Sunday, November 13, 2011

ரியல் ஸ்டீல் டின்டின் ஜானி இங்லிஷ்


2020 களில் மனிதர்களிற்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டிகள் வழக்கொழிந்துபோக எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைப் போட்டிகள் அதிநொழில்நுட்ப உதவியுடன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதாக இருக்கின்றன. சார்ல்ஸ் கெண்டன் எனும் முன்னாள் குத்துச் சண்டை வீரன் பழைய ரோபோக்களை மோதல்களில் ஈடுபட வைத்து பந்தயங்களில் ஜெயிக்க முயன்று வருகிறான். ஊர் விட்டு ஊர் அலையும் சார்ல்ஸிற்கு அவன் முன்னாள் காதலி இறந்து போகும் செய்தியுடன் அவன் மகனை வளர்க்கும் பொறுப்பை தன் காதலியின் சகோதரியிடம் கையளிக்கும் நிலை வந்து சேர்கிறது. இருப்பினும் சில வாரங்கள் சார்ல்ஸின் மகன் அவனுடன் சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன…

பெரும்பாலான குத்துச்சண்டை திரைப்படங்களில் குத்துச்சண்டைகளைவிட உறவுகளிற்கிடையில் நிகழும் போராட்டங்கள் வலியை தருவதாக இருக்கும். இயக்குனர் Shawn Levy இயக்கியிருக்கும் Real Steel திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பொறுப்பற்ற ஒரு தந்தைக்கும், அந்த தந்தையில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு மகனிற்கும் இடையிலான பரிமாற்றங்களை எந்திரர்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் மூலம் திரையில் பரிமாறுகிறது இத்திரைப்படம்.

தன் முன்னால் காதலி இறந்துவிட்ட செய்தியை அறிந்த சார்லஸ், தன் மகன் மேக்ஸை வளர்க்கும் பொறுப்பை அந்தக் காதலியின் சகோதரியிடம் தருவதற்காக ஒரு லட்சம் டாலர் பேரம் பேசும் ஒரு தந்தையாகத்தான் அறிமுகமாகிறான். ரோபோ மோதல் பந்தயங்களில் அவன் பெறும் தோல்விகள் அவனை ஒரு கடன்காரனாக மாற்றியடித்திருக்கின்றன. தன் மகன்மேல் பாசத்திற்கான எந்த அறிகுறிகளும் கொண்டிராத சார்லஸ் கூடவே கட்டாயமாக பயணிக்கிறான் மேக்ஸ். இந்தப் பயணம்தான் தந்தையினதும் மகனினதும் உறவை உயிர் கொள்ள வைக்கிறது. தந்தையின் தோல்வியிலிருந்து எவ்வாறு மகன் அவனை மீட்டெடுக்கிறான், தந்தை மகன் உறவு எவ்வாறு மீட்டெடுக்கப்படுகிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படத்தின் பிரதான அம்சமான ரோபோக்களிற்கிடையிலான குத்துச் சண்டைகள் நன்றாகவே திரைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் பல திரைப்படங்களில் பார்த்து பார்த்து சுவை தேய்ந்துபோன காட்சிகள் படம் முழுதும் உண்டு. தன் தவறை உணர்ந்து தன் பொறுப்புக்களை ஏற்க விரும்பும் ஒரு தந்தை, ஒன்றுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக சாம்பியன் குத்துச் சண்டைக்கு முன்னேறும் ஒரு ரோபோ என பழைய பதார்த்தங்கள் லிஸ்ட் நீளுகிறது படத்தில்.

பிரதான பாத்திரமான சார்ல்ஸை ஏற்று நடித்திருப்பவர் நடிகர் Hugh Jackman. மனிதர் செம மிடுக்காக இருக்கிறார். நாயகத்தனங்களை துறந்த ஒரு பாத்திரத்தில் இயல்பாக நடிக்க அவர் முனைந்திருக்கிறார் இருப்பினும் அவர் மட்டுமல்ல திரைப்படத்தின் எந்தப் பாத்திரங்களும் மனதை அருகில் நெருங்கிவிடவில்லை. அவ்வகையில் பாதி ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாகவே இது அமைந்து விடுகிறது. உறவையும் பாசத்தையும் வென்றெடுப்பதற்கான யுத்தம் எனில் அது செய்யப்பட வேண்டிய யுத்தமே. இந்த யுத்தத்தில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இருக்ககூடும். [**]


les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-14794-2075921682பழைய பொருட்கள் விற்கும் சந்தை ஒன்றில் யுனிகார்ன் எனும் பெயர் கொண்ட அழகான ஒரு பாய்மரக்கப்பலை வாங்குகிறான் டின்டின். அவன் அப்பாய்மரக்கப்பலை வாங்கிய நிமிடத்திலிருந்து அதனை அவனிடமிருந்து கைப்பற்றிவிட முயலுகிறார்கள் சில ஆசாமிகள். இதனால் ஆர்வமாகும் பத்திரிகையாளன் டின்டின் அக்கப்பலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அது அவனை ஒரு சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது…..

ஒரு ரெயின் கோட், வெள்ளைக் காலுறைகளிற்குள் செருகப்பட்ட பேண்ட், சூப்பிய பனங்கொட்டை சிகையலங்காரம், கூடவே ஒரு சிறு வெள்ளைநாய் சகிதம் 88 வருடங்களாக உலகை வலம்வரும் காமிக்ஸ் பாத்திரமான டின்டின் குறித்து அறியாதவர்கள் எண்ணிக்கை அரிதாகவே இருக்ககூடும். Hergé என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியத்தை சேர்ந்த ஜார்ஜ் ரெமி எனும் கலைஞரால் உருவாக்கப்பட்ட பாத்திரம் அது.

உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பு வைத்துக் கொள்ளுமளவு ஊர் சுற்றி சாகசம் செய்திருக்கும் டிண்டின் மீது புகழ் மட்டுமல்ல சர்ச்சைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. சர்ச்சைகளை தாண்டியும் இன்றும் அவர் சாகசங்கள் சிறுவர்களால் படிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் நான் இப்பாத்திரத்தின் ரசிகன் அல்ல. சிறுவயதிலிருந்து அப்பாத்திரத்தினை விட காப்டன் ஹடோக் எனும் அப்பாத்திரத்தின் நண்பன் மீதே எனக்கு பிடிப்பு இருந்து வருகிறது. நிச்சயமாக ஹடோக் கையில் பெரும்பாலும் இருக்கும் பொருள் அதற்கு காரணமாக இருக்க முடியாது.

தொலைக்காட்சி அனிமேஷன் வடிவம், திரைவடிவம் என முன்பே டின்டின் சாகசங்கள் வெளிவந்திருந்தாலும் இவ்வருடம் வெளியாகியிருக்கும் வடிவம் பலத்த எதிர்பார்ப்பை பெற்றது. அதற்கு காரணம் இரு பெயர்கள். கோயாவி மற்றும் வவ்வாலான். அல்லது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் பீட்டர் ஜாக்சன். ஸ்பீல்பெர்க் இயக்கி தயாரிக்க, ஜாக்சன் தயாரிப்பில் பங்கேற்றிருக்கிறார், அவர் கடமை அத்துடன் நின்றிருக்காது என்பது ரசிகர்கள் எல்லாரிற்கும் தெளிவாக தெரிந்த ஒன்று.

les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-2011-14794-224173399The Adventures of Tintin: The Secret of The Unicorn என தலைப்பிடப்பட்டிருந்தாலும் சீக்ரெட் ஆஃப் யுனிகார்ன் கதையை சிறிது மாற்றியும் தாண்டியும், சில சம்பவங்களையும், சில பாத்திரங்களையும் பிற ஆல்பங்களில் இருந்து கதையில் அருமையாக கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கதைக்கு அதிக சாகசச்சுவையை சிறப்பாக இட்டு வந்திருக்கிறது. மேலும் படம் திரையாக்கப்பட்டிருக்கும் விதம் அசர வைக்கிறது. கண்களிற்கு விருந்து என்பார்கள் அல்லவா அப்படி ஒரு விருந்து இப்படத்தில் ரசிகர்களிற்கு காத்திருக்கிறது. எனவே நல்ல பிரதிகளில் படத்தை பார்ப்பதே சிறந்தது என்பதை கண்டிப்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

படத்தின் மிகச்சிறப்பான பாத்திரம் என நான் ஹடோக்கைதான் சொல்வேன். அவரின் அட்டகாசங்கள் இரு வேறுபட்ட கால இடைவெளிகளிலும் ரசிக்க வைக்கின்றன. 17ம் நூற்றாண்டு காப்டனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை என்னவென்று சொல்வது. சில நிமிடங்கள் வந்தாலும் பிரான்சிஸ் ஹடோக் பாத்திரம் மனதை அழகான இளம் வாலிபி போல் கொள்ளை கொண்டு விடுகிறது. டின்டின் பாத்திரம் ஹெர்ஜெ படைத்த பாத்திரத்தைவிட அழகாகவும், உயிர்ப்புடனும் திரைப்படத்தில் உலாவருகிறது, ஹெர்ஜெ படைத்த ஸ்னொவியிடம் இருந்த குறும்புத்தனமும் மென்மையும் சற்று குறைந்த ஸ்னொவியை திரையில் காணலாம்.

பகார் எனும் மரொக்க துறைமுக நகரில் நடக்கும் துரத்தல் காட்சிகள், 17ம் நூற்றாண்டில் கடலில் நிகழும் கடற்கொள்ளையர்களுடான மோதல் என்பன அசரவைக்கும் ஆகஷன்ரகம். மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளிற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சேர்த்திருக்கும் தரத்தையும் அதற்கு காரணமானவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிற்கு சாகசத்திரைப்படங்கள் என்றால் அல்வா செய்வது போல. மனிதர் தேங்காய் எண்ணெய், சிகப்பு அரிசி மா, கருப்பட்டி, தேங்காய்ப்பால் சகிதம் கோதாவில் குதித்து உருவாக்கியிருக்கும் இந்த சாகச அல்வா, பனித்துளி போல் ரசிகர்கள் மனதில் கரைகிறது. திரையரங்கில் அனைத்து வயதிலும் டிண்டின் ரசிகர்களை காணக்கூடியதாக இருந்தது என்பதும் மகிழ்ச்சியான ஒரு விடயமே. சிறுவயது நாயகர்கள் அவ்வளவு இலகுவில் மனதை விட்டு நீங்கி விடுவதில்லை என்பது உண்மைதான் போலும். முதல் காதலின் தலைவிதி என்பது இதுதானோ. [****]


johnny-english-le-retour-johnny-english-2-20791-1172805843மொஸாம்பிக் நாட்டில் தன் கடமைகளை சரிவர ஆற்றத்தவறிய ஸ்பெஷல் ஏஜெண்டு ஜானி இங்க்லிஷ், திபெத்தின் மலைப்பிரதேச துறவி மடமொன்றில் சேர்ந்து கொள்கிறார். ஆனால் சீனப்பிரதமரைக் கொலை செய்யும் சதியை துப்பறிவதற்கு அவரை விட்டால் வேறு எவரும் இல்லை எனும் நிலையில் ஜானி இங்கிலிஷை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறது MI7…….

இப்படி ஒரு மோசமான திரைப்படத்தை என்னை வெறுப்பேற்றும் நாவலாசிரியரான பிராண்டன் சாண்டர்சனிற்குகூட நான் பரிந்துரைக்க மாட்டேன் ஏனெனில் மோசமானவற்றிலும் தரமானவை உண்டு. ரோவான் அட்கின்சனிற்கு வயதாகி விட்டது, இருந்தாலும் Jhonny English: Reborn திரைப்படத்தில் மனிதர் சிரிக்க வைக்க பிரம்மபிரயத்தனங்கள் செய்கிறார். ஆனால் சிரிப்பதுதான் எனக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஆனால் திபெத்திய மடாலயத்தில் புடுக்கில் கற்பாறை கட்டி இழுக்கும் காட்சி சிரிக்க வைத்தது. பின் படம் முழுதும் உங்கள் புடுக்கில் ஒரு கற்பாறையை நீங்கள் சுமந்து கொண்டிருப்பதை உணரலாம்.

இங்கிலாந்து வந்து சேர்ந்தது முதல் ஆரம்பமாகும் ஜானி இங்கிலிஷின் சாகசங்கள்!!! டாக்கியோ, ஸ்வீஸ் என ஓட்டம் காட்டுகிறது. எப்படா சாகசம் முடியும் என கண்ணீர் மல்கும் நிலையில் ஏதோ கொஞ்சம் இரக்கப்பட்டு படத்தை முடித்து வைக்கிறார்கள். ஆள்மாறாட்ட கடுப்பு நகைச்சுவை, அப்பாவித்தனமான முட்டாள் நகைச்சுவை, கையை சும்மா வைத்திருக்க முடியா அலட்டல் ஆக்‌ஷன் நகைச்சுவை என படத்தில் பல நகைச்சுவைகள். சிரிப்பதைவிட சாகலாம் என்பது என்ன என்பதை உணர வைத்திருக்கிறார்கள், நன்றி.

ஜானி இங்லிஷிற்கு ஒரு பார்ட்னரை தருவார்கள். அவர் ஒரு கறுப்பினத்தவர். அப்பாத்திரத்தின் பெயர் Tucker. க்ரிஸ் டக்கரை கிண்டல் அடிக்கும் விதத்தில் இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்குமேயானால் இப்படத்தை க்ரிஸ் விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருப்பார். தனக்கு நெருங்கியவர்களையும் இப்படத்தை பார்க்க தூண்டியிருப்பார். அதன்பின் அவர்கள் க்ரிஸிற்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்களா என்பதை க்ரிஸ்தான் சொல்ல வேண்டும்.

ரோவான் அட்கின்சனை ஒய்வெடுக்க விடுங்கள். எங்களை வாழ விடுங்கள். இப்படியான படங்களை எடுப்பதிற்கு பதிலாக இளையதளபதிக்கு அண்ணாவாக நடியுங்கள். படம் நெடுகிலுமே எனக்கு அருகில் இருந்த ஒரு ரசிகை சிரித்துக் கொண்டே இருந்தார்... கொடுத்து வைத்த ஜீவன்!!!

10 comments:

  1. நண்பரே!
    ஒரே பதிவில் மூன்று படங்கள்...
    இதில் உங்கள் ஆளுமை மிளிரவில்லை.
    சாம்பார்,ரசம்,மோர் மூன்றையும் ஒன்றாக ஊற்றி குழப்பியடித்தது போல் உள்ளது.
    இனி வேண்டாம் இந்த முயற்ச்சி.

    ReplyDelete
  2. உமது பதிவை படித்து முடித்துவிட்டு வலது பக்கம் பார்த்தால்...
    //மிச்ச உயிர்//
    அடடா. ;)

    ReplyDelete
  3. நண்பர் உலக சினிமா ரசிகரே, அப்படியா உணர்கிறீர்கள். இவற்றையே தனித்தனியாக இட்டாலும் இப்படியாகத்தானே எழுதியிருப்பேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமி, அப்படியானால் முதலில் வலது பக்கத்தை பார்த்தபின் பதிவுகளை படிக்கவும். கோயிலிற்கு வந்தால் தெய்வ தரிசனம் முக்கியம். அப்புறம்தான் சிட்டு வாட்சிங் :)

    ReplyDelete
  4. தவறு தான்.வலது பக்கத்தை முன்னேயே பார்த்திருக்க வேண்டும். ;)

    ReplyDelete
  5. டின் டின் இலங்கையில் வெளியாகுமோ தெரியவில்லை. காத்திரிக்கின்றேன். 3 பட விமர்சனம் ஒரே பதிவிலா? சூப்பர் ;)

    ReplyDelete
  6. அருமையான விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. ஆகா.. அருமை நண்பா. சூப்பரா எழுதியிருக்கீங்க.

    ரொம்ப நாள் ஆச்சு உங்க தளம் வந்து. எப்ப வந்தாலும் இப்படி ஒரு எழுத்து கிடைக்கும் இங்க.

    நலம்தானே காதலரே.

    ReplyDelete
  8. நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்தால் ஒரே பதிவில் மூன்று படங்களின் விமரிசனம் போட்டு தாக்கி இருக்கிறீர்கள் காதலரே
    தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
    .

    ReplyDelete
  9. ஆகா டின் டின்க்கு நான்கு ஸ்டார்களா அப்படியானால் கண்டிப்பாக பார்க்க வேண்டியது தான் :))
    .

    ReplyDelete
  10. நண்பர் மிஸ்டர் ஜே, நன்றி. இலங்கையில் முன்பு போல காலங்கள் ஆகியா பிறமொழித்திரைப்படங்கள் இன்றும் வெளியாகின்றன...:)

    இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    நண்பர் செ.சரவணக்குமார், நலமே,நன்றி, நலமா :)

    நண்பர் சிபி, டிண்டின் பாருங்கள், திரையில்..உங்களை கவரும்.. கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete