Saturday, November 26, 2011

கொலைஞனின் சீடன்


மாயபுனைவுகளின் வரிகளில் வாழ்ந்து வருபவனிற்கு ஒரு ஏக்கம் இழையோடும் எதிர்பார்ப்பு காலைப்புகாரில் கலந்திருக்கும் குளிர்போல் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பாரா ஒரு திருப்பம் அல்லது ஒரு நிகழ்வு. ஒரு புதிய அனுபவம். குருதியை இதமாக திராட்சை மதுபோல் வெப்பமாக்கும் சாகசம். மனதை பனியொழுகும் ஒரு மொட்டுப்போல் வீங்கச் செய்யும் தியாகம். வியக்க வைக்கும் புதுவகை மந்திரம். திகைக்க வைக்கும் உயிரிகள். அரிதாகவே காணக்கூடிய நகைச்சுவை. வரிகளிடையே இளம்கொடிபோல் படர்ந்து கிடக்கும் முதல் காதல். புது உலகமும் அதன் நிலவியலும் உயிரியலும் சனவியலும் அதனூடு அவன் வாழ்ந்து செல்லக்கூடிய பயணமும்.

ஒவ்வொரு மாயபுனைவும் படிப்பவனை மயக்கிவிடவேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல. படிப்பவை எல்லாம் மயக்குபவையாக இருந்தால் அந்த உலகங்களில் இருந்து மீட்சிதான் ஏது. இருப்பினும் ஒவ்வொரு மாயபுனைவு எழுத்தாளரும் தனக்கென ஒரு சிறப்பை உருவாக்கி கொள்ளவே விழைகிறார்கள். அவர்களிற்கென தனித்துவமான ஒரு சுவையை அவர்கள் சமைத்துக் கொள்கிறார்கள். அதைப் படிப்பவன் ஒன்று அதை தீராப்பசியுடன் சுவைப்பவன் ஆகிறான், இல்லை பந்தியிலிருந்து சுவைவிலகி செல்பவனாகிறான். ஒவ்வொரு மாயபுனைவும் அதன் அட்டைக்கு பின்னால் விருந்தொன்றை விரித்து வரிகளில் பாய்விரித்திருக்கிறது. அது தரும் சுவை வாசகனின் ரசனையுடன் ஒன்றிச்செல்லும் தருணத்தில் அது நீண்டு செல்லும் ஒரு ஆனந்த மோகானுபவமாக மாறிவிடுகிறது.

ராபின் ஹாப்பின் பெயர் எனக்கு தெரிய வந்த நாளிலிருந்து அவரை ஒரு ஆண் என்றே வருடக்கணக்கில் நான் எண்ணி வந்திருக்கிறேன். எண்ணங்களும் உண்மைகளும் எதிராகும் புள்ளிகளில்தானே ஆச்சர்யம் கருவாகிறது. ராபின் ஹாப் ஒரு பெண் எழுத்தாளர் என்பது என்னை உண்மையில் ஆச்சர்யப்படுத்திய ஒன்று. பிரான்ஸில் மாயபுனைவு வாசகர்களால் மிகவும் சிலாகிக்கப்படும் எழுத்தாளர் அவர். திரைப்பட வெளியீடுகளிற்குரிய கவுரவங்களுடன் அவர் நூல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஜார்ஜ் மார்ட்டினிற்கோ , ராபார்ட் ஜோர்டானிற்கோ இது இங்கு இதுவரை கிடைக்காத ஒன்று. பாதாள ரயில் நிலைய சுவர்களை சுவரொட்டிகளாக, மயங்கவைக்கும் வகையில அலங்கரிக்கும் அவர் நூல்களின் முன்னட்டைகளை நான் நின்று ரசித்திருக்கிறேன். அபாரமான வரவேற்புகளுடன் அவர் நாவல்கள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அவர் எழுதும் மொழியில் அவரிற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு என்பது இங்கிருப்பதைவிடவும் அளவில் குறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில் அவர் எழுதும் வரிகளில் வழமையான மாயபுனைவொன்றில் இருக்கக்கூடிய அதிரடிகளும், பரபரப்புகளும், சாகசங்களும், மாயங்களும் அளவில் குறைந்ததாகவே காணக்கிடைக்கிறது. அவர் எழுதிய நாவலான Assasin's Apprentice எனும் நாவல் எனக்களித்த அனுபவம் இது. Farseer முப்பாக நாவல்களில் முதல் புத்தகம் இது.

வழமையான மாயபுனைவொன்றின் நாயகனிற்கு கிடைக்ககூடிய வெற்றி, புகழ் என்பன இக்கதையின் நாயகன் எனக்கருதக்கூடிய Fitz ற்கு கதையின் முடிவின்பின்கூடக் கிடைக்காது. நாயகன் வெற்றி பெறவேண்டும், வாகை சூட வேண்டும் என மாயபுனைவுகளின் மரபில் ஒய்வெடுக்கும் உள்ளங்கள் அலறித்துடித்தபோதும், ராபின் ஹாப் அந்த அலறல்களிற்கு எல்லாம் காது கொடுப்பதில்லை. மிக எதார்த்தமாக, ஏன் மிகை எதார்த்தத்துடன் ஆனால் படிப்பவர்களின் உணர்வுகளை குழைந்திட செய்யும் வகையில் நாயகனின் கதையை ஹாப் கூறிச் செல்கிறார்.

பட்டத்திற்குரிய இளவரசன் ஒருவனிற்கு தவறான வழியில் பிறந்த ஃபிட்ஸ், ஆறு வயதில் அவன் பாட்டனாரின் அரண்மனை வாசலில் கைவிடப்படுகிறான். அங்கு அவன் ஆரம்பிக்கும் அந்த புதிய அரண்மனை வாழ்வில் அவன் என்ன பங்கு வகிக்கப் போகிறான், அவன் வாழ்க்கை என்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறது, அவன் சந்திக்கப்போகும் மனிதர்கள் என்ன வகையானவர்கள், அவர்கள் அவனை எப்படிப்பட்ட ஒருவனாக உருமாற்றப் போகிறார்கள், அவனில் மறைந்திருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்ன, அவன் சந்திக்கப்போகும் இடர்பாடுகளிலும், சவால்களிலும் அவன் வெற்றி காண்பானா.... இவை எல்லாவற்றையும் தனக்கேயுரிய மென்மையான ஒரு நடையில் ஹாப் விபரிக்கிறார். தவறான முறையில் பிறந்த ஒரு ராஜரத்த வாரிசின் வாழ்க்கை என்பது எவ்வளவு சோகமான ஒன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் எண்ணுவதை விட சோகமான ஒன்றாக ஃபிட்ஸின் வாழ்வை விபரிக்க ஹாப்பால் முடிந்திருக்கிறது. உன் ரத்தத்தை உன் எதிரி உனக்கெதிரான ஆயுதமாக மாற்றுமுன் அவனை நீ உன் விசுவாசத்திற்குரிய ஆயுதமாக்கு எனும் ராஜ தந்திரத்தின் பின்னால் ஒரு சிறுவன் வாழ்ந்து செல்லக்கூடிய வேதனைகள் வரிகளில் வாழும் வகையில் ஹாப்பால் இக்கதையை சொல்ல முடிந்திருக்கிறது. சுமாராக ஆரம்பிக்கும் ஒரு சுவாரஸ்யமற்ற படகுப் பயணம், ஆற்றின் நீளத்தினோடு அழகும் சுவையும் பெற்றுக் கொண்டு விடுவதுபோல் அவரின் எழுத்துக்கள் மென்மையான அதன் ஓட்டத்தில் படிப்பவனை ஒன்றிக் கொள்ள வைக்கின்றன.

Farseer கள் எனும் வழிவந்தவர்களின் வரலாற்றையும், தொன்மங்களையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பையும், அதில் வாழ்ந்திருக்கும் இனங்களையும், அந்த நிலத்தில் குடியிருக்கும் மந்திரத்தையும் அளவான முறையில் எழுதுகிறார் ஹாப். நீண்ட மாயபுனைவுகளின் மத்தியில் 400 பக்கங்கள் கொண்ட அவர் நாவலை ஒரு சிறுகதையாகவே கருத முடியும். ஆனால் உணர்வுகளை கலங்க வைக்கும் மென்மையான ஒரு சிறுகதை அது. ஏற்கனவே கூறியதுபோல மாயபுனைவுகளின் அதிரடிகளிலிருந்து மிக நீண்ட தூரம் இந்நாவலில் விலகி நிற்கும் ஹாப், வாசகனை கவர்வது அவர் கதையில் இடம்பிடிக்கும் பாத்திரங்களின் உணர்வுகளின் ஓட்டத்தினாலேயே. அது மனிதர்களாகவும், விலங்குகளாகவும், மன்னனின் கிறுக்கனாகவும் படிப்பவனின் உணர்வுகளோடு விளையாட தவறுவதில்லை. ஹாப்பின் எழுத்துக்களில் சோடனைகள், அலங்காரங்கள் இல்லை. அதிரடித் திருப்பங்கள் இல்லை ஆனால் படிப்பதை வாசகன் நிறுத்திவிட முடியாத சுவை இருக்கிறது. 200 வது பக்கத்தின் பின்பாக கதையை படிப்பதை நிறுத்தி வைப்பதை ஒரு சோதனையாக நான் கருத வேண்டியிருந்தது. இந்நாவலின் இறுதிப் பரா போல்... பின்னுரை அல்ல.... என் கண்கள் அருகில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்த மாயப்புனைவு வேறில்லை எனலாம். மாயப்புனைவுகளின் தனித்துவமான வகை எழுத்தாளர் ஹாப். அவர் உள்ளங்களிற்காக எழுதுகிறார். உயிருள்ள உள்ளங்களிற்கு அவரைப் பிடிக்கும். மாயப்புனைவு ரசிகர்கள் அவரின் இப்படைப்பை படித்து பார்த்திட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். [***]


5 comments:

  1. அன்பு நண்பரே,

    இந்த வருடத்தை மாயப்புனைவு வருடமாகவே எண்ணிவிட்டீர்கள். அடுத்த வருடத்தை த்ரில்லர் வருடமாக ஆக்கிவிடுவோம். ஒரு கொலை நடந்துதா எப்படியுயம் கடைசி பக்கத்தில் முடிச்சு விடுவாங்க.

    எங்கூர்ல தமிழ் காமிக்ஸ் வர அன்னைக்கு இப்படியெல்லாம் பெருசா போஸ்டர் அடிச்சு ஒட்டுவோம். காமிக்ஸ் கட்ட ரிக்‌ஷாவுல வச்சு குத்தாட்டம் ஆடிக்கிட்டே ஏஜெண்டு கிட்ட கொண்டு போய் கொடுப்போம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........அதாச்சு வருஷக்கணக்கில.

    ReplyDelete
  2. Assassin's Apprentice? எனக்கு Sorceror's Apprentice தான் தெரியும். அதுவும் இங்கே தான் படித்தேன்.

    ReplyDelete
  3. டெம்ப்ளேட் கமென்ட் 1 - //இந்நாவலின் இறுதிப் பரா போல்... பின்னுரை அல்ல.... என் கண்கள் அருகில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்த மாயப்புனைவு வேறில்லை எனலாம்.// - அட்டகாசமான எழுத்துகள் காதலரே. இதற்காகத்தான் உங்கள் வலைப்பூவைப் படிக்கிறேன். அதுவும் அர்த்தராத்திரி ரெண்டேகால் மணிக்கு.

    ReplyDelete
  4. ஒவ்வொரு புத்தகத்தையும் நீர் அறிமுகப்படுத்தும்போது அதனை இறக்கிவிடுகிறேன். ஆனால் இன்னும் படிக்கத்தான் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  5. ஜோஸ், ஹாபிட்டில் ஆரம்பித்தது இன்று ஹாப்பில் முடிந்திருக்கிறது. இப்போதையிலிருந்து விடுபட முடியாது என்பது உறுதியாகிவிட்ட பின் அவ்வவ்போது படித்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாயிற்று. என்ன இன்னும் சில நல்ல எழுத்தாளர்களை இனம் கண்டு கொள்ள இது உதவிற்று. அடுத்த வருடம் லத்தீன் அமெரிக்க, ஹிஸ்பானிய படைப்புக்களை படிக்கலாமா என சிந்தித்து வருகிறேன். ஆம் காமிக்ஸ் வரும் அன்று நான் விஜயனின் போஸ்டரை பீர் அபிஷேகம் செய்து மகிழ்வேன்.. காமிக்ஸ் காணல் கண்ணன் என்ற பட்டப்பெயரையும் அவரிற்கு சூட்டுவேன்... காமிக்ஸ் மாயங்களை விட மகாமாயம். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.... பி.கு... அதே ரிக்‌ஷாவில் குத்தாட்டம் ஆடியபடியே முகவரையும் பின் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டியாகும் அபாயத்தை மறந்து விடாதீர்கள்...:)

    நண்பர் கருந்தேள், உங்களிற்கு ஒரு மூட் வந்தால் எல்லாவற்றையும் ஒரே வீச்சில் படித்து விடுவீர்கள். நானும் ஞான ஒளி சிவாஜிபோல் வாசகர்களை அழ வைக்க முயற்சித்தால் இப்டி டெம்ப்ளேட் குண்டு போட்டு கலங்கடிக்கிறீர்களே..:)) இதோ டெம்ப்ளேடு பதில்ல் ஹ்ஹாஆஆஆ பாச வலை விழும்போது பறவை பறக்க முடியாது... கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete