Friday, January 21, 2011

ஆன்மா பாதி


தொலைமேற்கின் பெருவெளிகளை புகையை கக்கியவாறே ஊடறுத்து செல்கிறது ஒரு புகையிரதம். காவல்துறையால் கைது செய்யப்பட்ட, Mat Riders எனும் பிரபல கேடிக் குழுவின் தலைவனை பலத்த பாதுகாப்புடன் அந்த பயணிகள் ரயிலில் அழைத்து செல்கின்றனர் காவல் அதிகாரிகள். சட்டத்தின் மரணப் பிடிக்குள் சிக்கியிருக்கும் தங்கள் தலைவனை மீட்பதற்காக அந்தப் பயணிகள் ரயிலை யாரும் எதிர்பார்த்திராத வகையில் அதிரடியாக தாக்குகிறார்கள் மட் ரைடர்ஸ் கேடிக் குழுவினர். அந்த மோதலில் வெடித்துச் சிந்தும் ரத்தம், அதன் வாடை, அதே புகையிரதத்தில் ரகசியமாக பெட்டிகளிற்குள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிக்கும் சிலவற்றை ரத்த வெறி கொண்டெழ வைக்கின்றன.

pr2 காவல் அதிகாரிகள், பயணிகள், மட் ரைடர்ஸ் கேடிக் குழுவினர் என யாவரும் இந்த ரத்தவெறி பிடித்த கோரப் படைப்புக்களின் வெறிக்கு இரையாகி அழிய, அந்த புகையிரதத்தில் பயணிக்கும் ஒருவன் மட்டும் அந்த ரத்த வெறி கொண்ட குரூரங்களை தன் துப்பாக்கியாலும், நீண்ட கத்தியாலும், சல்லடையாக்கியும், கூறுகளாக்கியும் வழியும் குருதியில் அவன் கிண்ணத்தை நிரப்பி தன் ஆண்டகையின் பாதை செல்கிறான்.

அவன், ஏற்கனவே இறந்து போனவன். நரகத்தின் இருண்ட ஆழத்தில் தன் ஆன்மாவின் பாதியை தீமையின் ஆண்டகையிடம் தந்து மறுபிறப்பு கண்டவன். அவனில் ஊற்றெடுத்துப் பெருகும் வஞ்சம் எனும் தாகத்தை தணிக்க தன் எதிரிகளின் குருதி தேடி வெற்றுக் கிண்ணமான மனத்துடன் பயணிப்பவன். அவன் பெயர் இவான். இவான் இசாக்….




pr1 ஜப்பானிய காமிக்ஸ்களை மங்கா எனும் பெயர் கொண்டு அழைப்பது போல கொரிய காமிக்ஸ்களை Manhwa என அழைக்கிறார்கள். மேன்ஹ்வா என்பது கொரிய மொழியில் காமிக்ஸ், கேலிச்சித்திர வகைகள் மற்றும் அசைவூட்டம் என்பவற்றை குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக இருக்கிறது. Priest ஒரு கொரிய காமிக்ஸ் ஆகும். இக்கதையை எழுதி அதற்கு அசத்தலான சித்திரங்களையும் வரைந்திருக்கிறார் Hyung Min-Woo. ஜப்பானிய மங்காக்களை போல் அல்லாது மேன்ஹ்வா காமிக்ஸ்கள் இடமிருந்து வலமாக எமக்கு பழக்கமான வாசிப்பு முறையில் படிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. [ ப்ரீஸ்ட் கதையினை ஒரு மங்காவிலிருந்து அதிகம் வேறுபடுத்திக் காண என்னால் இயலவில்லை, சித்திர பிரயோகங்களும், கதை நகரும் பாணியும் மங்காவையே நினைவூட்டுகின்றன- நான் படிக்கும் முதல் கொரிய காமிக்ஸ் இதுதான், பதிவில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் யாவும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் இருந்து எடுத்து கையாளப்படுகிறது.]

pr3 கதையின் இருளான ஆரம்ப பக்கங்களில், நரகத்தின் ஆழத்தில் துன்புற்றிருக்கும் இவான், வஞ்சத்திற்காக தன் ஆன்மாவின் ஒரு பாதியை தீமையின் ஆண்டகை ஒருவனிடம் தந்து, நரகத்திலிருந்து வெளியேறி தன் எதிரிகளை தேடி பயணத்தை ஆரம்பிக்கிறான். Xavilon எனும் குருவையும், அந்தக் குருவின் விசுவாசிகளான ஸோம்பிகளையும் [zombie] கொன்றழிப்பது அவன் பயணத்தின் முதல் படியாகும். இவானின் இந்தப் பயணம் மேட் ரைடர்ஸ் கேடிக்குழு அதிரடியாகத் தாக்கும் அந்த புகையிரதத்திலேயே ஆரம்பமாகிறது.

இவான் அவன் கொன்றொழிக்க விரும்பும் கோரங்களை போன்ற ஒரு படைப்புத்தான். ஆனால் அவனில் எஞ்சியிருக்கும் பாதி ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிது மனிதம் அவனை அந்த கோரங்களை விட அபாயகரமானவனாக மாற்றி அடிக்கிறது. இவான் பாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் கதையில் உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் மின் வூ. வஞ்சமும், கொலைவெறியும் அவனை ஆக்கிரமிக்க அவனுள் ஒடுங்கியிருக்கும் ஒரு குற்றவுணர்வு அவனைக் கொல்வதை கதாசிரியர் அழகாக சொல்லியிருக்கிறார். மோனநிலையில் அவன் உடலும், ஆன்மாவும் தீமையின் ஆண்டைகையான Vessiel ன் பிடியில் ஒரு கொலை எந்திரமாக மாறிவிட, இந்த உக்கிரமான போர்க்களத்தில் அவன் தொலைத்த காதல் அவனுள் அவனிடம் இல்லாத உயிராக எட்டிப்பார்த்து மண்டியிடுகிறது.

pr4 இவான் எவ்வாறு இறந்தான்? Xavilon எனும் குருவையும் அவன் விசுவாசிகளையும் ஏன் இவான் அழிக்க விழைகிறான்? தீமையின் ஆண்டகை Vessiel க்கும் Xavilon வழிபடும் ஆண்டவனான Temosare க்குமிடையில் நிலவும் வன்மத்திற்கான காரணம் என்ன ? அபரிமிதமான சக்திகளை தம்மகத்தே கொண்ட Vessiel, Temosare என்பவர்கள் யார் ? இவானின் காதலியான Zena விற்கு அவன் இழைத்த துரோகம் என்ன? முதல் பாகம் எழுப்பும் இவ்வகையான கேள்விகளிற்கு தொடரும் பாகங்கள் விடையை தரலாம். இக்காமிக்ஸ் தொடர் மொத்தம் 16 பாகங்களாக வெளியாகியிருக்கிறது. கதாசிரியர் மின் வூ வின் பிரபலமான தொடராக ப்ரீஸ்டே இன்றுவரை அறியப்படுகிறது.

pr5 ஆரம்பம் முதலே கதை மிக வேகமாக நகர்கிறது. காமிக்ஸ் வாசகர்களிற்கு மிகவும் பிடித்தமான தொலைமேற்கிலே கதை இடம்பெறுகிறது. மாடுகளை காணவில்லை ஆனால் ஸோம்பிகள் அதிகளவில் தென்படுகின்றன. ஆக்‌ஷன் பகுதிகள் கதையின் பக்கங்களை ஆரவாரமாக ஆக்கிரமிப்பு செய்ய குருதியும், வன்முறையும், இருளும் சித்திரங்களை போட்டி போட்டுக் கொண்டு நிரப்புகின்றன. கதையில் இடம்பிடித்திருக்கும் சித்திரத்தின் பாணி அபாரமாக இருக்கிறது. கதைக்கே அது ஓர் கூரிய தன்மையை வழங்கிவிடுகிறது. மட் ரைடர்ஸ் குழுவினர் புகையிரதத்தில் காவல் அதிகாரிகளுடன் ஆரம்பிக்கும் மோதல், இவான் கொடூரப் படைப்புக்களுடன் நிகழ்த்திச் செல்லும் உச்சக் கட்ட மோதல் வரை தொடர்ந்து அதிரடி செய்கிறது. பயங்கர திகில் ஆக்‌ஷன் ப்ரிய்ர்களிற்கு இக்கதை ஒரு அருமையான விருந்து என்பதில் சந்தேகம் இல்லை.

இக்காமிக்ஸ் தொடர் பெற்ற வரவேற்பையடுத்து இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. Evil Dead புகழ் பிரபல இயக்குனர் Sam Raimi படத்தை தயாரிக்க 300 புகழ் ஹீரோ Gerad Butler பிரதான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த முடிவை அறிந்த ப்ரீஸ்ட் மேன்ஹ்வா ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். கொரிய குட்டைப் பிள்ளையாரிற்கு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் விதி வலியது! 3D தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த வருடம் திரைக்கு வருகிறது ப்ரீஸ்ட். காமிக்ஸ் கதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான தகவல். ப்ரீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் உண்மையிலேயே ஆர்வத்தை தூண்டுகிறது. அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் ட்ரெயிலர்கள் மட்டுமே அட்டகாசமாக இருக்கும் திரைப்படங்கள் வரிசையில் ப்ரீஸ்டும் இடம் பிடித்திடாது இருக்க அந்த ஹாலிவூட் கருமாரி அம்மன் ப்ரீஸ்டிற்கு அருள் பாலிக்கட்டும். [***]

அசத்தல் ட்ரெய்லர்

14 comments:

  1. மாங்கா போய் இப்போது மண்வா'வா? காதலர் இதுபோல பல நாட்டு நற் சாத்திரங்களை பற்றிய தகவலை வழங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த காமிக்ஸ் கதையாகிய பிரீஸ்ட் ஒரு வீடியோ கேமை அமைத்து உருவானது (என்னுடைய அலுவலக நண்பர் ஒரு வீடியோ கேம் வெறியர் - அவர் விளையாடி பாத்திருக்கிறேன்). ஆனால் நீங்கள் சொல்வது போல விடியோ கேமும் கதையும் (வரப்போகும் சினிமாவும்) வித்தியாசப்படும் என்றே தோன்றுகிறது.

    அவர் இதுபோல வெஸ்டர்ன் மற்றும் அமானுஷ்யம் கலந்த படம் என்று ஒரு டிவிடியை கொடுத்தார் (டுடே வி கில், டுமாரோ யு டை). அது ஒரு நல்ல வெஸ்டர்ன் படம் என்பதை தவிர வேறெந்த அமானுஷ்யமும் அதில் இல்லை. இந்த வெஸ்டர்ன் மற்றும் அமானுஷ்யம் என்பது ஒரு அட்டகாசமான காம்பினேஷன். நம்ம கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கி நடித்த இரண்டாவது படமாகிய ஹை பிளைன்ஸ் ட்ரிப்டர் ஒரு அமானுஷ்யம் கலந்த வெஸ்டன் படம் (நம்ம ராணி காமிக்ஸ் ஷெரிப் ஆவி மாதிரி). ஆனால் இந்த பிரீஸ்ட் கதையை போல ஒரு ஸ்ட்ராங் ஆனா பிளாட் அங்கு இல்லை.

    சற்றே தேடினால் இந்த கதை ஆணிகிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது என்ற தகவல் வருகிறது. காதலர் பிரெஞ்சு மொழியில் படித்து கலக்குவதை பார்த்தால் நானும் என்னுடைய (பாதியில் நிறுத்திவிட்ட) பிரெஞ்சு மொழி வகுப்புகளை தொடரவேண்டி வருமென்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  2. உண்மையில் அசத்தலான பதிவு தான்.

    ReplyDelete
  3. Ghost Rider படம் மாதிரி இருக்கிறதே காதலரே :))
    .

    ReplyDelete
  4. நண்பர் லக்கி லிமட், முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, இக்கதை ஆங்கிலத்தில் முழுமையாக வெளியாகி இருக்கிறது. பிரெஞ்சு மொழி சிட்டுக்களை கவிழ்க்கும் மொழி விடாது தொடருங்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன், டவுன்லோட் செய்ய இயலுமானால் முதல் பாகத்தையேனும் படித்துப் பாருங்கள். நல்ல வேகமான ஆக்‌ஷன் கதை. ஆழமான கதைக்களமும் இருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, கோஸ்ட் ரைடரின் சாயல் இருந்தாலும்- அதில் கூட ஒரு கிழட்டுக் கவ்பாய் இருப்பார்- இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. படித்துப் பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  5. Only 11 issues are available in net.If anybody gets any more,please share.

    http://www.mediafire.com/?sharekey=54590a22258169a234ec03e3e223c21f6278d6c471c0b0a5

    ReplyDelete
  6. நண்பரே!! பிரெஞ்சு மொழி தழுவலில் வரும், எந்த ஒரு "புதினமும் " தங்களின் பார்வையிலிருந்து, தப்பமுடியாது!! என்பது தங்களின் பதிவுகளிலிருந்து தெரிய வருகிறது. அந்த வகையில் தங்களின் முயற்சிகளுக்கு, என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்கள்.

    Priest போன்ற காமிக்ஸ் கதைகளை படிப்பதால், என்னதான் காமிக்ஸ் என்றாலும், இரவு நேரங்களில் மண்டையில் குடைச்சல்தான் ஏற்படுத்தும் நண்பரே!
    !
    மேலும் பில்லி சூனியம் , பேய் பிசாசு, நற அமானுஷ்யம் கலந்த காமிக்ஸ் கதைகளும், அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளும், மனித வாழ்க்கை ஓட்டத்தில் கொஞ்சம்கூட ஒத்து போகாத, எதார்த்தமில்லாத இதுபோன்ற காமிக்ஸ்கள் மனிதர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக ஒருவித 'வெற்றிடத்தை'யே ஏற்படுத்தும்.

    எந்த ஒரு காமிக்ஸ் கதையும், திரைப்படமாக மாறும்போது!! திரைப்பட ரசிகர்களை திருப்தி படுத்த புதிய பரிமாணத்தை அடையும், இதிலிருந்து Priest மட்டும் எப்படி தப்பமுடியும்.

    இது போன்ற காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களுக்கும் வாசகர்கள் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பெரும்பான்மை இல்லாதது சந்தோசமே!!

    "ARRIETTY" போன்ற அழகான மென்மையான அபூர்வமான கதைகளை ரசிக்கும் தாங்கள், எப்படி?!! இதுபோன்ற கதைகளையும், ரசிக்கிறீர்கள் என்பது அந்த Hyung Min-Woo விற்கே வெளிச்சம்.
    அன்புடன்,
    ஹாஜா இஸ்மாயில். எம்

    ReplyDelete
  7. //காதலர் பிரெஞ்சு மொழியில் படித்து கலக்குவதை பார்த்தால் நானும் என்னுடைய (பாதியில் நிறுத்திவிட்ட) பிரெஞ்சு மொழி வகுப்புகளை தொடரவேண்டி வருமென்றே தோன்றுகிறது. ண்பரே!! //
    விஸ்வா தொடருங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த இளம் வயதிலேயே படித்தால்தான் உண்டு
    அன்புடன்,
    ஹாஜா இஸ்மாயில். எம்

    ReplyDelete
  8. நண்பர் இலுமினாட்டி, சுட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஹஜா இஸ்மாயில், நான் படிப்பது இங்கு கிடைக்ககூடிய காமிக்ஸ்களில் ஒரு துளிகூட கிடையாது :)அதிக நேரம் இல்லை என்பதுதான் கவலை. இரவோ, பகலோ எந்த சிக்கலும் இவ்வகையான கதைகளை படிப்பதால் வந்து விடாது என்பது என் கருத்து [ மனைவி இருக்க பயமேன் ]. கற்பனை எனும் வகையில் மாயாவி கதைகளோ அல்லது மாண்ட்ரெக் கதைகளோ கூட வாழ்க்கையுடன் இணைந்து விடுவதில்லைதானே, ஆனால் நாம் அவற்றையும் ரசிக்கிறோமோ அதேபோல்தான் இவ்வகையான கதைகளும் அமானுட இலக்கியம் என்பதும், காட்டேரி இலக்கியம் என்பதும் வாசகர்களின் ஆதரவில் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பதே உண்மை. வாழ்க்கை என்பதை இவ்வகையான காமிக்ஸ்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமேயில்லை. வாசிக்கும்போது கிடைக்கும் இன்பமும், தகவல்களுமே இங்கு முக்கியம் பெறுகின்றன. ஒவ்வொரு வகை கதையும் எனக்கு ஒரு அனுபவம், மேலும் அந்த அனுபவம் வழி என் வாசிப்பு தளம் விரிவடைகிறது, எனவேதான் என்னால் அரியெட்டியையும், ப்ரீஸ்டையும் வேறுபடுத்தி ரசிக்க முடிகிறது :) தங்களின் ஆழமான விரிவான கருத்துக்களிற்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. நண்பரே நீங்கள் பலதடவைகள் எனக்கு வாக்குகள் போட்டுள்ளீர்கள்! நானும் உங்களுக்கு வாக்களித்து உள்ளேன்! ஆனால் இன்று தான் முதல் தடவையாக கமென்ட் போடுகிறேன்! நானும் ஒரு காமிக்ஸ் பைத்தியம்தான்! உங்கள் தேடல் அருமையாக இருக்கிறது! உங்களுக்கு பிரெஞ்சு வேறு தெரியுமா? ஆய் நல்லதாப் போச்சு! இனிமேல் கமெண்டுகளை பிரெஞ்சில் போடவா? அதுசரி நீங்கள் இங்கு பிரான்சிலா வசிக்கிறீர்கள்?



    merci beaucoup pour votre message!



    R.Rajeevan

    Paris

    France.

    ReplyDelete
  10. நண்பர் ராஜீவன், நீங்கள் விரும்பினால் உங்கள் கருத்துக்களை பிரெஞ்சில் பதிந்திடலாம். நான் பிரான்சில்தான் வசித்துவருகிறேன். உங்கள் தளத்தில் நீங்கள் படிக்கும் காமிக்ஸ்கள் குறித்தும் எழுதலாமே.. உங்களிற்கு அதில் ஏதும் ஆட்சேபனை இல்லை எனும் பட்சத்தில் :) நீங்கள் நன்றி கூறும் வகையில் நான் என்ன செய்துவிட்டேன் :) கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //வாசிக்கும்போது கிடைக்கும் இன்பமும், தகவல்களுமே இங்கு முக்கியம் பெறுகின்றன. ஒவ்வொரு வகை கதையும் எனக்கு ஒரு அனுபவம், மேலும் அந்த அனுபவம் வழி என் வாசிப்பு தளம் விரிவடைகிறது, எனவேதான் என்னால் அரியெட்டியையும், ப்ரீஸ்டையும் வேறுபடுத்தி ரசிக்க முடிகிறது :)//

    Exactly.Idiots who proudly say that they would rather see movies than to read ,should understand this. :)

    ReplyDelete
  12. நண்பர் இலுமினாட்டி, சிலரிற்கு தமன்னாவை பிடிக்கிறது, வேறு சிலரிற்கு இலியானாவைப் பிடிக்கிறது. அது அவரவர் சுதந்திரம். சினிமா, புத்தகம் என வரும்போது என் தெரிவு புத்தகம்தான். சினிமா இல்லாமல் என்னால் இருக்க முடியும் என்றே நினைக்கிறேன் ஆனால் புத்தகம் இல்லாமல் இருப்பது எனக்கு மிகவும் சிரமமான ஒன்றே. கொலைவெறிக் கருத்துக்கு நன்றி பூசாரி அவர்களே :)

    ReplyDelete
  13. தமன்னாவை பிடிக்கும் என்று சொல்லும் சிலருக்கு எனது அஞ்சலிகள். :P

    புத்தகமே எனக்கும் ஜீவனாய் விளங்குகிறது.புத்தகம் இல்லாது என்னாலும் இருக்க முடியாது.ஒரு புத்தகம் தரும் சந்தோஷம் சினிமாவால் தர இயலாது.எனக்கு சினிமா ஒரு பெரிய விஷயம் அல்ல.நீர் அறியாததா? :)

    ReplyDelete