Sunday, November 4, 2012

தாவிப் பாய் என் தங்கமே

வதனமோ சந்த்ரபிம்பமோ – 5

நவஹோ போக்கர் மாஸ்டர் டெக்ஸ் வில்லர் ஸ்ட்ரெய்ட் ப்ளஷ்

டெஃபியான்ஸ் கோட்டையில் பணிபுரியும் வீரர்களின் பட்டுவாடாப் பணத்தை தங்க நாணயங்களாக ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் ஏந்தியவாறு நீயு மெக்ஸிக்க, அரிசோனா எல்லைகளை இணைக்கும் ரயில்பாதையில் பெருவறள் நிலத்தினூடாக விரைகிறது ஒரு புகையிரதம். அப்பணத்தை அபகரிக்க தயாராகிறது ஒரு குழு. இதை எல்லாம் அறியாமலேயே ரயிலில் பயணிக்கும் வீரர்களுடன் சாதாரண பயணிகளாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இரு ரேஞ்சர்கள். டெக்ஸ் வில்லர்! கிட் கார்சன்…..

டெக்ஸை மீண்டும் ஒரு ரயில் வண்டியில் சந்திக்கிறோம். கடந்த வதனமோ சந்த்ரபிம்பமோ கொண்ட்ராஸ் தங்கத்தில் ரயிலில் வரும் தங்கத்தை தன் எதிரிகள் எல்லாரிற்கும் சதுரங்க வெட்டு வைத்து கைப்பற்றி வருவது நவஹோ தங்கம் டெக்ஸ். இம்முறை அவர் தான் பயணித்த ரயிலில் பறிபோகும் தங்கத்தையும் அதற்கான காரணகர்த்தாக்களையும் சட்டத்தின் பிடிக்குள் எடுத்துவர முயல்கிறார். அவர் ஒரு ரேஞ்சர் எனும் வகையில் மேலதிகாரிகளின் உத்தரவு ஏதுமின்றியே சுயமான ஒரு முடிவுடன் களத்தில் இறங்குகிறார். நரகத்திற்கு சென்றாலும் குற்றம் செய்தவர்களை விடப்போவதில்லை என சூளுரைக்கும் வழமை கொண்ட டெக்ஸ் இக்கதையிலும் தன் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை. இக்கதை TEX Special வரிசையில் வெளியாகிய 6 வது கதையாகும். பிரெஞ்சு மொழியில் இக்கதையை L’attaque du train de Fort Defiance எனும் பெயரில் Semic பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இப்பதிப்பகம் தற்போது டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வறள்நில இரவில் பெருநிலம் கிழித்தோடும் ரயிலில் உறங்க முடியாமல் தவிக்கும் கார்சனின் புலம்பல்களோடு ஆரம்பமாகும் கதையில் ரயிலில் முக்கியமான ஒரு பொருள் இருக்கும் சாத்தியத்தை கார்சனிற்கு விபரிக்கிறார் டெக்ஸ். இந்தக் காட்சிகளை இடைவெட்டிக்  கொண்டு வருகிறது கதையின் எதிர் நாயகர்களில் ஒருவனான லிஞ்ச் வெய்ஸ் அறிமுகமாகும் காட்சி. கதாசிரியர் Claudio Nizzi எதிர் நாயகனான லிஞ்ச் வெய்ஸை வாசகர்கள் முன் கொணரும் காட்சியானது இலகுவில் மறக்கக்கூடிய ஒன்றல்ல. பெருமேற்கின் சாகசங்களை ஏதோ அந்த ஊரின் நாட்டாமைகள் போல படித்து கண்ணீர் விட்டு மனைவிமாரிடம் வாங்கிக் கட்டும் அந்த வாசக உள்ளங்களை பெருமேற்கின் தூய ஆவியான மதுசெலெம் ரட்சிக்கட்டும். அவ்வகையான வாசகர்களின் சாகஸ ஆர்வத்தின் வாயில் டைனமைட்டை சொருகி பற்றவைத்தால் அந்த ஆர்வம் இறகு முளைத்து அரிசோனாவின் பாலை மேகங்களினூடு வெடித்துப் பறந்திடாதா என்ன. பொனெலி பதிப்பகத்தின் ஆஸ்தான கதாசிரியரான க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையில் எதிர் நாயகர்களிற்கு வழங்கி இருக்கும் முக்கியத்தும் வியப்படைய வைக்கும் ஒன்று. [அதே சமயம் இருளில் வரும் நிழல் போன்ற சுமாரிற்கும் கீழான கதைகளையும் நிஸ்ஸி படைக்க சளைத்தவரில்லை என்பதையும் நாமறிந்து கொள்ளல் சிறப்பானது].

fd1மிக இலகுவாக தன் திட்டத்தை செயல்படுத்தி பணத்தை அபகரித்து செல்கிறான் லிஞ்ச். ரயிலில் பணத்தின் பாதுகாப்பிற்காக பயணித்த ராணுவ வீரர்கள் ஒரு கட்டத்தின் பின்பாக லிஞ்ச் குழுவினரை துரத்திச் செல்வது முடிவிற்கு வர, அவர்களை விடாது துரத்த ஆரம்பிக்கிறார்கள் நமது ரேஞ்சர்கள். ராணுவத்தின் இளம் உயரதிகாரியை தாண்டி டெக்ஸ் வழங்கும் உத்தரவுகள் அந்த அதிகாரியின் கவுரவத்தை பாதிக்க அதையும் சேர்த்து ஒரு பஞ்சில் உடைப்பார் பாருங்கள் டெக்ஸ்..அருமையான பஞ்ச் அது. வழமைபோலவே டெக்ஸ் மற்றும் கார்சனிற்கிடையிலான உரையாடல்களில் கிண்டல் கலந்து வாசகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை ஆனால் இக்கதையின் நகர்வானது பெரிதும் தங்கியிருப்பது அதன் எதிர் நாயகர்களின் செயற்பாடுகளிலேதான்.

கொள்ளையடித்து சென்ற பணத்தை பாகம் பிரிக்கும்போது கிடைக்கும் அதிர்ச்சி கதையின் எதிர்நாயகர்களை மட்டுமல்ல வாசக உள்ளங்களையும் திகைக்க வைக்கும். ஆனால் கதையின் மர்மநாடியே அதுதான். எதிர்நாயகர்கள் ஏமாற்றப்பட்டார்களா, இல்லை இது ஒரு பொறியா என அவர்கள் அறியாமல் விழிப்பதைப் போலவே சாகச ரசிகர்களையும் விழிக்க வைக்கிறது கதை. அத்தருணத்திலிருந்து கதை எடுக்கும் வேகம் இரட்டிப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

இந்த சாகஸத்தின் எதிர்நாயகர்களாக லிஞ்ச் வெய்ஸை தவிர்த்து லூக் தோர்ட்டன், டூட் ஜான்ஸன், க்ளைட்டோன் சகோதர்கள் என ஒரு பத்துப்பேர் கொண்ட கூட்டம் இருக்கிறது. இரைதேடிகளான இவர்கள் தாம் கூட்டுச் சேர்ந்து ஆற்றிய ஒரு திட்டத்தின் தோல்வியின் பின்பாக அதற்கான காரணம் என்ன என்பதை அறிய விழைந்தால் நிகழும் நிகழ்வுகள் எப்படியாக இருக்கும். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி பரபர என கதையை நகர்த்தி செல்கிறார். திருப்பத்திற்கு திருப்பமாக எதிர் நாயகர்களின் வீழ்தல்களோடும், வெற்றிகளோடும் பெருமேற்கின் சாகசமொன்றை அதன் நாயகனான டெக்ஸை தாண்டியும் அவர் விறுவிறுப்பு குறையாது எழுதிச் செல்கிறார். தொய்வே அற்ற இந்தக் கதை சொல்லல் கதையை ஒரே வீச்ச்சில் வாசிக்க வைக்கும் மந்திரத்தின் பெரும் சொல்லை தனதாக்கி  கொண்டிருக்கிறது.

fd2டெக்ஸும், கார்சனும் எதிர்நாயகர்களில் ஒருவனான லூக் தோர்ட்டன் கூட்டத்தினை போட்டுத்தள்ளும் காட்சி இருக்கிறதே…. கதாசிரியர் வெஸ்டெர்ன் திரைப்படங்களிற்கு தந்திருக்கும் ஒரு கவுரவம் அது எனலாம். கைவிடப்பட்ட ஒரு நகரம். அதனூடு வீசிக் கொண்டிருக்கும் அனல் காற்று. அக்காற்றின் நர்த்தனத்தில் கலந்து தன்னை இழந்து வெளியில் மிதந்தாடும் சுருள் பற்றைகள். எதிராளிகளின் திறமைகளை தகுந்த வகையில் எடைபோட்டு உருவாக்கப்படும் பொறிகள். அப்பொறிகளை புத்திசாலித்தனமாக நாயகன் மீறி வருகையில் ஏற்படும் ஒரு சிறு உவகை என அக்காட்சித் தொடர் ஒரு குறுங்கதையாக பரிமளிக்கிறது. இறந்தவர்கள் குற்றவாளிகளாக கொலையாளிகளாக இருந்தாலும்கூட அவர்கள் உடல்களை பெருநிலத்தின் இரைதேடிகளின் கைகளில் விட்டுச் செல்லாது அவர்களை புதைத்துவிட்டுச் செல்லும் மனிதாபிமானத்தின் அடையாளமாக இங்கு டெக்ஸும், கார்சனும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இதே பாக்கியம் சமூகத்தில் நேர்மையான பேர்வழி எனப் பேர் பெற்று அந்தத் திரையின் மறைவில் காய் நகர்த்தும் நபர்களிற்கு கிடைப்பதில்லை. அப்படியான நபரை நேரம் எனும் காரணத்தை முதன்மையாக்கி புதைக்காமல் செல்கிறார்கள் நமது ரேஞ்சர்கள். ஒரு வாசகன் எனும் முறையில் இது டெக்ஸின் ஒரு வகையான தீர்ப்பு எனவே என்னால் ஊகிக்க முடிந்தது. கொலைகாரர்களை புதைத்துவிட்டு செல்லும் டெக்ஸ் நேரத்தைக் காரணம் காட்டி ஒருவரின் சடலத்தை அப்படியே விட்டுச் செல்வதின் பின்னாக உள்ள காரணத்தை என் மனம் ஏன் தேடித் தொலைத்தது என்பதற்கு விடையில்லை.

fd3சாகஸத்தின் பிரதான எதிர்நாயகனான லிஞ்ச், ஒரு சூதாட்டக்காரன். பெருமேற்கின் சூதாடிகளிற்கென ஒரு ஆடையணி அழகு இருக்கிறது. கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு சூதாட்டக்காரனிற்குரிய ஆடையுடனேயே நடமாடும் லிஞ்ச் தன் நகர்வுகள் யாவையும் சூதாட்டமாகவே எண்ணிக் கொள்கிறான். ஒரு சூதாடிக்கு தன் எதிரியிடம் இருப்பது என்ன என்று தெரியாதபோதும் தன் இழப்புக் குறித்த எந்தக் கிலேசமுமின்றி தன் ஆட்டத்தை தொடர்பவனாகவே இருப்பான். லிஞ்ச் தன் மேலாடையின் நீண்ட கை மடிப்புக்களிற்குள்ளும் உதிரிச் சீட்டுக்களை ஏந்தியிருக்கும் சூதாடி வர்க்கத்தை சேர்ந்தவன். அவனிற்கு எதிரான ஆட்டங்களை எல்லாம் அவன் அவ்வகையிலேயே முறியடிக்கிறான். தான் தோற்றுவிடக்கூடாது எனும் வெறி அவனைக் கொண்டு செல்லும் எல்லைகளின் வர்ணம் வன்மையானது. தன் எதிரிகளை ஒவ்வொன்றாக ஆட்டத்தில் தோற்கடிக்கும் லிஞ்ச் தன் இறுதி எதிரியை ஒரு துருப்பால் வீழ்த்தி அடிக்கும் இடம், அவன் எவ்வகையான ஒரு சூதாடி என்பதையும் அவன் மனநிலையையும் பெருமேற்கின் எதிர் நாயகர்களின் வாழ்வில் அறம் என்பதன் மதிப்பையும் தெளிவாக்கும். இங்கு நான் இக்கதையின் சித்திரக் கலைஞரான ஹோசே ஒர்டிஸைப் பற்றி எழுதிவிடல் நலம். இவர் பற்றி கொண்ட்ராஸ் தங்கத்தில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் இக்கதையில் வரைந்திருக்கும் சித்திரங்கள் அவர் குறித்த என் கணிப்பை இன்னம் பலமாக்கியிருக்கின்றன. குறிப்பாக தன் இறுதி எதிரியை லிஞ்ச் வீழ்த்தும் அந்த தருணம். அரைப்பக்கத்தில் வரும் அந்த சித்திரம் உங்களை அப்படியே அள்ளிக் கொள்ளும். உயிர்தப்பலுடன் ஊசாலாடும் வாழ்வை மரணம் எனும் பெருவீழ்ச்சி தழுவுகையில் அதனை நேரில் காண்பவர்கள் மனதில் கிளர்ந்தெழும் எழுச்சிகளின் சித்திரங்களின் வரைகோடுகளின் சிறுதெறிப்பின் ஒரு மென்நுண்மையையாவது ஒருவர் அதில் உணரக்கூடும். ஓர்டிஸின் தீர்க்கமற்ற கோடுகளின் பின்பாக அபார உயிர்ப்புடன் மேலெழும் பெருமேற்கின் கருவெள்ளை வரட்டழகு எந்த ஜிரோவினாலோ அல்லது மொபியாஸினாலோ குழைக்கப்பட்ட குழைவண்ணங்ககளினால் தரப்பட இயலாதவை. ஹோசே ஓர்ட்டிஸ் பெருமேற்கின் காய்நில அழகை தன் சித்திரங்களால் தனித்துக் காட்டி நிற்பவர். டெக்ஸ் கதைகள் சர்வதேசப் புகழ் பெற்றவை அல்ல எனும் ஒரே காரணம் இவ்வகையான கலைஞர்களின் உழைப்பு சிறப்பான பார்வை பெறாமைக்கு உதவிடும் காரணங்களில் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இக்கதையை முதலில் நான் படித்தது இற்றைக்கு பதினைந்து வருடங்களின் முன்பாக. பாரிஸ் நூலக வலையமைப்பில் அன்று இருந்த ஒரே ஒரு டெக்ஸ் கதை இது மட்டுமே. இன்று அதுவும் இல்லை ஏன் எதுவுமில்லை. [ஏன் பாரிஸ் நூலக சேவை டெக்ஸ் கதைகளை வாங்குவதிலை எனும் விடயம் வியப்பான ஒன்று]. இக்கதையை அன்று படித்தபோதே இக்கதையின் சித்திரங்களும், லிஞ்சும் என் மனதை ஆட்கொண்டுவிட்டார்கள். ஆனால் சித்திரக் கலைஞரின் பெயர் எனக்கு அன்று முக்கியமான ஒன்றாக படவில்லை. அதேபோலவே லிஞ்சின் பெயரும் என் மனதை விட்டு காலத்தோடு கடந்து சென்றது. ஆனால் சமீபத்தில் இக்கதை பற்றி உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியபோது என் நினைவில் இருந்து திரும்பியவை சில சொற்கள் மட்டுமே. செம ஸ்பீட், அட்டகாசமான வில்லன், அசர வைக்கும் ஓவியங்கள். என்னுடன் உரையாடிய நண்பர்கள் இக்கதையைப் படித்தால் நான் வார்த்தை தவறவில்லை என்பதும் இக்கதை அதன் பண்புகளிலிருந்து இன்னம் விடுபடாது இன்றும் அதேயளவு சுவையுடன் வாசிப்பனுபவத்தை நல்குகிறது என்பதும் உறுதியாகும்.

லிஞ்சை ஏன் நான் மறக்கவில்லை எனும் காரணம் இன்று இக்கதையை நான் படித்தபோது எனக்கு தெளிவாகியது. மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவுடன் தன் கடைசிச் சீட்டை உங்கள் முன் வீசி வீழும் ஒரு சூதாடியினை உங்களால் இலகுவில் நினைவில் இருந்து அழித்திட முடியாது. அவன் தன் சூதாடிக்கான அழகான எடுப்பான ஆடைகளுடன் உங்கள் மனதில் தாவிப் பாயும் தங்கமாக என்றும் உங்கள் நினைவின் ஒரு நுண்மடிப்பில் நின்றிருப்பான். ஏனெனில் ஒரு தோல்வியின் பின்பாக சில சூதாடிகள் மீண்டும் ஆடுவதேயில்லை.

11 comments:

  1. அம்மாடி!! தமிழை இவ்வளவு அழகாகப் பயன்படுத்தி சுவாரஸ்யமாக கதை சொல்லிடும் உங்கள் ஸ்டைல் வியக்க வைக்கிறது! என் அபிமான டெக்ஸின் இன்னுமொரு கதையை விளக்கியிருப்பது சந்தோஷத்தையும், இக்கதைகளைப் படிக்க என்றைக்கு வாய்க்குமோ என்ற ஏக்கமும் ஒருசேர எழுகிறது.

    நன்றி நண்பரே! தொடரட்டும் உங்கள் படைப்புகள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஈரோட் விஜய், டெக்ஸிற்கு நானும் ரசிகனாகிவிட்டேனே... கருத்துக்களிற்கு நன்றி.

      Delete
  2. sirappaga amainthirukkirathu nanbare!

    ReplyDelete

  3. என்ன சொல்லி என்ன பயன் ...ம்ம் .....எங்களுக்கெல்லாம் இது போன்ற காமிக்ஸ் கதைகளை படிக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் கிடைக்கவா ? போகிறது?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஹாஜா இஸ்மாயில்... தமிழில் டெக்ஸின் பவனி அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பம்.... இந்தக் கதைகள் தமிழில் வரலாம்.... வரவேண்டும்.... :)

      Delete
  4. nan thangalin kombukuthirai thodarai magaum avaludan ethirparkirean.

    ReplyDelete
    Replies
    1. abaith, கொம்புக்குதிரை 4 ஐ உடனடியாக வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம்.... ஆனால் அது கண்டிப்பாக வெளியாகும்.... :)

      Delete
  5. மற்றும் ஒரு அருமையான டெக்ஸ் கதை.
    அதனை இன்களுக்கே உரிய பாணியிலான விளக்கம்.
    அருமை மற்றும் நன்றி.

    ReplyDelete
  6. "இப்ப மட்டும் நீ தூங்கலே ஒன்ன தூக்கி ஜன்னலால வீசிடுவேன் பெருசு" என்று மொழி பெயர்த்திருக்கிறீர்கள். ஜன்னலால எப்படி வீசமுடியும். ஜன்னல்ல வீசிடுவேன். என்பதே சரி.

    குறைந்த படங்களுடன் கதை சொல்லும் உங்கள் உத்தி மிக அருமை. ஓவியங்கள் அருமை. படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன. எதிர் நாயகர்கள் வலுவாக இருந்தால் தான் கதை மறக்க முடியாததாக இருக்கும்.

    உங்கள் பதிவுகளின் லிங்க்குகளை தமிழ் காமிக்ஸ்: லயன் முத்து காமிக்ஸ் பேஸ் புக் க்ரூபில் நான் பகிர்வதில் ஆட்சேபணை இருந்தால் சொல்லவும்.

    ReplyDelete
  7. ராஜ்முத்துக்குமார்.... ஒன்னைத் தூக்கி ஜன்னாலால வீசிடுவேன் என்பது டெக்ஸ், கார்சனை ஜன்னல் வழியாக தூக்கி வீசுதல் ஆகும்.... எம் ஊரில் இந்த பேச்சு வழக்கு சகஜம்.... உங்கள் கருத்துக்களிற்கு நன்றி ஆனால் தயவு செய்து, தயவு செய்து என் பதிவுகளை எங்கும் பகிராதீர்கள்..... நன்றிகளுடன்.. :)

    ReplyDelete