Wednesday, December 25, 2013

மணல்மேல் கட்டிய பாலம்

சிறுவயது முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
சு.கி. ஜெயகரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பான மணல் மேல் கட்டிய பாலம் நாம் வாழ்வில் இன்னம் நம்பிக் கொண்டிருக்கும் சிலவற்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிற ஒரு நூலாகும். அல்லது நம்பிக்கை இழந்தவை பற்றி தகவல்கள் சிலவற்றை தெளிவாக்குகின்ற ஒரு தொகுப்பாகும். நிலவியல், தொல்லியல் போன்ற துறைசார் சான்றுகளுடன் ஜெயகரன்  தன் கருத்துக்களை கட்டுரைகளில் முன்வைக்கிறார். இதுவரை எம் மனதில் இடம்பெற்றிருந்த ஒரு பிம்பம் மீதான பார்வை இவர் கட்டுரைகளின் பின்பாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அப்பிம்பங்கள் இல்லாமலும் போய்விடுகிறது.
கட்டுரை தொகுப்பில் இடம்பெறும் முதல் கட்டுரையான மணல்மேல் கட்டிய பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் குறித்தது. சில வருடங்களின் முன் நாசா செய்மதி நிழற்படங்கள் துணையுடன் ராமர் கட்டிய பாலம் நிஜமே என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆய்வு முடிவுகளாலும், சான்றுகளாலும் இக்கட்டுரையில் எதிர் கொள்கிறார் ஜெயகரன். ராமர் பாலத்தை கட்டவில்லை என்றால் பாக் நீரிணையில் இருக்கும் அந்த கடலடி மணல் தட்டு என்ன? இதற்கான விளக்கத்தை தெளிவாக இக்கட்டுரை தருகிறது.
வேதங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு ஒரு காலத்தில் ஜீவ நதியாக ஓடி இன்று மறைந்து போய்விட்டது என்பது ஒரு தகவல். ஹரிஜானா, ராஜாஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளை செய்மதி எடுத்த படங்கள் தரையில் இருந்து பார்க்கும்போது கண்ணிற்கு தென்படாத ஆற்றுப்படுகைகளை காட்டின. சரஸ்வதி ஆறு ஆர்வலர்கள் இதை தமக்கு கிடைத்த ஆதாரமாக கொண்டு வேதகாலம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானது எனும் கருத்தை பலப்படுத்த ஆரம்பித்தனர். ஜெயகரனின் சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரீகமும் எனும் கட்டுரை வேதகாலம் உண்மையிலேயே சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பானதா என்பதை தெளிவாக்க முயல்கிறதுஆர்வலர்களின் ஆர்வக் குளறுபடிகள் குறித்தும் சொல்ல தயங்கவில்லை ஜெயகரன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த நில நீட்சி என்ன என்பது பற்றி குமரிக்கண்டம்- லெமூரியாக் குழப்பம் கட்டுரையில் விரிவாக எழுதுகிறார் கட்டுரையாசிரியர். தமிழகத்தின் தெற்கே கண்டம் என அழைக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருந்ததா? குமரிக்கண்டம், மு எனும் நிலப்பரப்பு, லெமூரியாக் கண்டம் இவை எல்லாம் ஒன்றா? லெமூரியா எனும் கருத்தாக்கம் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஆராய விழையும் ஜெயகரனின் கட்டுரை மரபு மரபாக பழந் தமிழ் இலக்கியம் கட்டி வைத்த கற்பனை அடுக்குகளை நொருக்கி விடுகிறது. கட்டுரை தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இது அமைகிறது.
காம்பே கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட புரதான சிதைவுகள் வரலாற்றிற்கு முன்பான காலத்தவையா என்பதை தேட விழைகிறது காம்பே கடலுக்கடியில் ஒரு கட்டுக் கதையா? எனும் கட்டுரை. கடலடிக்கு எவ்வாறு படிவங்கள் வந்து சேர்ந்திருக்கும், கடலடி அகழாய்வு, நிலத்தடி அகழாய்வு இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் என சுவையான தகவல்களுடன் காம்பே கடலடி சிதைவுகள் குறித்த கேள்விகளையும் ஜெயகரன் தன் வரிகளில் உருவாக்குகிறார்.
போளுவாம்பட்டி புலவர் . இராமசாமி, பேரூர் கருப்புசாமி இவர்கள் இருவரும் சேகரித்து வைத்திருந்த சுடுமண் ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள், சித்திரங்கள், கிறுக்கெழுத்துக்கள், சங்கேதங்கள் போன்றவை பழந்தமிழ் எழுத்துக்களா? சங்க காலத்தவையா? என்பதை ஆராய்ந்து விடை காண்கிறது பேரூர் சுடு மண் ஓடுகள். ஆச்சர்யங்கள் நிறைந்த கட்டுரை இது. இராமசாமி, கருப்புசாமி இருவரினதும் திறமைகள் வியக்க வைப்பவையாக இருக்கின்றன.
சிலப்பதிகாரம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் சிலப்பதிகாரம் குறித்த வரலாற்று உண்மைகள் என்ன? சிலப்பதிகாரத்தின் சாயல் கொண்ட இரு பழந்தமிழ்க் கதைகள் எவை? இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இருக்க வாய்ப்புக்கள் உண்டா? சிலப்பதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது ஷேக்ஸ்பியர் வரலாறு எழுதினால் எனும் கட்டுரை.
Chariots of Gods எனும் பிரபல நூலை எழுதிய எரிக் வோன் டேனிகன், வேற்றுலகிலிருந்து பூமிக்கு வருகை தந்த கடவுளர்களின் உதவியாலேயே சில நாகரீங்கள் பரிணாமம் பெற்றது எனும் கருத்தை கொண்டவர். கடவுளர்களின் உதவி இல்லாவிடில் பிரமிடுகள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை எனும் கருத்தை முன் வைப்பவர் இவர். எரிக் வொன் டெனிகனின் புரட்டுக்கள், அவர் முன் வைக்கும் வேற்றுலக கடவுளர்களின் பூமி விஜயத்திற்கு முரணனா சில சான்றுகளையும், கருத்துக்களையும் ஜெயகரன் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் கட்டுரையில் பகிர்கிறார். சுவையான கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பேன். எரிக் வோன் டேனிகனின் கருத்துக்களில் இருக்கும் இனவுயர்வுவாதம் குறித்தும் ஜெயகரன் சிறிதாக விளக்கம் தருகிறார்.

தொடரும் கட்டுரைகள், பப்புவா நியுகினியில் எரிமலை விஜயம், தமிழகத்தில் திடீரென தோன்றிய கற்பாறைகளின் மர்மம், கொங்கு நாட்டில் நிலத்தடி நீர் போன்றவை பற்றி கூறுகின்றன. ஆனால் இவை மேற்சொன்ன கட்டுரைகளின் அளவிற்கு விறுவிறுப்பானவை அல்ல. எளிய தமிழில், ஒரு புலன் விசாரணை போல விறுவிறுப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் நிலவியல், தொல்லியல், வரலாற்றியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வாசகர்களை திருப்திப்படுத்தும். டாவின்சி கோட் போல தமிழிலும் கதைகள் எழுதலாம் எனும் எண்ணத்தை இக்கட்டுரை தொகுதி பலப்படுத்தவே செய்கிறது. ராமர் பாலம் கட்டினாரா எனும் கேள்விக்கு இனி உங்கள் சிலரின் பதில்களிலும் மாற்றம் வரக்கூடும். சிற்றிதழ்களில் கட்டுரைகளாக வந்தவற்றை தொகுத்து காலச்சுவடு நூலாக வெளியிட்டு இருக்கிறது.

1 comment:

  1. இவ்வகையான ஆய்வுக் கட்டுரைகள் எனக்கும் பிடித்தமானவை!
    :-)

    ReplyDelete