் மாலைத் தினசரியான பிரான்ஸ் சுவாரில் (FRANCESOIR) இது தொடராக வெளி வந்தது. கியூகோ பல கதைகளை உருவாக்கியுள்ளார் ஆயினும் உப்புக்கடல் பாடல் அவரை கடல்கள் கடந்து உலகப்பிரபலமாக்கியது. சித்திரங்களில் அவரிற்கேயுரிய பிரத்தியேகப் பாணியும், கறுப்பு, வெள்ளை நிற வண்ண செறிவுகளில் அவர் மேற்கொண்ட ஜித்து விளையாட்டுக்களும், கவித்துவமான கதை சொல்லலும், இன்று கியூகோ இறந்து 13 வருடங்கள் ஓடிவிட்டாலும் , அவரிற்குரிய தேர்ந்த ரசிகர்களின் வரவை உறுதிப்படுத்தி கொண்டேயுள்ளன.






1975ல் பிரெஞ்சு மொழியில் ஆல்பமாக உப்புக்கடல் பாடல் வெளியானது . 1976ல் பிரான்சின் ''அங்குலெம்''(ANGOULEME) சித்திரக்கதை விழாவில் சிறந்த அயல் நாட்டு யதார்த்த படைப்பிற்கான பரிசினை வென்றது. அக்காலத்திற்கே உரிய வீர சாகச கதைகளில் இருந்து வேறுபட்டு, நிதானமான வாசிப்பிற்கும், உன்னதமான ஒர் அனுபவத்திற்கும் இட்டு செல்லும் இந் நாவல் இது வரை 7 பதிப்புகள் கண்டுள்ளது. இன்றும் உலகின் எதோ ஒர் பகுதியில் ஒரு வாசகனாவது உப்புக்கடல் பாடலை, அதன் அலைகளின் பூரணமான அழகுடன் ரசித்துக் கொண்டிருப்பான்.





விரைவில்.......



- நாவலின் ஆங்கில பதிப்பு NANTIER BEALL MINOUSTCHINE PUBLISHING ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
-உப்புக்கடல் பாடல் சித்திர சலனப்படமாக (animation film) YOU TUBEல் இத்தாலிய மொழியில் பத்து சிறிய பகுதிகளாக உள்ளது ஆர்வமுள்ள நண்பர்கள் பதிவின் 1ம் பகுதியினை, படத்தின் 1,2,3 ம் பகுதிகளிற்கும், பதிவின் 2ம் பகுதியினை படத்தின் 4,5,6ம் பகுதிகளிற்கும்,பதிவின் 3ம் பகுதியினை படத்தின் 7,8,9,10,ம் பகுதிகளிற்கு துணையாக கொண்டால் கதையினை புரிந்து கொள்ள சிரமம் இருக்காது. இப் படம் தொலைக்காட்சிக்காக 2002ல்எடுக்கப்பட்டது , கியூகோவின் நாவலுடன் இதனை ஒப்பிட முடியாது என்பது என் கருத்து. நேரம் கிடைத்தால் அதனைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதிந்திடுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****


ஆர்வலர்களிற்கு

இது சித்திரசலனப்படத்தின் 1ம் பகுதிக்கான சுட்டி

கார்டோவின் பிற ஆல்பங்களிற்கு




ஒர் சில பக்கங்களிற்கு

முன்னோட்டம்

Saturday, January 10, 2009

மன விழிக் குருதி


நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் தந்த வரவேற்பிற்கு நன்றி. பதிவில் இறுதியில் இடம் பிடித்த வாக்கியத்திற்கு உரிமையாளர் நீட்சே என விடையளித்து மீண்டும் சிறப்புக் கைகுலுக்கல் பெறுபவர் மதிப்பிற்குரிய நண்பர் ஜோஷ்.
காமிக்ஸ் ரசிகரும் கா.கொ.க.கூ தலைவருமான அன்பரும் சரியான விடையினை கூறி பாராட்டுக்களிற்குரியவர் ஆகிறார். ஆனந்த விகடனில் இடம் பிடித்து விட்ட ரஃபிக்கிற்கும் பாராட்டுக்களும் சிறப்பு கைகுலுக்களும்,இது முதல் படியே இன்னும் அவரிற்கு வெற்றிகள் கிட்ட மனதார வாழ்த்துகிறேன். டெக்கான் கிரானிகலில் மீண்டும் இடம் பிடித்த முத்து விசிறிக்கும் என் வாழ்த்துக்கள்.
தொடருங்கள் நண்பர்களே உங்கள் அருமையான ஆக்கங்களை.



சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை நண்பர்களிற்கும்,அவர்கள் குடும்பத்தினரிற்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வரும் பொங்கலிலாவது,பொங்கல் ஸ்பெஷல் வெளியிடும் ஒர் தமிழ் காமிக்ஸ் எங்களிற்கு கிடைக்கட்டும்.நீங்கள் பதிந்த கருத்துக்களிற்கு பதில் கருத்துக்களை சென்ற பதிவின் கருத்துப்பெட்டியில் நீங்கள் காணலாம். சரி, வாருங்கள் கதைக்குள் செல்வோம்.






1986

ஜெர்மனியின் வனப்புமிகு நகரங்களில் ஒன்றான டசல்டொர்ஃப்.
நகரத்தின் பெருமைகளில் தனக்கும் ஒர் பங்குண்டு என நிமிர்ந்து நிற்கிறது,எய்ஸ்லர் ஞாபகார்த்த மருத்துவமனை. மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றுகிறார் டாக்டர் ஹெய்ன்மான். ஹெய்ன்மான் பதவி ஆசை கொண்டவர், பிரபலங்களும், பணக்காரர்களிற்குமே சிகிச்சையில் முன்னுரிமை அளிக்க நினைப்பவர்.முன்னேறத்துடிக்கும் இளம் மருத்துவர்களை தன் லாபங்களிற்காக பயன்படுத்த தயங்காதவர்.


அவரின் சிறந்த நியூரொ சர்ஜன்களில் ஒருவனாக திகழ்கிறான், ஜப்பானை சேர்ந்த இளம் மருத்துவனான டென்மா.துடிதுடிப்பான டென்மா,தன் திறமையால் மருத்துவதுறையில் சாதனைகளை நிகழ்த்த விரும்புபவன். உண்மயாகவே மக்களிற்கு சேவை செய்ய ஆசைப்படுபவன்.டென்மா தன்னை பணியிலமர்த்திய ஹெய்ன்மான் மீது அதிக மதிப்பும்,நன்றியுணர்வும் கொண்டவனாக இருக்கிறான்.ஹெய்ன்மானின் மகளான ஏவா சொகுசு வாழ்க்கையில் நாட்டம் கொண்டவள்.தன் தந்தை பதவி உயர்வு பெறும்போது, டென்மா மருத்துவ மனையின் இயக்குனராக பதவி பெறுவான் எனும் கனவில் அவனை காதலிக்கிறாள்.

டென்மா வெற்றிகரமாக செய்து முடிக்கும் சிக்கலான ஆபரேஷன்கள் யாவும் மருத்துவமனையின் பெயரை மேலும் மேலும் புகழ் பெறச்செய்கிறது. டென்மாவின் தொடர் வெற்றிகளால் கிடைக்கும் புகழையும்,விளம்பரங்களையும் தனக்குரியதாக்குகிறார் ஹெய்ன்மான்.டென்மாவுடன் கூடப்பணியாற்றும் பெக்கர், டென்மாவை ஹெய்ன்மான் தன் லாபத்திற்காக உபயோகிக்கிறார் என்பதனை அவனிடம் எடுத்துரைக்கிறான். மருத்துவம் அரசியல் போன்றதே,முன்னேற விரும்பினால் சிலவற்றை விட்டுக்கொடுத்தேயாக வேண்டும் என டென்மாவிற்கு ஆலோசனை வழங்குகிறான் பெக்கர்.









ஒர் இரவு, நகரில் இடம்பெறும் கொலை முயற்சி ஒன்றில் பெற்றோர்கள் மரணமாகி விட, தலையினுள் தோட்டா பாய்ந்த நிலையில் ஒர் சிறுவனும், அதிர்ச்சியினால் நினைவிழந்துவிட்ட சிறுமியொருவளும், பொலிசாரால் மருத்துவ மனைக்கு எடுத்து வரப்படுகிறார்கள். டென்மா, உடனடியாக மருத்துவமனைக்கு விரைகிறான். சிறுவன் மிக ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு கொள்ளும் டென்மா, அவனை பிழைக்க வைப்பது சிரமம் என்பதனை அறிந்திருந்தபோதும் முயன்று பார்த்துவிடுவது எனும் முடிவிற்கு வருகிறான். டென்மா ஆபரேஷனிற்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில், டாக்டர் ஹெய்ன்மானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவசர சிகிச்சைக்காக, உயிரிற்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துவரப்படும் நகர மேயரை காப்பாற்றுவதையே டென்மா முன்னுரிமை செயலாக கொள்ளல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றான். ஹெய்ன்மானின் கட்டளையை மீறி, நகர மேயரை கவனியாது சிறுவனிற்கு ஆபரேஷன் செய்ய ஆரம்பிக்கின்றான் டென்மா.

பிரமிக்கதக்க வகையில் சிறுவனிற்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் டென்மா சிறுவனின் உயிரைக் காப்பாற்றி விடுகிறான். திறமையற்ற மருத்துவர்களால் கவனிக்கப்படும் நகர மேயரோ இறந்து விடுகிறார். டென்மா தங்களை இறுதி வேளையில் சிறுவனிற்கு சிகிச்சை அளிப்பதற்காக கைவிட்டது தவறு என மேயரிற்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்,அவன் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.












தான் வழங்கிய கட்டளையை மீறிய டென்மாவிற்கு கிடைக்க வேண்டிய தலைமை நியூரோ சர்ஜன் பதவியை திறமையற்ற சக மருத்துவரிற்கு அளிக்கிறார் ஹெய்ன்மான். டென்மா தன் வருங்கால கனவுகளை எல்லாம் ஒர் மூட்டையாக கட்டி வைக்கலாம் என கூறும் ஹெய்ன்மான், டென்மாவின் மருத்துவ சேவையின் முன்னேற்றத்திற்குரிய கதவுகள் யாவும் மூடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார். வருங்காலத்தில் ஒர் கடைநிலை மருத்துவனாகவே டென்மா கருதப்படுவான் என்பதனையும் அவனிடம் தெளிவாக்குகிறார். ஏவாவோ, டென்மா அவளிற்கு நிச்சயதார்த்த பரிசாக வழங்கிய மோதிரத்தினை அவன் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு, வேறொர் மருத்துவருடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள். ஆறுதல் கூறவோ, அரவணைக்கவோ யாரும் தனக்கில்லை என்பதனை உணரும் டென்மா, தான் காப்பாற்றிய சிறுவன் இருக்கும் அறையினை நோக்கி செல்கிறான். இன்னமும் நினைவு திரும்பாத நிலையில் இருக்கும் சிறுவனின் படுக்கையருகே ஒடிந்துபோய் அமரும் டென்மா, பித்து பிடித்தவனைப் போல் சிறுவனிடம் பேசுகிறான். உன் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் யாவற்றையும் இழந்துவிட்டேன்,ஆனால் நீ உன் உயிரை இழக்காதே, உயிர்வாழ்வதற்காக போராடு என்று கூறிவிட்டு, அறையின் கதவினை மென்மையாக மூடிவிட்டு செல்கிறான். மூடிய கதவுகளின் மென்மையோடு சிறுவனின் கண்கள் திறக்கின்றன.













யாருமற்றவர்களாகி விட்ட சிறுவனினதும், சிறுமியினதும் சிகிச்சைகளை டென்மா விருப்பத்துடன் பொறுப்பெடுத்துக் கொள்கிறான்.அவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுகிறான்.
மருத்துவர் சங்க தலைமைப் பதவிக்காக ஏங்கும் ஹெய்ன்மான், இரு சிறார்களினதும் பரிதாபமான நிலையை பயன்படுத்தி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறான். இதற்கு குறுக்கே நிற்கும் டென்மாவை சிறுவர்களிற்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பிலிருந்து நீக்கி விடுமாறு உத்தரவிடுகிறான். வேதனையை தாங்க முடியாது மதுவினை அளவிற்கு மீறி அருந்தும் டென்மா,ஹெய்ன்மானும் அவர் ஜால்ராக்களும் உயிர்வாழத் தகுதியற்ற பிறவிகள் எனப் புலம்புகிறான். அதே இரவில் டாக்டர் ஹெய்ன்மானும் மேலும் இரு மருத்துவர்களும் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். மருத்துவமனையில் தங்கியிருந்த சிறுவர்கள் இருவரும் எவ்வித தடயமுமின்றி காணாமல் போய்விடுகிறார்கள்.












மூன்று மருத்துவர்களின் கொலைகளினதும், காணமால் போய்விட்ட சிறுவர்களினதும்
விவகாரத்தினை பொறுப்பேற்கிறார் சிறப்பான பொலிஸ் அதிகாரி ருஞ். மருத்துவர்கள் இறக்க
காரணம் அவர்கள் உட்கொண்ட விஷமூட்டப்பட இனிப்புகள் என்பது தெளிவாகிறது.
ஆனால் மறைந்து விட்ட சிறுவர்கள் பற்றி அவரால் எதனையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
மனதில் உடைந்து போன டென்மா ஜப்பானிற்கே திரும்பிவிடத் தீர்மானிக்கிறான்.ஆனால்
டென்மாவே எதிர்பாராத விதமாக சத்திரசிகிச்சைப்பிரிவின் தலைமைப் பொறுப்பு அவனிற்கு
வழங்கப்படுகிறது. வாழ்க்கை தன்னை திருப்பி போடும் விதத்தை எண்ணி பலமாகச் சிரிக்கிறான்
டென்மா. அவனைத் தேடி வரும் ஏவாவின் கைகளை உதறி,தூரத்தில் அமைதியாக நடந்து
செல்கிறான் அவன். அன்று,டசல்டொர்ஃப்பின் தெருக்கள் அவன் முகத்தை மெளனமாக பார்த்துக்
கொண்டிருந்தன.


9 வருடங்களின் பின்- 1995

ஜெர்மனின் சில நகரங்களில் இடம்பெற்ற தம்பதிகளின் தொடர் கொலைகளை பற்றிய விசாரணையில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறான் ருஞ். கொலை செய்யப்பட்ட தம்பதிகள் யாவரிற்குமிடயிலுள்ள பொதுவான ஒற்றுமையாக, அவர்களிற்கு பிள்ளைகள் இல்லை என்பதனை, அறிந்து கொள்கிறான். இக்கொலைகள் சம்பந்தமாக யுங்கர் என்பவனை விசாரணைக்காக தேடுகிறான். தன்னை மர்மான நபர் ஒருவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தெருக்களில் தறிகெட்டு ஓடும் யுங்கர் கார் ஒன்றுடன் மோதி அபாயமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறான். அவன் உயிரைக் காப்பாற்றுகிறான் டென்மா. யுங்கரின் பலவீனமான நிலையைக்காட்டி, ருஞ் அவனை விசாரணை செய்வதனை தடுத்தும் விடுகிறான்.
உடல் நலம் தேறி வரும் யுங்கரிற்காக பரிசொன்றினை கொண்டு வரும் டென்மா, அறையின் வாசலில் காவல் நின்ற பொலிஸ் இறந்து கிடப்பதை காண்கிறான். காவலன் அருகில் தரையில், இனிப்புக்கள் கொட்டிக் கிடப்பதைக் காணும் அவன் மனதில் மின்னலென ஒர் ஞாபகம் வெட்டுகிறது.
அறைக்குள் நுழையும் டென்மா ஜன்னல் வழியே பார்க்கும் போது தூரத்தில் யுங்கர் ஓடுவது தெரிகிறது. யுங்கரை பின் தொடர்ந்து ஓடுகிறான் டென்மா. ஆளரவமற்ற ஒர் இருண்ட கட்டிடத்தினுள் நுழையும் யுங்கரை தொடரும் டென்மாவை உள்ளே வர வேண்டாமென இரந்து வேண்டுகிறான் யுங்கர். பிடிவாதமாக உள்ளே நுழையும் டென்மா, யுங்கர் மண்டியிட்டு அமர்ந்திருப்பதையும், அவன் எதிரில், இருளில் ஒர் உருவம் துப்பாக்கியை குறி பார்த்து நிற்பதனையும் காண்கிறான். யுங்கரின் அழுகைக்கும், டென்மாவின் வேண்டுகோளிற்கும் செவிமடுக்காத அவ்வுருவம் யுங்கரை சுட்டுக் கொல்கிறது. இருளில் நின்ற உருவம் மெதுவாக முன்னேறுகிறது, 9 வருடங்களின் முன்பான 3 டாக்டர்களின் கொலைகள், சமீபகாலமாக நடந்த தம்பதிகளின் கொலைகள் இவை யாவற்றிற்கும் மூல காரணமான அந்த கொலைமிருகம் வெளிச்சத்தில் டென்மாவிற்கு தன் தேவதை முகம் காட்டுகிறது. அது யாரென அறியும் டென்மாவின் வாழ்க்கை இனி உயிர் கொண்டதாக இருக்கப்போவதில்லை.

ருஞ்ஜிடம் தன் விளக்கங்களை அளித்துவிட்டு பொலிஸ் நிலையத்தினை விட்டு வெளியேறுகிறான் டென்மா.பெய்யும் மழை அவன் மேல் பலமாக விழுகிறது. இன்றும் அவன் அமைதியாகவே நடந்து செல்கிறான். நடையின் ஒர் கணத்தில் தங்கி நிற்கும் டென்மா, மனவேதனையும்,ஆற்றாமையும் தாங்காது தெருவில் மண்டியிட்டுக் கதறுகிறான். மழைத்துளிகளுடன், பாரமான அவன் கண்ணீர் துளிகளையும் தங்கள் மேல் தாங்கியவாறு,மெளனமாக, அவனை தம் கலங்கிய விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கின்றன டசல்டொர்ஃப் தெருக்கள்...


நீங்கள் இதுவரை படித்தது, MONSTER எனப்படும் ஜப்பானிய மங்கா வகை சித்திரக்கதையின் முதல் பாகத்தின் சுருக்கமே. அட்டையில் மான்ஸ்டர் எனும் சொல்லில் உள்ள ஆங்கில எழுத்தான T ஒர் கத்தி வடிவமாக அமைந்திருப்பதை அவதானியுங்கள். தலைப்பிலேயே கதையின் தன்மையைப் பற்றி சிறிது அறிந்து கொள்ள இது உதவுகிறது. யார் இந்த தொடர் கொலையாளி என்பதை கண்டு கொள்வது இக்கதைத் தொடரின்
பிரதான மர்மம் அல்ல. நண்பர்கள் கொலையாளி யார் என்பதை ஏற்கனவே ஊகித்திருப்பீர்கள்.மாறாக கொலைகளை செய்பவனின் உண்மையான அடையாளம் எது? இக் கொலைகளை ஏன் அவன் செய்கிறான்? இவ்வாறான ஒர் கொலைமிருகமாக அவன் உருவெடுத்ததின் மூலகாரணம் என்ன?என்பவற்றை கண்டுபிடிக்கவும், கொலயாளியை தடுத்து நிறுத்தவும் வேண்டி டென்மா மேற்கொள்ளும் விசாரணைகளும், பயணங்களும் அதனால் அவனிற்கு ஏற்படும் சிக்கல்களையும்,அபாயங்களையும் விரிவாக 18 பாகங்களில் சொல்கிறது கதை.



மருத்துவ சேவைக்கு தன்னை உண்மையாகவே அர்பணிக்க விரும்பும் ஒருவன், அவனை தன் லாபங்களிற்காக உபயோகித்து கொள்ளும் ஒருவன் என ஒர் மருத்துவ மனையின் இரு துருவங்களை ஆரம்பத்தில் வெளிப்படுத்தும் கதை, சிறுவர்கள் இருவரினது வருகையால் ஒர் த்ரில்லராக உருமாற்றம் கொள்கிறது. உணர்சிகரமான தருணங்கள், இத்தருணங்களை இருளான நிழலாக தொடரும் மர்மம் என நகரும் கதை, முதலாம் பாகத்தின் இறுதிக்கட்டத்தில் கொலையாளி யார் என்பதனை வெளிப்படுத்தும் போது உறைய வைக்கிறது.



மருத்துவமனையின் அதிர்ச்சி தரும் உள் அரசியல், பதவி உயர்விற்காக தலைமைக்கு ஜால்ரா அடித்து பொதுமக்களிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணிக்கும் மருத்துவர்கள், இவற்றின் மத்தியில் முன்னேறத் துடிக்கும் டென்மா,உயிர்கள் யாவற்றின் விலையும் ஒன்றல்ல எனும் கொள்கையுடைய ஏவா,பரிதாபமான நிலையில் அனாதைகளாக நிற்கும் இரு சிறுவர்கள், தகவல்களையெல்லாம் தன் மூளையில் சேமித்து வைத்து அவற்றை என்றுமே மறந்துவிடாது, குற்றவாளிகளை விடாது துரத்தும் பொலிஸ் அதிகாரி ருஞ்,ஒர் கடிகாரத்திற்கு ஆசைப்பட்டு தன் வாழ்நாள் முழுதும் குற்றங்களிற்காக பூட்டுக்களை உடைக்கும் யுங்கர், தன் திறமையின்மையை ஒப்புக்கொண்டு வாழ்வின் மகிழ்சியான பக்கங்களை மட்டுமே படிக்க விரும்பும் பெக்கர் என முதல் பாகத்தில் பாத்திரங்கள் அருமையாக சித்தரிக்கப்படுகிறார்கள். இரண்டாம் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் டென்மாவிற்கு துப்பாக்கி பயிற்சியளிக்கும் ஹுகோவிற்கும் அவன் வளர்ப்பு மகளான மியான்மார் சிறுமிக்கும் புரிந்துணர்வு ஏற்படும் தருணங்கள் ஒர் அழகான கவிதை.

மங்கா கதைகளில் சித்திரங்களை விட கதையும், அதனை ஆசிரியர் நகர்த்தி செல்லும் விதமும் முக்கியம் பெறுகிறது. அதற்காக சித்திரங்களை இங்கு நான் குறைத்து மதிப்பிட்டு விடவில்லை.மான்ஸ்டர் கதையில் கதையோட்டத்திற்கு அமைய சித்திரங்கள் நேர்த்தியாக அமைந்துள்ளன. கதையின் அட்டைப்படங்களை பாருங்கள், கவர்ச்சி என்று கூற சிறப்பாக எதுவும் இல்லை ஆனால் ஜப்பானில் மட்டுமல்லாது பிரான்சிலும் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் இது.

இக்கதைக்கு ஆசிரியரும், சித்திரக்காரரும் ஜப்பானை சேர்ந்த NAOKI URASAWA ஆவார். 48 வயதாகும் இவர் ஒர் பொருளாதார பட்டதாரி. ஜப்பானின் மேன்மையான மங்கா விருதான SHOKAKUKAN AWARD இவரிற்கு மூன்று தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. 2001 ல் மான்ஸ்டர் கதைக்காக இவ்விருது அவரிற்கு கிடைத்தது.[1990ல் YAWARAக்காக,2003ல் 20th CENTURY BOYSக்காக] வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் கதைத்தொடர்கள் பின் தொலைக்காட்சி தொடர்களாக வெளிவருவது மங்கா உலகில் ஒர் சாதரண நிகழ்வாகும். மான்ஸ்டரும் இதற்கு விதிவிலக்கல்ல, 74 அத்தியாயங்களை கொண்ட ஒர் தொலைக்காட்சி சித்திரசலனத் தொடர், கதையை வரிக்கு வரி அல்லது கட்டத்திற்கு கட்டம் தழுவி வெளியாகியது.

இன்றைய காமிக்ஸ் உலகில் வாசகர்களிடத்திலும், சந்தையிலும் மங்கா தனக்கென ஒர் இடத்தை பிடித்துக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. 90களின் ஆரம்பத்தில் பாரிசில் தோற்றம் கண்ட மங்கா காய்ச்சல் எனக்கு இன்னமும் மறக்கவில்லை. காய்ச்சல் இப்போது மங்கா கஃபேக்களாக உரு மாறியுள்ளது. ஒர் குறிப்பிட்ட தொகையை அனுமதிக்காக செலுத்திவிட்டு உள்ளே நுழைந்தால் ஒர் காபியை அருந்தியவாறோ அல்லது ஒர் கேக்கை கடித்தபடியோ உங்களால் இயன்றளவு நீங்கள் மங்காக்களை படிக்கலாம். படுத்திருந்தவாறு படிப்பதற்கு சோபாக்கள் உண்டு ஆனால் வேறு எதுவும் செய்ய முடியாது. மதிப்பிற்குரியவரே நாங்கள் கடையை மூட வேண்டும் இன்று போய் நாளை வாருங்கள் என்று மங்கா கஃபேயின் பணியாளர்களை கூறவைக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மங்கா இருந்து வருகிறது என்கிறார்கள் பெரியவர்கள். வலமிருந்து இடமாக வாசித்தல் என்பது தான் மங்காவை படிக்க வேண்டிய முறை ஆனால் மேற்குலக வாசகர்களிற்காக இம் முறை மாற்றப்பட்டு சாதரண வாசிப்பு முறையில் படிக்க கூடியதாகவும் அவை வெளியாகின்றன. பிரான்சில் தற்போது வெளியாகும் பெரும்பாலான மங்காக்கள் வலமிருந்து இடம் வாசிப்பிற்குரியவை. ஆரம்பத்தில் இரண்டு புத்தகங்களில் சிரமப்பட்டாலும் பின்னர் அது பழக்கமாகி விடும். முத்தமிட பழகுவதினை விட இது எளிதானது நம்புங்கள்.பல வகைகளில், பல வயதினர்க்கேற்ப, பல தலைப்புகளில் மங்காக்கள் வெளியாகின்றன. மங்காவை கதையெழுதி, சித்திரங்கள் வரைபவரை MANGAKA என்கிறார்கள். அவரிற்கு ஒர் கலைஞரிற்கு உரிய மதிப்பு கிடைக்கிறது. மங்காக்களில் வெளியாகும் அனைத்துக் கதைகளும் சிறப்பானதாக அமைந்து விடுவதில்லை ஆனால் மங்காக்களில் முத்துக்களும், மாணிக்கங்ளும் உண்டு எனவே அதனை முற்றாக ஒதுக்கி விடாதீர்கள். ஒர் காமிக்ஸ் ரசிகன் மங்காவை விலக்குதல் அவன் அனுபவத்தையும், ரசனையையும், காமிக்ஸ் மேல் அவன் கொண்டுள்ள காதலையும் முழுமையாக்குவதில் உதவிடுமா என்பதனை கேள்வியாக்கி உங்கள் முன் வைக்கிறேன்.
[ படங்களில் முறையே-டென்மா,ஹெய்ன்மான்,ஏவா,ருஞ்,யுங்கர்]

பதிவைப்பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்திட மறக்காதீர்கள்.



ஆர்வலர்களிற்கு.

படித்ததில் பிடித்தவை







ஒர் சில படங்களிற்கு
http://images.google.fr/images?hl=fr&q=monster+manga&btnG=Recherche+d'images&gbv=2

பாரிஸிலுள்ள மங்கா கஃபே ஒன்றின் போட்டோக்கள்