Saturday, February 19, 2011

அன்னமாகி நின்றாள்


நீயூயார்க் நகர பாலே குழுவில் நடனம் ஆடும் பெண்களில் ஒருவளாக நினா இருக்கிறாள். அக்குழுவின் கலையரங்கில் புதிய நிகழ்ச்சி ஒன்றை வழங்க விரும்பும் பாலே நடன இயக்குனன் தாமஸ் அதற்காக Swan Lake எனும் படைப்பை தேர்ந்தெடுக்கிறான். அந்த படைப்பின் பிராதான வேடத்தை ஏற்க தாமஸ், நினாவை தெரிவு செய்கிறான். அரிதான இந்த வாய்பிற்காக காத்திருந்த நினாவில் இந்த பிரதான பாத்திரம் சில மாற்றங்களை உருவாக்க ஆரம்பிக்கிறது…

தம் வாழ்க்கையையே கலைக்காக ஒப்புக்கொடுத்து அந்தக் கலையாகவே உருமாறிடும் கலைஞர்களை நாம் கலைத்துறைகளில் காணமுடியும். கண்டிப்பான ஒழுக்கமும், கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நிறைந்ததாகவும், உலகின் இன்பங்களை தம் கலைக்காக தியாகம் செய்ததாகவும் அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கும். பாலே நடனக்காரி நினாவும் அவ்வகையான கலைஞர்கள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்வதற்கு தகுதியான ஒருத்தியாகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள்.

சிறு வயது முதலே பாலே நடனத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் நினா, தான் ஒரு நட்சத்திரமாக மிளிரும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். கடுமையான பயிற்சிகளும், உழைப்பும் நிறைந்த அவள் நடன வாழ்க்கையின் ஒரு திருப்பமாக Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் அதிர்ஷ்டம் அவளை வந்தடைகிறது.

சாதாரண ஒரு இளம் பெண்ணிற்குரிய உலக வாழ்வை முற்றிலுமாக தவிர்த்து, நடனப் பயிற்சிகள், வீடு, கண்டிப்பான உணவுமுறை என தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள் நினா. நினாவின் தாய் அவளை இன்னமும் ஒரு சிறுமிபோலவே கவனித்து வருகிறாள். நினாவின் மேல் மிகையான அக்கறை கொண்டவளாகவும் இதன் வழியாக ஒரு வகையில் நினாவின் மேல் அழுத்தங்களை பிரயோகிப்பவளாகவும் அவள் இருக்கிறாள்.

ஒரு பாலே நடனத்தின் பிரதான பாத்திரத்தை தமதாக்கி கொள்வதற்கு, நடனம் ஆடும் பெண்கள் மத்தியில் பெருத்த ஆர்வமும், போட்டியும் எப்போதும் இருந்தே வருகிறது. இந்நிலையில் அந்த வாய்ப்பு நினாவிற்கு எதிர்பாராத விதத்தில் கிடைக்கையில் அதானல் அவள் பூரித்துப் போய்விடுகிறாள். தனக்கு கிடைத்த சந்தர்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவதற்காக அவள் தன் பயிற்சிகளை கடுமையாக்க ஆரம்பிக்கிறாள்.

Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் நர்த்தகி, இரு அன்னங்களின் வேடங்களை மேடையில் ஆடியாக வேண்டும். தூய்மையும், சாந்தமும், அழகும் பொருந்திய வெள்ளை அன்னத்தின் பாத்திரத்தை எந்த சிரமமும் இல்லாமல் ஆடிவிடும் நினாவிற்கு, தந்திரமும், கவர்ச்சியும், சூதும் நிறைந்த கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அதற்கேற்ற உணர்வுகளுடன் நிறைவாக ஆட முடியாமல் இருக்கிறது. இந்தக் கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை தன் ஆட்டத் திறமையால் பூரணமான ஒன்றாக்க கடுமையாக உழைக்கும் நினாவின் ஆளுமையில் கறுப்பு அன்னம் தன் இறகுகளை பிறப்பிக்க ஆரம்பிக்கிறது. இந்த ஆளுமைக்கும், நிஜ நினாவிற்குமான போராட்டத்தையும், அது அவள் வாழ்க்கை முறையில் இட்டு வரும் மாற்றங்களையும், ஓய்வற்ற இப்போராட்டம் வழி தன் கலையை பூரணமாக்குவதற்கு நினா தரும் விலை என்ன என்பதையும் அதிர வைக்கும் விதத்தில் Black Swan ல் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Darren Aronofsky.

black-swan-2011-14580-559664933நினா பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகை Natalie Portman, இதுவரை அவர் திரையில் ஏற்ற வேடங்களில் மிகவும் குழப்பமான, தீவிரமான, உடல் மற்றும் உள ரீதியாக அவரை அயர்ச்சியுற செய்துவிடும் ஒரு பாத்திரத்தை, ரசிகர்கள் வியப்படைய வைக்கும் அளவு செய்து காட்டியிருக்கிறார். அவரின் உழைப்பு திரையில் தனித்து தெரிகிறது. தன் தாய், நடன இயக்குனன் தாமஸ், தனக்கு கிடைத்திருக்கும் பிரதான பாத்திரத்தை தட்டிச் செல்லும் திறமை படைத்த நடனக்காரி லில்லி ஆகியோர் வழியாக அவள் பெறும் அழுத்தங்களுடன், நிஜத்திற்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத சூழல் ஒன்றில் அவள் மாட்டிக் கொண்டு, தன் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காணவியலாது, தன் அடையாளத்தின் எல்லைகளை வரையறுக்கும் சுயாதீனம் இழந்து, தன் லட்சியக் கனவிற்காக நினா ஓடும் ஓட்டம் எம்மை மூச்சு வாங்க வைக்கிறது. அபார சக்தியை செலவழித்து நினா பாத்திரத்தை நிறைவான ஒன்றாக ஆக்கியிருக்கிறார் நத்தாலி போர்ட்மேன். அப்பாவியாக இருந்த ஒரு இளம்பெண் எவ்வாறு கரிய அன்னமெனும் இருளின் சுழிக்குள் தன் கலையால் அமிழ்ந்து போகிறாள் என்பதை நினாவின் பாத்திரம் சொல்லவெண்ணா வலிகளுடன் ஆடித்தீர்க்கிறது.

படம் ஆரம்பித்தது முதற் கொண்டே, நினாவின் பிறழ்வுகளிற்குள்ளும், வேதனைகளிற்குள்ளும், அச்சங்களிற்குள்ளும், அரிதாக கிடைக்கும் அவள் புன்னகைகளிற்குள்ளும் பார்வையாளனை தன் இயக்கத்தால் இழுத்து சென்றுவிடுகிறார் இயக்குனர். திரையில் நினா ஒவ்வொரு முறையும் குழப்பமடையும் நிலையிலும் பார்வையாளனையும் அக்குழப்பத்தில் முழுதாக பங்கேற்க செய்து விடுகிறது டாரென் அரொனொஃப்ஸ்கியின் நேர்த்தியான இயக்கம். நினாவின் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக செறிவாக்கி, அதன் உச்சத்தில் அந்த ஆளுமையின் தீவிர வெளிப்பாட்டை அதன் முழு சக்தியுடனும், வெறியுடனும் திரைப்படுத்துவதில் அபார வெற்றி கண்டிருக்கிறார் டாரென். நினாவின் அப்பாவித்தன்மை தேயத் தேய அவளுள் கறுப்பு அன்னம் பூரணமாகிக் கொண்டு வருவதை தன் பாணியில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அவர். நினாவின் நகங்கள் வெட்டப்படும் காட்சிகளில் எம் கால் விரல்கள் கூசுவது அவரின் அழுத்தம் மிகுந்த இயக்கத்திற்கு சான்று. நடன இயக்குனன் தாமஸாக வேடமேற்றிருக்கும் Vincent Cassel தன் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார் ஆனால் நத்தாலி போர்ட்மேனின் பாத்திரம் ஏனைய எல்லா நடிகர்களையும், அவர்களின் திறமைகளையும் இரக்கமின்றி விழுங்கிப் பசியாறுகிறது.

பாலே நடனக்காட்சிகளில் கமெரா சுற்றி, சுழன்று, வளைந்து, அதுவும் ஒரு பாலே நடனக் கலைஞனாகிவிடுகிறது. திரையில் ஒலிக்கும் பிண்ணனி இசை, இருளையும், அச்சத்தையும், வேதனையையும் மனதில் கூட்டிச் செல்கிறது. உச்சக்கட்டக் காட்சியில் நத்தாலி போர்ட்மேனின் அபாரமான திறமை, டாரெனின் இயக்கம், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து ஒரு அதிர வைக்கும் முடிவை கண்களை சிமிட்ட முடியாது உறைந்துபோன நிலையில் ரசிக்க வைக்கின்றன. டாரெனின் இயக்கத்தில் வெளியாகிய தீவிரமான படங்களில் Black Swan க்கு முதலிடம் உண்டு. நத்தாலி போர்ட்மெனின் திரையுலக வாழ்வில் கறுப்பு அன்னம் அவரை மலை உச்சிக்கு தள்ளியிருக்கிறது. அதிலிருந்து விழுவதோ இல்லை இன்னமும் மேலே செல்வதோ இனி அவரின் கைகளிலேயே உள்ளது. உக்கிரமான உளவியல் த்ரில்லர் ரசிகர்களையும், டாரென் அரொனொஃப்ஸ்கியின் தீவிர ரசிகர்களையும் கறுப்பு அன்னம் தன் கவர்ச்சி சிறகுகளிற்குள் மயக்கி விடும் மந்திரத்தை கொண்டேயிருக்கிறது. [***]

ட்ரெயிலர்

14 comments:

  1. நல்ல விமர்சனம்.. ஆனா எனக்கு இந்தப்படம் பிடிக்குமான்னு தெரியலை.. சொல்லிட்டீங்க இல்ல.. பார்க்க முயற்சி பண்றேன்

    கவிதை காதலன்

    ReplyDelete
  2. டாரென் அரொனொஃப்ஸ்கியின் Pi, ரெக்குயிம் ஆப் எ டிரீம் படத்திலிருந்தே அவரின் தீவிர ரசிகன் நான். அவருடைய கடைசி படமாகிய ரெஸ்ட்லர் எனக்கு ஏனோ அவ்வளவாக பிடிக்கவில்லை (என்னுடைய பேவரிட் நடிகர் மிக்கி ரூர்க் இருந்தும்).

    இந்த படம் நீங்கள் சொன்னதில் இருந்து தேடிப்பிடித்து பார்த்து விட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது, நண்பர்களுக்கு பிடிக்கவில்லை (ஒக்கே ரகம் என்கிறார்கள்).


    கிங் விஸ்வா
    இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

    ReplyDelete
  3. காதலரே,

    நீங்கள் டாரென் அரொனொஃப்ஸ்கியின் ரெஸ்ட்லர் படம் பார்த்து விட்டீர்களா?

    ReplyDelete
  4. நண்பர் கவிதை காதலன், டாரெனின் முன்னைய படங்கள் உங்களிற்கு பிடிக்குமானால் தயங்காது நீங்கள் இப்படத்தை பார்த்திடலாம் என்பது என் கருத்து. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, இயக்குனர் டாரென், ரெஸ்ட்லர் திரைப்படத்தின் பெண்பால் டூப்தான் பிளாக் ஸ்வான் என்கிறார் :)படம் உங்களை கவர்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. சீரியஸான படைப்பு என்பதால் பலரிற்கும் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம். படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
  6. அருமையான எழுத்து நண்பரே. கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்போல இருக்கிறது. ஒரு நல்ல படைப்பில் தன்னை முழுவதுமாக இழந்தவர்களாலேயே இதுபோல எழுத முடியும்.

    நன்றி நண்பரே. நிச்சயம் கறுப்பு அன்னத்தைப் பார்ப்பேன்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Vincent Cassel உடைய Capoeira திறமையை வைத்து இங்கே நிறைய ஆட கொடுத்திருப்பார்கள் என்று பார்க்கப் போனால், ஹூக்கும்.

    Psychological thriller என்று சொன்ன பிறகும் பலே நடனத்துக்காகவே பார்க்கப் போனேன். =(( கொஞ்சமல்ல ரொம்பவே horrified in the theater. நடலியின் நடிப்பு அருமை

    ReplyDelete
  9. நண்பரே... இது எனக்கு மிகப் பிடித்த ஒரு படமாக மாறிப்போனது. இதன் விமர்சனம், ஒன்றரை மாதத்துக்கு முன்னரே எழுதியாகிவிட்டது. அது சீக்கிரம் வெளிவரும். ச்ல காரணங்களால் எனது தளத்தில் போடவில்லை. இந்த மாத இறுதியில் வெளியிடுவேன்

    ReplyDelete
  10. விஸ்வா, ரெஸ்ட்லர் திரைப்படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. பார்த்த்துவிடுவேன் :))

    நண்பர் ரஹ்மான், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் செந்தில், நன்றி.

    நண்பர் செ.சரவணக்குமார், மிக்க நன்றி உங்கள் கனிவான கருத்துக்களிற்கு.

    அனாமிகா, வன்வென் கசெலின் பாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்பது வருத்தத்திற்குரியதே. இன்னொரு படைப்பு வராமலா போய்விடும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், இது உங்களிற்கு பிடிக்காமல் போயிருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  11. "நத்தாலி போர்ட்மேனின் பாத்திரம் ஏனைய எல்லா நடிகர்களையும், அவர்களின் திறமைகளையும் இரக்கமின்றி விழுங்கிப் பசியாறுகிறது"இந்த ஒரு வரி போதும்....ஆஸ்கார் பரிசுக்கு சமமான பாராட்டு.

    ReplyDelete
  12. உலக சினிமா ரசிகரே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. // பாலே நடனக்காட்சிகளில் கமெரா சுற்றி, சுழன்று, வளைந்து, அதுவும் ஒரு பாலே நடனக் கலைஞனாகிவிடுகிறது. திரையில் ஒலிக்கும் பிண்ணனி இசை, இருளையும், அச்சத்தையும், வேதனையையும் மனதில் கூட்டிச் செல்கிறது. உச்சக்கட்டக் காட்சியில் நத்தாலி போர்ட்மேனின் அபாரமான திறமை, டாரெனின் இயக்கம், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து ஒரு அதிர வைக்கும் முடிவை கண்களை சிமிட்ட முடியாது உறைந்துபோன நிலையில் ரசிக்க வைக்கின்றன. //

    காதலரே உங்களுடைய இந்த வார்த்தைகள் உடனே இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது :))
    .

    ReplyDelete