நான் முதன்முதலாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் படம், த மேன் வித் த கோல்டன் கன். காற்சட்டை அணிந்த வயதில். உண்மையில் பெண்களைவிட கிறிஸ்டோபர் லீயின் மூன்றாவது முலைதான் கூச்சம் தந்தது. ஆனால் பாண்டின் ரசிகனாகி விட்டேன். தொடர்ந்த வருடங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்த பாண்ட் படங்களை தவற விட்டதிலை. த ஸ்பை கூ லவ்ட் மீ மிகவும் பிடிக்கும். ரோஜர் மூரை பாண்டாக நினைத்த காலம். ஷான் கானரியை ஏனோ மனம் ஏற்க மறுத்தது. ரோஜரும் கூட மூன் ரேக்கர் போன்ற சொதப்பல்களில் ஏமாற்றவே செய்தார். இடையில் இடைவெளி. பின் ப்ராஸ்னனின் மிடுக்குடன் அணிகோர்த்த கவர்ச்சி பிடித்திருந்தது. பின் க்ரெய்க். இங்கு நான் திமொதியைக் குறிப்பிடவே இல்லை. அவர் தாக்கம் அப்படியான ஒன்று. பெரும்பான்மையானவர்களின் மீது.
காசினோ ராயல் நல்லதொரு ஆரம்பம். இருளுடன் கலந்த உளவாளியின் அறிமுகம். குவாண்டம் ஏமாற்றம். சாம் மெண்டஸ் ஸ்கை ஃபாலின் இயக்கம் என்பது ஆச்சர்யம். அதன் ட்ரெய்லர் காத்திருத்தல் ஒன்றின் ஆரம்பம். திரையில் அதைக் கண்டு வந்தது எதிர்பார்ப்பு ஒன்றின் சோகமான மரணம்.
துருக்கியின் பெரும் சந்தை ஒன்றை அண்மித்த கூரைகளின் மீது இடம்பெறும் பைக் ஆக்ஷன் இதுவரை வந்த பாண்ட் திரைப்படங்களின் திறப்புக் காட்சிகளில் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று. பாண்ட் திரைப்படத்தை பார்க்கிறேன் எனும் பிரக்ஞை இருந்தபோதிலும் அதனை உள்ளெடுப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் ஏமாற்றம் என்பது அதனுடன் முடிந்துவிடவில்லை!!!
எதிர் நாயகனான ஹாவியர் பார்டெம் தோன்றும்வரை ஸ்கைபாலின் வேகமற்ற தன்மைதான் ரசிகன் பெறும் உண்மையான ஆச்சர்யம். நாமே கூட நம் தேசத்தின் எதிரியாகவிடக்கூடிய இக்காலத்தில், கருதப்பட்ட மரணமொன்றிலிருந்து தன் தேசத்தையும் குறிப்பாக தன் அன்னை பிம்பத்தையும் காக்க ஓடோடி வருகிறார் பாண்ட். அதுவரையில் அவர் தன் மரணத்திற்கு வாழ்வு தந்தவாறே ஹைனிகன் பீர்களை சுவைத்துக் கொண்டும், நீர் நிலைகளின் அருகில் கிடைக்ககூடிய சிட்டுக்களின் உடல்களை சுகித்துக் கொண்டும் இருக்கிறார். போதையேறிய ஒரு காலையில் அவரிற்கு நாட்டுப்பற்று ஐம்பது வருடம் பீப்பாயில் பதமாக ஊறிய விஸ்கியை விட அதிக போதையை தரும் என்பது உறைத்திருக்க வேண்டும்.
அதன்பின் என்ன.... எதிர்நாயகனான சில்வாவை தேட ஆரம்பிக்கிறார் பாண்ட். தன் வழமையான வழிகளால் கண்டும் பிடிக்கிறார். இறுதியில் ... !!! அட நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...
சில்வா தன் அறிமுகத்தை பாண்டிடம் நிகழ்த்தும் அறிமுக 20 நிமிடம் மட்டுமே படத்தில் ரசிக்கப்படக்கூடியது. ஆனால் ஹாவியரின் சிறப்பான திறமை இதுவல்ல. அந்த 20 அறிமுக நிமிடங்களையும் படுகொலை செய்பவையாக வந்து சேர்கின்றன ஹாவியர் தோன்றும் பின்னைய காட்சித் தொடர்ச்சிகள்.
பாண்டிற்கு மறு உயிர் தந்தாக வேண்டும். அதற்காக அவர் வீட்டை, அவர் முன்பு பயன்படுத்திய காரை, அவரின் கடந்தகாலத்தை.... இப்படியாக பலதும் அழிக்கப்பட்டு அவரிற்கு மறு வாழ்வு தந்தாக வேண்டியிருக்கிறது. அழிக்கப்பட்டவற்றிற்கு பதிலாக புதியன அவற்றிற்குரிய இடங்களிலும் வந்து சேர்ந்தாகி விட்டது. பாக்கி இருப்பது கதை ஒன்று மட்டுமே. இத்திரைப்படத்தில் அதற்கான முக்கியத்துவம் அதிகம் கிடையாது என்பதை நீங்கள் அதனை பார்ப்பதன் மூலம் உறுதி படுத்திக் கொள்ளலாம்.
நல்ல விஸ்கி வீணாகப் போனது, காம்பார்ட்மென்ட் மாறுகிறேன் போன்ற பாண்டின் வழக்கத்திற்குரிய சில வரிகள் காட்சிகளிற்கேற்ப சுவைக்க செய்தாலும் ஒட்டு மொத்த படைப்பாக பாண்டின் 50 வது நிறைவில் சாம் தந்திருப்பது ஏமாற்றமே. குறிப்பாக அழகாக காட்சிகளை வழங்குகிறேன் என அவர் தந்திருக்கும் திரையழகியல் மலிவான ஒன்று..... வெளிச்சக் கூடுகளையும், விளக்குகளையும் காட்டி உயிரற்ற அழகை அழகியலாக்குவதில் அவர் கண்டுள்ளது வெற்றியே....
ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை அதற்குரிய வேகத்துடன் வழங்க சாம் தோற்றிருக்கிறார். இத்திரைப்படத்தின் வேகமற்ற தன்மையும், அதனுடன் சேர்ந்திருக்கும் நீளமும் சலிப்படைய வைக்கும் ஒன்று. உணர்ச்சிகரமான நாடகமொன்றின் தேர்ந்த இயக்குனரான சாம் இங்கும் அதில் வெற்றி கண்டிருக்க முடியும், ஹாவியரை வைத்து அவர் அதில் வெற்றி காணவும் முயற்சித்திருக்கிறார்... ஆனால் பாண்ட் படத்தில் வரும் பாத்திரங்களின் உணர்ச்சிகள் எப்போதும் வெற்றியை ஈட்டி வருபவையாக இருந்ததில்லை. இருப்பினும்... ஹாவியர் பார்டம் இல்லாவிடில் இப்படத்தை பற்றி எழுத என்னதான் இருக்கிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன், பார்டம் இதைவிட சிறப்பாக செய்திருக்கிறார். இத்திரைப்படத்தைவிட ஆக்ஷன் காட்சிகள் ஆமை விறுவிறுப்பாகவும் [லண்டனில் சில்வாவின் திட்டத்தை தவிர்த்து], தேவாங்கு சுறுசுறுப்பாகவும் உள்ள சமகால பாண்ட் படங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பாண்ட் திரைப்படங்களில் பெண்களின் முக்கியத்துவம் அதாவது கவர்ச்சிக் கன்னிகளின் முக்கியத்துவம் ஏறக்குறைய தமிழ் சினிமா நிலையை எட்டி விட்டது. ஆனால் இவர்கள் கண்ணாடிக் குளியலறைக்குள் வைத்து புணரப்படுவதால் அயல்நாட்டு மலைப்பகுதி டூயட்டுக்களிலிருந்து இவர்களிற்கும், ரசிகர்களிற்கும் விடுதலை. ஏன் ஹாவியர் பார்டம் கூட உச்சக்கட்டத்தில் நடிகர் திலகம் போல் நடித்திருப்பார். டானியல் க்ரெய்க், என்ன சொல்வது! அவர் நடித்தவற்றில் மோசமான பாண்ட் இது. இங்கிலாந்து எனும் தாய் மண்ணைக் காக்க பாண்ட் புத்துயிர் பெறலாம் ஆனால் பாண்டின் ரசிகர்களை காக்க எதை புத்துயுயிர்ப்பிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸ்கைஃபால் பிறந்தவீடுதான் ஆனால் பார்வையாளர்களின் இறந்தவீடாகி விட்டது...
நான் முதன்முதலாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் படம்",DIAMONDS ARE FOREVER"காற்சட்டை அணிந்த வயதில். உண்மையில்
ReplyDeleteபாண்ட் 'ஷான் கானரியின்' ரசிகனாகி விட்டேன். தொடர்ந்த வருடங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்த பாண்ட் படங்களை தவற விட்டதிலை ரோஜர் மூரின் த ஸ்பை கூ லவ்ட் மீ வந்த காலத்தில் 'ஷான் கானரியின் இன்னொரு படம் வந்தது பெயர்"NEVER SAY NEVER AGAIN" இது மாபெரும் வெற்றியையும் வசூலில் சாதனையும் படைத்தது.
ஹாஜா இஸ்மாயில்,
ஜுபைல் சிட்டி,
சவுதி அரேபியா
நண்பர் ஹாஜா இஸ்மாயில், நீங்கள் மட்டுமா, ஷான் கானெரிக்கு உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்... அவரை தவிர பாண்ட் வேடத்தில் வேறு நடிகர்களை ஏற்கவே ஏற்காதவர்கள் இருக்கிறார்கள் ... ஒவ்வொரு உள்ளத்திற்கும் ஒவ்வொரு விருப்பம் :) தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
Deleteபாண்ட் படம் என்றாலே பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கிறது. பாண்டின் ஆக்ஷந்தான் விரும்பப்படுகிறது. இன்னும் இந்தப்படம் பார்க்கவில்லை.
ReplyDeleteஇப்போது பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் விச்சு :)
Deleteபாண்ட் படவரிசையில் வானத்தில் இருந்து தவறி விழுந்த பீஸ் போல... இங்கே நவம்பர் 1 தான் வெளியிடுகிறார்கள்... முதல் வாரத்தில் டிக்கெட் போட தேவையில்லைன்னு உங்க பதிவு பார்த்ததும் தெரியுது... அப்ப டிவிடில பார்த்துக்கலாம் :D
ReplyDelete// ஹாவியர் பார்டம் கூட உச்சக்கட்டத்தில் நடிகர் திலகம் போல் நடித்திருப்பார் // இது ஒண்ணே போதாதா :P ?
ரஃபிக், நீங்கள் உடனடியாக இப்படத்தை பார்க்காவிடில் பாண்ட் பாவம் உங்களை சும்மா விடாது நண்பரே..... உடனே ஓடுங்கள் :)
Deleteஅய்யகோ! இதற்கான தமிழ் டப்பிங் எப்படி இருக்கும்னு யோசிச்சா, எனக்கு இப்பயே முட்டிக்கிட்டு வருதே.... :)
ReplyDeleteதமிழின் நெம்பர் 1 உலக எதிரியான உமக்கு தமிழ் டப்பிங் பற்றி கருத்துக்கூற என்ன தைரியம்.... என் வீட்டிலும் அடுப்பு இருக்கிறது :)
Deleteநான் பார்த்த முதல் போண்ட படம் "The Spy who loved me" அதில் இருந்து ரோஜர் மூரின் ரசிகன் ஆகிவிட்டேன். சீன் கனரியை பாண்டாக பிடிக்காது. ரோஜருக்கு அப்புறம் பியர்ஸ் பிரான்சன்
ReplyDeleteதான் பாண்ட் ஆக தகுதி உள்ளவர். இவர்கள் இருவருடைய சார்மிங் மற்றவர்களுக்கு இல்லை.
ஸ்கை பால் சொதப்பல் என்பது வருத்த மானது. பார்ப்போம்.
நண்பர் ராஜ் முத்துக் குமார்.... ஸ்கை ஃபால் குறித்த என் பார்வை இது..... இதுவே உலகப் பொது தீர்ப்பு அல்ல... ஆகவே நீங்களே படத்தை பார்ப்பதன் மூலமாகவே அது சொதப்பலா இல்லையா என்பதை அறியலாம் எனவே ..... :))
Delete