ப்ளு, நீலவண்ணம் கொண்ட ஒரு அரியரக கிளியாகும். பிரேசில் காடு ஒன்றில் இருந்து அதன் பறக்கும் பருவத்தின் முன்பாகவே கடத்தப்படும் அக்கிளி, அமெரிக்காவின் மின்னொசோட்டாவில் வாழும் லிண்டா எனும் சிறுமியின் கைகளிற்கு வந்து சேருகிறது.
காலங்கள் ஓடுகின்றன லிண்டாவும், ப்ளுவும் மிகச்சிறந்த நண்பர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். ஆனால் ப்ளுவிற்கு பறப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் ப்ளுவின் இருப்பை அறிந்து அதனை தேடி வரும் டுலியோ எனும் மருத்துவன், ப்ளு அவன் இனத்திலேயே இறுதி ஆண் எனும் தகவலை லிண்டாவிற்கு தெரிவிக்கிறான்.
தன் பறவைக்காப்பகத்தில் உள்ள ஜூவல் எனும் பெண்கிளியுடன் ப்ளுவை ஜோடி சேர வைத்து, அதன் மூலம் அக்கிளிகளின் இனம் அழிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு தனக்கு உதவும்படியும் டுலியோ வேண்டுகோள் விடுக்கிறான். இதற்கு சம்மதித்து லிண்டாவும், ப்ளுவும் ரியோ நகரிற்கு செல்கிறார்கள் ஆனால் அங்குதான் விதி விளையாடுகிறது. காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த இரு நீலவண்ணக் கிளிகளும் பறவைக் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டுவிட, ஒரு பக்கம் பறக்க முடியாத ப்ளுவும், ஜுவலும் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்க, மறுபுறம் காணாமல் போன கிளிகளை தேடி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள் லின்டாவும், டுலியோவும்…..
Ice Age அனிமேஷன் திரைப்பட வரிசைகளில் இணை இயக்குனராகவும் பின் இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்திய இயக்குனர் Carlos Saldanha அவர்களின் சமீபத்திய திரைப்படமான Rio அதன் ஆரம்பக்காட்சிகளிலேயே திரையில் விரியும் வண்ணக்கோலங்களால் மனதை கவர்ந்திழுத்து விடுகிறது. மின்னொசோட்டா மாநிலத்தின் மூஸ்லேக் நகரில் பனிக்காலம் ஒன்றின் மூலம் Ice Age ஐ ஒரு குறுகிய கணம் அவர் நினைவுகூர்ந்தாலும், ரியோ நகரில் நகரும் திரைப்படத்தின் பெரும் பகுதியானது களிப்பான சூட்டால் மனதை வசியம் செய்யும் வண்ணக்கோலமாகவே தொடர்கிறது. கதை நிகழும் காலம் கார்னிவல் காலம் என்பது கூடுதல் வண்ணத்தை திரைப்படத்திற்கு அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறது.
உதய காலம், ஒரு காட்டில் வசிக்கும் புள்ளினங்கள் துயில் கலைகின்றன. ஆனால் இது பிரேசிலில் உள்ள ஒரு காடு. துயில் கலையும் பறவைகள் சம்பா நடனம் ஆடி, பாடி களிக்கும் காட்சியுடன் ஆரம்பமாகும் திரைப்படம் முடிவடைவதும் காடு ஒன்றில் பறவைகளின் சம்பா நடனத்துடன்தான். அந்தக் ஆரம்பக் காட்சி தந்த உவகை, களிப்பு, மகிழ்ச்சி, வண்ணம், நகைச்சுவை என்பவற்றை படத்தின் நீளத்திற்கும் வெற்றிகரமான ஒரு கோலமாக போட்டிருக்கிறார் இயக்குனர் சல்டான்ஹா.
லிண்டாவின் புத்தக கடையில் சால்வையை கழுத்தில் சுற்றிக் கொண்டு, சூடான சாக்லெட் பானத்தை ருசித்து பருகிய ப்ளு, ரியோவில் நீலப்பைங்கிளியான ஜூவலின் அழகில் மயங்கி அவளைக் காதல் வலையில் வீழ்த்த எடுக்கும் முயற்சிகளும், கடத்தல்காரர்களிடமிருது தப்புவதற்கு பறக்க முடியாமல் கால்களால் சாகசம் காட்டுவதும், வீட்டுக் கிளியான உனக்கு காட்டில் வாழ்தல் பற்றி என்ன தெரியும் என ப்ளுவிடம் சீறிப் பாயும் ஜூவலும், விடுதலைக்காக அவள் எடுக்கும் முயற்சிகளும், இந்த இரு நீலக்கிளிகளிற்கும் இடையில் மெல்ல உருவாகும் காதலும் என கதையின் இரு பிரதான பாத்திரங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திரைப்படத்தில் ரியோ நகரும் ஒரு பிரதான பாத்திரமே.
கார்னிவல் கொண்டாட்டங்களிற்காக தன்னை அலங்கரித்துக் கொண்ட்டிருக்கும் அந்த உயிரான நகரின் காடுகள், பவேலாக்கள், நகர தெருக்கள், கடற்கரைகள் என சுற்றி சுற்றி அனிமேஷனில் மயக்கியிருக்கிறார்கள். ப்ளுஸ்கை ஸ்டுடியோவின் மிகச்சிறந்த படைப்பாக இன்றைய நாளில் இதனைக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம். பிரதான பாத்திரங்களை மட்டுமின்றி சிறிய துணைப் பாத்திரங்களையும்கூட ஆர்வத்துடன் ரசிக்கும் வண்ணம் உருவாக்கி உலா வர விட்டிருக்கிறார்கள்.
பறவைக் கடத்தல்காரக்களின் அடியாளாக வந்து மிரட்டும் வெண்கிளி, ரியோ நகரிற்கு வரும் உல்லாச பிரயாணிகளிடம் ஜேப்படி செய்யும் மந்திகள், இசைக் கலைஞர்களான குருவிகள், நீலக்கிளிகளை காதலில் இணைய வைக்க முயற்சிக்கும் டூக்கான் பறவை, புல்டாக் லூயி என அனைத்து துணைப் பாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரசிக்க வைக்கிறார்கள்.
நீலக்கிளிகளை கண்டு கொண்டதாக ஸ்மார்ட் போனில் தன் பாஸிற்கு டெக்ஸ்டோ தரும் மந்தி, வீதிச் சமிக்சை விளக்கில் குளிர் காயும் குருவி என அருமையான நறுக்குகள் திரைப்படம் முழுதும் இறைந்து கிடக்கின்றன. பறவைகளின் சம்பா கிளப்பில் நடக்கும் அட்டகாசமான ஆடல் பாடல், ட்ராம் வண்டியின் மீது அமர்ந்து நீலக்கிளிகள் பயணம் செய்யும் போது டூக்கான் பறவை செர்ரி பூங்கொத்துகளின் இதழ்களை தட்டி மழையாக பொழிய செய்ய அந்தக் கணத்தில் ஒலிக்கும் அந்த மென்மையான பாடல் எனும் காட்சிகள் திரைப்படத்தின் நட்சத்திரக் காட்சிகள். இசை சொல்லவே வேண்டாம். பாடல்கள் இடுப்பை நெளிக்க வைக்கும் ரகம். வீடு திரும்பி பறவைகளின் சம்பா கிளப்பில் ஒலித்த பாடலிற்கு கெட்ட ஆட்டம் போட்டேன். அப்பாடலின் இறுதியில் நடிகை ஆன் ஹாத்தவே ஒரு லாலா இழுப்பார் பாருங்கள்... டார்லிங் ஹாத்தவே உன் லாலாவிற்கு நான் அடிமை.
தன் பிறந்த மண்ணிற்கு தன் அன்பை செலுத்த விரும்பிய இயக்குனர் சல்டான்ஹா அதனை அற்புதமாக செலுத்தியிருக்கிறார். அவர் வழங்கியிருக்கும் ரியோ ஒரு கோலகலமான, குஷியான, இளமையான கார்னிவல். [***]
ட்ரெயிலர்
மீ தி first...
ReplyDeleteமொத வட எனக்கு...
அருமையான பதிவு....
அந்த குரங்கு, புல்டாக் - அவைகளின் expressionக்குக்காகவே படத்த பார்க்கலாம்.....
ReplyDeleteBy the way....பொன்னர் சங்கர் படத்திற்கு இன்னும் விமர்சனம் வராததை கண்டித்து நாடாளும் மக்கள் கட்சி சார்பில் உம்மை எதிர்த்து பேரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்...
Facebookல Friend Request அனுபியிருந்தேனே..அதுவும் ரெண்டு தடவ...ஒருபதிலும் இல்ல..பெருத்த அவமானம்....
ReplyDeleteசென்ற வாரம் இந்த படம் பார்த்தேன்.. படத்தை வண்ணத்திக மட்டும் பார்த்தேன்.. சம்பா நடனம் நன்றாக இருந்தது....
ReplyDelete// தன் பிறந்த மண்ணிற்கு தன் அன்பை செலுத்த விரும்பிய இயக்குனர் சல்டான்ஹா அதனை அற்புதமாக செலுத்தியிருக்கிறார். அவர் வழங்கியிருக்கும் ரியோ ஒரு கோலகலமான, குஷியான, இளமையான கார்னிவல். [***] //
ReplyDeleteWow Super After a longtime 3 Star :))
.
நண்பரே!திடீரென்று ஒரு வெறுமை....
ReplyDeleteரத்தத்தில் 'வாழ்க்கை ஒரே போர்' என்ற செய்தி மின்சாரமாக பாய்ந்து உலர ஆரம்பித்தேன்.கிளம்பி போய் ரியோவை தியேட்டரில் பார்த்தேன்.ரத்தத்தில் புது ஆக்ஸிஜன் பாய்ந்து ப்ளூவை விட உயர பறந்தேன்.
வழக்கம் போல் வளமான பதிவு.நன்றி.
//டார்லிங் ஹாத்தவே உன் லாலாவிற்கு நான் அடிமை.//
ReplyDeleteரைட்.படத்துக்கு தனியா போனீர் போல இருக்கு. ;)
நல்ல பதிவு நன்றி :)
ReplyDelete//ப்ளு, நீலவண்ணம் கொண்ட ஒரு அரியரக கிளியாகும்//
ReplyDeleteஆஹா.. என்ன ஒரு அரிய தகவல். ப்ளூ - நீல வண்ணம் ஆகியவற்றின் அற்புத உண்மைகளை இப்படிப் போட்டு உடைத்த பிரெஞ்சு சாணக்கியரே.. வாழ்க வளர்க. .
மறுபடியும் பாருய்யா . . அட்டகாசமான படம்னு சொல்லிட்டு மூணே மூணு ரேட்டிங் கொடுத்த காதலரே. நீர் என்ன இதற்கு முன் ஆசிரியராக இருந்தீரோ? என்ன கொடும சார் இது
நண்பர் கொழந்த, படத்தில் வரும் அனைத்து துணைப்பாத்திரங்களின் பாவங்களும் சிறப்பாக இருக்கும். பேஸ்புக்கில் ஆண்களுடன் சினேகம் கொள்வதில்லை என்ற முடிவு எடுத்து விட்டேன் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் ரமேஷ், வண்ணமயம் என்பது உண்மையே. வண்ணங்களால் மனது நிரம்பியது, குதூகலமானது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் உலக சினிமா ரசிகரே, மிக குஷியான மனநிலைக்கு ரசிகர்களை எடுத்துவருவதில் இப்படைப்பு நிச்சயமாக வெற்றி காண்கிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் இலுமி, தனியாக போனால் மட்டும் ... :)) மனதை கூறுபோடும் கருத்துக்களிற்கு நோ நன்றி :)
தமிழ் மூவிஸ், நன்றி நண்பரே.
நண்பர் கருந்தேள், நான் என் கடமையைத் தானே செய்தேன், என்னைப் புகழாதீர்கள். தவறாமல் பாருங்கள்.. எழுதுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பரே நலமா எவ்வளவு நாளாயிற்று
ReplyDeleteவிடுபட்டவைகளை படித்து விட்டேன்
இன்னும் பார்க்கத்தான் பாக்கி கிடக்கு நிறையவே ...
பகிர்தலுக்கு நன்றியுடன் அன்பும்
நண்பர் வேல்கண்ணன், மிக்க நன்றி.
ReplyDeleteஅன்பு நண்பரே,
ReplyDeleteஇத்தகைய வண்ணமயமான திரைப்படத்தை பார்த்ததில்லை. (தெலுங்கு திரைப்படங்களை தவிர்த்து)
ப்ரேஸிலின் கர்னிவலும் படத்தின் ஒரு பாத்திரமாக வைத்து அதை பிரமாதப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஐ வாண்ணா பார்ட்டி பாடலில் ஹாத்தவே-ன் குரல் மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும். அதை படமாக்கிய முறையும்.
இத்திரைப்படம் தந்த உற்சாகம் உங்கள் வரிகளிலும் தெரிகிறது.
ஜோஸ், தெலுங்கு படங்களின் வண்ணங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாடல்காட்சிகளில் நாயகர்கள் அணியக்கூடிய சட்டை, ஜிப்பா, கால்சாராய் என் கனவில் வந்து என்னை தொல்லை செய்யக்கூடிய தன்மையை கொண்டவையாக இருக்கும். ரியோ ஒரு வண்ணக்கலவை, அதனுள் நுழைந்தால் நாமும் ஒரு பலவண்ணப் பறவையாக நடனமாடிக் கொண்டேதான் வெளிவருவோம், ஹாத்தவே ரசிகர்மன்ற்றத்தை ஆரம்பித்து விடலாமா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDelete