குத்து டைம்ஸ் ஆசிரியரின் விகாரமான மனக்கோலத்தினை என் பக்கங்களிற்கு அவர் அளித்திருக்கும் தலைப்பிலிருந்தே வாசகர்கள் தெளிந்துணர்ந்திட முடியும். இத்தரைக்கும் மேன்மைதகு திரு உடும்புக் குஞ்சான் அவர்களின் க்ரொனிக்கல்ஸ் என்றே தலைப்பிடுமாறு அவரை நான் வேண்டிக் கொண்டிருந்தேன் [பார்க்க படம்]. வழமைபோலவே ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்த அவர், நீ எழுதப் போகும் பக்கங்களிற்கு நான் வைக்கும் தலைப்பு இதுதான் என்று விட்டார். அதிகம் பேசினால் அந்த தலைப்பிலிருந்து உடும்பை நீக்கி விடுவேன் எனவும் எச்சரித்தார். அவர் சொல்லிற்கு மறுபேச்சு இல்லை என்பதால் உடும்புக் குஞ்சானின் நுனி [க்ரொனிக்கல்ஸ்] துடிக்க வேண்டிய வேளைகளில் துடித்து அடங்கும் என்பதை வாசக அன்பர்களிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்ற ஞாயிறு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன், கனரக வாகனப் புகையினுள் மறைந்து போன பருவ சிட்டின் முகம் போல் போக்கு காட்டினான். உடும்பு மார்க் மழைக்கோட்டினுடாக என் வால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. வானில் இருந்து சிந்திய சில துளிகள் வாலை ஸ்பரிசித்து கிச்சு கிச்சு மூட்டின. நான் என் தொப்பியை சரி செய்து கொண்டேன். அப்படியிருந்தும் தூறல் முகத்தில் அடித்தது ஒரு வித கடுப்பை அளித்தது. தெரு, சிட்டுக்கள் நடமாட்டம் இல்லாது கல்லறைபோல் இருந்தது. நான் என் நீண்ட நாக்கை ஒரு முறை நீட்டி உள்ளிழுத்தேன். கெட்ட பழக்கம். சிறுவயது முதல் இருந்தே இருக்கிறது. விட முடியவில்லை. வழமைபோலவே காக்காநரி கஃபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
காக்காநரி கஃபேயில் வழமையான கூட்டம். நரியார் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். காகம் கல்லாவின் பின்பாக ஊன்றியிருந்த தடியின் உயரத்தில் அமர்ந்திருந்து கடையைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. வயதான பாட்டி ஒருவர் வடை சுட்டுக் கொண்டிருக்கும் போட்டோ சுவரில் தொங்கியது. நான் கஃபேக்குள் நுழைந்தபோது தடியில் இருந்த காகம், அதன் கரகரத்த குரலில் காலை வணக்கம் உடும்புக் குஞ்சான் என்று தன் தலையை சரித்தவாறே வரவேற்றது. கல்லாவிலிருந்த நரியின் வால் உஷாராகி அடங்க, அது என்னைப் பார்த்து நரிச் சிரிப்பு சிரித்தது. நலமாக இருக்கிறீர்களா உடும்புக் குஞ்சான் என்றார் நரியார். ஏதோ போகுது என்றேன் நான்.
கல்லாவிற்கு அருகில் இருந்த மேசையில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இதில் ஒரு காரணம் இருக்கிறது. காக்காநரி கஃபேயில் பரிமாறும் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் குரங்குகள் ஆவார்கள். முதலாளிகளின் கண்களிற்கு அகப்படாது குரங்கு சேஷ்டைகளை காட்டுவதில் எத்தர்கள். ஆனால் நல்லவர்கள். எனக்கு நாக்கு. அவர்களிற்கு சேஷ்டை. பிறக்கும்போதே ஒட்டிக் கொண்ட பண்புகள். வெட்டி எறிந்தால் இயல்பு குலையும். நான் நீண்ட நாள் வாடிக்கையாளன் என்பதால் சேஷ்டைகளின் அளவும் கவனிப்பின் அளவிற்கு இருக்கும். கல்லாவின் அருகில் இருந்தால் இந்த சேஷ்டைகளின் அளவு குறைவாக இருக்கும்.
நான் மேசையில் அமர்ந்ததைக் கண்ட கிங்காங், என் மேசையை நெருங்கினான். வாங்க குஞ்சான் என்றான். சொன்னேன் இல்லையா, சேஷ்டைகள் இப்படித்தான் ஆரம்பமாகும். நரியார் தொண்டையைச் செருமினார். சூடாக இறால் வடை இருக்கிறது, சாப்பிடுகிறீர்களா என்றான் கிங்காங். இரண்டு இறால் வடை, ஒரு இஞ்சி தேனீர், தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி என்றேன் நான். எனக்கு அருகில் இருந்த மேசையில் புத்தகப் புழுவார் அமர்ந்திருந்தார். சந்திர வட்டக் கண்ணாடி, நீல ஆமைக் கழுத்து ஸ்வெட்டர், காக்கி ஜீன்ஸ் என கலக்கலாக இருந்தார். மேசையில் இருந்த பேப்பர் தோசை ஆறிக் கொண்டிருக்க புத்தகமொன்றில் ஆர்வமாக மூழ்கியிருந்தார்.
நான் என் தலையை சற்று குனிந்து புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன். கூளமாதாரி என்றிருந்தது. என் அசைவை அவதானித்து விட்ட புத்தகப் புழுவார், என்ன உடும்புக் குஞ்சான், அமைதியாக வந்திருக்கிறீர்கள் எனக் கேட்க, நான் தலையை அசைத்தவாறே அவர் கையிலிருந்த புத்தகத்தை சுட்டினேன். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன், ஆடு மேய்க்கும் சிறுவனான கூளையன் குறித்த முதல் அத்தியாயத்திலேயே மனதை கனக்க செய்துவிடுகிறார் பெருமாள்முருகன், படித்து விட்டு உங்களுடன் முழுதும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார். சொன்ன மறுகணமே புத்தகத்தினுள் மீண்டும் நுழைந்து விட்டார். கொடுத்து வைத்த பிறவி.
நரியார் மீண்டும் செருமினார். சில சமயங்களில் உணர்ச்சிகளை நரியாரால் கட்டுப்படுத்த முடியாது போகும், அப்போது செருமல் ஊளையாகி விடும். வாடிக்கையாளர்கள் இதற்கு பழக்கப்பட்டு விட்டதால் சிக்கல்கள் ஏதுமில்லை. உடும்புக் குஞ்சான், Holy Rollers எனும் திரைப்படத்தைப் பார்த்தேன் என ஆரம்பித்தார் நரியார். கிங்காங் நான் கேட்டவற்றை மேசையில் கொண்டு வந்து வைத்தான். நான் நன்றி கிங்காங் என்றேன். ஆ, பன்றி அதோ அந்த மூலையில் தன் நண்பியுடன் கொஞ்சிக் கொண்டு இருக்கிறார் என்றவாறே நகர்ந்தான் கிங்காங். இதை அவன் பன்றியாரிற்கும் கேட்கும் வகையில் கூறியதால் பன்றியார் கிங்காங்கை ஒரு முறைப்பு முறைத்தார். பின் தன் நண்பியுடன் இழைந்து கொண்டார்.
மிகவும் ஆச்சாரமான யூதக் குடும்பத்து பையன் சாம் கோல்ட். தனது தந்தையின் துணிக்கடையில் பணிபுரிந்தவாறே படிப்பையும் தொடர்கிறான். சாமின் தந்தைக்கு அவனை யூத மதகுருவாக ஆக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை. சாமிற்கோ வேறு தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை. சாமின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. மக்கர் பண்ணும் காஸ் அடுப்புடன் மல்லுக் கட்டி வாழும் குடும்பம் அது. சாமின் அயலவனான யோசெப், பணம் சம்பாதிக்க ஒரு வழி இருக்கிறது என சாமிடம் கூறுகிறான். ஆம்ஸ்டர்டாமிலிருந்து சில மருந்துகளை அமெரிக்காவிற்கு எடுத்து வந்தால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறான். சாமும் இதற்கு சம்மதிக்கிறான். மருந்துகளையும் ஆம்ஸ்டர்டாமிலிருந்து எடுத்து வருகிறான். ஆனால் அம்மருந்துகள் Ecstasy எனப்படும் மனதை இலகுவாக்கும் ஒரு வகை இன்ப போதை மாத்திரைகள் என்பதை அவன் அறிந்து கொள்கிறான். முதலில் தயங்கினாலும் கிடைக்கும் பணத்திற்காக எக்ஸ்டசி வில்லைகளை ரகசியமாக அமெரிக்காவினுள் கடத்தி வருபவனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பிக்கிறான் சாம். அவனது வாழ்க்கையில் உருவாகும் மாற்றங்களைதான் Holy Rollers படம் கூறுகிறது. படத்தை Kevin Acsh இயக்கியிருக்கிறார் என்று சொல்லி முடித்து விட்டு திராட்சை வத்தல் ஒன்றை வாயிலிட்டு சுவைக்க ஆரம்பித்தார் நரியார்.
படத்தில் விசேஷமாக ஏதாவது என்றவாறே நான் வடையை சட்னியில் தொட்டுக் கடித்தேன். விசேஷம் என எதுவும் இல்லை. உண்மை நிகழ்வுகளை வைத்தே படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 1996 லிருந்து 1998 க்குள் இப்படியான ஆச்சாரமான யூதக் குடும்பத்து இளைஞர்களை கழுதைகளாக பாவித்து ஒரு மில்லியனிற்கு மேலாக எக்ஸ்டசி வில்லைகளை அக்கடத்தல் கும்பல் கடத்தியிருக்கிறது.
ஆச்சாரமான யூத குடும்பம் ஒன்றின் மீதான பார்வை ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. பணம் சம்பாதிக்க ஆசைப்படாத யூதக் குடும்பம் ஒன்றை திரையில் காண்பது ஆச்சர்யமான ஒன்றுதானே. நரியார் கண்ணை சிமிட்டியவாறே தொடர்ந்தார். ஆச்சாரம் மிகுந்த யூதக் குடும்பங்களில் தம் பெண்களை திருமணம் செய்யப் போபவர்கள் குறித்த கண்டிப்பான விசாரணை இருப்பது கூட வியப்பான ஒன்றுதான். சாமிற்கு பெண் தர மறுக்கும் யூதக் குடும்பம், சாமின் நிழலான நடவடிக்கைகள் அறியப் பெற்றவுடன் அவனை நல்ல வழிக்கு கொண்டு வரமுயற்சிக்கும் அவன் நண்பன் மற்றும் யூத மத குரு, அவனை தன் சமூகத்திலிருந்து விரட்டி விட முன் வரும் பாசம் மிகுந்த தந்தை என ஒரு ஆச்சாரமான யூத சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவம் படத்தில் காட்டப்படுகிறது. சாமிற்கும் அவன் தந்தைக்குமிடையிலான காட்சிகள் நெகிழ வைப்பவை. Social Networkல் மார்க் ஸுக்கர்பெர்க்காக தோன்றிய Jesse Eisenberg தான் சாமாக நடித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் படம் மிகையான காட்சிகள் ஏதுமின்றி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஒன்றரை மணி நேரம் போனது மூன்று மணிநேரம் போல் பிரமையை தந்தது. பெரும் ஸ்டூடியோக்களின் ஆதரவின்றி சிறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஆச்சர்யங்கள் குறைந்த ஒரு சிறுகதைபோலவே இருக்கிறது என சொல்லி முடித்த நரியார், பன்றியாரின் பில்லிற்கு காசு வாங்கி மீதியை அளித்தார்.
சற்று நேரம் அந்தக் இசைக் கலைஞனின் இசையை கேட்டு ரசித்தேன். பின் கஃபேயிலிருந்து வெளியேறினேன். இசை எனக்குள் வந்து விட்டாற்போல் ஒரு உணர்வு. இந்த நாள் அழகுடன் முடியும் என்று உணர்ந்தேன். என்னைக் கடந்து சென்ற சுமாரான சிட்டுக்கள்கூட அழகாக தெரிந்தார்கள். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன் அழுக்கான கிழிந்த திரைச்சீலைக்கு பின்பாக நின்று புன்னகைக்கும் சிட்டுப்போல் சூரியன் தெரிந்தான்.
குத்து டைம்ஸிற்காக உடும்புக் குஞ்சான்
காக்காநரி கஃபேயில் ஆமை வடையும், அவித்த தவளை முட்டையும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி! உண்மையா உடும்புக் குஞ்சான் அவர்களே?!!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
இது தொடருமா? அட்லீஸ்ட் மாதமிருமுறை?
ReplyDeleteகிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
தலைவர் அவர்களே, நீங்கள் கூறியவை மட்டுமல்ல பல அயிட்டங்கள் காக்காநரி கஃபேயில் சிறப்பாக இருக்கும். ஒரு முறை விஜயம் செய்து பாருங்களேன் :) கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteவிஸ்வா, இது தொடர்வது உடும்புக் குஞ்சான் அவர்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ஜீவீஸ் கனெக்ஷன் பற்றிய விளம்பரத்தை விட, உடும்பாரின் அசை நெளிவுகள் தான் அதிகம் தென்டுகிறது. காக்கா நரி கஃபே, குரங்குகள் அட்டகாசம் என்று வர்ணித்திருக்கிறார்.
ReplyDeleteஉடும்பாரிடம் பாண்டி யானி ரசிகரிடம் ஜாக்கிரதையுடன் இருக்க சொல்லுங்கள். இல்லையேல் விடுதி அருகே செல்லும் பெண்களிடம் வம்படி வாங்க வேண்டியிருக்கும்.
ரஃபிக்,விடுதியருகே திராட்சைப் பழங்களை வைத்து பெண்களிடம் தந்தவாறு ஒருவர் நிற்கிறார் அவரை என்ன செய்யலாம் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete