Sunday, November 11, 2012

நாயகர் இல்லா நாடகம்

1977 ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 34 பயணிகளுடன் பயணித்த கோர் ஏர் விமானம் அமேசான் அடர் வனப்பகுதியில் விழுந்து சிதைகிறது. இவ்விபத்தில் உயிர் தப்பிய மனிதர்கள் அவ்வனத்திலிருந்து விரைவாக வெளியேறி விட வேண்டும் எனும் எண்ணத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறார்கள்.....

விபத்து ஒன்றில் அகப்பட்டு உயிர்பிழைத்த மனிதர்கள், எந்த உதவிகளும் தம்மைக் காப்பாற்ற வராத நிலையில் தம் ரட்சணியத்தை தம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளும் கதைகள் உங்களிற்கு புதிதான ஒன்றாக இருக்காது. பல சிரமங்கள் மத்தியில் போராடி தம் வாழ்விடங்களிற்கு செல்லத் துடிக்கும் குழுவினர் கண்டு கொள்ளும் அனுபவங்கள் அவர்கள் கதையை சுவாரஸ்யமான ஒன்றாக்க மாற்றியமைக்க பெரிதும் உதவிடும். இன்றைய நாட்களில் இவ்வகையான கதைக்களம் புதிதான ஒன்றாக இல்லை என்றபோதிலும் இக்கதை வெளியான 1977 களில் இது சிறப்பான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. விக்கியில் இது குறித்து தேடியபோது அக்காலகட்டத்தில் இன்னம் பிரபலமாகியிராத கலைஞனாக இருந்த வான் ஹாமிற்கு இக்கதையை எழுத ஆதர்சமாக 1965களில் வெளியாகிய The Flight of the Phoenix எனும் திரைப்படம் அமைந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. ஃபீனிக்ஸின் பறப்பு, சகாரா பாலையில் அவசரநிலை தரையிறங்குதலை நிகழ்த்திய விமானமொன்றின் பயணிகளின் நிலை குறித்து பேசும் படமாகும்.

Histoire sans Heros எனும் வான் ஹாமின் கதையானது மனிதர்கள் அதிகம் காலடி எடுத்து வைத்திராத ஒரு வனத்தில் விழுந்த விமானத்திலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் கதையை விபரிக்க விழைகிறது. இவ்வகையான கதைகளில் மனிதர்கள் ஒரு குழுவாக இணைந்து செயற்படுகையில் அதற்கென ஒரு தலைமை இருப்பதாக சித்தரிக்கப்படுவதுண்டு. இக்கதையில் வான் ஹாம் அதனை தவிர்க்க முயன்றிருக்கிறார் இருப்பினும் அவரைத் தாண்டியும் கதையானது தருணத்திற்கு தருணம் நாயக பிம்பங்களை முன்வைக்கவே செய்கிறது எனலாம்.

வெளியுலகுடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களிற்கு மட்டுமே போதுமான உணவு கையிருப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அம்மனிதர்கள் காட்டைவிட்டு நாகரீக சமூகத்தை தேடி விரைந்தோட முயல்வதை தனக்குரிய மேற்பரப்பு ஆழத்துடன் வான் ஹாம் எழுதுகிறார். சமூகத்தில் பலவிதமான ஸ்தானங்களை வகிக்கும் மனிதர்கள் அவற்றை தற்காலிகமாக இழந்தநிலையில் தம் உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் வகிக்கும் ஸ்தானங்கள் அவர்களின் மறுபக்கங்களை இயல்பாக வெளிக்கொணர்வதை அவர் விறுவிறுப்புடன் சொல்ல முயல்கிறார். இவ்வகையான மனிதர்கள் மத்தியில் எழக்கூடிய கருத்து மோதல்கள், அகங்கார ஆளுமையால் உருவாகும் பிரிவுகள், அச்சம், கோழைத்தனம், வீரம், தியாகம், காதல் எனக் கதையானது மனிதர்களின் சூழ்நிலை உணர்வுகளோடு நகர்கிறது.

ஒரு பிரிவினரின் முடிவுகளோடு ஒன்றுபடா மனிதன் ஒருவனின் போராட்டத்தின் தோல்வியும், அப்பிரிவினரின் முயற்சியின் வெற்றியும் கோழைத்தனத்திலும், தியாகத்திலும், உண்மை அறிதலிலும், நன்றிக் கடனுறுதலிலும் கலந்து பரிமாறப்படும் கதையின் இறுதிக்கட்ட திருப்பம் வான் ஹாமின் ரசிகர்களை நெகிழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதையில் மனிதர்களின் மாறுபட்ட முகங்களை காட்டும் வகையில் அவர் பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார், கதையில் மிகவும் கொடியவன் கையிலேயே துப்பாக்கியும் இருக்கும் வண்ணம் செய்தும் இருக்கிறார். பயணங்களினூடு பயணிக்ககூடிய மர்மங்களையும், புதிய பாதைகளையும் அவர் கதை அடர்காட்டில் கோலமிடுகிறது.

இயலுமானவரை எதார்த்தத்துடன் கதை சொல்லப்படவேண்டும் என ஹாம் விரும்பினாலும் நாடகத்தனம் பல சந்தர்ப்பங்களில் எட்டிப் பார்க்கவே செய்கிறது, இக்கதை இற்றைக்கு 35 வருடங்களிற்கு முன்பாக உருவான ஒன்று எனும் தகவலே இக்கதையின் நாடகத்தனமான யதார்த்தத்தை விழுங்க உதவிடுகிறது. இக்கதைக்கு சித்திரங்களை உருவாக்கி தந்திருப்பவர் டேனி. டேனியின் சித்திரங்கள் நண்பர்களிற்கு இரு பெர்னார்ட் பிரின்ஸ் கதைகள் மூலம் பரிச்சயமாகி இருக்கலாம். ஹெர்மானின் பாணியிலிருந்து வேறுபட்ட அவரின் சித்திரங்களை நினைவில் கொண்டுவர வாசகர்களிற்கு சிரமம் இருக்காது. இக்கதையில் அவர் தன் வழமையான பாணியை விடுத்து புதிய ஒரு பாணியைக் கையாண்டு இருப்பதாக இணையத்தில் படித்தேன். கதை மாந்தர்களையும், அமேசான் வனத்தையும் மிகவும் எதார்த்தமாக கொணர அவர் முயன்றதாகவும் சொல்கிறது ஒரு கட்டுரை. ஆனால் டேனியின் பாணிக்கு நான் ரசிகன் அல்ல என்பதால் இக்கதையில் அவர் சித்திரங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை எனலாம். இக்கதையானது இன்று சுமாரான ஒன்றாக தோற்றம் தந்தாலும் அன்று இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் சித்திரக் கதைகளில் One Shot எனும் வகையை அறிமுகமாக்கிய ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகவும், அக்கால ரசிகர்களின் மதிப்பில் போற்றப்பட்ட கதையாகும் இது இடம்பெற்றிருக்கிறது என்பதும் கூடுதலான தகவல்கள் ஆகும். ...... ஆகவே

ஆகவே ஏன் இக்கதைக்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்கக்கூடாது. அதே கலைஞர் கூட்டணியில் இருபது வருடங்களிற்கு பின்பாக 1997ல் இக்கதையின் தொடர்ச்சியான Vingt Ans après வெளியாகியது. அதன் வழி இது ஒரு One Shot எனும் வகையிலிருந்தும் வெளியேறியது. அமோசான் காட்டிலிருந்து உயிர்தப்பிய மனிதர்களின் இன்றைய நிலையைக் கதை காட்டி சென்றாலும் கதையின் மைய இழை அதுவல்ல. தம் அடையாளங்களை மாற்றிக் கொண்டு உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நாஸி போர்க்குற்றவாளிகளிற்கு எதிரான ரகசிய நடவடிக்கையே  இப்பாகத்தின் பிரதான இழை எனலாம்.

முதல் பாகம் ஆரம்பித்த அடர் காட்டினுள் கதை மாந்தர்கள் சிலரை மீண்டும் இட்டுச் செல்லும் முன்பாக கதையானாது, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்சு, தாய்லாந்து, சுரினாம் எனப் பயணிக்கிறது. இருபது வருடங்களின் பின்பாக மாற்றம் பெற்றிருப்பது கதைமாந்தர்கள் மட்டுமல்ல; ஹாமின் கதை சொல்லும் விதமும், டேனியின் சித்திரப் பாணியும் எவ்வகையான மாற்றங்களிற்குள்ளாகி இருக்கின்றன என்பதை இக்கதைகளை ஒருசேரப்படிக்கும் ஒரு வாசகன் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஹாம் முதலாம் பாகத்தில் வழங்க எத்தனித்த நாடகத்தனமான எதார்த்தத்தை முற்றிலுமாக உதறிவிட்டு தனக்கு கைவந்த ரகசிய நடவடிக்கை நாடகத்தை விறுவிறுப்பாக சொல்லுகிறார். பரபரவென நகர்கிறது கதை. இது ஏன் இப்படி என்று கேள்வி கேட்காமல் படித்து சென்றுவிட வேண்டும். நாஸிக் குழுக்களின் ரகசியமான வளர்ச்சி, அவற்றை தேடி வேட்டையாடும் மொசாட், தாய்லாந்தின் போதைப் பொருள் சந்தை, தாய்லாந்து வனத்தின் ஆழமான காடுகளில் வாழும் குடிகள், சுரினாம் தொழுநோயாளி பராமரிப்பகம் என வான் ஹாமின் கதை சிறப்பான ஸ்தலங்களில் தொய்வின்றி நகர்ந்து எல்லாம் ஆரம்பமான அமோசன் அடர்வனம் நோக்கிப் பயணிக்கிறது. இப்பயணத்தினூடு வாசகர்களை நெகிழ வைக்க ஹாம் தவறவில்லை. தியாகம், காதல், நட்பு, நன்றிக்கடன்  இவையாவும் மாறுபட்ட கலாச்சார முகங்களுடன் கதையில் பரிமாறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தைவிட இப்பாகம் என்னைக் கவர்ந்தது எனினும் முடிவு சிறிது ஏமாற்றமே. வெறுப்பும், வஞ்சமும் இன்னம் தொடரவா வேண்டும் அதை முடித்து விடலாம் எனும் வரியுடன் கதையின் ஒரு பெரும் மர்மம் வாசகனிற்கு விடுவிக்கப்படாத ஒன்றாக இக்கதை நிறைவுறுகிறது.


சித்திரக் கலைஞர் டேனி இப்பாகத்தில் அசர வைத்திருக்கிறார். அவர் சித்திரப்பாணியின் மாற்றம் கதை நிகழும் இடங்களின் அழகையெல்லாம் அழகாக பக்கங்களில் அழகுபடுத்தி இருக்கிறது. தாய்லாந்தின் அழகுகள்!! ஒட்டக கழுத்துப் பெண்களின் நளினம், சுரினாமின் அந்தி, அமோசான் அடர் வனத்தின் நிறைபச்சை என ஆச்சர்யம் செய்திருக்கிறார் டேனி. அமேசான் வனத்தில் விமானம் வீழ்ந்த இடத்தை அவர் வரைந்திருக்கும் விதம் உணர்வுகளை சற்று மேலெழச் செய்வதாக இருக்கிறது. டேனியின் படைப்புகள் மீது எனக்கு அதிகம் ஈர்ப்பு இல்லாவிடிலும் இப்பாகத்தில் டேனியை ரசிக்காமல் இருப்பது என்பது சிரமமான ஒன்று.  பரபரப்பான கதைகளை விரும்பும் வாசகர்களை இக்கதை அதிகம் ஏமாற்றி விடாது என்பது என் எண்ணம். கதையின் முதலாம் பாகத்தில் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதை எழுதும் பாத்திரம் யார் என்பது ஆச்சர்யம். அது யார் என்பதை நான் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்கள் படிக்கும்போது உங்களிற்கும் அந்த ஆச்சர்யம் முழுமையாக கிடைக்கட்டுமே !!



15 comments:

  1. //அம்மனிதர்கள் காட்டைவிட்டு நாகரீக சமூகத்தை தேடி விரைந்தோட முயல்வதை தனக்குரிய மேற்பரப்பு ஆழத்துடன் வான் ஹாம் எழுதுகிறார்.//

    மேற்கால எம்புட்டுங்க பரப்பனும்? :)

    // கதையில் மிகவும் கொடியவன் கையிலேயே துப்பாக்கியும் இருக்கும் வண்ணம் செய்தும் இருக்கிறார்.//

    என்ன ஒரு ஆச்சர்யம்.... ;)

    ஆக, கானகத்தின் பாதைகளில் இருக்கும் திருப்பங்களை கதையிலும் கொண்டு வர வான் முயல்கிறார்.
    இருள் கவிந்த பாதைகள் கானகத்தில் இருந்தாலும், கதையில் தேடினாலும் தென்படவில்லை என்று சொல்ல வருகிறீர். இதுக்கு எதுக்கு ஓய் இம்புட்டு பில்ட் அப்பு. :P
    சுத்தாம சொல்ல மாட்டீரே! ;)

    ReplyDelete
    Replies
    1. //விமானத்தில இருக்கும் துணி எப்படியானதுனு பார்க்கலாம்//

      இவன் உம்ம விட மொக்கையா இருக்கானே ஓய். எதிர்ல பளீர்னு ஒரு துணி இருக்குது. அத விட்டுட்டு.. :P

      Delete
  2. மேற்கால ஒரு பத்து கில்லோ மீற்றரிற்கு இழுத்திடலாமா :) 35 வருசத்திற்கு முன்னைய கதையல்லவா பின்ன ஆச்சர்யம் இல்லாமலா :) இதப்பாரும் இப்ப காடு ஃபுல்லா இருட்டு கதை ஃபுல்லா நோ இருட்டு.... இது எப்படி இருக்கு.... வான் ஹாம் இருளை ஆழமாக ஆய்ந்த கதைகள் உண்டா என்ன.... மேற்பரப்பு ஆழம் என்று சொன்னாலும் விடுகிறீரா.... உம்மை எடிட்டரா போட்டா ஒரு புக்குகூட வெளில வராது :) எதிர்ல பளீர்னுதான் இருக்கும் ஆனா எதையாவது கேட்டு பளீர்னு வாங்கிக் கட்ட நான் தயார் இல்லை.... மொக்கையா இருக்க பிடிச்சிருக்கு... காற்றுப் போல... :)

    ReplyDelete
  3. காற்று கப்புன்னு பிடிச்சுகிச்சு போல. :P
    எடிட்டர் ஆக தனிதகுதி வேணும் ஓய். அதுல ஒண்ணு கூட எனக்கு கிடையாது. ;)
    பளீர்னு வாங்க நீர் வீட்டை விட்டு வெளிய போவனுமா என்ன? :P

    ReplyDelete
  4. காபரே அப்படியே தமிழ்ல வருங்களா :-P

    ReplyDelete
    Replies
    1. நீங்கல்லாம் காபரா படுத்தினா வரும். ;)

      Delete
    2. சாக்ரடீஸ், தமிழ் கலாச்சார ஆடை அணிந்த பாங்காக் காபரேயை நீங்கள் காணும் வாய்ப்பு உங்களிற்கு கிட்டட்டும்.... :)

      Delete
  5. இது சதி... சிவகாசி கருவறையில் உருவான கதையை எப்படி நீங்க விமர்சனம் பண்ணலாம்... அது இன்னும் டெலிவரியே ஆகலேயே....நீங்க இப்படி முன்னாடியே விமர்சிச்சிட்டா, கதை 2 வருஷம் கழிச்சு வர வரைக்கும் எங்களுக்கு இருக்க வேண்டிய சஸ்பென்ஸ போயிடாதா... எங்க சாணி மக்கா சார்பா, புத்தகம் வெளிவரும் வரை இந்த பதிவை படிக்கிறதில்லனு முடிவு எடுத்திருக்கேன்.

    இப்படிக்கு மண்டை இல்லாத மர லூஸு

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு கருத்து வந்தாலும் இனி ஆச்சர்யப்பட என்ன இருக்கும் என்கிறீர்கள் நண்பரே.... :)

      Delete
  6. ஆங்கிலத்தில் வெளியான The Lost நாடகத்தொடரை இது ஞாபகப் படுத்துகின்றது. பேஷ் பேஷ் அருமை அருமை.

    ReplyDelete
    Replies
    1. அந்த தொடரை இதன் பின்பாக பார்த்தவர்களிற்கு இக்கதை நினைவிற்கு வந்திருக்கும்... :)

      Delete
    2. http://www.youtube.com/watch?v=SbSM02_1k34

      kadhalare, nalamthane?? I am watching this series right now season 2 episode 1 absolutely fantastic series, hope this comics would be the best in the LOT.

      I LOVED THIS SONG..

      Delete
    3. நலம்தான் நண்பரே.... :) பாடலைக் கேட்டேன் நண்பரே சிறப்பாக இருக்கிறது. காமிக்ஸ் உங்களைக் கவருமா என்பது அடுத்த வருடம் தெரிந்து விடும் அல்லவா :)

      Delete
  7. ஹாய்,

    என் சித்தி பையனுக்கு வயது 10. அவனுக்கு சித்திரங்களை உடைய‌ எளிமையான தமிழ் காமிக்ஸ்கள் படிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகின்றேன். எந்த தமிழ் காமிக்ஸ் தரமும் எளிமையும் கொண்டது? அதை onlineனில் வாங்க முடிந்தால் linkக்கை தரவும்.

    ReplyDelete
    Replies
    1. அனானி... நீங்கள் ebay தளத்தில் தமிழ் காமிக்ஸை பெற்றுக் கொள்ள முடியும்.... அல்லது காமிக்ஸ் பதிப்பாளர்களை நேரடியாக தொடர்பு கொள்வதன் வழியாகவும் அதனை நீங்கள் பெற்றிடலாம்... சிறுவர்களிற்கு ஏற்ற கதைகள் எனில் மதியில்லா மந்திரி, லக்கி லூக், சிக் பில் போன்ற கதைகளே சிறப்பானவை என எண்ணுகிறேன்.... லயன் காமிக்ஸ் வலைப்பக்கத்தில் நீங்கள் சிறப்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.... சுட்டி கீழே...

      http://lion-muthucomics.blogspot.fr/

      Delete