Thursday, October 22, 2009

மந்திரா, மந்திரா


mer1 ஆதியில் உலகை சிருஷ்டித்தவனிற்கும், அவனுடைய தூதர்களில் ஒருவனான லுசிபரிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் லுசிபர் பாதாளம் நோக்கித் தள்ளப்பட்டான். பாதாளம் நோக்கிய அவன் வீழ்ச்சியின் போது அவன் நெற்றியிலிருந்த மரகதக் கல் ஒன்று பூமியில் வந்து வீழ்ந்தது.

உலகைச் சிருஷ்டித்தவனின் விசுவாசிகளான ஞானிகள் ஏழு பேர், பூமியில் வீழ்ந்த மரகதக்கல்லை தேடி ஒர் பயணத்தை ஆரம்பித்தனர். மரகதக் கல்லிலிருந்து கிளம்பிய ஒர் மர்ம ஒளிவீச்சின் வழியாக அம்மரகதக்கல்லை கண்டுபிடித்து விடும் ஞானிகள், அக்கல்லினுள் புதைந்திருக்கும் ரகசியத்தை அறிந்து கொள்கின்றனர்.

தாம் தெரிந்து கொண்ட விடயங்களை உலக மக்களிற்கு அறிவிப்பதற்காக ஆறு ஞானிகள் கிளம்பிச் செல்ல, எஞ்சிய ஞானி மரகதக்கல்லினை பாதுகாப்பாக தன்னுடன் வைத்திருக்கிறான். சில காலங்களின் பின் மரகதக்கல்லுடன் ஜெருசலேம் நகரை அடைகிறான் அந்த ஞானி.

ஜெருசலேம் நகரை அடைந்து பல நூறு வருடங்களின் பின் அம்மரகதக் கல்லானது சீமோன் என்பவரின் கைகளினால் உருவாக்கப்பட்ட ஒர் கிண்ணத்தில் இடம்பிடித்துக் கொள்கிறது. இயேசுவின் இறுதி ராப்போசனத்தின் போது அவர் கரங்களில் ஏறிய கிண்ணம் இதுவே.

இயேசுவின் மரணத்தின் பின் அவரது உடலை அரிமத்தியா சூசை என்பவர் ஒர் கல்லறையில் அடக்கம் செய்தார். தன் இறப்பின் மூன்றாம் நாளின் பின் இயேசு உயிர்த்தெழுந்து விட, கல்லறையிலிருந்து இயேசுவின் உடல் மறைந்ததற்கு அரிமத்தியா சூசையைக் காரணமாக்கி அவரை ஜன்னல்கள் இல்லாத ஒர் இருண்ட கோபுரத்தில் அடைக்கின்றனர் அதிகாரிகள்.

இருண்ட கோபுரத்தின் நிரந்தர இருளில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அரிமத்தியா சூசைக்கு காட்சி தரும் இயேசு, மரகதக் கிண்ணத்தை அவரிடம் தருகிறார். அக்கிண்ணம் பல சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் தெரிவிக்கிறார். அக்கிண்ணத்திற்கு GRAIL எனும் பெயரையும் அளிக்கிறார்.

தண்டனை முடிந்து விடுவிக்கப்படும் அரிமத்தியா சூசை, நகரை விட்டு நீங்கி கடல் வழியாக மேற்கு நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் பயணத்தின் நோக்கம் அவலோன் எனும் தீவைக் கண்டு கொள்வதாக இருக்கிறது.

சில நூற்றாண்டுகளிற்கு பின்

mer2 ஒரே ஒர் உண்மையான கடவுள் எனும் நம்பிக்கையின் வரவு தங்கள் பிரதேசத்தை நெருக்குவதை அறியும் செல்டிக் பெண் தேவதையான ஏஸ், தங்களைப் போன்ற தேவர்களின் இறுதிக்காலம் நெருங்குவதை உணர்கிறாள். தங்கள் தெய்வங்கள் நிரந்தரமாக மக்களால் மறக்கப்படப் போவதை எண்ணிக் கலங்கும் அவள், அதனை தடுப்பதற்காக ஒரு மானுடப் பெண்ணையும், தேவன் ஒருவனையும் உறவு கொள்ள வைத்து ஒர் புதிய உயிரை உருவாக்குவது என்று முடிவெடுக்கிறாள்.

காற்றுத் தேவனை தன் சக்தியால் வரவழைக்கும் ஏஸ், அவனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறாள். ஏஸ் கூறியபடியே தூய்மையான ஒர் பெண்ணை தேடி பிரெத்தான் பிரதேசம் எல்லாம் அலையும் காற்றுத் தேவன் இறுதியில் ஒர் சிறுகிராமத்தில் அவளைக் கண்டு கொள்கிறான்.

அப்பெண்ணின் பெயர் மயேல். அவள் உறங்கும் போது அவள் சொப்பனத்தில் கலந்து, அவளுடன் காதல் உறவாடி அவள் வயிற்றில் ஒர் உயிரைக் கருவாக்குகிறான் காற்றுத்தேவன். உறக்கம் விழிக்கும் மயேல் தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் அச்சம் கொண்டு தன் கிராம ஆலயத்தின் குருவானவரான பிலேய்ஸிடம் தன் சந்தேகங்களை கூறி பரிகாரம் கேட்கிறாள். அவளிற்கு ஆறுதல் கூறுகிறான் ஆலயக் குரு பிலேய்ஸ். ஆனால் அவன் மனதிலோ புதிய வரலாறு ஒன்று ஆரம்பம் ஆகிறது எனும் குரல் மெளனமாக ஒலிக்கிறது.

நாட்கள் செல்ல செல்ல மயேலின் உடலில் ஏற்படும் மாற்றம் கிராம மக்களால் அவதானிக்கப்படுகிறது. அவள் நடத்தையைப் பற்றி வாய்க்கு வந்த படி பேசுகிறார்கள் கிராம மக்கள். மயேலின் சகோதரியும் அவளிற்கு தொல்லை தருகிறாள். ஒர் நாள் வீதியொன்றில் வைத்து ஊர் மக்களின் முன்பாக மயேலை அவமானப்படுத்துகிறாள் அவள் சகோதரி. மயேலின் துணிகளைக் களைந்து அவள் கர்ப்பமாகவிருக்கிறாள் என்பதை ஊரின் கண்களிற்கு காட்டுகிறாள் அவள்.

மயேல் உயிருடன் இருக்கக் கூடாது எனக் கூறியவாறே அவள் மேல் கொலை வெறியுடன் பாய்கிறாள் மயேலின் சகோதரி. பிறக்கவிருக்கும் குழந்தைக்கு வரவுள்ள ஆபத்தை கண்டுகொள்ளும் தேவதை ஏஸ் தன் மந்திர சக்தியால் மயேலின் சகோதரியை கொன்றுவிடுகிறாள். இந்நிகழவைப் பார்த்த கிராம மக்கள் மயேலை சூனியக்காரி என்று திட்டுகிறார்கள். பிலேய்ஸ் கிராம மக்களுடன் வாதிட்டு மயேலைப் பாதுகாப்பாக தன்னுடன் அழைத்து செல்கிறான்.

ஆத்திரம் அடங்காத கிராம மக்கள் மயேலின் குடிசைக்கு தீ வைக்கிறார்கள். ஆனால் மயேலை அழைத்துக் கொண்டு பிலேய்ஸ் படகில் ஏறி கிராமத்திலிருந்து தப்பிவிடுகிறான். கிராம மக்களின் மீது கோபம் கொள்ளும் ஏஸ், கடல் தேவனை அழைத்து மயேலின் கிராமத்தை அவன் அலைகளால் மூழ்கடிக்க சொல்லி கட்டளையிட, ராட்சத அலைகள் கிராமத்தை மூழ்கடித்து அழிக்கின்றன.

கடலில் படகில் பயணித்துக் கொண்டிருக்கும் மயேலிற்கு பிரசவ வலி எடுக்கிறது. அந்தப் படகிலேயே அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைக்கு மெர்லின் எனப் பெயரும் சூட்டுகிறாள்…..

இயற்கையுடன் மனிதன் சேர்ந்து வாழ்ந்த காலங்களில் அவன் விருட்சங்களுடனும், விலங்குகளுடனும் பரிபாஷனை செய்யக் கூடியவனாக இருந்திருக்கிறான். இத்தகைய சக்திகள் கொண்ட சித்தர்கள் இயற்கையை தெய்வங்களாக கண்டனர். இயற்கையுடன் சார்புடைய கடவுள்கள் பலர் மக்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்.

mer3 ஒரே ஒரு உண்மையான கடவுள் எனும் புதிய நம்பிக்கையின் வேகமான பரவல் மனிதர்களிற்கும் இயற்கைக்குமிடையிலான உறவை மூட நம்பிக்கை, போலித் தெய்வ வழிபாடு என்று உரக்க உரைத்து நசுக்க ஆரம்பித்தது.

இயற்கையுடன் தொடர்புடைய புராண தெய்வங்களின் அழிவைத் தடுப்பதற்காக அவர்களினால் உருவாக்கப்பட்டவனே மெர்லின் என்பவன் என்ற கருவைக் கொண்டதாக இக்காமிக்ஸ் தொடர் ஆரம்பமாகிறது.

புராதன பிரித்தானியைச் சேர்ந்த [இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்தின் தென்பகுதியை உள்ளடக்கிய வலயம்] புகழ் பெற்ற ஞானியும், மாந்தீரிகனுமான மெர்லினின் பிறப்பு, குரு பிலேய்ஸ் மூலமாக சிறு வயதில் அவன் கற்றுக் கொள்ளும் பாடங்கள், மெர்லினில் புதைந்துள்ள மகத்தான சக்திகளின் வெளிப்பாடு என்பவற்றுடன் MERLIN எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான La Colére d’Ahés [ஏஸின் சினம்] நிறைவு பெறுகிறது. தொடரும் ஆல்பங்கள் மெர்லினின் கதையை விறுவிறுப்பாக கூறுகின்றன [மெர்லினை தன் சக்திக்குள் இழுக்கும் GRAIL கிண்ணம்,பிலேஸுடனான பிரிவு, ஏஸின் சதி, மெர்லினின் மாய உலகப் பயணம், மனிதர்களிற்கு எதிராக மெர்லின் தொடுக்கும் போர்…..]

மெர்லின், மன்னன் ஆர்தரின் கதைகளில் இடம்பெற்ற ஒர் புகழ் பெற்ற மந்திரவாதி ஆவார். ஆர்தரை மன்னனாக்கி அவரிற்கு ஆலோசகராகவும் செயற்பட்டு வந்தவர் எனக் கதைகளில் சித்தரிக்கப்படுகிறார். இயற்கையையும், விலங்குகளையும் கட்டுப்படுத்தும் வலிமை உள்ளவர் எனக்கருதப்படும் இவரின் அபூர்வ சக்திகள் இவர் தந்தை ஒர் தேவன் என்பதனால் இவரிற்கு உரித்தாக கிடைத்தன.

விவியான் எனும் தேவதை மீது தீராக் காதலில் வீழ்ந்த மெர்லின், அவளிற்கு ஒர் மனிதனை நிரந்தரமாகக் கட்டிப்போடும் மந்திரத்தை சொல்லித்தர, மெர்லின் உறங்கிய போது அவனைச் சுற்றி ஒன்பது வளையங்களை வரைந்து விவியான் அம்மந்திரத்தை உச்சரிக்க, மெர்லின் மந்திரத்தில் இருந்து விடுபட முடியாது நிரந்தரமாக சிறையுண்டதாக ஒர் கதை கூறுகிறது. [மெர்லினிற்கு மட்டும்தானா இந்த நிலை....]

தேவர்கள், இயற்கை ரகசியங்கள், மாய உலகம் எனும் மாய ரசத்தில் தோய்ந்த சிறப்பான கதை சொல்லலும், தேவர்களையும், மாயஜாலங்களின் பிரம்மாண்டங்களையும், இயற்கை வனப்புக்களையும் கண் முன்னே விரியச் செய்திடும், மனதைக் கொள்ளை கொள்ளும் அருமையான சித்திரங்களும் காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு அச்சாரம்.

தொடரிற்கு கதையை எழுதுபவர் Jean-luc Istin. ஒவியங்களின் பொறுப்பு Eric Lambert. இருவருமே பிரெஞ்சுக் கலைஞர்கள். 2000ம் ஆண்டிலிருந்து வெளியாக தொடங்கிய தொடரில் இது வரை ஒன்பது ஆல்பங்கள் வெளிவந்திருக்கின்றன. வாசகர்களிடம் தொடரிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக Merlin-La quete de l’épée [வாள் தேடும் படலம்] எனும் தொடரும் ஆரம்பமாகி இருக்கிறது. மாயஜாலக் கதைப் பிரியர்களின் இஷ்டமான கதைத் தொடராக இக்காமிக்ஸ் தொடர் மகுடம் சூட்டும் என்பது உறுதியான ஒன்று. [****]

ஏனைய ஆல்பங்கள்



bouquet1

வாழ்த்துக்கள்

தனது முதலாவது ஆண்டில் வெற்றிக் காலடி பதிக்கும் சிறந்த தமிழ் காமிக்ஸ் வலைப்பூவான அகொதீகவிற்கும் அதன் நிறுவனர் டாக்டர் செவனிற்கும் எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பாண்டி மைனரும், கார்லா சார்கோஸியின் முறைப் பையனும், தமிழ் கூறும் நல்லுலகின் பிராட் பிட்டுமான அன்பு நண்பர் கண்டால்ஃப் ஜோஸ் அவர்களிற்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

8 comments:

  1. இந்த மாதிரி கதை நான் படித்ததில்லை. உங்கள் எழுத்தில் படித்தவுடன் ஆர்வம் வருகிறது. நல்ல பதிவு.

    ReplyDelete
  2. your posts keep getting interesting & exciting. really enriching experience...keep up the great work. thanks for sharing

    ReplyDelete
  3. great.... i am going to search scanlation for this comics.... is there any english version available for this album...

    ReplyDelete
  4. இந்த புத்தகங்கள் எல்லாம்
    எங்கு கிடைக்கின்றன நண்பரே
    உங்களின் பதிவு படித்தவுடன்
    இருப்பு கொள்ளவில்லை..
    உங்களக்கு பிடித்த ஒரு புத்தகத்தை
    முழுவதும் மொழியாக்கம் செய்து
    பதிவு இட முடியாத நண்பரே...?

    ReplyDelete
  5. நண்பர் பின்னோக்கி அவர்களே, எங்கள் இதிகாசங்களிலும் இதைப்போன்று எண்ணற்ற விடயங்கள் உண்டு, ஆனால் அதனை தகுந்த முறையில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் கலைஞர்கள் தமிழில் அரிது. காமிக்ஸ் என்பது தமிழ் உலகால் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல விடயங்களில் ஒன்று. இன்று விற்கும் வார இதழ்களை விட காமிக்ஸ் தரமான வாசனையைத் தரக் கூடிய ஒன்று. எங்கள் சாபம், அனுபவிக்க வேண்டியதுதான். உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கமல் அவர்களே, உங்களை பதிவுகள் ஏமாற்றவில்லை என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களிற்கும் தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் என் நன்றி. என்றாவது ஒரு நாள் ஒர் காமிக்ஸ் கதையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உங்களிற்கு உள்ளதா? உண்டெனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை தொடர்பு கொள்ளுங்களேன்.

    நண்பர் ரமேஷ், இக்கதைத் தொடரானது ஆங்கிலத்தில் வெளியாகவில்லை என்றே எண்ணுகிறேன். ஸ்கான்லேஷன் கிடைப்பின் சுட்டிகளை இங்கு வழங்க தயங்காதீர்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன் அவர்களே, இக்கதைகளில் சிலவற்றிற்கான சுட்டிகள் என் பதிவுகளின் கருத்துக் களத்தில் நண்பர்களினால் வழங்கப்பட்டிருக்கிறது.நீங்கள் அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் அவை தமிழ் மொழிபெயர்ப்புக்கள் அல்ல.

    ஒர் நல்ல படைப்பை எங்கள் தாய் மொழியில் படிக்கும்போது கிடைக்கும் சுகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. துரதிர்ஷ்டவசமாக காமிக்ஸ் புத்தகங்களை கண்டு கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    தமிழில் முத்து லயன் காமிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து காமிக்ஸ்களை வெளியிட்டு வருகிறது. நீங்கள் விரும்பினால் அதன் வெளியீடுகளிற்கு ஆதரவு வழங்கலாம். உங்கள் நண்பர்கள், மற்றும் சிறுவர்களிற்கும் அறிமுகம் செய்திடலாம்.

    ஒர் கதையை முழுமையாக தமிழாக்கம் செய்து வெளியிடுவது என்பது சிக்கல்களை நானாகவே தேடிக்கொள்ளும் செயலாக காணப்படுகிறது. இருப்பினும் நீங்கள் உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு வழங்கினால் நான் மொழிபெயர்ப்பு செய்த நகைச்சுவைக் கதையான கழுத்திற்கு ஒர் கயிற்றின் பக்கங்களை உங்களிற்கு அனுப்பி வைப்பேன். நீங்கள் வழங்கி வரும் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. நண்பர் கனவுகளின் காதலனுக்கு,
    எனக்கு அளித்த பதில் பின்னூட்டத்திற்கு
    நன்றி . எனது mail id: rvelkannan@gmail.com
    நான் முத்து லயன் காமிக்ஸை தொடர்ந்து
    படித்து வருகிறேன். 'இரத்த படலத்தை' எதிர்
    பார்ப்பவனில் நானும் ஒன்று. என்னை தொலைக்காமல் இருக்கும் பல முக்கிய காரணங்களில் ஒன்று : காமிக்ஸ் படிப்பது.
    சில பக்கங்களை நீங்கள் மொழியாக்கம் செய்தது
    மிக சிறப்பாக இருந்தது. அந்த ஆர்வத்தின் மிகுதியில் தான் மொழியாக்கம் பற்றி
    கேட்டேன். மீண்டும் சொல்கிறேன் நன்றி

    ReplyDelete
  7. கனவுகளின் காதலரே,

    இந்த முறை அருமையான ஓவியக்கலை கொண்ட ஒரு காமிக்ஸ் தொடரின் அறிமுகமா, கலக்குங்கள். சென்னை கிளம்பும் அவசரத்தில் பதிவை முழுவதும் படிக்கவில்லை. நாளைக்குள் படித்துவிட்டு மீண்டும் கருத்திடுகிறேன்.

    வாரம் ஒரு பதிவு என்று தவறாமல் வெளுத்து வாங்குகிறீர்கள்.. இன்னும் பல வாரத்திற்கு எனக்கு படிக்க பல படங்கள், மற்றும் புத்தக, காமிக்ஸ் விளம்பரங்கள் அனேகம் இருக்கின்றன என்று தெரிகிறது.. ஒவ்வொன்றாக பொருமையாக படித்து விட்டு வரிசையாக கருத்திடுகிறேன், அன்பு நண்பரே. (இவற்றின் நடுவே, காமிக்கியில் பதிவிற்கு இப்போதைக்கு நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை :))

    ஆனால், பாண்டி மைனர் ஜோஸிற்கு வாழ்த்து சொல்லாமல் போக முடியுமா? பாண்டியில் பீர் மழை என்று செய்திகளில் வரும் அளவிற்கு கொண்டாட்டங்கள் (மற்றும் கேளிக்கைகளை) களை கட்டி விடுங்கள் ஜோஸ். அன்பிற்கினிய பிறந்து நாள் வாழ்த்துகள் நண்பரே.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  8. நண்பர் வேல்கண்ணன் அவர்களே, உங்களிற்கு ஒர் மின்மடல் அனுப்பியுள்ளேன், மீண்டும் உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

    புது மாப்பிள்ளை ரஃபிக் அவர்களே, என் பதிவுகள் எங்கே ஓடப்போகின்றன, நிதானமாகப் படித்துக் கொள்ளலாம். காமிக்கியலிலும், ராணிக்காமிக்ஸிலும் உங்கள் பதிவுகளைக் காணாது ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வாசகர்களிற்கான பதிவுகளை பதிவதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியமாக இருக்கவேண்டும்.

    ஜோஸ் அந்த பீர் மேகங்களை கொஞ்சம் எங்கள் பக்கமாக ஊதிவிடுங்கள் அனுபவித்துக் கொள்கிறோம்.
    மெகானையும்தான்:)

    உங்கள் ஒய்வு!!!! நாட்களிலும் கருத்துக்களை இங்கு பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete